கறிச்சட்டி/கரிச்சட்டி ஆய்வு!
உலக ரீதியில் பஞ்சம், பட்டினி, போசணைக் குறைபாடுகள் உயிர்கொல்லிகளாக ஒரு இருபது ஆண்டுகள் முன்பு வரை இருந்திருக்கின்றன. இன்றும் சில பிரதேசங்களில் இவை பிரச்சினைகளாக இருக்கின்றன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் உருவாகியிருக்கும் இன்னொரு ஆரோக்கியப் பிரச்சினை மிகைப் போசணையால் விளையும் அதிகரித்த உடற்பருமனாதல். உலகின் 180 இற்கு மேற்பட்ட நாடுகளுள் அனேகமானவற்றில் இன்று மரணத்தின் முதன்மைக் காரணங்களாக இருப்பவை: இதய நோய், உயர் குருதி அமுக்கம், நீரிழிவு ஆகிய மூன்றும் தான்!. இந்த மூன்று நோய்களோடும் நேரடியான தொடர்பு அதிகரித்க உடற்பருமனுக்கு இருக்கிறது. எனவே உடல் மெலியவும் அதனோடு சேர்ந்த ஆரோக்கியத்தைப் பேணவும் காலத்திற்குக் காலம் புதிய உணவு முறைகள் பலரால் கண்டறியப் பட்டு பிரபலமாக்கப் படுகின்றன. இவ்வாறு பிரபலம் பெறும் எல்லா உணவு முறைகளும் பயன் தருவதில்லை -ஏனெனில் பல உடல் மெலிய வைக்கும் உணவு முறைகளுக்கு உறுதியான உயிரியல்/மருத்துவ ரீதியான ஆதாரங்கள் இல்லை!
பேலியோ உணவு முறையென்பது அடிப்படையில் குகை வாழ் ஆதி மனிதனின் உணவு முறை. எங்களுடைய வரலாற்றில் ஏறத்தாழ 12,000 ஆண்டுகள் முன்பு வரை எம் மூதாதையர் ஒரு இடத்தில் தங்கியிருந்து, தோட்டம் செய்யவோ, கால்நடைகள் வளர்க்கவோ ஆரம்பிக்கவில்லை. அவ்வாறு எம் மூதாதையர் தங்கிப் பயிர் செய்து வாழ ஆரம்பித்த காலம் கற்காலத்தின் இறுதிக் கட்டத்தின் நியொலிதிக் காலத்தோடு பொருந்தி வருகிறது. பேலியோ உணவின் அடிப்படை, இந்த கடந்த 12,000 சொச்ச ஆண்டுகளில் எங்கள் உடலை இயக்கும் ஜீன்கள் இந்த நியோலிதிக் கால உணவு முறைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவில்லை, இதனால் தான் நாம் கொழுப்பை விலக்கினாலும் எமக்கு உடற்பருமன் சார்ந்த நோய்கள் குறையாமல் இருக்கின்றன என்பதாகும். எனவே பேலியோ உணவு முறை, எங்கள் மூதாதையர் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் சாப்பிட்டதாகக் கருதிய , சிவப்பு இறைச்சியையும், கடலை வகைகளையும் உள்ளடக்கப் பரிந்துரைக்கிறது. அதே வேளை, அந்த 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்திருக்காது என்று கருதிய பாலுணவுகள், தீட்டிய மாப்பொருட்கள், மாச்சத்துள்ள தாவரங்களையும் கிழங்குகளையும் ,தானியங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வலியுறுத்துகிறது. இந்தப் பரிந்துரைகளுள், தாவர நார்கள், கடலை என்பன நல்ல விடயங்கள். தீட்டிய மாப்பொருட்களைத் தவிர்ப்பதும் ஆரோக்கியமானது. ஆனால், சிவப்பிறைச்சியில் பிரச்சினையுண்டு. பாலுணவு தவிர்த்தல் ஏ, டி ஆகிய முக்கியமான விற்றமின்களின் குறைபாட்டை ஏற்படுத்தும். இவையெல்லாம் உயிரியல் ரீதியில் ஆதாரமுள்ள தகவல்கள் - ஆனால் நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போவது, முன்னோர் சாப்பிட்ட பேலியோ உணவு என்பதே இப்போது கேள்விக்குள்ளாகியிருக்கிறது என்பதை மட்டும் தான்!
தொல்லியல் ஆய்வாளர்களுள் ஒரு சிறு தொகையினர் எங்கள் முன்னோர் தங்கிப் பயிர் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே காட்டுத் தானியங்களையும் , தீட்டிய தானியங்களையும் உணவில் சேர்த்துக் கொண்டிருப்பதாக நம்புகின்றனர். இந்தச் சிறுபான்மை எடுகோளை நிறுவ அவர்கள் தேர்ந்து கொண்ட முறை தான் கறிச்சட்டி ஆய்வு! சாதாரணமாக ஒரு தொல்லியல் ஆய்வில் முன்னோர்கள் வேட்டையாடிய, உணவாகக் கொண்ட விலங்குகளின் எலும்புகள் மிக இலகுவாகக் கண்டு பிடிக்கப் படக் கூடியவையாக இருக்கும் - இதன் காரணம் எலும்புகள் உக்கி முற்றிலும் அழிவது அசாத்தியம். ஆனால், தானியங்கள், தாவரங்களின் பகுதிகள் மிக இலகுவாக சூழலில் அழிந்து கலந்து மறைந்து விடும். இதனால் தான் இது வரை ஆராயப் பட்ட எல்லா முன்னோர் வாழ்விடங்களிலும் மிருக எலும்புகள் தாராளமாகக் கிடைத்தன (எனவே முன்னோர் பிரதானமாக இறைச்சியுண்டதாக முடிவும் செய்யப் பட்டது!). இது வரை புறக்கணிக்கப் பட்ட தானிய எச்சங்கள் தற்போது புதிய தொழில் நுட்பங்கள் மூலம் கல்லாயுதங்கள், மட்பாண்டங்கள், மனிதப் பற்கள் என்பவற்றிலிருந்து அடையாளம் காணப்படும் போது தான் பேலியோ உணவென்பது இறைச்சி மட்டுமல்ல என்பதற்கு சான்று கிடைக்கிறது.
தொல்லியல் அகழ்வுகளில் கறிச்சட்டிகளையும், அடிப்பிடித்த கரிச்சட்டிகளையும் தேடுவதற்கு முன்னர், இந்த ஆய்வு ஆரம்பித்தது கோபெக்லி ரெபா (Gobekli Tepe) எனப்படும் 11,600 ஆண்டுகள் பழமையான ஒரு அகழ்வாய்வு மையத்தில். துருக்கி- சிரிய எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த தொல்லியல் எச்சங்கள், ஒரு புராதன வழிபாட்டிடமென நம்பப் படுகிறது. கட்டிட எச்சங்களுக்கப்பால் காணப்பட்ட பாரிய கல்லுருளைகள் தானியங்களை அரைக்கவும் சுத்திகரிக்கவும் பயன்படுத்தப் பட்ட உரல்கள் என்ற தகவல், அந்தக் கற்களில் ஒட்டியிருந்த தானிய எச்சங்களை ஆராய்ந்த பின்னரே தெரிய வந்தது. ஓரிடத்தில் தரித்து வாழ ஆரம்பித்த முதல் நூற்றாண்டுகளிலேயே தானியங்களை அரைக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது புதிய கண்டு பிடிப்பு. ஆனால், இவ்வாறு மாச்சத்து நிறைந்த பொருட்களை, கிழங்குகளை சாதாரண உணவாக எடுக்கும் பழக்கம் 120,000 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் முன்னோரிடமிருந்திருப்பதாக தென்னாபிரிக்காவில் காணப்படும் அகழ்வாய்வு மையங்களில் கிடைக்கும் தகவல்கள் உறுதி செய்திருக்கின்றன. இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
பேலியோ உணவு முறையை முன்னிறுத்துவோரின் முக்கியமான வாதங்களில் ஒன்று: நவீன மனிதனின் உடல், மாச்சத்து நிறைந்த உணவுகளை சமிபாடடையச் செய்யவும், கிரகிக்கவும் கடந்த 12,000 ஆண்டுகளில் இசைவாக்கம் அடையவில்லை என்பதாகும்! 120,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாச்சத்து நிறைந்த உணவுகளை முன்னோர் எடுத்து வந்திருக்கின்றனர் என்பது இந்த வாதத்தை அர்த்தமற்றதாக்கி விடுகிறது. இந்த பேலியொ உணவு முறையின் வாதத்தை மறுக்கும் நேரடியான இன்னுமொரு தகவல், எங்கள் ஜீன்களை ஆராய்கிற போது கிடைக்கிறது. எங்கள் உடலில் இருக்கும் ஜீன்கள் பெரும்பாலானவை ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளாகக் காணப்படுகின்றன. மாச்சத்தை சமிக்கச் செய்யும் நொதியங்களைப் பொறுத்த வரையில், நவீன மனிதனில் சுமார் இருபது வரையான ஜீன் பிரதிகள் அந்த நொதியங்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால், மனித இனத்தின் மூதாதையரான குரங்குகளிலோ இரண்டே இரண்டு ஜீன் பிரதிகள் தான் மாச்சத்தைச் செமிக்கச் செய்யும் நொதியங்களை உற்பத்தி செய்கின்றன. எனவே, மாப்பொருட்களைக் கையாளும் இசைவாக்கத்தை மனித இனம் கூர்ப்பின் வழியே விருத்தி செய்து வந்திருக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரம் இருக்கிறது.
எனவே, மொத்தமாகப் பார்த்தால், கறிச்சட்டி ஆய்வுகளின் படி, பேலியோ உணவு முறை என இன்று பரிந்துரைக்கப் படும் உணவுமுறை, முன்னோரால் பின்பற்றப் பட்டதாக ஆதாரங்கள் இல்லை. முன்னோர், தாவரங்கள், மாப்பொருட்கள் நிறைந்த உணவுகள், இறைச்சி ஆகியவை கொண்ட உணவுகளையே உண்டு வந்திருக்கிறார்கள் - இந்த உணவுகளை உண்டு வந்த காலத்தில், தினசரி மைல்கணக்காக நடந்தும், ஓடியும் கலோரியை எரித்தும் இருப்பார்கள் என நான் நம்புகிறேன். இத்தகைய உணவு முறை முன்னோரில் இதய குருதிக் கலன் நோய்களை அதிகரித்திருக்குமா அல்லது குறைத்திருக்குமா என்பதும் தெரியாது.
கீழ் இணைப்பிலுள்ள கட்டுரையின் தழுவல்:
https://www.nature.com/articles/d41586-021-01681-w
- ஜஸ்ரின்
சொற்பட்டியல்
நொதியம் - enzyme
அகழ்வாய்வு - excavation
தொல்லியல் - archaeology