Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப.சோமசுந்தரம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by சுப.சோமசுந்தரம்

  1. பளார் (The Slap - थप्पड़) - சுப.சோமசுந்தரம் தலைப்பைப் பார்த்ததும் எது பற்றியதாக இருக்கும் என்று கன்னத்தில் கை வைத்து யோசிக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. தற்போது சில நாட்களாய்ப் பரபரப்பாகப் பேசப்படும் கன்னத்தில் 'கை வைத்த' சமாச்சாரம்தான் என்று இந்தியத் திருநாட்டில் விவரம் அறிந்த சிறு பிள்ளைகளுக்கும் தெரியும். சண்டிகர் விமான நிலையத்தில் திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் விழுந்த 'பளார்' சத்தம் தென்குமரியில் விவேகானந்தர் பாறையில் பட்டு எதிரொலித்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கங்கனாவிற்கு அறைவிட்ட குல்விந்தர் கவுர் எனும் பெண்மணி சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையைச் சேர்ந்தவர். அடித்ததற்கு அவர் சொன்ன காரணம், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை கங்கனா ரனாவத் வழக்கமான தனது அதிகப் பிரசிங்கித்தனத்துடனும் அடாவடித்தனத்துடனும் தரக்குறைவாகப் பேசியது என்பது; அது மட்டுமல்லாமல் அப்போராட்டத்தில் குல்விந்தர் கவுரின் தாயாரும் இருந்ததால், கங்கனாவின் பேச்சு தனிப்பட்ட முறையில் மனதளவில் அவரைப் பாதித்தது என்பதுவும். சங்கிகள் மற்றும் யோக நிலை (!) எய்திய மகான்களைத் தவிர நம்மைப் போன்ற சாமானியருக்கெல்லாம் குல்விந்தர் கவுரின் செயல் நியாயமாகத்தான் தெரிகிறது. அதனால்தான் அவர் ஒரு வீரப் பெண்மணியாக, சிங்கப் பெண்ணாக சமூக வலைத்தளங்களில் நம்மிடமெல்லாம் பாடல் பெற்றார். மேற்கூறிய நிகழ்ச்சியின் சங்கிலித் தொடராக சமீபத்திய சில நிகழ்வுகளும் நினைவுத்திரையில் அணிவகுப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. மணிப்பூர் கொடுமைகளின் ஆரம்பக் கட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் - அங்கு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுக்காவிடில், நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று. கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளரான திரு. பத்ரி சேஷாத்திரி, "நீதிபதி துப்பாக்கியுடன் மணிப்பூர் சென்று விடுவாரா ?" என்று கிண்டல், இல்லையில்லை நக்கல் செய்திருந்தார். கிண்டல், நக்கல் இவற்றிற்கெல்லாம் ஜனநாயகத்தில் எவருக்கும் உரிமையுண்டு. ஆனால் இந்த விஷயத்தில் பத்ரி சேஷாத்திரியின் மனதில் உள்ள குரூரத்தை வெளிப்படுத்துவதாகவே அவரது நக்கல் அமைந்தது என்பதைப் பெருவாரியான மக்கள் சமூகம் உணர்ந்ததால், சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பெருமளவில் கண்டனம் பதிவாகியது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து அவரைக் கைது செய்தது தமிழ்நாடு அரசு. உடனே எழுத்தலகைச் சார்ந்த சிலர் பத்ரியை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதினர். "அவர் தவறு செய்து விட்டார். இருந்தாலும் ......." என்பதோடு நிறுத்தியிருக்கலாம். ஜனநாயகத்தில் கருத்துரிமை பற்றியும் போகிற போக்கில் அவர்கள் குறிப்பிட்டதுதான் வேடிக்கை. இதற்குப் பதிலாக அரசியலமைப்புச் சட்டத்தின் 295 A பிரிவினை நீக்க அறிவுலகம் முதல்வருக்கும் பிரதமருக்கும் நீதியரசர்களுக்கும் கடிதம் எழுதலாமே ! அதனை நீக்குவதன் மூலம் மக்களின் மத நம்பிக்கைகளையும் அவர்களின் கடவுளர்களையும் எங்களைப் போன்றோர் எந்தத் தடையுமின்றிக் கிண்டலடித்து மகிழ்வாய் வாழ வழிவகை செய்வதாகுமே ! "That's offensive is not an argument" என்ற கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ் (Christopher Hitchens) கூற்றினை மக்கள் சமூகத்தின் முகத்தில் அறைந்து சொல்லும் பேரின்பம் எங்களுக்குக் கிடைத்ததாகுமே ! பத்ரி சேஷாத்திரி எழுத்தலகைச் சார்ந்த ஒரே காரணத்திற்காக எழுத்துலகம் அவருக்காக நின்றது நியாயந்தானா ? நம்மைப் போன்ற சாமானியருடன் சேர்ந்து பத்ரியின் கைதை அவர்கள் கொண்டாட வேண்டியதில்லை. ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதுதானே இந்த விஷயத்தில் விவேகமாகத் தோன்றுகிறது ! அடுத்து கங்கனா ரனாவத்தின் ஆண் வடிவமான சவுக்கு சங்கரிடம் வருவோம். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் விசாரணையில் இருக்கும் போதே தேவையின்றிப் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக சவுக்கு சங்கர் பேசியதும், மாணவி தற்கொலைதான் செய்து கொண்டாள் என்று அடித்துச் சொல்லி எல்லை கடந்ததும் பேசு பொருளானது. இது தொடர்பாக யூடியூப் தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் தனக்கே உரிய நையாண்டியுடன், "நான் ஒப்பாரி வைத்துக் கொண்டே பேச வேண்டுமா ?" என்று ஆரம்பித்து மனிதாபிமானம் இல்லாமல் தொடர்ந்ததெல்லாம் அவருக்கே உரிய அசிங்கத்தின் உச்சம். இந்நிகழ்வு சவுக்கு சங்கரின் சந்தர்ப்பவாதத்திற்கும் அடாவடித்தனத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு. அவ்வளவே ! பின்னர் பொத்தாம் பொதுவாகக் காவல்துறையை விமர்சித்து மாட்டிக்கொண்டார். அதனைக் கை தட்டியோ கை தட்டாமலோ வேடிக்கை பார்ப்பதை விட்டு நம்ம ஆட்களில் (!) சிலர் கருத்துரிமை பேசி ஒரு கேவலமான மனிதருக்கு வக்காலத்து வாங்கியதை என்னவென்று சொல்ல ? "ஓய் சவுக்கு, சிறையில் கை உடைந்ததற்கே அழுகிறீரே ! ஒரு மாணவியின் உயிர் போனதைக் கேலியும் கிண்டலும் செய்து அவளது தாய்க்கு எந்தளவு மனவலியைக் கொடுத்தீர் !" என்று வறுத்தெடுத்த நெட்டிசன்கள் முட்டாள்களா என்ன ! சரி, "உங்களுக்கு இதே வேலையாப் போச்சு !" என்று மேற்சென்று தம்மை இடித்துரைப்பதற்கு அவ்வப்போது நம் தோழர்கள் நமக்கு வழி வைப்பார்கள் போலும் ! மேற்சொன்ன மூன்று நிகழ்வுகளிலும், பத்ரி மற்றும் சவுக்கு விஷயங்களில் தமிழ்நாடு அரசின் மூலமாக வழக்குகள் தொடரப்பட்டன. 'உள்ளம் பதைக்கும்' நல்லோர் ஒதுங்கி நின்று அதனை வேடிக்கை பார்ப்பதும், சங்கிகள் கதறுவதும், சாமானியர்களாகிய நாம் மகிழ்வதும்தானே நியாயம் ! குல்விந்தர் கவுரைப் பொருத்தமட்டில் அவரையும் நம்மையும் உளவியல் ரீதியாகத் தாக்கிய கங்கனா ரனாவத்தின் மீது ஜனநாயக முறையில் வழக்குத் தொடர்ந்து விரைவில் நீதியைப் பெற்றுத் தர நம்மால் முடியுமா அல்லது கங்கனாவின் கன்னத்தில் மாற்றுக் கட்சியின் சின்னத்தைப் (கையைத்தேன் !) பொருத்தி உடனடி நீதி வழங்கும் தீரம் நம்மிடம் உண்டா? இவ்வாறு இருக்கையில் ஒட்டுமொத்த சமூகமும் குல்விந்தர் கவுரின் பக்கம் நிற்பதுதானே இயற்கை நீதி ? குல்விந்தர் கவுர் செய்தது தவறு என்று உங்களுக்குப் பட்டால் பகத்சிங் செய்தவையும் தவறு என்பீர்களா ? ஒன்று நாட்டு விடுதலைக்கானது என்றால், மற்றொன்று சமூக விடுதலைக்கானது. இப்போது வீரமங்கை குல்விந்தர் கவுரின் செயலுக்கு இன்னும் எனக்குத் தெரிந்தவரை நமது பாசறையிலிருந்து (!!) எதிர்ப்புக் கிளம்பவில்லை என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி. வருங்காலங்களிலும் இதுபோன்ற சுப நிகழ்ச்சிகளில் மௌனம் தொடரட்டும். நாம் ஆசை தீர ஆடுவோமே, பள்ளு பாடுவோமே ! https://www.facebook.com/share/p/43cYSZseaoVJGPFY/?mibextid=oFDknk
  2. நம் காலத்தில் பரவலாக அறியப்பெறும் ரோமியோ - ஜுலியட், அம்பிகாபதி - அமராவதி இணையரைப் போல் சங்க காலத்தில் ஆதிமந்தி - ஆட்டனத்தி இணையர் அறியப்பட்டமை குறுந்தொகை, அகநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியப் பதிவுகளில் இருந்து தெளிவு. அருமையான இத்தகவலை அருமையான நடையில் தொகுத்தளித்தமைக்குப் பெருநன்றி, ஐயா !
  3. பண்ணா யாழிசையா ? - சுப.சோமசுந்தரம் தோழர் பேரா.ந.கிருஷ்ணன் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது வழக்கம்போல் அவர் பக்தி இலக்கியத்துள், குறிப்பாக சைவ இலக்கியத்துள் இட்டுச் சென்றார். பக்தி இலக்கியங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் வேட்கையை என்னுள் ஏற்படுத்தியவர் பேரா.தொ.பரமசிவன் என்றால், சைவ இலக்கியத் தேனை நான் மாந்த அள்ளித் தருபவர் பேரா.ந.கிருஷ்ணன். அன்றைக்கு உரையாடலுக்கு இடையில் பெரிய புராணத்தில் நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட்டுக் கடந்து சென்றார். அவர் கூறிய சிலவற்றைப் பின்னர் அசை போடுகையில், சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்த ஒன்று அவர் சொன்ன பெரிய புராண நிகழ்வுடன் இடறியது. அப்புறமென்ன, அது சார்ந்த அந்த நிகழ்வினைப் பெரிய புராணத்தில் என்னைத் தேட வைத்து அள்ளித் தந்தது. தமிழ்த் திரையுலகில் பாடலில் முதன்மை பெறுவது 'மொழியா, இசையா ?' எனும் விவாதம் தோன்றி வலைத்தளங்கள் மூலமாகத் தமிழ் சமூகத்தில் பரவியது யாவரும் அறிந்ததே. அது வைரமுத்து - இளையராஜா எனும் ஆளுமைகளின் மீது தனிநபர் விமர்சனங்களாக மாறி, அத்துணை ஆரோக்கியமான விவாதமாக அமையவில்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இந்நிகழ்வு பக்தி இலக்கியத்தில் பெரிய புராணத்தில் நம்மைக் கொண்டு நிறுத்துவது குறித்து நோக்கத்தக்கது. இந்நிகழ்வு அந்நிகழ்வை நினைவு படுத்தினாலும் திருத்தருமபுர நிகழ்வு மிக ஆரோக்கியமான ஒன்றாகவே எவ்வித ஐயமுமின்றி பார்க்கப்படுகிறது. திருஞானந்த சம்பந்தர் செல்லும் சிவத்தலங்களுக்கெல்லாம் யாழிசையில் விற்பன்னரான திருநீலகண்ட யாழ்ப்பாணர் தமது துணைவியாருடன் சென்று, சம்பந்தர் இறைவன் மீது பண்ணொடு இயற்றியருளும் பாடல்களுக்கு யாழ் இசைத்துப் பணி செய்யலானார். திருஞானசம்பந்தருக்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் இடையே திருநீலகண்டரின் சுற்றத்தினரால் தோற்றுவிக்கப்பட்ட 'பண்ணா, யாழ் இசையா ?' எனும் விவாதம் வாதம் ஏதுமின்றி ஒருவர் மற்றவரின் பெருமையுணர்ந்து தமிழியலுக்கும் தமிழிசைக்கும் செழுமை சேர்ப்பதாய் அமைகிறது. தற்கால மொழியில் சொல்வதானால், சுற்றத்தினர் திருநீலகண்டருக்கு எவ்வாறு கொம்பு சீவி விடுகின்றனர் என்பதும், அதனால் திருநீலகண்டர் எக்கச்சக்கமான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார் என்பதும் பின்வரும் பெரிய புராணம் பாடலில் தெளிவு : "கிளைஞரும் மற்று அதுகேட்டுக் கெழுவுதிருப் பதிகத்தில் கிளர்ந்த ஓசை அளவுபெறக் கருவியில்நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம் வளரஇசை நிகழ்வது என விளம்புதலும் வளம்புகலி மன்னர் பாதம் உளம்நடுங்கிப் பணிந்து திருநீலகண்டப் பெரும்பாணர் உணர்த்து கின்றார்" (பெரிய புராணம் பாடல் 2343; திருஞானசம்பந்த நாயனார் புராணம்) பொருள் : கிளைஞரும் - (திருநீலகண்டரின்) சுற்றத்தாரும்; மற்று அது கேட்டு - தருமபுரத்தில் எழுந்தருளிய ஞானசம்பந்தர் திருப்பதிகங்களைப் பாட திருநீலகண்டர் அதற்கேற்ப யாழினை இசைக்க, அது கேட்டு; கெழுவு - பொருந்துமாறு; திருப்பதிகத்தில் கிளர்ந்த ஓசை - திருப்பதிகத்தில் அமைக்கப்பட்ட பண்ணுடன்; அளவு பெறக் கருவியில் நீர் அமைத்து இயற்றும் - சரியான அளவுடன் யாழில் நீர் (திருநீலகண்டர்) அமைத்து இசைக்கிறீர்; அதனாலே அகிலம் எல்லாம் - அதனால் உலகெல்லாம்; வளர இசை நிகழ்வது என விளம்புதலும் - (அப்பதிகங்கள்) பல்கிப் புகழ் பெறுகின்றன என (அச்சுற்றத்தார்) கூறவும்; வளம் புகலி மன்னர் - வளம் பொருந்திய 'புகலி'யின் தலைவர் (சீர்காழியின் ஒரு பகுதி புகலி; ஞானசம்பந்தர் பிறந்து வளர்ந்த இடம்); உளம் நடுங்கி - (உள்ளவாறே பொருள் கொள்க); பாதம் பணிந்து - ஞானசம்பந்தரின் பாதம் பணிந்து; திருநீலகண்டப் பெரும்பாணர் உணர்த்துகின்றார் - (திருஞானசம்பந்தரிடம்) திருநீலகண்டர் உணர்ந்து சொல்வாரானார். தம்மைச் சார்ந்தோர் ஞானசம்பந்தப் பெருமானின் பெருமை அறியாமல் தம்மைப் புகழ்வதோடு மட்டுமல்லாமல் தம் யாழிசையினால்தான் ஞானசம்பந்தரின் பாடல் (மொழியும் பண்ணும்) பெருமை பெறுவது எனப் பிதற்றுகிறாரே எனக் கூனிக் குறுகினார் திருநீலகண்ட யாழ்ப்பாணர். சம்பந்தரின் பாதம் பணிந்து தமது யாழின் எல்லைக்கு உட்படாத பதிகம் ஒன்றைப் பண்ணோடு தந்து அவர்களுக்குப் பாடலின் பெருமை உணர்த்துமாறு இறைஞ்சுகிறார் : "அலகுஇல் திருப்பதிக இசை அளவுபடா வகை இவர்கள் அன்றியேயும் உலகில் உளோரும் தெரிந்தங்கு உண்மையினை அறிந்து உய்யவுணர்த்தும் பண்பால் பார்புகழும் திருப்பதிகம் பாடி அருளப் பெற்றால் பண்பு நீடி இலங்கும் இசை யாழின்கண் அடங்காமை யான்காட்டப் பெறுவன் என்றார்" (பெரிய புராணம் பாடல் 2344) பொருள் : அலகுஇல் திருப்பதிக - அளவுக்கு உட்படாத திருப்பதிகம் ஒன்றை; இசை அளவு படா வகை - யாழ் இசையின் எல்லைக்கு உட்படாத வகையில்; இவர்கள் அன்றியேயும் - இவர்கள் (திருநீலகண்டரைச் சார்ந்தோர்) மட்டுமல்லாமல்; உலகில் உளோரும் தெரிந்து - (பொருள் உள்ளவாறே கொள்க); அங்கு உண்மையினை அறிந்து உய்ய - தங்களது பாடற் சிறப்பினை அறிந்து உய்யுமாறு; உணர்த்தும் பண்பால் - உணர்த்தும் தன்மையால்; பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப் பெற்றால் - (பொருள் உள்ளவாறே கொள்க); பண்பு நீடி இலங்கும் இசை - பண்பினால் நீண்டு விளங்கும் திருப்பதிகப் பண்; யாழின் கண் அடங்காமை - யாழின் எல்லைக்குள் அடங்காத நிலையை; யான் காட்டப் பெறுவன் என்றார் - அவர்களுக்கு நான் உணர்த்தும் பேறு பெறுவேன் என்றார் (திருநீலகண்டர்). அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் அவ்வாறே பாடல்களை அமைத்து 'திருத்தருமபுரம்' பதிகம் பாடுகிறார் திருவிஞானசம்பந்தப் பெருமானார். தருமபுரம் பதியின் சிறப்பினைச் சொல்லும் பதிகம் அது. யாழிசையில் அடங்காத பண்ணில் அமைந்தமையின், அப்பண் 'யாழ்மூரிப் பண்' எனப் பெயர் பெற்றது. அவர் பாடிய தருமபுரத்து இறைவன் 'யாழ்மூரி நாதர்' எனவும் பெயர் பெற்றார். ஒரு சோறு பதமாக இனி அப்பதிகத்தின் முதற் பாடல் : "மாதர் மடப்பிடியும் மட வன்னமும் அன்னதோர் நடையுடைம் மலைமகள் துணையென மகிழ்வர் பூதவினப்படை நின்றிசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர் வேதமொடேழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்டிரை இரைந் நுரை கரை பொருது விம்மி நின்றயலே தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே" (சம்பந்தர் தேவாரம்; திருத்தருமபுரம் பதிகம்; பாடல் 1) பொருள் : மாதர் மடப்பிடியும் மட அன்னமும் - அழகிய இளம் பெண் யானையும் இளம் அன்னமும்; அன்னதோர் நடையுடை மலைமகள் - போன்ற நடையினை உடைய மலைமகளுடன் மகிழ்ந்து இருக்கிறார் (தருமபுரத்து இறைவன்); பூத இனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர் - பூதப்படைகள் நின்று இசைத்துப் பாடி ஆடுகின்றனர் (அத்தருமபுரத்துப் பதியில்); அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர் - (அவ்விறைவன்) படர்ந்த சடையுடன் நீளமான முடியில் (கங்கையாகிய) புனலைக் கொண்டவர்; வேதமொடு ஏழிசை பாடுவர் - (அப்பதியில்) வேதங்களோடு ஏழு வகையான சுரங்களைக் கொண்ட இசையினைப் பாடுவார்கள்; ஆழ்கடல் வெண்திரை இரைநுரை - ஆழ்கடலில் தோன்றும் வெண்மையான அலையானது இரைக்கும் நுரை; கரை பொழுது நின்று விம்மி - கரையினில் மோதி விம்மி நிற்கும் (அப்பதியில்); அயலே - அதற்கு அப்பால்; தாது அவிழ் - மகரந்தம் அவிழ்கின்ற; புன்னை தயங்கு மலர்ச்சிறை - புன்னையில் அசைகின்ற மலராகிய சிறையில்; வண்டு அறை எழில் பொழில் - வண்டுகள் ரீங்காரமிடும் அழகிய சோலைகளில்; குயில் பயில் தருமபுரம் பதியே - குயில்கள் இசை பயிலும் (கூவும்) தருமபுரம் பதியே. திருத்தருமபுரம் பதிகத்திற்கு யாழ் இசைக்க இயலாது என்பதைத் திருநீலகண்டர் தாம் உணர்ந்தபோதும், தமது கிளைஞருக்கும் அதனை நிறுவ வேண்டி அனைவர் முன்னிலையிலும் அதனை இசைக்க முயன்று தோற்கிறார். இந்த யாழினால்தானே இவை அனைத்தும் நிகழ்ந்தன என நொந்து யாழினை முறித்திட முயல்கிறார் திருநீலகண்ட யாழ்ப்பாணர் : "வீக்கு நரம்புடை யாழினால் விளைந்தது இதுவென்று அங்கு அதனைப் போக்க ஒக்குதலும் தடுத்தருளி ஐயரே உற்றஇசை அளவினால்நீர் ஆக்கியவிக் கருவியினைத் தாரும் என வாங்கிக் கொண்டு அவனி செய்த பாக்கியத்தின் மெய் வடிவாம் பாலறா வாயர் பணித்து அருளுகின்றார்" (பெரிய புராணம் பாடல் 2348) பொருள் : வீக்கு நரம்புடை யாழினால் - தொய்வின்றி முறுக்குடன் கட்டிய நரம்பினையுடைய யாழினால்; விளைந்தது இது என்று - இவ்வளவும் நிகழ்ந்தன என்று; அங்கு அதனைப் போக்க ஒக்குதலும் - அங்கு அந்த யாழை (திருநீலகண்டர்) அழிக்க முனையவும்; தடுத்தருளி - (ஞானசம்பந்தர்) அதனைத் தடுத்து அருளி; ஐயரே - மதிப்பிற்குரியவரே; உற்ற இசை அளவினால் - பொருந்தி வரும் இசை முறையில்; நீர் ஆக்கிய கருவியினை - நீர் இயக்கிய இந்த யாழினை; தாரும் என வாங்கிக்கொண்டு - (பொருள் உள்ளவாறே கொள்க); அவனி செய்த பாக்கியத்தின் மெய் வடிவாம் - உலகோருக்கான பெரும்பேற்றின் மெய்யான வடிவமாகிய; பாலறா வாயர் - திருஞானசம்பந்தர் (குழந்தையாய் இறைவியிடம் ஞானப்பால் அருந்திய வாயினை உடையவர்); பணித்து அருளுகின்றார் - (திருநீலகண்ட யாழ்ப்பாணரிடம் அன்பினால் மேலும்) ஆணையிட்டு அருளுகின்றார். திருஞானசம்பந்தர் அப்படி என்ன பணித்தார் அல்லது ஆணையிட்டார் எனக் காண்போமா ? "சிந்தை யால் அளவுபடா இசைப்பெருமை செயல் அளவில் எய்துமோநீர் இந்த யாழினைக் கொண்டே இறைவர்திருப் பதிகஇசை இதனில் எய்த வந்த வாறே பாடி வாசிப்பீர் எனக்கொடுப்ப புகலி மன்னர் தந்த யாழினைத் தொழுது கைக்கொண்டு பெரும்பாணர் தலைமேற் கொண்டார் (பெரிய புராணம் பாடல் 2350) பொருள் : "உள்ளத்தில் அளவுபடுத்த முடியாத இசைப் பெருமை, (யாழில் இசைப்பது போன்ற) ஒரு செயல்முறையினால் தெளிவுபடுமோ ? இந்த யாழினைக் கொண்டே இறைவர் மீது யாம் பாடும் திருப்பதிகங்களுக்கான இசையை இதில் வருவதற்கு ஏற்பப் பாடி வாசிப்பீர்" என அந்த யாழைத் திருநீலகண்டரின் கையில் 'புகலியின் மன்னர்' எனப் புகழப்படும் ஞானசம்பந்தர் எடுத்துத் தர, அவரைத் தொழுது யாழினை வாங்கிய திருநீலகண்ட நாயனார் அதனைத் தம் தலை மீது வைத்து ஏற்றுக் கொண்டார். இருவருமே சான்றோராய் அமைந்தமையின் ஒருவர் பெருமையை மற்றவர் உணர்ந்தனர். ஒருவர் கலையை மற்றவர் போற்றினர். கற்றாரைக் கற்றாரே காமுற்றனர். தமிழ்ச் சமூகம் பண்பாட்டில் நிவந்து நின்றது. இனியும் நிற்கும் - அவ்வப்போது உணவிடைச் சிறுகல் பல்லிடை இடறிய போதும்.
  4. வேறு தளத்தில் உள்ளதைப் படி எடுத்து ஒட்டியதால் இவ்வாறு அமைந்தது. அடுத்த முறை பெரிய எழுத்தில் பதிய முயற்சிக்கிறேன். நன்றி, தோழர் !
  5. ஐயய்யோ ! உங்கள் எழுத்தின் பாணி வேறு. உங்களது எழுத்து பலரைச் சென்றடையும் திறன் கொண்டது.
  6. மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய 'தனித்திரு' எனும் கட்டுரை அவளுக்கே உரிய அங்கத நடையில் : தனித்திரு சோம. அழகு கோவிட் காலம், அதுவல்லாத காலம், இளமை, முதுமை என எல்லா நிலைகளிலும் எனக்கு மட்டும்தான் ‘தனித்திரு’ என்னும் இச்சொல் இன்பத்தேனாகப் பாய்கிறதா? “‘கொடிது கொடிது தனிமை கொடிது; அதனினும் கொடிது முதுமையில் தனிமை’. வயசானாதான் அதுலாம் தெரியும். இப்போ அதுபற்றி உனக்குப் புரியாது” – இதைத்தானே சொல்லப் போகிறீர்கள்? ஒப்புக்கொள்கிறேன். முதல் வரியில் ‘முதுமை’யைச் சேர்த்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லைதான். ஆனால் ‘முதுமையில் நாம் தனித்திருக்க இயலாது’ என்னும் ஒற்றைக் காரணத்திற்காக நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான மாபெரும் மிகப் பெரிய்ய்ய்ய்ய விலையைப் பற்றி யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அதைப் பற்றித்தான் கொஞ்சம் கதைக்கலாமெண்டு வந்தனான். இப்பதிவை முறையாக என் பெற்றோரை வசைபாடியபடி இறைவணக்கத்துடன் துவங்குவது சிறப்பாய் அமையும். நமது முதல் உலகம் வீடல்லவோ? என் அம்மா என்பதற்காகச் சொல்லவில்லை. மனித குலத்தின் விநோதமான விதிவிலக்கு அவள். எவ்வித காழ்ப்புணர்வும் இன்றி எப்படி ஒரு மனுஷியை எல்லோர்க்கும் பிடித்துப் போகும்? இந்தப் புதிரின் புரியாத விடை அவள். கோபத்தைக் கூட அமைதியினுள்ளோ புன்னகையினுள்ளோ ஒளித்து வைத்த வருத்தமாகத்தான் வெளிப்படுத்தத் தெரியும் அவளுக்கு. இதுவரை ஒருவர் கூட அவளிடமோ அவளைப் பற்றியோ சினந்து பேசியதில்லை. வள்ளுவனைப் பொய்யாக்கிவிடக் கூடாது என்னும் ஒரே காரணத்திற்காக அப்பா மட்டும் அவ்வப்போது அவளிடம் சிறு சிறு விஷயங்களுக்குக் கோபம் கொள்வார்கள். அது இயற்கைதானே? எனவே அதுவும் கணக்கில் வராது. அப்பா, தங்கை, நான் – நாங்கள் அனைவரும் நாத்திகர்கள் என்பதில் அவளுக்கு எப்போதும் மனத்தடையோ வருத்தமோ கிடையாது. “நான் உங்களுக்குப் பகுத்தறிவுப் பாதையைக் காண்பித்திருக்கலாம். ஆனால் பிற ஆத்திகவாதிகள் போல் அல்லாமல் நீங்கள் பூசிக் கொள்ள விரும்பும் நிறத்தைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை உங்களிடமே வழங்கியதில் எல்லா பெருமையும் அவளையே சாரும்” என்று அப்பாவே சொல்வார்கள். இவள் எந்த கிரகத்திலிருந்து வந்தாள்? முதல் குற்றவாளி இவள்தான். அடுத்த முக்கிய குற்றவாளியான அப்பாவின் crime rate விண்ணை முட்டி ஆக்ஸிஜன் தேடி அலைகிறது. எவ்வளவு தைரியம், பெண் பிள்ளை என்றும் பாராமல் கருப்பின் மீதும் சிவப்பின் மீதும் ஈர்ப்பை உண்டாக்க? பகுத்தறிவு, திராவிடம், கம்யூனிஸம் உள்ளிட்ட பெரிய பெரிய கருத்தாக்கங்களைத் தெள்ளிய முறையில் எடுத்துரைப்பதென்ன; ‘நறுக்’, ‘சுருக்’ என தம் வாதங்களின் மூலம் வியக்க வைப்பதென்ன; வீட்டிலே ஆகச் சிறந்த சனநாயகச் சூழலை உருவாக்கித் தந்ததென்ன; தோழர்கள் உலகைக் காண்பிப்பதென்ன; நிரம்பிய நூலுடைய கொள்கைச் சான்றோரின் கலந்துரையாடல்களுக்கு அழைத்துச் செல்வதென்ன… என்ன? என்ன? என்ன? போதாக் குறைக்கு இலக்கிய ரசனையை எங்களுக்கே தெரியாமல் எங்களுள் ஏற்றியிருக்கிறார்கள். இவ்வளவும் செய்தவர்களுக்குப் புற உலகைப் பற்றிய நிதர்சனத்தையும் கூறி வளர்க்கத் தெரியாதா? சொல்லித்தான் வளர்த்தார்கள்… நான்தான்… நான் பார்த்த உலகில் உள்ளவர்கள் தான் முழு உலகிலும் பெரும்பாலானவர்களாக நிறைந்து இருப்பார்கள் என்னும் கற்பனையை ஆசையாக மாற்றி நம்பத் துவங்கினேன். அதற்காக என்னைத் தவறென்று சொல்லாதீர்கள். எனக்கு இப்போது கோபத்தைக் காட்ட இடம் வேண்டும். ‘பிங்க் ஜிமிக்கி எங்கு கிடைக்கும்?’, ‘தேங்காய் நாரில் மாங்காய் டிசைன் போட்ட மயில் கழுத்து நிற சேலை எப்போது கடைக்கு வரும்?’ போன்ற உருப்படியான(!) கவலைகளை மட்டுமே ஊட்டி வளர்த்திருந்தால் இவ்வுலகில் ‘இருத்தல்’ தொழில் சுலபமாகியிருக்கும். ப்ச்! வளர்ப்பு சரியில்லை…! ஏதோ ‘மாற்றுக் கருத்து’ என்றாலே எனக்கு ஒவ்வாமை என நினைத்துவிட வேண்டாம். ‘இடியாப்பம் பிடிக்கும்; பிடிக்காது’ என்ற அளவில் இருப்பதன் பெயர்தான் மாற்றுக் கருத்து. ‘இடி அமீன் பிடிக்கும்; பிடிக்காது’ என்பதில் வருவதல்ல. ‘இடி அமீன் ஏன் வெறுக்கப்பட வேண்டும்?’ என்பதெற்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டி சூழல் பணிக்கிறதெனில் சுற்றம் சரியில்லை என்றுதான் பொருள்! எவ்வளவு எடுத்துக் கூறியும் “இல்லையில்லை. நீ எவ்வளவு சொன்னாலும் இடி அமீனை வெறுப்பது எனக்குச் சரியாகப் படவில்லை. அவன் பக்க நியாயம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?” என்று கூறுவோரையெல்லாம் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு செல்ல வைக்கும் வாழ்க்கை மீதுதான் என் மொத்த கோபமே. இடி அமீனுக்குப் பதில் அதிமுக்கியமான வாழ்வியல் விஷயங்களை, ஒரு மனிதனை அடிப்படையாக வரையறுக்கும் பண்புகளை கருத்தாக்கங்களை வைத்து யோசிக்கவும். ‘வாழ்க்கை இப்படியே போயிருமா?’ என ஒரு கடுப்பு வரும் இல்லையா? பொருத்தமான நிகழ்வொன்றை விவரிப்பது ஏதுவாய் அமையும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்குச் செல்ல நேரிட்டது. பந்தியில் உணவருந்த அமர்ந்தோம். முதல் வாய் உள்ளே சென்ற போது அருகில் துன்னுட்டு இருந்த துன்னியார் ஒருவர், “புதுசா நான் கட்டிட்டு இருக்குற வீட்டுல பெருசா ஒரு டைனிங் டேபிள். பக்கத்துல ரொம்ப பெருசா ஒரு ஜன்னல். ஹால்ல 70 இஞ்ச் டிவி,…. சுக்கு காப்பி, மிளகு ரசம்….” என்று அடுக்கிக் கொண்டே சென்றார் பெருமிதம் பொங்க. இதற்குள் எதிர் வரிசையில் கொஞ்சம் தள்ளி இருந்த மாமா ஒருவர் “வீட்டைக் கட்டிப் பாருன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க. எனக்கெல்லாம் விழி பிதுங்கிடுச்சு. அப்போல்லாம் சாப்பாட்டுக்கே கஷ்டம். ஒருத்தர் இல்ல தூக்கி விடுறதுக்கு, உன்னையும் சேர்த்துதான். எல்லாத்தையும் மீஈஈஈறி நின்ன்னு காமிச்சேன். உக்காந்து காம்போசிசன் எழுதுனேன்…. நடந்து போய் கமர்கட் வாங்குனேன்” என்று அவர் பங்குக்கு அடித்து விட்டுக் கொண்டிருந்தார். ஒரு நல்ல அரசு உத்தியோகத்தில் இருந்தும் ‘பேதைதன் கையொன் றுடமை பெற்ற’தைப் போல் வாழ்ந்து பணி ஓய்வு பெற்று இருந்திருந்து திறவோன் பருவத்தின் மத்திம கால வயதில் முதன்முதலாகத் தாம் கட்டும் வீட்டைப் பற்றி இவ்வளவு சிலாகித்த அந்தச் சுக்குக் காப்பி சித்தப்பாவிடம் ‘பயனில சொல்லாமை’ பற்றி எடுத்துச் சொல்வது வராஹ பகவானின் முன் முத்துகளைச் சிந்துவதாகும். அந்த மாமாவின் பின்னணி தெரியாமல் இதைக் கேட்டால் ஏதோ உத்வேகம் தரும் கதை போல என யாரும் நம்பிவிடுவர். குடும்பத்தில் முதல் ஆளாக வேலைக்குச் சென்றவர். அதுவும் நல்ல வேலை… பின்னர் வணிகக் காந்தமாகும் முயற்சியில் மும்மரமாகக் குதித்துக் கால் இடறியதில் அன்பை முறிக்கும் சுறாக்களின்(!) காந்தவலையில் சிக்கி முக்கி மீண்டு வந்துதான் ‘சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ இப்பேருரை. காதுகள் பாவமில்லையா? தன் ‘அறிவார்ந்த(!)’ சோதனை முயற்சிகளின் மூலம் ‘ஏதங்கொண்டு ஊதியம் போக’ விட்டு இன்மையில் உழன்ற கதையை glorify/romanticize செய்து சொல்லிக் கொண்டிருந்ததில் அனைவரின் தலைமுடி கைமுடி எல்லாம் ‘parade salute!’ என எழுந்து நின்றன. ‘சீரல் லவர்கண் படின்’ ‘முந்திரிமேற் காணி மிகுவேதல் கீழ்தன்னை இந்திரனா எண்ணு’ம் இவர்களின் உளுத்துப் போன அறுவையுரையால் அறை முழுதும் ஊசல் வாடை கமழ்ந்தது. நானும் எதிரில் அமர்ந்திருந்த அப்பாவும் சிரித்து வைக்கவும் முடியாத, கடுப்பை வெளிப்படுத்தவும் இயலாத ஒரு கலவையான பார்வையைப் பரிமாறிக் கொண்டோம். இதில் வேறு அந்த மாமா என் அம்மாவிடம், “நானா கண்டு தாக்குப்பிடிச்சேன். என்னக்கா?” என அவளின் ஆமோதித்தலை எதிர்ப்பார்க்க அவளும் “பின்ன? சும்மாவா?” என்று சொல்லிச் சமாளிக்க, நானோ யாருக்கும் கேட்காதவாறு அவளின் காதில் “கூச்சமே இல்லேல?” என்றேன். சிரித்தாவாறே முகத்தை வைத்துக் கொண்டு “வாய மூடிட்டுச் சாப்பிடு” என்று கடுகடுத்தாள். “அது எப்பிடிம்மா முடியும்?” என்று கொடூரமாக நகைச்சுவையை அள்ளித் தெளித்தேன். இதற்குள் பெரியப்பா ஒருவர் “ஏன் காத கடிக்கா எம்மவ?” எனக் கேட்க “மோர் வேணுமாம்” என்று சொல்லி வைத்தாள் அம்மா. ஒரு அரை கிலோமீட்டர் தூரத்து உறவு அண்ணன் ஒருவன் மோர் கொண்டு வந்தான். உடனே அறைக்கு இன்னும் மணம் சேர்க்கும் பொருட்டு அங்கிருந்த அவனது அம்மா, “இவன் பக்குவம் பொறுப்பு அறிவு யாருக்கும் வராது… ஆனை பூனை அல்லே பராக்….” என்று நீட்டி முழக்கிய போது அவ்வார்த்தைகளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் என நிச்சயம் எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்திருப்பார்கள். கல்லூரியில் வகுப்புகளுக்கு வெளியேதான் அறிவு கிட்டும் என ஆழமாக நம்பும் ஞானி அவன். ஒவ்வொரு தாளையும் குறைந்தது நான்கு முறையாவது எழுதுவதைப் பொறுப்பாகச் சலிக்காமல் ஏற்றுச் செய்து வந்தான். ஒரே நேரத்தில் பல இளைஞிகளுடன் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் நிலக்கடலை வியாபாரம் பார்ப்பதில் வல்லவன். இப்போது சம்பந்தமே இல்லாத துறை எனினும் நன்றாகச் சம்பாதிக்கிறான் என்று அவனுக்காக ஆறுதலடையவோ மகிழவோ கூட அனுமதிக்க மாட்டான். உடனே சுக்கு நூறாக அவனுள் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்து ஒட்ட மறுக்கும் ஆங்கிலத்தையும் இவனே வலுக்கட்டாயமாக அடித்து உடைத்த தமிழையும் கொண்டு திருவாய் மலர்ந்தருளி ‘திருவேறு தெள்ளிய ராதலும் வேறு’ என்ற இருவேறு உலகத்து இயற்கைக்கு வாழும் உதாரணம் தான் என நிரூபிப்பான். அத்தை ஒருத்தி அம்மா காதில், “இவன் இருந்த இருப்புக்கு வேலையா கெடைச்சுருக்கும்? கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில்ல ஒரு தேங்காய் விடலை போட்ட கையோட மரகநெடுங்குழைக்காதர் பெருமாள் கோவிலில் துளசித் தண்ணி வாங்கி ஒரு மடக்கு குடிச்சுட்டு கரெக்ட்டா ரெண்டு துளிய உச்சந்தலையில தெளிச்சு விட்டுட்டு நேரே சாயிபாபா கோவிலுக்குப் போய் நாலரை சுத்து சுத்தீட்டு வடமேற்கு பக்கமா திரும்பி நின்னு ஒரு கையை மேலே தூக்கி இன்னொரு கையால் கால் சுண்டு விரலைப் பிடித்தவாறே வானத்தைப் பார்த்து வேண்டிக்கொண்டால் நினைத்தது நிச்சயம் நடக்கும்னு அவனுக்குப் பரிகாரம் சொன்னேன். அத செஞ்ச பொறவு தான் உடனே ரெண்டு வருசம் கழிச்சு வேலை கெடச்சது. ஒங்களுக்கும் ஏதாவது வேணும்னா கேளுங்க” என்றார். “கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கோங்க” என்று அந்த அத்தையிடம் சொல்லிவிட்டு அம்மாவின் இந்தக் காதில் நான் “ஒவ்வொரு சாமியும் மத்த சாமி பாத்துக்கும்னு விட்டதுல கொஞ்சம் தாமதாமாகிட்டு போல” என்றது அத்தைக்குக் கேட்டுவிட்டது போலும். என்னை முறைத்துக் கொண்டே இஞ்சிப் பச்சடியை வத்தக்குழம்பு என நினைத்து சோற்றில் போட்டுப் பிசைந்துவிட்டார். “எதேச்சையா வந்த இந்த விசேஷ வீட்டோட டைனிங் ஹால்ல தற்செயலா நுழைஞ்சேன் ஃப்ராண்ட்ஸ்… இங்க பாத்தீங்கன்னா எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க ஃப்ராண்ட்ஸ்… அதுவும் வலது கையால எடுத்து வாயாலயே சாப்பிடுறாங்க ஃப்ராண்ட்ஸ்… இங்க ஒரு ஆன்டி காரத்துல கதறுரததான் பாத்துட்டு இருக்கீங்க….” என்று கி.பி இராண்டாயிரமாம் காலகட்டத்தைச் சார்ந்த குழந்தை ஒன்று கைபேசியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. திடீரென ஒரு அங்கிள் அரசியல் பேசத் துவங்கினார்கள். உலக அரசியல் வழியாக உள்நாட்டு அரசியலுக்குத் தாவி உள்ளூர் அரசியலை அடைந்து… என அங்கும் இங்கும் சுற்றி கடைசியில் காவிக்குக் காவடி எடுத்தார்கள். “அடச்சை! Toilet paper” என அவர்கள் வீட்டில் வாங்கும் நாளிதழ் என் நினைவிற்கு வந்து சென்றது. அப்பாவும் அருகிலிருந்த தோழரும் அவரைப் பரவச நிலையிலிருந்து நிதானமாக இறக்க முற்பட்டார்கள். அவரோ ‘பவர்ர்ர்ர்ர்’ என இன்னும் இன்னும் உக்கிரத்தை நோக்கிச் செல்ல இருவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு அமிழ்தத்தை இங்கு கொட்டக்கூடாது என்றுணர்ந்து கை கழுவ அங்கணத்தை நோக்கிச் செல்ல ஆயத்தமானார்கள். நானும் ‘புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க’ என்று புளிசேரியை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். அப்பாவின் வார்ப்பு நான் என்றறிந்த அங்கிள் “நீ என்ன சொல்லுத?” என்று என் வாயைக் கிண்டினார்கள். “எந்தக் கட்சிக்கும் ஆதரவா நான் பேசல. எல்லா இடத்துலயும் ஊழல் இருக்கலாம். ஆனா எதேச்சதிகாரத்தை ஒழிக்குறதுதான் இப்போ முக்கியம். அதனால இந்தக் குறிக்கோளோட மக்கள் பக்கம் நிக்குற கட்சிக்கு வாக்கு அளிக்குறதுதான் சரியா இருக்கும்” என்று பதில் மொழியவும் நான் எந்தக் கட்சியைச் சொல்கிறேன் என்பதை உணர்ந்து என்னை அக்கட்சியின் பரப்புரையாளராகப் பாவித்து என்னைச் சாடத் துவங்கினார். ‘வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொள்’ளும் முயற்சியில் பரிதாபமாகத் தோற்று நின்றேன். இன்னொரு அங்கிள் வந்து “இந்த நாடு குட்டிச்சுவரா போறதுக்கே ஒங்கள மாதிரி ஆட்கள்தான் காரணம்” என்று காவி அங்கிளைப் பார்த்துச் சொல்ல ‘ஒளி தெரிகிறது’ என்று என் மனம் பூரிக்கத் துவங்கவும் படாரென்று ஒரு நடிகரின் நடுநிலைமைக் கட்சியைத் தாம் ஆதரிப்பதாகச் சொன்னார். ஒளி வந்த வேகத்திலேயே மறைந்துவிட்டது! மூன்றாவதாக அண்ணாவா அங்கிளா என்று குழப்ப வைத்த ஒரு நபர் வந்து அவ்விருவரையும் பார்த்து “இப்படியே பேசிட்டு இருந்தா விளங்கிரும். ஒங்க ஆளுக்கு ஊர் சுத்தவே நேரம் இல்லை. ஒங்காளு பேச்சுக்கு கோனார் உரை கூட கெடைக்காது…” என்றார். ஆகா! என்னை ஆதரிக்க இவர் திருவுளங்கொண்டு விட்டார் என நான் எண்ணுகையில் என்னை நோக்கித் திரும்பி “இவ ஒரு கருப்பு சிவப்பு சங்கி” என்று அதிர்ச்சியடைய வைத்தார். பிறகு சாந்தமான குரலில் கூறினார் “புதுசா கட்சி ஆரம்பிச்சுருக்குற எங்க நடிகருக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலாம்ல”. அவர் தலைவராவது புரிபடாமல் பேசுவதில்தான் வல்லவர்; இவர் தலைவர் வாயையே திறக்காமல் பேசுவதில் வல்லவர். ஹ்ம்ம்ம்!!! பிரமாதம். என்னைச் சொன்னது கூட வலிக்கல மை டியர் அங்கில்ஸ்! அட!அட!அட! இதுக்குப் பேசாம நான் பேசாமலே இருந்துருக்கலாம்! பீற்றல் பேர்வழிகளுக்கும் ‘அறிவுஜீவி’ நோய்க்குறியால் (syndrome – கூகிள் இப்படித்தான் சொல்லுச்சு!) வாடும் வகையறாக்களுக்கும் மனமார்ந்த அனுதாபங்களையும் ஆழ்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்து விட்டு ‘பாயாசம் சாப்பிடுங்க ஃப்ராண்ட்ஸ்’ என சொல்லச் சொல்லி மனது அரித்துக் கொண்டிருந்ததை மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தினேன். “எனக்குச் சோறே வேண்டாம். ஆள விடுங்கடா” என எழலாம் என்று பார்த்தால் பந்தி முடியவில்லை. என் இரு பக்கமும் ஒருவரும் எழவில்லை. என்னாலும் எழ முடியவில்லை. பாதியிலேயே எழுந்தால் மரியாதைக் குறைவு, இங்கிதமின்மை என்பார்கள், ஏதோ இவ்வளவு நேரமும் அவர்கள் அதைக் கடைபிடித்ததைப் போல. தப்பிக்க இயலாமல் கடைசி வரை இருந்து தொலைக்க வேண்டிய நிர்பந்தம். ‘என் உலகம் வேறு; இது ஏதோ தற்காலிகச் சூழல்’ என்னும் பட்சத்தில் ஒரு நாழிகை பந்தியில் இதையெல்லாம் சிரித்துக் கடந்து விடலாம். ஆனால் சகிப்புத்தன்மையை அளவற்ற சோதனைக்கு உள்ளாக்கும் இந்த ஒரு நாழிகை பந்தியை முழு வாழ்க்கை காலத்திற்கான குறியீடாகக் கருதிப் பாருங்கள். வாழ்க்கை நம்மை எவ்விடத்தில் எச்சூழலில் இருத்தி வைக்கும் எனத் தெரியாது. அப்போது நமக்கே நமக்கானவர்கள் பந்தியில்/வாழ்க்கையில் சில வரிசை தள்ளி இருக்கும் சூழ்நிலை அமையலாம். பணியினாலோ தொலைவினாலோ அவர்களுடனான ஆழமான கலந்துரையாடல்களுக்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லாமல் போகலாம். அச்சமயத்தில் ‘நாணாமை நாடாமை நாரிமை யாதொன்றும் பேணாமை’ ஆகியவற்றையே தொழிலாகக் கொண்டிருக்கும் (ஓட்டை உடைசல் பண்ட) பாத்திரங்கள் வாழ்நாள் முழுமைக்கும் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிற போது ‘வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை’ எல்லாம் சுக்கு நூறாகிவிடும். என் உலகை அப்படியே என்னோடு நகர்த்திச் செல்வது சாத்தியமற்றதாகிப் போகும் போது, சூழ்ந்திருப்போரிடம் எனக்கானவர்களைத் தேடித் தோற்கும் வேளைகளில் மனம் ஆங்காரத்தோடு கர்ஜிக்கும் – ‘தனித்திரு!’. தேர்ந்து தெளிந்த கேண்மையே சில சமயம் கழிவிரக்கத்தையோ ஏமாற்றத்தையோ தரும் போது ‘காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதலால்’ வந்தோர் அன்னாருடன் வரும் இலவச இணைப்புகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். இரு மனிதர்களுக்கு இடையில் பிணைப்பு என்பது அன்பு, புரிதல், மரியாதை, கருத்து ஒற்றுமை என ஏதோ ‘ஒன்றன்’ அடிப்படையில் உருவாகும். அப்படியான ஒன்று கூட இல்லாமல் திறந்த வீட்டில் நுழைந்த சிங்கங்களாக நம் உலகில் வளைய வருபவர்கள்தாம் இலவச இணைப்புகள். ஒரு மனிதரை நம் வட்டத்தினுள் மனதார வரவேற்கும்போது அவரிலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட அவரைச் சார்ந்த – அவ்விய நெஞ்சத்தவர்கள், நெஞ்சின் துறவார் துறந்தார்போல் பேசுபவர்கள், ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதைகள், கல்லாத மேற்கொண்டொழுகுவோர், ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் பிரிவினர், உலகத்தார் உண்டென்ப தில்லென்போர் ஆகியோரும் மிக இயல்பான நிகழ்வாக உடன் வந்து அமர்வதுதான் வாழ்க்கையின் அசட்டுத்தனமான வடிவமைப்பு! தம்கணத்தார் அல்லாதாரால் சூழப்பட்டிருக்கும் காலத்தில் அதைக் கட்டுப்படுத்துவது நம் கைகளில் இல்லாமல் போகும் கையறுநிலையில் பொறையுடைமை தீர்ந்து போகும் தருணத்தில் மனநலத்தையும் உடல்நலத்தையும் காக்கவேண்டி ‘சிற்றினம் அஞ்சி தனித்திரு என் மனமே!’ மாண்டார்நீ ராடி மறைந்தொழு மாந்தர்களே! பெரியார் துணைகோடலுக்கு வழி விடவும்! சோம. அழகு தழ்https://puthu.thinnai.com/2024/05/20/தனித்திரு/
  7. சில காலம் முன்பு 'நானே நானா ?' எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரையை நமது இந்த 'யாழ்' இணையதளத்தில் பதிவிட்டிருந்தேன். அதில் வரும் கதைமாந்தர்களும் நிகழ்வுகளும் தமிழ் நிலத்திற்கு வெளியேயுள்ள, தமிழறியாத எனது சில நண்பர்களின் கவனத்திற்கும் உரியவை. எனவே அவர்களுக்காக அக்கட்டுரையை நான் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ததே இப்பதிவு. மொழிபெயர்ப்பு என்பதை விட மொழிமாற்றம் என்பதே இங்கு சரியானது. Transformation and not translation. ஏனெனில் வரிக்கு வரி ஆங்கிலம் ஆக்காமல், ஒவ்வொரு பத்தியையும் மீண்டும் வாசித்து செய்தியை எனது ஆங்கில நடையில் தந்திருக்கிறேன். தமிழ் நிலத்தின் சொந்தங்களும் மொழி மாற்றப்பட்டது என்றில்லாமல், ஆங்கிலத்தில் ஏதோ புதிய கட்டுரையாக எண்ணி வாசிக்கலாம். தமிழை மட்டுமே பொதுத்தளத்தில் எழுதியவன் ஆங்கிலம் எழுதுவதையும் வாசித்துப் பார்க்கலாமே ! இனி அந்தக் கட்டுரை : Am I myself ? It's true that we have been brought up with lessons on self-reliance and independence to an extent possible. Perhaps rightly so to a great extent. The tag 'to an extent possible' must have been followed by an explanation that after all one has to depend on his parents up to a stage. This can easily be brushed aside as it is the law of nature for a climber to have a stake; in a lighter vein, 'one's own feet' and 'a ground to stand' are, after all, things provided by one's own parents. Some might come up with a better counsel for that 'extent possible' as one has to depend on the peasant for his food, the weaver for his clothes and so on. Even this can be politely chided on the ground that the beneficiary provides for their livelihood and so it's a matter of symbiosis, not one of dependence on anyone, leave alone the imbalance of a society which sanctions (!) only a hand-to-mouth existence for peasants and others. All these justifications granted, still some basic questions prop up inside me. Didn't someone sometime without any expectation stand for me ? Didn't someone, even not so close to me, lend his shoulders for me to stand on top and see a far-reaching world ? Could I always stand my ground on my own feet ? The moment these questions arise in me, I could hear an emphatic "No, not at all" reverberate in my ears as a heavenly voice; at sixty three, I could visualise those nostalgic memories quickly unfold in my virtual screen. It is not customary in the writers' world to mention real names of characters and so the reader could take the names in this narrative as fictitious. However the characters and the incidents are real. Each one of you must have come across such noble characters in your life. After all, your world is a theatre where you are the hero ! Thought of conveying something to the society. A second thought came up for a moment whether it would be alright if I got into nostalgia and narrated my own life incidents. Consoled myself - it's only natural when one reflects on what he has seen and felt. Generally when a man of scholarly pursuit writes his biography, it is intended to be a lesson to all. For someone like me it's a desire to share some of his experiences in a write-up, if not a book, hoping it to be useful to a common man like him in some corner of the society. In my case it is also a thanksgiving for those who lifted me to where I am today. Given the fact that I am an academician, it's no surprise that all the Greats who lead me into light are from the academic world. Right from nursery to post-graduation I have been fortunate (so do I feel) to be put in institutions close to home. After a doctorate and post-doctoral studies in mathematics for nearly ten years outside my Tamil homeland, I have been doubly fortunate (again, so do I feel) to get settled in a University in my own home town Tirunelveli. Like the idiomatic expression 'Back in the saddle' shall I say, "Back at the stable" after my brief grazeland stint in greener pastures ? During my early days of schooling and collegiate studies in my native Tirunelveli, a few of my illustrious teachers like Prof. Jothimani had their share in making me what I am today. Somewhere else I had a write-up acknowledging them duly and so in this article I prefer to focus on some memorable occurrences in those greener pastures and after I got to my stable. All these are going to be my reminiscences of some saintly or divinely characters who rendered selfless support to me. If it reminds you of some of your trysts with divinity, it's all but natural. It was the first time I left my native town, for my PhD at IIT Kanpur. From my Thesis Supervisor Prof. Udhay Bhanu Tewari, not only did I learn mathematics but also some basic principles of life. The latter he taught me by his deeds, with his art of living. Briefly said, he was scholastic. That there were many other Professors too of wisdom to teach me a lot in life speaks volumes of the institution. Recalling one or two glorious moments I had therein befits the title of this article. Nowadays there is a strict time limit for the duration of a PhD program which fortunately was not so at that time at IIT Kanpur. With the recommendation, usually genuine, of the Thesis Supervisor the candidate was granted period extension with scholarship. Normally any candidate would like to finish the work as soon as possible and get settled in life at the earliest. Rarely did some people go for an extension. Under these circumstances, the Institute suddenly implemented a five-year restriction on PhD scholarships, perhaps under instruction from the Government. We went on a protest with dharnas, hunger strikes and so on. The then Mathematics Head Prof.J.D.Borwanker called me and spoke, "If you are financially constrained, we are here to take care of you. You can be accommodated in some research project under due process and that could provide you a breather to complete your PhD as well. Why do you have to join the agitation ?" As a student of that age and as a guy caught in a web of affection of his teachers, how could I teach my teacher, "A struggle is not for one's self" ?. However the point I want to make here is that "We are here for you" is a divinely voice anytime anywhere. Immediately after I submitted my PhD thesis, my Supervisor Prof.U.B.Tewari recommended me for a position at the Centre for Advanced Studies in Mathematics, Punjab University, Chandigarh. In the mean time my brothers, all younger to me, had settled in jobs. I had to get married sooner than later, since my brothers were waiting in the wings for marriage. So it all happened in succession as we had not grown enough to defy the social system of the time. I came home for my wedding and stayed back for nearly four months. Equivalently one can say that I had a long honeymoon back home. By that time I got an offer of lectureship at Punjab University in response to Prof.Tewari's recommendation. People at home insisted on my declining the offer, keeping in mind the turmoil in the distant Punjab at the time with unprecedented militant activities and the fact that I was no more a bachelor when I got the job offer. I dropped a line (by post, for that was the only option of the time; I am a pre-historic monster !) to Punjab University declining the offer politely (in words; in deed it was arrogance on my part). I did not even ask for the advice of Prof.Tewari who got the job for me. The lame excuse I had was that telephone (only landline was known) was not available in my vicinity and postal correspondence sometimes would take two weeks one way. I landed in Kanpur four months after marriage. The undue period I had taken at home was pretty cool with Prof.Tewari. However I had to bear the brunt of his all justifiable wrath for kicking off, for petty reasons, one of the rarest job opportunities. Throughout the reprimand it was clear to me that his entire fury was not for his efforts having turned into a futile exercise but was out of frustration whether I would get such a nice job again. After two days he called me and said, "Send an application for a post-doctoral position at the Indian statistical Institute (ISI) Bangalore. I shall send a recommendation". Seeing me bewildered and speechless, he added, "All these six years you stayed here, you have had a good record. Of course, at the end something went wrong. For that matter we can't leave you in the lurch". All the noble things written in your religious holy books came to light for me without my reading even a bit of it. There came a change in the playfield and of the play, but the story line of some great men of scholarship holding my hand never saw a change. How could great men be made for commoners like me ? This could be the case for many of us. Perhaps the answer lies in the description of the terms like greatness, scholarship and so on. At times we might have come across people who did something evil to us, knowingly or unknowingly. But at times we had people who did the noblest things for us without any expectation whatsoever. To give a poetic touch, let me say that these noble gestures of people account for the existence of Planet Earth and its dynamism on some or other axis. In my next institution ISI, Bengaluru they had taken a policy decision not to allot guest house flats for long term visitors, just before I joined there as a post-doctoral fellow for two years. I had set my mind to look for a flat on rent in the city. Prof.V.S.Sunder and Prof.Alladi Sitaram told me that the advance amount would siphon out all my savings and then the monthly rent and other expenses would land me in a tough budgeted life in a city like Bengaluru. That they could think for me and make the administration reconsider its policy decision showed their concern, care and empathy towards their fellowmen. Also Prof.Subashis Nag reminding me of my term at ISI coming to an end in four months and asking me to apply to ICTP, Trieste, Italy with a promise of sending a reference letter to the institution is like a dream sequence for me. To people who pray to their Almighty for some favour and supposedly get it, I always have a question, "If you name such an extra-terrestrial power as God Almighty, then how should I refer to someone on this earth who got me what I needed, without my asking for it ?". When I was a PhD student at IIT, Kanpur Prof.S.Kumaresan from TIFR, Mumbai came as a Visiting Professor to our department. He had also served as Visiting Professor at Princeton. Besides being a great scholar in mathematics, his spectrum of knowledge is so wide that one can discuss with him anything under the sky that is of substance. I had the opportunity of interacting with him at the department and also at the dining hall of our students' hostel. I learnt good mathematics from him, particularly his analytical thinking inspired me a lot. Needless to say, I gathered knowledge outside mathematics too. Perhaps he identified some spark in me which I realised years later. Later from TIFR Mumbai, he moved to University of Mumbai and then to University of Hyderabad. By then he had founded an illustrious programme for undergraduate and post-graduate students in India aspiring to do mathematics. It is under the auspices of the National Board for Higher Mathematics and is called 'Mathematics Training and Talent Search programme' (shortly, MTTS). It has crossed thirty two years of its successful running under the directorship of Prof.Kumaresan. In its fifth year, I incidentally met Prof.Kumaresan. His immediate reaction was, "Oh, out of sight out of mind. You have been missed out. Next year you should come to teach at MTTS". I took it as his recognition for my clarity in the fundamentals and my teaching skill. This programme has given me a great opportunity to teach students from every nook and cranny of this great country. It has given me great times to live and interact with scholarly people from many premier Institutes of this country. I have earned their respect and regards and all this is thanks to Prof.Kumaresan. First he found me as a teacher and then I found myself. Till date, for around twenty five years, I am in association with this prestigious programme and I consider it a bliss for me. If the divine beings I acknowledged before blessed me with the basic necessities of life like job, accommodation etc., the divinity in Prof.Kumaresan got me a place in his world of scholarship. After I got settled in the University in my place Tirunelveli, Prof.Tho.Paramasivan, a well-known Tamil scholar and Anthropologist, kindled my passion in literature and encouraged me to speak and write in this direction. Like Prof.Kumaresan, Prof.Paramasivan might have identified a spark in me in my other interest - literature. Thanks to him I have a memorable retirement life, securing a modest place in the literary world of my surroundings. Whenever I think of my mentors I get overwhelmed and seem to go on a deifying spree, as is evident from this write-up. True to this spirit of mine and given the fact that Prof.Paramasivan is an anthropologist, it is fair on my part to fit him in the frame of my folk-deity. A friend and philosopher Prof.S.Thillainayagam guiding me in all walks of my life is a boon that I wish for my lifetime. Being a Professor of English, he is known for precision and brevity in choice of words. Hence my brief reference to him, true to his style. Thanks to all these mentors, I got fixed in a job and earned the place that I deserve, however modest, in the world of knowledge. Then the quest, already simmering inside me, for being useful to the society in a larger sphere found an outlet through the teachers' organisation MUTA. It's a larger body not restricted to just my University campus. I have to name many of the stalwarts (they prefer to be referred to as comrades) who shaped my thinking, taught me Marxism through their deeds. The list being long, on everyone's behalf, I prefer to name Prof.V.Ponnuraj and Prof.M.Nagarajan as their representatives. Again, as usual, I register them here as my mentors in this field. In any workplace, a great majority of people can be classified into two categories. One category has a policy (!) of 'total surrender' to the ruling class; the other one deals with the ruling class in a naive, unprofessional way and get embroiled in serious problems due to a bad approach. I learnt from my comrades how to make our point with the administrators without engaging myself in personal tirades against them. With this, sometimes I could even win a grudging admiration from the worst of administrators. The other day after my retirement from service, when I had to ask for an exemption on some matter for someone connected to me, I got a welcome response, "Sir, you stood for us all through. We shall stand for you and the matter in hand right now is a trifle". Such incidents make me proud and remind me of my comrades who made me what I am in the common society. Particularly, Comrades Ponnuraj and Nagarajan with their selfless dedication to the society, not just for the co-workers, made me understand the very first verse of a Tamil Sangam literary work 'Purananooru'. Briefly it says that this universe stands on the support of those whose efforts are directed towards the society. To conclude, whether it is the world of mathematics or of literature or of social activism, in all I stood on the shoulders of giants. Can I at any instance claim, "I myself did it" ?. The moral I derive from all these is that I have to stand for others wherever possible. If so, someone will come to narrate all that and leave it to posterity. That will be the trail I leave on this soil to prove that once upon a time I was here.
  8. நூலறிவு வாலறிவு ---சுப.சோமசுந்தரம் சான்றாண்மையின் தாக்கம் பாமரர் முதல் சான்றோர் வரை உணரப்படுவது. ஒரு புலவர் கூற்றை மற்றொரு புலவர் வழிமொழிவது சங்க காலந்தொட்டுக் காலங்காலமாய் நிகழ்வது; அஃது முன்னவரின் சான்றாண்மைக்கான அங்கீகாரமும் கூட. இதனை முன்னொரு சமயம் 'முன்னோர் மொழி பொன்னே போல்' எனும் தலைப்பில் சிறு கட்டுரையாய் வரைந்ததுண்டு. அதில் சுட்டப்பெற்ற பாடல்களோடு 'இயல் வழி நாடகம்' எனும் தலைப்பில் வேறொரு சூழலில் குறிக்கப்பட்ட சில பாடல்களையும் கொண்டு சற்றே பெரிய கட்டுரையாக வரையலாமே; மேற்கண்ட கருதுகோளின்பால் வாசிப்போரின் கவனத்தை ஈர்க்கலாமே எனும் எண்ணமதின் விளைவே இக்கட்டுரை. இதில் தனிப்பட்ட முறையில் எனக்கொரு இலாபமும் உண்டு. நான் ஆங்காங்கே எழுதியவற்றில் வெட்டி ஒட்டி, சில இடங்களில் மட்டும் சிறிது விளக்கம் தந்து மேனி நோகாமல் எழுதிச் செல்வதே அந்த லாபம். இந்த வெட்டி ஒட்டுதலைச் செய்பவன் அடியேன் மட்டுமே ! நான் குறிக்க வரும் புலவர் பெருமக்களில் எவரும் அவ்வாறு செய்யவில்லை. அச்சான்றோரில் ஒருவர் முன்மொழிய மற்றொருவர் வழிமொழிதல், ஒரு கருத்தை இருவர் கூறி மேன்மையுடன் செழிக்கச் செய்தல், இருவர் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து மானுடத்தின் எல்லையற்ற வாழ்வு சிறக்க அமுது எடுத்தல் எனும் உயரிய நோக்கங்கள் கொண்டவை அப்புலவர் தம் படைப்புலகம். எடுத்துக்காட்டுதலில் வரும் பாடல்களைத் தந்தோரில் முன்னவர் யார், வழிமொழிந்த பின்னவர் யார் என்று நாம் சொல்லவில்லை. காலச்சக்கரத்தில் சிக்கித் தொலைந்த அவ்விவரம் தொலைந்ததாகவே இருக்கட்டுமே ! நமது வரிசைப்படுத்தலில், முதலில் வரும் ஒன்று காலத்தால் முன்னது என்ற பொருள் இல்லை. இக்கட்டுரையின் தலைப்பு பற்றி ஒன்றிரண்டு சொற்கள் - 'வால்' எனுஞ் சொல் சிறந்த, தூய எனும் பொருள் தருவது. வள்ளுவன் இறைவனை 'வாலறிவன்' எனக் குறிப்பது அங்ஙனமே. தமக்கு முன்னோரின் பொன் மொழியை வழிமொழியும் புலவரின் நூலறிவு ஒப்பற்ற சிறைப்புடைத்து என மொழிவதே இத்தலைப்பு. சங்ககாலம் சென்று முதலில் புறநானூறு பேசி நிற்போமே ! காக்கை பாடினியார் நற்செள்ளையார் தரும் புறநானூற்று பாடல் : "நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன் முலைஅறுத் திடுவென் யான்எனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே" (புறநானூறு 278) பாடற் குறிப்பு : போரில் தனது மகன் புறமுதுகிட்டு இறந்தனன் என்ற (பொய்யான) செய்தி கேட்ட தாய் அவனை இழந்ததை விடத் துயருற்றதும், களத்திலேயே சென்று பார்த்து அவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரமரணம் எய்தினான் எனக் கண்டு அவனைப் பெற்ற பொழுதை விட மகிழ்வுற்றதுமான மறம் (வீரம்) இப்பாடலில் வரையப் பெறுகிறது. பாடற் பொருள் : நரம்பு தெரிய வாடிய சிறிய மெல்லிய தோள்களும், தாமரை (முளரி) போன்ற விலாப் பகுதியும் (மருங்கு) உடைய முதியவள், தன் மகன் (சிறுவன்) படையின் திசை அழிந்து மாறினான் (அதாவது, புறமுதுகிட்டான்) என்று பலர் கூறக் கேட்டு, "பகை நெருங்கி வந்த போரில் (மண்ட - நெருங்கிய; அமர் - போர்) முறை உடைந்தான் (புறமுதுகிட்டான்) என்றால், அவன் பால் உண்ட முலையினை அறுத்திடுவேன் நான்" என்று சினந்து, வாளொடு சென்று (போர் நின்றிருந்த இரவில் அக்களம் சென்று), பிணங்கள் அகற்றப்படாத (படுபிணம் பெயரா) அக்குருதிக் களத்தில் (செங்களம்) தேடினாள் (துழவுவோள்). சிதைந்து உருக்குலைந்து கிடந்த மகனின் உடலைக் கண்டதும், அவனை ஈன்ற பொழுதை விட (ஈன்ற ஞான்றினும்) பெரிதும் மகிழ்ந்தாள் (பெரிது உவந்தனளே). (தானே விளங்கி நிற்பது - அவன் மார்பில் புண்பெற்று மாண்டதைக் கண்டாள்). ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்த மற்றுமொரு தாயினை நம் கண்முன் நிறுத்துகிறார் பூங்கண் உத்திரையார் எனும் புறநானூற்றுப் புலவர் : "மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் நோன் கழை துயல்வரும் வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே" (புறநானூறு 277) பொருள் விளக்கம் : மீன் உண் கொக்கின் தூவி அன்ன - மீனை உண்ணும் கொக்கின் இறகினைப் போன்ற; வால்நரைக் கூந்தல் - தூய்மையாகவும் நரைத்தும் இருக்கும் கூந்தலை உடைய; முதியோள் சிறுவன் - முதியவளின் மகன்; களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை - ஆண்யானையை வேல் எறிந்து வீழ்த்திய பின்னரே தான் விழுந்தான் என்னும் செய்தி அறிந்த மகிழ்ச்சி; ஈன்ற ஞான்றினும் பெரிதே - அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதே; வெதிரத்து - புதரில்; துயல்வரும் - அசைந்தாடும்; நோன் - வலிய; கழை - மூங்கில் கழியில்; வான் பெய - மழை பெய்யும் போது; தூங்கிய - தங்கிய; சிதரினும் பலவே - மழை நீரை விட அதிகமானது (அவளது கண்ணீர்). முதலில் நாம் குறித்த காக்கைபாடினியார் தாயின் வீரம் பற்றிப் பேசுவதோடு நிறுத்திக் கொண்டார். மகனை இழந்த துயரத்தை உலகோர்க்குக் காட்டாத அளவு அத்தாய் நெஞ்சுரம் கொண்டு இருக்கலாம் அல்லது மகனை இழந்த தாயின் அவலம் சொல்லில் வடிக்கவொண்ணாததாகப் புலவர்க்குத் தோன்றியிருக்கலாம். பூங்கண் உத்திரையாருக்கோ அந்த அவலச் சுவையை உணர்வுபூர்வமாய் வடிக்கத் தோன்றியது. எது எப்படியோ, ஈன்ற ஞான்றினும் பெரிது உவத்தல் என்று ஒருவரிடம் தோன்றிய கோட்பாடு மற்றொருவரை ஈர்த்தது என்னவோ உண்மைதானே ! அஃது வள்ளுவனிடத்தும் வெளிப்பட்டு நிற்கிறதே ! "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" (குறள் 69; அதிகாரம் : மக்கட்பேறு) சங்ககாலத்தில் (குறளோனின் சங்கமருவிய காலத்திலும் இருக்கலாம்) வீரனைக் குறித்த 'சான்றோன்', பிற்காலத்தில் (வள்ளுவத்திற்கு உரை தரப் போந்த காலம் எனக் கொள்ளலாம்) கற்றவனையும் கற்ற வழி நின்ற பண்பாளனையும் குறித்தது ஈண்டு குறிக்கத்தக்கது. பொருகளத்தில் போர் அறம் அறிந்து நிற்றலும், கல்விக் களத்தில் அறிவறிந்து நிற்றலும் சான்றாண்மையின் பாற் பட்டதில் வியப்பென்ன ! அடுத்து மணிவாசகரின் கோவை இலக்கியமான திருக்கோவையாரில் ஒரு பாடல். தலைவன்-தலைவி உடன்போக்கு சென்ற பின் செவிலித்தாய் அவர்களைத் தேடிச் செல்வது மரபு. அவ்வாறு செல்லுகையில் எதிரே அதே போல் உடன்போக்கு எனும் ஒழுக்கம் மேற்கொண்டு வரும் வேறொரு தலைவன்-தலைவி இணையரைத் தூரத்தே கண்டு தன் மக்கள்தானோ என முதலில் மயங்கி, அவர்கள் அருகில் வரவும் தெளிந்து அவர்களுடன் உரையாடுகிறாள். "மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இம்மேதகவே பூண்டார் இருவர் போயினரே புலியூரெனை நின்று ஆண்டான் அருவரை யாளிஅன் னானைக் கண்டேனயலே தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே". (திருக்கோவையார், பாடல் 244) உரையாடல் வருமாறு :- செவிலித்தாய் : உம்மைக் கண்டதும் (கண்டு நும்மை) மீண்டனர் (எனது மகளும் அவளது தலைவனும்) என மகிழ்ந்தேன். இம்மேதகு ஒழுக்கம் (உடன்போக்கு) பூண்ட இருவர் முன்னால் போயினரே ! எதிர் வந்த தலைவன் (செவிலித் தாயிடம்) : திருப்பாதிரிப்புலியூரில் நின்று எனை ஆட்கொண்ட இறைவனது (ஆண்டான்) அரிய மலையின் (அருவரையின்) யாளி போன்ற கம்பீரத் தோற்றமுடையவனைக் கண்டேன். எதிர்வந்த தலைவன் (தன் தலைவியை நோக்கி) : தூண்ட வேண்டாத விளக்கினைப் போன்றவளே! அவனது அருகில் (அயலே) சென்றவளைப் பற்றி அன்னை (செவிலித்தாய்) சொல்லிய விவரம் பொருத்திக் கூறுவாயாக ! இக்காட்சியினைப் பதினோறாம் திருமுறையில் வரும் திருஏகம்பமுடையார் திருவந்தாதி பாடல் 73 ல் பட்டினத்தார் கூறக் கேட்கலாம் : "துணையொத்த கோவையும் போலெழில் பேதையும் தோன்றலுமுன் இணையொத்த கொங்கையொ டேயொத்த காதலொ டேகினரே அணையத்தர் ஏறொத்த காளையைக் கண்டனம் மற்றவரேல் பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே" பொருள் : துணையொத்த கோவையும் போல் எழில் பேதையும் - உன் துணைவியான தலைவியின் கொடி (கோவை) போன்ற அழகினை (எழில்) உடைய பேதை நிலை பெண்ணும்; உன் இணையொத்த - உன் தலைவியைப் போன்ற; கொங்கையொடே - முலையொடும் (திகழும் அப்பேதையும்); தோன்றலும் - தலைவனும்; ஒத்த காதலொடு - (உங்களைப்) போன்ற காதலோடு; ஏகினரே - சென்றனரே; அணையத்தர் - அவ்வாறான; ஏறொத்த காளையைக் கண்டனம் - ஏறுபோன்ற இளைஞனைக் கண்டேன்; மற்றவரேல் - மற்றபடி அப்பெண்ணைப் பற்றி என்றால்; பிணையொத்த நோக்குடை - பெண்மானின் (மருண்ட பார்வையுடைய); பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே - பெண்ணிவளிடம் பேசுவீர்களாக ! திருக்கோவையாரில் "இம்மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரே" என்று முடியும் செவிலியின் கூற்று, இங்கு "ஒத்த காதலொடு ஏகினரே" என்று முடியக் காணலாம். அங்கு "யாழி அன்னானைக் கண்டேன்" என்று செவிலித் தாயை நோக்கி எதிர் வந்த தலைவன் கூறுவது, இங்கு "ஏறொத்த காளையைக் கண்டனம்" என்று கூறக் கேட்கலாம்."என்னையோ அன்னை சொல்லியதே" என்று எதிர் வந்த தலைவன் தன் தலைவியிடம் கேட்பதாய் திருக்கோவையாரில் வருகிறது. இது மட்டும் சற்று மாறாக "பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே" என்று மீண்டும் செவிலித்தாயிடமே தலைவன் கூறுவதாய் திரு ஏகம்பமுடையார் திருவந்தாதியில் வருகிறது. ஆனாலும் ஒரே செய்திதான். பேசும் இடம் மட்டும் இறுதியில் சற்று மாறியது. நாடகக் காட்சியமைப்பும் ஒன்றுதான். புறநானூறு கண்டோம்; கோவை எனும் சிற்றிலக்கியம் கண்டோம்; பக்தி இலக்கியத்தை விட்டு வைப்பானேன் ? இப்போது நாம் காட்சிப்படுத்த நினைப்பது மீண்டும் மணிவாசகரின் நாடகத்தை. இம்முறை திருவெம்பாவைக் காட்சி : "ஒள் நித்தில நகையாய், இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக் கொண்டு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம் உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய்". (திருவெம்பாவை பாடல் 4) மார்கழியில் பாவை நோன்பு மேற்கொண்ட பாவையர் பாவை ஒருத்தியைத் துயில் எழுப்புகின்றனர். "ஒளி பொருந்திய முத்தினைப் (நித்தில) போன்ற சிரிப்பினை உடையவளே! இன்னும் உனக்குப் புலரவில்லையா?" எனப் பாவையர் கேட்க, உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பாவை, "வண்ணக்கிளி மொழியினுடைய எல்லோரும் (தோழியர்) வந்து விட்டார்களா?" என்று வினாவெதிர் வினாவினைக் கூவுகிறாள். தோழியர், "அவ்வளவும் எண்ணிக் கொண்டு தான் வந்தோம். உள்ளதைத் தான் சொல்கிறோம். தூங்கி வீணில் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகினர்க்கு அமுதம் போன்றவனை, வேதத்தின் உண்மைப் பொருளானவனை, கண்ணுக்கு இனியனானவனைப் (சிவபெருமானை) பாடிக் கசிந்துருகும் நாங்கள் பொய் சொல்லோம். நீயே வந்து எண்ணிக்கொள். (எண்ணிக்கை) குறைந்தால் மீண்டும் துயின்று கொள், எம் பாவையே !" என்று பதிலிறுக்கின்றனர். நாடகப் பாங்கில் உரையாடலில் யார், யாரிடம் பேசுகின்றனர் என்பது தானே விளங்கி நிற்கக் காணலாம். திருவெம்பாவையில் உள்ளவாறே இக்காட்சி திருப்பாவையில் : "எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லோரும் போந்தாரோ போர்ந்தார் போர்ந்து எண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்" (திருப்பாவை பாடல் 15) பொருள் விளக்கம் :- துயிலெழுப்பும் பாவையர் கூற்று : எல்லே - 'அடி பெண்ணே, என்ன இது ?' எனக் கேட்பது போன்ற வழக்கு; இளங்கிளியே - கிளி போல் கொஞ்சுமொழி பேசும் இளம் பெண்ணே; இன்னமும் உறங்குதியோ - இன்னும் உறங்குகிறாயா ? துயிலெழுப்பப்படும் பாவையின் கூற்று : சில்லென்று அழையேன் - 'சில்' எனக் கூச்சலிட்டு அழையாதீர்; மின் நங்கைமீர் - மின்னல் போன்று ஒளிரும் தோழியரே; போதர்கின்றேன் - இதோ வருகின்றேன்; பாவையர் கூற்று : வல்லை - திறமையானவளே; பண்டே - முன்பிருந்தே; உன் கட்டுரைகள் - உன் உறுதிமொழிகளையும்; உன் வாயறிதும் - உன் பேச்சுத்திறனையும் யாம் அறிவோம்; பாவையின் கூற்று : வல்லீர்கள் நீங்கள் - நீங்களே (பேச்சுத்) திறனுடையவர்கள்; நானே தானாயிடுக - (நீங்கள் சொன்னவாறே) நான் (வாயாடியாக) இருந்து விட்டுப் போகிறேன்; பாவையர் கூற்று : ஒல்லை - விரைவாக; நீ போதாய் - நீ வருவாயாக; உனக்கென்ன வேறுடையை - உனக்கு (இப்போது) வேறு என்ன வேலை உண்டு ? பாவையின் கூற்று : எல்லாரும் போந்தாரோ - பாவையர் எல்லோரும் வந்து விட்டார்களா ? பாவையர் கூற்று : போந்தார் - வந்து விட்டனர்; போந்து எண்ணிக்கொள் - வந்து எண்ணிக்கொள்; வல் ஆனைக் கொன்றானை - வலிய யானையைக் கொன்றவனை; மாற்றாரை மாற்றழிக்க வல்லானை - பகைவரை, அவர்தம் அகந்தையை அழிக்க வல்லவனை; மாயனை - மாயச் செயல்கள் புரிபவனை (கண்ணனை); பாடேலோர் எம் பாவாய் - பாடுவாயாக எம் பாவையே ! திருவெம்பாவையில் "வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ" என்றது திருப்பாவையில் "எல்லாரும் போந்தாரோ" எனவும், அங்கு "நீயே வந்து எண்ணிக் குறையில் துயில்" என்றது இங்கு "போந்தார் எண்ணிக் கொள்" எனவும் மொழி மாறியது. காட்சி மாறவில்லை. இனி சில சங்கப் பாடல்களும் தொடர்புடைய குறள்களும் காணலாம். முதலில் நம் நினைவுக்கு வருவது நற்றிணையில் 355 ஆவது பாடலின் ஒரு பகுதி : "முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் " பொருள் : முன்பிருந்தே (தேர்ந்து தெளிந்த) நண்பர் கொடுப்பது நஞ்சாக இருந்தாலும் சிறந்த பண்பாளர் (நனி நாகரிகர்) அதனை உண்டு அமைவர். இங்கு 'நஞ்சினை உண்டு' என்பதை நேர்ப் பொருளாய் (Literal meaning) எடுப்பது இல்லை என்பதை இலக்கியம் அறிந்தோர் அறிவர். 'உணவானாலும் கருத்தானாலும் தாம் விரும்பாதவற்றைத் தாம் தேர்ந்து தெளிந்த தம்மைச் சார்ந்தோர் அளிக்கையில், சூழலைக் கருத்தில் கொண்டு ஏற்று அமைதல்' எனப் பொருள் கொள்வதே இங்கு சாலப் பொருத்தம். மேற்கூறிய கருத்து அச்சு எடுத்தாற்போல் திருக்குறளில் கண்ணோட்டம் எனும் அதிகாரத்தில், "பெயக் கண்டு நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்" என அமையக் காணலாம். நற்றிணையின் 'நனி நாகரிகம்' வள்ளுவத்தில் 'நயத்தக்க நாகரிகம்' ஆனது. பெயப்படும் நஞ்சு என்னவோ ஒன்றுதான். பிரிவாற்றாமையினால் தலைவியின் மேனியில் பசலை தோன்றுவதும், மேனி இளைத்துக் கை வளையல்கள் பிறர் அறிய நிலத்தில் கழன்று விழுவதும் அகப்பாடல்களில் எங்கும் விரவி நிற்கக் காணலாம். ஆனால் தலைவி உயிர் துறப்பது (மிகைப்படுத்தலாகவே இருப்பினும்) என்பது இலக்கியங்களில் அருகி நிற்பது. பின்வரும் நற்றிணைப் பாடல் (19) அவ்வாறான அரிய பாடல் : "வருவை யாகிய சின்னாள் வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே" [வருவை ஆகிய சின்னாள் (சில நாள்) வாழாள் ஆதல் நன்கு அறிந்தனை சென்மே (செல்வாயே)] அஃதாவது "சில நாட்களில் வருவாய் எனினும், அவள் வாழாள் என்பது நன்கு அறிந்து செல்வாயே" என்பதாம். நற்றிணையில் தோழி கூற்றாக வரும் செய்தி வள்ளுவத்தில் தலைவி கூற்றாகவே வருகிறது : "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை" (குறள் 1151; அதிகாரம்: பிரிவாற்றாமை) சிறிது காலம் போர்க்களத்திற்கோ தொழில் மேற்கொண்டோ பிரியப் போகும் தலைவன் உற்றாரிடம் விடை பெற்றுத் தலைவியிடம் விடைபெற வருகிறான். "சில மாதங்களில் வந்து விடுவேனே, ஏன் கவலை கொள்கிறாய் ?" என ஏற்கனவே அவளைத் தேற்ற முயன்று தோற்றுப் போனவன் அவன். தலைவி அவனிடம் சொல்கிறாள், "ஏதாவது மாற்றம் ஏற்பட்டு நீ செல்லவில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல். அதுதான் சீக்கிரம் வந்து விடுவேனே எனும் உன் (வல்)வரவு பற்றிய செய்தியை நீ வரும்பொழுது யார் உயிருடன் இருக்கப் போகிறார்களோ அவர்களிடம் சொல் !". பொதுவாக எவரது வரவையும் நல்வரவாகக் கொள்வதே தமிழர் மாண்பு, மரபு. ஆனால் இங்கு வல்வரவு என்று வள்ளுவன் சொல்லாக்கம் தருவது, தலைவன் வரப்போவது தலைவியை இழந்த இழவு வீட்டிற்கு என்பதால். சொற் சிக்கனத்திற்கும் வள்ளுவனே ஆசிரியன். அடுத்து வரும் குறுந்தொகைப் பாடலில், "எப்பிறவியிலும் நீயே என் கணவனாய் அமைத்தல் வேண்டும்" என்று தன் காதலின் திறம் கூறுகிறாள் தலைவி: "இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என்கணவனை யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே " (குறுந்தொகை பாடல் 49) வள்ளுவனின் திரைக்கதை கூட இதுவே. காட்சியமைப்பில் மட்டும் சிறிது மாற்றம் செய்தான் : "இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்" (குறள் 1315; அதிகாரம்: புலவி நுணுக்கம்) "இப்பிறவியில் பிரிய மாட்டோம் என நான் சொன்னதும் தலைவியின் கண்கள் குளமாயின" என்பதே தலைவன் கூற்று. அஃதாவது "ஏனைய பிறவிகளில் பிரிய நினைத்தாயோ ?" என்பதே தலைவியின் கண்ணீருக்கான ஏதுவாய் அமைந்தது. வள்ளுவனின் 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலு'க்கு மற்றுமொரு சான்று. இங்ஙனம் தமிழ்ச் சான்றோரின் நூலறிவிற்கான சான்றுகள் எண்ணிலடங்கா. நம் கட்டுரைக்கு எங்காவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே ! சரி, கட்டுரைக்குதானே முற்றுப்புள்ளி ! இதனை வாசித்தோர் தம் இலக்கிய வாசிப்பில் இத்தகைய முன்னோர் மொழிகளைக் கடந்து செல்லுகையில் ஒரு கணம் நின்று அசைபோட்டு இன்புறுவர்; மொழிக்கு மேலும் செறிவூட்டுவர்.
  9. மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய, 'மகிழ்' என்று தலைப்பிட்ட சிறுகதையை இங்கே மீள்பதிவு செய்கிறேன். அரசியல் சமூகம் மகிழ் ! -------சோம. அழகு உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு மிடறுக்கும் சற்றும் சளைத்ததல்ல இது!) வந்து மெத்திருக்கையில் கால் நீட்டி அமர்ந்தாள் உவனது உவள். தரையில் விரவியும் சிதறியும் கிடந்த சாமான்களுக்கு நடுவில் உவர்களது இரண்டரை வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்த்துக் கொண்டே தனது கோப்பையைக் காலி செய்தாள். முந்தைய நாள் உவனுக்கும் தனக்கும் இடையில் துவங்கிய வேகத்தில் மின்னலென முடிந்த உரையாடல் நினைவிற்கு வந்தது. அதன் விதை விழுந்தது மூன்று மாதங்களுக்கு முன். மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென விளையாட்டாக உவன் கேட்டான், “நாம இன்னொரு கொழந்த பெத்துக்கலாமா?” “என் உடம்பு ஒத்துழைக்கணுமே” என்றவள் சட்டென கேட்டாள் “நாம ஏன் ஒரு குழந்தைய தத்தெடுக்கக் கூடாது?” உவள் விளையாட்டாக அல்லாமல் நிஜமாகத்தான் கேட்கிறாள் என்பதை உணராமல் “ஹாஹா… எனக்கு என் பிள்ளைதான் வேணும்” என்று சிரித்தவாறே சொல்லிச் சென்றான். உவளையும் அறியாமல் ரொம்ப மெனக்கெடாமல் அவ்வளவு பெரிய விஷயம் மிகச் சாதாரணமாக வெளிப்பட்டது முதலே அவ்வெண்ணம் உவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் பிறகு அது குறித்து உவன் கூற சாத்தியமுள்ள எல்லா வகையான காரணங்களையும் மனதினுள் போட்டு அலசி ஆராய்ந்து அதற்கெதிரான சரியான வாதத்தை முன்வைத்து உவனை சம்மதிக்க வைக்கும் வழிமுறைகளை ஆராயத் துவங்கினாள். “என்னதான் இருந்தாலும் சொந்தப் பிள்ளை மாதிரி வராது” – “இதெல்லாம் மனசு சம்பந்தப்பட்டது. ஒரு குழந்தையின் மீது ஊற்றெடுக்கும் அன்புக்கு வரைவிலக்கணம் ஏது? பெற்றோர்களாவதற்குக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அதனால் தத்தெடுக்கலாம். குழந்தை பெற்றுக் கொள்வதாலேயே பெற்றோர்கள் என்பதும் இல்லை. ஆம் எனில் அநாதை இல்லங்களே இருக்காதே.” “ஏன் தத்தெடுக்கணும்னு எண்ணம் வந்துச்சு உனக்கு?” – “இன்னொரு குழந்தை வேணும்னு முடிவு பண்ணிட்டோம். அதை அர்த்தமுள்ளதா ஆக்கலாம்னு… யாருமே இல்லாம போன சக உயிருக்கு ஒரு அழகான குடும்பத்தைக் குடுக்கலாமே… இது சமூகத்துல பெரிய மாற்றத்தை ஒண்ணும் கொண்டு வரப் போறதில்லதான். Just one less orphan in the world is all we can do” இப்படியாகப் பல பல தருக்கங்களை மனதளவில் தயார் செய்து வைத்திருந்தவள் முந்தைய நாள் மெதுவாக உவனிடம், “ப்பா… ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கலாம்னு எனக்கு தோணீட்டே இருக்கு” என்றதற்கு “எனக்குத் தோணல” என்று ‘எனக்கு’ல் அழுத்தம் வைத்துத் திருத்தமாக உடனே வந்து விழுந்தது மறுமொழி. “அதான் ஏன்?” என்று கேட்கும் முன்னரே வலுக்கட்டாயமாக ஒரு அலைபேசி அழைப்பில் தன்னை இணைத்துக் கொண்டான் உவன். அனைத்துத் தயாரிப்புகளும் தவிடுபொடியாயின. கற்பனையில் நிகழ்ந்த ஒத்திகை உரையாடல்கள் யாவும் ஒரு வாய்ப்பு கூட பெறாததால் பாவம்போல் உவளையே பார்த்துக் கொண்டிருந்தன. அதைப் பற்றித்தான் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறாள். பேச்சுவார்த்தைக்கு வந்தால்தானே ஒப்புக்கொள்ள வைக்க முடியும். முதல் அடியே சறுக்குகிறதே! இன்று எப்படியும் விடுவதாயில்லை. பிடித்து வைத்தாவது கேட்டு விடுவது என உறுதி பூண்டவாறே மீண்டும் எல்லாவற்றையும் தன் மனதில் ஓட்டியபடி ஆயத்தமானாள். உவன் உவளைப் போல அப்படி ஒன்றும் பிடிவாதக்காரன் இல்லை. அதனால் எப்படியும் உவனை சம்மதிக்க வைத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் கனவு காணத் துவங்கினாள். இப்போது உவள் கண்களுக்குத் தன் மகளுடன் இன்னொரு குழந்தையும் சேர்ந்து அங்கே விளையாடிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது கண்டு பூரித்துப் போனாள். இரண்டு செல்வங்களையும் அள்ளிக் கொஞ்சிக் கொண்டாள். காலியாக இருக்கும் ஒரு கை சீக்கிரமே நிரம்பப் போகும் உவகை உவளை ஆட்கொண்டது. அப்போதிருந்த மகிழ்ச்சியான மனநிலையில் அக்குழந்தைக்குப் பெயர் கூட வைத்துவிட்டாள் – ‘மகிழ்’. எவ்விதத் தயக்கமும் இன்றி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள, தனது நியாயங்களை முழுதாகப் புரிந்து கொள்ள, ஒரே விஷயத்திற்கு ஆயிரம் முறை உடைந்து போய் புலம்பித் தீர்த்தாலும் கொஞ்சமும் சலிக்காமல் ஒவ்வொரு முறையும் முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதலளிக்க தானும் தங்கையும் எப்படி ஒருவருக்கொருவர் இருக்கிறோமோ அதே போல் தன் மகளுக்கும் ஒரு சகோதரனோ சகோதரியோ வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? வரத்தான் போகிறார்கள். அப்பாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அன்னாரது முற்போக்கான கொள்கைகளையும் சிந்தனையோட்டத்தையும் வைத்து எளிதில் சொல்லலாம் – தத்தெடுக்கும் முடிவை மனமுவந்து வரவேற்பார்கள். அவர்களின் ஆளுமை அப்படி. அம்மா எதையுமே பெரிதாக எதிர்க்க மாட்டாள். ‘இது சரியா வருமா?’ என அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே குழந்தையைக் கொண்டு போய்க் காண்பித்தால் போதும். எல்லாவற்றையும் மறந்து அப்படியே உச்சி முகர்ந்து கொஞ்சித் தீர்த்து அன்பைப் பொழிவாள். தங்கையிடம் ஏற்கெனவே இதைப் பற்றிச் சொன்ன போது, “செம டா… Can’t wait to meet my next niece/nephew” என்று குதூகலித்தாள். இவ்வாறாக நிஜமாகவே ஒரு குழந்தையைத் தத்தெடுத்துவிட்ட உணர்வில் மிதந்தாள் உவள். மாலை வீடு திரும்பிய உவனுக்கு நல்ல இஞ்சித் தேநீர் இட்டுத் தந்தாள். வாழ்க்கையில் ஏதாவது ஒரு கெட்ட பழக்கமேனும் வேண்டுமல்லவா? அதன் பொருட்டு டீ, காபி பழக்கத்தைக் கைவசம் வைத்திருந்தான். ஓய்வான அமைதியான மனநிலையில் உவன் இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டு மெல்ல அருகில் சென்று சம்மணமிட்டு அமர்ந்தாள். “ப்பா…” “ம்ம்..?” – அலைபேசியில் இருந்து கண்களை அகற்றாமலேயே உவளிடம் கேட்டான். நெளிய வைக்கும் அமைதியைச் சுற்றிலும் படர விட்டு உவனது கைகள் காலியாகி கண்களில் தன் பிம்பம் நிறையும் வரை காத்திருந்தாள். உவளது இந்த மௌனம் இடும் ஆணை உவனுக்கு ரொம்பவே பரிச்சயம் ஆதலால் அலைபேசியைக் கீழே வைத்து விட்டு உவளைப் பார்த்து கேட்டான்… “சொல்லுடா மா…” “கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறத முழுசா கேளுங்களேன்… உங்க காரணத்தையும் தெரிஞ்சுக்க விரும்புறேன். உங்களுக்கு ஏன் தத்தெடுக்க வேண்டாம்ணு தோணுது?” தொடர்ந்து தான் யோசித்து வைத்தவற்றையெல்லாம் கூறினாள். சிறிது நேரம் ஆழமாக உவளை உற்று நோக்கி பின்பு கூறினான். “என்னோட எண்ணம் சரின்னு சொல்லமாட்டேன். ஆனா எதார்த்தத்துக்குப் பக்கத்துல நின்னு சொல்றேன். புதுசா வர்ற குழந்தையையும் நம்ம பாப்பாவையும் ஒரே மாதிரி நினைக்க முடியுமான்னு தெரியல…” “ஒருவேளை நமக்கு பாப்பா பொறக்காம போயிருந்தா…?” “கண்டிப்பா தத்தெடுத்துருப்போம். அப்போ ஒப்பீடுங்குற பேச்சுக்கே இடம் இல்லையே! அப்போ நம்ம உலகமே அந்த குழந்தைதான்னு ஆகும்போது மொத்த அன்பையும் அதுகிட்ட தான் காமிப்போம்.” “அது இப்போ அப்பிடிதான் பா இருக்கும். கொழந்தைன்னு வந்து நம்மளோடதுன்னு ஆன பிறகு எல்லாமே மாறிடும்” “ஒருவேளை மாறலன்னா…. எப்பவும் ஒரு சின்ன வித்தியாசம் ஆழ் மனசுல நம்மளையும் அறியாம இருந்துட்டே இருக்குமோன்னு பயமா இருக்கு. ஏதோ ஒரு சூழல்ல அது லேசா எட்டிப் பார்த்தா கூட என்னை என்னாலயே மன்னிக்க முடியாது. பாவம் அந்தப் பிஞ்சு என்ன பாடு படும்? நம்மள விடு… சுத்தி இருக்கவங்க எப்படி அணுகுவாங்கன்னு நெனச்சு பாத்தியா?” “அப்பா அம்மால்லாம் சந்தோஷமா….” – உவள் முடிக்கும் முன்னரே குறுக்கிட்டான். “அத்தை மாமா எவ்ளோ பரந்துபட்ட பார்வை உள்ளவங்கன்னு எனக்குத் தெரியும். என்ன பிரச்சனைனா நம்மள சுத்தி இருக்குறது அவங்க மட்டும் இல்ல” “ஊருக்காக வாழ முடியுமா?” “கொழந்தைய வீட்டுக்குள்ளயேவா வச்சு வளர்க்க முடியும்? வெளிய எங்கயாவது… உதாரணமா ஒரு விசேஷ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகும் போது எல்லாரும் பாப்பாவைப் பாக்குற மாதிரியே அந்தக் குழந்தையையும் பார்ப்பாங்கன்னு சொல்ல முடியாது. பாப்பாவை மட்டும் தூக்கிக் கொஞ்சி அந்தக் குழந்தைய ரெண்டாந்தரமா நடத்துனா அந்தக் குழந்தை பரிதவிச்சுப் போய்டாதா? பாவம்… அதுக்கு என்ன நடக்குதுன்னு கூடப் புரியாது. ஊருக்குப் பாடமா எடுக்க முடியும்? இதுல வேற சில சில்லரைங்க நேரிடையாவோ நாசூக்காவோ அந்தக் குழந்தைக்கு அரைகுறையா விவரம் தெரிய ஆரம்பிக்குற வயசுல ‘தத்துப்பிள்ளை’ அது இதுன்னு உளறி வச்சா…? அப்படிப்பட்ட ஜென்மங்களும் நம்மளச் சுத்தி இருக்குல்ல?” “அதுக்கு அப்புறம் நாம உரிமையா நல்லதுக்குக் கண்டிச்சாலும் குழந்தைக்கும் நம்மளுக்கும் வித்தியாசமாதான் தெரியும், இல்ல?” “அதுக்குதான் சொல்றேன். நீயே யோசிச்சுப் பாரு மா…” என்றபடி உவள் கரங்களைப் பற்றினான். குழந்தை ஏதோ கேட்டு அழ ஆரம்பிக்கவும் “நீ உட்காரு… நான் பாத்துக்குறேன்” என்றபடி எழுந்து சென்றான். தன்னுள் எழ வாய்ப்பிருக்கும் பாரபட்சம் குறித்துப் பொய் சொல்கிறான், மனதறிந்து அல்ல. அக்குழந்தையையும் தன்னுயிராகவே சீராட்டுவான். பிறரைச் சார்ந்து உவனுள் எழும் மனத்தடையைப் பற்றி உவள் யோசிக்கவே இல்லை. இது இன்னொரு மனமும் அதன் உணர்வுகளும் சம்பந்தப்பட்டது. விட்டால் எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு ஆதரவற்ற அவ்வாழ்க்கைக்குப் பழகி அதன் போக்கில் வளர இருக்கும் ஒரு குழந்தையைக் கூட்டி வந்து புண்படும் சூழலுக்கு ஆளாக்கிவிடக் கூடாது. இந்தக் கரிசனமும் அக்கறையும் புரிந்தாலும் சமாதானமளிப்பதாக இல்லை உவளுக்கு. முன்பின் பார்த்திராத அந்தக் குழந்தைக்காகவும் உலகையே எதிர்க்கத் துணிவும் முனிவும் கொண்டாள். ஆனால் உவனது நியாயங்களில் தானாக விளங்கி நின்ற நிலைப்பாட்டில் உவளது பகற்கனவில் உவளை நோக்கி ஓடி வந்த அக்குழந்தை இப்போது அப்படியே பின்னோக்கிச் சென்றது. ஒளியாகத் தெரிந்த அதன் முகத்தை உவள் சரியாகக் கூடப் பார்த்திருக்கவில்லை. ஏனோ அழுகை வருவது போல் நெஞ்சம் இறுகித் தொண்டை கட்ட ஆரம்பித்தது. “மகிழ்…” என ஆசையாக ஒரு முறை விளித்தாள். “அம்மா” என்று கேட்டது உவளுக்கு மட்டும், உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து. இரண்டாம் முறையாகச் சிலிர்த்தாள். நன்றி 'திண்ணை' இணைய தளம்.
  10. நானும் இப்படிதான் எழுத்தாணி பிடித்தேன். முதலில் என் மகள் மட்டுமே எழுதினாள். இணையத்தில் பதிவு செய்யுமுன் என்னிடம் காட்டிக் கருத்துக் கேட்பது வழக்கம். அவளது எழுத்து பற்றி மட்டுமல்லாமல் பிற எழுத்தாளர்களின் எழுத்து பற்றியும் விவாதிப்போம். வீட்டில் ஒரு நிகழ்வைத் தொடர்ந்து, நான் அதனை எனக்கே உரிய முறையில் விவரித்து, "நீ ஏன் இதை ஒரு கதையாக எழுதக் கூடாது ?" என்று கேட்டேன். அதற்கு அவள், "நீங்களே பாதிக் கதையை முடித்து விட்டீர்கள். இனி நான் எழுதினால் அது என் எழுத்தாக இருக்காது. உங்களுக்கு வாசிப்பும் ரசனையும் இருக்கிறதே ! நீங்கள் ஏன் இதை எழுதக் கூடாது ?" என்று திருப்பிக் கேட்டு ஊக்கம் தந்தாள். நண்பர் ஒருவரின் அறிமுகத்தால் யாழில் நுழைந்தேன். புது வரவுகள் 'யாழ் அரிச்சுவடி' பகுதியில்தான் பதிய வேண்டுமென நானாக நினைத்துக் கொண்டு அங்கு பதிந்தேன். பிறகு கதைப் பகுதிக்கு மாற்றித் தந்தார்கள். அக்கதைக்கும், எனக்கும் யாழ் சொந்தங்கள் அளித்த வரவேற்பு அபரிமிதமானது. எனது வெளியுலக நண்பர்களும் பாராட்டி உற்சாகப் படுத்தினார்கள். ஒரு சிறிய நேர எழுத்தாளனாகவே மாறி விட்டதாக உணர்கிறேன். எல்லோரும் இப்படிதான் பிறர் மூலம் தம்மை உணர்ந்திருப்பார்கள். நீங்கள் எழுத்துலகில் வாரணம் ஆயிரம் சூழ வலம் வர வாழ்த்துகள். இனி எனது அந்த முதல் எழுத்து. நேரம் வாய்க்கும்போது உங்கள் வாசிப்புக்கு :
  11. தோழர் ரசோதரன் சிறந்த கதைசொல்லி. ஒரு சிறிய நிகழ்வு நேர்த்தியாக சொல்லப் பட்டுள்ளது. அதுதானே சிறுகதை ! மற்ற யாழ் சொந்தங்களின் பின்னோட்டங்கள் வாசித்தேன். ஈழத்தில் உங்கள் இளம் பருவத்தை அசைபோட்டு நீங்கள் எழுப்பும் நினைவலைகள் (nostalgia) அந்தத் தமிழ் மண்ணின் வாசனையை என் போன்றோர் நுகர வைக்கின்றன. போருக்கு முந்தைய காலகட்டத்தில் என் இளமைப் பருவத்தில் இந்தியப் பெருங்கடலின் இந்தப் பக்கத்தில் இருந்து 'இலங்கை' தமிழ் வானொலியை மட்டுமே கேட்கும் எனக்கு கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் குரலில் உங்கள் வருணனைகள் ஒலிக்கின்றன; சீனி கலந்த விளாம்பழமாய்ச் சுவைக்கின்றன.
  12. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - சுப. சோமசுந்தரம் அவ்வப்போது ஈடுபடும் இலக்கிய வாசிப்பில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தற்செயல் நிகழ்வாக இரு வேறு இலக்கியக் கூறுகள் கண்ணில் பட்டுத் தெறித்தன. ஒன்று, ஒரே பார்வையில் இரு பொருள் கொண்ட காதலவர் நோக்கு. இன்னொன்று, ஒரே பாடலில் ஈரணிகள் அமைந்து தரும் இன்பம். ஒவ்வொன்றும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாய்த் தெரிந்தன. ஒவ்வொன்றையும் தனித்தனியே எழுதலாமே என்ற நியாயமான எண்ணம் தோன்றியது உண்மை. ஒரே கட்டுரையில் இரு கூறுகளை வைப்பதும் தலைப்புக்குப் பொருந்தி வருமே என்று உடனே அநியாயமான எண்ணம் தலை தூக்கியதால், அநியாயத்துக்கு எழுதிய கட்டுரை இது எனக் கொள்ளலாம். பார்வை ஒன்று பொருள் இரண்டு எந்த ஒரு பொருளையும் இயன்றவரை வள்ளுவப் பெருந்தகையிடம் தொடங்குவது மங்களகரமாய் அமையும் என்ற நல்ல நம்பிக்கையோ அல்லது மூடநம்பிக்கையோ மனதில் படிந்து விட்டது போலும். வள்ளுவன் காட்டும் தலைவன் தன் தலைவியின் உளக்குறிப்பை அவள் பார்வையில் அறிகிறான். "இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து" (குறள் 1091; அதிகாரம் : குறிப்பறிதல்; காமத்துப்பால்) பொருள் : இவளது மையுண்ட கண்ணில் (உண் கண்) - பார்வையில் - இரு பொருள்கள் (இருநோக்கு) உள்ளன. ஒன்று - என் உள்ளத்தில் காதல் - நோய் தருவது; மற்றொன்று, அந்நோய்க்கு மருந்தாவது. காதல் கொண்டோர் தமக்குள் காதல் பார்வையை பரிமாறிக் கொண்டாலும், ஏனையோர்க்கு அக்காதலை மறைத்த பொதுப்பார்வை காதலர்க்கே உரித்தானது. "ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள" (குறள் 1099; அதிகாரம்: குறிப்பறிதல்; காமத்துப்பால்) (ஏது - குற்றம்; ஏதிலார் போல - குற்றமற்றவர் போல - இங்கு ஏதும் அறியாதார் போல எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும்) சீவக சிந்தாமணியின் நாயகன் சீவகன் பல்லவ நாட்டிலிருந்து ஏகி தக்க நாட்டின் தலைநகராகிய கேமமாபுரத்தை அடைகிறான். அங்கு சுபத்திரன் என்னும் வணிகன் தன் மகள் கேமசரிக்குச் சீவகன் உற்ற தலைவனாகலாம் என்ற எண்ணத்தில் சீவகனைத் தனது இல்லத்திற்கு விருந்துண்ண அழைக்கிறான். சீவகன் அவ்வில்லத்தின் வாயிலை அடைந்த மாலைப்பொழுதில் மனையின் முற்றத்தில் பெற்றோர், உற்றார் சூழ கேமசரி யாழோடு வீற்றிருக்கிறாள். சீவகனைக் கண்டவுடன் காதல் கொள்கிறாள். தனக்கு மட்டும் காதற் பொருளை உணர்த்தி ஏனையோர்க்குக் கள்ளமில்லாத பொதுப்பொருள் உணர்த்திய அவளது பார்வைக்கு இவ்வுலகையே விலையாய்த் தரலாம் என்று பாவையவளின் பார்வை நலம் பாராட்டுகிறான் சீவகன் : "காதன்மை கண்ணுளே அடக்கிக் கண்ணெனும் தூதினாற் துணிபொருள் உணர்த்தித் தான்தமர்க்கு ஏதின்மை படக்கரந்திட்ட வாட்கண் நோக்கு ஓத நீரமுதும் உலகும் விற்குமே" (சீவக சிந்தாமணி பாடல் 1485; கேமசரியார் இலம்பகம்) (பொருள் கொள்ள வசதியாக சீர்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன). பொருள் : தான் மனதில் என் மீது கொண்ட - காதலைக் (காதன்மை - காதல் தன்மை) கண்ணில் அடக்கி அந்தக் கண் எனும் தூதினால் தான் எண்ணிய - காதல் - பொருளை (துணி பொருள் - துணிந்த பொருள்) உணர்த்தி, தான் தன் சுற்றத்தார்க்குக் (தமர்க்கு) கள்ளமில்லாத பார்வை மட்டும் தெரியுமாறு (ஏதின்மை பட) - அக்காதற் பொருளை - மறைத்திட்ட (கரந்திட்ட) வாள் போன்ற அவளது கூரிய பார்வைக்கு (வாட்கண் நோக்கு), பாற்கடலைக் கடைந்தெடுத்த அமுதையும் (ஓத நீர் அமுதும்) இந்த உலகத்தையும் விலையாய்த் தருதல் தகும் (உலகும் விற்குமே). பாடல் ஒன்று அணி இரண்டு இங்கும் தொடங்கி வைக்க வள்ளுவனைத்தானே அழைக்க வேண்டும் ! "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" (குறள் 90; அதிகாரம் : விருந்தோம்பல்) பொருள் : அனிச்ச மலரானது நாம் முகர்ந்து பார்த்த (நோக்க) அளவில் - நம் மூச்சுக்காற்றின் வெம்மையால் - வாடிவிடும் (குழையும்). அதுபோல - அவர்கள் வரவினால் - மகிழ்ச்சியைக் காட்டாத நம் பார்வையைக் (முகம் திரிந்து நோக்க) கண்டு விருந்தினர் மனம் வாடிப் போகும் (குழையும் விருந்து). மேற்கொண்ட பொருள் கோளினால் குறள் எடுத்துக்காட்டுவமை அணியின்பாற் பட்டது ('அதுபோல' என்று உவம உருபை எடுத்துக்காட்ட வேண்டியுள்ளதால்). இக்குறளைச் சிறியதொரு விலகலுடன் பொருள் கொள்வாரும் உண்டு. அஃதாவது, "அருகில் எடுத்து முகர்ந்து பார்த்த அளவில் அனிச்சம்பூ வாடிப் போகும். ஆனால் விருந்தினரோ, சற்றுப் பழகிய பின் என்றில்லாமல், முகம் மாறி நோக்குவதாலேயே வாடிப்போவர்" என்பதாம். இப்பொருள் கோளின்படி குறள் வேற்றுமை அணியின்பாற் பட்டது. வாடிப்போதலில் ஒற்றுமையைக் கூறி, முகர்தலும் நோக்குதலும் என்ற அளவீட்டின் படி வேற்றுமைப் படுத்துவதால் வேற்றுமை அணியானது. இரு பொருள்களுக்கு இடையே ஒற்றுமையைக் கூறிப் பின் வேற்றுமைப்படுத்திக் காட்டுவது வேற்றுமை அணியாம். மேற்கண்ட குறளில் வெவ்வேறு வகையில் பொருள் கொண்டமையால் இரு வேறு அணிகள் அமைந்து நின்றன. மாறாக, ஒரு பொருளுக்கே இரு வேறு அணிகள் அமையவும் காணலாம். சீவக சிந்தாமணியில் முற்சொன்னவாறு பல்லவ நாட்டிலிருந்து தக்க நாடு செல்லும் சீவகன் மலை சூழ்ந்த கானகத்தின் வழியே செல்கிறான். சுனைகளாகிய கண்களையும் சுனைகளைச் சூழ்ந்த குவளை மலர்களாகிய விழிகளையும் கொண்ட மலையாகிய மங்கை கானகத்தின் வழியே வரும் சீவகனின் துன்பம் கண்டு இரங்கி அழுவது போல மலையருவி வீழ்வதாய்த் திருத்தக்க தேவர் (சீவக சிந்தாமணி ஆக்கியோர்) பாடுகிறார். சுனைகளாகிய கண்கள், குவளையாகிய விழிகள் என்றெல்லாம் உருவகித்ததால் அங்கு உருவகவணி ஆளுமை கொண்டது. அம்மலைசூழ் கானகத்தில் இயற்கையான நிகழ்வில் புலவர் தம் (கதைக்கான) குறிப்பை ஏற்றியதால் தற்குறிப்பேற்ற அணியானது. "சுனைகள் கண்க ளாகச் சூழ்ந்த குவளை விழியாவனைய லாகா வுருவ நோக்கி மைந்தற் கிரங்கிஇனைவ போலும் வரையின் னருவி யினிதி னாடிநனைகொள் போது வேய்ந்து நாதற் பாடு கின்றான்" (சீவக சிந்தாமணி பாடல் 1417; கேமசரியார் இலம்பகம்) பொருள் : சுனைகள் கண்களாக - சுனைகளாகிய கண்களைக் கொண்டு; சூழ்ந்த குவளை விழியா - (சுனைகளைச்) சூழ்ந்த குவளை மலர்களாகிய விழிகளைக் கொண்டு; வனையலாகா உருவ நோக்கி - (சிற்பியால்) வடிக்க இயலாத (சீவகனின் பொலிவான) உருவம் நோக்கி; மைந்தர்க்கு - வீரனாகிய சீவகனுக்கு; இரங்கி - இரக்கமுற்று; இனைவ போலும் - அழுவது போன்ற; வரையின் அருவி - மலையின் அருவியில்; இனிது ஆடி - இனிமையாய் நீராடி; நனைகொள் போது - தேனில் நனைந்த மலர்களை; வேய்ந்து - தூவி; நாதற் பாடுகின்றான் - அருகனாகிய நாதனைப் போற்றிப் பாடுகின்றான். வஞ்சப்புகழ்ச்சி அணியை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். அறியாதவர்களும் அதனை அன்றாட வாழ்க்கையில் அனாயசமாகப் பயன்படுத்துவர். அவ்வணியில் இரண்டு வகை உண்டு - புகழ்வது போல் இகழ்தல், இகழ்வது போல் புகழ்தல் என்பன. ஒவ்வொன்றும் தனித்தனியே வெவ்வேறு பாடல்களில் எடுத்தாளப்படுவதுண்டு. இரண்டும் ஒரே பாடலில் அமைந்து இன்பம் பயப்பது அருகி வருவது. அவ்வாறான புறநானூற்றுப் பாடலொன்றில் புலவரான கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் (!), பாடல் பெறும் சோழன் கடுமான் கிள்ளியை இகழ்வது போல் புகழவும், அவர்தம் பகைவரைப் புகழ்வது போல் இகழவும் காணலாம். "நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர் படை விலக்கி எதிர் நிற்றலின், வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு, கேள்விக்கு இனியை, கட்கின் னாயே! அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின், ஊறுஅறியா மெய் யாக்கை யொடு, கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே! அதனால்,நீயும் ஒன்று இனியை;அவரும்ஒன்றுஇனியர்; ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க் கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி! நின்னை வியக்குமிவ் வுலகம்; அ·து என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே" (புறநானூறு பாடல் 167) பொருள் : போர்க்களத்தைக் கண்டவிடத்து (அமர்காணின்) நீயே நேரில் களம் புகுந்து (நீயே அமர் கடந்து), பகைவர்தம் படை விலக்கி அவர் எதிர் நிற்கிறாய்; ஆதலின் வாளினால் வாய்த்த (வாஅள் வாய்த்த) ஆழமான வடுக்களால் ஆன (வடு ஆழ்) மேனியுடன் (யாக்கையோடு) - புகழினால் - கேட்பதற்கு இனிமையானவனாய்த் திகழ்கிறாய் (கேள்விக்கு இனியை); பார்ப்பதற்கு - வடுக்கள் பட்டதால் - இனியனாய் இல்லை (கட்கு - கண்ணுக்கு - இன்னாயே). அவரே - அப்பகைவரே - உன்னைக் கண்டதும் புறமுதுகிடுவதால் (நிற்காணின் புறங்கொடுத்தலின்), குறையற்ற (ஊறு அறியா) தத்தம் மேனிப் பொலிவுடன் (மெய்யாக்கையொடு) கண்ணுக்கு இனிமையானவர்; புகழற்று - கேட்பதற்கு இனிமையற்றோர் (செவிக்கு இன்னாரே). அதனால் நீயும் ஒரு வகையில் இனிமையானவன்; அவரும் ஒருவகையில் இனிமையானோர். இருவருக்கும் பொருந்தாத தன்மை எவை உண்டு ? (ஒவ்வா யாவுள மற்றே ?) வெல்லும் போர் புரியும் வீரக்கழல் புனைந்த (வெல்போர்க் கழல் புனை) சீரிய திருவடிகளையும் (திருந்தடி), விரைந்து செல்லும் குதிரையையும் உடைய (கடுமான்) கிள்ளியே ! உன்னையே புகழும் (வியக்கும்) இவ்வுலகம். அதன் காரணம் என்ன, பெருமைக்குரியவனே (என்னோ பெரும) ! எனக்குச் சொல்வாயாக (உரைத்திசின் எமக்கே) ! சான்றோர் கேண்மையால் வாசிப்பில் இன்பம் கொண்டு எதையெதையோ வாசிக்க, எதையெதையோ பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறதே ! தோன்றியதோடு நில்லாமல், சிறியளவு ஆட்டமாயிருப்பினும் ஆடியகால் நில்லாது என்பதற்கு இயைய, எழுதுகோலைக் கை தேடுகிறதே ! சரி விடுங்கள், அமர்காணின் தினவெடுக்கும் தோள்கள் இல்லாவிடினும் எழுத அரிப்பெடுக்கும் கையாவது வாய்க்கப் பெற்றதே!
  13. பொதுவாக இந்தக் கேள்விக்கு, "உண்டென்பார்க்கு உண்டு; இல்லையென்பார்க்கு இல்லை", "ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே" என்றெல்லாம் சுற்றி வளைக்காமல் பின்வருமாறு சொல்ல விரும்புகிறேன் : ஆதி காலந்தொட்டே பெருந்திரள் சமூகத்தில், "நமக்கு மேல் ஒரு சக்தி நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது. அதுதான் கடவுள்" எனப் பொதுவாக வரையறுத்து, ஒவ்வொரு இனக்குழுவும் தாம் விரும்பிய வடிவம் கொடுத்து, சிலர் தமக்கு வசதியான சட்ட திட்டங்களை வகுத்து மத நூல்களை உருவாக்கி வாழ்கின்றனர். இந்த 'கடவுள்' வரைமுறையை வைத்து "கடவுள் இருக்கிறாரா, இல்லையா ?" என்பதற்கு எனது பதில், "கடவுள் இல்லை, இல்லவே இல்லை" என்பதே. நாம் இறை மறுப்பைப் பேசுகிற போது கடவுளை நம்புகிற சிலரது மனம் புண்படுமே என்றால் (இக்களத்தில் அந்தப் பிரச்சினை வருவதில்லை), அதற்கு என்னிடம் எப்போதும் பதில் கிடையாது. Christopher Hitchens டம் கடன் வாங்குவதுண்டு : "That's offensive is not an argument".
  14. தங்களின் பதிவு மிக அருமை. இத்துணை விடயங்களைக் கொள்ளாவிடினும், தங்கள் கருத்தோடு ஒட்டி வரும் ஒரு சிறிய பதிவினை முன்பு வேறு ஒரு சூழலில் முகநூலில் பதிந்திருக்கிறேன். அதன் இணைப்பு : https://www.facebook.com/share/p/7KFQBj7Mvdat8jXr/?mibextid=oFDknk
  15. உங்கள் எழுத்து அருமை. யாழில் வந்த தொடர்பான பதிவு :
  16. கடைசியாக ஒரு அங்கதம் (satire) உள்ளதோ - மன நோயாளிகளுக்கும் மனநல மருத்துவர்க்கும் வேறுபாடு எளிதாகத் தெரிவதில்லை என்று ! 🙂 (இக்களத்தில் மனநிலை மருத்துவர்கள் இருந்தால் என்னை மட்டும் பழிக்கவும். ரசோதரன் கண்டிப்பாக அவ்வாறு நினைத்து எழுதியிருக்க மாட்டார். அவர் நல்லவர்; நேராக சிந்திக்கக் கூடியவர் என்பது அவர் எழுத்திலேயே தெளிவு)
  17. மிக அருமை. டி.எம்.கிருஷ்ணா வை சுருக்கமாகவும் முழுமையாகவும் எடுத்துக் காட்டும் பெருமாள் முருகனின் எழுத்து. அதை சரியாக எடுத்தளித்த ரசோதரன் அவர்களுக்கு நன்றி. பெருமாள் முருகனின் இந்த எழுத்திற்கான இணைப்பை நிறைய புலனக் குழுமங்களில் நான் பகிர ஏதுவாக அமைந்தது.
  18. இது தொடர்பில் தங்களின் இடுகையை வாசித்தேன். இணைப்பை அளித்தமைக்கு நன்றி, தோழர் ரசோதரன் ! எழுத்தாளர்கள் சாரு நிவேதிதா, ஜெயமோகன் போன்றோரது கருத்துகளுடன் பெரும்பாலும் எனக்கு ஒத்துப் போவதில்லை. ஒருவரது எழுத்து பற்றி கருத்துக் கொள்ள ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அந்த வகையில் இவர்கள் Fashionable non-conformists (being different just for the sake of being different) என்பது எனது முதல் கணிப்பாய் அமைந்தது. அதனைப் பெரிய அளவில் நான் மாற்றவில்லையாயினும், சமீப காலங்களில் இவர்களிடம் வேறு ஒரு பரிமாணத்தையும் பார்க்கிறேன். ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனிய பாசிசத்தின் மொழியை வழிமொழியும் அவர்களின் நிலைப்பாடே அது. திரு. டி.எம்.கிருஷ்ணா சேரிக்கே சென்று கர்நாடக இசை சொல்லித் தருவதைக் கொச்சைப்படுத்தும் எழுத்தைப் படித்ததும், "சாரு நிவேதிதா தம் இயல்பு மாறாமல் எழுதுகிறார்" என்று சிரித்துக் கொள்கிறேன். (இப்போதெல்லாம் (எப்போதும் அப்படிதானோ ?) சமூக வலைத்தளங்களில் ஒருவருக்குப் பிடித்த எழுத்தாளாரையோ, நடிகரையோ, இசையமைப்பாளரையோ விமர்சனம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர் நம் மீது வன்மத்துடன் தனிநபர் தாக்குதலைத் தொடுப்பது வேடிக்கையான ஒன்று. அவர் கும்பிடுகிற சாமியை விமர்சனம் செய்யவே யாருக்கும் உரிமையுண்டு என்பது எனது உறுதியான எண்ணம். குறைந்த பட்சம் அறிவுலகிலாவது இந்திய தண்டனைச் சட்டம் 295 A ஐத் தூக்கிக் கிடாச மாட்டார்களா என ஏங்குகிறேன். நிற்க. இதனால் அறியப்படுவது என்னவென்றால் மேற்கூறிய எழுத்தாளர்களின் ரசிகர்கள் கொதித்தெழுந்தால், நான் சிரித்துக் கடந்து சென்று விடுவேன்.) மென்மேலும் எனக்கு எழுத வாய்ப்பளிக்கும் ரசோதரன் அவர்களுக்கு மீண்டும் நன்றி.
  19. சங்கீத கலாநிதி 'சங்கீத கலாநிதி' விருது பெற்ற திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்களை வாழ்த்துவோம். அவர் பார்ப்பன சமூகத்தில் தோன்றிய முற்போக்குச் சிந்தனையாளர் என்பது அவருக்கான கூடுதல் தகுதி, சிறப்பு; நமக்கான கூடுதல் மகிழ்ச்சி. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சுமார் மூன்று சதவீதம் உள்ள பார்ப்பனர்கள், 'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யை நிரப்பிக் கொண்டு திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பிற்போக்குத்தனமாகக் கொதிக்கிறார்கள், குதிக்கிறார்கள் என்றால் ஒரு காலத்தில் அவர்கள் என்னவெல்லாம் ஆட்டம் போட்டிருப்பார்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறையினரின் கற்பனைக்கு விட்டு விடுவோம். சுமார் ஐம்பது வருட காலம் அடங்கி இருந்தவர்கள் இப்போது ஒன்றியத்தில் ஒரு மதவாத, பார்ப்பனிய, பாசிச அரசு அமைந்ததும் பண்ணுகிற அலப்பறைகள் எண்ணிலடங்கா. அவர்கள் மொழியில் சொல்வதாக இருந்தால், "வினாஷ் காலே விபரீத புத்தி". இசைத்துறையில் அவர் அந்த விருதுக்கு முழுத் தகுதியுடையவர் என்பது யாவரும் அறிந்ததே. அவர்களது வாழ்வியலுக்கு எதிரான கருத்தியல் கொண்டவர் என்பதே சுருக்கமாக அவர்களது குற்றச்சாட்டு. 'மகா பெரியவா'ளைப் பாடும் பிற்போக்காளர்கள் மத்தியில் தந்தை பெரியாரைப் பாடும் முற்போக்காளர் திரு. டி.எம்.கிருஷ்ணா என்பதே அவர்களது ஆற்றாமை. அதிலும் சில பிரகஸ்பதிகள் 'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யில் தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பிக் கொடுப்பார்களாம்; திரு.டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் இசை நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்களாம். *உயிரே போச்சு* என்று அவரோ, இசையுலகமோ *தலை*யில் கைவைத்து உட்காரப் போகிறதா, என்ன ? பார்ப்பனராயிருக்கும் திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கே இன்று இந்த நிலைமையென்றால், அன்று மற்றவர்கள் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இவர் பெரியாரைப் போற்றிய பாடல்களில் ஒன்று கீழே காணொளியில் உள்ளது. இவர் போற்றிய பெரியார் பார்ப்பனர்களை மட்டுமா எதிர்கொண்டார் ? பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடித்த மகாத்மா காந்தி போன்ற ஆளுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மகாத்மாவின் மரியாதைக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காமல் அவரை எதிர்த்து நின்றது பெரியாரின் மகாத்மியம். வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டத்தில் இறுதி வரை உறுதியாக நின்று வென்றெடுத்தவர் தந்தை பெரியார். அதனால்தான் செத்து ஐம்பது வருடங்கள் ஆன பிறகும் அவாளை மிரட்டுகிறார் பெரியார். சரி, இவ்வளவு பேசியாயிற்று. எந்த மகாத்மாவைப் பெரியார் எதிர்த்தார் என்பதையும் பார்ப்போமா ? அதற்கு வர்ணாசிரமத்தில் எவ்வளவு மூழ்கித் திளைத்தவர் காந்தியார் என்பது தெரிய வேண்டுமே ! 1921 - 22 காலகட்டத்தில் குஜராத்தி பத்திரிக்கையான நவஜீவனில் காந்தியார் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை : "(1) பிறப்பை அடிப்படையாகக் கொண்ட வருணாசிரமப் பிரிவுகளில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. (2) வர்ணம் என்பது பிறப்பதற்கு முன்னாலேயே மனிதனுடைய தொழிலை நிர்ணயிப்பதாகும். (3) வர்ணாசிரம முறையில் எந்த மனிதனுக்கும் அவன் விரும்பும் தொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்ள சுதந்திரம் கிடையாது. (4) ஆரம்பப் படிப்பைப் பரப்ப ஜாதி ஒரு வசதியான அமைப்பாகும். ஒவ்வொரு ஜாதியும் அதனுடைய வகுப்பாரின் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளக் கூடும். ஜாதிக்கு ஒரு அரசியல் அடிப்படையும் உண்டு. ஜாதியானது சில முறைகளால் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் அந்த ஜாதியினருக்குள் உண்டாகும் பூசல்களைத் தீர்த்து வைக்க உதவும். ஜாதியின் உதவியால் ஒவ்வொரு ஜாதியும் ஒரு படையைத் திரட்டுவது சுலபமானதாகும். (5) சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் சமூகத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்குத் தேவையில்லை என நான் நம்புகிறேன். சமபந்தி போஜனம் நட்பை வளர்க்கிறது என்பது அனுபவத்திற்கு மாறானதாகும். இது உண்மையாக இருக்குமானால் ஐரோப்பாவில் ஒரு சண்டை கூட நிகழ்ந்திருக்காது. மலம் கழிப்பதைப் போலவே உண்பதும் ஒரு மட்டமான செய்கையாகும். மலம் கழித்தவுடன் நமக்கு அமைதி ஏற்படுகிறது. ஆனால் சாப்பிட்டவுடன் நமக்குத் தொந்தரவு ஏற்படுகிறது என்பதே இந்த இரண்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு ஆகும். மலம் கழிப்பதை நாம் எப்படி ஒதுங்கித் தனித்து செய்கிறோமோ அதேபோல சாப்பிடுவதும் ஒதுங்கித் தனித்தே நடத்தப்பட வேண்டும். (6) இந்தியாவில் சகோதரர் குழந்தைகள் ஒன்றை ஒன்று திருமணம் செய்து கொள்வதில்லை. அதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காமலா இருந்து விடுகிறார்கள் ? வைஷ்ணவரிடையே பல தாய்மார்கள் மற்ற குடும்பத்தாருடன் கூடி சாப்பிடுவதோ அல்லது பொதுவான ஒரு தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் குடிப்பதோ கூட இல்லாத அந்த அளவுக்கு வைதீக உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பில்லாமலா இருக்கிறார்கள் ? சமபந்தி போஜனத்தையும் கலப்பு மணத்தையும் ஜாதி அனுப்புமதிப்பதில்லை என்பதால் ஜாதி கேடானது என்று சொல்லிவிட முடியாது. (7) கட்டுப்பாட்டிற்கு மற்றொரு பெயர்தான் ஜாதி என்பது. அளவு மீறி அனுபவிப்பதற்கு ஒரு எல்லையை உண்டாக்குவது தான் ஜாதி. வசதிகளை அனுபவிக்கும் முயற்சியில் தனது எல்லையைத் தாண்ட ஜாதி ஒருபோதும் அனுமதிப்பதில்லை. சமபந்தி போஜனம், கலப்பு மணம் ஆகியவற்றிற்கு ஜாதி முறை தடை போடுவதன் முக்கியமான கருத்து இதுதான். (8) ஜாதி முறையை ஒழித்து மேற்கு ஐரோப்பிய சமுதாய முறையை கடைப்பிடிப்பதற்கு ஜாதி முறையின் உயிர் நிலையான பரம்பரை ஜாதித் தொழிலைக் கைவிட்டாக வேண்டும். பரம்பரை ஜாதித் தொழில் என்பது எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கொள்கையாகும். அதை மாற்றுவதன் மூலம் குழப்பம்தான் உண்டாகும். என் வாழ்வில் ஒரு பிராமணனை பிராமணன் என்று அழைக்க முடியாவிட்டால் அந்த பிராமணனால் எனக்கு எந்த விதமான பயனும் இல்லையே ! ஒரு பிராமணன் சூத்திரன் ஆகவும் ஒரு சூத்திரன் பிராமணனாகவும் மாற்றப்பட்டால் அது பெரும் குழப்பமாகத்தானே இருக்கும் ? (9) ஜாதி முறை சமுதாயத்தில் இயற்கையான ஒரு அமைப்பாகும். இந்தியாவில் அதற்கு ஒரு மதப்பூச்சு கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற நாடுகள் ஜாதி முறையின் பயனைச் சரியானபடி புரிந்து கொள்ளாத காரணத்தால் அந்த நாடுகள் இந்தியா அடைந்த அளவுக்கு ஜாதியால் பல நன்மைகள் அடைய முடியவில்லை. மேற்கூறியவை என்னுடைய கருத்துக்களாக இருக்கின்றமையால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்களை நான் எதிர்க்கிறவனாக இருக்கிறேன்". இவற்றின் அடிப்படையில் "Beware of Gandhi" என்று அண்ணல் அம்பேத்கரே எழுதினார் என்றால், காந்தியாரை எதிர்த்து நின்ற பெரியார் பெரியார்தானே ! பின்னே சும்மாவா டி.எம்.கிருஷ்ணா பெரியாரைப் போற்றினார் ! பின் குறிப்பு : அவாள்லாம் டி.எம்.கிருஷ்ணாவைத் தாக்க, நாம் பதிலுக்கு அவாளைத் தாக்க crossfire ல் காந்தியார் மாட்டிக் கொண்டாரோ ? சரி, விடுங்க தோழர் ! போர்க்களம்னா அப்படிதான் ரணகளம் ஆகும் ! https://www.facebook.com/share/p/ma32NPCiZiRCgGh4/?mibextid=oFDknk
  20. என் மகள் சோம.அழகு 'திண்ணை' இதழில் எழுதிய கட்டுரையை இங்கு பதிவு செய்துள்ளேன். நன்றி தோழர். "அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை" (குறள் 315; அதிகாரம் : இன்னா செய்யாமை) (குறளின் பொருள் : பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தைத் தனக்கே ஏற்பட்ட துன்பமாய்ப் பாவிக்காவிட்டால், ஒருவன் பெற்ற அறிவினால் என்ன பயன் ?) மேற்கண்ட குறள் நீங்கள் சொன்ன கருத்துடன் பொருத்தி நோக்கத்தக்கது. 'பிறிதின் நோய்' என்று அஃறிணைகளுக்கு ஏற்படும் துன்பத்தையும் வள்ளுவன் குறித்தது குறளின் சிறப்பு. 'பிறிதின் நோய் தந்நோய்' எனும் தலைப்பில் முன்னர் நமது இந்த 'யாழ்' தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ஆகையால் குறள் உடனே நினைவுக்கு வந்தது. தங்களின் பின்னூட்டத்திலிருந்து சற்று விலகி, ஒரு கருத்தையும் இவ்விடத்தில் கட்டுரைக்கான எனது பின்னூட்டமாகப் பதிவு செய்ய விழைகிறேன். சில நேரங்களில் சில அழிவுகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதயாததாய் அமையும் - சாலை அமைக்க மரம் வெட்டுவது போல. இருப்பினும் அவற்றைக் கேள்விக்கு உட்படுத்தாமல் கடந்து செல்வது பேரழிவுகளுக்கு வழி வகுக்கும். அவ்வாறு கேள்விக்கு உட்படுத்துவதாகவும் கட்டுரையைப் பார்க்கிறேன். இக்கண்ணோட்டமும் கட்டுரையில் குறித்த 'கண்ணோட்ட'மும் இணைந்து செல்வன என்று நினைக்கிறேன்.
  21. நீங்கள் எனக்கு உதவியிருக்கிறீர்கள், ஏராளன் ! நன்றி.
  22. ஜெயமோகன் செய்த தவறை நானும் செய்திருக்கிறேன் - ஒரு கருத்தைக் களம் மாறி வெளிப்படுத்துவது; 'மஞ்ஞுமல் பாய்ஸ்' பேச வந்த நான் '96' ஐயும் பேசியது. இதனால் '96' ஐக் கொண்டாடியவர்களுக்கு நான் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். உப்பைத் தின்றுவிட்டால் தண்ணீர் குடிக்கக்கத்தானே வேண்டும் ! 'கற்பு' என்றெல்லாம் நான் பேசவேயில்லை. ஒரு காதல் சரி வரவில்லை என்றால் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு மறுகாதல் எனும் கருத்துடைய எனக்கு, 'கற்பு' மட்டுமல்லாமல் சென்ற 'காதலே' புனிதம் கிடையாது. அதனால்தான் '96' ன் பழைய காதலைக் கொண்டாடுவதைப் 'புனிதப் படுத்துதல்' என்றேன். சமூகமாய் வாழ சமூக விலங்காகிய மனித இனம் (அமைதியான வாழ்க்கைக்காக) சமரசம் செய்து கொண்ட பிறகு சில வரையறைக்குள்தான் இயங்க முடியும். தெருவில் இறங்கி மற்றவர்களுடன் பிரச்சினையின்றி நடக்க முடிவெடுத்த பிறகு எல்லைக்கோட்டை மதித்துதானே ஆக வேண்டும் ? பழைய காதலைத் தூக்கியெறிய முடியாவிட்டால், வேறு ஒரு மண வாழ்க்கை என்ற சமூகக் கட்டமைப்பில் சென்று நிற்பது நேர்மையில்லையே ! (புதிய வாழ்க்கையில் கணவனும் குழந்தைகளும் அருமையாக அமைந்ததாய் நாயகியே ஓரிடத்தில் சொன்னதாக நினைவு). பழைய காதலருடன் இரவில் ஊர் சுற்றுவதும், விடுதி அறையில் அருகருகில் குளிர் காய்வதும், அவன் சட்டையின் வாசத்தை சுவாசிப்பதும் அந்தக் காதலை (!!!) ரசிப்பது அல்லது புனிதப்படுத்துவது அன்றி வேறென்ன ? அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லையே, அங்குதான் புனிதம் இருக்கிறது என்பீர்களா ? மனித மனங்களில் விகாரங்கள் வெவ்வேறு வகைகளில் தோன்ற வாய்ப்பு உள்ளது. அவற்றை மனிதன் தனக்குள் வைத்து ரசித்துக் கொள்ள வேண்டும்; முடிந்தால் தவிர்க்க வேண்டும். அத்தனையும் காவியமாக முடியாது. நீங்கள் இதற்கு மேல் எவ்வளவு கேட்டாலும் '96' ஐப் பற்றி விவாதிக்க என்னிடம் வேறெதுவும் கிடையாது. Tailpiece : In a lighter vein or even seriously - அது என்ன 94, 95,97,98 இவற்றையெல்லாம் விட்டு 96 ? அது எனது பார்வையில் உள்ள விரசம் (perversion) அன்றி மற்றபடி தற்செயலான தேர்வுதான் என்பீர்களா? சரி, ஏற்றுக் கொள்கிறேன். 'lighter vein' என நான் அறிவிப்புப் பலகை வைத்ததால், இதனைப் பேசு பொருளாக்கும் எண்ணம் கண்டிப்பாக இல்லை. மற்றபடி உங்கள் சாட்டையைச் சுழற்றலாம்.
  23. ஜெயமோகன் குறிப்பிடும் 'குழு மனப்பான்மை (mass mentality)' பற்றிய கருத்தை எந்த ஒரு குழுவின் மீதும் வைக்க, விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு. ஏனெனில் 'குழு மனப்பான்மை' என்பது சமூகத்தில் விரும்பத்தகாத எதார்த்தம். பெரும்பாலான மனிதர்களின் நடத்தையை அவர்கள் சார்ந்த குழுவே தீர்மானிக்கும் (It's termed peer culture) - ஒரு போராட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை நம் எதிரி தீர்மானிப்பது போல. ஆனால் 'மஞ்ஞுமல் பாய்ஸ்' திரைப்படத்தைப் பேசுகையில் இத்தலைப்பை ஜெயமோகன் கையிலெடுத்திருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. அதில் வரும் இளைஞர்கள் எந்தவொரு சமூகத்து இளைஞர்களையும் போல் அந்த வயதிற்குரிய சிறுபிள்ளைத்தனத்தனத்துடன் கதையை ஆரம்பிக்கிறார்கள். அவ்வளவே. பெரிய அழிவு நடவடிக்கைகளில் (destructive behaviour) அவர்கள் ஈடுபடுவதாகக் காட்டப்படவில்லை. பொதுவாக மலையாளத்து இளைஞர்களின் அழிவு நடவடிக்கைகள் பற்றி ஜெயமோகன் கருத்து கொண்டிருந்தால், அதனைப் பேச வேறு தளங்கள் உண்டு. அச்சமூகத்தை சுய பரிசோதனைக்கு உட்படுத்தும் நோக்கில் அவர் ஒரு தனிக் கட்டுரையாகவே எழுதலாம். அப்போதும் ஒரு சில குறிப்பிட்ட குழுவைச் சார்ந்தோரால் அவர் வசைபாடப் படலாம். ஒரு எழுத்தாளர் அதனை அறிவுப்பூர்வமாக எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இப்போதோ பெரும்பாலும் அறிவுசார் சமூகத்தினரின் தூற்றுதலுக்கு உள்ளாகிறாரே ! இந்த எனது பார்வையோடு ஜெயமோகனின் 'மஞ்ஞுமல் பாய்ஸ்' பற்றிய கருத்தைப் புறந்தள்ள எண்ணுகிறேன். இனி அப்படம் தொடர்பாக எனது சிந்தனையோட்டம் : 'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத்தை நான் ரசிக்கிறேன்; கொண்டாடுகிறேன். குணா படத்தின் அந்தப் பாடலைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது என் கருத்து. மற்றபடி 'குணா' படம் வந்த போதே அந்தப் பாடல் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று; படம் அப்படியல்ல என்பதே என் கருத்தாக இருந்தது; இன்றும் இருக்கிறது. தமிழ்ச் சமூகம் அப்படத்தையும் அதே பாணியில் தனுஷ் நடித்து வெளிவந்த 'காதல் கொண்டேன்' படத்தையும் பெரிதாகக் கொண்டாடவில்லை என்பது என் போன்றோருக்கான ஆறுதல். ஒரு மனநிலை பிறழ்ந்த மனிதனின் காதலையும் (!!!), அவனால் கடத்தப்பட்ட நாயகியின் Stockholm syndrome ஐயும் எப்படிக் கொண்டாட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் இயக்குநர், நடிகர்கள் திறமையால் மக்களின் கண்ணைக் கட்டி சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத கதைகளை ஏற்க வைத்து விடுவார்கள் - திருமணத்திற்குப் பின் பழைய காதலை (அவன் சட்டையை முதற்கொண்டு) நுகர்ந்து பார்க்கும் நெறி தவறிய உணர்வைப் புனிதப்படுத்தும் '96' போல.
  24. காசிக்குப் போனாலும் கருமம் தொலையாதா ? தமிழ்நாட்டையோ ஈழத்தையோ விட்டுச் செல்லும்போது தருமத்தை மட்டும் எடுத்துச் செல்வதுதானே! ஏன் கருமத்தையும் எடுத்துச் செல்கிறார்கள் ? (நல்ல பண்பாடுகளைத் தருமம் என்றும், சடங்குகளைக் கருமம் என்றும் குறித்தேன்; சும்மா ஓசை நயத்திற்காகதான் - rhyming). ஐயரை ஜெர்மனிக்குக் கொண்டு சென்றதே அதிகப்படி. சுவிஸ்ஸில் ஐயர் இல்லாத குறைதீர்க்க ஜெர்மனியிருந்து கொண்டு செல்ல வேண்டுமா ? நம்பிக்கை என்ற பெயரில் பிற்போக்குத்தனங்கள் அவ்விடங்களிலும் இல்லாமல் இல்லை. அனைத்துலகும் தன்னம்பிக்கை இல்லாத மனிதர்களால் நீக்கமற நிறைந்ததுதானே! போகிறவர்கள் வேறு தம் பங்கிற்குப் புதிதாகக் கொண்டு சென்றே ஆக வேண்டுமா ? இதில் மத வேறுபாடெல்லாம் கிடையாது. சமீபத்தில் அமெரிக்காவில் சில காலம் வசிக்கும் எனது மகள் ஒரு திருமண நிகழ்வுக்காகத் தேவலாயம் சென்ற கதையைச் சொன்னாள். ஒரு அமெரிக்கத் தோழியைத் தவிர, சென்றிருந்தோர் அனைவரும் தமிழர் - பாதிரியார் உட்பட. இங்கே சில சமயம் தேவாலயங்களில் நடைபெறும் நாடகத்தனத்துடன் மணநிகழ்வைப் பாதிரியார் அங்கேயும் நடத்தியதை வேடிக்கையாகக் குறிப்பிட்டாள் - அதுவும் அரைகுறை ஆங்கிலத்தில். ஒரு பெண் கணவனுக்கு எத்துணைக் கட்டுப்பட்டவள் என்று பைபிளில் ஏதோ இடத்திலிருந்து எடுத்து இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் அவர் பிரசங்கம் செய்தது பிற்போக்குத்தனமாகவும் வேடிக்கையாகவும் இருந்ததை அவளுக்கே உரிய அங்கத நடையில் எழுதியிருந்தாள். பாதிரியார் சொன்ன வாசகங்களைத்தான் பிராமண ஐயரும் சொல்வார். அது வடமொழியில் என்பதால் நமக்குப் புரிவதில்லை. எல்லா மத நூல்களும் ஏதோ ஒரு வகையில் (நாசூக்காகவாவது) பெண்ணடிமைத்தனத்தைப் போதிப்பவைதாமே ! ரசோதரன் அவர்களின் கதை/கட்டுரை ஏதேதோ சிந்தனைகளைத் தூண்டியதில் பகிர்ந்து விட்டேன். மிக விலகிச் சென்று விடுவேனோ என்ற பயம் ஏற்பட்டதும் நிறுத்தி விட்டேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.