Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுப்பாடுகளை மீறுகின்றனரா தமிழ் அகதிகள்.. இலங்கை தமிழர் முகாம் பற்றிய ஆய்வு....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுப்பாடுகளை மீறுகின்றனரா தமிழ் அகதிகள்.. இலங்கை தமிழர் முகாம் பற்றிய ஆய்வு....

 
ஈழத்தில் இருந்து இடப்பெயர்வினை மேற்கொண்டு 29 ஆண்டுகளை தொடுகின்றது எம்மினம்.. இன்னும் 100 க்கு மேற்பட்ட தமிழக முகாம்களில் சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழ் அகதிகள் வாழ்ந்து வருகின்றனர்,  1983, 1990, 2006 என மூன்று பெரிய காலகட்டங்களின் போது இடம் பெயர்ந்த இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நாம் ஏன் இங்கு இருக்கின்றோம் என்பதே தெரியாதவர்கள் 25வயதுக்குக்கு உட்பட்ட பலர் சொந்த மண்ணின் வாசனை தெரியாதவர்கள்.
 
article-0-04F43613000005DC-686_468x326.j தமிழகத்தில் அகதியாக வரும் ஈழத் தமிழர்கள்
ஈழத்தின் இறுதிக் கட்ட போர் முடிவு வரைக்கும் தாம் தாயகத்துக்கு மீண்டும் செல்வோம் அங்கு சொந்த நிலங்களில் குடியேறுவோம் என்ற நம்பிக்கையினை மனதில் கொண்டிருந்த பலர் இன்றைய போர் முடிவுக்கு பின்னரும் தாயகம் திரும்ப வழி இன்றி வாழ்ந்து வருகின்றனர். இது போருக்கு பின்னரான அமைதிதானா என்கின்ற அச்சம் எல்லோர் மனதிலும் குடிகொண்டிருக்கின்றது அத்துடன் ஆயுதங்கள்,கெடுபிடிகள் இல்லாமல் வாழ்ந்து விட்ட இந்த வாழ்க்கை அவர்களை திருபவும் அந்த சிக்கலான வாழ்க்கை முறைக்கு செல்ல தடுக்கின்றது.
 
இன்றய நிலையில் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களால் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இருக்கும் பெரும் நெருக்கடி அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லும் செயற்பாடுகள்தான் ஒவ்வொரு முகாம்களில் இருந்தும் கூட்டம் கூட்டமாகஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் தப்பிச் செல்லும் ஈழத்தமிழர்களைத் தடுக்க தமிழக காவல்துறையும், கியூப் பிரிவு ஆய்வாளர்களும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றனர் இந்த நடவடிக்கைகளின் போது சிக்கிக் கொள்ளும் அகதிகளும் இருக்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 100க்கு மேற்பட்ட இலங்கைத்தமிழரை கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளனர் கியூ பிரிவினரும், தமிழக காவல்த் துறையும்..
 
இன்றைய சூழ் நிலையில் ஈழத்தமிழர் முகாம்கள் இருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு பல்வேறு வகையான பிரச்சனைகள் அவ்வூரில் உள்ள தமிழக தமிழர்களை விட முகாம் மக்களால்தான் வருகின்றது என்கின்ற மனப்பாங்கு வந்துவிட்டது. அதில் பொய் இருப்பதாக கூற முடியாது சமிபத்தில் ஒரு பொது விடையமாக காவல்நிலையம் சென்றிருந்த போது அந்த காவல் நிலைய ஆய்வாளர் மிகவும் கடிந்து கொண்டார் வந்த விசயத்தை கூட அவர் விசாரணை செய்யவில்லை காரணம் முகாமில் இருந்து வந்திருக்கின்றார்கள் என்றவுடன் வந்த ஆத்திரம் அது. பின்னர் நாங்கள் அங்கு வந்த நோக்கத்தினை கூறிய போது சமாதானம் ஆனார். பின்னர் சம்பிரதாயமான அறிமுகத்தின் போது நான் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளராக மலைவாழ் மக்களுக்கான பணியினை மேற்கொண்டு வருவதை குறிப்பிட்டேன். அவருக்கு என்னைக் கடிந்து கொண்டதன் வருத்தத்தை மீண்டும் கூறினார்.
 
பேச்சு தொடர்ந்த போது அவரிடம் நேரடியாகவே கேட்டேன் . சார் முகாம் மக்கள் மீதான உங்கள் ஆத்திரத்துக்கு என்ன காரணம் என கேட்ட போது அடுக்கடுக்காக சம்பவங்களை கொட்டித் தீர்த்தார். சார் இவங்க பிரச்சனையால என் தலை உருளுது சார்... ஒரு நாளைக்கு இங்கு வரும் 10 பிரச்சனையில் குறைந்தது 6-7 வது முகாமில் இருந்துதான் வருகின்றது. பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை, எனது பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓடி விட்டான்,கொலை, கொள்ளை,தவறான உறவுகள், வெளிநாட்டுக்கு களவாக போனவர்களைப் பிடித்து வருவது,  வேலைக்கு சென்ற இடத்தில் திருடிவிட்டான், குடித்து விட்டு கலாட்டா செய்வது என ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இதில் வெளியில் இருந்து வரும் விசாரணைகளிலும் பல முகாம் மக்கள் சம்மந்தப் பட்டதாகவே இருக்கின்றது என தனது விசனத்தை கூறி முடித்தார். அவர் கூறிய ஒவ்வொன்றும் உண்மையாக இருந்தன ஆனால் இவற்றை செய்கின்றார்கள் என்பதால் இங்கிருக்கும் முகாம் மக்கள் மீது மற்றவர்களுக்கு தவறான கண்ணோட்டம் பதிய ஆரம்பித்து இருக்கின்றது. இதனால் அன்றாடம் கூலி வேலைக்காக வெளியில் செல்லும் முகாம் மக்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்து வருகின்றது.
 
முன்னர் எல்லாம் நல்லாத்தான் இருந்தாங்க இப்பதான் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கு என்று கூறும் கூற்றிலும் பொய் இருப்பதாக இல்லை இன்று எல்லா விதத்திலும் தமிழகத்தில் இருக்கும் அகதிமுகாம்கள் காவல்த்துறைக்கும் கியூப் பிரிவுக்கும் பெரும் தலையிடியாகவே இருந்து வருகின்றது.  உண்மையில் தாமாக திரும்பி தாயகம் செல்லாத வரைக்கும் தமிழக அரசுக்கும் முகாம் மக்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முடியாத அரசியல் சூழ்நிலை. தமிழக தமிழர்களைப் போன்று நடத்துவதில் உள்ள சட்டச் சிக்கல்கள் என பல கோணத்தில் பிரச்சனைகளைக் கையாள முடியாத நிலைகளில் இருக்கின்றன.

 இன்றைய தமிழகத்தின் செய்தி நிலவரங்களில் ஈழத் தமிழர்களின் அவுஸ்ரேலிய பயணம் பற்றிய செய்திகள் இடம்பெறாமல் இருப்பது இல்லை. சில அதிகாரிகள் நேரடியாகவே ஆதங்கப் பட்டுக் கொள்கின்றனர். உங்களுக்கு என்னையா குறை வச்சம் மாதத்துக்கு மாதம் அகதிக் கொடுப்பனவு, குடும்ப தலைவருக்கு 1000, மற்றவர்களுக்கு-750, முதியோருக்கான 1000 ரூபாய், ரேசன் பொருட்கள், அரச இலவச கொடுப்பனவுகள் என எல்லாம் வழங்கப் பட்ட பின்னரும் உங்கள் பிரச்சனைதான் என்ன என்பதை கேட்டு நிற்கின்றனர். உண்மையில் அவர்கள் கேட்பதிலும் தவறில்லை இவை அனைத்துமே இங்கு வாழும் எல்லா முகாம் மக்களுக்கும் கிடைக்கதான் செய்கின்றது.... அப்படியானால் ஏன் இந்த பிரச்சனைகள் ஈழத்தமிழர்கள் மோசமான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி விட்டனரா என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது.....

 
கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் எல்லோருக்கும் பிடித்த ஈழத் தமிழர்கள் இன்று தமிழகத்தில் தவறான பார்வைக்குள் பார்க்க படுவதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டிய நிலை இருக்கின்றது ஆனால் அது மக்களின் செயற்பாடுகளைப் பற்றி அல்லாமல் அவர்கள் வாழ்விடங்களைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பதே எனது பதில்.
 
ஈழம் இந்து சமுத்திரத்தின் முத்தாய் இருந்த தமிழனின் பண்பாட்டை உலகுக்கு சொன்ன ஒரு தனிச் சமுகம். இன்றும் உலகமெங்கும் வாழும் ஈழத் தமிழருக்கு தமிழையும்,தமிழரின் கலாச்சாரத்தயும் பரப்பிய பெருமை இருக்கின்றது. ஆனால் இங்குள்ள நிலை முற்றிலும் மாறுபட்டதாய் இருக்க காரணம் என்ன என்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.
 
1983 ம் ஆண்டு தமிழகத்துக்கு ஈழத்தமிழர்கள் அகதிகளாய் வந்தபோது அவர்களை கையில் தாங்கிக் கொண்டது தமிழக அரசும் மத்திய அரசும், காரணம் அப்போதிருந்த ஆட்சி நிலைகள் ஈழத் தமிழரின் வாழ்க்கையை பேணிப் பாதுகாக்கும் ஆட்சியாக இருந்ததுதான், தமிழ் நாட்டில் எங்கும் செல்லும் வசதி, பேரூந்து, புகையிரதங்களில் இலவசமாக பயணம் செய்யக் கூடிய வசதி என எல்லாவிதமான சலுகைகளையும் பெற்றதோடு தம்மை தங்கள் வீட்டு உறவைப் போல எல்லா மக்களும் தாங்கிக் கொண்டதாக கூறுகின்றனர் 83 ம் ஆண்டுகளில் வந்த முகாம் தமிழர்கள், அதன் பின்னர் 1990 ம் ஆண்டளவில் நடைபெற்ற மிகப் பெரிய புலம்பெயர்வு இவர்களுக்கு மத்திய அரசின் செல்வாக்கு இல்லாத போதும் தமிழக அரசு இவர்களிம் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் முகாம்கள் அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குட்டிக் கிராமங்கள் போல் முளைத்தன இந்த ஈழத் தமிழர் அகதி முகாம்கள் தற்போதய நிலவரப்படி 117 முகாம்கள் வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப் படுகின்றது.
Campmap.jpg தமிழ் நாட்டில் உள்ள முகாம்கள்
 
2006 இல் இருந்து போரின் உச்சக்கட்டத்தை அடைந்த 2009 வரை தமிழர்கள் புலம் பெயர்ந்து வந்த போது மத்திய அரசுக்கும் சரி, மாநில அரசுக்கும் சரி அது ஒரு தலையிடியாகவே பட்டது. இது மத்திய அரசின் ஒத்துளைக்காத செயற்பாடுகளால் வந்த தன்மையாக இருக்கலாம் அல்லது மக்கள் பட்டு வந்த துயரினைப் பார்த்து தமிழகத்தின் உறவுகள் கொண்ட கொந்தளிப்பாலும் இருக்கலாம். ஆனால் இந்த காலத்தில் இருந்த தமிழக அரசின் செயற்பாடுகள் வந்த ஈழத்தமிழர்களை நல்லபடியாக கவணித்தாவது இலங்கையில் நடந்துமுடிந்த போருக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டதாகவே இருந்தது. அனைத்து இலவச திட்டங்களையும் ஈழத்தமிழர் பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது, அதுவரை கொடுக்கப்பட்டு வந்த அகதிகள் கொடுப்பனவை அதிகரித்தது, இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம், சென்னை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இலவசமாக் கலை அறிவியல் கல்வி பயிலக் கூடிய வாய்ப்பு என எல்லாமே கொண்டு வந்து கொடுத்தார்கள். இது இங்கு வந்த அகதிகளில் பலருக்கு சொந்த நாட்டை மறக்கச் செய்த செயற்பாடுகள்,  வந்த இடம் சொர்க்கம் என்று தோன்ற செய்த செயற்பாடுகள். 
 
13THCOOUM_629425f.jpg தமிழ் நாடு நகர் புற சேரி IMG_1689.JPG தூத்துக்குடியில் ஒரு கிராமம் ஆனால் உண்மை இதைவிட மோசமாக இருந்தது தமிழகத்தில் வாழும் கிராமங்கள் பலவற்றிற்கு பணியின் நிமிர்த்தமாக சென்ற போது அங்குள்ள மக்களின் வறுமையும், அவர்கள் படுகின்ற துயரங்களும் ஒருகணம் யோசிக்க வைத்தது. சொந்த மண்ணில் அன்றாடம் சோற்றுக்கு இல்லாமல் அலையும் இந்த மக்களைக் கண்டு கொள்ளாமல் எம்மை ஏன் இந்த தாங்கு தாங்குகின்றது இந்த அரசு .. என எண்ணத் தோன்றியது. சேரிகள், கிராம குடிசைகள் இலவசங்களுக்கு சண்டை போட்டு மிதிபட்டு இறந்து போன மக்கள் என தமிழகத்தில் இன்றளவும் சரி செய்யப் படாமல் இருக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில் தேவைக்கு அதிகமாகவே இலங்கை தமிழருக்கு செய்து வருகின்றார்கள் என்றே தோன்றியது. இந்த எண்ண ஓட்டங்களுடனே கடந்த 5 வருடங்கள் ஓடி விட்டன . 
 
இலங்கையில் போரும் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளைத் தொட்ட நிலையில் வந்த விருந்தாளி திரும்பி போகாத நிலையாகி விட்டது இன்று தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழரின் நிலை. போர் நடக்கும் வரை ஒன்று பட்டிருந்த இந்த சமுகம் இன்று இயக்கங்களாக பிரிந்திருப்பதும், கலாச்சாரத்தை மறந்திருப்பதும் தமிழகத்தின் அரசியலில் குழப்பங்களை ஏற்பட காரணமாய் இருப்பதாக நினைக்கின்றது தமிழக அரசும், மத்திய அரசும் அத்துடன் மத்திய மாநில பட்ஜெட்டில் அகதிகளுக்கான செலவின ஒதுக்கீடும் ஒரு பெரிய பிரச்சனையாக அமைகின்றது ஐ. நா வின் அகதிகளுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடாத காரணத்தினால் அகதிகளுக்கு ஏற்படும் எல்லா செலவினங்களையும் தாங்கிக் கொள்ளும் தலையிடி மத்திய அரசுக்கு அத்தோடு தமது தலைவர் அமரர்.ராஜிவ் காந்தியை கொன்ற சமுகம் என்ற எண்ணத்தோடே இன்றுவரையும் தனது பார்வையை செலுத்துகின்றது ஆளும் மத்திய அரசு. இவைகள் பொதுவாக இருந்து விட்டுப் போகட்டும் ஆனால் இன்றைய பிரச்சனை என்ன இங்கிருக்கும் ஈழத் தமிழர்களால் இங்கு வசிக்கவும் முடியாமல் தாயகத்துக்கும் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலைக்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்...  
 

 

கூண்டில் அடைபட்ட கிளிகளா ஈழ ஏதிலியர்கள்…. தமிழக முகாம் வாழ்க்கை பற்றிய ஓர் ஆய்வு….

 
vaiko-09-300x168.jpg செந்தூரன் 

வரலாற்றில் தமிழனுக்கு என்று ஒரு நாடு அமையும் வரை நம் வாழ்க்கையில் இந்த அகதி என்ற வார்த்தை மறையப் போவது இல்லை. இன்றைய நிலையில் பூந்தமல்லி முகாமில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கும் செந்தூரனின் நிலையினை எல்லோரும் அறிந்த பின்னர் அவர்களைப் பற்றிய பார்வைகளும் பேச்சுக்களும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பரவலாக சென்று கொண்டிருக்கின்றன.
 
கடந்த பதிவின் தொடர்ச்சியாக இந்த பதிவினை தொடரலாம் என்ற எண்ணத்தில் தொடர்கின்றேன். தமிழகத்துக்கு தஞ்சமாக மக்கள் வந்த 29 வது வருடம் இது.  போர் முடிவுக்கு வந்து மூன்று வருடமும் முடிவுக்கு வந்து விட்டது. இந்த கால ஓட்டந்தான் இன்றய தமிழகத்தின் ஈழத்தமிழர் அகதி முகாம் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைந்து இருக்கின்றது.
 
தமிழகம் எங்கும் அமைக்கப் பட்டிருக்கும் 115 முகாம்களிலும் மக்கள் ஒரே வகையான பிரச்சனைய எதிர்கொள்வதாகவே படுகின்றது. பொதுவாக எல்லா முகாமிலும் காணப்படும் பிரச்சனைதான் என்ன என்பதை சொல்லும் ஒரு அகதியின் சாட்சியாகவும், இதற்கு காரணங்கள் என்ன என்பதை விளக்கும் ஒரு ஆவணமாகவும் இந்த பதிவு அமையட்டும்…
 
2006 ஈழத்தின் போர் தொடங்கிய 7 மாதத்தில் எங்கள் தாயகப் பகுதியின் கிழக்கு பகுதியான திருகோணமலை இலங்கை அரசிடம் வீழ்ந்த பின்பு நீண்ட தூர தரை மற்றும் கடல் பயணத்தின் பின்னராக வந்தடைந்த அரிச்சல்முனை கடற்கரைப் பகுதி இன்னும் ஈரம் வற்றாமலே நினைவில் நிற்கின்றது. அன்று விட்ட மூச்சுக் காற்றுக்கு மட்டும் முன்னரை விட மாறுபாடு இருந்தது அதில் உயிர் பயம் சிறிதும் இருக்கவில்லை. அதிகாரிகள் விசாரனை , முகாமில் வந்த மக்களின் சந்திப்புக்கள் என முகாம் வாழ்க்கை பழக்கப்பட்டு கொண்ட அந்த நாட்களில்தான் தாயக நிலம் செங்குருதியில் நனைந்து கொண்டிருந்தது.  உயிர் பயத்தில் வந்தவனுக்கு தாயகம் பற்றிய கவலை எதற்கு என்று எனக்குள்ளே கேள்வியினைக் கேட்டு என்மனதிடதிலே வெட்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் அவை.
 
IMG_0011.JPG ஈழ தேசம் எரிந்தபோது தம் உயிரையும்

 ஆகுதி ஆக்கியவர்கள்

உயிர்கள் ஒவ்வொரு நாளும் மடிந்து வீழ்ந்த சேதிகள் வரும் போதெல்லாம் அழுது புலம்பிய அத்தனை உள்ளங்களும் இன்று மாறுபட்டுப் போனது (இலங்கையிலும் இந்நிலைதான் இப்போது) யாரும் தாயகம் பற்றி பேசவில்லை உலகம் முழுவதும் பரவிய ஈழத்தமிழர்கள் முதல், தமிழகத்தில் செந்தீயில் வீழ்ந்து போராடிய இனப் பற்றாளர்கள், ஏதோ ஒரு நாட்டில் மனித உரிமை மீறப் பட்டு இருக்கின்றதாம் என்று ஈழம் பற்றி எதுவும் தெரியாமல் குரல் கொடுத்த மனித உரிமைப் போராளிகள் வரை போராடிய போதும் தமிழக மண்ணில் தம் சொந்த மக்கள் இறந்து போனதுக்காக துக்கம் அனுஸ்டிக்கவும் அனுமதியில்லாத நிலை. இதுதான் தமிழகத்தில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழரை முதலில் தாக்கிய பேரதிர்ச்சி.
 
எங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள் என்று போராட விடவில்லை என்றாலும் இறந்தவர்களுக்கு துக்கம் அனுஸ்டிக்க கறுப்புக் கொடி கூட கட்டப்படக் கூடாத நிலையில் அதிகாரிகளின் கெடுபிடிகளை அவிழ்த்து விட்டிருந்தன மத்திய மாநில அரசுகள். இங்கு எந்த போராட்டமும் அரசியல் இலாபம் இருந்தால் மட்டும் அனுமதி இல்லாமலே செய்ய முடியும் அதை தவிர எவற்றுக்கும் அனுமதியில்லை போலும்.
 
இன்றைய யுத்தம் முடிவுக்கு பின்னரான 3 ஆண்டுகளில் முகாம் மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டு காணப் படுகின்றது. முன்பு இருந்ததை விட என்று கூறுவதை விட என்றுமில்லாதவாறு அனேகமான் குற்றச் செயல்களும் அடாவடியான நடவடிக்கைகளும் எல்லா முகாமிலும் பரவலாக நடை பெற்று வருகின்றன.
 
ஊடகங்கள் பலவற்றில் வந்த செய்திகளில் இருந்து அந்த அந்த முகாம்களிலே அடங்கிப் போகும் செய்திகள் வரை நாளுக்கு ஒன்றாக அரங்கேறத் தொடங்கியுள்ளது. முந்தைய பதிவில் அந்த காவல்த்துறை ஆய்வாளர் கூறியதைப் போன்று. கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பாலியல் வல்லுறவு, குடிவெறி வன்முறை, கடல்தாண்டி வெளிநாட்டுப் பயணம், சில தவறான உறவு முறைகள் என நாளுக்கு ஒன்று புதிதாக முளைத்துக் கொண்டு இருக்கின்றது.இத்தோடு முகாமிலும் முகாமைச் சுற்றி இருக்கும் தமிழக தமிழர்களுடையேயும் கருத்து முரண்பாடுகள் வளரத் தொடங்கி பல முகாமில் மோதலில் முடிவினை எட்டி இருக்கின்றன. 
 
இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம். ஈழத்தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்த வாழ்வை மறந்து விட்டார்களா அல்லது அவர்களின் மீது இப்படியான குற்றச்சாட்டுக்கள் போடப்படுகின்றனவா என்று பார்க்கின்ற போது உண்மையில் இந்த மோசமான நிலைக்கு காரணம் பலர் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறையே ஆகும்.
 
பொதுவாகவே எம்மக்களின் ஈழத்து வாழ்க்கைமுறை என்பது இங்கிருக்கும் வாழ்க்கை முறைக்கு முற்றிலுமாக மாறுபாட்டைக் கொண்டது. சத்தம் வைத்துக் கூப்பிடும் தூரத்தில் ஓவ்வொருவரும் வீடுகளைக் கட்டி வாழ்ந்த வாழ்க்கை முறை அவர்களது. சொந்த பந்தம் என்பவர்கள் கூட சைக்கிளில் சென்று பார்க்கும் தூரத்தில்தான் பெரும்பாலும் இருப்பர். ஒற்றைக் கடைக்கும் உத்தியோகத்துக்கும் , விவசாயத்துக்கும் போவதைத் தவிர வேறு போக்கிடம் அங்கு இருந்ததில்லை என்றாலும் இயற்கையை மெச்சிய வாழ்வோடு வாழ்ந்த அந்த வாழ்க்கை நிலை இன்று அவர்களிடத்தில் இல்லை. இயந்திரத்தை மிஞ்சிய வாழ்க்கை அவர்களை மனதளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
 
அந்த மாற்றங்களை அவர்களுக்குள் கொண்டுவந்த வாழ்க்கை முறை என்ன…
 
1.அகதி முகாம் ஒவ்வொன்றும் இன்றைய நிலையில் நகர்ப் புற சேரிகளைப் போல் தோற்றமளிப்பது..
 
2006071803600301.jpg கடலூர் முகாம் ஒன்று,
அடிப்படை வசதிகள் செய்து தருகின்றோம் என்று ஆண்ட கட்சியும்,  ஆளும் கட்சியும்  வாக்குரைத்து வாக்குரைத்து இன்றுவரும் நல்ல வீடு, நாளை வரும் நல்ல வீடு என்ற நம்பிக்கையில் பலர் இருக்கின்றனர் சிலர் நம்பிக்கை இழந்து தம் கையில் இருந்த பணத்தினை கொண்டு தமக்கு தமக்கென நிரந்தரமில்லாத நிலையான வீடுகளை அமைத்திருக்கின்றனர். 1983, 1990 களில் வந்தபோது இருந்த மக்களின் அளவில் கட்டப் பட்ட கூட்டுக் குடியிருப்புக்களில் பல இன்று உபயோகப் படுத்தும் நிலையில் இல்லை ஆனால் அதன் பின்னர் எந்த குடியிருப்புத் திட்டமும் அமைக்கப் படவில்லை இந்த நிலையில் 2006 இன் பின்னரான மக்களின் வருகையின் பின்னர் இந்த நிலை மிகவும் மோசமடைந்து இருக்கின்றது. இன்று இருக்கும் குடியிருப்புக்கள் போதாமல் குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியில் குடிசைகள் கட்டியும் அரை சுவர் வைத்தும், வீட்டிலும் குடியமர்த்தப் பட்டிருக்கின்றனர்.
 
2. மோசமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி.
2006082302770201.jpg
ஒரு நபருக்கு தேவையான அடிப்படை வசதிகளில் 2 பெரிய பிரச்சினை குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இது தமிழகத்தின் பல முகாமின் மோசமான நிலையில் காணப் படுகின்றன. ஒரு குடும்பத்துக்கு ஒரு கழிப்பறை என்ற நிலையில்லாமல். 50 குடும்பம் அதற்கு மேற்பட்ட குடும்பத்துக்கு ஒரு கழிப்பறை என்ற நிலையில் காணப் படுகின்றன பல முகாம்களில். குடிநீர் இல்லாததிற்காக லாறிக்கு காத்திருக்கலாம் ஆனால் கழிவறைப் பயன்பாட்டுக்கும் லாறிகளைக் காத்துக் கிடக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.
  
3.மூச்சுத் திணற வைக்கும் குடிசன அடர்த்தியும் சாக்கடை நிலைகளும்..
 
 முகாமின் சூழல் 1990 வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் குட்டி கிராமங்கள் போல்தான் தோற்றமளித்தது அதன் பின்னர் அங்கிருந்த மக்களின் பிள்ளைகள் வாழும் நிலைக்கு வந்தும் 2006 இல் இருந்து  புதிதாய் மக்கள் வந்து அவர்களுக்கு என்று தனி வீடுகள் அமைக்காமல் அந்த எல்லைக்குள்ளேயே புதிய வீடுகள் காளான்களைப் போல் முளைத்திருப்பதும், வீட்டிலிருந்து வெளியேறும் சமையல் தண்ணிரில் இருந்து குளிக்கும் தண்ணிர்,மழைகாலமானால் தேங்கி நிற்கும் தண்ணீர் வரை வெளியேற்றப் படாமலும் எல்லா இடங்களையும் ஒரு சேரியின் தோற்றத்தை பிரதிபலிக்கச் செய்து கொண்டிருக்கின்றது.
 
4. படித்துவிட்டும் வேலை இல்லாத வாழ்க்கையில் நாள் கூலிக்காக நாள் தோறும் அலையும் இளைஞர்கள்.
ஒவ்வொரு முகாமிலும் படித்துவிட்டு பட்டப் படிப்பை முடித்துவிட்டும் தாம் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்க வில்லை என்றாலும் பறவாயில்லை அதற்கு குறைவான வேலை செய்வதற்கு கூட போகமுடியாத சூழ் நிலையில் தினமும் கூலிக்கு வர்ணம் பூசவும், கேபிள் லைன் வேலைக்கும், மூட்டை தூக்கவும் செல்லும் என ஒவ்வொரு முகாமிலும் அந்த ஊரின் முக்கியமான ஏதாவது ஒரு கூலித் தொழிலினை தேடி ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர் கூட்டம்.
 
இப்படியாக இருக்கும் இந்த முகாம் உண்மையில் பலரின் பார்வையில் ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை என்ற நோக்கதோடே மக்கள் தமது காலத்தை கடத்தி வந்தனர், இந்த வாழ்க்கை முறைதான் இந்த மக்களை மோசமான செயற்படுகளுடன் கூடிய வாழ்க்கைக்கு இட்டுச் சென்று இருக்கின்றது.
 
இங்கு மக்களின் தவறான குற்றச் செயல்களைப் பற்றி விசாரிக்கும் அதிகாரிகளும் சரி அவர்களுக்காக பணி புரிகின்றோம் என்று கூறும் நிறுவனங்களும் சரி ஒரு விடையத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு இடத்தில் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியிருக்கும் போது அந்த நெரிசலில் பல அசம்பாவிதங்கள் இடம் பெறுவது போன்றுதான் இங்கும் நடை பெற்று வருகின்றது ஒரு குடியிருப்பு தொகுதிக்கும் அடுத்த குடியிருப்பு தொகுதிக்கும் இடையில் ஒருவர் நடந்து செல்ல முடியாத வகையில் கட்டப் பட்டிருக்கும் வீடுகள், அவர்களது வீட்டுச் சாக்கடை தண்ணீரும் இவர்களது வீட்டுச் சாக்கடைத் தண்ணீரும் ஒன்றாக நடைபாதையில் கூடியிருக்கும் நிலை, வீட்டில் உள்ள பெண்கள் மறைவாக நின்று குளிப்பதற்கோ உடை மாற்றுவதற்கோ இடம் இல்லாத குடியிருப்புக்கள். அவசரமாக சிறுநீர் கழிப்பதற்கு என்றால் கூட 100 மீட்டர் நடந்து செல்லும் நிலை என மக்கள் அன்றாட நடவடிக்கைகளை மோசமான முறையில் பாதித்திருக்கின்றது.
 
 
ஒரு இரவினில் அவசரத்திற்கு வெளியில் செல்வது என்றால் வெளிச்சம் இல்லாத 50, 60 குடியிருப்புக்களைத் தாண்டி, செல்லும் பெண்களின் நிலை. ஒரே வீட்டுக்குள் கூட்டுக் குடித்தனமாய் 2 -3 குடும்பங்கள்,வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் என எல்லா வகையிலும் அவர்களது அவல நிலைகள் மோசமானதாக இருக்கின்றது.
 
5.குடிப் பழக்கம்:
இலங்கையில் வாழ்ந்த வாழ்க்கை ஒருகணம் நினைவுக்கு வந்து போகின்றது. அங்கு குடித்திருப்பவர்களைக் காண்பது அரிது அதிலும் அவர்கள் வெளியிலே திரிவதைக் காணமுடியாது. அப்படிக் குடிப்பவர்கள் குறந்தது 35- இல் இருந்து அதற்கு மேலான வயதைக் கடந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் இங்கு அப்படியே நிலை வேறு 10 ம் வகுப்பில் படித்துக் கொண்டிருப்பவன் குடித்துக் கொண்டிருக்கின்றான். சாலையின் ஓரத்தில் நண்பர்களோடு புகை பிடித்துக் கொண்டிருக்கின்றான், ஆனால் இதில் நான் கண்டவற்றில் இங்கு குழந்தையாக வந்தவர்களும் இங்கு பிறந்தவர்களும் அதிகமாக ஈடுபடுவது மிகவும் வேதனையத் தருகின்றது.ஒரு முகாம் பார்வையிடும் அதிகாரி சொல்கிறார் முகாமில் பணக் கொடுப்பனவு வழங்கப்படும் நாளில் அருகில் உள்ள டாஸ்மார்க் கடையில் ரூ.125000 மேலதிகமாக விற்பனையாகிறதாம். இது எவலவு பெரிய மோசமான குடிப்பழக்கத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது என்பதைப் பாருங்கள்.. அவனவன் சம்பாத்தியம் செய்து உழைப்பதில் குடித்தால் அதில் அளவு கணக்கு இருக்கும் இது மாதந்தோறும் இலவசமாக எதற்கு செலவு செய்யக் கொடுக்கப் படுகின்றது என்றில்லாமல் கொடுக்கப் படும் பணமாக இருப்பதால் பல வீடுகளிலும் முகாமிலும் இப்படியான செலவினங்களுக்கே செல்கின்றது… சனி ஞாயிறு ஆனால் முகாமின் பல இடங்களில் குடித்துவிட்டு தகாத வார்த்தைகள் பேசி சண்டை பிடித்துக் கொள்ளும் பலரால் இங்கு பெண் பிள்ளைகளை வைத்திருக்கவே அஞ்சுகின்றனர் பெற்றோர்கள்….
 
6.அரச அதிகாரிகளின் கட்டுப்பாடுகள்:
 முகாம் மக்கள் ஓர் திறந்த வெள்க் கைதிகள் என்பதை அடிக்கடி ஞாபகப் படுத்தும் சம்பவம் இவை. முகாமில் உள்ள அகதி மக்கள் வெளியூர் சென்று வேலை பார்க்க அனுமதி இல்லை. மாலை 6.00 மணிக்குள் முகாமுக்கு திரும்பி விடவேண்டும் என்று கூறுகின்றது இங்குள்ள அரச அதிகாரிகளின் சட்டங்கள். ஆனால் இவை சில முகாம்களில் தளர்த்தி உள்ளனர் அந்தந்த அதிகாரிகளின் மனதில் உள்ள ஈரத்தன்மையினைப் பொறுத்து. இந்த சட்டம் முகாமிலிருந்து தினந்தோறும் நாள் கூலி வேலைக்கு செல்பவர்களுக்கு பொருந்தும் ஆனால் ஒவ்வொரு முகாமிலும் பட்டப் படிப்பினை முடித்தும், தொழிற்படிப்பினை முடித்தும் பல்வேறு இளைஞர் யுவதிகள் காணப் படுகின்றனர் இவர்கள் எல்லாம் வேலை தேடி ஊர் ஊராய் அலைந்து சில இளகிய மனம் படைத்தவர்களின் தயவினால் வேலைகளில் சேர்கின்றனர் காரணம் பல நிறுவனங்கள் இலங்கை தமிழர்களை பணியில் அமர்த்துவது சட்டக் கெடுபிடிகள் அதிகம் இருக்கும் என்று தவிர்த்து விடுகின்றன. இதனால் எங்காவது குறைந்த சம்பலத்தில் கிடைக்கும் ஒரு அலுவலக வேலையிஅனியாவது தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியுடன் வேலகளில் சேர்கின்றனர் முகாம் இளைஞர் யுவதிகள், ஆனால் அவற்றைக் கூட முளுமையாக செய்ய முடியாத நிலைதான் இன்று முகாம்களில் நிலவுகின்றது. இந்தியாவின் உயர்பதவியில் இருக்கும் யாராவது தமிழ்நாட்டுக்கு வந்தாலோ(ஜனாதிபதி, பிரதமர், காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள், எதிக்கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள்) அல்லது தமிழ்நாட்டின் முக்கிய பிரமுகர்கள் அந்தந்த முகம் அமைந்துள்ள மாவட்டத்துக்கு வந்தாலோ முகாமினை விட்டு வெளியில் செல்ல அனுமதி கிடையாது. இது அவர்கள் எத்தனை நாட்கள் தங்கியிருக்கின்றனரோ அத்தனை நாட்கள் அமுலில் இருக்கும். இவை பெரும்பாலும் கிழமை நாட்களில்தான் நடைபெறும் அந்த நாட்களில் ஒவ்வொரு முகாமிலும் கியூ பிரிவு ஆய்வாளர்கள் முகாம் சோதனை என்ற பேரில் எல்லோரையும் ஓர் இடத்திற்கு வரவழைத்து குடும்பம் குடும்பமாக அடையாளப்படுத்துவார்கள். இந்த நாட்களில் பணிபுரியும் நிறுவனங்களில் வேலை என்பது சாத்தியமாகாது இத்தகைய காரணத்தினாலே பலர் வேலை இல்லாமல் ஆண்கள் படித்துவிட்டு தினக் கூலிக்கும் பெண்கள் வீட்டிலும் இருக்கின்றனர். ஒரு குற்றப் பரம்பரையினரை  அடையாலப் படுத்துவது போல், நகரத்தினை போலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரவுடிகளை பிடித்து வைப்பது போல் நடத்தும் இந்த முறை எல்லா ஈழத்தமிழர் மனங்களையும் காயப்படுத்தியுள்ளது. உண்மையில் இந்த சட்டங்கள் நடமுறையில் உள்ளனவா அல்லது அந்தந்த முகாமின் அதிகாரிகள் தங்கள் பணிகளுக்காக சட்டங்களைப் போட்டுக் கொள்கின்றனரா. உண்மை நிலை யாருக்கும் தெரியாது. சில நேரங்களில் மறுவாழ்வுத்துறையில் இருந்து வருபவர்கள் நீங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து பணி செய்வதற்கான சான்றினை சமர்ப்பித்தால் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு வர தேவையில்லை என்கின்றனர். ஆனால் அவ்வாறு கொடுப்பதை  அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த நிலை படித்த பல இளைஞர்களை வெகுவாகப் பாதித்திருக்கின்றது.
 
கூற இன்னமும் மீதம் இருக்கின்றது தொடர்வேன்.....
தமிழகத்தை விட்டு சட்ட விரோதமாக வெளியேறும் ஈழ அகதிகள் அடுத்து   தொடரும்...

 

அகதியாய் நாம் சாதித்தது என்ன....

 
அலைகளின் இடையே அகதியாய் நாம் இங்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிடப் போகிறது...ஒவ்வோரு ஆண்டு ஆரம்பிக்கும் போதும் இந்த வருடம் எப்படியாவது சரிவருமா... என்ற ஏக்கங்களுக்கு மத்தியில் இனி காத்திருக்கும் மக்கள் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. காரணம்... பிறந்த மண் தெரியாததும் தாய் மண்ணில் பிறக்காததுமான சந்ததி வந்து விட்டது.

 

முகாம்களிலே நான் உலவுகின்ற போது கவனித்த பல சம்பவங்கள் என்னை ஈழத்தமிழந்தானா என எண்ணிப்பார்க்க செய்கின்றது. அது ஒன்றும் அவர்கள் தவறு இல்லை... பெற்றோர் சொல்லிவைக்காத எம் மண்ணின் பெருமையும் இங்குள்ள சூழ்னிலைகளும் அவர்களை மாற்றி வைத்திருக்கின்றது... நாடு கெட்டு போவதற்கு நாகரீகம் அடையாளம் என கூறிய கண்ணதாசனின் பாடல் என்னில் ஒருகணம் வந்து போனது...

 

சம்பவங்கள் பல.... ஆனால் அதை பட்டியலிட்டு கூறி என் பல்லைக்குத்தி என் மூக்கில் வைத்து மோர்ந்து பார்க்க விரும்ப வில்லை....காலம் எவ்வாறாயினும் மாறிவிட்டு போகட்டும் நாம் தமிழர் என்பதில் மாறாமல் இருப்போம்... எமது விடிவுக்காய் ... தமிழக சொந்தங்களும்.. நாம் யார் என்று தெரியாவிடினும் மனிதம் என்று வெளி நாட்டவரும் கிளர்ந்தெழுகையில் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?.....

 

நாட்டினை விட்டுவந்த அனைவரும் அந்தந்த நாட்டின் குடிமக்களாய் ஆகிவிட்ட பொழுதும் நாம் மட்டும் இன்னும் அகதிகளாய் இருக்கின்றோம் என்றாவது நாம் நாடு திரும்புவோம் என்று...... திரும்பிக்கொண்டுதான் இருக்கின்றோம் நாள் தோறும்... அட்டை பாஸ்போர்ட் ... வாங்கி கொண்டு... அங்கே சிங்களவன் வீடு கட்ட தகரம் தருகிறானாம் என்று.....

 

உங்கள் தேசம் உங்களுக்கு மறந்து போய் இருக்கட்டும்... இல்லை நீங்கள் அங்கு பிறக்காதவராய் கூட இருக்கட்டும்... ஒரு நொடியேனும் நினைத்து பாருங்கள் எம் மக்கள் படும் அவலத்தை. வானம் எங்கும் பறந்தாலும் பறவை என்றும் தன் கூட்டில்... உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் என்றும் தாய் நாட்டில்... வாழும் எண்ணம் கொள்ளுங்கள்...

 

அகதியாய் இதுவரை நாம் சாதித்தது என்ன என சிந்தித்து பாருங்கள்... நாளை........இங்கு வாழ்ந்த தமிழ் அகதிகளின் பெயர்களையும் வரலாற்று சுவட்டில் ஏற்ற வழியைத் தேடுங்கள்... புதிய உலகம் பல வழிகளைக்கற்றுத் தருகிறது நமக்கு நம் இலக்கை அடைய... அதனை எடுத்து கொண்டு எதிரியை வீழ்த்தும் வழிகளைத் தேடுங்கள்....
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.