-
தமிழா நீ பேசுவது தமிழா?
இப்பாடலைச் சிறிது முன்பே கேட்டதுண்டு. எத்தனை முறை கேட்டாலும், சிந்திக்க வைப்பது. பாட்டையும் பாடுபவரையும் ரசிக்க வைப்பது. யாழில் எனது பழைய பதிவு ஒன்றைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது :
-
-
இராபர்ட் ஃப்ராஸ்டின் (Robert Frost) உள்ளரங்கம் - சுப.சோமசுந்தரம்
இராபர்ட் ஃப்ராஸ்டின் (Robert Frost) உள்ளரங்கம் - சுப.சோமசுந்தரம் கல்லூரியில் படிக்கும் காலத்தில் எனக்கு வாய்த்த சிறந்த ஆங்கிலப் பேராசிரியர் சிலர் ஆங்கில இலக்கியக் காட்சியையோ கவிதையையோ உணர்வுபூர்வமாய் நம் அகக்கண்ணில் நிறுத்தும்போது (அத்தகையோர் வாய்க்கப் பெறுதல் நமக்கான வரம்), நான் ஓரளவு ரசித்தது என்னவோ உண்மைதான். இருப்பினும் என்னை மெய் மறக்கச் செய்யும் தமிழின் இலக்கியச்சுவை அதில் தோன்றுவதில்லையே என்று குறைப்பட்டுக் கொள்வதுண்டு. வலுக்கட்டாயமாக ஏதோ உணர்வைக் கடத்த ஆங்கிலப் பேராசிரியர் தம் உடலை வருத்தி ஏன் இவ்வளவு மெனக்கிடுகிறார் என்றெல்லாம் நினைத்தது உண்டு. அந்த வயதில் தேவையில்லாத, பொருத்தமில்லாத ஒப்பீட்டினால் என் மனதில் அக்குறை தோன்றியது என உணர வயது தேவைப்படுகிறது. வயதாவதின் மேன்மையை வயது ஆகியே உணர்த்துகிறது. பல்லாயிரமாண்டு மூத்த ஒரு மொழியுடன் இன்றைய வடிவத்திற்கு வந்து சுமார் ஐநூறு வருடங்களே ஆன ஒரு மொழியை ஒப்பீடு செய்வது வேடிக்கைதானே ! மடமையும் கூட. ஆயினும் நமது அக இலக்கியங்களில் வாய்க்கும் உள்ளுறை உவமம், இறைச்சி போல அவர்களிடமும் அருமையான மொழியாட்சி ஓரளவு உண்டு என்பதை ஏற்கத்தான் வேண்டும்; ஏற்று ரசிக்கத்தான் வேண்டும். ஆங்கிலத்தின் இன்றைய வடிவமானாலும் இலத்தீன், கிரேக்கம் போன்ற பண்டைய மொழிகளில் இருந்து தோன்றியமையின் அச்செம்மொழிகளின் கூறுகள் அமைந்து திகழ்வது இயல்புதானே !அவ்வகையில் என்னைக் கவர்ந்த அமெரிக்கக் கவிஞரான இராபர்ட் ஃப்ராஸ்ட் அவர்களின் கவிநயத்தை இங்கே தொட்டுக்காட்ட எண்ணம். மிகவும் எளிமையான வரிகளில் பாமரனுக்கும் பயனுள்ள செய்தியை உள்ளார்ந்த பொருளாய் இலாவகமாகச் சொல்லிச் செல்லும் நேர்த்தி அவருக்கே உரியது. அவர் சொல்ல வருகிற உயரிய சிந்தனை கவிதையில் ஓரிடத்தில் வந்து ஏனைய வரிகள் அதனை மேலும் வலுப்பெறச் செய்வதாகவோ அல்லது அழகியல் சார்ந்த வர்ணனையாகவோ இடம்பெறக் காணலாம். எனவே நம் ரசனைக்குத் தீனி போடும் கவிஞராக மட்டுமின்றி மானிடர்க்கு உயரிய வாழ்வியல் கருத்துகளை அள்ளித் தெளிக்கும் சமூகச் செயற்பாட்டாளராகவும் மிளிர்கிறார் இராபர்ட் ஃப்ராஸ்ட். சில இடங்களை எடுத்துக்காட்டலாம் என்று நினைக்கிறேன். முழுக்கவிதையையும் வாசகருக்கு விடுத்து மையச் செய்தியைக் கொண்டுள்ள வரிகளை மட்டும் நாம் கண்டு களிக்கலாமே ! முதலில், 1915 இல் வெளியிடப்பட்ட 'The Road not taken' (தேர்ந்தெடுக்காத பாதை) எனும் கவிதையைத் தேர்ந்தெடுக்கலாம். அதில் நாம் தேர்ந்தெடுக்கும் வரிகள் கவிதையின் தொடக்கத்திலேயே வந்து கவிஞரின் சிந்தனைப் பாதையில் நம்மையும் இட்டுச் செல்கின்றன. "Two roads diverged in a yellow wood And sorry I could not travel both" என்று ஆரம்பித்து, "I took the one less traveled by And that has made all the difference" என்று கவிதை நிறைவுறுகிறது. "கானகத்தில் இரண்டு பாதைகள் பிரிந்து சென்றன; என்னால் இரண்டிலும் பயணிக்க முடியவில்லை" என்று வெள்ளந்தியாய்ச் சொல்லித் தொடங்குகிறது பாடல். கவிதையின் மையப் பொருளே இந்த இரு வரிகளில் சுருக்கமாகவும் உருவகமாகவும் வெளிப்படுகின்றது. கானகம் உலகமாகவும் பாதைகள் வாழ்க்கைப் பாதைகளாகவும் உருவகிக்கப் பெறுகின்றன. இடைப்பட்ட வரிகளிலிருந்து, அந்த இரு பாதைகளும் இலைகள் சொரிந்து பெரிய அளவில் வேறுபாடின்றி தென்பட்டன என்பது தெளிவு. வனத்தில் வழி சொல்வோர் யாருமிருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் ஏதோ ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கத்தானே வேண்டும் ! இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணிக்க முடியாதே ! உட்பொருள் யாதெனில் வாழ்வில் நம்மால் தீர்மானிக்க முடியாத முடிவுகளில் ஏதேனும் ஒன்றை எடுத்தே ஆக வேண்டும் என்னும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம். நாம் எடுத்த முடிவு தவறாகவும் முடியலாம். அப்போது ஐயோ என்று நிலை குலைந்து போகாமல், "சென்றதினி மீளாது மூடரே! நீர்எப்போதும் சென்றதையே சிந்தை செய்துகொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா இன்று புதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்எண்ண மதைத் திண்ணமுற இசைத்துத் தின்றுவிளையாடிக் கொண்டு இன்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா" என்ற பாரதியின் சொல் கேட்டு முன்னேறுவது சிறப்பு என்பதையே, "I could not travel both" என்பது சுட்டுகிறது எனலாம். ஏனெனில் அப்போது பாதையின் முடிவு தெளிவாய் இல்லாததால் எந்த முடிவும் தோல்வியை சந்தித்திருக்கலாமே ! மேலும் பாடலில் இறுதியாக வரும் இரண்டு வரிகள், "(இலை தழை அதிகம் கிடந்த) மக்கள் அதிகம் பயணிக்காத பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அதுவே அனைத்து விளைவுகளுக்கும் காரணியாய் அமைந்தது" என்பதே. இதனை மக்கள் தத்தம் இயல்புக்கு ஏற்ப, அனுபவத்திற்கு ஏற்ப பொருள் கொள்ளலாம். வெற்றி பெற்றோர் தனி வழியைத் தேர்வு செய்து வெற்றி பெற்ற தம் தனித்தன்மையை மெச்சிக் கொள்ளலாம். தோல்வியுற்றோர் ஊரோடு ஒட்ட ஒழுகும் ஒப்புரவு இன்மையால் தம் தோல்வியை எண்ணி வருந்தலாம். ஆனாலும் விளைவை எண்ணி வருந்த வேண்டியதில்லை என்பதையே முதல் இரு வரிகள் சுட்டுவதை மறக்க வேண்டியதில்லை. காடு மஞ்சள் நிறத்தது என்பதை 'yellow wood' என்று பாடலின் முதல் வரியில் வாசிக்கிறோம். அது இலையுதிர் காலத்தைக் குறிப்பது. அஃதாவது கவிஞரின் வயது முதிர்ந்த நிலையை உருவகிப்பதாய்க் கொள்வது பாடலை ரசிப்போரின் உரிமை. இது போன்ற அழகியல் பொதுவாக இராபர்ட் ஃப்ராஸ்டின் அனைத்துப் பாடல்களிலும் காணக் கிடைப்பது. அடுத்து நம் நினைவுக்கு வருவது இராபர்ட் ஃப்ராஸ்டின் 'Stopping by Woods on a snowy evening' என்ற கவிதை. குறிப்பாக அதில் இறுதியாக வரும் வரிகள் : "The woods are lovely, dark and deep But I have promises to keep And miles to go before I sleep And miles to go before I sleep" பொருள் : "காடு மனதைக் கொள்ளை கொள்வதாகவும், இருள் கவிந்தும், ஆழ்நிலையொடும் அமையப்பெற்றுள்ளது. ஆனால் நான் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உண்டு. நான் அடங்கும் முன் கடக்க வேண்டிய தொலைவு அதிகம் உண்டு". உள்ளார்ந்த பொருள் : "வாழ்வில் என் மனம் கவர்ந்த பொருட்கள், செயல்கள் உண்டு. ஆனால் அவற்றில் முழுமையாக ஈடுபட்டுத் தன்னிலை மறந்து நான் வாழ முடியாது. ஏனெனில் (மனதிற்குப் பிடிக்கிறதோ இல்லையோ) வேறு கடமைகள் உலகியல் வாழ்வில் எனக்கு உண்டு. அக்கடமைப் பாதையில் நான் வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதாவது அவற்றை நிறைவேற்ற எனக்கான கால வெளி குறைவாகவே உள்ளது". மேற்கூறிய கவிதைகளில் வாழ்வியல் தத்துவங்களை வேற்றுப்பொருளாய் வைத்த ஃபிராஸ்ட் தமது Fire and Ice என்ற குறுங்கவிதையை இயல்பு நவிற்சியாய்த் தாமே நேரிடையாய் சொல்லிச் செல்கிறார். "Some say the world will end in fire Some say in ice From what I've tasted of desire I hold with those who favor fire But if it had to perish twice I think I know enough of hate To know that for destruction Ice is also great And would suffice" "சிலர் இந்த பூமி நெருப்பில் அழியும் என்கின்றனர்; சிலர் பனியில் உறையும் என்கின்றனர். பேராசை எனும் தீயை உணர்ந்த நான் 'நெருப்பு' அணியினருடன் நிற்கிறேன். பூமி இருமுறை அழிய வேண்டுமெனில், வெறுப்பின் (அமைதியாய் அழிக்கும் தன்மை) உணர்ந்த நான் பனியின் ஆற்றலும் பெரிது என்பேன்; அழிவிற்கு அதுவே போதும் என்பேன்" என்பதே பாடற் பொருள். அஃதாவது பேராசை நெருப்பைப் போல் அதிதீவிரமாய் உலகை அழிக்கவல்லது என்பதும், வெறுப்பு பனியைப் போல் அமைதியாய் உள்ளிருந்து அழிக்கவல்லது என்பதும் கவிதையின் செய்தியாம். அடுத்து வரும் குறுங்கவிதை 'Dust of snow' (பனித் தூசி). "The way a crow Shook down on me The dust of snow From a hemlock tree Has given my heart A change of mood And saved some part Of a day I had rued" "ஒரு காகம் ஹெம்லாக் (hemlock) மரத்தில் தங்கிய பனித்துகள்களை என் மீது விழச் செய்ததானது, சோக மனநிலையில் நாளின் ஒரு பகுதியைப் பாழாக்கிய நான் எஞ்சிய நாளைக் காப்பாற்ற ஏதுவாகியது" என்று ஒரு சாதாரண நிகழ்வு துயரத்தை மாற்றியதைப் பகிர்கிறார் இராபர்ட் ஃப்ராஸ்ட். "இதுவும் கடந்து போம்" என்னும் நேர்மறை எண்ணத்தைத் துயருற்ற உள்ளத்தில் விதைத்துச் செல்கிறார் கவிஞர். வெறுமனே அறம் பேசுபவராக இல்லாமல் கவிஞராயும் உள்ளமையால், மேலும் ஒரு உட்பொருளைப் பொதிந்து வைக்கிறார். மேற்கத்திய உலகில் காகம் ஒரு ராசியற்ற பறவையாகவும் (இங்கு மட்டுமென்ன, சனியனின் வாகனமாய் வைத்தானே !), ஹெம்லாக் மரம் உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பதாகவும் கொள்ளப்படுகின்றன. எதிர்மறையான பொருட்கள் கூட நமக்கு நேர்மைறையான பலன்களைத் தரலாம் என்று கவிதையின் வெளிப்பாடாகச் சுட்டுவர் கவியுலகில் சஞ்சரிப்போர். ஒரு பானைச் சோற்றுக்கு நான்கு சோறு பதமாய் ஃபிராஸ்டின் கவிநயம் பேசினோம். இனி வயிறார உண்டு மகிழ்வது வாசகர்தம் உரிமை. ஃபிராஸ்டின் பொன்மொழி ஒன்றைச் சொல்லி தற்போது கட்டுரையை நிறைவு செய்ய எண்ணம். "A diplomat is a man who always remembers a woman's birthday but never remembers her age". "ஒரு ராஜதந்திரி (சாதுரியமானவர், விவேகம் நிறைந்தவர் என்றெல்லாம் அடுக்கலாம்) என்பவர் யாரெனில், ஒரு பெண்ணின் பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொண்டு அவளது வயதை நினைவில் வைக்காதவர்" என்பது பொருள். பெண்ணின் பிறந்தநாள், வயது போன்றவை இங்கு வேற்றுப்பொருளாய் அமைவன. "மானிட உறவில், பிறரது தேவையான விவரங்களை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு, தேவையற்றதை அல்லது பிறர்க்கு எக்கச்சக்கமான விவரங்களை மனதில் ஏற்றாத நிலையே விவேகம்" என்பதே கவிஞர் கூற வந்த பொதுப்பொருள். ஒரு கவிஞனின் கவித்துவம் கவிதையில் மட்டும்தான் வெளிப்படும் என்றில்லை. அவன் கவிதையாகவே வாழ்பவன் என்று காட்டியவர் இராபர்ட் ஃப்ராஸ்ட் எனக் கொண்டாடலாமே !
-
இது தமிழ்நாடு - சுப.சோமசுந்தரம்
இது தமிழ்நாடு - சுப.சோமசுந்தரம் தோழர் திருமுருகன் காந்தியின் தலைமையிலான மே 17 இயக்கம் இந்தி ஆதிக்க எதிர்ப்பினைத் தீவிரமாகக் கையிலெடுத்திருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்றுதானே ! மொழி ஈகியர் தாளமுத்து நினைவு நாளான மார்ச் 11 ஆம் தேதி இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஏன் இப்போது என்று கேட்பவர்களுக்கு 'இதற்கு வேறு நல்ல நாள் எது ?' என்று வினாவெதிர் வினாவைத்தான் பதிலாகக் கூற முடியும். இப்போது ஆரம்பிப்பதற்கு ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும் என்பது உண்மையாக இருந்தால் கூட, இருந்துவிட்டுப் போகட்டுமே ! அப்படியாவது நல்லது நடக்கட்டுமே ! தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுத் துறைகளில் எல்லாம் வடவரை மட்டுமே வைத்து நிரப்புவது எவ்வகையில் சரி ? தமிழ்நாட்டில் வங்கியின் சேவை முகப்பில் (counter) கூட இந்திக்காரர்களை அமர வைப்பதின் நோக்கமென்ன ? தொடர் வண்டிகளில் பயணச்சீட்டு பரிசோதகராகக் கூட (TTE) வடவர்கள் ஏன் ? நம் ஆட்கள் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்றால் குறுகிய கால அளவிலேயே அங்கே உள்ள மொழியில் தேவையான அளவு பேசக் கற்றுக் கொள்வதைக் காணலாம். வடக்கிலிருந்து வருபவன் எத்தனைக் காலமானாலும் ஆங்கிலம் கூட பேச மெனக்கிடுவதில்லையே, ஏன் ? தன் மொழியே இந்தியாவின் மொழி என்ற மொழி ஆதிக்கத் திமிரன்றி வேறென்ன ? இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம் என்பது ஒவ்வொரு காலத்திலும் தமிழன் அவ்வப்போது கையிலெடுக்க வேண்டிய ஒன்றாகி விட்டது. இக்காலகட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். இந்தித் திணிப்பை எக்காலத்திலும் எதிர்க்கும் திராவிட இயக்கங்கள் - தற்காலத்தில் திக வும் திமுகவும் மட்டுமே - ஏன் அவருடன் கைகோர்க்கவில்லை ? தமிழ்த் தேசியம் (போலியாகவேனும்) பேசித் திரியும் நாதக வினர் எங்கே போனார்கள் ? திருமுருகன் காந்தி தலைமையில் போராட ஏதேனும் மனத்தடை இருக்குமானால், அவர் எந்தத் தலைமையின் கீழும் இப்போராட்டத்தை எடுத்துச் செல்லத் தயாராக இருப்பார். அவர் ஓட்டு அரசியல் செய்யவில்லை. காரியம்தான் முக்கியம்; வீரியம் முக்கியமில்லை என்பதை உணர்ந்தவர் திருமுருகன் காந்தி. அவரை ஓரளவு அறிந்தவர் எவருக்கும் இதனைச் சொல்லும் உரிமையுண்டு. அவருக்குப் புலம்பெயர் தமிழரிடமிருந்து பணம் வருகிறதாக்கும் என்று தனி நபர் விமர்சனத்தில் இறங்கி போராட்டங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம். அது உண்மையாகவே இருப்பினும், தவறென்ன ? பொருளில்லாமல் ஒரு புல்லைக் கூட இந்த பூமியில் பிடுங்க முடியாது. விமர்சனம் செய்பவர்கள் சமூகப் போராட்டங்களுக்குத் தங்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து விடுவதுதானே ! மேலே குறிப்பிட்ட கட்சிகள் தேர்தல் கால வேலைகளைக் காரணம் சொல்லி இப்போராட்டத்தில் இறங்கவில்லையாக்கும் என்றே வைத்துக் கொள்வோம். குறைந்தபட்சம் அக்கட்சித் தலைமைகள் ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கலாமே !அக்கட்சிகளின் பத்திரிக்கைகள் போராட்டத்தின் செய்தியையாவது மக்களிடம் கொண்டு சேர்க்கலாமே ! மொழிப்போராட்டம் என்பது தனி மனித பிம்பங்களைக் கட்டமைக்கும் ஒன்றல்ல. அது ஒரு சமூகப் போராட்டம். ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும். Note the point Your Honour ! திராவிட இயக்க அரசியல் போல என் மனதிற்கு நெருக்கமான இடதுசாரி அரசியலை இங்கே நான் பேசவேயில்லை ! https://www.facebook.com/share/v/1B4uujnoAW/ https://www.facebook.com/share/r/18Pz9oLJnP/
-
உங்களால் முடியும் - சோம.அழகு
உங்களால் முடியும் ! சோம.அழகு நானும் வாழ்க்கையில் ‘தன்னம்பிக்கை’ கட்டுரைகள், ‘சுய முன்னேற்ற’ கட்டுரைகள் எல்லாம் வரைவேன் என்று தப்பித்தவறி கூட கனவு கண்டதில்லை. But here we are மக்களே! இக்கட்டுரை விளிம்பு நிலையில் அல்லாத அனைத்து மனித உயிர்களுக்குமானது. ‘வாழ்வில் உருப்பட வேண்டுமா? இக்கட்டுரையை உடனடியாக வாசியுங்கள்’ என்றெல்லாம் கூவி அழைப்பது சற்றே மிகையாக இருக்கும். இக்கட்டுரை சிலரைச் சிந்திக்க வைக்கலாம்; ஆமோதிக்க வைக்கலாம்; இன்னும் சில பெருந்தகைகளைக் கூனிக் குறுகி நாண வைக்கலாம்; வேறு சிலரைத் துணுக்குறச் செய்யலாம்….. அல்லது இதன் சாரத்தைத் தூசியைப் போலத் தட்டி விட்டு மீண்டும் தமது வழக்கத்தைத் தொடரவும் வைக்கலாம். இவற்றில் ஏதோ ஒன்றை நிச்சயமாகச் செய்யும். ஏனெனில்… இவ்வளவுதானே சாத்தியக் கூறுகள்! அதி முக்கியமான பழக்கம் ஒன்றைக் கற்றுக் கொடுப்பதே இவ்வெழுத்தின் நோக்கம் - ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவது, அதுவும் காசு கொடுத்து. அக்’குறிப்பிட்ட’ பொருளை உருவாக்கியவரிடமே நேராகச் சென்று ‘எனக்கு ஒன்று வேண்டும்’ (உட்பொருள் : இலவசமாக) எனக் கூச்சமில்லாமல் மானமில்லாமல் கேட்டு வைப்பதற்குப் பதில் இன்னொரு உன்னதமான மரியாதையான வழியின் மூலம் அப்பொருளை அடையலாம். அதற்கான கையேடுதான் இக்கட்டுரை. இதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அதற்கே உரித்தான பிரத்யேகக் கடைக்குச் செல்லலாம்; அல்லது இணையத்தில் பணிப்பை(order) கொடுக்கவும் செய்யலாம். அடுத்த கட்ட வழிமுறைகளைப் படிப்படியாகக் கடக்க ஓரளவு என்னால் இயன்ற வரை உதவுகிறேன். ஆரம்பிக்கலாங்களா? வேண்டிய அப்பொருளைத் தேர்வு செய்த பின், (ஆண்கள் எனில்) காற்சட்டையின்/ (பெண்கள் எனில்) கைப்பையின் எந்தப் பகுதியில் பணப்பை(wallet/purse) இருக்கிறது என்று அய்யனாரிலிருந்து அல்லா வரை அனைத்து தெய்வங்களையும் ஒரு முறை கும்பிட்டுவிட்டு இடது வலது மூளைகளைக் கசக்கிப் பிழிந்து யோசிக்கவும். விடையைக் கண்டெடுத்துத் தந்த அதே மூளையிடம் நமது கையை அத்திசையில் கொண்டு செல்ல வேண்டி ஆணையிடவும். பலிக்கவில்லை எனில் இறைஞ்சி மன்றாடவும். அதற்கும் மசியவில்லை எனில், ‘மூளையை மீறிச் செயல்பட முடிகிறதா?’ (overriding brain mechanisms) என்பதைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் கையைப் பணப்பையை நோக்கிக் கொண்டு செல்லவும். பின்னர் ஒரு நொடி நம்மை நாமே ஜெல்லி மீனாக நினைத்து எதையும் யோசிக்காமல் பணப்பையைத் தொட்டு விட வேண்டும். இப்போது உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்ததைப் போன்றதொரு உணர்வு வரும். அந்தக் கற்பனையான மின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்வோமாக…. அந்தப் பொருளை…. ஓ! அது எந்தப் பொருள் என்று சொல்லாமலேயே ஊக்கப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேனா? அதுதான்…. புத்தகம், நூல், ஏடு எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் அப்’பொருள்’தான். வழமைக்கு மாறாக அன்றைக்குப் பார்த்து Purseல் இருக்கும் zip கடுமையாகச் சிக்கிக் கொண்டிருக்கும் என்பதால் அதைப் பொறுமையாகத் திறக்க முயல வேண்டும். Walletல் உலகின் சக்தி வாய்ந்த பசை ஒட்டியிருப்பதால் அதுவும் கூட பிரிந்து திறந்து கொள்ள மறுக்கும். இரண்டையும் கிழித்தாவது ‘திறந்திடு சீசே’ செய்ய வேண்டும். பணப்பை கிழிந்தால்தான் என்ன? ‘நூல்’தானே வாங்குகிறோம்? தைத்துக் கொள்ளலாம். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி! முயற்சி தன் மெய்வருத்தக் கூலியைத் தந்தே ஆக வேண்டும் ஆதலால் நமது இடையராத உழைப்பின் விளைவாக பை தன் வாயைப் பிளந்து நம்மைப் பாவமாகப் பார்க்கும். அல்லது அது அப்படிப் பார்ப்பதாக நமக்குத் தோன்றும். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நம் மனதை இரும்பாகவோ டங்க்ஸ்டனாகவோ டைட்டானியமாகவோ மாற்ற வேண்டிய பொழுது இது. நம் மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி ரூபாய்த் தாள்களை எடுத்துக் கடைக்காரரிடம் நீட்ட வேண்டும். மிகச்சரியாக இத்தருணத்தில் வாதம் தாக்கி கை செயலிழந்தது போகலாம்; நரம்புத் தளர்ச்சியால் கை நடுக்கம் ஏற்படலாம். துவண்டு போய்விடக் கூடாது! Come on, உங்களால் முடியும். உங்களால் நிச்சயம் முடியும். உலகின் சர்வ வல்லமை பெற்றவராக உங்களை இப்போது கருதிக் கொள்ள வேண்டும். கைகளைக் கம்பீரமாக வலுக்கட்டாயமாகப் பிடிவாதமாக நீட்டிக் காசைக் கொடுத்து விடவும். மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டு நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தியவாறே பொருளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் படிநிலைகளும் இன்னல்களும் பணப்பைக்குப் பதில் செயலியின் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய விரும்பும் அலைபேசியினருக்கும் பொருந்தும். ஆயிரக் கணக்கில் செலவழித்து வாங்கிய அலைபேசியில் அப்பொருளுக்கான இருநூறு ரூபாயைச் செலுத்துவதற்கு உண்டாகும் மனத்தடையை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லையென்றாலும் அந்த மனப்போராட்டத்தைப் பச்சாதாபத்தோடு அணுகும் கடமை… அடக் கண்றாவியே! அதுவும் முடியவில்லை. என்ன மாதிரியான மனநிலை அது? என்னவோ ஒண்ணு… நமது மங்காத மனவலிமையினால் அவ்வளவு பெரிய ரொக்கத்தை அனைத்துத் தடுமாற்றங்களையும் தயக்கங்களையும் கடந்து செலுத்திய பின் ‘க்ளியாங்க்’ என்னும் சத்தத்துடன் ‘பெறப்பட்ட தொகை…. இருநூறு ரூபாய்’ என்னும் குரல் நாராசமாய் ஒலிப்பதாகக் கூட உணர வாய்ப்புண்டு. முதல் முறை காசு கொடுத்து வாங்கும் போது அப்படித்தான் இருக்கும். கை கால் வெடவெடவென உதறலெடுக்கும். அவ்வளவு பெரிய தொகை ஒரேடியாகக் கையை விட்டுப் போகிறதே என்ற சோகம் கவிந்து கொள்ளும். இப்படி ஒரு மாபெரும் தெண்டச் செலவு வாழ்க்கையில் செய்தே இருக்க மாட்டோம் ஆகையால் அச்சோகம் நம்முள் ஒரு குமுறலாகக் கூட மாறலாம். கவலை வேண்டாம்! இதுவும் கடந்து போகும். இதிலிருந்து மீள்வதற்கான உள வலிமையை நிச்சயம் அந்த உப்பிலியப்பன் உரித்தாக்குவாராக. உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் - யோவான் 16:20, சங்கீதம் 30:5, 126:5, ஏசாயா 61:3 ஆகியவையும் அதையே அருளுகின்றன. ********************************** ‘ஒரு (துவக்க நிலை) எழுத்தாளரின் புத்தகத்தை நான் வாசிப்பதே அவருக்குச் செய்யும் பெரிய உபகாரம். நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்கி(!) வாசித்தலை மேற்கொள்வது எனது பெருந்தன்மையை எடுத்துரைக்கிறது’ – இப்படியெல்லாம் அதி மேதாவித்தனமான சிந்தனைகளுடன் வலம் வருவதால்தான் எழுத்தாளரிடமே சென்று “புத்தகம் இன்னும் எனக்கு வரல” என்று தடித்தனமாகக் கேட்க முடிகிறது. “உங்க புத்தகம் எங்கே கிடைக்கும்?” என்று கூட நாகரிகமாகக் கேட்கலாம். நாவுக்கு ஒரு சேதமும் வராது. எழுத்தாளர் அன்பின் மிகுதியாலும் அளவு கடந்த மரியாதையாலும் தமக்கு நெருக்கமான சிலருக்குப் பிரியப்பட்டுத் தாம் எழுதிய புத்தகத்தைத் தருவார்/அனுப்பி வைப்பார். அவ்வாறாக அன்பளிப்பாகப் பெறும் உரிமையைத் தாமாக எடுத்துக் கொள்ளும் இன்னபிற வினோத வினோபா பாவேக்களின் வதனத்திற்கு நேரே ‘சட்டத்தைக் கையில் எடுக்காதீங்க சார்/மேடம்’ என்று ஒரு நாள் சொல்ல ஆசை. இன்னும் சில அரிய பிறவிகள் இருக்கிறார்கள். நேரடியாக எழுத்தாளரிடம் சென்று இலவசமாகக் கேட்கக் கொஞ்சம் வெட்கம் ஒட்டிக் கொண்டிருக்கும் போலும். எழுத்தாளர் யாருக்கெல்லாம் விருப்பப்பட்டுக் கொடுத்தாரோ அவர்களில் ஒருவரைப் பிடித்து அவரிடம் இருந்து வாங்கிக் கொள்வார்கள். பிறகு அந்த மரியாதைக்குரிய நபர் எழுத்தாளரிடம் புது பிரதி ஒன்றை மீண்டும் ‘இனாமாக’ப் பெற்று மரியாதையை அனாமத்தாக இழப்பார். இங்கிதமற்று நடந்து கொள்ளும் ஓசி ஆத்மாக்கள் எல்லாம் நல்ல… நல்ல என்பதை விட பொருளாதாரத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள். இன்றைய காலத்தில் பதிப்பகம் நடத்துவது எவ்வளவு சவாலான விஷயம் என்பதைப் பெரும்பாலானோர் உணர்வதே இல்லை. தமது எழுத்து அதற்கான தளத்தைச் சென்று அடைய வேண்டுமெனில் ஓர் எழுத்தாளர் இப்படியெல்லாம் செலவு செய்தே ஆக வேண்டும் என எதிர்ப்பார்க்கும் சமூகத்தின் மேல் என்ன மரியாதை வரும்? ************************** திடீரென இதை எழுதுபொருளாகக் கையிலெடுக்கக் காரணம் தேவா அண்ணாவும் அவரது மனைவி சத்யா அக்காவும் (ஒரு தம்பதியை இப்படி உறவுமுறை சொல்லி அழைக்கக் கூடாதுதான். ஆனால் இப்போது இந்த ஆராய்ச்சி இக்கட்டுரைக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதது ஆகையால் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வீர்களாக!). புத்தகங்களைப் பொறுத்த வரை ‘அன்பின் பொருட்டு’ என்பதைச் சற்றும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் இவர்கள். “அட பரவாயில்லை! இருக்கட்டும்” என்று எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் பிடிவாதமாகக் காசு கொடுத்துதான் வாங்குவார்கள். போதாக்குறைக்கு தம்மைச் சார்ந்தவர் யாரேனும் நம்மிடம் புத்தகம் கேட்டு நாம் இலவசமாகக் கொடுக்கிறோம் என்றால் அதற்கும் காசு தந்து அநியாயத்திற்கு நியாயமாக நடந்து கொள்வார்கள். கையில் காசு வாங்க மறுத்தால் gpay செய்து நம்மை நெளிய வைப்பார்கள். இப்படிப்பட்ட நல்லோர் வாழும் இதே தொல்லுலகில்தான்….. ஒரு நியாயமான கற்பனை : காசு கொடுத்து புத்தகங்கள் வாங்குவோர், எழுத்தாளர்களிடம் இருந்து உளப்பூர்வமாக இனாமாகப் புத்தகங்கள் கிடைக்கப் பெறுவோர் – இவர்களுக்கு மட்டுமே அப்புத்தகங்களில் உலகின் அத்தனை சுகந்தங்களும் பொதிந்திருக்கக் கடவதாக! மற்றபடி கவர்தல் மூலம் புத்தகம் கிட்டும் அனைவருக்கும் அதிலிருந்து வரும் முடை நாற்றம் மூளையைத் துளைக்கட்டும்!
-
அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு
சோம.அழகுவின் சமீபத்திய கட்டுரை : அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு [சங்கிகள், சொங்கிகள், சிங்கி மங்கிகள் ஆகியோர் தயை கூர்ந்து இக்கட்டுரையை வாசிக்க வேண்டாம் எனத் தாழ்மையு…. அப்படி எல்லாம் கேக்க முடியாது. வேண்ணா வாசிச்சுக்குங்க! சொங்கி : சங்கி அல்லாவிடினும் ‘திராவிடம்’, ‘பெரியார்’ என்ற சொற்களைக் கேட்டவுடன் ஒவ்வாமையுடன் ஓங்கரிக்கும் ஒ(ஓ)ட்டுண்ணி சிங்கி மங்கி : தகுதியே இல்லாத தானைத் தலைவன்(!) என்ன உளறிக் கொட்டினாலும் சீழ்க்கை அடிக்கும் ஜெல்லி மீன்கள்] *************************************** ‘அரசியல் ஒரு சாக்கடை’, ‘இந்த அரசியல் செய்திகளில் எல்லாம் ஆர்வம் இல்லை’ - வழமையான இவ்வரிகளை ஒருவிதப் பெருமையுடன் தூக்கிக் கொண்டு திரிபவர்களின் ஆழ்மனங்களில் சென்று யாரோ அவர்களை மேதாவிகள் என நம்ப வைத்திருக்கின்றனர். அதன் கொடும் விளைவாக, “யார் ஆண்டால் எனக்கென்ன? நான் சம்பாதிக்குறது எனக்கு!” என்று பினாற்றுபவர்களுக்கு, தமக்கான ஊதியம் மொத்தமாக அல்லது பகுதியாகக் கூட தமது கைக்கு வருவதே ஆட்சியாளர்களின் கைங்கர்யம்தான் என்ற தெருட்சியெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதே மடமை! ஒரு தனி நபரது அரசியல் சார்பு என்பது கருத்துகளால் மட்டும் ஆனவை அல்ல. கருத்தியல் சார்ந்தது. ஒருவரது விழுமியங்கள்(ஒழுக்கம், நேர்மை…), மதிப்பீடுகள், கண்ணோட்டம், மனிதம் என உள் உறைந்திருக்கும் பலவற்றையும் ஒன்றாகக் கட்டி அவரது ஆளுமையை எடுத்துரைப்பதே அவ்வரசியல் நிலைப்பாடுதான்! அரசியலில் அற நெறிமுறைகள் மற்றும் உய்யச் சிந்தனைகளின்(critical thinking) நுட்பமான பகுப்பாய்வில் உருவாகும் விருப்பு வெறுப்புகள்தாம் சரியான நிலைப்பாட்டை எடுக்க உதவும். யாரை ஆதரிக்கிறோம் என்பதை விட முக்கியமானது யாரை எதிர்க்கிறோம் என்பது. நண்பனை வைத்து நம்மை எடை போடுவதை விட எதிரியை வைத்து நம்மைக் கணிப்பது இன்னும் துல்லியமாக இருக்கும் அல்லவோ? இடப்பக்கம் நிற்பார்க்கு உய்வுண்டாம்; உய்வில்லை வலப்பக்கம் நிற்கும் மாக்களுக்கு. இக்கட்டுரையை நடுவில் நின்று எழுதும் அளவிற்கு நான் பக்குவப்படவில்லை. அவ்வளவு பக்குவப்பட(!) விரும்பவும் இல்லை. வலதுசாரிகளில் தங்களது அடையாளத்தை வெளிக்காட்டத் துணிவில்லாதவர்கள் பூசிக் கொள்ளும் அரிதாரமே ‘நடுநிலையாளர்’. Annoying agnostics! இந்த நடுநிலை நக்கிகள் ஏதோ பண்பட்டவர்களாகவும் அறிவுநிலையில் மேம்பட்டவர்களாகவும் தங்களைத் தாங்களே புரிந்து வைத்திருப்பதுதான் அந்தோ பரிதாபம்! மனிதகுலத்திற்கு எதிரானது எனினும் ‘கொள்கை’ என்ற ஒன்றைக் கொண்ட வலது சாரிகள், “நீங்கள் தவறு” என்று நாம் வாதம் வைப்பதற்காகவாவது வழி வைத்துக் கொடுக்கிறார்கள். இந்தக் ‘கொள்கை அநாதை’களான நடுநிலையாளர்களிடம் என்னவென்று (அரசியல்) பேச முடியும்? இவ்வாறானவர்களைச் சந்திக்க நேரும் போதெல்லாம் “ஏதாவது ஒரு பக்கமா நில்லு பக்கி. நடுவால நின்னு வண்டி ஏறி செத்துராத மூதேவி” என்று வடிவேலுவின் தொனியில் இவ்வரிகள்தாம் மனதினுள் ஓடும். ஆராய்ந்து தெளிந்து ஒரு பக்கத்தைத் தேர்வு செய்ய ரொம்பவெல்லாம் மெனெக்கெட வேண்டியதில்லை. மனிதத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘இட’த்தைதான் ஆறாம் அறிவு மிக இயல்பாகத் தெரிவு செய்யும். எனவே கடைந்தெடுத்த கயமைத்தனத்தை மட்டுமே பின்பற்றும் வலப்பக்கத்தில் தற்காலத்திலும் கரை ஒதுங்கி, இடப்பக்கத்தை ஏறெடுத்தும் பார்க்க மறுப்பவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்ற வாதத்தைக் கடுமையாக எதிர்க்கிறேன். மூளைச்சலவை என்பதெல்லாம் ரொம்ப பூசி மெழுகப்பட்ட மென்மையான சொல். சிலருள் இயல்பாகவே ஊறிப் போயிருக்கும் வன்மத்திற்கு ஏற்ற தளம் அமைத்துத் தருவதால்தான் வலப்புறத்தை ஆரத் தழுவிக் கொள்கின்றனர். எந்த மனிதனிடமும் சென்று ‘நீ அடக்கி ஆளவும் ஏறி அடிக்கவும் உனக்குக் கீழேயும் ஒரு அடுக்கு இருக்கிறது’ என அவனுக்கு அதிகார ருசியைக் காட்டுவதையே தொழிலாகக் கொண்டுள்ள அந்த வன்மத்திற்குப் பல முகங்கள் - சாதி வெறி, மத வெறி, இன வெறி, இன்னும் எத்தனையோ. இந்த வெறிகளையெல்லாம் கொண்டு எழுப்பப்பட்ட ஒரு கட்டமைப்பை நோக்கிச் சாய்ந்து நிற்பதற்கு ஒரு தனித்துவமான மானமின்மை வேண்டும். பெரியார், அண்ணல் அம்பேகர், கார்ல் மார்க்ஸ் – cliché என இவர்களை எப்படி புறந்தள்ள முடியும்? கருப்பு, நீலம், சிவப்பு – ஒரு மனிதனிடமிருந்து இம்மூன்று நிறங்களையும் அழித்துவிட்டால் என்னதான் மிஞ்சும்? வெற்றிடத்தைக் காற்று நிரப்புவதைப் போல் காவி வந்து குடியமர்ந்து கொள்ளும். இயற்கையாய் ஒரு மனிதனுள் பூசப்பட்டிருக்க வேண்டிய அம்மூன்று நிறங்களையும் அழித்தொழிக்கும் உயிரிகளிடம் ஒரே ஒரு கேள்வி - “ஏன்?” ************************************ தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா ஆகிய மாபெரும் ஆளுமைகளையெல்லாம் கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து மெய்சிலிர்த்த காலம் போய் இப்போது அதல பாதாளத்தில் எவ்வளவு எட்டி எட்டிப் பார்த்தாலும் இன்னும் இன்னும் கீழே போய்க் கொண்டிருக்கின்ற அரசியல் அப்பிரசண்டிகளின் பின்னால் ஒரு தலைமுறையே போதமில்லாமல் கூத்தடித்துக் கொண்டிருப்பதையும் காண நேர்வது தமிழ் நிலத்தின் சாபக்கேடு. ட்ரம்ப், பெஞ்சமின் நெதென்யாகு…. எனத் துவங்கி மோடி வரை ஒட்டுமொத்தமாக உலக அளவிலேயே அரசியல் தரங்கெட்டுப் போயிருக்கிறது எனினும் தமிழ்நாடு அதில் தற்போது கொஞ்சம் தப்பித்துவிட்டதாகப் பெருமூச்சு விட்டு ஆசுவாசம் கொள்ளும் முன்னரே, ‘தலைகீழாகத்தான் குதிப்பேன்’ என்று திடீரென சிலர் எம்பிக் குதித்து அநாகரிக அரசியலின் ஆழத்தைப் படம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். என்னத்தப் போட்டு சூசகமா கொச கொசன்னு? தற்போதுள்ள அரசியல் சூழலில் பா.ஜ.க ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கையும் அதை இயக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் மிகத் தைரியமாக எல்லா வகைகளிலும் எதிர்க்கும் கட்சிகள் தமிழ்நாட்டில் மிகச் சில. அவ்வாறாக, தண்டு வடம் வாய்க்கப் பெற்ற கட்சிகளில் மிக முக்கியமான மாநிலக் கட்சிகள் தி.மு.கவும் வி.சி.கவும். நிற்க! உடனே ‘காவடி எடுக்கிறேன்’, ‘கூஜா தூக்குகிறேன்’ என்றெல்லாம் பாசத்தோடு பாராட்டு மழை பொழியும் முன் இதையும் வாசித்து விடுங்கள். எல்லாவாற்றிற்கும் அப்பாற்பட்ட புனிதர் பட்டத்தை இவர்களுக்குச் சாற்றவில்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் தி.மு.க மீதான கோபம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு இப்போது அவர்களை நிராகரித்தால் பேராபத்தான சக்திகளின் பிடியில் மாட்டி நமது அடையாளத்தையே இழந்து சின்னா பின்னமாகிவிடுவோம். மேலும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. ஓரளவு வாசிப்பும் பேச்சுத் திறமையும் கொண்ட வல்லுநர்களை உடையது அக்கட்சி. தி.மு.க.வின் ஆதரவாளர்கள் பலர் அக்கட்சியில் இல்லாதவர்கள். மேலும், தலைமையிடம் ஒரு தவறு இழைக்கும் போது முதன்முதலில் இடித்துரைப்பது கட்சிக்காரர்களும் ஆதரவாளர்களுமாகத்தான் இருப்பர். சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், தூய்மை பணித் தொழிலாளர்கள் போராட்டம் ஆகியவையே எடுத்துக்காட்டுகள். தலைமையைக் கேள்வி கேட்பதற்கான வெளியும் கேள்விகளுக்குச் செவி மடுக்கும் தலைமைப் பண்பும் அக்கட்சிக்கு உண்டு. அப்புறம் அநியாயத்திற்கு நாகரிக அரசியலால் ஓர் உயரிய செந்தரத்தை இப்போது நிலைநாட்டி வருகிறார்கள். பிழையை இடித்துரைப்பது போலவே நல்லதைப் பாராட்டவும் செய்யலாம்தானே? அ.தி.மு.க பா.ஜ.க.விடம் என்றோ விலை போய் விட்டாயிற்று. ‘அந்தம்மா இருந்திருந்தா நடக்குறதே வேற’ என தயவு செய்து தூக்கிக் கொண்டு வராதீர்கள். அவரே ஒரு சர்வாதிகாரிதான். தே.மு.தி.க, பா.ம.க – பொட்டியைக் கண்டால் எங்கும் யாருக்கும் குட்டிக்கரணம் அடிப்பார்கள். அதிலும் இரண்டாவது, கடைந்தெடுத்த சாதிக் கட்சி. நா.த.க – கட்டுக்கதைகளிலேயே கட்சியை வளர்த்த பெருமை இவர்களுடையது. தமிழ்த் தேசியம் வழியாக வந்தாலும் சமீபமாக பெரியாரை எதிர்த்ததன் மூலம் தங்களது கூட்டாளிகளை அம்பலப்படுத்தி விட்டார்கள். நிலைமை இப்போது இவ்வாறாக இருக்க பா.ஜ.க.வை விரட்ட இவர்களை எல்லாம் எதிர்க்கத்தான் வேண்டும். கணிசமான வாக்கு வங்கி உடைய கட்சிகளில் இக்கட்சிகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் தி.மு.க மட்டுமே மிஞ்சுகிறது. என்னுடைய இந்த நிலைப்பாடு என்றென்றைக்குமானது அல்ல. மாணவர்களுக்கு, பெண்களுக்கு எனப் பார்த்துப் பார்த்து நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் தி.மு.க., நாளை மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபடுமாயின் நிச்சயம் என் நிலைப்பாடும் மாறுபடும். வேறு யாரேனும் மக்கள் பக்கம் நின்று நல்லது செய்வார்களாயின் அவர்களை ஆதரிப்பேன். எனவே இப்போது ‘தி.மு.க வேண்டாம்’, ‘திராவிடத்தால்தான் வீழ்ந்தோம்’ என்றெல்லாம் கொக்கரிப்பவர்கள் இன்றைய சூழலில் தி.மு.கவுக்கு யார் சரியான மாற்று என்று மட்டும் கூறிவிடுங்கள். சமரசமாகப் போய் விடலாம். ‘கொள்கை எதிரி; அரசியல் எதிரி’ என்றெல்லாம் பண்ணையார்த்தனமாக உருட்டக் கூடாது. தி.மு.க.வைத் தூற்றுபவர்கள் பெரும்பாலும் முன் வைக்கும் காரணிகள் : வாரிசு அரசியல், ஊழல் – இவை அறவே இல்லாத கட்சிகளைக் கூறினால் அடியேன் அறிந்து புரிந்து தெளிந்து கொள்வேன். அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவான குற்றச்சாட்டுகளை விடுத்து வேற வேற…?. தி.மு.க. ஒரு நலத்திட்டம் கொண்டு வந்தால் கூட ‘அது எந்த அளவிற்கு மக்களுக்குச் சென்றடைகிறது? வழியில் எவ்வளவு வழிப்பறி நடக்கிறது?’ என்று ஆராய்ச்சியில் இறங்குவது தவறல்ல. அதே ஆர்வ மிகுதி அ.தி.மு.க. ஆட்சியின் போது சோவார போயிற்றா? விமர்சனம் செய்யலாம். ஆனால் தி.மு.க. என்பதால் மட்டுமே தேவையற்ற காழ்ப்புணர்வுடனேயே எல்லா நல்லனவற்றையும் அணுகினால் இறுதியில் “இலவச காலை உணவு; நிரம்பி வழிகிறது கழிவறை”யில்தான் என்று 'தினமலம்' போல் வந்து நிற்பீர்கள். என் மனதிற்கு நெருக்கமான கம்யூனிஸ்ட் கட்சிகளை நான் குறிப்பிடாததற்குக் காரணம் அவர்கள் இன்னும் மாநிலமயமாக்கப்படாததுதான். நான் அரசியலை கவனிக்கத் துவங்கிய காலத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதை முழுவதுமாக ஆதரித்த அவர்களின் உறுதிப்பாடு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அது குறித்து இப்போது கூட தோழர்களின் மீது உரிமையுடனான கோபம் உண்டு எனக்கு. அது நிச்சயமாக அவர்களை விட்டுக் கொடுக்கும் தொனியில் அல்ல. “என்ன இது? நீங்களே இப்படி நிலைப்பாடு எடுக்கலாமா?’ என்று ஓர் ஆசானின் மீதான கதமாகவே வெளிப்படும். “பிற கட்சிகளும்தாம் ஆதரித்தன?” என கேட்பீர்களானால் எனது பதில் “ஒப்பற்றதும் அப்பழுக்கற்றதுமான செவ்விய ஓர் இடத்தைத் தோழர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். கருத்து வேறுபாட்டிற்கே வழியில்லை என்ற அதீத நம்பிக்கை சற்றே பிசகியதில் வெளிப்பட்ட திகைப்புதான் அது”. இவ்விடத்தில் என்னுள் எழும் இரண்டக மனநிலை(dilemma) பற்றியும் கூற விழைகிறேன். எனது ஊர் இலங்கையும் அல்ல, கூடங்குளமும் அல்ல. அவ்வூர்க்காரர்கள் இன்றைக்கும் முறையே தி.மு.க. மீதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதும் கோபத்தில் இருந்தால் அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உடனே இதுவும் தோன்றும் – “அப்போ உனக்கு அடி விழுந்தாதான் வலிக்குமா?”. இக்கேள்வி என்மீது ஏளனப் பார்வை ஒன்றை வீசி நக்கலாகச் சிரிக்கும். ஆனால் நான் கூறியது போல், “கோபம்தான். ஆனால் இக்காரணங்களுக்காக மட்டும் இப்போது இவர்களைப் புறக்கணிப்பது விவேகமல்ல; பெருஞ்சேதத்திற்கு வழிவகுக்கும்”. திராவிடக் கட்சிகளின் புண்ணியத்தில் பிற தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையாகக் காலூன்ற இயலாமல் போனதில் பெரு மகிழ்ச்சியே! எப்படியாவது உள்ளே நுழைந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமது ஏவல்களாகப் பல விளியறி ஞமலிகளை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கிறது பா.ஜ.க அரசு. பெரியார், அண்ணல் அம்பேத்கர், அண்ணா ஆகியோரைத் தவிர்த்துவிட்டு தமிழ் மண்ணில் யாரும் அரசியல் செய்யவே முடியாது. ஆகையால் இப்பெருந்தகைகளின் பதாகைகளை ஏந்திக் கொண்டே நமது புறவாசல், வடவாசல், மேற்கு வாசல், கிழக்கு வாசல் என எல்லா வழிகளிலும் நுழைய முற்படுகின்றன பா.ஜ.க.வின் ‘ஆ’, ‘இ’, ‘ஈ’, ‘உ’….. பிரிவுகள். ********************************************* அதிலும் சமீபமாக இறங்கியிருக்கும் அல்லது இறக்கி விடப்பட்டிருக்கும் பனையூர் பண்ணையாரெல்லாம்….. எழுதப் பெறும் தகுதி உடையவரல்லதான். இடி அமீன், முசோலினி, ராஜபக்க்ஷ,… போன்றோருக்கும்தான் அத்தகுதி இல்லை. ஆனால் இவர்கள் வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிவு செய்யப்பட வேண்டியவர்கள் அல்லவா? ‘யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம்’ என்பது இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமை. அதையே தகுதியாகப் புரிந்து கொண்டால் எப்படி? சமூக நிகழ்வுகள் குறித்த அவதானிப்பு, மிதமான வாசிப்பு, மக்கள் மீதான அக்கறை, குறைந்தபட்ச உள்ளுணர்வு ஆகியவை வாய்க்கப் பெற்ற…. இந்தப் பண்புகளெல்லாம் கூட வேண்டாம். எந்த ஒரு ‘மனித’னாலும் கரூரில் கோரத் தாண்டவம் ஆடி விட்டுச் சற்றும் வெட்கமே இல்லாமல் ஓடிப் போய் ஒளிந்து கொண்டு பிறன்பழி கூற இயலாது. ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது; அல்லது நிகழ்த்தப்பட்டு விட்டது. அதன் பிறகான அந்த ‘சொகுசு அரசியல்வாதி’யின் அணுகுமுறைதான் இன்னும் ஆத்திரமூட்டக் கூடியதாக இருந்தது. அரசாங்கம் மீது தவறே இல்லை என்று கூறவில்லை. ஆணைய விசாரணையில் தெரிய வரும். வரட்டும். ஆனால் தெள்ளிதின் விளங்கி நிற்கும் தனது பொறுப்பற்றதனத்தை மூடி மறைக்க ஏகப்பட்ட சதிக் கோட்பாடுகளை(conspiracy theories) சமூக வலைதளங்களின் உதவியுடன் கிளப்பி விட்ட வில்லத்தனம் எல்லாம் திரைப்படங்களில் கூட பார்த்திராதது. ‘இந்த அரசாங்கம் ஏன் சரியாகப் பணியாற்றவில்லை?’ என்பதிலிருந்து ‘இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு வேகமாகப் பணியாற்றுகிறது?’ என்னும் சாட்டையடி(!) கேள்விக்குக் கொண்டு வந்து நிறுத்தி, அரசியல் தளத்தில் தனி முத்திரை பதித்திருக்கிறது இந்த தவக்கா கட்சி. கொள்கை ரீதியாக ஒருவரை எதிரி எனக் கை காண்பித்து விட்டு அந்த எதிரியின் எதிரியும் எனக்கு எதிரியே என்பதெல்லாம் என்ன மாதிரியான பம்மாத்து அரசியல்? தி.மு.க எதிர்ப்பு/வெறுப்பு அரசியல் என அறிவித்துவிட்டுப் போவதுதானே? ஒரு தனி நபராக அந்நடிகர் என்ன வேண்டுமானாலும் பிதற்றிவிட்டுப் போகட்டும். யார் இழுப்புக்கும் போகட்டும். கருத்துச் சுதந்திரம், உரிமை என்று விட்டுத் தொலைக்கலாம். ஆனால் தன்னைப் பின் தொடரும் ஒரு கூட்டத்திடம் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஒருவர் என்ற வகையில் சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தல் இந்தப் பெரிய அணில். மற்ற எல்லா கட்சிகளும் கொள்கையை முன்னிறுத்தி அரசியல் செய்ய, இவர்கள் மட்டும்தான் தனி நபர் வழிபாட்டில் கட்டுண்டு கிடக்கின்றனர். மேலும் அரசியல் மேடையின் தரத்தை வெகுவாகக் குறைத்து, பா.ஜ.க.வே பரவாயில்லை என்று மக்களைச் சொல்ல வைத்ததில் இவர்கள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளலாம். தன்பழி, ஊழ்வினையாக மாற்றம் அடையப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இவ்வளவு நடத்தியது போதாது என்பது போல் ‘அதுக்கும் மேல…’ என்று அடுத்தடுத்து அசிங்கங்கள் அரங்கேறின. இவ்வளவு தரம் தாழ்ந்து போனதில்லை தமிழ்நாடு. ‘குழந்தையை இழந்தவர்கள்’ என நாம் பாவப்பட்டு வருத்தப்பட, அவர்கள் அனைவரும் சில நாட்கள் கழித்து அதற்கு முக்கிய காரணமானவர் மீது தவறே இல்லை என்று ஒரே குரலில் ஓங்கிப் பேசினார்கள். ‘அவரைப் பார்க்கும் ஆசை நிறைவேறிவிட்டது. என்ன ஒன்று? அதற்குப் பதிலாக எங்கள் பிள்ளைகளைத் தூக்கிக் கொடுக்க வேண்டியதாகப் போயிற்று’ என்று சிரித்துக் கொண்டே ஒரு தாயால் பேச முடிந்ததை எங்ஙனம் ஏற்றுக் கொள்வது? ‘பாதிக்கப்பட்டவர்கள்’ மீது உண்டான இவ்வளவு வெறுப்பும் அருவருப்பும் இதுவரை எங்கும் காணாதது. தாமாகவே இப்படிப் பேசியிருந்தால் ரொம்ப குரூரம். பணம் பெற்றுக் கொண்டு பேசினார்களாயின் அது கேடு கெட்ட கேவலம். எப்படிப் பார்த்தாலும் சமூகம் போகிற போக்கைப் பார்த்தால் பதறுகிறது. பேச வைத்தவர்களுக்கும் பேசியவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ‘இன்னும் ரெண்டு பிள்ளையையும் கூட்டிட்டுப் போகாம போய்ட்டேனே’, ‘இதுக்காகவாவது இன்னும் ரெண்டு புள்ளைய பெத்தேன் இல்லையே?” – நல்லவேளை இப்படியெல்லாம் ஆதங்கப்படவில்லை. ‘உங்கள் பரிதாபத்திற்கும் அனுதாபத்திற்கும் எங்களுக்குக் கொஞ்சமும் தகுதி கிடையாது’ என பாதிக்கப்பட்டோர் நமது முகத்திலறைந்து சொன்ன விதம்; பேருந்து ஏறிச் சென்று நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து ‘பண்ணையார் சவரம் செய்யவில்லை, ஷவர்மா சாப்பிடவில்லை, ஷாம்பூ போடவில்லை, ரொம்ப வருத்தத்தில் இருக்கார்’ என ஆறுதல் பெறச் சென்றவர்கள் ஆறுதல் அளித்து வந்தது….. தமிழ்நாட்டில் அரங்கேறிய இந்நாணக்கேடான நிகழ்வுகள் அழிக்க முடியாத கரும்புள்ளிகள். இது இப்போது பழைய செய்தி ஆகிவிட்டது. இப்போது அல்ல. சம்பவம் முடிந்த ஒரு மாதத்திலேயே ‘பிண நாயகன்’ திரைப்படம் குறித்த மேலதிகத் தகவல்கள் கேட்டு அனத்த ஆரம்பித்துவிட்டன அணில்கள். மாநாடு என்னும் பெயரில் நடத்தப்படும் ஒவ்வொரு வைபவத்திலும் அவர் பேசுவதை…. மன்னிக்கவும்! வாசிப்பதைக் கேட்கும் போது “ச்சே! இப்படி நல்லா நடிப்பு வர ஆரம்பிக்குற நேரத்துல முழுக்கு போடுறாரே!” என்று மட்டும் கொஞ்சம் கவலை(!) மேலிடுகிறது. நம்மால் யாரோ ஒருவருக்குக் காயம் பட்டுவிட்டது என்றாலே தூங்க முடியாமல் குற்றவுணர்வில் உழன்று கொண்டிருப்போம். கரூர் அட்டூழியத்திற்குப் பிறகும்… சரி, அந்த உத்தமர்ர்ர் மீது தவறே இல்லை என்றே கொள்வோம். தன்னைப் பார்க்க வந்துதானே மடிந்தார்கள் என்ற உணர்வு கூட இல்லாமல் மூன்று மாதம் கழித்து மலேசியாவுக்குச் சென்று ஒருவனால் ஆட்டம் போட முடிகிறது எனில் இவ்வகை உயிரினத்தைப் புறந்தள்ளுதலே சாலச் சிறந்தது. போதாக்குறைக்கு அத்திரைப்படத்தின் வரவுக்காக வாலை ஆட்டியபடியே காத்திருப்பவர்களின் நடுவில்தான் நாமும் வாழ்கிறோம் என்று உணரும் கணம் உடல் கொஞ்சம் அதிர்ந்து அடங்குகிறது. அவரை வைத்துப் படம் என்ற பெயரில் என்ன கருமத்தைக் கிண்டி வைத்திருந்தாலும் விசில் பறக்கத்தான் போகிறது. வழக்கம் போல ஐந்நூறு கோடி, ஆயிரம் கோடி என வடை சுடத்தான் போகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து திமிராகப் பேசிய பிறகும் திருவாளர் கெய்க்வாட் படங்கள் நன்றாகவே ஓடின. ‘கலை வேறு; கொலை வேறு’ என்று நம் மக்கள் பிரித்தறியும் உயரிய(!) பண்பைப் பெற்றவர்கள் என்று ஏற்கெனவே வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கிறார். எவ்வளவு விஷத்தை வேண்டுமானாலும் உமிழலாம்; எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். மக்கள் சீக்கிரமே மறந்து விட்டுக் கொண்டாட்ட மனநிலையுடன் கூத்து பார்க்கக் கிளம்பிவிடுவார்கள் என்ற அரிய உண்மையை மீண்டும் மீண்டும் பரிசோதித்துப் பார்த்து அதில் வெற்றியும் அடைந்து கொண்டிருக்கின்றனர். நாம்தான் செப்டம்பரிலேயே தேங்கி விட்டோம் போல. இதில் “இவர்களைத் ‘தற்குறி’ என்றழைக்கக் கூடாது. இவர்களைச் சரியாக அரசியல் படுத்தத் தவறிவிட்டோம்” என்றெல்லாம் உண்மையான அக்கறையுடனும் குற்றவுணர்வுடனும் திராவிட கழகத்தினர் சிலர் பேசுவதைக் கேட்டால்….. மன்னிக்கவும்! சிரிப்புதான் வருகிறது. அணில்களைப் போன்ற தனி மனித ஒழுக்கமற்ற கட்டுப்படுத்த முடியாத கூட்டம் வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. உலகமே கையில் சுருங்கி விட்ட இந்த யுகத்தில் எல்லா செய்திகளையும் வாசிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள். எது சரி எது தவறு என்று பிரித்தறியும் திறனை வளர்த்துக் கொள்ளாதது அவரவர் குற்றம் மட்டுமே. அறியாப் பருவத்தில் இருக்கும் மழலையரைப் போல் இவர்களைக் கொஞ்ச வேண்டியதில்லை. அடிப்படை அறிவை அடிமாட்டு விலைக்குக் கூட வாங்கத் துப்பில்லாத இவர்கள் சமூக வலைத்தளங்களில் நான்கு கால் பாய்ச்சலில் ஒன்றிய அரசின் தவறுகளுக்குக் கூட வீறு கொண்டு மாநில அரசை மட்டுமே துவைத்து வெளுப்பதைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும்… “உங்களை எல்லாம் வச்சுகிட்டு இந்தியா ஏன் இன்னும் வல்லரசா ஆகாம இருக்கு?” உலக வரலாற்றில் முதன் முறையாக இவரைப் பேட்டி எடுக்க வந்தவர்கள் பேட்டி எடுத்ததைப் பேட்டியாகக் கொடுத்த கேலிக்கூத்துப் பெருமையும் இப்பெரிய அணிலையே சாரும். “பொது வாழ்க்கைக்கு வந்து விட்டு மக்களையும் சந்திக்க மறுக்கிறார். பத்திரிக்கையையும் எதிர்கொள்ள மருள்கிறார். ஆனால் இவருக்கு முதலமைச்சர் நாற்காலியைத் தூக்கித் தந்திட வேண்டுமாம்” என்று இவரைப் பின் தொடரும் ஆச்சரியக் குறிகள் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தாலே போதும். அவர்களை மட்டும் சொல்லித்தான் என்ன? படித்து மண்ணள்ளிப் போட்ட பலரும் கூட கரூர் சம்பவத்தைக் காணுற்ற பிறகும் “எப்போ பாரு… தி.மு.க., அ.தி.மு.கன்னே போய்ட்டுருக்கு. ஒரு மாற்றம் வரட்டும். இவருக்குத்தான் ஒரு வாய்ப்பு குடுத்துப் பார்க்கலாமே?” என்று, ‘இன்றைக்கு வேண்டுமானால் இந்தப் புதிய உணவகத்தில் சாப்பிட்டுப் பார்ப்போமா?’ என்ற தொனியில் பேசுவதைப் பார்த்தால் “நீங்கள்லாம் எப்படி இன்னும் வெளிய நடமாடிட்டு இருக்கீங்க? யாரு சங்கிலியைக் கழட்டி விட்டது? எப்போ தப்பிச்சீங்க?” எனக் கேட்கத் தோன்றுகிறது. ‘எது சரி?’ என்பதைப் புரிந்து கொள்ளவும் ‘யார் பக்கம் நிற்பது?’ என்று தேர்ந்து தெளியவுமாவது கொஞ்சம் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல் நலம். எதை வாசிக்கிறோம் என்பதும் இங்கு முக்கியம் அமைச்சரே! ***************************************** கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னும் என்னென்ன கண்றாவியையெல்லாம்தான் கேட்பது? அறத்தோடு கூடியவற்றைப் பேசுதல் மட்டுமே கருத்துச் சுதந்திரம் என வரையறையை மாற்றுங்கள் ஐயா! தம்மை அரசன் என்று சொல்லிக் கொள்(ல்)பவர்களால் அன்றே நிகழ்த்தப்படும் கொலைகள் யாவும் பிரிவினைவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் பறைசாற்றுவதற்காகவும் சுய ஆதாயத்திற்காகவும் அரங்கேறுகின்றன. தெய்வமோ தெண்டத்திற்கு நின்று கொண்டே இருக்கிறது. அநீதியையும் தீமையையும் கொல்வதற்கான நோக்கம் சற்றும் இருப்பதாகத் தெரியவில்லை. கொல்வதெல்லாம் கூட இருக்கட்டும்; உணர்ச்சி மேலீட்டில் கோபத்தில் பொங்குவது கூடக் கிடையாது. (supposed)அரசர்கள் மற்றும் (so called)தெய்வங்களின் (அவ)லட்சணம் இவ்வாறாக இருக்க யாரை அல்லது எதை நம்புவது? எவ்வகையான நம்பிக்கையில் பிடிப்புக் கொள்வது? நியாயத் தராசுகள் எல்லாம் பொருளற்றுப் போன தற்காலத்தில், “வாழ்க்கை அப்படித்தான்; நடப்பது நடந்துகொண்டே இருக்கும். அது அநீதி என்றாலும் கூட” என்ற எதார்த்தம் புரியாமல் இல்லை. மனதில் ‘ஊழ்’ என்றொரு பிரிவை உருவாக்கி எல்லா அநியாயங்களையும் அதில் இருத்தி வைக்க வெகு கடினமாக இருக்கிறது. பகுத்தறிவாளராக இருந்து கொண்டு வாழ்க்கைச் சக்கரத்திற்கான நம்பிக்கை அச்சாணியை எதில் தேடுவது? போகிற போக்கில் எல்லாவற்றையும் வெறுமனே கவனித்து மட்டும் கடந்து செல்வதற்கு நாம் ஒன்றும் கடவுள் இல்லையே! கடவுளே இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். சமூக விடயங்களில் அறம் சார்ந்த கோபத்தை இல்லாத இறைகளின் மீது கொட்டி நேரத்தை வீணடிப்பதை விடுத்து, இருக்கும் தலைவர்கள்/தளபதிகள்/சிப்பாய்கள் ஆகியோரில் சரியானவர்கள் (அதாவது தவறானவர்கள்) மீது முறையாக வெளிப்படுத்துதல் மனதிற்கான ஒரு தற்காலிக வடிகால் மட்டுமே. ஒருமா அளவு மனிதத்தைத் தன்னுள் இடுக்கி வைத்திருக்கும் மனிதனுக்குக் கூட அத்துமீறிய அநீதிகளின் போதும் நீதி தேவதையின் கண்கள் இறுகக் கட்டப்பட்டு இருப்பது மனச்சோர்வைத் தந்து விரக்தியைப் படரச் செய்யும் அல்லவா? இக்கையறு நிலையில்தான் “அறம் கூற்றாகும்!” என்பதை நம்பச் சொல்லி ஆறுதல் அடைய முனைகிறது மனம். அதுவே “அறம் கூற்றாகட்டும்!” என ஆங்காரமாக மனதினுள் ஒலிக்கும்போது உத்வேகத்துடன் கூடிய ஏதோ ஒரு வகையான சமாதானத்தையும் அழைத்து வருகிறது. எனவே…. அறம் கூற்றாகட்டும்! ஆகியே தீர வேண்டும்! அப்படியே ஆகக் கடவதாக! ஆமென்!
-
செவ்வணக்கம் தோழர் - சுப.சோமசுந்தரம்
செவ்வணக்கம் தோழர் - சுப.சோமசுந்தரம் பொதுவாழ்க்கைக்குத் தம்மை அர்ப்பணித்த பொதுவுடைமைத் தோழர்களை நினைக்கும்போதெல்லாம் எனக்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்றே நினைவுக்கு வருவதுண்டு. அவர்களால்தான் இந்த உலகமே இயங்குகிறது என்று அப்பாடல் சொல்வதாய் உணர்கிறேன். இப்போது நம்மைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி நம்மைப் பிரிந்த தோழர் ஆர்.நல்லகண்ணு பொதுவுடைமையாளராய் வாழ்ந்தவர் என்பதற்கு ஒரு படி மேலாகச் சென்று பொதுவுடைமையாகவே வாழ்ந்தவர் (More than being a communist, he was communism personified) என்பதே பொருத்தம். "உண்டால் அம்ம இவ்வுலகம்" (இவ்வுலகம் உண்டென்றால் - அதாவது இயங்குகிறது என்றால் - யாரால் தெரியுமா ?) என்று தொடங்கும் பாடல் அன்னாரின் பண்பு நலன்களை அடுக்குகிறது. "இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலுமிலரே" என்றவிடத்து, இந்திரர் அமிழ்தமே தந்தாலும் அதனை இனிது எனத் தாம் மட்டுமே உண்ண மாட்டார்கள் எனச் சொல்கிறது பாடல். சொந்தக் கட்சி அவரது தன்னிகரற்ற சேவையைப் பாராட்டி ஒரு கோடி ரூபாயும் காரும் தந்த போது அவற்றைக் கட்சிக்கே திருப்பித் தந்த போதும், தமிழக அரசு 'தகைசால் தமிழர்' விருதளித்துக் கொடுத்த பத்து இலட்சம் ரூபாயைக் கூடுதலாக ஐயாயிரம் ரூபாயோடு தமிழக அரசுக்கே தந்த போதும் பாடலின் அவ்வரிக்குப் பொருளானார் தோழர் நல்லகண்ணு. சுதந்திரம் பெற்ற கையோடு அமைந்த இந்திய அரசு கம்யூனிஸ்டுகளை வேட்டையாடி, தேடித் தேடிக் கைது செய்த வரலாறு அறிந்தோர் வெகு சிலரே. தோழர் நல்லகண்ணு, ஜேக்கப் வாத்தியார் என்று அன்போடு அழைக்கப்பட்ட ஆசிரியர் தோழர் ஜேக்கப் போன்றோரைக் காவல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு மீசையையும் கண்புருவ மயிரையும் பிடுங்கிய (ஒரு பொதுக் கூட்டத்தில் ஜேக்கப் வாத்தியாரே சொல்லக் கேட்டது) கொடுமையிலும் தளராத மனத் திட்பத்தைக் குறிக்கும் வரியை நாம் குறித்த புறநானூற்றுப் பாடலில் தேடியும் கிடைக்கவில்லை. 'அயர்விலர்' என்று பாடலில் வரும் ஒரு சொல்லை ஆறுதலாய்க் கொள்ளலாம். தோழர் நல்லகண்ணுவின் தந்தையார் தம் பிள்ளைகளுக்கு, இருந்த சிறிது சொத்துகளைப் பங்களித்த போது தோழர் பங்கினை மட்டும் இவருக்கு எழுதாமல் மருமகள் பெயருக்கு எழுதி வைத்து விட்டார் - தோழர் தமக்கென வைக்காமல் பொதுக் காரியங்களுக்குக் கொடுத்து விடுவார் என்ற பயம்தான். புறநானூற்றுப் பாடலின் பின்வரும் வரிக்கு இலக்கணமாய்த் தோழர் வாழ்ந்தார் என்பதற்கு அதுவே சான்று : "தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே". மேலும், உலகினை இயங்க வைப்போரின் வாழ்நிலை பற்றி மட்டுமே பாடல் பேசுகிறது (அன்னார்க்கு மரணம் இல்லை என்பதாலோ !). அவர்கள் இப்பூலகை விட்டுச் செல்லும் போது அழியும் உடலும் அழியாப் பயன் தரும் என்பதைப் பேசவில்லை. தோழர் மறைவுக்குப் பின் தம் உடலை ஈந்து மருத்துவ மாணாக்கர்க்குப் பாடமானார். எனவே புறநானூறு சொன்ன நல்வினைகளில் வாழ்ந்தார்; அது சொல்லாமல் விட்ட நன்னெறியிலும் வாழ்ந்தார். நாம் குறித்த புறநானூற்றுப் பாடலும் பொருளும் முழுமையாய் அறிய விழைவோர் "உண்டால் அம்ம இவ்வுலகம்" எனும் முதல் வரியை கூகுள் ஆண்டவரிடம் சொல்லிப் பெறலாம். https://www.facebook.com/share/p/1DrAP36SDy/
-
வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம்
மூன்று வண்ணங்களில் எதிலும் நிற்காத ஒருவர் என்று நான் எழுதியதை "One who doesn't stop for any of the three colours" என்று எடுத்துக் கொண்டதால் போக்குவரத்து சமிக்ஞையாக (traffic signal) நண்பர் ஈழப்பிரியன் நினைத்திருக்கலாம். "One who doesn't stand by any of the three colours" என்று கொள்ளவும். மேலும் நான் குறித்த வண்ண அரசியலை ஏராளன் அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார். அவருக்கு என் நன்றி.
-
வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம்
சிறப்பு. உங்கள் இடத்திலிருந்து உங்களுக்காக மட்டும் நீங்கள் சொல்ல முடியும் என்பது மிகச் சரி. நீங்கள் சொல்லிவிட்டதால் இப்போது நான், "நம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும்" என்று எழுத முடியும். 👍
-
வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம்
வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம் - சுப.சோமசுந்தரம் கருப்பு, சிவப்பு, நீலம் என்ற இந்த மூன்று வண்ணங்களில் எதிலுமே நிற்காத ஒருவரிடம் நான் அரசியல் பேச விரும்புவதில்லை. அந்த மாதிரியான நபரிடம் என்ன இழவு அரசியலைப் பேசுவது என்று தெரியாததே காரணம். இந்த மூன்று வண்ணங்களும் முறையே திராவிட இயக்க அரசியல், இடதுசாரி அரசியல், தலித் அரசியல் இவற்றைக் குறிப்பன என்பது இன்று தமிழ்நாட்டில் சிறு பிள்ளைகளுக்கும் தெரியும், தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த மூன்று வண்ணங்களையும் எனக்குச் சொந்தமாக்கிக் கொண்டவன் நான். அதாவது இவற்றில் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியிலும் உறுப்பினர் ஆகாமலே மூன்றையும் கொண்டாடும் உரிமை பெற்றுள்ளேன். ஆங்கிலத்தில் சொல்வது சுருக்கமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் என நம்புகிறேன், "I own them, I belong to them". இதில் ஆகச் சிறந்த நன்மை ஒன்று உண்டு. ஏதாவது ஒரு நிலைப்பாட்டில் மூன்றில் எந்த ஒரு அணியும் மேற்சென்று இடித்தற் பொருட்டாய்க் கடிந்து கொள்ளும் உரிமையே அது. அந்த உரிமை அவர்களிடம் எடுத்து எனக்கு நானே கொடுத்துக் கொள்வது. ஆனால் எந்த நிலையிலும் எதிரிகளிடமும், தன் பெண்டு தன் பிள்ளையென மட்டும் வாழும் சராசரிகளிடமும் இந்த மூவண்ணத்தாரை நான் விட்டுத் தருவதில்லை. நான் வகுத்த வர்ணாசிரமம் இதுவே ! ஏன் இந்தப் பீடிகை ? இப்போது நாம் கையில் எடுத்துள்ள வாச்சாத்திக்கு வருவோம். வெகு சமீபத்தில் செங்கொடியினரால் வெளியிடப்பட்ட 'வாச்சாத்தி' எனும் ஆவணப்படத்தை மானிடர் அனைவரும் பார்க்க வேண்டும். அதன் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. வாச்சாத்தி தர்மபுரி மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு மலைவாழ் மக்களின் கிராமம். 1992 ஜூன் மாதம் 20, 21, 22 தேதிகளில் தமிழ்நாடு வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை இம்மூன்று அரசு இயந்திரங்களாலும் சூறையாடப்பட்ட சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட கிராமம். சுமார் 600 கோடி பெறுமானமுள்ள (1992 டிலேயே) சந்தன மரங்கள் சூழ்ந்திருந்த நிலையில், அப்போது தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அதிமுகவினராலும் துணை போன அதிகார வர்க்கத்தாலும் மூன்றில் ஒரு பங்கு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாகவும் அரசு இயந்திரங்களின் உதவியோடு மேலும் அத்தனையையும் வெட்டத் திட்டமிருந்ததாகவும் கேள்வி. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடையூறாக இருந்த அந்தக் கிராமத்தினரை அப்புறப்படுத்தவே வன்முறை, பாலியல் வல்லுறவு, வீடுகளை அடித்து நொறுக்குதல், கிராமத்துக் கிணற்றில் மோட்டார் கழிவு எண்ணெயைக் கலத்தல் என எழுத்திலடங்கா வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதுவும் ஏதோ ரவுடிக் கும்பலால் அல்ல; மேலே குறிப்பிட்டுள்ள மூன்று அரசுத்துறைகள் எனும் கும்பலால். கிராம மக்கள் மீது சந்தனம் வெட்டிக் கடத்திய குற்றம் சுமத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். எந்தக் குற்றத்தை அவர்கள் எதிர்த்தார்களோ அந்தக் குற்றமே அவர்கள் மீது சுமத்தப்பட்டது பேரவலம். மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத் துயரங்களை இப்போது வெளியாகி உள்ள ஆவணப்படத்தில் அனைவரும் கண்ணீருடன் கண்டு குமுறலாம். அரசுத் துறைகளில் மெத்தப் படித்தோரும் பாதகஞ் செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களோடு நின்று அவர்களைச் சரியாக வழிநடத்தி 31 ஆண்டுகள் ஜனநாயக வழியில் நீதிப் போராட்டம், வீதிப் போராட்டம் என்று நடத்தி அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்த வீரமும் ஈரமும் கொண்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள்; அவர்கள் மட்டுமே ! அரசுத் துறை ரவுடிகளால் வன்புணர்வு எனும் கொடுமைக்கு ஆளான 18 பெண்கள் உட்பட அதிகார வெறியாட்டத்திற்கு ஆளான மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தந்ததோடு அரசுத் துறைகளைச் சார்ந்த 269 பேர் குற்றவாளிகள் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வாங்கித் தந்தனர். 269 பேரில் இந்த 31 ஆண்டுகளில் மரணித்த 54 பேரைத் தவிர ஏனைய 215 பேரும் சிறைத் தண்டனை பெற்றனர். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய நம் செங்கொடித் தோழர்கள் மட்டுமா போற்றுதலுக்குரியவர்கள் ? பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் இத்தனை ஆண்டுகள் உறுதியோடு நின்றார்களே ! ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து அம்மக்களில் ஒவ்வொருவருக்கும், பிறழ் சாட்சியாக மாற, அவர்கள் நினைத்துப் பார்க்காத பணம் பேரம் பேசப்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் மிரட்டப்பட்டிருப்பர். ஆனால் ஒருவர் கூட உடன்படவில்லை, அஞ்சவில்லை என்பது வரலாற்றில் வேறு எங்கும் நிகழ முடியாத ஒன்று. CPI(M) மாநிலச் செயலாளர் தோழர் பி.சண்முகம் கூறியதைப் போல அந்த மக்களே தலையாய கதாநாயகர்கள் (protagonists). மக்கள் இயக்கம் என்பது எவ்வளவு வலுவானது என்பதை உலகுக்கே உணர்த்தியவர்கள். அரசியல் சூட்சமங்கள் அவ்வளவாகத் தெரியாத பாமரர் மனதில் சில கேள்விகள் எழுவது இயல்பு. வாச்சாத்தி கொடுமை நிகழ்ந்தது அதிமுக ஆட்சியில். மணக்கும் சந்தன காசை இழக்க மனமின்றி எத்தகைய கொலை பாதகத்திற்கும் அவர்கள் துணிந்தது புரிந்து கொள்ள முடிகிறது. போராட்டத்தில் மும்முரமாக நின்ற தோழர் பி.சண்முகம், தோழர் அண்ணாமலை இவர்களை ஏதாவது ஆக்சிடென்ட் செய்து கதையை முடிக்கச் சொன்ன அப்போதைய வனத்துறை அமைச்சர் செங்கோட்டையனின் தொலைபேசிப் பேச்சின் பதிவிலிருந்து தெளிவாகத் தெரிகிறது - அதிலும் அப்பதிவு தோழர்களின் கையில் கிடைத்ததால். இடையில் கலைஞர் கருணாநிதியின் திமுக ஆட்சி ஏற்பட்டபோது வழக்கைத் துரிதப்படுத்திக் குற்றவாளிகளை மக்களுக்கு இனங் காட்டியிருக்கலாமே ! மாறாக நீதிமன்ற உத்தரவின் படி சிறைப்படுத்தப்பட்ட 269 காவலர்களை கலைஞர் ஏன் விடுவித்தார் ? இதே கேள்வி ஸ்டெர்லைட் விவகாரத்திலும் எழுகிறது. அமைதி வழியில் போராடிய 13 போராளிகள் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளப்பட்டது எடப்பாடியாரின் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான். ஆட்சி மாறிய பின் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையப் பரிந்துரையின்படி, குற்றம் (குற்றேவல்) புரிந்த காவல் அதிகாரிகளின் மீதும் அரசு நிர்வாக அதிகாரிகளின் மீதும் ஸ்டாலின் அவர்களின் திமுக அரசு ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை ? இக்கேள்விக்கெல்லாம் அனுபவத்தால் முதிர்ச்சி பெற்ற தோழர் ஒருவர் பதிலிறுத்தார், "ஆட்சி மாறினாலும் காவல்துறையின் உயரதிகாரிகளும் நிர்வாக அமைப்பின் உயரதிகாரிகளும் உரியோரைச் சந்தித்து, தங்கள் ஆட்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மொத்த அமைப்பும் நிலை குலைந்து போகும் - அதாவது demoralise ஆகும் - என்று ஓதிவிட்டு வருவார்கள் (சரியாகச் சொன்னால், எச்சரித்து விட்டு வருவார்கள்). என்ன இருந்தாலும் இவர்களை வைத்துதானே ஆட்சி நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் எந்த ஆளும் கட்சியும் அடக்கி வாசிக்கும்". இது மட்டுமா ? முதுகுளத்தூர் கலவரத்தில் தலித்துகளின் பக்கம் முழுமையாக நிற்க வேண்டிய பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் பஞ்சாயத்து பண்ணத்தானே முயற்சி செய்தார்கள் ? அங்கு பெரும்பான்மையாகத் திகழ்ந்த ஆதிக்க உயர்சாதியினரைப் பகைப்பது வாக்கு வங்கி அரசியலுக்குச் சரிவராது என்ற நிதர்சனம் அன்றி வேறென்ன ? அதுபோலவே கவின் கொலை போன்ற ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வருவதில் இப்போது காலதாமதம் ஏன் ? இதுதான் ஜனநாயகத்தின் அவலம். இந்த அரசியலை எதிர்கொள்ள வீதிமன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடி ஆள்வோரை நிர்பந்திக்க மக்களும் மக்கள் இயக்கங்களும் முன்வர வேண்டும். இப்பணியினை வாச்சாத்தியில் பாதிக்கப்பட்டோரும் செங்கொடியினரும் செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள். வாக்கு வங்கி அரசியலில் பங்கு கொள்ளாத கருப்புக் கொடியினரும் தலித் அமைப்பினரான நீலக் கொடியினரும் இதுபோல் இங்கு நிரம்பப் பணியாற்ற வேண்டும். ஏன் செங்கொடித் தோழர்கள் கூட, தம்மால் முன்னெடுக்கப்படாத ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்திலும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திலும், இன்ன பிறவற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டிக் குரல் கொடுக்க வேண்டும். தமக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் போராடும் ஒவ்வொருவரும் கம்யூனிஸ்ட்தானே ! இதை விட பொதுவுடைமைக்கு வேறு என்ன சிறந்த வரையறை இருக்க முடியும் ? உரைநடையில் கூட மரபுப் பாடல் ஒன்றினை வலுக்கட்டாயமாக இழுக்கும் மன நோய் எனக்கு உண்டு. குறைந்தது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புறநானூற்றுப் பாடல் ஒன்றைப் பாடி இக்கட்டுரைக்கு நிறைவுத் திரை போட விழைகிறேன். பொதுவுடைமைவாதிகளால்தான் இவ்வுலகமே இயங்குகிறது என ஆணிப்பொன்னாய் ஆணித்தரமாய்ச் சொல்கிறது பாடல். வாச்சாத்தியில் அயராது போராடிய மக்களுக்கும் அவர்களைச் செவ்வனே வழி நடத்திய செங்கொடியினருக்கும் பாடும் மங்கல வாழ்த்தாக இதனைக் கொள்ளலாம். எனது வலைப் பதிவிலிருந்து படி எடுத்து இங்கு பதிவு செய்கிறேன் : "உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி ரபுகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின், உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே !" ----புறநானூறு 182. (பொருள் கருதி சீர் பிரித்து எழுதப்பட்டுள்ளது). பாடியவர் கடலுள் மாய்ந்த பாண்டியன் இளம் பெருவழுதி. பாராளும் மன்னவரும் பாவலராய்த் திகழ்ந்த சங்க காலத்தில் இவர் பாண்டிய மன்னராய் அறியப் பெறுகிறார். பாடற்பொருள் : " இவ்வுலகம் உண்டெனில் இதனால்தான் !" (உண்டால் அம்ம இவ்வுலகம் - அம்ம என்பது வியப்பு குறித்த அசைச்சொல்) எனத் தொடங்குகிறது பாடல். இத்தன்மை உடையோரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்று அத்தன்மைகளைப் பட்டியலிடுகிறார் புலவர். அவையாவன :- இந்திரலோகத்து அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் இனியது எனத் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள்; பிறரிடம் சினம், வெறுப்பு கொள்ள மாட்டார்கள் (முனிவிலர்); தாம் மேற்கொண்ட பணியில் சோம்பல் பாரார்(துஞ்சலுமிலர்); பிறர் (நல்லோர்) அஞ்சும் தீமைக்குத் தாமும் அஞ்சுவர்; உலகம் புகழும் நற்செயல்களை மேற்கொள்ள உயிரையுங் கொடுப்பர்; பழிச்சொல் தரும் செயல்களுக்கு உலகையே பரிசாகக் கொடுத்தாலும் ஏற்க மாட்டார்கள்; செயல்திறனில் சோர்வு இலாதார் (அயர்விலர்); இந்த மாண்புகள் பொருந்தியவராகி (அன்ன மாட்சியர் அனையராகி), வலிமையான முயற்சி (நோன் தாள்) உடையவரெனினும், தமக்கென முயலாமல் பிறர்க்கென உண்மையாகவே முயலும் தன்மையர். இத்தகைசால் பண்புகள் வாய்க்கப் பெற்றவர்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது.
-
ஆதிமந்தி ஆட்டனத்தி - சுப.சோமசுந்தரம்
அவர்கள் பெயர் கந்தையா தில்லைவிநாயகலிங்கம் என்பதே. சிறிது தவறாகச் சுட்டியமைக்கு வருந்துகிறேன்.
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
அன்னாரின் சுற்றத்திற்கும் நட்புலகிற்கும் ஆழ்ந்த இரங்கலை யாழ் கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
-
ஆதிமந்தி ஆட்டனத்தி - சுப.சோமசுந்தரம்
ஆதிமந்தி ஆட்டனத்தி - சுப.சோமசுந்தரம் உலகில் பரவலாக அறியப்படும் காதல் இணையரான ரோமியோ - ஜூலியட், ஆன்டனி - கிளியோபாட்ரா, லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி போன்று சங்க காலத்தில் நம் தமிழ் நிலத்தில் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலானது காவியம் போல் பேசப்பட்டுள்ளது என்பது சங்க இலக்கியங்களான குறுந்தொகை, அகநானூறு, மற்றும் சங்க மருவிய காலத்து சிலப்பதிகாரம் மூலமாகத் தெளிவு. ஆனால் இன்றைய பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகம் இக்காதலை அறியாமல் போனது விந்தையிலும் விந்தை. ஈழத் தமிழறிஞரான திரு.கந்தையா விநாயகலிங்கம் அவர்கள் யாழ் இணையதளத்தில் எழுதிய கட்டுரையானது அடியேனையும் எழுதத் தூண்டியது எனலாம். அன்னார் எழுதியதிலிருந்து பெரிதும் வேறுபட்ட எதனையும் எழுத எண்ணாமையால், பின் ஏன் இந்த எழுத்து எனும் கேள்வி எழல் இயல்பு. திருக்குறளுக்குக் காலந்தோறும் வெவ்வேறு சான்றோர் உரை எழுதுவது ஒவ்வொரு எழுத்தும் பார்வையும் தனித்தன்மை கொண்டமையாலும், உயரிய பொருள் மீண்டும் மீண்டும் உரைக்கப் பெற்று மென்மேலும் வளம் பெறுவதினாலுமேயாம். கண்ணதாசன் எழுதிய கவிதை நாடகமான ஆதிமந்தி ஆட்டனத்தி, அதன் திரை வடிவமான மன்னாதி மன்னன், பாரதிதாசன் படைத்த சேரதாண்டவம் எனும் நாடக நூல் ஆகியவை ஈண்டு கவனத்தில் கொள்ளத்தக்கவை. இவை நாம் முன்னம் குறித்த சங்கப்பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரம் வழியமைந்த ஆதிமந்தி - ஆட்டனத்தி கதையினை ஒட்டி அமைந்த புனைவு இலக்கியங்களாகும். நாம் இக்கட்டுரையில் கையிலெடுப்பது சங்கப்பாடல்கள் வழி நின்ற கதையை மட்டுமே. சோழன் கரிகால் பெருவளத்தான் காலத்தில் ஆடற் கலையில் சிறந்த ஆட்டனத்தி (ஆடல் + அத்தி) என்ற வீர இளைஞனும் ஆதிமந்தி எனும் ஆடல் மகளும் காதல் வயப்பட்டனர். சோழ நாட்டவர் தமக்குச் சோறிடும் காவிரி அன்னைக்குப் (காவிரியாற்றுக்கு) பெருவிழா எடுக்கும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நாளன்று சோணாட்டின் கழார் என்னும் துறையில் மன்னன் கரிகாலன் முன் ஆட்டனத்தி காவிரியில் தன் ஆட்டத்தின் திறம் காட்டிச் சாகசம் புரிந்தான்; நீர் விளையாட்டும் ஆட்டத்தில் ஒரு வகையாக இருந்திருக்க வேண்டும். அவன் ஆடற்திறம் கண்டு மன்னனும் மக்களும் குதூகலித்தனர் - ஆதிமந்தியும்தான். அப்போது காவிரியில் திடீரெனப் பெருக்கெடுத்த வெள்ளம் அவனை வாரிச்சுருட்டிச் சென்று விட்டது. காவிரி கடலில் கலக்குமிடம் கரை ஒதுங்கிக் கிடந்தவனை மருதி எனும் மீனவப்பெண் கண்டெடுத்துப் பேணி வந்தாள். கட்டழகன் அத்தியிடம் கட்டுக்கடங்காத காதல் கொண்டாள். (அவனும் அந்த மீனவப் பெண்ணின் காதல் வலையில் கட்டுண்டு பேரின்ப உலகில் திளைத்திருக்க வேண்டும். ஆடவன் பல காதல் கொள்ளும் முறை சங்க காலத்தில் இருந்தமைக்கான சான்றுகள் உண்டு (polygamist society). எனவே தற்கால ஒழுக்க அளவுகோல் அங்கு அவசியமில்லை). காதலனை இழந்த காரிகையான ஆதிமந்தி அருந்துயருற்றுக் கையறு நிலையில் அவனைத் தேடி காவிரிக் கரையிலுள்ள ஊரெல்லாம் அலைந்து திரிந்தாள். இறுதியாக மருதியிடம் வந்து சேர்ந்தாள். ஆதிமந்தி அத்தியிடம் கொண்ட காதல் திறம் கண்ட மருதி அவனை அவளிடமே ஈந்து தான் கடலுள் மாய்ந்து அக்காலத்தில் அழியா புகழ் பெற்றாள். இந்த ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலும், பிறிதின் நோய் தந்நோயாய்ப் போற்றிய மருதியின் தகைமையும் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சிந்தாமல் சிதறாமல் அள்ளிப் பருகுவோமா ? முதலில் நம் கண் முன் காட்சி தருவது குறுந்தொகையில் ஆதிமந்தியார் எனும் பெயர் கொண்ட பெண்பாற்புலவரின் பாடல். புறநானூற்றில், பாட்டுத்திறம் படைத்த சேரமான் கணைக்கால் இரும்பொறை தன் நிகழ்வினைத் தானே பாடியது போல் சங்க காலத் தலைவி ஆதிமந்தியே ஆடற்கலையுடன் பாடல் திறனும் கொண்டு, தன் நிலையைக் கூறி இப்பாடலைப் பாடி இருக்கலாம். அல்லது ஔவையைப் போல் ஆதிமந்தியும் அப்போது பொதுவான பெயராய் இருந்து (common name), ஆதிமந்தியார் எனும் புலவர் தம் பெயரையுடைய நாயகியைப் பாடியிருக்கலாம். மூன்றாவது வாய்ப்பாக, பாடலின் புலவர் பெயர் தெரியாததால் பாடலில் உள்ள தலைவியின் பெயரே அவருக்குச் சூட்டப்பட்டிருக்கலாம் (பாடலில் உள்ள சொல்லால் பெயர் பெற்ற செம்புலப் பெயல்நீரார், அணிலாடு முன்றிலார் போல). பாடியவர் குறித்த வரலாறு தெளிவற்று இருப்பினும், பாடற் பொருள் தெளிவானது; பாடல் சுட்டும் வரலாறும் தெளிவு. பாடலில் தலைவி ஆதிமந்தி தோழியிடம் தனது பிரிவாற்றாமையை வெளிப்படுத்துகிறாள். இவ்வெளிப்பாடு காவிரியாற்றுக் கோர நிகழ்வுக்குப் பின் ஆற்றங்கரை ஊர்களில் அவனைப் பல இடங்களில் அவள் தேடித் திரிந்ததைச் சொல்கிறது. "வீரர்கள் கூடும் விழாக்கள், (அவன் ஆடற்தலைவன் என்பதால்) துணங்கை கூத்து நடைபெறும் இடங்கள் எனப் பலவாறு தேடியும் மாட்சிமை பொருந்திய அவனைக் காணேன். யானும் ஓர் ஆடுகள மகளே ! சங்கினை அறுத்து அமைக்கப்பெற்ற என் கை வளையல்கள் (நான் உடல் மெலிந்ததால்) நெகிழ்ந்திடக் காரணமான பெருமைமிக்க தலைவனான அவனும் ஓர் ஆடுகள மகனே !"என்கிறாள். "மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோ ராடுகள மகளே யென்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே" (குறுந்தொகை பாடல் 31; பாடியவர் ஆதிமந்தியார்) அருஞ்சொற்பொருள் : மள்ளர் - வீரர்; குழீய - குழுமிய, கூடிய; விழாவினானும் - விழாக்களிலும்; மகளிர் தழீஇய - மகளிரைத் தழுவிய; துணங்கையானும் - துணங்கைக் கூத்து நிகழிடங்களிலும்; யாண்டுங் காணேன் - எவ்விடத்தும் யான் காணவில்லை; மாண் தக்கோனை - மாட்சிமை பொருந்தியவனை; கோடு - சங்கு; ஈர் - அறுத்து; இலங்கு வளை - அமைத்து விளங்கும் வளையல்களை; நெகிழ்த்த - நெகிழ வைத்த; பீடு கெழு - பெருமை பொருந்திய; குரிசில் - தலைவன் (குருசிலுமோர் - குருசிலும் ஓர்). அடுத்து அகநானூறு பாடல் 45 ஐக் காண்போம். பாடுபொருள் வேறாய் இருப்பினும் ஆதிமந்தி பற்றிய குறிப்பு அதன் கண் வரல் சிறப்பு. பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவியொருத்தி தோழி எத்துணைத் தேற்றினாலும் தேறாது, "காதலனால் ஏற்பட்ட சிறுமையுடன் (ஊரார் புறம் பேசும் சிறுமை), பிரிவுத் துயர் எனும் நோய் மேலிட ஆதிமந்திபோல் மனம் பேதலித்து ஆதரவற்று (அலந்து) உழன்று திரிவேனோ (உழல்வென் கொல்லோ)?" என்று புலம்புகிறாள். "காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்துஆதிமந்தி போல பேது உற்றுஅலந்தனென் உழல்வென் கொல்லோ" (அகநானூறு பாடல் 45 ன் பகுதி; பாடியவர் - வெள்ளி வீதியார்) சங்கப் புலவர் பரணரின் பாடல்களில் இருந்து வரலாற்றுக் குறிப்புகளும் கிடைப்பதால் அவர் வரலாற்றுப் பதிவாளராயும் அறியப்பெறுகிறார். எடுத்துக்காட்டாக, பரணர் பாடிய அகநானூறு பாடல் எண் 135 ன் முற்பகுதியில் ஆதிமந்தி பற்றிய குறிப்பும் பிற்பகுதியில் வேளிர் குடி அரசர் பதினான்கு பேர் சேர்ந்து தாக்கிய தலைநகர் காமூரையும் கழுவுள் அரசனையும் பற்றிய குறிப்புகளும் வருகின்றன. நாம் தற்போது கையிலெடுத்துள்ள தலைப்பைக் கருத்தில் கொண்டு பாடலின் முற்பகுதியை மட்டும் பேசி, பிற்பகுதியை இக்கட்டுரையை வாசிப்போர்க்கே விட்டு விடுகிறோம். மீண்டும், பிரிவாற்றாமையில் வாடும் தலைவியொருத்தி தோழியிடம் கூறுவது : " திதலை மாமை தளிர் வனப்பு அழுங்கபுதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பபசலை பாய்ந்த நுதலேன் ஆகிஎழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்துஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி பேது உற்றிசினே காதலம் தோழி" (அகநானூறு பாடல் 135 ன் முற்பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : எனது தேமல் (திதலை), மாநிறம் ஆகியவற்றின் தளிர் வனப்பு கெட (அழுங்க), புதர்களில் படர்ந்த (புதல் இவர்) பீர்க்கின் புதுமலர் (எதிர் மலர்) போன்ற (கடுப்ப) பசலை படர்ந்த நெற்றிடையுடையவள் ஆனேன் (நுதலேன் ஆகி). ஓவியம் போன்ற எழில் மிக்க, குளிர்ச்சி பொருந்திய கண்கள் அழும்படியாக (எழுது எழில் மழை கண் கலுழ) பிரிவுத் துயருற்று (நோய் கூர்ந்து) ஆதிமந்தி மதி மயங்கியது போல் (ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி) பேதலித்து நிற்கிறேன் (பேது உற்றிசினே), அன்பு கொண்ட அழகிய தோழியே ! (காதல் அம் தோழி ). பிரிவுத் துயரில் வாடி நின்ற ஒரு தலைவியைத் தோழி அழைக்கிறாள் : "முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண்கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும் ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்ஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇதாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்தஆதிமந்தி காதலன் காட்டி படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்சென்மோ வாழி தோழி" (அகநானூறு பாடல் 222 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : முழவின் (ஒரு வகை முரசு) முகம் உலறா வண்ணம் (முகம் புலரா) - அதன் இடைவிடாத முழக்கத்தினால் - ஆர்ப்பரிக்கும் (கலி கொள்) கழார் என்னும் (காவிரி) துறையில் மென்மேலும் பெருகும் அழகுடன் (ஈட்டு எழில்) பொலிந்து எடுப்பான தோள்களுடன் திகழும் (ஏந்து குவவு) வலிமையான (மொய்ம்பின்) ஆட்டனத்தியின் நலன்களை விரும்பி (நலன் நயந்து), தனது பரந்து (உரைஇ) தாழ்ந்த இருண்ட கூந்தலால் (தாழ் இரும் கதுப்பின்) காவிரி கவர்ந்து கொண்டதால் (வவ்வலின்), திசையெல்லாம் தேடி (மாதிரம் துழைஇ) மதிமயங்கி (மதி மருண்டு) ஆதரவற்றுத் திரிந்த (அலந்த) ஆதிமந்தியிடம் அவளது காதலனான ஆட்டனத்தியைக் காட்டி - ஈந்து - ஒலிக்கும் கடல் புகுந்த (படுகடல் புக்க), புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற சிறப்பினையுடைய மருதியைப் போல் புகழ் பெறச் செல்வோமாக ! வாழிய தோழி ! (அஃதாவது தலைவனைத் தேடியும் காணாவிடத்து உயிர் துறந்து புகழ் பெறலாம் எனச் சொல்கிறாளோ !). (பாடலைப் போன்றே முற்றுப்புள்ளியின்றி பொருளை எழுதியமைக்கு மன்னிக்கவும். அப்படிதான் எழுத வந்தது !). பிரிவாற்றாமையை வகை வகையாய் பதிவு செய்கிறது அகநானூறு. "......................................அல்கல் அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்பகொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கைஅறியாமையின் அழிந்த நெஞ்சின்ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின்தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை ஆட்டன்அத்தியை காணீரோ எனநாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று எனகலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்தஆதிமந்தி போல ஏதம் சொல்லி பேது பெரிது உறலே" (அகநானூறு பாடல் 236 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : இரவில் (அல்கல்) மணம் வீசும் சந்தனம் பூசி (அணி கிளர் சாந்தின்) அழகிய பட்டாடையினால் பொலிவு பெற்று (அம் பட்டு இமைப்ப), வளைந்த குழையணிந்த மகளிரிடம் (கொடுங்குழை மகளிரின்) அவன் சேர்ந்த இடம் (ஒதுங்கிய இருக்கை) அறியாது வருந்திய மனதுடன் (அறியாமையில் அழிந்த நெஞ்சின்) உள்ளேன். காளையைப் போன்று தீரத்துடன் நடையும் (ஏற்று இயல் எழில் நடை) பொலிவு பெற்ற வலிமையான தோள்களும் (பொலிந்த மொய்ப்பின் தோட்டு) கரிய சுருள் முடியும் (இரும் சுரியல்) கொண்டவனை (ஆட்டனத்தியைக் குறிப்பது) மணந்து பித்துப் பிடித்தவளாய் (மணந்த பித்தை), "ஆட்டனத்தியைக் கண்டீரோ ?"என்று நாடு நகரெங்கும் கூவித் திரிந்து, "கடல் கொண்டதோ ? ஆற்று வெள்ளம் (புனல்) ஒளித்துக் கொண்டதோ ?" என்று அழுத கண்ணோடு காதலனால் வருந்திய (காதலன் கெடுத்த) ஆதிமந்தி போல துயரினைக் கூறிப் (ஏதம் சொல்லி) பெரிதும் வருந்துகிறேன் (பேது பெரிது உறலே). பரணர் பாடிய அகநானூறு 76 ஆம் பாடலில் பரத்தை ஒருத்தி, "(இடுப்பில்) கச்சினை அணிந்தவனும், (காலில்) கழலை அணிந்தவனும், தேனொழுகும் மாலையினை மார்பில் அணிந்தவனும் (தேம் தார் மார்பினன்), வகையாக அமைக்கப்பெற்று வனப்புடன் பொலிவுறும் மாலையை அணிந்தவனும் (வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்), சுருள் முடியுடன் (சுரியல்) திகழும் அழகிய (அம்) கூத்தனைக் (பொருநனை) கண்டீரோ என ஆதிமந்தி பித்துப் பிடித்து (பேதுற்று) அரற்றித் (இனைய) திரிய, கரையினில் மோதி (சிறை பறைந்து) உராய்ந்து (உரைஇ) செந்நிறம் கொண்ட கிழக்குத் திசையில் (செம் குணக்கு) பாயும் (ஒழுகும்) அழகிய குளிர்ச்சி பொருந்திய காவிரி (அம் தண் காவிரி) போல - காவிரியாறு ஆட்டனத்தியை இழுத்துச் சென்றது போல - (என்னிடம் வந்த தலைவனை) நானும் (யானே) கரம் பிடித்துக் கொண்டு செல்ல எண்ணுகிறேன் (கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின்)" என்கிறாள். "கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன்வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்சுரியல் அம் பொருநனை காண்டிரோ எனஆதிமந்தி பேது உற்று இனைய சிறை பறைந்து உரைஇ செம் குணக்கு ஒழுகும்அம் தண் காவிரி போலகொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே" (அகநானூறு பாடல் 76 ன் பகுதி; பாடியவர் பரணர்) அகநானூறு பாடல் 376 ல் காதல் பரத்தை தலைவனுடன் பேசுவதாக வருவது : "செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்கல்லா யானை கடி புனல் கற்று எனமலி புனல் பொருத மருது ஓங்கு படப்பைஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறைகலி கொள் சுற்றமொடு கரிகால் காண தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசைஒண் பொறி புனை கழல் சே அடி புரளகரும் கச்சு யாத்த காண்பின் அம் வயிற்றுஇரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்பபுனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு மன்னோநும் வயின் புலத்தல் செல்லேம்" (அகநானூறு பாடல் 376 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : செல்லாதே, மருதநிலத் தலைவனே ! (செல்லல் மகிழ்ந). உனக்கு நான் செய்யும் கடமை உள்ளது. (பாகனிடம்) கல்லாத யானை செறிந்த நீரோட்டத்தில் (கடி புனல்) விளையாடக் கற்று நீரில் மோத அதனால் பேரலையாய் எழுந்த நீர் (மலி புனல்) மோதும் மருத மரங்கள் உயர்ந்து நிற்கும் நிலங்களையும் (மருது ஓங்கு படப்பை), செழித்து வளர்ந்த கதிர்களைக் கொண்ட வயல்களையும் உடைய கழார் என்னும் ஊரின் (காவிரி) முன் துறையில் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும் சுற்றத்தாரோடு (கலி கொள் சுற்றமொடு) (சோழ மன்னன்) கரிகாலன் கண்டு மகிழ, புனல் விழாக்கோலம் பூண்டு (தண் பதம் கொண்டு) இன்னிசை தரவல்ல ஒளிரும் சதங்கை அணிந்த கழல் (இன்னிசை ஒண் பொறி புனை கழல்) சிவந்த காலடியில் புரள (சேவடி புரள), கருமையான கச்சு அணிந்து காண்பதற்கு அழகிய தன் வயிற்றில் (கருங் கச்சு யாத்த காண்பின் ஆம் வயிற்றில்) பெரும் பொன்னாலான (இரும் பொலம்) பாண்டில் எனும் இசை கருவி மணியுடன் ஒலிக்க (பாண்டில் மணியொடு தெளிர்ப்ப), புனலைப் பெரிதும் விரும்பி (புனல் நயந்து) ஆடிய அத்தியின் (ஆட்டனத்தியின்) அழகினை விரும்பி (ஆடும் அத்தி அணி நயந்து) காவிரி அவனைக் கவர்ந்து ஒளித்துக்கொண்டதைப் போல உன்னைக் கவர்ந்து வைத்துள்ளேன் (காவிரி கொண்டு ஒளித்தாங்கு அன்றோ). (உன் தலைவி உன்னைக் கவர்ந்து செல்லுமாறு) உன்னுடன் புலந்து நிற்க மாட்டேன் (நும் வயின் புலத்தல் செல்லேம்). அகநானூறு 396 லும் காதல் பரத்தை ஒருத்தி தலைவனிடம் சொல்கிறாள் : "இனி யான் விடுக்குவென் அல்லென் மந்திபனி வார் கண்ணள் பல புலந்து உறையஅடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇநெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின்மனையோள் வவ்வலும் அஞ்சுவல்" (அகநானூறு 396 ன் பகுதி; பாடியவர் பரணர்) பொருள் : இனி உன்னை விடமாட்டேன் (இனி யான் விடுக்குவென் அல்லென்). ஆதிமந்தி நீர் வார்த்த கண்ணுடன் பலவற்றைச் சொல்லித் துயருறுமாறு (மந்தி பனிவார் கண்ணள் பல புலந்து உறைய), போர்த் திறம் கொண்ட ஆட்டனத்தி (அடுதிறல் அத்தி) ஆடும் அழகினை விரும்பி (ஆடு அணி நசைஇ) பெருவெள்ளம் கொண்ட காவிரி அவனைக் கவர்ந்து ஒளித்துக்கொண்டதைப் போல் உன்னை ஒளித்து வைத்துள்ளேன் (நெடுநீர் காவிரி கொண்டு ஒளித்தாங்கு). (அவனை மீண்டும் அவன் தலைவி ஆதிமந்தி கவர்ந்து கொண்டதைப் போல்) உன் மனையாள் உன்னைக் கவர்ந்து கொள்வாள் என அஞ்சுகிறேன் (நின் மனையாள் வவ்வலும் அஞ்சுவல்). இறுதியாக சங்கமருவிய காலத்துக் காப்பியமான சிலப்பதிகாரம் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலைக் குறிக்கக் காணலாம். "மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கன்னவில் தோளாயோ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள் ..............." (சிலப்பதிகாரம்; மதுரைக் காண்டம்; வஞ்சின மாலை; வரிகள் 11-15) பொருள் : வஞ்சி நகரத் தலைவனைப் (ஆட்டனத்தியை) பேராற்று வெள்ளம் கொண்டு செல்ல, மன்னன் கரிகாலன் பெருவளத்தான் மகள் (ஆதிமந்தி) தானும் அப்புனலின் வழி சென்று, "மலையொத்த தோளினை உடையவனே (கன்னவில் தோளாயோ)" என்று கூவிக் கதற, கடலானது அவனை அவள் முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழுவிப் பொற்கொடியைப் போல் திரும்பி வந்தாள். சிலம்பில் ஆதிமந்தி மன்னன் கரிகாலனின் மகளாகவும் ஆட்டனத்தி வஞ்சித் தலைவனாகவும் காட்டப்படுகின்றனர். ஆனால் அவர்களைப் பேசும் சங்கப்பாடல் எதிலும் அத்தகைய வரலாற்றுக் குறிப்பு இல்லை. குறிப்பாக, வரலாற்றுப் பதிவாளராகக் கொள்ளப்படுகிற பரணர் அவர்களைக் குறித்த ஆறு பாடல்களில் ஒன்றில் கூட அவ்வாறு குறிப்பிடவில்லை. எனவே சங்க இலக்கியங்களிலிருந்து, அவர்கள் இருவரும் ஆடுகள மக்களாகவே புலப்படுகின்றனர். சங்கமருவிய காலத்திலேயே காப்பியங்கள் தோன்றின. காப்பியங்கள் தன்னேரில்லாத் தலைவனையே முதன்மைப்படுத்தின. சிலம்பு குடிமக்கள் காப்பியம் எனப் பெயர் பெற்றாலும் கோவலனும் கண்ணகியும் சாதாரணக் குடிமக்கள் அல்லர். மன்னர் குலத்தவராக இல்லாவிடினும் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் செல்வச் செழிப்புள்ள வணிகர் குலத் தோன்றல்களாகவே காட்டப் பெறுகின்றனர். எனவே சிலம்பில் புகழ்பெற்ற தலைவன் - தலைவியாக சுட்டப்பெறும் ஆட்டனத்தி - ஆதிமந்தியும் ஏற்கனவே அக்கால மக்கள் வழக்கில் திரிபுகளைப் பெற்று மன்னர் குலத்தவராகக் கருதப்பட்டது இயல்பான ஒன்றே. புனைவும் காப்பியத்தின் அங்கம்தானே ! எது எப்படி ஆயினும் உலகக் காதலர்களைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம் முதலில் ஆதிமந்தி - ஆட்டனத்தி காதலைத் தலையாயதாய்க் கொண்டாடுவதும், அதனை உலகோர் பார்வைக்குக் கொண்டு செல்வதும் தமிழர் பண்பாட்டை உலகிற்குக் கடத்தும் முயற்சியில் ஒன்றாய் அமையும்.
-
மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
2018 ல் தான் நான் யாழில் இணைந்தேன். அதற்கு முன் யாழ் இணையத்தை அறியாமல் போனதற்கு வருந்துகிறேன். 2014 ல் நீங்கள் எழுதிய இச்சிறிய (அளவில் சிறிய) கட்டுரைப் பதிவைத் தற்செயலாகக் கண்ணுற்றேன். கணியன் பூங்குன்றனார் பாடலுக்குச் சிறிய, சீரிய விளக்கவுரை வாசித்து அகமகிழ்ந்தேன். பாராட்டும் வாழ்த்தும், திரு.ஏராளன் !
-
🌿 மூன்றாம் ஆண்டு நினைவில் கந்தையா இராசலிங்கம் (25.01.2023)
நீங்கள் செலுத்தும் அஞ்சலியில் பங்கு கொள்கிறோம், ஐயா !
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
யாழ் சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன் ஐயா !