Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஊழல் விவகாரம்' - காந்தியவாதி உண்ணாவிரதம்

Featured Replies

'ஊழல் விவகாரம்' - காந்தியவாதி உண்ணாவிரதம்

இந்தியாவில் ஊழல்களைத் தடுப்பதற்கான சட்டங்களை பலப்படுத்துமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டததில் ஈடுபட்டுள்ள காந்தியவாதியும், சமூக நல ஆர்வலருமான அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்களுடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.

70 வயதான ஹசாரே போராட்டத்தைக் கைவிட வேண்டுமென அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

தனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் உறுதியளிக்கும் வரை தனது சாகும்வரையிலான உண்ணா நோன்பு போராட்டத்தை அன்னா ஹசாரி கடந்த செவ்வாய்க் கிழமை ஆரம்பித்தார்.

உயர் நிர்வாக பதவிகளில் இருப்பவர்களுக்கு, அதாவது பிரதமர்கள் அமைச்சர்கள் போன்றவர்ளுக்கு எதிராக சாதாரண மக்களும் வழக்குகளை கொண்டுவரக்கூடிய விதத்தில் புதிய சட்டங்கள் ஆக்கப்பட வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

கிராமவாசிகள், வழக்குரைஞர்கள் பள்ளி மாணவர்கள், இன்னும் அவரது போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் சூழ, ஹசாரேவின் உண்ணா நோன்பு தொடர்கின்றது.

நெருக்கடியில் அரசாங்கம்

நாட்டில் அதிகரித்துள்ள ஊழல்களால் சாதாரண மக்கள் பெரும் விரக்தியும் கோபமும் அடைந்துள்ள நிலையில், இதற்குச் சமாந்தரமாக கண்ணடனப் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் கூடவே இந்தியா எங்கிலும் நடந்துவருகின்றன.

பேஸ்புக், வலைப்பூக்கள் என இணையதளங்களிலும் இந்தப் பிரசாரம் உலகெங்கிலும் சூடுபிடித்துள்ளது.

தனக்கு ஆதரவு தெரிவிப்போர் முன்னிலையில் டெல்லியில் பேசிய அன்னா ஹசாரே, தகவல் அறிந்து கொள்வதற்கான சட்டம் அறிமுகமானதன் பின்னரே, 2ம் அலைக்கற்றை, காமன்வெல்த் ஊழல்கள் வெளிவரத் தொடங்கியதாக சுட்டிக்காட்டினார்.

ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவதோடு நிற்காமல் தூக்கில் போடுங்கள் எனவும் ஹசாரே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு ஊழல்கள் தொடங்கி, லஞ்சம் பெற்றுக்கொண்டுவிட்டு செல்லிடப்பேசி அனுமதி பத்திரங்களை விற்றுள்ளதாக மூத்த அதிகாரி்கள் மீது சுமத்தப்பட்ட டெலிகொம் மோசடிகள் என அடுத்தடுத்து பெரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளியாகின.

ஏற்கனவே இந்த விவகாரங்களால் வழக்குகள், சிபிஐ விசாரணைகள் என பெரும் அழுத்தங்களை சந்தித்துள்ள அரசாங்கம், இப்போது இந்த உண்ணா நோன்பு, பேரணிகள் கண்டன ஊர்வலங்கள் என இன்னும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றது என்றால் மறுப்பதற்கில்லை..

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/04/110407_hazrefasts.shtml

Anna Hazare: India's pioneering social activist

Former army driver Anna Hazare shot to public attention when he transformed his drought-affected village into a self-sufficient model community.

http://www.bbc.co.uk/news/world-south-asia-13017897

  • தொடங்கியவர்

கோவையில் அன்னாஹசாரேவுக்கு பின் அணி திரண்ட மக்கள்

கோவை வ.உ.சி., மைதானம்; மாலை 5.00 மணி. பின்னணியில் புல்லாங்குழல் இழையோட பங்கிம் சந்தர் சட்டர்ஜியின் வந்தேமாதரம் பாடல் இதமாக ஒலித்துக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் கூடத்துவங்கியது. யாருக்கும் தனியாக அழைப்பில்லை. ஒன்றுபடுங்கள் என்ற கோஷம் அதற்கு முன்தினம் மாலைதான் வைக்கப்பட்டிருந்தது. அது எத்தனை மக்களைச் சென்றடைந்திருக்கும் எனத் தெரியவில்லை. ஆங்காங்கு எஸ்.எம்.எஸ்.,களும், சமூகவலைத்தளங்களிலும், அவர்களாகவே தகவலைப் பகிர்ந்து கொண்டனர்.

தேர்தலுக்காக கட்சியினர் கஷ்டப்பட்டு சேர்த்தாலும் கூடாத கூட்டம், தாமாக முன்வந்து ஜனசமுத்திரத்தில் இணைந்து கொண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இருந்தும் சிறு சலசலப்புக் கூட இல்லை. அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கியிலும் மக்களை வழிநடத்த எந்த அறிவிப்புகளும் இல்லை. தாமாகவே ஒழுங்குணர்வுடன் காத்திருந்தனர் மக்கள். இøகுழுவினர் பாரதியின் நிற்பதுவே, நடப்பதுவே பாடலைப் பாடிக் கொண்டிருந்தனர். கூட்டம் சலனமற்று நின்றிருந்தது. இந்த ஆச்சரியங்கள் எல்லாம் நிஜமாகவே கோவையில் நடந்து கொண்டிருந்தன. வெறும் வார்த்தைகளில் அந்த ஒழுங்குணர்வை விவரிக்க முடியாது. டில்லியில் அன்னாஹசாரேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்துக்கு கோவை மக்கள் அளித்த ஆதரவுதான் நீங்கள் மேலே படித்த வரிகள்.

மைதானத்தின் ஒருபுறம் பலூன்கள் தரப்பட்டன; கூடவே மெழுகுவர்த்திகளும். "குரல்', இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய தொழில்வர்த்தக சபை, சிறுதுளி, ராக், காந்திய மக்கள் இயக்கம், கொடிசியா, கோவை கன்ஸ்யூமர் காஸ், ஊழல் எதிர்ப்பு இயக்கம் என எண்ணற்ற அமைப்புகள் பங்கேற்றன. சில தொழில் நிறுவனங்களின் ஊழியர்கள், கல்விக்குழும ஊழியர்கள் என அங்கு பலதரப்பட்டவர்களும் தேசத்தின் மீதான நேசத்தை வெளிப்படுத்தினர். பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், சூழல் அமைப்பினர், வெளிமாநிலத்தவர் என எல்லாத்தரப்பினரும் கூடினர். மூத்த தலைமுறை தாங்கள் காக்கத் தவறிய நாட்டை, இளைய தலைமுறையாவது மீட்டெடுக்கட்டும் என்ற ஆதங்கத்தில் கூடியிருந்தனர்.

கோவைவாசிகளின் மனங்களைப் போலவே, அவர்கள் விடுத்த பலூன்களும் மிக உயரத்தில் பறந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குழுக்களாக வந்திருந்தனர். சொந்தமாக ஊழலுக்கு எதிராக பதாகைகளை எழுதி எடுத்து வந்திருந்தனர். சிலர் ஓரிரு நிமிடங்கள் பேசினர். மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு குழந்தைகள் பேசியபோது, கூட்டத்தில் மவுனம். ஐந்து வயது குழந்தை ""நான் ஊழலற்றவள்; என்னைப் மாதிரி இருங்கள்'' என்ற போதும்; ஏழு வயது குழந்தை, ""நீங்கள் செய்யும் தவறும் ஊழலும், உங்கள் குழந்தைகளான எங்களை ஊழ்வினையாக உறுத்தாதா'' எனக் கேட்டபோது, பலரின் கண்களில் கண்ணீர் திரண்டது.

மாலை மிகச்சரியாக 6.45 மணிக்கு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. ஒன்றிலிருந்து ஒன்று; அதிலிருந்து மற்றொன்று ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகள் நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் ஒளியேற்றப்பட வ.உ.சி., மைதானத்தில் நட்சத்திரங்கள் தரையிறங்கி இருந்தன. "ரகுபதி ராகவ ராஜா ராம்' பாடல் பின்னணியில் உருகி ஓட, சின்னஞ்சிறுசுகளின் கைகளை அந்த மெழுகுவர்த்திகள் சுடவில்லை; ஆனால் பலரின் மனதை நிச்சயம் சுட்டிருக்கும். அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழும்பின. வந்தேமாதரத்தை உணர்ச்சிப் பெருக்குடன் மக்கள் முழங்க நிகழ்ச்சி நிறைவடைந்தது. திரும்பும் போது கூட மக்கள் மெழுகுவர்த்திகளை மைதானத்தில் மையத்தில் ஒருங்கே வைத்துச் சென்றனர்; யாரும் சொல்லாமலே.

திகைக்க வைத்த மாணவன்:

அந்த சிறுவன் பெயர் ஆதித்யா கோட்டா; மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவன். ஏழாம் வகுப்பு படிக்கும் அவன் பேசுகையில் வ.உ.சி., மைதானம் மொத்தமும் உறைந்து நின்றது. அவன் கையை உயர்த்தச் சொன்னபோது உயர்த்தியது. அவன் சொன்னதை திருப்பிச் சொன்னது. சொல்வன்மை நிறைந்த முதுபெரும் பேச்சாளர்களுக்கு கட்டுப்படாத கூட்டம், மகுடிக்கு மயங்கி பாம்பாய் அவன் முன் சுருண்டு கிடந்தது.

அவன் பேசியது இதுதான்: என் பெயர் ஆதித்யா கோட்டா. ஐ.சி.எஸ்.இ., பாடப்பிரிவில் படித்தவன். எனக்குத் தமிழ் தெரியாததற்கு மன்னிக்கவும். இங்கு கூடியிருப்பவர்களில் யாருக்கு ஆங்கிலம் தெரியுமோ அவர்களுக்காக பேசுகிறேன். நீங்கள் இன்று எப்படி அன்னாஹசாரேவை உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்களோ, அதைவிடவும் மேலானவர். அவரைப்பற்றி நான் பாடங்களில் படித்திருக்கிறேன். அதனால், இன்றைய ஊடகங்களாலும், பெற்றோர்களாலும், உம் போன்றவர்களாலும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே அவரைப் பற்றி எனக்குத் தெரியும்.

அவர் ராணுவத்தில் டிரக் டிரைவர். ஆம் வெறும் டிரக் டிரைவர். அவரைப் போல ஆக என்னால் முடியும்; உங்களால் முடியும்; உங்கள் ஒவ்வொருவரால் முடியும். என் தேசத்தைக் காக்க நீங்கள் விரும்புகிறீர்களா? ஊழலுக்கு எதிரானவர்களாக உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நினைக்கிறீர்களா அப்படியானால் கையை உயர்த்துங்கள்(ஆங்கிலம் புரிந்த ஒட்டுமொத்த கூட்டமும் கையை உயர்த்தியது). ஒரு உறுதிமொழி ஏற்றுக் கொள்ள விரும்புவர் மட்டும் கையை உயர்த்துங்கள்(ஒருவர் கூட கையை கீழே போடவில்லை; பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து மொழி புரியாதவர்களும் கையை உயர்த்தினர்).

இன்றிலிருந்து 15 நாட்கள்;

இந்த வினாடியான மாலை 6.03 மணியில் இருந்து நாங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளையும் அதற்கான ரசீதுடன்தான் வாங்குவேன் எனச் சொன்னபோது, அத்தனை பேரும் அப்படியே வழிமொழிந்தனர். உண்மையில் அச்சிறுவனிடம் இருந்து அப்படி ஒரு உணர்ச்சிகரமான பேச்சை யாரும் எதிர்பார்க்கவில்லை. கண்களில் நீர் திரள அவன் பேசுகையில், அந்த மைதானம் முழுவதும் அந்த உணர்ச்சி எதிரொலித்தது. எங்களின் நாட்டை எங்களுக்குப் பாதுகாப்பாக கொடுத்துவிடுங்கள் என இளம் தலைமுறை நம்மைப் பார்த்துக் கோபமாக கேட்பது புரிகிறது நமக்கு.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=221003

  • தொடங்கியவர்

ஹசாரேக்கு பிரணாப் முகர்ஜி வேண்டுகோள்!

உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என அன்னா ஹசாரேக்கு மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்ணாவிரத்தை கைவிடுமாறு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அன்னா ஹசாரேக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் மிக முக்கியமான பிரச்சனையான ஊழல் ஒழிப்பு குறித்து ஹசாரேயின் கருத்துக்களுக்கு இந்திய அரசு முழு மதிப்பு அளிக்கிறது என்றும் அதற்கு ஆவன செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு லோக்பால் மசோதா தொடர்பான குழுவில் பங்கேற்க வேண்டும் என ஹசாரேக்கு பிரணாப் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஹசாரேவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=11818

  • தொடங்கியவர்

அண்ணா ஹஸாரே + (ஜன்) லோக்பால் மசோதா

ஹஸாரே மரியாதைக்குரியவர். மஹாராஷ்டிரத்தில் அவர் நிறைய சாதித்திருக்கிறார். அவர் வசிக்கும் பகுதியில் தவித்த வாய்க்குகூடத் தண்ணீர் தர நீர் இல்லாத காலம் இருந்தது. அந்த இடத்தை முற்றிலுமாக மாற்றி, மழைநீர் சேமிப்பை முன்னெடுத்து, வேண்டிய அளவுக்கு நீர் கிடைக்கச் செய்தார். ஊழலை எதிர்த்துப் பல போராட்டங்கள், பல உண்ணாவிரதங்கள். அரசுகளை மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் பாடு பட்டவர்.

இப்போது ஊழலை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளார். லோக்பால் என்ற Ombudsman பதவியை உருவாக்கி, அதன்மூலம் மத்தியில் ஆளும் வர்க்கத்தினர் - அரசியல்வாதிகள், அதிகாரிகள் - செய்யும் ஊழலைத் தடுத்து நிறுத்த பல ஆண்டுகளாகவே முயர்சிகள் நடந்துவந்துள்ளன. ஆனால் தேர்தல் சீர்திருத்தம்போலவே ஆட்சியாளர்கள் இந்தச் சீர்திருத்தம் வரவிடாமல் எத்தனையோ எத்து வேலைகளைச் செய்தனர். இன்றுவரை மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் அதைவிட மோசம், அந்த மசோதாவே வெறும் சோதா. லோக்பால் ஒரு டம்மி பீஸாக மட்டுமே இருப்பார்.

லோக்பால் என்ற ஓர் அமைப்பின்மூலம் ஊழலைப் பெரிதும் குறைக்கலாம் என்று நினைத்துவந்த ஆர்வலர்கள் - அண்ணா ஹஸாரே போன்றவர்கள் - விரக்தி அடைந்தது நியாயமே. எனவே இவர்களாகவே ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற சட்ட முன்வரைவை உருவாக்கினர். நிச்சயமாக இதனை அரசு ஏற்காது என்பது தெரிந்ததே. அதேதான் நடந்தது. அதற்குமேல் அரசும் சரி, ஹஸாரே அண்ட் கோவும் சரி, சந்திக்கக்கூட முடியவில்லை. தாளமுடியாத விரக்தியில்தான் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பிவிட்டு அண்ணா ஹஸாரே உண்ணாவிரதத்தில் இறங்கினார். இன்று ஊடகங்கள் அனைத்தும் அவர் பக்கம். இளைஞர்கள் பலரும் அவர் பக்கம். பொதுமக்கள் பலரும் அவர் பக்கம். சென்னையிலும்கூட மெரீனாவில் மக்கள் அமைதியாக ஹஸாரேவுக்கு ஆதரவு தந்து கூடுகிறார்கள். தக்கர் பாபா பள்ளியில் திரள்கிறார்கள். அங்கு சென்று எட்டிப்பார்த்துவிட்டு வந்துதான் இதனை எழுதுகிறேன். பிரச்னை முடியும்வரை மக்கள் போராட்டமும் அமைதியான வழியில் தொடரும் என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.

*

இப்போது விஷயத்துக்கு வருவோம். அரசின் சட்ட முன்வரைவு படுமோசமானது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஹஸாரே அண்ட் கோ சட்ட முன்வரைவிலும் ஏற்கமுடியாத பல அம்சங்கள் உள்ளன. ஒரு நல்ல காரியத்துக்காகப் போராடும்போது சிக்கலே இல்லாத முன்வரைவைத்தான் நாம் முன்வைக்கவேண்டும். மேலும் அரசில் உள்ளவர்களையும் நம் பக்கம் இழுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் கொஞ்சம் வளைந்துகொடுத்துத்தான் ஆகவேண்டும்.

அரசில் உள்ளவர்கள் நம்பிக்கையற்றவர்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்களையே நாம் விரும்பும் சட்ட மசோதாவை எப்படி ஏற்கவைப்பது? அவர்கள் நம்பிக்கை அற்றவர்கள்தான். ஆனாலும் நம் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னேறிச் செல்லவேண்டும்.

இப்போது ஜன் லோக்பால் மசோதா வரைவில் உள்ள குறைகளாக நான் கருதுவதைப் பார்ப்போம்:

1. லோக்பாலுக்கு போலீஸ் அந்தஸ்து வேண்டும் என்று ஹஸாரே வரைவு கேட்கிறது. அதாவது ஒருவர்மீது குற்றம் சாட்டி, கைது செய்து, அவர்கள்மீது வழக்கு தொடுப்பது. இப்போதைக்கு இந்தியாவில் இரண்டு அமைப்புகளிடம்தான் இந்த அதிகாரம் உள்ளது. ஒன்று: மாநில காவல்துறைகள். இரண்டாவது: மத்திய சிபிஐ. (தீவிரவாதக் குற்றங்களைத் தடுக்க தேசிய போலீஸ் அமைப்பு ஒன்று வேண்டும் என்ற கருத்து உள்ளது; அது வந்தால் அதற்கும் போலீஸ் அந்தஸ்து இருக்கும்.) லோக்பால் மூன்றாவது அமைப்பாக ஆகும். இது சிக்கல் மிகுந்தது என்று நான் கருதுகிறேன்.

அடுத்து, சிபிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு அங்கிருந்து நகர்த்தப்பட்டு லோக்பால் அடியில் வரவேண்டும் என்பது. இப்படிச் செய்தால்தான் ஊழலைத் தடுக்கமுடியும் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்று உச்ச நீதிமன்றத்தின் பணிகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீதிமன்றம் சிபிஐ அமைப்பை வேண்டிய நேரத்தில் அழைத்து, அவர்களைக் கொண்டு வழக்குகளைப் பதிவு செய்கிறது. வழக்கைக் கண்காணிக்கும் உரிமையைத் தானே கையில் எடுத்துக்கொள்கிறது. இதுபோன்ற ஊழல் வழக்குகள் என்றால் அரசுகள் அதில் இயங்காதபோது உச்ச நீதிமன்றத்திடம் செல்வதற்கு பதிலாக லோக்பால் அமைப்பிடம் செல்லலாம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது லோக்பால் அமைப்புக்கு போலீஸ் அதிகாரம் என்பது தேவையில்லை. அது சிபிஐ-ஐ அழைத்து வழக்கு பதிவு செய்யச் சொல்லி, வழக்கை விசாரித்து, தீர்ப்பளிக்கலாம். லோக்பால் அளிக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கக்கூடிய அதிகாரம் இருக்கவேண்டும். இந்த நாட்டில் உச்ச நீதிமன்றத்துக்கு மேற்பட்ட நீதி அமைப்பு இருக்கக்கூடாது.

2. லோக்பால் எதனைக் கண்காணிக்கவேண்டும்? ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றால், பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என்றால், போலீஸ் வழக்குப் பதிவு செய்ய மறுக்கிறது என்றால், லோக் ஆயுக்தா (மாநில அளவில் லோக்பாலுக்கு இணையான அமைப்பு) அல்லது லோக்பாலிடம் முறையிடலாம் என்று என்டிடிவி தளத்தில் போட்டிருக்கிறார்கள். இது பைத்தியக்காரத்தனமாகப் படுகிறது. நாட்டில் எல்லா அமைப்புகளுமே உடைந்துபோய்விட்டதாகவும் தனி மனிதனுக்கு ரேஷன் கார்டு வாங்கித்தரத்தான் அண்ணா ஹஸாரே உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதாகவும் இந்தக் கதை போகிறது. சாதாரண ஊழல் குற்றங்களை எதிர்கொள்ள Prevention of Corruption Act உள்ளது. இதனைச் செய்ய, லோக்பால் தேவை இல்லை. நமக்குத் தேவை உள்ளூர் அளவில் வலுவான என்.ஜி.ஓ அமைப்புகள். ஒவ்வொருவரும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்று லோக்பாலிடமோ லோக் ஆயுக்தாவிடமோ சென்றால், அத்தோடு அவர்களது பணி முடிவுற்றது என்று வைத்துக்கொள்ளலாம். வேலைப் பளு தாங்கமுடியாமல் அவர்கள் ஓடிவிடுவார்கள்.

அமைச்சர்கள், முதல்வர், பிரதமர், எம்.எல்.ஏ/எம்/எல்.சி, எம்.பி ஆகியோர், ஐ.ஏ.எஸ் அலுவலர்கள், காவல்துறை உயரதிகாரிகள் (ஐ.பி.எஸ்) ஆகியோர்மீதான ஊழல் வழக்குகளை மட்டும்தான் லோக்பால் / லோக் ஆயுக்தா எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த வழக்குகளை நடத்த இவர்கள் யாரிடமும் மேற்கொண்டு அனுமதி பெறவேண்டியதில்லை. பொய் வழக்குகளாக இருப்பின் வழக்கு போட்டவர்மீது கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படவேண்டும். லோக்பால், தானாகவே (suo motu) வழக்கை எடுத்துக்கொண்டு விசாரணையில் ஈடுபட அனுமதி வேண்டும். ஆனால் இந்த வழக்கு நடைபெறும்போது சம்பந்தப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்படக்கூடாது. வழக்கின் முடிவின்படிதான் தண்டனை தரப்படுதல் ஆகியவை நடைபெறவேண்டும். மேலும் லோக்பால் வழக்கு நடத்துகிறது என்பதாலேயே அவர் பதவி விலகவேண்டும் என்றெல்லாம் கேட்கக்கூடாது. (அதெல்லாம் தார்மீக அடிப்படையில் வேண்டுமானால் நடக்கலாம். ஆனால் சட்டபூர்வமாக அப்படிக் கேட்பது நியாயமாக இருக்காது.)

3. நீதித்துறை மீதான லோக்பால் அதிகாரம். இதனை நான் ஏற்கமாட்டேன். நீதித்துறை தன்னைத் தானேதான் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு, அதற்குக் கீழுள்ள நீதிமன்றங்களை முழுமையாகச் சரிபடுத்தும் அதிகாரம் ஏற்கெனவே உள்ளது. வேண்டுமென்றால் அதனை மேலும் வலுப்படுத்தலாம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விசாரித்து நீக்கும் உரிமை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு சிறு குழுவுக்கு இருக்கவேண்டும். (இங்கும் சட்ட மாற்றங்கள் தேவை.). உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிமீதான குற்றச்சாட்டை விசாரித்து அவரைப் பதவியிலிருந்து விலக்கவேண்டுமா என்பதை முடிவுசெய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டும்தான் அதிகாரம் தரப்படவேண்டும். அதையும் செயல்படுத்துவது ஜனாதிபதியாகவே மட்டுமே இருக்கவேண்டும். எந்த நிலையிலும் நீதித்துறையை லோக்பாலின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவே கூடாது.

4. லோக்பாலை யார் தேர்ந்தெடுப்பது என்பதில் ஜன் லோக்பால் மசோதா சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இதில் சீஃப் எலெக்‌ஷன் கமிஷனர், ஆடிட்டர் ஜெனரல், சர்வதேச விருதுகள் வாங்கியோர் எல்லாம் இருக்கவேண்டும் என்று கேட்பது அபத்தம். அப்படி இருந்தால்தான் லோக்பால் நியாயமாக இருப்பார் என்று சொல்வது பேத்தல். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் இருவரும் ஒருமனதாக யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர் லோக்பால் ஆவார். இவரை நியமிப்பது ஜனாதிபதி. நீக்குவது இம்பீச்மெண்ட் வாயிலாக. இவரது தகுதியைப் பற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் (சிவிசி மாதிரி!). உச்ச நீதிமன்றம் இவரது நியமனத்தைச் செல்லாது என்று சொன்னால் இவர் போகவேண்டும். ஆக, இவர் எந்தவிதத்தில் பார்த்தாலும் உச்ச நீதிமன்றத்தின்கீழ் இருக்கவேண்டுமே தவிர இவர்கீழ் உச்ச நீதிமன்றம் இருக்கக்கூடாது.

5. யார் லோக்பாலாக இருக்கலாம்? ஜன லோக்பால் மசோதா, 10 பேர் கொண்ட இந்தக் குழுவில், நான்கு பேர் சட்டப் பின்னணியுடனும் (அவர்கள் நீதிபதியாக இருந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்கிறது) மீதிப் பேர் எந்தப் பின்னணியிலும் இருக்கலாம் என்றும் சொல்கிறது. நான் ஏற்கமாட்டேன். இவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகளாகவோ அல்லது பணியில் இருக்கும் நீதிபதிகளாகவோ மட்டும்தான் இருக்கவேண்டும். இது ஒரு சட்டப் பணி. சட்டம் முழுமையாகத் தெரிந்திருக்கவேண்டும். எவிடென்ஸ் ஆக்ட் பற்றியும் பிரிவென்ஷன் ஆஃப் கரப்ஷன் பற்றியும் ரெப்ரசெண்டேஷன் ஆஃப் பீப்பிள்ஸ் ஆக்ட் பற்றியும், பல்வேறு ஊழல் வழக்குகள் பற்றியும் முழுமையாகத் தெரிந்திருக்கவேண்டும். சும்மா ஆலமரத்தின்கீழ் நடக்கும் கட்டப் பஞ்சாயத்து வேலை அல்ல இது. நல்ல, தரமான, நியாயமான நீதிபதிகள்தான் இந்தப் பணியைச் செய்யவேண்டும்.

நீதிபதிகள் கெட்டவர்கள் என்ற எண்ணம் இருந்தால், அதை எப்படிச் சுத்தம் செய்வது என்ற வேலையில் இறங்கவேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது, அதில் அரசியல்வாதிகள் எப்படி ஈடுபடவேண்டும் என்ற மசோதாவைச் சரிசெய்யவேண்டுமே தவிர, லோக்பால் எல்லாவற்றையும் சுத்தமாக்கிவிடுவார் என்று அவர் கையில் துடைப்பக் கட்டையைத் தரும் வேலையைத் தவிர்க்கவேண்டும்.

***

இன்னும் தனித்தனி பாயிண்டுகளை எடுத்து அலசலாம். ஆனால் அடிப்படையில் ஹஸாரேவின் போராட்டம் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. வரைவுதான் மாற்றப்படவேண்டும். அப்படி ஒரு வரைவை உருவாக்க அமைக்கப்படும் குழுவில் மக்கள் பிரதிநிதிகள் இருக்கவேண்டும், குழுவின் தலைமைப் பொறுப்பு ஹஸாரேவுக்குத் தரப்படவேண்டும் என்றெல்லாம் அர்விந்த் கேஜ்ரிவால் போன்றோர் கேட்பது தவறு. சட்டம் இயற்றும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு. அது நமக்கு விரும்பிய சட்டமாக இருக்கவேண்டும் என்று கேட்கும் உரிமை நமக்கு உண்டு. நமக்கு ஏற்புடையதல்லாத சட்டத்தை அரசு தேர்வடையச் செய்வதை எதிர்க்கும் உரிமை நமக்கு உண்டு. நாம் விரும்பிய ஷரத்துகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள வற்புறுத்தவைக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்தச் சட்டத்தை நானே தயாரித்துத் தருவேன், நீ சும்மா ஒப்புக்கு ரப்பர் ஸ்டாம்ப் போடு என்று சொல்ல உரிமை இல்லை. அப்படியென்றால், தேர்தலில் நில், ஜெயித்து வந்து அதனைச் செய் என்றுதான் நாம் தன்னார்வலர்களிடம் சொல்லவேண்டும்.

முதலில் சட்ட முன்வரைவை அனைத்து மக்களையும் (என்னையும் சேர்த்து) ஏற்றுக்கொள்ள ஜனநாயக முறையில் ஹஸாரே அண்ட் கோ முயற்சி செய்யவேண்டும். அதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்ய அவர்கள் முன்வரவேண்டும்.

http://thoughtsintamil.blogspot.com/

  • தொடங்கியவர்

களத்தில் இறங்க மக்களே முன் வாருங்கள். சிறு பொறிகள் இணைந்து பெருநெருப்பாக மூண்டு அக்னிக்குஞ்சாக மாறுவோம்.

அண்ணா ஹஸாரே: பெருநெருப்பான சிறு பொறி - பழ. நெடுமாறன்

இந்தியவாதியான அண்ணா ஹஸôரே மேற்கொண்ட 98 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் சிறு பொறியாகக் கிளம்பி பெரு நெருப்பாக வளர்ந்து இமயம் முதல் குமரி வரை பற்றி எரிந்தது.

எதற்காக அவர் போராடினார்? கடுமையான ஊழல் எதிர்ப்பு விதிமுறைகள் அடங்கிய லோக்பால் சட்டம் கொண்டு வரப்படவேண்டும். இச்சட்ட விதிமுறைகளை உருவாக்க அரசு மற்றும் மக்கள் தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியக் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அவர் போராடினார்.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அண்ணா ஹஸôரே மேற்கொண்ட இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாடெங்கும் அனைத்துத் தரப்பு மக்களும் கிளர்ந்தெழுந்தது இதுவரை வரலாறு காணாத ஒன்றாகும். இதன் விளைவாக, மத்திய அரசு பணிந்தது; லோக்பால் சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. இந்தச் சட்டத்தைக்கொண்டு வராமலும் போதுமான அதிகாரங்களை அதற்கு அளிக்காமலும் ஏமாற்று நாடகம் நடத்தி வந்த மத்திய அரசைத் தனது அறப்போராட்டத்தின் விளைவாக அடிபணிய வைத்த அண்ணா ஹஸôரே நாட்டு மக்களின் ஒட்டுமொத்தப் பாராட்டுதலுக்கும் உரியவராவார்.

அவரைப் பாராட்டுவதோடு நின்றுவிடாமல் உறுதியாக அவரைப் பின்பற்றவும் மக்கள் உறுதி பூண வேண்டும். அதன் மூலம் மட்டுமே நாடெங்கும் பரவிக்கிடக்கிற ஊழல் கள்ளிச்செடிகளை வெட்டி எறிய முடியும். அவ்வாறு நாம் செய்வதற்குரிய வழியை அண்ணா ஹஸôரே தனது போராட்டத்தின் மூலம் காட்டியுள்ளார். லஞ்சத்தையும், ஊழலையும் அரசாங்கத்தின் நெறி முறையாக்கி அதை இந்தியா முழுமைக்குமே வழிகாட்டியாகக் கொள்ளும் வகையில் இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழலைப் புரிந்து தமிழகத்தின் பெருமையைச் சீரழித்த விதம் கண்டு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் இழந்த பெருமையை மீண்டும் நிலைநாட்டவும் ஊழலை ஒழித்துக்கட்டவும் அண்ணா ஹஸôரே நமக்கு வழிகாட்டி இருக்கிறார்.

தமிழகத்தில் அதிகார பலத்தின் உதவியால் ஊழலும், லஞ்சமும் தலைவிரித்தாடுகின்றன. இதன் உச்சகட்டமாக ஜனநாயகத்தின் குரல் வளையையே நெரிக்கும் முயற்சிகள் பகிரங்கமாக நடைபெறுகின்றன. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி இதைச் சுட்டிக்காட்டிப் பகிரங்கமாக பின்வருமாறு சாடி இருக்கிறார். தமிழ்நாட்டில் பெருமளவு முறைகேடுகள் நடக்கும்போது தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியுமா? என அவர் எழுப்பியிருக்கும் கேள்வி, எல்லோரின் உள்ளங்களையும் சுடுகிறது. ஆனால், சுடப்படவேண்டியவர்களுக்கு அதன் சூடு உரைக்கவே இல்லை.

இந்தக் கேள்வியை அவர் எழுப்பியதோடு நிற்கவில்லை. தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தமிழகத்தில் மட்டுமே பெரும் சவாலாக உள்ளது என்று கூறி இருக்கிறார். அரசு நிர்வாகத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையம் தடையாக இருப்பதால் ஆளும் கட்சி கோபம் அடைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டவும் அவர் தயங்கவில்லை. மேலும், அவர் தனது கூற்றுகளுக்கு ஆதாரமாகப் பின்கண்டவற்றைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்:

தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் முறைகேடாகக் கொண்டு செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ. 53 கோடியாகும். ஆனால், இதில் தமிழகத்தில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், பரிசுப் பொருள்களின் மதிப்பு ரூ. 41 கோடியாகும் (12.4.11 வரை) தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக தமிழகத்தில் 61,000 வழக்குகள் பதிவாகி உள்ளன.

தலைமைத் தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள இந்த விவரங்கள் அனைவரையும் திடுக்கிட வைக்கின்றன. கடலில் மூழ்கிக் கிடக்கும் பனிப்பாறையின் சிறு முனை மட்டுமே வெளியே தெரியும், அதைப்போல முறைகேடாகப் பிடிபட்ட பணமும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் சிறு பகுதியே ஆகும். பிடிபடாத பணமும், பதிவு செய்யப்படாத வழக்குகளும் பல மடங்கு அதிகமானவை ஆகும்.

இந்தியா விடுதலைபெற்ற பிறகு இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இத்தகைய பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதே இல்லை. அங்குமிங்குமாகத் தனிப்பட்ட சில வேட்பாளர்கள் சிறிய அளவில் முறைகேடுகளைச் செய்திருக்கலாம். ஆனால், தேர்தல் ஆணையமே திடுக்கிட்டுச் செயல் இழந்து நிற்கும் வகையில் திருமங்கலம் திருவிளையாடல்கள் நடைபெற்றதில்லை. தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைச் சீர்குலைக்கவும், முடக்கவும் இடைவிடாத முயற்சிகளை ஆளும் கட்சியான திமுக மேற்கொண்டிருக்கிறது. நேர்மையான தேர்தல் அதிகாரிகள் மீது பொய்யான புகார்களையும், வழக்குகளையும் முதலமைச்சரின் மகனும் மத்திய அமைச்சருமான அழகிரி தொடுக்கிறார்.

அவரது அடியாள்கள் அதிகாரிகளைத் தாக்குகிறார்கள், பொய்யான வாக்குமூலங்கள் கொடுக்கும்படி அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். நல்லவேளையாக உயர் நீதிமன்றம் தலையிட்டுத் தேர்தல் அதிகாரிகளைப் பாதுகாக்க முன்வந்தது.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தனது கட்சிக்காரர்கள் கையாளும் முறைகேடுகளுக்கு எதிராக இருப்பதால் அவற்றை அவசரகால நடவடிக்கைகளோடு ஒப்பிட்டு, அதற்கு எதிராகத் தனது கட்சிக்காரர்களைத் தூண்டிவிடும் வகையில் முதலமைச்சர் கருணாநிதியே பேசி வருகிறார். நேர்மையாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகளை மறைமுகமாக கருணாநிதி மிரட்டுகிறார். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் டி.ஜி.பி. மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டதாக வரலாறே கிடையாது. கூச்சநாச்சமின்றி தங்களது முறைகேடுகளுக்கு உயர் அதிகாரிகளையும் பயன்படுத்த திமுக தயங்கவில்லை என்பதைத்தான் இது மெய்ப்பிக்கிறது. தனது அரசில் பணிபுரியும் அதிகாரிகள்தான் தேர்தல் காலத்தில் தேர்தல் அதிகாரிகளாகவும் பணியாற்ற நேரிடுகிறது என்பதையும், அதே அதிகாரிகள் தேர்தல் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவது ஏன் என்பதையும் முதலமைச்சர் கருணாநிதி சிந்தித்துப் பார்க்கத் தவறிவிட்டார். இவரது ஊழல் மலிந்த ஆட்சிக்கு எதிராக, அதிகாரிகளும் மனசாட்சியோடு கிளர்ந்தெழுந்து விட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.

அதிகாரிகளுக்கு மட்டும் மனசாட்சிப்படி நடக்கும் துணிவு இருந்தால் போதாது. அவர்களுக்குத் துணை நின்று ஊழலையும், முறைகேடுகளையும் தடுத்து நிறுத்தவும் எதிர்த்துப் போராடவும் மக்களுக்கு உணர்வு இருக்க வேண்டும். காந்தியத் தொண்டர் அ ண்ணா ஹஸôரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாகத் தேசமெங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்தது, புதிய நம்பிக்கையை ஊட்டி இருக்கிறது. தமிழகத்தில் ஊழல் ஆட்சியை ஜனநாயக முறையில் வீழ்த்துவதற்கான வாய்ப்பு இந்தத் தேர்தல் மூலம் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை நல்ல முறையில் மக்கள் பயன்படுத்த வேண்டும். தேர்தல் முறைகேடுகளை ஆங்காங்கே மக்களே தடுக்க முன்வருவார்களானால் அதிகாரிகள் இன்னும் முனைப்போடு செயல்படுவார்கள். வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முற்படுபவர்களை அந்தந்தத் தெரு மக்களே பிடித்துக் கொடுக்க வேண்டும். தேர்தல் சாவடிகளில் முறைகேடுகளைத் தடுக்க வேண்டிய கடமையும் வாக்காளர்களுக்கு உண்டு.

ஊழலின் மூலம் குவித்துள்ள கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்து குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தவும், பாசிச வன்முறைப் போக்கைத் தொடர்ந்து பின்பற்றவும் முடிவுசெய்து களத்தில் இறங்கியுள்ளவர்களை முறியடித்து ஜனநாயகப் பயிரை அழிய விடாமல் பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் மக்களையே சார்ந்தாகும். ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டும் அல்ல, இது பரம்பரை ஆட்சியா அல்லது மக்களாட்சியா என்பதை முடிவு செய்யும் தேர்தலும் ஆகும். களத்தில் இறங்க மக்களே முன் வாருங்கள். சிறு பொறிகள் இணைந்து பெருநெருப்பாக மூண்டு ஊழல் கள்ளிக்காட்டைச் சுட்டெரிக்கட்டும். ஊழல் காட்டில் வைக்கப்பட்ட அக்னிக்குஞ்சாக மாறுவோம்.

  • தொடங்கியவர்

நிலையை விளக்கினார் அன்னா ஹசாரே :நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திட்டம்

லோக்பால் மசோதா விவகாரத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்த அன்னா ஹசாரே, தற்போது சற்று இறங்கி, தான் விதித்த கெடுவைத் தளர்த்த முன்வந்துள்ளார். " நம் நாட்டில் பார்லிமென்ட் தான், மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பு. லோக்பால் மசோதா பார்லிமென்டில் புறக்கணிக்கப்பட்டால், அந்த முடிவை நான் ஏற்றுக் கொள்வேன்' என, அவர் கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிரானவர்களை தண்டிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவை கொண்டுவர வேண்டும் என்றும், வரைவு மசோதா தயாரிப்பு பணியில், பொதுமக்கள் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருந்தவர், காந்தியவாதி அன்னா ஹசாரே. இவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. லோக்பால் வரைவு மசோதா குழுவின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.இந்நிலையில், "லோக்பால் மசோதாவை, வரும் ஆகஸ்ட் 15க்குள் பார்லிமென்டில் நிறைவேற்றாவிட்டால், போராட்டம் நடத்துவேன்' என, அன்னா ஹசாரே கெடு விதித்திருந்தார். இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது போராட்டத்தின் மூலம், பார்லிமென்ட் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என, ஹசாரே மீது விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு ஹசாரே நேற்று அளித்த பேட்டி:லோக்பால் மசோதாவை, ஆகஸ்ட் 15க்குள் நிறைவேற்ற வேண்டும் என, ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். ஆனால், இந்த விவகாரத்தில் அரசு சரியான திசையில் செல்கிறது என்ற நம்பிக்கை ஏற்படுமானால், இந்த காலக்கெடுவை நீட்டித்துக் கொள்ளவும் தயாராக உள்ளேன். இருந்தாலும், ஒரு மாத காலத்துக்குள்ளேயே, இந்த மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.லோக்பால் விவகாரத்தில், என்னுடைய செயல்பாடுகளை பலர் விமர்சனம் செய்துள்ளனர். என்னை பொறுத்தவரை, பார்லிமென்ட் தான், மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பு. லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் புறக்கணித்து விட்டால், பார்லிமென்டின் அந்த முடிவை ஏற்றுக் கொள்வேன். ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது.பொதுமக்களுக்கு நல்ல காரியங்கள் செய்வதற்கான எனது நடவடிக்கைகளை," நல்ல விஷயத்துக்கான பயங்கரவாதம்' என்று கூட கூறலாம்.

லோக்பால் மசோதா தொடர்பாக, பல தரப்பிலும் ஆலோசனைகளை கேட்க தயாராக உள்ளோம். பொதுமக்கள் மட்டும் அல்லாமல், அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.லோக்பால் மசோதாவை கொண்டு வருவதன் மூலம் மட்டும், ஊழலை ஒழித்து விட முடியாது. இருந்தாலும், ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு இது உதவும். ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.அரசியல்வாதிகளை பொறுத்தவரை, முந்தைய தேர்தலில் போட்டியிடும் போது, அவர்களுக்கு இருந்த சொத்தைக் காட்டிலும், அடுத்த தேர்தலில் அதிகமாக சொத்து இருந்தால், அவர்கள் மீது தானாகவே விசாரணை நடத்தும் வகையிலான சட்டம் அவசியம்.

"சிடி' சர்ச்சை:லோக்பால் வரைவு குழுவில் இடம் பெற்றுள்ள சாந்தி பூஷனுக்கு எதிராக சர்ச்சைக்குரிய "சிடி' வெளியிடப்பட்டுள்ளது. இது பொய்யாக தயாரிக்கப்பட்ட "சிடி' என, சிலர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, சாந்தி பூஷன், கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடரலாம். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படும்போது, தங்களை நிரபராதி என நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, சம்பந்தபட்டவர்களுக்கு உள்ளது. சாந்தி பூஷனின் நம்பகத்தன்மைக்கு நான் உத்தரவாதம் அளிக்க முடியாது. என் மீதான நம்பகத் தன்மைக்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்க முடியும்.நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்யவுள்ளேன். இம் மாத இறுதியில் சுற்றுப் பயணத்தை துவங்குவேன். 20 மாநிலங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு ஹசாரே கூறினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=226464

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.