Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடாபியின் படுகொலையும் சிறிலங்கா அரசின் இரட்டை நிலைப்பாடும்

Featured Replies

கடாபியின் படுகொலையும் சிறிலங்கா அரசின் இரட்டை நிலைப்பாடும் [ புதன்கிழமை, 02 நவம்பர் 2011, 07:33 GMT ] [ நித்தியபாரதி ] puthinappalakai Gaddafi-killed.jpgகடாபியின் மரணம் தொடர்பாக விளக்கம் தரவேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்தமையானது மறைமுகமாக இது தொடர்பாக விசாரணை நடாத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதைக் குறிக்கின்றது.

இவ்வாறு சிறிலங்காவில் ஊடக சுதந்திரத்திற்காக போராடும் Groundviews இணையத்தளத்தில் ஊடகவியலாளர் Sunanda Deshapriya தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அதன் முழுவிபரமாவது,

முஅம்மார் கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இன்றுவரை எவரும் போட்டிபோட்டுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இளைஞர் ஒருவர் நடமாடும் வீடியோத் தொலைபேசி ஒன்றின் முன்னால் நின்றுகொண்டு முகமர் கடாபியைத் தானே கொன்றதாகக் கூறியிருந்த போதிலும் கூட இது தொடர்பாக யாரும் விசாரணை செய்ய முன்வரவில்லை.

உயிருடன் பிடிக்கப்படும் ஒருவர் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் அல்லது கொலையாளியாக இருந்தாலும் முதலில் சட்டத்தில் உள்ளவாறு நடாத்தப்பட வேண்டும். இவர் குற்றம் சாட்டப்பட்ட ஒருவராக இருந்தாலும் கூட இவர் விடயத்தில் சட்ட நடைமுறைகள் பின்பற்ற வேண்டும். நாகரீகமடைந்த மக்கட் கூட்டமாகிய நாம் இதனைச் செய்யவேண்டும்.

தனிப்பட்ட ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களின் அடிப்படையில் உயிருடன் பிடிக்கப்படும் ஒருவர் மீது வெளிப்படையான விசாரணையும், நீதி சார் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பின்னரே குறிப்பிட்ட நபருக்கு எந்தவொரு தண்டனையும் வழங்கப்பட முடியும். இந்த நடைமுறைகளில் எந்தவொன்றும் கூட தற்போது கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி விடயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை.

கடாபி, சிறிலங்கா அரசாங்கத்தினதும் சிறிலங்கா அதிபர் ராஜபக்சவினதும் மிக நெருங்கிய நண்பராவார். கேணல் கடாபியுடன் இறுதியாக ஒளிப்படம் எடுப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகளில் சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும் ஒருவராவார்.

கடாபி இரக்கமற்ற வகையில் கொல்லப்பட்ட விதத்தை ஒரு சில நாடுகளே கண்டித்துள்ளன. கடாபி கொல்லப்பட்டதை சிறிலங்கா கண்டிக்காவிட்டாலும் கூட இவரது மரணம் தொடர்பாக விளக்கம் தருமாறு இது அழைப்பு விடுத்திருந்தது.

கடாபியின் மரணத்தை ஒரு சில அரசாங்க அமைச்சர்களே கண்டித்திருந்தனர். இவரின் மரணம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் 21 சொற்களைக் கொண்ட வசனம் ஒன்றை மட்டுமே வெளியிட்டிருந்தது. "கேணல் முஅம்மார் கடாபியின் மரணம் தொடர்பாக விளக்கம் தரவேண்டுமென சிறிலங்கா அரசாங்கம் கோரிநிற்கின்றது" என்பதே சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையாக இருந்தது.

கடாபியினதும் அவரது அரசாங்கத்தினதும் பலத்த ஆதரவு நாடான சீனா கூட கடாபியின் மரணம் தொடர்பாக மிக அமைதியான அறிக்கையையே வெளியிட்டுள்ள நிலையில் சிறிலங்காவால் விடுக்கப்பட்ட அறிக்கையானது கட்டளையிடும் பாணியில் அமைந்துள்ளது.

கடாபியின் மரணம் தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சால் விடுக்கப்பட்ட அறிக்கையில் "கடாபியின் மரணமானது லிபிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் லிபிய நாட்டில் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கேற்றதும் இந்த நாட்டு மக்கள் அமைதியாகவும் மகிழ்வாகவும் வாழ்வதற்குகந்த அரசியல் நடவடிக்கை ஒன்றை விரைவில் முன்னெடுப்பதுடன், பொருளாதார மறுகட்டமைப்பையும் நிலைநிறுத்த வேண்டும்எனவும் சீனா தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடாபியின் மரணம் தொடர்பாக விளக்கம் தரவேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்தமையானது மறைமுகமாக இது தொடர்பாக விசாரணை நடாத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதைக் குறிக்கின்றது. பாரபட்சமற்ற விசாரணை ஒன்றை நடாத்திய பின்னரே ஒரு சம்பவம் தொடர்பாக பொருத்தமான விளக்கப்பாட்டை வழங்க முடியும்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை ஆகிய நிறுவனங்கள் கடாபியின் மரணம் தொடர்பாகத் தமது கண்டனத்தை வெளியிட்டதுடன், பொருத்தமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளன.

இவ்விரு அமைப்புக்களும் தமது கண்டனத்தை வெளியிட்டது போன்றே சிறிலங்கா அரசாங்கமும் கடாபியின் மரணம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை அமைந்துள்ளது.

இவ்விரு அமைப்புக்களும் இது போன்றதொரு பாரபட்சமற்ற விசாரணைதான் சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியுள்ளன. அதாவது விடுதலைப் புலிகளிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என இவ்விரு அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன.

இறுதி யுத்தத்தின் போது தடுத்து வைக்கப்பட்ட சிலர் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பான சாட்சியங்களை இவ்விரு அமைப்புக்களும் வழங்கியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கேணல் றமேஸ் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் அவர்களால் கொல்லப்பட்ட சம்பவம் இதில் ஒன்றாகும். சிறிலங்கா இராணுவ வீரர் ஒருவரால் றமேஸ் விசாரணை செய்யப்படும் காட்சி மற்றும் இவரது இறந்த உடலம் என்பனவற்றை உள்ளடக்கிய காணொலிகளை இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளமுடியும்.

புலிகள் அமைப்பின் முன்னால் தலைவர்கள் சிலரின் மனைவிமார் சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் தமது சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளதுடன், தமது கணவன்மார் தாமாகவே சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்ததாகவும், இதுவரையிலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் முன்னால் தலைவர்களில் சிலர் சிறிலங்கா இராணுவத்தின் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்த சிங்களப் பத்திரிகையான 'திவயின' அவர்களின் பெயர்களையும் அறிவித்திருந்தது. (ஆனால் பின்னர் இப்பத்திரிகை இச்செய்தியை மறுதளித்தது)

றமேசைக் கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகங்களிற்குப் பதிலளித்த சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் "றமேஸ் பாரிய படுகொலைகளைப் புரிந்தவர் என்றும் பல நூற்றுக்கணக்கானவர்களின் சாவிற்கு இவர் காரணமாக உள்ளார்" எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேபோன்றே சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் வெளியிடப்பட்ட 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' என்ற ஆவணப்படத்திற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட Lies Agreed Upon என்ற திரைப்படத்தில் புலிகள் அமைப்பின் நிதர்சனம் தொலைக்காட்சிச் சேவையான ஊடகவியலாளரான இசைப்பிரியா என நன்கறியப்பட்ட சோபா தொடர்பான குற்றச்சாட்டையும் நியாயப்படுத்தியுள்ளது.

இதையொத்த விவாதத்தை நாம் லிபியக் கிளர்ச்சியாளர்களிடமிருந்து கேட்கலாம். கடாபி மிகக் கொடுமைக்கார சர்வாதிகாரி, பாரிய மனிதப் படுகொலைகளைச் செய்த ஒருவர், பல ஆயிரக்கணக்கானவர்களின் உயிரிழப்பிற்குக் காரணமாக இருந்தார் என்ற நியாயப்பாடுகளை லிபியக் கிளர்ச்சிவாதிகள் முன்வைக்கலாம்.

கடாபியைச் சுட்டுப் படுகொலை செய்ததாக 22 வயதுடைய Sanad al-Sadek al-Ureibi என்கின்ற லிபியக் கிளர்ச்சிவாதி உரிமை கோரியுள்ளார். இவர் கடாபிப் படைகளின் கைகளில் அகப்பட்டு பல நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் தமது உயிரை மாய்த்துக் கொண்ட மிஸறற்றா நகரைச் சேர்ந்தவராவார். இந்த இளைஞனிற்கு எதிராக எந்தவொரு சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்தாலும் மிஸறற்றா மக்கள் அதனை வெளிப்படையாக எதிர்ப்பார்கள்.

ஆனால் கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு நிராயுதபாணியாக இருந்த போதே கொல்லப்பட்டார் என்ற உண்மையுள்ளது. இது ஒரு குற்றச்செயலாகும். அதாவது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச்செயலாகவே இது பார்க்கப்படுகிறது. யுத்தம் இடம்பெற்ற போது இச்சம்பவம் இடம்பெற்றிருந்தால் கூட இது ஒரு போர்க் குற்றமாகவே வரையறுக்கப்பட்டிருக்கும். இவ்வாறான குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

கடாபியின் மரணமும் அது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் அறிக்கையும் யுத்தம் தொடர்பான பிறிதொரு முக்கியமான தோற்றத்தை எம்முன் எடுத்துக் காட்டுகின்றது. யுத்தக் களச் செய்திகளை எவ்வாறு ஊடகங்கள் பெற்றுக் கொள்கின்றன என்பதுவே அதுவாகும்.

லிபியாவில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாக பல ஊடகங்கள் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக் கொண்டிருந்ததால் கடாபியும் அவரது சகாக்களும் கைது செய்யப்பட்டு எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது உலகிற்கு வெளிச்சமாகியுள்ளது. கடாபியின் கொலை தொடர்பாக தமது கண்டனங்களை வெளியிட்ட சிறிலங்கா அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் அனைத்துலக ஊடகங்கள் எவ்வாறு யுத்தகளச் செய்திகளை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதை தற்போது அறிந்துள்ளனர்.

லிபியாவில் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை யுத்தகளத்திலிருந்தவாறே அல்ஜசீரா மற்றும் CNN தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் எவ்வாறு அவற்றை உடனுக்குடன் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் அறியக் கூடியதாக இருந்துள்ளது.

கிளர்ச்சிக்காரர்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்ட கடாபியின் ஆட்களின் இறந்த உடலங்கள் மற்றும் அது தொடர்பான செய்தியையும் லிபியக் கிளர்ச்சிக்குழுவின் கட்டுப்பாட்டிலிருந்த யுத்த களத்திலிருந்தவாறே CNN தொலைக்காட்சி சேவையின் மூத்த நிருபர் டான் றிவேர்ஸ் ஒளிபரப்பியிருந்தார்.

கடாபியும் அவரது ஆட்களும் உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்ட சம்பவமானது மனித உரிமை மீறல் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த பீற்றர் போக்கேற் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

லிபியக் கிளர்ச்சிக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், அங்கு பிரசன்னமாகியிருந்த அனைத்துலக ஊடகங்கள் மூலமே வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஊடகங்கள் லிபிய யுத்தகளத்திற்கு நேரடியாகச் சென்று செய்திகளைப் பெற்று வெளிப்படுத்தாவிடில் இவ்வாறான மீறல் சம்பவங்கள் வெளியுலகிற்குத் தெரிந்திருக்கமாட்டாது.

லிபியாவில் இடம்பெற்ற இந்தச் சூழலிற்கு முற்றிலும் முரண்பட்டதாகவே சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த நிலவரம் உள்ளது.

யுத்தம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் சேகரிப்பதற்குப் பதிலாக சிறிலங்காவில் 2005ம் ஆண்டிலிருந்து ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக 40 ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களை முற்றிலும் யுத்தச் செய்திகளை வழங்குவதற்கான தடையை விதித்திருந்தன.

இது தொடர்பான செய்திகள் தணிக்கைப் படுத்தப்பட்ட பின்னர் வெளியிடவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவ் ஊடகத் தணிக்கை என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்டது. சாட்சியங்கள் அற்ற ஒரு யுத்த களமாக சிறிலங்கா யுத்தம் மாறியது. யுத்தம் நிறைவுற்று இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஊடகவியலாளர்கள் இறுதி யுத்தம் தொடர்பாக ஆராய்ந்து தகவல்களைப் பெறமுடியாதுள்ளனர்.

அத்துடன் உண்மையில் யுத்த களத்தில் என்ன நடந்ததென்பது தொடர்பாக அவர்களால் செய்தி வெளியிட முடியாதுள்ளது. சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிற்கு சுதந்திரமாகச் சென்று வரமுடியாதுள்ளது. அங்கிருக்கும் பொதுமக்களும் பாதுகாப்பற்ற தன்மையைத் தற்போதும் உணர்கின்றார்கள்.

இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கமானது கடாபியின் மரணம் தொடர்பாக விளக்கம் தரவேண்டும் என அறிக்கை விடுத்துள்ளது.

அப்படியானால், சிறிலங்காவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் விளக்கப்பாடு என்ன?

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமது உயிர்களை இழந்த பல பத்தாயிரக்கணக்கான மக்கள் தொடர்பாக இவ் அரசாங்கத்தின் விளக்கப்பாடு என்ன?

சிறிலங்கர்கள் குறிப்பாக வன்னி மக்களுக்கு இது தொடர்பான விளக்கப்பாடுகள் தேவையில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.