பயங்கரவாதி கவனித்துக் கொண்டிருக்கிறான்
யமுனா ராஜேந்திரன்
இரவு எட்டுமணி ஒரு நிமிடம் கழித்து
மதுவிடுதியில் அந்த வெடிகுண்டு வெடிக்கப்போகிறது
இப்போது 16 நிமிடங்கள் கடந்துவிட்டது
இன்னும் சிலருக்கு நுழைய நேரமிருக்கிறது
சிலர் வெளியேறலாம்
பயங்கரவாதி
ஏற்கனவே அந்தப்பக்கம் அகன்றுவிட்டான்
தூரம் எல்லாவிதமான சேதங்களிலிருந்தும்
அவனைக் காத்துவிடும்
சரி, அங்கே இடம் பெறும் காட்சிகள்
மஞ்சள் மேலங்கியணிந்த பெண்
அவள் உள்ளே நுழைகிறாள்
கறுப்புக் கண்ணாடி அணிந்த ஆண்
அவன் வெளியேறிவிட்டான்
ஜீன்ஸ் அணிந்த பையன்கள்
அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
பதினாறு நிமிடம் நான்கு நொடிகள் போயிற்று
சின்னஞ்சிறு பையன் அதிர்ஷ்டசாலி
அவன் ஸ்கூட்டரில் புறப்பட்டுவிட்டான்
உயரமானவன் அவன் உள்ளே போகிறான்
பதினோழு நிமிடம் நாற்பது நொடிகள்
ஒரு சிறுமி
தலையில் பச்சை நிற ரிப்பனுடன் விடுதி அருகில்
நடந்து போகிறாள்
பஸ் அவளை மறைத்துக்கொண்டுவிட்டது
பதினெட்டு நிமிடம் கடந்துவிட்டது
அந்தச் சிறுமியை காணோம்
உள்ளே போகுமளவு அவள் முட்டாளா என்ன
அல்லது
அப்படி அவள் போகவில்லையா
உடல்களை வெளியே கொண்டுவரும்போது நாம் பார்க்கலாம்
பத்தொன்பது நிமிடங்கள் கடந்துவிட்டது
யாரும் உள்ளே போகக் காணோம்
அதற்கு மாறாக ஒரு குண்டு ஆண் வெளியேறுகிறான்
அவன் தனது பாக்கெட்டை துழாவுவதுபோல்
தெரிகிறது, அப்புறம்
எட்டுக்கு ஒரு நிமிடத்துக்கு 10 நொடிகள் இருக்கும்போது
பாழாய்ப்போன கையுறைகளைத் தேடி அவன்
உள்ளே போகிறான்
இப்போது எட்டு மணி ஒரு நிமிடம்
நேரம், அது எப்படித்தான் இழுபடுகிறது
நிச்சயம் – இப்போது ஆகிவிட்டது நேரம்
இல்லை. சரியாக ஆகவில்லை
ஆமாம். இப்போது ஆகிவிட்டது
வெடிகுண்டு, அது வெடிக்கிறது
http://yamunarajendran.com/?p=1637