பாகம் இரண்டு
வணக்கம்..
நான்தாங்க நேசன் பேசுறேன்..
என்ன அப்படி பார்க்கிறீங்கள்.. சென்ற பாக கதையின் நாயகன் தாங்க..
சரி இப்போ சொல்ல வந்த விடயத்துக்கு வாறன்.
என்னை கூட்டி கொண்டு போகும் இந்த இரண்டு அண்ணைமாரையும் எனக்கு ஒரு வாரத்துக்கு முதல் தான் தெரியும்.
எப்படியும் பொறியியல் கல்லூரிக்கு போய்விட வேண்டும் என்று உறுதியோட, வட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சிக்கு தனியார் வகுப்புக்காக வரும்போது கோவிந்தன் கடை சந்தியடியில் மறித்து .."தம்பி உங்களோட கொஞ்ச நேரம் பேசவேணும் நேரம் இருக்குமா" என்று கேட்ட போது தான் நான் அவர்களை முதன் முதலில் பார்த்தேன்.
என்ன.. என்னை விட நாலு அல்லது ஐந்து வயசுதான் கூட இருக்கும். சிரித்தபடி தான் கேட்டார்கள். எனக்கும் வகுப்புக்கு கொஞ்சம் நேரம் இருந்ததால் அவர்களுடன் பேச ஒத்துக்கொண்டேன்.
"தம்பி உங்களுக்கு தெரியாதது ஒண்டும் இல்லை. இராணுவம் மன்னார் பக்கத்தால உடைச்சு கொண்டு உள்ளே வந்து கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட எழுபது கிலோ மீட்டருக்கு மேல முன்னணி காவலரண்கள்..ஐம்பது மீட்டருக்கு ஒரு காவலரண், காவலரணுக்கு மூன்று பேர், மூன்று கடமை நேரம் என்று பார்த்தாலும் தம்பி..எத்தனை பேர் வேணும் என்று நீங்களே கணக்கு பண்ணி பாருங்க தம்பி." அந்த அண்ணா சொல்லி கொண்டே போனார்.
"அண்ணே நீங்கள் சொல்லுறது விளங்குது அண்ணே ..வீட்டிலேயே இரண்டு தங்கச்சி, ஏலாத அப்பா அம்மா, எல்லாரையும் நான் தான் அண்ணே பார்க்க வேணும். நான் படிச்சு பொறியிலாலராக வந்தால் தான் எதுவுமே செய்யமுடியும் அண்ணா. நான் வேணும் என்றால் படிச்சு முடிச்ச பிறகு ஏதாவது உதவி செய்யட்டுமா அண்ணா" என்று கேட்டேன்.
"தம்பி நீங்கள் படிச்சால் எங்கட நாட்டுக்கு தான் பெருமை தம்பி.. ஆனால் போற போக்கை பார்த்தால் நீங்கள் படிச்சு சோதனை எழுத முதலே உங்கட வீட்டு வாசலில் வந்து இராணுவம் நிப்பான் தம்பி. நானும் பொறியியாலனாக வரவேண்டும் என்று தான் படிச்சேன். இன்றைய நிலைமை அப்படி தம்பி... இல்லை என்றால் உங்களை படிக்க விட்டு நாங்களே சண்டை பிடிச்சிருப்போம்."
"தம்பி உங்களுக்கே தெரியும். ஜெயசுக்குறு காலத்திலும் சரி, யாழ்பாண சண்டையிலும் சரி, மாணவர்களை சுழற்சி முறையில் தான் களபணிக்கு கேட்டோமே தவிர முழுமையாக கேட்கவில்லை. இன்றைய நிலைமையை உணர்ந்து தான் உங்களிடம் கெஞ்சி கொண்டிருக்கிறோம்" என்று நியாயம் சொன்னார் அந்த அண்ணா.
அவர்கள் சொல்லுவது நியாமாகபட்டாலும் வீட்டு நிலைமையை யோசித்து, இவர்களை வெட்டிவிட வேண்டும் என்று மனசிலே நினைத்து, " அண்ணே வகுப்பு நேரமாச்சு..நான் போகவேணும். வீட்டை போய் யோசிச்சு பார்கிறேன். விரும்பினால் எங்கே வந்து சேரவேண்டும்" என்று நயமாக கேட்டு அவர்களின் முகாம் முகவரியை தெரிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
மாலையில் வீட்டுக்கு வந்ததில் இருந்து அவர்கள் சொன்னது தான் காதில் ஓடி கொண்டிருந்தது. நான் படிக்க வேண்டும் என்றதுக்காக யாரோ அண்ணாமார் அக்காமார் இரவிரவாக கண்விழித்து காவலரணில் கடமை இருப்பது எனக்கு என்னவோ செய்தது.
அவர்களுக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் தானே. அவர்களுக்கும் தம்பிமார் தங்கச்சிமார் இருந்திருபினம் தானே. அவர்களுக்கும் ஏலாத அம்மா அப்பா இருந்திருபினம் தானே. எங்களுக்காக எங்கட அடுத்த தலைமுறைக்காக அவர்கள் சிலுவை சுமக்க.. நாங்கள் அவர்களுக்கு என்ன நன்றி கடன்.. எப்போது செய்ய போகிறோம் இப்போ செய்யாமல்..ஆயிரம் கேள்விகள் ..அன்று என்னை தூங்கவே விடவில்லை. நான் தூங்கும் போது விடிந்திருந்தது வானம் மட்டும் இல்லை என் மனசும் தான்.
காலையில் ஒரு முடிவோட அம்மாவிடம் வகுப்பு என்று பொய் சொல்லிவிட்டு அவர்களின் முகாமுக்கு போனேன். நேற்று என்னுடன் பேசிய அண்ணா முகாமின் முற்றத்தை கூட்டி கொண்டிருந்தார்.
என்னை கண்டது அருகில் வந்து "என்ன தம்பி ..முகத்தில் ஒரு மாற்றம் தெரிகிறது" என்று மனசை அறிந்து பேசினார். "அண்ணா ..யோசிச்சு பார்த்தேன் உங்களுடன் சேருவது என்று முடிவு எடுத்துவிட்டேன். என்னால் என் அம்மாவிடம் நேரடியாக கேட்கவும் முடியாது. அவ தாங்கமாட்டா..சொல்லாமல் ஓடி வரவும் எனக்கு பிடிக்கவில்லை ..நீங்க தான் வந்து அம்மாவிடம் பேசவேண்டும்" என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பி எதுவுமே நடக்காதது மாதிரி புத்தகத்தை எடுத்து வழமைக்கு மாறாக படிப்பது போல பாசாங்கு காட்ட தொடங்கினேன்.
நான் கஷ்டபட்டு படிக்கிறேன் என்று நினைத்து ,அம்மா விரததோடையும் தேநீர் ஊற்றிவந்து கொடுத்துவிட்டு ,தலையை தடவி நல்லா படியடா என்று சொல்லிவிட்டு போகும்போது எனக்கு உள்ளுக்குள்ளே அழுகை தான் வந்தது.
எனக்கென்ன.. என்னுடைய நிலைமையில் நீங்கள் இருந்திருந்தால் உங்களுக்கும் வந்திருக்கும் தானே.??
அன்று மாலையே அவர்கள் வந்தார்கள்.
அதுக்கு அப்புறம் நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே.
நான் செய்தது நியாயம் தானே உறவுகளே..??
இப்போ அந்த அண்ணைமாருடன் உங்கள் விடிவுக்காக போகிறேன்.நாளை நிச்சயம் விடியும் என்ற நம்பிக்கையுடன் போகிறேன்.
எனக்கு தெரியும் நீங்கள் எனக்காக மனசுக்குள்ளே பிரார்த்திப்பீர்கள் என்று..ஒண்டுக்கும் யோசிக்காதீங்க நாங்கள் எங்கள் உயிரை கொடுத்தாவது உங்களுக்கு விடிவு பெற்று தருவோம்.
என்ன.. என்ர அம்மா மாதிரி அழுது கொண்டிருகிறீங்கள்.. அழாதீங்க..
நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக.
போய்வரட்டுமா என் உடன்பிறப்புகளே..!
பாகம் மூன்று இங்கே அழுத்துங்கள்
(விடியல் தொடரும்)