Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள் முற்றம்: இலங்கையில் சாதி,நீதி, சமத்துவம் பற்றிய அரசியல் சொல்லாடல்:ஜயதேவ உயங்கொட

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள் முற்றம்: இலங்கையில் சாதி,நீதி, சமத்துவம் பற்றிய அரசியல் சொல்லாடல்: ஜயதேவ உயங்கொட

அறிமுகம்

சமூக சீர்திருத்தத்தை நோக்கிய சமூக அல்லது அரசியல் முயற்சி பற்றிய பிரக்ஞை இன்மை இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தின் ஆவலைக் கிளறும் ஒரு முக்கிய அம்சமாகும். 1999ம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் சம வாய்ப்பு பற்றிய பொதுக்கொள்கைச் சட்டம் ஒன்றுக்காக சட்ட மூலத்தை அறிமுகப்படுத்தும் தனது திட்டத்தை கைவிட்ட போது இலங்கையின் சமகால அரசியலிற் காணப்படும் இத்தனியியல்பு பலரதும் தீவிரமான கவனத்தை ஈர்த்தது. அரசாங்கத்தின் சம வாய்ப்புச் சட்டமூல வரைவு, அகில இலங்கைப் பௌத்த காங்கிரஸ், பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம் என்பன போன்ற சிங்களத் தேசியவாதச் சக்திகளினால் எதிர்க்கப்பட்டது.

அவர்களுடைய எதிர்ப்பு சமவாய்ப்பு என்ற கருத்து சிங்கள பௌத்த பெரும்பான்மைச் சமூகத்திற்கன்றி சிறுபான்மை இனத்தவருக்கும் மதத்தினருக்குமே சாதகமாக அமையுமென்ற வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இவ்வெதிர்ப்பின் காரணமாகப் பொதுத்துறையில் சமூக சமத்துவத்திற்கான இச்சட்டவாக்கத்தை அரசாங்கம் ஏன் கொண்டு வர முற்பட்டது என்பது பற்றிய விளக்கத்தை கொடுப்பதற்குக் கூட எவ்வித முயற்சியும் செய்யாது.

இச்சட்டவரைவைக் கைவிடுவதென அமைச்சரவை முடிவு செய்தது. சமவாய்ப்புச் சட்டவாக்கத்தை ஒரு காரணமாகக் கொண்டு பௌத்த பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யக்கூடிய சாத்தியப்பாடு பற்றி அமைச்சரவையைச் சேர்ந்த பல அமைச்சர்கள் கவலையற்றிருந்ததாக அறிக்கைகள் உணர்த்தின. இவ்வுத்தேச சட்டம் கல்வி, தொழில் வாய்ப்பு என்பவற்றில் சிறுபான்மை இனத்தவர்களுக்குச் சாதகமாக அமையுமெனப் பௌத்த சக்திகள் கருதியிருக்கலாம் என்பதே அவர்களுடைய அச்சமாகும். நவீன இலங்கைப் பெத்தம் சமத்துவத்திற்கு எதிரானதா என்ற கேள்வியை எவரும் கேட்க முற்பட்டதாகத் தெரியவில்லை.

சீர்திருத்தங்களைச் செய்வதில் ஈடுபாடு கொண்டிருந்த ஒரு நிர்வாகம், அமைச்சரவை மட்டத்தில் கலந்துரையாடிய பின்னர், சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புக் காட்டும் பழைமைவாத சமூக சக்திகளுக்கு முன் சரணடைந்ததென்ற உண்மை, இலங்கையின் பொது அரங்கில், நீதி, சமத்துவம், நேர்மை என்பன போன்ற பிரச்னைகள் பற்றிய அடிப்படை வினாக்கள் சிலவற்றை எழுப்புகின்றது.

இலங்கையைப் பொறுத்தளவில் சமூக அமைப்புக்களில் பிணைந்து கிடக்கும் சமத்துவமின்மைகளை ஒழிப்பதை நோக்கங்களைக் கொண்ட சமத்துவம், சமூக நீதி என்பன தொடர்பான சமூக சீர்திருத்தங்கள் பொது மக்களின் தலையீட்டை வேண்டி நிற்கின்றன. சிங்கள, தமிழ் சமூகங்களில் சமத்துவமின்மையின் மிகத் தீவிரமான வடிவங்கள் சாதி உறவுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

பின் காலனித்துவ அரசு, பின் காலனித்துவ முதலாளித்துவம் சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றும் தாராள அரசுகள் ஆகிய நிபந்தனைகளின் கீழ் இவை தம்மை மறு உற்பத்தி செய்து கொள்கின்றன என்று தோன்றுகின்றது. எனினும் சாதியை அடிப்படையாகக் கொண் சமத்துவமின்மை , அநீதி, சமூகரீதியாக ஓரங்கட்டுதல் முக்கிய பிரச்னைகள் முன்னேற்றத்துக்கான நாட்டின் அரசியல் வேலைத்திட்டத்தில் பகிரங்கமாக விவாதிக்கப்படவில்லை என்பது இலங்கை அனுபவத்தின் விசேட தன்மைகளில் ஒன்றாகும். சமூகத்தின் பல் வகைச் சாதி அமைப்பு, அரசியல் பன்மைத்துவத்திற்கு ஏற்புடைய தளமென்று கருதப்படவுமில்லை. பன்மைத்துவ அரசியற் கற்பனை இனத்துவத்தில் ஆரம்பித்து இனத்துவத்திலேயே முடிவடைகின்றது. இங்கு சாதி பற்றிய குறிப்பெதுவும் இல்லை.

இலங்கையில் சமூகநீதி பற்றிய அரசியல் சொல்லாடலில் தொடர்ந்து இடம்பெறும் தெற்றெனத் தெரியும் ஒரு முரண்பாட்டை ஒருவர் இதில் காணலாம். முன்னேற்றம் பற்றிய பின்காலனித்துவச் சொல்லாடலில் வர்க்க சமத்துவமின்மை பற்றிய பிரச்னை எப்போதும் விரிவாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது போல் சாதி, இனத்துவம் என்பவற்றிலிருந்து உருவாகும் சமூக அநீதி முறைகள் விவாதிக்கப்படவில்லை. சாதி வேறுபாடுகள் , சமூக சமத்துவம் பற்றி இலங்கையின் பொதுச் சொல்லாடலில் ஏற்பட்டுள்ள நிலைமாற்றங்களே இக்கட்டுரையின் குவிமையமாகும்.

சமத்துவமும் அதன் வகைமைகளும்

சமூக சமத்துவம் பற்றிய இலங்கையின் பொதுச் சொல்லாடல் மூன்று கருத்துநிலை மூலங்களிலிருந்து பிறந்தவை. அவை சோசலிசம், சமூக நலவாதம், பௌத்தம் என்பனவாகும். ‘சமாஜ சமானாத்மதாவய’ (சமூக சமத்துவம்) என்ற சிங்களச் சொற்றொடர், மதம் மற்றும் மதச் சார்பற்ற இக்கருத்து நிலைகளில் உள்ளார்ந்திருக்கும் சமூக சமத்துவம் பற்றிய நியமங்களின் கூட்டிணைப்பாகும்.

எனினும் சமூக சமத்துவம் பற்றிய அரசியல் சொல்லாடல், சாதி உறவுகள் சம்பந்தப்பட்ட சமத்துவத்தைப் பற்றிக் குறிப்பாக எதுவும் கூறவில்லை. சாதி விடுதலை பற்றியும் கூறவில்லை. சமத்துவம் பற்றிய கருத்து நிலையில் காணப்படும் சமத்துவம், நீதி முதலிய வகைமைகள் வர்க்க சாதி பேதங்களையும் உள்ளடக்குகின்றன என்று கருதப்படுகின்றது. வர்க்க அடிப்படையில் காணப்படும் சமத்துவமின்மையையும் அநீதியையும் பற்றிpய பகிரங்க உரையாடல்களைச் சமூகம் அனுமதிக்கும் போதிலும் சாதி அடிப்படையிலான சமத்துவமின்மைகளையும் அநீதிகளையும் பற்றிய உரையாடல்களை அனுமதிப்பதல்லை. இதன் விளைவாக, சாதிக்கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை என்ற கருத்து சமத்துவம் பற்றிய சமூக வர்க்கப் பெருஞ் செயற்திட்டத்தில் ஒரு மௌனப் பங்காளி என்ற நிலைக்குத் தாம் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ‘அடக்கப்பட்ட கிராம மக்கள்’ (பீடித்த கமி ஜனதாவ), ‘அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள்’ (பாகென ஜனதாவ), வறிய கிராம மக்கள் (துகி கமி ஜனதாவ) என்பன, வறிய கிராமப்புறத்து மக்களைக் குறிக்கும்; பொதுவான சொற்களாகும். இவர்கள் சமூக ரீதியில் ஒருமுகப்பட்ட சாதி சார்பற்ற சமூக அலகாகக் கட்டமைக்கப்பட்டுள்ளனர். அல்லது சாதி அடக்குமுறையை நேரடியாகக் குறிப்பிடாமல் ஒடுக்கப்பட்ட சாதிகளைக் கொண்ட சமுதாயங்களைச் சேர்ந்த வறியோரை விபரிப்பதற்கு உருவாக்கப்பட்ட மேலோட்டமான வகைமைகள் என்றும் இவற்றைக் குறிப்பிடலாம்.

அப்படியாயின் ஓரங்கட்டப்பட்ட சாதிகள் தொடர்பாக, சமூக முன்னேற்றம் , சமூக விடுதலை பற்றிய சிங்கள அரசியல் சொல்லாடல் ஏற்படுத்தக் கூடியதாக இருந்த ஒரேயொரு சமூக சீர்திருத்தக் கருத்து, அடக்கி ஒடுக்கப்பட்ட கிராம மக்களை மேம்படுத்தலாகும். இப்பின்னணியில் சாதி விடுதலைக்கான ஒரு அரசியல் மொழியின் இன்மை இலங்கையின் அரசியல் கலாச்சார மாணவனொருவனின் கவனத்தை ஈர்க்கவேண்டிய முக்கிய விடயமாகும்.

சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூக சமத்துவமின்மையையும் பாரபட்சங்காட்டுதலையும் பகிரங்கமாக எதிர்க்கக்கூடிய அரசியல் இயக்கமொன்று சிங்களச் சமூகத்தில் உருவாகவில்லை என்பதே, இலங்கை அரசியலின் சமூகவியலில் காணப்படும் ஒரு தனியியல்பாகும்.

வர்க்க அடிப்படையிலான விடுதலை பற்றிய சமதர்ம வகைமையில் மறைந்திருக்கும் சமூக சமத்துவம் பற்றிய அவர்களுடைய அரசியல் செய்திகள், ஒடுக்கப்பட்ட சாதியினரைக் கொண்ட சமுதாயங்களின் கவனத்தையும் ஆதரவையும் ஈர்த்தெடுத்த போதிலும் இடதுசாரி இயக்கமோ, தீவிரமான மக்கள் விடுதலை முன்னணியோ கூட சாதி ஒடுக்குமுறைப் பிரச்னையைத் தமது அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின் வெளிப்படையான கூறாகக் கொள்ளவில்லை.

தேர்தல்கள், பயங்கரவாதக் கலகங்கள் போன்ற தீவிரமான அரசியல் நடவடிக்கைகள் இடம்பெறும் காலங்களில் கிராமப்புறங்களில் மிக அதிக அளவில் அரசியல் வன்செயல்கள் ஏன் காணப்படுகின்றன என்பதற்குச் சமூக சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியற் செயற்றிட்டத்துடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒரு சமூக விடுதலைச் சொல்லாடல் இல்லாமை ஒரு வேளை விளக்கமாக அமையலாம்.

சிங்களச் சமூகத்தின் இந்த அரசியல் அனுபவம், சாதி ரீதியான பாரபட்சங்களுக்கு எதிராக இலங்கையில் தமிழர் சமூகம் மேற்கொண்ட அரசியல் போராட்டங்களிலிருந்து ஓரளவு வேறுபட்டதாக அமைகின்றது. கொம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டுடன் 1950 களிலும் 1960 களிலும் தாழ்த்தப்பட்டட சாதிகளைச் சேர்ந்த சமுதாயத்தினர் இந்துக் கோவில்களுக்கும் உணவகங்களுக்கும் செல்வதற்கான உரிமை கோரியும் மரபு வழியாக மேற்சாதியினர் மட்டும் பயன்படுத்திய கிணறுகளை இவர்களும் பயன்படுத்துவதற்கான உரிமை கோரியும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. எவ்வாறெனினும் சிங்களச் சமூகத்தின் அரசியலில் காணப்பட்ட அதே முரண்பாடு தமிழ் அரசியலிலும் கூட இடம்பெற்றது.

எந்தவோர் அரசியற் கட்சியோ அல்லது இயக்கமோ, நேரடியாகவும் பகிரங்கமாகவும் சமூக விடுதலைக்கான அரசியற் செயற்றிட்டமொன்றில் ஒடுக்கப்பட்ட சாதிகளை அணிதிரட்டவில்லை. தமிழரின் கிளர்ச்சிகர இளைஞர் அரசியலிற் கூட சாதி அடக்குமுறையும் விடுதலையும் ஆரவாரம் மிக்க தேசிய விடுதலைக்கு இரண்டாம் பட்சமானதாகவே அமைகின்றன.

காலனித்துவ சமூகத்தில் சாதி அரசியல்

1920 ஆம் ஆண்டு முதல் இனச்சிறுபான்மையினரும் சாதிச் சிறுபான்மையினரும் தத்தமது அரசியல் எதிர்காலத்தைக் காலனித்துவ சட்ட சபையிலிடம் பெறும் அரசியல் பிரதிநிதித்துவத்தினூடாக கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்தனர். காலனித்துவ அரசின் அதிகார அமைப்புக்களுள் நுழைதல் என்பது பொதுவான அடையாள நலன்களைக் கொண்ட சமுதாயங்கள் அரசியல் அங்கீகாரத்தைப் பெறுவதைக் குறித்தது மட்டுமன்றி பொருளாதார வளங்களின் பகிர்விலும் தொழில் வாhய்ப்புக்களிலும் கூடக் காலனித்துவ அரசின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையையும் குறிப்பதாக அமைந்தது. ‘இனம்’, ‘சாதி’ என்பவற்றின் அடிப்படையிலமைந்த குழு அடையாளம் இக்காலப்பகுதியில் குழுக்களுக்கிடையே – பெரும்பான்மை, சிறுபான்மை உறவுகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. போல் தோன்றுகின்றது. இனம் மற்றும் சாதி அடிப்படையிலமைந்த பெரும்பான்மையினர் பிரதிநிதித்துவ நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்துவர் என்ற பீதி, இனம் மற்றும் சாதிச் சிறுபான்மையினர் மத்தியில் நிலவியது.

சட்டவாக்க அரசியலில் சிங்களப் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் மீது ஆதிக்கம் செலுத்துவர் என்ற பயம், அதை நீக்கும் வகையில் ஏற்கனவே நிலவி வந்த பிரதிநிதித்துவ முறைமையை மாற்றியமைக்குமாறு காலனித்துவ அரசிடம் விண்ணப்பிக்கும்படி தமிழ் அரசியற் தலைவர்களைத் தூண்டியது. ‘சமநிலைப் பிரதிநிதித்துவம்’ என அழைக்கப்படும் அவர்களுடைய பிரேரணை, சட்டவாக்கச் சபையில் சிங்களப் பெரும்பான்மையினரின் பிரதிநிதிகளை 50 சதவீதமாகக் கட்டுப்படுத்தி, எஞ்சிய அரைப்பங்கினரை ஏனைய சிறுபான்மையினர் மத்தியில் பகிர்ந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டது. இதே போன்று சிறுபான்மைச் சாதியினரும் கூட பெரும்பான்மை ஆதிக்கத்திற்கெதிராகக் காப்பீடுகளைத் தேடினர்.

உதாரணமாக, சிங்கள ‘கரவா’ சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி, குடியேற்றச் சட்டவாக்கசபையில் சாதிச்

சமூகங்களுக்கு விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்வம் வழங்கப்படவேண்டும் என்று பிரேரித்த அதேவேளை ஓரங்கட்டப்பட்ட சாதிச் சமூகங்கள் பல குறிப்பாக ‘கரவா’, 'துராவ’, 'வகும்புர’ என்பன, தமது நலன்களைப் பேணுவதற்காகப் பிரத்தியேகமான விசேட பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கோரின. அத்தருணத்தில் முன்னணி ஆய்வறிவாளராக இருந்த ‘கரவா’ சாதியைச் சேர்ந்த கேட் முதலியார் டபிள்யூ.எப்.குணவர்த்தனவிடமிருந்தே சாதி அடிப்படையிலான சிறுபான்மை அந்தஸ்து கோரிக்கை எழுந்தது. 1920 களில் இன அடிப்படைப் பிரதிநிதித்துவத்தை ஒழிக்கவேண்டுமென்றும் அதற்குப் பதிலாக பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் இடம்பெறவேண்டுமென்றும் கோரும் ஓர் இயக்கம் உருவாகிய போது, ‘ஒவ்வொரு சிறுபான்மைச் சாதிக்கும் அல்லது குழுவிற்கும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்’ சட்டவாக்க சபையில் இடம் பெறவேண்டுமென்ற கோரிக்கையை குணவர்த்தன 1922 ஆம் ஆண்டில் குடியேற்ற நாட்டுச் செயலாளருக்கு அனுப்பினார்.

இலங்கைச் சமூகத்தில் சாதிமுறை நிலவுகின்றமையை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென்று குணவர்த்தன வாதாடியமை சுவாரசியமான விடயமாகும். ‘ஹோமியோபதி சிகிச்சை முறையின் முதற் கட்டமாக ஒவ்வொரு சாதியும் அல்லது சிறிய அளவிலான சாதிகளைக் கொண்ட குழுக்களும் அரசதுறையின் கவனமும் ஆதரவும் வழங்கப்படவேண்டிய, தமக்கே உரித்தான நலன்களைக் கொண்ட ஒன்றிணைக்கப்பட்ட அமைப்பாக அங்கீகரிக்கப்படவேண்டும்’ என்றும் இவர் ஆலோசனை கூறினார். சிறுபான்மைச் சாதியினர் அங்கீகரிக்கப்படவேண்டுமென்ற இத்தகைய தீவிர நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது, பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம், அரசியலில் பெரும்பான்மைச் சாதியினரின் அதாவது ‘கொயிகம’ சாதியினரின் ஆதி;க்கத்தை உறுதிப்படுத்தும் என்ற அச்சமாகும். ‘பிரதேசவாரி வாக்குரிமை நாட்டிலுள்ள அதிகாரம் அனைத்தையும் – அதாவது அரசாங்கத்தை நெறிப்படுத்தும் அதிகாரம் அனைத்தையும் சிங்களச் சாதி ஒன்றினது கைக்கு மாற்றிவிடும். இச்சாதியினரின் தொகைரீதியான பலம்,அரசியல் ரீதியாகப் பயனுறுதிவாய்ந்த நாட்டின் ஏனைய பௌத்த மக்களின் பலத்திற்குச் சமமானதாகும். இச்சாதியினர் தமது பலம் மிக்க சாதியமைப்பின் உதவியுடன் எந்நேரத்திலும் மிக்க பலம் வாய்ந்த அரசியல் பொறியமைப்பாக மாற்றமடையக்கூடும்’ என்று குணவர்த்தன எழுதினார்.

1929 இல் டொனமூர் ஆணைக்குழுவிற்கும் 1944 இல் சோல்பரி ஆணைக்குழுவிற்கும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளில் சிறுபான்மை இன மற்றும் சாதிப்பிரதிநிதிகள், பெரும்பான்மை ஆதிக்கத்திற்கெதிராக தேர்தல் காப்பீடுகள் வேண்டுமெனத் தீவிரமாக வாதிட்டனர். இவ்விடயம் தொடர்பாக டொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கையில் பின்வருமாறு கூறப்படுகின்றது.

இனப்பிரதிநிதித்துவம் அவசியம் என்று கூறப்படுவது தொடர்பாக அளவில் குறைவு ஏதாவது உண்டென்று ஏதாவது சான்றிருந்தால் இனப்பிரதிநிதித்துவத்தை விரிவாக்குவதற்கான யோசனையை முன் வைப்பதற்கு நாம் ஊக்குவிக்கப்பட்டிருக்கலாம்… எனினும் இன அடிப்படையில் ஆசனங்களை ஏற்கனவே கொண்டிருப்பவர்கள் தமக்கான ஆசனங்கள் அதிகரிக்கப்படவேண்டுமென விரும்புவது மட்டுமல்லாமல் தற்பொழுது பிரதிநிதித்துவப்படுத்தப்படாத சமய,சாதி மற்றும் விசேட நலன்களைக் கொண்ட வேறு பல சமூகத்தினரும் சட்டவாக்க மன்றத்தில் தமக்கும் ஆசனங்கள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்றும் ஏற்கனவே இச்சலுகைளை அனுபவிப்பவர்கள் போன்று தமக்கும் அதற்கு உரிமை உண்டென்றும் எம்முன் வந்து கோரிக்கை விடுத்தனர்.

1944 இல் சோல்பரி ஆணைக்குழு வந்த போதும் சாதிக்குழுக்களும் பிரத்தியேகமான சட்டசபைப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தின. சிங்கள, தமிழ் சமூகங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியினரையுள்ளடக்கியுள்ள சமுதாயங்கள் சங்கங்கள் என்பவற்றின் பேராளர்கள் ஆணைக்குழுவின் முன்னிலையில் சமூகமளித்து தமது மனக்குறைகளையும் இயலாமைகளையும் பற்றி முறைப்பாடு செய்ததுடன் உருவாகிவரும் யாப்புத்திட்டத்திலும் அரசியல் முறையிலும் தமக்கு ஓர் இடத்தைக் கோரினர். தமிழ்ச் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட சாதியினரின் சங்கமாகிய அனைத்திலங்கை சிறுபான்மைத் தமிழர் சபை, வயது வந்தோர் வாக்குரிமை, தமது மனக்குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் சட்டவாக்க சபையில் செல்வாக்குச் செலுத்துமாளவிற்குத் தமக்கு உதவவில்லை என்ற அடிப்படையில் நியமனத்தின் மூலம் தமக்கு விசேட பிரதிநிதித்துவம் கோரியது.தாழ்த்தப்பட்ட சாதியினரின் அனைத்திலங்கை ஒன்றியம் பெருந்தோட்டத் தமிழர் சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களுக்கு தனித்தேர்தல் பதிவேடுகளுடன் தனிவாக்காளர் தொகுதிகளை அமைக்கும்படி கோரிக்கை விடுத்தது. தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோர் யாப்புக் கணிப்பீடுகளைப் பெறும் வேறான தனிப்பிரிவாகக் கணிக்கப்படுவதுடன் சட்டவாக்க சபையில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்பதே அவர்கள் முன்வைத்த பரிகாரமாகும். ‘கரவா’சமுதாயமும் தனது பிரதிநிதிகள், விருப்பத் தேர்வு அடிப்படையில் சட்டசபைக்குத் தெரிவு செய்யப்படுவதற்குரிய ஒரு பிரத்தியேக திட்டத்தை கோரியது.’கொயிகம’ சாதியின் தேவைகள் தமது சாதியினரின் தேவைகளை விஞ்சி நின்றனவென்று மத்திய கடற்றொழில் ஒன்றியம் தனது மனக்குறையை வெளிப்படுத்தியது.

கடற்றொழில் துறை அரசாங்கத்தின் மிகக் குறைவான கவனத்தைப் பெற்ற அதேவேளை விவசாயத்துறைக்குப் பெரும் அனுகூலங்கள் வழங்கப்பட்டனவென ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஆணைக்குழுவிடம் கூறினர். சட்டசபையில் ஆதிக்கம் செலுத்திய ‘கொயிகம’ சாதியினர் ‘பிரதானமாக மீனவர்களை உள்ளடக்கிய ‘கரவா’ சாதியினர் சுபீட்சமடைந்து தமது ஏற்றத்திற்கு அச்சுறுத்தலாக அமைவதை விரும்பவில்லை’ என்பதைச் சுட்டிக்காட்டி கடற்றொழில் துறை , சமய,சாதி அடிப்படைகளிலமைந்த பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதென்று ஒன்றியம் சுட்டிக்காட்டியது. ‘கரவா’ சமுதாயத்தினருக்கு 15 முதல் 20 வரையாக ஆசனங்கள் கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் விதத்தில் தேர்தல் தொகுதிகளுக்கு எல்லை குறிக்கும் முறைமையொன்றை கடற்றொழில் ஒன்றியம் முன் வைத்தது. ‘பத்கம’, ‘வகும்பா’ சாதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தாம் அனுபவிக்கும் இயலாமைகள், பாரபட்சங்கள், சமத்துவமின்மை என்பன பற்றி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தனர். இந்த இரண்டு சாதிகளைச் சேர்ந்தவர்களும் பௌத்த சிங்கள சனத்தொகையின் மூன்றிலொரு பங்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை அவர்கள் சுட்டிக்காட்டினர். ‘பத்கம’, 40,000 மக்களையும் ‘வகும்பா’ ஒரு மில்லியன் மக்களையும் உள்ளடக்குகின்றது என அவர்கள் கூறினர்.

டொனமூர் அரசியல் யாப்பில் பிரதேசவாதித் தேர்தல் தொகுதிகள் எல்லை குறிக்கப்பட்டுள்ள விதத்தின் படி, சட்டசபைக்குத் தமது அங்கத்தவர் ஒருவரேனும் தெரிவு செய்யப்படமுடியவில்லை என்று அவர்கள் முறையிட்டார்கள். தமக்கு விசேட பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்பதே இவர்களுடைய கோரிக்கை. இதேவேளை கத்தோலிகரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் பிரதேசங்கள் விசேடமாக எல்லை குறிக்கப்பட வேண்டுமென்று இலங்கைக் கத்தோலிக்க ஒன்றியம் ஆலோசனை கூறியது.

இத்தகைய எல்லைகளைக் குறிக்கும்போது ஏறத்தாழக் கத்தோலிக்கரல்லாத சனத்தொகையைக் கொண்ட உட்பிரதேசங்களுடன் மாவட்டங்களை இணைப்பதற்குப் பதிலாக அம்மாவட்டங்களைக் கரையோரம் நெடுகிலும் விரிவாக்குதல் வேண்டுமென்றும் கத்தோலிக்க ஒன்றியம் பிரேரித்தது.

எவ்வாறெனினும் சட்டசபைப் பிரதிநிதித்துவத்தை இன நீக்கம் (னநஉழஅஅரயெடணைந) செய்யச் சங்கற்பம் கொண்டிருந்ததனால் சிறிய சிறுபான்மையினரால் முன்வைக்கப்பட்ட தனியான பிரதிநிதித்துவம் அல்லது தனியான தேர்தல் தொகுதிகள் பற்றிய கோரிக்கைகளுக்கு சோல்பரி ஆணைக்குழு சாதகமாக இருக்கவில்லை.

தனியான பிரதிநிதித்துவத்திற்கான சிறுபான்மைச் சமுதாயங்களின் கோரிக்கைகள், ‘ சந்தேகத்திற்கிடமின்றி வகுப்பு வாதம் (உழஅஅரயெட)சார்ந்தவை’ என்று கூறி வகுப்புவாத அடிப்படைப் பிரதிநிதித்துவத்திற்குத் திரும்புவதை ஊக்குவிக்கலாகாதெனன்ற தனது அவாவை’ ஆணைக்குழு வலியுறுத்தியது. இருந்தபோதிலும் பல அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்குவதன் மூலம் சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் பலப்படுத்தப்படாலாம் என்று தமக்கு வழங்கப்பட்ட யோசனைக்கு ஆணைக்குழு சாதகமான விதத்தில் துலங்கியது. அத்தகையதொரு தேர்தல் தொகுதியில் சிறுபான்மையினர் தமது முழுப்பலத்தையும் திரட்டி தமது சொந்தத் தெரிவுக்குரிய வேட்பாளர்களை ஆதரிப்பதே சிறுசிறுபான்மையினருக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடிய ஒரேயொரு வாய்ப்பாகும் என்பதே பல அங்கத்தவர் தொகுதிக்குரிய நியாயப்பாடாகும். ‘சிற்சில பிரதேசங்களில் இம்முறையிலமைந்த பிரதிநிதித்துவத்தைப் பின்பற்றுவது நன்மை பயக்கலாம். உதாரணமாகக் கொழும்பு நகரம், யாழ்ப்பாணக்குடாநாடு மற்றும் குறிப்பாக ஒரே சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் தெட்டத் தெளிவாக இருக்கும் இடங்கள்’ என்று ஆணைக்குழு சிந்தித்தது. பொருத்தமான பிரதேசங்களில் அத்தகைய தேர்தல் தொகுதிகளை அமைக்கும் பணியை தொகுதி நிர்ணய ஆணைக்குழு மேற்கொள்ள இருந்தது.

சுதந்திரத்திற்கு பிற்பட்ட அரசியலில் சாதி

சுதந்திரத்தை உடனடியாகத் தொடர்ந்து எந்த ஆண்டுகளில் இலங்கையின் அரசியல் ஒழுங்கு மதச் சார்பற்றதாக இருந்தது. உள்ளுர் அரசியல்சார் உயர்குழாத்தின் உடன்பாட்டுடன் பிரித்தானிய அரசியல் யாப்பு நிபுணர்களால் வரையப்பட்ட சுதந்திரத்திற்குப் பிந்திய முதலாவது அரசியல் யாப்பு, அரசு எந்தவோர் இனத்துடனோ மதத்துடனோ தன்னை இனங்காட்டமாட்டாது என்ற தத்துவத்தை உள்ளடக்கியிருந்தது. அந்த அர்த்தத்தில் பார்த்தால் சோல்பரி அரசியல் யாப்பு காலனித்துவ நீக்கம் செய்யும் தேசியவாத அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ, வெளிப்படுத்துவதாகவோ அமையவில்லை. சிறுபான்மையினருக்கு பாரபட்சம் காட்டுவதாக அமையக்கூடிய சட்டங்களை செல்லுபடியாகாததாக்குவதன் மூலம் குழுக்களுக்கு எதிரான ஒருதலைப்பட்சமானவற்றை சட்டரீதியற்றதாகச் செய்ய இந்த யாப்பு நிச்சயமாக முனைந்தது. இதேபோன்று இன அல்லது சமூக ரீதியில் பின் தங்கிய சிறுபான்மையினருக்கு விசேட வாய்ப்புக்களை வழங்கும் கோட்பாட்டினையும் இந்த அரசிய் யாப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. சமூகச் சிறுபான்மையினருக்குச் சட்டவாக்கப் பிரதிநிதித்துவம் வழங்குதல் பற்றிய பிரச்னை மறைமுகமான விதத்தில் இரண்டு பொறிமுறைகளினூடாகக் கவனத்தில் கொள்ளப்பட்டதென்று கருதலாம்.குறிப்பிட்டதொரு சாதியினர் பெருமளவில் செறிந்திருககும் பிரதேசங்களில் அவர்கள் தம் சாதியைச் சேர்ந்த ஒருவரைப் பாராளுமன்ற அங்கத்தவராகத் தெரிவு செய்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் விதத்தில் பல அங்கத்துவத் தேர்தல் தொகுதிகளை எல்லை குறித்தல் முதலாவது உத்தியாகும்.

அம்பலாங்கொட- பலபிட்டி தொகுதியும் பின்னர் , பெந்தா – எல்பிட்டி தேர்தல் தொகுதியும் ‘கரவா’, 'சலாகம’, 'வகும்புர’ சாதிக்குழுக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டன. மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு அல்லது மேற்சபைக்கு (செனற்), ‘நியமன அங்கத்தவர்களைத் தெரிவு செய்தல்’ இரண்டாவது உத்தியாகும். எனினும் இங்கு சாதிப்பிரதிநிதித்துவம் என்ற கோட்பாடு தெளிவாக முன்வைக்கப்படவே இல்லை. பிரதிநிதித்துவப்படுத்தப்படாத சாதிக்குழுக்கள்;, தமது பிரச்னையை அரசியற் தலைமைத்துவத்திற்குச் சமர்ப்பித்தால் அத்தகைய சமுதாயங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கும் வாய்ப்பு உண்டென இது புரிந்து கொள்ளப்பட்டது. தொடரும் அரசியல் யாப்புச் சிந்தனையில் மொழி அல்லது சமூக சமத்துவ வகைமைகளின் இன்மை மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். சமூகச் சீர்திருத்தச் சொல்லாடல் இன்மைக்குச் சமாந்தரமாக , சாதி அடக்குமுறைப் பிரச்னை தொடர்பான ஒரு பொதுக்கொள்கை பற்றிய மௌனமும் தொடர்ந்து நிலவி வருகின்றது. இந்த இன்மையைப் பல்வேறு மட்டங்களிற் காணலாம். முதலாவதாக சாதி அடக்குமுறை பொதுவாக நாட்டின் சமூக முன்னேற்றத்திற்கு ஒரு சமூக அரசியற் தடையாகவுள்ளதென்று பொதுவாகக் கருதப்பட்டபோதிலும் சுதந்திர இலங்கையின் சட்டசபை , சாதி அடக்குமுறையின் காரணமாக எழுகின்ற பொதுக்கொள்கைப் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதற்கு குறிப்பான ஆர்வம் எதையும் காட்டவில்லை.

தனிப்பட்ட நிலையில் அடிக்கடி ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு முரணான வகையில் பொதுத்துறையில் வெளிப்படுத்தப்படும் சிங்கள நம்பிக்கை என்னவென்றால் கடந்த காலத்தில் இருந்தது போல் அல்லது தமிழ்ச்சமூகத்தில் இருப்பது போல் இப்பொழுது சிங்கள சமூகத்தில் சாதி ஒரு பிரதான பிரச்னையல்ல என்பதாகும். சி;ங்கள சமூகத்தில் நிலவும் சாதி தொடர்பான இப் பொது மனப்பாங்கு இலங்கையின் அரசியல் யாப்பு, சட்டவாக்கம், நிர்வாகம் என்ற துறைகளின் பொதுக்கொள்கைச் சொல்லாடலிலும் மறைமுகமாகச் செல்வாக்குச் செலுத்தியது. இந்தியாவில் இருப்பது போல சாதி அடிப்படையிலான சமூக இயலாமைகளை அங்கீகரிக்கின்ற ஒரு யாப்பியல் கொள்கை இலங்கையில் இல்லை.

அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் யாப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிவாரணமும் சலுகையும் வழங்கும் கொள்கைகளும் இல்லை. அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் உள்ள பாரபட்சம் காட்டாமை என்பது பற்றிய பிரிவே இலங்கையின் அரசியல் யாப்பு, சாதியை ஒரு வகைமையாக அங்கீகரிக்கும் ஒரே ஒரு சந்தர்ப்பமாகும். 1978 ஆம் ஆண்டு யாப்பின் உறுப்புரை 12, ‘சட்டத்தின் முன் யாவரும் சமம்’ எனப் பிரகடனப்படுத்திய பின்னர், பாரபட்சம் காட்டாமை என்ற கொள்கையைப் பின்வருமாறு விபரிக்கின்றது.

‘இனம், சமயம், மொழி,சாதி,பால், அரசியல் அபிப்பிராயம் பிறப்பிடம் என்ற அடிப்படையில் அல்லது இவற்றுன் எவையேனும் ஒன்றின் அடிப்படையில் எந்தவொரு பிரஜைக்கும் பாராபட்சம் காட்டப்படலாகாது. ‘அத்துடன் உறுப்புரை 12 இன் உபபிரிவு(3) பொதுத்துறையில் பாரபட்சம் காட்டப்படுதல் எவ்வாறு தவிர்க்கப்படலாம் என்பதை பின்வருமாறு கூறுகின்றது. ‘இனம் , சமயம், மொழி, சாதி, பால் என்ற அடிப்படையில் அல்லது இவற்றுள் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் கடைகள், பொதுச்சிற்றுண்டிச்சாலைகள், ஹோட்டல்கள், பொதுக் களியாட்ட இடங்கள், தனது மதத்தி;;ற்குரிய பொது வழிபாட்டிடங்கள் என்பவற்றுக்குச் செல்வதற்கு எவரேனும் தடுக்கப்படவோ, கட்டுப்படுத்தப்படவோ நிபந்தனைக்கு ஆளாக்கப்படவோ கூடாது. எனினும், பாரபட்சம் காட்டப்படும் துறைகளில் திருத்தச் செயற்பாடுகளுக்காக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவும் உபபகுதியில் ஆச்சரியமான முறையில் சாதி தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடு பின்வருமாறு கூறுகின்றது. ‘ பெண்கள் , பிள்ளைகள் அல்லது உடல் ஊனமுற்றோரின் முன்னேற்றத்திற்காகச் சட்டத்தின் மூலம் துணைச்சட்டத்தின் மூலம் அல்லது அல்லது நிறைவேற்றுச் செயல்களின் மூலம் விசேட ஏற்பாடுகள் இடம்பெறச் செய்வதை இவ்வுறுப்புரையிலுள்ள எதுவும் தடுத்து நிறுத்தக்கூடாது’. 1971, 1978 ஆம் ஆண்டுகளில் அரசியல் யாப்புச் சட்ட மூலங்களின் வரைவில் அடிப்படை உரிமைகளுக்கான ஏற்பாடுகள் பற்றிய விவாதம், பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட பொழுது, சாதியானது பாரபட்சம் காண்பிக்கப்படுவதற்கு ஒரு காரணமாகின்றது என்று வெறுமனே குறிப்பிடப்பட்டமையைத் தவிர, சாதி ரீதியான பாரபட்சம் பற்றி விசேடமான விவாதங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

சுதந்திரத்திற்குப் பிற்பட்ட இலங்கைப் பாராளுமன்றத்தில் இழிவான விதத்தில் அவ்வப்போது சாதி பற்றிக் குறிப்பிட்ட போதிலும் சாதி வேறுபாடு காட்டுதல் பற்றிய பிரச்னை, சட்டசபையின் கொள்கை ரீதியான கவனத்தை ஈர்ப்பதறகுத் தகுதியுடையது என்பது மூன்று சந்தர்ப்பங்களிலேயே வெளிப்பட்டன.

முதல் இரண்டு சந்தர்ப்பங்களிலும் இடதுசாரிச் சார்புடைய சிங்கள, தமிழ் மேற்சபை உறுப்பினர்கள், சாதி அடிப்படையிலான பாரபட்சங்களைத் தடை செய்வதற் வேண்டிய சட்டப் பிரேரணைகளை நிறைவேற்ற முயன்ற போதிலும் அப்பிரேரணைகள் தோற்கடிக்கப்பட்டன. மூன்றாவது சந்தர்ப்பம், 1957 இல் இடம் பெற்றது.சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பாரபட்சங்களை சட்டத்திற்குப் புறம்பானவையாக்கும் நோக்கத்துடன் மேற்சபை சட்ட மூலமொன்றை முன் வைத்தது. சமூக இயலாமைத் தவிர்ப்புச் சட்டம் என்ற பெயரில் இது சட்டமாக்கப்பட்டது. இச்சட்டம் பிரதானமாக தமிழ்ச்ச சமூகத்தில் சாதி வேறுபாட்டுப் பிரச்னையை அணுகுவதாகவ அமைந்திருந்தது. இச்சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்;ந்தவர்கள் கோவில்கள், உணவகங்கள், அரசாங்க அலுவலகங்கள், தொழில் பார்க்கும் இடங்கள், பொது வாகனங்கள், பாடசாலைகள் போன்ற பொது இடங்களுக்குச் செல்லுதல் தடுக்கப்பட்டிருந்தது. தமிழ்ச்சமூகத்தைச் சீர்திருத்துவதற்கு அரசின் தலையீடு அவசியம் என்பதே இச்சட்டத்தின் முழுத்தாற்பரியமாக அமைந்தது.’ இதேவேளை சிங்களச் சமூகத்தில் சாதி அடிப்படையில் நிகழ்ந்த அநீதிகளை வெளிப்படையாகச் சீரமைப்பதற்கு நிர்வாக நடவடிக்கைகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை எனலாம்.

அரசியல் மற்றும் சட்டத்துறைச் சொல்லாடல் போன்று நிர்வாகச் சொல்லாடலிலும் ‘ரொடிய’, ‘கின்னர’ ஆகிய வெளி ஒதுக்கப்பட்ட இரண்டு சாதிகள் நீங்கலாக வேறு சாதிகளைப் பொறுத்தவரை சாதி அடிப்படை அநீதிகள் நிலவுவது மறுக்கப்பட்டே வந்துள்ளது.1951 ஆம் ஆண்டின் கண்டி விவசாய ஆணைக்குழுவின் அறிக்கை இதனை விளக்குகின்றது. இலங்கை சுதந்திரம் பெற்ற ஓராண்டிற்குள் அதாவது 1949 இல் கண்டிச் சிங்கள விவசாயிகளின் மனக்குறைகள் பற்றி விசாரிப்பதற்கும் அவர்களுடைய பொருளாதார, சமூக நிலைமைகளை மேம்படுத்துவதற்கான விதப்புரைகளை வழங்குவற்குமென இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டது. கண்டிய விவசாயிகளின் நிலைமைகள் பற்றிய தகவல்களை வேண்டி, ஆணைக்குழு அனுப்பிய வினாக்கொத்தில் ‘சமூக நிலைமைகள்’ என்ற ஒரு பிரிவு இடம் பெற்றிருந்தது. இப்பிரிவில் சாதி பற்றிய ஒரு வினாவும் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம் பெற்ற சாதி பற்றிய ஒன்றரைப் பக்க விபரத்தில் ‘சகல கிராமப்புற பிரதேசங்களிலும் வெளிப்படையான சாதி வேறுபாட்டு வடிவங்கள் மிகப் பெருமளவிற்கு மறைந்துவிட்டன. எஞ்சியிருப்பவையும் வேகமாக மறைந்து வருகின்றன’ என்பதை ஆணைக்குழு அங்கத்தவர்கள் மகிழ்வுடன் அவதானித்துள்ளதாக ஆணைக்குழு தமது முடிவைத் தெரிவித்தது. ரெடியா ‘கின்னர’ சமூகங்களின் அந்தஸ்து தொடர்பாக மட்டுமே அரச தலையீடு வேண்டப்பட்டதாக ஆணைக்குழு கருதியது. அறிக்கையின் வாசகம் பின் வருமாறு:

‘ரொடியா’, (நகர சுத்தி செய்வோர்)அல்லது ‘கின்னர’ (பாய் இழைப்போர்) ஆகிய சமூகங்களைத் தவிர சாதியானது குறிப்பிடக்கூடிய அளவிற்கு ஊனம் விளைவிக்கும் நிலை தற்போது இல்லை என்பது அவதானிக்கக்கூடிய ஓர் அம்சமாகும். குறிப்பாகப் பின் தங்கிய இந்த இரண்டு சமூகத்தினரும் சுரண்டப்படுவதை தடுப்பதற்கும் பிரத்தியேகமான பாதுகாப்பு வழங்குவதற்கும் அவர்களுடைய தற்போதைய பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் சில விசேட உதவிகள் வழங்கப்பட்டு கவனஞ் செலுத்தப்படவேண்டியுள்ளது’

கண்டிய மாவட்டங்களிலுள்ள ஏனைய கீழ்ப்படுத்தப்பட்ட சாதியினரின் நிலைமைகள் தொடர்பாக பொதுக் கொள்கைத் தலையீடு அவசியமில்லை என்பதே இவ்வாய்வில் உள்ளடங்கியிருக்கும் எடுகோளாகும். ‘ கல்வியின் பரம்பலும் அபிவிருத்தியின் நவீன போக்குகளும் சம சந்தர்ப்பம், சம உரிமைகள் என்ற நிலைமைகளை உருவாக்கியுள்ளன. இவை தன்னளவிலேயே சாதி வேறுபாடுகளை ஒழிப்பதை நோக்கிப் பெரிய முன்னேற்றமாய் அமைந்தன என்று ஆணைக்குழு நம்பியது. சிங்கள சமூகத்தில் சாதி பற்றிய கண்டிய விவசாய ஆணைக்குழுவில் முடிவுகள்,சிங்கள பொது அரங்கில் தொடர்ச்சியாக மீள் உருவாக்கம் செய்யப்படும் ஒரு பெரிய அரசியற் கட்டுக்கதையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. சிங்களச் சமூகம் சாதி அநீதிகளிலிருந்து சார்பளவில் விடுபட்டுள்ளதென்றும் நவீனத்துவத்தின் முகவர்களான இலவசக் கல்வி, நலன்புரி அரசு, சனநாயகம் என்பன

சமூகச் சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்கு அரச தலையீட்டுக் கொள்கைகளின் அவசியத்தை அடிப்படையில் பொருத்தமற்றதாகவும் தேவையற்றதாகவும் செய்துவிட்டனவென்று இக்கட்டுக்கதை முன்னூகஞ் செய்கிறது. இக்கட்டுக்கதை பிறிதொரு ஆணைக்குழுவினரால் கேள்விகளாக்கப்படுவதற்குக் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்கள் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. இளைஞர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு இதனைச் செய்தது. சிங்கள சமூகத்தில் 1987- 1989 க்கு இடையில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் இரத்தக்களரி மிக்க இரண்டாவது கலவரத்தைத் தொடர்ந்து இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டது. இவ்வாணைக்குழு தனது அறிக்கையில்’சாதி ஒடுக்குமுறை’, சாதி ரீதியான பாரபட்சங்கள் என்ற சொற்றொடர்களை சிங்கள சமூகத்தின் வன்முறை மோதல் நிலைமைகள் தொடர்பாகப் பயன்படுத்தியது. இது சிங்களச் சமூகத்தின் சமூக நிலைமைகள் பற்றி ஆதிக்கம் செலுத்த வந்த நிர்வாகச் சொல்லாடலில் இருந்து தெளிவானதொரு விலகலாகும். இவ்வறிக்கை ‘வகும்பா’, ‘பத்கம’ என்ற இரண்டு சிங்களச் சாதிகளையும் குறிப்பிடுகின்ற. கலவரத்தின் போது இவர்களுடைய கிராமங்களிலேயே மிக உக்கிரமான சண்டை இடம்பெற்றது. திஸ்ஸமகராமையிலிருந்து சப்பிரகமுவ மாகாணத்தினூடாக மாத்தளை வரையான பிரதேசத்தையும் அம்பாறையின் சில பகுதிகளை உள்ளடக்கிய வட மத்திய மாகாணத்தையும் சேர்ந்த ‘கொயிகம’ அல்லாத சாதியினரும் கலகத்திலீடுபட்டதாக இவ்வறிக்கை இனங்கண்டது. சாதியானது ‘சமகால இளைஞர் அமைதியின்மைக்கும் பங்களிப்புச் செய்த ஒரு காரணியாக உள்ளது| என்று முடிவு செய்த ஆணைக்குழு தனது அவதானிப்பைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ‘சில சாதியினர் இன்னமும் சமூக அரசியல் அடக்குமுறைகளால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட இடங்களில் செறிந்து வாழும் போக்கைக் கொண்டுள்ளனர். அடிக்கடி இத்தகைய பாரபட்சங்களால் பாதிக்கப்படும் இளைஞர்களிடம் கலகப்போக்கு சுலபமாக வருகின்றது’ எனினும் இலங்கையின் அரசியற் பொதுக்கலாச்சாரம் இன்றும் கூட பொதுக் கொள்கையோடு சம்பந்தப்படுத்த வேண்டிய விடயங்கள் என்ற வகையில் சிங்கள சமூகத்திலுள்ள சாதி ஒடுக்குமுறைகளையும் சாதிப் பாரபட்சங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு உரிய நிலையில் இல்லை.

கீழ்நிலைச்சாதிக் குழுக்களுக்கு குறைந்த பட்சமேனும் நீதி வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கு கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள், சாதி சார்ந்த அசமத்துவம் காரணமாக ஆரம்பிக்கப்பட்ட அரச கொள்கை என்று வெளிப்படையாக இனங்காணப்படவில்லை என்பது சுவாரசியமான ஒரு விடயமாகும். 1947 முதல் 1972 வரை நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் மேற்சபைக்கு அங்கத்தவர்களை நியமிக்கும் போதும் பாராளுமன்ற ஆசனங்களுக்கு அபேட்சகர்களை தெரிவு செய்யும் போதும் பாராளுமன்றத்தில் சாதி அடிப்படைப் பிரதிநிதித்தும் உண்மையில் கவனத்திற்கெடுக்கப்பட்டது. எனினும் இவ்வழக்கம் எழுதப்படாத ஓர் அரசியற் சட்டமாகவே இருந்தது. பிரதிநிதித்துவம் தொடர்பாகச் சமத்துவத்தைக் கருத்திற் கொண்ட அரசியல் யாப்பின் ஆணையைப் பெற்றதொன்றாகவோ வேறேதாவதொரு எழுதப்பட்ட சட்டத்தின் ஆணையைப் பெற்றதொன்றாகவோ இருக்கவில்லை. தேர்தல் தொகுதிகளின் சாதி அடிப்படை சனத்தொகைக்கு ஏற்ற விதத்தில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடைமுறை இன்றும் கூட எல்லா அரசியல் கட்சிகள் மத்தியிலும் காணப்படுகின்றது. கட்சிகளின் தேர்தல் வெற்றியைக் கருத்திற் கொண்டு எழுதப்படாத அதே அரசியல் சட்டத்துக்கிணங்க இது நடைபெறுகின்றதே அன்றி சமூக ரீதியாக நியாயமான அரசியற் பிரதிநிதித்துவத்தை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இது தொடர்பாக இளைஞர் பற்றிய ஆணைக்குழு பாராளுமன்றத்தில் சாதிப் பிரதிநிதித்துவம் பற்றிச் செய்த விதப்புரைகளுள் ஒன்று முக்கிய அரசியல் கருத்தொன்றைத் தெரிவிப்பதாக இருக்கின்றது. பாராளுமன்றத்தில் சிறுபான்மைச் சாதியினரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கக்கூடிய விதத்தில் சில பிரதேசங்களின் தேர்தல் தொகுதி எல்லை குறிப்பாக வட, தென் மாகாணங்களிலும் மத்தியமாகாணத்திலும் ‘வகும்பா’,'பத்கம’ சாதியினர் செறிநது காணப்படும் இடங்களில் மீள்வரையறை செய்யப்படவேண்டும் என இவ்வாணைக்குழு பரிந்துரைத்து.ஆனால் இப்பிரேரணை செயற்படுத்தப்படவில்லை. இது செயற்படுத்தப்படுமென்றும் எண்ணுவதற்கில்லை. ஏனெனில் இலங்கையின் அரசியற் கலாச்சாரத்தில் சாதி மறைமுகமான சக்தியாகவே இருந்து வருகின்றது.

சாதி, நீதி பற்றிய கோட்பாடு அவ்வப்போதேனும் மறைமுகமாக நிலவி வருவதை 1978-1993 க்கு இடையில் ஆர்.பிரேமதாச பிரதம மந்திரியாகவும் ஜனாதிபதியாகவும் இருந்த காலப்பகுதியில் அவர் நடைமுறைப்படுத்திய சில சீர்திருத்தக் கொள்கைகளை உதாரணமாகக் கொண்டு எடுத்துக் காட்டலாம். பிரேமதாஸ ஆதிக்கம் செலுத்தாத சாதியொன்றிலிருந்து வந்து இலங்கையில் உயர் அரசியற் பதவியை வகித்த முதலாவது உறுப்பினராவார். விசேடமாகக் கிராம சமூகத்தை இலக்காகக் கொண்ட , ‘கிராம எழுச்சி’ எனப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றை இவர் செயற்படுத்தினார்.கிராமப்புறங்களில் வாழும் ‘வறியோரிலும் வறியோருக்கு’ உறையுள் வசதிகளையும் சில பொருள் வளங்களையும் வழங்குவதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும். ஏறத்தாழப் பதினைந்து வருடங்களாக சமூக மேம்பாடு, கிராம அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு என்பவற்றுக்கான சட்ட ரீதியான ஒரு பொதுக் கொள்கையைத் தலையீடு என்ற வகையில் தனது திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு அரச இயந்திரத்தையும் பொது வளங்களையும் பிரேமதாஸ பயன்படுத்தினார். ஆயினும் சிங்களக் கிராமப்புறங்களில் வாழும் மோசமாக ஓரங்கட்டப்பட்ட வறுமையில் உழலும் சாதியினருக்குத் தான் பிரக்ஞை பூர்வமாக வேண்டுமென்றே உதவுவதாகப் பிரேமதாஸ பகிரங்கமாக ஏற்றுக் கொண்டதில்லை.

இலங்கை அரசியலில், சாதியும் அரசியலும் ஊடாடும் பின்னணியை மேலேயுள்ள ஆய்வு விரிந்துரைக்கின்றது. இலங்கை அரசியலில் ஒரே சமயம், சாதி இருப்பதும் இல்லாதிருப்பதும் ஓர் முரண்நகையாகும். அரசியல் பற்றிய வெளிப்படையான சொல்லாடலில் அது இல்லை: குழுத்தனித்துவம் , சமூக நீதி தொடர்பான மறைமுகமான சொல்லாடலில் அது உண்டு. அரசியல் போட்டியிலும் மோதலிலும் சாதி இடம்பெறவில்லை என பொது அரங்கத்தில் மறுக்கப்படுவதனால் அரசியலில் சாதி இல்லை என்றாகாது. பொது அரசியல் நடைமுறையில் சாதி மறுக்கப்படுவதன் மூலம் அரசியலில் சாதியி; இடம் வலியுறுத்தப்படுகின்றதென்பதே கருத்தாகும்.

அரசியலில் சாதியின் முக்கியத்துவம் மறுக்கப்படுதலின் மூலம் வலியுறுத்தப்படுகின்றதென்ற இத்தர்க்கம், அண்மை ஆண்டுகளில் இலங்கை அரசியற் கலாச்சாரத்தில் இரண்டு பிரதான பரிமாணங்கள் எழுச்சி பெறுவதற்கு வழி வகுத்துள்ளது. முதலாவதாக பல்சாதித் தேர்தல் மாவட்டங்களில் ஆதிக்கஞ் செலுத்தும் எண்ணிக்கையில் பலம் வாய்ந்த துணை நிலைச் சாதியினர் மத்தியில் பிரதிநிதித்துவத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்குமான போட்டி வன்முறை சார்ந்ததாகிவிட்டது. அம்பாந்தோட்டை, மாத்தளை, குருநாகலை,கேகாலை, மாத்தறை, காலி,கம்பஹா, இரத்தினபுரி மாவட்டங்களில் இப்போக்கு வெளிப்படையாக காணப்படு:கின்றது. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் கீழும் தனித்தனி வேட்பாளர் தேர்வுக்கான விருப்பு வாக்கு முறையின் கீழும் துணை நிலைச்சாதிகள் சட்டவாக்க சபைகளுக்கு தங்கள் சொந்தப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் கிராமப் புறங்களில் ‘கொயிகம’ சாதியைச் சேர்ந்த அரசியல் உயர்குழாத்தின் மரபுரீதியான தலைமைக்குச் சவால் விடுக்கப்பட்டுள்ளது. தேர்தற் பிரசாரங்களின் போது இரகசியமாகவும் நாசூக்காகவும் சாதி ஆதரவைத் திட்டுதலினால் – இது பொது அரங்குகளில் அரிதாகவே இடம் பெறும் – அரசியல் ரீதியாகச் செயலூக்கம் மிக்க சாதிக்குழுக்களிடையே மோதல்களும் வன்செயல்களும் இடம் பெறுவதற்கான சூழலும் ஏற்படுத்தப்படுகின்றது.

சமகால இலங்கை அரசியலில் இன அடையாளத்தின் தீவிரத்தன்மையுடன் இரண்டாவது பரிணாமம் தொடர்ந்துள்ளது. சிங்கள், தமிழ் சமூகங்களில் தீவிரவாத இனத்துவ எழுச்சியின் தலைமைத்துவம் துணைநிலைச் சாதிச் சமூகங்களின் கைக்கு மாறிவிட்டது. தேசியவாத தலைமைத்துவத்தின் சமூகச் சேர்க்கையில் ஏற்பட்ட இப்பெயர்வு நிலை வேளாளர் ஆதிக்கம் மிக்க தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வீழ்ச்சியுடனும் யாழ்ப்பாணக் ‘கரையார்’ (மீனவர்) சமூகத்தைப் பிரதான அடிப்படையாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எழுச்சியுடனும் தமிழர் சமூகத்தில் ஏறத்தாழ முற்றுப்பெற்றுவிட்டது.

‘கொயிகம’ சாதியைச் சாராத பல சாதிக்குழுக்கள் தீவிரவாத இனத்துவ அரசியலில் மும்மரமாக பங்குபற்றுவதுடன் சிங்களத் தேசியவாத அரசியலிலும் சமாந்தரமானதொரு பெயர்வு நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. பிரதானமாகக் ‘கரவா’, ‘துரவா’, ‘வகும்பா’,'பத்கம’ சாதிகள் இதில் அடங்கும் இச்சாதிகள் அனைத்தையும் சேர்ந்த ஆய்வறிவாளத் தலைவர்கள் ஒவ்வொரு சாதியினதும் தோற்றம் பற்றிய அரைகுறை வரலாற்று விளக்கங்களுடன் கூடிய சாதிசார்பான கருத்து நிலைகளையும் உருவாக்கினர். சமகாலச் சூழலில் நிறைவேற்றப்படவேண்டிய வரலாற்றுக் கடமைகளையும் இவர்கள் முன்வைத்தனர். கரவா சாதியினரின் வரலாற்று ஐதீகம் இலங்கையில் இச்சாதியே ஆளும் சாதியாக (சத்திரியர்) இருந்து வந்தது என்பதாகும். அதேவேளை ‘துரவா’ சாதியைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்கள் தமது சாதிக்கும் ‘சத்திரிய’அந்தஸ்தைக் கொடுக்கின்றனர். சிங்கள சமூகத்தில் ‘கரவா’, ‘துரவா’, சாதியினரை விட பெருமளவில் ஓரங்கட்டப்பட்ட ‘வகும்பா’,'பத்கம’ சாதியினர் தாம் ஆட்சி அந்தஸ்தைப் பெற்றிருந்ததாகக் கோராவிட்டாலும் தாம் மேதகு மரபில் வந்த போர்த்தொழில் சாதியினரென்றும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பௌத்தத்தை பாதுகாப்பதே தமது வரலாற்றுப் பணி என்றும் நம்புகின்றனர்.

பல்வேறு சிங்களச் சாதியினர்களிடையே மேலாதிக்கத்துக்கான வாதப்பிரதிவாதங்கள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆரம்பித்து 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் மூன்றாம் தசாப்தங்களில் தீவிரமடைந்தது. இச்சாதிகளைச் சார்ந்த ஆய்வறிவாளர்கள் மத்தியில் அண்மைக்காலங்களில் சாதி வரலாறுகளை உற்பத்தி செய்வதிலும் மீள் உற்பத்தி செய்வதிலும் ஒரு புத்தார்வம் தோன்றியுள்ளது. இவற்றுள் சில பிரசுரிக்கப்பட்டுள்ளன: ஏனையவை வாய்மொழி வரலாறாகவே இன்னமும் இருக்கின்றன. ஆங்கிலப் பத்திரிகைகளில் சாதி பற்றிய வாதப்பிரதிவாதங்களில் – சிங்களப் பத்திரிகைகள் இவ்வாதப் பிரதிவாதங்களில் இடம் பெறுவதில்லை- ‘கொயிகம’, ‘கரவா’, 'சவாகம’, ‘நவந்தன்ன’ ஆகிய சாதிகளின் சித்தாந்திகள் – தத்தமது சாதிகளின் அந்தஸ்து தொடர்பான நம்பகநிலை பற்றி ஏட்டிக்குப் போட்டியான வாதங்களை முன் வைத்துள்ளனர். சாதி பற்றிய இவ் எழுத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய சில உதாரணங்கள் பின்வருமாறு:

தர்மபந்து டி.எஸ்.1962, கௌரவ வங்ஸ சுதாவ (கௌரவ வம்ச கதை), மொறட்டுவை டி.டி.தொடங்கொடை,கம்பனி: டி.சி;ல்வா, டி.டபிள்யூ ரிச்சர்ட்ஈ 1995, லமேனி ராஜ குலய (லமேனி அரச குலம்) கொழும்பு: சஹான வெளியீடு;: குருஷேத்ர என்ற சஞ்சிகையின் எல்லா இதழ்களும் பெர்னாண்டோ, மிகுந்து குலமூசூரிய சுசந்த், ஹலாவத்த உருமய (சிலாபத்தின் முதுசொம்) சா கருனவ்னி, சாவ்வியாஸ், 1991 அமுனு வறக்காபொல: ஆசியா வெளியீடு, இறுதியாகக் குறிப்பிடப்பட்டது. ‘சலாகம’ சாதியின் தோற்றம் பற்றிய ஐதீகத்தை முன் வைக்கும் ஒரு நாவலாகும். ‘சலாகம’ சமுதாயத்தினர், வட இந்தியாவிலிருந்து வந்த பிராமணக் குழுவொன்றிலிருந்து தோன்றியவர்களென்றும் இப்பிராமணர்கள் 11 ஆம் நூற்றாண்டில் தனக்கு அறிவுரை கூறுவதற்காக விஜயபாகு மன்னன் வரவழைத்தானென்றும் இந்த ஐதீகம் கூறுகின்றது. இந்த ஐதீகத்துக்கு சமகாலத் தொடர்பொன்றை வழங்குவதற்காக தென் இந்தியாவிலிருந்து வந்த தமிழ்ப் படையெடுப்பாளர்களைத் தோற்கடிப்பதற்கு இப்பிராமணர்கள் விஜயபாகு மன்னனுக்கு உதவினரென்றும் இந்நாவல் கூறுகின்றது.

ஒரு நிலையில் சாதி பற்றிய ஐதீகங்களை வரலாறாக உற்பத்தி செய்தமை இச்சாதியினர் அனுபவித்து வந்த சமத்துவமின்மை, அநீதி, ஓரங்கட்டப்பட்ட நிலை ஆகிய சமூக அமைப்பு நிலைமைகளுக்கு இவர்களது நேரடியான துலங்கலாக அமைந்துள்ளன. தப்பமுடியாத ஒடுக்குதல்களுக்கு ஆளாகியுள்ள தற்போதைய நிலையுடன் தம்மை இணக்கப்படுத்துவதற்காக கீர்த்தி மிக்க பொன்னான இறந்த காலத்தில் நம்பிக்கை கொள்வது ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் கையாளும் ஒரு வழமையான உத்தியாகும். எனவே தான் முனைப்பான தன்னுணர்வுடைய தடுக்கப்பட்ட சாதி , இனத்துவ சமுதாயங்களின் கருத்து நிலைகள் வரலாற்று ‘வீழ்ச்சி’ என்னும் கருத்தை முன் வைக்கின்றன. குறிப்பிட்ட இந்த கருத்துநிலைத் தர்க்கத்தில் காலனித்துவ காலத்திற்கு முற்பட்ட கடந்த காலத்தில் தாம் பெற்றிருந்த பெரும் அந்தஸ்து பற்றிய வரலாறாக்கப்பட்ட நம்பிக்கையினூடாக தற்போதைய சமத்துவம் நிராகரிக்கப்பட்ட நிலை சமன் செய்யப்படுகின்றததெனலாம். மற்றொரு நிலையில் நோக்கினால் இத்தகைய ஐதீகங்கள் தேசியத்தன்மையுடன் சம்பந்தப்பட்ட சமகால அரசியற் செயற்றிட்டங்களாக உருவெடுக்கின்றன. இங்கே, ஒவ்வொரு சாதி தொடர்பாகவும் தேசத்தை உருவாக்கும் அல்லது தேசத்தைப் பாதுகாக்கும் ஒரு புதிய வரலாற்றுப் பாத்திரம் கற்பிதம் செய்யப்படுகின்றது. பொது அரங்கில் சாதி சார்ந்த அரசியலுக்கெதிராக, அரசியல் – கலாச்சாரத்தடை இருக்கும் போது தேசியம் என்ற கருத்து, ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டரீதியான வாதமுறையான வகைமையாக எடுத்தாளப்படுகின்றது. இத் தர்க்கத்தில் தன்னுடைய சொந்தச் சாதியினர் அனுபவிக்கும் பொது அநீதிகள் பற்றி ஒருவர் பேசுவதில்லை. தேசம் எதிர்நோக்கும் அபாயங்கள் பற்றி மட்டுமே அவர் பேசுவார்.

சாதியும் பிரதிநிதித்துவமும்: இன்றைய செல்நெறிகள்

இன்று இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அதன் ஒரு கூறான விருப்பு வாக்கு என்பவற்றின் மூலம் சாதி அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ், தேர்தல் அலகுகளின் அடிப்படையிலேயே பிரதிநிதித்துவம் பெரும்பாலும் தீர்மானி;க்கப்படுகின்றது. பாராளுமன்றம் மாகாணசபை ஆகியவற்றுக்கான பிரதிநிதிகள் தேர்வைப் பொறுத்த வரை முன்னைய தேர்தல் முறைமையின் கீழ் இருந்த, பல தேர்தற் தொகுதிகளை உள்ளடக்கிய நிர்வாக மாவட்டமே அடிப்படை அலகாகும். உள்ளுராட்சித் தேர்தல்களில் முழுமையான உள்ளுர் ஆட்சிப்பிரதேசமே பிரதிநிதித்துவ அலகாக அமைகின்றது. சாதி அடிப்படையிலமைந்த

சமூகங்கள் பரந்து வாழும் குறிப்பிடத்தக்க அளவிலான பெரியதொரு பிரதேசத்தின் தேர்தல்சார் அரசியலில் அச்சமூகங்கள் தமது பொதுவான நலன்களை இனங்காண்பதற்கும் செயலாற்றுவதற்கும் இது வழிவகுக்கின்றது. விருப்பு வாக்கு முறைமையானது இப்போக்கை மேலும் உறுதிப்படுத்துகின்றது. ஒரு தேர்தல் மாவட்டம் முழுவதிலும் அல்லது ஓர் உள்ளுராட்சி பிரதேசம் முழுவதிலும் பரந்து வாழும் ஒரு சாதிக்குழு இப்பொழுது தனக்கென ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து அவரைச் சூழ்ந்து செயற்படலாம். இதேபோல வேட்பாளர்கள் சாதி அடையாளம், சாதி அபிமானங்கள் என்பவற்றின் அடிப்படையில் மக்களை ஈர்த்தெடுக்கும் வழக்கத்தை விருத்தி செய்துள்ளனர்.

சாதி அடிப்படையில் தேர்தல் அணிதிரட்டல் என்ற மறைமுகக் கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளதை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் நடத்தப்பட்ட கடந்த தேர்தல்களினூடாகப் பெற்ற அனுபவம் எடுத்துக் காட்டுகின்ற. பாராளுமன்ற, மாகாண, உள்ளுர்த் தேர்தல்களில் சாதி ஈர்ப்புக்கள், தேர்தற் பிரச்சாரத்தின் இறுதிச் சில நாட்களில் தீவிரமடைவது பொதுவானதொரு போக்காக இருந்து வந்துள்ளது. ஒரே கட்சி வேட்பாளர்களுக்கிடையே கூட விருப்பு வாக்குகளுக்காக ஏற்படும் போட்டி தீவிரமடையும் போது கட்சிக்குள்ள ஆதரவுக் குறைபாட்டை ஈடு செய்யும் வகையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சாதி அபிமானங்கள் தூண்டிவிடப்படுகின்றன. சாதி அடிப்படையில் ஆதரவு தேடுதல் பாதகமாகவும் சாதகமாகவும் அமையலாம். குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு வேட்பாளர், தனது சொந்தச் சாதி வாக்காளர்களிடையே ஏனைய சாதிகளைச் சேர்ந்த போட்டி வாக்காளர்களுக்கெதிராகப் பாதகமான விதத்தில் பிரச்சாரம் செய்யலாம் என்ற வகையில் இது பிரதிகூலமாக அமையலாம். சாதகமான சாதிப் பிரசாரம் வழமையாக ஒரே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களு;கும் இடையில் நடைபெறுகின்றது. சாதி அடையாளம் பற்றிய ஓர் எளிமையான மொழியும் சாதி அடிப்படையில் ஆதரவைத் திரட்டுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. சிங்களச் சொற்களான அபே எக்கனா, அபே கெனக் (நம்ம ஆள்) என்பன இதன் பொருட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையில் ஏறத்தாழ எல்லா மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இப்போக்கை அவதானிக்கலாம். கொழும்பு மாவட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. உதாரணமாகக் கொழும்பு கிழக்கு , கொழும்பு மேற்கு, தெகிவளை, இரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ‘துரவா’ வாக்காளர்கள், தமது விருப்பு வாக்குகளைத் தமது சாதிக்கு வெளியில் அளிக்கமாட்டார்கள் என்பது ‘துரவா’ வேட்பாளர்களுக்கு நன்கு தெரியும். அதேபோல மொரட்டுவ , இரத்மலானை, தெகிவளை போன்ற பிரதேசங்களில் ‘கரவா’ விருப்பு வாக்குகள் தமக்குக் கிடைப்பது நிச்சயம் என்பது ‘கரவா’ வேட்பாளர்களுக்கு தெரியும்.குருநாகலை, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் சாதி அடிப்படைப் பிரசாரம் பிரதானமாக ‘கொயிகம’, ‘வகும்பா’,'பத்கம’ வேட்பாளர்கள் மத்தியில் இடம் பெறுகின்றது. மாத்தறை, காலி, களுத்துறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் சாதி விசுவாசங்களின் வீச்சு ‘கரவா’, ‘கொயிகம’,'துரவா’,'சலாகம’,'வகும்புர’ஆகிய சாதிகளையும் அவற்றின் வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் உள்ளடக்கி மேலும் பரந்ததாகக் காணப்படுகின்றது. மாகாண சபைகளிலும் மத்திய அமைச்சரவையிலும் தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கை பற்றிச் சில சாதியினர் அதிருப்தி அடைந்துள்ளார்கள். சப்பிரகமுவ மாகாணத்திலும் வடமேல் மாகாணத்திலும் ‘பத்கம’சாதியினர் இப்போக்கிற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றனர். இந்த இரண்டு மாகாணங்களிலும் ‘பத்கம’ சமூகத்தினர் கணிசமான அளவில் செறிநது காணப்படுகின்றனர். இச்சாதியைச் சேர்ந்த அரசியல் மயமாக்கப்பட்டவர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் எண்ணிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியோ, பொதுஜன முன்னணியோ தம்முடய எண்ணிக்கை;கு ஏற்ற விகிதத்தில் தமக்குப் பதவிகளை வழங்கவில்லை என்பது ‘பத்கம’ சாதியினரின் மனக்குறைகளுள் ஒன்றாகும். உண்மையில் 1994 இல் அமைக்கப்பட்;ட பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மூன்று பிரதி அமைச்சர்களைத் தவிர, ‘பத்கம’ பிரதிநிதித்துவம் எதுவும் இருக்கவில்லை. ‘பத்கம’சாதிச் சங்கங்கள், உடனடியாக இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. பின்னர் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் பிரதிஅமைச்சர்களுள் ஒருவர் அமைச்சரவை அமைச்சராக்கப்பட்டார்.

முடிவுரை

இலங்கை அரசியலின் சாதி குறிப்பிடத்தக்க அளவு வலிய சக்தியாக இருந்து வந்துள்ளது. பொதுச் சொல்லாடலில் சாதி மறுக்கப்பட்ட போதலும் தேர்தல் ஜனநாயக நடைமுறைகளுடன் சாதி மிக நெருக்கமாகத் தொடர்புற்று வந்துள்ளது.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடனும் நலன்புரி அரசின் தலையீட்டுடனும் சாதி வேறுபாடுகள் மறைந்துவிடும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றல்ல. ஜனநாயகத்தைச் சாதி தன் வசப்படுத்திக் கொண்டது என்பதையே இலங்கையின் ஜனநாயக அரசியல் நவீனத்துவ அனுபவம் எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் இதில் ஒரு முரண்பாடும் காணப்படுகின்றது. அரசியல் செயற்பாட்டிலும் அணிதிரட்டலிலும் சாதிக்கு உரிய இடம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.இதனாலேயே ஜனநாயக அரசியலில் சாதி தலைமறைவாக இருக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. அரசியற் பன்மைத்துவத்துக்கு சாதியும் ஒரு சட்டரீதியான அடிப்படையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் தான் சாதி தலைமறைவாக இருக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. அரசியற் பன்மைத்துவத்துக்கு சாதியும் ஒரு சட்டரீதியான அடிப்படையாக ஏற்றுக்கொள்ளப்படவுமில்லை. அதனால் தான் சாதி அரசியலல் வன்முறை இடம் பெறுகின்றது. நவீனத்துவ ஜனநாயக அரசியலின் வன்முறைக்காளான நிலையில் மறுப்பும் சட்ட அங்கீகார நீ;க்கமும் – அசமத்துவம், அநீதி, அ-ஜனநாயகம் என்பவற்றுக்கு எதிரான சாதி அடிப்படையிலான சொல்லாடல்களையும் நடைமுறைகளையும் மேலும் சட்டபூர்வமற்றதாக்கும் வகையில் சாதி நலன்களும் சாதி அரசியலும் அடிக்கடி செயற்படுகின்றன.

மொழிபெயர்ப்பு : மு.பொன்னம்பலம்

http://inioru.com/?p=209

சிங்களவருக்குள் அரசியல் உயர் குழாமாக இப்போ யார் இருக்கிறார்கள்... ???

மேற்குலக நாடுகளிலும் இந்த விடயம் பேசப்பட்ட ஒன்று, ஒரு காலத்தில்.

மேம்பட்ட கல்வி வசதிகள், சட்டங்கள் ( அவற்றை அமுல்படுத்தும் நெறிமுறைகள்), கைத்தொழில் புரட்சி, இன்றைய நவீன (இயந்திர) வாழ்க்கை அவை தந்த பொருளாதரா வளர்ச்சி என பல உதாரணங்கள் இவைக்கு காரணமாக கூறப்படலாம். எல்லாவற்றிற்கும் மேலாக தனது மக்களையும் மண்ணையும் நேசிக்கும் தலைவர்கள் இருந்தார்கள், உண்மையாக நடந்தார்கள்.

எமக்கு மேலே சொல்லப்பட்ட எல்லாமே அரிதாக கிடைப்பவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.