Everything posted by சுப.சோமசுந்தரம்
-
பெருந்திணை மெய்யழகா ? - சோம.அழகு
பெருந்திணை மெய்யழகா ? - சோம.அழகு நான் வெகுவாக ரசித்து ரசித்துக் கழுவி ஊற்றிய ‘96’ திரைப்படத்தின் இயக்குநரது அடுத்த படம் ஒரு நல்ல மலையாளப் படம் போல இருப்பதாகச் சிலர் சொன்னதைக் கேட்டு காணச் சென்றேன். திரு. கமல் அவர்கள் பாடிய பாடலோ வேறொரு பிம்பத்தைத் தந்தது. சொந்தங்கள், பந்தங்கள், பாசங்கள், நேசங்கள், துக்கங்கள், துயரங்கள் என முகம் பதினெட்டு கோணலாகும் வரை கிட்னி, கணையம், கல்லீரல், மண்ணீரல் எல்லாவற்றையும் பிழி பிழியென்று பிழிந்தெடுக்கப்போகிறார்கள் என்ற என் எண்ணம் தவிடு பொடியானதில் மகிழ்ச்சியே. நன்னெறிப் பிரசங்கங்கள் எல்லாம் இல்லாமல் போகிற போக்கில் மனதை வருடி நல்லுணர்வைத் தந்த படம். இந்த இயக்குநருக்குப் படமாக்கல் சிறப்பாக வருகிறது என்பதில் சந்தேகமில்லை. ‘மெய்யழகன்’ என்பதை ஒரு முழு நீளப் படம் என்பதை விட நல்ல தேர்ந்த நான்கைந்து சிறுகதைகள் மிக இயல்பாக ஒன்றாகக் கோர்க்கப்பட்ட தொகுப்பு. கம்பீரமாகச் சீறி வரும் ‘தோனி’ காளை, சைக்கிள் கதை – உணர்வுப்பூர்வமாகப் புன்னகை பூக்கச் செய்பவை. அதிலும் போலீஸ் ஒருவர் வந்து காளையைப் பார்த்ததும் காக்கியைக் கழற்றி விட்டு ஏறு தழுவுதலில் கலந்து கொண்டு காக்கிச் சட்டை அணிந்து மீண்டும் போலீஸ் ஆக மாறிய பின் பொய்யான விறைப்புடன் ‘தடை செஞ்சிருக்காங்கன்னு தெரியும்ல? அப்புறம்?’ என மென்னகையுடன் மெய்யழகனின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டுச் செல்லும் காட்சி ரொம்பவே ரசனையாக இருந்தது. வெண்ணாற்றின் கரையோரம் அமர்ந்து சோழ வரலாற்றில் தொடங்கி ஈழம் சென்று தூத்துக்குடி வரையிலான பயணம் – ‘தோழர்’ மெய்யழகனின் கதாபாத்திரத்தை மனதிற்கு மிக நெருக்கமாக அழைத்து வந்தது. எல்லோருக்குள்ளும் இருக்க வேண்டிய சக உயிருக்கென கண்ணீர் விடும் உணர்வைக் கடத்திய அழுத்தமான வசனங்களும், அதை அழுகையும் சோகமும் கலந்து உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திய மெய்யழகனின் முகமும் என் கண்களிலும் லேசாக நீர்த்திரையிட்டது. ‘பேசிட்டே இருக்காங்க’ என பெரும்பாலானோரால் சலித்துக்கொள்ளப்பட்ட இரண்டாம் பகுதிதான் கலவையான உணர்வுகளைத் தந்து ரொம்பவே ரசிக்க வைத்தது. ‘படத்தின் நீளத்தைக் குறைக்க’ என்ற காரணம் சொல்லப்பட்டாலும் கத்தரிக்கப்பட்ட காட்சிகளின் தெரிவு எழுப்பும் ஒரே கேள்வி ‘இந்த அளவு கூட உண்மையையும் நியாயத்தையும் ஒருவன் பேசக் கேட்கும் துணிவில்லையா? மனசாட்சி உறுத்துகிறதா?’ முதல் பாதி முழுக்க கல்யாண வீட்டைச் சுற்றியே கதை நிகழ்ந்ததில் ‘அய்யயோ! அடுத்த பாதியில் சொந்தங்களுடன் மீண்டும் சேர்வதான வழக்கமான(cliché) பூச்சுவேலைகள் நிரந்திருக்குமோ’ என கொஞ்சமே கொஞ்சம் சலிப்பு படர்ந்தது. பின் அமைந்திருந்த கதை அமைப்பு அதை வேரோடு பிடுங்கி எறிந்து ஆசுவாசமளித்தது. இரு தனி நபர்களுக்கு இடையிலான தூய்மையான அன்பு அழகியல் ததும்ப பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. படம் முடிந்த உடன், அதன் தாக்கம் மனதில் இருத்திச் சென்ற குறுநகையில் நானும் ஒரு நொடி மனம் பிறழ்ந்து உறவுகளை நினைத்தபடியே இருள் தெளிக்கப்பட்ட வானைப் பரிவோடு பார்த்தவாறே வந்து கொண்டிருந்தேன். உறவுகளில் அரிதான வெகு சில நல்ல உள்ளங்கள் அகக்கண்ணில் வந்து குளிர்ச்சியைப் படர விட்டுச் சென்றன. சடாரென்று மீதமுள்ள வன்மக் கிடங்குகள் வரிசையாக நினைவில் ‘இந்தா நானும் வந்துட்டேன்ல...’ என வரத் துவங்க, ‘சில்லென்று ஒரு காதல்’ திரைப்படத்தில் வரும் வடிவேலுவின் மனைவி கதாபாத்திரத்தைப் போல் ஒரு நொடி யோசித்துப் பின் முகம் சுழித்தவாறே ‘ச்சை…முடியாது…முடியாது’ என்று அபூர்வமாக என்னுள் எட்டிப் பார்த்த சினிமாத்தனத்தை எள்ளி நகையாடியது மனம். “உங்க வீட்டுக்கு என் பங்களிப்பு இருக்கக் கூடாதா?” என அருள்மொழி கேட்காமலேயே அவரின் தேவைக்காகத் தனது மொத்த சேமிப்பு, காணாததற்கு மனைவியின் நகைகளையும் அடகு வைத்துத் தருவதாகக் கூறும் மெய்யழகனின் பாத்திரப் படைப்பு எதார்த்தத்தில் இருந்து சற்றே துருத்திக் கொண்டு மிகையாகவும் மடமையாகவும் தோன்றியது. ஒரு காட்சியில் மெய்யழகன் அருள்மொழியிடம் பல காலம் முன்பு அவர் அப்பாவிடம் இருந்து அடித்துப் பிடுங்கி வீட்டை வாங்கிக் கொண்ட உறவுகளைத் தனக்காக மன்னிக்கும்படி கேட்பார். எனக்குச் சிரிப்பை வரவழைத்த இடம் அது. நம்மை ஏமாற்றியவர்கள், நமது இயல்பே மொத்தமாக மாறி நம்முள் இறுக்கம் படரக் காரணமானவர்கள் மீது எழும் வெறுப்பு அவர்களிடமிருந்து நம்மை ஒதுங்கி இருக்கச் சொல்லிப் பணிக்கும். மனம் காலப்போக்கில் அவர்களை முற்றிலும் அந்நியர்களாக்கிவிடும். பிறகு ‘மன்னிப்பு’ என்னும் வார்த்தைக்கு என்ன பெரிய பொருள் இருக்கப் போகிறது? அவர்களுக்குத் தீங்கும் நினைக்க வேண்டாம்; கவலையும் கொள்ள வேண்டாம். மீண்டும் போய் உறவைப் புதுப்பிக்கும் எண்ணம் இல்லாத பட்சத்தில் நமக்கு நிகழ்ந்ததையும் நிகழ்த்தியவர்களையும் அடியோடு மறப்பதுதானே இயற்கையாக இருக்கும்? ‘ஒருவருக்கொருவர் குறுக்கிடாமல் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் செல்ல இந்த செயற்கைப் பெருந்தன்மை எல்லாம் எதற்கு?’ என்றே தோன்றியது. இயக்குநரின் இரண்டு படங்களுக்கும் இரண்டு ஒற்றுமைகள் – எரிச்சலூட்டும் பெருந்திணை மற்றும் அநியாயத்திற்கு நல்லவனாகக் கட்டமைக்கப்பட்ட ஓர் ஆண் கதாபாத்திரம். ஒரு வேறுபாடு – முழுக்க முழுக்க இப்படி ஒருவர் இருக்க வாய்ப்பில்லையெனினும் எல்லாவற்றையும் மீறி ‘இப்படத்தில்’ மெய்யழகனின் கதாபாத்திரம் ரசிக்கக்கூடியதாக இருந்தது. இன்னோரு படத்த பத்திலாம் எதுக்குப் பேசீட்டு? அருள்மொழியின் உறவுக்காரப் பெண் வந்து தன் கணவன் வியாபாரத்தில் படுதோல்வி அடைந்த சொந்தக் கதை, அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட சோகக் கதையைக் கூறிய பின் “பேசாம உன்னையே கல்யாணம் பண்ணிருக்கலாம்” என்று அருள்மொழியிடம் ஏக்கத்தோடு கூறுவார். இருவருக்கும் தனித்தனி குடும்பங்கள் இருக்கின்றன. அப்பெண் தனது மணவாழ்வில் இருந்து வெளிவரவில்லை. மணமுறிவு ஆகியிருந்தாலும் கூட மணவாழ்க்கையில் இருக்கும் இன்னொரு ஆணிடம்(நகைச்சுவையாகக் கூட) இப்படிச் சொல்வது எப்படிச் சரியாகும்? பின்னர் கல்யாண வேலையில் தன்னை ஈடுபடுத்தும் பொருட்டு எழுந்து செல்கையில் தற்செயலாகத்(என்று நம்ப நாம் என்ன…?!) தவறான திசையில் நடக்கத் தொடங்கித் திரும்பிப் போகும் போது பட்டும் படாமல் அருள்மொழியின் தோளைத் தடவிச் செல்வார். அந்தத் தொடுதலில் தென்படும் வாஞ்சை நெருடவில்லையா? இன்னொரு காட்சியில் பந்தியில் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருக்கும் அருள்மொழியை ஏக்கத்தோடு/பாசத்தோடு… ஏதோ ஒரு கண்றாவியான உணர்வோடு திரும்பிப் பார்ப்பார். இவ்வகையான ஒழுக்கத்திற்கு மாறான பொருந்தாக் காதல் மீது இயக்குநருக்கு ஏன் இவ்வளவு தீராக் காதல்? Emotional affair தவறில்லை என்பது போல அதை இவ்வளவு மேன்மையாகக் காட்டுவதன் பெயர் ரசனை அல்ல. இவரது முதல் படத்தின் கதைக்கரு முழுக்க முழுக்க இதுதான். அழகியல், மென்னுணர்வுகள் என்ற போர்வையில் அநாகரிகத்தை நியாயப்படுத்தவோ சாதாரணமாக்கவோ முடியாது. இதுவெல்லாம் கவித்துவம் என்று நினைப்பவர்களுக்குத் தங்கள் துணை இதைப் போல் வேறு ஒருவரிடம் சொல்வதும் அதே கவிதை மண்ணாங்கட்டியாகத்தான் தெரியுமா? என்று மண்டையில் உறைக்குமாறு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. படத்தின் மொழியிலேயே கூறுவதாயிருந்தால் இந்தப் புளிப்புக் காட்சிகள் நீங்கலாக ‘நெல்லிக்காய் சாப்டுட்டுத் தண்ணி குடிச்சாப்ல இருந்துச்சு’ படம். வெகு சில எழுத்துப் பிழைகளோடு வாசிக்கக் கிடைத்த ஓர் அருமையான கவிதை! நன்றி 'திண்ணை' இணைய இதழ். https://puthu.thinnai.com/2024/10/06/பெருந்திணை-மெய்யழகா/
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
நுணாவிலான் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். 2017 ல் எனது தந்தையார் மறைந்தபோது, "இனி எனது மற்றும் என்னைச் சார்ந்தோரது பிரச்சினைகளை நான் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும்" என்று எனக்குத் தோன்றிய தருணம். அந்த நிலையில் இப்போது நிற்கும் நுணாவிலான் அவர்களுக்கு எனது ஆறுதல் மற்றும் தேறுதல் மொழிகள் சேர்வதாக !
-
The Sun/Son shines - சுப.சோமசுந்தரம்
தமக்கே உரித்தான முகம் காட்டி, "இந்த அப்பன், ஆத்தா என்ற பேச்செல்லாம் பொது வாழ்க்கைக்கு நல்லதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பொறுப்புடன் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று பாடம் எடுத்தார் - நிவாரண நிதியைப் பிச்சை என்று பொது வாழ்க்கைக்கு உகந்த (!) மொழியில் பேசிய, மக்களால் தேர்ந்தெடுக்கவே படாத நிர்மலா சீதாராமன். சுய முரண் (self contradiction) என்பதெல்லாம் அனைத்துக் கட்சி அரசியலிலும் சகஜம்தானே ! நிர்மலா சீதாராமனின் பதில் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "அப்படியா ? சரி, மாண்புமிகு நிதியமைச்சரின் மதிப்பிற்குரிய அப்பாவின் காசையா கேட்டோம் ?" என்று உதயநிதி ஸ்டாலின் பதிலிறுத்தார். அத்துடன் அந்த எபிசோட் இனிதே முடிவடைந்தது என்று நினைக்கிறேன்.
-
The Sun/Son shines - சுப.சோமசுந்தரம்
The Sun/Son shines - சுப.சோமசுந்தரம் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றது தொடர்பாக எனது எண்ணவோட்டத்தைப் பதிவு செய்ய விழைவு. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தமட்டில் இது எப்போதோ எதிர்பார்த்த நிகழ்வோ, என்னவோ ! எனவே பெரிய அளவில் எவ்விதச் சலசலப்பும் பொதுவெளியில் நிகழவில்லை எனலாம் - ஏதோ ஒன்றிரண்டு எதிர்க்கட்சியினர் வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தமது வயிற்றெரிச்சலைக் கொட்டியது தவிர. அதுவும் இந்திய அரசியலில் வாரிசு அரசியல் என்பது ஏதோ இதற்கு முன் நிகழாத புதுமை போல. திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பொதுவாக வாரிசு அரசியலில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். அது ஒரு முதிர்ச்சியற்ற ஜனநாயகம் என்பதையே பிரதிபலிப்பதாக எண்ணுபவன் நான். அந்த முதிர்ச்சியின்மை அரசியல்வாதிகள் சார்ந்தது என்பதை விட மக்கள் சார்ந்தது என்பதுவே சாலப் பொருத்தம். ஒரு மருத்துவரின் மகனோ மகளோ மருத்துவர் ஆவதில் எனக்கு மாறுபாடு இல்லை. அதே போலவே ஒரு ஆசிரியருக்கும் இன்ன பிற தொழில் முனைவோருக்கும். இவ்வளவு ஏன், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தீவிர அரசியலில் இறங்குவதும் இயற்கையான ஒன்றே. ஆனால் ஒரு தலைமை மருத்துவரின் மகன் அல்லது மகள் மருத்துவரான கையோடு எடுத்த எடுப்பில் தலைமை மருத்துவர் ஆக்கப்படுவது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றோ, அவ்வாறே ஒரு ஆட்சியாளரின் மகன் அல்லது மகள் எத்தனையோ காலம் கொள்கை பிடிப்புடன் அக்கட்சியில் அல்லது ஆட்சியில் பணியாற்றியோரை ஓரங்கட்டி ஆட்சி பீடத்தில் அமர வைக்கப்படுவது ஏற்புடையதன்று. இவை எல்லாம் ஒரு முதிர்ந்த ஜனநாயகத்தில், அரசியல் முதிர்ச்சி பெற்ற மக்கள் சமூகத்தில், கொள்கைப் பிடிப்புடன் முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு கட்சிக்குப் பொருந்தி வருவது. இன்றைய அரசியல் சூழலில் நான் முன்னர் குறிப்பிட்ட பண்பட்ட அரசியல் பொருந்தி வருமா என்பது ஐயப்பாடே ! திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டினை அநேகமாக அத்துணைத் துறைகளிலும் முன்னேற்றிக் காட்டியது தமிழ் நிலத்திற்கான பேறு. திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் பெருகியதாகவும், மாநிலம் சீர்கேடு அடைந்ததாகவும் மாற்றார் கூக்குரலிடலாம். பூமிதானில் யாங்கணும் துலங்கிய ஊழல் இந்தியத் துணைக்கண்டத்தில் பல்கிப் பெருகியமை உள்ளங்கை நெல்லிக்கனி. இதனால் எல்லாம் ஊழலை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது என்பது ஒரு புறம். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சீரழிந்ததாகச் சொல்வதெல்லாம் முழுப் பொய் அன்றி வேறென்ன ? தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இவ்விருவரையும் சிறந்த வழிகாட்டிகளாக எண்ணும் நான் பெரிய அளவில் திமுக வின் ஆதரவாளன் என்று சொல்வதற்கில்லை. எக்காலத்திலும் அதிமுகவின் ஆதரவாளனாய் இருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை. இருப்பினும் கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார், தளபதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரு வகையில் நன்றிக் கடன் பட்டுள்ளேன். சுமார் ஐம்பத்தைந்து வருடங்களாகத் தேசியக் கட்சி எதுவும் தமிழ் நிலத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்வதைக் கனவிலும் நினைக்க முடியாமல் செய்தார்களே ! தேசியக் கட்சிகள் இங்கு ஆட்சி செய்வதில் அப்படி என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் வந்தால் நான் தேசியம் எனும் நீரோட்டத்தில் கரைய வேண்டி இருக்குமே ! தேசிய நீரோட்டத்தில் நீந்துவது ஏற்புடைத்து. கரைவதை எங்ஙனம் ஏற்பது ? நான் ஏன் எனது மொழி, பண்பாட்டு அடையாளங்களை இழந்து இந்தியன் எனும் ஒற்றைத் தன்மையில் நிற்க வேண்டும் ? உலக அரங்கில் பன்மைத்துவம்தானே இந்தியத் திருநாட்டின் தனித்துவமாக இருக்க முடியும் ? 'ஒற்றுமை உன்னதம், ஓர்மை பாசிசம்' (Unity is noble, Uniformity is fascist) என்பதே இந்திய அரசியலமைப்பு நமக்குச் சொல்லித் தருவது; உலகுக்கும் சொல்வது. வேற்றுமையிலேயே ஒற்றுமையை நிலை நாட்டுவதில் திமுகவும் அதிமுகவும் தம் பங்கினை நெடுங்காலம் செவ்வனே நிறைவேற்றின. ஆனால் அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவின் அனைத்து அணியினரும் தங்கள் சுயநலம் சார்ந்து ஒரு பாசிச அரசிடம் தம்மையும் நம்மையும் அடகு வைப்பதிலேயே குறியாய் இருப்பதாய்த் தெரிகிறது (அம்மையார் சுயநலம் அற்றவர் என்று சொல்ல வரவில்லை; தம்மையும் நம்மையும் அடகு வைக்க அவரது தன்மானம் இடம் கொடுப்பதில்லை). இத்தகைய சூழலில் மதவாத, வகுப்புவாத பாசிசத்திடமிருந்து நம்மைக் காக்க மக்கள் ஆதரவுடன் உள்ள ஒரே கட்சி - நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் - திமுக என்றே தோன்றுகிறது. எனவே திமுக மேலும் உரம் பெற்றுத் திகழ்வது - அச்சங்கிலித் தொடர் தற்போது பாதகமின்றித் தொடர்வது - தமிழினத்தைப் பொறுத்தமட்டில் காலத்தின் கட்டாயமாகிறது. அதனைத் தொடர திமுகவில் வேறு தலைவர்கள் இல்லையா என்ற கேள்விக்கு, மக்கள் ஆதரவு பெற்றோர் வேறு இல்லை என்று ஆணித்தரமாய்ச் சொல்வதைத் தவிர வேறு வழி, ஒளி தெரியவில்லையே ! தோழமைக் கட்சிகளில் திறமையானோர், நேர்மைத் திறமுடையோர் உண்டு. இடதுசாரிகளில் உண்டு; தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் உண்டு. ஆனால் அவர்களும் பெரும்பான்மை மக்களின் ஆதரவு என்ற ஒற்றைப் புள்ளியில் அடிபட்டுப் போகிறார்களே ! சாதி பேதம் இன்றி அனைத்து சமூகத்தினருக்கான தலைவர் தொல்.திருமா என்றே சொல்லலாம். அவரையெல்லாம் 'வையத் தலைமை கொள்' என்று அழைப்பதற்குத் தமிழ் மக்கள் தம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த நிதர்சனங்களைப் புரிந்து, மற்றுப்பற்று இல்லாத மக்கட் பற்றாளராய் தொல்.திருமாவளவன் மற்றும் இடதுசாரித் தோழர்கள் தமிழ் அரசியலில் வலம் வருவது நமக்கான பேறு. திமுக அரசியலில் இன்று முன்னணியில் உள்ள ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி இம்மூன்று கலைஞர் கருணாநிதி குடும்ப வாரிசுகளின் அரசியல் முகங்களும் பண்பட்டதாகவே தோன்றுகின்றன. உதயநிதி ஸ்டாலினிடம் அரசியல் முதிர்ச்சி இல்லை என்று சமீபத்தில் சங்கிகள் ஓலமிட்டது பெரும் நகைப்பானது. அவர் சநாதனம் பற்றிப் பேசியது ஒரு முதிர்ந்த திராவிட அரசியலே ? வெள்ள நிவாரணம் தொடர்பாகப் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு என்ன ஏடிஎம் மெஷினா, கேட்டவுடன் பணம் கொடுக்க ?" என்று தரம் தாழ்ந்து கூறியதற்குப் பதிலடியாக உதயநிதி, "அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் ? தமிழ் மக்கள் கொடுத்த வரிப்பணத்தைத்தானே கேட்கிறோம் ?" என்று கேட்டது கூட ஒரு அனுபவம் பெற்ற அரசியல்வாதியின் பதிலாகவே வெளிப்படுகிறது. எனவே சூழல்களைக் கருத்தில் கொண்டு மாற்றார்தம் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள, எத்தனை குறை கொண்டிருந்தாலும் இன்றைக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் திராவிட முன்னேற்றக் கழகமே ! நம் நம்பிக்கை வானில் உள்ள ஒளிக்கீற்று உதயநிதி ஸ்டாலின் மட்டுமே ! போகிற வரை போகட்டும்; ஆகிற வரை ஆகட்டும். இதனை எழுதி முடித்து மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் எனக்கே நான் ஒரு திமுக காரனாகத் தோன்றுகிறேன். அதற்கு நான் என்ன செய்து தொலைக்க ?
-
உறவும் உராய்வும் - சுப.சோமசுந்தரம்
சென்ற சனிக்கிழமை நான் மேற்கொண்ட அந்தப் பதிவுக்குப் பின் இன்றுதான் (புதன்கிழமை) 'மெய்யழகன்' படம் எங்கள் ஊர் அரங்கில் பார்த்தேன். படம் பற்றிய எனது சுருக்கமான பார்வை (சுருங்கிய பார்வையல்ல என்று நினைக்கிறேன்) : இயக்குநர் பிரேம்குமார் திறமையானவர் என்பதில் ஐயமில்லை. நான் பெரிய முக்கியத்துவம் தராத, என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு உணர்ச்சிப் பெருக்கை நானே ரசித்துப் பார்க்க வைப்பதில் வல்லவர். மசாலாப் படங்களைத் தவிர்த்து ஓரளவு நல்ல படத்தைத் தருகிறார். தமிழில் இப்போதெல்லாம் இவர் போல் சில திறமையான இயக்குநர்கள் தமிழ் ரசிகர்களின் ரசனையைப் பக்குவப்படுத்தித் திருப்ப முயல்வது வரவேற்கத்தக்க ஒன்று. நான் படம் பார்க்கச் சென்ற இன்று முதல் சுமார் பதினெட்டு நிமிடங்கள் படத்தைக் கத்திரித்து விட்டார்கள். படத்தின் நீளம் கருதிக் குறைத்ததாகப் பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது. ஆனால் நேற்று அரங்கில் (வடக்குக் கரோலினாவில்) படம் பார்த்த என் மகள் சொன்ன தகவல் - படத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், ஈழப்போரில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் அலட்சியம்/துரோகம் இவை பற்றிய உரையாடல்களில் கத்திரி வைக்கப்பட்டுள்ளது என்பது. அப்படியானால் படத்தின் நீளம் கருதியா குறைத்திருப்பார்கள் ? இவை பெரும்பாலும் இந்திய ஒன்றிய அரசின் நெருக்குதலால் நிகழ்ந்திருக்க வேண்டும். ஈழத்தில் இறுதிப் போர் நிகழும் போது கலைஞர் ஆட்சியின் நிகழ்வுகளையும், தற்போது சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் இன்றைய மாநில அரசு சாம்சங் நிர்வாகத்திற்கு வக்காலத்து வாங்குவதையும் பார்த்தால், இவர்களும் நெருக்கடி தந்திருக்கலாம். எல்லாம் முதலாளித்துவ அரசுகள்தாமே ! எது எப்படியோ, அனைத்து அடக்குமுறைக்கும் உள்ளாகி மீண்டும் மீண்டும் ஃபீனிக்ஸ் போல் எழுந்து நிற்பதே தமிழினம் என்பதை வரலாறு மட்டுமல்ல, 'மெய்யழகன்' படம் கூட நினைவுறுத்துகிறது.
-
சிறீ லங்காவின், மாண்புமிகு புதிய சனாதிபதி அவர்கள் சில காலங்களுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்று பற்றி ...
வரலாறு முழுவதும் விநோதங்கள் பல. என் இடதுசாரித் தோழர்கள், குறிப்பாக மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் (ML) கட்சித் தோழர்கள், எந்தப் பிரச்சினையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்பார்கள். ஆனால் ML சார்பான JVP அக்காலத்திலேயே, எனக்குத் தெரிந்த வரை, சிங்களப் பேரினவாதக் கட்சி என்றே பெயரெடுத்துள்ளது. இன அழிப்புக்கு ஆட்பட்ட யூதர்கள் தாங்களும் வெறித்தனமாக இன அழிப்பில் ஈடுபடுவது வரலாற்று விநோதத்திற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு. அதுவும் தங்களை அழிக்க முற்பட்டவர்களை அல்ல, வேறு ஒரு இனத்தை - தற்காப்பு என்ற பெயரில். அதிலும் கூட தங்களுக்குப் புகலிடம் தர ஆரம்பத்தில் பெரிய அளவில் எதிர்ப்புக் காட்டாத ஒரு இனத்தை.
-
உறவும் உராய்வும் - சுப.சோமசுந்தரம்
👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
இப்பதிவு இங்கு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது போல் தெரிகிறது. அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் இறங்கி விட்டார்கள் !
-
வாழை படத்தின் நிஜ ஹீரோயின் எப்படி இருக்கிறார்? இரண்டு கால்களையும் இழந்த பனிமாதாவின் கண்ணீர் கதை
இது தொடர்பாக மேலும் ஒரு வீடியோ பார்த்தேன் :
-
வாழையடி வாழை - சுப.சோமசுந்தரம்
'வாழையடி' சிறுகதைக்கான இணைப்பு கட்டுரையின் இறுதியில் உள்ள முகநூல் இணைப்பில் உள்ளது.
-
வாழையடி வாழை - சுப.சோமசுந்தரம்
வாழையடி வாழை - சுப.சோமசுந்தரம் தமிழ் நிலத்தின் சிறந்த எழுத்தாளராக, திரைப்பட இயக்குனராக பரிமளித்திருக்கும் திரு. மாரி செல்வராஜ் அவர்களின் 'வாழை' திரைப்படம் தொடர்பாக சிறிது எழுத வந்தேன். நல்ல படங்களைப் பற்றித் தெரிய வரும்போது OTT தளத்தில் வரும் வரை பொறுப்பதில்லை; திரையரங்கிலேயே பார்த்து விட வேண்டும் எனும் முனைப்பு உள்ளவன்தான் நானும். இருப்பினும் படம் வந்து ஐந்தாறு நாட்கள் கழித்து மிதமான கூட்டத்தில் பார்ப்பதிலேயே அலாதி இன்பம் காண்பவன் நான். காரணங்கள் சில உண்டு. ஒரு நல்ல திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் (ஒவ்வொரு frame ஐயும் என்று சொல்வார்களே, அது அதேதான் !) சலனமில்லாமல் ரசித்துப் பார்க்க முடிகிறது. ஒரு சிறுபிள்ளைத்தனமான காரணம் கூட உண்டு. திரையரங்கின் கேன்டீனில், "வள்ளிசா சீனி இல்லாத டீயா ? அரைச் சீனி போட்டுத் தரட்டுமாய்யா ?" என்று வாஞ்சையுடன் தாயினும் சாலப் பரிந்த பரிவு கூட்டத்தில் கிடைப்பதில்லை. கூட்டம் அதிகம் உள்ள எந்த சமூகத்திலும் மானுட மதிப்பீடு குறைவு என்று எங்கோ வாசித்த நினைவு. நிற்க. 'வாழை' திரைப்படம் குறித்த விமர்சனம் செய்ய வரவில்லை. நான் நிதானமாக ஒரு வாரம் கழித்துப் பார்த்ததால், படம் ஏற்கனவே ஊடகங்களில் திரைத்துறையின் துறை போகியவர்களால் ஆய்ந்து அலசிப் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது; மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. எனவே அது பற்றிப் புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பின் என்னதான் எழுத நினைத்தேன் ? நான் 'வாழை' பார்க்கும் முன்பே எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் ஏதோ சொல்லப் போக, சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட சிறிய சலசலப்பின் பின்னணியில் ஏதோ எழுத நினைத்தேன். அவர் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே தாம் எழுதிய 'வாழையடி' என்ற சிறுகதையைக் குறிப்பிட்டு அந்த 'வாழையடி'தான் இந்த 'வாழை' என்ற தொனியில் பேசி இருந்தார். எதையும் சாதியக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கும் ஆதிக்க சக்திகள், "கிடைத்ததடா வாய்ப்பு - மாரி செல்வராஜை அடிக்க !" என்ற அளவில் ஆரவாரம் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். மறுநாளே மாரி செல்வராஜ், "வாழைக்காய் சுமக்கும் தொழிலாளர்களைப் பற்றி எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்ற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை. அனைவரும் வாசிக்கவும். எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி" என்று சுருக்கமாக, தெளிவாக, தமக்கே உரிய சான்றாண்மையுடன் தமது 'X' தளத்தில் பதிவிட்டிருந்தார். 'வாழையடி' கதையின் இணைப்பையும் தந்திருந்தார். நான் படம் பார்ப்பதற்கு முன் 'வாழையடி' கதையை வாசித்து விட்டேன். படம் பார்க்கும்போது அக்கதையைப் படத்துடன் மனதளவில் ஒப்பிடத் தவறவில்லை. திருவைகுண்டம் பகுதியில் வாழை விவசாயத்தைக் கூர்ந்து கவனித்துப் பதிவு செய்ய விழைவோர் யாரும் அந்தக் கங்காணிகளைக் குறிக்காமல், அக்காலத்தில் வாழைத்தார் ஒன்றுக்குச் சுமை கூலி ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாயாக ஏற்ற தொழிலாளர்கள் வைத்த கோரிக்கையைக் குறிக்காமல், தொழிலாளர் ஆடையில் வாழைக் கறையைக் குறிக்காமல், வரப்பில் குத்தும் முள்ளைக் குறிக்காமல், கால் தடுமாறி நீரில் விழுவதைக் குறிக்காமல் எழுத முடியாது. இப்படி எல்லோருக்கும் தோன்றும் துணுக்குகளை ஒரு சிறுகதையாய்ப் பதிவு செய்துவிட்டு, தொழிலாளர்களின் வாழ்வை ஓவியமாய்த் தீட்டிய ஒரு திரைக்காவியத்தை மலினப்படுத்துவதைப் போல அல்லது குறைத்து மதிப்பிடுவதைப் போல சோ.தர்மன் அதன் கதைக்குச் சொந்தம் கொண்டாடியது சரிதானா ? அந்தக் கதைதான் இந்தக் கதை என்று உணர்வதற்கு ஒரு ஞானக்கண் வேண்டுமோ ! "எனக்குத் தெரிந்தவரை வாழைத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முதலில் பதிவு செய்தவன் நான்தான்" என்று சொல்வது வரை சோ. தர்மனுக்கு அவரது உரிமையின் எல்லை. ஜெர்மனியில் நாஜிக்கள் நிகழ்த்திய யூத இன அழிப்பு (The Holocaust) பற்றிய பல கதைகளும் புதினங்களும் எழுதப்பட்டன; எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்களும் வெளிவந்தன. அவையனைத்திலும் வதை முகாம்கள் (concentration camps), யூதர்களும் அரசியல் எதிரிகளும் முதலில் தங்க வைக்கப்பட்ட 'கெட்டோக்கள்' (ghettos), கொலைவாயு அறைகள் (gas chambers), கொலை செய்யப்பட்ட சிறுவர், சிறுமியர், முதியோர் என அனைத்து விஷயங்களும் உண்டு. இவற்றுள் எல்லி வீஸல் (Elie Wiesel) எனும் எழுத்தாளர் தாம் நேச நாடுகள் படையால் புச்சென்வால்ட் (Buchenwald) வதை முகாமிலிருந்து விடுவிக்கப்படும் வரை உள்ள தமது சோக அனுபவங்களைப் பகிர்ந்த 'Night' எனும் புதினம் இலக்கிய உலகில் பரவலாகப் பேசப்படுவது. அவர் ஒரு எழுத்தாளர், பேராசிரியர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர். தமது சமூகச் செயல்பாடுகளால் 1986 இல் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர். அவரது புதினம் 'Night' இல் ஹிட்லரின் யூத இன அழிப்பு பற்றிய முந்தைய புதினங்களில் உள்ளவைதாம் இருக்கின்றன என்று யாரேனும் குற்றம் சாட்டினால், இலக்கிய உலகம் அதனை எப்படிப் பார்க்கும் ? இது பற்றிய ஏனைய பெரும்பாலான படைப்புகள் வதை முகாம்களில் இருந்து மீண்டவர்களின் அனுபவங்களைக் கேட்டு எழுதப்பட்டவை; எல்லி வீஸலைப் பொறுத்தவரை அவரே ஒரு எழுத்தாளர், அறிஞர் என்பதால் அவர்தம் சொந்த அனுபவத்தைப் பதிவு செய்தது ஏனைய படைப்புகளில் இருந்து சிறந்து விளங்குதல் இயற்கையே ! அது போலவே கரிசல் காட்டில் இருந்து மருத நிலத்திற்குக் குறுகிய காலத்திற்கு வந்த சோ. தர்மன் வாழை விவசாயிகளின் துயரங்களைப் பதிவு செய்ததை விட வாழையில் வாழ்ந்த மாரி செல்வராஜின் பதிவு நிவந்து நிற்பது இயற்கையே - அது எழுத்து ஊடகம், இது காட்சி ஊடகம் என்று இருந்தாலும் கூட ! மேலும் முன்னரே குறிப்பிட்டது போல் சோ. தர்மன் ஒரு சிறுகதையாக எழுதியவை, எல்லோருக்கும் தெரியும் துணுக்குச் செய்திகள். மாரி செல்வராஜ் பதிவு செய்தவை அவர் வாழ்ந்து காட்டியவை. இவற்றிற்கு அப்பாற்பட்டு, எழுத்து ஊடகத்தில் கூட சோ. தர்மனை விட மாரி செல்வராஜ் ஒரு படி உயர்ந்து நிற்கிறார் என்பது இருவரது எழுத்துக்களையும் வாசித்த என் கருத்து. சோ. தர்மன் எண்ணிக்கையில் அதிகப் படைப்புகளைத் தந்திருக்கிறார், சாகித்ய அகாடமி விருதாளர் என்பதெல்லாம் ஒரு புறம். இத்தகைய ஒப்பீடு பொதுவாகத் தேவையில்லைதான். சோ.தர்மன் நம்மை சந்திக்கு இழுத்தால் வேறு என்ன செய்வது ? "படம் பார்த்தீர்களே, எப்படி இருக்கிறது ?" என்று நிருபர் கேட்டதற்கு, பெரும் பாராட்டைப் பெற்ற படத்தின் தரத்தைப் பற்றி எதுவும் பேசாமல், "நான் அச்சு ஊடகத்தில் பதிவு செய்தேன்; அவர் (மாரி செல்வராஜ்) காட்சி ஊடகமாக மாற்றி இருக்கிறார்; அவ்வளவுதான். வேறெதுவும் இல்லை" என்று சாதாரணமாக சோ. தர்மன் சொல்லிச் செல்வது முதிர்ச்சியின்மையா அல்லது அடாவடித்தனமா என்பது நமக்குப் புரியவில்லை. 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' எனும் அடிப்படைப் பண்பே சோ. தர்மனுக்குத் தெரியாதோ என்று எண்ண வைக்கிறார். "கதைக்காக மாரி செல்வராஜ் என்னிடம் உரிமை கோரவும் இல்லை; அதை நான் பெரிதாக்கவும் இல்லை" என்று சோ. தர்மன் சொல்வது வேடிக்கை. "அது நம்ம கதைதான் என்று சொல்ல முடியாது" என்றும் பேட்டியின் ஊடாகச் சொல்லிக் கொள்கிறார் சோ. தர்மன். அவ்வாறெனில் மாரி செல்வராஜ் அவரிடம் ஏன் உரிமை கோர வேண்டும் ? ஒரு இலக்கியவாதி இவ்வளவு குழப்பவாதியாகவா இருப்பது ? ஊடகங்களில் இவ்வளவு சொல்லிவிட்டு, "அதை நான் பெரிதாக்கவில்லை" என்ற பம்மாத்துப் பெருந்தன்மை எதற்கு ? வாசகர்களில் சிலர் அல்லது பலர் அரைகுறை வாசிப்பு அல்லது மேம்போக்கான வாசிப்பு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அப்படியானவர்கள், "உங்கள் கதைதான் வந்திருக்கிறது" என்று உளறினால் அந்த உளறல்களையெல்லாம் பொதுவெளிக்குக் கொண்டு வருவது சான்றாண்மைக்கு அழகா ? சமூகத்தில் சில சாதி வெறியர்கள் மாரி செல்வராஜ் மீது கொண்ட வன்மத்தால் சமூக வலைத்தளங்களில் ஓரிரு நாட்கள் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு ஆடினார்களே தவிர, அறிவுலகம் சோ. தர்மனின் வெற்றுரையைக் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளியது அவ்வுலகின் சான்றாண்மைக்கான சான்று. பின் ஏன் இது பற்றி நான் இத்துணை எழுத வேண்டும் ? ஒருவர் தாம் கற்றுணர்ந்தார் என்ற போர்வையில் இளையோரின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவதைக் கண்டுகொள்ளாமல் விடுவதையும் தாண்டி, கண்டனக் குரலைப் பதிவு செய்வது ஓரளவு கற்றலும் கற்ற வழி நிற்றலும் உடையோர் தம் கடமை. மகாபாரதக் கதையில் கர்ணன் தோற்று தருமன் வென்றிருக்கலாம். 'வாழையடி'யை வாசித்து 'வாழை'யைப் பார்த்தால் தெரியும் - அந்த 'தர்மன்' தோற்று இந்த 'கர்ணன்' வெல்வது. https://www.facebook.com/share/p/2shRFgGaBPcoGhvN/?mibextid=oFDknk
-
இசைந்து வரும் ஏனம் - சுப.சோமசுந்தரம்
மக்கள் உண்ணும் உணவைப் பார்க்க ஏன் சங்கடமாக இருக்க வேண்டும், நண்பரே ! (நம் உணவுப் பழக்கம் வேறாக இருந்தாலும் கூட). மேலும் கலை நயத்துடன் (with ambience) உணவு படைக்கப்பட்டுள்ளது.
-
இசைந்து வரும் ஏனம் - சுப.சோமசுந்தரம்
தங்களுடைய பின்னூட்டம் 'அமரருள் உய்க்கும் அடக்கம்'. ஏதோ சம்பிரதாயத்துக்காக நான் இதனைச் சொல்லவில்லை. உங்கள் மொழி நடையை வைத்தே சொல்கிறேன். நன்றி.
-
இசைந்து வரும் ஏனம் - சுப.சோமசுந்தரம்
இசைந்து வரும் ஏனம் -----சுப.சோமசுந்தரம் முதலில் ஏனம் என்பது பன்றியைக் குறிக்கும் சொல் என்ற விளக்கம் தந்து ஆரம்பிப்பது நம்மில் பெரும்பாலானோர்க்குத் தேவைப்படும் ஒன்று. சமீபத்தில் வெளிவந்த 'மாமன்னன்' திரைப்படம் பலவகையில் பரபரப்பானது; சாதனையும் படைத்தது. படத்தில் குறிக்கப்பட்ட விலங்கான பன்றி ஒடுக்கப்பட்டோருக்கான குறியீடு என்றே கொள்ளலாம். படத்தில் நன்கு படித்தவர்களாக வரும் நாயகனும் நாயகியும் பன்றியைப் பேணுவது புதுமை காரணமாக வியப்பை ஏற்படுத்தினாலும், சமூக மாற்றத்துக்கான வித்து என்ற வகையில் மகிழ்வைத் தருவது. படத்தின் நாயகன் சமூக அளவில் பன்றி வளர்த்துப் பழகியவன்தான். நாயகி அவ்வாறு இல்லாத போதும் யாதொரு மனத்தடையும் இல்லாமல் அவள் பன்றியைக் கொஞ்சுவது, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நாயகனிடம் காதல் கொள்வதில் அவளுக்கு யாதொரு மனத்தடையும் இல்லாததன் குறியீடு. மாறிவரும் சமூக அமைப்பிற்குக் கட்டியம் கூறுவது அல்லது மாற வேண்டிய சமூகத்திற்கான அறைகூவலாய் ஒலிப்பது. இந்த சாதி பேதங்கள் தமிழ்ச் சமூகத்தில் இருந்ததற்கான குறிப்பு எதுவும் சங்க இலக்கியங்களில் இல்லை. சங்க காலம் ஒரு பொற்காலம் என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக அடுக்கலாம். சனாதனம், மனுநீதி, வர்ணாசிரமம் இவையெல்லாம் தமிழ் மன்னர்களை மூளைச்சலவை செய்து சமூகத்தில் பரப்பப்பட்டிருக்க வேண்டும். 'வர்ணத்திற்கு ஒரு நீதி' சட்டம் நடைமுறைப் பட்டதை சோழர்காலக் (குறிப்பாக இராசராச சோழன் காலத்தவை) கல்வெட்டுகள் குறிக்கின்றன. வேதாந்தத்திற்கு எதிர்வினையாகத் தோன்றியவையே பௌத்தம், சமணம், சைவ சித்தாந்தம் முதலியவை என்பதே பெரும்பான்மையான சான்றோர்தம் கருத்து. இவற்றில் சைவ சமயத்தார் சிலர் இத்தோற்றுவாய் பற்றிய புரிதலின்றி வேதாகமத்தில் உள்ள சாத்திர சம்பிரதாயங்களுக்கு அடிமையாகி சனாதன வர்ணாசிரமத்தைத் தூக்கிப் பிடிப்பது சமய அரசியலின் அவலம். இருப்பினும் அக்காலத்தே சைவ சமயக் குரவர் பலர் சமூகத்தில் புகுத்தப்பட்ட வருணாசிரமத்திற்கு எதிரான கலகக் குரல் எழுப்பியது வரலாற்றுச் சிறப்பு. "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்! கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?" (நாவுக்கரசர் தேவாரம்; திருக்குறுந்தொகை; பாடல் 1674) என்று சனாதனவாதிகளை வினவுகிறார் திருநாவுக்கரசர். "சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப் பட்டுத் தடுமாறும் ஆதம் இலி நாயேனை....." (திருவாசகம்; கண்ட பத்து பாடல் 5) என்று "சாதி குலம் பிறப்பென்னும் சுழலில் சிக்கித் தடுமாறிய ஆதரவில்லா நாய்" என்று அடக்கத்துடன் தம்மையே தாழ்த்திக் கொள்கிறார் மாணிக்கவாசகர். 'மாமன்னன்' திரைப்படத்தில் பன்றி சாதியக் கொடுமையின் குறியீடானதைப் போல், 'சாத்திரம் பல பேசும் சழக்கர்'களைச் சாடிய திருநாவுக்கரசர் பன்றியை ஏனைய விலங்குகளோடு சமநிலைக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது சாதிய வேறுபாடுகளைப் புறந்தள்ளுவதின் குறியீடாகக் கொள்ளலாம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் பண்பாட்டு வெளிப்பாடு. நாவுக்கரசர் தேவாரத்தின் திருவையாறு பதிகத்தில் முதற்பாடலில் சிவ-சக்தியைப் பாடிக்கொண்டே சிவனடியார்களுடன் திருவையாறு அடைகின்றார். அடைந்தவுடன் அவர் முதலில் காண்பது பிடியுடன் (பெண் யானையுடன்) களிறு (ஆண் யானை) இணையாய் எதிர்வரும் காட்சி. அந்த இணைப்பில் அவர் அம்மையப்பனைக் காண்கிறார். அப்பாடலிலும் தொடர்ந்து அப்பதிகத்தில் வரும் ஏனைய பாடல்களிலும் 'கண்டறியாதன கண்டேன்' என்று திருநாவுக்கரசர் நிறைவாகக் குறிப்பது தத்துவார்த்தமான ஒன்றாய்த் தோன்றுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான செய்தியைத் தருவதாய் அமைகிறது. இங்கு நமது கருதுகோளுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பினும், அப்பாடலைக் கையிலெடுத்த படியால் எனக்கு அவ்வரி அளித்த செய்தியைப் பதிவு செய்துவிட்டுக் கடந்து செல்வது இதனை வாசிப்போர் சிலருக்குப் பயனுள்ளதாய் அமையலாம். இப்பூவுலகின் இயக்கத்தில் இயற்கையின் ஒரு தலையாய நோக்கமாவது இனப்பெருக்கம். பெருகிய இனம் தனக்கென அமைத்துக் கொண்ட சமூக வாழ்வில் இனப்பெருக்கம் எனும் இயற்கையின் நோக்கத்தை அம்மையப்பன் எனும் வடிவிலேயே நிறைவேற்றிக் கொள்கிறது. எனவே நாவுக்கரசர் அம்மையப்பன் வடிவை ஒவ்வொரு உயிரினத்திடமும் காண்கிறார். சமணம் போன்று சில சமயங்களில் இல்லற வாழ்விலிருந்து பயணித்துத் துறவறத்தில் வாழ்வு நிறைவுறக் காணலாம். சைவ சமயக் குரவரான திருநாவுக்கரசர் துறவற நிலையிலிருந்து மாறாமல் நின்று, அறம் சார்ந்த இல்லற மேன்மையைக் குறிக்க எண்ணினாரோ என்னவோ ! பறவையினமும் விலங்கினமும் தத்தம் இணையோடு எதிர்வந்து அவருக்கு இப்பொருள் உணர்த்துதலையே 'கண்டறியாதன கண்டேன்' எனக் கூறுவதாய்க் கொள்ளலாம். திருவையாறு பதிகத்தின் முதற்பாடலில் யானையைக் கண்டவர் அடுத்து வரும் பாடல்களில் பேடையொடு சேவலையும், குயிலையும், மயிலையும், அன்றிலையும், நாரையையும், பைங்கிளியையும், பன்றியையும், ஏறையும் காண்கிறார். முன்னர் குறிப்பிட்டதைப் போல் பன்றியை நாவுக்கரசர் வேறுபாடற்ற மனநிலையில் அணுகுவதை 'மாமன்னன்' திரைப்படப் பின்னணியில் குறிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாதலால், திருவையாறு பதிகத்தின் திறப்புக் களமான யானை வரும் பாடலையும் ஏழாவது பாடலான ஏனம் (பன்றி) வரும் பாடலையும் ரசித்துப் பார்ப்போமே ! "மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடி போதொடு நீர்சுமந்து ஏந்திப் புகுவார் அவர்பின் புகுவேன் யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது காதல் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்" (நாவுக்கரசர் தேவாரம்; திருவையாறு பதிகம் பாடல் 1) பொருள் விளக்கம் : மாதர்பிறை - அழகிய பிறையினை; கண்ணியானை - தலையில் அணியாகச் சூடியவனை; மலையான் மகளொடும் பாடி - மலையின் தலைவனது மகளோடு துதித்துப் பாடி; போதொடு - மலர்களோடு; நீர் சுமந்தேத்தி - வழிபாட்டிற்கு உரிய நீரினைச் சுமந்து ஏற்றி; புகுவார் அவர்பின் புகுவேன் - (அடியார்கள்) செல்வார்கள், அவர்கள் பின் செல்வேன்; யாதும் சுவடு படாமல் - நிலத்தில் பாதச்சுவடு படாத அளவு மென்மையாய் நடந்து சென்று; ஐயாறு அடைகின்றபோது - திருவையாறு அடைகின்றபோது; காதல் மடப்பிடியோடு - காதலும், மடம் எனும் பெண்மை உணர்வும் கொண்ட பெண் யானையோடு; களிறு வருவன கண்டேன் - ஆண் யானை வரக் கண்டேன்; கண்டேன் அவர் திருப்பாதம் - அம்மையப்பனின் திருப்பாதம் கண்டேன்; கண்டறியாதன கண்டேன் - இதுவரை கண்டறியாத பொருள் விளக்கம் கண்டேன். இனி இக்கட்டுரைக்கான மெய்ப்பொருள் ஏந்தி இசைந்து வரும் ஏனம் பற்றிய பாடல் : "கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி வடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன் அடியினை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்ற போது இடிகுர லன்னதொர் ஏனம் இசைந்து வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்" (நாவுக்கரசர் தேவாரம்; திருவையாறு பதிகம் பாடல் 7) பொருள் விளக்கம் : கடிமதிக் கண்ணியினானை - யாவரும் விரும்பும் சிறப்புடைய பிறையினைத் தலையில் அணியாகச் சூடியவனை; காரிகையாளோடும் பாடி - அழகுடைய உமையாளோடு துதித்துப் பாடி; வடிவோடு வண்ணம் இரண்டும் - இரண்டும் ஒன்றான வடிவோடு விளங்கும் அம்மையப்பனை; வாய் வேண்டுவன சொல்லி வாழ்வேன் - விரும்பியவாறெல்லாம் வாயினால் வாழ்த்திப் பாடி வாழ்வேன்; அடியினை ஆர்க்கும் கழலான் - தனது திருவடியால் காக்கும் பாதம் உடையோனின்; ஐயாறு அடைகின்ற போது - திருவையாறு அடைகின்ற போது; இடிகுரல் அன்னதோர் ஏனம் - உரத்த குரலெழுப்பும் பன்றி; இசைந்து வருவன கண்டேன் - துணையுடன் வருவது கண்டேன்; கண்டேன் அவர் திருப்பாதம் - அம்மையப்பனின் திருப்பாதம் கண்டேன்; கண்டறியாதன கண்டேன் - இதுவரை கண்டு அறியாத பொருள் விளக்கம் கண்டேன். சாதிய ஏற்றத்தாழ்வுகளைச் சாடியோர் திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் போன்ற சைவ சமயக் குரவர். சாதியத்தைச் சாடிய 'மாமன்னன்' திரைப்படம் சாதியக் குறியீடாகப் பன்றியைத் தெளிவாகக் கையிலெடுத்தது. சாதியச் சழக்கர்களைச் சாடிய திருநாவுக்கரசர் பன்றியை அம்மையப்பனாகக் கையாண்டது தற்செயல் நிகழ்வோ என்னவோ ! இது தொடர்பில் எனது பதிவு இத்துடன் முற்றுப்பெற்ற நிலையில் என்னுயிர்த் தோழர் பேரா.ந.கிருஷ்ணன் அவர்கள் மாணிக்கவாசகரும் திருவாசகம் திருவார்த்தை பதிகம் ஆறாவது பாடலில், சைவ நெறி உணர்வால் எந்த வேறுபாடும் கொள்ளாமல் பன்றியை ஏனைய விலங்குகளோடு சமநிலை பாராட்டியதைச் சுட்டினார். சைவ சமயத்தில் சமூக நீதிக் கண்ணோட்டத்திற்கான மேலும் ஒரு சான்றினை எடுத்தளித்த பேரா.கிருஷ்ணனின் சான்றாண்மை - குறிப்பாக, சைவ இலக்கியங்களிலும் தத்துவங்களிலும் அவருக்கான ஆழ்ந்த புலமை - நமக்கான பேறு. அத்துடன் பாடலையும் உரையையும் எனக்கு அனுப்பித் தந்தார். மேலும், அதனை எனது இப்பதிவிலேயே இணைப்பது வாசிப்போருக்கு நலம் பயக்கும் எனக் குறிப்பிட்டார். எனவே அவர் சார்பாக நான் மணிவாசகரின் பாடலையும் அவ்வுரையினை எனது பாணியிலும் இத்துடன் இணைக்கிறேன் : "வேவத் திரிபுரம் செற்றவில்லி வேடுவ னாய்க்கடி நாய்கள் சூழ ஏவற் செயல்செய்யும் தேவர்முன்னே எம்பெரு மான்தான் இயங்குகாட்டில் ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை பெருந்துறை ஆதிஅன்று கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வாரெம்பி ரானாவாரே" பொருள் விளக்கம் : திரிபுரம் வேவ - முப்புரம் தீயில் வெந்து அழிய; செற்ற வில்லி - போரிட்ட வில்லினையுடைய; எந்தை - என் தந்தையாகிய; பெருந்துறை ஆதி - திருப்பெருந்துறை முதல்வன்; ஏவல் செயல் செய்யும் - இட்ட பணியினைச் செய்யும்; தேவர் முன்னே - தேவர்கள் முன் செல்ல; எம்பிரான் தான் வேடுவனாய் - என் பிரானாகிய சிவன் தான் வேடனாக; கடி நாய்கள் சூழ - கடிக்கும் நாய்கள் சூழ்ந்து வர; இயங்கு காட்டில் - வலம் வந்த காட்டில்; ஏவுண்ட பன்றிக்கு - (அம்பு அல்லது வேல்)ஏவப்பட்டதால் இறந்த பன்றிக்கு; இரங்கி - கருணை மேலிட; ஈசன் அன்று - இறைவன் (சிவனார்) அன்று; கேவலம் - தானே; கேழலாய் - பன்றியாய் ஆகி; பால் கொடுத்த கிடப்பு அறிவார் - (இறந்த பன்றியின் குட்டிகளுக்கு) பால் கொடுத்த திருவுளத்தை உணர்ந்தவர்கள்; எம் பிரான் ஆவாரே - (அவர்களும் வணங்குவதற்குரிய) எம் தலைவர் ஆவாரே. இறுதியில் அத்தகைய அடியார்க்கும் தாம் அடியார் என்ற மணிவாசகர்தம் கூற்று உணர்ந்து நோக்கத்தக்கது. பன்றிக்குத் தாயும் ஆனார் பெருந்துறை இறைவன். எனவேதான் மாதொருபாகனான தம் சிவபெருமானை, "தாயாய் முலையைத் தருவானே" என திருவாசகம் ஆனந்தமாலை பதிகம் ஐந்தாம் பாடலில் குறிப்பிட்டு அவனருள் வேண்டி நிற்கிறார் மாணிக்கவாசகர். 'மாமன்னன்' திரைப்படத்திலும் கதாநாயகனின் தாய், தாயை இழந்த பன்றிக் குட்டிக்குப் புட்டிப் பால் தந்து பேணுவதான காட்சியமைப்பு மேற்குறிப்பிட்ட திருவாசகக் காட்சியைக் கண் முன் நிறுத்துகிறது. திரையில் வரும் அத்தாய் உமை என்றால், படத்தில் தோன்றும் மாமன்னன் அன்பே சிவமாய் அமர்ந்திருத்தலாய்க் கொள்ளலாமே ! சமூக நீதியை இறைவழிக் காணும் ரசிகன் இப்படித்தான் சிந்திப்பானோ, என்னவோ ! இந்த ஒப்பீடு ரசனைக்குரியதாகவே தோன்றுகிறது. வைணவத்தில் திருமாலின் வராக அவதாரத்தை இந்த சமூகப் பார்வையில் திருப்புவது மிகைப்படுத்துதல் ஆகிவிடுமோ ! சரி விடுங்கள், வேறு ஒரு சூழலில் அந்தப் பன்றியை ஆட்கொள்வோம்; அப்பன்றியினால் ஆட்கொள்ளப் படுவோம்.
-
ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம்
கண்டிப்பாக. மாரி செல்வராஜ் படத்தை review பார்க்காமலே கூடப் பார்க்க எண்ணுவேன். கொட்டுக்காளி படத்திற்கு நல்ல reviews வந்துள்ளன. எனவே அதையும் பார்க்க வேண்டும். இரண்டும் இன்றைக்கு வெளியாகியுள்ளதால், அடுத்த வாரம் பார்ப்பேன். கூட்டம் மிதமாக இருக்கும் போது அரங்கத்தில் பார்ப்பதில் அலாதி இன்பம். நான் ஒரு நாத்திகனாக இருந்தபோதும், மாரி செல்வராஜின் 'மாமன்னன்' படத்தைப் பக்தி இலக்கியம் தொட்டு முன்பு நான் எழுதிய கட்டுரையின் முகநூல் இணைப்பு (பொதுவாக முதலில் யாழ் இணையத்தில் எழுதவே எண்ணுவேன். ஒளிப்படங்கள் இணைப்பதில் எனக்குச் சில சிக்கல்கள் இருப்பதால், சிலவற்றை முகநூலில் முதலில் பதிந்து யாழின் 'சமூகவலைஉலக'த்தில் மீள்பதிவு செய்கிறேன்) : https://www.facebook.com/share/p/TD2t3Lg6hoUJ1Wmb/?mibextid=oFDknk இனி அப்படத்தைப் பற்றிய என் விமர்சனப் பார்வை யாழில் பதிந்தவாறு :
-
ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம்
ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த 'இன்று போய் நாளை வா' திரைப்படத்தில், "ஏக் காங்வ் மே ஏக் கிஸான் ரஹ்தா தா" என்ற இந்தி வாக்கியத்தைப் படிக்கும் தமிழ் மாணவன் "ரஹ்தா தா" என்பதை "ரகு தாத்தா" என மீண்டும் மீண்டும் சொல்வதை நகைச்சுவையாகப் படம் ஆக்கியிருந்தார்கள். இன்று வரை அந்த நகைச்சுவை தமிழ்நாட்டு மக்கள் மனதில் பதிந்திருப்பது இம்மண்ணில் அவ்வப்போது ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான சவுக்கடிக்கான ஒரு குறியீடு என்று கூறுவது மிகையாகாது. எனவே 1960களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் முழுவீச்சில் நடைபெற்ற பின்னணியில் பின்னப்பட்ட கதையை வைத்து இப்போது எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு 'ரகு தாத்தா' எனப் பெயரிட்டது பொருத்தமான ஒன்றே ! இப்படம் பற்றிய விமர்சனங்கள் பல பத்திரிகைகளிலும் அவரவர் கோணத்தில் வெளிவந்த பிறகு என் பங்கிற்கு ஒரு முழுமையான விமர்சனம் அளிப்பது இந்த என் எழுத்தின் நோக்கமல்ல. பெரும்பாலான அவர்களிடமிருந்து நான் சற்று மாறுபடும் இடங்களையே சுட்ட எண்ணம். கிராமியச் சூழலில் ஒரு கட்டுப்பெட்டியான சமூகத்தில் வளர்ந்திருந்தாலும் நாயகி ஒரு முற்போக்குச் சிந்தனையாளராக அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் அவர்களின் தாக்கத்தினால் இந்தி எதிர்ப்பு, பெண்ணியம் பேசும் புதுமைப் பெண்ணாகச் சித்தரிக்கப்படுகிறார். அத்தனை விஷயங்களிலும் அவருக்கு உறுதுணையாய்த் தோளொடு தோள் நிற்கும் தோழனாய் விளங்குபவர் அவருடைய தாத்தா. படத்தின் 'ரகு தாத்தா' அவரே ! அறுபதுகளில் வளர்ந்த என் போன்றோருக்கு இவை வெகு இயல்பாகத் தோன்றுகின்றன. திராவிட இயக்கச் சிந்தனை பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதைக் கண்கூடாகக் கண்டவர்கள் நாங்கள். இடதுசாரி சிந்தனையைப் போலவே அது ஒரு நல்ல அரசியலாக அமைந்தது. எனவே பொதுவாக இக்கால இளைய சமுதாயத்திடம் நல்ல கொள்கை அரசியலும், திரைப்படம் போன்ற கலைகளில் நல்ல ரசனையும் இல்லாமல் போனதே என்று புலம்பும் தலைமுறையும் நாங்களே ! தலைமுறை இடைவெளி என்பது நியூட்டனின் நான்காவது விதியாக அமையலாமோ ! நிற்க. நாம் கையில் எடுத்துள்ள இப்படத்தின் நாயகி வங்கியில் பணிக்குச் செல்கிறார்; சொல்லிலும் செயலிலும் மட்டுமல்ல, எழுத்திலும் தம் முற்போக்கு சிந்தனைகளைப் பதிய வைக்கும் எழுத்தாளராய்த் திகழ்கிறார். பத்திரிகைகளில் தாம் எழுதும் சிறுகதைகளில் புதுமைப் பெண்களைப் படைக்கிறார். பெண் எழுதுவதைச் சமூகம் பெரிதும் வரவேற்காத காலகட்டத்தில், கயல்விழிப் பாண்டியன் எனும் தம் பெயரைக் க.பாண்டியன் எனும் ஆண் பெயரில் எழுத்துலகில் பதிவு செய்கிறார். அவரைத் திருமணம் செய்யும் நோக்கில் முற்போக்காளனாய் வேடமிட்ட ஒரு பிற்போக்குவாதியிடம் மனதளவில் ஏமாந்து பின் எவ்வாறு தப்பிக்கிறார் என்பதை ஒரு நல்ல நகைச்சுவைச் சித்திரமாக்கி இருக்கிறது படக்குழு. "முற்போக்குக் கருத்துகளை நகைச்சுவை இழையோடும் கதையம்சத்தோடு வழங்கியதால், கருத்துகள் நீர்த்துப்போய் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; காமெடி படம் பண்ணலாமா அல்லது கருத்துப்படமாக ஆக்கலாமா என்ற குழப்பத்தில் விளைந்ததாகத் தெரிகிறது" என்ற விமர்சனம் சிலரால் வைக்கப்பட்டுள்ளது. இப்பார்வையில் முற்றிலும் முரண்படுகிறேன் நான். நகைச்சுவையுணர்வு என்பது சான்றாண்மைக்கான அறிகுறி என்பது சர். சார்லி சாப்ளின் போன்றோர் ஏற்கனவே உலகிற்கு எடுத்துக் காட்டிய ஒன்று. அவ்வகையில் இப்படம் தனது உயரிய நோக்கத்தை எந்த குழப்பமும் இன்றித் தெளிவாக வெளிக்கொணர்வதில் வெற்றி பெறுகிறது. கொள்கைகளை மட்டும் பேசினால் இது வெறுமனே ஒரு ஆவணப்படமாக முடிந்திருக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு கொள்கையும் தொடக்கத்தில் கசப்பு மருந்தாகவே பெரும்பான்மை மக்கள் சமூகத்தால் பார்க்கப்படும். எனவே அருமையான திட்டமிடல், படமாக்கல் மூலமாக மருந்தைத் தேனில் குழைத்துத் தந்துள்ளது இயக்குநரின் அபார சாதனை. நாயகியான கீர்த்தி சுரேஷ் முகபாவனையிலும் கண்ணசைவிலும் நவரச நாயகியாக மிளிர்கிறார். 'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சாவித்திரி அவர்களை நம் கண் முன் நிறுத்திய கீர்த்தி சுரேஷ் 'ரகு தாத்தா' திரைப்படத்தில் தாமும் ஒரு நடிகையர் திலகம் என்பதை நிரூபிக்கிறார். கீர்த்தி சுரேஷ் அளவிற்கு நடிக்கும் வாய்ப்பை இப்படம் தராவிட்டாலும், தமக்கு அளிக்கப்பட்ட பங்கினில் அப்பேத்திக்குத் தாத்தாவாகத் திறம்பட ஈடு கொடுக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவர்கள் இருவர் தவிரவும் ஏனைய கதாபாத்திரங்களும் தத்தம் பொறுப்பினைச் செவ்வனே நிறைவேற்றுவது, குறித்து நோக்கத்தக்கது. தக்கோரைத் தேர்வு செய்து குறைந்த முதலீட்டில் படத்திற்கான கதை, உரையாடல் எழுதி இயக்கிய சுமன் குமார் பெரும் பாராட்டுக்குரியவர். பன்முகத்தன்மை படைத்த சுமன் குமாருக்குத் தமிழில் இந்த முதல் முயற்சியே சிறப்பாய் அமைந்துள்ளது. மற்றபடி காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு அனைத்தும் கிராமியச் சூழலிலும், ஆங்கமைந்த அலுவலகப் பின்னணியிலும் அறுபதுகளின் நெல்லை, தென்காசி, நாகர்கோவிலுக்கு நம்மை இயல்பாய் அழைத்துச் செல்கின்றன. பின்னணி இசை பற்றி எழுத, அத்துறையில் அடியேன் ஒரு ஞான சூனியம் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். மேலும் படத்தில் லயித்துவிட்டால் பின்னணி இசை என்று ஒன்று இருப்பதே தெரியாத பாமரர்களில் ஒருவன் நான். அவ்வப்போது நாடகத் தன்மை, சினிமாத்தனம், காற்றோடு பறக்கும் லாஜிக் இவை இல்லாமல் இல்லை. இந்த அம்சங்கள் நிறைந்த முன்னணி நடிகர்களின் மசாலா படங்களுக்கு நூறு கோடிக்கு மேல் நாம் அள்ளித் தராமல் விடுவதில்லையே ! மேலும் பொய்யுரை, உயர்வு நவிற்சி, இல் பொருள் உவமை அனைத்தும் நிரம்பிய இலக்கிய மரபுகளுக்குச் சொந்தக்காரர்கள்தாமே நாம் ! எனவே சுவை கூட்டுவதாய் இக்குறைகளைப் புறந்தள்ளலாம். கொள்கைப் பரப்புரை எனும் மருந்தில் கலந்த தேனாய்க் கொள்ளலாம். இத்துணை எழுதியாயிற்று. திருவாளர் வெகுசனத்தை இப்படம் எவ்வளவு சென்றடைந்திருக்கும் என்று பார்ப்போமா ? வியாழனன்று (15-08-2024) வெளியான படத்தை நான் திங்கட்கிழமை பார்த்தேன். கூட்டம் சுமாருக்கும் குறைவுதான். சிறிய பட்ஜெட்டில் தயாரித்த படம் என்பதால் விளம்பரம் பெரிதாக இல்லை என்பது முதற் காரணமாக இருக்கலாம். சொல்லிக் கொள்ளும் அளவில் தமிழ்ப் படங்கள் வெளிவராத ஒரு இடைவெளிக் காலத்தை விட்டுவிட்டு தங்கலான், டிமான்டி காலனி போன்ற பெரிய பட்ஜெட் படங்களுடன் சேர்த்து வெளியிட்டது இன்னொரு காரணமாக இருக்கலாம். இன்னும் ஓரிரு நாட்களில் பெரும் வெற்றியடையப் போகும், வெற்றியடைய வேண்டிய மாரி செல்வராஜ் அவர்களின் 'வாழை' திரைப்படம் திரையரங்குகளை நிறைக்கப் போகும் நேரம். இத்தகைய காலகட்டத்தில் வெளியிட 'ரகு தாத்தா' படக்குழுவினருக்கு என்ன கால நெருக்கடியோ ! ஆனாலும் பெரியாரையும் அண்ணாவையும் முன்னிறுத்திய ஒரு திரைப்படத்தைத் திராவிட இயக்கத்தினரே பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் போனதன் காரணமென்ன ? கொள்கைகளைக் காமெடியுடன் கலந்து விட்டதனாலா ? ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஆவணப்படமாக வந்திருந்தால் இரண்டே நாட்களில் அரங்கத்தை விட்டே படம் ஓடி இருக்குமே ! அண்ணாவையும் பெரியாரையும் ஊறுகாய் போல் தொட்டுக்கொண்டு வணிகம் செய்கிறார்கள் என்ற கோபமா ? வணிகம் ஆகவே இருக்கட்டுமே ! அப்படியாவது நம் தலைவர்கள் மேலும் சிலரைச் சென்றடையட்டுமே ! அல்லது இயக்கத்திற்குத் தொடர்பே இல்லாதவர்கள் நம் கொள்கைகளைப் பேசுவதை நாம் வரவேற்பதில்லையா ? அண்ணாவும் பெரியாரும் திராவிட இயக்கத்திற்கு மட்டுமே உரியவர்களா ? கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமே உரியவரா, என்ன ? எது எப்படியோ இப்படத்தைப் பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் விட்டது திராவிட இயக்கத்தினரின் தவறே ! இனி OTT தளத்தில் வெளியாகி படம் பலரைச் சென்றடையும் என்று நம்புவோம். அண்ணாவையும் பெரியாரையும் வாசித்து, கேட்டு வளர்ந்த ஒருவன் அப்படித்தான் ஆசைப்பட முடியும். இது போன்ற படங்கள் தோல்வியுற்றால், சிறிது சிறிதாகத் தமிழ்ச் சமூகம் தோற்றுப் போகுமோ என்று இனம் புரியாத, 'இனம்' புரிந்த பயம் தொற்றிக் கொள்கிறது. https://www.facebook.com/share/p/t54RmctDGCko3Thm/?mibextid=oFDknk
-
சங்கே முழங்கு ! - சுப.சோமசுந்தரம்
எனது முகநூல் பதிவினைப் படியெடுத்துக் கீழே மீள்பதிவு செய்துள்ளேன். அங்கு நான் ஏற்றிய நிழற்படங்களைக் காண இறுதியில் உள்ள முகநூல் இணைப்பைச் சொடுக்கவும். இனி அந்தப் பதிவு : சங்கே முழங்கு ! -சுப.சோமசுந்தரம் Suddenly I felt, "Today why don't I blow my own trumpet ?". சுய தம்பட்டத்தில் அப்படியென்ன அலாதி இன்பம் ? எதையும் அனுபவித்தால்தானே தெரியும் ? எனவே இக்கட்டுரைத் தலைப்பும் அங்ஙனமே அமையப்பெற்றது. எத்துணைச் சிறிய பெருமையானாலும் (முரண் தொடை - oxymoron !), அந்த என் பெருமையைச் சங்கே முழங்கு ! நான் சார்ந்த கல்லூரி/ பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமான MUTA பேரியக்கத்தில் ஒரு மரபு உண்டு. சங்க உறுப்பினர்கள் ஓய்வு பெறும்போது அந்தந்தக் கல்லூரிக் கிளையின் மூலமாக மட்டுமே பணி நிறைவு விழா நிகழ்த்தப் பெறும். நான் ஒரு கணிதப் பேராசிரியராக ஜூன் 2020ல் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் ஓய்வு பெற்றேன். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு யாருக்கும் பெரிய அளவில் பணி நிறைவு விழா நடைபெறவில்லை (நடத்தியே ஆக வேண்டும் என்று சொல்ல வரவில்லை !). கணிதம் மற்றும் MUTA பேரியக்கத்தின் மூலமாக என்னுடன் நெருக்கமான பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி கணிதப் பேராசிரியர் முனைவர் கை. அண்ணாதுரையும், பல்கலைக்கழகத்தில் எனது துறை நண்பரான முனைவர் சங்கர்ராஜூம் என்னைக் கௌரவிக்கும் வகையில் இளம் கணிதப் பேராசிரியர்களுக்கான ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தியே தீருவது என்று முடிவெடுத்து, அதற்கான முயற்சியில் இறங்கியது ஆசிரியர் என்ற முறையில் எனது பெருமை. நடத்தியே காட்டினர். வெகு தொலைவில் உள்ள இளம் ஆசிரியப் பெருமக்களையும் நிகழ்ச்சி கவர்ந்திருந்தது தனிச்சிறப்பு; நனி சிறப்பு. தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எல். ரவிசங்கர் அவர்களும், கல்லூரி பேராசிரியர்கள் சார்பில் (MUTA வின் சார்பில் எனச் சொல்வது நடைமுறையில் பொருத்தமான ஒன்று) பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரான தோழர் பேரா. ராஜ ஜெயசேகரன் அவர்களும் என்னை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்கள். பயிற்சிப் பட்டறையில் சொற்பொழிவாளராய்ப் பல்வேறு ஐஐடி நிறுவனங்களில் இருந்தும் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இருந்தும் வந்திருந்த எனது நண்பர்களான பேராசிரியர் பெருமக்கள் நிகழ்விற்கு மெருகேற்றினர். அன்னாருக்கு அடியேன் வாழும் நாள் வரை நன்றிக் கடப்பாடுடையவன். பங்கேற்பாளர்கள் பயனுறும் வகையில் அவர்களின் திட்டமிடல் அமைந்தமை அந்நிகழ்ச்சிக்கான வலிமை. இரண்டாவது நாள் மாலையில் நடைபெற்ற வாழ்த்தரங்கில் மேடையில் என்னையும் எனது துணைவியாரையும் அமர வைத்துச் சிறப்பித்தது எனக்கான அரும்பெறல். நெடுந்தூரப் பயணத்தையும் பொருட்படுத்தாது நண்பர்கள் வந்து வாழ்த்தினர். கணிதத்தில் எனது கற்பித்தல் திறனையும், ஆசிரியர் இயக்கம் சார்ந்தும் மற்றபடியும் சமூகப் போராட்டக் களங்களில் எனது பங்களிப்பையும், எழுத்துலகில் எனது சிறிய (அவர்கள் கூற்றின்படி சீரிய) பணியினையும் வெகுவாக அவர்கள் பாராட்டி எனக்குப் புத்துயிர் ஊட்டினர். ஏதோ ஒரு வகையில் என்னுள் ஒரு பன்முகத்தன்மை இருக்குமோ என்று என்னையே எண்ண வைத்தனர். ஐந்து நாட்களும் கழிந்ததே தெரியவில்லை என்பது பங்கேற்பாளர்கள் பொத்தாம் பொதுவாக இறுதியில் தந்த பின்னூட்டம். ஒவ்வொரு சொற்பொழிவையும் நுணுக்கமாக அணுகி, தாம் பெற்ற பயன்களை ஒவ்வொருவராகப் பட்டியலிட்டது நிகழ்வின் வெற்றிக்குக் கட்டியங் கூறியது. சமீப காலங்களில் நான் பங்கேற்ற கணித நிகழ்வுகளில் இது மகுடமாய்த் திகழ்வதாய் உணர்கிறேன். இவ்வுணர்வே எனக்கான மிகப்பெரிய கௌரவம். கணிதப் பகுப்பாய்வு ((Mathematical) Analysis) என்ற தலைப்பில் நிகழ்வை அமைத்தபோதும் இத்துணைப் பேரைப் பங்கேற்க வைத்து மிக அருமையான ஏற்பாடுகளைச் செய்தோர் பேரா.அண்ணாதுரை, அவருக்கு உறுதுணையாய் நின்ற பேரா. சங்கர்ராஜ், திருவள்ளுவர் கல்லூரி கணிதத்துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் மாணாக்கரே ! சிறு வயதிலிருந்தே அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்ட நான், அறிவுலகில் எனக்கு ஒளி ஏற்றியவர் அவரே என உணர்பவன். இந்தப் பயிற்சிப் பட்டறை அனுபவத்தின் மூலம் எனது நண்பர்கள் யார் யாரென்றும், இன்ன பிற உலகியலையும் எனக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தவர் எனது தோழர் பேரா.அண்ணாதுரை என்பது மிகையில்லை. https://www.facebook.com/share/p/29V5kSEYXwbVtrZJ/?mibextid=oFDknk
-
வக்கிர வணிகம்
இது என் மகள் சோம.அழகுவின் எழுத்து, நண்பரே ! உங்கள் வாசிப்புக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
-
வக்கிர வணிகம்
ல்சமூகம்இலக்கிய வக்கிர வணிகம் சோம. அழகு நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலம். “என்ன இது? இவங்களுக்கெல்லாம் வேற கதையே தெரியாதா? பெண் பிள்ளையைக் கடத்திக் கொண்டு போற மாதிரியே எடுத்துத் தொலையுறாங்க?” – அப்போது தொடர்ச்சியாக வந்த அவ்வகைத் திரைப்படங்கள் குறித்து சற்று காட்டமாகவே அடிக்கடி சலித்துக் கொள்வார்கள் அப்பா. சலிப்பு என்றெல்லாம் சாதாரணமாக வரையறுத்து விட முடியாது அப்பாவின் அவ்வுணர்வை. “திரைப்படம்தானே? நல்லாருக்கு; நல்லா இல்ல. அவ்வளவுதானே? இதற்கு ஏன் இவ்வளவு எரிச்சல்?” எனத் தோன்றும் அப்போது. பத்து வருடங்கள் கழித்து அப்பாவின் மனநிலை இப்போது முழுவதுமாகப் புரிகிறது. அப்பாவினுள் தேவை இல்லாமல் விதைக்கப்பட்டுக் கொண்டே இருந்த பதைபதைப்புதான் ஒவ்வொரு முறையும் கோபமாக வெளிப்பட்டிருக்கிறது. திரைத்துறையைப் பொறுத்த வரை எல்லாமே seasonalதான். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பேய்ப் படங்களாக எடுத்துத் தள்ளுவார்கள். பிறிதொரு காலத்தில் உருவக்கேலியை நகைச்சுவை என நம்ப வைக்க முயற்சிக்கும் படங்களாக வரும். திடீரென கார்ப்பரேட் முதலைகளிடம் இருந்து விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்கும் படங்கள் வரிசையாக வந்து திணறத் திணற அடிக்கும். சர்வகாலமும் எடுக்கப்படும் அடிதடி படங்கள்(gangster movies), தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டி தேசபக்தியை நிலைநாட்டும் படங்கள், ஏதேனும் ஒரு விளையாட்டை மையமாக வைத்து வரும் படங்கள், ஒரே formulaவுடன் ‘முந்திரி பக்கோடா’, ‘திரிமுந் டக்கோப’, ‘ரிதிமுந் படாக்கோ’, ‘கோப திரிமுந்டா’, ‘பக்கோ முந்டாதிரி’…. என வெளிவரும் கமர்ஷியல் திரைப்படங்கள் என வகைப் படுத்திக் கொண்டே போகலாம். ஒவ்வொரு வகையறாவிலும் ஒன்று பார்த்தாலே போதும்தான். ஆனால் இவ்வகைப் படங்களின் எண்ணிக்கை மிகுந்திருந்தாலும் பிரச்சனையில்லை. Good, OK, So So, Boring என அங்கேயே அப்படியே மறந்துவிடலாம். பொழுதுபோக்கைத் தவிர இவற்றில் மனதைப் பதம் பார்க்கும் விஷ(ய)ம் எதுவும் இருக்காது. தற்காலத்தில் புதிதாக ஒரு கதைக்களம். குழந்தை வன்புணர்வு. வாசிக்கும் போதே நடுக்கம் வருகிறதல்லவா? இதை வைத்து ஏதோ ஒரு படம் (strictly one!) என்றால் பரவாயில்லை, அதுவும் கூட அது பாதிக்கப்பட்டவரின் குரலாகவோ அவருக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களைப் பேசும் படமாகவோ இருந்தால் மட்டுமே. ஆனால் மீண்டும் மீண்டும் இந்தக் கதைக் கருவை வைத்து எடுக்கப்படுபவை சுற்றியுள்ளவர்களின் வேதனையைப் பேச, பிற கதாபாத்திரங்களின் நற்பண்புகள் பாசம் கோபம் ஆகியவற்றைக் காட்ட, நீதியை நிலைநாட்ட, சில மனங்களின் கோளாறுகளை(psychological disorders) வெளிச்சம் போட்டுக் காட்ட முயலும் படங்களாகத்தான் உள்ளன. இதற்கு ரசிக்கவில்லை, பிடிக்கவில்லை என்றெல்லாம் மென்மையான சொற்களைப் பயன்படுத்த விருப்பமில்லை. ஒரு படைப்பு நம்மை அழ வைக்கலாம்; சிரிக்க வைக்கலாம்; வருத்தப்பட வைக்கலாம்; நெக்குருக வைக்கலாம்; ஓர் அழகிய நல்லுணர்வை விட்டுச் செல்லலாம்; ஒன்றுமே தோன்ற வராமல் அமைதியாகக் கூட இருக்கச் செய்யலாம். ஆனால் இவ்வகைப் படங்கள் முடிந்த உடன் பயம் கலந்த பதற்றம் கரிய இருளாகக் கவிந்து கொள்கிறது. குழந்தைகளை, ஓடோடிச் சென்று வாரி அள்ளி நெஞ்சோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டு விடுவிக்கத் துணிவில்லாமல் தவிக்க வைக்கும் அச்சம் படர்ந்து அகல மறுக்கிறது. எந்த கலை வடிவமும் விட்டுச் செல்லக் கூடாத உணர்வு இது. கார்கி, செம்பி, வான் மகள், சித்தா, பொம்மை நாயகி என நீளும் இப்பட்டியலின் உச்சமாக மகாராஜா. மகாராஜா திரைப்படத்தின் நேரியல் அல்லாத(nonlinear screenplay) சுவாரஸ்யமான திரைக்கதை அத்திறமையான இயக்குநரின் சாதூர்யத்தைக் காட்டுகிறது. ஆனால் எல்லாம் தவிடுபொடியாகும் வண்ணம் அவர் படைத்த எதிர்மறை கதாபாத்திரங்கள் குழந்தை வன்புணர்வை துளியும் உணர்வில்லாமல்(height of insensitivity) அணுகியிருப்பது அதிர வைக்கிறது. நடிகர் சிங்கம் புலி கதாபாத்திரத்தின் வசனங்கள்… எப்படி ஒருவரால் அவ்வளவு வன்மம் தெறிக்கும் வார்த்தைகளை யோசிக்க முடிந்தது? எவ்வித உறுத்தலும் இல்லாமல் எப்படி எழுதி படமாக்க முடிந்தது? ஏன் அல்லது எப்படி வந்தது அத்துணிவு? அக்காட்சியில் நடிக்க எப்படி ஒருவரால் ஒப்புக்கொள்ள முடிந்தது? இந்தப் படத்தில் வரும் ஒருவருக்குக் கூடவா வீட்டில் குழந்தைகள் இல்லை? கதாபாத்திரங்களின் மீதான வெறுப்பு அத்தனி மனிதர்களின் மீது திரும்பியதில் வியப்பேதும் இல்லை. ‘அவ்வளவு திறமையாக நடித்திருக்கிறார்கள். கதாபாத்திரமாவே வாழ்ந்திருக்கிறார்கள்…’ என்றெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து இங்கு பெருமைப்பட ஒரு மண்ணாங்கட்டியும்(எழுத்து நாகரிகம் கருதி வன்சொற்களைத் தவிர்த்திருக்கிறேன்!) இல்லை. அக்குற்றம் ஒரு முறை நிகழ்ந்ததைப் பதிவு செய்வதே கொடூரம். “எப்படியும் கொல்லத்தான் போறோம்… அதுக்குள்ள இன்னொரு வாட்டி… போயிட்டு வந்துரட்டுமா?” (எழுதும் போதே விரல்கள் நடுங்குகின்றன) என இரண்டாம் முறையில் மனசாட்சியோடு அறத்தையும் முற்றிலுமாகக் குழி தோண்டி புதைத்து விட்டார் போலும் இயக்குநர். இந்த அளவிற்கு அருவருக்கத்தக்கதாகக்(sick) காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன? சிங்கம் புலி விஜய் சேதுபதியை மறைமுகமாக மிரட்டுவது, இறுதிக் காட்சியில் அனுராக் கஷ்யப் அக்குழந்தையிடம் திமிராகப் பேசுவது என சில இடங்களில் கதாபாத்திரங்கள் இம்மி அளவு குற்றவுணர்வைக் கூட உணராமல் மிருகத்தனத்தை வெளிப்படுத்தும் அரக்கத்தனம் தேவைதானா? முழு படத்தின் விறுவிறுப்பையும் இக்காட்சிகள் மொத்தமாக விழுங்கியதில் கசப்பும் பயமும்(anxiety) தாம் மிஞ்சி நின்றன. போதாக் குறைக்கென்று அக்குழந்தை தன்னை அந்நிலைக்கு ஆளாக்கியவனை நேரில் காண வேண்டும் என்று கேட்டு அவனை மிகத் தைரியமாக எதிர்கொண்டு தன்னம்பிக்கை மிளிரப் பேசும் சினிமாத்தனம் எல்லாம் சுத்த அபத்தம். ஏதோ கை கால் அடிபட்டு விழுந்ததைப் போல் இதைக் கையாண்டிருப்பதெல்லாம் ஹாஃப் பாயில்தனமாக இருக்கிறது. ‘கார்கி’ சாய் பல்லவி சுக்கு நூறாக உடைந்த போதிலும் நியாயத்தின் வழி நின்றதைப் பேசுகிறது. ‘செம்பி’யில் அக்குழந்தையை நாசம் செய்த அம்மூன்று மிருகங்களும் வெற்றிக் களிப்பில் திளைப்பது போலவும் ஒவ்வொரு வாரமும் அதே போன்று செய்ய வேண்டும் என அவை உறுதி ஏற்கும் காட்சிகளையும் காண்பித்துதான் அவர்களின் மனப்பிறழ்வை பிரகடனப் படுத்த வேண்டுமா? ‘பொம்மை நாயகி’யும் கூட கிட்டத்தட்ட இப்படித்தான். நிமிஷா சஜயனின் மனப் போராட்டத்தை ஒரே ஒரு காட்சியில் போனால் போகிறது என வைத்து விட்டு சித்தார்த்தின் கோபத்தையும் வில்லனின் கொடூரச் செய்கைகளையும்தான் பூதக்கண்ணாடியில் காண்பித்தது ‘சித்தா’. வான் மகளில் துயரில் உழலும் அக்குழந்தையின் பெற்றோர்; ஊருக்குப் பயந்து எதுவும் அறியாத பாதிக்கப்பட்ட தன் பிள்ளையை மலை மேல் இருந்து தள்ளி விடுவாதாகக் கற்பனை செய்து பின் அதன் மடமையை உணரும் தாய் கதாபாத்திரம்….. இப்படியாக ஒவ்வொருவர் கோணத்திலும் இருந்து காண்பிப்பதற்கு இது ஒன்றும் விளையாட்டோ லேசான விஷயமோ அல்ல. என்னதான் மற்றவர்களைச் சுற்றி காட்சிகள் அமைத்து கதையை நகர்த்தி மையப்புள்ளியில் இருந்து திசைதிருப்ப முயன்றாலும் ஆழ்மனதில் அக்குழந்தைகளின் பறஅதிர்ச்சி(trauma) பற்றித்தான் ஓடிக் கொண்டிருந்தது. அப்படியொரு ரணம் நடந்ததாகச் சொன்னாலே எங்களுக்கு நெஞ்சம் இறுகி வயிற்றைப் பிசையும். அதை அப்படியே காட்சிப் படுத்த ஏன் வரிந்து கட்டிக் கொண்டு அலைகிறார்கள்? எல்லா படங்களிலும் குற்றவாளிகளுக்கு ஏதோ ஒரு வகையில் தண்டனை கிடைத்து விடுகிறதுதான். ஆனால் அவைகளின்(என்ன மரியாதை வேண்டிக்கெடக்கு?) இறப்பு கூட போதுமான தண்டையாகத் தோன்றாத அளவிற்கு என் ஆங்காரமே முந்திக் கொண்டு நிற்கிறது. மீண்டும் மீண்டும் இது போன்ற படங்களைத் தயாரித்துத் திரையில் இதையும் சாதாரணமாகக் கண்டு கடந்து செல்ல மக்களைப் பழக்கப் போகிறார்களா? ‘இவ்வளவு நீளப் படத்தில் அந்த ஒன்றை மட்டும் ஏன் பிடித்துத் தொங்க வேண்டும்? மற்றபடி படம் உணர்வுப்பூர்வமாக நன்றாகத் தானே இருந்தது?’ – ‘வேக வைத்த தண்ணீர் மட்டும்தானே கழிவுநீர்? மற்றபடி பிரியாணி நன்றாகத்தானே இருந்தது?’, இரண்டிற்கும் ஆறு வித்தியாசம் சுட்டுக! ‘எதார்த்தம்(Reality)… அன்றாடம் நடப்பதைத்தானே காட்டியிருக்கிறார்கள்’ என மொன்னைத்தனமான வாதம் எல்லாம் வேண்டாம். புகை பிடிப்பது, மது குடிப்பது, பெண்களைக் கேலி செய்வது, அவர்களின் பின்னாலேயே பொறுக்கித்தனமாகச் சுற்றுவது, பெண்கள் எவ்வாறெல்லாம் அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என பக்கம் பக்கமாக வசனம் பேசுவது – ஒரு கதாநாயகனின் குறைந்தபட்ச தகுதியாக இவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கும் பெரும்பான்மைச் சமூகம் இப்படித்தான் பிதற்றும். அப்பெருந்தகைகளிடம் கேட்டால் ‘Hero இல்லை… protagonist’ என்றும் உருட்டுவார்கள். திரையில் காணும் பல அக்கிரமங்களையும் கொடூரங்களையும் மிக இயல்பாகவும் சில சமயம் நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு எங்களை மெருகேற்றியதற்கு நன்றி! அதற்காக ‘வக்கிரம்’ நன்றாக வியாபாரம்(!) ஆகிறது என வரிசையாக இக்கருவைக்(concept) கொண்டு கல்லா கட்ட முனைவது குரூரம் இல்லையா? It’s not a bloody selling concept! அல்லது எப்படியேனும் புகழைச் சம்பாதிக்கும் முனைப்பா? இதைக் கையில் எடுக்கும் இயக்குநர்கள் அப்படங்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் எனச் சம்பந்தப்பட்டிருக்கும் ஒவ்வொருக்கும் நிச்சயம் கொடூரமான உளப்பிறழ்ச்சி இருந்தாலொழிய இக்கதைக்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். ‘அடுத்தது? அடுத்தது? அடுத்தது?’, ‘இன்னும் வேறு எப்படி எடுத்தால் மக்களை ஆழமாக உலுக்கும்?’, ‘படத்தில் இந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது?’, ‘பழிவாங்கலுக்கு என்ன காரணத்தை வைக்கலாம்?’ என எல்லாவற்றிற்குமான சர்வ ரோக ‘நோயாக’ இதைப் பயன்படுத்துவதற்கெல்லாம் முதலைத் தோல் வாய்க்கப் பெற்றிருக்க வேண்டும். அதிலும் இப்போது வழக்கமாக்கப்பட்ட கொடூரங்களில் அசிங்கத்தைக் கலந்து கொடுத்தால்தான் மக்களுக்கு மழுங்கிப் போய்விட்ட adrenaline, cortisol நன்றாகச் சுரக்குமாம். பார்த்துக் கொண்டே இருங்கள். அண்ணன்-தங்கை, பெற்றோர்-குழந்தைகள் என எந்த உறவையும் விட்டு வைக்கப் போவதில்லை இவர்கள். தணிகைக் குழுவும் இப்போது முகச்சவரத்தில் மும்மரமாக ஈடுபட்டிருப்பதால் அவர்கள் கவனத்தில் இருந்து எல்லாம் தப்பி விடுகிறது…. ஹூம். என்ன செய்ய? ‘அறம்’ என்று ஒரு வார்த்தை இருப்பது இவர்களுக்குத் தெரியுமா? எதார்த்தத்திற்கு மிக அருகில் நின்று அறத்தோடு சமரசம் செய்து கொள்ளாமலும் திரைப்படம் எடுக்கலாம். அது நிச்சயம் நல்ல திரைப்படமாகத்தான் அமையும். இயக்குநர் மாரி செல்வராஜின் ஒவ்வொரு படமும் ஆகச் சிறந்த சான்று. ‘பரியேறும் பெருமாள்’ல் ஆணவக் கொலை செய்யும் தாத்தா கதாபாத்திரம், ‘மாமன்னன்’ திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரம் – இவ்விருவரும் கொலை செய்யப்படுவதைப் போல் காண்பித்திருந்தால் சராசரி மனிதனின் மனது நிச்சயம் நீதி வழங்கப்பட்டுவிட்டதாகக் கூத்தாடியிருக்கும். ஆனால் பார்வையாளனின் மனதில் வெறியைத் தூண்டுவதோ வெறுப்பை விதைப்பதோ மாரி அவர்களின் நோக்கமல்ல. “இனிமே நீ துப்பாக்கிய தூக்கி மிரட்டுனா கூட அவனவன் அவனவன் திசையை நோக்கி ஓடிட்டுதான் இருப்பான்” என்று அமைதியாக ஆனால் வலிமையாக ஃபகத் பாத்திரத்தின் தோல்வியைக் காண்பித்திருப்பார். அதிகாரப் போக்கைச் சாடி அடக்குமுறைக்கு ஆளானவர்களின் கம்பீரமான எழுச்சி குரலாக ஒலிக்கும் இவ்வகை கண்ணியமான படங்கள்தானே சமூகத்தைப் பண்படுத்துவதாக இருக்க முடியும்? அவ்வகையில் எளியவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ‘விசாரணை’ போன்ற உண்மைச் சம்பவங்களை இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் தம் திரைப்படங்களின் மூலம் பதிவு செய்வதும் அவசியமான ஒன்றே! இயக்குநர் மணிகண்டனின் ஒவ்வொரு படமும் கூட எதார்த்த வாழ்வியலோடு கலந்ததுதான். பெரிய பெரிய கருத்துகளை மிக எளிதாக ஆணித்தரமாக அவரால் தமது படங்களின் மூலம் சொல்ல முடிந்திருக்கிறதே? இவ்விருவரையும் போல் அழகியல் ததும்பத் ததும்ப எடுக்கப்பட்ட ‘சில்லுக்கருப்பட்டி’ ஹலீதா ஷமீம் அவர்களை எப்படி மறக்க முடியும்? திரைப்படம் என்பது சக்தி வாய்ந்த ஊடகம். மக்களின் ரசனையை மீட்டெடுக்க ஆரோக்கியமானதாக வளர்த்தெடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த என இவர்களைப் போன்றோர் போராடிக் கொண்டிருக்கையில்….. ஐயா கனவான்களே! எவ்வளவு அறுவையாகக் கூட படம் எடுங்கள். பிடிக்காவிட்டாலும் பார்த்துத் தொலைகிறோம். தயவு செய்து பிள்ளைகளை மட்டுமாவது விட்டுவிடுங்கள். இயக்குநராக நடிகராகத் தோற்கலாம்; மனிதனாக அல்ல. அதிலும் கண்டிப்பாக மனிதத்திடம் அல்ல. சோம. அழகு https://puthu.thinnai.com/2024/07/29/வக்கிர-வணிகம்/
-
பொருநைக் கரையினிலே -2 - சுப.சோமசுந்தரம்
இக்கட்டுரையின் முதற் பகுதி முன்பே பதிவு செய்யப்பட்டது. அதன் இணைப்பு இறுதியில் தரப்பட்டுள்ளது - அதனை வாசித்த பின்னர் இந்த இரண்டாம் பகுதிக்கு வர ஏதுவாக. பொருநைக் கரையினிலே - 2 - சுப.சோமசுந்தரம் முதல் பகுதியில் அறிவித்தது போல இன்றைய பாளையங்கோட்டையை உருவாக்கிய கிறித்தவ மத போதகர்களின் வரலாற்றிலேயே இன்றைய ஊரின் வரலாறு அடங்கியுள்ளது எனலாம். திருநெல்வேலிச் சீமையில் முதல் முதலில் (1778 ல்) கிறித்தவ மதத்திற்கு மாறியவர் தஞ்சாவூரில் இருந்து இங்கு வந்து குடியேறிய மராட்டிய பிராமணப் பெண்ணான கிளாரிந்தாவாகிய கோகிலா (1746 - 1806). ஒருவகையில் நெல்லைச் சீமையில் தென்னிந்திய கிறித்தவ திருச்சபைக்கு வித்திட்டவரும் அவரே எனச் சொல்வதும் மிகையாகாது. அவர் தஞ்சை மண்ணில் ஒரு மராட்டிய பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது இயற்பெயர் கோகிலா. இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்து தமது தாத்தாவின் வளர்ப்பில் ஓரளவு கல்வி அறிவு பெற்று, துணிச்சலும் அன்புள்ளமும் கொண்ட பெண்ணாக வளர்ந்தவர். அக்காலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரின் அரண்மனையில் உயர் பதவி வகித்த ஒரு மராட்டிய வயோதிக செல்வந்தருக்குத் திருமணம் செய்விக்கப்பட்டார். மணமான சிறிது காலத்திலேயே கணவர் இறந்ததால் அக்காலத்தில் அவர்களது சமூக வழக்கப்படி வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றி வைக்கப்படும் நேரத்தில், அதனைக் கேள்விப்பட்டு அங்கே சென்ற ஹேரி லிட்டில்டன் (Harry Lyttleton) என்னும் ஆங்கிலேய இராணுவ அதிகாரியால் காப்பாற்றப்பட்டார் என்பதும், அதன்பின் அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு ஒன்றாய் வாழ்ந்தனர் என்பதும் பின்னர் கோகிலாவுக்கு ஞானஸ்நானம் செய்வித்த பாதிரியார் ஷ்வார்ட்ஸின் குறிப்புகளில் இருந்தும், செவிவழிச் செய்திகளில் இருந்தும் அறியப்படுவன. இவை அ.மாதவையா எழுதிய 'கிளாரிந்தா' எனும் ஆங்கில நாவலில் குறிக்கப் பெறுகின்றன. லிட்டில்டன் பாளையங்கோட்டைக்கு அதிகாரியாக மாற்றலாகி வரும்போது கோகிலாவும் அவருடன் வந்தார். அதன்பின் தமது வாழ்நாள் முழுவதும் பாளையங்கோட்டையே கோகிலாவின் ஊரானது. லிட்டில்டன் தமது பெருஞ்சொத்துகளை கோகிலாவிற்கு அளித்துவிட்டு மறைந்தார். பின்னர் கோகிலா பெரிய அளவில் சமூக சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். இதற்காகத் தமது சொந்தப் பணத்திலிருந்தும் செலவு செய்தார். உதாரணமாக, மக்களின் பயன்பாட்டிற்காகக் கோட்டையின் கிழக்கு வாசல் அருகில் ஒரு கிணறு வெட்டினார். அது இன்றளவும் பாப்பாத்திக் கிணறு என்று மக்களால் வழங்கப்படுகிறது. பாளையங்கோட்டை எனும் ஊரோடு மட்டுமல்லாமல் சுற்று வட்டாரங்களிலும் அவர்தம் மக்கள் சேவையினால் பெரிதும் அறியப்பட்டார். ஹேரி லிட்டில்டனுடன் மணம் புரியாமல் வாழ்ந்தமையால் கோகிலாவுக்கு ஞானஸ்நானம் அளிக்க மறுத்த பாதிரியார் ஷ்வார்ட்ஸ், பின்னர் லிட்டில்டன் மறைவுக்குப் பின் கோகிலாவின் அளப்பரிய சமூக சேவையை மனதிற் கொண்டு அவருக்கு ஞானஸ்நானம் வழங்கினார். கோகிலா குளோரிந்தா அல்லது கிளாரிந்தா ஆனார். திருநெல்வேலியில் முதன் முதலாகக் கிறித்தவத்திற்கு மாறியவராக கிளாரிந்தா அம்மையார் அறியப்படுகிறார். கோட்டையின் கிழக்கு வாசல் அருகே அவர் கட்டமைத்த தேவாலயமும் பள்ளிக்கூடமும் இன்றும் அவர் பெயர் கூறி விளங்குபவை. சமயப் பணியிலும் சமூகப் பணியிலும் நிவந்து விளங்கிய அவரது வரலாற்றில் இருந்துதான் நெல்லையில் கிறித்தவ திருச்சபையின் வரலாறு தொடங்க முடியும். 1806 இல் மறைந்த அவரது கல்லறை அவர் கட்டிய அந்த தேவாலயத்தின் உள்ளேயே அமையப் பெற்றுள்ளது. நெல்லையில் தென்னிந்திய திருச்சபைக்கும் கல்வி நிலையங்களுக்கும் அடித்தளமிட்டவர் கிளாரிந்தா அம்மையார் என்றால், அக்கட்டிடத்தை வலுவாக எழுப்பியவர் ஜெர்மனியில் இருந்து கிறித்தவ மத போதகராகப் பாளையங்கோட்டைக்கு 1820இல் வந்த சார்லஸ் தியோஃபிலஸ் இவால்ட் இரேனியஸ் (C.T.E. Rhenius) அவர்கள். அவர் திருநெல்வேலிப் பகுதியில் கிறித்தவ சபையின் சுமார் 370 கிளைகளை நிறுவினார்; 107 பள்ளிகளை ஆரம்பித்தார். பாளையங்கோட்டையின் முருகன்குறிச்சி பகுதியில் அவர் 1826 இல் கட்டிய சிறிய ஆலயம் இன்று ஊசிக்கோபுரம் என்று மக்களால் பரவலாக அறியப்படும் தூய திருத்துவப் பேராலயமாக (Holy Trinity Cathedral), பாளையங்கோட்டையின் ஒரு முகவரியாக (Landmark) வளர்ந்து நிற்கிறது. அதன் அருகில் அவர் ஆரம்பித்த பெண்களுக்கான பள்ளி இன்று மேரி சார்ஜன்ட் மேல்நிலைப் பள்ளியாக இயங்கி வருகிறது. இந்தியாவிலேயே விடுதியுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இரண்டாவது பள்ளி என்ற சிறப்புக்குரியது. அவர் தொடங்கிய பள்ளிகளைத் தொடர்ந்தே நெல்லை மற்றும் பாளையில் ஏனைய பள்ளிகள் உருவெடுத்தன. எனவே பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்ட் எனப் போற்றப்பட்டதில் இரேனியஸ் அவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. அன்றைக்கு சமூகத்தில் ஆதிக்க சக்தியாக விளங்கிய வேளாளர்களை மதம் மாற்றுவதன் மூலம் தமிழ்ச் சமூகத்தில் ஒரு வலுவான தொடக்கத்தை உருவாக்க எண்ணிய திருச்சபைக்கு மாறாக, ஆதிக்க சக்திகளால் புறக்கணிக்கப்பட்ட நாடார் சமூகத்தினரை மதம் மாற்றி அவர்களைச் சமூக ஒடுக்குமுறையில் இருந்து விடுவிப்பதில் மும்முரம் காட்டினார் இரேனியஸ் ஐயர் (ஐயர் என்பது தலைமைப் பண்பைக் குறிக்கும் சொல். கிறித்துவ மத குருமார்களை ஐயர் என அழைப்பது வழக்கம்). உயர் சாதியினர் மதம் மாறிய பிற்படுத்தப்பட்டோரைத் (குறிப்பாக நாடார் சமூகத்தினரை) துன்புறுத்துவதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க பல கிறித்தவ கிராமங்கள் இரேனியஸ் காலத்தில் அமைக்கப்பட்டன - நல்லூர், மெய்யூர், சமாதானபுரம், ஆரோக்கியபுரம், இரட்சணியபுரம் என்று பல. குறிப்பாக, ஜெர்மனியைச் சார்ந்த டோனா பிரபு என்பவரின் நிதியுதவியோடு இரேனியஸ் அமைத்த ஊர் டோனாவூர் என வழங்கலாயிற்று. மதம் மாறிய பிற்படுத்தப்பட்டோர் தாங்கள் முன்னர் கொண்டாடிய குரங்கணி அம்மன் கொடை விழா சமயத்தில் அவர்களுக்கு மாற்று விழாவாக மாம்பழச் சங்கத்தை ஆரம்பித்தார். இது நெல்லை திருமண்டலத்தில் அனைத்து திருச்சபைகளையும் ஒருங்கிணைக்கும் தோத்திரப் பண்டிகையாக பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு மிக்கவர் இரேனியஸ். அவர் ஆரம்பித்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் உயர் சாதியினர் எதிர்ப்பையும் மீறி, அனைத்து சாதியினரும் ஒன்றாக அமர வேண்டும், விடுதியில் ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டும் என்பதை நிலைநாட்டினார். இதற்கெல்லாம் சமூகத்திலும் திருச்சபையிலும் எதிர்ப்பு வலுக்கவே, பயிற்சிப் பள்ளியை இரண்டு ஆண்டுகள் இழுத்து மூடிவிட்டார். அவர் மத போதகர் மட்டுமல்ல, சமூகப் புரட்சியாளரும் கூட. அவர் காலத்தில் இந்தியா வந்த யூத மதப் போதகர் உல்ஃப், "புனிதர் பால் அவர்களுக்குப் பின் தோன்றிய மிகப்பெரிய அப்போஸ்தலர் இரேனியஸ்" என்று புகழாரம் சூட்டினார். கிறித்தவ சமயப் பணியுடன் அவரது தமிழ் இலக்கியப் பணியும் போற்றத்தக்கது. சென்னையில் முகவை ராமானுஜ கவிராயரிடம் நன்னூல் போன்ற இலக்கண நூல்களையும், நெல்லையில் திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்னும் தமிழறிஞரிடம் பதினான்கு வருடங்கள் இலக்கண, இலக்கியங்களையும் கற்றார். பின்னர் வேதாகம மொழியாக்கங்கள், 'தமிழ் இலக்கணம்', 'பூமி சாஸ்திரம்' என்னும் அறிவியல் நூல் எனப் பல படைப்புகளைத் தந்தவர் இரேனியஸ் ஐயர். உரைநடையில் அக்காலத்தில் இருந்த கூட்டெழுத்து முறையை மாற்றித் தற்கால வடிவில் எழுத்துகளுக்கு இடையில் இடம் விட்டு எழுதும் வழக்கத்திற்கு வித்திட்டவர் இரேனியஸ். இத்தகு தமிழ்ப் பணியால் வீரமாமுனிவர், ஜி.யு. போப், இராபர்ட் கால்டுவெல் வரிசையில் நிற்பவர் இரேனியஸ். சமூகப் புரட்சியாளரான இரேனியஸ் தமது உறுதியான சமூக நிலைப்பாட்டின் காரணமாக திருச்சபையின் எதிர்ப்புக்குப் பெருமளவில் ஆளாகி சபையில் இருந்து 1835இல் விலக்கப்பட்டார். புரட்சியாளர்களை எந்தச் சமூகமும் எக்காலத்திலும் விட்டு வைப்பதில்லையே ! ஆனாலும் போராளிகள் தோற்பதில்லையே ! அவருக்குப் பெருமளவில் கிடைத்த ஆதரவாளர்களின் உதவியுடன் புதியதொரு சபையை நிறுவி சமூகப் பணியும் திருமறைப் பணியும் செய்து வந்தார். அவர் 1838 இல் மறைந்த போது பாளையங்கோட்டை அடைக்கலாபுரம் கல்லறைத் தோட்டத்திலிருந்து சற்று தூரத்தில் வெளியே - இன்று மக்கள் குடியிருப்புப் பகுதியில் நடுநாயகமாக - அடக்கம் செய்யப்பட்டார். கல்லறைத் தோட்டத்தில் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் அவர் தனித்துவமான பெருமை பெறுவதற்கே அத்தனையும் நிகழ்ந்தனவோ என்னவோ ! அந்தக் கல்லறை தோட்டமே அவர் திருச்சபை பொறுப்பில் இருந்தபோது ஆங்கிலேய மாவட்ட நிர்வாகத்திடம் மனுச் செய்து திருநெல்வேலி தென்னிந்திய திருச்சபைக்கு அவர் பெற்றுத் தந்தது. அவர் சபையில் இருந்து விலக்கப்பட்டதால் அங்கு அவருக்கு இடமில்லாமல் போனது. வெகு காலம் கழித்து 1980களில் இரேனியஸின் பெருமையுணர்ந்து தென்னிந்திய திருச்சபை அவரையும், அவர்தம் அளப்பரிய சமூக, சமயப் பணிகளையும் அங்கீகரித்தது. பொருநை நதிக்கரை வரலாற்றில் இரேனியஸ் ஐயரைப் பற்றி இவ்வளவு நீளமாக நான் எழுதியதற்குக் காரணங்கள் இரண்டு. இன்றைய கல்வி நகரம் பாளையங்கோட்டையின் உருவாக்கத்தில் அவரது பங்களிப்பு முதன்மையானது என்பதும், அவரது பெருமையான வரலாறு இன்றைக்கு தென்னிந்திய திருச்சபை மக்களிலேயே பலருக்கும் தெரியவில்லை என்பதும். இரேனியஸ் அவர்கள் திருநெல்வேலியிலும் சுற்று வட்டாரங்களிலும் விதை போட்டு ஆரம்பித்து வைத்த கல்வி நிலையங்களுக்குப் பின்னர் ம. தி. தா இந்து பள்ளி/கல்லூரி, தூய யோவான் பள்ளி/கல்லூரி, தூய சவேரியார் பள்ளி/கல்லூரி, சாராள் தக்கர் பெண்கள் பள்ளி/கல்லூரி, புனித இஞ்ஞாசியார் பள்ளி/கல்வியியல் கல்லூரி என்று நெல்லை, பாளையில் தோன்றி இப்போது நூறு முதல் நூற்றைம்பது ஆண்டு விழாக்களைக் கொண்டாடி வருகின்றன. ஆஸ்க்வித் நினைவு கண் தெரியாதார் பள்ளி, ஃபிளாரன்ஸ் ஸ்வைன்ஸன் காது கேளாதார் பள்ளி என அக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு தென்னிந்திய திருச்சபையின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இவையே தமிழ்நாட்டில் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட கண் தெரியாதார், காது கேளாதார் பள்ளிகள் ஆகும். இப்பள்ளிகளை ஆரம்பிக்கக் காரணமான சாராள் தக்கர், ஆஸ்க்வித், ஃபிளாரன்ஸ் ஸ்வைன்ஸன் இவர்களது வள்ளன்மையும் சமூக சிந்தனையும் பெரும் போற்றுதலுக்குரியன. இம்மேதகு கல்விச் செயல்பாடுகளால் பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்ட் என்று அக்காலத்தில் வழங்கலாயிற்று. ஜெர்மனியிலிருந்து வந்த இரேனியஸ் ஐயரின் தமிழ்த் தொண்டு பற்றிப் பேசிய நாம் நெல்லை மண்ணின் தமிழ்ச் சான்றோரான எம்.எல்.பிள்ளை என்று அழைக்கப்பட்ட கா.சு. பிள்ளை (கா. சுப்ரமணிய பிள்ளை), சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, ச. வையாபுரி பிள்ளை, புதுமைப்பித்தன் ஆகியோரை நினைவு கூராமல் கடந்து செல்ல இயலாது. ஒவ்வொருவரின் தமிழ்ப்பணி பற்றி விலாவாரியாக எழுத ஒரு புத்தகமே போதாது. மேலும் அவர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கே உரித்தாகிப் போனதால், நெல்லை மண் மட்டுமே அவர்களைச் சொந்தம் கொண்டாட இயலாது. இச்சான்றோர் பெருமக்களும் இனி நாம் காணப்போகும் சில பண்பாளர்களும் வேளாளர் குலத்தவராகவே திகழ்வது தற்செயல் நிகழ்வு என்று சொல்வதற்கில்லை. நெல்லையிலும் சுற்று வட்டாரங்களிலும் அவர்கள் கணிசமான எண்ணிக்கையில் அமைந்ததும் அவர்களில் பலர் கற்றலில் சிறந்து விளங்கியமையும் காரணம் எனலாம். ஆதிக்க சாதியினராய், அவர்கள் சில சாதியினர் - குறிப்பாக நாடார் பெருமக்கள் - மீது நிகழ்த்திய ஒடுக்குமுறைக்கு எதிராக இரேனியஸ் போன்றோர் போராடிய வரலாறு கண்டோம். அதே ஆதிக்க சாதியிலும் புரட்சிகர சிந்தனையாளர்கள் தோன்றியதை மறுப்பதற்கில்லை. உதாரணமாக, சுயசாதி விமர்சனமாக 'நாசகாரக் கும்பல்' என்ற சிறுகதையை அன்றைய நாளில் படைக்கும் துணிவு புதுமைப்பித்தனிடம் இருந்தது. ஜவுளி வணிகத்தில் கோலோச்சிய ஆர்.எம்.கே. விஸ்வநாத பிள்ளை துணிகளுக்குப் பஞ்சம் ஏற்பட்ட இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் வாங்கும் துணிகளுக்கு அதிகபட்ச அளவு வகுத்து, எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் சாதிப் பாகுபாடின்றி அக்காலத்திலேயே நியாய விலையில் வழங்கினார்; வணிகத்தில் அறம் தலையாயது என்று நிலைநாட்டினார். நெல்லை நகரில் குமார விலாஸ் உணவகம் நடத்திய திராவிட இயக்க சிந்தனையாளரும் பெரியாரின் சீடருமான பிரமநாயகம் பிள்ளை தமது உணவகத்தில் சாதி பேதமின்றி எல்லோரும் ஒன்றாகத்தான் அமர்ந்து உணவருந்த வேண்டும் என்றும், அதனை ஏற்காதார்க்குத் தமது உணவகத்தில் இடமில்லை என்றும் அறிவிப்பு பலகை வைத்து உயர் சாதியினரின் பலத்த எதிர்ப்புக்கிடையே சமூக நீதியை நிலைநாட்டினார். இவ்வாறு ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் வாழ்ந்தது எம் ஊரே ! பதிவு செய்யப்பட்ட தரவுகளானாலும் செவிவழிச் செய்திகளானாலும் நினைவலைகளில் (Nostalgia) மூழ்கித் திளைப்பது திருநெல்வேலிக்காரனுக்கு, அவன் ஊர் அல்வாவை அவனே ரசித்துச் சுவைப்பது போன்றது. கட்டுரையை முடித்தே ஆவது என்று முடிவெடுத்த தருணத்திலும் கூட அந்நினைவலைகள் புதிது புதிதாகத் தோன்றி ஆர்ப்பரிக்கின்றன. கட்டுரை என ஆரம்பித்ததே இரண்டு பகுதிகளாய் வந்து நிற்கின்றது. புத்தகம் எழுதும் ஆசையும் துணிவும் எப்போதாவது ஏற்பட்டால் அந்த அலைகளில் மென்மேலும் இறங்கலாம்; இப்போதைக்குக் கால் நனைத்ததோடு கரை திரும்பலாம். நான் எழுதாவிட்டாலும் வேறு திருநெல்வேலிக்காரன் வந்து எழுதுவான்.
-
நூல் அறிமுகம் - Materialism
முன்பெல்லாம் முதலில் யாழில் பதிவேற்றிய பின்னரே அதன் இணைப்பை ஏனைய வலைத்தளங்களில் பதிவு செய்வது என் வழக்கம். தற்சமயம் நிழற்படம் அல்லது வீடியோவுடன் பதிவிட வேண்டி சிலவற்றை முகநூலில் ஏற்றி, பின்னர் மீள்பதிவாக யாழில் பதிவேற்றுகிறேன். கீழ்க்காணும் நூல் அறிமுகமும் எனது முகநூல் பதிவு. புத்தக அட்டை இறுதியில் உள்ள இணைப்பில் : என் நண்பரும் குருநாதருமான ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் ச.தில்லைநாயகம் அவர்கள், தந்தை பெரியாரின் 'பொருள் முதல்வாதம்' எனும் நூலினைத் தமக்கே உரித்தான எளிய, தரமான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அஃதாவது பாமரர்க்கான எளிமையும் சான்றோர்க்கான தரமும் என இரு நோக்கு அன்னாரது மொழிச் சிறப்பு. இம்மொழி பெயர்ப்பு 'கலப்பை பதிப்பக'த்தால் வெளியிடப் பட்டுள்ளது. இந்நால் தமிழ் நிலத்திற்கு அப்பால் உள்ள வாசகர்க்கும் ஆனதால், பெரியாரின் நிகரற்ற வாழ்வு பற்றிய குறிப்பும் வரையப் பெற்றுள்ளது. முன்பு பேரா. தில்லைநாயகம் அவர்கள் தமது திருக்குறள் தமிழ் உரை மற்றும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்குத் தமிழில் அணிந்துரை தர அடியேனுக்கு அன்புக் கட்டளையிட்டது போல், இந்நூலுக்கு ஆங்கிலத்தில் அறிமுகவுரை தரப் பணித்தது எனது எழுத்துக்கான வெகுமதி. இனி அந்த அறிமுகவுரையும் இறுதியில் நூலின் அட்டையும் : PREFACE This book by Prof. S.Thillainayagam is in two parts, the first part is the English translation of the eight chapters of the book Materialism (Porulmudhalvaadham) penned by Periyar in Tamil and the second a brief sketch on Periyar's life and times. The target reader is obviously the non-Tamil speaking common man in India and outside and hence the author has naturally come out with a simple but powerful language befitting Periyar's message to the world at large. As the book is mainly for the non-Tamils, Thillainayagam has found it imperative that a chapter on Periyar is appended. The first part Materialism deals with Periyar's down to earth philosophical reflections on god, religion, soul, I (who am I ?), heaven and hell etc… Periyar, being a man for all, cannot afford to be an abstruse philosopher catering only to the elite. He comes down heavily on the society's stereotypical notions on religious charity, sin, virtue and good conduct in simple words and examples from day-to-day life. Atheism and rationalism were the be-all and end-all of his life. The title 'Periyar' bestowed upon him means 'Great Man' in Tamil. The first part Materialism shows Periyar as 'Periyar' in his own words and the second part Periyar’s Life, in the words of Thillainayagam, shows why and how Periyar is 'Periyar' in his deeds. A brief but perfect picturisation of Periyar right from his boyhood is a deserving tribute to the man he was, besides being a wholesome introduction to someone who had sown the seeds of the Self-Respect Movement in Tamil Nadu and had seen it within his lifetime, grow and blossom as the most humanitarian movement. The problems Periyar faced in his struggle for the oppressed classes were multifaceted. He had to fight not just against the regressive forces in the Brahminical camp but even against people of great stature, the likes of Mahatma Gandhi and Rajagopalachari who were steeped in the varnashram and the Manu dharma evils. Thillainayagam has taken great efforts to prove his point with facts and figures. I'm sure that this will earn him kudos from all progressive-minded people. S. Somasundaram, Professor of Mathematics (Retd.) Manonmaniam Sundaranar University Tirunelveli. https://www.facebook.com/share/p/yE43CLxhY4yCMXTU/?mibextid=oFDknk
-
இரும்பு மனிதர்கள் - சுப.சோமசுந்தரம்
இரும்பு மனிதர்கள் - சுப.சோமசுந்தரம் எங்கள் ஆசிரியர் சங்கமான MUTA வின் புலனக் குழுவில் (WhatsApp group) பேரா. நீலகிருஷ்ண பாபு அவர்கள் வழக்கம் போல பேரா. சுப.வீரபாண்டியன் அவர்களின் ஒரு நிமிடச் செய்தி ஒலி நாடாவைப் பதிவு செய்திருந்தார். அப்பதிவு கீழேயுள்ள இணைப்பில் உள்ளது. தயவு கூர்ந்து அதனைக் கேட்ட பின் அச்செய்தி என்னுள் எழுப்பிய நினைவலைகளை வாசிப்பது (வாசிப்பதாக இருந்தால்) வாசிப்போரின் உடலுக்கும் (!) உள்ளத்திற்கும் நலம் பயப்பது : நீங்கள் (மக்கள்) விரும்பும் மனிதர் ஹிட்லராக இருந்தால், அவருக்கும் 'இரும்பு மனிதர்' என்று பெயரிட்டுக் கொண்டாடலாம். சர்தார் வல்லபாய் படேல் கதையைக் கையிலெடுத்து இக்கருத்தை நுட்பமாக (with subtlety) வெளிப்படுத்தும் சொல் ஆளுமை சுபவீ அவர்களுக்கே உரியது. ஒலிப்பதிவில் உள்ள படேல் பற்றிய கருத்து மட்டுமே சுபவீ க்கு உரியது. எனது எழுத்தில் உள்ள பிற்சேர்க்கை அடியேனது. அவரது கருத்தில் எனக்குத் தோன்றியவற்றைக் குழைத்து அடிக்கும்போது இந்த எச்சரிக்கை அறிவிப்பு அவசியமாகிறது. இந்திரா காந்தி அம்மையார், 1947 ல் சாம்ராஜ்யங்களுக்குத் தரப்பட்ட உறுதிமொழியை மீறி, ஒரு தலைமுறை அவகாசம் கூடத் தராமல் மன்னர் மானியத்தை (royal purse or privy purse) 1971 ல் ஒழித்தபோது அவரை இரும்புப் பெண்மணி என்று சிலர்/பலர் கொண்டாடினர். மன்னர்களுக்கு நாம் ஏன் வக்காலத்து வாங்க வேண்டும் என்ற முற்போக்கு (!) சிந்தனையோ என்னவோ ! அந்த மன்னர்களில் பெரும்பாலானோர் 1967 தேர்தலில் அப்போதைய இந்திரா காங்கிரஸுக்கு எதிராக வேலை செய்ததால், அஃது அவர்களுக்கு அம்மையாரின் அன்புப் பரிசு என்பதையெல்லாம் சமூகம் கண்டு கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் முதலில் நீதிமன்றத்தில் அம்மையார் தோற்றுப் போனதும், உடனே மக்களவையைக் கலைத்துத் தேர்தலுக்கு வழிவகுத்தார். அசுர பலத்துடன் மீண்டு வந்து 1971 ல் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மன்னர் மானியத்தை ஒழித்தார் (நல்ல வேளை இம்முறை பாசிச பாஜகவுக்கு அசுர பலம் கிடைக்கவில்லை). அலகாபாத் நீதிமன்றம் 1975 ல் இந்திரா காந்தியின் தேர்தலுக்கு எதிரான தீர்ப்பு வழங்கியபோது, நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்தார் அந்த இரும்புப் பெண்மணி (!). நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யாமலேயே சுதந்திர அதிகாரம் பெற்ற அனைத்து ஜனநாயக நிறுவனங்களையும் கையிலெடுத்து மாற்றுக் கட்சி மாநில முதல்வர்கள் வரை சிறைக்குள் வைத்து எதேச்சாதிகாரத்தை அரங்கேற்றலாம் என்று யோசிக்கும் அளவிற்கு இந்திரா அம்மையார் அப்போது முன்னேறி இருக்கவில்லை, பாவம் ! காஷ்மீருக்கு அளித்த உறுதிமொழியை மீறி Article 370 ஐ ஒழித்ததில் மோடி - அமித்ஷா கூட்டணி 'இரும்பு மனிதர்கள்' என்று வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பெறலாம். இவர்களெல்லாம் வெறும் இரும்புதான். அரசுக்கு எதிராகப் போராடிய 1.7 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த ஜெயலலிதா அம்மையார் தங்கத் தாரகையே ஆனார். அடாவடித்தனங்களுக்கு இரும்புக் கரம், இரும்பு மனிதர் என்றெல்லாம் பெயரிட்டால், உறுதிப்பாட்டிற்குக் குறியீடான இரும்பு என்னும் உலோகத்தின் மீது மக்கள் சமூகம் கொண்ட மதிப்புதான் என்னே ! https://www.facebook.com/share/v/axwDsBoGut4WFpgs/?mibextid=oFDknk
-
அப்போதைக்கு இப்போதே ....... - சுப.சோமசுந்தரம்
அவ்வாறு எனக்குத் தோன்றவில்லை, தோழர் ! "அப்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்" என்கிறாரே ! "அதாவது என்னால் நினைக்க இயலாது" என்பதுதானே பொருள். எய்ப்பு தம்மை வந்து நலியும் போது தாம் நலிந்து போவதாகத்தான் குறிப்பிடுகிறார் எனக் கொள்கிறேன்.
-
அப்போதைக்கு இப்போதே ....... - சுப.சோமசுந்தரம்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் - சுப.சோமசுந்தரம் நேற்றைய (23-06-2024) ஒரு அனுபவப் பகிர்வு : உறவினர் மகளின் திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தேன். கல்லூரியொன்றில் கணிதப் பேராசிரியையாய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த நண்பரின் கணவர் வந்திருந்தார். "சார், மேடம் வரவில்லையா ?" என்று கேட்டேன். "அவளுக்கு சுமார் ஒரு வருடமாக சுயநினைவு இல்லை. அல்சீமர் (Alzheimer) ஆட்கொண்டுள்ளது" என்றார். "பலரை நினைவில்லை. ஆனால் உங்கள் mathematics மீது அவளுக்குப் பெரிய அபிமானம் உண்டு. உங்களைப் பார்த்தால், epsilon delta எல்லாம் நினைவு வரலாம். ஒருநாள் வீட்டிற்கு வாருங்கள்" என்றார். மேடத்திற்கு பக்தி நெறியில் ஈடுபாடு உண்டு. ஒரு முறை அவரிடம் பெரியாழ்வார் பாசுரம் ஒன்றைப் பேசிய நினைவு. "கடைசிக் காலத்தில் உடலும் உள்ளமும் நலிந்து உன்னை நினைக்கும் ஆற்றலை நான் இழந்தாலும் என்னைக் காத்து நிற்க வேண்டும். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்" என்று திருவரங்கப் பெருமானிடம் பெரியாழ்வார் இறைஞ்சும் பாடல் அது. அப்பாடல் அந்த மேடத்துக்கே பொருந்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒருநாள் அவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும். Let me see whether Epsilon,Delta or connectedness (a topological concept in mathematics) gets us connected. பெரியாழ்வார் போன்ற பக்தி இலக்கியத்தையும் முயற்சி பண்ணலாம். Before that I should check with my friend, a psychologist, if it's okay to try with the 'memory card' of someone under Alzheimer. இனி அந்த பெரியாழ்வார் பாசுரம் : " துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணை ஆவர் என்றே! ஒப்பு இலேன் ஆகிலும் நின்னடைந்தேன்! ஆனைக்கு நீ அருள் செய்தமையால்! எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்!அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே! " - பெரியாழ்வார்; பாடல் 422; பத்தாவது திருமொழி https://www.facebook.com/share/p/Smb17pYeYzZ6uLg6/?mibextid=oFDknk
-
சாதி கெட்ட 'சாதி' - சுப.சோமசுந்தரம்
சாதி கெட்ட 'சாதி' - சுப.சோமசுந்தரம் தலைப்பில் முதலில் வரும் சாதி, ஒழுக்கம் எனப் பொருள்படும் தமிழ்ச் சொல்; பின்னர் வரும் 'சாதி', ஜாதி எனும் பிரிவினையின் தமிழ் வடிவம். ஒரு கணித ஆசிரியர் என்ற முறையில், மும்பையில் கணித மாணாக்கர்க்காக அகில இந்திய அளவில் நடைபெற்ற ஒரு தொடர் நிகழ்வில் பங்கேற்ற பின் ஞாயிறன்று (16 ஜூன் 2024) ஊர் திரும்பியதும் நேற்று (17 ஜூன்) ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தோழர் பேரா.வ.பொன்னுராஜ் அவர்களுடன் கலந்து கொள்ளும் நல்வாய்ப்பு அமைந்தது. அந்தப் பக்கம் செல்லும்போது கணித உலகின் நட்பு வட்டம் "Back in the saddle" என்று நினைக்க வைப்பதும், இந்தப் பக்கம் வரும்போது தோழர்கள் அதே உணர்வைத் தருவதும் (இல்லாத) இறைவன் எனக்கு அளிக்கும் வரம் போலும் ! நண்பர்கள் மற்றும் தோழர்கள் துணையால் "Back to the pavilion" எனும் நிலையே இல்லாமல் போனது வாழ்வின் பேரானந்தம். நிற்க. அது ஒரு கண்டனக் கூட்டம். எதற்காக ? ஒரு தலைவனும் தலைவியும் சுமார் ஆறு வருடங்கள் காதலித்தனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலந்தொட்டுத் தமிழ் நிலத்தின் நடைமுறைதானே ! தொல்காப்பியன் கூற்றுப்படி, இடையில் தமிழ்ச் சமூகத்தில் புகுந்த பொய்யும் வழுவும் பெற்றோரையும் உற்றோரையும் திருமணத்தை அங்கீகரித்து மணமுறையினை வகுப்பவர்களாக மாற்றியது. "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" - தொல்காப்பியம், பொருளதிகாரம், பாடல் 145. (ஐயர் - மூத்தோர் - பெற்றோர், உற்றோர்; யாத்தனர் - இயற்றினர், அமைத்தனர்; கரணம் - மணமுறைகள்) தொல்காப்பியன் காலத்திலேயே பொய்யும் வழுவும் உள்ளே புகுந்து விட்டது என்பது தெரிகிறது. வருணாசிரமம் எனும் அபத்தமெல்லாம் அந்த 'வழு'வில் அடக்கம்ணே ! சரி, கதையை விட்ட இடத்தில் தொடருவோம். மணமகள் 'இல்லத்துப் பிள்ளைமார்' என்று சற்று உயர்ந்த ரகமாம் (அவாளின் வர்ணாசிரமப் பகுப்பின்படி எல்லாம் சூத்திர இழவுதான்). மணமகன் அருந்ததியர் எனும் குறைந்த ரகமாம். இரத்த வகைகள், இழவெடுத்த சாதி வகைப்படியே அமையும் என்று எவனோ அறிவியல் பூர்வமாக நிறுவி நோபல் பரிசு வாங்கியிருப்பான் போல ! பெண் வீட்டார் சம்மதிக்க மாட்டார் எனத் தெரிந்து இக்காதல் இணையர் CPI(M) கட்சியின் நெல்லைக் கிளையில் தஞ்சம் புகுந்தனர். இரு மனமொத்த அத்திருமணத்தைப் பதிவு செய்ய கட்சித் தோழர்கள் ஆவன செய்தனர். வெகுண்டெழுந்த பெண் வீட்டார் அடியாட்கள் துணையுடன் CPI(M) கட்சி அலுவலகத்தை அடைந்து நாற்காலிகளையும் கண்ணாடிக் கதவுகளையும் அடித்து உடைத்தனர். அதனைத் தடுத்த பெண் வழக்கறிஞரும் தோழருமான பழனி அவர்களும், அலுவலகத் தோழர் சிலரும் தாக்கப்பட்டனர். காவலர் இருவர் கண்முன்னேயே இத்தாக்குதல் நடைபெற்றது. ஏற்கெனவே தோழர்கள் காவல் நிலையத்திற்குக் கொடுத்த தகவலால் அங்கு வந்த காவலர்களே அவர்கள் எனக் கேள்வியுறுகிறோம். கூடவே பெண் வீட்டார்க்கும் தகவல் கொடுத்தவர்கள் யாராக இருக்கும் ? அதன் பின் ரவுடிகளுக்குத் தகவல் தந்தோர் யார் ? முன்னெச்சரிக்கையாக காதலர் இருவரும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டதால், அவர்களைக் கட்சி அலுவலகத்தில் எதிர்பார்த்து வந்தோர் அடைந்த ஏமாற்றத்தின் விளைவு தாக்குதலாக வெளிப்பட்டதோ ! தோழர் பழனியுடன் தொலைபேசியில் பேசிய ஒருவர் (தம்மை அக்காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலராய்/அதிகாரியாய் அறிமுகம் செய்து கொண்டவர்), ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டாம் என்றும், அக்காதலர் பாதுகாப்புக் கருதித் தங்களிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைக்குமாறு கூறியதாகவும் கேள்வியுறுகிறோம். அவ்வாறு ஒப்படைக்கப் பட்டிருந்தால் கட்டப் பஞ்சாயத்தின் மூலம் அப்பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அருந்ததியரான அம்மணமகன் நிலை என்னவாகி இருக்கும் ? தமிழ்நாட்டில் இதுவரை நடந்த ஆவணக் கொலைகளின் டைரிக் குறிப்புகள் தெளிவாக உள்ளனவே ! காதல் ஜோடி காவல் நிலையம் செல்லாமல் கம்யூனிஸ்டுகளிடம் தஞ்சம் அடைந்தது சரியான முடிவு என்று தெரிகிறதே ! பெற்றோர் வந்து பேசினால் பொறுப்புணர்ச்சியுடன் இரு சாராரிடமும் பக்குவமாகப் பேச வல்லவர்தாமே நம் தோழர்கள் ! அவ்வாறிருக்க எடுத்த எடுப்பில் கொலைவெறித் தாக்குதல் நடத்தும் அவசியம் என்ன ? மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பதிவானவை. அலுவலகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனே CPI(M) ன் நெல்லைக் கிளையின் சார்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் ஸ்ரீராம், "சாதி மறுப்புத் திருமணங்களுக்கு இனி எங்கள் அலுவலகம் திறந்தே இருக்கும்" என்று அறிவித்ததும், நேற்று நடந்த கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அதையே மாநிலம் முழுமைக்கும் வழிமொழிந்ததும் சமூக நன்மைக்கான நமது போர்க்குணம். போராளிகள் அப்படித்தானே இயங்க முடியும் ! பொதுவுடைமைக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் சமூக நீதிக்கானவை. ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கியை மனதில் கொள்ளாமல் அறத்தை நிலைநாட்டும் கடமை ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சாதிய வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட அடியாட்களில் சிலர் ஏற்கெனவே கொலைக்குற்றம் முதலிய வழக்குகளில் சிக்கியவர்கள் எனக் கேள்வியுறுகிறோம். அத்தகையோர் மீது 'குண்டாஸ்' சட்டம் பாய வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளே சாதியப் பிற்போக்குவாதிகளுக்கான எச்சரிக்கையாய் அமையும். நாங்குநேரி சாதிவெறித் தாக்குதலைத் தொடர்ந்து மாணாக்கரிடையே சாதிவெறி எனும் கொடுமை களைய முன்னாள் நீதியரசர் சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்த ஆலோசனைக் குழு தற்செயலாகத் தனது அறிக்கையைச் சமர்ப்பித்த நேரமிது. வரும் தலைமுறையாவது சாதியற்ற சமூகம் எனும் விடியலை நோக்கி முன்னேற அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாதி அடையாளம் நமக்கான அவமானம் என்று சமூகம் உணர வேண்டும். மார்க்ஸும் அம்பேத்கரும் பெரியாரும் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்பட வேண்டும். "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்" என்று நாவுக்கரசர் எழுப்பும் வினா கோயில்களில் கூட ஒலிக்க வேண்டும். https://www.facebook.com/share/p/TCRhdvoaKxBZZmfz/?mibextid=oFDknk