Jump to content

சுப.சோமசுந்தரம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  342
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by சுப.சோமசுந்தரம்

 1. நன்னீரை வாழி அனிச்சமே ! --- சுப. சோமசுந்தரம் நம் பாட்டுடைத் (!) தலைவன் சங்கமருவிய காலத்தவனாய்த் தோன்றுகிறான். சான்றோர் கேண்மையினாலும் நிரம்பிய நூலுடைமையினாலும், சங்க கால வாழ்வியலும் சங்கத்தமிழும் சற்று அறிந்தவன் போலும். "நெய் பெய் தீம்பால் பெய்து நீ இனிது வளர்த்த இம்மரம் உனது உடன் பிறப்பாவாள்" என்று நற்றிணைத்தாய் தன் மகளிடம் இயம்பியதை நூல்வழி அறிந்தவன். "தலைவனே! தன் உடன்பிறப்பான இம்மரத்தின் நிழலில் உன்னோடு மகிழ்ந்திருக்க தலைவி நாணுகிறாள்" என்ற நற்றிணைத் தலைவிதன் தோழியின் கூற்றும் அறிந்தவன் அவன். "கரி பொய்த்தான் கீழிருந்த மரம் போலக் கவின் வாடி" எனச் சாற்றும் பாலைக்கலியைப் பாடிப் பார்த்தவன். அஃதாவது தனது நிழலில் நின்று பொய்யுரைத்த ஒருவனது இதயம் படபடக்க, அவனது உடலியல் மாற்றத்தின் விளைவாக மரம் வாடி நின்ற கதை அது. ஒருவன் பொய்யுரைத்ததை உலகிற்குப் பறைசாற்றிய பொய் காண் கருவியாய் (Lie detector) மரம் நின்ற அறிவியல் அது. இங்ஙனம் இயற்கையுடன் மனிதன் சங்க காலத்தில் கொண்ட மேதகு உறவினை சங்கமருவிய காலத்தும் கொண்டு செல்லும் வேட்கையும் சான்றாண்மையும் படைத்தவன் நம் தலைவன். தற்காலத்தில் காதலின் நுட்பம் அறிந்த தலைவனொருவன் ஒரு நாள் முழுதும் தானே தலைவிக்காக சமையல் செய்வதாகவோ அல்லது இன்னபிற குற்றேவல்கள் செய்வதாகவோ உறுதி ஏற்பதில்லையா ? அதுபோல நமது அக்காலத் தலைவன் தானே மலர்கள் கொய்து மாலையாக்கித் தலைவிக்குச் சூட ஆவலுற்றான். அவன் வாழ்ந்த இடச்சூழல், அப்பருவச் சூழல் இவற்றின் தாக்கத்தினால் சோலை எங்கும் அனிச்சத்தின் ஆட்சி மலர்ந்திருந்தது. பூவினத்தில் மென்மையானது எனப் பார் போற்றும் அனிச்சத்தின் ஆட்சி வன்முறை ஏதுமற்ற மென்முறை ஆட்சி. மலர் கொய்யவே செடியினை அணைந்து நின்றவன் மலரினின்றும் விலகி நின்றான். மோப்பக் குழையும் அனிச்சம் என்பதினால் மூச்சுக்காற்றும் தீதாம் எனும் அச்சம். அகலாது அணுகாது தீக்காய்வார் போல் பூக்காய்ந்தான் போலும். நற்றிணை மாந்தர் மரஞ்செடி கொடிகளுடன் உறவாடியதைப் போல் மலரிடம் உரையாடினான், "ஏ அனிச்சமே ! உன் மென்மையுடன் மேன்மையாய் நீ வாழ்க ! எனினும் உன்னை விட மென்மையானவள் நான் வீழும், வாழும் என் தலைவி" என அவன் அவளின் நலம் புனைந்துரைத்தான். வேறு மானிடரிடம் சென்று இவ்வாறு உரைப்பதுதானே தற்பெருமையாகவும் முதிர்ச்சியின்மையாகவும் அமையும் ? தன் மனதிடம் உரைப்பது போல் மலரிடம் உரைப்பது கலைநயம் அன்றி வேறென்ன ! "நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்" ----(குறள் 1111; களவியல்; அதிகாரம்: நலம் புனைந்துரைத்தல்) மலர் கொண்டவன் மாலை கட்டினான். அக்கலை அவளிடமே அவன் கற்றது. கட்டும்போது கவனமாக ஒவ்வொரு மலராகக் காம்பினைக் களைந்தான். அவன்தன் மனத்திரையில் பழங்காட்சியொன்று விரிந்தது. அனிச்சமலரை மட்டுமே தாங்கும் வல்லமை பெற்ற மெல்லிடையாள் அவள். எனவே ஒரு முறை அனிச்சத்தைச் சூட முனைந்த அவளிடம் சொன்னான், "காம்பினைக் களையாமல் சூடிக் கொண்டாயானால், நல்ல பறை ஒலியாது; சாப்பறைதான் (இழவுக் கொட்டுதான்) ஒலிக்கும்". அதாவது மலரின் எடை தாங்கும் அவளின் இடை, மலர்க்காலின் எடை தாங்காது முறிந்திடுமாம்; அப்புறம் இழவுதானாம். "அந்தப் பாறாங்கல்ல நீ தூக்ககுனே, அப்புறம் எழவுதாம்லே !" என்று இக்காலத்தில் கூட நண்பனிடம் சொல்வதில்லையா ? அப்போதும் அதே சொல் வழக்கு ! "அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை" ---(குறள் 1115) (நுசுப்பு - இங்கு இடைவருத்தத்தைக் குறித்தது) பெருந்தடாகக் கரையின் அமைந்த பொழில் அது ஆதலின், ஆங்கு மணலானது அனிச்சத்தினும் மென்மையாய் அமைந்ததோ, என்னவோ ! மேலும் தடாகத்தின்கண் நீந்தும் அன்னப் பறவைகளின் மென்மையான இறகுகள் அம்மணற் பரப்பில் விரவிக் கிடந்தன; கூடவே அனிச்சத்தின் இதழ்கள் வேறு. மாலையுடன் தலைவியின் வரவுக்காகக் காத்திருந்த தலைவன் மணற்பரப்பில் பரவியிருந்த அனிச்ச இதழ்களையும் அன்னத்தின் இறகுகளையும் இயன்றவரை நீக்கி அச்சோலையை மேலும் செம்மைப்படுத்தினான். அனிச்சமும் அன்னத்தின் தூவியும் கூட தலைவிதன் மென்மையான பாதங்களை வருத்துமாம், உதிர்ந்த நெருஞ்சிப் பழம் நம் பாதங்களை உறுத்துவது போல. "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்" ----(குறள் 1120) அன்றிலிருந்து இன்று வரை நிலவும் ஆணாதிக்க சமூகத்தில் தலைவிதானே தலைவனின் வழிமேல் விழி வைத்து நிற்பாள் ? அன்றே அதில் மாற்றத்தை நிகழ்த்திய நம் தலைவன் தன்னேரில்லாத் தலைவனே ! அந்தி மாலையில் அவன் கோர்த்த மாலைக்காகவே வந்தது போல் தலைவியும் வந்தாள். மாலை சூடினான் மனம் கவர்ந்த மன்னன் அவன். பொய்கைக் கரைக்கு அவனையணைந்து சென்று அமர்ந்தாள் பதுமை அவள். அவளிடம் படுபாவி (!) என்னென்ன பிதற்றினானோ, அக்கற்பனை உலகில் கூட அவை நம் காதில் விழவில்லை. விளைவு மட்டும் கண்கூடாய்த் தெரிந்தது. அவன் நெஞ்சமதில் பாவையவள் தஞ்சமானாள். நம் மனத்திரைக்குத் தணிக்கை எதுவும் இல்லை. அம்பலத்தில் சொல்ல தணிக்கை உண்டே ! எனவே அக்காட்சிக்கு இவ்விடத்தில் நிறைவுத் திரை போடும் கையறு நிலை நமக்கு. நூறாண்டு பல கழிந்து தலைவனின் வழிவந்த ஒருவன் "அனிச்சம் பூவழகி ----------------------------------- ------------------------------------ கிறங்க வைக்கும் பேரழகி" என்று வெள்ளித்திரையில் பாடியபோது ஏற்பட்ட நம் எண்ண அலைகளின் பதிவே மேற்கூறியதாம்.
 2. நூல் அறிமுகம் - சுப.சோமசுந்தரம் எனது நெருங்கிய நண்பர் பேரா.ச.தில்லைநாயகம் அவர்கள் திருக்குறளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் காலத்துக்கேற்ற எளிய உரையொன்று அளித்திருக்கிறார்கள். இவ்வுரைநூல் இம்மாதம் (ஜூலை 2022) 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்திற்கு அடியேன் அளித்துள்ள அணிந்துரையும், நூலாசிரியர் பேரா.ச.தில்லைநாயகம் அளித்துள்ள நூன்முகமும் நூலுக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும் என நினைக்கிறேன். அணிந்துரை இவ்வையத்திற்கு வாழ்வியல் பாடம் சொன்ன நூல் திருக்குறள் என்பதும், அது காலந்தோறும் காலத்திற்கு ஏற்ப சான்றோரால் பல மொழிகளில் உரை செய்விக்கப்பட்டது என்பதும் உலக அளவில் அறிஞர் பெருமக்களும் தமிழ் கூறும் நல்லுலகில் பாமரரும் கூட அறிந்த ஒன்று. அவ்வாறு நம் காலத்திற்கு உகந்த பார்வையுடன் பேராசிரியர் ச. தில்லைநாயகம் அவர்கள் பாமரரும் உணரும் செவ்விய உரையினைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தர வருகிறார் எனக் கட்டியம் கூறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமை என் பேறு. இவ்வுரையின் சிறப்பியல்புகளான எளிமையையும், காலம் தழுவியமையையும் எடுத்தியம்புவது இந்த அணிந்துரையின் மூலமாக எனது சீரிய பணியாக அமையும் என நம்புகிறேன். அதிலும் இங்கு எளிமை எனும் பண்பு உள்ளங்கை நெல்லிக்கனியாய்க் காணக் கிடைக்கும் ஒன்று. தமிழானாலும் ஆங்கிலமானாலும் உரையினை வாசித்தவுடன் பொருளுணர்ந்து வாசகன் ஒவ்வொரு குறளையும் சரளமாகக் கடந்து செல்லுகையில் உணரற்பாலது இந்த இனிமை கலந்த எளிமை. எனவே இது காலத்துக்கேற்ற உரை எனும் கருத்தினை ஒன்றிரண்டு மேற்கோள்களுடன் சுட்டுவது இந்த அணிந்துரைக்குப் பொருந்தி அமையும். இஃது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்க்கும் முயற்சியாம். "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" "மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்" என நவிலும் 'மக்கட்பேறு' அதிகார உரைகளில் பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பழம்பெரும் உரையாசிரியர்களும், மு. வரதராசனார், கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா போன்ற சில இக்கால உரையாசிரியர்களும் உள்ளது உள்ளவாறு 'மகனை'யே குறிக்கின்றனர். சிற்பி பாலசுப்பிரமணியம் போன்ற தற்கால அறிஞர் பெருமக்கள் மகனுக்குச் சொன்னவாறே உரைத்து, மகளுக்கும் பொருந்தும் எனச் சுட்டுகின்றனர். நம் உரையாசிரியர் பேரா. தில்லைநாயகம் அவர்கள் 'மகன்' என்ற இடத்தில் பிள்ளைகள் என்று உரைக்கும் உரிமையை எடுத்துக் கொள்வது குறிக்கத்தக்கது. குறள் தோன்றிய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விதிவிலக்குகள் தவிர சான்றோர் அவையிலும், சமர் களத்திலும் ஆண்மகனே வந்து நின்றான். எனவே இவ்வகை அறங்களை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்பது அன்றைக்கு செயற்கையானதொரு படைப்பிலக்கியத்திற்கு வழி கோலுவதாய் அமைந்திருக்கும். "இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை" என்று யவனிகா ஸ்ரீராம் என்ற தற்காலக் கவிஞர் 'தடம்' ஏட்டின் நேர்காணலில் சொன்னதை வாசித்த ஞாபகம். படைப்பாளி தன் காலத்திற்குத்தானே எழுத முடியும்? ஊகத்தின் அடிப்படையில் எதிர்காலத்தை எப்படி அவன் நிர்ணயிக்க முடியும்? படைப்பு அவனது காலத்தைக் கடந்து நின்றால், அது அவனை மீறிய தற்செயல் நிகழ்வாகத்தானே அமையும்? காலச்சிறையில் வள்ளுவனே கட்டுண்ட சில இடங்களில் அவனை விடுவிப்பதற்கான நமது உரையாசிரியரின் முயற்சி போற்றத்தக்கது. அவ்விடுதலையே தற்காலச் சமூக விடுதலைக்கு வித்திடும் என உணர்வது ஒரு உரையாசிரியரின் கடமையாகிறது. அதேவேளை பண்பாட்டு மாற்றத்தை அளவறிந்தே செய்துள்ள விதமும் குறிக்கத்தக்கது. எடுத்துக்காட்டாக 'வாழ்க்கைத் துணைநலம்' அதிகாரத்தில் பெண்ணுக்கு சொல்லப்பட்டதே ஆணுக்கும் என்று ஆசிரியர் மெனக்கெடவில்லை. அக்கனவு மெய்ப்படும் வருங்கால உரையாசிரியர்களுக்கு அதனை முன்பதிவு செய்து வைப்பதே இயற்கையானதாய் அமையும்; ஈண்டு அமைந்துள்ளது. மேலும், திருக்குறள் கூட அனைத்து இடங்களிலும் காலத்தைக் கடந்து யோசிக்க இயலாது என்பதை வாசகனுக்கு எங்காவது உணர்த்தத்தானே வேண்டும்! "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்ற குறளுக்கு, "இத்தகையவள் பெய் என்றவுடன் மழை பெய்யும்" என்று உயர்வுநவிற்சியாகப் பெரும்பாலும் ஏனையோர் கூற, நம் உரையாசிரியர், "இத்தகையவள் கணவன் விரும்பும்போதெல்லாம் பெய்யும் மழை போன்றவள்" என்று இயல்பு கூட்டுகிறார். அவ்விடத்தில், "இத்தகையவள், வேண்டும் நேரத்தில் வேண்டிய அளவு பெய்யும் மழை போன்றவள்" என்று மெருகேற்றலாமோ என்று நம் சிந்தனைக்கும் வித்திடுகிறார். தன் காலத்தின் பகுத்தறிவுவாதியான வள்ளுவன், பெரிதும் ஆணாதிக்க சமூகமாக இருந்த கால கட்டத்தில் ஆணுக்குச் சொன்னதை இப்போது பொதுவில் வைப்பது வள்ளுவனுக்கு உடன்பாடாகத்தான் இருக்க வேண்டும். எனவே அவனை, காலத்தை வென்று நிற்க வைத்துள்ளது கருத்து வேறுபாடு ஆகாது என்பதையும் குறித்தாக வேண்டும். காலம் கருதிய பொருள் கொண்டமைக்கு மேலும் சில மேற்கோள்கள் இவ்வணிந்துரைக்கு அணி சேர்க்கும் என நினைக்கிறேன். “மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர்” (அதிகாரம்: கண்ணோட்டம்; குறள் 576) "உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு" (ஊக்கமுடைமை; குறள் 600), "அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்" (பண்புடைமை; குறள் 997) என்ற மூன்று குறட்பாக்களிலும் அநேகமாக உரையாசிரியர்கள் அனைவரும் இரக்கமற்ற, ஊக்கமில்லாத மற்றும் பண்பாற்றோருக்கு மரத்தையே உவமையாகக் கூறியுள்ளனர். இயற்கையில் மரத்தின் மேன்மை கருதிய நம் உரையாசிரியர், வள்ளுவர் இவ்விடங்களில் கூறிய 'மரம்' என்பதை பட்டமரம், மரக்கட்டை என்று விரிவுரைத்தமை அவரது நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்று பகர்வது. பெண்வழிச்சேறலில் (அதிகாரம் 91) மனைவி சொற்படி நடப்பவரைப் பொத்தாம் பொதுவாக இழிவாகக் கூறாமல், பண்பற்ற மனைவியின் சொற்படி நடத்தலை இழிவு எனக் கூறுவது நம் கருத்தினைக் கவர்வது. "மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது" என்பதில், "மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார்" என்று கூறும் உரைகளுக்கு மாறாக, "இல்லற சுகத்தில் அளவுக்குமீறி ஈடுபடுவோர் புகழ்பெறார்" என்று உரையாசிரியர் ச. தில்லைநாயகம் அவர்கள் கூறுவது சமூகத்தில் மனையாளின் மாண்பினையும் காத்து நிற்கும் திறம். வரைவின் மகளிரையும் (அதிகாரம் 92) தற்கால நோக்கில் பாலியல் தொழிலாளர்களாக அணுகும் பாங்கினைக் காணமுடிகிறது. அதே சமயம் அவர்களிடம் மதிமயங்குவதை எக்காலத்திலும் நியாயப்படுத்த இயலாது என்பது மட்டுமின்றி, சில இடங்களில் நியாயப்படுத்துதல் கருத்து வேறுபாடு ஆகும் என்பதையும் உணர்ந்து கயிற்றின் மேல் திறம்பட நடக்கிறார் நம் ஆசிரியர். ஆங்கிலப் பேராசிரியரான ச. தில்லைநாயகம் அவர்கள், ஓரளவு சுமாரான ஆங்கிலம் அறிந்தவர்கள் கூட புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் உரை செய்திருப்பது இவ்வுரைக்கு அணி சேர்ப்பதாகும். மேலும், தமிழ் உரைக்கும் ஆங்கில உரைக்கும் இடையே, சொற் தேடலில் பொருள் சிறிதளவும் வேறுபடவில்லை என்பது சிறப்பு. உதாரணமாக, ஜி.யு. போப் அவர்கள், "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது" எனும் குறளுக்கு "தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்" என்று கொண்டு கூட்டித் தமிழிலும், "Their children's wisdom greater than their own confessed through the wide world is sweet to every human breast" என்று ஆங்கிலத்திலும் தந்துள்ளார். இந்த இரண்டிலும் உள்ளது போன்ற பொருள் வேறுபாடு நமது உரையாசானிடம் தென்படவில்லை. எனவே பொய்யாமொழிக்குத் தற்காலத்தில் எழுதப்பட்ட சிறந்த உரைகளின் வரிசையில் புதிய பரிமாணங்களுடன் இந்நூல் மிளிரும் என்பதில் ஐயமில்லை. இச்சீரிய இலக்கியப் பணியை சமூகப் பணியாகச் சிரம் மேற்கொண்ட பேரா.ச. தில்லைநாயகம் அவர்களுக்கு நம் பாராட்டும் வாழ்த்தும். சுப.சோமசுந்தரம் கணிதப் பேராசிரியர் (ஓய்வு) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி. நூன்முகம் அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள். திருக்குறளின் செழுமையையும் செறிவையும் பலநூற்றாண்டுகளுக்கு முந்தைய தமிழ் மூதாட்டி அவ்வையின் குறட்பா அமைப்பில் அமைந்த இவ்வரிகளைவிட சுருக்கமாகவும் திருத்தமாகவும் யாராலும் சொல்லிவிட முடியாது. இதற்கும் மேலாக இக்குறட்பா பண்டைத் தமிழர்களின் கவித்துவத்துக்கும் அறிவியல் தொழில்நுட்பத்திறனுக்கும் தலைசிறந்த சான்று. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மணக்குடவர், பரிமேலழகர் போன்றோர் முதல் இன்றைய பல்வேறுபட்ட தமிழ்ச் சிந்தனையாளர்களும் தமிழர் அல்லாதவர்களும் திருக்குறளுக்கு உரை எழுதுவதிலும் பிறமொழிகளுக்குப் பெயர்த்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் பேராசிரியர் மு. வ. வின் “திருக்குறள் தெளிவுரை” தற்காலத் தேவைக்கேற்ப எளிமையான மாற்றம் பெற்றது. கடந்த பலபத்தாண்டுகளில் தமிழாசிரியர்கள் மட்டுமின்றிப் பிறதுறை தமிழறிஞர்களும் பிறமொழி தமிழ்ப்பற்றாளர்களும் திருக்குறளுக்கு எண்ணற்ற உரைகள் எழுதியுள்ளனர். பரிமேலழகரைப்போலவே இவர்களும் தாம் புரிந்து கொண்டவாறு பொருளும், தம் நோக்கத்திற்கு உகந்தவாறு விளக்கங்களும் கொடுத்துள்ளனர். அயல்மொழிகளில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பு மலையாளத்தில் 1595இல் தோன்றியது. வீரமாமுனிவர் 1730இல் லத்தீன் மொழியில் அறிமுகப்படுத்தினார். 1794இல் கிண்டெர்ஸ்லி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல்வராகிறார். தொடர்ந்து பிற மொழி பேசும் இந்திய மற்றும் அயலகத் தமிழ் ஆர்வலர்களும் இதன் மொழிபெயர்ப்பில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். உலகப்பொதுமறை என்ற புகழுக்கு ஏற்ப பைபிளுக்கும், குரானுக்கும் அடுத்தபடியான இடத்தை மொழிபெயர்க்கப்பட்ட உலகமொழிகளின் எண்ணிக்கையிலும் மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கையிலும் பெற்றுள்ளது. திருக்குறளுக்கு எனது சிறிய பங்களிப்பாக தமிழ், ஆங்கில உரைகளோடு ஒருசில வரிகளில் ஒவ்வொரு அதிகாரத்தின் கருத்தையும் கொடுத்துள்ளேன். . ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருந்தும் இன்றளவும் தமிழில் வெளியாகும் நூல்களில் திருக்குறளே அதிக அளவில் எடுத்தாளப்படும் பெருமைக்குரியதாக இருக்கின்றது. ஆண்டுதோறும் திருக்குறளை மையமாக வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவருகின்றன. தமிழகக் கோவில்களிலும் பொதுவெளிகளிலும் திருக்குறள் சொற்பொழிவுகள் பெருமளவில் நடைபெறுகின்றன. ஒரு சில குறள்களையாவது மனத்தில் இருத்தி வேண்டிய வேளைகளில் பொருத்தமாகப் பயன்படுத்தாத தமிழர்களே இல்லை எனலாம். ஒருவரை அறிவுரை சொல்லித் திருத்த வேண்டிய வேளையில் திருக்குறளின் துணையை நாடுவோரை எங்கும் பார்க்கலாம். குறள்களில் காணப்படும் கருத்தைக் கவித்துவத்துடன் எளிதாக விளக்கிச்சொல்லும் பல சொற்றொடர்கள் தமிழ்ப் பேச்சுவழக்கில் எண்ணிலடங்கா. எடுத்துக்காட்டாக, ‘நீர் இன்றி அமையாது உலகு’, ‘கற்க கசடற’, ‘கற்றனைத்தூறும் அறிவு’, ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். தமிழகத்தின் தலையாயச் சிந்தனையாளர்களும் அறிவாளிகளும் தாம் திருக்குறள் வாசிப்பிலிருந்து பெற்ற பயன்களை மிகச்சிறப்பாக இயம்புகின்றனர். பல அறிஞர்களின் நுட்பமான, புதுமையான, வியக்கத்தக்க விளக்கங்கள் நம் சிந்தனையைத் தூண்டிப் பரவசப்படுத்துவதாக இருக்கின்றன. அதேநேரத்தில் தமிழகத்தை ஆளத்துடிக்கும் அரசியல்வாதிகள் தமிழக மக்களைத் திசைதிருப்பி தம்வயம் கொண்டுவருவதற்கும் திருக்குறளைப் பயன்படுத்துகின்றனர். இன்றைய சூழலில் நானும் திருக்குறளின் பெருமைகளைப் புகல்வது மிகையானது. ஆனால் இந்நூலை முயன்று முடித்ததற்கான காரணம் என்னிடமும் சில புதிய விளக்கங்கள் உள்ளதால் தான். “தொட்டனைத்தூறும் மணற்கேணி” எனும் வள்ளுவர் வாய்மொழிக்கு வள்ளுவமே நிகரற்ற சான்று.. திருக்குறளை அறிந்துகொள்ள ஆர்வம் அதிகரித்து வரும் இச்சூழலில் நான் பல தமிழ், ஆங்கில உரைகளைப் படித்த போது அவற்றைவிட இன்னும் எளிமையாக, தெளிவாக, சுருக்கமாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சொல்லமுடியும் என்று தோன்றிய நம்பிக்கையும் இம்முயற்சிக்கு மற்றொரு காரணம். இந்நூலின் தனித்துவம், திருக்குறளை இன்றைய முற்போக்குக் கருத்துக்களுக்கும் பெண்ணுரிமைச் சிந்தனைகளுக்கும் இடம்கொடுத்து முற்போக்காளர்களும் பெண்ணியமும் முன்னெடுத்தச் சொற்களைப் பயன்படுத்தி உரை காணமுடியுமென்று காட்டியுள்ளதே. எந்தவொரு பிரதியும் வாசகனின் வாசிப்பில் தான் பொருள் கொள்கிறது. இவ்வழியில் அறநூல்களின் எல்லாக்காலத்துக்குமான பொருத்தப்பாட்டையும் தேவையையும் நிலைநாட்ட முடியும். இந்நூல்வழி தமிழக மக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். உரையாடலில் முடிந்தளவு ஆங்கிலக்கலப்பைத் தவிருங்கள். தமிழிதழ்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் முதலாக எங்கும் எதிலும் காணப்படும் கட்டுப்பாடற்ற ஆங்கிலக்கலப்பு தமிழ்மொழியை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என்பது திண்ணம். “சூப்பர்”, “ரீட்பன்னி”, “ரைட்பன்னி” போன்ற சொல்லாடல்களையாவது முற்றிலும் நீக்கிவிடுங்கள் என வேண்டி நிற்கிறேன். அன்புடன், ச. தில்லைநாயகம்
 3. ஆறு வயதில் விதவையான ஒரு பாட்டி எங்கள் அருகாமையில் வாழ்ந்தார்கள். அக்கொடுமையையெல்லாம் நம் சமூகம் கடந்து வர எத்தனையோ காலம் ஆனது. அதுபோல் இதுவும் கடந்து போம். ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும் - Robert Frost ன் வரிகளைச் சுட்டு இவ்வாறு சொல்லத் தோன்றுகிறது: Miles to go before you sleep And miles to go before you sleep with the gender you like. அடிக்கோடிட்ட பகுதி அடியேன் சேர்த்தது.
 4. ஓய்வூதியம் - சுப. சோமசுந்தரம் திருநெல்வேலி மாவட்டம் காரியாண்டி என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி தாத்தா தமது தொண்ணூறு வயதிலும் பனையேறும் தொழில் செய்து தம்மையும் தமது மனைவியையும் காப்பாற்றிக் கொள்கிறார் எனும் தகவல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அவர் போற்றுதலுக்குரியவர்; போற்றப்பட்டார் என்பது சரிதான். காட்சித் திரையில் இதனைக் கண்ட ஒவ்வொருவரும், "நம்மிடையே வாழ்வையே சாகசமாக ஏற்று இப்படி ஒருவர் வாழ்கிறார் !" என்று பெருமிதத்தில் நெஞ்சு விம்மியது வரை கூட சரிதான். "நம்மிடையே அரைசாண் வயிற்றுக்காக ஒருவரை தள்ளாத வயதிலும் அல்லல்பட வைத்தோமே !" என்னும் குற்ற உணர்வு இச்சமுகத்தில் எவருக்கேனும் ஏற்படவில்லை எனில் அது சரிதானா? ஆரம்பக் காலத்தில் இருந்தே சோம்பேறித்தனமாய்ப் பிச்சை எடுத்து வாழ்பவர்கள் முதுமையில் அல்லலுறுவதை நாம் பேச வரவில்லை. தமது பன்னிரெண்டு வயது முதல் (அன்று குழந்தைத் தொழிலாளராய்) தொண்ணூறு வயது வரை பனையேறும் உழைப்பாளிக்கு இச்சமூகம் பனையின் உச்சியிலேயே சமாதி கட்டி விடுமோ ! சமூக வலைத்தளங்களின் மூலமாக இவர் பற்றிய செய்தி அரசின் கவனத்தை ஈர்த்ததால் துரைப்பாண்டி தாத்தாவிற்கும் அவரது துணைவியார் வேலம்மாள் பாட்டிக்கும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்க வழி செய்யப்பட்டது ஓரளவு ஆறுதல் செய்தி. சமூகத்தில் வெளிச்சத்திற்கு வராத துரைப்பாண்டியர் எத்தனை பேரோ ? வாழ்வில் பெரும்பகுதி விவசாயத் தொழிலாளர்களாகவும், கட்டுமானப் பணியாளர்களாகவும், தனியார் கடை ஊழியர்களாகவும், இன்ன பிற தொழிலாளர்களாகவும் இச்சமூகத்தில் களமாடியோர் முதுமையில் எப்படி வாழ்வார்கள் என்று இச்சமூகமோ அரசுகளோ பெரிய அளவில் நினைத்துப் பார்த்ததுண்டா ? சிறிய அளவில் அவர்கள் நினைக்கப்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். "பணியாளர் வருங்கால வைப்பு நிதியகம்" (Employees Provident Fund Organization - EPFO) என்ற அரசின் அமைப்பிற்கு பணியாளரும் பணி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரும் மாதந்தோறும் பங்களிப்புச் செய்து வரும் பட்சத்தில், இருபது வருடங்களுக்குப் பிறகு சேர்ந்த தொகையுடன் மாதந்தோறும் ஒரு சிறிய ஓய்வூதியம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது கால அளவிற்கு ஏற்ப வளரும் தன்மையுள்ள ஓய்வூதியம் அல்ல. இன்று மாதம் ரூபாய் ஐயாயிரம் என்று நிர்ணயிக்கப்படும் ஓய்வூதியம் பத்து வருடங்களுக்குப் பிறகும் ரூபாய் ஐயாயிரம் என்று இருப்பது எவ்வகையில் நியாயம் ? மேலும், பணிக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தில் பழகியவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் ஓரளவு அத்தரத்தில் வாழ வகை செய்வதே சரியான ஓய்வூதியமாய் அமையும். பசியினால் வாடுவது மட்டும் வறுமையன்று; வாழ்க்கைத் தரம் அதல பாதாளத்திற்கு செல்வதும் வறுமைதான். நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த நோக்கில்தான் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் EPFO தரும் ஓய்வூதியமோ ஒன்றுமில்லாததற்கு ஏதோ பரவாயில்லை (Something is better than nothing) என்ற வகையிலேயே உள்ளது. இந்நிலையை மாற்றி வாழ்வில் பெரும்பகுதி பணியாற்றியவர்களை எவரிடமும் கையேந்தாமல் வாழ வைப்பது எங்ஙனம் என்று சிந்தித்துச் செயலாற்றுவதே ஒரு சோஷலிச ஜனநாயகமாக இருக்க முடியும். அதை விடுத்து அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கிற நியாயமான ஓய்வூதியத்தையும் நிறுத்துவது சமூகத்தின், அரசுகளின் அராஜகப் போக்கு என்று தான் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் விடியலைத் தருவது தானே சமத்துவம் ? வெளிச்சத்தில் உள்ளோருக்கும் விளக்கை அணை என்பதுவா சமத்துவம் ? எல்லோரையும் ஏற்றி விடு என்றால், அதற்கு மாறாக படியில் ஏறியவர்களையும் இறக்கி விடு என்பதுவா சோஷலிசம் ? "பணத்திற்கு எங்கே போவது ?" என்று யாரோ ஒரு அரசியல்வாதி முதலாளியைப் போல் கர்ஜிக்கும் செய்தி வரும் அதே பக்கத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கிய பல ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தியும் வருகிறது. "அரசு வருவாயில் பெரும்பகுதி ஊழியர்களின் சம்பளத்திற்கும் ஓய்வூதியத்திற்குமே செல்கிறது" என்று நம்பத் தகுந்த பொய்யினைச் சொல்லும் நிதி அமைச்சரே சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எந்த எதிர்ப்புமில்லாமல் (!) உயர்த்திக் கொள்கிறார். எத்தனை முறை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் தனித்தனியே அன்னாருக்கு ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. ஓய்வூதியத்தின் நோக்கமே ஒருவர் முதுமையில் கௌரவமாக வாழ வழி செய்வதுதானே ? அப்புறம் அதில் என்ன கௌரவம் ஒரு தரம், கௌரவம் இரண்டு தரம் என்று ஏலம் எல்லாம் ? இந்த முதலாளித்துவப் பார்வையில், பலம் குறைந்த பொதுவுடமைக் கட்சிகளைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கு அல்ல. இது ஏதோ பாசிச அணுகுமுறை கொண்ட தற்காலத்து பாஜக அரசினால் கொண்டுவரப்பட்டது என்று சொல்வதற்கில்லை. பொருளாதார மேதை என்று பெரிதும் கொண்டாடப்படும் மனமோகன் சிங் சார்ந்த காங்கிரஸ் அரசின் கைங்கரியம் என்று தான் சொல்ல வேண்டும். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஏதோ பேட்டியில், மனிதர்களின் வாழ்நாள் கூடிவிட்டதை பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் (ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்குப் பெயர் 'புதிய ஓய்வூதியத் திட்டம்') கைவிடுவதற்கான ஒரு காரணமாகச் சொன்ன நினைவு. மனிதருக்கு நாகரிகமான ஒரு காரணம் அன்று கிடைக்கவில்லையோ, என்னவோ ! பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாய் இரு தேர்தல்களில் வாக்குறுதி தந்த ஜெயலலிதா இரண்டாவது ஆட்சி காலம் முடியும் தறுவாயில் அதனைப் பரிசீலிக்கக் குழு ஒன்றை அமைத்தார். திட்டத்தை நிறுத்தும் போது இல்லாத பரிசீலனைக் குழு மீண்டும் அமல்படுத்துவதற்கு மட்டும் ஏன் ? ஒரு அடிமை அரசின் முதல்வராயிருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு வாய்ப்பே இல்லை என்று எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் வெகு சாதாரணமாகப் பேசியது மனதை விட்டு அகல்வதாய் இல்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்காத திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் மீண்டும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் சேர்த்ததும், பின்னர் ஆட்சி அமைந்ததும் தனது நிதியமைச்சரை அதற்கு எதிராகப் பேச வைத்து வேடிக்கை பார்த்ததும் கயமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. மாநில வருவாயில் பெரும் பகுதி அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கே செல்கிறது என்பது எந்த போதி மரத்தின் கீழ் தோன்றிய ஞானோதயம் ? தேர்தல் வாக்குறுதியின் போது அப்போதி மரம் கண்ணில் தென்படவே இல்லையா ? ப.சிதம்பரமும் பழனிவேல் தியாகராஜனும் சொல்லும் போது அவர்களையும் மீறி ஒரு பண்ணையார்த்தனம் வெளிப்படுவதை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல இயலவில்லை. வளர்ச்சித் திட்டங்கள் பற்றி வாய்ப்பு கிழியப் பேசும் இன்றைய அரசியலாளர்க்கு தனிமனித வாழ்வு மேம்பாடு வளர்ச்சித் திட்டமாய்த் தோன்றாதது விந்தையானது. ஓய்வூதியத்திற்கு எதிராக முதலாளித்துவ ஜனநாயக அரசியல்வாதிகள் தான் நிற்கிறார்கள் என்றில்லை. "லஞ்ச ஊழலில் திளைக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஒரு கேடா ?" எனக் கேட்கும் வெகுசனத்திற்கும் குறைவில்லை. அத்தகையோர்க்கு நாம் கூற விரும்புவது, "மனித வரலாறு தெரிந்த நாள் முதல் தனி மனிதர்கள் பெரும்பாலும் பேராசை பெற்றவர்களாகவும், நினைத்தவற்றை அடைய சிறிய பெரிய தீவினை புரிபவர்களாகவுமே வாழ்ந்து வருகிறார்கள். இதனைக் கூறுவதால் நாம் லஞ்ச லாவண்யங்களை நியாயப்படுத்த எண்ணவில்லை. தீவினைக்கான வழிகளை அடைக்க முயல்வதே சமூகத்தில் நீதி நெறியை நிலை நாட்டுமே தவிர, ஒவ்வொரு மனிதனும் நியாய உணர்வுடன் செயல்படுவான் என்று எதிர்பார்ப்பது இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது. வலுக்கட்டாயமாக நல்வழி கைகூடுமா எனில் கைகூடும் என்றே தோன்றுகிறது. உதாரணமாக, அக்காலத்தில் கடவுச்சீட்டு (Passport) வாங்கியதற்கும் இக்காலத்தில் பெறுவதற்கும் எவ்வளவு வேறுபாடு ? சல்லிக்காசு யாருக்கும் தராமல் கால விரயமுமின்றி இன்று எவ்வாறு கைகூடியது ? மனிதர்கள் ஒட்டுமொத்தமாகத் திடீரென்று திருந்திட வாய்ப்பே இல்லையே !அங்கு அதனை நடைமுறைப்படுத்திய தானியங்கி (automation) முறையை ஒவ்வொரு துறையிலும் நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்களுக்கு ஒழுக்க உறுதிப்பாடு (moral conviction) வேண்டும். அப்படிச் செய்தால் தம் வருமானமும் போய்விடுமே என்றெண்ணும் ஆட்சியாளர்களால் நல்ல ஊழியர்களையும் குடிமக்களையும் உருவாக்க இயலாது. எனவே ஊதியம், ஓய்வூதியம் பற்றிப் பேசும்போது மட்டும் பெரும்பாலும் 'தீவினைக்கான வாய்ப்பின்மை ஒழுக்கசீலர்'க்கு நன்னெறியும் நேர்வழியும் கண்ணில் தெரிவது ஒரு வேடிக்கையான வாடிக்கை. இருப்பினும் நாம் கூறியது போல் நடைமுறைகளைச் செப்பனிடுவது மூலமாகவும், ஊழல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்குவது மூலமாகவும் அரசு இயந்திரத்தைச் சீர் செய்வது ஊதியம், ஓய்வூதியம் இவற்றிற்கு அப்பாற்பட்டு நமக்கான சமூகக் கடமை. இறுதியாக தனிப்பட்ட முறையில் ஒன்றிரண்டு வார்த்தைகள். வாழ்க்கையில் பணம்தான் எல்லாம் என்றில்லை. ஆனால் பணம் இல்லாமல் எதுவும் இல்லை - குறிப்பாக முதுமைக் காலத்தில். சாகப் போகிறவனிடம் உன் கடைசி விருப்பம் என்னவென்று கேட்பார்களே ! கேட்காமலேயே நான் சொல்கிறேன் : பழைய ஓய்வூதியத் திட்டத்தினால் எனக்குக் கிடைத்த அமைதியான வாழ்க்கை உலகில் வயதான ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். ஓய்வூதியரான என் தந்தையாரின் மறைவுக்குப் பின் குடும்ப ஓய்வூதியரான என் தாய்க்குக் கிடைத்த நிம்மதியும் பெருமிதமும் இவ்வுலகில் ஒவ்வொரு தாய்க்கும் கிடைக்க வேண்டும். தாங்கிப் பிடிக்கப் பிள்ளைகள் நாங்கள் இருந்தாலும், தம் கணவர் ஊழியம் செய்த அரசினால் எனது தாயார் இவ்வுலகில் பிள்ளைகளைக் கூட எதிர்பார்க்கும் நிலையில் இல்லை; இக்கர்வம் தரும் நிவாரணத்தை எந்த மருந்தும் தருவதில்லை என்பது என் தாய் வெளிப்படையாய்ச் சொல்லாமல் உணர்வால் தரும் செய்தி. அரசு ஊழியரோ தனியார் ஊழியரோ "யாம் பெற்ற அமைதியினை வாழ்விலும் சாவிலும் பெறுக !" என்பதே செல்லாக் காசு எனத் தெரிந்தும் நான் எழுத விரும்பும் உயில்.
 5. குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பங்கள் நமது மற்றும் அரசின் அனுதாபத்திற்கும் ஆதரவிற்கும் உரியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பேரறிவாளன் சந்தித்த வழக்கு எத்தகையது ? அன்றைக்கு இந்தியாவில் தடைசெய்யப்படாத ஒரு இயக்கத்தின் ஆதரவாளவாராக ஒரு பத்தொன்பது வயது இளைஞன் இருந்தது இயற்கையான ஒன்று. பேட்டரியை சொன்ன இடத்தில் கொடுக்கத்தான் பணிக்கப்பட்டிருப்பாரே தவிர, அது எதற்காக என்று அந்த செயலில் முதல் நிலையில் இருந்தோர் தவிர வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தாம் காரணத்தை அறிந்திருக்கவில்லை என அவர் தந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்யாதது விசாரணை அதிகாரி தியாகராஜனின் குற்றம் (பணியில் இருந்தபோது இவ்வளவு பெரிய விடயத்தை மறைத்தது கவனக் குறைவாக இருந்திருக்க வாய்ப்பில்லை). இருப்பினும் ஓய்வுபெற்ற பின்னர் நீதிமன்றத்தில் அதை ஒத்துக் கொண்டது வழக்கின் திருப்புமுனை (மனசாட்சி விழித்துக் கொண்டதோ என்னவோ !). சுருக்கமாக பேரறிவாளன் மீதான வழக்கு இவ்வளவுதான். இதற்கு 31 வருடக் கடுங்காவல் நியாயம்தானா ? மரண தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன் கால அவகாசம் நீட்டிக்கப்பெற்று அவர் தப்பித்தது பெரிய விடயம். அக்கால கட்டத்தில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தம் மரணத்தை விடக் கொடியது என்பது வேறு. ஒரு முன்னாள்/அந்நாள் பிரதமரின் கொலை எவ்வளவு பெரிய சூழ்ச்சியின் விளைவு எனக் காட்ட, இயன்ற வரை நிறையப் பேரை அதில் சிக்க வைப்பது காலங்காலமாய் நிகழும் கொடுமையாகத் தெரிகிறது. இந்திரா காந்தி கொலை வழக்கில், துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலர்கள் பியாந்த் சிங், சத்வந்த் சிங் தவிர பெரிய அளவில் யாரும் சிக்கவில்லை என்பதற்காகவே சத்வந்த் சிங்கின் உறவினர் கேஹார் சிங் சிக்க வைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. கேஹார் சிங் நிலை மிகவும் கொடுமை. கொலைக்கு மூன்று மாதங்கள் முன்பு பொற்கோயிலுக்குக் குடும்பமாகச் சென்ற போது, அவரும் சந்த்வந்த் சிங்கும் தனியாகச் சென்று உரையாடியதற்கான சாட்சி மட்டுமே உண்டு. "ஏதோ சதித் திட்டமன்றி வேறு எதற்காகக் குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்து தனியாக உரையாட வேண்டும்?" என்று தீர்ப்பில் உள்ளதாக வாசித்த நினைவு. பெரும் வேடிக்கையாகப் பரிகசிக்கப்பட்ட ஒன்று. குல்தீப் நய்யார் போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் எவ்வளவோ முயன்றும் கேஹார் சிங்கைத் தூக்கிலிருந்து காப்பாற்ற இயலவில்லை. கேஹார் சிங் அளவிற்கு பேரறிவாளன் துரதிர்ஷ்டசாலி இல்லை என்பது நமக்கான சிறிய மகிழ்ச்சி. நல்லோர் பலர் பேரறிவாளன் பக்கம் நின்றதும் வென்றதும் வரலாற்று நிகழ்வு. தீர்ப்பில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் அதிகார வரம்பு சுட்டிக் காட்டப்பட்டது மற்றொரு வரலாற்று நிகழ்வு. குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோர் பேரறிவாளனின் விடுதலையை எதிர்ப்பது வெறும் உணர்ச்சிக்கு அடிமையாவது; வருத்தத்திற்குரியது.
 6. பெரும்பேறு - சுப. சோமசுந்தரம் எழுத்துலகில் பழகுநன் என்ற முறையில் என்னைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். எனது எழுத்துகளில் இலக்கியம் சார்ந்த எழுத்து தவிர ஏனையவை என்னைச் சுற்றிய உலகின் நிகழ்வுகளாகவே அமைவதை உணர்கிறேன். எழுதுபவர்களில் பெரும்பாலானோர்க்கு அவரவர் மனதிற்குப் பிடித்த பாணியே அமையும் என்பது காரணமாக இருக்கலாம். அல்லது கற்பனை வளம் குறைவானதும் காரணமாயிருக்கலாம். எது எப்படியாயினும் வருவதைத்தானே எழுத முடியும் ? மேலும், நம்மை மீறிப் பொங்கி வருவதுதானே எழுத்தாய் அமைய முடியும் ? இனி இன்றைய என் எழுத்து. மூத்தோர் நலனும் அவரைப் பேணலும் பண்பட்ட சமூகத்தின் தலையாய கடமைகளில் ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் துலங்கி நிற்பது. எனவே தமிழ்ச் சமூகத்தில் அதன் சிறப்பிடத்தைத் தனியாய்ச் சொல்லவேண்டியதில்லை. இருப்பினும் இது தொடர்பில் உடனே நம் எண்ணத்திரையில் ஓடுவது சிலப்பதிகாரக் காட்சி - மதுரைக்காண்டம் புறஞ்சேரி இறுத்த காதை. தன்னுடன் புலந்து கண்ணகியுடன் மதுரை நோக்கிச் செல்லும் கோவலனுக்கு மாதவி விடுத்த மடலில், "குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது" என்கிறாள். 'குரவர் பணி அன்றியும் - மூத்தோர்க்கு (இங்கு பெற்றோர்க்கு எனக் கொள்வது பொருத்தம்) ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்தது மட்டுமல்லாது, குலமகளோடு (கண்ணகியோடு) இரவோடு இரவாக தாங்கள் ஊரை விட்டுச் செல்லும் அளவிற்கு என் பிழை யாது என்பது அறியேன் (என் பிழைப்பு அறியாது)' என்கிறாள் மாதவி. மாதவியின் மூலமாக இளங்கோவடிகள் குரவர் பணியைத் தலையாயதாய் வைத்தமை இங்கு போற்றி உணரத்தக்கது. ஊழல் மலிந்த சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நேர்மையாளர்கள் ஒளிர்வதை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருதல் சமூகத்தைச் செப்பனிட வழிவகுக்கும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதுபோலவே, முதியோர் இல்லங்களை நிரப்பும் காலகட்டத்தில் பெற்றோரைப் பேணும் பிள்ளைகளையும், அதற்கான தகைமையும் புரிதலும் உள்ள பெற்றோரையும் நாம் கடந்து செல்லுகையில் சற்று நிதானித்து அவர்களையும் பதிவிடுதல் சமூக நன்மைக்கு வழிகோலும் எனும் எண்ணவோட்டமே இக்கட்டுரை. உறவுமுறையில் எனக்குச் சற்று தூரத்து உறவாக இருப்பினும் மனதளவில் நெருக்கமானவர்கள் நம் கதைமாந்தர். திரு. தாயுமானசுந்தரம் - திருமதி. விஜயகோமதி (கோமதி என்று சுருங்கி, பின்னர் கோமா என்றே இளம்பிராயத்திலிருந்து அழைக்கப்பட்டார்) தம்பதியரின் திருநிறைச்செல்வன் நாராயணன் என்ற சங்கர். வைணவமும் சைவமும் தனது ஒரே பெயரில் வாய்க்கப் பெற்றவன். சங்கரநாராயணன் என்று வைத்திருக்கலாமே என்று நாம் கேட்பதற்கு அவனது பெற்றோர் இப்போது இல்லை. உறவு முறையில் அவன் எனக்கு மைத்துனன். அவனது சகதர்மிணி ஜெயகோமதி. நிஜத்தைக் கதையாய் வடிப்பவர்கள் கதைமாந்தர் பெயர்களை எழுதுவதில்லை. அடியேன் அவர்களது பெயர்களை எழுத முற்பட்டதற்குக் காரணம் அவர்கள் பாடல் பெறத் தகுதியானவர்கள் என்பதேயாம். தாய்-தந்தை, மகன்-மருமகள் என்று ஒரே வீட்டில் இரண்டு கச்சிதமான தம்பதியர் அமைந்தால் அவ்வீடு கோயிலன்றி வேறென்ன ? கதையின் திறப்புக் களத்திலேயே திரு. தாயுமானசுந்தரம் அவர்கள் ஒரு பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர். நம்மைச் சுற்றிய உலகில் ஆங்காங்கே நாம் காணும் பொறுமையின் சிகரங்கள் எல்லாம் ஏதோ ஒரு காலத்தில் அவரிடம் மாணாக்கராய் இருந்திருக்க வேண்டும். அவரது இல்லத்தரசியார் திருமதி. விஜயகோமதி அன்பை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள். நான் அவர்களது அக்காவின் மகளைக் கட்டிய மருமகனுக்கு அண்ணன் (இப்போதே கண்ணைக் கட்டுகிறதா ?) என்றபோதிலும், நானும் என் மனைவியும் எப்போதோ அவர்கள் இல்லத்திற்குச் சென்ற போதெல்லாம் அவர்களது சொந்த மருமகன் - மகள் போல அங்கு நடத்தப்பட்டது இயக்குனர் விக்ரமன் பட சென்டிமென்ட் போல எவருக்கும் தோன்றலாம். மானிடத்தின் மீது அவர்கள் கொண்ட அன்புக்கு இது சான்று பகர்வது. "உயிர்களிடத்தில் அன்பு வேணும்" எனும் பாரதியின் வரிகளுக்குச் சான்று வேண்டுமா? இதோ - நான்கைந்து பூனைகள் திருமதி. விஜயகோமதி அவர்களைச் சுற்றி வரும். "ஏய், இங்கே உட்காரு ! தோசை ஆறினதும் உனக்குத் தருவேன்" என்று சொன்னவுடன் அந்தப் பூனையும் அவர்கள் சுட்டிய இடத்தில் நல்ல பிள்ளையாய் அமர்ந்து கொள்ளும். எந்தப் பூனைக்கு என்ன பிடிக்கும் என்பதை அவர்கள் ரசித்துச் சொல்லும்போது நம்மில் சிலருக்குச் சற்று அதிகப்படியாகத் தோன்றலாம். அவர்கள் வீட்டில் உள்ள அந்த ஒரே நாயை 'தம்பி' என்று அழைப்பதும், அந்த நாய் பூனைகளிடம் தன் இனத்துக்கே உரிய சேட்டைகளைச் செய்யாமல் சாந்தமாய் இருப்பதும் எங்கேயோ எப்போதோ வாசித்ததைப் போன்ற பிரமிப்பு. இவ்வளவிற்கும் செல்வச் செழிப்பு வாய்ந்த குடும்பம் என்றில்லை. மனதளவில் அளப்பரிய செல்வம் வாய்த்த நடுத்தரவர்க்கம். "உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்" என்ற பாரதியின் வரிகளையே "உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம் தானே எனும் உண்மை அறிதல் வேணும்" என்று மாற்றும் துணிவு திருமதி. விஜயகோமதி அவர்களைப் பார்த்த பின் எனக்கு ஏற்பட்டது. அறுபது வயதைத் தொட்டால் தலை சுற்றிக் கீழே விழுந்து தலையில் அடிபட வேண்டும் என்பதில்லை. ஆனால் திருமதி. விஜயகோமதி அவர்களுக்கு நேர்ந்தது. உயிருடன் நினைவற்ற நிலைக்குச் சென்றார்கள். "கோமா" என்று வாஞ்சையுடன் உற்றார்- உறவினரால் அழைக்கப்பட்டவர்கள் 'கோமா' நிலைக்குச் சென்றது இந்த நிஜக்கதையில் ஒரு அவலச்சுவை. அவர்களது குடும்பத்தின் நல்ல நண்பரான மருத்துவர் உயர்திரு. மங்களா இரவீந்திரன் அவர்கள் தம் மருத்துவமனையில் சிகிச்சை செய்து சிறிது காலம் பேணி, அந்த நிலையிலேயே இல்லத்தில் வைத்துப் பார்த்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை என்ற நிலையில் திருமதி. விஜயகோமதி அவர்கள் குடும்பத்தாரிடம் (அந்த மூன்று பேர்தான்) ஒப்படைக்கப்பட்டார். எப்போதும் அவர்களின் சேவைக்கானவராய் மருத்துவ நண்பர் விளங்கினார். தெய்வாதீனமாக இந்நிலையிலிருந்து சிலர் தேறியுள்ளது கடலில் அவர்களுக்கான கட்டுமரம். மகன் சங்கர் பெரிய வருமானம் தரும் பணியில் இல்லாவிட்டாலும், சிறிய நிரந்தர வருமானமும் அலைச்சலும் உள்ள பணியில் இருந்தான். கணவர் திரு. தாயுமானசுந்தரம் அவர்களின் சுமாரான ஓய்வூதியமும் உண்டு. மாமியாரை முழுநேரமும் வீட்டில் இருந்து கவனிக்க ஏதுவாக மருமகள் ஜெயகோமதி தான் பார்த்துக் கொண்டிருந்த சிறியதொரு வருமானம் தரும் வேலையை உதறினாள். கண்திறந்து சுற்றுமுற்றும் கவனிக்கும் அளவு திருமதி. விஜயகோமதி அவர்களின் உடல்நிலையில் சிறியதொரு முன்னேற்றம் ஏற்பட்டது மட்டுமே உண்மை. வேளாவேளைக்கு எந்தக் குறையும் இல்லாமல் திரவ உணவு மட்டுமே. கண்ணசைவும் முகத்தில் தோன்றிய உணர்ச்சி மாற்றங்களுமே அவருக்கான மொழியாக மாறின. தனக்குத் திருமணமாகி சுமார் ஆறு வருடங்கள் மகள் போலவே தன்னைப் பாவித்த மாமியாரைத் தன் மகளாகவே மருமகள் கவனித்தாள். வேலைக்குச் சென்ற தனக்குக் காலையில் எழுந்து சமையல் செய்து, தலை வாரிவிட்டுப் பேணிய மாமியாரைக் குளிப்பாட்டிச் சுத்தம் செய்து தலை வாரி, நெற்றியில் திலகமிட்டுப் பேணிப் பாதுகாத்தாள். மாமியாரே மகள் ஆகப்போவதாலோ என்னவோ, அவளுக்குக் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. அவர்களுக்கு வரும் சிறிய ஓய்வூதியத்தை எல்லாம் மீறி இயன்ற வசதிகளை எல்லாம் செய்து பேணினான் பெறற்கரிய பேறான பெற்ற மகன் சங்கர். படுக்கைப் புண்கள் (Bedsores) ஏற்படக் கூடாது என்பதற்காக நீர் அடைத்த மெத்தை (Water bed), கோடைக்காலத்திற்காக குளிர் மின்சாதனம் (air conditioner) என்று தான் பார்த்திராத விஷயங்களைக்கூட ஈன்று புறந்தந்த தன் தாய்க்காகச் செய்திருந்தான் அத்தனயன். அதுவும் தாய்க்குக் குளிர் அதிகமானால் அவளால் சொல்லக்கூட முடியாதே என்று எண்ணிப் பக்கத்து அறையில் குளிர் சாதனத்தை வைத்தான். ஊழிக்காலம் வரை தன் தாயை வாழவைக்கும் முனைப்பு அதில் தெரிந்தது. தாயின் கண் எதிரே சுவற்றில் பெரிய LED TV யை மாட்டியிருந்தான். அதையெல்லாம் பார்த்து அம்மாவுக்கு முழுமையான நினைவு வந்து விடாதா என்ற ஏக்கம் போலும். வடிவேலு காமெடியைப் பார்க்கையில் தாயின் முகமலர்ச்சியைக் கண்டு அபரிமிதமான ஆனந்தம். இந்த நிலையில் இருப்பவரைக் கூட தன் உடல்மொழியால் மகிழ்விக்க முடியும் என்று அறிந்தால் வடிவேலுக்கே அளப்பரிய ஆனந்தம் ஏற்படும். மற்றபடி திருமதி. விஜயகோமதி அவர்களால் வளர்க்கப்பட்ட அக்கா மகளும் எனது தம்பியான மருமகனும் வார இறுதி நாட்களில் தவறாத ஒரு கடமையாக அவர்களைப் பார்க்கச் சென்று கவனித்ததால் அவ்விருவரும் அவர்கள் நினைவில் நின்றார்கள். திருமதி. விஜயகோமதி அவர்களின் இந்நிலைக்குப் பின்னர் சுமார் நான்கு ஆண்டுகளில் கணவர் திரு. தாயுமானசுந்தரம் அவர்கள் இரத்த சோகையினால் (anemia), திடீரென்று காலமானார்கள். அவர்கள் நோயுற்றிருந்தாலும் படுக்கையில் விழாததால், தந்தைக்குப் பணி செய்யும் வாய்ப்பு மகனுக்குக் கிடைக்கவில்லை. கணவர் மறைந்தது மனைவிக்கு புரிந்தது போல் தெரியவில்லை. அவ்வப்போது யாரையோ தேடும் கண் அசைவையும் முக பாவனையையும் வைத்து அவர் கணவரைத் தேடுகிறார் என்பது முழு உணர்வுடன் வாழும் நம் கற்பனை. வழக்கம் போல் தனக்கு நெற்றிப் பொட்டு வைக்காமல் அவள் மட்டும் வைத்திருக்கிறாள் என்று மருமகளை மிரட்சியுடன் பார்ப்பதாய் மகன்-மருமகளின் கற்பனை. எனவே விதவையான பின்பும் உலக வழக்கு ஒழித்து திருமதி. விஜயகோமதிக்கு நெற்றிக் குங்குமம் இட்டு, தலையில் தவறாது பூச்சூடி விட்டாள் மகள் ஒத்த மருமகள். மேலும் அந்த அம்மாவைப் பொறுத்தவரையில் கணவர் மறைந்திருக்க வாய்ப்பில்லையே ! சுமார் ஐந்தரை ஆண்டுகள் வேறு எவருக்கும் பெரும் போராட்டமாய் இருந்திருக்கும் வாழ்வை எந்தப் போராட்டமும் இன்றி நிம்மதியாய் வாழ்ந்து ஒரு அமைதியான இரவில் நிறைவு செய்தார் திருமதி. விஜயகோமதி. மகன், மருமகள் இருவரிடமும் போராட்டத்திற்கான எவ்விதச் சோர்வும் தெரியவில்லை. போராளிகள் சோர்வடைவது இல்லை. தோல்வி அடைவதும் இல்லை. சாதாரணமாக செல்வந்தர் வீட்டில் கூட இத்தனைக் காலம் படுக்கையில் கிடந்தவர் உடல் சுருங்கி, முகம் முற்றிலுமாக மாறிப் போகவே வாய்ப்பு உண்டு. ஆனால் இவரோ நல்ல நினைவுடன் வாழும் போது இருந்த தோற்றத்தை விட நல்ல ஆரோக்கியமான தோற்றப்பொலிவுடனேயே மரணித்தார். திரவ உணவாக இருப்பினும் மருத்துவ ஆலோசனைப்படி சத்துள்ளவையே அளிக்கப்பட்டதால் இருக்கலாம். எல்லாப் புகழும் மகன், மருமகள் இருவருக்குமே. இந்த ஐந்தரை வருடங்களும் படுக்கையிலேயே வாழ்ந்ததற்குப் பதிலாக அப்போதே அவர்கள் மரணித்து இருந்தால் நல்ல சாவாக இருந்திருக்குமே என்பது நம்மில் பெரும்பான்மையான பாமரர்களின் பொதுப்புத்தி. திருமதி விஜயகோமதியின் அன்புசார் பெருவாழ்விற்கு அவரது மக்களால் இத்தனைக் காலம் சீராட்டப்பட்டது அவ்வாழ்க்கைக்கான மரியாதை. அவர்களுக்குக் கிடைத்த பெரும்பேறு. அம்மேதகு அன்னைக்கு இவர்கள் ஆற்றிய பாசப் பிணைப்புடனான தொண்டு இவர்களுக்கான பெரும்பேறு. தாயும் பிள்ளைகளும் தங்களைச் சுற்றிய உலகத்திற்கு வாழ்ந்து காட்டி சொல்லித் தந்த பாடத்தின் கால அளவு ஐந்தரை ஆண்டு. இவையெல்லாம் நடப்பதற்கு முன்னர் மைத்துனன் சங்கரின் நடவடிக்கைகளை வைத்துப் பொதுவாக நான் சொல்வதுண்டு, "அவன் எனக்கு வாய்த்த, வயதில் குறைந்த ஒன்றிரண்டு குருநாதர்களில் ஒருவன்" என்று. அத்தை என்று எனக்கு உறவு முறையாக அமைந்த திருமதி. விஜயகோமதி அவர்களுக்கான சேவைக்குப் பின், சங்கரும் அவனது துணைவியும் என் போன்றோருக்கு சிவ-பார்வதியாக, நாராயணன்-நாராயணியாகவே காட்சி தருகிறார்கள். இறை நம்பிக்கை இல்லாதவன் மானிடத்தில்தானே இறையைத் தேட முடியும் ? எனவே எனது 'எஞ்சாமி' பட்டியலில் இனி இவர்களும் உண்டு.
 7. ஒரு பதிவை விமர்சனம் செய்ய உங்களுக்கு முழு உரிமை உண்டு. இதே கட்டுரையை என்னிடம் சிலாகித்தவர்களும் உண்டு. அது ஒவ்வொருவர் பார்வை, ரசனை பற்றியது. இருப்பினும் மேற்குறித்ததைப் போன்ற தனிநபர் விமர்சனத்தைத் தவிர்ப்பது நாகரிகமாய் இருக்கும்.
 8. நன்றி, தோழர் நிலாமதி ! அறியாமல் Chat Box ல் பதிவிட்டு விட்டேன். திரு. மோகன் சரி செய்து அங்கேயே தகவல் அளித்தார். மீண்டும் தங்களுக்கும் மோகன் அவர்களுக்கும் நன்றி.
 9. நாடகப் பாங்கில் இருந்தால் கூட, கண்களின் ஓரத்தில் துளிர்க்க வைத்தது. Sign in பண்ணியுள்ள போதும், Like கொடுப்பதற்கு option வரவில்லை. தற்காலிகப் பிரச்சினையாக இருக்கலாம். நண்பர்கள் யாரேனும் தெளிவுபடுத்தவும்.
 10. சாதலும் புதுவது அன்றே! - சோம. அழகு “சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே” எனும் கணியன் பூங்குன்றன் சொல்வழி “திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின்” இக்கட்டுரை வரைய தூரிகை எடுத்தே விட்டேன்! நாம் ஒரு புகைப்படத்தினுள் அடைபட்டுப் போகவும் நமது மொத்த வாழ்வும் நமது இருப்பும் சிலரது நினைவலைகளாகிப் போவதற்கும் ஒரு நொடி போதுமானது. அந்நொடி ஒளித்து வைத்திருக்கும் திகில், நமக்குத் தெரிந்தவர்களின் மரணத்தைக் கடந்து செல்ல நேர்கையில் அவ்வப்போது எட்டிப் பார்த்துச் செல்லும். யாரேனும் மறைந்த செய்தி கேள்வியுறுகையில் உண்டாகும் அதிர்ச்சியுடன் சேர்ந்து எழும் இயல்பான கேள்வி “அவரது குடும்பம் அவரை இழந்து இனி எப்படி?”. பொருளாதாரக் கண்ணோட்டத்தைத் தாண்டி உளவியல் ரீதியிலான அவர்களது இழப்பிலும் பாதிப்பிலும் விளையும் கேள்வி. ஆனாலும் காலச் சக்கரம் சுழன்று கொண்டேதான் இருக்கிறது; நாட்கள் உருண்டோடிக் கொண்டேதான் இருக்கின்றன… அவரது குடும்பத்தார்க்கும். எனில், நான் இல்லையென்றால் இந்த உலகம் ஒன்றும் முடிவுக்கு வந்துவிடப்போவதில்லை. என்னைச் சார்ந்தவர்களின் அன்றாடப் பணிகள் எந்தவிதத்திலும் தடைபடப் போவதில்லை. அவ்வப்போது எனது நினைவுகள் மின்னலெனக் குறுக்கிடுவதைத் தவிர. உலகம் வழமையான பரபரப்புடன் இயங்கிக் கொண்டேதான் இருக்கப் போகிறது. எனது இருப்பின்மை எவ்வித மாற்றத்தையும் உண்டாக்கப் போவதில்லை. வாசகர்களின் நலன் கருதி, எழுத்து நாகரிகம் கருதி, ‘நான்’, ‘எனது’ என்று குறிப்பிட்டு முன்னிலையைத் தவிர்த்துள்ளேன். “இவ்ளோதான் வாழ்க்கை… நீ என்பது காற்றில் கரைந்து போகும் ஒரு பிடி சாம்பல். அவ்வளவே! அப்புறம் ஏன் வாழும் போது இவ்வளவு ஆட்டம்?” – ஒவ்வொரு மரணமும் பறையடித்துக் கூறும் செய்தி இது. இதை நானும் கூற ஆசைதான். ஆனால் குதியாட்டம் போடுபவர்களும் பெரிய மகான் ஆகி இதைக் கூறிவிட்டு அடுத்த ஆட்டத்தைத் துவக்குகின்றனர் ஆதலால் நான் இதை மறுமொழியாமல் விட்டுவிடுகிறேன். ஏனோ எனது மரணம் பற்றிய சிந்தனைகள் ஒருபோதும் என்னைப் பாதித்தது இல்லை. எனது அன்புக்குரியோரின் இழப்பைத்தான் தாங்கும் தைரியமில்லை எனக்கு. அதுவே பெரும் பீதியைக் கிளப்புகிறது. எனது மரணத்தைப் பற்றிய சில கற்பனைகளும் ஆசைகளும் (ஆம்! ‘ஆசைகள்’) உண்டு எனக்கு. இதுவரை தனது மரணம் குறித்த விருப்பங்களை யாரேனும் இப்படி அங்கதத்தில் எழுதி வைத்திருக்கிறார்களா? தெரியவில்லை. இதை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதா வெளிப்படுத்த முடியும்? எதற்கும் இப்போதே எழுதி வைத்துவிடுவோம்… அகால மரணம், நரைகூடி கிழப்பருவம் எய்தி போதும் போதும் என வாழ்ந்த பின்னான மரணம், திடீர் மரணம், நெடுநாள் நோய்வாய்ப்பட்டு கஷ்டப்பட்டு பின் தழுவப்பட்ட மரணம்…. எத்தனை எத்தனை வகைகள்? கண்டிப்பாய் இறுதியாகக் கூறப்பட்ட வழியில் எனது கடைசி மூச்சை விட விரும்பவில்லை. எனக்கானவர்கள் நூறாம் அகவையையும் தாண்டி ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் என் மரணம் நிகழ வேண்டும். எனது மரணம் வலியில்லாததாய் இருக்க வேண்டும். ஒரு நல்ல மகிழ்ச்சியான நிகழ்வுக்குப் பிறகு மனநிறைவுடன் கூடிய இரவில் வாய்க்கும் அமைதியான நித்திரை நிரந்தரமானதாகிப் போக வேண்டும். மிக முக்கியமாக என்னைச் சார்ந்தோருக்குப் பாரமாய் இல்லாமல் அவர்களின் மனதில் ‘Why now?” என்ற கேள்வியை விட்டுச் செல்வதே சாலச் சிறந்தது. “Why not now?” என்ற கேள்வி தரும் உணர்வை விடவும் கொடூரமானதொன்று இவ்வுலகில் இருக்க முடியுமா? கம்பீரமாக வாழ்வது போலவே கம்பீரமாக மரணத்தையும் வரவேற்கவே உத்தேசம். மரணம் என்னைத் தழுவும் போது… ஆமா, அது ஏன் தழுவுது? மரணத்துடன் கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் செய்ய விருப்பமில்லை எனக்கு. பாரதி கூறியதைப் போல் “காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா ! சற்றே உனை மிதிக்கிறேன்” என்று மரணத்தை எட்டி உதைக்கவும் வேண்டாம் எனக்கு. மரணம் என்னை அழைத்துச் செல்ல வருகையில், “அட! கொஞ்சம் இருப்பா… போர்ன்விட்டா குடிச்சிட்டு தெம்பா வரேன்” என்று கூறி ஆற அமர கடைசி கோப்பையை ரசித்து அருந்திவிட்டு, “அப்புறம் என்ன? கெளம்புறது” என்றவாறே மரணத்தின் தோளில் கையைப் போட்டுப் பகடி செய்தவாறே அந்நீண்ட யாத்திரையை இனிதே துவங்க வேண்டும். என் மரணத்திற்குப் பிறகு அன்பர்கள் கடைபிடிக்க வேண்டியவை. · என் நினைவாக வீட்டில் நடுநாயகமாக (பூஜை அறையில் அல்ல!) மாட்டப்பட வேண்டிய புகைப்படம் தேர்வு செய்து வைத்திருக்கிறேன். பட்டுப்புடவையின் முந்தானையை ஒய்யாரமாக ஒரு கையில் ஏந்தியவாறு மறுகையை இடுப்பில் வைத்து, “இதுவே என் கட்டளை; என் கட்டளையே சாசனம்” என்பதான பார்வையோடு ராஜமாதா சிவகாமிதேவி போல் கம்பீரமாக யான் காட்சி தரும்(!) நிழற்படம் தலைமுறைக்கும் எனது குணாதிசயத்தைப் பறைசாற்றட்டும். செம இல்ல, அடடா! நினைத்துப் பார்க்கவே குதூகலமாக இருக்கிறது. · என் மண்ணில் கலந்து கரைந்து போகவே விழைகிறேன். எனவே என்னை திராவிட மரபின் படி புதைக்குமாறு ஆணையிடுகிறேன். என் மீது ஓங்கி உயர்ந்து படர்ந்து வளரும் மரத்தின் கன்று ஒன்றை நட்டு வையுங்கள். நல்ல வாசனை தரும் பூ மரமாக இருத்தல் சிறப்பு. அதன் கிளைகளில் வந்து அமரும் பறவைகள் எனக்காக இசையை மீட்டித் தந்து செல்லட்டும். என் பிள்ளைகளும் அவர்களது பிள்ளைகளும் அவ்வப்போது என்னை வந்து கண்டு செல்ல வசதியாய் நிறைய நிழல் தரும் மரமாக இருத்தல் அவசியம். · ஆண் பெண் பேதமின்றி எனக்கானோர் அனைவரும் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டு புதைக்கும் இடம் வரை வர வேண்டும். மிக முக்கியமாக என்னவனோ வேறு யாருமோ மொட்டை அடித்துக் கொள்ளக் கூடாது. ‘மயிரே போச்சு’ என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கப்பிடாது. முடியும் எடுக்கப்பிடாது! · ‘வாழ்வின் ஒட்டு மொத்த ஆச்சரியங்கள், அதிசயங்கள், ரகசியங்கள், கேள்விகள், பதில்கள் எல்லாமும் இவளோடு புதைக்கப்பட்டிருக்கின்றன’ – எனது கல்லறைக் கல்லில் இப்படி ஏதாவது புரிஞ்ச மாதிரியும் புரியாத மாதிரியும் கொசகொசன்னு எழுதி வச்சு ‘It’s deep’னு நாலு பேரு கண்ணுல தண்ணி வர வைக்கணும். · ‘ஆவி வந்து தண்ணி குடிச்சிட்டுப் போகும்; ஆன்மா வந்து பிரியாணி சாப்டுட்டுப் போகும்’, ‘ஆன்மா சாந்தி அடையச் செய்யுறேன்; சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா தர்றேன்’ என்ற பெயரில் ‘காரியம் செய்றேன்; கருமாதி செய்றேன்’னு குடுமி வைத்திருக்கும் யாரையும் அழைத்து வந்து செத்துப் போன எனது பிராணனை மீண்டும் மீண்டும் வாங்காதீர்கள். கிழமை, 16வது நாள் விசேஷம் என வந்தேறிகளின் சடங்கு ஒன்று கூட இருத்தல் கூடாது. அவர்கள் பிழைப்பிற்கு என் சாவா கிடைத்தது? · ‘ஆவி சுத்தி சுத்தி வரும்; பிசாசு நடுவுல இருந்து பிச்சுக்கிட்டு வரும்’ என்றெல்லாம் கலர் கலராக நம்பும் அன்பர்களுக்கு : அப்படி சகல சக்திகள் யாவும் வாய்க்கப் பெற்ற ஆவி ஆகி காற்றில் பறந்து திரியும் பெரும் பாக்கியம் கிட்டுகிறதெனில் எனது அன்புக்குரியவர்களுக்கு அரணாக இருந்து அவர்களைக் காப்பேன். எனவே என்னை வழியனுப்பி வைக்கும் வைபவத்தைக் கைவிடுங்கள். என்னையும் எனது மன நிம்மதியையும் குலைக்கும் பொருட்டு என்னைப் பாடாய்ப் படுத்தியவர்கள் ‘ஜாக்க்க்க்கிரதை’. என்ன பில்லி சூனியம் வச்சாலும் போக மாட்டேன். வச்ச்ச்சு செய்வேன். பட்டியல் கொஞ்சம் பெருசு ஒறவுகளே… பாத்து பக்குவமா பத்திரமா நடந்துக்கோங்க! உயிருடன் இருக்கும் போதே இவ்வளாவு பிடிவாதத்துடன் இருப்பவள் இறந்த பின் எவ்வளவு பிடிவாதக்காரியாய் மாறுவேன் என்பதைத் தங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். என் பிடிவாதத்தின் முன் உங்கள் பில்லி சூனியம் எல்லாம் தவிடு பொடியாகி விடும் ! · சடங்கு சம்பிரதாயம் என்று என்னைக் குளிப்பாட்டுதலோ உடை மாற்றுதலோ நடைபெறக் கூடாது. அக்காலத்தில் குளிரூட்டப்பட்ட பெட்டி கிடையாது. எனவே துர்நாற்றம் வீசக் கூடாது என இறந்தவரைச் சுற்றி நின்று சிலர் குளிப்பாட்டி உடை மாற்றி விடுவார்கள். அப்போது இறந்தவரின் உடல் படும் பாடு இருக்கிறதே! தலை ஒரு பக்கமாய் சரிய கை மறு புறம் பொத்தென விழ… காணவே பதைபதைக்கும் காட்சிகள் அவை. உயிருடன் இருக்கும் போது கலகலப்பான அன்னாரது முகம் ஒரு நொடி கண்திரை முன் வந்து மறையும் அத்தருணம் என் கண்களில் நீர் கோர்த்திருக்கிறேன் பல முறை. இக்கொடூரம் எல்லாம் எங்கிட்ட வேண்டாம்… ஆமா! · எல்லாவற்றிற்கும் மேலாக உயிருடன் இருக்கும் போது நான் காக்கும் கண்ணியத்தை என் மறைவிற்குப் பிறகும் பின்பற்ற விடுங்கள். உயிரில்லாதவருக்கு மானம் இல்லை என்று யார் சொன்னது? உடலைச் சுத்தம் செய்ய, என்னைத் தெரியாத தாதியரை வைத்து கண் மறைவில் செய்து விட்டுப் போங்களேன். ஒருவேளை சமூக வழக்கப்படி இவ்விடயத்தில் எனது விருப்பத்தை மீற எத்தனித்தால் அக்கணம் உயிர்த்தெழுந்து, “அடேய் அறிவிலிகாள்!” என்று வசவு பாடிவிட்டு மீண்டும் மீளாத் துயில் கொள்ள உத்தேசம். · என் நேசத்துக்குரியவர்களுக்கு அன்போடு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன் : I hate tears. என் மரணத்தை முழுமையாகக் கொண்டாடுவீர்களாக! · எனது அடுத்தடுத்த தலைமுறைக்கு பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரைச் சொல்லிக் கொடுங்கள். ஓரளவு நினைவுக்கு வந்தவற்றைப் பதிவிட்ட நிறைவு. ஒருமுறை செத்துப் பிழைத்த உணர்வு. மேலும் செத்துச் செத்து விளையாட விழைவு! - சோம. அழகு நன்றி 'கீற்று' இணைய இதழ்.
 11. நீதிமன்றங்களில் தொழில்முறையில் பொய் சாட்சி சொல்வதற்கு ஆட்களை ஏற்பாடு செய்ய சில ஏஜென்டுகள் உண்டு எனக் கேள்வி. இப்போது ஏஜென்ட் நாராயண் திரிபாதியே சாட்சி சொல்ல வந்து விட்டார்.
 12. அதை வெளிப்படையாக சீமான் அறிவித்தால், இப்போது அவருக்குக் கிடைக்கும் வாக்குகள் பாதிக்கு மேல் குறைந்து விடும் என்பதுதான் அவருக்கான பிரச்சினை.
 13. தொடர்புடைய பதிவு : https://puthu.thinnai.com/எழுந்திருங்க-தாத்தா-ப்/
 14. சம்பந்தர் தேவாரத்தில் கோளறு(கோள் அறு) பதிகம் இதையே சொல்கிறது. " என் ஐயன் சிவனின் அருள் இருக்கையில் சனி முதலான கோள்கள் என்னை என்ன செய்ய இயலும் ?" என்பதே கோளறு பதிகத்தின் கருப்பொருள். (இறை மறுக்கும் நான் இதன் மூலம் சைவத்தைப் போதிக்கிறேன் என்று பொருளில்லை. 'சிவன் ஒருவனே உங்களுக்குப் போதும்; கோள்களைக் கட்டி அழ வேண்டியதில்லை' என்று சம்பந்தர் மூலமாக சைவ சமயத்தவர்க்குச் சொல்வதாய்க் கொள்ளலாம்).
 15. யாருடனும் விவாதத்துக்காக எழுதவில்லை. பொதுவாக உடலுறவு உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை பயப்பது என்பதை நீண்ட காலம் கழித்துப் புரிந்து கொண்டவன் நான். இளமைக்காலத்தில் சுயஇன்பத்திற்குப் பின் சுய கழிவிரக்கமும் குற்றவுணர்ச்சியும் ஏற்பட்டு மனதளவில் பாதிக்கப்பட்டது உண்டு. அவற்றைப் பற்றிய தவறான கற்பிதங்களே காரணம். காமசூத்ரா போன்ற படைப்புகளே பல தவறான புரிதல்களைக் கொண்டவை. சமூகத்தில் காமத்தைப் பற்றிய தவறான கற்பிதங்கள் உலா வரும்போது சரியான கருத்துக்களும் வலம் வருவது நியாயம்தானே ! அவையறிந்து சொல்லுதல் நலம் என்று மக்கள் எண்ணினால், அதற்கென தனிப்பட்ட பகுதியை ('பேசாப் பொருள்' போல) வரையறுத்து எழுதலாம். Adults only என்று திரைப்படங்களை வரையறுப்பதில்லையா ? எனவே இவ்வாறான எழுத்துக்களை வரவேற்கிறேன்.
 16. ஒன்றைக் கசடறக் கற்றலின் வெளிப்பாடு. கற்றது உணர விரித்துரைக்கும் இவ்வெளிப்பாடே ஏனையோர்க்கும் நன்மை பயப்பது. சிறப்பு.
 17. இம்மாதிரி வேண்டுகோள் மக்களிடம் வைக்கும் போதெல்லாம் மக்கள் அதனை வரவேற்றதாக வரலாறு எங்கேயும் கிடையாது. 1967ல் பஞ்சம் ஏற்பட்டபோது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான காங்கிரஸ் (பழைய காங்கிரஸ். அப்போதே இந்திரா காங்கிரஸ் என ஒன்று தோன்றி பின்னர் அதுவே காங்கிரஸ் ஆன கதை வேறு) மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்னது, தற்செயலாக அதைத் தொடர்ந்து வந்த பொதுத்தேர்தலில் பேசு பொருளானது.
 18. அடுத்து இந்தியாதான். ரயில்வே, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு, நெடுஞ்சாலை என இலாபத்தில் இயங்குபவற்றைக் கூட இந்திய ஒன்றிய அரசு தனியாரிடம் விற்பது இதற்கான அறிகுறியே. தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, சமூக முன்னேற்றம் என்பதையெல்லாம் விடுத்துப் பெரும்பான்மையினரின் மதம், இனம், மொழி என ஆதிக்க செலுத்த எண்ணும் அரசுகள் மக்களை இந்த இழிநிலையில்தான் கொண்டு விடும்.
 19. "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்" என்பதெல்லாம் மெய்ப்பட்டே தீரும். ஆடு மாடு வளர்ப்பும் உழவின் ஒரு பகுதியே.
 20. எனது மகள் சோம. அழகு 2016ல் 'திண்ணை' இணைய வார இதழில் எழுதிய கட்டுரை . மேற்கூறிய சட்டம் தொடர்பான பகுதி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது : ரௌத்திரம் பழகுவேன் - சோம. அழகு உறவினர்களுடன் ஒருமுறை உணவகத்திற்குச் செல்ல நேர்ந்தது. சர்வர் நிரம்பப் பணிவுடன் வந்து எங்களுக்கு வேண்டியதைக் கேட்டுச் சென்றார். சிறிது தாமதமாவதை உணர்ந்து அந்த சர்வரை அளவுக்கு அதிகமாகக் கடிந்து கொண்டார் உறவினர்களுள் ஒருவர். அதிகார வர்க்கத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முனையும் சில பல அடிவருடிகளின் பிரதிநிதியாக இவரைக் கொள்ளலாம். இந்த கடாஃபியின் அதட்டலுக்கு பயந்து உள்ளே சென்ற சர்வர் சொற்ப நேரத்தில் உணவுகளோடு வந்தார். நூடுல்ஸ் போன்ற சீன சைவ உணவுகளும், இன்ன பிற தந்தூரி உணவுகளும் , “தங்கள் யாக்கை எங்களைச் செரிப்பதற்கு மிகவும் திண்டாடும்” என எச்சரித்ததை நான் மட்டுமே கவனித்தேன். எனக்கான தட்டு வைக்கப்பட்டதும் சர்வருக்கு நன்றி கூறிவிட்டு சாப்பிடத் தொடங்கினேன். நிஃப்டி, பங்குச்சந்தை வீழ்ச்சி, அமெரிக்க நிறுவனங்கள், கட் ஆஃப், கோச்சிங் சென்டர் என இவர்கள் அறுத்துத் தள்ளியதை நான் காதில் வாங்கவில்லை ஆதலால், தயிர்சாதமும் ஊறுகாயும் பிரமாதமாக ரசித்தது. “தயிர் சாதத்தையும் ஒரு சாப்பாடுன்னு ஆர்டர் பண்ணியிருக்கா பாரு...” என என்னைக் கிண்டல் செய்தார் என் உறவினர். ( மறுநாள் காலை நம்ம ரவை உப்புமாவை படு ஸ்டைலாக ‘ஸூஜி உப்புமா’ என ஆர்டர் செய்தார் என்பது கூடுதல் செய்தி) கடைசி இரண்டு கவளம் மட்டுமே மீதமிருக்க, மீதமிருந்த ஊறுகாய்த் துண்டைப் பிய்க்கும்போதுதான் அதில் ஏதோ கருப்பாக இருப்பதைப் பார்த்தேன். நான் ஊறுகாயை ஒதுக்கி வைத்ததை, என் எதிரில் அமர்ந்திருந்த ஹிட்லர் கவனித்ததை நான் கவனிக்கவில்லை. உடனே ‘இலக்கியத் தரம்’ வாய்ந்த அவர்களின் கலந்துரையாடல் முற்றுப்பெற்று, எனது ஊறுகாய் பேசுபொருளானது. நான் ‘என்ன நடக்கிறது?’ எனச் சுதாரிப்பதற்குள் அந்த சர்வர் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடங்கிற்று. கடாஃபி எகிற ஆரம்பிக்க, உடன் வந்திருந்த ஹிட்லர், முசோலினி, இடி அமின்........இன்ன பிற சர்வாதிகாரிகளும் சேர்ந்து கொண்டனர். சர்வர் மன்னிப்பு கேட்டதை யாரும் காதில் வாங்கத் தயாராய் இல்லை. அந்த இடத்தில் இவர்களது ஆக்கங்கெட்ட ஆளுமையை நிலைநாட்டுவதாக நினைப்பு ! அதிலும், முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லாமல் தடித்த வார்த்தைகளின் மூலம் மெதுவான குரலில் புகார் செய்வதனால் தங்களை நிதானமானவர்களாகவும் பக்குவப்பட்டவர்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். அந்த சர்வரின் சுயமரியாதையைக் காப்பாற்றும் நல்லெண்ணத்தில், “அதெல்லாம் ஒண்ணும் இல்ல. சில நார்த்தங்காயில சில இடம் கருப்பா இருக்குமில்ல....அதான்....ஒண்ணும் பிரச்சினை இல்ல” என நான் சமாளிக்க, கடாஃபிக்கோ நுகர்வோர் உரிமைகளைப் பற்றி கரைத்துக் குடித்ததைப் போல அதைப் பாதுகாக்கும் எண்ணம் தலைதூக்கியது. இன்னொரு தயிர் சாதம் கொண்டு வரச் சொன்னார். “அதெல்லாம் வேண்டாம். இன்னும் ஒரு வாய்தான் இருக்கு....முடிச்சுருவேன்” என நான் பின்வாங்க, “நீ சும்மா இரு....உனக்கு ஒண்ணும் தெரியாது...” என்று எனது வாயை அடைப்பதிலேயே குறியாய் இருந்தனர். நான்தான் அந்தக் கூட்டத்திலேயே இளையவள் என்பதால் வேறு வழியில்லாது வாயில் குருணையைப் போட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று. எனது தட்டு எடுத்துச் செல்லப்பட்டு புதிய தட்டில் மீண்டும் தயிர்சாதமும் ஊறுகாயும் வந்திறங்கியது. சர்வர் கொண்டு வரவும், உணவகத்தின் மேலாளர் அந்தப் பக்கம் வரவும் சரியாக இருந்தது. அதான் வேற தயிர்சாதம் வந்துட்டுல்ல....விட்டுத்தொலைக்க வேண்டியதுதானே ! மேலாளரிடமும் புகார்ப் பட்டியல் வாசிக்கப் பட்டது. அவர் சர்வரைப் பார்க்க, மீண்டும் மன்னிப்புப் படலம். பிறகு ஒரு வழியாக அனைவரும் உண்ணத் தொடங்கினர். எனது வயிறு நிரம்பிவிட்டதால் உண்ண இயலாது விழிபிதுங்கி அமர்ந்திருந்ததை, எல்லோரும் கவனிக்காதது போல் நடித்தது இவர்கள் மீது மேலும் எனக்குக் கோபத்தை உண்டாக்கியது. “நாந்தான் சாப்பிட்டு முடிச்சிட்டேன்னு சொன்னேன்ல....இத என்னால சாப்பிட முடியாது” என்றேன். உடனே கடாஃபியும் அவரது மனைவியும் சேர்ந்து ஒருமித்த குரலில், “உனக்கு வேண்டான்னா வச்சிடு...நாங்க சாப்பிட்டுக்குறோம்....அதுக்காக அவங்க தப்பைச் சொல்லாம இருக்க முடியுமா?” என்று ஒன்றுமே நடக்காதது போல் சிரித்துக்கொண்டே கூறினர். அந்த நொடி, “இனி இந்த அற்பப் பதர்களுடன் எங்கும் செல்வதில்லை” என மனதினுள் உறுதி எடுத்தேன். ஒரு ஊறுகாய்த் துண்டின் ஓரத்தில் இருந்த கருப்புக்காக இவ்வளவு அடாவடித்தனமா ? ஏன், கடாஃபியின் மனைவி சமைக்கும் போது உணவு கரிந்தோ தீய்ந்தோ போகாதா ? அல்லது லேசாகக் கரிந்ததற்காக எல்லா உணவையும் அப்படியே குப்பையில் கொட்டிவிடுவார்களா ? இந்த கடாஃபிக்களின் அட்டூழியம் இருக்கிறதே....”உளுந்த வடையில் ஓட்டை சரியாக நடுவில் இல்லை”, ”ஏ.சி எங்களுக்கு நேராக இல்லை”, “பூரி புஸ்ஸென்று இல்லை”, “சப்பாத்தி சப்பென்று இருக்கிறது”, “ஆரஞ்சு ஜூஸில் ஆனை இல்லை”, “பூண்டு பாலில் பூனை இல்லை”, “சாத்துக்குடி ஜூஸில் சாத்தான் இல்லை” (“அதான் நீங்க இருக்கீங்களே” என்று சொல்லத் தோன்றும்) எனக் கருணை இல்லாமல் அடுக்குவார்கள். இவ்வளவு அலப்பறைகளுக்கும் நடுவில், சுய நிழற்படம் ஒன்றை, தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தட்டோடு எடுத்து முகநூலில் இட்டு, ”Having lunch at Saravana Bhava, New York. Tasty! Yummy!” எனப் பதிவேற்றுவார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், ”அநியாயம்...அக்கிரமம்....கொள்ளை!!! 2 பூரிக்கு 25 கிராமுக்கு மேல் கிழங்கு தர மறுக்கிறார்கள்”என்று கொந்தளிப்பதோடு (புரட்சியாம்!) “நானெல்லாம் சின்ன பையனா இருந்தப்போ....” என ஒரு நோஸ்டால்ஜிக் நோட் வேறு ! ஜவுளி கடை ஊழியர்களின் நிலைமை அந்தோ பரிதாபம்! மாதம் 3000 முதல் 5000 வரையிலான சம்பளத்திற்கு நாள் முழுக்கக் கால் கடுக்க நின்று வேலை செய்யும் இவர்களை ஒரே பொழுதில் 20,000 ரூபாய்க்கு வேலை வாங்கும் திறன் உடையவர்கள் இந்த கடாஃபிக்கள். ஒரு துணி அடுக்கின் அருகில் சென்று அங்கு நிற்கும் ஊழியரை அனைத்துத் துணிகளையும் விரித்துக் காட்டச் சொல்லி, “ஒன்றும் பிடிக்கவில்லை” என்று கூறி, எடுத்துக் காண்பித்தவருக்கு நன்றி கூட சொல்லாது அடுத்த அடுக்கை நோக்கி நகர்வதைப் போன்ற மனிதாபிமானமற்ற செயலை எப்போது நிறுத்துவார்கள்? இவர்கள் நகர்ந்து சென்றதும் ஆடைகள் தானாக எழுந்து போய் அதன் இடங்களில் அமர்ந்து கொள்ளுமா? அந்த ஒரு ஆள், மலை போல் இவர்கள் குவித்துப் போட்ட துணிகளை மடித்து, கவரில் போட்டு, வரிசையாக அடுக்கி.....ஸ்ஸ்ஸ்...எழுதும்போதே கை வலிக்கிறது. “அவர்களின் வேலையே அதுதானே...அதற்காகத்தானே அவர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறது” என்று சிலர் ஓட்டை வாதத்தை வைக்கும்போதும், ஊழியர்களைப் பற்றி (அநியாயமாக) உயரதிகாரிகளிடம் போட்டுக் கொடுக்காததினால் அந்த ஊழியருக்குப் பேருதவி செய்துவிட்டதைப் போல் பீற்றும்போதும், இந்த சர்வாதிகாரிகளை மண்ணில் கழுத்தளவு புதைத்து ஒவ்வொரு காதிலும் 5 சிவப்புக் கட்டெறும்புகளை பாவம் பார்க்காமல் விடத் தோன்றுகிறது. வாழ்க்கை முழுக்க அவ்வப்போது சென்று துணி எடுத்துக் கொண்டேதான் இருக்கப் போகிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஏதோ அடுத்த வாரம் உலகம் அழிந்து விடப்போவது போலவும் மறுநாள் அனைத்துத் துணி கடைகளுக்கும் சீல் வைக்கப்படப்போவது போலவும், ஒவ்வொரு முறை கடைக்குச் செல்லும்போதும் அதுதான் கடைசி முறை என்பது போல் கடையையே தலைகீழாக உருட்டிப் போடும் அபத்தத்தை என்னவென்று சொல்வது? “காசை விட்டெறிவதனால் எவ்வளவு வேண்டுமானாலும் வேலை வாங்கலாம். உலகில் எல்லோரும் எனக்குப் பணிவிடை செய்து என்னை மகிழ்விக்கவும் திருப்திபடுத்தவுமே பிறப்பெடுத்திருக்கிறார்கள். அவர்களை எவ்வளவு கீழ்த்தரமாகவும் நடத்தி அசிங்கப்படுத்தலாம்” என்று ஆழ்மனதில் உருவான எண்ணத்தின் வெளிப்பாடே இந்த அபத்தங்கள். இந்த ஊழியர்களுக்கெல்லாம் இப்படி வாங்கிக் கட்ட வேண்டும் என்ற தலையெழுத்தா என்ன? ஒருவரால் திருப்பி அடிக்க இயலாது எனத் தெரிந்து கொண்டு அவரை ஏறி மிதிக்கும் இது போன்ற கடாஃபிக்களும் யாரிடமோ மிதி வாங்கிக் கொண்டிருப்பதுதான் நகைமுரண். கடாஃபிக்கள் தங்கள் உயரதிகாரிகளின் முன் முதுகு வளைந்து நிற்கும் போது உண்டாகும் கோணத்தைக் காட்டிலும் இந்தப் பாவப்பட்ட ஊழியர்கள் அதிகக் கோணத்தில் தன் முன் வளைய வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள். ‘அடிமை அடிமையை விரும்பும்’ என தொ.ப. கூறுவது நினைவிற்கு வருகிறது. தம் அதிகாரம் எங்கெல்லாம் செல்லுமோ அங்கெல்லாம் அதை நிலைநாட்ட முற்படும் இந்த கடாஃபிகளிடம், ஓடப்பர் உதையப்பரானால், இந்த உயரப்பரெல்லாம் என்ன ஆவர் என்பதை பாரதிதாசன் இவர்களின் மண்டையில் ஆணியடித்துச் சொன்னால் தேவலை. சோர்வும் சோகமுமாய் தினமும் 10 மணி நேரம் ஜவுளிக் கடைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் நின்றே varicoseஐ வரவேற்கும் பணியாளர்களைப் பார்க்கையில், கொஞ்சம் எழுத்து நாகரிகத்தைத் தூக்கிக் கடாசிவிட்டு, முதலாளி வர்க்கத்தைப் பார்த்தும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது – “இந்த ஊழியர்கள் இடையிடையே உட்கார ஸ்டூலைத்தான் போட்டுத் தொலைங்களேன்டா......வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்திலும் அவங்க ஏன் நிக்கணும் ? நீங்களோ உங்கள் பிள்ளைகளோ நாள் முழுக்க நிப்பீங்களாடா ?” அன்று அந்த சர்வரை மன்னிப்புக் கேட்க வைத்ததற்கு நானும் ஒரு வகையில் காரணம் என எண்ணும் போது என் மீதே எனக்குக் கோபமும், குற்றவுணர்ச்சியும் உண்டாவதைத் தவிர்க்க இயலவில்லை. என்னுடன் வந்த சர்வாதிகாரிகளின் உறவு அறுபட்டு இருந்தாலும் பரவாயில்லை (இந்த மாதிரியான உறவுகள் இருந்தால் என்ன? போனால் என்ன?) என நான் அவரிடம் மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். அவருக்கு இதெல்லாம் மறந்தே போயிருக்கும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என் வாழ்க்கையின் இறுதி வரை மறக்க இயலாமல் மனதில் ஏற்பட்ட ஆறாத வடுவிற்கு மன்னிப்புக் கோருவதன் மூலம் ஓரளவு மருந்திட முயல்கிறேன்..... “அண்ணா......மன்னிச்சிடுங்க அண்ணா...நீங்கள் என் உறவினர் இல்லை. ஆனால் என்னைச் சார்ந்தோரால் – என் உறவினரால் – என்னை மையப்படுத்தி உங்களுக்கு நேர்ந்த அவமானத்தைத் தட்டிக் கேட்காத என் இயலாமையை எண்ணித் தலைகுனிகிறேன். ஓடப்பராய் வாழ்ந்து பழக வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு. இந்த உயரப்பரை எதிர்த்து உதையப்பராகிட............. ரௌத்திரம் பழகுவேன்.” - சோம. அழகு நன்றி, திண்ணை
 21. வெவ்வேறு மொழி பேசும் நிலங்களை இணைத்து ஒரு நாடாக்குவது பூகோள அடிப்படையிலான தேவை அல்லது தேர்வாக இருக்கலாம். அரசியல் அடிப்படையில் அது ஒரு புரிந்துணர்வு, ஒப்பந்தம் அவ்வளவே. அவ்வாறு அமைந்த/அமைத்த ஒரு நாட்டில் ஒவ்வொரு மொழி, அதன் அடிப்படையிலான பண்பாட்டு அடையாளங்களைக் காத்து நிற்பது அங்குள்ள அரசின் தலையாய கடமை. இவ்விதி இலங்கை, இந்தியா, ஸ்விட்சர்லாந்து எனப் பல நாடுகளுக்கும் பொருந்தும். பொது மொழியென ஒன்று வேண்டுமென்றால், அது அந்தந்த நாட்டைப் பொறுத்துத் தீர்மானிக்கப்பட வேண்டும். உதாரணமாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு அவற்றின் அடிமை வரலாறு ஒரு இணைப்பு மொழியான ஆங்கிலத்தைத் தந்துள்ளது. அந்த அடிமை வரலாறுதானே பல்வேறு தேசிய இனங்களின் இணைப்பையும் தந்தது ! அந்த இணைப்பு மொழியைக்கூட ஒரே நிலப்பரப்பிற்குள் வாழும் பாமரர் அனைவரும் அறிய வேண்டிய அவசியமில்லை. ஒரு நிலப்பரப்பில் இருந்து வயிற்றுப் பிழைப்புக்காக இன்னொரு இடம் சென்று கூலி வேலை செய்யும் பாமரன் கூட குறுகிய காலத்தில் அங்குள்ள மொழியைப் பேசக் கற்றுக் கொள்கிறான். இதுதான் உலகெங்கும் நடைமுறை. எனவே வசதிக்காகத்தானே எனும் வாதம் கூட ஏற்புடையதாக இல்லை. மொழி வெறும் தகவல் பரிமாற்ற ஊடகமல்ல. இந்த நாட்டிலுள்ள ஒரு மொழியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானது. அது மொழி, இன, பண்பாட்டு அழிப்பிற்கான மறைமுக முயற்சி. ஒற்றுமை உன்னதமானது; ஒருமுகத்தன்மை பாசிசமானது. Unity is noble; Uniformity is fascist.
 22. செல்லம்மா ஆச்சி மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். 100 வயது ஆன என் ஆச்சி போன்று இருக்கிறார்கள். என் ஆச்சி (அப்பாவின் அம்மா; அப்பா இப்போது இல்லை) தன்னிடமிருந்த திருவாசக நூல் சிதிலமடைந்ததால் புதிது வாங்கித்தரச் சொன்னாள். உரையுடன் வாங்கிக் கொடுத்தேன். மூன்று முறை வாசித்து விட்டாள். அப்புறம் சுந்தர காண்டம், திருவிளையாடற் புராணம் என்று தொடர்கிறது. 100 வயது ஆச்சிக்குப் புத்தகம் வாங்கித் தருவது எனது பேறு. நான் எழுதிய புத்தகத்தை வாசிக்கக் கொடுத்தேன். வாசித்தது தனக்கான பேறு என்றாள். எனது இப்பேற்றினை யாழ் சொந்தங்களுடன் பகிர வைத்த செல்லம்மா ஆச்சி படத்தை என் ஆச்சியிடம் காட்டுவேன்.
 23. அந்தப் பெண் ஏற்கெனவே ராகவனுடன் சமரசம் செய்து வாழ்ந்திருக்க வேண்டும். இந்தக் 'கை'பேசி உறவும் அவர்களுக்குள் இன்று புதிதாக நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. திடீரென்று அப்பெண்ணிடம் இந்த முயற்சியில் இறங்க ராகவன் வெள்ளந்தியும் இல்லை, கிறுக்கனும் இல்லை. அப்பெண் செய்தது பச்சைத் துரோகம், இச்சைத் துரோகம் எல்லாம்தான். பில் கிளின்டனுடன் உறவு வைத்துக் கொண்டு பின்னர் பணம் சம்பாதிக்கும் கீழ்த்தரமான எண்ணத்துடன விந்து படிந்த தனது உள்ளாடையை வருடக்கணக்கில் பத்திரப்படுத்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மோனிகா லெவின்ஸ்கியின் கயமை போன்றது. நிற்க. எங்கள் நிறுவனத்தில் அதிகார வர்க்கத்தின் கைக்கூலியாக எப்போதும் மக்களுக்கு இன்னல் விளைவித்த ஒருவர், குற்றம் செய்ய வாய்ப்பேயில்லாத ஒரு விடயத்தில் மாட்டி வைக்கப்பட்டு காவல் துறையின் விசாரணை வளையத்துள் வந்து அல்லல் பட்டார். அவர் மீது எவரும் இரக்கம் கொள்ளவில்லை. குற்றமே வாழ்வாகக் கொண்டவன் குற்றமேயில்லாத விடயத்தில் மாட்டியது இயற்கை நீதி என்று கொள்ளப்பட்டது (உண்மையில் இறைவனின் நீதி என்றனர் மக்கள்). இவ்வாறு ஏற்றுக் கொண்டால், அப்பாவிகளும் மாட்டப்படலாமே என்று ஊகத்தின் அடிப்படையில் கேள்வி எழலாம். நடைமுறையில் அம்மாதிரியான தருணத்தில் சமூகமே எழுந்து நின்று அப்பாவியைக் காத்து நின்ற உதாரணமும் உண்டு. தமிழ் அடையாளங்களை நிராகரிப்பது முதல் அனைத்து விடயங்களிலும் தமிழ்ச் சமூகத்திற்கு எதிராகவே செயல்படும் பார்ப்பன பாசிசத்தின் உண்மை முகம் ராகவன். நாம் குற்றம் என்றே எண்ணாத ஒரு விடயத்தில் ராகவன் மாட்டிக் கொண்டது இயற்கை நீதி; அவர் போன்றோர் இருப்பதாக நடிக்கும் இறைவனின் நீதி என்று எனக்குள் உறையும் பாமரன் குதூகலிக்கிறான். அதிகார பலம் கொண்டோரை வேறு எப்படித்தான் 'அடிப்பது' எனும் 'கை'யறு நிலை. சீமான் அவர்கள் பேசியதைப் போல் ராகவனையெல்லாம் நியாயப்படுத்த மனம் ஒப்பவில்லை. கிளின்டனுக்கு இரங்கும் மனம் ராகவனுக்கு இரங்கவில்லை. இப்படி ஏடாகூடமாக நான் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்று அப்போது யோசித்துக் கொள்கிறேன்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.