All Activity
- Past hour
-
சரணாகதி
சரணாகதி ராமராஜன் மாணிக்கவேல் பார்த்தன் அதிகமாகத் திரௌபதியிடம் பேசியதில்லை. அவளும் அப்படித்தான். அவனிடம் அவள் அதிகமாகப் பேசியது இல்லையே தவிர, மற்றவர்களிடம் பேசாமல் இருந்தது இல்லை. அவள் சக்கரவர்த்தினி அல்லவா? கல்லும் முள்ளும் மண்டிய வெறும் கட்டாந்தரையில், அத்தனை பெரிய அதிசய அரண்மனை கட்ட வேண்டும் என்றால், எத்தனை எத்தனை கட்டளைகள் பிறப்பித்திருப்பாள்! இந்திரப்பிரஸ்தம் கண்ட ஸ்ரீசக்கரவர்த்தினி! எண்ணங்கள் இல்லாதவனுக்கு ஆசைகள் இல்லை. ஆசைகள் இல்லாதவனுக்குக் கனவுகள் இல்லை. கனவுகள் இல்லாதவனுக்கு இலக்குகள் இல்லை. இலக்குகள் இல்லாதவனுக்குச் செயல்கள் இல்லை. செயல்கள் இல்லாதவனுக்குக் கட்டளைகள் இல்லை. கட்டளைகள் இல்லாதவன் தலைவன் இல்லை. தலைவன் ஆக முடியாதவன் எப்படி அரசனாவது? அரசன் ஆகாதவன் எப்படிச் சக்கரவர்த்தியாவது? அவள் சக்கரவர்த்தினி அல்லவா? நிறையப் பேசுவாள். நிறைவாகப் பேசுவாள். ஆனாலும் அவள் பார்த்தனிடம் அதிகம் பேசியதில்லை. நெஞ்சகலில் தீபம் ஏற்றும் அவளின் அகல்விழிச் சிறு அசைவில், யுகங்களைத் தாண்டும் நீண்ட கதையாடல்கள் நடந்த நினைவுகள் நெஞ்சில் பூக்கும். அதனால் அவளிடம் பேச வேண்டும் என்ற நினைப்பே அவனுக்கு எழுந்ததில்லை. ஆனால் அவளிடம் இப்போது பேசத் தவிக்கிறான். அஸ்தினபுரியிலிருந்து கானகம் வந்த நாள் முதல், அவளிடம் தனியே பேச வேண்டும் என்ற தவிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. அந்தத் தவிப்பால் விலகி விலகி நிற்கிறான். அங்கு அந்தக் கொடும் செயல் நடக்கும்போது வெறும் தூசாக இருந்துவிட்டு, இங்கு எப்படி அவளிடம் பேசுவது? அவன் “கிருஷ்ணை” என்று தன்னை அழைக்கும்போதெல்லாம், கண்ணனையே அழைக்கிறான் என்று அறிந்தாள். அவள் கண்ணனின் பெண்வடிவம் என்ற மயக்கம் அவனுக்கு உண்டு. தனக்குள் கண்ணனே எழுகிறான் என்பதையும் கண்டாள். அன்பு, பிரியம், பக்தி கலந்து அவன் “கிருஷ்ணை” என்று அழைக்கும்போது, அவள் உணர்வு நரம்புகள் மீட்டப்படும். அவள் மனக்கொடியில் “கிருஷ்ணை” என்ற அவன் வாய்ச் சொல் மலர்ந்து மலர்ந்து தேன்வடிப்பதை, ரகசிய மணமாய் நுகர்வாள். ஆனாலும் அவள் சக்கரவர்த்தினி அல்லவா? அவளால் காதல் படிக்கட்டில் இறங்க முடியாது. அவளால் இறங்க முடியாது என்பதால், இவனால் ஏறவும் முடியாது. அதனால்தான் அவளிடத்தில் அவன் அதிகம் பேசியதில்லை. ஆனால் இப்போது அவளிடம் பேச வேண்டும் என்று தவிக்கிறான். பார்த்தன் “திரௌபதி” என்று அழைப்பதைத் தவிர்ப்பான். தவறி “திரௌபதி” என்று அழைத்துவிட்டால், அவன் உடலும், கைகளும், காற்றும் அறியாமல் நடுங்குவதை அவள் மட்டுமே அறிந்திருந்தாள். இப்போதெல்லாம் அவன் “கிருஷ்ணை” என்று தன்னை அழைத்த பின்புதான் திரும்புகிறாள். “திரௌபதி” என்ற அந்தப் பெயர், அவள் தந்தை துருபதன் நினைவை எழ வைக்கிறது. ஞாபகத்தீ எரிய வைக்கிறது. குருவுக்காக என்றாலும், யாருக்காக என்றாலும், மனிதனை மனிதன் சிறுமைப்படுத்தும் கணம் சுகமாக இருக்கலாம். அந்தக் கணத்தில் வெற்றி பெற்றதாய்க் களிப்புறலாம். அந்தக் கணத்தைத் தாண்டிவிட்டால், அந்தக் கணம் இறக்கி வைக்க முடியாத, அணைக்க முடியாத கனமான கனல் கல் என்றாகிவிடுகிறது. அது அழுத்திச் சுட்டுக்கொண்டே இருக்கும். யுகங்களைக் கடந்தும் கூட அது அணைவதே இல்லை. கணத்தில் செய்த பிழைகளை யுகங்கள்வரை ஓடியும், உழைத்தும் திருத்திவிட முடியுமா? யுதிஷ்டிரன் திரௌபதியைச் சூதில் வைத்த கணம் எத்தனை சிறுபொழுது? இமைக்கணம். அதன் வலி யுகங்களின் வலி; யுகமாந்தர்களின் வலி. அதைத் திருத்திவிட முடியுமா? கணங்களைக் காத்த மனிதன் யுகங்களைக் காத்தவன் ஆகிறான். மகிழ மரத்தில் சாய்ந்து நின்று, நெஞ்சுக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு, வானத்தின் நீலத்தையும், மேகங்களின் சித்திரத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பார்த்தன், ஓடை ஓரத்தில் அவிழ்ந்த கூந்தலோடு அமர்ந்திருந்த திரௌபதியைப் பார்த்ததும் திடுக்கிட்டான். காண்டீபம் ஏந்தும் கைகள் நடுங்கின. கை நடுக்கத்தில், சிறு நரம்புகள் பாம்புகள் போலப் புறங்கையில் அசைந்தன. பதறும் கால்களுக்குக் கீழே பூமி பிளந்துவிடாதா? எப்படி அவளிடம் பேசுவேன்? திரௌபதி ஓடையின் கரையில் கிடந்த சந்தன நிற வட்டக்கல்லின்மேல், பெரிய வாழைப்பூவைக் கொய்து குந்த வைத்ததுபோலக் குந்தி, பீமன் தேடிக் கொண்டுவந்த புல் அரிசியைச் சமைப்பதற்காகக் கழுவிக்கொண்டிருந்தாள். வண்டிச் சக்கரம் அளவுக்குப் பெரியதாக இருந்த அந்தக் கல்லைப் பீமன் வெகு தூரத்திலிருந்து தன்னந்தனியாய்த் தூக்கிவந்து அவளுக்காகப் போட்டுவைத்தான். ராஜ நாகங்கள் மலையில் புரள்வதுபோல, அவிழ்ந்த கூந்தல் கற்றைகள் காற்றில் அவள் முதுகிலும், கல்லிலும் புரண்டன. அவளுக்கு எத்தனை நீளமான கூந்தல்! அவள் கொண்டை போடும்போது, தலையின்மேல் ஒரு தலை இருப்பதுபோல இருக்கும். பொன்னும், மணியும், முத்தும், ரத்தினமும், இந்திர நீலமும், மரகதமும், மாணிக்கமும், பூங்காடும் நிறைந்த அவள் கொண்டை, வண்ண மீன் விளையாடும் கடலை உருட்டிக் கொண்டையாக வைத்ததுபோல் குளிர்ந்து ஜொலிக்கும். ஊர்ப் பெண்கள் எல்லாம் அவள் போடும் கொண்டையை நினைத்து, கனவிலும் பெருமூச்சு விடுவார்கள். கூடியிருந்தால் அலர் பேசுவார்கள். தனித்திருந்தால் உள்ளுக்குள் ரகசியமாய்ப் புகழ்வார்கள். சில நேரம் புழுங்குவார்கள், சில நேரம் அழுவார்கள், சில நேரம் சிரிப்பார்கள். அந்தக் கூந்தல் அவர்களைப் பித்துக்கொள்ளச் செய்தது. சிக்கில்லா அவள் கூந்தலில் சிக்கிக்கொள்ளாத மனம் உண்டா? ஆடவர்களைப்பற்றித் தனியாக என்னச் சொல்ல? கொடுத்தே பழக்கப்பட்ட கர்ணன்கூட அவளிடம் எடுக்க நினைத்தான் என்றால்… அந்தக் கூந்தலில் பார்த்தன் குழந்தையாகத் தவழ்ந்த காலம் வரம். யாருடைய சாபம், அதே கூந்தல் துச்சாதனன் கையில் அவளை இழுத்து வரும் கயிறானது? காலம் எத்தனை கொடியது! பதிமூன்று ஆண்டுகள் கழித்தேனும் அவள் கொண்டையிடுவாளா? காலமே அறியும். உச்சம் பெரும் எல்லாமும் நீச்சம் பெறும் என்றால் உச்சம் எதற்கு? அதில் என்ன பெருமை? சிறுமையைக் கடந்துதான் பெருமை, பெருமைப்பட வேண்டும் போலும். பார்த்தன் ஆழமாக மூச்சை இழுத்து, நெஞ்சுக்குள் நிறுத்திப் பையப்பைய விட்டான். கண்ணின் இமைச் சுவர்களில் நீர் திரண்டு நின்றது. வெண்விழி நரம்புகள் சிவப்பேறின. கண்களை மூடித் திறந்தவன், தலையை மெல்ல ஆட்டிக்கொண்டு மீண்டும் திரௌபதியை நோக்கினான். விழியில் இருந்து விழுந்த கண்ணீர்த் துளி, அவன் கால் பெருவிரல் நகத்தில் பட்டுத் தெறித்தது. வெந்நீர்த் துளி விழுந்ததுபோல் காலை உதறினான். அவள் உடுத்திருந்த மரவுரிச் சேலை, ஓடையில் இருந்து எழுந்த குளிர்ந்த காற்றில் அசையும்போது, அக்கினிக் குண்டத்தில் மலர்ந்த அனல் மலர்போலத் தெரிந்தாள். கரையில் இருந்த கல்வாழைப் பூக்கள் காற்றில் அசைந்து அசைந்து அவள் தலையைத் தொட்டன. மேகத்தில் நட்சத்திரங்கள் பூப்பதுபோல இருந்தது. வாயில் பசும்புற்கள் வழிய ஓடிவந்து திகைத்து, அங்கும் இங்கும் பவழம் போன்ற கண்களால் குழந்தைபோலப் பார்த்து, அவளை முகர்ந்துவிட்டுப் போகும் வெண்முயல்கள்! தண்ணீர் குடித்துவிட்டுப் போகும் மான்கள் அவள் முகம் நோக்கி முகம் நீட்டும்! ஆண் மயில்களின் சேட்டைக்கு அஞ்சுவதுபோல, அவள் அருகில் வந்து மேயும் பெண்மயில்கள்! பழமரங்களில் கொஞ்சும் கிளிகள் கொத்தி எடுத்து வந்த பழங்களை அவள் காலடியில் போட்டுவிட்டு, அவள் தோள்மீது அமர்ந்து கொஞ்சின. சொந்த வீட்டில் விளையாடும் குழந்தைகள் போல, இலக்கின்றி ஓடையில் நீந்தின மீன்கள்! கழுவிக்கொண்டிருந்த அரிசியில் கைப்பிடி அள்ளி ஓடையில் எறிந்தாள். ஒரு பிடி அள்ளி மயிலுக்கும், கிளிக்கும், அணிலுக்கும் கரையில் தூவினாள். மீன்கள் எல்லாம் அந்த அரிசி விழுந்த இடத்தை நோக்கிக் குவிந்தன. ஓடையில் மீன்கொத்துகள் மலர்ந்தன. திரௌபதி இதழ்கள் மெல்ல விரிய, மீண்டும் ஒரு பிடி அள்ளிப் போட்டாள். மீன்விழியாள் மீனோடு விளையாடினாள். அன்னை வயதில் ஒரு குழந்தை அங்கு களித்துக்கொண்டிருந்தாள். பார்த்தன் குனிந்து காலடியிலிருந்த மகிழம்பூ ஒன்றை எடுத்து, அவளுக்குள் இருந்து வெளிப்படும் குழந்தையை விரட்ட, அவள்மேல் வீசப் போனான். ஏதோ நினைத்து நிறுத்திப் பூவை முகர்ந்தபடி, மரத்தில் வலது காலை ஊன்றிச் சாய்ந்து நின்று, அவளை மீண்டும் பார்த்தான். நரம்புகள் ஓடிய அவன் கால், மரத்தின் கிளைபோலத் தோன்றியது. மகிழ மரத்தில் ஏறிக்கொண்டிருந்த சித்தெறும்புகள், அவன் பாதத்தின் சிறு வரிகளை நோக்குவதுபோல நின்று, தலை அசைத்து முகர்ந்தன. கூச்சத்தில் பார்த்தன் பாதத்தைச் சற்று அசைத்தான். சித்தெறும்புகள் வளைந்து வரிசையாக மரத்தில் ஏறின. கிருஷ்ணை, பார்க்கப் பார்க்கப் புதிதாகத் தோன்றிக்கொண்டே இருந்தாள். எங்குதான் இந்த அழகுப் பெண்களுக்குள் மறைந்திருக்கிறது? பார்க்கும் தோறும் புதையல்போல வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. “இத்தனை நாளாய் இவளை நாம் பார்க்கவே இல்லையோ?” என்ற ஐயம் அவனுக்குள் எழுந்தது. தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்துக்கொண்டான். யுதிஷ்டிரரும் பீமனும் அவர்கள் செயலில் மூழ்கியிருந்தார்கள். திரௌபதி மீண்டும் கைப்பிடி அரிசியை அள்ளி மீனுக்குப் போட்டாள். ஒரு பெரிய மீன் துள்ளி அவள் காலுக்கடியில் விழுந்து அவள் பாதத்தை முத்தமிடுவதுபோல் வாயைக் குவித்துத் திறந்து துள்ளியது. ஒரு துள்ளலில் அதன் வால் அவள் காலைத் தீண்டியது, கூச்சத்தில் சிலிர்த்து மகிழ்ச்சியில் வாய்விட்டுச் சிரித்து, கல்லில் உட்கார்ந்திருப்பதை மறந்து, அரிசியோடு கீழே சாய்ந்தாள். பார்த்தன் அங்கு எப்படிப் போனான் என்று உணரும்முன், அவளை ஒரு கையிலும் அரிசியை ஒரு கையிலும் பற்றித் தூக்கி ஒரு சுற்றுச் சுற்றிச் சமதளத்தில் விட்டான். மகரந்தம் நிரம்பிய மரகதத் தாம்பூலத்தில் நிற்பதுபோல, மஞ்சள் பூ பூத்த புல்தரையில் கால்களை அழுத்தி நின்றாள். மஞ்சள் பூப் பூத்த புற்கள் அவள் பாதத்தை மூடிக்கொண்டன. பார்த்தன் தலையிலிருந்து உதிர்ந்திருந்த மகிழம் பூக்கள் அவள் நெஞ்சில் விழுந்து, அவள் தனங்கள் தாங்க, மணத்தது. மகிழம்பூ வாசத்தில் அவள் மூச்சை சற்று ஆழமாக இழுத்தாள். பார்த்தன் கண்களைப் பார்த்தவள், ஆடையைச் சரி செய்வதுபோல் நகர்ந்துகொண்டாள். பார்த்தன் தன் விரல்களில் அனல் கங்கு ஒன்றைத் தொட்ட வலியை உணர்ந்தான். ”கிருஷ்ணை” என்று அழைக்கப் போனவன் நா மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. வியர்த்தது. கருப்பு வெள்ளை பளிங்கினால் செய்த மேகக் கோட்டையில் பதித்த இரத்தினத் தாம்பூலம் போன்ற மாலைச் சூரியன். வெண் பொன் வைர மணல் உருளும் சலசலக்கும் குளிர்ந்த நீர் ஓடை. அதன் அலை விசிறியிலிருந்து எழுந்து வரும் தென்றல். பூ, காய், கனி வாசம். ஓடையில் விளையாடும் மீன்கள். பூமரத்தில் விளையாடும் அன்றில்கள். கானம் பாடும் குயில்கள். வெண்பூக்கள் சூடிய நாணல் புற்களுக்கு இடையில் தவமிருக்கும் கொக்குகள். ஓடையின் உயரத்தில் ஓடைக்கு விசுறுவதுபோலச் சிறகடிக்கும் மீன்கொத்திகள். அக்கரையில் மேயும் பசுக்கூட்டங்கள். அணைத்து அமர்ந்திருக்கும் வானரங்கள். புல்லுக்கும் வலிக்காமல் நடந்து போகும் யானைகள். இந்த இடத்தில் மனைவியைத் தொடும்போது வியர்க்குமா? பார்த்தன் மனம் சிந்தனை அறுபட்டு நின்று போனது. தூரத்தில் நீலக்குயில் ஒன்று கூவ, எதிர் குரல் எழுந்ததும், பலாமரத்தில் இருந்த குயில் வெளிப்பட்டது. தூரத்தில் பீமன் பெரிய பெரிய பாறைகளைத் தூக்கிக் கொண்டு வந்து, விழுது விட்ட ஆலமரத்தடியைச் சுற்றிப்போட்டு உட்காரும் மேடை செய்தான். யுதிஷ்டிரர் இங்கு இல்லாததுபோல, வடக்கே இருந்த குளக்கரையில் அரசமரத்தடியில் குத்துக்காலிட்டு குனிந்து அமர்ந்திருந்தார். தோளில் கிடந்த அங்கவஸ்திரம் பூமிக்குப் போர்த்திவிட்டதுபோலக் கொஞ்சம் தோளில் கிடந்தது. இப்பொழுதெல்லாம் அவர் யாரையும் நிமிர்ந்து பார்ப்பதில்லை. நடுங்கும் கைகளை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதால் கைநீட்டிக் கூட யாரிடமும் பதில் விடுப்பதில்லை. ஏதோ ஒரு விடையைத் தேடிக் கொண்டே இருந்தார். நெற்றியில் அடிக்கடி கோடுகள் தோன்றி மறைந்தன. பீமன் அவர் அருகில் போகாமல் பார்த்தன் பார்த்துக் கொண்டான். திரௌபதியே பீமன் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள். நடுங்கும் கைகளால் முன்னால் கிடந்த வெண்மணலைச் சமன் செய்து, அரசச் சருகொன்றால் எதையோ எழுதுவதும் அழிப்பதுமாக இருந்தார். வாழ்வின் சம்பவங்கள் எழுதி அழிக்கக் கூடியவைதானா? திரௌபதியிடமிருந்து நகர்ந்து போக வழி தேடிய பார்த்தன், கல்லின் மீது கிடந்து துடித்த பெரிய மீனைச் சமையலுக்காகப் பாய்ந்து போய்த் தூக்கினான். ”இனியவரே, அது என் பாதத்தைத் தொட்டுவிட்டது. அது வாழட்டும், அதன் குடி பெருகட்டும். நீரில் விட்டுவிடுங்கள்” என்றாள். பார்த்தன் சிலையாகி விட்டான். கண்கள் இமைக்க மறந்துவிட்டன. ஆடைக்குள் தொடைத் தசைகள் ஆடின. நெஞ்சுக்குள் இருதயம் மலரும் ஓசை கேட்டான். வலது கையில் தலைகீழாய் தொங்கிய மீன் தனது விடுதலைக்காகப் பார்த்தன் கையில் துடித்துக் கொண்டு இருந்தது. பார்த்தன் இன்னும் சிலையாகத்தான் நின்றான். ஆனால், அவன் நெஞ்சுக் கூட்டுக்குள் இரு கரங்கள் குவிந்து மொட்டாகின. ”இனியவரே!” என்றாள் முன்னினும் இனிமையாக. செவி குளிர்ந்து, காது மடலில் மென்சூடு பரவிக், காது முடிகள் கூச்செறிந்தது. சிற்பத்தில் பூத்த புன்னகை. சொட்டிவிடுமோ என்பதுபோல இதழ்கனியில் தேன் ஈர மினுமினுப்பு. நோக்கி உளம் உருகினான். இந்திரப்பிரதஸ்தத்தில் வாழும் வரை இவளை ஆசையும் அகங்காரமும் கொண்ட பேரரசியாக மட்டுமே பார்த்து, மனம் விலகி இருந்ததை நினைத்து வெட்கினான். மனைவியரைக் கணவர்கள் புரிந்துகொள்வதே இல்லையோ? மனைவியர்கள் கணவர்கள் புரிந்துகொள்ளும் வட்டத்திற்கு அப்பாலுக்கு அப்பால் நின்று ஆடுகிறார்களோ? எத்தனை மூச்சடக்கிப் பாடிப்போனாலும் தொட முடிவதில்லை. இவள் யார்? அருகில் கிடந்த கருங்கல்லில் சிறு குழந்தையைப்போல துள்ளி ஏறி நின்று ”இனியவரே!” என்றாள் கர்ஜனையாக. அட்சயப் பாத்திரம் போலக் கையில் அரிசிப்பானை. குரலின் கடுமையில் கண்கள் விரிந்தன. அகன்ற கண்களும் அவிழ்ந்த கூந்தலும் மகிடன் தலையில் கொற்றவை எனக் காட்சிக் கொடுத்தாள். உடல் அதிர்ந்து, அகத்தில் பனித்துளி சொட்டிடக் குளிர்ந்தான். எண்ணங்கள் ஒழிந்தவனாய், யாரோ தன்னை இயக்குவதுபோலத் துரிதமாய் சென்று மீனை ஓடையில் விட்டான். மீன் ஆற்றில் நீந்தும் போதுதான் தனக்குள் தான் இருப்பதை உணர்ந்தான். திரௌபதி நீந்தும் மீனைப் பார்த்தாள். அவள் விழிகளும் நீந்தி மகிழ்ந்தன. ”கிருஷ்ணை” பார்த்தன் வாயில் இருந்து வார்த்தை வெளிப்படவில்லை. ஆனாலும் திரௌபதிக்குக் கேட்டது. திரௌபதி, கானக வாழ்க்கையை எளிமையிலும் எளிமையாக, ஏதிலியாகப் பன்னிரண்டு ஆண்டுகள் எப்படி கடத்துவது என்று எண்ணும் அறியாச் சிறுமிபோல நோக்கினாள். ”என்ன? இனியவரே” கண்களால் கேட்டாள். செவிவரை நீண்ட விழியும், கருங்குருவியின் இறகு இதழ் போன்ற இமை முடியும் அவள் கண்களை விசாலமாக மலரச் செய்தது. அவள் முகத்தைக் குழந்தையாக வடித்து வைத்தது. ‘’அஸ்தினாபுரத்தில் இத்தனை நடந்தபிறகும், இவளால் என்னை எப்படி இனியவரே என்று அழைக்க முடிகிறது. அதில் கேலி இல்லை. ஐவர்மீதும் இன்னும் அதிகப் பரிவிருக்கிறது. இவளால் மட்டும்தான் அது முடியுமோ’’ என்று நினைத்தபடியே ”எங்கு நின்றாலும் கருவறைப் பீடத்தில் நின்று அருளும் அன்னை எனவே தெரிகிறாய் தேவி” என்றான். திரௌபதி வாய்விட்டுச் சிரித்தாள். கானகம் முழுவதும் சிரிப்பொலி அலை அலையாய்ப் பரவியது. அவள் பின்னால் ஓடிக்கொண்டிருந்த ஓடையில், பெரும் காடு நகர்ந்து வந்ததுபோல் புழுதிப் பறக்க வந்து நீர் அருந்திக் கொண்டிருந்த எருமைக் கூட்டத்தின் தலைவன், நீர் வழியும் வாயோடு அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, வயிறு அதிர உறுமி, தலை தாழ்த்தியது. அவள் பாதங்களுக்கு இருபுறமும் வளைந்த வாள் போல அதன் கொம்பு மட்டும் காட்சி கொடுத்தது. எருமைகளின் வாசம் பிடித்து வந்த சிங்கக் கூட்டத்தின் முதல்வன் கோரைப்புல் புதரிலிருந்து ஓசை இன்றித் தலை நீட்டியது. அருகில் அடி பெருத்து நின்ற செண்பக மரத்திலிருந்து உதிர்ந்த செண்பகப் பூவில் ஒன்று காற்றில் மிதந்து வந்து, இதுதான் இடம் என்பதுபோல அவள் சென்னியில் விழுந்து, பாதத்தைத் தொட்டு, வான்பார்த்து மலர்ந்து அமைந்தது. பீடம் அமைத்துவிட்டு, மரக்கட்டைகளைப் பிளந்துகொண்டிருந்த பீமன், கோடரியைத் தரையில் ஊன்றித் திரும்பிப் பார்த்துக் கண்களைச் சுருக்கிக் கேள்வி எழப் புன்னகைத்தான். யுதிஷ்டிரன் திரும்பி முதல்முதலில் நிமிர்ந்து கூர்ந்து பார்த்தான். அவன் கைகள் நடுங்கவில்லை. நெஞ்சம் நிமிர்ந்தது. மீண்டும் பிறந்ததுபோலப் புன்னகைத்தான். குத்துக்காலில் உட்கார்ந்திருந்தவன் அங்கவஸ்திரத்தை இழுத்துத் தரையில் படாமல் தோளில் போட்டுக் கொண்டு, தரையில் அழுந்த உட்கார்ந்தான். உடம்பிலிருந்து பெரிய எடை இறங்கியதுபோல உடலை அசைத்தான். ”எதுவும் தூரத்தில் இல்லை, எல்லாம் அருகில்தான் இருக்கிறது” என்று தரையில் கிறுக்கினான். காதலி முன் பேச்சு வராமல் தவிக்கும் காதலன்போலப் பார்த்தன் தலை குனிந்தான் தலை குனிந்தான். நீண்ட நாட்களுக்குப் பின் இதழில் மென்னகை பூத்தது. தன்னாலும் சிரிக்க முடியும் என்பதை நம்பினான். சில விஷயங்கள் எளியவைதான். அது எளியவை அல்ல என்பதை வாழ்க்கை உணர்த்துகிறது. ‘’விஜயரின் வில் பேசும் என்பது தெரியும். விஜயரும் பேசுவார். அதுவும் கவிதை பேசுவார் என்பது இன்றுதான் அறிந்தேன். இதற்காக நாம் கானகம் வரவேண்டியிருக்கிறது. விலை அதிகம்தான். ஆனாலும் அதுவும் நன்று. கண்ணனின் தோழருக்குக் கவிதை வரவில்லை என்றால்தான் ஆச்சரியம். ஒருவேளை கண்ணனின் தங்கையிடம் கற்றிருப்பார்.” என்று மீண்டும் சிரித்தாள். ஒரு சொல்லும் அவளிடம் கேலி இல்லை. ஆனால் பார்த்தனுக்கு வலித்தது. கண்ணனின் தங்கை என்றபோது அதில் கனல் இருந்தது. அவள் நெஞ்சம் ஏறி இறங்கி மூக்குச் சிவந்து மூச்சுச் சீறியது. விஜயன் என்ற பெயரை அவள் உச்சரித்ததும் காயத்தில் கொதி எண்ணெயை ஊற்றியதுபோல எரிந்தது. உலகில் யாரிடமும் தோற்காத காண்டீபம் ஒரு புல் என இருக்கும் காலமும் வரும் என்று அவன் எண்ணியது உண்டா? அவள் பார்க்காமல் இருக்க விழிகளைத் திருப்பிக் கொண்டான். அவளும் அவள் விழிகளைத் திருப்பிக் கொண்டாள். அங்கிருந்து நகர்ந்துவிடத் திரும்பினான் பார்த்தன். ‘இனியவரே’ என்ற அவள் குரலின் குழைவு அவனை நகரவிடவில்லை. திரும்பாமல் நிலம் நோக்கி நின்றான். திரௌபதியின் வாசம் அருகில். திரும்பியவன் அவள் இமைகளின் ஈரத்தைச் சுண்டுவிரலால் நீக்கினான். ”உயிர் போகிற வலி இருந்தாலும் யானைகள் அலறாது, துடிக்காது இனியவரே” என்றபடி அவள் தன் முந்தானையால் அவன் கண்களை ஒற்றினாள். ”நாம் வெறும் மனிதர்கள் மட்டும் தேவி” என்றபோது அவன் உதடுகள் கோணின. ”மனிதம் மட்டுமே வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும் இனியவரே!” என்றவள் விலகி நின்று ”என்னிடம் என்ன பேசவேண்டும், சில நாட்களாய் அவதிப்படுகிறீர்கள்” என்றாள். ‘எப்படி அறிந்தாள்?” அன்னையின் வடிவு. குழந்தையின் முகம். தித்திக்கும் சொற்கள். உடல் முழுவதும் பரவும் பரிவு. அள்ளி நெஞ்சோடு அணைத்துக் கொள்ளவேண்டும் என்ற தவிப்பு. கைகளை இறுக்கி மூடிக்கொண்டான். என்ன நடந்தால் என்ன? அன்பு, காமம், ஆசை, கோபம் எல்லாம் இடம் கிடைக்கும் போதெல்லாம் துளிர்த்துவிடுகிறது. அதன் விழைவு வேர்கள் அறுபடுவதே இல்லையோ? இமைக்கணத்தில் துளி என விழுந்து கடலாகித் தடம் தெரியாமல் ஆழ மூழ்கடித்து விடுகிறது. மீன் துள்ளி அவள் காலுக்கடியில் விழுந்தபோது அவள் கல்லில் இருந்து சாய்ந்தது தெரியாமல் அல்ல, நான் தாங்கிக் கொள்வேன் என்ற தைரியத்தில்தானா? பார்த்தன் கால்களை அழுந்த பூமியில் பதித்தான். இதழ்கள் மலர்ந்தன. பார்வை அகத்திற்குத் திரும்பியது. நெற்றிப்பொட்டில் மனம் குவிந்து நின்றது. தலைக்குமேல் வானம் விரிந்து விரிந்து போனது. தலைக்குள் ஒளி வட்டங்கள் மின்னின. சென்னியில் திருவடித் தாமரை மலர்ந்தது போன்ற சிலிர்ப்பு. ”கானகத்திற்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. நீங்கள் காண்டீபப் பயிற்சி செய்யவே இல்லை. நீங்கள் உங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள். பீமருக்குத் தனியாகப் பயிற்சி தேவை இல்லை. அவர் செய்யும் ஒவ்வொரு வேலையும் மல்லருக்கான பயிற்சிதான். பேரரசருக்கும் அப்படித்தான். சொல்வளர் கட்டுக்குள் புகுந்து சொற்கனிகள் உண்டு சொல்லாகவே மாறிவிடுவார். அவர் வேண்டும் என்றால் பகடை பழகலாம். இதை கோபத்தில் சொல்லவில்லை. அவர் உண்மையை தேடுபவர். தோல்வி பொய் என்று அவருக்குத் தெரியும். அவர் பொய்யைப் பொய்யாக்கிவிடுவார்.” இளையவர்கள் இருவரும் பரியும் பசுவும் மேய்க்கிறார்கள். அதுவே அவர்களுக்கு வித்தையும் ஞானமும் கொடுத்துவிடும். நீங்கள் படித்தது தனுர்வேதம். அதை ஓதவேண்டியது உங்கள் கடமை. கல்வி கற்பவனையே காதலிக்கிறது. கல்வி விலகா காதலி. என்றும் இளையவள். எப்பொழுதும் இனியவள். அவள் தன்னைக் காதலிப்பவனை அமுதூட்டிச் சிரஞ்சீவி ஆக்குகிறாள். நீங்கள் வில்வித்தை கற்பதில் ஓய்வு கொள்ளாதீர்கள். யார் கண்டார்கள், நாம் பெரும் போர் செய்தே நம் நாட்டை மீட்க வேண்டி இருக்கலாம்.’’ என்றவள் ‘’இளையவர்கள் பசி தாங்க மாட்டார்கள். அவர்கள் வருவதற்குள் சமைத்துவிட்டு வருகிறேன்.” என்று அவன் பதிலுக்குக் காத்திராமல் குடிலுக்கு நடந்தாள். ”ஏன் எனக்குப் பசிக்காதா?” என்றவன், இவ்வளவு நெருக்கமாகக் கிருஷ்ணையிடம் பேசியது உண்டா? என்ற எண்ணத்தில் மூழ்கினான். அவளுக்குள் பரவிய கூச்சம் நடையில் தெரிந்தது. இடுப்பில் வைத்திருந்த அரிசிப் பானையை இடது கையால் அழுந்த அணைத்தபடி, வலது கையால் சேலையை இழுத்து மார்பை மூடியவள், பின்புறம் புடவைச் சுருக்கத்தைத் தடவி இழுத்துச் சரிசெய்தாள். “அவர்கள் முன் நான் குந்தி அத்தையாகிறேன்,” என்றாள், திரும்பாமல் நடந்து போனாள். அந்த கணத்தில் அவளின் உயரம் கூடியதுபோல் அவன் உணர்ந்தான். அவள் மெல்லச் சிரிப்பது அவள் முதுகில் தெரிந்தது. குடிலுக்குள் நுழையும் முன், தத்தித் தத்திப் பின்னால் வந்த பறவைகளுக்கு அரிசியை அள்ளித் தூவிவிட்டு, குடிலுக்குள் நுழைந்தாள். குடிலுக்கு அருகில் படர்ந்திருந்த வசந்த மல்லிகைக் கொத்து ஒன்று அவள் தோளில் தட்டியது. பார்த்தன் காண்டீபத்தை எடுத்தான். மலைக் குகையில் தன் துணை மற்றும் குட்டிகளுடன் படுத்திருந்த ஆண் சிங்கம் எழுந்து, பிடரி உலுக்கிக் கர்ஜனை செய்தது. காண்டீபத்திலிருந்து எழுந்த ஒலி, எதிர்ச் சிங்கம் கர்ஜிப்பதுபோல் காடே அதிர்ந்தது. பார்த்தன் அம்பை எய்து எய்து, கணக்கிலாத் தூரத்தை இலக்கை வென்றுகொண்டிருந்தான். தானே தனக்குக் கற்பித்துக் கொண்டிருந்தான். தன்னைத் தானே வென்றுகொண்டிருந்தான். குருவும் சீடனும் ஒன்றாகும் புள்ளியில் நின்று மையம் கண்டான். அந்த நொடி முடிந்ததும், “இன்னும் வெகுதூரம்” என்பதுபோல் வெறுமையில் விழுந்தான். அந்த வெறுமையை வெல்ல மீண்டும் தொடங்கினான். கல்வியோ, கலையோ, அதன் ஆடலே இதுதானோ? தேடல், தெளிவு, உண்மை; உண்மை, தெளிவு, தேடல். கீழிருந்து உச்சிக்கு. உச்சியிலிருந்து தரைக்கு. எங்கே நிற்பது? காண்டீபத்திலிருந்து அம்பு பறந்துகொண்டே இருந்தது. திரௌபதி பொங்கும் பானையில் கழுவிய அரிசியை அள்ளிப் போட்டாள். அவிழ்ந்து அவளை மூடியிருந்த கூந்தல் அடுப்பில் பட்டுவிடாமல் சற்றுத் தள்ளி அமர்ந்து, ‘பார்த்தன் என்ன கேட்கப்போகிறான்’ என்ற நினைப்பில் எரியும் அடுப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள். அடுப்பில் எரியும் தழல் ஒளி, அவள் கூந்தலில் நுழைந்து அவளை அக்கினிச் சிலை போல் செய்தது. உடைத்த விறகுகளை அள்ளிச் சேர்த்து, மழையில் நனைந்துவிடாமல் இருக்கப் பாதுகாப்பாய், ஆலமர அடியில் வீடுபோல் இருந்த பொந்தில் வைத்த பீமன், தாமரைக் குளத்திற்கு நீந்தப் போனான். யுதிஷ்டிரர் குளித்துவிட்டு வந்து கமலாசனத்தில் அமர்ந்து தன்னில் மூழ்கினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரால் தியானத்தில் அமர முடிந்ததை, பார்த்தன் அம்பு எய்தபடியே பார்த்தான். ஒரு அம்பை அதிவேகத்தில் எய்து, அது இலக்கைத் தொடப்போகும்போது, மறு அம்பை எய்து அதைத் தடுத்து, தன்னிடமே வரவழைத்தான். வந்த அம்பைத் தன் கை அம்பால் அடித்து, இரண்டையும் ஒன்றாகவே வானுக்கு அனுப்பினான். அங்கிருந்து இரண்டும் பிரிந்து, இருவேறு பாதையில் அவனிடமே வந்தது. இரண்டு அம்பையும் பிடித்து, அம்பறாத் தூளியில் இட்டவன், காண்டீபத்தைக் கண்ணில் ஒற்றி, மகிழ மரத்தில் மாட்டி வைத்துவிட்டு நீர் ஆடப் போனான். நகுலனும் சகாதேவனும் காட்டில் தேடிக் கொணர்ந்த தேன், கனிகள், கிழங்குகளைத் திரௌபதியிடம் கொடுத்துவிட்டு, மாடுகளையும் பரிகளையும் அவற்றிற்குரிய இடத்தில் கட்டினார்கள். சகாதேவன் பால் கறந்து, அருகில் உள்ள ஆசிரமத்திற்கு எடுத்துப்போனான். நகுலன் தேடி எடுத்துவந்த நோய் தீர்க்கும் மூலிகைகளை ஆசிரமத்தில் கொடுக்க அவன்கூடச் சென்றான். வன உயிர்கள் தீயில் மடிந்துவிடக் கூடாது என்பதால், அவர்கள் இரவில் அனல் எழுப்புவதில்லை. கதிரவன் இருக்கும்போதே ஐவரும் உண்டார்கள். திரௌபதி, ஐவரும் உண்டபின் உண்டாள். நகுலனும் சகாதேவனும் அவளுக்கு உதவினார்கள். அஸ்தினபுரியிலிருந்து வந்த பின்பு இன்றுதான் பார்த்தன் பாடினான். மெல்லிய ராகத்தில் பாடியபடி, மகிழ மரத்தடியில் நிலவொளியில் காத்திருந்தான். அவனையும் அறியாமல், தாளத்திற்கு ஏற்றவாறு அவன் கைகள் அபிநயம் பிடித்தன. நிலவொளியில் நிழற்சிலைபோல நடந்து வந்த திரௌபதி, பார்த்தன்முன் அவன் தொடாத தூரத்தில் அமர்ந்தாள். பார்த்தனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. “இனியவரே!” நீண்ட நாட்களுக்குப் பின் “விஜயரைப் பார்த்தேன்” என்று திரௌபதி பேச்சைத் தொடங்கினாள். “உன்னால்தான் மீண்டேன் தேவி! பேரரசர் கூட மீண்டுவிட்டார்” “நல்லது. வாழ்வென்பதே அதுதானே இனியவரே! நிலவின் ஒளியால் அந்த இடத்தை மனதில் அழியாச் சித்திரக்கூடமாக்கினாள். சற்றுமுன் பார்த்த இடமா இது?” என்று அதிசயித்தான். “உங்கள் மனைவியிடம் பேச இத்தனை நாள் ஏன் தவித்தீர்கள்?” அவள் நீண்ட, கூர்ந்த நாசி, கற்சிலையின் நாசிபோல் நிலவொளியில் பளபளத்தது. அதில் ஒரு காலத்தில் மின்னிய மாணிக்க மூக்குத்தியை எண்ணினான் பார்த்தன். பெரும் மூச்சு எழுந்தது. “பகடையாட்டத்திற்குப் பின்னும், துச்சாதனன் கொடும் செயலுக்கு மௌனமாய் இருந்தப் பின்னும் உன்னோடு பேச முடியும் என்று என்னை நான் எப்படி நம்ப வைப்பது, தேவி!” பார்த்தன் குரல் தழுதழுத்தது. மேலும் பேச முடியாமல், மேலே பார்த்தான். முழு நிலவின் ஒளி, இலைகள் வழியாகப் பனித் துகளாக வழிந்தது. தூரத்தில் விளா மரத்தைச் சுற்றி மின்மினிகள் பறந்தன. திரௌபதியின் நீண்ட மூச்சொலியால் அசைந்து திரும்பி, அவளைப் பார்த்தான். நிலவொளியில் நெய்த துகில் கூடத்திற்குள் கொலுவிருப்பதுபோல் சிலையாகி இருந்தாள். அவள் கண்கள் தூரத்தை நோக்கின. அவள் தனக்குள்ளேயே பார்க்கிறாள் என்று பார்த்தன் புரிந்து கொண்டான். சிலையின் புன்னகைபோல அவள் முகத்தில் புன்னகை படர்ந்திருந்தது. “எப்போதும் எப்படிப் புன்னகையோடு இருக்கிறாள்? எப்படி அந்தக் கணத்தைக் கடந்தாள்? கனத்தைத் துறந்தாள்? “இதை எப்படி அவளிடம் கேள்வியாய்க் கேட்பது? துகில் உரியும்போது எப்படி இருந்தது என்றா? கண்ணன் துகில் வழங்கியபோது எதை உணர்ந்தாய் என்றா? எப்படி இந்த நிகழ்விலிருந்து மீண்டாய் என்றா? ஏன் அந்த நிகழ்வை நினைத்தேன்? நடக்கக் கூடாதது நடந்துவிட்டால் அதை மறந்துவிட்டுச் செல்ல வேண்டும். ஏன் அதை மனதில் ஓட்டி ஓட்டிப் பார்த்தேன்? திரௌபதி மன ஓட்டத்தைப் படித்துவிட்டாள். “இப்போது எப்படி கேட்பது? என்ன கேட்பது?” பார்த்தனால் பேச முடியவில்லை. பொய் சொல்லவும் விருப்பம் இல்லை. ‘கண்டுபிடித்துவிடுவாள்’. “சொல்லுங்கள் இனியவரே! என்ன என்னிடம் கேட்க வேண்டும்?” “வேண்டாம் தேவி, அதைக் கடந்து செல்வோம்” “இது நடக்காதது அல்ல, விஜயரே! எந்த இழிவும் நமக்கு நடக்காதவரை அது சம்பவம் மட்டும்தான். நமக்கு நடந்தால் மட்டும்தான் துயரம்.” பார்த்தன் பதறிப்போனான், நெஞ்சு ஏறி இறங்கித் துடித்தது. “இந்த இழிவை நீங்கள், நான், எல்லோரும் பார்த்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் நமக்கு வலித்திருக்காது. வலிக்காததற்கு ஒரு காரணம் நமக்குச் சொல்லப்பட்டிருக்கும். கடந்துபோயிருப்போம்.” பார்த்தன் தலை கனத்தது, பின் மண்டையில் படீர் படீர் என்று அறைந்துகொண்டான். அதற்குமேல் பேசாமல் எழுந்து சென்றுவிடலாம் என்று நினைத்தான். தோள்பட்டை இறுகிக் கனத்தது. உடலின் ஒவ்வொரு அணுவிலும் கனல் ஊசிகள் ஏறும் வலி. விழுந்து புரளலாம்போல் இருந்தது. “வேண்டாம், செல்வோம்” என்றான். ஆனால் எழுந்திருக்க முடியவில்லை. அவள் இனிமையாக ஏதேனும் பேச மாட்டாளா? என்று மனம் ஏங்கியது. உடலில் அமுதம் ஊறாதா? என்று தவித்தான். கானல் நீரைத் தேடி ஓடுபவன் நாவில், பனிக்கட்டி மழை விழ வேண்டாம்; விசும்பின் துளியாவது விழுந்தால் போதுமே! ஆண் எவ்வளவு பெரிய சுயநலக்காரன்! பெண்ணிடம் அவன் வேண்டிக்கொண்டே இருக்கிறான். அவள் காயங்களிலும் தேன் ஊறாதா என்று நக்கிப் பார்க்கிறான். பார்த்தனுக்கு ‘ஓ’ என்று கத்திக்கொண்டு ஓடி, அருகில் உள்ள ஓடையில் குதிக்க வேண்டும்போல் அகம் எரிந்தது. திரௌபதி சற்று நகர்ந்து, மெல்லக் கை நீட்டி அவன் நெஞ்சத்தைத் தொட்டாள். குழைவான குளிர் விரல்கள். பார்த்தன் நெகிழ்ந்தான். அந்தக் கைகளை அப்படியே நெஞ்சோடு வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும்போல் உருகினான். கண்கள் சிவந்து காந்தியது. “அமைதி அடையுங்கள்” என்றாள். தன் கையை எடுத்துத் தனது மடியில் வைத்துக் கோர்த்துக்கொண்டாள். காற்றில் பறந்த முடி, அவள் நெற்றியில் சுருண்டு விழுந்து, கண்களை மறைத்து அழகைக் கூட்டியது. தனது விரலை நீட்டி அதை ஒதுக்கப் போனவன் நிறுத்திக்கொண்டான். அவளே தனது புறங்கையால் ஒதுக்கினாள். அந்த நொடியில் அவளுக்குள்ளிருந்து ஒரு மயில் எழுந்து எட்டிப் பார்த்து மறைந்தது. அவள் தொண்டைக்குழி மெல்லத் துடித்தது. அவள் கழுத்தோரம் சுருண்டிருந்த பூ முடிகள், நிலா ஒளியில் ஈரம் கொண்டிருந்தன. இரவில் மலரும் பவழ மல்லி வாசம் கனமாக வந்து தாக்கியது. அருகில் இருந்த குளத்திலிருந்து அல்லிகள் மலரும் வாசம் எழுந்து வந்து சூழ்ந்தது. அதற்குமேல் அங்கு இருக்க வேண்டாம் என்று எண்ணினான். “தேவி, நீ குடிலுக்குச் செல். நான் மல்லர் உருவாக்கி வைத்திருக்கும் புல் படுக்கைக்குச் செல்கிறேன்” என்றான். குரலில் கனமும் கண்டிப்பும் இருந்தது. திரௌபதியின் உடலில் ஒரு சிலிர்ப்புத் தோன்ற, மெல்ல அசைந்து இதழ் பிரியாமல் புன்னகைத்தாள். பார்த்தனுக்கு அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவளை அருகில் வைத்துத் தாங்கிக்கொள்வதும் கடினமாக இருந்தது. “ஆணுக்கு உடம்பு ஒரு ஆயுதம் மட்டும்; அது போட்டி போடும், வெட்டும், வெட்டப்படும். பெண்ணுக்கு உடம்பே இதயம். கையளவு இதயம் கொண்ட ஆணுக்கு அது எப்படிப் புரியும்? வயதோ, கல்வியோ, குலமோ அதைப் புரியவைத்துவிட முடியாது. அதனால்தான் பெண்ணின் உடல் இங்கு காட்சிக்கு இழுக்கப்படுகிறது.” அவளுக்குள் அனல் எழுந்து ஆடியது. கண்ணாடிக் குவளைக்குள் வைக்கப்பட்ட தீபம்போல் அவளுக்குள் எரியும் அனலை அவன் பார்த்தான். “குளிர்ந்த நதியில் தீபத்தை ஏற்றி மிதக்க விடுவதுபோல், குளிர்ந்திருந்த அவளுக்குள் மீண்டும் அனலை ஏற்றி வைத்து விட்டேனோ?” என்று முகம் வாடினான். “என்ன கேட்க நினைத்தேன்?” அவனுக்குள் கேள்வியே எழவில்லை. அவளிடம் பேச வேண்டும் என்ற வேட்கையில் குழப்பிக்கொண்டேனா? ஏதாவது உதவி செய்வதுபோலப் பேசியிருக்கலாமே? ஏன் சிறு விஷயத்தையும் பெரியதாகக் குழப்பிக்கொள்கிறேன்? பெரிய வலி ஏற்படும்போது, சிந்தனை சிறு சிறு விஷயங்களைக் கையாள முடியாமல் தவிக்கிறது. அவன் முக வாடலைக் கண்ட திரௌபதி, அவன் மகிழ மெல்லச் சிரித்தாள். “விடுங்கள் விஜயரே! பெரும் பிரச்சினைகள் வரும்போது பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்” என்று எழுந்தவள், தன் பின்புறத்தைத் தட்டி அங்கிருந்த புற்களைப் பறக்கவிட்டாள். கண்ணுக்குத் தெரியாத தேவதைகள் நடுவிலிருந்து எழுந்தவள், அவர்கள் உடன்வரச் செல்வதுபோல் சென்றாள். எங்கிருந்தாலும் அவள் சக்கரவர்த்தினிதானே! “தேவி!” நின்று திரும்பிப் பார்த்து, “என்ன வேண்டும், குழந்தாய்?” என்பதுபோல் நோக்கினாள். “தேவி! அந்தக் கணத்தில் எப்படி கண்ணனை அழைத்தாய்?” “இத்தனை நாளாய் இந்தக் கேள்விக்குத்தான் தவித்தேன், கிடைத்துவிட்டது!” என்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும் அவனை உந்தி எழுப்பியது. திரௌபதி முகம் ஒளிர்ந்தது. விழிகள் கனிந்தன. இதழில் புன்னகை பூத்தது. விளா மரத்தைச் சுற்றிப் பறந்த மின்மினிகள் ஏனோ நகர்ந்தன. அதனால் தூரத்தில், அவள் சிரசுக்குப் பின்னால் மின்மினிகளின் ஒளிக்கோலம். “நம்மிடமிருந்து நம்மைத் துறப்பது அத்தனை எளிதில்லை, விஜயரே! அந்தக் கணத்தில் என்னிடமிருந்து என்னை நான் துறந்தேன், இனியவரே! அந்தக் கணம் எனக்கு வாய்த்தது. எனக்குள் நான் இல்லாதபோது வேறு யார் அங்கு இருப்பார்கள்? கண்ணன் வந்தான் என்றார்கள்.” என்றவள், காற்றும் கசங்காமல் மெல்ல நடந்தாள். பெண்வேடமிட்ட கண்ணன் நடந்து போவதுபோல் இருந்தது. குனிந்து கையில் கிடைத்த மகிழ மலர்களை அள்ளி, அவள் பாதம் பதிந்த இடத்தில் தூவினான். திரௌபதி திரும்பாமல் கடைக்கண்ணால் அதை நோக்கிப் புன்னகைத்துத் தன் நெஞ்சத்தைப் பார்த்தாள். மாலையில் பார்த்தன் சிரசிலிருந்து விழுந்த மலர்கள் அவள் தனத்தின்மீது மணத்துக் கொண்டிருந்தன. https://solvanam.com/2026/01/11/சரணாகதி/
- Today
-
சித்தாந்த வினா விடை
சித்தாந்த வினா விடை- தொடர் 4 - அருணைவடிவேல் முதலியார் அனுமான அளவையின் வகை இனி, காணப்பட்ட ஏதுவைக்கொண்டு காணப்படாத துணிபொருளை உணர்வதாகிய அனுமான அளவை,‘தன் பொருட்டு அனுமானம், பிறர் பொருட்டு அனுமானம்' என இருவகைப்படும். (அ) தன் பொருட்டு அனுமானம் துணிபொருளை மூன்றிடங்களில் வைத்து மூன்று வகை யான ஏதுக்களால் ஒருவன் தானே ஆராய்ந்து துணிவது, தன் பொருட்டனுமானமாகும். துணிபொருளை, ‘சாத்தியம்' என்பர் வட நூலார். மூன்று இடங்களாவன: 'தனது ஆராய்ச்சிக்கு அப்பொழுது உரியதாய் உள்ள இடம், அந்த இடத்தைப் போலவே நின்று அதற்கு உபமானமாவதற்கு உரிய இடம், அந்த இடத் திற்கு நேர்மாறான இடம்' என்பன. எடுத்துக்காட்டாக, ஒருவன் ஒருமலைமேற் புகையைக் கண்டபொழுது, ‘இம்மலை புகையுடையதாய் இருத்தலால், தீயுடையது' என்று ஆராய்ந்து துணியுமிடத்து, அத் துணிவிற்கு அவன் முன்பு அடுக்களையில் (சமயலறையில்) புகையைத் தீயுடன் கண்ட காட்சியே காரண மாகும்; ஆகவே, 'இம்மலை அடுக்களை போன்றுள்ளது' என்ற உவமையுணர்ச்சி அப்பொழுது அவனுக்கு உளதாகும். மேலும் “தீ இல்லாத இடத்தில் புகை இருத்தல் இல்லையோ? என அதனை எதிர்மறுத்து உணருமிடத்து, தீயோடு சிறிதும் இயைபில்லாத தாமரை ஓடைக்கண் புகையில்லாமை அவனுக்குத் தோன்றும். அதனால், தீயை அவன், ‘மலை, அடுக்களை, தாமரையோடை' என்னும் மூன்றிடங்களில் வைத்துத் துணிபவனாதலறிக. மூன்றிடங்கள் மூன்றிடங்களும் 'மூன்று பக்கம்' (பட்சம்) என வழங்கப் படும். அவற்றுள், ஆராய்ச்சிக்குரிய இடம், பக்கம் (பட்சம்) என் வழங்கப்படும். அதற்கு உபமானமாதற்குரிய இடம், ‘ஒத்த பக்கம் (சபட்சம்)' எனப்படும். அதற்கு மறுதலையாய் உள்ள இடம் 'ஒவ்வாப் பக்கம் (விபட்சம்)' எனப்படும். மேற்காட்டிய உதாரணத்தில், மலை பக்கம்; அடுக்களை சபக்கம்; தாமரை யோடை விபக்கம். பக்கத்திலும், சபக்கத்திலும் துணியப்படும் பொருள் இருக்கும்; விபக்கத்தில் அப்பொருள் இராது. மூன்று ஏதுக்கள் இனி, மூன்று ஏதுக்களாவன: 'இயல்பு ஏது, காரிய ஏது, இன்மை ஏது' என்பன. காரிய ஏது என்பதனாலேயே‘காரண ‘ஏது’ என்பதும் தழுவிக் கொள்ளப்படும். இன்மை ஏதுவை அனுபலத்தி ஏது' என்பர். இயல்பு ஏது இயல்பு ஏதுவாவது, பொருள்களை உணர்தற்குச் சொற்கள் ஏதுவாதல்; அஃதாவது, மரம் பூத்தமையை நேரிற் காணாதிருக்கின்ற ஒருவனிடத்தில் மற்றொருவன் வந்து, மரம் பூத்தது’ என்று சொல்வானாயின், கேட்டவன் அச்செய்தியை இனிது உணர்கின்றான். அவ்வாறு உணர்தற்கு ஏதுவாய் நின்றது எது? ஒருவன் வந்து சொல்லிய அச்சொல்லே. அச்சொல் அப்பொருளை எவ்வாறு உணர்த்திற்று? என்று வினவினால், `'இவ்வாறு உணர்த்திற்று’ என விளக்கிக் கூற முடியுமோ? முடியாது: ஆகவே, ஒவ்வொரு சொல்லும் அதனதன் பொருளை உணர்த்துவதில் இயல்பாகவே ஓர் ஆற்றல் பெற்றிருக்கின்றது என்று கொள்ள வேண்டும்; அதனால் பொருளை நேரே காணாமல் பிறர்சொல்லும் சொல்லால் உணருமிடத்து அச்சொல்லாகிய ஏது, ‘இயல்பு ஏது' எனப்படுகின்றது. "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” என்பது தொல் காப்பியம். காரிய ஏது காரிய ஏதுவாவது, காணப்படாத காரணப்பொருளை உணர்தற்கு, காணப்பட்ட அதன் காரியப்பொருள் ஏதுவாய் நிற்றல். உதாரணமாக, காணப்படாத நெருப்பை உணர்தற்கு ' அதன் காரியமாகிய புகை காணப்பட்டு ஏதுவாய் நிற்றலைக் காண்க. காரண ஏது காரண ஏதுவாவது, காரியம் நிகழாதிருக்கும்பொழுதே அது நிகழும் என உணர்தற்கு அதன் காரணப் பொருள் ஏதுவாய் நிற்றல். உதாரணமாக மழை பெய்யாதிருக்கும் பொழுதே மழைபெய்யும் என உணர்தற்கு, இடித்தும், மின்னியும் இருண்டும் எழுகின்ற மேகம் ஏதுவாய் நிற்றலை அறிக. 'காரிய ஏது' என்பதனாலேயே ஒற்றுமைபற்றிக் காரண ஏதுவும் தானே பெறப்படும் என்பதுபற்றி இதனை வேறுகூறாமல் 'மூன்று ஏது' என்றே கூறுவர். இன்மை ஏது அல்லது அனுபலத்தி ஏது இன்மை ஏது அல்லது அனுபலத்தி ஏதுவாவது, காரணப் பொருளினது இன்மையை உணர்தற்குக் காரியப்பொருளினது இன்மையும், காரியப் பொருளினது இன்மையை உணர்தற்குக் காரணப் பொருளினது இன்மையும் ஏதுவாதல். எடுத்துக் காட்டாக, குளிர் இல்லாமை, 'பனி இல்லை' என்று உணர்தற்கும், பனி இல்லாமை, 'குளிர் இராது' என்று உணர்தற்கும் ஏதுவாய் நிற்றல் உணர்க. குளிர், காரியம்; பனி, காரணம். (ஆ) பிறர்பொருட்டனுமானம் மேற்சொல்லியவாறு, காணப்படாத பொருளை ஏதுக் களால், தான் அனுமித்து (கருதி) உணர்ந்ததை அம்முறையிலே பிறர் உணரும்படி எடுத்துச் சொல்வது பிறர்பொருட்டனுமான மாகும். எனவே, 'உள்ளத்துள்' உணர்வது தன்பொருட்டனு மானம்' என்பதும், 'அதனை வெளியில் சொல்லால் சொல்லி உணர்த்துவது பிறர்பொருட்டனுமானம்' என்பதும் விளங்கும். பிறர் உணரும்படி சொல்லப்படும் சொல், 'உடன்பாட்டுச் சொல், எதிர் மறைச் சொல்' என இருவகைப்படும். உடன் பாட்டினை, 'அந்நுவயம்' என்றும், எதிர்மறையினை, 'வெதிரேகம்' என்றும் வடநூலார் கூறுவர். i உடன்பாட்டுச் சொல் 'இம்மலை புகையுடைமையால் தீயுடையது; புகையுள்ள விடத்துத் தீயுண்டு, அடுக்களைபோல், என இவ்வாறு உடன் பாட்டுவகையில் சொல்லப்படுவது, உடன்பாட்டுச் சொல். ii எதிர்மறைச் சொல் ‘இம்மலை தீயுடையதே, புகையுடைமையால், தீ இல்லாத விடத்துப் புகை உண்டாதல் இல்லை, தாமரை ஓடைபோல' என இவ்வாறு எதிர்மறை வகையில் சொல்லப்படுவது எதிர்மறைச் சொல். இவ்வாறு எதிர்மறை வகையால் உணர்வதையே ‘அருத்தாபத்தி' எனச் சிலர் வேறோர் அளவையாகக் கூறுவர் என்பது முன்பு சொல்லப்பட்டது. iii அனுமான உறுப்பு ஐந்து பிறர் பொருட்டுச் சொல்லப்படும் அனுமான வாக் கியத்தை ஐந்து உறுப்புக்கள் உடையதாகத் தார்க்கிகர் முதலியோர் கூறுவர். அவை, 'மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு, உபநயம், நிகமனம்' என்பன. 1. மேற்கோள் மேற்கோளாவது, தான் துணிந்து கொள்ளும் கொள்கை. அது ‘இம்மலை தீயுடையது' என்றல் போல்வது. மேற்கோளை வடநூலார், 'பிரதிக்ஞை' என்பர். 2. ஏது ஏதுவாவது தனது துணிவிற்குக் காரணமாய் நிற்பது, அது ‘புகையுடைமையால்' என்றல்போல்வது: 'ஏது' என்பது, வடசொல்லே. இதனைத் தமிழ்ச் சொல்லால் கூறுதல் இல்லை. 3. எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டாவது, ஏதுவாகக் குறிக்கப்பட்ட பொருள் மேற்கோளாகத் துணியப்படும் பொருளோடு எப்பொழுதும் விட்டு நீங்காது உடன் நிகழ்தலை வலியுறுத்துதற்கு எடுத்துக் காட்டப்படுவது. அது‘புகையுள்ள இடத்துத் தீயுண்டு, அடுக்களை போல' என்றல்போல்வது. இதுவே, எதிர்மறையில் 'தீயில்லாத இடத்தில் புகையில்லை; தாமரை ஓடைபோல' என்று வரும். இவையே 'ஒத்தபக்கம் (சபட்சம்); ஒவ்வாப்பக்கம் (விபட்சம்). என முன்பு கூறப்பட்டன. எடுத்துக்காட்டினை, 'உதாரணம்' என்றும், 'திருட்டாந்தம்' என்றும் வடநூலார் கூறுவர். விட்டு நீங்காமை, ‘அவினாபாவம்' எனப்படும். 4. உபநயம் உபநயமாவது, ஒத்த பக்கத்தினது (உபமானத்தினது). தன்மையைப் பக்கமும் (உபமேயமும்) உடையதாய் இருக் கின்றது எனப் பொருத்திக் காட்டுதல். அது, ‘இம்மலையும் புகையுடையது' என்றல் போல்வது. 5. நிகமனம் நிகமனமாவது ‘மேற்கோளாகச் சொல்லிய பொருளை, இவ் வாற்றால் இங்ஙனம் சொல்லப்பட்டது' என முடிந்தது முடித் தலாகக் கூறி முடித்தல். அது, ‘ஆதலின், இம்மலையும் தீயுடையது' என்றல் போல்வது. 'உபநயம், நிகமனம் என்பன வடசொற்களே. இவற்றையும் தமிழ்ச் சொல்லாற் கூறுதல் இல்லை. 'உபநயம், நிகமனம்' என்னும் இரண்டும் இன்றியமை யாத உறுப்புக்கள் அல்ல; அதனால் சைவ சித்தாந்திகள், மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு' என்னும் மூன்று உறுப்புக்களை மட்டுமே கூறுவர். மேற்கோள் முதலிய மூன்றும் தம் தம் இயல்பிற் குறையாது நிரம்பி நிற்கும்பொழுதே அனுமான அளவை, அளவை யாகக் கொள்ளப்படும். அவை குறைபாடுடையனவாய்விடின், 'போலி' எனப்பட்டு, அனுமான அளவையும் போலி என ஒதுக்கப்படும். அனுமானப் போலியை, 'பக்கப்போலி, ஏதுப் போலி உவமப்போலி' என மூன்றாகப் பகுத்து, ஒவ்வொன்றையும் பலவாக்கிப் பலவாறாக விரிப்பர். அவையெல்லாம் அவ்வாறே நாம் விரிக்க வேண்டுவது இல்லை. போலியை வடநூலார் 'ஆபாசம்' என்பர். இனி, அனுமானம், காட்சியில் அனுமானம், கருத்தில் அனுமானம், உரையில் அனுமானம்' என வேறொரு வகையில் மூன்றாகச் சொல்லப்படும். ஓர் இடத்தில் மலரின் மணத்தை நுகர்ந்த ஒருவன், 'இங்கு மலர் உண்டு' எனத் துணிதல் போல்வன காட்சியில் அனு மானம்; என்னையெனின், மலர் காட்சிப் பொருளாதலின் என்க; எனவே புகையைக் கண்டு நெருப்பு உண்டு என உணர்தலும் இதுவேயாயிற்று. 6. உரையளவையின் வகை இனி, 'காட்சி, கருதல்' என்னும் இரண்டு அளவைகளாலும் அறிய வாராதவற்றை அறிய உதவுவதாகிய உரையளவை, தந்திரகலை, மந்திரகலை, உபதேசகலை' என மூன்று வகைப்படும். இவை முறையே, கருமகாண்டம், உபாசனாகாண்டம், ஞான, காண்டம் எனப்படும். (அ) தந்திரகலை ‘தந்திரகலை அல்லது கருமகாண்டம்' என்பது நித்திய, நைமித்திய, காமிய கருமங்களாகிய ஒழுக்கங்களைக் கூறுவது. அதனை உபதேசகலை அல்லது ஞானகாண்டத்தொடு மாறு கோளின்றி உள்ளவாறுணரும் உணர்வே தந்திரகலையளவை யாகும். (ஆ) மந்திரகலை 'மந்திரகலை அல்லது உபாசனாகாண்டம்' என்பது மேற் கூறிய நித்தியம் முதலிய மூவகையிலும், ஐம்பொறி முதலிய வற்றை அடக்கித் தெய்வங்களை வழிபடும் முறையைக் கூறுவது. அதனை உள்ளவாருணரும் உணர்வே மந்திர கலையளவையாகும். (இ) உபதேசகலை ‘உபதேசகலை அல்லது ஞானகாண்டம் என்பது, 'பதி, பசு பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு -விரித்துக் கூறுவது. இதுவே, ‘தத்துவ ஆராய்ச்சி' எனப்படும். அதனை உள்ளவாறுணரும் உணர்வே உபதேசகலையளவையாகும். இவ்வாறு உரையளவையின் வகைகளை உணர்ந்துகொள்க. இங்ஙனம் மூவகை அளவைகளின் இயல்பையும் ஒருவாறு உனக் குத் தொகுத்துக் கூறினோம். https://www.siddhantham.in/2025/07/4.html
-
இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள்
இந்தியாவின் மக்கள் தொகைப் புதிர்கள்! (பகுதி II) 10 Jan 2026, 10:49 AM குறைந்துவரும் கருவுறுதலும் இந்தியச் சமூகத்தின் எதிர்காலமும்! ருக்மிணி எஸ். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் உலகை ஆழமாகப் பாதிக்கின்றன. ஆயினும், இந்த முக்கியமான மாற்றங்கள் இந்தியாவுக்குள்ளும் உலக அளவிலும் போதுமான அளவு ஆவணப்படுத்தப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை. ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data For India) என்னும் தளத்தில் உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவு மூலங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்: மூன்று பகுதிகள் கொண்ட இந்தத் தொடரின் மூலம், மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த இன்றியமையாத இந்தியத் தரவுகளைத் தொகுத்து, இந்தியாவில் நடைபெறும் இதர சமூக-பொருளாதார மாற்றங்களின் பின்னணியில் வைத்து, உலகளாவிய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கிறோம். இதன் மூலம், புதிய ஆராய்ச்சிக்கான பகுதிகளையும், கொள்கை, விவாதங்களுக்கான திசைகளையும் அடையாளம் காண்கிறோம். பகுதி I இல், தற்போதைய நிலவரத்தை விவரிப்பதற்காகத் தரவுகளை ஒன்றிணைத்தோம். ஒப்பீட்டளவில் கவனிக்கப்படாமல் போனதாக நாங்கள் வாதிடும் சமீபத்திய முக்கியமான தரவுப் புள்ளிகளையும் வழங்கினோம். பகுதி IIஇல், குறைந்துவரும் பிறப்பு விகிதங்கள் தொடர்பான தரவுகளை ஆராய்கிறோம். இந்தியா உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாக இருக்கும் அதே நேரத்தில் விதிவிலக்காகவும் இருப்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம். பகுதி IIIஇல், இந்திய மாநிலங்களுக்கிடையேயான மக்கள்தொகை வேறுபாடுகள் குறித்த தரவுகளையும், அது தற்போதைய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பதற்றங்களுக்கு எவ்வாறு காரணமாகிறது என்பதையும் பார்ப்போம். மக்கள் தொகை மாற்றத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் — குறைந்துவரும் கருவுறுதல், அதிகரித்துவரும் ஆயுட்காலம், இடப்பெயர்வு, தொற்றுநோயியல் மாற்றங்கள் — ஒரு பெண் ஈன்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அளவுக்குக் கவனத்தை ஈர்க்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை. சில குழுக்களிடையே நிலவும் அல்லது உணரப்படும் அதிகக் கருவுறுதல் விகிதங்களும் மற்றவர்களிடையே குறைந்துவரும் கருவுறுதலும் மக்கள்தொகை தொடர்பான கருத்தங்குகளுக்கு அப்பால் எதிரொலிகளை எழுப்பும் கலாச்சாரப் பதற்றமாக உருவெடுத்துள்ளன. இது இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் நடக்கும் ஊடக, அரசியல் விவாதத்தின் முக்கியப் பகுதியாக மாறியுள்ளது. மூன்று பகுதிகள் கொண்ட இந்தத் தொடரின் இந்தப் பகுதியில், உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவுகளின் கலவையைப் பயன்படுத்தி, இந்தியாவில் மாறிவரும் கருவுறுதல் விகிதங்களின் ஐந்து முக்கிய அம்சங்களை அலசுகிறோம். இந்தியா பல வழிகளில் உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாக இருக்கும் அதே சமயம் கருவுறுதலின் சில அம்சங்களில் முக்கியமான விதிவிலக்காகவும் உள்ளதையும் விவாதிக்கிறோம். உலகளாவிய தரவுகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள்தொகைச் சாத்தியப்பாடுகள், 2024 அறிக்கையின் திருத்தப்பட்ட வடிவத்தைப் பயன்படுத்துகிறோம். இந்தியத் தரவுகளுக்கு, இந்தியாவின் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மாதிரிப் பதிவு அமைப்பு, தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வு ஆகியவற்றின் மக்கள்தொகை மதிப்பீடுகளைப் பயன்படுத்துகிறோம். 1. இந்தியாவில் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) இப்போது தேசிய அளவில் பதிலீட்டு அளவைவிடக் குறைந்துள்ளது மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) என்பது ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாகப் பெற வாய்ப்புள்ள குழந்தைகளின் எண்ணிக்கையாகும். ஒரு நாட்டின் TFR 2.1 ஆகக் குறையும்போது, பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்று மக்கள்தொகை நிபுணர்கள் கூறுகிறார்கள், அப்போது நாடு “பதிலீட்டுக் கருவுறுதலை” அடைந்து விட்டது என்று கூறப்படுகிறது. இரண்டு பெரியவர்கள் ஒரு 2.1 குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்றுவைத்துக்கொண்டால், குழந்தைப் பருவம் அல்லது இளமைப் பருவத்தில் இறப்பதற்கான சில வாய்ப்புகளைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், அந்தக் கணவன் மனைவி இரண்டு பெரியவர்களை உருவாக்குவார்கள். இரண்டுக்கு இரண்டு என்பதால் மக்கள்தொகையின் அளவு மாறாமல் இருக்கும். இது ஒரு நாட்டின் மக்கள்தொகை பயணத்தில் முக்கியமான மைல்கல். கருவுறுதல் இந்த அளவிற்கும் கீழே குறைந்தால், மக்கள்தொகை மொத்த எண்ணிக்கையில் குறையத் தொடங்கும். இந்தியாவின் மதிப்பீடுகளின்படி, 2019இல் இந்தியாவின் TFR பதிலீட்டு அளவைவிடக் குறைந்தது. நகர்ப்புற இந்தியாவின் TFR 2004இல் இந்த நிலையை முன்னதாகவே அடைந்தது. கிராமப்புற இந்தியாவிலும் TFR 2023இல் பதிலீட்டு அளவைவிடக் குறைந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மிக அண்மைக்காலதில் இது தொடர்பாக நமக்குக் கிடைத்துள்ள அதிகாரப்பூர்வமான தரவு என்றால் அது 2023ஆம் ஆண்டின் தரவுதான். கருவுறுதல் குறித்த இந்திய தேசியத் தரவு, ஆண்டுதோறும் நடத்தப்படும் மாதிரிப் பதிவு அமைப்பிலிருந்து (Sample Registration System – SRS) வருகிறது. பெரிய அளவிலான மாதிரிகளைக் கொண்டு நாடு தழுவிய அளவில் வீடு வீடாக நடத்தும் கணக்கெடுப்பு இது. மிகச் சமீபத்திய SRS தரவு 2023ஆம் ஆண்டிற்கானது. இந்திய மாநிலங்களின் கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்குமான மதிப்பீடுகளை வழங்கும் இந்தக் கணக்கெடுப்பு, கல்வி நிலை, வருமானக் குழு அல்லது சமூகக் குழு உள்ளிட்ட சமூகப் பொருளாதாரக் கூறுகளின் அடிப்படையில் மதிப்பீடுகளை வழங்குவதில்லை. இதற்காக, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் சுகாதார ஆய்வுகள் அமைப்பின் ஒரு பகுதியான தேசிய அளவில் பிரதிநிதித்துவம் கொண்ட தேசிய குடும்பச் சுகாதார ஆய்வை (National Family Health Survey – NFHS) நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்தியாவின் மிகச் சமீபத்திய NFHS 2019-21இல் நடத்தப்பட்டது. NFHSஇன் TFR மதிப்பீடுகள் அதே ஆண்டிற்கான SRSஐவிடவும் சற்றே அதிகமாக உள்ளன. உலகம் முழுவதும் ஏழைகளிடமும் குறைந்த கல்வி அறிவு கொண்ட பிரிவினரிடமும் TFR அதிகமாக உள்ளது. காலப்போக்கில் அந்தக் குழுக்கள் செல்வந்தர்களாகவும் மேம்பட்ட கல்வி அறிவுடையவர்களாகவும் மாறும்போது இது குறைகிறது. இந்தியாவில் ஏழ்மையான 20 சதவீத இந்தியக் குடும்பங்களிடையே TFR மிக அதிகமாக இருந்தது. அங்கு சராசரியாக ஒரு பெண், வசதிபடைத்த 20 சதவீதக் குடும்பங்களில் உள்ள சராசரிப் பெண்ணைவிடச் சராசரியாக ஒரு குழந்தை அதிகமாகப் பெற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த கல்வி அறிவு கொண்ட பெண்களுக்கும் அதிகக் கல்வி அறிவு கொண்ட பெண்களுக்கும் இடையேயான இடைவெளி ஒரே மாதிரியாக உள்ளது: பள்ளிக் கல்வியே இல்லாத பெண்கள், 12 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பள்ளிக் கல்வி பெற்ற பெண்களைவிடச் சராசரியாக ஒரு குழந்தை அதிகமாகப் பெறுகிறார்கள். இருப்பினும், காலப்போக்கில், பணக்கார, ஏழை ஆகிய இரண்டு குடும்பங்களிலும், குறைந்த கல்வி அறிவு கொண்ட பெண்களிடையேயும் அதிகக் கல்வி அறிவு கொண்ட பெண்களிடையேயும் TFR குறைந்துள்ளது. சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையும் பாதகங்களையும் எதிர்கொள்ளும் ஒதுக்கப்பட்ட சமூகங்களான பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்களிடையே சலுகை பெற்ற சாதிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களைவிட TFR அதிகமாக உள்ளது. மற்ற மதக் குழுக்களுடன் குறிப்பாக இந்துப் பெண்களுடன் ஒப்பிடும்போது முஸ்லிம் பெண்களின் அதிக TFR ஆகும். இது இந்தியாவில் காணப்படும் கூர்மையான வித்தியாசமாகும். TFR முஸ்லிம் பெண்களிடையே மற்ற மதக் குழுக்களைவிடத் தொடர்ந்து அதிகமாக உள்ளது. இது இந்தியாவில் முஸ்லிம் குடும்பங்களின் குறைந்த வருமானத்துடன் தொடர்புடையது. மற்ற மதக் குழுக்களைக் காட்டிலும் முஸ்லிம்களிடத்தில் TFR அதிகமாக இருக்கும் நிலை தொடர்ந்தாலும், முஸ்லிம் பெண்களின் கருவுறுதல் விகிதங்களும் கணிசமாகக் குறைந்துவிட்டன. மேலும், குடும்ப வருமானம் அதிகமாகவும், பெண்களின் கல்வி விகிதங்கள் அதிகமாகவும் இருக்கும் இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் இந்து, முஸ்லிம் உள்ளிட்ட எல்லாக் குழுவினரிடையேயும் கருவுறுதல் விகிதங்கள் குறைவாக உள்ளன. குறைந்த கருவுறுதல் விகிதங்கள் கொண்ட வசதி படைத்த மாநிலங்களான கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள முஸ்லிம் பெண்களின் TFR, அதிக கருவுறுதல் கொண்ட இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களான பிகாரிலும் உத்தரப் பிரதேசத்திலும் உள்ள இந்துப் பெண்களின் TFRஐவிடக் குறைவாக உள்ளது. 2. நாட்டின் சில பகுதிகளில் TFR நீண்ட காலமாகப் பதிலீட்டு அளவைவிடக் குறைவாக உள்ளது மிக அண்மைக்காலத்தில்தான் இந்தியாவின் தேசிய TFR, பதிலீட்டு அளவைவிடக் குறைந்துள்ளது. எனவே, குறைந்துவரும் பிறப்பு விகிதங்கள் குறித்த உலகளாவிய உரையாடலுக்குள் இந்தியா இப்போதுதான் நுழைவதாகத் தோன்றலாம். ஆனால், இந்தியாவின் சில பகுதிகள் பல தசாப்தங்களாகவே வளர்ச்சியடைந்த உலகின் சில பகுதிகளைப் போலவே குறைந்த கருவுறுதல் விகிதங்களைக் கொண்டிருக்கின்றன. தேசிய TFR 4ஆக இருந்தபோது, 1988ஆம் ஆண்டில் பதிலீட்டுக் கருவுறுதலை அடைந்த முதல் இந்திய மாநிலம் கேரளம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1993இல் தமிழ்நாடு அந்த இடத்திற்கு வந்தது. மேலும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2004இல் ஆந்திரப் பிரதேசம் அந்த நிலையை எட்டியது. இந்தியாவின் கிழக்கில் உள்ள மேற்கு வங்கம் கருவுறுதல் அடிப்படையில் ஒரு விதிவிலக்கு. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், இந்த மாநிலம் 2005இல் பதிலீட்டுக் கருவுறுதலை அடைந்தது. இது இந்திய மாநிலங்களின் நகர்ப்புறப் பகுதிகளில் இன்னும் அதிகமாக உள்ளது. 2023ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசம், பிகார் தவிர அனைத்து இந்திய மாநிலங்களிலும் TFR பதிலீட்டு அளவைவிடக் குறைவாக இருந்தது. எனினும், தெற்கு மாநிலங்களில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த பிறப்பு விகிதங்கள் நிலவிவரும் போதிலும், குறைந்த கருவுறுதல் குறித்துப் பொது வெளியிலும் அரசியல் களத்திலும் நடக்கும் உரையாடல்கள் ஒப்பீட்டளவில் புதியவை.எடுத்துக்காட்டாக, ஆந்திரப் பிரதேசத்தில், 2025 ஜனவரியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, குடும்பங்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க ஊக்கமளிக்கும் வகையில், இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தகுதிநீக்கம் செய்யப் பரிந்துரைத்தார். நாயுடுவின் இந்த ஆலோசனையைச் செயல்படுத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புவரை, இந்த மாநிலம் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்களை உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடாமல் தடுத்துவைத்திருந்தது. (அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 அக்டோபரில் நீக்கப்பட்டது). 3. பெண்கள் தாமதமாக அதிகக் குழந்தைகளைப் பெறுவதைக் காட்டிலும், விரைவாகக் குறைவான குழந்தைகளைப் பெறும் வழக்கமே இந்தியாவில் குறைந்துவரும் கருவுறுதல் விகிதத்திற்குக் காரணமாகிறது. வளர்ச்சியடைந்த உலகின் பெரும்பாலான பகுதிகளில், கருவுறுதல் குறைவது பெண்கள் தங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் குறைவான குழந்தைகளைப் பெறுவதாக வெளிப்படுகிறது. இந்தியாவிலோ பெண்கள் தங்கள் குழந்தைகளை ஒப்பீட்டளவில் விரைவாகப் பெற்றெடுத்துவிட்டு, இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு நிறுத்திவிடுகிறார்கள். இந்தியப் பெண்கள் வாழ்க்கையில் பிற்காலத்தில் அதிகக் குழந்தைகளைப் பெறுவதில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களில் பெண்கள் தங்கள் முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் வயது சற்று மட்டுமே – இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக – அதிகரித்துள்ளது. சராசரி இந்தியத் தாய் இப்போது தனது முதல் குழந்தையை 21 வயதிற்குச் சற்றே கூடுதலான வயதில் பெற்றெடுக்கிறார். இது இந்தியப் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் வயதில் ஏற்படும் மாற்றங்களுடன் நெருக்கமாகப் பயணிக்கிறது. தற்போது பெண்களின் திருமண வயது 18 வயதுக்குச் சற்றுக் கூடுதலாக உள்ளது. குறிப்பிடத்தக்க மாற்றம் என்றால் அது பெண்கள் தங்கள் கடைசிக் குழந்தையைப் பெற்றெடுக்கும் வயதில் ஏற்பட்ட மாற்றம். குடும்பங்கள் சிறியதாகிவரும் நிலையில், அதிகமான பெண்கள் தங்கள் இருபதுகளிலேயே தங்கள் கர்ப்பங்களையும் முடித்துக்கொள்கிறார்கள். இதன் விளைவாக, ஒரு இந்தியத் தாய் தனது கடைசிக் குழந்தையைப் பெற்றெடுக்கும் சராசரி வயது கணிசமாகக் குறைந்துள்ளது. முன்பைவிட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்துள்ளது. உலகம் முழுவதும் வருமானமும் கல்வியும் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்போது, பெண்கள் சற்றுத் தாமதமாகத் திருமணம் செய்துகொள்ளத் தொடங்குகிறார்கள். மேலும் தாமதமாகக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். இந்தியாவிலும் இப்படி நடந்தாலும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை இருபதுகளில் உள்ள பெண்களுக்கே பிறக்கின்றன. உதாரணமாக, இங்கிலாந்தில் பெண்கள் தற்போது தங்கள் முதல் குழந்தையை மிகத் தாமதமாகப் பெற்றெடுக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் முப்பதுகளில் உள்ள பெண்களுக்குப் பிறக்கின்றன. இந்தியாவிலும் இந்த மாற்றம் கண்கூடாகத் தெரிகிறது. 1950களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை இருபதுகளின் தொடக்கத்தில் உள்ள பெண்களுக்குப் பிறக்கின்றன. இது கடந்த சில ஆண்டுகளில் மாறிவிட்டது என்றும், இந்தியாவில் ஆண்டுதோறும் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை இப்போது இருபதுகளின் பிற்பகுதியில் உள்ள பெண்களுக்குப் பிறக்கின்றன என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை மதிப்பீடு குறிப்பிடுகிறது. 4. இந்தியாவிலும் உலகிலும் கருவுறுதல் ஏன் குறைகிறது? குறைந்த பிறப்பு விகிதங்கள் குறித்த உலகளாவிய ஆய்வுகள் குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்தைச் சார்ந்தவையாகவே இருக்க முனைகின்றன. இத்தகைய ஆய்வில் இந்தியாவைத் தவிர்ப்பது மனிதகுலத்தின் ஆறில் ஒரு பகுதியைத் தவிர்ப்பதாகும். அது மட்டுமல்லாமல், பிறப்பு விகிதங்கள் ஏன் குறைகின்றன என்பதற்கு உலகம் முழுவதும் பொருந்தாத கோட்பாடு உருவாவதற்கும் இது வழிவகுக்கும். பொருளாதார வல்லுநர்களான டீன் ஸ்பியர்ஸ், மைக்கேல் ஜெருசோ ஆகிய இருவரும் இணைந்து 2025ஆம் ஆண்டு எழுதிய ஆஃப்டர் தி ஸ்பைக்: பாப்புலேஷன், ப்ரோக்ரஸ், அண்ட் தி கேஸ் ஃபார் பீப்பிள் (After the Spike: Population, Progress, and the Case for People) என்னும் நூலில், கருவுறுதல் ஏன் குறைகிறது என்பதைப் புரிந்துகொள்ள உலகெங்கிலுமிருந்து நம்பகமான தரவுகளைத் திரட்டியுள்ளார்கள். வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்காகத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பணியிலிருந்து விலகும் பெண்களுக்கு ஏற்படும் இழப்பு கணிசமானது என்றும் நிரூபிக்கப்படக்கூடியது என்றும் ஸ்பியர்ஸும் ஜெருசோவும் வாதிடுகிறார்கள். ஆனால் இது இந்தியாவில் பொருந்தவில்லை. “தொழிலைத் துறப்பதால் ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்ட பிறகு கருவுறுதல் குறைவதற்கான மாபெரும் கோட்பாட்டைக் கண்டடைந்துவிட்டோம் என்று நினைப்பது நம் மனதுக்கு உகந்த்தாக இருக்கலாம். ஆனால், பெண்கள் தங்கள் தொழிலைத் தொடர்வதற்கான சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் பெற்றால் மட்டுமே குறைந்த பிறப்பு விகிதங்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு அனைவருக்கும் பொருந்தக்கூடிய கோட்பாடாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது,” என்று அவர்கள் எழுதுகிறார்கள். “இந்தியாவைக் கவனியுங்கள். இந்தியா குறைந்த கருவுறுதலை அடைந்த பாதை, கருவுறுதல் குறைவுக்கான இந்தக் கோட்பாட்டிற்கும், கருவுறுதல் குறைவுக்கான பெரும்பாலான மற்ற கோட்பாடுகளுக்கும் சவாலாக விளங்குகிறது” என்கிறார்கள். ஸ்பியர்ஸும் ஜெருசோவும் சுட்டிக்காட்டுவதுபோல, உலகளாவிய முறை என்று எதுவும் இல்லை. இந்தியாவில் வயது வந்த பெண்களில் பெரும்பாலானோர் வீட்டிற்கு வெளியே ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபடுவதில்லை. கிழக்கு ஆசியா அல்லது ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான பெண்கள் அப்படி ஈடுபடுகிறார்கள். ஆனால் இரு பகுதிகளிலும் பிறப்பு விகிதங்கள் ஒரே அளவில் உள்ளன. இந்தியாவைவிட அதிகத் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களைக் கொண்ட, அதே சமயம் அதிகப் பிறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளும் உள்ளன. இந்தியப் பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வயதும் கிழக்கு ஆசியா, வட அமெரிக்கா அல்லது ஐரோப்பாவைவிடக் குறைவாகவே உள்ளது. அதாவது, இந்தியாவைப் பொறுத்தவரை, பெண்கள் தங்கள் தொழில் அல்லது வேலைக்காகக் குழந்தை பிறப்பதைத் தாமதப்படுத்துவது என்பது கருவுறுதல் குறைவதற்கான விளக்கமாக இல்லை. “இந்தியாவில், பெற்றோருக்கான பொறுப்புக்கும் பெண்களின் தொழிலுக்கும் இடையில் மோதல் இல்லாமல் குறைந்த கருவுறுதல் நடக்கிறது,” என்று ஸ்பியர்ஸும் ஜெருசோவும் எழுதுகிறார்கள். அப்படியானால், இந்தியாவிலும் மற்ற இடங்களிலும் பிறப்பு விகிதங்கள் ஏன் குறைகின்றன? ஸ்பியர்ஸும் ஜெருசோவும் இதற்கான பொதுவான கோட்பாடு இருக்க முடியாது என்று வாதிடுகிறார்கள். குறைந்த பிறப்பு விகிதங்களைப் பற்றி நாம் அறியாதவை நிறைய உள்ளன என்கிறார்கள். இந்தியா ஏற்படுத்தும் சிக்கலே இதற்கு ஓரளவு காரணம் என்றும் கூறுகிறார்கள். தாராளமயம், பெண்ணியம் ஆகியவற்றின் எழுச்சி, திருமணம், மத ஆதிக்கம் ஆகியவற்றின் சரிவு, தொழிலாளர் பங்கேற்பில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்தல் உள்ளிட்ட மேற்குலகுக்குப் பொருந்தும் பல கருதுகோள்கள் இந்தியாவுக்குப் பொருந்தாது. உலகமானது பலவிதமான, சிறியதும் பெரியதுமான வழிகளில் மேம்பட்டுள்ளது; இது குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் இழப்புகளை மிக அதிகமாக ஆக்குகிறது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். இதில் பொருளாதார இழப்புகள் மட்டுமின்றி, கண்களுக்குப் புலப்படாதவையும் அடங்கும். எளிமையாகச் சொன்னால், குழந்தைகள் இல்லாதபோது மனிதர்கள் தாங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்ய அதிக நேரம் கிடைப்பதால் அவர்கள் பெறும் இன்பங்கள் கூடுகின்றன. “முன்பெல்லாம் ‘பல குழந்தைகளைப் பெறுவது’ என்பது ஒருவருக்கு முக்கியமாக இருந்தது. இப்போது அது, ‘எனக்கு எது முக்கியமோ அதைப் பெறுவது’ என்பதாக மாறிவிட்டது. பழைய மதிப்பீட்டின்படி செயல்படுவதால் எற்படும் இழப்பு அதிகம்” என்று அவர்கள் எழுதுகிறார்கள். கட்டாய மக்கள்தொகைக் கட்டுப்பாடுகளும் நீண்ட கால அளவில் கருவுறுதல் வடிவங்களைக் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றுவதில்லை என்று ஸ்பியர்ஸும் ஜெருசோவும் வாதிடுகிறார்கள். தென்னிந்திய அரசியல்வாதிகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களின் விளைவாகத் தங்கள் மாநிலங்கள் குறைந்த கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளன என்று வாதிட்டாலும், இந்த மாநிலங்கள் உலகின் பிற பகுதிகளைப் போலவே இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் அதே ஏணியில் சற்றுக் கீழே உள்ளன. 5. இந்தியாவில் கருவுறுதலின் எதிர்காலம் என்ன? ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகைப் பிரிவு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதன் உலக மக்கள்தொகைச் சாத்தியப்பாடுகளின் திருத்தத்தை வெளியிடுகிறது. மிக அண்மையில், 2024ஆம் ஆண்டில் அது வெளியிட்ட திருத்தம், அடுத்த 75 ஆண்டுகளுக்கு இந்தியாவின் கருவுறுதல் விகிதம் படிப்படியாகக் குறையும் என்று கூறுகிறது. கணிக்கப்படும் கருவுறுதல், இறப்பு ஆகிய விகிதங்களின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 2060இலிருந்து அதன் மொத்த எண்ணிக்கையில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மற்ற நாடுகளுக்கான ஐ.நா.வின் கணிப்புகளை ஒத்திருக்கிறது. பிற நாடுகளில் அடுத்த 75 ஆண்டுகளுக்குக் கருவுறுதல் மெதுவாகவே குறையும்; சுமார் 1.5முதல் 2வரை கருவுறுதல் விகிதம் இருக்கும் என்று பரந்த அளவில் மதிப்பிடப்படுகிறது. TFR இப்போது 1க்குக் கீழே உள்ள உலகின் ஒரே நாடு தென்கொரியா. இங்கு TFR சற்றே மீண்டு வந்து 1ஐ விட அதிகரிக்கும். பிறகு இந்த நூற்றாண்டின் எஞ்சிய காலத்திற்கு 1க்கு மேல் இருக்கும் என்று ஐ.நா. மதிப்பிடுகிறது. எனினும், ஐ.நா.வின் தற்போதைய மதிப்பீடுகளைவிடக் குறைவான அளவில் கருவுறுதல் குறையக்கூடும். இந்தியாவின் சொந்த மக்கள்தொகை மதிப்பீடுகள் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து தயாரிக்கப்பட்டதால் பழையவை. இந்த மதிப்பீடுகள், 2035 வாக்கில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உட்படக் குறைந்தது ஏழு முக்கிய இந்திய மாநிலங்களில் TFR 1.5 ஆக இருக்கும் என்று கூறுகின்றன. இவையும் குறைவான மதிப்பீடுகளாக இருக்க வாய்ப்புள்ளது. பிகார் போன்ற மாநிலங்களின் TFR, 2023 வாக்கில், ஏற்கனவே 2011ஆம் ஆண்டின் மதிப்பீடுகளைவிடக் கணிசமாகக் குறைவாக இருந்தது. இந்திய அரசியல்வாதிகள் சிலரும் மக்கள்தொகை நிபுணர்களும் குறைந்த பிறப்பு விகிதங்களின் சவால்களை அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறைந்த பிறப்பு விகிதத்தை மாற்றியமைக்கத் தேவையான கொள்கைகளையும் பரிந்துரைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இருப்பினும், இந்த மாற்றங்கள் எளிதில் நடக்காது என்று வரலாறு சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில், இந்தியாவில் நடக்கும் விவாதம் பெரும்பாலும் அதன் மக்கள்தொகை வரலாறு பற்றிய தவறான வாசிப்பையும், பொதுக்கொள்கையே கருவுறுதலைக் குறைத்தது என்ற நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டது. 1950 முதல், 26 நாடுகளில் TFR 1.9க்குக் கீழே குறைந்துள்ளது என்று ஸ்பியர்ஸும் ஜெருசோவும் கண்டறிந்துள்ளனர். “இந்த இருபத்தி ஆறு நாடுகளில் ஒன்றில்கூட, வாழ்நாள் பிறப்பு விகிதம் மக்கள்தொகையை நிலைப்படுத்தும் அளவுக்கு மீண்டும் உயர்ந்ததில்லை. கனடா, ஜப்பான், ஸ்காட்லாந்து, தைவான் என எந்த எந்த நாட்டிலும் இல்லை. இந்த நாடுகளில் சிலவற்றில், குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு உதவும் கொள்கைகள் தங்களிடம் இருப்பதாக அரசாங்கங்கள் கூறுகின்றன. ஆனால் இதனால் பிறப்பு விகிதம் உயர்ந்துவிடவில்லை. இந்த நாடுகள் அனைத்தும் இரண்டுக்கும் குறைவான பிறப்பு விகிதங்களைக் கொண்டவையாகவே தொடர்கின்றன.” இந்திய அரசியல்வாதிகள் பிறப்பு விகிதங்களை அதிகரிக்க அறிவுறுத்தல்கள், ஊக்கத்தொகைகள் ஆகிய இரட்டை உத்திகளைப் பயன்படுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது. எந்த உத்தியும் வேலை செய்ய வாய்ப்பில்லை என்று சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. நிலைமையை மாற்றவே முடியாத நிலையில், இந்தியச் சமூகம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தாக்கங்கள் உள்ளன. இவற்றில் முதலாவது, மக்கள்தொகைக்குள் நிலவும் வயது விகிதங்கள் மாறியதற்கான அச்சுறுத்தலும் அது சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்களும் ஆகும். (இந்தத் தொடரின் 3ஆவது பகுதி, மாநில அளவில் இந்த விஷயத்தைக் கையாள்கிறது). இது இந்தியப் பெண்களின் வாழ்க்கையிலும், குறிப்பாகத் தொழிலாளர் படையில் அவர்களது பங்களிப்பிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கமும் உள்ளது. வேலை செய்வதாகவோ அல்லது வேலை தேடுவதாகவோ தெரிவிக்கும் வயதுவந்த இந்தியப் பெண்களின் பங்கு ஆண்களில் பாதியைவிடக் குறைவாகவும், உலகின் பிற பகுதிகளைவிடக் கணிசமாகக் குறைவாகவும் உள்ளது. வேலையோ தொழிலோ செய்யவில்லை என்று தெரிவிக்கும் பெண்கள் தங்கள் வீடுகளைக் கவனித்துக்கொள்கிறார்கள். ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளை, முக்கியமாகக் குழந்தைகளைப் பராமரிக்கும் ஊதியம் இல்லாத பணிகளைச் செய்கிறார்கள். இந்தியாவில் பணிபுரியும் மக்கள்தொகையில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான பங்கேற்பு விகிதங்களுக்கு இடையேயான இடைவெளி அவர்களின் இருபதுகளின் பிற்பகுதியில் மிக அதிகமாக உள்ளது. அப்போதுதான் இந்தியப் பெண்களுக்குக் குழந்தைப் பிறப்பு, குழந்தைப் பராமரிப்புப் பொறுப்புகள் ஆகியவை உச்சத்தை அடைகின்றன. இந்தியப் பெண்கள் குறுகிய காலத்திற்குள் தங்கள் கர்ப்பங்களை முடித்துக்கொள்வதால், அவர்கள் தொழிலாளர் சந்தைக்குள் வரலாம். இருப்பினும், உலகின் பிற பகுதிகளில் நடப்பதுபோல இந்தியப் பெண்கள் தங்கள் முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் வயது உயரத் தொடங்கும்போது, தொழிலாளர் சந்தையில் பெண்கள் நுழையும் அல்லது மீண்டும் நுழையும் காலமும் காலப்போக்கில் மாறலாம். குறைவான குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால்தான் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் மேம்பட்ட வாழ்க்கை அமையும் என்னும் நம்பிக்கையில் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்ட ஒரு சமூகத்தின் அபிலாஷைகள் எவ்வாறு பூர்த்தி செய்யப்படும் என்ற கேள்வியும் உள்ளது. இந்தியப் பெண்கள் குறைந்த எண்ண்ணிக்கையில் குழந்தைகளைப் பெறுவது தொழிலாளர் சந்தை சார்ந்த காரணிகளால் அல்ல என்றால், அவர்கள் மேலும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ளும் தேர்வுகளை முறையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழலின் தரம் ஆகியவற்றில் மட்டுமின்றி, ஓய்வு, பயணம், கலை, பொது வெளி ஆகியவற்றிலும் இதன் தாக்கங்கள் இருக்கும். குறைந்துவரும் பிறப்பு விகிதங்களை மாற்றியமைக்க வேண்டுமா என்பது கருத்தியல் சார்ந்த திட்டம். இதை மாற்றியமைக்க முடியுமா என்பது தற்போது முற்றிலும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், இன்னும் சிறிது காலத்திற்குக் குறைந்த பிறப்பு விகிதங்களே யதார்த்தமாக இருக்கக்கூடிய நிலையில், சரியான சான்றுகளைக் கொண்டிருப்பதும் விளைவுகளைப் பற்றித் தெளிவாக இருப்பதும் இந்தியா மேற்கொள்ள வேண்டிய அவசரமான அடுத்தகட்டச் செயபாடுகள் ஆகும். கட்டுரையாளர் ருக்மிணி எஸ். ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data for India) நிறுவனத்தின் நிறுவனர். CASIஇன் தொலைதூர ஆய்வாளர். மக்கள்தொகையியல், சுகாதாரம், வீட்டுக் குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இவர் முக்கியமாகக் கவனம் செலுத்தும் பகுதிகள். இதற்கு முன்பு இந்தியச் செய்தி ஊடகங்களில் தரவுசார் இதழியல் பிரிவுக்குத் தலைமை தாங்கியுள்ளார் Whole Numbers Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India (Westland, 2021) என்ற புத்தகத்தின் ஆசிரியர். தமிழில்: டி.ஐ. அரவிந்தன் நன்றி: பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இணையதளம் இந்தக் கட்டுரை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ‘இந்தியாவைப் பற்றிய மேம்பட்ட ஆய்வுக்கான மையம்’ என்னும் (Center for the Advanced Study of India, University of Pennsylvania) அமைப்பு நடத்தும் இணையதளத்தில் வெளியானது. https://minnambalam.com/indias-population-puzzles-part-2/
-
தமிழகத்தை நொதிக்கச் செய்தல்: தமிழக நீக்கம்=தமிழ்த் தேசிய நீக்கம் ? - நிலாந்தன்
தமிழகத்தை நொதிக்கச் செய்தல்: தமிழக நீக்கம்=தமிழ்த் தேசிய நீக்கம் ? - நிலாந்தன் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதியுள்ளார். “இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி” எழுதப்பட்ட அக்கடிதத்தில், 1985இல் முன்வைக்கப்பட்ட திம்புக் கோட்பாடுகளின் “கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும் எந்த ஒரு புதிய அரசியலமைப்பும் அநீதி மற்றும் நிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கும் என்றும் இது மீண்டும் மோதல்களுக்கும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். தமிழ் நாட்டு முதலமைச்சர் அவ்வாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியமை என்பது தமிழ் தேசிய பேரவையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கடந்த மாதம் மேற்கொண்ட தமிழக விஜயத்தின் விளைவு என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவை மீறி இலங்கை இனப் பிரச்சினைக்கு எந்தவோர் வெளியேரசோ அல்லது பன்னாட்டு நிறுவனமோ தீர்வை தர முடியாது என்பதற்கு கடந்த 42 ஆண்டுகள் சான்று. இந்திய மத்திய அரசை அசைக்க வேண்டும் என்றால் தமிழகம் நொதிக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. எனவே இந்தியாவை கையாள்வது என்பது ஈழத்தமிழ் நோக்கு நிலையில் முதலில் தமிழகத்தை வெற்றிகரமாக கையாள்வது தான். மிகக்குறிப்பாக கட்சி பேதங்களைக் கடந்து தமிழகத்தை கையாள்வதுதான். தமிழ்நாட்டில் 8 கோடி தமிழர்கள் இருக்கத்தக்கதாக ஈழத் தமிழர்கள் அனாதைகளாக கை விடப்பட்டிருக்கும் ஒரு நிலைமை காணப்படுகிறது என்று அண்மையில் கஜேந்திரக்குமார் ஆற்றிய உரை ஒன்றில் தெரிவித்திருந்தார். கடந்த 13 ஆம் தேதி நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடந்த ஒரு அரசியல் கருத்தரங்கில் அவர் அவ்வாறு தெரிவித்தார். ஆனால் இந்தியாவைக் கையாள வேண்டும் என்று கூறிய விமர்சகர்களையும் செயற்பாட்டாளர்களையும் சிறுமைப்படுத்திய ஒரு கட்சியின் தலைவர், இப்பொழுது இந்தியாவைக் கையாள வேண்டும்; தமிழகத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வந்திருப்பது திருப்பகரமான மாற்றம்தான். ஆனால் இந்த மாற்றம் ஏற்படுவதற்கிடையில் கடந்த 16 ஆண்டுகளுக்குள் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன? அந்த மாற்றங்களின் விளைவாக தமிழ்த் தேசிய அரசியலானது அதன் பேர பலத்தை இழந்துவருகிறது. அனைத்துலக அளவிலும் அது பலமாக இல்லை; உள்நாட்டிலும் பலமாக இல்லை. அதன் விளைவாக தனக்கு தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று கூறும் தேசிய மக்கள் கட்சி அரசாங்கமானது தான் விரும்பிய ஒரு தீர்வை தமிழ் மக்களின் மீது திணிக்க கூடிய ஆபத்து அதிகமாக உள்ள ஒரு காலகட்டம் இது என்பதை தனது மேற்படி மேற்படி உரையில் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார். அதாவது ஈழத் தமிழர்கள் ராஜதந்திரத்தை கற்றுக் கொள்வதற்கிடையில் தாயகத்தில் தமிழ் மக்கள் தமது பேர சக்தியை பெருமளவுக்கு இழந்து விட்டார்கள் என்பதுதான குரூரமான கள யதார்த்தம் ஆகும். இந்த யதார்த்தத்தின் பின்னணியில்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை தமிழகத்தைக் கையாள்வது என்ற முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் ஒப்பீட்டளவில் அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியானது அவ்வாறான முடிவை எடுத்திருக்கிறதா? சிறீதரன் தமிழகத்தை நோக்கித் தொடர்ச்சியாகச் சென்று வந்திருக்கிறார். அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுமந்திரன் போயிருக்கிறார். சாணக்கியன் போயிருக்கிறார். ஆனால் இவர்கள் தமிழகத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்களையும் முக்கியஸ்தர்களையும் பெருமளவுக்கு சந்தித்ததில்லை. அல்லது அவ்வாறு தமிழகத் தலைவர்களை சந்திக்க வேண்டும் என்ற கொள்கை முடிவின் அடிப்படையில் கட்சியின் தூதுக்குழு ஒன்று தமிழகத்திற்குச் செல்லவில்லை. தமிழகத்தை நீக்கும் ஓர் அரசியல் அணுகுமுறை தமிழரசுக் கட்சியிடம் இருந்தது என்ற பொருள்பட திவ்ய ஜீவனத்தில் நடந்த கருத்தரங்கில் கஜேந்திரக்குமார் உரையாற்றினார். நாடாளுமன்றத்தில் இப்போதுள்ள தமிழ்ப் பிரதிநிதிகள் பெரும்பாலானவர்கள் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டவர்கள். அவர்கள் தங்களுடைய வாக்குறுதிகளை மீறிப் போகாமல் இருப்பதற்கு தமிழகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பொருள்கொள்ளத்தக்க விதத்தில் கஜனின் உரை அமைந்திருந்தது. இனப்பிரச்சினைக்கு ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வைப் பெறுவதற்கு தமிழகம் தேவையில்லை. இதை கஜனின் வார்த்தைகளில் சொன்னால், தமிழ்த் தேசிய நீக்கம் செய்ய விரும்பும் சக்திகளுக்குத் தமிழகம் தேவையில்லை. தமிழ்த் தேசிய நீக்கம் என்பது இனப்பிரச்சினை அரசியலைப் பொறுத்தவரை தமிழக நீக்கமும்தான். கடந்த 16 ஆண்டுகளில் குறிப்பாக சம்பந்தரின் காலத்தில் அவரிடம் இனப் பிரச்சினையை அனைத்துலக மயநீக்கம் செய்யும் ஒரு கொள்கை முடிவு இருந்தது. வெளித்தரப்புகளின் அழுத்தமானது சிங்கள மக்களை பயமுறுத்துவது. அதனால் உள்நாட்டுத் தீர்வு ஒன்றைப் பெற முடியாது என்றும் சம்பந்தர் நம்பினார். ஆனால் இனப்பிரச்சினை எனப்படுவது சாராம்சத்தில் ஓர் அனைத்துலக பிரச்சினைதான். அதற்கு அனைத்துலக தீர்வுதான் உண்டு என்ற மிக அடிப்படையான ஓர் உண்மையை,சமன்பாட்டை சம்பந்தர் விளங்கிக் கொள்ளவே இல்லை. அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை. நிலை மாறு கால நீதியின் கீழான யாப்புருவாக்க முயற்சிகளில் அவருடைய நடவடிக்கைகள் அதை நிரூபித்தன. அந்த நடவடிக்கைகளை அவர் முழுக்க முழுக்க நம்பினார். அந்த நம்பிக்கையினால்தான் அவர் ஒவ்வொரு நல்ல நாள் பெருநாளுக்கும் தீர்வு வரும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார். ஆனால் மூன்றாவது தரப்பொன்றின் அழுத்தம் இல்லாமல் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரு தீர்வுக்கு வர முடியாது என்ற கசப்பான யதார்த்தம் அவருடைய முகத்தில் அறைந்த பொழுது ஒரு தோல்வியுற்ற தலைவராக அவர் இறந்தார். அவருடைய யாப்புருவாக்க முயற்சியின் பங்காளிகளில் ஒருவராகிய மைத்திரியே அந்த முயற்சியை காட்டிக் கொடுத்தார். ஏனென்றால் மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தமோ கண்காணிப்போ அங்கே இருக்கவில்லை. நிலைமாறு கால நீதியின் கீழ் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையானது அவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடிய ஒரு தரப்பாக இருக்கவில்லை. எனவே ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வை பெறுவதற்கான தமிழ்த் தேசிய நீக்க அரசியல் என்பது அதன் நடைமுறை அர்த்தத்தில் தமிழக நீக்கமும்தான். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டு ஒரு நாடாளுமன்றம் தரக்கூடிய எந்த ஒரு தீர்வும் வெளிப்படையான சமஸ்டியாக இருக்காது என்பதே கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலான அனுபவம். அதை இன்னொரு விதமாகச் சொன்னால் தன்னை “சமஷ்டிக் கட்சி” என்று அழைத்துக் கொள்ளும் தமிழரசுக் கட்சியின் அனுபவம் என்றும் கூறலாம். எனவே இனப்பிரச்சினைக்கு நாடாளுமன்றத்துக்கு ஊடாக கிடைக்கும் எந்த ஒரு தீர்வும் அப்படித்தான் இருக்கும். நாடாளுமன்றத்துக்கு வெளியே மூன்றாவது தரப்பொன்றின் அழுத்தம் இருக்க வேண்டும். அவ்வாறு மூன்றாவது தரப்பு ஒன்றும் அழுத்தம் இருந்த காரணத்தால்தான் இந்திய இலங்கை உடன்படிக்கை சாத்தியமாகியது. ரணில்- பிரபாகரன் உடன்படிக்கை சாத்தியமாகியது. மூன்றாவது தரப்பு உள்ளே வர வேண்டும் என்றால் தமிழ் மக்கள் போராட வேண்டும். தமிழ் மக்கள் போராடினால்தான் ஒரு மூன்றாவது தரப்பை தமக்குச் சாதகமாக அரங்கில் இறக்கலாம். தமிழகத்தைக் கையாள்வதற்கும் அதுதான் முன் நிபந்தனை. தமிழ் மக்கள் தாங்கள் கொந்தளிக்காமல்,தமிழகம் தங்களுக்காகக் கொந்தளிக்கவில்லை என்று கேட்பது பொருத்தமில்லை. தமிழ்த் தேசிய அரசியலை தமிழ்க் கட்சிகள் நொதிக்க வைக்கவில்லை என்றால் தமிழகம் எப்படி நொதிக்கும்? எனவே முதலில் தமிழ்த் தேசிய பேரவையும் உட்பட தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தமிழரசியலை நொதிக்க வைக்கவேண்டும். பொங்கல் கொண்டாட்டத்துக்கு வந்த அனுரவோடு செல்பி எடுக்க முண்டியடித்த ஒரு பகுதி தமிழ் மக்களையும் நொதிக்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு பௌர்ணமி நாளும் தையிட்டியில் நொதிப்பதால் மட்டும் தமிழரசியலை தொடர்ச்சியாக நொதிக்க வைக்க முடியாது. அதற்குமப்பால் தமிழ்த் தேசிய அரசியலை தேர்தல் அரசியலுக்கு வெளியே போராட்ட அரசியலாக நொதிக்க வைத்தால் மட்டும்தான் தமிழகம் நொதிக்கும். தமிழகம் நொதித்தால்தான் பிராந்தியம் நொதிக்கும். அப்பொழுதுதான் இந்திய மத்திய அரசின் வெளியுறவு முடிவுகளில் அது தாக்கத்தைச் செலுத்தும். இந்த ஆண்டு பிறந்தபோது அனைத்துலக அரசியலில் இரண்டு செய்திகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. ஒன்று,உக்ரைன் பற்றியது. மற்றது,வெனிசுலா பற்றியது. கடந்த மாதம் 15ஆம் திகதி,உக்ரைன் நேட்டோவில் இணைவைதென்ற அதன் முன்னைய முடிவைக் கைவிடுவதாக அறிவித்திருந்தது. உக்ரைன் போர் எனப்படுவது பிராந்திய யதார்த்தத்தை மீறி உக்ரைன் நேட்டோவில் இணைய முற்பட்டதால் ஏற்பட்டது. அது ரஷ்யாவின் பிராந்தியம். ரஷ்யாவின் செல்வாக்கு மண்டலத்தில் காணப்படும் உக்ரைன் அந்த பிராந்திய யதார்த்தத்தை மீறி நேட்டோவுடன் இணைவது என்று முடிவெடுத்ததன் விளைவுதான் யுத்தம். இப்பொழுது உக்ரைன் பிராந்திய யதார்த்தத்தைச் சுதாகரித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனின் முடிவை மாற்றியதில் அமெரிக்காவுக்கும் பங்குண்டு. இது நடந்து கிட்டத்தட்ட இரு கிழமைகளின் பின் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா தனது செல்வாக்கு மண்டலத்தில் காணப்படும் வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்தி அதன் அதிபரைக் கைது செய்து கடத்திச் சென்றிருக்கிறது. ஒரு பேரரசின் செல்வாக்கு மண்டலத்துக்குள் வாழும் பலவீனமான ஒரு நாடு அனுபவிக்க கூடிய இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் அளவைக் குறிக்கும் ஆகப்பிந்திய உதாரணம் இது. இவ்வாறு மிகக்குறுகிய காலத்துக்குள் இரண்டு வேறு பிராந்தியங்களில் பேரரசுகளின் செல்வாக்கு மண்டலத்தில் வாழும் பலவீனமான மக்கள் கூட்டங்களுக்குள்ள வரையறைகளை உணர்த்திய இரண்டு ஆகப்பிந்திய உதாரணங்கள் இவை. இந்தியப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்துள் வாழும் சிறிய அரசற்ற மக்கள் கூட்டமாகிய ஈழத் தமிழர்கள், தமது விடுதலையை வென்றெடுப்பதற்கான தீர்க்கதரிசனம் மிக்க உபாயங்களை வகுக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தும் இரண்டு ஆகப்பிந்திய உதாரணங்கள் இவை. இந்த உதாரணங்களின் பின்னணியில்தான்,தமிழ் நாட்டின் முதலமைச்சர் இந்திய மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு உள்ள முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். https://www.nillanthan.com/8072/
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கிரிப்டோவில் நான் ஈடுபடுவதில் சிலவற்றை சொல்லி இருக்கிறேன். அனல், இந்த வாய்ப்பை பகிர்வது, இப்படியான mining இல் ஈடுபட விரும்புவோருக்கு. இங்கே உள்ள பெரும்பான்மை இதை பொருட்படுத்தாதது என்றே நினைக்கிறேன் அனால், சிலர் இதை அக்கறையாக எடுக்கலாம். எதுவாயினும், எந்த (நிதி , கணனி, செல்லிடப் பேசி உட்பட மற்றும் அதை போன்ற) பொறுப்பையும் நான் எடுக்கவில்லை, இது அறிவதற்கு மாத்திரம். அறிவுரை (advice ) அல்ல எதுவாயினும் உங்கள் ஆய்வின், அக்கறை, முடிவின் மூலமாக ஈடுபடவும். (இங்கே பகிர்வதன் ஒரு காரணம் கிரிபோடோ எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பதை காட்டவும்) இப்போதைக்கு இது 1 பக்க mining application . ஆகவே இதை பாவைத்து அந்த குறிப்பிட்ட கிரிப்டோவை mine செய்யலாம் கீரிப்பூவில் இப்போது இருக்கும் trend ஆனா rwa - real world assets tokenisation ஒரு மிகச் சிறிய அம்சம். இதன் ஈர்ப்பு - index market tokenisation. தற்செயலாக index market tokenisation சரிவரவில்லை என்றால், நீங்கள் செலவழிக்கும் நேரம் மட்டுமே இழப்பு. ஏனெனில் இது ஆரம்ப நிலை. IndexMarketCap - Your crypto companion.Turn your mobile phone in Crypto Index Fund miner with #IMC10 now!இது mobile application. மொபைல் இல் உள்ள browser இல் மேலே உள்ள இணைப்பை தொடங்கவும். இன்ஸ்டால் செய்த பின் உடனடியாக தொடங்காமல், App Analyzer போன்ற application ஐ பாவித்து, ஆய்வு செய்த்து உறுதி படுத்தி கொள்ளலாம் இந்த அப்ப்ளிகாடின் பாதகமானது இல்லை என்று. (mining இல் எவ்வளவு கூட நடக்கிறதோ எல்லோருக்கும் mining வீதத்தை கூட்டும், நீங்கல் தொடர்ந்து mine பண்ணினால் அதில் மிகச்சிறிய பகுதி எனது பங்குக்கு வரும்.) (தொழில்நுட்ட்ப அறிவு தடையாக இருக்க கூடாது என்பதும் கிரிப்டோவில் உள்ள நம்பிக்கை எனவே தொழில்நுட்பதில் உங்களுக்கு நம்பிக்கை குறைவு என்றால், இளம் சாந்தியிடம் உதவி பெறவும்) (நிர்வாகம் இதை முன்பகுதியில் சிறிது நேரம் வைத்து இருக்கலாம்)
-
சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கிய தமிழ்ப் பட்டம்? - நிலாந்தன்
சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கிய தமிழ்ப் பட்டம்? - நிலாந்தன் வல்வெட்டித் துறை பட்டத் திருவிழா ஒரு பருவ காலப் பொழுதுபோக்குப் போட்டி மட்டுமல்ல. அது ஒரு பண்பாட்டுப் பெருவிழா. தமிழ் மக்களின் தேசிய ஆன்மாவை பிரதிபலிக்கும் ஒரு பெரு விழா. பட்டத் திருவிழாக்களின் தொடக்கம் பண்டைய சீனாவாகும். அங்கே பட்டங்கள் விவசாயச் சடங்குகளோடும் யுத்தத் தேவைகளோடும் இணைக்கப்பட்டிருந்தன. சீனாவில் இருந்து ஆசியாவுக்குப் பட்டங்கள் பரவின. யப்பானிலும் கொரியாவிலும் அவை திருவிழாக்கள்,பொழுதுபோக்குக் கொண்டாட்டங்கள் என்ற வளர்ச்சியைப் பெற்றன. இந்தியாவில் “மகர் சங்கராந்தி” என்ற இந்துப் பெருவிழாவோடு பட்டத் திருவிழாவும் இணைத்துக் கொண்டாடப்படுகின்றது. ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக வனையும் அம்சங்களில் ஒன்று பொதுப் பண்பாடு ஆகும். ஒரு மக்கள் கூட்டத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைத் திருவிழாக்கள், உணவுத் திருவிழாக்கள்,பட்டத் திருவிழாக்கள்… போன்றன அம்மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாக, உணர்வுபூர்வமாகப் பிணைக்கின்றன. வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவானது, தமிழ் மக்களின் மகிழ்ந்திருக்கும் இயல்பை,கொண்டாட்ட உணர்வை, அழகுணர்ச்சியை, கலையுணர்வை, பட்டம் கட்டும் தொழில்நுட்பத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அதைவிட ஆழமான பொருளில் தமிழ் மக்களின் வீரத்தை, அரசியல் உட்கிடக்கைகளை வெளிப்படுத்துகின்றது. அந்தப் பட்டங்களில் சமூக விமர்சனம் உண்டு, போர் உண்டு, போர்க்கால நினைவுகள் உண்டு. பொழுதுபோக்கு உண்டு. சிங்கக் கொடியும் உண்டு. தமிழ்ப் போர்க் கப்பலும் சில ஆண்டுகளுக்கு முன்பு பறக்க விடப்பட்டது. ஈழத் தமிழ்ப் பட்டத் திருவிழாக்களில், பருவக்காற்றில் பறக்க விடப்படுவது, தனிய பொழுதுபோக்குப் பட்டங்கள் மட்டுமல்ல. ஈழத் தமிழர்களின் கூட்டு உளவியலுக்குள் பதுங்கியிருக்கும் அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பட்டங்களும் உண்டு. அந்த அரசியல் விருப்பங்களை கலையாக,விளையாட்டாக,போட்டியாக தமிழ் மக்கள் வெளிப்படுத்துகிறார்கள். பாடசாலைப் பிள்ளைகள் தங்களுடைய வினோத உடைப் போட்டிகளின் போதும் அல்லது விளையாட்டுப் போட்டிகளில் இல்லங்களைச் சோடிக்கும்போதும் அங்கேயும் சிலசமயம் அரசியல் வாடை வீசும். அதன் பின் அங்கே புலனாய்வுத்துறை வந்து நிற்கும். கடைசியாக நடந்த சூரன் போரிலும் அந்த அரசியல் இருந்தது. கடைசியாக நடந்த பட்டத் திருவிழாவுக்கு சில நாட்களுக்கு முன்பே ஒரு புலிமுகப் பட்டம் சமூகவலைத் தளங்களில் வலம் வந்தது. ஆனாலது வல்வெட்டித்துறையில் பறக்க விடப்படவில்லை. பதிலாக மண்டான் வெளியில் அன்று பகல் பறக்க விடப்பட்டது என்றும் பின்னர் அதைப் படைத்தரப்பு தடுத்து கீழிறக்கி வடடதாகவும் தகவல் உண்டு. பறக்க முடியாத பட்டங்களும் உண்டு? தமிழ் மக்கள் இவ்வாறு விளையாட்டுக்களிலும்,விழாக்களிலும்,போட்டிகளிலும், கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தங்களுடைய அரசியல் பெரு விருப்பத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒருபுறம் ஜனாதிபதி தமிழ்ப் பகுதிகளுக்கு வருகை தரும் போது அவரோடு செல்பி எடுக்க அவரைப் பார்க்க, கைகுலுக்க ஒரு தொகுதி தமிழர்கள் வருகிறார்கள். அல்லது அழைத்து வரப்படுகிறார்கள். அவர்கள் ஜனாதிபதியை நெருங்க முண்டியடிக்கும் காட்சிகளை அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணியும் சில யுடியூப்பர்களும் “வைரல்” ஆக்குகிறார்கள். இதே மக்கள் மத்தியில் இருந்துதான் பட்டத் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், சூரன் போர் போன்ற விழாக்களில் அரசியல் விருப்பம் வெளிப்படக் காண்கிறோம். சிறுவயதில் பழைய பாடத்திட்டங்களில் படித்த ஒரு பாடல். பண்டிதர் சச்சிதானந்தம் எழுதியது. 50 வயது கடந்த அநேகருக்கு ஞாபகத்தில் இருக்கும். “சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கிவிட்டது எங்கள் பட்டம்.தொங்கும் அதை எடுத்து வர தூரப்போகும் புறாவாரே…” என்ற தொடரும் ஒரு பாடல் அது. சின்னப் பிள்ளைகள் பட்டம் ஏற்றி விளையாடும்போது காற்றில் அசைந்த பட்டம் தவறுதலாக சிங்கம் படுத்திருந்த தோட்டத்தின் மரக்கிளையில் சிக்கிவிடும். அதை எடுப்பதற்கு சின்னப் பிள்ளைகள் ஒவ்வொரு மிருகத்திடமும் உதவி கேட்பார்கள். முடிவில் ஒட்டகச்சிவிங்கி மட்டும் உதவிக்கு வரும். அதன் நீண்ட கழுத்தில் ஏறி பட்டத்தை மீட்பார்கள். அது குழந்தைப் பிள்ளைகள் வானில் ஏற்றிய பட்டம். ஆனால் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ் மக்கள் அரசியல் வானில் ஏற்றிய பட்டங்கள் யாவும் வாள் ஏந்திய சிங்கத்தின் தோட்டத்தில்தான் வீழ்ந்து விட்டன. அகிம்சைப் போராட்டத்திலும் ஆயுதப் போராட்டத்திலும் ஏற்றிய எல்லாப் பட்டங்களும் அப்படித்தான். வாள் ஏந்திய சிங்கத்தின் தோட்டத்தில் வீழ்ந்துவிட்டன. 2009க்குப் பின்னரான கடந்த 16 ஆண்டுகளாக சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கிய தமது பட்டத்தை மீட்க தமிழ் மக்களால் முடியவில்லை. ஒருபுறம் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம், தமிழ்க் கட்சிகள் வாலறுந்த பட்டங்களை ஏற்றிக் கொண்டிருக்கின்றன. தமிழ்மக்கள் அரசியல் நீக்கம் செய்யப்படுகிறார்கள். ஒரு பகுதி தமிழர்கள் அரசியலில் சலிப்பும் வெறுப்புமடைந்து வருகிறார்கள். புதிய ஆண்டின் தொடக்கமே ஆபாச அரசியல் காணொளியாக இருந்தது. உள்ளதில் பெரிய தமிழ்க் கடைசிக்குள் காணப்படும் இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மற்றவரை வில்லனாக்குகிறார்கள். பொங்கல் விழாவில், ஜனாதிபதியோடு கைகுலுக்க,செல்ஃபி எடுக்க ஒரு பகுதி தமிழர்கள் முண்டியடிக்கிறார்கள். செல்ஃபி யுகத்தில், சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கிய பட்டத்தைக் கிழியாமல் எடுக்க இப்படிப்பட்ட கட்சிகளால் முடியுமா? ஒட்டகச் சிவிங்கி எங்கிருந்து வரும்?அல்லது ஒட்டகச்சிவிங்கியாய் உயரப்போவது யார்? https://www.nillanthan.com/8075/
-
அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனுக்கு கட்சியில் நீக்கப்பட்டதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனின் விடயம் தொடர்பாக முக்கிய விடயம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரியநேத்திரனின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தற்போதுதான் அவருக்கு கடிதம் கிடைக்கப்பெற்று இருக்கிறது. பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் மூலமாக கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு முதல் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கவில்லை. கட்சியின் அரசியல் குழு கூடி குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தை நானும் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆகவே அவர் இப்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.” என்றார். https://akkinikkunchu.com/?p=356525
-
மட்டக்களப்பு வவுணதீவில் வயல்களை நாசமாக்கிய காட்டுயானை ; நீண்ட நேரப் போராட்டத்தின் பின் காட்டுக்குள் விரட்டியடிப்பு
மட்டக்களப்பு வவுணதீவில் வயல்களை நாசமாக்கிய காட்டுயானை ; நீண்ட நேரப் போராட்டத்தின் பின் காட்டுக்குள் விரட்டியடிப்பு 18 Jan, 2026 | 04:45 PM மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்சேனை கிராமத்தில் பெரும்போக நெற்செய்கை வேளாண்மை வயல்களுக்குள் நேற்று (17) மாலை நுழைந்த காட்டு யானை பல மணிநேரங்கள் வயல்வெளிக்குள் நின்று, விளைந்த பெருமளவு நெல்மணிகளை உட்கொண்டுள்ளன. குறித்த யானையை அப்பிரதேசத்திலிருந்து விரட்டியடிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு யானை வெடிகள் கொழுத்திப்போட்டு, பல மணிநேர போராட்டத்தின் பின்னர், அந்த யானையை காட்டுப்பகுதிக்கு அதிகாரிகள் விரட்டினர். யானையின் அட்டகாசத்தினால் பல ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட நெல் வயல்கள் நாசமாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் காட்டு யானைகளிடமிருந்து மக்களையும் பொருட்களையும் பாதுகாக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். https://www.virakesari.lk/article/236360
-
தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்
தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல் 18 Jan, 2026 | 12:52 PM தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பாவிக்காதிருப்பது ஏன் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இன்று (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழர் திருநாளில் தமிழர் தாயகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் சிங்கள பௌத்த ஆதிக்க இனவாத நோக்கில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரை கட்டடத்தின் பிக்குவை தான் கலந்துகொண்ட கூட்டத்தின் முன் வரிசை ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தவர். இனவாத சட்டவிரோத விகாரை கட்டடத்திற்கு எதிராகவும், இராணுவத்தினரின் தனியார் நிலங்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் போராடுபவர்களை இனவாதிகள் என அடையாளப்படுத்தி தமிழர் தாயக மக்களை அவமானப்படுத்தியுள்ளார். இதுதான் தமிழர் திருநாளில் தமிழர்கள் கொடுத்த பரிசா? என கேட்பதோடு இதற்கான எதிர்ப்பினை தமிழ் தேசப்பற்றாளர் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம். தையிட்டி விகாரையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பது சட்டவிரோத விகாரை கட்டிடத்தை அகற்றி மக்களின் காணிகளை மக்களின் கைகளில் கொடுப்பதாகும். அதுவே தமிழர்களுக்கான நீதியாகவும் அமையும். சட்டம் அனைவருக்கும் சமம். தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பாவிக்காதிருப்பது ஏன்? சட்ட விரோத விகாரைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தயங்குவதாகவும், இனவாத சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு பயந்து நிற்பதாகவும் நாக விகாரை பிக்கு ஜனாதிபதி அவரை சந்தித்த பின்னர் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார். இனவாதம் மதவாதத்தின் காலடியில் விழுந்து கிடக்கும் ஒருவர் சொந்த காணிகளை கேட்டு நடக்கும் போராட்டத்தினை இனவாதம் என குறிப்பிடுவதில் என்ன நியாயம் உள்ளது? தைப்பொங்கல் என்பது உழைக்கும் வர்க்கத்தின் விழா. மண்ணோடு ஒட்டிய வாழ்வின், வாழ்வு கலாச்சாரத்தின், பண்பாட்டின் விழா மட்டுமல்ல மண் தமது வியர்வை விழுந்த மண்ணின் சுதந்திர வாழ்வுக்கான அரசியல் உரிமைசார் விழாவுமாகும். இதனை கௌரவப்படுத்துவது என்பது மண்ணின் மக்களை சுதந்திரமாக வாழ விடுவதாகும். அதற்கான எந்த உறுதிமொழியையும் ஜனாதிபதி தனது உரையில் வெளிப்படுத்தவில்லை. தேர்தல் காலங்களில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறியவர் அதற்கான எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை. விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக தெளிவாக இதனை கூறாதவர் தமிழ் மக்களின் மண்ணில் நின்று தம் மக்களை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களோடு விழா கொண்டாட வந்த ஜனாதிபதி தமிழர்களின் அரசியல் பண்பாட்டு விழாவினை தமது அரசியல் களியாட்ட விழாவாக்கி மகிழ்ந்துள்ளார். தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதியும் அவர்களின் சுதந்திர தினத்திலே தமிழர் தாயகத்தில் அவர்களின் களியாட்ட விழாவாக்க திட்டமிட்டிருப்பார்கள். தமிழ் மக்களின் மண் பல்வேறு வடிவங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு பறிபோய்க்கொண்டு இருப்பது போல எமது தேசிய அரசியலும் தேசிய மக்கள் சக்தியின் போலி அரசியல் களியாட்டங்களால் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் நிலவுகின்றது. இதற்கும் ஜனாதிபதி எமது மண்ணிலிருந்து எம்மை அவமானப்படுத்தியமைக்கும் முழு எதிர்ப்பினை காட்டவும் எதிர்வரும் சுதந்திர தினத்தினை தமிழர் தேசம் தழுவிய கரி நாளாக்க அரசியல் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புகளும் மக்களை திரட்டுவதற்கான செயல் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். விடுதலையை மையப்படுத்தியது சமயங்கள். எனவே அனைத்து சமய தலைமைகளும், அவர்கள் சமய மையங்களும் அதற்கான ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் கேட்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/236339
-
ட்ரம்பை எதிர்க்கும் நெதன்யாகு - காசா அமைதி சபையால் சலசலப்பு
ட்ரம்பை எதிர்க்கும் நெதன்யாகு - காசா அமைதி சபையால் சலசலப்பு 18 January 2026 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள காசா அமைதி சபை தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் அமைத்துள்ள காசா நிர்வாகக் குழுவில், துருக்கி மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டுள்ளதே நெதன்யாகுவின் கோபத்திற்கு முக்கிய காரணமாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அமைதிச் சபையின் உறுப்பினர்கள் குறித்து இஸ்ரேலுடன் முன் கூட்டியே ஆலோசிக்கப்படவில்லை எனவும் இந்த முடிவு இஸ்ரேலின் பாதுகாப்புக் கொள்கைக்கு எதிரானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய துருக்கி மற்றும் கட்டார் போன்ற நாடுகள் காசாவின் நிர்வாகத்தில் ஈடுபடுவது ஹமாஸ் மீண்டும் வலுப்பெற வழிவகுக்கும் என இஸ்ரேல் அஞ்சுகிறது. நெதன்யாகுவின் அமைச்சரவையில் உள்ள தீவிர வலதுசாரி அமைச்சர்களான இத்தாமர் பென் கிவிர் (Itamar Ben Gvir) மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) ஆகியோரும் இந்தத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். "ஹமாஸை உயிருடன் வைத்திருக்க உதவிய நாடுகள், அந்த இடத்திற்கு மாற்றாக வர முடியாது" என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். இஸ்ரேலின் இந்த எதிர்ப்பிற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர், "நாங்கள் பல மாதங்களாகக் காசாவில் யாரும் சாத்தியமில்லை என்று நினைத்த காரியங்களைச் செய்துள்ளோம். இது எங்களது திட்டம், இஸ்ரேல் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/441345/netanyahu-opposes-trump-gaza-peace-council-causes-uproar
-
உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு
உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3,563 கரட் எடையுடைய இந்த அரிய வகை மாணிக்கக்கல், 2023 ஆம் ஆண்டில் இரத்தினபுரி பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கற்களில் இதுவே மிகப்பெரியது எனப் பெயரிடப்பட்டுள்ளதோடு, இது ஒரு இயற்கையான ஊதா நிற மாணிக்கக்கல் என விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. "Star of Pure Land" என இதற்கு பெயரிடப்பட்டுள்ளதோடு, ஆறு கதிர் கொண்ட நட்சத்திர வடிவத்தைக் கொண்டுள்ளது. மற்ற கற்களை விட இது மிகவும் சிறப்பானதாகும் என்றும் கூறப்படுகின்றது. இதன் பெறுமதி 300 முதல் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்டதாகும் என மதிப்பிடப்படபடுவதாக இம்மாணிக்கக்கல்லை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை மாணிக்கக்கல் ஆய்வுகூடத்தின் பிரதம இரத்தினக்கல் ஆய்வாளர் அஷான் அமரசிங்க தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkjkzlev042wo29n043wb2ly
-
கருத்து படங்கள்
- வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.
வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன். “முன்னர் வடமாகாணத்துக்கு தனி ஆட்சி தேவை என்று வடமகாண மக்கள் கூறினார்கள். ஆனால் முதன்முதலாக யாழ் மக்கள் இன்று எங்களுடைய ஆட்சியை தங்களுடைய ஆட்சி என்று நம்புகிறார்கள்..” இது, அனுர யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியது. அவர் அவருடைய பேச்சின் போக்கில் வடக்கு,யாழ்ப்பாணம் போன்ற வார்த்தைகளை அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தி விளங்காமல் கதைத்துவிட்டுப் போகிறார் என்று எடுத்துக் கொள்வதா?அல்லது அரசாங்கம் திட்டமிட்டு வடக்கில் தன் கவனத்தைக் குவிக்கிறது என்பதனை இது காட்டுகிறது என்று எடுத்துக்கொள்வதா? ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின் வடக்கிற்கு மிகக்குறுகிய காலத்தில் அதிக தடவை விஜயம் செய்த ஒரே ஜனாதிபதி அனுரதான்.அப்படித்தான் அவருடைய அமைச்சர்களும். அரசாங்கம் வடக்கை நோக்கி தன்னுடைய முழுக் கவனத்தையும் குவிப்பதை இது காட்டுகிறது. இது இயல்பானது அல்ல. ஒப்பிட்டுப் பார்த்தால் இதே அளவு கவனக்குவிப்பு கிழக்கில் இல்லை.வடக்கின் விவகாரங்களைக் கையாள்வதற்கு என்று அமைச்சர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.பெரும்பாலான அமைச்சர்கள் அடிக்கடி வடக்குக்கு வருகிறார்கள்.அமைச்சர்கள் அல்லது அரச பிரதானிகள் கலந்துகொள்ளும் அரச நிகழ்வுகள் அடிக்கடி வடக்கில் நடக்கின்றன.இவை யாவும் அரசாங்கம் வடக்கை நோக்கி அதன் கவனத்தைத் திட்டமிட்டுக் குவிக்கிறது என்பதைத்தான் காட்டுகின்றன. “பார்க்காத,பழகாத எங்களை நம்பினீர்கள்.உங்களை நாங்கள் கைவிட மாட்டோம்” இதுவும் யாழ்ப்பாணத்தில் வைத்து அண்மையில் ஜனாதிபதி கூறிய வார்த்தைகள்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றியை அவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதனை அது காட்டுகிறது.அந்த வெற்றியை தொடர்ந்து தக்கவைப்பதற்கும்,அடுத்த மாகாண சபையில் அந்த வெற்றியை மேலும் விஸ்தரிப்பதற்கும் திட்டமிட்டு அரசாங்கம் தன் முழுக் கவனத்தையும் வடக்கின் மீது குவிக்கின்றது. அண்மையில் உத்தியோகப்பற்றற்ற விதமாக கிராமமட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி,தேசிய மக்கள் சக்திக்கு கிட்டத்தட்ட முப்பது விகிதமான வாக்கு வங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக கைபேசி செயலிகளின் கைதிகளாகக் காணப்படும் தலைமுறையினர் மத்தியில் அனுரவுக்கு அதிகம் ஆதரவு காணப்படுகிறது. அந்த ஆதரவைத் தக்கவைக்கும் விதத்தில் அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணியானது அனுரவை தொடர்ந்தும் தமிழ்ப் பாடல்களின் பின்னணியில் கதாநாயகராகக் கட்டியெழுப்பி வருகிறது. தற்பொழுது அதிகம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் “பிரஜா சக்தி” என்ற கிராமமட்ட செயல்திட்டமும் அரசாங்கம் அதன் வாக்கு வங்கியை வளர்க்கும் நோக்கிலானது என்று சந்தேகிக்கப்படுகிறது.இதுதொடர்பாக அண்மையில் சுமந்திரன் ஒரு காணொளியில் அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறார். அரசாங்கம் அதன் அரச வளங்களை பயன்படுத்தி கிராம மட்டத்தில் பிரஜா சக்தி என்ற கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.ஆனால் அக்கட்டமைப்பு இறுதியிலும் இறுதியாக தேசிய மக்கள் சக்தி என்ற கட்சிக்கு சேவகம் செய்கின்ற,அந்தக் கட்சியின் ஆதரவுத் தளத்தைக் கட்டிஎழுப்புகின்ற ஒன்றுதான் என்று அண்மையில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன், நல்லூர் திவ்யஜீவன சங்க மண்டபத்தில் ஆற்றிய உரை ஒன்றில் தெரிவித்திருந்தார். இது ஏறக்குறைய மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில்,பசில் ராஜபக்ஷவின் பொறுப்பின் கீழ் காணப்பட்ட அரச கட்டமைப்புகளைப் போன்றது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் உட்பட ஏழு வெவ்வேறு அரசு அலுவலர்கள், அரச சேவை என்ற பெயரில் தாமரை மொட்டுக் கட்சிக்காக கிராம மட்டங்களில் வேலை செய்தார்கள் என்பது பின்னர் தெரியவந்தது. அரச வளங்களைப் பயன்படுத்தி, அரச செலவில், அரச காரியம் என்ற போர்வையில், அவர்கள் கட்சி வேலையைச் செய்தார்கள். கட்சியைக் கட்டியெழுப்ப முயற்சித்தார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரஜா சக்தியும் அத்தகைய நோக்கத்தைக் கொண்டது என்று தமிழ்க் காட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதாவது அரசாங்கம் வடக்கில் அதன் வாக்கு வங்கியைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு திட்டமிட்டு உழைக்கின்றது.இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டி வரலாம் என்று அவர்களுக்குத் தெரிகிறது.தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியப்படும் வாய்ப்புகள் குறைவு என்பதையும் அவர்கள் ஊகிக்கின்றார்கள். குறிப்பாக,உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி இரண்டாக நிற்கின்றது. கட்சிக்குள் காணப்படும் இரண்டு அணிகளும் பகிரங்கமாக ஒருவர் மற்றவரைத் தாக்கி விமர்சித்து வருகின்றன.அரசியலமைப்பு பேரவையில் சிறீதரன் அரசாங்கத்திற்கு ஆதரவாக எட்டு தடவைகள் வாக்களித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மைகள் உண்டு. கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஒரு படைப்பிரதானியை நியமிக்க அரசாங்க முயற்சித்தபோது அவர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார் என்பதும் உண்மை என்று தெரிகிறது. அதுதொடர்பாக அவர் பகிரங்கமாக தன்னிலை விளக்கம் எதையும் இதுவரை தரவில்லை.தனக்கு எதிராக எழுதும் ஊடகங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவுந் தெரியவில்லை. ஆனால் இந்த விடயத்தை குவிமயப்படுத்தி சிறீதரனை கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் மதிப்பிறக்கம் செய்யும் வேலைகளை சுமந்திரன் அணி மிகவும் கச்சிதமாகச் செய்துவருகிறது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சிறீதரன் செயற்படுகிறார் என்று சொன்னால் அதற்கு எதிராக கட்சி உரிய ஒழுங்காற்று நடவடிக்கையை எடுக்கலாம். அது கட்சி விவகாரம். அதனை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதுதொடர்பான விடயங்களை ஊடகவியலாளர்களைக் கூட்டிப் பகிரங்கமாகக் கதைக்கவேண்டிய தேவை என்ன? கட்சி விவகாரத்தை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். கட்சிக்குள்ளேயே ஒழுங்காற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.அதைச் செய்யாமல் கட்சிக்கு வெளியே ஊடகங்கள் மத்தியில் அதைச்சொல்ல வேண்டிய தேவை ஏன் வந்தது? ஏனென்றால், கட்சி ஒரு கட்டமைப்பாக பலமாக இல்லை என்பதைத்தான் அது காட்டுகிறது.வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால், வெல்லலாம் என்ற நம்பிக்கையில்தான் பலரும் கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது கட்சி உயர் மட்டத்தோடும் முரண்படாமல் விசுவாசத்தை வெளிக்காட்டாமல் தந்திரமாக நடந்து கொள்கிறார்கள்.வெல்லக்கூடிய குதிரை என்ற ஒரே ஒரு பலம்தான் இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு உண்டு.ஆனால் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் மேலும் கூர்மையடைந்தால், அது கட்சியைப் பாதிக்கும்.இப்போதுள்ள நிலைமைகளின்படி,சுமந்திரன் சிறீதரனை பெருமளவுக்கு கிளிநொச்சிக்குள்ளே முடக்கி விட்டார். ஆனால் கிளிநொச்சியில் சிறீரனின் இடத்தை நிரப்ப வேறு யாரும் கட்சிக்குள் இல்லை. அதுமட்டுமல்ல சிறுதரனை தோற்கடிக்கும் முயற்சியில் கட்சி மேலும் பலவீனமடையும் வாய்ப்புக்களே அதிகமாகத் தெரிகின்றன.மாகாண சபைத் தேர்தல் நடந்தால் அதில் தமிழரசுக் கட்சியின் வெற்றியின் பருமனை அது நிச்சயமாகப் பாதிக்கும். தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி இவ்வாறு தானே தனக்குள் பிடுங்குபடுவது, தனக்கு அதிகரித்த வெற்றி வாய்ப்புகளைத் திறந்து விட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தி நம்புகின்றது.அதனால்தான் தமது கிராமமட்டக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதன் முலமும் வடக்கை குவிமயப்படுத்தித் திட்டமிட்டு உழைப்பதன் மூலமும் வடமாகாண சபையில் பலமான வெற்றி வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள். வடக்கை வெற்றிகொண்டால் கிழக்கு தானாக விழுந்து விடும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். தமிழ்த் தேசிய கோரிக்கையின் தலை வடக்கில்தான் இருக்கிறது என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.எனவே தலையை நசுக்கி விட்டால், தமிழ்த் தேசியக் கோரிக்கை வலுவிழந்து விடும் என்றும் அவர்கள் நம்பக்கூடும். அந்த நோக்கத்தோடுதான் அவர்கள் வடக்கை குவிமயப்படுத்தி உழைக்கிறார்கள். இது சில தசாப்தங்களுக்கு முன்பு அதாவது 1980களின் தொடக்கத்தில் ஜெயவர்த்தன தமிழ்த் தேசியக் கோரிக்கையை தோற்கடிப்பதற்கு வகுத்த திட்டத்தின் மறுவளமான வியூகந்தான். தமிழ் மக்களின் தாயகத்தை துண்டித்து விட்டால் தமிழீழக் கோரிக்கை தோல்வி அடைந்து விடும் என்று ஜெயவர்த்தன நம்பினார்.அதற்கு கிழக்கை,திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் பலவீனப்படுத்துவது, வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பிரதேசங்களைத் திட்டமிட்ட குடியேற்றங்களின்மூலம் சிங்களபௌத்த மையப்படுத்துவது, அதன் மூலம் வடக்கைத் தனிமைப்படுத்துவது. கிழக்கை இழந்தால் அதாவது தாயகம் துண்டிக்கப்பட்டால், தாயகத்தின் ஒரு பகுதி வெற்றி கொள்ளப்பட்டு விட்டால், தாயகக் கோரிக்கை தோல்வி அடைந்து விடும்.அது இறுதியிலும் இறுதியாக தமிழ்த் தேசிய அரசியலையும் தோற்கடித்துவிடும். முதலாம் கட்ட ஈழப்போரில் இந்த வியூகத்தை வைத்துத்தான் ஜெயவர்த்தன படை நடவடிக்கைகளையும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் முன்னெடுத்தார்.இந்த வியூகத்தில் கிழக்கை வெற்றிகொள்வதே முதல் இலக்காக இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களின் பின் தேசிய மக்கள் சக்தியானது அந்த வியூகத்தை மறுவளமாகப் பயன்படுத்துகின்றது. வடக்கை வெற்றி கொண்டால் கிழக்குத் தானாக விழுந்துவிடும். தமிழ்த் தேசியக் கோரிக்கை பலமிழந்து விடும் என்று தேசிய மக்கள் சக்தி திட்டமிடுகின்றதா?அந்த அடிப்படையில்தான் வடக்கை நோக்கி ஜனாதிபதி அடிக்கடி வருகிறாரா? தமிழ் மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கைகளை வடக்கின் கோரிக்கைகளாகச் சுருக்கிக் கூறுவதும் அதனால்தானா? இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருந்த வடக்குக்கிழக்கை,ஒரு வழக்கின் மூலம் பிரித்தது ஜேவிபி. இப்பொழுது கேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியானது,அந்த வியூகத்தின் இறுதிக்கட்டத்தை நிறைவேற்றுவதற்காக வடக்கை நோக்கி உழைக்கின்றதா? உட்கட்சிச் சண்டைகளை ஊடகங்கள் முன் பகிரங்கமாக விவாதிக்கும் தமிழரசுக் கட்சியும் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த ஆபத்தை அதற்குரிய முழுப் பரிமாணத்தோடு விளங்கி வைத்திருக்கின்றனவா? https://athavannews.com/2026/1460334- ‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!
‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா! இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் வெப்பநிலை மிக அசாதாரணமாகக் குறைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைய நாட்களாக வடகடல் பகுதி வழமையை விட அதிக குளிராகக் காணப்படுகிறது. இந்த மாற்றமானது இலங்கையின் ஒட்டுமொத்த வானிலைப் பாங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. வடக்கிலிருந்து ஆரம்பிக்கும் இந்தக் குளிர்ந்த நீர், கிழக்குக் கரையோரம் வழியாக இலங்கையின் தெற்குப் பகுதிகளுக்கு கடத்தப்படும். இந்த நீரோட்டத்தின் காரணமாக, தெற்குப் பகுதியில் நிலவும் சற்றே அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை தற்போது குறைக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. ‘டித்வா’ (Ditwah) புயல் மறைந்ததைத் தொடர்ந்து, நிலப்பரப்பில் பதிவாகும் வெப்பநிலையில் பெரும் மாற்றங்கள் தென்படுகின்றன. காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலைப் பாங்குகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதற்கு இது ஒரு தெளிவான சான்றாகும் என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1460367- ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது!
ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது! கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துவடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப் பட்டுள்ளதுடன் துப்பாக்கிதாரி மற்றும் புர்கா அணிந்து வந்த நபரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 16 ஆம் திகதி இரவு ஜிந்துப்பிட்டி 125தோட்ட பகுதியிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கர வண்டியில் வந்த குழுவினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் புர்கா அணிந்திருந்தமை சிசிடிவி கெமராக்களில் பதிவாகியிருந்தது இந்தத் துப்பாக்கிச் பிரயோகத்தில் படுகாயமடைந்த கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சம்பவத்தில் 4 வயதுடைய சிறுவனும், மற்றும் 3 வயதுடைய சிறுமியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்ததுடன், அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக 3 பொலிஸ் குழுக்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஜிந்துப்பிட்டி பகுதியைச் சேர்ந்த நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிதாரி மற்றும் புர்கா அணிந்துவந்த நபர் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் விளைவே தாக்குதலுக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது திட்டமிடப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பழனி ரொமேஷினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். https://athavannews.com/2026/1460384- 11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!
11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு! 11 பயணிகளுடன் நேற்றையதினம் மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகளை அந்த நாட்டு அதிகாரிகள் இன்று கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, குறித்த விமானத்தின் சிதைவுகள் இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசியில் உள்ள புலுசரவுன் மலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, விமானத்தின் சிதைவுகள் மீட்கப்பட்ட போதிலும், அதில் பயணித்தவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் அவர்களைத் தேடி இந்தோனேசிய அதிகாரிகள் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ATR 42-500 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்பிடி அமைச்சகத்திற்குச் சொந்தமானது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் மக்காசர் நகருக்கு அருகாமையில் குறித்த விமானம் நேற்று (17) மாயமான போது அதில் 11 பேர் இருந்துள்ளனர். https://athavannews.com/2026/1460373K.Deepa joined the community- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- கதை - 196 / கண்மணி டீச்சர் [ஆறு பகுதிகள் ]
கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 03 விவாகரத்துக்குப் பிறகு, கண்மணி தனது குழந்தையுடன் தனியாக, ஆனால் பெற்றோரின் கண்காணிப்பில் தொடர்ந்து வாழ்ந்தாள். ஒரு ஆசிரியராக மதிக்கப்பாக தன் வாழ்வை நகர்த்தினாள். என் தனிமை, என் குழந்தை, என் சுயமரியாதை - இவை மட்டுமே முக்கியம். நான் அவைகளை மீண்டும் அச்சுறுத்த விடமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாள். எனினும் பெற்றோர்கள், உறவினர்கள், மறு திருமணத்துக்கு கண்மணியை ஒப்புக்கொள்ள முயற்சி செய்தார்கள். “அவர் ஒழுக்கமானவர்.” “அவர் உங்கள் கடந்த காலத்தை ஏற்றுக்கொள்வார்.” “அவர் உங்கள் குழந்தையை ஏற்றுக்கொள்வார்.” இப்படி புது புது வரன் கொண்டுவந்தார்கள். கண்மணி அவர்களின் வேண்டுதலை கேட்டுவிட்டு ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டாள்: “அவர் என் எல்லைகளை ஏற்றுக்கொள்வாரா? [Will he accept my boundaries?]” யாரும் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. அவர்கள் அவளை பிடிவாதமானவள் என்று அழைத்தனர். ஆனால், அவள் தான் இப்ப விழித்திருப்பதாகக் கூறினாள். அந்த சூழலில் தான், ஒரு நாள், ஓய்வுபெற்ற அதிகாரி சமூக ஊடகங்கள் மூலம் அவளுடைய வாழ்க்கையில் நுழைந்தார் - அவசரமின்றி, உரிமை கோராமல். அவர்கள் புத்தகங்கள், சமூகம், பெண்கள் கல்வி பற்றிப் பேசினர். அவர் அவளுடைய புத்திசாலித்தனத்தை மதித்தார். படிப்படியாக, உரையாடல்கள் ஆழமடைந்தன. "நீங்கள் உங்கள் பெற்றோர் சொல்வதைக் கேட்க வேண்டும்," என்று அவர் ஒரு முறை அறிவுரை கூறினார். "உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் ஒரு பாதுகாப்பான நிலை வேண்டும்." அவர் கண்ணியமானவர். சிந்தனைமிக்கவர். மற்றும் பாதுகாப்பானவர் என்ற அவளின், அவர் மேல் உள்ள மதிப்பு, அவளை வாதாட விடவில்லை. என்றாலும் அவள் விளக்கினாள். "கண்ணியமில்லாத நிலைத்தன்மை மற்றொரு வகையான சரிவு. [“Stability without dignity is another kind of collapse.”]" - வெளியில் இருந்து பார்க்கும் போது வாழ்க்கை நிலையானதாகத் தோன்றுவதால் - திருமணம், வீடு, [வழக்கமான] நடைமுறை, நிதிப் பாதுகாப்பு [marriage, home, routine, financial security] - போன்றவை, உண்மையிலேயே ஆரோக்கியமானதாகவோ அல்லது வெற்றிகரமானதாகவோ உள்ளது என்றுஅர்த்தமல்ல. கண்ணியத்தை (சுயமரியாதை, குரல், சம்மதம், அடையாளம் / self-respect, voice, consent, identity) பலிகொடுத்தால் வந்த நிலைத்தன்மை [ஸ்திரத்தன்மை] - உண்மையில் நிலைத்தன்மையே அல்ல. இது வெறுமனே மெதுவாக, ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒரு அமைதியான சரிவு" என்று அவள் விவரமாக விளக்கினாள். அவளுடைய மீள்தன்மையை அவர் பாராட்டினார். அவர் அவளது அறிவாற்றலை மதித்தார். அவர்களின் உரையாடல்கள் சிந்தனை மிக்கவையாக அளவுடன் இருந்தன. "நீங்கள் தனியாக இருக்கக்கூடாது," என்று அவர் மீண்டும் ஒருமுறை எழுதினார். "நான் தனியாக இல்லை," என்று அவள் பதிலளித்தாள். "நான் என்னுடன் வாழ்கிறேன்." என்றாள். அவர்களின் உரையாடல் எளிமையானதாகவே தொடர்ந்தன. ஒரு முறை, அதிகாரி: “எப்படி இருக்கீங்க?” கண்மணி: “உடம்பு சரியில்லை... வாழ்க்கை சோகமாக இருக்கிறது.” அவர் உடனே ஒரு கவிதையை அவளுடன் பகிர்ந்து கொண்டார்: "In the hidden shadow of your eyes, I burn with the touch of memory, Love arrives, yet never heals, You remain the light of my dreams." "உன் கண்களின் - மறைந்த நிழலில் நினைவின் தீண்டலால் - நான் எரிகிறேன் காதல் வருகிறது - ஆனால் பலனில்லை கனவுகளின் ஒளியாகவே - நீ இருக்கிறாய்." கண்மணி தன் இதயத்திலும் உடலிலும் ஒரு சிறிய பரபரப்பை, உணர்ச்சின் பாச்சலை உணர்ந்தாள். என்றாலும் காதல் என்றுமே தன் வாழ்வில் சாத்தியமற்றது என்று திடமாக இன்னும் நம்பும் அவள், காதல் கவிதை - ஆசையின், காமத்தின் பாதுகாப்பான அனுபவத்தை இன்பத்தை தனக்கு கொடுக்கிறது என்று எனினும் நம்பினாள். அவர் மீண்டும் சில கவிதைகளை அனுப்பினார். அவை நீண்ட காலமாக செயலற்ற நிலையில் அவளிடம் இருந்த ஒன்றைத் தூண்டின - விரக்தியை அல்ல, நினைவை. ஆபத்து இல்லாத ஆசையை. அவள் அதை அனுபவிக்க தன்னை அனுமதித்தாள். வார்த்தைகள் பாதுகாப்பானவை. தூரம் மரியாதைக்குரியது. அவள் அந்த ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ஒருபோதும் பொய் சொல்லவில்லை. அவரின் எழுத்தை, கவிதையை, கதையை ரசித்து வாசித்தாள். அதில் உள்ள காதலை, காமத்தை, அழகின் வர்ணனைகளை, ஒன்றும் விடாமல் ரசித்தாள். மகிழ்ந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக உரையாடல்கள் ஆழமடைந்தன. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 04 தொடரும் துளி/DROP: 2001 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/33341508072164411/?- கொத்மலை மக்களின் துயர்துடைக்க வந்த 2,000 கைகள்
கொத்மலை மக்களின் துயர்துடைக்க வந்த 2,000 கைகள் Jan 18, 2026 - 12:43 PM 'டித்வா' புயலினால் அதிக பாதிப்புக்குள்ளான கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் கொத்மலை மகா பீல்ல கால்வாய் ஆகியவற்றைச் சிரமதானப் பணிகள் மூலம் மீண்டும் வழமைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (17) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணிகள் நாளை (19) வரை நடைபெறவுள்ளன. கொத்மலை பனங்கம்மன பகுதியில் சுமார் 20 கிராமங்களுக்கான பிரதான வீதி முழுமையாக நிலச்சரிவுக்குள்ளானதால், கடந்த 2 மாதங்களாக அந்த கிராமங்களின் குடியிருப்பாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இதனைக் கருத்திற்கொண்டு, அனுராதபுரத்திலிருந்து வருகை தந்த குழுவினர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் குறித்த வீதியைச் சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். கினிகத்தேன பகுதியிலிருந்து வருகை தந்த மற்றுமொரு குழுவினர், கொத்மலை மகா பீல்ல கால்வாய்ப் பகுதியைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்தச் சிரமதானப் பணிகளுக்காக அனுராதபுரம் மற்றும் கினிகத்தேன ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cmkjeghp0042qo29n5fq3u8plஏராளன் started following இலங்கையில் அனர்த்தம் நீங்கியும் அவசர கால சட்டத்தை நீட்டிப்பதா? எதிர்ப்பும் அரசு விளக்கமும் , கொத்மலை மக்களின் துயர்துடைக்க வந்த 2,000 கைகள் , ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பம் ; இவ்வருடம் 250 நல்வாழ்வு மையங்கள் நிறுவப்படும் - அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ and 2 others- ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பம் ; இவ்வருடம் 250 நல்வாழ்வு மையங்கள் நிறுவப்படும் - அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ
ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பம் ; இவ்வருடம் 250 நல்வாழ்வு மையங்கள் நிறுவப்படும் - அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ 18 Jan, 2026 | 11:43 AM (செ.சுபதர்ஷனி) ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் கட்டம் வரும் ஜனவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இவ்வருடத்துக்குள் 250 மையங்களையும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் ஆரோக்யா மையங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி ஆகியோர் நேற்று (17) கண்டி அஸ்கிரி மகா விகாரையில் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரையும், மல்வத்து மகா விகாரையில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பொட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், மல்வத்து மகாநாயக்க தேரரிடம் அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். இதன்போது அமைச்சர் குறிப்பிடுகையில், கடந்த ஆண்டு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் கட்டம் வரும் ஜனவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வருடத்திற்குள் 250 மையங்களையும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் இம்மையங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்தவும், பிரதான வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம். கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் இதய நோயாளர்களுக்காகச் சகல வசதிகளுடன் கூடிய நவீன இதய சிகிச்சை பிரிவுக்கான கட்டுமானப் பணிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படும். சுமார் 12 பில்லியன் ரூபா செலவில் அமையவுள்ள இக்கட்டிடப் பணிகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவு செய்வதற்கான அனைத்து திட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அரச வைத்தியசாலைகளில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த 62 அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை ஆதார வைத்தியசாலையை நவீன வசதிகளுடன் வேறொரு இடத்தில் புதிதாக நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளியினால் சேதமடைந்த வத்தேகம வைத்தியசாலையையும் புதிய இடத்தில் நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட சிலாபம், மஹியங்கனை உள்ளிட்ட 6 அரச வைத்தியசாலைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் புனரமைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள புத்தபகவானின்புனித சின்னங்கள் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் கொழும்பு கங்காராம விகாரையில் பொதுமக்களின் தரிசன வழிபாடுகளுக்காக வைக்கப்பட உள்ளன என்றார். https://www.virakesari.lk/article/236331- கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல்
கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் மீது வரியை அறிவித்தார் டிரம்ப் பட மூலாதாரம்,Getty Images 17 ஜனவரி 2026 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய நாடுகளுக்குப் புதிய வரிகளை அறிவித்துள்ளார். அமெரிக்காவால் கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரிகள் நடைமுறையில் இருக்கும் என்று டிரம்ப் கூறுகிறார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதியுள்ள டிரம்ப், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கு அனுப்பும் 'அனைத்து' பொருட்களுக்கும் '10% வரி விதிக்கப்படும்' என்று கூறியுள்ளார். ஜூன் 1 அன்று இது 25% ஆக அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 'டென்மார்க் திருப்பித் தர வேண்டிய நேரம் இது'- டிரம்ப் டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவின்படி,பல ஆண்டுகளாக டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் வரிகளை வசூலிக்காமல் அமெரிக்கா மானியம் வழங்கி வருவதாக அவர் கூறுகிறார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 'டென்மார்க் திருப்பித் தர வேண்டிய நேரம் இது' என்று டிரம்ப் மேலும் கூறுகிறார். "உலக அமைதி ஆபத்தில் உள்ளது! சீனா கிரீன்லாந்தை விரும்புகிறது, அதைப்பற்றி டென்மார்க்கால் எதுவும் செய்ய முடியாது," என்று கூறும் டிரம்ப், கிரீன்லாந்து இரண்டு நாய்கள் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டிகளால் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது என்று விமர்சிக்கிறார். டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் "அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன" என்றும், அவை "மிகவும் ஆபத்தான விளையாட்டை" விளையாடுகின்றன என்றும் அவர் கூறுகிறார். இந்த "சாத்தியமான அபாயகரமான சூழ்நிலை விரைவாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் முடிவுக்கு வர" "கடுமையான நடவடிக்கைகள்" எடுக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் மேலும் கூறுகிறார். கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு ஏன் தேவை? காணொளிக் குறிப்பு,காணொளி: கிரீன்லாந்து விரைந்த ஐரோப்பிய படைகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தனது நாடு கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் என்றும், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை நிராகரிக்கவில்லை என்றும் கூறுகிறார். சாத்தியமான கொள்முதல் குறித்தும் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், தீவை "எளிதான வழியில்" அல்லது "கடினமான வழியில்" கட்டுப்பாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறுகிறார். அவரது கோரிக்கைகளை கிரீன்லாந்தின் தலைவர்களும், நேட்டோ உறுப்பினர் டென்மார்க்கும் நிராகரித்துள்ளனர், அந்தத் தீவு ஒரு பாதியளவு தன்னாட்சி பிரதேசமாகும். வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் கிரீன்லாந்தின் இருப்பிடம் ஏவுகணைத் தாக்குதல்கள் ஏற்பட்டால் முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளுக்கும், பிராந்தியத்தில் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் ஏற்றதாக அமைகிறது. "நாம் கிரீன்லாந்தை கைப்பற்றவில்லை என்றால், ரஷ்யா அல்லது சீனா கிரீன்லாந்தை கைப்பற்றும்" என்று டிரம்ப் வாதிட்டு வருகிறார். அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, கிரீன்லாந்தின் தலைநகரான நூக் நகருக்கு பிரெஞ்சு ராணுவத்தின் ஒரு சிறிய குழு சென்று சேர்ந்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் 'ஆய்வு மற்றும் கண்காணிப்பு' பணிக்காக தங்கள் நாட்டு வீரர்களை அங்கு அனுப்பி வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகள் மீது டிரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார். வரிகள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன? வரிகள் என்பவை இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரிகள். பொதுவாக, இந்த வரி ஒரு பொருளின் மதிப்பிலான சதவீதமாக இருக்கும். உதாரணமாக, ரூ.10 மதிப்புள்ள ஒரு பொருளுக்கு 10% வரி என்பது கூடுதலாக ரூ.1 வரி என்பதைக் குறிக்கும் - இதனால் மொத்த விலை ரூ.11 ஆகிறது. இந்த வரி வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களால் அரசாங்கத்திற்குச் செலுத்தப்படுகிறது. இந்த நிறுவனங்கள் கூடுதல் செலவில் சில அல்லது அனைத்தையும் தங்கள் வாடிக்கையாளர்களிடம் திணிக்கலாம், அதாவது இந்த விஷயத்தில் சாதாரண அமெரிக்கர்கள் மற்றும் பிற அமெரிக்க வணிகங்கள் இந்தச் சுமையை ஏற்க நேரிடும். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c801g1p55kpo- தமிழர்களின் நிலங்களும் வளங்களும் பறிபோகாமல் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டியது அவசியம் - வாகரையில் பொதுமக்கள் வலியுறுத்தல்
தமிழர்களின் நிலங்களும் வளங்களும் பறிபோகாமல் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டியது அவசியம் - வாகரையில் பொதுமக்கள் வலியுறுத்தல் Published By: Vishnu 18 Jan, 2026 | 03:41 AM பறிபோகும் தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்துசெயற்படுவது அவசியம் என வாகரை பிரதேசத்தில் பொதுமக்களினால் வலியுறுத்தப்பட்டது. உயிர்மை நேய விவசாய பொங்கல் விழா 17ஆம் திகதி சனிக்கிழமை காலை மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புச்சாக்கேணி 4ம் கட்டை பகுதியில் நடைபெற்றது. கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் மாகாண தலைவர் கணபதிப்பிள்ளை இராசலிங்கம் தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாகரை பிரதேச சபை தவிசாளர் தெய்வேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் திட்ட வரைபு ஒன்றியத்தின் உத்தியோகத்தர் ரேணுக, பிரதேச சபை உறுப்பினர் சுவேந்திரன், திட்ட வரைபு ஒன்றியத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் அரவிந்தன், ஊவா மாகாண திட்ட வரைபு ஒன்றியத்தின் இணைப்பாளர், கிழக்கு திட்ட வரைபு ஒன்றியத்தின் உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று வரவேற்பு நடனம் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் தொடர்பான சிறப்பு உரைகள் இடம்பெற்று அதிதிகள் உரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முக்கிய அம்சமாக இயற்கு விவசாயத்தினை முன்னிறுத்தும் முகமாக விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு அலங்கரிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வாகரை பிரதேசத்தில் கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டது.வனஇலாகா,தொல்பொருள் திணைக்களம் என பல்வேறு பகுதிகளினாலும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டன. அந்தவேளைகளில் அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுத்த செயற்பாடுகள் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கமுடிந்தது.இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை நாங்கள் முன்னோக்கும் சூழ்நிலைகள் காணப்படுகின்றன.அவற்றினை நாங்கள் எதிர்கொள்வதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியமாகும்.அவ்வாறான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமே எமது எதிர்காலத்தில் எமது நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்கமுடியும் என இதன்போது கிழக்கு மாகாணத்திலிருந்து கலந்துகொண்ட பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளினாலும் தெரிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/236296- "குற்றமற்றவள் என நிரூபி" என மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!
"குற்றமற்றவள் என நிரூபி" என மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்! Jan 18, 2026 - 10:21 AM "நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு" எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு, முனைக்காடு பகுதியில் நேற்று சனிக்கிழமை (17) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தி. அனுஷ்வரன் (36) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த பிரகலாதேவி (31) என்பவரைத் திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார். சம்பவ தினத்தன்று காலை 8.30 மணியளவில் கணவன் - மனைவிக்கு இடையே பண விவகாரம் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், கணவன் மனைவியின் நடத்தையில் சந்தேகமுற்று, "நீ குற்றமற்றவள் என்பதை நிரூபித்துக் காட்டு" என வற்புறுத்தியுள்ளார். அதன்பின்னர் மனைவியின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரே தீ வைக்கத் தூண்டியுள்ளார். இதனால் தீப்பற்றி எரிந்த மனைவி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியைத் தீக்குளிக்க வைத்த பின்னர், கணவன் தனக்குத் தானே கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து, மனைவியைக் கொலை செய்ய முயன்றமை மற்றும் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கொக்கட்டிச்சோலை பொலிஸார் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கொக்கட்டிச்சோலை பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmkj9dnx3042lo29n7tsbsirv- இலங்கையில் அனர்த்தம் நீங்கியும் அவசர கால சட்டத்தை நீட்டிப்பதா? எதிர்ப்பும் அரசு விளக்கமும்
இலங்கையில் அனர்த்தம் நீங்கியும் அவசர கால சட்டத்தை நீட்டிப்பதா? எதிர்ப்பும் அரசு விளக்கமும் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஆர்.யசிஹரன் பிபிசி தமிழுக்காக 18 ஜனவரி 2026, 05:47 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றான 'திட்வா' சூறாவளியின் தாக்கத்தினால், நாடு முழுவதும் ஏற்பட்ட பரவலான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாக்கவும் அனர்த்தங்களை கையாளவும் திருத்தப்பட்ட பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) கீழ், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அனர்த்தம் ஏற்பட்ட வேளையில், அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அழுத்தம் எதிர்க்கட்சிகளால் கொடுக்கப்பட்டதை அடுத்து, கடுமையான பாதிப்புகளுக்கு மத்தியில், ராணுவத்தினரை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தவும், நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றிப் பேணவும் இத்தகைய அசாதாரண நடவடிக்கைகள் அவசியமானவை என்று அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. எனினும் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன. சூறாவளி நாட்டைவிட்டு நகர்ந்து சில வாரங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது நிவாரண முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன. போக்குவரத்துத் தொடர்புகள் பெருமளவு சீரமைக்கப்பட்டு, மறுசீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில், அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்து அமல்ப்படுத்துவது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது அனர்த்த கால அவசரத் தேவைகளையும் தாண்டி, அரசாங்கம் தனது அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சியோ என்ற அச்சத்தையும் விமர்சகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு கரிசனை தற்போதும் தொடரும் அவசரகால வழிகாட்டல்கள் மனித உரிமைகளுக்கு ஒவ்வாத மிகமோசமான கூறுகளை உள்ளடக்கியிருக்கின்றன என உலகளாவிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆசியப்பிராந்திய ஆய்வாளர் ரொபேர்டா மொய்ஸக் கரிசனை வெளியிட்டுள்ளார். இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டிருந்த அறிக்கையில், தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர கால நிலையின் கீழான விதிகள் இதற்கு முன்னைய சில சந்தர்ப்பங்களில் முன்னைய அரசாங்கங்களினால் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் சில விதிகள் நாட்டின் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான சரத்துக்கும், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கும் முரணானவையாகக் காணப்படுவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதுமாத்திரமன்றி ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலப் பிரகடன விதிகள் பிரயோகிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் விடுவிக்கப்பட்ட பொது அறிவிப்புகள் குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. அத்தோடு அரச அதிகாரிகளுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பது என்பது அரசியலமைப்பின் 14(1)(ஏ) பிரிவின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் ஓரங்கமாகும் எனவும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு,இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரம் அநுரவின் கண்ணை மறைக்கிறது - ஐங்கரன் குகதாசன் தற்போது மேலும் ஒருமாத காலத்திற்கு அவசரகால சட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஐங்கரன் குகதாசன் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்துவதற்கான அவசியமே இருக்கவில்லை என்றும், அப்பிரகடனத்தில் மனித உரிமைக் கோட்பாடுகளை மீறுகின்ற, மிதமிஞ்சிய அதிகாரத்தினை வழங்குகின்ற ஏற்பாடுகள் உள்ளன என்றும் கூறப்படுகின்ற சந்தர்ப்பத்தில், அப்பிரகடனம் நீடிக்கப்பட்டிருப்பது மிகுந்த கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். "எதிர்க்கட்சியாக இருந்தபோது, இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வந்த அநுரகுமார திசாநாயக்க, இன்று அதனையே செய்வது 'மாற்றம்' தொடர்பில் இருந்த சொற்ப அளவு நம்பிக்கையையும் தவிடுபொடியாக்குகின்றது. அதேபோல் அதிகாரம் அநுரவின் கண்ணை மறைக்கின்றது" எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகளும் அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ளனர். குறிப்பாக இந்த நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, "அரசாங்கம் தற்போது செயற்படுத்தியுள்ள அவசரகால சட்டமானது, அனர்த்தத்தை கையாள நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை. மாறாக அரசாங்கம் தமக்கு எதிரான விமர்சனங்களை தடுக்க பயன்படுத்தும் கருவியாக இது கையாளப்படுகின்றது" என குற்றம் சுமத்தியிருந்தார். அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கூறுகையில், "கடந்த காலங்களில் அவசரகால சட்டத்தின் கீழ் பல ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி கிடைக்கவும் இல்லை. இந்த நாட்டில் நீதி என்பது தகுதி தராதரம் பார்த்தே கையாளப்படுகின்றது. வடக்கு கிழக்கில் இன்றும் இராணுவ அடக்குமுறை நிலைமையே காணப்படுகின்றன. இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகள் எப்போதும் அவசரகால சட்டத்தின்கீழ் தான் உள்ளன. இந்த நிலைமைகளை மாற்றும்வரை தமிழர்களுக்கு விடிவுகாலம் இருக்காது" என்று தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கூறுகையில், "அனர்த்தத்தை கையாள நடைமுறைக்கு வந்துள்ள அவசரகால சட்டத்தில் தேடுதல் மற்றும் கைதுகள் என்பன எதற்காக உள்வாங்கப்பட்டுள்ளன? தடுப்புக்காவல் என்ற விடயம் எதற்காக உள்வாங்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது. அனர்த்த முகாமைத்துவத்திற்காக அவசரகால சட்டம் என்றால் அது பொதுமக்களை பாதுகாக்க மட்டுமே கையாள வேண்டும். மாறாக அதனை கையாண்டு யாரையும் கைதுசெய்யவோ அல்லது தண்டிக்கவோ முடியாது. ஆனால் அதனையே அரசாங்கம் செய்ய நினைக்கின்றது" எனக் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் விளக்கம் இந்த குற்றச்சட்டுக்களை முழுமையாக நிராகரிக்கும் அரசாங்க தரப்பினர், அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளது. அந்தவகையில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர இது குறித்து தெரிவிக்கையில், "இதற்கு முன்னர் நாட்டில் பல அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அவற்றைவிட மிக மோசமான அழிவொன்றை இம்முறை நாம் சந்தித்துள்ளோம். நாட்டில் 22 மாவட்டங்களிலும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று வரை முகாம்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆகவே இந்த நிலைமைகளை கருத்தில்கொண்டே அனர்த்த நிலைமைகளை கையாள ஜனாதிபதியினால் நடைமுறைக்கு கொண்டுவந்த அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதுகுறித்த நாடாளுமன்ற அனுமதியையும் நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்" என்றார். "இந்த அவசரகால சட்டத்தை பயன்படுத்தி ஊடக அடக்குமுறைகளை கையாளவோ அல்லது யாரையும் தண்டிக்கவோ அரசாங்கம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் செயற்படாது. மாறாக பொதுமக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய அரசு இயந்திரத்தை விரைவாக பயன்படுத்தி துரிதமாக சேவையாற்றவே கையாளப்படுகின்றது" எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த சட்டம் குறித்து பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சம் கொள்ளத்தேவையில்லை-பிரதமர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய அதேபோல் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறுகையில், 'திட்வா' சூறாவளியின் தாக்கத்தினால், நாடு முகங்கொடுத்த அழிவில் இருந்து இன்னமும் மீளவில்லை. மத்திய மலைநாட்டின் பொதுமக்கள் வாழும் பல பகுதிகளில் இன்னமும் அனர்த்த அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர்களை பாதுகாப்பான பகுதிகளில் மீள் குடியேற்ற வேண்டும். இவற்றை கையாளும் விதமாக அரச அதிகாரிகள் விரைவாக செயற்படவும், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என தெரிவித்தார். பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை முறையாக வழங்கவே அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது எனக் கூறிய அவர் இந்த சட்டத்தை தவறாக ஒருபோதும் கையாள மாட்டோம் என்றார். மேலும், நீண்ட காலத்திற்கு அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை. நாட்டில் சகல பகுதிகளிலும் பொதுமக்கள் வழமையான சாதாரண வாழ்கையை வாழ வேண்டும் என்பதே எமதும் எதிர்பார்ப்பாகும். அதுவரையில் மிகக்குறுகிய காலத்திற்கு இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும் எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnvg17pzrpeo- தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் !
"மக்களின் காணிகளை மக்களிடமே கொடுங்கள்" - ஜனாதிபதியிடம் கோரிக்கை Jan 18, 2026 - 07:06 AM தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: "வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுக்குப் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தேன். குறிப்பாக, அங்குள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். ஜனாதிபதியும் அதனை ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது. விகாரைக்கு அருகிலுள்ள மக்கள் மற்றும் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, இது குறித்து விரைவாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, அது நயினாதீவு நாக விகாரை விகாராதிபதியுடனேயே தொடர்புடையது. எனினும், பொதுமக்கள் சார்பாகவே இந்தக் கருத்தை நான் முன்வைத்தேன். மேலும், இப்பகுதியில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே, வடக்கு மாகாணத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தேன்" என்றார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkj2fv6x042fo29naid25pme - வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.