Everything posted by சுப.சோமசுந்தரம்
-
Am an atheist - சோம.அழகு
Am an atheist - சோம.அழகு தமிழ் வகுப்புகள் செம்மையாக நடந்து கொண்டிருந்தன. என் வகுப்பைச் சற்று சுவாரஸ்யமாக்கும் பொருட்டு பாடதிட்டத்தைத் தாண்டி சில விஷயங்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரத் தொடங்கினேன். தமிழின் தொன்மையைப் பற்றி, அத்தொன்மையைப் பறைசாற்றும் விதமாகக் கிடைத்திருக்கும் கீழடி, ஆதிச்சநல்லூர் சான்றுகள் பற்றி, பழமையானதாகக் கருதப்படும் லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகள் மற்றும் கொரியன், ஆங்கிலம் போன்ற இன்ன பிற மொழிகளிலும் காணப்படும் தமிழ்ச்சொற்கள் பற்றி, பாவாணரின் சொல்லாராய்ச்சி மற்றும் வேர்ச்சொல் ஆராய்ச்சி பற்றி, தமிழர் நாகரிகம் பற்றி, பழைய சங்கப்பாடல்களில் மிக இயல்பாகத் தென்படும் அறிவியல் உண்மைகள் பற்றி…. என நீண்டது எங்கள் உரையாடல். சமீபமாக ஒவ்வொரு வகுப்பின் போதும் பாடப்புத்தகத்தில் ஒரு பாடம் நடத்தி முடிக்கும் வரை ‘எப்போதடா முடியும்?’ என வேறு வழியின்றி ரொம்ப கஷ்டப்பட்டுப் பொறுத்துக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர், பாடம் முடிந்த உடன் மீதமிருக்கும் நேரத்தில் மேற்கூறிய தலைப்புகள் குறித்து இன்னும் இன்னும் என்னைப் பேசச் சொல்லிக் கேட்பார்கள். பத்து பன்னிரெண்டு வயதிற்கே உரிய அவர்களது ஆர்வமும் ஆவலும் எனக்கான உந்துதலாக அமைந்தன. அவர்களிடம் ஒவ்வொரு விஷயம் குறித்தும் ஏராளமான கேள்விகள் இருந்தன. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலானவற்றிக்கு என்னிடம் பதிலும் இருந்தன. அல்லாதவற்றிற்கு மறு வாரம் விடை தேடிச் சொல்வேன். தமிழின் சிறப்புகள் குறித்துப் புதிய தகவல்களைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரது கண்களும் ஆச்சரியத்தில் விரியும். ஒரு முறை தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற சொற்கள் ஐந்தேனும் கண்டுபிடித்து வரும்படி வீட்டுப்பாடம் தந்திருந்தேன். கூகுள் யுகத்தில் இது ஒன்றும் கடினமான பணி அல்ல என்பதால் எல்லோரும் எழுதிக் கொண்டு வந்தார்கள். அதில் ஒருவள் ‘அவ்வை 🡪 Eve’ என எழுதியிருந்ததைப் பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்கவில்லை எனக்கு. இது பொதுவாக கூகுள் காட்டும் பட்டியல்களில் வராது. தான் எழுதியது தவறோ என தயங்கிக் கொண்டிருந்தவளை வெகுவாகப் பாராட்டி ஆதனும் அவ்வையும் தாம் Adam Eve என்று கூறவும் அது குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆயத்தமாகும் பொருட்டு வேக வேகமாக புத்தகத்தை மூடினார்கள். சிரித்தவாறே சொல்லத் துவங்கினேன். சில வருடங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய கட்டுரைகளை விரும்பிப் படித்தது மிகச் சரியாக அன்று நினைவிற்கு வந்து கைகொடுத்தது. Edward Seuss என்னும் ஆஸ்திரிய புவியியல் வல்லுநர், அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன் தெற்கில் இருந்த மிகப் பெரிய நிலப்பரப்பிற்கு (இன்றைய தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, அண்டார்டிகா ஆகியவற்றை உள்ளடக்கியது), ‘கோண்டுவானா’ எனப் பெயரிட்டது; அங்கு ‘லெமூர்’(தேவாங்கு) என்ற உயிரினம் இருந்ததால் உயிர் நூலார் அப்பகுதியை ‘லெமூரியா’ என அழைக்கத் துவங்கியது; மனித இனம் லெமூரியாவில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி Ernst Haeckel கூறியது; இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த லெமூரியா ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு கடற்கோளால்(சுனாமி) அழிந்ததில் தப்பிய பகுதிதான் குமரிக் கண்டம் என்று தமிழ் மொழி வல்லுநரும் வரலாற்று ஆய்வாளருமான கா. அப்பாதுரையார் கூறியது; மனித இனம் மொத்தமும் ஒரே பெற்றோரிலிருந்துதான் தோன்றியது என்றும் அந்த ஆதிப் பெற்றோர் அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றும் நிறுவிய பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் முனைவர் ஸ்பென்ஸர் வெல்ஸ், தமிழ்நாட்டிற்கும் வந்து மரபணு ஆராய்ச்சி செய்து இந்திய நிலப்பரப்பில் முதலில் வந்தது திராவிடர்கள் என்று கண்டுபிடித்தது; பைபிளிலும் திருக்குரானிலும் வரும் ஆதாம் ஏவாள் பூமியில் இருந்தததாகக் கூறப்படும் இடமான ‘செரந்தீப்’ என்பது இந்தியாவுடன் அப்போது இணைந்திருந்த இலங்கை என அறிஞர்கள் சுட்டுவது; இன்றும் குமரி மாவட்டத்தில் குறத்தியறை, தாழக்குடி மற்றும் முப்பந்தல் ஆகிய மூன்று இடங்களில் தாய் வழிபாட்டின் தொடர்ச்சியாக இருக்கும் அவ்வையாரம்மன் கோவில்கள்; அவை புலவர் ஔவையாருக்காகக் கட்டப்பட்டிருப்பதாகத் தவறாகக் கருதப்படுவது; சங்க கால ஔவை, ‘ஆத்திசூடி’ பாடிய ஔவை, ‘ஞானக் குறள்’ பாடிய ஔவை ஆகிய இம்மூவருக்கும் குமரிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதது…. என ஞாபகமிருந்தவரை எல்லாவற்றையும் அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் கூறினேன். மிகுந்த ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். தாம் மிகப் பெரிய நாகரிக்கத்திற்குச் சொந்தக்காரர்கள் என்ற பெருமிதத்தை ஓரளவு அவர்களிடம் விதைத்து விட்ட திருப்தி! அவர்களின் அறிவுத் தேடலை விரிவுபடுத்தவும் வாசிப்பை அதிகரிக்கவும் என்னால் இயன்ற சிறு முயற்சி. அவ்வளவே! “இப்போது உங்கள் முறை. நீங்கள் வாசித்ததில் உங்களுக்குப் பிடித்தவை பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று அவர்களைத் தமிழில் உரையாட வைக்கும் முனைப்பில் கூறினேன். வரிசையாக ஒவ்வொருவராகக் கூறிக் கொண்டு வர ஒருவள், “விஷ்ணுவின் அவதாரங்கள் குறித்த புத்தகம் ஒன்றை வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது” என்றாள். “விஷ்ணுவின் முதல் அவதாரம்?” என்ற என் கேள்விக்கு, “மத்ஸ்ய அவதார்… that fish one” என்றாள். “இவ்விடத்தில் ஒரு ஒப்புமை உண்டு. மீன் உருவில் வந்த விஷ்ணு மனுவிடம் பிரளயம் ஒன்று வரப்போவதைக் குறித்து எச்சரிக்கவும் மனு பெரிய படகு ஒன்றைத் தயார் செய்து அதில் தனது குடும்பத்தினர், ரிஷிகளின் குடும்பத்தினர், ஒன்பது வகையான விதைகள், விலங்குகள் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு தப்பித்தார். பைபிளின் ‘நோவாவின் பேழை’ கதையும் கிட்டத்தட்ட இதுதான். நோவாவிற்கும் கடவுள் தான் ஏற்படுத்தப் போகும் பேரழிவைப் பற்றிக் கூறி கப்பல் ஒன்றில் நோவாவின் குடும்பம், அனைத்து உயிரினத்திலும் ஆண் ஒன்று பெண் ஒன்று, அனைவருக்கும் தேவையான உணவு எனத் தயார் செய்து கொண்டு தப்பிக்கும் வழிமுறையைச் சொல்வார். மனுவிற்கும் நோவாவிற்கும் அக்கட்டளைகள் மிகச் சரியாக ஏழு நாட்களுக்கு முன்பு தரப்படும். Noah, Navy போன்ற சொற்கள் ‘நாவாய்’ என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தவையே. இந்தப் பெருவெள்ளக் கதைகள் சுமேரிய மற்றும் பாபிலோனிய நாகரிகம், அமெரிக்காவின் மயன் இனத்தவர், ஆப்பிரிக்காவின் யொரூபா இனத்தவர் என அனைவரிடத்தும் உண்டு. ஆனால் கடல் கொண்ட இடம் என்பதற்கான சான்று ‘குமரிக் கண்டம்’ என நம்மிடம் ஆணித்தரமாக உண்டு” என்று சொல்லி முடிக்கவும்….. “Aunty! How do you know so much?” என்று கேட்டாள் அச்சிறுமி. “நிறைய எல்லாம் இல்லடா… ஏதோ கொஞ்சம் வாசிச்சதிலிருந்து சொன்னேன். நீங்களும் நிறைய வாசிங்க” என்று ஊக்கப்படுத்தினேன். “Aunty! Have you read the whole Bible?” என்று இன்னொரு சிறுவன் கேட்டான். “இல்லை” என்றேன் சிரித்தவாறே. “Then which holy book have you read completely?” – கேள்விகள் தொடர்ந்தன “எதையும் அல்ல. ஆனால் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்கப் பிடிக்கும். அதன் பொருட்டு எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். வெவ்வேறு கலாச்சாரங்களில் தென்படும் ஒற்றுமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முயற்சியில் கிடைத்த சில தகவல்கள் இவை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு துளி கடல்” என்று மறுமொழிந்தேன். “வேறென்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?” “கிருஷ்ண அவதாரத்திற்கும் மோசஸ்க்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இருவருமே கால்நடை மேய்ப்பாளர்களாக இருந்தனர். கம்சனைப் போன்ற அரசன்தான் பார்வோன். இரண்டு பேருமே தத்தமது ராஜ்யத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொல்ல ஆணையிட்டிருந்தனர். கிருஷ்ணன் மற்றும் மோசஸின் தாயார்கள் தத்தமது குழந்தைகளை ஆற்றில் விட்டனர். குந்திதேவி – மேரி மாதா, சிறுதொண்ட நாயனார் – ஆபிரகாம், சீதை – கிரேக்க புராணத்தில் வரும் Persephone…. என எனக்குத் தெரிந்த சில இவை” “Aunty! You talk about everything. Which religion do you belong to?” “Am an atheistடா” “Wow!” – ஒரே குரலில் சிலரது வியப்பு வெளிப்பட்டது. “சரி! அடுத்து யாரு பிடிச்ச புத்தகத்தைப் பற்றி சொல்லப் போறீங்க?” அடுத்ததாக ஒரு சிறுமி ஹாரி பாட்டரை களத்தில் இறக்க அதன் பிறகு முழுமையாக அவர்களின் பேச்சைக் கவனிக்கலானேன். வகுப்பு முடிந்து கலைந்து செல்கையில் “Aunty! Could you share more stories next week too? Both historical and mythological ones. Also we would like to know a bit more about etymology.” “கண்டிப்பா டா. நான் இன்னும் நிறைய வாசிக்கணும் அப்போ. அடுத்த வாரம் பார்ப்போம்” என்று கலைந்து சென்றோம். ************************** இப்ப என்னாச்சுன்னா மக்களே….. மறுநாள் மாலை எனக்கு ஒருங்கிணைப்பாளரிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. முந்தைய நாள் வகுப்பைப் பற்றி எதார்த்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் மெல்ல விஷயத்தைப் போட்டு உடைத்தார். “அது…. ஒண்ணுமில்ல… ஒரு complaint வந்துருக்கு” மனதினுள் வேகமாக ஒரு முறை ஓட்டிப் பார்த்தேன். சர்ச்சைக்குரிய கருத்துகள் எதுவுமே இடம் பெறவில்லையே! “என்னாச்சு சார்?” “நீங்க ஏதோ கடவுள் இல்லனு சொன்னதா…. ஒரு parent கொஞ்சம் hurt ஆகிட்டாங்க” ங்கே…. எதே?! “கடவுள் இருப்பைப் பற்றியோ மறுப்பைப் பற்றியோ பேசவே இல்லையே” என்றபடி வகுப்பில் நடந்தவற்றை ஒன்று விடாமல் ஒப்பித்தேன். சட்டென விஷயம் முழுவதும் புரிந்து கொண்டவராக “ஓ! ஓகே! ஓகே! விடுங்க பாத்துக்கலாம்” என்றபடி நடந்ததை விளக்கினார். வகுப்பில் உள்ள ஒரு குழந்தை வீட்டினரிடம் “கடவுள்ன்னு ஒண்ணு உண்டா?” என்று கேட்டிருக்கிறது. அநேகமாக ‘atheist’ஐ கூகுள் செய்திருக்க வேண்டும். அல்லது தானாக யோசித்திருக்க வேண்டும். அந்தப் பெற்றோர் அந்த ஒற்றைக் கேள்வியின் காரணத்தை அறிய முயன்று ஆராய்ச்சியின் முடிவாக அவர்கள் கண்டுகொண்டது – நான் ‘கடவுள் மறுப்பு’ பிரசங்கம் செய்திருக்கிறேன். எனக்குச் சிரிப்புதான் வந்தது. அக்குழந்தையைக் குறை சொல்லவே முடியாது. யோசிக்கும் திறன் பெற்ற எந்த உயிரினத்திற்கும் இயல்பாக எழும் கேள்வியைத்தான் கேட்டிருக்கிறான்/ள். “ஒரு குழந்தை கேட்ட கேள்விக்கு என் தனிப்பட்ட தெரிவைக் கூறினேன். இதுக்கெல்லாமா offend ஆவாங்க? வகுப்பில் வரலாறு மற்றும் நாகரிகம் சார்ந்த எவ்வளவோ கருத்துகள் தகவல்கள் பரிமாறப்பட்டன. அந்த ஒரு வார்த்தைக்கு இந்தப் பாடா?” “குழந்தைகளின் சிந்தனைத் திறன் சரியாகத்தான் இருக்கிறது. அதைச் சரியாகக் கையாளுபவர்களால் ஆன சூழல் பெரும்பாலும் அவர்களுக்கு அமைவதில்லை. இனிமேல் நான் பாத்துக்குறேன். உங்களைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் என்ன நடந்தது என்று ஒரு வார்த்தை சம்பிரதாயமாகக் கேட்டேன்” – நிதானமாகப் பேசிய அவர் தீவிரமான கடவுள் நம்பிக்கையுள்ளவர். ஆனால் பகுத்தறிவாதிகளையும் மதிக்கும் பக்குவம் வாய்க்கப் பெற்றவர் – “வக்கீலு… ஆனா நல்லவரு” என்ற பாபநாசம் பட வசனத்தோடு நோக்கற்பாலது. ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார் ஒருங்கிணைப்பாளர். ஒரு வகுப்பில் முதல் திருக்குறளைச் சொல்லி அதற்குப் பொருள் விளக்கம் அளிக்கையில் ‘ஆதி பகவன்’ என்பது சிவபெருமானைக் குறிப்பதாக ஆசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார். கிறிஸ்தவ குடும்பத்தைச் சார்ந்த அவ்வகுப்புக் குழந்தை ஒன்றின் பெற்றோருக்கு மனம் புண்பட்டு, சொல்லாமல் கொள்ளாமல் வகுப்பை விட்டு நிறுத்திவிட்டார்களாம். சில பல மாதங்களுக்குப் பிறகுதான் வேறொருவர் மூலம் தெரிய வந்ததாம். பரிமேலழகரின் வழித் தோன்றலான அந்த ஆசிரியர் பரிமேலழகரையே ஒரு எட்டு முந்திச் சென்று கொடுத்த விளக்கம் ஒரு பறக்கோடி என்றால் பிள்ளையைப் பள்ளியிலிருந்து நிறுத்தியது இன்னொரு பறக்கோடி. போகிற போக்கைப் பார்த்தால் தேம்பாவனி, சீறாப்புராணம், தேவாரம் போன்றவற்றையும் சமயம் சார்ந்தவை என்ற ஒரே காரணத்திற்காகப் புறக்கணித்துவிடுவார்கள் போலும். ஜெய் அல்லா! கந்தனுக்கு ஸ்தோத்திரம்! பொசுக் பொசுக்கென்று புண்பட்டுவிடுகிறார்கள் மனிதர்கள். மாற்றுக் கருத்துக்கு இடமே அளித்துவிடத் துணியாத ஒரு அற்புதமான தலைமுறையை வளர்த்தெடுக்கிறார்கள். நல்லவேளை! ஜியார்டானோ புருனோ, கலீலியோ போன்றோரின் காலங்களில் நான் பிறக்கவில்லை! ********************* இதை அப்பாவிடம் பகிர்ந்த போது, “It happens. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே” என்றார்கள். “ஆனாலும் அமெரிக்காவில் இதை நான் எதிர்பார்க்கல” என்றதற்கு, “அமெரிக்காவில் இருப்பவர்களுக்கெல்லாம் அந்த உலகம் மனதை விசாலமாக்கிப் பக்குவப்படுத்தி….” என்ற எனது பொதுப்புத்தியை “வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்” என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லிச் சிரித்தார்கள் அப்பா. தாம் இத்தாலியில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் உடன் பணிபுரிந்த எலெயனோரா அவர்களின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார். அர்ஜெண்டினாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் ஆய்வுப் படிப்பை முடித்து இத்தாலியில் வசிக்கும் அவர், “அமெரிக்காவைப் பொறுத்த வரை, உலகெங்கிலும் என்று கூட வைத்துக் கொள்ளலாம்… நீங்கள் வேறு மதத்தைச் சார்ந்தவர் என்பதைக் கூட ஏற்றுக் கொள்வார்கள். நாத்திகவாதி என்பதைத்தான் மிகப்பெரிய குற்றமாகப் பார்ப்பார்கள்” என்றார்களாம் அப்போதே. அதாவது தனது மூட நம்பிக்கைகள் இல்லாவிட்டாலும் அதற்கு ஒப்பான வேறு ஏதோவொரு கட்டமைப்பில் சக மனிதன் இயங்குவது வரை எம்மனிதனுக்கும் பிரச்சனை இல்லை. அவ்வாறாக எதுவுமே இன்றி ஒருவர் அடிப்படை அறிவுடன் வலம் வந்தால் பிறருக்கு மனம் புண்பட்டு சீழ் வைத்து நமநமத்துவிடும். அதானே? அமெரிக்கர்களே இப்படி என்றால் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் பரந்துபட்டதொரு பார்வையை எதிர்ப்பார்த்த என் மடமையைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். பிறகு நிதானமாக அத்தருணத்தை மீண்டும் மனதில் ஓட்டிப் பார்த்தேன். “Aunty! Which religion do you belong to?” ஏதாவதொரு மதத்தைச் சொல்லியிருக்கலாமோ? எப்படி முடியும்? உதாரணமாக, ஒரு கற்பனையான சூழல் – அரசியல் கலந்துரையாடல் நிகழ்கிறது. எதேச்சதிக்காரத்தையும் சர்வாதிகாரத்தையும் ஆதரித்து பேச வந்தவர்கள் பெரும்பாலானோர் அதைத் தூக்கிப் பிடிக்கும் கட்சியின் பெயரை வெளிப்படையாகப் போட்டுக் கொள்ள நாணி ‘விமர்சகர்’, ‘ஆய்வாளர்’, ‘செயற்பாட்டாளர்’ என வித விதமான முகமூடிகளை அணிந்து கொள்வர். இப்போது நான் பசப்பியவாறே கழுவுற நீரில் நழுவுற மீனாகப் பேசிக் கொண்டிருந்தால், ஃபாசிசத்தையே கொள்கையாகக் கொண்ட கட்சியின் சாயத்தையோ பாயாசம் கிண்டும் தற்குறி கட்சியின் சாயத்தையோ (இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பது ஒரு புறம் இருக்கட்டும்!) யாரேனும் என் மீது பூச எத்தனிப்பார்கள். அவசர அவசரமாக பதற்றத்தோடு அதை மறுதலிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பதில் முதலிலேயே ஒழுங்கு மரியாதையாக கருப்புச் சாயத்தைப் பெருமிதத்துடன் பூசி எனது அடையாளத்தை வெளிப்படுத்துவது உசிதம் அல்லவோ? இதே சூழல்தானே அதுவும். பொதுவாக பகுத்தறிவாளர்கள் யாரிடமும் போய்த் தாமாக அறிவித்துக் கொண்டு திரிவதில்லை. நானும் முடிந்த வரை வெகுசனத்தில் கரைந்து போகவே முயல்வேன். ஆனால் இப்படி நேருக்கு நேர் ஒரு கேள்வியை எதிர்கொள்ளும் போது சும்மானாங்காட்டி ஏதோ ஒன்றைச் சொல்லி வைக்க மனம் ஒப்பவில்லை. “நீங்கள் வலதுசாரியா?”, “முதலாளித்துவத்தை ஆதரிப்பீர்களா?”, “அடிமைத்தனம் சரிதானே?”, “மூடத்தனங்களை ஏற்றுக் கொள்வீர்களா?”, “சாமி கும்பிடுவீர்களா?” – இவற்றுக்கு எப்படி “எப்போதாவது” என்று பதில் கூற முடியும்? வளைந்து நெளிந்து குழைந்து என் ஆளுமையை விட்டுக்கொடுத்து என்னை இழக்க வேண்டிய அவசியம்தான் என்ன? NO, THANK YOU! மனம் சங்கெடுத்து முழங்கியது – “Am an atheist”.
-
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
பெரும்பாலும் உரையாசிரியர்கள் வில்லவன் அவர்கள் எழுதியது போலவே உரை சொல்கிறார்கள் என்பதைக் கண்டேன். சிலர் இப்பொருள் வேறுபாட்டைச் சுட்டவும் தவறவில்லை.
-
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
இப்பாடலில், கொற்கையிலிருந்து (குறுநில மன்னனாக) ஆண்டு வந்த வெற்றி வேற்செழியன் நெடுஞ்செழியனுக்குப் பின் மதுரை வந்து பாண்டி நாட்டின் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறான் என்று சொல்லுமிடத்தில் எத்தகைய சிறப்பு மிக்க பாண்டிய நாடு என்று குறிக்க, "பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர் ஒருமுலை குறைந்த திருமா பத்தினிக்கு ஒருபகல் எல்லை உயிர்ப்பலி யூட்டி உரைசெல வெறுத்த மதுரை மூதூர்" என்று சேரன் செங்குட்டுவனுக்கு எடுத்தியம்புகிறான் மாடலன் மறையோன். அஃதாவது "ஆயிரம் (ஈரைஞ்ஞாற்று) பொற்கொல்லர் (கண்ணகிக்குப் பொற்கொல்லன் மூலமாக இழைக்கப்பட்ட அநீதிக்குத் தண்டனையாயகவும், பாண்டிய நாட்டிற்கு ஏற்பட்ட பழி போக்கவும்) உயிர்ப்பலியாகத் தம் உயிர் ஈந்தனர்; அத்தகைய மதுரை மூதூர்" என்றுதான் நான் வாசித்த இரண்டு உரையாசிரியர்கள் உரை சொல்கின்றனர். அவ்வாறாயின், தண்டனை என்பது நாம் கட்டுரையில் சொல்லும் பலியாகாது என்பது என் கருத்து. கூடுதலாக சான்றாண்மை மிக்க உரையாசிரியர்கள் ஓரிருவரை வாசித்து விட்டு மாறுபாடு இருப்பின் மீண்டும் உங்களிடம் வருகிறேன். இது தொடர்பாக மேலும் ஒன்று கூற விழைவு. நான் வாசித்த, கேட்ட வரையில் சங்கப் பாடல்களில் நரபலி காணவில்லை என்று எழுதினேனே தவிர, தமிழ் நாகரிகம் ஏனைய பண்டைய நாகரிகங்களில் இருந்து வேறுபட்டு நிவந்து நிற்பதாக்கும் என்று நான் நம்பவில்லை. சமூக உளவியல் என்பது அனைத்துக் குழுக்களிலும் இயற்கையாய் ஒரே மாதிரிதான் தோன்றி வரும் என்பதில் எனக்கு மாறுபாடில்லை (ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியிற் தெளிந்தனம்). புலிகளில் சைவப் புலி என்று எதுவுமில்லை (There is no vegetarian tiger). உதாரணமாக, "கங்கை கொண்டான், கடாரம் வென்றான்" என்றெல்லாம் புலவர்கள் பாடினார்களே தவிர, அப்போது பெண்களைக் கவர்ந்து வந்து அந்தப்புரங்களை நிரப்பிய அயோக்கியத்தனங்களைப் பாடுவதில்லை. புரவலர்களைச் சார்ந்து வாழ்ந்த புலவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ? Now in a lighter vein : நான் சிலம்பில் வாசிக்காத பகுதியை வாசிக்க வைத்த வில்லவன் அவர்கள் பாடல் பெறத் தகுதியானவர். இப்போதைக்கு முழுப் பாடலாக இல்லாவிடினும் ஒரு வரியாவது பாடுகிறேனே ! அவர் தற்போது குறிப்பிட்ட நீர்ப்படைக் காதை, வரி 238 ல் சேரன் செங்குட்டுவன் "வில்லவன் வந்தான் வியன் பேரிமயத்து" என்று பாடப் பெறுகிறான். அவ்வரியினை இளங்கோவடிகளிடம் இரவல் பெற்று, "வில்லவன் வந்தான் சிலம்புச் செல்வத்து" என்று நமது வில்லவன் அவர்களைப் பாடலாமே !
-
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
இது தோழி கட்டுவிச்சியிடம் (குறி சொல்பவளிடம்) கூறுவதாக வருகிறது. தலைவியின் காதலை தலைவியின் தாய்க்கும், செவிலித்தாய்க்கும் குறி சொல்லும் அகவன் மகள் மூலமாக மறைமுகமாக எடுத்துரைக்க முனைகிறாள் (தானும் தலைவியின் வயதொத்தவள் ஆதலின் மூத்தோரிடம் நேரடியாகக் கூறக் கொண்ட நாணத்தின் காரணமாக). முன்னர் நான் வேறு ஊடகத்தில் இப்பாடலுக்கு எழுதிய உரையை இத்துடன் படியெடுத்துப் பதிகிறேன் : பாடற் களம் : குறிஞ்சி நிலத்தலைவி தலைவனிடம் கொண்ட காதல் ஏக்கத்தில், மெலிதல் போன்ற உடல் மாற்றங்கள் அவளிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே தாயும் செவிலித் தாயும் கவலையுற்று, குறி சொல்லும் கட்டுவிச்சியை அழைத்துக் காரணம் அறிய முற்படுகிறார்கள். உடனிருக்கும் தலைவியின் தோழி அக்கட்டுவிச்சியிடம் பாடும் அகவலோசைப் பாடல். குறி சொல்பவளை 'அகவன் மகளே!' என விளிக்கிறாள் தோழி. பாடற் பொருள் : அகவன் மகளே ! அகவன் மகளே ! சங்குமணி(மனவு)யால் தொடுக்கப்பட்டதைப் போன்ற (கோப்பு அன்ன) நல்ல நெடிய கூந்தலையுடைய அகவன் மகளே ! பாடலைப் பாடுக ! இன்னும் பாடலைப் பாடுக ! அவரது நல்ல நெடுங்குன்றம் பற்றிப் பாடிய பாடலைப் பாடுக ! பின் குறிப்பு : (1) சங்குமணி போல் வெண்மையான கூந்தல் என்றதன் மூலம், குறி சொல்பவள் வயதில் மூத்தவள் என்று அறிகிறோம். (2) தோழியைப் பொறுத்தமட்டில் தான் சொல்லத் தயங்குகிற தலைவியின் காதற் செய்தி, குறி சொல்பவள் மூலம் தலைவியின் தாயிடமும் செவிலித்தாயிடமும் சென்றடைய வேண்டும் என நினைக்கிறாள். கட்டுவிச்சி வழக்கம் போல் குறிஞ்சித் தலைவன் சேயோனின் நெடுங்குன்றச் சிறப்பினைப் பாடியிருப்பாள். அவள் குறி அறிந்து நம் தலைவனின் நெடுங்குன்றத்தைப் பாடியதைப் போல, தோழி நாடகமாடுகிறாள், "முன்னர் பாடிய 'அவரது' குன்றம் பற்றிப் பாடு". இதன் மூலம் 'அவர்' பற்றிய குறிப்பைத் தாய்க்கும் செவிலிக்கும் தர முயற்சிக்கிறாள் தோழி.
-
பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
உங்கள் அங்கதம் (Sarcasm) அருமை.
-
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
தங்கள் விளக்கம் என் எழுத்துக்கு அணி சேர்ப்பது. நன்றி.
-
பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
நன்றி தமிழ் சிறி அவர்களே ! நான் நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்ய Messages ல் சென்று பார்த்தேன். அதனை யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற விவரம் தெரிவிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
-
பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
பம்மாத்து (Pretensions) - சுப.சோமசுந்தரம் உலகில் பம்மாத்து அல்லது பாசாங்கிற்கு எக்காலத்தும் பஞ்சம் இருந்ததில்லை. இவற்றில் நன்மை விளையும் பம்மாத்தும் உண்டு - பொய்மையும் வாய்மையிடத்த என்பது போல. யானறிந்து தமிழ்நாட்டிற்கு நன்மை விளைவித்த ஒரு தலைசிறந்த பம்மாத்து, நான் பெரிதும் போற்றும் அறிஞர் அண்ணா அவர்கள் திருமூலரை எடுத்தாண்டு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பறைசாற்றியது. சமூகத்திற்காகப் போராடுவதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட திராவிடர் கழகத்தில் இயங்கிய அண்ணாவும் அவர்தம் தம்பிமார் சிலரும், மக்களுக்கான திட்டங்களை இயற்றுவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் மட்டுமே கைகூடும் என்ற உயரிய நோக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்துக் களம் கண்டனர். மக்களிடம் தேர்தல் வாக்குக்காக கையேந்தும்போது சமரசம் எனும் தீமைக்குள் வந்துதானே ஆக வேண்டும் ? கையேந்தாத பெரியார், "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று முழங்கும் போது, கையேந்திய அண்ணா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பம்மிக் கொண்டார். மக்களுக்காக அதே மக்களிடம் பம்மிக் கொண்டார். அவ்வாறு பம்முகிற ஒவ்வொரு தருணத்திலும், "ஆனால் எனக்குத் தெரியும் அந்த ஒரு தேவனும் கிடையாது" என்று அண்ணா தமக்குள் முணுமுணுத்திருப்பார் என்பதை அண்ணாவை அறிந்தவர் அறிவர். அந்தப் பம்மாத்தில் மக்களுக்கு நன்மைகள் விளைந்தன என்பதை அறிவார்ந்தோர் அறிவர். பெரியார் மற்றும் பெரும்பாலான திராவிட கழகத்தினரைத் தவிர்த்து ஏனைய திராவிட இயக்கங்களிலும், இடதுசாரி இயக்கங்களிலும் நமக்குத் தெரிந்த ஒரு பிம்மாத்து உண்டு; அதாவது, நமக்குப் பம்மாத்தாகத் தோன்றுகிற ஒன்று உண்டு. அது "நாங்கள் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோமே தவிர பார்ப்பனர்களை அல்ல" என்பதுவேயாம். பார்ப்பனியத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை எதிர்க்கும் பார்ப்பனர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கலாம். விதிவிலக்குகள் விதி யாது என்பதைச் சொல்பவைதாமே ! அவ்விதிவிலக்குகள் பார்ப்பனியத்தை உதறியவர்கள்; எனவே அவர்கள் பார்ப்பனர் அல்லர் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே ?முடிவு செய்துவிட்டு நியாயங்களைத் தேடிக் கற்பிதம் செய்ய அறிவு ஜீவிகளுக்குச் சொல்லியா தர வேண்டும் ? பெரியார் வேறு எந்த சாதிக்காரர்களையும் விமர்சிக்கவில்லையே ! மேற்கூறியது போலவே திராவிட இயக்கத்தினர் மற்றும் இடதுசாரிகள், "நாங்கள் இந்திய எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பையே எதிர்க்கிறோம்" என்பதுவும். நீங்கள் வேறு எந்த மொழியையும் எதிர்க்கவில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே ! ஆனால் ராஜஸ்தானி, போஜ்புரி, மைதிலி, அவந்தி என்று எத்தனையோ மொழிகளைத் தின்று செரித்து விட்டு, அடுத்து மராத்தி, ஒரியா, பெங்காலி என்று காவு கொள்ளத் துடிக்கும் இந்தியை எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும் ? நமது பம்மாத்து ஜோடிகளில் அடுத்து வருபவை காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளும். தமிழ்நாட்டில் (தமிழகத்தில் என்று நம்மைப் பேச விடாமல், எழுத விடாமல் செய்த ஒரு கிராதகனை என்னவென்று சொல்வது !) இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்த அறுபதுகளில் ஒன்றிய அரசான காங்கிரஸ் பணிந்தது. "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் திகழும்" என்று அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரவாதம் அளித்ததன் பேரிலேயே போராட்டத் தீ அணைந்தது. இடதுசாரிகள் தங்களது அகில இந்திய மாநாடுகளில் மொழி பற்றிய விவாதங்களில், 'தமிழ்நாட்டு மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழி, மற்றபடி இந்தியே இணைப்பு மொழி' என்ற நிலைப்பாடு கொள்வது வழக்கம். "மக்கள் விரும்பும் வரை" என்பதன் பொருள் "நாங்கள் விரும்பவில்லை; என்றாவது ஒரு நாள் நீங்கள் ஏற்பீர்கள். அதுவரை நாங்கள் அடக்கி வாசிப்போம்" என்பதே !. இது ஒரு சூளுரை அல்லது கெக்கலிப்பு. தேசியம் எனும் நீரோடையில் கரைந்து போன கட்சிகளுக்கு இந்தப் பிரச்சினை எப்போதும் உண்டு. அந்நீரோடையில் மூழ்காமல் நீந்தக் கற்றுக் கொண்ட எங்களுக்கு என்ன பிரச்சினை ? காங்கிரஸ் தேசியத்தில் கரைந்தது என்றால், இடதுசாரிகள் ஒரு படி மேலே போய் உலகவியத்தில் கரைந்தவர்கள். நேற்றைய சோவியத் யூனியனில் பெரும்பான்மையின ரஷ்ய மொழியின் தாக்குதலினால் பல சிறுபான்மையின மொழிகள் தொலைந்து போனதை லாவகமாகக் கடந்து வந்தவர்கள் ஆயிற்றே ! அது நமக்குத் தான் ரணம்; வர்க்கப் போராட்டத்தில் அவர்களுக்கு அதெல்லாம் சாதா'ரணம்' தோழர் !தமிழ்நாட்டில் அன்றைக்குப் போராடிய மக்களிடம் காங்கிரசின் சமரசம் என்பது "உங்களுக்கு இனி இந்தி கிடையாது" என்பதாகத்தானே இருக்க முடியும் ? "நீ செத்த பின்பு பார்த்துக் கொள்கிறேன்" என்பது சமரசமா ? மும்மொழித் திட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடு விலக்களிக்கப்பட வேண்டும் என்பதுதானே இடதுசாரிகளின் மண்ணுக்கேற்ற மார்க்சியமாய் அமையும் ? அப்படி விலக்கு அளிக்கப்பட்டாலும் மதவாத , பாசிச பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அடாவடித்தனமாய் ஜம்மு - காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதைப் போல பின்னர் வரும் அரசுகள் நடந்து கொள்ளா என்பதற்கு உத்திரவாதம் இல்லைதான். ஆனால் சொல்லும்போதே 'தற்காலிகமாக' என்று பொருள்படச் சொல்வது ஒரு பம்மாத்து வேலை. இப்போது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எதிராகத்தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று பொருள். இப்போது ஒன்றியத்தில் உள்ள பாசிச பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழித் திட்டத்தை முன்வைத்து விட்டு, "மும்மொழித் திட்டம் என்றுதானே சொன்னோம் ? இந்தி படி என்று எங்கே சொன்னோம் ?" என்று சொல்வதுதான் உலக மகா பம்மாத்து. ஒரு திரைப்படத்தில் வருவது போல, "நீ எப்படியெல்லாம் டைப் டைப்பா முழியை மாத்துவே !" என்று எங்களுக்குத் தெரியாதா ? நான் கேரளாவில் வேலை கிடைத்துச் சென்றால், தேவை அடிப்படையில் அப்போது மலையாளம் தெரிந்து கொள்வேன். அதுவரை நான் என் மொழியையும், வெளியுலக இணைப்பு மற்றும் கணினி பயன்பாட்டிற்காக நமது அடிமை வரலாறு நமக்களித்த வரமான ஆங்கிலத்தையும் படிப்பேன். நீ உன் மொழியையும் ஆங்கிலத்தையும் படி. அப்போது மொழியில் கூட சமநீதி, சமூக நீதி எல்லாம் உருவாகுமே ! எனவே உலகீரே ! மக்கள் நலனுக்காக பம்மாத்து அரசியல் செய்ய வேண்டுமென்றால், அறிஞர் அண்ணா போன்றோரிடம் படித்துவிட்டு வாருங்கள். அப்புறம் பேசுவோம். பின் குறிப்பு : "ஒன்றே குலம் ஒருவனே தேவன்", "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பவற்றிற்கு மாற்றுச் சிந்தனையை ச.தமிழ்ச்செல்வன், தொ.பரமசிவன் ஆகியோரிடம் வாசித்த நினைவு. பழம் பாடல்களின் அவ்வரிகள் இன்று தமிழனின் பெருமையாகக் கொண்டாடப்படுவதை அவர்கள் மறுதலிக்கவில்லை. எனினும் அவர்கள் மாற்றுச் சிந்தனையைப் பதிவிடாமலும் விடவில்லை. அந்த அடிப்படையில் அக்காலச் சமூக, அரசியல் சூழல் கருதி மக்கள் நலனுக்காக திருமூலர், கணியன் பூங்குன்றனார் ஆகியோரின் பம்மாத்தாக அவ்வரிகளைப் பார்க்கலாமோ எனத் தோன்றுகிறது. இப்பார்வை நம் கற்பனையாகவே இருக்கலாம். பல நேரங்களில் கற்பனையும் ரசனைக்குரியதுதானே ! பேரரசுகள் மருத நிலங்களைச் சுற்றியே தோன்றியிருக்கும். நிலவுடமைச் சமூகங்களும் அங்கேதான் உருவாகி அமைந்திருக்க முடியும். அவர்களுக்கான உழைக்கும் வர்க்கத்தினர் குறிஞ்சி, முல்லை நிலங்களில் இருந்தே வந்திருப்பர் அல்லது கொண்டு வரப்பட்டிருப்பர். தன் நிலத்தில் தன் சாமியை விட்டு வந்திருப்பவன் கொண்ட ஏக்கம் தீர, "இங்குள்ள சாமியும் உன் சாமிதானய்யா" என்று அவனை ஆற்றுப்படுத்துவதே "ஒன்றே குலம் ஒருவனே தேவ"னாய் முகிழ்த்திருக்கலாம். அன்றைய தேவைக்கேற்ப, பன்முகத்தன்மையை உடைத்து ஓர்மையை உருவாக்கும் பம்மாத்தாக (அன்றைய பாசிசம் எனக் கொள்ளலாமா ?") இதனைப் பார்க்கலாமோ ! மேலும் அவனது நிலத்தில் சாமியின் அருகிலிருந்து பிடி மண் எடுத்து வந்து அவன் புலம்பெயர்ந்த இடத்தில் அதே சாமியை உருவாக்கும் வழக்கம் அப்போது உருவாகியிருக்கும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும். அதேபோல் வந்த இடத்துடன் அவன் மனம் ஒன்றியிருக்கச் செய்ய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" !
-
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
சிகரெட், மதுப் பழக்கம் இவை குறித்து நீங்கள் பயனுள்ள சீரியஸான கருத்துகளைப் பகிரும்போது நான் வேடிக்கையாக சிலவற்றைப் பகிர்வதற்கு யாழ் சொந்தங்கள் மன்னிக்க வேண்டும். எனக்கு இந்தப் பழக்கங்கள் இல்லாததால் வேடிக்கையாக எடுத்துக் கொள்கிறேனோ என்னவோ ! நிகழ்ச்சிகளுக்கு இடையில் வரும் commercial ad ஆக எடுத்துக் கொள்ளவும். எழுத்தாளர் மற்றும் நகைச்சுவையாளர் (Writer and Humorist) Mark Twain : "Giving up smoking is the easiest thing in the world. I know because I've done it thousands of times". "I never smoke to excess. That is, I smoke in moderation - only one cigar at a time". அடுத்து குடிப்பழக்கம் தொடர்பாக : எனது நண்பர்கள் சிலருக்கு social drinking பழக்கம் உண்டு; அதாவது, மொடாக் குடியர்கள் இல்லை. நான் குடிப்பதில்லை என்று தெரிந்தும் என்னையும் அழைப்பார்கள். பொதுவாக குடிப்பவர்கள் குடிக்காதவனை ஆட்டத்துக்கு சேர்ப்பதில்லை. நான் விதிவிலக்கு. எனக்கு மட்டும் coke தருவிக்கப்படும். ஒருநாள் நண்பன் ஒருவனின் கமென்ட் - "எலேய், குடிக்கிற எங்களுக்கு வைக்கிற snacks ல் பாதியை பேச்சுக்கு இடையில் நீயே காலி பண்ணுற !". என் பதில் - "அடேய், ஒங்க குடிகார பில்லை சில சமயங்களில் நான்தான் settle பண்ணுறேன் தெரியுமில்ல ! போதாக்குறைக்கு எவனாவது ஓவராக் குடிச்சு மலந்துட்டா நான்தான் அவன வீட்ல கொண்டு தள்ள வேண்டியிருக்கு !". ஒருநாள் போதையில் ஒருத்தன் என்னிடம் - "எப்பா, ஏதாவது சங்கப் பாடலை எடுத்து விடுப்பா !". நான் - "ஒனக்கு ஒடம்புக்கு எப்படி வருதுலே ? சினிமாவுல வருமே Bar ல் club dance ! அதுமாதிரி ஒங்க entertainment க்கா நான் வந்திருக்கேன் ?".
-
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம் இறை நம்பிக்கை என்பதே இளம் பிராயத்தில் இருந்து செய்யப்பட்ட மூளைச்சலவை என்பதும், அதனால் அதுவும் ஒரு குருட்டு நம்பிக்கை என்பதுமே பெரும்பான்மை இறை மறுப்பாளர்களின் கருத்தாக இருப்பினும் அவர்கள் அக்கருத்தை அத்துணை ஆணித்தரமாக சமூகத்தில் வெளிப்படுத்துவதில்லை. எந்த சமூகத்திலும் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடையவராய் இருப்பதும், அம்மக்கட் பணியே தம் பணி எனக் கொண்டதும் அதற்குக் காரணமாய் இருக்கலாம். ஆனால் இறை நம்பிக்கை எல்லை கடந்து மூடநம்பிக்கையாய் உருவெடுக்கும்போது இறை மறுப்பாளர் மட்டுமல்லாமல் இறை நம்பிக்கை கொண்டோரிலும் பகுத்தறிவாளர் தமது எதிர்க் குரலை ஆங்காங்கே பதிவு செய்வது உண்டு. மூடநம்பிக்கைகள் அங்கிங்கெனாதபடி எங்கும், எந்த மதத்திலும் ஊடுருவி இருக்கக் காணலாம். தற்காலத்தில் கூட எங்காவது நடைபெற்றுச் செய்தியாகி விடுகிற நரபலியும், பெற்ற குழந்தையை நொடிப்பொழுதேனும் மண்ணில் புதைத்து எடுக்கிற கோரமும், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்து ரத்தம் வடிவதும் நாம் மண் சார்ந்ததாய்க் கொண்டாடும் நாட்டார் தெய்வங்களின் மீது ஏற்றப்பட்ட வன்முறை. தொன்மையான தமிழ் நாகரிகம் மற்றும் கிரேக்க நாகரிகக் காலந் தொட்டு இவை நிலவி வந்திருக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லையாயினும், குறுந்தொகை போன்ற அக இலக்கியங்களில் தோன்றும் கட்டுவிச்சிகளும் (குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த குறி சொல்பவள்) கணியன்களும் நம்பிக்கைகளுக்கான மெல்லிய ஆதாரங்கள். அவையனைத்தும் இறை நம்பிக்கை சார்ந்தே தோன்றின என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக, குறுந்தொகை 23 இல் " அகவன் மகளே! அகவன் மகளே! மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே! பாடுக பாட்டே; இன்னும் பாடுக பாட்டே! அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!" (குறுந்தொகை 23) என்று தலைவியின் தோழி குறி சொல்லும் கட்டுவிச்சியிடம் இப்பாடல் மூலமாகச் சொல்லும் செய்தியிலும், அது தரும் இலக்கிய இன்பத்திலும் மூழ்கித் திளைத்துப் பாடல் தெரிவிக்கும் மூடநம்பிக்கையை நாம் எளிதில் கடந்து விடுவதுண்டு. இங்கு ஒரு மண் சார்ந்த மூடநம்பிக்கையாக வெளிப்படுகிறதே தவிர இறை சார்ந்ததாய் வெளிப்படவில்லை. மேலும், இது இன்றளவும் தொடரும் நம்பிக்கையே ! இருப்பினும் இயற்கை குறித்தும் வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் தோன்றிய பயத்தில் பிறந்த இறை நம்பிக்கை பெரும்பாலும் மூடநம்பிக்கையின்பால் இட்டுச்செல்லும் என்பது சமயம், காலம், தேசம் எனும் எல்லைகள் தாண்டியது. தலைவனின் பிரிவாற்றாமையினால் வாடி உடல் மெலிந்திரங்கும் தலைவியின் நிலை பற்றிக் கேட்க வேலன் வெறியாட்டில் குறி கேட்கச் செல்லும் தாயினைப் பற்றி குறுந்தொகை 111 இல் காணலாம். வேலனாக வெறியாடும் குறி சொல்லும் கலைஞன் தலைவியின் வருத்தம் சேயோன் ஆகிய முருகனின் செயல் என்று அளந்து விடுவதும், அதனைத் தாயானவள் நம்புவதும் "பெரும் வேடிக்கை" என்று கூறித் தோழியானவள், "அவ்வேடிக்கை காணத் தலைவன் வருவானாக !" என்று தலைவியிடம் கூறுகிறாள். அன்று சமூகத்தில் நிலவிய அந்தக் குருட்டு நம்பிக்கையைப் புலவர் தீன்மதி நாகனார், போகிற போக்கில், வேடிக்கை (பெருநகை) என்றது நமக்கான ஆறுதல். "மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் அதுவென உணரும் ஆயின் ஆயிடைக் கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன கேழிருந் துறுகற் கெழுமலை நாடன் வல்லே வருக தோழிநம் இல்லோர் பெருநகை காணிய சிறிதே". (குறுந்தொகை 111) பேய் பூதங்கள் பற்றிய பயமும் நம்பிக்கையும் கல் தோன்றி மண் தோன்றாக் காலந் தொட்டே வழங்கி வருவது போலும் ! சங்கப் புலவர்களில் பேயனார், பேய்மகள் இளவெயினி, பக்தி இலக்கியங்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்று சான்றோர் தம் பெயர்களே வழங்கி வந்தமை இதற்கான சான்று. "......................வானத்து வயங்குபன் மீனினும் வாழியர் பலஎன உருகெழு பேய்மகள்" (புறநானூறு 371) என்ற பாடலைப் பாடிய கல்லாடனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்திப் பேய் மகளிர் குரவைக் கூத்தாடுவதாகப் பதிவு செய்கிறார். இத்தனை மூட நம்பிக்கைகள் நிலவிய போதும் நரபலி போன்ற கொடூரமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் அநேகமாகக் காணப்படவில்லை எனலாம். எனவே அவை அறிவார்ந்த மக்களால் தமிழ்ச் சமூகத்தில் அப்பொழுதும் ஏற்கப்படவில்லை என்றே கொள்ளலாம். பண்டைய கிரேக்க நாகரிகத்தின் வழக்கத்துடன் இது குறித்து நோக்கத்தக்கது. அங்கே அவர்களது கடவுள்களை அமைதிப்படுத்த கொடூரக் கொலைகள் நிகழ்த்துவது அவர்களது இலக்கியங்களில் காணக் கிடைப்பது. எடுத்துக்காட்டாக, கி.மு. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கணிக்கப்படும் ஹோமரின் 'தி இலியட்' எனும் கிரேக்கக் காவியம் கி.மு. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ட்ரோஜான் போர் பற்றியது; அதில் வரும் அகமேம்னன் (Agamemnon) எனும் மைசீனிய (Mycenae) நாட்டு அரசன் ஆர்டிமிசு (Artemis) எனும் தேவதையை அமைதிப்படுத்தத் தன் மகள் இஃபிஜீனியாவைத் (Iphigeneia) தன் கையாலையே பலி கொடுக்கும் கொடுமை அரங்கேறுகிறது. ட்ரோஜான் போருக்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைப்பதால், அப்போரினை அடிப்படையாய்க் கொண்ட கதையாகவே இருப்பினும் அத்தகைய வழக்கங்கள் அச்சமூகத்தில் நிலவியது சுட்டப் பெறுகிறது எனலாம். அதுபோலவே இப்ராஹீம் நபிகள் தமது மைந்தரான இஸ்மாயிலை இறைவனுக்குப் பலியிடத் துணிந்தபோது இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு, "ஆட்டினைப் பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றுக" எனப் பணிக்கப்பட்டார்; இந்நிகழ்வே பக்ரீத் விழாவாகக் கொண்டாடப்படுகிறது என்பதை அறிவோம். இந்நிகழ்வு விவிலியத்திலும் (பழைய ஏற்பாடு) பேசப்படுகிறது - சிறிய மாற்றத்துடன்; ஆபிரகாம் ஆகிய இப்ராஹிம் பலியிடத் துணிந்தது தமது மற்றொரு மகனாகிய ஈசாக்கை எனும் மாற்றத்துடன். அவலம் என்னவோ மாறவில்லை. இத்தகைய கொடிய கூத்துகளில் தமிழ்ச் சமூகம் தாமதமான போதிலும் சோடை போகவில்லை என்பதை ஏறக்குறைய கிபி 12ம் நூற்றாண்டைச் சார்ந்த பெரியபுராணம் பெருமிதத்துடன் (!!!) பதிவிடுகிறது. இதனைச் சற்று விரிவாகச் சொல்லுவதில் இக்கட்டுரை (வெட்கமின்றி) முழுமை பெறும் என்று நம்புகிறேன். நாம் பெரிய புராணத்தில் முதலில் கையிலெடுப்பது சிவனடியார் பரஞ்சோதியார் எனும் சிறுத்தொண்டர் நாயனார் புராணம். சிவனடியார் தொண்டே சிவத்தொண்டு என வாழும் சிறுத்தொண்டரின் பக்தித்திறம் சோதித்திட இறைவனே கயிலாயத்தினின்றும் இறங்கி சிவனடியார் வேடத்தில் 'வைரவர்' எனும் பெயருடன் சிறுத்தொண்டரின் ஊரான திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளுகின்றார். அன்று அமுது செய்விக்க (விருந்தளிக்க) சிவனடியார் எவரையும் காணாமல் வாடி நின்ற சிறுத்தொண்டர், சிவனடியாரான வைரவர் வரவறிந்து இறும்பூதெய்து கணபதீச்சரத்தில் திருவத்தியின் (அத்தி மரத்தின்) கீழ் அமர்ந்திருந்த வைரவரை அமுது செய்யத் தம் இல்லத்திற்கு அழைக்கின்றார். அப்போது தமது நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிறுத்தொண்டரால் தமக்கு அமுது படைக்க முடியுமா எனும் ஐயப்பாட்டை வெளிப்படுத்துகிறார் வைரவர். எந்த நிபந்தனையையும் தம்மால் நிறைவேற்ற முடியும் என்று உறுதியளித்துக் கேட்கிறார் சிறுத்தொண்டர். அந்த நிபந்தனைகளை எண்ணிப் பார்க்கவே நமது உடலும் உள்ளமும் பதறும்போது, அவற்றை மொழிவது மட்டுமின்றி அது நிறைவேற்றப்படும் காட்சியை வெகு சாதாரணமாக ரசனையுடன் சேக்கிழார் பாடிச் செல்வது பேரதிர்ச்சி, பேரவலம் ! அதனைக் கேட்டுச் சிறிதும் மனச்சலனமின்றி மகிழ்வோடு ஏற்று, தம் மனைவியிடம் பகிர்கின்றார் சிறுத்தொண்டர் : "வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர்தாம் உள்ளம் மகிழ அமுதுசெய இசைத்தார் குடிக்கு ஓர்சிறுவனும்ஆய்க் கொள்ளும் பிராயம் ஐந்து உள்ளால் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் பிள்ளைபிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப்பெறின் என்றார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 54) பொருள் : வள்ளலார் ஆகிய சிறுத்தொண்டர் தம் மனையாளாகிய திருவெண்காட்டு நங்கையை நோக்கி, "(தாய் தந்தைக்கு) ஒரே மகனாய்ப் பிறந்து எவ்வித உறுப்புக் குறைபாடுமின்றி உள்ள ஐந்து வயது சிறுவனைத் தாய் பிடித்துக் கொள்ள மகிழ்வோடு தந்தை அரிந்து (வெட்டி) சமைக்கப் பெற்றால் உள்ளம் மகிழ்ந்து திருவமுது செய்ய மாதவராகிய வைரவர் இசைந்தார்" என்றார். அடுத்து அக்கொடுமை அரங்கேறுகிறது. எந்த ஒரு உணர்ச்சியும் மிதமிஞ்சிப் போகும்போது மூளைச்சலவை முழுமை பெற்றது என்றே பொருள். கம்பனுக்கு நிகரான கவித்துவம் பெற்ற சேக்கிழார் முதல் சாமானிய இறைப்பற்றாளன் வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை : "இனிய மழலைக் கிண்கிண்கால் இரண்டும் மடியின் புடைஇடுக்கிக் கனிவாய் மைந்தன் கையிரண்டும் கையால் பிடிக்கக் காதலனும் நனிநீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகைசெய்யத் தனி மாமகனைத் தாதையார் கருவி கொடுதலை அரிவார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 63) பொருள் : இனிய மழலையை இசைக்கும் கிண்கிணியை அணிந்த கால்கள் இரண்டினையும் தாயானவள் (!) தன் மடியின் இடையே இடுக்கி, இனிமையான கனி போன்ற வாயுடைய மைந்தனின் கைகள் இரண்டையும் தன் கையால் பிடித்துக் கொள்ள காதற் கணவனும் (சிறுவனின் தந்தை) பெரிதும் உவகை கொண்டார் என ஒப்பற்ற அந்த மகனும் மகிழ்ந்து சிரிக்க, தந்தையானவர் கருவி கொண்டு மகனின் தலையை அரிகின்றார். அக்குரூரத்தை மேலும் வருணிக்கும் அளவு பக்தி முத்திப்போயிற்று : "அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது எனக்கழித்து மன்றத்து நீக்கச் சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு முளை திறத்திட்டுக் கறிக்கு வேண்டும் பலகாயம் அரைத்துக் கூட்டிக்கடிது அமைப்பார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 65) பொருள் : அறுத்த தலையின் இறைச்சி சிவனடியார்க்குப் படைக்கும் திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்து அதனை ஒதுக்கும் பொருட்டு சந்தனத்தாரது (சிறுத்தொண்டரது) கையில் கொடுத்து மற்ற உடல் உறுப்புகளின் இறைச்சியைக் கொத்தி அறுத்து எலும்பினைச் சுற்றியுள்ள தசையினைத் திறந்து கறிக்காக இட்டு அக்கறிக்கு வேண்டிய பொருட்களை அரைத்துக் கூட்டி (அத்தாயானவள் !!!) விரைவாக உணவைத் தயாரிக்கிறாள். இறுதியில் இறைவன் சிறுத்தொண்டரையும் அவரது இல்லாள் திருவெண்காட்டு நங்கையையும் ஆட்கொண்டு அவர்களது மகவான சீராளனை மீண்டும் அருளினார் என்ற கதையெல்லாம் ஒரு புறம். சிவனடியார்களிடம், அதன் மூலமாக சிவபெருமானிடம், சிறுத்தொண்டர் கொண்ட நேயம் மற்றும் அர்ப்பணிப்புக்கான சோதனையில் அவர் வென்றிருக்கலாம். ஆனால் இத்தகைய எல்லை தாண்டிய உணர்வு கொண்டாடப்படும்போது, சமூகம் எல்லை தாண்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும். மூடநம்பிக்கையினால் நரபலிகள் நியாயப்படுத்தப்படும். சங்க இலக்கியங்களில் இவை குறிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நமக்குத் தெரிந்த அல்லது கேள்விப்பட்ட பழங்காலத்தில் போருக்குச் செல்லும் முன் போர்த் தெய்வங்களுக்கு (War Deities) நரபலி தரும் வழக்கம், பலியாகும் வீரன் அதனை வீரத்தின் அடையாளமாக மனமுவந்து ஏற்றுக் கொண்ட கொடூரம் பற்றிய நாட்டுப்புறக் கதைகள் நம் காதுகளில் ஈயமாகக் காய்ச்சி விடப்பட்டிருக்கின்றனவே ! இவை கல்லாத சாமானியரின் வழக்கங்கள் என்று ஒதுக்குவதற்கு இல்லை. பெரிய புராணத்தில் சுட்டப்பெறும் அடியார்களும், அவர்களைக் கொண்டாடும் சேக்கிழார் பெருமானாரும், இப்ராஹிம் அல்லது ஆபிரகாம் வரலாறு சொன்னவர்களும் அந்தந்தக் காலத்தின் சான்றோர் பெருமக்கள்தாமே ! இவர்களால் வழிநடத்தப்படும் சாமானியர் எப்படி சான்றோராய் வளர முடியும் ? மதம் எப்படியெல்லாம் மதி மயங்கச் செய்யும் என்பதற்கு மேலும் ஒரு சான்று பெரிய புராணத்தின் இயற்பகை நாயனார் புராணத்தில் காணக் கிடைக்கிறது. மீண்டும் பெரிய புராணந்தானா ? கம்பனில் சம்பூக வதம் போன்ற பிற்போக்குத்தனங்கள் உண்டே ! அது வடக்கில் இருந்து வந்த கதை என்று புறந்தள்ளப் படலாம். பெரிய புராணத்தைப் புறந் தள்ளுவதற்கில்லையே ! உலகின் இயற்கையைப் (நடைமுறையை) பகையாக்கிக் கொண்டமையால் இயற்பகை நாயனார் என்று வழங்கப்படுகிறார். பூம்புகார் நகரத்தின் வணிகர் குலத்தில் பெருஞ்செல்வந்தராய் வாழ்ந்தவர். தம்மை நாடி வந்த சிவனடியார் வேண்டியவை எவையாயினும் இல்லையெனக் கூறா இயல்புடையார். அவரது பக்தியின் திறன் உலகிற்குக் காட்டும் பொருட்டு திருச்சிற்றம்பலத்தில் ஆடும் சிவனார், அடியார் வேடம் பூண்டு நாயனார்தம் இல்லத்திற்கு வருகிறார். "முந்தை எம்பெருந் தவத்தினால் முனிவர் இங்கு எழுந்தருளியது" (இயற்கை நாயனார் புராணம்; பாடல் 5) "என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்றஅக் கைதவ மறையோர் கொன்றைவார் சடையர் அடியார்கள் குறித்து வேண்டிய குணம் எனக்கொண்ட ஒன்றும்நீர் எதிர்மாறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டுநும்பால் ஒன்று வேண்டி இன்றுநான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையல் ஆம்எனில் இயம்பல் ஆம்என்றான்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 6) பொருள் : முற்பிறவியில் யான் செய்த பெருந்தவத்தினால் முனிவர் தாம் இங்கு எழுந்தருளினீர்கள் என்று கூறிய இயற்பகையார் முன் கீழ்மைத்தன்மை உடைய மறையோராய் வேடமேற்று வந்த கொன்றை மலர் சூடிய சடையரான சிவபெருமான், "அடியார்கள் தாங்கள் உம்மிடம் வேண்டியவற்றை நீவிர் நற்குணம் பொருந்தியவை என ஏற்று (அவை நற்குணம் பொருந்தாமல் இருப்பினும்), மறுக்காமல் மகிழ்ந்து அளிக்கும் உண்மையினைக் கேட்டு உம்மிடம் ஒன்று வேண்டி இங்கு யான் வந்தேன். அதற்கு நீவிர் இசைவீர் எனில் யான் இயம்புவேன்" என்று கூறுகிறார். இங்கு முனிவர் பாதகம் ஏதோ இயற்ற வந்தார் என்பதைத் தற்குறிப்பாகச் சொல்ல நினைத்த சேக்கிழார் அவரைக் 'கைதவ மறையோர்' (கீழ்மைத் தன்மை கொண்ட மறையோர்) எனக் குறித்தமை தெளிவு. நடைபெறப் போகும் குற்றத்தைக் கொண்டாடுவதில் சேக்கிழார்க்குப் பங்கில்லை என்பது நமக்கான ஆறுதல். "என்ன அவ்வுரைகேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும்என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயமில்லை நீர்அருள் செயும் என்ன மன்னு காதல்உன் மனைவியை வேண்டி வந்தது இங்குஎன அந்தணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 7) பொருள் : முனிவர்தம் உரையைக் கேட்டு இயற்பகையார், "அஃது என்னிடத்தில் இருக்குமானால், அது எம்பிரான் (சிவனார்) அடியவர்க்கு உரிமையானது. எவ்வித ஐயமுமின்றி தயங்காது கேட்டு அருள் செய்க" என்கிறார். அதற்கு அம்மறையோர், "நின்பால் நிலை பெற்ற காதல் கொண்ட நும் மனைவியை எனக்கு வேண்டிப் பெற வந்தேன்" என்று சொல்ல, அதைக் கேட்டு முன்னைவிட மகிழ்ந்து இயற்பகை நாயனார் சொல்ல ஆரம்பித்தார். "இது எனக்குமுன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறுஎனக்கு" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் எட்டு) பொருள் : "என்னிடம் முன்பே உள்ள பொருளைத் தாங்கள் கேட்டது எனக்கான பேறு" என்கிறார் நாயனார். இந்தக் கருமத்தை எங்கே போய்ச் சொல்ல ? அது மகாபாரத யுகம் போல பெண் பலதார மணமுறை (polyandry) நிலவும் சமூகமல்ல. கற்பின் திறம் பேசும் சமூகத்தில் இத்தகைய வெட்கக்கேடு நிகழ்வது பக்தி முற்றி மனம் பேதலித்தமை அன்றி வேறென்ன ? மேலும் அவர்தம் இல்லாளும் கணவனின் இறைப்பணியில் தன் பங்கு ஈதென்று மாறுபாடின்றி ஏற்றுக் கொள்கிறாள். இக்கேவலம் இத்தோடு நிற்கவில்லை. இருவழி சுற்றத்தாரும் (கணவன், மனைவி தரப்பினர்) இந்த மதியீனத்திற்கு எதிராகக் கிளர்ந்து எழுகின்றனர். இயற்பகை நாயனார் அவர்களுடன் போரிட்டு அவர்களை வெட்டிச் சாய்ப்பதாய்க் கதை தொடர்கிறது. "சென்று அவர் தடுத்தபோதில் இயற்பகையார் முன் சீறி வன்துணை வாளே ஆகச் சாரிகை மாறி வந்து துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து வென்றுஅடு புலிஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 21) பொருள் : சுற்றத்தார் வந்து தடுக்கையில் இயற்பகையார் சினமுற்று முன்வந்து வாளையே பெருந்துணையாகக் கொண்டு சுற்றத்தினரை மாறி மாறிச் சுற்றி வந்து அவர்களது தோள்களையும் கால்களையும் தலைகளையும் வெட்டிச்சாய்த்து, எதனையும் கொல்லும் திறன் கொண்ட ஆண் புலியைப் போல் அப்போர் ஆட்டத்தில் ஈடுபட்டார். இறுதியில் இறையனார் இயற்பகையாருக்குக் காட்சி தந்து அவர்தம் துணையொடு வாழ்வாங்கு வாழவைத்து, அவர்தம் சுற்றத்தாரையும் உய்வித்த கதையெல்லாம் 'சுபம்' எனும் நிறைவுத் திரைக்கானது. நமது கட்டுரைக்கான நிறைவுத் திரையை இப்படி அமைப்போமா ? - எந்த மதமானாலும் நிறைவான வாழ்க்கைக்கு வழிகோலுவதாகத்தானே அமைய முடியும் ! குறைபட்ட இறையமைப்பு வாழ்வில் நிறை தருமா ?
-
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - சோம.அழகு
'திண்ணை' இணைய வார இதழில் வெளிவந்த மகள் சோம.அழகுவின் கட்டுரை : சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -- சோம. அழகு அமெரிக்க வாழ் தமிழர்களின் தமிழை வைத்து அவர்களது சொந்த ஊரைக் கண்டுபிடிக்கவே இயலாது. ஏனெனில் எல்லா வட்டார வழக்குகளையும் விழுங்கிவிட்ட ஒரு செயற்கையான மேட்டுக்குடித் தமிழ் அது. குழந்தைகளின் தமிழைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கேனும் எப்போதேனும் அவர்களிடமிருந்து எட்டிப் பார்க்கும் தமிழில் ர, ட போன்ற எழுத்துகள் அவற்றை ஒத்த ஆங்கில ஒலியைப் பெற்றுவிட்டன. [ல, ள, ழ], [ர, ற] மற்றும் [ந, ன, ண] ஆகியவற்றினுள் வித்தியாசமே இல்லை. நம் ஊரிலேயே இல்லையே என்கிறீர்களா? ஒவ்வொரு மாகாணத்திலும் தமிழ்ப் பற்றாளர்கள் சேர்ந்து இலவசமாகத் தமிழ்ப்பள்ளி நடத்துகிறார்கள். நான் இருக்கும் இடத்திலும் ஆறு நிலைகளில் தமிழ் வகுப்பு நடைபெறுகிறது. தாம் சேவை செய்வதாகவெல்லாம் இவர்கள் எண்ணவில்லை. அதையும் தாண்டி அடுத்த தலைமுறைக்கு நம் மொழியை எப்படியேனும் கொண்டு போய்ச் சேர்த்திட வேண்டும் என்ற பதட்டம் கலந்த அதீத பொறுப்புணர்வைத்தான் காண்கிறேன். தன்னார்வலர்களின் முயற்சியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் வாரம் ஒரு முறை வகுப்புகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் சராசரியாக பத்து மாணவர்கள். சிங்கப்பூரில் இரண்டாம் மொழியாகத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கான பாடநூல்கள்தாம் பின்பற்றப்பட்டுக் கொண்டிருந்தன. எனவே நமது ஒன்றாம் இரண்டாம் வகுப்புத் தமிழ் பாட நூல்கள் இவர்களது ஆறாம் நிலை பாட நூலுக்கு ஒப்பாக இருந்தது. மிகவும் எளிமையான பாடத்திட்டம். நான் அங்கு ஆசிரியராக இணைந்த முதல் நாளே ஆறாம் நிலையில் அமர்த்தப்பட்டேன். பத்து முதல் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறார்கள். அந்த வகுப்பின் பொறுப்பாசிரியர் பிள்ளைகளின் தமிழ் அறிமுகத்தைப் பற்றி என்னிடம் எடுத்துக் கூற வந்தவர் வகுப்பு முடிந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி முதலில் அவர்களைத் தாம் கூறும் சில தமிழ்ச் சொற்களை எழுதுமாறு பணித்தார்கள். நாங்கள் இருவரும் ஒவ்வொருவரின் எழுத்துக் கோர்வையையும் சரி பார்த்துத் திருத்தம் கூறிக் கொண்டிருந்தோம். ‘மான்புளு’ என்ற புதிய உயிரினத்தைக் கண்டுபிடித்திருந்தான் ஒருவன். தென்தரவு, னீச்சள், இடவாளை, சுறியன், மதாம், காட்டயம், மதியவற், மன்தர பேட்டி என எல்லாமே ஏதோ எதிரி நாட்டுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக ரகசியமாக எழுதப்பட்ட சங்கேத மொழியைப் போல் இருந்தன. அதன் பிறகு வாசிப்புப் பயிற்சி. ஒவ்வொருவரையும் வரிசையாக ஒவ்வொரு வரியாக வாசிக்கச் சொன்னோம். முதலாமவன் வாசித்துக் கொண்டிருக்கையில் பிறர் அனைவரும் தம்முடைய முறையின் போது வரப் போகும் தமக்கான வரியை வாசித்துப் பழகிக் கொண்டிருந்தார்களே தவிர வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த வரியையோ வாசிப்பவனையோ சிறிதும் சட்டை செய்யவில்லை. அதிலும் ஒருவள் பென்சில் கொண்டு ஏதோ அந்தப் பத்தியின் அருகில் எழுதிக் கொண்டிருந்தாள். நான் மெல்ல எட்டிப் பார்க்க புன்னகையுடன் அதை மறைக்க முற்பட்டாள். ஆனால் பார்த்துவிட்டேன். Antha nari kuyilidam sendru…. என எழுதியிருந்ததைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்து “என்னடா பண்ணியிருக்கீங்க?” என சிரித்தவாறே கேட்டேன். “This way I could read easily. Otherwise am too slow” என்றாள். அங்குள்ள நிலைமையை விளக்க முனைந்த பொறுப்பாசிரியரின் வேலையை வெகுவாகக் குறைத்து விட்டிருந்தனர் அரும்பெரும் செல்வங்கள். ஒரு நாள் ‘தொட்டம்’ என்ற சொல்லைத் திருத்தும் பொருட்டு “ஒற்றைக் கொம்பு இடக்கூடாது. இரட்டைக் கொம்பு போடுங்க” என்றதும் அம்மாணவன் புரியாமல் விழிக்க இன்னொருவன் உதவினான் – “Hey! That telephone letter!”. பிறிதொரு நாள் விளையாட்டாகப் படிக்க வைக்கும் விதமாக அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து நான் தமிழ்ச் சொற்களைக் கூற யார் முதலில் சரியான பொருளைத் தருகிறார்கள் என போட்டி வைத்தோம். ‘சிறப்பு’ என்ற சொல்லுக்கு ஆர்வம் பொங்க Red என பதில் தந்து பூரிப்படைய வைத்தான் ஒருவன். ‘அரிது’ ‘knowledge’ எனப் புதிய பொருள் பெற்றதில் லேசாகத் தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது எனக்கு. ‘இரும்பு’ என அடுத்த வார்த்தையைக் கூறிவிட்டு நான் தண்ணியை எடுத்துக் குடித்துக் கொண்டிருக்கும் போது Cough என்று பதில் மொழிந்தவனைப் பார்த்து என் கண்கள் அதிர்ச்சியில் விரிய அவனோ எனக்குப் புரியவில்லை என நினைத்துத் தன் முழங்கையைக் கொண்டு வாயை மூடி இருமி வேறு காண்பித்துச் செயல்முறை விளக்கம் தந்து புரையேற வைத்தான். துணிவு – Dress, பொறுமை – Jealousy… பொறுமை இழந்து இப்போது நான் ஆங்கிலச் சொற்களுக்கு மாறினேன். அப்போதும் Forest – விவசாயி, River – நிதி, Competition – பேட்டி என இப்பட்டியலும் பெரிசாகிக் கொண்டே செல்ல எல்லாச் சிறார்களுக்கும் சேர்ந்தாற் போல் திருஷ்டி கழிக்கும் பொருட்டு என் கைகளால் நெட்டி முறித்து, “நா பங்காரம்” எனக் கொடூரமாகத் தெலுங்கு பேசத் துவங்கிருந்தேன். இந்தத் தமிழ்ப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் குழந்தைகள் விருப்பத்துடனும் மகிழ்ச்சியாகவும் படிக்க வேண்டும் என்பதற்காகத் தேர்வு முறை வேண்டாம் என நல்லதொரு வரவேற்கத்தக்க முடிவைப் பின்பற்றி வந்தார். தமிழ் வகுப்புகளில் கட்டாயம் தமிழில்தான் கதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பிள்ளைகள் இயல்பாக ஆங்கிலத்தில்தான் உரையாடத் துவங்கினர் ஒவ்வொரு முறையும். மீண்டும் மீண்டும் தமிழில் பேச நினைவூட்டினாலும் ஒன்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இது குறித்து பொறுப்பாசிரியருடன் இன்னும் அளவளாவிய போது பள்ளிகளில் முழுக்க ஆங்கிலம் என்பதால் வீடுகளிலும் அதுவே பெற்றோருடனான புழக்க மொழியாக மாறிவிட்டதாகக் கூறப்பட்டது. மேலும் பதிமூன்று பதினான்கு வயதுகளில் பாடத்திட்டத்தின் சுமை அதிகரித்து விடுவதால் விளையாட்டு, ஆடல், இசை… என நீளும் extra curricular activities பட்டியலில் இருந்து முதலில் அடி வாங்குவது தமிழ் வகுப்பு என்றும் ஆதங்கத்துடன் கூறினார். மேலும் இங்குள்ள பெற்றோர்கள் அனைவரின் ஒருமித்த குரலில் ஒலிக்கும் ஒரே வாக்கியம் – என் பிள்ளைக்குத் தமிழில் பேசத் தெரிஞ்சா, ஓரளவு எழுதப் படிக்கத் தெரிஞ்சாப் போதும். இதையே பெரிய விஷயமாகக் கருதி ஒரு தேக்க நிலையை எட்டி அங்கேயே நின்றுவிட்டார்கள் எனத் தோன்றிற்று. தமிழ் என்னும் தேன்கடலில் நமது இரு கைகளாலும் அள்ளிப் பருகினாலே இந்த வாழ்நாளில் எல்லா இலக்கியங்களையும் சுவைக்க இயலாது. இவர்களோ ஒரு துளியை விரல் நுனியில் தொட்டு அடிநாக்கில் இட்டுப் போதுமென்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். நம் ஊர்களில் தம் குழந்தைகளுக்கு இரண்டாம் மொழியாக இந்தியைத் தேர்வு செய்து தமிழைப் புறக்கணிக்கும் பெற்றோர்களுடன் இவர்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொஞ்சம் ஆறுதலடைந்து கொள்ளலாம். தொன்மையான தமிழ் மொழியில் இருக்கும் சங்க இலக்கியங்களைப் போல் வேறெந்த மொழியிலாவது காட்ட இயலுமா? நான் கேள்விப்பட்டவரை முதல் வகுப்பிலேயே திருக்குறள், ஆத்திசூடி மேல்நிலை வகுப்புகளில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி,…. என மாபெரும் காப்பியங்களைக் கற்றுக் கொடுக்க முடிகிற ஒரே மொழி தமிழ். உலக அரங்கில் ஈடு இணையற்றதாக விளங்கும் நமது பதினெண்கீழ்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐங்குறுங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள்…… என அனைத்தும் இவர்களைக் கழிவிரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவ்விலக்கியங்களின் இருப்பைப் பற்றியே தெரியாமல் தாம் வாழ்க்கையில் எத்துணை நற்பேற்றினை இழந்து கொண்டிருக்கிறோம் என்று கூட உணர வழியில்லாமல் வளரும் இக்குழந்தைகளின் மீது பரிதாபமே மேலிடுகிறது. அதிகபட்சமாக தொண்ணூறுகள் வரை கல்லூரிகளில் ஆங்கிலப் பேராசிரியர்கள் மில்டன், ஆஸ்கர் வைல்ட்,…. என ஆங்கிலக் கவிஞர்களைக் கரைத்துக் குடித்தவர்களாயிருப்பர். வகுப்புகளுக்கு வீசின கையும் வெறுங்கையுமாக வந்து அக்கவிதைகளை முறையான ஏற்ற இறக்கத்துடன் கூறி பொருளுடன் விளக்குவதைக் கேட்க அவ்வளவு ரசனையாக இருக்கும் என அப்பா கூறக் கேட்டிருக்கிறேன். தற்போது (இந்தியாவிலும்) ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரையும் கீட்ஸையும் படிக்காமலேயே ஒருவன் முனைவர் பட்டம் பெற்றுவிட முடிகிற அளவிற்குப் பாடதிட்டத்தை மேம்படுத்தி(!?) வைத்திருக்கிறார்கள். பெரும்பாலானோரால் உயர்வாகக் கருதப்படும் ஆங்கிலத்திற்கே இந்த கதி என்றால்… ? எல்லாமே வணிகக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்படுவதுதான் முக்கிய காரணம். இந்த இடத்தில் Dead Poets Society திரைப்படத்தில் வரும் அருமையான வரிகள் நினைவிற்கு வருகின்றன. We don’t read and write poetry because it’s cute. We read and write poetry because we are members of the human race. And the human race is filled with passion. And medicine, law, business, engineering, these are noble pursuits and necessary to sustain life. But poetry, beauty, romance, love, these are what we stay alive for. மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற ஊடகம் மட்டுமல்ல – மாபெரும் வரலாற்றையும் செழுமையும் வளமையும் நிறைந்த ஒரு பண்பாட்டையும் உள்ளடக்கியது. ஒரு குழந்தைக்கு நாம் தாய்மொழியை மறுக்கும்போது, அதுவும் சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியை மறுக்கும் போது ஒரு நீண்ட நெடிய பாரம்பரியத்தையும் வலுவான அடையாளத்தையும் மறுத்துக் கொண்டே வருகிறோம். போர்க்காலச் சூழலில் குடும்பம் சிதறடிக்கப்பட்டு வதைமுகாமில் அகதியாக அடைபட்டுத்தான் அடையாளத்தை இழக்க வேண்டும் என்பதில்லை. தாய்மொழியைச் சரியாகக் கற்காமல் கூட அடையாளத்தை இழக்கலாம். **************************** பள்ளி துவங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி ஆண்டு மலர் கொண்டு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சில திருக்குறள்களைப் பொருளோடு அச்சிட்டுக் கொடுக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. அனைத்து இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தும் பொருட்டு உவமை, உருவகம், அளபெடை, அணி உள்ளிட்ட கவிதைக் கூறுகள் தென்படும் ரசனையான சங்ககாலப் பாடல்கள் சிலவற்றை ஒவ்வொரு நூலிலும் இருந்து திரட்டி ஒன்றாகத் தொகுக்கலாம் என்ற எனது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்தப் பொறுப்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டது. அகமகிழ்வோடு ஏற்றுக் கொண்டேன். அப்பாவிடம் உதவி பெறும் துணிச்சல்தான், வேறென்ன? மனம் காலச்சக்கரத்தைக் கொஞ்சம் பின்னோக்கிச் சுழற்றியது. முதலில் எனக்குத் தெரிந்த பாடல்களையெல்லாம் நினைவுகூரத் துவங்கினேன். இவையும் அப்பாவிடம் கற்றவைதாம். கம்பராமாயணம் – “கண்டெனன் கற்பினுக் கணியைக் கண்களால்….” – அனுமன் சீதையைக் கண்டுவிட்டதாக இராமனிடம் தெரிவிக்கும் இடம். கம்பர் இப்பாடல் இயற்றிய விதத்தை வெகுவாகச் சிலாகிப்பார்கள் அப்பா. கதாகலட்சேபம் மற்றும் வில்லுப்பாட்டுக் கச்சேரிகளில் “கண்டேன் சீதையை” என்று கேட்டுப் பழக்கமாகியிருந்ததால் இதில் என்ன பெரிய வேறுபாடு என்று அப்பா விளக்கித்தான் புரிந்தது. “சீதையைக் கண்டேன்” எனக் கூறும்போது இரு சொற்களுக்கும் இடையில் “ஐயோ! சீதைக்கு எதுவும் நேர்ந்துவிட்டதோ” எனச் சட்டென இதயத்துடிப்பு அதிகரிக்குமாம். அதனால்தான் முக்கியச் சொல் முதலில் வருகிறது. ஆனால் வில்லுப்பாட்டில் கூட கண்ட செய்தி மட்டும்தான் இருக்கிறது. ‘அவள் எப்படி இருக்கிறாளோ?’ என்ற பதைபதைப்பை உணர வழியில்லாமல் அந்த ஒரு வரியிலேயே அவள் நலமுடன் இருக்கும் செய்தியையும் சேர்த்து வெளிப்படுத்தியிருப்பார் கம்பர். இப்படியெல்லாம் சொல்லித் தந்தால் இலக்கியம் ஏன் ரசிக்காது? கணிதப் பேராசிரியராகப் பணியாற்றியிருந்தாலும் அப்பாவினுள் உறைந்தே இருக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பேராசிரியரின் தரிசனமும் எங்களுக்கு அவ்வப்போது கிட்டும். அன்றிலிருந்து அப்பாவிடம் “95 கணக்கில்” என்றுதான் மதிப்பெண் கூறுவேன். இது போலவே “….புதல்வரால் பொலிந்தான் நுந்தை” என்னும் கம்பராமாயணப் பாடலில் இன்றும் காணப்படும் பேச்சுவழக்கு, “குரவர்பணி யன்றியுங் குலப்பிறப் பாட்டியோடு….” (சிலப்பதிகாரம்), “கருங்கொடிப் புருவ மேறா கயனொடுங் கண்ணு மாடா….” (சீவகசிந்தாமணி), “யாண்டு பல வாக…” என்னும் பிசிராந்தையார் பாடல், “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்…” என்ற திருமூலரின் வாக்கு, “நட்ட கல்லைத் தெய்வமென்று….” என்னும் சிவவாக்கியார் பாடல், அனிச்ச மலர் இடம்பெரும் திருக்குறள்கள், தும்மல் series என நாங்கள் பெயர் கொடுத்த திருக்குறள்கள் உள்ளிட்ட பல நினைவிற்கு வந்தன. இவையெதுவுமே முறையாக உட்கார்ந்து அப்பாவிடம் கற்றதல்ல. எப்போதேனும் எங்கள் பேசுபொருள் தொடர்பாக அப்பாவிற்கு ஞாபகம் வருவதை எடுத்துக் கூறுவார்கள். உதாரணமாக அம்மா மோர்க்குழம்பு செய்த ஒரு நாளில்தான் “முளிதயிர் பிசைந்த காந்தண் மென்விரல்….” என்ற குறுந்தொகைப் பாடல் அறியக் கிடைத்தது. இவ்வாறாக வயிற்றுக்கும் செவிக்கும் அன்று தீம்புளிப் பாகர் கிட்டியது. மகிழுந்தில் செல்லும் போதும் மிகச் சாதாரண உரையாடல்களின் போதும் அப்பா புகட்டியவைதாம் அனைத்தும். உட்கார்ந்து மெனக்கிடுதலைக் காட்டிலும் இப்படிப் போகிற போக்கில் சான்றோனாக்கும் தம் கடமையைச் செவ்வனே செய்து வருகிறார்கள் அப்பா. கற்றலுக்கு அதுதான் சிறந்த வழி என்பதே அப்பாவின் கருத்து. அப்பாவிற்கும் எனக்கும் இருக்கும் உணர்வுப்பூர்வமான பிணைப்பில் வினையூக்கியாக முக்கியப் பங்காற்றியது எங்கள் தாய்மொழி. இப்பிள்ளைகளுக்கு? மொழிக்கும் உணர்வுக்கும் சம்பந்தம் இல்லை என்பது பேதைகளுக்கான வாதம். எனில் அமெரிக்கர்களும் ஆங்கிலேயர்களும் பெற்றோருடன் இணக்கமாக இருந்திருப்பார்களே! எனவே தயாராகும் ஆண்டு மலரில் வரப்போகும் பாடல்களைச் சில பெற்றோரேனும் ரசித்து வாசித்துப் பிள்ளைகளுக்கும் சொல்லித் தருவார்கள் என்ற அவா வேகமாக என்னை முடுக்கியது. அவர்களில் சில குழந்தைகள் அடுத்த கட்டமாக இன்னும் தேடித்தேடி வாசிக்காமாட்டார்களா என்ற நைப்பாசையும் என்னை ஆட்கொண்டது. இவையனைத்தும் நடந்தே விட்டால்…? மனம் கற்பனைத் தேரில் ஏறியது. நாளை தமிழ் மொழியின் சிறப்பும், தமிழர்களின் நாகரிகமும் உலகின் முன்னோடியாக ஓங்கியுயர்ந்து நிற்கும் போது இக்குழந்தைகள் “ஆதி மொழிக்குச் சொந்தக்காரன் நான். எனது பாதங்கள் இங்கே இருந்தாலும் எனது வேர்கள் கீழடியிலும் ஆதிச்சநல்லூரிலும் ஊன்றப்பட்டவை” எனப் பெருமையாக, மிடுக்காகக் கூறும் நாள் வராமலா போய்விடும்? தமிழ் வகுப்புகளும் ஆலோசனைக் கூட்டமும் முடிந்தன. மிகுந்த நம்பிக்கையுடன் வெளியே வந்தேன். எனது வலதுபுறத்தில் இருந்து ஒரு நடுத்தர வயதுக்காரரின் குரல், “So? How was your Tamil class today?”. தேர்க்கால் ஒடிந்து நான் தொப்பென்று கீழே விழுந்தாற்போல இருந்தது. திரும்பிப் பார்த்து அக்குரலுக்கு முகம் கொடுக்க விரும்பாமல் விடுவிடுவென வேகமாக வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். “இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!” – பாரதி சத்தமாக என் காதுகளில் ஒலிக்கத் துவங்கி “சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்னும் வரிகளில் முடித்தான். தமிழுக்குக் கொண்டு வந்து சேர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். இருப்பதைக் கொண்டு சென்று போகும் இடத்தின் நீரோட்டத்தில் கலந்து கரைத்து மொத்தமாகத் தொலைத்தல் தொழிலைச் செய்யாமலிருப்பதே தமிழுக்கு ஆற்றும் ஆகப் பெரிய நன்றி. மெல்லத் தமிழினிச் சாவதையும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்குவதையும் தடுக்கும் இத்தமிழ்ப் பள்ளிகளின் அரும்பணியும் முயற்சியும் நிச்சயம் பாராட்டுக்குரியன.
-
மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை
உயிருடன் இருக்கும்போது, "நான் செத்த பின்னர்" என்று ஒரு மனிதன் தானே யோசிப்பதோ, பேசுவதோ, எழுதுவதோ போற்றுதலுக்குரியது அல்லது ரசனைக்குரியதாக இருக்கலாம். உதாரணமாக மருத்துவக் கல்லூரிக்குத் தனது இறப்புக்குப் பின் உடலைத் தானம் செய்வதாக எழுதி வைப்பது போற்றுதலுக்குரியது. ஒரு மராட்டியத் திரைப்படத்தில் சற்று வயதான ஒரு பெண்மணி தமது இறப்புக்குப் பின் வீட்டில் மாட்டி வைக்க வேண்டிய தமது சிறந்த ஃபோட்டோவுக்காக மெனக்கிடுவது ரசிக்கும்படி இருக்கும். ஒரு நபர் தம் மரணம் பற்றி நகைச்சுவை கலந்து இடும் பின்வரும் பதிவும் ரசிக்கலாம் : ஆனால் "அவர் செத்த பின்னர்" என்று இன்னொருவர் பேசுவது சற்று வேடிக்கைதான். ஒரு வேளை மகிந்த ராஜபக்ச தம் உள்ளக் கிடக்கையை இன்னொருவர் மூலம் வெளிப்படுத்துகிறாரோ !
-
சமூகப் போராளி - சுப.சோமசுந்தரம்
சமூகப் போராளி சுப.உதயகுமாரன் - சுப.சோமசுந்தரம் "அணுசக்தியற்ற எதிர்காலம்" எனும் தலைப்பில் உலக அளவில் 1998 லிருந்து விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் மூன்று பிரிவுகளில் இவ்விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அணுசக்தி எதிர்ப்புப் போராட்டம், அணு சக்தியினால் ஏற்படும் அழிவுகள் பற்றிய அறிவினைப் பரப்புதல், அணுசக்திக்கு எதிரான தீர்வு எனும் பிரிவுகளே அவை. இவ்விருதுகள் ஜெர்மானியப் பத்திரிக்கையாளரும் திரைப்பட இயக்குனரும் சமூகப் போராளியுமான Claus Biegart ஆல் நிறுவப்பட்டன. நாம் குறிப்பிட்ட முதற்பிரிவில் 2025 க்கான விருதினைப் பெறுபவர் அணுசக்திக்கு எதிரான மகத்தான இந்தியப் போராளி சுப. உதயகுமாரன் ஆவார். ஐநாவின் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மூன்றாவது அமர்வினையொட்டி மார்ச் 4 ஆம் தேதி நியூயார்க்கில் இவ்விருது வழங்கப்படவுள்ளது. இப்பதிவில் தலைவர்/தோழர் சுப. உதயகுமாரன் அவர்களின் படத்துடன் முதல்வர் ஸ்டாலினின் படத்தையும் கொண்டு வந்ததன் காரணமென்ன ? (படம் கட்டுரையின் கீழேயுள்ள முகநூல் இணைப்பில் உள்ளது). அதைச் சொல்லுமுன் என் அரசியல் நிலைபாட்டைச் சொல்வது அவசியமாகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர் இல்லையென்றாலும், கருப்புச் சட்டை அல்லது சிவப்புச் சட்டையை எடுத்து அணியும்போது உள்ளத்தில் பெருமிதம் மட்டுமல்ல, கர்வமே கொள்பவன் நான். வலதுசாரி இந்துத்துவப் பார்ப்பனிய அரசியல் இந்நாட்டில் முற்றிலுமாக ஒழித்துக் கட்டப்பட வேண்டிய ஒன்று என்று ஆணித்தரமாக நம்புகிறவன் நான். ஏனிந்தப் பீடிகை ? இப்பதிவில் சில இடதுசாரி, திராவிட அரசியல் கட்சிகளை நான் விமர்சித்தால், அதனை ஏதோ பாசிச சங்கிகளின் குரைத்தலுடன் ஒப்பீட்டு அளவில் கூடப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளவே ! சரி, இப்போது நாம் கையிலெடுத்த பொருளுக்கு வருவோம். முதல்வர் படத்தைப் போட்டது அவரிடம் பின்வரும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவே : ஐயா ! விளையாட்டு, இலக்கியம் முதலிய எந்தத் துறையிலும் உலக அளவில் சாதித்தவர்களைப் பாராட்ட தாங்கள் தவறுவதில்லை. இப்போது அணு உலைக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காக உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார் தோழர் சுப.உதயகுமாரன். அவரை மனம் திறந்து பாராட்டி விடுங்களேன். இந்த ஜனநாயக அரசியலில் அந்தப் பாராட்டுதலுக்குத் தடை விதிக்கும் எந்த ஒரு வெங்காயத்தையும் தூக்கி எறியுங்களேன். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நிறுவிய பள்ளியில்தானே உங்களைப் போன்றோரும் என்னைப் போன்றோரும் அரசியல் பாடம் படித்தோம் ! அதிலும் குறிப்பாக நீங்கள் எனக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழும் மூத்த மாணவர் என்பதை நாங்கள் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. மற்ற துறைகளில் சாதித்தவர்களுக்குப் பாராட்டுதலோடு பொற்கிழியும் தருவீர்கள். ஆனால் போராளிகள் பணத்தைத் தம் பையை நிரப்ப ஏற்பதில்லை. உலகின் தலைசிறந்த போராளிகளில் ஒருவரான சுப.உதயகுமாரன் அவர்களை மிக அருகில் பார்க்கும் பெரும்பேறு வாய்க்கப் பெற்றவர்கள் நானும் என்னைப் போன்றோரும். உங்களுக்குக் கூட அந்த வாய்ப்பு அமையவில்லை முதல்வரே ! ஏதோ ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி எப்போதோ சின்னா பின்னமாயிருக்கக் கூடிய போராட்டத்தை இறுதிவரை (சுமார் இரண்டரை ஆண்டுகள்) அமைதியாகக் கொண்டு சென்று அந்த மக்களைத் தம் அன்பினால் கட்டிப்போட்டவர் தோழர் உதயகுமாரன். அவர் மீதும் அவருடன் நின்ற போராளிகள் மீதும் ஏதோ தீவிரவாதிகள் மீது போடுவதைப் போல வழக்குகள் போடப்பட்டன. அவை அனைத்தும் பொய் வழக்குகள் என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் பதவியேற்ற பின் பல வழக்குகள் திரும்பப் பெறப்பட்டாலும், இன்னும் சில நிலுவையில் உள்ளன என்பது உங்கள் கவனத்திற்கு மீண்டும் மீண்டும் கொண்டுவரப்பட்டன. அத்தனை வழக்குகளையும் திரும்பப் பெறுவதையே சுப.உதயகுமாரனின் உலக அங்கீகாரத்திற்கான வெகுமதியாகத் தாருங்கள் முதல்வரே ! அவருக்கான அங்கீகாரம் என்பது அவருடன் நின்ற ஒட்டுமொத்தப் போராளிகளுக்குமான அங்கீகாரமாகக் கொள்ள வேண்டும். அவருடன் தோளோடு தோள் நின்ற புஷ்பராயன் மற்றும் பாதிரியார் மை.பா.ஜேசுராஜ் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள். சாமானியர்களின் பார்வையில் அவர்கள் தற்காலிகமாகப் பின்னடவைச் சந்தித்திருக்கலாம். வென்றால்தான் போராட்டம் என்றில்லை. மேலும், போராட்டங்கள் தோற்பதில்லை; எனவே போராளிகளும் தோற்பதில்லை. இந்த விண்ணப்பத்தை அடியேன் குடிமக்களில் ஒருவனாகவே உங்களிடம் வைக்கிறேன். மற்றபடி அவர்களின் சார்பாகக் கேட்க நான் தகுதியற்றவன். போராளிகள் இம்மாதிரியான இறைஞ்சுதலை விரும்புவார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஏனெனில் போராளிக்கான மெய்ப்பொருளில் நான் போராளி இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு போராட்டத்தின் அனுதாபியாக இருப்பதாலோ பாதிக்கப்பட்ட போராளிகளுக்காகக் கண்ணீர் வடிப்பதாலோ ஒருவன் போராளியாக முடியாது. அதற்கான தகுதி பெரிதினும் பெரிது. போராட்டமே வாழ்க்கையாக அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட, அவர்தம் (தனிப்பட்ட) வாழ்க்கையே போராட்டமாக மாறிவிடாமல் காத்து நிற்பது ஒரு நல்லரசின் கடமை. எங்களுக்காக மட்டுமல்லாமல் உங்களுக்கும் சேர்த்துதான் களத்தில் நின்றார்கள். இப்போது அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை உண்டு. அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். திரை கடலோடி திரவியம் தேடாவிட்டாலும் தமது மற்றும் தம் குடும்பத்தாரின் வயிற்றுப்பாட்டையாவது கவனிக்க வேண்டும். ஆவன செய்க ! திராவிட இயக்கத்தாரின் பிரதிநிதியான முதல்வரிடம் முறையிட்டாயிற்று. இனி போகிற போக்கில் CPI, CPI(M) ஆகிய இடதுசாரிக் கட்சியினரிடம் : தோழர்களே ! நீங்களும் விருது பெறும் சுப.உதயகுமாரனைப் பாராட்டலாம். ஜெய்தாப்பூரின் பிரஞ்சு அணு உலைதான் மக்களைக் கொல்லும் என்றில்லை; கூடங்குளத்தின் ரஷ்ய உலையும் மக்களைக் கொல்லும். சேகுவேராவை, பெரியாரைக் காலம் கடந்து ஏற்றது போல் சுப.உதயகுமாரனையும் காலம் கடந்துதான் ஏற்பீர்களா, என்ன ? "நாங்கள் ஏன் ஏற்க வேண்டும் ?" என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதில், "உதயகுமாரனும் அவரோடு நின்ற போராளிகளும் உங்கள் கட்சியினராக இல்லையென்றாலும் அவர்களும் இடதுசாரிகளே !" திராவிட இயக்க அரசியல் மற்றும் இடதுசாரி அரசியலில் உள்ளவர்கள்தாம் கண்ணுக்குத் தெரிகின்றனரா ? ஆமாம். மற்றவர்கள் பேசத்தக்க ஆட்களாக நம் கண்ணுக்குத் தெரியவில்லை என்பது மட்டுமல்ல, அந்த மற்றவர்கள் கண்ணற்றவர்கள் என்பதுவும் நம் எண்ணம். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இந்த இரண்டில் எந்தவொன்றிலும் இல்லாதோரிடம் என்ன இழவு அரசியலைப் பேசுவது ? https://www.facebook.com/share/p/1BNdYMdbb8/
-
கற்பனை இனிதே ! - சுப.சோமசுந்தரம்
மெய்யில் மெய்யடியல்ல. கையில் பொய்யடிதான்.
-
கற்பனை இனிதே ! - சுப.சோமசுந்தரம்
கற்பனை இனிதே ! - சுப.சோமசுந்தரம் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள ஒளிப்படக்காட்சி ஒரு பாமரனாக என் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. திரைப்படத்தில் ஒரு கதாநாயகன் தனிமனிதனாகத் தீயவர்களை அடிக்கும்போது பெரும்பாலானோர்க்கு (என்னையும் சேர்த்து) ஏற்படும் மனநிலை. நடைமுறை சாத்தியம் பற்றி மனம் சிந்திப்பதில்லை. The triumph of the good over the evil. தீமையின் மீது நன்மையின் வெற்றி. நம்மால் இயலாததை யாரோ நிகழ்த்தும் போது ஏற்படும் மகிழ்ச்சி. தன்னேரில்லாத் தலைவனைக் கொள்வது காவிய இலக்கணத்துள் ஒன்றாய் அமைந்தது இந்த அடிப்படையில்தான். இது ஒரு உளவியல். தமிழ்த் திரையுலகில் இந்த உளவியல் அடிப்படையில் முதன்முதலில் பெரிய வெற்றியைக் கண்டவர் மக்கள் திலகம் எம.ஜி.ஆர். நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இது ஏற்புடைத்தே ! https://www.facebook.com/share/r/1Co9gLaXdp/
-
என் எழுத்து - சுப.சோமசுந்தரம்
என் எழுத்து - சுப.சோமசுந்தரம் தம் எழுத்துக்கென்று ஒரு பாணி, தம் மேடைப் பேச்சுக்கென்று ஒரு பாணி என்பதெல்லாம் எழுத்திலும் பேச்சிலும் துறைபோகியோருக்கு மட்டுமே அமைய வேண்டுமா ? நம்மைப் போன்ற சாமானியர்க்கு அந்த உரிமை இல்லையா, என்ன ! என் பேச்சு (மேடைப் பேச்சு) பற்றி என்னைச் சார்ந்தோர் கருத்தை சமீபத்தில் யாழின் சமூகவலை உலகத்தில் பதிவு செய்தேன். என் எழுத்து பற்றி எனக்கே கருத்து இருப்பினும், என் நண்பர் ஒருவர் அனுப்பியதை இங்கே பதிவு செய்ய விழைவு. அதில் அவர் தம் கருத்தினைச் சொல்லவும் இல்லை; சொல்லாமலும் இல்லை. எனக்குப் புதிதாக அறிமுகமான நண்பர் X எனது அரதப் பழசான (!) நண்பர் Y யிடம் எனது எழுத்து எப்படியிருக்கும் என்று கேட்க, "இப்படிதான் இருக்கும்" என்று நண்பர் Y அவருக்கு அனுப்பிவிட்டு எனக்கும் அனுப்பி வைத்தார். அது 'எனது நாத்திகம்' என்ற தலைப்பில் நான் முன்னர் எழுதிய கட்டுரையின் தொடக்கம் : ‘கடவுள் உண்டா இல்லையா ?’ என்ற அரதப் பழசான விவாதத்தை ஆரம்பித்து, வாசிப்போரின் கழுத்தில் நரம்பு புடைக்க வைப்பது சாமி சத்தியமாக(!) இவ்வெழுத்தின் நோக்கமல்ல. “உண்டென்பார்க்கு உண்டு, இல்லையென்பார்க்கு இல்லை” என்று ஏனையோரிடம் உரக்கச் சொல்லிவிட்டு, “ஆனால் எனக்குத் தெரியும் இல்லையென்று” என எனக்குள் சொல்லி ‘கடவுளைக்’ கடந்து செல்பவன் நான். (ஆகையால் அது ‘கட உள்’ தானோ?)
-
குறையே நிறையோ ! - சுப.சோமசுந்தரம்
குறையே நிறையோ ! - சுப.சோமசுந்தரம் எழுத்துப் பழக்கம் ஏற்படும் முன்பே அடியேனுக்கு மேடைப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. எழுத்திற்காக எனக்குக் கொம்பு சீவி விட்டவள் என் மகள் சோம.அழகு என்றால், மேடை நோக்கி என்னை ஏவி விட்டவர்கள் எனது MUTA தொழிற்சங்கத் தோழர்கள். எனது எழுத்திற்கு நானே வாசகனாய் மனநிறைவு கொள்வதுண்டு. மேடையைப் பொறுத்தவரை பெரும்பான்மை மேடைப் பேச்சாளர்களின் வரையறையில் நான் நிற்பதில்லை என்பதே என்னைப் பற்றிய எனது கணிப்பு (அவர்கள் அப்படி ஏதோ வரையறை வைத்திருக்கிறார்கள் என்பது எனது கற்பனையாகவும் இருக்கலாம்). மேடையின் கீழே நின்றுகொண்டு நான்கைந்து பேர் கொண்ட நண்பர் குழாமில் எப்படிப் பேசுவேனோ அப்படித்தான் மேடையிலும் எனக்கு வருகிறது. பேசும்போதே யோசித்துக் கொண்டு, சொல்ல வந்தது பாதி வாக்கியத்திலேயே தெளிவானால் அடுத்த வாக்கியத்திற்குத் தாவி விடுவது, பேச்சில் முன்னும் பின்னும் செல்வது இவையெல்லாம் நீங்களும் நானும் அன்றாட உரையாடலில் அவை பற்றிய உணர்வே இல்லாமல் நடைமுறைப் படுத்துவது. மேடையிலும் இது அனிச்சைச் செயலாக வருவதே என் மேடைப் பேச்சு. இது குறையா நிறையா என்று நான் ஆய்வு செய்யும் முன்பே, அந்த என் பேச்சு இயல்பாக இருப்பதாக எனது நட்பு வட்டம் எனக்கு முறுக்கேற்றி விட்டது. அதனால்தானே அது நட்பு வட்டம் ! குறிப்பாக என் குருநாதர் பேரா.தொ.பரமசிவன் அவர்கள் அந்த என் பாணியை மாற்ற முயல வேண்டாம் என அறிவுரைத்து, அது மேடையில் வேறாகத் தெரிவதே ரசனைக்குரியது என்று குறித்தது நான் எதிர்பாராத ஒன்று. மாற்ற முயன்றாலும் என்னால் இயலுமா என்பது வேறு. என்னுள் ஏற்பட்ட இந்த சிந்தனையை உங்கள் முன் சிதறி விட்டேன். எடுத்துக்காட்டாக எனது சமீபத்திய சிற்றுரைகளுக்கான இணைப்புகளைக் கீழே தந்துள்ளேன். ஒன்று, நண்பரின் புத்தக வெளியீட்டில்; மற்றொன்று, ஜமாஅத்துல் உலமா சபையினர் நடத்திய சமய நல்லிணக்க மாநாட்டில். புதிதாக மேடையேற நினைக்கும் இளையோருக்கு, அவர்கள் எடுக்கவும் விடுக்கவும் இங்கு சில விடயங்கள் அமையலாம். (1) (2) https://drive.google.com/file/d/1VezZulqg8lUh9rqkM8XRPDGUA92w2cqk/view?usp=drivesdk இக்காணொளிகள் எனது சமீபத்திய கட்டுரைகளிலும் இணைக்கப்பட்டுள்ளன. வாசிக்க நேரமில்லாதோர் கேட்கலாம்.
-
நல்லிணக்கம் - சுப.சோமசுந்தரம்
எல்லா இடங்களிலும் கணித ஆசிரியர்தாம் இலக்கியமும் அறமும் பேசுவார் போல ! குறிப்பாக 'உயர்தர கணித ஆசிரியர்' என்று நீங்கள் குறித்ததால், கணிதமும் நன்கு சொல்லித் தந்திருப்பார்.😀 நான் ஒரு கணித ஆசிரியர் என்பதால், மேலே குறித்தவை நீங்கள் ஒரு புன்னகையுடன் கடந்து செல்லவே ! (I request you to take my remarks regarding mathematics in a lighter vein). மற்றபடி நல்லவை பேசும் நல்லாசிரியர் என்பவர் எந்தத் துறை சார்ந்தும் அமையலாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனக்கும் தெளிவாகக் கணிதமும், அறமும், இலக்கியமும் சொல்லித் தந்த என் குருநாதர் ஒரு கணிதப் பேராசிரியர் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு. இவ்வளவு சொன்ன நான் இன்னொரு தற்செயல் நிகழ்வையும் சொல்கிறேன். அந்த என் குருநாதர் 1950 களில் தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் சிறிது காலம் கொழும்புவில் தற்காலிகப் பணியில் இருந்தவர். ஆரம்பக் கல்வியில் எனக்கு சிறப்பாக ஆங்கிலம் சொல்லித் தந்த ஆசிரியை கொழும்புவில் பணி செய்து வந்தவரே ! (அதற்காக எனது ஆங்கிலம் எவ்வளவு சிறந்தது என்று தயவுசெய்து சோதித்துப் பார்க்க வேண்டாம்).
-
நல்லிணக்கம் - சுப.சோமசுந்தரம்
நல்லிணக்கம் - சுப.சோமசுந்தரம் சென்ற ஞாயிறன்று (17-11-2024) பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஜமாத்துல் உலமா சபையினர் நடத்திய சமய நல்லிணக்க மாநாட்டில் ஆசிரியர்களுக்கான அமர்வில் பேசும் நல்வாய்ப்பு அமைந்தது. (வழக்கம் போல்) மதிய உணவு வேளை நெருங்கும் பொழுது எனக்குக் கிடைத்த வாய்ப்பை இயன்றவரை சுருக்கமாகப் பயன்படுத்திக் கொண்டேன். பொதுவாக தமிழ்நாட்டில், குறிப்பாக கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் வாழும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சமய நல்லிணக்கம் என்பது தொன்று தொட்டே வரமாக அமைந்த ஒன்று. எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு உராய்வுகள் நிகழ்ந்திருக்கலாம். அவை உடனே சரி செய்யப்பட்டிருக்கும். எனினும் முன் எப்போதும் இல்லாத அளவு சிறிது காலமாகச் சில சமூக விரோத அமைப்புகள் தங்கள் சிறுமதியினால் தமிழ் மண்ணில் கூட சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயற்சி செய்து தோற்கின்றனர். அவர்களை எப்போதும் தோற்கடிக்க ஆசிரியர் பெருமக்களான நமது பங்களிப்பு இக்காலத்தில் மிகவும் அவசியமாகிறது. சமய நல்லிணக்கத்தைப் பெருமையுடன் பறைசாற்றும் நாம் வெட்கித் தலைகுனியும் இடமும் உண்டென்றால், அது சாதியம். சாதிய அடையாளம் நமக்கான அவமானம் என்பதை மாணாக்கர் மனதில் இளமையிலேயே பசுமரத்தாணி போல் பதிய வைப்பது நம் முன் இருக்கும் தலையாய கடமை. எங்கள் இளமைக் காலத்திலும் சாதி இல்லாமல் இல்லை. ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற தலைவர்கள்தம் சீரிய பணியால் சாதியம் சிறிது சிறிதாக மழுங்கி வந்த காலம் அது. எப்படியோ சாதி வெறி மீண்டும் தலை தூக்குவது இன்றைய சமூக அவலம். எங்களுடன் படித்த நண்பர்கள் இன்ன சாதியர் என்று பெரும்பாலும் நாங்கள் அறிந்திருக்கவில்லை. இன்றோ மாணவர்கள் தங்களுக்குள் மட்டுமல்லாமல், தங்கள் ஆசிரியர்களும் இன்னின்ன சாதியினர் என்று ஆவலுற்று அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது ஆசிரியர்கள் வெற்றி பெற்ற இடத்தில் ஆசிரியர்களாகிய நாம் தோற்றுப் போனதையே இது காட்டுகிறது. மீண்டும் பழைய வெற்றியை நிலை நாட்டுவது நம் பொறுப்பாகிறது. சாதி எனும் தளத்தில் அவர்கள் கொண்டாடும் வேற்றுமை சிறிது சிறிதாக மதம் எனும் தளத்திலும் பரவும் அபாயம் உண்டு. பெரியார் சமயத்தைப் புறந்தள்ளியது கூட, அது சாதியத்திற்கு இட்டுச் செல்கிறது என்பதாலேயே ! எனவே சாதி ஒழிப்புடன் சமய நல்லிணக்கம் பேசுவதும் தவிர்க்க முடியாததே ! ஒன்று, உற்ற பிணிக்கு மருந்து; மற்றொன்று, வருமுன் காப்பது. எங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருவர் சொல்வது உண்டு - "மாணாக்கர்க்கு உங்கள் பாடங்களைச் சொல்லித் தருவதுடன் சமூகத்திற்குத் தேவையான நல்ல கருத்துகளையும் அவ்வப்போது சொல்லுங்கள். ஏனெனில் இப்போதெல்லாம் நாம் நல்லொழுக்க வகுப்பு என்று தனியாக நடத்துவதில்லை" என்று. எனவே மாணவர் சமூகத்திற்கு சொல்லித் தருவோம் : "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற திருமந்திரத்தை ; அதே பொருளில், "அவரே ஏக இறைவன்" என அறிவிக்கும் அவ்வல் கலிமாவை ; கலிமா என்பது இஸ்லாமியரின் ஐந்து கடமைகளில் தலையாயது என்பதை. இஸ்லாமியரின் மற்றொரு கடமையான (ரமலான்) நோன்பில், நோன்பு திறக்கும் போது மார்க்க பேதமின்றி, ஏழை-செல்வந்தர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் விருந்துக்கு அழைக்கும் இஸ்லாத்தை எடுத்துரைப்போம். அதே சமநிலைக் கண்ணோட்டத்தில், "ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்" எனப் போதிக்கும் திருமூலரைக் காட்டுவோம். ரோமன் கத்தோலிக்கரின் மானிட சமத்துவத்திற்கு அவர்கள் உருவாக்கிய என்னைப் போன்ற மாணவர்களே சான்று. அங்கு பயிலும் காலத்தில், "நான் இந்து; அவன் கிறித்தவன்" என்று ஒருபோதும் நாங்கள் உணர்ந்ததில்லை. புரொட்டஸ்டன்ட் கிறித்துவரின் சமய ஒற்றுமை உணர்விற்கு அந்த நூற்றாண்டு மண்டபத்தின் எதிரே அமைந்த கல்லறையில் உறங்கும் இரேனியஸ் அடிகளே சாட்சி. தாம் ஆரம்பித்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சாதி பேதமின்றி, மதப் பாகுபாடின்றி அனைத்து மாணாக்கரும் ஓரிடத்தில் அமர்ந்து பயில வேண்டும், உண்ண வேண்டும் என்பதில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உறுதியாக நின்று சமத்துவப் புரட்சி செய்தவர் இரேனியஸ் அடிகள். சமூக நல்லிணக்கத்தை அவரவர் சமயங்களே வலியுறுத்துகின்றன என்பதை ஆசிரியராகிய நாம் மாணவர் சமுதாயம் விளங்கச் செய்வோம். மீண்டும் வெல்வோம். ஆசிரியர் வென்றால்தான் சமூகம் வெல்லும்; அவர் தோற்றால் சமூகம் தோற்றுப் போகும். பின்வரும் முகநூல் இணைப்பில் இக்கட்டுரையோடு நான் பேசிய ஒளிப்பதிவையும் இணைத்துள்ளேன் : https://www.facebook.com/share/p/1AXBekspxj/
-
உரிமைக் குரல் - சுப.சோமசுந்தரம்
உரிமைக் குரல் - சுப.சோமசுந்தரம் சுமார் ஓராண்டுக்கு முன்பு நியூசிலாந்து நாட்டில் மிகக் குறைந்த வயதில் (21) பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றபோது ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் என்ற தொல் பழங்குடி இன சமூகச் செயற்பாட்டாளர் தமது இனத்தின் போர் முழக்கமான ஹக்கா எனும் மரபுப் பாடலொன்றுடன் தமது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அது உலகம் முழுவதும் வைரல் ஆனது. அது குறித்து எனது அப்போதைய முகநூற் பதிவின் இணைப்பு : https://www.facebook.com/share/p/14bJyTCimP/ 1840 ல் நியூசிலாந்து பிரிட்டனின் ஆதிக்கத்தில் வந்தபோது பிரிட்டிஷ் அரசுக்கும் நியூசிலாந்தின் மவுரி பழங்குடி இன மக்களுக்கும் இடையே 'வைதாங்கி ஒப்பந்தம் (Treaty of Waitangi)' கையெழுத்தானது. அதன்படி சில சிறப்புச் சலுகைகளும் உரிமைகளும் மவுரி இன மக்களுக்கு வழங்கப்பட்டன. நியூசிலாந்து 1986 ல் முழுமையாக விடுதலை பெற்ற பின்னரும் நியூசிலாந்தின் அரசியலமைப்புச் சட்டத்தில் வைதாங்கி ஒப்பந்தம் பின்பற்றப்பட்டது. ஆனால் தற்போது அந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் மசோதாவை அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இம்மாற்றத்தால் மவுரி இன மக்களின் சில உரிமைகள் பறி போகும் என்பது வெளிப்படை. சமத்துவ நோக்கில் அம்மாற்றம் கொண்டு வரப்படுவதாக நியூசிலாந்து அரசு அறிவிப்பது வேடிக்கையும் வேதனையும். நியூசிலாந்தின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதமான மவுரி இன மக்களிடமிருந்து அம்மசோதாவிற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பு பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் அந்த மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்து அவர்களது போர் முழக்கமான ஹக்கா பாடலைப் பாடி அறச்சீற்றத்துடன் அப்பாடலுக்கான நடனத்தை மேற்கொண்டார். பிற மவுரி இன உறுப்பினர்களும் அந்த ஆவேச ஆடல் பாடலில் கலந்து கொள்ள, பாராளுமன்றம் அமளிதுமளியானது. மீண்டும் இந்நிகழ்வு உலகம் முழுவதும் வைரல் ஆனது. இத்தகைய நிகழ்வுகள் நம் தாய்த் திருநாட்டில் அதிகமாகவே நடைபெறுவன. நமது நாட்டின் காட்சித் திரை நம் மனக்கண்ணில் விரிவது தவிர்க்க இயலாத ஒன்று. குஜராத்தில் மதச்சிறுபான்மையினர் மீது சொல்லில் விவரிக்க இயலாத வன்முறை கட்டவிழ்த்து விடப்படும்போதும் அதன் மீது நீண்ட காலம் விசாரணை நடைபெறும்போதும் அதுபற்றி வாயே திறக்காத குடியரசுத் தலைவரான A.P.J அப்துல் கலாம் உங்கள் நினைவுக்கு வரலாம். மணிப்பூர் பற்றியெரியும் போது அது பற்றிக் கள்ள மௌனம் சாதிக்கும் பிரதமரை ஓரளவு புரிந்து கொள்ளலாம்; பற்றியெரிந்த/பற்ற வைக்கப்பட்ட குஜராத்தின் அன்றைய முதல்வரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ? ஆனால் மணிப்பூர் கலவரத்தில் பெரும்பாலும் சிறுபான்மையினரான பழங்குடி குக்கி இன மக்களே பாதிப்புக்கு உள்ளாகும்போது, பழங்குடி இனத்தவரான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாதிக்கும் மௌனத்தை எந்த வகையில் சேர்ப்பீர்கள் ? உலகளவில் பேசப்படும் நியூசிலாந்தின் ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் பற்றியெல்லாம் திரௌபதி முர்முவுக்குத் தெரியுமா ? தன்மானம் காக்கத் தலைவிரி கோலமான மகாபாரதத் திரௌபதியின் கதையாவது தெரியுமா ? குலத்தொழிலுக்கு இட்டுச் செல்லும் விஸ்வகர்மா யோஜனாவை ஆதரிக்கும் எல்.முருகன் போன்றோர் தம் சந்ததியினரைக் குலத்தொழிலுக்குத் தயார் செய்து விட்டார்களா ? மேற்கண்ட காட்சித் திரை உங்கள் மனக்கண்ணில் விரிந்தால், உங்கள் பெற்றோர், ஆசிரியர், தோழர்கள் உங்களைச் சரியாக வளர்த்திருக்கிறார்கள் என்று பொருள். நியூசிலாந்தின் வைதாங்கி ஒப்பந்தமானது, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் அக்டோபர் 1947 ல் மகாராஜா ஹரி சிங் - மவுண்ட்பேட்டன் பிரபு இடையில் ஏற்பட்ட நிலையான ஒப்பந்தத்தை உங்களுக்கு நினைவுபடுத்தினால் நீங்கள் நல்ல தலைவர்களால் வழிநடத்தப் பட்டுள்ளீர்கள் என்று பொருள். இனி உலகெங்கும் ஒலிக்கும் நியூசிலாந்து ஹனாவின் போர் முழக்கம் - உரிமைக்குரல் : https://www.facebook.com/share/p/189yZuZxQp/
-
நூல் அறிமுகம் - சுப.சோமசுந்தரம்
நூல் அறிமுகம் : கி.இளம்பிறை அவர்களின் 'வழித்துணை நினைவுகள்' - சுப.சோமசுந்தரம் 03-11-2024 அன்று எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் பாசத்திற்குரிய திருமதி கி.இளம்பிறை என்ற பிரபா அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நெல்லை தியாகராஜநகரில் அமைந்திருக்கும் மின் ஊழியர் சிஐடியு சங்கக் கட்டிடத்தில் இனிதே நடைபெற்றது. 'வழித்துணை நினைவுகள்' மற்றும் 'திருவாசகம் - ஒரு தேடல்' என்பன அந்நூல்கள். இவற்றுள் 'வழித்துணை நினைவுகள்' எனும் கவிதை நூல் மீது பேசுமாறு இளம்பிறை அம்மா அவர்கள் முன்னரே எனக்கு அன்புக் கட்டளையிட்டிருந்தார்கள். புத்தகத்தை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியும் தந்திருந்தார்கள். நான் பேசியது நன்றாக அமைந்ததாக விழாவிற்கு வருகை தந்த நண்பர்கள் பாராட்டியதோடு, வர இயலாத நண்பர் ஒருவர் முகநூலில் எழுதிடுமாறு கூறினார். அவர் முகநூல் நண்பர் மட்டுமல்லாது எனது முகநூல் பதிவுகளைத் தவறாமல் வாசித்துப் பின்னூட்டம் அளிப்பவர்; அன்ன மாட்சியர்தாமே முகநூலில் நம்மை உயிரோட்டமாய் வைத்திருப்போர் ! உடனே எழுதினால்தான் நான் மனதளவில் தயாரிப்புடன் பேசியவை கோர்வையாய் வந்து விழும் எனும் முனைப்புடன் இறங்கினேன். ஒரு கவிதை நூலை அறிமுகம் செய்வதில் எனது முதல் அனுபவம் என்பதாலும் உடனே பதிவிட விழைந்தேன். பேச நினைத்து அங்கே பேசாமல் விட்டதையும் இங்கு எழுத்தில் சேர்க்கும் உரிமை எனக்கானது. எனவே நூலுக்கு எழுத்து வடிவில் ஓர் அறிமுகமாய் இதனைக் கொள்ளலாம். இதனை எழுதும் எனக்கு மரபிலக்கியங்களின் (Classic literature) மீது தனித்த ஈர்ப்பு உண்டு. எனவே எந்தவொரு புதுக்கவிதையினை வாசிக்கும் போதும் எனக்குத் தெரிந்த மரபுவழிப் பாடல்களின் தாக்கம் ஏதும் தென்படுமானால் அதனை மகிழ்வோடு குறிக்கத் தவறுவதில்லை. அது அப்புதுக்கவிதையினை இயற்றிய கவிஞரின் முன்னோர் மொழி பொன்னே போல் போற்றும் திறமாக இருக்கலாம்; அல்லது கவிஞரே கவனிக்கத் தவறிய உவப்பான தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். மரபு வழிப் பாடல்களில் எத்துணையோ சிறப்புகள் இருப்பினும் அவற்றிற்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு புதுக்கவிதையில் உண்டு. வாசகர் ஒவ்வொருவரும் தமக்கே உரிய கண்ணோட்டத்துடன் விளக்கம் தரலாம் - ஒரு புத்தியல் ஓவியத்திற்கு (Modern art) ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் தருவதைப் போல. அப்புதுக்கவிதை எனும் வானூர்தியில் ஏறி கவிஞரே காணாத உலகையும் வாசகன் காணலாம். மரபு இலக்கியம் நமது காலத்தைச் சாராததால், அக்காலகட்டத்தில் தோன்றிய சான்றோர் தந்த விளக்கங்களே அறிவுலகத்தில் ஏற்கப்படும், ஏற்கப்பட வேண்டும் - சிறு விலகல்களைத் தவிர. அச்சிறு விலகல்களைத் தீர்மானிப்பதற்கும் அத்துறை சார்ந்த சான்றாண்மை இன்றியமையாததாகிறது. 'வழித்துணை நினைவுகள்' எனும் தலைப்பைப் பார்த்ததும் இளம்பிறை அம்மா அவர்கள் தமது வழித் துணையின் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த வாழ்க்கைத் துணைவரின்) நினைவுகளில் மூழ்கி எடுத்த முத்துகளைப் பதிவிட்டு இருப்பார் எனும் எண்ணம் மேலோங்கியது. வாசிக்க ஆரம்பித்ததும் தெரிந்தது - வாழ்க்கைத் துணைவரின் மறைவுக்குப் பின்னர், நினைவுகளை வழித்துணையாகக் கொண்டதன் பதிவு என்று. வாசிப்பதற்கு முன் என்னுள் தோன்றிய ஊகத்திற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இலக்கியக் கூட்டமானாலும் போராட்டக் களமானாலும் எழுத்தாளர் இளம்பிறை அவர்களும் அவரது இணையரான உயர்திரு இரா.கிருஷ்ணன் அவர்களும் இணைந்து பங்கெடுத்து 'இணையர்' என்னும் சொல்லுக்கு இலக்கணம் வகுப்பர். இறப்புக்குப் பின் தம் பூத உடல்களை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு எழுதி வைத்த முற்போக்காளர்கள் என்பது கூடுதல் செய்தி. திரு. கிருஷ்ணன் அவர்கள் மறைந்த போது மதச் சடங்குகளின்றி அதனை நிறைவேற்றியவர் திருமதி கி.இளம்பிறை. இவை கட்டுரையில் இருந்து சற்றே விலகிய செய்திகளாகத் தோன்றலாம். சொல்லும் செயலும் ஒன்றாய்க் கொண்ட ஒருவரின் எழுத்தைப் (நூலை) பேச வருகிறேன் என்பதை முன்மொழியவே இச்செய்திகள். மேலும் நூல் அறிமுகத்தில் நூலாக்கியோர் அறிமுகமும் மரபுதானே ! இக்கவிதை நூலில் என்னைக் கவர்ந்த இரண்டு பொருள்களைக் கையிலெடுத்துப் பேசுவது எனது வாசிப்புக்குப் பொருத்தமாய் அமைவது. ஒன்று, கவிஞர் அறம் பாடுவது; மற்றொன்று, என் மனதிற்கு நெருக்கமான மரபிலக்கியங்களுக்கு என்னை இழுத்துச் செல்வது. இந்த இரண்டில் ஒவ்வொரு பொருளுக்கும் சில மேற்கோள்களைக் காட்ட எண்ணம். அறம் சொல்ல வந்தவர், "தூவுவது அன்பாக இருப்பின் விலகுவது வம்பாக இருக்கும்" என்று (பக்கம் 18) நச்செனக் குறிப்பது நினைவில் கொள்ளத்தக்கது. "எவரும் புத்தன் இல்லை ஏனெனில் புத்தன் என்று ஒருவன் இல்லவே இல்லை" என்று (பக்கம் 20) குறிப்பது உடனே கடந்து செல்ல விடாத ஒன்று. அகவைக்கு ஏற்ப உணர்வுகள் இருக்கும் எனும் உலகியல் நடைமுறை சொல்ல வந்தவர், "புத்தன் என்று ஒருவன் இல்லவே இல்லை" என்றது கூட "எவரும் புத்தன் இல்லை" என்பதை மீண்டும் வலியுறுத்தவே எனப் புரிய சற்று நேரமும் பக்குவமும் அவசியமாகிறது. "பிறந்தது ஆண் குழந்தை எனில் அன்று மட்டும் மகிழ்ச்சி பிறந்தது பெண் குழந்தை எனில் வாழும் வரை மகிழ்ச்சி" என்று (பக்கம் 50) பெண்ணியம் பேசுமிடத்துச் சற்று சிந்திக்க வைக்கிறார். "அன்று மட்டும் மகிழ்ச்சி", "வாழும் வரை மகிழ்ச்சி" எனச் சொல்வதெல்லாம் ஓசை நயம் கருதி ஒரு கவிஞருக்கான உரிமம் என்பதும், பாடலின் மெய்ப்பொருள் "ஆண் என்றால் மகிழ்ச்சி, பெண் என்றால் பெரு மகிழ்ச்சி" என்பதும் கவிஞர் சொல்லாமல் சொல்லி நிற்பது. "ஆணென்ன பெண்ணென்ன ?" எனும் சமநோக்கு எத்துணை அவசியமோ, ஆணாதிக்கச் சமூகமாய் இருக்கும் வரை பெண் என்பது உயரிய நிலைதான் என முழங்குவதும் அவசியமாகிறது. இது தொடர்பில், "ஆண் மகவு பெற்றோர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டோர்; பெண்ணைப் பெற்றோர் அந்த இறைவனையே பெற்றோர்" என்று எங்கோ வாசித்த நினைவு. இனி என்னைக் கவர்ந்த பகுதிகளில் இரண்டாவதுக்கு வருவோம். சில இடங்களில் நமக்குத் தோன்றும் பண்டைய இலக்கியங்களின் தாக்கம் இயற்கையானதே என்பதற்குக் கவிஞர் இளம்பிறை அவர்களே சான்று தருகிறார். எடுத்துக்காட்டாக, "எத்தனை எத்தனை முறை படித்தாலும் புதுப்புது சிந்தனை தோன்றும்" என்று (பக்கம் 31) அவர்கள் சொல்லுமிடத்து, "படிக்கப் படிக்கப் புதுமை" என்பதும், அதற்கு இணையாக "அறிதோறும் அறியாமை" எனும் குறளொலியும் நம் செவிப்புலனில் கேட்கின்றன. அவ்வொலி இயற்கையான ஒன்றே என்று அறிவிப்பது போல் பாடலின் அடுத்த வரியிலேயே "அறிதோறு அறியாமை கண்டற்றால்" எனும் குறளை இணைக்கிறார் கவிஞர். திருக்குறள் பிரபா என்று நட்பு வட்டத்தில் அறியப்படும் கி.இளம்பிறை அவர்கள் மேலும் சில இடங்களில் திருக்குறளை எடுத்தாள்கிறார். உதாரணமாக பக்கம் 11 ல் ஊடலில் தோற்றவர் வெல்லும் மாண்பு குறிக்கப்படுகிறது; பக்கம் 20 ல் தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறலும் சுட்டப் பெறுகின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் பழந்தமிழ் இலக்கியங்களின் தாக்கத்தைக் குறிக்க நமக்குக் கவிஞரே வழங்கிய உரிமத்தின் படி ஒன்றிரண்டு இடங்களைக் காணலாமே ! "என்னைத் தேடினால் நான் இல்லை ஒன்றாகவும் பலவாகும் எனை ஏற்ற தோழர்கள் ஊடே ஊடுறுவி விட்டேன்" என்று பக்கம் 28 ல் நட்பில் கரைந்து போகிறார். "என்னைத் தேடாதே உன்னுள் நான் வாழ்கிறேன்" என்று பக்கம் 36 ல் தலைவனும் தலைவியும் ஒருவர் மற்றவரிடம் தொலைந்து போதலைப் பேசுகிறார். இவ்விரண்டு இடங்களும், "வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்" "ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந் தானே" எனும் திருமந்திர வரிகளை மனக்கண்ணில் நிறுத்துதல் இயல்பான ஒன்று. பக்கம் 31 ல் அன்புடையார் அனைவரும் தம் நெஞ்சகத்தில் குடி கொண்டதால் தம் நெஞ்சம் கனப்பதைப் பாங்குடன் சொல்லிச் செல்கிறார் கவிஞர் இளம்பிறை. உணர்வுபூர்வமான பொருளான நெஞ்சம் இலக்கிய நயத்துடன் ஒரு உடற்கூறாக ஆளப்படுவது இலக்கிய உலகில் அரிதன்று. நம் நினைவுக்கு உடனே வரும் குறள் "நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து" (குறள் 1128; அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்). அஃதாவது, காதலர் தன் நெஞ்சத்தில் உறைவதால் அவருக்குச் சுடுமே என அஞ்சி வெம்மையான பொருளைத் தான் உண்பதில்லை என்று தலைவியின் கூற்றாகக் குறளில் வருகிறது. இது தொடர்பில், "கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து" (குறள் 1127; அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்) எனும் குறள் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாத ஒன்று. இவ்வாறு சங்கிலித் தொடராக நினைவலைகளை எழுப்பும் 'வழித்துணை நினைவுகள்' காற்றினிலே வரும் கீதம் என்பது மிகையில்லை. பக்கம் 52 ல் "பற்றியது பற்றிய பின் பற்றைத் தவிர வேறு எதுவும் இல்லை .................................................... ..................................................... ஈவது தாளாண்மை என்று பின் சென்றாள் அப்பேதை" எனும் பாடலைக் கொள்ளலாம். முதல் இரண்டு வரிகள் மனக்கண்ணில் நிறுத்துவது, "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" (குறள் 350; அதிகாரம்: துறவு) என்ற பொய்யாமொழியை. குறளில் இறைப்பற்று வலியுறுத்தப்படுவது போல இங்கு மானிடப்பற்றை வலியுறுத்துவது கவிஞரின் பகுத்தறிவு. இவர் வலியுறுத்துவது மானிடப்பற்றே என்பது பாடலின் கடைசி வரிகளில் தெளிவு. அங்கு "பின் சென்றாள் அப்பேதை" என்று உடன்போக்கு மேற்கொண்டு தலைவன் பின் செல்லும் தலைவியைக் குறிக்கிறார். உடன்போக்கு என்னும் துறை தழுவிய எத்தனையோ அகப்பாடல்கள் இருப்பினும், இளம்பிறை அம்மாவின் சொல்லாட்சியானது நாவுக்கரசரின் திருத்தாண்டகத்தில் "முன்னம் அவனது நாமங் கேட்டாள்" எனத் தொடங்கும் பாடலை நம்முன் இழுத்து வந்து நிறுத்துகிறது. நாவுக்கரசர் பாடலில் 'பிச்சி' ("பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்") என்பது நமது கவிஞரின் பாடலில் 'பேதை' என்றானது; "தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" என்று திருத்தாண்டகத்தில் ஒலித்தது, "பின் சென்றாள்" என்று வழித்துணை நினைவானது. இதுகாறும் குறித்த இரண்டு பொருள்கள் தவிர ஒன்றிரண்டு குறிப்புகளும் உண்டு. மானிடக் காதல் சிற்றின்பம் என்றும், இறைப்பற்று பேரின்பம் என்றும் வகைப்படுத்தல் உலகியலில் உண்டு. இரண்டும் பேரின்பமே என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனது கருத்துக்கான அடிப்படை என்னவெனில், தன்னை இழத்தல் பேரின்பம்; அது இரண்டிலும் உண்டு - அவ்வளவே ! திருநாவுக்கரசரின் திருத்தாண்டகமும் மாணிக்கவாசகரின் திருக்கோவையாரும் நமக்கு உணர்த்தும் பொருள் இதுவே. இரண்டும் அகம் சார்ந்த பக்தி இலக்கியங்கள். இரண்டிலும் இறைவன் தலைவனாகவும் பக்தன் தலைவியாகவும் உருவகிக்கப்படுகின்றனர். பக்தனாகிய தலைவி இறைவனாகிய தலைவனை அடைவது பாடல் பெற்றது. இப்போது நாம் கையில் எடுத்துள்ள கவிதை நூலிலும் கவிஞர் இக்கருத்தைச் சிறிய மாறுதலுடன், "சிற்றின்பம் தவிர்த்து எவரும் பேரின்பம் அனுபவிக்க இயலாது" என்று பக்கம் 42 ல் பதிவிடுகிறார். பக்கம் 33 ல் "உணவில் கலப்பு உயிர்க் குற்றம்; மொழியில் கலப்பு கொலைக் குற்றம்" என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. நூலுக்கான அணிந்துரை அளித்த பேரா. வ.ஹரிஹரன் அவர்கள் இக்கருத்தில் மாறுபட்டுள்ளது அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நியாயம்தான். என்னைப் பொறுத்தமட்டில், எனக்குக் கவிஞரின் கருத்தில் முழு உடன்பாடு இல்லை; முழுமையான மாறுபாடும் இல்லை எனச் சொல்லியே ஆக வேண்டும். மொழிக் கலப்பினால் மொழி வளரும் என்பது வளரும் மொழிக்குச் சரிதான்; தமிழ் போன்ற வளர்ந்த மொழிக்கு எங்ஙனம் பொருந்தும் எனும் எண்ணம் தோன்றுவதால் கவிஞரின் கருத்தில் உடன்பாடு. பேருந்தில் இருந்து இறங்கியதும் ஆட்டோ ஓட்டுநரிடம், "சந்தைக்குத் தானி வருமா ?" என்பது செயற்கையாகவும், "சந்தைக்கு ஆட்டோ வருமா ?" என்பது இயற்கையாகவும் தோன்றுகிறது; ஆட்டோ வெளியிலிருந்து இந்நிலத்திற்கு வந்த பொருள்தானே எனும் எண்ணம் முன்வர கவிஞரின் கருத்தில் எனக்கு மாறுபாடு. இவை போல் இன்னும் எத்தனையோ ! அத்தனையும் பேச முனைந்தால், நூலைப்போல் இரு மடங்காவது நான் எழுத வேண்டி வரும். எனவே இவ்விடத்தில் இக்கட்டுரைக்கு நிறைவுத் திரையிடல் பொருந்தி வரும். எழுத்தாளர் இளம்பிறை அவர்களின் கவிதைப் பெட்டகத்தில் உறையும் மேலும் பலவற்றை வெளிக் கொணர்வது வாசகர்தம் வாசிப்பில் கை கூடுவது. நூலாசிரியர் மற்றும் பதிப்பக விவரங்கள் பின் வரும் முகநூல் இணைப்பில் உள்ள புத்தக அட்டையில் : https://www.facebook.com/share/p/17dPe1MQr4/
-
5 வயது பேரனின் கேள்வி
இந்தப் பழமொழி அரசியல் நிர்ப்பந்தத்தினாலோ தொழில் வளம் இல்லாமையாலோ புலம் பெயர்வோர்க்கு/ புலம் பெயர வைக்கப்பட்டோர்க்குப் பொருந்தாது என்பது என் எண்ணம். உங்கள் பேரன் பிறந்து வளர்ந்த மண்ணே ஜெர்மனி என்பதால், புலம் பெயர்ந்த வலி அவருக்கு ஓரளவு ஏற்படும். உதாரணமாக, அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் மாணவப் பருவக் கவிஞர்களை வைத்து வெள்ளை மாளிகையில் அன்றைய அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அன்று அந்நிகழ்ச்சியில் அமெரிக்கர்களைக் கவர்ந்த பதினேழு வயது மாணவி மாயா ஈஸ்வரன், தனது பாலக்காட்டு வேர்களை அமெரிக்காவில் தொலைத்த புலம் பெயர்ந்த தமிழச்சி. தன் கவிதையை உணர்வு பொங்க வாசித்தாள். அதில் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள். அனைவரையும் கவர்ந்த வரிகள், “எனது அடையாளம் உதிர ஆரம்பித்தது - முடி உதிர்வதைப் போல. கூந்தலை முழுவதும் இழந்து போகும் பீதி என் மனதில்.” கவிதையைக் கேட்டு மிச்சேல் ஒபாமாவே உணர்ச்சி வசப்பட்டார். அக்குழந்தையை அருகில் அழைத்து ஆதரவுடன் அணைத்துக் கொண்டார். தாமும் அந்த ரகம் தான் என நினைத்திருப்பாரோ? எது எப்படியாயினும் பேரன் சற்றுப் பெரியவனாகும்போது உலகின் நிதர்சனங்களை எடுத்துச் சொல்லுங்கள். அதுவரை ஏதாவது பொய் சொல்லியாவது சமாளியுங்கள். உயிருக்கு உயிரான என் தாத்தா இறந்தபோது என்னிடம் சொல்லப்பட்ட பொய், "தாத்தா சாமி அழைத்ததால் போயிருக்கிறார். சிறிது காலம் கழித்து உன்னிடம் வந்து விடுவார்" என்பது. எனக்குப் பேத்தி பிறந்த பிறகும் என் தாத்தா இன்னும் வரவில்லை; காத்திருக்கிறேன். உங்கள் பேரனின் கேள்வியைத் தாண்டி, உங்கள் கேள்வியில் உங்கள் மனவலி வெளிப்படுவதாக உணர்கிறேன். அது எனது கற்பனையாகவும் இருக்கலாம். திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த ஒருவர் தொழில் நிமித்தமாக சென்னையில் வாழ்வதன் வலியைப் பதிவு செய்ததை முகநூலில் கண்டேன். அப்பதிவின் இணைப்பைக் கீழே தந்துள்ளேன். அந்தத் துன்பத்தையே தாளாத நான் நாடு விட்டு நாடு சென்றோரில் சிலருக்கு/பலருக்கு ஏற்படும் வலியை என்னவென்பேன் ? இது தொடர்பில் "பரந்து கெடுக இவ்வுலகியற்றியான்" என்பதுவே என் கையறு நிலை. https://www.facebook.com/share/p/18hDk3PFjy/
-
மாண்புமிகு முதல்வர் அவர்களே ! - சுப.சோமசுந்தரம்
மாண்புமிகு முதல்வர் அவர்களே ! - சுப.சோமசுந்தரம் தலைப்பில் நான் எழுத நினைக்கும் பொருள் வெளிப்படவில்லை ஆயினும், அப்பொருளின் தொனி புலப்படாமல் இல்லை. எனவே பொருளினுள் செல்லுமுன் கோட்பாடு சார்ந்து எனது நிலைப்பாடு யாது என்பதை அறுதியிட்டுக் கூறுவது எனது கடமை ஆகிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சியாளர் அம்பேத்கர், உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளியான கார்ல் மார்க்ஸ் போன்றோரை எஞ்சாமிகள் என உள்ளத்தில் கொண்டு திரியும் சாமானியருள் ஒருவன்; இடதுசாரி மற்றும் திராவிட இயக்கக் கோட்பாடுகளின் கலவையாகத் தன்னை மனதில் வரித்துக் கொண்டவன் ! கருப்பு அல்லது சிவப்புச் சட்டையை பெருமிதத்துடன் எடுத்து அணிபவன் - இவ்வளவே நான். எனவே முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் திராவிட முன்னேற்ற கழக அரசையும் இங்கு எனது விமர்சனத்திற்கு உள்ளாக்குவது, நான் எதிரணியில் அமர்ந்து கொண்டு அல்ல; அவர்கள் பக்கம் நின்று கொண்டே ! எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நான் தாலி கட்டாததால் இடதுசாரிக் கட்சிகளையும் திராவிடக் கட்சிகளையும் கூட அவ்வப்போது விமர்சிக்கும் பேறு பெற்றவன் நான். மற்றவர்களை நான் ஆட்டத்திற்கே சேர்த்துக் கொள்வதில்லை. மேலும் திராவிடக் கட்சிகள் தற்போது தி.க வும், ஓரளவு திமுகவும் ஆக இரண்டு மட்டுமே என்பது என் கருத்து. அது என்ன ஓரளவு ? இன்றைய காலகட்டத்தில் 'ஓரளவு' ஊழல் இல்லாமல் ஒரு ஜனநாயக அரசியல் கட்சியை நடத்த முடியாது என்ற கேடு கெட்ட நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டதன் விளைவே திமுக வை இன்னும் திராவிடக் கட்சிகள் பட்டியலில் வைத்திருப்பது. சமீபத்தில் பரபரப்பாகி இருந்த சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் ஆரம்பிக்கிறேனே ! அதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டமாகத்தான் நான் பார்க்கிறேன். கோரிக்கைகள் ஏற்கப்பட்டன - ஒன்றைத் தவிர. மறுக்கப்பட்டது என்னவென்றால் தொழிலாளர்கள் தாங்கள் விரும்பியவாறு - சட்டத்திற்கு உட்பட்டு - சங்கம் அமைக்கும் உரிமை. நிர்வாகம் விரும்புவது போல் சங்கம் வைத்துக் கொள்ளலாமாம். அத்தகைய ஒன்றைத் தொழிற்சங்கம் (Trade Union) என்று சொல்வதில்லை. ஒரு தொழிலாளர் அமைப்பு (Workers club) எனலாம்; அதிகபட்சம் தொழிலாளர் நல அமைப்பு (Workers Welfare club) எனலாம். அதன் மூலம் தொழிலாளர்கள் தங்களுக்குள் மட்டுமல்ல, நிர்வாகிகளுடனும் டென்னிஸ், கோல்ஃப் முதலியவை விளையாடலாம். தங்கள் உரிமைகளுக்காகப் போராட முடியாது. தொழிலாளர்கள் அரசியல் கட்சிகள் சார்பில் சங்கம் நடத்தக் கூடாது என்ற போர்வையில் அவர்களது உரிமையை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றுள்ளது நிர்வாகம். வெளிப்படையாகச் சொல்வதானால், இடதுசாரித் தொழிற்சங்கம் அமைக்கக் கூடாது என்பதுதான் சாம்சங்கின் நிபந்தனை. முதல்வர் அவர்களே, நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் ! இடதுசாரித் தொழிற்சங்கங்கள் தவிர ஏனைய (தொழிற்)சங்கங்கள் உங்களுக்கு வேடிக்கையாகத் தெரியவில்லையா - திமுக தொழிற்சங்கம் உட்பட ? சங்க அங்கீகாரத்தை வழங்குவது மாநில அரசு தொழிலாளர் நலத்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதும் கடமையும்தானே ? சங்கத்தைப் பதிவு செய்யும் மனுவை தொழிலாளர் நலத்துறை முதலில் கிடப்பில் போட்ட காரணமென்ன ? பின்னர் சாம்சங் நிர்வாகம் தன் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று ஆட்சேபணை தெரிவிக்கவும், CITU நீதிமன்றம் செல்லவும், பின்னர் அதைக் காரணம் காட்டி சங்கப் பதிவை அரசு மறுப்பதும் என்ன நாடகம் ? இதன் மூலம் அரசு அந்த நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்படவில்லையா ? நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கித் தருவது மட்டும்தானே அரசின் வேலை ? தனது அமைச்சர்களை அனுப்பி அரசே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது அறநெறிதானா ? இதற்கு முன்பும் இவ்வாறு நடந்திருக்கலாம். எப்போது நடந்தாலும் தவறு தவறுதானே ? குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழியும் பறித்த கதையாக போராட்டத்தைக் கைவிடுமாறு தொழிலாளர்களுக்கு அமைச்சர் பெருமக்கள் ஒருவர் மாற்றி ஒருவர் அறிவுரை. நீங்கள் அரசா அல்லது சாம்சங் நிர்வாகமா ? இத்தனைக்கும் மேலாக தொழிலாளர்கள் வீடு வரை சென்று காவல்துறையின் மிரட்டல், கைது நடவடிக்கை எனும் அடாவடித்தனங்கள் வேறு. TESMA வின் கீழ் ஜெயலலிதா அரசின் காவல்துறை போராடிய அரசு ஊழியர்களை விரட்டி விரட்டிப் பழி வாங்கியதெல்லாம் நினைவுக்கு வருகின்றதே ! ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக நடந்த போராட்டத்தில் அதிமுக அரசு நடந்து கொண்டதற்கும் சாம்சங் விவகாரத்தில் நீங்கள் நடந்து கொள்வதற்கும் என்ன வேறுபாடு ? அவர்கள் அமைதி வழியில் போராடியவர்களை சுட்டுத் தள்ளினார்கள். அது மட்டும்தான் வேறுபாடா ? போராட்டம் தொடர்ந்தால் சாம்சங் சென்னையில் தனது தொழிற்சாலையை மூடிச் சென்று விடுவார்களே என்று நீங்கள் ஆதங்கப்பட்டால், கூட்டணித் தலைவர்களை அழைத்துப் பேசுவதுதானே சரியாக இருக்கும் ? சாம்சங் நிர்வாகத்துடன் நின்று கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்வது சரியாக இருக்குமா ? "சம்பளம் இப்போது பிரச்சினை இல்லை; எங்கள் உரிமையை மீட்டெடுப்பதே பிரச்சினை" என்று இக்காலத்தில் கூட தொழிலாளர் வர்க்கம் நிற்பது ஒரு வரலாற்று நிகழ்வு. அந்த வரலாற்றின் நாயகர்களை நீங்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அந்த வரலாற்றில் நீங்கள் ஒரு கரும்புள்ளி ஆவதைத் தவிர்த்திருக்க வேண்டும். இறுதியில் ஒரு வழியாக சமரசத் தீர்வு எட்டப்பட்டபோது அதில் தங்கள் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது என்றெல்லாம் வெளிவந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என விழைகிறோம். சமரசம் ஏற்பட்டதற்கு நீங்கள் CITU விற்கும் நன்றி தெரிவித்ததை வரவேற்கிறோம். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரை மே 2022 ல் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் இது தொடர்பாகத் தொடர்ந்த ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசினைக் கேள்வி கேட்ட பிறகு விசாரணை ஆணையத்தின் பரிந்துரைப்படி 21 பேர் மீது துறை சார்ந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக நவம்பர் 2023 ல் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அது என்ன, அரை மனது குறை மனதுடன் அப்படி ஒரு நடவடிக்கை ? அதிலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் முந்தைய அதிமுக அரசில் காவல் (ஏவல்?) துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வெறியாட்டத்தில். எதிர்க்கட்சியாக இருக்கும் போது நீங்களும் உங்கள் கட்சியினரும் இது தொடர்பில் எழுப்பிய கண்டனக் குரலெல்லாம் வெறும் அரசியல் ஆதாய ஆரவாரம்தானா ? ஆளுங்கட்சியான பிறகு காவல்துறையுடனும் அரசு நிர்வாக அமைப்புகளுடனும் சமரசம் செய்து கொண்டு போவது எழுதாமல் வரையறுக்கப்பட்ட விதிமுறையோ ? குருவிகளைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளிய விவகாரத்தில் வெறுமனே துறை சார்ந்த நடவடிக்கை என்பது கண் துடைப்பன்றி வேறென்ன ? கலைந்து ஓடியவர்களையும் தேடித்தேடிக் குறி பார்த்துச் சுட்டது முன்னரே திட்டமிடல் அன்றி ஒரு தற்செயல் நிகழ்வா ? ஆட்சி நிர்வாகம், காவல்துறை என்றால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில்லை என்று எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு இருக்குமானால், அவர்கள் மீண்டும் மீண்டும் கொலைபாதகக் குற்றங்களை அரங்கேற்ற மாட்டார்களா ? போராடிய மாஞ்சோலைத் தோட்ட தொழிலாளர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் விரட்டி விரட்டி ஆற்றில் மூழ்கடித்ததும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் விரட்டி விரட்டிச் சுட்டதும் என்றுமே முற்றுப்பெறாத தொடர்கதைகளா ? இவற்றில் மேலும் ஒரு கோணம் இருக்கிறது. மாஞ்சோலையானாலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆனாலும், சாம்சங் ஆனாலும் ஒரு ஜனநாயக அரசும் அதன் இயந்திரங்களும் முதலாளி வர்க்கத்துக்கு பணி செய்யவே உருவானவையோ ! பொள்ளாச்சி பாலியல் படுபாதகத்தில், "அண்ணா, அடிக்காதீங்கண்ணா ! நீங்கள் சொன்னதைக் கேட்கிறேன்" என்ற அபலைக் குரல் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் குறிப்பிட்ட அந்தக் குரல் நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் செவிகளில் இருந்து இன்று மறைந்து விட்டதோ என்று எங்களை எண்ண வைக்கிறது. எங்கள் செவிகளில் இடி முழக்கமாய் இன்றும் கேட்கிறது முதல்வரே ! தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியே என்பது நீங்கள் அறியாததா ? அதுவும் அதிமுக ஆட்சியில் நடந்த கொடுமை; அதிமுகவில் பொள்ளாச்சி பிரமுகரின் மகன் முக்கிய குற்றவாளியாக செய்திகளில் அடிபட்ட விவகாரத்திலேயே விரைவான நீதி கிடைக்கவில்லை. அப்படியானால் ஒரு திமுக பிரமுகரின் பெயர் அடிபட்டிருந்தால் இந்த வழக்கு எந்தத் திசையில் சென்றிருக்கும் ? மீண்டும் வலியுறுத்துகிறேன் - இக்கேள்வியைக் கேட்கும் நான் ஒரு திமுக ஆதரவாளன் முதல்வர் அவர்களே ! பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு அதைப் பற்றியே பேசாமல் காலம் தள்ளுவது சரிதானா ? சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது உங்கள் கவனத்திற்கு வந்திருக்கும் என்று நம்புகிறோம். முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பில், "தேர்தல் வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டியதில்லை. மற்றவர்கள் நிறைவேற்றினார்களா ?" என்று அடாவடியாய்ப் பேசியபோது அமைதி காத்தீர்களே ! அரசு ஊழியர்கள் போராடிக் கொடுத்த நெருக்கடியைச் சமாளிக்க மட்டும், "நான் கொடுக்காமல் உங்களுக்கு யார் கொடுப்பார்கள் ? சிறிது கால அவகாசம் கொடுங்கள்" என்று உணர்வுடன் பேசி வாய்தா வாங்கி விட்டீர்கள். ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான முயற்சியில்தான் நீங்களும் உங்கள் அரசும் இருக்கிறீர்களா ? போராடிய அரசு ஊழியர்கள் கையறு நிலையில் ஒவ்வொரு அரசியல் தலைவராகப் பார்த்து மனு கொடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் சீமானைக் கூட விட்டு வைக்காத இழிநிலைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். ஓய்வூதியத்தின் இன்றியமையாமையை விளக்கும் எனது ஒரு கட்டுரையின் இணைப்பு : https://yarl.com/forum3/topic/270878- ஓய்வூதியம்-சுப-சோமசுந்தரம்/ இங்கு அக்கட்டுரையின் இணைப்பு உங்களுக்காக மட்டுமல்ல. "இவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் ஒரு கேடா ?" என்று கேட்கும் அதிமேதாவிகளுக்கும் சேர்த்துதான். மக்கள் நலத்திட்டப் பணிகள் முதலிய எத்தனையோ நிறைகள் உங்கள் அரசில் உண்டு. இருப்பினும் இது குறைகளைச் சுட்டும் களமாய்க் கொண்டதால், பல காலமாய் நெஞ்சில் கனக்கும் ஒரு பெருங்குறையினைச் சுட்டி இக்கட்டுரையை நிறைவு செய்ய எண்ணம். தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்த கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் அமைதியாக சுமார் இரண்டரை வருட காலம் நடந்த போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது எனச் சொல்வது மிகையாகாது. போராட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சுப.உதயகுமாரன் மற்றும் அவருடன் தோளொடு தோள் நின்ற பாதிரியார் மை.பா. ஜேசுராஜ், தோழர் புஷ்பராயன் ஆகியோர் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் இடிந்தகரை மற்றும் அதன் சுற்று வட்டார மக்களின் - குறிப்பாக மீனவ மக்களின் - உறுதிமிக்க போராட்ட உணர்வுக்குச் சான்று பகர்வது. எந்தக் குறிப்பிட்ட கட்சி அரசியல் சார்புமின்றி சமீப காலத்தில் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய அப்போராட்டத்திற்கு இணையாக டெல்லியில் சுமார் ஓராண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்தையும், சென்னை மெரினா கடற்கரையில் சில நாட்கள் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையும் குறிப்பிடலாம். பின்னவை இரண்டும் வெற்றியில் முடிய, கூடங்குளம் அணு உலைப் போராட்டம் இக்காலகட்டத்தில் தனது நோக்கத்தில் இன்னும் வெற்றி பெறவில்லைதான். வெல்வதுதான் போராட்டம் என்றில்லை; தோற்பதும் போராட்டம்தான். மேலும் நோக்கத்திற்கு மட்டுமே வெற்றி தோல்வி உண்டு; போராட்டத்திற்கு அவ்வாறில்லை. போராட்டமே மானிடத்தின் வெற்றிதான். எந்த ஒரு அரசியல் கட்சியாலும் நடத்த முடியாத போராட்டம் அது. முதல்வர் அவர்களே ! கூடங்குளம் அணு உலைப் போராளிகளின் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் எனும் தேர்தல் வாக்குறுதியும் தங்களால் தரப்பட்டதே. அவ்வளவு காலமும் எவ்வித வன்முறையும் இல்லாமல் அமைதியாக நடந்த போராட்டத்தில் அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகளாய் இருக்கவே பெருமளவில் வாய்ப்பு உள்ளது என்பதில் போராட்டக் களத்திற்கு வராதவர்களே உடன்படுவர். நமது சட்டம், காவல் துறைகளின் கடந்த கால வரலாறு அப்படி. எடுத்துக்காட்டாக, 2003 ல் நடந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர் போராட்டத்தில் ஒரு மின்கம்பத்தின் அருகில் நின்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்த பேராசிரியர்கள் சிலர் மீது போடப்பட்ட வழக்கு அந்த மின்கம்பத்தில் ஏறி மின் கம்பிகளை அறுத்ததாம்; ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்ட பின்பும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதியில் அடித்து விரட்டிய பின்பும் வாகனங்களுக்குக் காவலர்களே தீ வைத்தோ, அவற்றை உடைத்தோ தங்களின் மோசமான நடவடிக்கைகளுக்குக் காரணங்களை உருவாக்கியது வெட்ட வெளிச்சமானது. எனவே வாக்குறுதி தந்தது போல் அணு உலைப் போராட்டத்தில் அத்தனை வழக்குகளையும் இவ்வளவு தாமதமானாலும் இப்போதாவது வாபஸ் பெறுவதே அறநெறியின் பாற்படும். வழக்கின் காரணமாக அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் ஏராளம். உதாரணமாக, வழக்கினால் எத்தனையோ இளைஞர்களும் ஏனையோரும் வெளிநாடுகளுக்குக் கூட வேலைக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. இது தொடர்பில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் அவர்கள் உங்களை நேரில் சந்தித்தும் கடிதங்கள் எழுதியும் நீங்கள் காலம் கடத்துவது ஏன் ? அவரைப்போல் சமூகப் போராளிகளை உங்கள் கட்சி உருவாக்கியது உண்டா ? இவ்வளவு அடக்குமுறையிலும், அடுத்து மணவாளக்குறிச்சி மணல் ஆலைப் போராட்டத்தின் நியாயங்களைப் பேசும் தோழர் சுப. உதயகுமாரன் எங்களைப் போன்ற 'நகர்ப்புற நக்சல்களுக்கு' ('Urban Naxals') தமிழ் நிலத்தின் சேகுவேராவாகத் தெரிகிறாரே ! உங்களுக்குத் தெரிவதில்லையா ? அல்லது அப்படித் தெரிவதால்தான் ஒன்றியமானாலும் மாநிலமானாலும் முதலாளித்துவ அரசுகள் அவரைப் போன்றவர்களைப் பழிவாங்குகின்றனவா ? திராவிட இயக்க அரசியல் (சமூக நீதிக்கான) போராட்ட அரசியல்தானே ! ஒன்றியத்தில் உள்ள பாசிச அரசினைக் குறைந்தபட்சம் தமிழ் நிலத்தில் காலூன்ற முடியாமல் செய்ய இப்போது எங்களிடம் இருக்கும் ஒரே மக்கள் ஆதரவுள்ள ஆயுதம் திமுக என்பது எங்களுக்குத் தெரிவது சரி. ஆனால் அது உங்களுக்கும் தெரிவதுதான் எங்களுக்கான அவலம். இருப்பினும் கையறு நிலையில், வந்தது வரட்டும் என்று பெரும்பான்மை மக்கள் பாசிசவாதிகளை நாடினால் இழப்பு திமுகவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாய்த் தமிழ் நிலத்திற்கே என்று எச்சரிக்கும் நிலைக்கு என்னைப் போன்றோர் தள்ளப்படுகிறோம். உங்களுக்கு ஆதரவையும் தந்து விட்டு உங்களிடம் மக்கள் பெறாத, பெறவேண்டிய நியாயங்களுக்காக நாங்களும் ஒரு 'நெஞ்சுக்கு நீதி' எழுதலாம் எனத் தோன்றுகிறது மாண்புமிகு முதல்வர் அவர்களே ! https://www.facebook.com/share/p/19QFqCFNNw/
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
சங்க இலக்கியங்களில் தங்களின் புலமை வியக்க வைக்கிறது. நீங்கள் வெளிக்கொணர்பவை அநேகமாக, பேசாப் பொருட்கள். எனவே வியப்பூட்டும் பயனுள்ள தகவல்கள். நன்றி ஐயா.
-
தமிழ்த்தாய் வாழ்த்து - சுப.சோமசுந்தரம்
தமிழ்நாடு ஆளுநர் ரவி இங்கு வந்த நாள் முதல் சநாதனம், ரிஷி அல்லது முனிவர்களால் கட்டமைக்கப்பட்ட பாரம்பரியம், நீட் தேர்வின் சிறப்பு, புதிய கல்விக் கொள்கை என்று தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான கேவலமான விஷயங்களையே பேசித் திரிகிறார். ஒன்றிய அரசின், இன்னும் சொல்லப் போனால் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தின், தூதுவராக முழுநேரப் பணி செய்கிறார் என்பதைத் தமிழ்நாட்டில் அறம் அறிந்தோர் அறிவர். சமீபத்தில் இந்தியத் தொலைக்காட்சித் துறையில் (தூர்தர்ஷன்) கடைப்பிடிக்கப்பட்ட 'இந்தி மாத' (!!!) நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய ஒருவர் "தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல்திருநாடும்" எனும் வரியினை விலக்கிப் பாடினார். தமிழ்ச் சமூகத்தில் அது பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியதும், பாடியவரின் கவனச் சிதறலால் நிகழ்ந்தது என்றும், அதனால் ஆளுநருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்புக் கோரி தூர்தர்ஷன் துரிதமாக அறிக்கை வெளியிட்டது. அதாவது, ஆளுநர் அலுவலகம் சொன்னதன்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கத் தானாகவோ தூர்தர்ஷன் இவ்வாறு பாடவில்லையாம். இதை நம்புவதற்கு தமிழ்ச் சமூகம் எடுப்பார் கைப்பிள்ளையா, என்ன ! தூர்தர்ஷன் மன்னிப்புக் கேட்க வேண்டியது தமிழ் மக்களிடம்; ஆர்.எஸ்.எஸ்.ரவியிடம் அல்ல (ஆர்.என்.ரவி என்பது ஆர்.எஸ்.எஸ்.ரவியானது நமது கவனச் சிதறல். ஆளுநரும் தூர்தர்ஷனும் நம்பித்தான் ஆக வேண்டும்). மன்னிப்புக் கேட்கும் முகமாக மனோன்மணியம் சுந்தரனார் பாடிய அந்த முழுப் பாடலையும் ஒளி பரப்புவதே சிறந்த பரிகாரமாக அமையும். அதில், "உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதைந்த ஆரியம் (சமஸ்கிருதம்)" என்று சுந்தரனார் அடிக்கும் ஆணியில் ஆளுநரும் சங்கிகளும் கதறுவது தமிழர்தம் காதுகளில் தேனிசையாய்ப் பாயும். இனி அந்த முழுப் பாடலும் பொருளும் இதற்கு முன் கேளாதோர் வாசித்து இன்புறத் தரப்பட்டுள்ளன (தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட வாழ்த்திற்காக மூலப் பாடலில் நீக்கப்பட்ட பகுதி தடித்த எழுத்துகளில்) : பாடல் : "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!" பொருள் : நீர் நிறை கடலினை உடுத்தியவள் நிலமாகிய மடந்தை; அவளது எழில் மிகுந்த சிறப்பு வாய்ந்த முகமாகத் திகழ்வது பாரத துணைக் கண்டம்; அந்த எழில் முகத்திற்குத் தகுதியான சிறிய பிறை போன்ற நெற்றியே தென்னாடு (தெக்கணம் - தென்னிந்தியா); அந்நெற்றியில் வாசனைப் பொருட் கலவையினால் இட்ட திலகமே (பொட்டு) தென்னாட்டில் சிறந்த திராவிடத் திருநாடு (இன்றைய தமிழகம்); அத்திலகத்தின் வாசனை எங்கும் பரவி இன்பம் பயப்பது போல், எல்லாத் திசைகளிலும் புகழ் மணம் பரவி நிற்கும் தமிழ்ப் பெண்ணே ! பல்வகை உயிர்களையும் பல உலகங்களையும் படைத்து அழித்தாலும் ஒரு எல்லையில்லாத பரம்பொருள் முன் இருந்தபடியே இருக்கவல்லது; அப்பரம்பொருளைப் போலவே கன்னடம், இன்பத் தெலுங்கு, இனிய மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழணங்காகிய உன் வயிற்றில் உதித்துப் பலவாக ஆனாலும், ஆரியம் (சமஸ்கிருதம்) வழக்கொழிந்து போனதைப் போல் அல்லாமல் என்றும் சிதையாத உன் சீரும் சிறப்பும் வாய்ந்த இளமைத் திறத்தை வியந்து, அவ்வியப்பில் வேறு செயலற்று உன்னை வாழ்த்தி அமைகிறோம். பின்குறிப்பு : நிலத்தை மடந்தையாகவும், பாரத நாட்டை அவளது எழில் முகமாகவும், தென்னாட்டை அவளது நெற்றியாகவும், தமிழகத்தை அந்நெற்றியின் திலகமாகவும், திலக வாசனையைத் தமிழ் மணமாகவும் உருவகித்தது உருவக அணி. பாடலில் பரம்பொருள் என்று பேரா. சுந்தரம்பிள்ளை சொல்வது உலகளாவிய சிவனையே குறிக்கும் என்பர் (சுவாமி விவேகானந்தர் 1892ல் திருவனந்தபுரம் வந்திருந்தபோது, அவரது உரையின் பின் நடந்த ஆரோக்கியமான விவாதத்தில் பேரா.சுந்தரம் பிள்ளை,"I am not a Hindu, I am a Saivite" என்று வாதிட்ட குறிப்பு உண்டு). எனவே குறிப்பிட்ட மதம் சார்ந்த வரி எனும் விவாதங்களைத் தவிர்க்கவும், ஏனைய மொழிகளைப் பற்றிய குறிப்புகளைத் தவிர்க்கவும் அப்பகுதி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தில் நீக்கப்பட்டது அன்றைய தமிழக அரசின் மாண்பு. இக்கட்டுரைக்கான எனது முகநூற் பதிவு கீழ்வரும் இணைப்பில் : https://www.facebook.com/share/p/MiYLxthH6xdEt9oP/