Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காயங்களின் எழுத்து - ஆறாவடு நாவல் குறித்த கருத்துப் பகிர்வு நிகழ்வில் நிலாந்தன் ஆற்றிய உரை

Featured Replies

18/02/2012 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறாவடு நாவல் குறித்த கருத்துப் பகிர்வு நிகழ்வில் நிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (நிலாந்தனால்) வடிவம்)

ஆறாவடு நாவல் ஒரு யுத்தசாட்சியம்.அதனழகியல் பெறுமானங்கள் குறித்து, நானிங்கு பேசப்போவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றியே நான் இங்கு பேச விழைகிறேன்.

யுத்தத்தின் முதற்பலி உண்மை. பலியிடப்படும் உண்மைக்கு சாட்சியாக இருப்பதே போர் இலக்கியம். அது உண்மைக்கு எவ்வளவுக்கு எவ்வளவு கிட்டவாக வருகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு யுத்த சாட்சியம் முழுமையானதாக அமையும்.அது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையில் இருந்து விலகிச்செல்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சாட்சியம் பலவீனமானதாக ஒருதலைப்பட்சமாக மாறுகிறது.அதாவது உண்மையை அதிகம் நெருங்கி வரும்போது யுத்த சாட்சியம் சமநிலையானதாக சாம்பல் நிறமுடையதாக அமைகின்றது. உண்மையிடம் இருந்து விலகிச் செல்லும்போது அது அதிகமதிகம் கறுப்பு வெள்ளையாக மாறுகின்றது.

இங்கு கறுப்பு, வெள்ளை , சாம்பல் எனப்படுவதெல்லாம் நான் பேச முற்படும் விடயத்தை விளங்கப்படுத்த ஒரு வசதிக்காகப் பயன்படுத்தப்படும் சொற்கள் மட்டுமே. இங்கு ஒன்றை முதலில் தெளிவாகச் சொல்லவேண்டும். கறுப்பு வெள்ளை இரண்டுமே ‘ரிலேட்டிவ்’ ஆன அதாவது சார்பு நிலை வார்த்தைகள் தான். அவரவர் நோக்கு நிலைகளுக்கு ஏற்ப அவை மாறமுடியும்.எனக்கு வெள்ளையாக இருப்பது இன்னொருவருக்கு கறுப்பாகத் தெரியலாம். இன்னொருவருக்கு வெள்ளையாகத் தெரிவது எனக்கு கறுப்பாகத் தோன்றலாம்.ஒன்றுக்கொன்று முரணான எதிரெதிரான நோக்குநிலைகள் என்ற அர்த்தத்திலேயே இங்கு கறுப்பு வெள்ளை என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இதை இன்னும் சிறிது ஆழமாகப் பார்க்கவேண்டும்.

அரசியல் அர்த்தத்தில் கறுப்பு வெள்ளை இருமை எனப்படுவது - ‘பைனறி ஒப்பசிஷன்’ எனப்படுவது- துருவ நிலைகளைக் குறிக்கிறது.கறுப்பு, வெள்ளை அரசியல் எனப்படுவது அதன் பிரயோக நிலையில் இருமையைக் குறிக்கவில்லை. அதன் இறுதி விளைவைப் பொறுத்தவரை அது ஓர் ஒற்றைப்பரிமாண அரசியலே. அதாவது ஏகத்துவ அரசியலே.கறுப்பின் இருப்பை வெள்ளை ஏற்று கொள்வதில்லை. வெள்ளையின் இருப்பை கறுப்பு ஏற்றுக் கொள்வதில்லை. ஒன்று மற்றதைத் தோற்கடிப்பதன் மூலமோ அல்லது அழிப்பதன் மூலமோ தன்னை மட்டும் ஏகப் பெரும் சக்தியாக ஸ்தாபிக்க முற்படுவதே கறுப்பு வெள்ளை அரசியல் ஆகும். எனவே கறுப்பு வெள்ளை அரசியலைன் இறுதி இலக்கு ஏகத்துவமே. எதிர்த்தரப்பினை இல்லாமல் செய்ய முற்படுவதென்பது ஏகத்துவம் தான்.அங்கே பன்மைத்துவத்துக்கு இடமில்லை.’டைவர்சிற்றிக்கு’ இடமில்லை.

மாறாகச் சாம்பல் எனப்படுவது கறுப்பையையும் வெள்ளையையும் ஏற்றுக்கொள்வது.ஏனெனில் கறுப்பும் வெள்ளையும் கலந்தால் தான் சாம்பல் வரும்.கலக்கப்படும் விகிதங்கள் மாறுபடும்போது சாம்பலின் தன்மையும் மாறுபடும். சாம்பல் எனக்கூறப்படுவது அதன் இறுதி விளைவைப் பொறுத்தவரை பன்மைத்துவத்தைத்தான் குறிக்கிறது.அதாவது ஏகத்துவத்துக்கு எதிரானது.

இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்து நாம் இனி யுத்த சாட்சியங்களைப் பார்க்கலாம் உண்மைக்கு அதிகம் நெருக்கமாக வரும் ஒரு யுத்த சாட்சியம் உண்மையின் எல்லாப் பரிமாணங்களையும் வெளிக்கொண்டுவர முயற்சிக்கும். எனவே ஆகக்கூடிய பட்சம் அது சாம்பல் நிறமுடையதாகக் காணப்படும். எனவே ஒரு முழுமையான யுத்த சாட்சியம் எனப்படுவது நிச்சயமாக கறுப்பு வெள்ளை இருமைகளுக்கு அப்பாற்பட்டதாகக் காணப்படுகின்றது. இத்தகைய சாம்பல் நிற யுத்த சாட்சியங்களே அதியுச்ச படைப்பாக்க உன்னதங்களை அடையக் கூடிய ஆகக்கூடியபட்ச சத்தியங்களைக் கொண்டிருக்கின்றன.

ஈழத்துப்போர் இலக்கியங்களைப் பொறுத்தவரை யுத்த சாட்சியத்தின் தன்மை குறித்து 3 பிரதான போக்குகள் உண்டு.

1.போரைப் போற்றுகின்ற வீரத்தையும் தியாகத்தையும் வழிபடுகின்ற ஒரு வீர யுகத்தைப் பாடுபொருளாகக் கொண்ட படைப்புக்கள்.இப்போக்கினை மரணத்துள் வாழ்வோம் போக்கு எனலாம்.

2. போரை,விமர்சிக்கின்ற அல்லது போராட்ட இயக்கங்களுக்குள் காணப்படும் உட்கட்சிப்பூசல்களையும் சகோதரப் படுகொலைகளையும் பாடுபொருளாகக் கொண்டது.இவர்களைப் பொறுத்தவரை மரணத்துள் வாழ்வோம் என்பது சிங்களத்துப்பாக்கிகள் தரும் மரணம் மட்டுமல்ல. தமிழ்த்துப்பாக்கிகள் தரும் மரணமும் தான். புனிதங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்ற வீரத்தையும் தியாகத்தையும் விமர்சிகின்ற ஒளிவட்டங்களைச் சிதைக்கின்ற ஒரு போக்கே இது. 1980 களின் நடுக்கூறில் கவிதைகளில் வெளிப்படத்தொடங்கி கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலில் துலக்கமாகத் தெரியத்தொடங்கிய ஒரு போக்கே இது.

இந்த இரண்டுக்கும் நடுவே ஒரு போக்கு உண்டு. போராட்டத்தை ஏற்றுகொள்ளும் அதேசமயம் போராட்ட இயக்கங்கள் செய்கின்ற எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளாத படைப்பாளிகள் இந்தப் போக்குக்குள் வருகிறார்கள். மேற்சொன்ன இரு போக்குகளின் விளிம்பில் இருப்பவர்களும் இந்தப்போக்கிற்குள் வருவதுண்டு.ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பில் சாம்பல் நிறப்பிரதேசம் இது . ஈழத்துப் போரிலக்கியத்தின் வெற்றி பெற்ற படைப்புக்களில் அநேகமானவை இந்தப் போக்குக்கு உரியவை தான். ஈழப்போரின் ஒப்பீட்டளவில் முழுமையான யுத்த சாட்சியம் இங்குதான் இருக்கிறது. மே-18 க்குப் பின் இப்போக்கினை துலக்கமாக அடையாளம் காணத்தக்க படைப்புக்கள் அடுத்தடுத்து வரக்காண்கிறோம்.

சயந்தனின் ஆறாவடுவும் அப்படியொரு சாம்பல்நிற இலக்கியம் தான். இணையத்தளங்களில் எழுதும் சாத்திரியின் கதைகளும் சாம்பல் நிறமுடையவை தான்.பா.அகிலனின் சரமகவிகளும் சனாதனனின் முடிவுறாத்தோம்பும் அத்தகையவை தான்.நந்திக்கடல் வீழ்ச்சிக்குப்பின் காலச்சுவட்டில் கருணாகரன் எழுதிய கட்டுரைகளும், யோ.கர்ணனின் கதைகளும் , ஷோபாசக்தியின்;கப்டனும்; இணையத்தளங்களில் ஐயர் என்பவர் எழுதிய கட்டுரைகளும் கறுப்பு வெள்ளை விகித வேறுபாடுகளை உடைய சாம்பல் பரப்புக்குள் வருபவை தான்.

இணையத்தளங்களில் எழுதும் சாத்திரியின் கதைகளின் இலக்கியத்தரம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.ஆனால் யுத்தசாட்சியம் என்று வரும்போது, புனிதங்களை உடைக்கும் ஒரு கதை சொல்லியாக சாத்திரி துருத்திக் கொண்டு தெரிகிறார்.அவருடைய கதாநாயகன் வெளிநாட்டுச் சர்வதே வலையமைப்புக்குள் இயங்கும் ஒரு போராளி.வரையறையற்ற பாலியல் சுதந்திரம் உடைய ஒரு சர்வதேசப்பரப்புக்குள் ஊடாடும் கதாபாத்திரங்கள். அங்கெல்லாம் எத்தகைய ஒழுக்கக்கட்டுப்பாடும் இன்றி, பாலியல் இன்பத்தை துய்த்தபடி தமக்கு இடப்பட்ட பணிகளைச் செய்கிறார்கள். ஆயுதக்கடத்தல் மற்றும் ஆயுத பேரங்கள் நிகழும் உலகின் தலைநகரங்கள் தோறும் ஊடாடும் மேற்படி கதாபாத்திரங்கள் ஒரு புறம் ‘ப்றீ செக்ஸை’ அனுபவிக்கிறார்கள்.இன்னொரு புறம் கொழும்பில் தமக்கு தரப்பட்ட பணியை செவ்வனே செய்து முடிக்கிறார்கள்.அவர்கள் வன்னியில் இருந்திருந்தால் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக மே -18 வரை பங்கருக்குள் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.அவர்கள் அனுபவிக்கும் ‘ப்றீ செக்ஸ்’ அவர்களுடைய இலட்சியங்களுக்கு குறுக்கே நிற்கவில்லை.அதாவது சாத்திரியின் கதை மாந்தர்களில் போராளியைப் பற்றிய புனிதமான படிமங்கள் அப்படியே உடைகின்றன.இங்கேதான் அவர்கள் சாம்பலுக்குள் வருகிறார்கள்.

கருணாகரனும் கர்ணனும் சொல்வதெல்லாம் உண்மை. 4ஆம் கட்ட ஈழப்போரின் தவிர்க்கப்படவியலாத யுத்த சாட்சியங்கள்.இவர்கள்.ஆனால் அவர்களின் சாட்சியத்தின் சாம்பல் நிறத்தில் தொனிவேறுபாடுகள் உண்டு. உண்மையின் ஒரு பக்கத்தை அவர்கள் வெளியே கொண்டுவருகிறார்கள்.ஆனால் உண்மை எப்போதும் பல பக்கங்களை உடையது.

பா.அகிலனின் சரமகவிகளும் உண்மையின் ஒரு பக்கத்துக்கு சாட்சியம் செய்யும் ஒரு சாம்பல் நிற இலக்கியம் தான். ஆனால் சனாதனனின் ‘இன் கொம்ப்ளிட் தோம்பு’ உண்மையின் பன்முகத்தன்மைக்கு மேலும் நெருக்கமாக வருகின்றது.அது ஒரு ஓவியனின் தொகுப்பு என்று பார்க்கும் போது அதன் கலைப்பெறுமதி குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.அதேசமயம் ஒரு யுத்த சாட்சியம் என்று பார்க்கும் போது, ஒப்பீட்டளவில் முழுமைக்கு கிட்ட வரும் அதாவது சாம்பல் நிறத்தன்மை அதிகம் உடைய ஒரு மென்யுத்த சாட்சியம் அது.வீடுகளைப் பற்றிய 75 பேர்களது ஞாபகக்குறிப்புக்களினதும் அந்த வீடுகளைப் பற்றி அவர்களே வரைந்த தள வரைபடங்களினதும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடப் படவரைகலைஞர் வரைந்த தொழில்சார் தள வரைபடங்களினதும், இவற்றோடு முக்கியமாக வீடுகளைப் பற்றிய சாட்சியங்களுக்கு ஊடாக தான் பெற்றவைகளின் அடிப்படையில் சனாதனன் வரைந்த ஓவியங்களினதும் தொகுப்பே அந்நூல்.வீடுகளைப் பற்றிய ஞாபங்கள் என்று வரும்போது எல்லாத்தரப்பையும் அந்த நூல் கவனத்தில் எடுத்திருக்கிறது.

பணக்காரன். ஏழை, முஸ்லிம்(சிங்களவர்கள் இல்லை) என்று அநேகமான தரப்புக்களிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.வீட்டைப் பற்றிய ஞாபகம் எனப்படுவது ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையும் ஒரு யுத்த சாட்சியம் தான். வீடு யாரால் உடைக்கப்பட்டது?அல்லது வீடு ஏன் இல்லாமல் போனது? அல்லது வீட்டுக்கு ஏன் போக முடியவில்லை? அல்லது வீட்டிலிருந்து ஏன் துரத்தப்பட்டார்கள்? என்பதெல்லாம் யுத்த சாட்சியங்களே.சனாதனனின் ‘இன் கொம்ப்ளிட் தோம்பு’ என்பது சாம்பல் நிற மென்யுத்த சாட்சியமே.

மேற்சொன்னவைகளில் ஆகப்பிந்தியவோர் யுத்த சாட்சியமாக ஆறாவடு வந்திருக்கிறது.முதலில் கதைச் சுருக்கத்தைப் பார்க்கலாம். எத்தகைய அரசியல் விளக்கமுமற்ற ஓர் அப்பாவிக் கிராமத்து இளைஞன். ஆசைஆசையாக சோலாப்புரிச் செருப்புகளை வாங்குகிறான். அதை அந்த ஊரில் இருக்கும் நன்கு தெரிந்த ஒரு திருடன் திருடிவிடுகிறான். திருடனைக் கதாநாயகனும் நண்பர்களும் பிடித்துக் கொண்டு வந்து விசாரிக்கிறார்கள்.ஒரு கண்ணாடிப் போத்தலை உடைத்து அவனது வயிற்றில் குத்துவது போல வெருட்டுகிறார்கள். ஆனால் ஐ.பி.கே.எப்.புடன் சேர்ந்தியங்கும் திருடனோ இவர்களைப் புலிகள் என்று ஐ.பி.கே.எப்பிடம் முறைப்பாடு செய்துவிடுகிறான். ஐ.பி.கே.எப் இவர்களைப் பிடிக்கின்றது.பயங்கரமான சித்திரவதைகளின் பின் ஐ.பி.கே.எப்புடன் சேர்ந்தியங்கும் தமிழ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.அந்த அமைப்பு சுடலைக்கு அழைத்துச் சென்று மேல்வெடி வைத்து கொல்லப்போவதாக மிரட்டுகிறது. உயிர்வேண்டுமென்றால் தங்களுடன் இணையவேண்டுமென்று நிபந்தனை போடுகிறார்கள்.தப்பிப்பிழைப்பதற்காக அவர்களோடு இணைந்து இவர்கள் ரி.என்.ஏ (தமிழ் தேசிய இராணுவம்) படையாட்களாக மாறுகிறார்கள். இவர்களில் ஒருவன் விடுமுறையில் வீட்டுக்குப் போய் குழந்தையுடன் விளையாடிக்கொண்டு நிற்கும்போது புலிகளால் கொல்லப்படுகிறான். ஏனையவர்கள் ஐ.பி.கே.எப் வெளியேறிய பின் புலிகளால் பிடிக்கப்படுகிறார்கள். புலிகளும் உயிருக்கு பேரம் பேசுகிறார்கள்.தங்களோடு இணைந்தால் உயிர் பிழைக்கலாம் என்று கூறுகிறார்கள். எனவே கதாநாயகன் புலியாகிறான். சண்டைகளுக்கு போகிறான்.ஒரு சண்டையில் காலை இழக்கிறான்.பிறகு இன்னொரு சமாதானம் வருகின்றது.காலிழந்த போராளி அரசியல்துறையில் இணைக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படுகின்றான். அங்கே ஒரு காதல் வருகின்றது.மாற்று இயக்கத்தோடு ஒரு மோதலும் வருகிறது. யுத்தநிறுத்த விதிகளை மீறியதற்காக வன்னிக்கு மீள அழைக்கப்படுகிறான்.இது காரணமாகவும், காதல் காரணமாகவும் இயக்கத்தை விட்டு வெளியேறுகிறான்.இத்தாலிக்கு போவதற்காக நீர்கொழும்பில் இருந்து படகேறுகிறான்.படகில் சிங்களவர்களும் ஏறுகிறார்கள். ஆனால் படகு இத்தாலியை சென்றடையவில்லை.நடுக்கடலில் அலைகளுக்கு இரையாகின்றது.

இதுதான் கதை. இங்கே ஒரு விடயம் துலக்கமாக வெளிவருகின்றது. அதாவது எல்லோருமே பிறக்கும் போது போராளிகளாகப் பிறப்பதில்லை. சந்தர்ப்ப விபத்துக்களினாலும் தப்பிப் பிழைப்பதற்காகவும், அற்ப காரணங்களுக்காகவும் போராளிகளாக ஆனவர்களும் உண்டு. அற்ப காரணங்களுக்காகப் போராட்டத்தில் இணைந்து அற்புதமான தியாகங்களைச் செய்த பலரை நான்அறிவேன். புதுயுகம் பிறக்கிறது நாவலிலும் அத்தகைய பாத்திரங்கள் உண்டு.சயந்தனின் கதாநாயகனும் அப்படி ஒருவன் தான்.ஐ.பி.கே.எப் காலத்தில் கொல்லப்பட்டிருந்தால் அவன் ‘ துரோகியாக’ இறந்திருப்பான். புலிகளோடு இருந்த போது கொல்லப்பட்டிருந்தால் ‘மாவீரனாக’ இறந்திருப்பான். ஆனால் முன்னாள் போராளியாக கடலில் இறந்தபோது அவனுக்கு ‘டைட்டில்’ எதுவும் இருக்கவில்லை. ஆயின் அவன் யார்? தப்பிப்பிழைப்பதற்காகவே அவன் ஆயுதமேந்த நேரிடுகிறது. வேறெந்தப் புனிதமான காரணங்களுக்காகவும் அல்ல.தப்ப முயன்று தப்ப முயன்று ஒரு அமைப்புக்குள் இருந்து இன்னொரு அமைப்புக்குள் போய் முடிவில் எல்லாவற்றிடம் இருந்தும் தப்ப முயன்று பேரியற்கையிடம் தோற்றுப் போய்விடுகிறான்.

அதாவது பாதிக்கப்பட்டவனே தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறான்.காயப்பட்டவனே தொடர்ந்தும் காயப்படுகிறான்.காயங்களின் மீதே காயங்கள் ஏற்படுகின்றன. ஆறாவடு என்பதே ஒரு மாறாக்காயம் தான்.உளவளத்துணை நிபுணர்கள் ஆறாவடு என்பதை ‘ட்ரோமா’ என்கிறார்கள். ஆறாவடு ஒரு ட்ரோமா(மனவடு) இலக்கியம் தான். இது ஒரு சமூகத்தின் கூட்டுக்காயத்தை எழுதிச்செல்கிறது. பா.அகிலனின் சரமகவிகளின் போதும் நான் இதைச் சுட்டிக்காட்டி இருந்தேன்.சனாதனனின் தோம்புவும் அதுதான்.கருணாகரன் எழுதியது, கர்ணன் எழுதியது, ஷோபாசக்தி எழுதியது , சாத்திரி எழுதியது ஐயர் எழுதியது, குளோபல் தமிழ் நியூஸில் குருபரன் எழுதுவது , தினக்கதிர் இணையத்தளத்தில் துரைரத்தினம் எழுதுவது எல்லாமே போருக்குப் பின்னான காயங்களை திறக்கும் அல்லது காயங்களை வாசிக்கும் முயற்சிகள் தான்.இது காயங்களை வாசிக்கும் காலம். காயங்களைத் திறந்து திறந்து, காயங்களை எழுதி எழுதி, காயங்களை வாசித்து, காயங்களைக் கடக்க வேண்டிய காலம்.

டச் நாவலாசிரியரான ஆர்ணன் கிறண்பேர்க் என்பவர் ட்ரோமா இலக்கியம் பற்றிக் கூறும் போதுஒரு விடயத்தை தெளிவாகக் கூறுகிறார்.

“மனவடுவை மனவடுவாக அணுகாமல்அதை ஒரு பாடுபொருள் ஆக்கும் போது,அது எமக்கு நெருக்கமாகின்றது” என்று. அதாவது ஆறாக்காயமாகப் பார்ப்பதை விடவும் ஒருபடைப்பின் பாடுபொருளாக மாற்றும் போது அது தரும் அச்சம், வலி,அருவருப்பு என்பவை குறையத்தொடங்கும்.சயந்தனின் ஆறாவடுவும் ஒரு சமூகத்தின் கூட்டுக்காயத்தைப் பாடுபொருளாக்குகிறது. மட்டுமல்ல நாவலின் இறுதிப்பகுதியில் அந்தக்கூட்டுக்காயத்தை உலகளாவிய கூட்டுக்காயமாக மாற்றும் முயற்சியில் வெற்றியும் பெறுகின்றது.நாவலின் கடைசிப்பகுதியில் உடைந்த படகின் சிதிலங்களும் , பிணங்களும் எரித்திரியக்கடற்கரையில் ஒதுங்குகின்றன. அங்கே ஒரு எரித்திரியக்கிழவன் .முன்பு எரித்திரிய விடுதலை இயக்கத்தில் இருந்தவன். போரில் ஒரு காலை இழந்தவன். பொய்க்கால் வாங்க காசில்லாதவன்.கடலில் மிதந்து வரும் பொருட்களிடை சூரியஒளியில் மினுங்கும் ஒரு பொருளைக்காண்கிறான்.அதுதான் சயந்தனின் கதாநாயகனுடைய பைபர் கிளாஸாலான ஒரு பொய்க்கால். அந்தக்கிழவன் நொண்டி நொண்டி நடந்து போய், கரையொதுங்கும் அந்தப்பொய்க்காலை ஆசைஆசையாக அள்ளி எடுக்கிறான். ஒரு முன்னாள் எரித்திரியப் போராளியின் துண்டிக்கப்பட்ட காலுக்கு ஒரு முன்னாள் தமிழ்ப்போராளியின் பொய்க்கால் பொருந்தி வருகிறது.

சயந்தன் ஈழத் தமிழ்க் கூட்டுக்காயத்தை எரித்திரியக் கூட்டுக்காயத்துடன் பொருத்தும் இடத்தில் நாவல் ஒரு சாம்பல் நிற இலக்கியமாக வெற்றி பெறுகின்றது. சாம்பல் பரப்பில் நிற்பதனால் தான் சயந்தனுக்கு இது சாத்தியமாகின்றது.

அண்ணைக்கு எல்லாம் தெரியும் என்பது ஒரு சமயத்தில் மதிப்பாகவும் இன்னொரு சமயத்தில் எள்ளலாகவும் வருவதென்பது சாம்பற்தனம் தான்.படித்த மத்தியதர வர்க்கத்தின் குரலாக வரும் நேரு ஐயா என்கிற பாத்திரமும் சாம்பல் நிறம் தான்.சாம்பல் பரப்பினுள் நின்றால் தான் நாங்களே எங்களை சுயவிசாரணை செய்யலாம்.இறந்தகாலத்தை ‘போஸ்ட்மோர்ட்டம்; செய்யலாம்.எங்கள் பலம் எது, பலவீனம் எது என்பதைக் கண்டுபிடிக்கலாம். தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக அடித்தளத்தைப் பலப்படுத்தலாம்.

யுத்த சாட்சியங்களை நிராகரிக்கப்படமுடியாத அளவுக்கு முழுமையானவைகளாகவும், அனைத்துலகப் பெறுமானம் மிக்கவையாகவும் மாற்றலாம்.

நான் சாம்பல் என்று கூறுவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் அல்ல. எனது தனிப்பட்ட கண்டுபிடிப்புமல்ல. அது ஒரு வாழும் யதார்த்தம். இன்ரர்நெற் உலகங்களை திறக்கிறது. நிதி மூலதனம் எல்லைகளைக் கரைக்கிறது. பூகோளக்கிராமம் எனப்படுவது ஒரு சாம்பல் நிறக்கிராமம் தான். எதுவும் அதன் ஓரத்தில் மற்றதோடு கரைந்தே காணப்படும். ஒன்று அதன் ஓரத்தில் மற்றதோடு கரையாத ஓர் உலகம் இனிக் கிடையாது.அதுதான் சாம்பல். அதாவது தன் மையத்தை விட்டுக் கொடுக்காமல் ஓரங்களில் மற்றவர்களோடு கரைந்து இணைந்து இருப்பது.இது ஒரு தொழினுட்ப யதார்த்தம்.இது ஒரு பொருளாதார யதார்த்தம்.இது ஒரு சமூகவியல் யதார்த்தம்.இது ஓர் உளவியல் யதார்த்தம்.இது ஓர் இலக்கிய யதார்த்தம்.இது ஓர் அரசியல் யதார்த்தம்.

இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களை போதனை செய்யக்கூறி அனுப்பிய போது, கூறியதைப்போன்று “ இதயத்தில் புறாக்களைப்போல் கபடமில்லாமலும் செயல்களில் பாம்புகளைப்போல் நெளிவுசுழிவுகளோடும்” ஈழத்தமிழர்கள் செயற்படவேண்டிய காலகட்டம் இது.

நிலாந்தன்.

யாழ்ப்பாணம்.03/03/2012.

நன்றி த.பிரபாகரன்

http://globaltamilne...fm1JsY.facebook

Edited by வீணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.