Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவரை காப்பாற்ற கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்க

Featured Replies

வேதாரண்யத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மேலும் ஒரு தமிழக மீனவரை சிறிலங்காவின் சிங்கள இனவெறி கடற்படை கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றுள்ளது.

இந்த ஆண்டு பிறந்து இது இரண்டாவது மீனவர் படுகொலையாகும். கடந்த 12ஆம் தேதிதான், புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த மீனவர் வீரபாண்டிய‌ன் (வயது 19) சிறிலங்க கடற்படையினரால் கச்சத் தீவு கடற்பரப்பில் கொல்லப்பட்டார். சர்வதேச சட்டங்களுக்கு எதிராக அந்த கொடுஞ்செயலிற்கு எந்த நீதியும் இல்லை என்று இந்தியாவின் அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்தியாவிற்கான சிறிலங்க தூதர் பிரசாத் கரியவாசத்தை அழைத்து கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, அந்தச் சம்பவத்திற்கு விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மீனவர் வீரபாண்டிய‌ன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சிறிலங்க அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின் மீது இந்திய அரசு மேல் விசாரணை நடத்த முற்படாத நிலையில், நேற்று முன் தினம் இரவு மேலும் ஒரு மீனவர் சிறிலங்க கடற்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதில் வினோதம் என்னவென்றால், வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட அன்று காலைதான், கடலோர காவற்படையின் கிழக்குப் பிரிவு தலைமைப் பொறுப்பேற்றுள்ள சர்மா, தமிழக முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, இதற்குமேல் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாமல் பாதுகாப்பளிப்போம் என்று உறுதியளித்துவிட்டுச் சென்றார். அன்று மாலை நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் அந்தச் செய்தி வந்த அதே இரவில் இந்த‌க் கொடூரமான படுகொலையை சிறிலங்க கடற்படை நிகழ்த்தியுள்ளது. இதையும் தங்கள் கடற்படை செய்யவில்லை என்று மறுத்துள்ளார் சிறிலங்க தூதர் பிரசாத் கரியவாசம்!

இது எப்படி நடக்க முடியும்? இந்தியாவைப போன்ற ஒரு வல்லரசின் மீனவர் ஒருவர் தனது நாட்டின் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அண்டை நாட்டு கடற்படையால் சுட்டுக் கொல்வது இன்று நேற்றல்ல, 27 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறதே, எப்படி? இலங்கையைப் போன்ற ஒரு சுண்டைக்காய் நாட்டின் கடற்படையால் - உருப்படியாக ஒரு கடலோர கண்காணிப்பு கப்பல் கூட இல்லாமல் இருந்த அந்த நாட்டிற்கு, இந்தியாதான் இரண்டு கண்காணிப்பு கப்பல்களை ‘நட்புடன்’ அளித்தது. ஆனால் தனது நாட்டை நட்பு நாடு என்று கூறும் ஒரு பெரும் நாட்டின் மீனவரை துப்பாக்கியால் சுட்டும், சித்ரவதை செய்தும் கொல்ல அந்த நாட்டிற்கு எங்கிருந்து துணிவு வருகிறது?

எப்போதெல்லாம் இந்திய அரசு விளக்கம் கேட்கிறதோ, அப்போதெல்லாம் “எங்கள் கடற்படை சம்பவம் நடந்த அந்தப் பகுதிக்கு செல்லவேயில்லை” என்று சிறிலங்க கடற்படை கூறும். ஆயினும் அந்தச் சம்பவத்திற்கு காரணம் யார் என்று விசாரணை நடத்தப்போவதாக சிறிலங்க அரசும் கூறும். அதைத்தான் இப்போதும் கூறியுள்ளது. இவ்வாறு சிறிலங்க கடற்படையும், சிறிலங்க அரசும் கூறும்போதெல்லாம் அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல் இந்திய அரசு அமைதி காக்கும். இதுதான் நடந்து வருகிறது.

நமது வினா என்னவெனில், தாக்குதலிற்குள்ளான மீனவர்கள் அனைவரும் தங்க்ளைத் தாக்கியது சிறிலங்க கடற்படையே என்று ஒவ்வொரு முறையும் புகார் செய்துள்ளனர். இந்திய கடற்பரப்பில் தாங்கள் எங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சிறிலங்க கடற்படை வந்து சுட்டது எ‌ன்பதை தங்களது புகார்களில் தெளிவாக தெரிவித்துள்ளார்கள். அதன் மீது அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் புகார் ஏற்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் குற்றம் சாற்றப்பட்ட சிறிலங்க கடற்படையினரை நாடு கடத்திக் கொண்டு வந்து, இந்திய நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த ஒரு முறை கூட இந்திய அரசு முயற்சி எடுத்ததில்லை.

எப்போதெல்லாம், தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனரோ, சுட்டுக் கொல்லப்படுகின்றனரோ, அப்போதெல்லாம் அது குறித்து நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் வினா எழுப்பியபோதெல்லாம், எல்லைக் கடந்து சென்று அவர்கள் மீன் பிடிக்கப்போனதால்தான் தாக்குதலிற்கு (துப்பாக்கிச் சூட்டிற்கு) ஆளாகின்றனர் என்று மிகச் சாதாரணமாக அயலுறவு அமைச்சராக இருக்கிற இந்தியர் கூறிவருகின்றனர். பிரணாப் முகர்ஜியும், இப்போது எஸ்.எம்.கிருஷ்ணாவும் இப்படித்தான் பதில் கூறி வருகிறார்கள்.

அவர்களின் வாதப்படியே, நமது மீனவர்கள் இந்திய - இலங்கை எல்லைத் தாண்டிச் சென்று மீன் பிடித்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அந்த மீனவர்களை சுட்டுக் கொல்லும் உரிமை சிறிலங்க கடற்படைக்கு இருக்கிறதா? இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளைத் தாண்டி வந்து மீன் பிடிக்கும் அண்டை நாட்டு மீனவர்கள் மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஐ.நா.வின் கடல் சட்டம் (UN Law on Sea) தெளிவாக வரையறை செய்துள்ளது.

“எந்த ஒரு நாடும் அண்டை நாட்டு மீனவர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததை கண்ணுற்றால் அதனைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மனித உயிர்களை காப்பதாகவே இருக்க வேண்டும்” என்று ஐ.நா. கடல் சட்ட விதி 146 கூறுகிறது. அவ்வாறு எல்லைத் தாண்டி வந்து (தெரிந்தோ தெரியாமலோ) மீன் பிடித்த மீனவர்களின் “படகில் இறங்கி சோதனையிடலாம், கைது செய்யலாம், அந்நாட்டு சட்டத்தின்படியாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தலாம்” என்று சட்ட விதி 73 கூறுகிறது. அதுமட்டுமல்ல, “சர்வதேச எல்லையைத் தாண்டும் மீனவர்களை சுடுவதோ அல்லது கொல்வதோ இயற்கை நீதிக்கு எதிரானது” என்றும் கூறுகிறது. அதுமட்டுமல்ல, மீனவர்கள் எல்லைத் தாண்டுவதற்கு காரணம் மீன் வளமே என்றும் கூறுகிறது. “மீன் எங்கு கிடைக்கிறதோ அங்கு மீனவன் செல்வான்” (Fisherman go where the fish is) என்று அவர்களின் இயல்புக்கு ஒரு வாக்கிய வழிகாட்டுதலையே ஐ.நா.வின் கடல் சட்டம் கூறியுள்ளது.

இதனை சிறிலங்க அதிபராக உள்ள (அவர் மீன் வளத்துறை அமைச்சராக இருந்துள்ளதால்) மகிந்த ராஜபக்ச கூட கூறியுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1101/24/1110124036_1.htm

Edited by akootha

  • தொடங்கியவர்

இப்படிப்பட்ட சர்வதேச சட்டம் உள்ளதால்தான் எல்லை மீறிச் சென்று மீன் பிடிக்கும் குஜராத், மராட்டிய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கொல்வதில்லை.

மேற்கு வங்க மீனவர்களை வங்க தேச கடற்படை கொல்வதில்லை.

பாகிஸ்தான், வங்கதேச மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்து மீன்பிடிக்கும்போது இந்திய கடலோர காவற்படையும் கொல்வதில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடித்த 589 சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறிய கடலோர காவற்படையின் கிழக்குப் பிரிவு தளபதியாக இருந்து சமீபத்தில் மாற்றலாகிச் சென்ற இராஜேந்திரனும், அவர்களில் எவரையும் சுட்டதாக கூறவில்லை. சுடவும் இல்லை. 119 மீனவ படகுகள் கைப்பற்றப்பட்டு, பிறகு திருப்பி அளிக்கப்பட்டது. இதுபோல் எல்லைத் தாண்டி மீன் பிடித்து மாட்டிக்கொண்ட பல நூற்றுக்கணக்கான மீனவர்களை இந்தியாவும் பாகிஸ்தானும் ஒவ்வொரு 3 மாத காலத்திற்கும் பரிமாறிக்கொள்கின்றனர். இதற்குக் காரணம் ஐ.நா.வின் கடல் சட்டத்தை முறையாக கடைபிடிப்பதுதான்.

ஆனால் தங்கள் நாட்டின் மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்தபோதெல்லாம் ஒரு முறை கூட இந்திய கடலோர காவற்படை தாக்கியதில்லை என்ற நிலையிலும், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிங்கள கடற்படை மட்டும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்வது ஏன்? “இப்படியெல்லாம் சுட்டக்கொல்வதற்கு எந்த நியாயமும் இல்லை” என்று இன்று கூறும் எஸ்.எம்.கிருஷ்ணா, இதுநாள் வரை 539 தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அளிக்கும் விளக்கம் என்ன?

இப்படிப்பட்ட வினாக்களுக்கு இதுவரை இந்திய அரசு பதில் கூறவில்லை. அதனால்தான் சிறிலங்க கடற்படை தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்குகிறது. ஓராண்டு, ஈராண்டல்ல, 1983ஆம் ஆண்டு முதல் 27ஆண்டுகளாக தாக்குதல் தொடர்கிறது!

இதற்குப் பின்னணிக் காரணங்களாக பலவும் கூறப்படுகிறது.

இந்திய இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை முற்றிலுமாக தடுத்திட வேண்டும் என்பதே இத்தாக்குதலின் உண்மையான நோக்கம் என்று கூறுகின்றனர். பாக்கு நீரிணைக்கு வட பகுதிக் கடலில்தான் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அதற்குக் கீழ் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுவதில்லை. ஒரு காலத்தில் தூத்துக்குடி மீனவர்களும் இதேபோல் தொடர்ந்து தாக்கப்பட்டு, அதன் விளைவாக அவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் மீன் பிடித் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில்களுக்குச் சென்று விட்டதாகவும் கூறுகின்றனர். எனவே இத்தாக்குதல் இந்திய அரசின் மெளன சம்மதத்துடனேயே நடக்கிறது என்று விவரம் தெரிந்து மீனவர்கள் கூறுகின்றனர்.

இரண்டாவதாக, இலங்கையின் வட பகுதியான தமிழீழத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே கடல் தொடர்பு இருக்கக்கூடாது என்று சிறிலங்க அரசும், இந்திய அரசும் இரகசிய முடிவு செய்துக் கொண்டு செயல்படுகின்றன என்றும், அதனடிப்படையில் வட கடல் பகுதியில் இருந்து தமிழ் மீனவர்களை முழுமையாக துடைத்தெறியும் நோக்குடனேயே இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்றும், அதனால்தான், மீனவர்களைத் தாக்குவது, அவர்கள் பிடித்து வைத்த மீன்கள், இறால்களை கைப்பற்றுவது, படகுகளை சேதப்படுத்துவது, சுட்டுக்கொல்வது என்று காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் சிறிலங்க கடற்படை ஈடுபட, அதனை மெளமான இந்திய கடலோர காவற்படை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று கூறுகின்றனர்.

மூன்றாவதாக, இன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டின் முன்பு மறியல் செய்யச் சென்ற மீனவ பெண்கள் போராட்டத்திற்கு தலைமையேற்ற சமுத்திரா தேவி கூறியதுபோல், மீன் வள‌ம் மிக்க அந்தக் கடல் பகுதியில் பன்னாட்டு மீன் பிடி நிறுவனங்களுக்கு தாரை வார்த்திடும் திட்டத்துடனேயே தமிழக மீனவர்கள் மீது தடையற்ற இத்தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.

இந்தக் காரணங்களையெல்லாம் வெளியில் சொல்லாமல், ‘எல்லைத் தாண்டி மீன் பிடிக்கிறார்கள்’ என்ற ஒரே குற்றச்சாற்றை மட்டும் கூறி, தமிழக மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் சுட்டுக் கொல்கிறார்கள் என்றால், அதற்கு அவர்களுக்கும், சிறிலங்க அரசிற்கும் அதிகாரமளிப்பது இந்திய - இலங்கை கடல் எல்லை வரையறை ஒப்பந்தம்தானே? தமிழ்நாட்டு அரசின் சம்மதமின்றி, தமிழக மீனவர்களின் ஒப்புதலின்றி இந்திரா காந்தியும், சிறிலங்க பிரதமராக இருந்த சிரிமாவோ பண்டார நாயக்காவும் 1974ஆம் ஆண்டு போடப்பட்ட அந்த ஒப்பந்தம்தானே கச்சத் தீவு கடற்பகுதியில் மீன் பிடிக்கும் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமையை பறித்துவிட்டன? அந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு தமிழக அரசும், மக்களும், மீனவர்களும் ஒரு சேர கோரிக்கை எழுப்ப வேண்டும்.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை பறிக்கும் அந்த அநியாயமான ஒப்பந்தத்தை மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு இரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். இதனை காங்கிரஸ் அரசு ஏற்க மறுத்தால், வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் அது சார்ந்திருக்கும் கூட்டணிக்கும் தமிழக மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும். அதுவே ஜனநாயக ரீதியான சரியான முடிவாக இருக்கும்.

இதைச் செய்யத் தவறினால், சிறிலங்க கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.