Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை அரசியலின் கடந்த வார முக்கிய நிகழ்வுகளின் கண்ணோட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியலின் கடந்த வார முக்கிய நிகழ்வுகளின் கண்ணோட்டம் :-

19 செப்டம்பர் 2011

பிரதியாக்கம்: ஏ.எச். சித்தீக் காரியப்பர்

தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கின் கடந்த வார இலங்கை விஜயம் இலங்கை அரசியலில் புயலைக் கிளப்பியிருந்தது. ஏலவே திட்டமிட்டிருந்த அவரது விஜயமானது அமெரிக்காவில் வீசிய புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் இடம்பெற்றது. ரொபர்ட் ஓ பிளேக் இலங்கை வந்ததும் இங்கும் அவர் பலத்த அரசியலில் புயலை ஏற்படுத்திச் சென்றுவிட்டார்.

விசேடமாக, அவரது யாழ் விஜயமானது அவருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்ததுடன் அங்கு அவர் அரச அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது.

யாழ். அரசாங்க அதிபரைச் சந்திப்பதற்காக அவர் யாழ.; கச்சேரிக்குச் சென்றிருந்த போது சாதாரண ஒரு பொது மகன் போன்று முன்வாசலால் நுழைந்து மேலதிக அரசாங்க அதிபரின் அறைக்குள் செல்ல வேண்டிய நிலையேற்பட்டிருந்தது. அங்கு அவரை எவரும் கண்டு கொள்ளாதது போன்றே அனைத்துக் காரியங்களும் இடம்பெற்றன. இது வேதனை தரும் விடயமே வந்தாரை வரவேற்கும் தமிழ் மண்; எனப் புகழப்படும் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பிரச்சினைகள் குறித்துத் தெரிந்து கொள்ள வந்த ஒரு நாட்டின் பிரதிநிதிக்கு இவ்வாறு அவதிமதிப்புச் செய்யப்பட்டதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை, யாழ் செயலகமே இவ்வாறு நடந்து கொண்டதா அல்லது மேலிட உத்தரவின் பேரிலான உதாசீனமா என்பது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

எது எப்படியிருப்பினும் நடக்கக் கூடாதவைகள் அங்கு நடந்து விட்டன. இதுதவிர, யாழ் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்திக்கச் செல்லத் தயாராகவிருந்த ரொபர்ட் பிளேக்குக்கு எதிராக படுமோசமான கோஷங்கள் சிலரால் அங்கு எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நான்கு பேர் கூடி தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்தனர். ஆனால் யாழ்ப்பாணத்தின் இன்றைய அசாதாரண சூழலில் அங்குள்ள மக்கள் சுயமாக இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவரா என்பது குறித்து சந்தேகங்களும் நிலவுகின்றன.

யாழ். செயகத்திற்குச் சென்றிருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலர் அங்கு மேலதிக அரசாங்க அதிபரைச் சந்தித்துப் பல விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்தார். மீள்குடியேற்றம் மற்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் கேள்விகளைத் தொடுத்திருந்தார். ஆனால், அவரின்; கேள்விகளுக்கு யாழ். மேலதிக அரசாங்க அதிபரால் வழங்கப்பட்ட பதில்கள் ரொபர்ட் ஓ பிளக்கைத் திருப்திப்படுத்துவதாக இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

யாழ். மாவட்டத்தில் 11 ஆயிரத்து 48 குடும்பங்கள் இன்னும் ஏன் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவில்லை? என அவர் கேட்க... கண்ணிவெடி அகற்றப்படவில்லை என்றும் அந்தப் பகுதிகள் விடுவிக்கப்படவில்லை என்றும் மேலதிக அரச அதிபர் பதிலளித்திருந்தார்

யாழ். குடாநாட்டின் தற்போதைய அசாதாரண நிலைமையைக் கட்டுப்படுத்த என்ன செய்தீர்கள?; என அடுத்த போடு போட்டார் ரொபர்ட் பிளேக்... சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அரச தரப்பிலிருந்து பதில் கொடுக்கப்பட்டது.

இருப்பினும் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வீட்டுத் தேவைகள், அவர்களின் வாழ்வாதாரம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் தொடர்பாகவும் மேலதிக அரச அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டதன் மூலம் அங்குள்ள பிரச்சினைகளை அவர் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து அவர் யாழ்ப்பாணத்திலுள்ள அமெரிக்க கோணருக்கு விஜயம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்த போதும் பின்னர் அதை மாற்றியமைத்து யாழ். ஆயருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதேவேளை பிளேக்கின் இணைப்பாளரான கிறிஸ்தோபர், பல்கலைக்கழக மாணவர்களை யாழ். ஆயர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். அதன் பின்பு ஆயர் இல்லத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றது.

முக்கிய அதிகாரிகளுடனான சந்திப்பை அடுத்து யாழ். குடாநாட்டில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்த ரொபேர்ட் ஓ பிளேக் திட்டமிட்டிருந்தார். எனினும், இறுதி நேரத்தில் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளை யாழ். கோவில் வீதியிலுள்ள அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் யாழ். மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள், துயரங்கள், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை, மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு என்பவற்றை விரிவாக அந்தப் பிரதிநிதிகள் எடுத்துக் கூறினர்.

யாழ். மாவட்டத்தின் இன்றைய நிலைமை பற்றி விளக்கி கூறுகையில,; நாம் எமது பிரதேசத்தில் கலாசாரம், மொழி என்பவற்றினைப் பாதுகாத்து வாழவும் எம்மை நாம் ஆள்வதற்குமான கட்டமைப்பே எமக்குத் தேவை. எமது ஆனால், எமது மண்ணில் இருந்து கொண்டே எம்மால் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், எமது போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பேசுவதற்குக் கூட முடியாதுள்ளது. எம்மை நாம் ஆள்வதற்குரிய கட்டமைப்பு எமக்குத் தேவை.

எமது பிரதேசத்தின் கலாசாரம், மொழி, உரிமைகளைப் பாதுகாத்து வாழவும் எமக்கான உரிமைகள் தேவை. தற்போதும் கூட நிம்மதியற்ற வாழ்க்கையே வாழ வேண்டியுள்ளது. கிறீஸ் பூதம், மர்ம மனித தாக்குதல்கள், நடமாட்டங்கள் உளவியல் ரீதியான யுத்தத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையானது இயல்பு வாழ்க்கையை நடத்துவதற்குத் தடையாக உள்ளது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இயல்பு வாழ்க்கை நடைபெறுகின்றது எனவும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள் எனவும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால,; மக்கள் இன்னம் முகாம்களுக்குள்ளும் தகர கொட்டகைகளுக்குள்ளும் வாழ்வாதாரம், பாதுகாப்பு அற்ற முறையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கான வீடமைப்பு வேலை வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்படவில்லை. உயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னமும் தொடர்கின்றன. தமிழ் மக்களது நிலங்கள் சூறையாடப்படுகின்றன. குறிப்பாக தென்னிலங்கை நிறுவனங்களுக்கு தொழில் முயற்சிக்காக அவை வழங்கப்பட்டு பின்னர் குடியமர்தலுக்கான திட்டமாகவே காணப்படுகிறது.

பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அதிகளவான குடும்பங்கள் பெண் தலைமைத்துவத்தைக் கொண்டே உள்ளன. இவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் பற்றாக்குறையாக உள்ளன. கடற்றொழில் முறைகள் பல தடவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையால் கடற்றொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் வாழ்வாதாரம் அற்ற நிலையிலுள்ளன.

இத்தகைய துன்பங்களின் மத்தியில் எதுவும் செய்ய முடியாத நிலையில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவற்றை எல்லாம் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றெல்லாம் தாம் யாழ். குடாவில் இன்று எதிர்நோக்கியுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் கொட்டித் தீர்த்துள்ளனர்

அந்த மக்களின் பிரச்சினைகளையும் ஆதங்கங்களையும் கேட்டறிந்த ரொபர்ட் ஓ பிளேக் உணர்ச்சி வசப்பட்டவராகச் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். யாழ். குடா தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்தப் போவதாக அவர் சூளுரைத்திருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்திருந்ததானது, அரசாங்கத்தையும் அரசு சார்பு தமிழ்க் கட்சி சிலவற்றினையும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியதுடன் ரொபர்ட் ஓ பிளக் மீது ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு திரும்பிய அவர் நடத்திய ஊடகவவியலாளர் மகாநாட்டில் தனது யாழ். விஜயத்தை அடிப்படையாக வைத்து பல விடயங்களைத் தெரிவித்திருந்தார்.

துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுவதுடன் மர்ம மனிதர்கள் தொடர்பான சம்பவங்களுக்கு முடிவு காணப்பட வேண்டும். வடக்கில் தமிழ் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் அவர் தெரிவித்திருந்தார்

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது கவனம் செலுத்தும் என தாம் நம்புவதாகவும் சமாதானம், ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்துடன் கூடிய நாட்டை உறுதி செய்து கொள்வதற்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துவதற்கும் இன்னும் பெருமளவு பணிகள் மேற்கொள்ளபட்ட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்

அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அவர் சிறப்புப் பார்வையைச் செலுத்தியிருந்தார். அவர் குறித்துச் சரமாரியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார். வடக்கில் இராணுவத் துணைக் குழுவாகச் செயற்படுவதும் அமைச்சர் டக்ளஸின் ஆட்களே, ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருப்பதும் டக்ளஸின் ஆட்களே, எனக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்ததும் டக்ளஸே என சரமாரியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்

இதற்குப் பதிலளித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

தம்மீதான குற்றச்சாட்டுகளை ரொபர்ட் ஓ பிளெக் நிரூபித்தால் தான் அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயார் எனத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் பிளேக் குறிப்பிட்ட சில நாட்களாக உள்நோக்கத்துடனேயே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார.; ஈ.பி.டி.பி பற்றி அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் அவ்வகையில் உள்நோக்கம் கொண்டதுடன் உண்மைக்குப் புறம்பபானவை. அவர் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வரும் ஒரு மோசடிக்காரர். உள்நோக்கம் கொண்ட ஒரு சில தன்னுடைய கொடுக்கல் வாங்கல்களை உள்வாங்கக் கூடியவர்கள் ஊடாகவே செய்திகளைப் பரப்பி வருகிறார் என்றெல்லம் பொருமித் தள்ளியிருந்தார் அமைச்சர் டக்ளஸ்.

இது இவ்வாறிருக்க ரொபர்ட் ஓ பிளக் வடக்கில் தமிழ் பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தமை சிறிலங்கா அரசியல் மட்டத்திலிருந்து பலத்த எதிர்ப்புகளைக் கிளப்பியிருந்தன.

பாதுகாப்பு அமைச்சுச் செயலாளரான கோதபாய ராஜபக்ஷ, மீள்குடியேற்றப் பிரதியமைசச்ர் விநாயமூர்த்தி முரளிதரன், அமைச்சர் விமல் வீரவன்ச போன்றோர் ரொபர்ட் ஓ. பிளக்கின் வடக்கில் தமிழ் பொலிசார் நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்குத் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர். வடக்கில் தமிழ் பொலிசாரை நியமிக்கச் சொல்லும் ரொபர்ட் பிளக், தமிழர்களைப் பொலிஸில் இணைத்துக் கொள்ள அமெரிக்கா தயாரா என்பதனை முதலில் கூறட்டும் என்ற பொருள்பட கோத்தபாய ராஜபக்ஷ ஒரு போடு போட்டிருந்தார்.

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருவதற்கு ரொபேட் ஓ பிளேக்கிற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என ரொபர்ட ஓ பிளக்கைப் போகவிட்டு வீரம் பேசியிருந்தார் அமைச்சர் விமல் வீரவன்ச.

இதேவேளை யாழப்பாணத்தில் ரொபர்ட் ஓ பிளக் அவமானப்படுத்தப்படடது குறித்து புளொட் இயக்க அரசியல் தலைவர் எம். கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்திருந்தாh.

அமெரிக்காவின் பிரதிநிதியாக இலங்கை வந்திருந்த அந்நாட்டு பிரதி ராஜாங்கச் ரொபர்ட் ஓ பிளேக் யாழ்ப்பாணத்துக்குச் சென்ற போது அவருக்கு யாழ். மாவட்டச் செயலகத்தில் வரவேற்பளிக்கப்படாமைக்கு அரசாங்கத்தின் உயர்மட்ட அழுத்தமே காரணம். இதனையடுத்தே அவர் சாதாரண மனிதன் போல் அங்கு நடத்தப்பட்டார்.

யாழ். மேலதிக அரசாங்க அதிபரைச் சந்தித்த பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடுவதற்காக அவர் அமெரிக்கன் கோணர் என்ற இடத்துக்குச் செல்ல முயன்ற போது அதனைக் குழப்பியடிப்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி அமைப்பினரால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. அது மட்டுமின்றி, ஓர் இராஜதந்திரிக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய அரச படைகளும் கூட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளன. இவையனைத்தையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது ரொபர்ட் ஓ பிளக் மீது அரச ஆதரவு பயங்கரவாதமே யாழ்ப்பாணத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது என்றே கூறவேண்டும்.

அமெரிக்க அரசின் பிரதிநிதி ஒருவருக்கே ஈ. பி. டி. பி இவ்வாறானதோர் அச்சுறுத்தலை யாழ்ப்பாணத்தில் விடுத்தது என்றால் சாதாரண மக்களின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதனையும் நாம் இங்கு, இதன் மூலம் தெரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. இந்த விடயத்தை இவ்வாறான சம்பவம் ஒன்றின் மூலம் அம்பலப்படுத்தியதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமிழினத்தின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என சஜவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு இலங்கையில் சூறாவளி சற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய ரொபர்ட் ஓ பிளக் அங்கு என்ன சொல்லியிருந்தர் தெரியுமா?

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த இந்திய மத்திய அரசுதான் இலங்கைக்கு இனி அழுத்தம் கொடுக்க வேண்டும்

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதற்கும் யானை அடித்துச் சாவதற்கு முன்னரே தானே அடித்துக் கொண்டு சாவதான நிலைக்கும் ஒப்பான சில விடயங்கள் சிறிலங்கா அரசியலில் அந்த நாட்டுக்கு வெளியே கடந்த வாரம் இடம்பெற்றுள்ளன.

ஆம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் கடந்த வாரம் ஜெனீவாவில் ஆரம்பமானது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் விவகாரம் விவாதிக்கப்படாத நிலையிலேயே சிறிலங்கா அரசு தரப்பு முந்திக் கொண்டு கருத்துகளைத் தெரிவித்திருந்தது யாவரும் அறிந்த விடயமே.

கூட்டத் தொடரில் உரையாற்றிய ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம்பிள்ளை

பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை நாடுகள் உருவாக்குகின்றபோது, அவை மனித உரிமைகளைப் பற்றி கவலையே படுவதில்லை என்றும் அரசுகளின் இவ்வாறான நடவடிக்கைகளே உரிமைகள் பறிக்கப்படவும் வன்முறைக் கலாசாரம் தலையெடுக்கவும் காரணமாவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையை உதாரணத்துக்கு காட்டிய நவிபிள்ளை, அங்கு தொடர்ந்தும் அமுலில் உள்ள பாதுகாப்புடன் தொடர்புடைய அனைத்து வகையான சட்டங்கள் பற்றியும் விரிவான மீளாய்வொன்றை அரசு செய்ய வேண்டுமென்று கடுமையாக கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இலங்கை மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தின் கொடுமையான பாதிப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது அத்துடன்;, அந்நாட்டில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களின் பதில் நடவடிக்கைகள் சுயாதீனமான நிறுவனங்களின் பணிகளையும் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியையும் மழுங்கடிங்கும் விதத்திலேயே அமைந்திருந்தது எனவும் நவிபிள்ளை கூறினார்.

மேலும், சில அவசரகால ஒழுங்கு விதிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவை சுட்டிக்காட்டிய ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர், இலங்கையில் நடைமுறையிலுள்ள அனைத்து வகையான பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் தடுப்புக் காவல்கள் பற்றி விரிவான மீளாய்வொன்றை அரசு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இவ்வாறு அவர் கருத்துத் தெரிவித்த போது அவரின் கருத்துக்கு இலங்கை தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. இதனையடுத்து அங்கு சில நிமிடங்கள் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றுள்ளன

இதன்போது குறுக்கிட்ட இலங்கை தரப்பு தலைமைப் பிரதிநிதியான அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கையில் ஏற்படுகின்ற கள நிலைமைகளின் மாற்றங்களுக்கேற்ப தமது நடவடிக்கைளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறினார்

இப்போது முன்னேற்றமடைந்துள்ள சூழல் அவசரகால ஒழுங்குவிதிகளை முற்றாக நீக்கும் நிலையை ஏற்படுத்தியதாகவும் ஏதேனும் அவசரகால நிலைமை ஏற்பட்டால் அவற்றைக் கையாள்வதற்காகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகள் மற்றும் டீஆர்ஓ போன்ற அமைப்புகளைத் தடை செய்யவும் கைதிகளையும் தடுப்புக் காவலில் இருப்பவர்களையும் தொடர்ந்தும் தடுத்துவைப்பதற்காகவும் சரணடைந்தவர்களின் புனர்வாழ்வுக்காகவும் இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன.

இதேவேளை, ஐநா தலைமைச் செயலர் பான்கீ மூனுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை, மனித உரிமைகள் கவுன்சிலுக்கு மாற்றப்படுவதாக தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாமல், பகலுணவு போசனமொன்றின் போதே தெரியவ ந்ததாக கூறிய மஹிந்த சமரசிங்க, அதனை ஐநாவின் இரட்டை நிலைப்பாடு என்றும் வர்ணித்திருந்தார்.

இவற்றையெல்லாம் இலங்கையிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த தமித் தேசியக் கூட்டமைப்பானது, அமைசசர் மஹிந்த சமரசிங்கவின் கருத்துக்களால் ஆத்திரமுற்றுக் காணப்பட்டது. போருக்குப் பின்னரான இலங்கை நிலை தொடர்பில் அமைச்சர் சமரசிங்க பொய்யை அல்லவா அங்கு கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் றாடாளுமன்றக் குழுத் தலைவரான ஆர். சம்பந்தன் விடுத்திருந்த அறிக்கையில் இவ்வாறு அடுக்கடுக்காகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

குறிப்பாக, இனங்களுக்கு இடையே நம்பிக்கையையும் நட்புறவையும் கட்டி எழுப்பும் வகையிலான நல்லிணக்க அணுகுமுறையை இலங்கை அரசு அழுத்தமாகக் கடைப்பிடிக்கிறது என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில்; ஆற்றிய உரையை இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அனுபவங்களுடன் ஒப்பிடும் போது அது சற்றும் பொருந்தாது. நாட்டின் நிலவரத்தை அனைத்துலக சமூகத்துக்குத் தெரியப்படுத்தும் போது அரசு மிக நேர்மையாகவும் பொய்யற்ற வகையிலும் நடந்துகொள்ள வேண்டும்.

போர் முடிந்ததன் பின்னர் இலங்கையில் தமிழர்கள் எப்படி மேலும் சிறுமைப்படுத்தப்படுகிறார்கள். குறிப்பாக, ஜனாதிபதி நியமித்த நல்லிணக்கத்துக்கான கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு, வழங்கிய இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளைக் கூட இதுவரை அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எந்தவிதத் தாமதங்களும் இன்றி செயற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜெனீவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றிய அதே தினத்தில், அந்தப் பரிந்துரைகள் வெளியிடப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகி இருந்தது. 13 செப்டெம்பர் 2010 இல் அந்தப் பரிந்துரைகள் வெளியிடப்பட்டிருந்தன.

தனது சொந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே இலங்கை அரசு நடைமுறைப்படுத்தத் தவறி இருப்பதானது, பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கத்துக்காக நேர்மையான, நம்பகத்தன்மை வாய்ந்த, சுயாதீனம் வாய்ந்த பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்பதாகவே உள்ளது.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க நல்லிணக்கம் பற்றி ஜெனீவாவில் உரையாற்றியபோதும், போரின் பின்னர் கூட தமிழ் மக்கள் மீது வன்முறைகள் ஏவப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இடம்பெயர்ந்த 2 லட்சம் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதி மறுப்பது, விவசாய மற்றும் தனியார் நிலங்களை இராணுவமும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் பலவந்தமாகப் பறிப்பது, எந்தப் பகிரங்க அறிவித்தல்களும் இன்றி வடக்கு கிழக்கில் உள்ள அரச நிலங்களை பெரும்பான்மையினருக்குப் பகிர்ந்தளிப்பது, இனப்பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வது, இந்து, கிறிஸ்தவ கலாசாரப் பாரம்பரியங்களை இழிவுபடுத்தி அவற்றை பெரும்பான்மையின அடையாளங்களுக்கு உரியதாக்குவது, எதிர்க்கட்சிகள் மீது நன்கு திட்டமிட்ட ரீதியல் வன்முறைகளைப் பயன்படுத்துவது, வடக்கு கிழக்கில் பொதுமக்களின் ஜனநாயக உரிமையான ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை அரச படையினரைப் பயன்படுத்தி தடுப்பது, சிறுபான்மை இனங்களை ஒடுக்கும் ஓர் ஆயுதமாகப் பெண்கள் மீதான வன்முறைகளை மேற்கொள்வது போன்றவற்றை தமிழ் மக்கள் மீதான அண்மைக் கால வன்முறைகள் என்றெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தன.

இப்படிப்பட்ட நிலையில் சர்வதேச சமூகத்திடம், இன நல்லிணக்கத்துக்காக அரசு உழைத்து வருவதாகக் கூறுவது முழுப் பொய். பல்லின, பல மத, பல்கலாசார இலங்கையைக் கட்டி எழுப்புவதற்கு தனக்குள்ள அர்ப்பணிப்பைக் கூட்டமைப்பு வெளிப்படுத்தும் வகையில் அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதில் அரசுடன் பேசுவதே இதில் தமது பங்கு எனவும் கூட்டமைப்புக் கூறி இருந்தது.

இதேவேளை இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் மனித உரிமைக் காப்பகம் விட்டுக் கொடுப்பதாக இல்லை. பதிலாக இலங்கையை இறுக்க வேண்டும் என்றே அவை ஒற்றைக் காலில் நிற்கின்றன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பிலான நிபுணர் குழு அறிக்கையில் உள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை ஆகியன பேரவையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் வலயத்திற்கான பணிப்பாளர் சாம் சரீஃபி மனித உரிமைகள் பேரவையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, நிபுணர் குழு அறிக்கையை ஆராய்ந்து இலங்கை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு மனித உரிமைகள் பேரவைக்கு இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய வலயத்திற்கான பணிப்பாளர் பிரெட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் குழு அறிக்கையில் உள்ளடக்கப்படும் விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த விடயத்தில் மனித உரிமைகள் பேரவை தனது பொறுப்பினை நிறைவேற்றத் தவறியுள்ளாதாகவும் பிரெட் அடம்ஸ் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறுகின்ற பட்சத்தில், அதற்கு சர்வதேச தலையீடு அவசியமாகும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

இப்படியெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலைலயில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பான மனித உரிமைப் பேரவையின் விவாதம் என்பது இன்று ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்ற நிலைக்குப் போயுள்ளது. இந்த விடயத்தில் சிறிலங்கா அரசு இன்று தற்காலிமாகத் தப்பிப் பிழைத்து மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது என்பதனை நாம் இங்கு சுட்டிக்காட்டியாகவே வேண்டும்.

பெரும்பாலும் இனி தொடரவே மாட்டாது என எதிர்பார்க்கப்பட்ட அரசு- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பேச்சுவார்த்தை திடீரென கடந்த வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இருதரப்பினரும் நீண்ட காலத்துக்குப் பின்னர் சந்தித்து இரு மணித்தியாலங்கள் கூடிப் பேசியுள்ளனர்.

இறுதியாக இடம்பெற்ற பத்தாவது பேச்சுவார்த்ததையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட மூன்று முக்கிய விடயங்கள் குறித்த அரசின் இணக்கப்பாடோ அல்லது முடிவோ கிடைக்காத நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தைக்குத் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்திருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் கடந்த இரண்டாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது அழைப்பின் பேரில் மின்னாமல் முழங்காமல் சென்று சந்தித்துப் பேசியதன் பின்னரே இறுதியான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தப் பேச்சுவார்த்தையில் இணங்கி இருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்கனவே கையளித்த தீர்வு யோசனையில் தெரிவிக்கப்பட்டிருந்த 18 அதிகாரங்கள் 13ஆவது திருத்தத்துக்கு அப்பாலானவையாக இருந்தபோதும் அவை தொடர்பில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்திருக்கிறது.

இந்தச் சந்திப்புக் குறித்து இருதரப்பு அறிக்கை ஒன்று மிகச் சுருக்கமாக வெளியிடப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி நடைபெற்ற பேச்சின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையளித்த தீர்வு தொடர்பான யோசனைகளின் அடிப்படையில் தொடர்ந்து பேசுவதற்கான இணக்கம் காணப்பட்டதாக கூட்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

விரைவில் மேற்கொள்ளப்படும் அரசமைப்பு ஏற்பாடுகள் மூலம் ஓர் அரசியல் தீர்வை அடைவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் இதற்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்பட்ட தீர்வுப் பொதிகள் (சந்திரிகாவின் தீர்வுப் பொதி மற்றும் அனைத்துக் கட்சி குழுவின் தீர்வு யோசனைகள்) மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அறிக்கைகளை பேச்சுவார்த்தையின் போது எடுத்துக் கொள்வது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் இது குறித்து ஊடகங்களுக்குச் சில விடயங்களை கூறியிருந்தார்

குறித்த பேச்சின்போது இரு தரப்பினருக்கும் இடையில் அரசியல் தீர்வு குறித்த விடயங்களே முக்கியமாக ஆராயப்பட்டன என்று அவர் தெரிவித்திருந்தார்.

உடனடி, மனிதாபிமானப் பிரச்சினைகள் மற்றும் கிறீஸ் பூத விவகாரம் என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டாலும், அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் குறித்தே முக்கிய கவனம் செலுத்தப்பட்டது எனக் கூறியிருந்த அவர், அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஏற்கனவே 51 விடயங்கள் அடங்கிய யோசனை தமது கட்சியால்; முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்

ஏதோ அரசாங்கம் கூட்டமைப்பை வேறு வழி இனி இல்லை என்ற நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனால,; முன்னர் போன்று எதிர்காலப் பேச்சுவார்த்தையானது தளர்ச்சிமிக்கதாக மட்டும் நிச்சயமாக அமையப் போவதில்லை அது தமிழ்த் தரப்பின் பக்கத்தில் காத்திரமானதாகவும் ஆத்தரமானதாகவுமே அமையும். அத்துடன் இனியும் ஒரு பிரிவு என்றால் நிச்சயம் அது இனிமேல் ஒட்ட முடியாத நிலையையே ஏற்படுத்தும். பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த மாதம் மூன்றாம் திகதியில் இடம்பெறும் சந்திப்பின் முன்னேற்றத்தை..

சரி மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்...

இலங்கை அரசியலின் கடந்த வார முக்கிய நிகழ்வுகளின் கண்ணோட்டம் பிரதியாக்கம்: ஏ.எச். சித்தீக் காரியப்பர்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67400/language/ta-IN/article.aspx

பிளேக் வரவை சிங்களம் முற்றாக விரும்பியிருக்கவில்லை. இந்தியா கூட நிச்சயம் மனதார விரும்பவில்லை. அதையும் மீறி தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளையும் தாண்டி வந்தமைக்கு காரணம், நீண்டகால அரசியல் இலாப நோக்காக மட்டுமே இருக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.