Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ மக்களுக்கும் திபெத்தியர்களுக்கும் துரோகம் செய்யும் இந்து ராம்

Featured Replies

ஈழ மக்களுக்கும் திபெத்தியர்களுக்கும் துரோகம் செய்யும் இந்து ராம்

அண்மையில் நாகர்கோவில் நகரில் இயங்கும் ஒரு நூல் விற்பனை நிலையத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் தேடி சில நல்ல நூல்கள் வாங்கினேன். அதில் ஒன்றுதான் 'திபெத் சில புரிதல்கள்'. தி ஹிந்து நாளிதழின் தலைமை ஆசிரியர் என்.ராம் அவர்கள் திபெத் பிரச்சனை குறித்து 'புரன்ட்லயன்' இதழில் (மே 23, 2008) எழுதிய கட்டுரை இக்குறுநூலில் தமிழில் தரப்பட்டுள்ளது.

திபெத் பிரச்சனை குறித்து ஐந்து கேள்விகள் என்ற தலைப்பில் கொல்கத்தாவில் உள்ள சீன குடிமக்கள் நலன் காக்கும் அலுவலகத்தின் தலைமை அதிகாரியான மாவேசிவேய் எழுதியுள்ள கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளது (04.06.2008).

தமிழாக்கம் செய்த இலக்குவன், அறிமுகமும் எழுதி திபெத்திய புத்தமதம் பற்றிய சிறு குறிப்பையும் எழுதியுள்ளார். வண்ண அட்டை படத்துடன் வாசிப்புக்கு உதவும் வகையில் எழிலுற வெளியிட்டிருக்கிறது பாரதி புத்தகாலயம். 64 பக்கங்கள் கொண்ட இக்குறுநூலுக்கு 25 ரூபாய் சற்று அதிகமெனவே படுகிறது. சிந்தனை செறிவு கொண்ட இப்படைப்பை எளிய நடையில் மொழிபெயர்ப்பு செய்த சி.இலக்குவன் பாராட்டப்படவேண்டும்.

என்.ராம் கள ஆய்வுக்காக இரண்டு முறை திபெத் பயணம் மேற்கொண்டு, ஆதாரபூர்வமான தரவுகள் சேகரித்து அதன் அடிப்படையில் இதை எழுதியிருப்பது மிகவும் பாராட்டப்படவேண்டியது. ஆனால் நான் அவரது பார்வையிலிருந்து வெகுவாக வேறுப்பட்டு நிற்கின்ற காரணத்தால் பலமான எதிர்வினை இயல்பாகவே எனக்குள் எழுந்தது.

திபெத் பிரச்சனை குறித்த சரியான பார்வை என்று இது அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் இது சீனம் சார் பார்வை என்பதே நமது கருத்து. அதனாலேயே வாதங்களில் வலு குறைந்திருக்கிறது என்பதும் சிந்தனையோட்டத்தில் கோர்வை கவிழ்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே இந்துத்துவ எதிர்ப்பில் பதிவுகள் ஏற்படுத்தும் ராமின் இந்துக்குழுமம் மத சார்பின்மைக்கு நல்ல எடுத்துக்காட்டு என்றே நாம் கருதி வந்தோம். கந்தமால் வெறியாட்டங்களை கூட வெளிகொணர்ந்ததில் அது ஆற்றிய பணி வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகும். ஆனால் நமது இப்புரிதல் இலங்கை பிரச்னையிலான இவர்கள் நிலைபாட்டில் உருக்குலைந்து போனது. சிங்கள அரசின் பௌத்த மதவாதத்தை வெளிப்படுத்த இந்த மதச்சார்பின்மைவாதிகள் தவறியது ஏன்? சிங்கள அரச பயங்கரவாதத்தின் ஊதுகுழலாக இந்த ஆங்கில ஊடக நிறுவனம் ஒலித்தது ஏன்? ஒரு மனதாக சட்டமன்ற தீர்மானம், அனைத்து கட்சி தீர்மானம் என்று தமிழகமே ஒருமித்து ஈழத்தமிழர் இனப்படுகொலையை கண்டித்து போர் நிறுத்தம் கேட்டு கேட்டு கொந்தளித்த போதும் ராம்களும் ஆங்கில ஊடகங்களும் உலகுக்கு வேறு விதமான தவறான செய்திகளை பரப்பியது ஏன்?

இந்த கேள்விகளுக்கான விடை இலங்கை, இந்தியா, சீனா, ஈழம், திபெத் என்று அனைத்து புள்ளிகளையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வந்து நிறுத்துகிறது. அதுதான் ஒட்டு பொறுக்கி மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்டுகளின் (சி.பி.எம்) நிலைபாடுகளை குருட்டாம்போக்காக ஆதரிப்பது (சுய ஆதாயத்துடன்தான்) என்கிற என்.ராமின் பார்வை.

இந்த நூல் விமர்சன கட்டுரை இந்த வேடதாரிகளை தோலுரிக்கும் முயற்சியே.

முதலாவதாக தலாய்லாமா அடையாளப்படுத்தும் திபெத்தின் விடுதலைக்கான போராட்டத்தை பழமைவாத நிலப்பிரபுத்துவக் கும்பலின் அரசுக்கு எதிரான கலகமாக விளக்குகிறது இந்நூல் (பக்கம்-5). ஆக திபெத்திய முதியோர், பெண்கள், மாணவர்கள் என ஊடகங்களில் நாம் கண்ட அனைத்து போராளிகளுமே கலகக்காரர்கள் என்கிறது ராமின் பார்வை. அரசபயங்கரவாதத்திற்கு அஞ்சியோடி இந்தியாவில் அடைக்கலம் புகுந்த அகதிகளை கலகக்கும்பலாக சித்தரிக்கிறது இந்நூல். சொந்த மண்ணில் வாழும், ஆளும் உரிமையை கோரியதால் ஆதிக்க சீனத்தால் ஓட ஓட விரட்டப்பட்ட திபெத்தியர்களை கலகக்காரர்கள் என்கிறது இந்நூல். இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள தர்மசாலாவில் வெளியிலிருந்து இயங்கும் திபெத் அரசாங்கம் என்ற அமைப்பு செயற்பட்டு வருகிறது. இது இந்திய அரசுக்கு தெரியாமல் நடப்பதல்ல! இதை இந்திய அரசு அனுமதிக்கிறதென்றால் இதையே அங்கீகாரமாக எடுத்து கொள்ள முடியாதா?

வெளிப்படையாக இந்திய அரசினால் அவ்வாறு அறிவிக்க முடியாததற்கு அசுர பலம் வாய்ந்த சீனம் குறித்த அச்சம் அன்றி வேறென்ன காரணம் இருக்க முடியும்? ஆனால் இந்த தொடை நடுக்கத்தையே இந்தியாவின் ஆக்கபூர்வமான நிலைப்பாடு என்று பாராட்டுகிறார் ராம்.

உலக நாடுகள் திபெத் மக்களின் தன்னாட்சிக்கான போராட்டத்தை ஆதரிப்பது மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளின் அடிப்படையிலானது என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் ராம், சீனாவுக்கு எதிரான இந்த அணுகுமுறை அபாயகரமானது என்று மிரட்டலும் விடுக்கிறார். இந்தியா ஏனைய விடுதலை போராட்டங்களை ஆதரிக்குமென்ற நேருவின் நிலைபாடே வங்கதேசம், பாலஸ்தீனம் போன்ற விடுதலை போராட்டங்களை தார்மீக ரீதியில் இந்தியா ஆதரித்ததற்கு காரணம். சீனா மீதான அச்சம் காரணமாகவே இந்தியா இந்த கொள்கையிலிருந்து வழுக்கி ஆதிக்க வகை அரசபயங்கரவாதத்தை கண்டு கொள்ளாமல் கள்ள மவுனம் சாதிப்பதை அறிவிக்கப்படாத வெளியுறவு தத்துவமாக ஆக்கியுள்ளது.

ஈழம், பாலஸ்தீனம் போன்ற உரிமைப் போரட்டங்களில் இந்தியாவின் நிலைப்பாடு இப்படிதான் அம்மணமாகி நிற்கிறது. இதையே ஆக்கபூர்வ நிலைப்பாடு என்கிறார் ராம்.

ஊடக ஒழுக்கம் குறித்து பேசும் ராமின் வாதங்கள் யாவும் நகைப்புக்குரியன. செய்தி ஆதாரங்களை சரிபார்த்தே செய்தி வெளியிட வேண்டும் என்கிறார் ராம். ஆனால் ஊடக சுதந்திரம் இல்லாத சூழல் நிலவும் போது செய்தி வெளியிடக்கூடாது என்கிறது போல் நீள்கிறது அவர் வாதம். ஆனால் ஊடக சுதந்திரம் தடை செய்யபடுவதன் ஒழுக்கம் இஸ்ரேல், இலங்கை, சீனா போன்ற பயங்கரவாத அரசுகளால் மீறப்படும்போது பொய்ப்பரப்பல் செய்யும் அரசுகளின் சங்கொலியாக ஒலிப்பதுதான் ஊடக தர்மமா? உதாரணமாக உண்மை பேசினால் சிங்கள ஊடகவியலாளரே ஒடுக்கப்படுவதும், உலக ஊடகங்கள் வெளியேற்றப்படுவதும் போன்ற சிங்கள பேரினவாதத்தின் தலைவன் ராஜபக்சே துப்பும் எச்சிலை, தலைப்பு செய்தியாக தாங்குவதுதான் ஊடக ஒழுக்கமா?

இலங்கை என்னும் சந்தையை இழக்க விரும்பாத இந்திய முதலாளித்துவ கும்பல், இந்திய அதிகார வர்க்கத்திற்கு போடும் பிச்சையிலிருந்து வழியும் எச்சிலை நக்குவதுதான் ஊடக ஒழுக்கம். அரச பயங்கரவாதம் அச்சுறுத்தும் சக்தியாய் வடிவெடுத்து வரும் இக்காலகட்டத்தில், சிறிதளவேனும் அதை அச்சுறுத்துவது மனித உரிமை முழக்கங்களே. ஹைட்டி, வல்வெட்டித்துறை, அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் காட்டுமிராண்டித்தனமான வல்லுறவுகளில் ஈடுப்பட்ட வெட்கக்கேடான இந்திய ராணுவத்தின் கொடூர முகத்தை உலக அரங்கிற்கு காட்டியது மனித உரிமை அமைப்புகளும் உயிரையும் துச்சமாக கருதி உண்மையை ஒலிக்கும் ஊடகங்களுமே.

இதற்கு அவை கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமல்ல. ஒழுக்ககேடு மலிந்ததும், வன்முறை தாக்குதல்களை தடுக்க வக்கற்றதுமான அரச வன்முறை சக்திகள் ராணுவமாக, காவல் துறையாக, வெள்ளை வான்களாக, சல்வா ஜூடும் போன்ற கூலி படைகளாக கொலைத்தாண்டவமாடுகின்றன. மூக்கில் விரலை விட்டு ஆட்டியும் மூன்று நாட்களாக உள்ளே நுழைய முடியாத இந்த காகித புலிகளுக்கு (மும்பை தாக்குதல்) கதாநாயக தகுதி கொடுத்து கௌரவித்த ராம் வகை ஊடகவியலாளர்கள் மனித உரிமை முழக்கங்களை கொச்சைப்படுத்துவது புரிந்து கொள்ள இயலாததல்ல.

பன்னாட்டு விளையாட்டு போட்டிகள் அரசியல் தன்மை கொண்டவை. அவை வெற்று விளையாட்டுகளல்ல. இதுபோன்ற போட்டிகள் நடக்கும் நாடுகள் சட்டம், ஒழுங்கு தரச்சான்றிதழை உலக அரங்கில் திருடி கொள்கின்றன. இப்படியொரு தோற்றத்தை ஏற்படுத்தவே அண்மையில் இது போன்ற இனப்படுகொலை நடக்கும் இலங்கை மண்ணில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடத்தி ரத்த வாடை அடிக்கும் சிங்கள அதிகார வர்க்கத்திற்கு உலக அளவில் நன்னடத்தை சான்றிதழ் பெற்று தர இந்திய-இலங்கை கள்ளத்தொடர்பு முயற்சித்தது. இந்த அரசியல் தொடர்பு விளையாட்டு போட்டிக்கு இருப்பதால்தான் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இலங்கை கிரிக்கெட் அணியின் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தானில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை தோலுரித்தனர்.

இதே அடிப்படையில்தான் திபெத் விடுதலை போராட்டத்தை ஒடுக்கும் சீன மண்ணில் ஒலிம்பிக் போட்டிகள் நடப்பது அவ்வரசுக்கு இல்லாத யோக்கியத்தை பெற்று தருவதாக அமையும். மேலும் திபெத்தின் நியாயங்களை, சீனா மீது உலகத்தின் பார்வை குவியும் இத்தருணத்தை பயன்படுத்தி வாதப்பொருளாக்க முடியும் என்ற உத்தி முன்னெடுக்கப்பட்டது. இவ்வளவு பின்னணிகளை கொண்ட இந்த சமகால எழுச்சியை சீன ஒலிம்பிக்கை சீர்குலைக்கும் முயற்சி என்று விவரிக்கிறது ராமின் பார்வை.

பாரதூரமான விளைவுகளை ஏற்ப்படுத்தக்கூடிய ஒப்பீட்டாய்வுகளை செய்கிறார் ராம். புத்த மடங்களை சார்ந்தவர்களே கலவரங்களில் ஈடுப்பட்டார்கள் (இலங்கையில் ஊரறிய நடக்கும் புத்த பிட்சுகளின் வன்முறை வெறியாட்டங்கள், பேரினவாத அழுத்தங்கள் குறித்து ராம் வாய் திறக்க மாட்டார் என்பது வேறு விடயம்) என்று சொல்லி புத்த மடாலயங்களில் அத்து மீறி சீன மேலாதிக்க குழு நுழைந்ததை பர்வேஷ் முஷாரப் எடுத்த நடவடிக்கைக்கு ஒப்பிடுகிறார் ராம்.

இதில் முஷாரப்பை பாராட்டிய மேற்கத்திய ஊடகங்கள் சீனாவை பாராட்டவில்லை என்று ஆதங்கம் வேறு. முதலாவது திபெத்தில் நடப்பது பாகிஸ்தானை போல் அல்லாது ஓர் இன மக்கள் வேற்றின மக்களிடமிருந்து விடுதலை கோரும் போராட்டம் என்பதை மறந்து ஒப்பிடுகிறார் ராம். இதை காலிஸ்தான் கோரிய சீக்கிய மக்களின் விடுதலை போராட்டத்தை ஒடுக்க இந்திரா காந்தி எடுத்த பொற்கோவில் நடவடிக்கைக்கு ஒப்பிட ராம் தயாரா? இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் பியாந்த் சிங் என்ற சீக்கியரால் இந்திரா கொலை செய்யப்பட்டார் என்பதை மறக்க முடியுமா?

இந்திராவின் நினைவு நாளில் ராமோ, ஏன் இந்திய ஆட்சியாளர்களோ, காங்கிரஸ் கட்சியினரோ அதை நினைவு கூர்ந்து இந்திராவின் குருத்வாரா நுழைவை நியாயப்படுத்தியோ, அதற்கு பழிவாங்கிய சீக்கிய சமூகத்தை கண்டித்தோ பேச திராணி உண்டா? தொடர்ந்து வந்த தேர்தலில் இந்திரா மீதான பழி வாங்குதலை அங்கீகரித்துதானே சீக்கிய மக்கள், பியாந்த் சிங்கின் மனைவி விமலா கவுர் என்பவரை எப்போதும் இல்லாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து, தாயை இழந்த தனயன் ராஜீவ் பிரதமராக அமர்ந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அனுப்பினார்கள். அதை பற்றி பேச துணிவு இருக்கிறதா இல்லை, இந்திரா கொலைக்காக காங்கிரஸ் திட்டமிட்டு சீக்கிய மக்களை தலை நகர் தில்லியில் நரவேட்டை ஆடியதே அதை குறித்து பேச தைரியம் இருக்கிறதா?

இது எல்லாவற்றையும் மறந்து இன்று சீக்கியரான மன்மோகன் சிங்கை பிரதமராக்கிய சோனியா, தன் கணவரை கொன்றார்கள் என்று கருதி விடுதலை புலிகளுக்கு எதிராக ராஜபக்சேயுடன் கூட்டணி அமைத்து நயவஞ்சகமாக ஈழ மண்ணில் யுத்தம் செய்கிறாரே அதை பற்றி ராம் பேசுவாரா? அரசியல் கூர்மதியோ, இந்தியாவின் பிராந்திய நலன்கள் குறித்த அறிவோ, ஈழப்போராட்டம் மற்றும் விடுதலைப்புலிகள் போராட்டத்தின் ஆன்மா குறித்த புரிதலோ இல்லாமல் அமைதிப்படையை அனுப்பி தமிழர்கள் வாழ்க்கையை சின்னாபின்னமாகியதுதான் ராஜீவின் அறிவு. தமிழ் பெண்களை வல்லுறவு செய்து வக்கிரம் செய்ததுதான் அமைதிப்படை. ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்த கமிஷன் இதை பழி வாங்கும் நடவடிக்கை எனவோ, பயங்கரவாத நடவடிக்கை எனவோ கருத இயலாது என்று சொன்ன பின்னரும் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்க ராமின் இந்து குழுமம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு காரணம் என்ன? வெறும் வன்முறை எதிர்ப்பா? அப்படியானால் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை பயங்கரவாதிகள் என சொல்லி ஆங்கிலேய அரசு தண்டித்ததை ராமின் கருத்தாக கொள்ளலாமா? சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, மாவோ, அராபாத் ஆகியோரையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாமா! இல்லை என்றால், ஏன் இந்த இரட்டை வேடம்?

ராஜீவ் கொலையாளிகள் என்று பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் திரும்ப திரும்ப அழைப்பதன் மூலம் இது தொடர்பாக விசாரிக்கப்பட்ட சுப்ரமணியசாமிக்கும், சந்திராசாமிக்கும் உள்ள நெருக்கம் குறித்த கவனத்தை சிதைக்க முயல்கிறாரா ராம். இவ்விசாரணையில் ஒத்துழைப்பு தரவில்லை என்று விசாரணை கமிஷன் இவர்கள் மீது குற்றம் சாட்டுவதை இங்கே நினைவு கூரவேண்டும். ஆக இந்திரா கொலை தொடர்பாக சீக்கியர் மீது ஓர் அணுகு முறை, காந்தியை கொன்ற இந்துத்துவா கும்பல் மீது ஓர் அணுகுமுறை, ஆனால் ராஜீவ் கொலை தொடர்பாக தமிழர் மீது வேறு அணுகுமுறை என்பதன் அர்த்தமென்ன? ஆரிய, பார்ப்பனீய, வட இந்திய சார்பு போக்குதானே.

சுப்ரமணியசாமியை, சந்திராசாமியை காப்பாற்ற ராம் புலி எதிர்ப்பு கோசத்தை தொடர்கிறார். நீதிமன்றத்தில் வன்முறையை தூண்டிய சுப்ரமணிசாமிக்கு உதவியாக பார்பன சோ கொந்தளிக்கிறார். இதில் எல்லாமே பூணூல் உறவுதானே? ராம் அவ்வப்போது சிவப்பை அள்ளி காவிக்கு மேலாக தடவி கொள்கிறார் அவ்வளவுதான்! திபெத் தொடர்பான சீனாவின் அரசியல் தீர்வுகளை அடியொற்றி வக்காலத்து வாங்குகிறார் ராம். ஆனால் மக்களாட்சி தத்துவமே, தங்களின் வாழ்வு குறித்து தாங்களே முடிவெடுக்கும் அதிகாரம் மக்கள் கையில் இருப்பதுதானே.

ஆக, பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமையை திபெத் மக்கள் பெற்றாக வேண்டும். பாலஸ்தீனம்ஈழம், திபெத் போன்ற அனைத்து சிக்கல்களிலும் இதுவே ஆரோக்கியமான, நியாயமான அணுகுமுறையாக இருக்க முடியும். அதைவிடுத்து திரிபுகளை நியாயப்படுத்துவது ஊடகவியலாளர்களுக்கு அழகல்ல. திபெத் பகுதி சீன ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதற்கு புள்ளிவிவர தரவுகளோடு, தானே கடுமையாக உழைத்து சேகரித்த ஆதாரங்களை முன்வைத்து வாதங்களை தருகிறார் ராம். வறட்டு வர்க்க தர்க்கத்தின் இழிநிலை இதுவே எனலாம்.

பொருளாதார காரணங்களுக்கு அப்பாலும் அரசியல், மத, தேசிய மற்றும் பண்பாட்டு கூறுகளும் வரலாற்றில் விடுதலை போராட்டங்களுக்கு வித்திட்டிருக்கின்றன. செர்பியாவிலிருந்து கொசோவோ, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம், ருசிய கூட்டமைப்பின் சிதறல்கள் என்று எத்தனையோ எடுத்துக்காட்டுகள். இங்கிலாந்து ஆதிக்கத்தில் இந்தியா கூட இன்று பாரிய பொருளாதார வளர்ச்சி கண்டிருக்க கூடும். ராம் அதைதான் விரும்புகிறாரா? சமகால இனவெழுச்சி விடுதலை போராட்டங்களின் வரிசையில் பாலஸ்தீனம், ஈழம் போன்றவற்றோடு திபெத் நேர்கோட்டில் நிற்கிறது. இதை பொருளாதார வளர்ச்சி என்ற பொய் மூட்டையில் திணிக்க நிறையவே மெனக்கெடுகிறார் ராம்.

திபெத்தின் கல்வி வளர்ச்சி பற்றி பேசும் ராம் திடுக்கிடும் தகவல் ஒன்றை முன்வைக்கிறார். அதாவது திபெத் பகுதிக்கு 2000 சீன ஆசிரியர்களையும் கல்வி அதிகாரிகளையும் அனுப்பி வைத்து கல்வி வளர்க்கிறதாம் சீனம். இது எத்தகைய ஒரு வல்லாதிக்கம் என்பதை உலகறியும். திபெத்திய இன ஒர்மையை, விடுதலை வேட்கையை முளையிலேயே கிள்ளி எறியும் சூழ்ச்சியல்லவா இது!

ஈழப்பகுதியின் கல்வி வளர்ச்சிக்கு சிங்கள ஆசிரியர்களை கல்வி அதிகாரிகளாக அனுப்பி வைப்பதற்கு சமனான கொடுமையல்லவா? இந்த பண்பாட்டு வன்முறையை இந்தியாவிற்கு முன்மொழிகிறார் ராம். தனித்தன்மையை தேசிய அடையாளத்தை தக்கவைக்க எல்லா மாநிலங்களிலும் தொடரும் போராட்டம் ஒருபுறம், இந்து, இந்தி, இந்தியா என்ற ஒற்றை அடையாளத்தை திணிக்க நடக்கும் முயற்சிகள் மறுபுறம் என இந்தியா தடுமாறிகொண்டிருக்கும் சூழலில் இது போன்ற முயற்சிகள் எத்தகு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எண்ணி பார்த்திடவேண்டும். திபெத், ஈழம் போன்ற தேசிய இனங்கள் கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற தன்னாட்சி பெறுதலே அடிப்படையாகும்.

ஓர் இனக்குழு தனது அடையாளம் குலையாமல் உள்ளார்ந்த பொருத்தக்கூறுகளோடு வளர்ச்சியைத் திட்டமிடுதலே அறிவியல்பூர்வமானதாகும். இந்த உண்மைகளை நினைவாகவே மறந்து விடுகிறார் ராம். தனது வாதங்கள் வலுவாக இல்லை என்பதாலோ என்னவோ தலாய்லாமா என்ற தனி மனிதரை ஆளுமைக்கொலை செய்ய எத்தனிக்கிறார் ராம். தனது மக்களின் விடுதலை போராட்டத்துக்கு ஆதரவு கோரி உலகநாடுகளிடையே அவர் மேற்கொள்ளும் முயற்சியை வெறும் சீன எதிர்ப்பு அல்லது அதன் சித்தாந்த எதிர்ப்பு என்று குறிக்கிட முனைகிறார் ராம்.

தலாய்லாமாவின் சொத்து பற்றி எல்லாம் அவர் வாதிட முயல்வது சிறுபிள்ளைதனமாக உள்ளது. உண்மையில் தலாய்லாமா ஒரு முழுமையான அரசியல்வாதி. 'தனக்கே உரித்தான வளமான பண்பாட்டையும், ஆன்மிகம், நாகரீகம், மொழி மற்றும் சிறப்பு அடையாளத்தையும் கொண்ட புராதன தேசமாகிய திபெத்தின் மக்கள் பூமி பரப்பிலிருந்தே வேகமாக மறைந்து வருகின்றனர்' என்ற தலாய்லாமாவின் உள்ளார்ந்த வேதனையை புத்தி பேதலித்த பிதற்றல் என்ற கடும்சொற்களால் மேலும் காயப்படுத்துகிறார் ராம்.

ஆக, ராம் நிறுவ விழைவது என்ன என்று சுருங்க பார்த்தால், தலாய்லாமா தலைமையிலான திபெத்தியர்களின் விடுதலை போராட்டமென்பது, அமெரிக்க, மேற்கத்திய இடதுசாரி எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஓர் அங்கம் மட்டும் என்று நிறுவுவதேயாகும்.

தலாய்லாமாவின் சொத்து விபரம் பற்றி பேசுவதும், அட்டையில் புஷ் - லாமாவின் படத்தை அச்சிடிருப்பதும் மேற்கத்திய, அமெரிக்க முதலாளித்துவ கைக்கூலியாக அவரை காட்ட விழையும் முயற்சியாகும். அகண்ட திபெத்துக்கான இயக்கத்தை தலைமை ஏற்று நடத்துபவர். அதனை சீனாவிலிருந்து பிரிக்க முயன்று வருபவர். வெளிநாடுகளுடன் தொடர்புடைய ஒரு கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர், நாடு பிரிவினை கோரும் அரசியல்வாதி (பக்கம்.44) என்ற வகையில் நீள்கிறது ராமின் விளக்கம்.

இந்த அளவிற்கு வெறுப்பை கொட்ட வேண்டிய அவசியம் என்ன!

ஓர் ஆன்மிகவாதி தான் சார்ந்த மக்கள் கூட்டத்தின் விடுதலை வேட்கையில் அக்கறை காட்டுவது எப்படி தவறாகும்? இதனை ஒரு கருத்தியல் எதிர்ப்பாக, பிரிவினைவாதமாக சித்தரிப்பதன் தேவை என்ன? இங்குதான் ஒரு கருத்தில் நாம் உடன்படுகிறோம். அதாவது, திபெத்தியர் போராட்டத்தினால் உலக அரங்கில் சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த பக்கவிளைவையே போராட்ட நோக்கமாக காட்ட விழைவது தனது கம்யூனிஸ்ட் சீன சார்பை காட்ட ராம் அவர்களுக்கு உதவுமேயன்றி உண்மைக்கான ஊடகவியலாளராக அவரை அடையாளம் காட்டவில்லை.

மேற்கத்திய, அமெரிக்க, முதலாளித்துவ போக்குகள் நமக்கு உடன்பாடானவை அல்ல. அவற்றை நாம் நிராகரிக்கவே செய்கிறோம். ஆனால் போலி ஒட்டு பொறுக்கி கம்யூனிஸ்ட் அரசுகள் முதலாளித்துவத்தோடு சமரசங்களை செய்து கொண்டுள்ளது கண்கூடு. மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு டாடா நிறுவனத்தோடு போட்ட உடன்பாட்டை உண்மையான இடதுசாரி சிந்தனையோட்டத்தில் நினைத்து பார்க்கவேனும் இயலுமா?

மத சார்பின்மையை நாம் உயிராய் மதிக்கிறோம். இந்துத்துவ கருத்தியல் இந்திய நிலப்பரப்பில் ஏற்ப்படுத்தும் காயங்களுக்கு எதிராக நமது குரலும் இணைந்தே ஒலிக்கும். ஆனால் போலி மதசார்பின்மை சிங்களத்தின் பௌத்த மதவாத அரசை ஆதரிக்கும் போக்கு அதன் நிஜ முகத்தை வெளிப்படுத்தி விடுகிறது. விடுதலை வேண்டும் குழுவை கொச்சைப்படுத்த அதன் தலைமை ஆன்மீகவாதியாக இருப்பதை பயன்படுத்துவது என்பதில் நான் மாறுபடுகிறேன்.

எல்லா அறிவுஜீவி முகமூடிகளும் கிழிந்து பூணூல் சாதிவெறி கூட்டணி அப்பட்டமாக வெளிச்சமாகும் போது பார்ப்பனீய எதிர்ப்பில், சாதிய ஒழிப்பில், தேசிய விடுதலை போராட்டங்களில் இன்னும் காத்திரமான வெற்றிகள் கிடைக்கும் என்பதே நமது நம்பிக்கை.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=8&contentid=2177b05c-d26a-4a62-b75a-ba6fb0121d97

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.