கஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்,,,,,,,, !
போதை தரும் வாதை சிரிப்புக்குமட்டும்,சிந்திக்கக்கூடாது......!
🥀..............(1)
அந்த நீதிமன்ற வளாகம் அன்று காலை ஒரே பரபரப்பில் இருக்கின்றது.வக்கீல்களும், தரகர்களும்,கட் சிக்காரர்கள் வாதிகள்,பிரதிவாதிகள்,வேடிக்கை பார்க்க வந்தவர்கள்,சின்னசின்ன வியாபாரம் செய்பவர்கள் என்று பலராலும் நிரம்பி வழிகின்றது.அது தற்காலிக கட்டிடத்தில் நடைபெறுவதால் இடப்பற்றாகுறை காரணமாக ஒரே அமளிதுமளிதான். அதன் முதலாம் மாடியில் சில வழக்குகள் நடைபெற இருக்கின்றது.எல்லோரும் வந்து தங்களின் ஆசனங்களில் அமர்ந்திருந்து நீதிபதியின் வருகைக்கு காத்திருக்கின்றனர்.நீதிபதி ஈஸ்வரதாசன் நிதானமாக நடந்துவர எல்லோரும் எழுந்து நிக்கின்றனர்.அவரும் தனது இருக்கையில் அமர்கின்றார். தனது பையில் பொடிமட்டையை எடுத்து இரு விரல்களால் கிள்ளி எடுத்து காரம் சிரசில் அடிக்க இரு மூக்குத்துவாரத்திலும் நிரப்பிவிட்டு குமாஸ்தாவைப் பார்க்கிறார்.நீதிபதியின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட குமாஸ்தாவும் தயாராக இருந்த வழக்கு கட்டுகளை எடுத்து கூப்பிடுகின்றார்.பெரும்பாலும் அபராதம் கட்டுபவர்கள், வாய்தா வாங்குபவர்கள் மற்றும் சில வழக்குகள் என்று ஆரவாரமாய் போகிறது.
.
வழக்கு எண் 108. வாய்க்கால் வழக்கு. என குமாஸ்தா அழைக்கவும் சிவஞானமும் செல்லையாவும் வந்து வாதி பிரதிவாதி கூண்டுகளில் ஏறி நிக்கின்றார்கள்.
நீதிபதி: யாரப்பா வக்கீல், வந்து வழக்கை சொல்லவும்.
வக்கீல் 1: ஐயா, எதிரி கூண்டில் நிக்கும் செல்லையா என்பவர் எனது கட்சிக்காரரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர்.இரண்டு வீட்டின் எல்லைகளுக்கு இடையில் பொதுவான ஒரு வாய்க்கால் இருக்கு. அதை இவர் ஆக்கிரமித்து தனது வீட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளார் எஜமான்.அதற்கு நியாயம் வேண்டித்தான் வழக்கு தொடரப்பட்டிருக்கு.
நீதிபதி: அந்த வாய்க்கால் யாருக்கு சொந்தமானது என்று ஆவணம் சொல்லுது .
வக்கீல் 2: (குறுக்கிட்டு)அது பொதுவானது எஜமான்.