Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. பாகம் - 03 அடுத்து இந்தியப்படை ஈழ மண்ணில் கால்வைக்கும் வரை நடந்தவை தொடர்பில் காண்போம். 1984 தொட்டு, இந்தியப் படையின் காலம் வரை இதன் பின்னான காலகட்டத்தில், 1984 தொட்டு, இந்தியப் படையின் காலம் வரை போராளி ஒருவரின் சடலம் கிடைக்கும் போது அதற்கு சீருடை இந்திய படைத்துறையை ஒத்த சீருடை அணிவித்து ஒரு உடலிற்கான முழு செய்கைகளும் செய்யப்படும் (இன்போர்ம் மட்டும் செய்யப்பட மாட்டாது, வசதியற்ற காரணங்களால்.). பின்னர் அந்தந்த மாவட்ட கட்டளையாளர், மற்றும் அரசியல்துறைப் போராளிகள் எல்லோருமாக சேர்ந்து வீரமரணமடைந்த போராளியின் பெற்றோரிடம் அவரின் உடலை இறுதி செய்கைக்காக ஒப்படைப்பர். பெற்றோர் தங்கள் சமயப்படி வீட்டில் தேவையான நாட்கள் வைத்து இறுதிச் செய்கைகளை முடிப்பர். அப்போது உடலானது குறித்த போராளியின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும். அதன் போது மக்கள் திரண்டு வந்து தமது இறுதிவணக்கத்தை தெரிவித்துவிட்டுச் செல்வர். பின்னர் உடல்களை ஊர்வலமாக சுடுகாடு அ இடுகாட்டிற்கு புலிகளின் படைத்துறை அணிவகுப்புடன் எடுத்துச் சென்று எரிப்பர் அ புதைப்பர், முறையே. இதிலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பரப்புகள் மற்றும் கட்டுப்பாடல்லாத பரப்புகள் என்று வேறுபாடிருந்தது. எடுத்துக்காட்டிற்கு, 17/01/1986 அன்று மன்னார் நாயாற்றுவெளியில் சிறிலங்கா படையினருடனான நேரடிச் சமரில் வீரமரணமந்த வீரவேங்கை றோஸ்மனின் இறுதி செய்கையைக் காண்போம். இவர்தான் இந்தியப்படைக்கு முன்னரான காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதன்முறையாக மிகக் குறைந்த வயதில் (17இல்) வீரமரணமடைந்த போராளியாவார். வீரவேங்கை றோஸ்மனின் உடல் புதைவிடம் நோக்கி படைய மரியாதையுடன் எடுத்துச்செல்லப்படுகிறது. படிமப்புரவு: விடுதலைப்புலிகள் மாத இதழ், 1986 இக்கால கட்டத்தில் இவரது செத்தவீடு (அக்காலத்தில் வீரச்சாவுவீடு என்ற சொல் பாவனையில் இருக்கவில்லை) நடந்த பரப்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பரப்பாகும். மேலும், இக்காலகட்டத்தில் அவரரவர் சமயப்படி இறுதி செய்கைகள் செய்ய புலிகள் அனுமதித்தனர். இவர் கிறிஸ்தவ சமயத்தை சார்ந்தவர் என்பதால் வேதப்படி வீட்டில் இறுதி செய்கைகள் முடிந்து, இறுதிவணக்கமும் முடிந்து, மன்னாரில் உள்ள ஆட்காட்டிவெளி புதைவிடம் (அப்போது "துயிலுமில்லம்" என்ற சொல் பாவனைக்கு வரவில்லை.) நோக்கி எடுத்துச்செல்லப்படுவதை படிமம் காட்டுகிறது. இதில், சவப்பெட்டியைத் (அக்காலத்தில் "சந்தனப் பேழை" என்ற சொல் பாவனையில் இருக்கவில்லை) தாங்கி வரும் மக்களுக்கு முன்னால் தெருவின் இரு மருங்கிலும் புலிவீரர்கள் குடிமை உடையில் (அக்காலத்தில் வரிச் சீருடை வரவில்லை) அணிவகுக்கின்றனர். புலிவீரர்களின் நடுவில் வேதச் சமயச் சின்னமான 'சிலுவை' எடுத்துச்செல்லப்படுவதைக் காண்க. கொண்டு செல்லும் போது ஊர்தியிலோ அல்லது நடந்தோ தத்தம் வசதிக்கு ஏற்ப கொண்டுசெல்வர். இதுவே அக்காலத்திய புதைவிடம் நோக்கிச் செல்லும் போது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையாகும். இதுவே சைவ சமயத்தைச் சேர்ந்த போராளியின் உடலாக இருந்திருப்பின், சைவ சமய முறைப்படி வீட்டில் இறுதி செய்கைகள் முடித்து, இறுதிவணக்கமும் முடிந்து, தத்தம் வசதிக்கு ஏற்ப சவப்பெட்டியில் வைத்து சுடுகாட்டிற்கு கொண்டுசெல்வர், புலிகளின் அணிவகுப்புடன். பின்னர் சுடுகாட்டில் எரியூட்டுவர். இதே நடைமுறை தான் முஸ்லிம் இனப் போராளிகளுக்கும் நடந்தது. இவ்வாறு சுடுகாட்டிற்கோ இல்லை இடுகாட்டிற்கோ கொண்டு செல்லப்படுபவர்களுக்கு அங்கு வைத்து புனித படைய மரியாதை வழங்கப்படும். அப்போது 27 வெற்றுச் சன்னங்களை போராளிகள் ஒவ்வொருவராக தீர்ப்பர். இது எப்பொழுதிலிருந்து நடைமுறைக்கு வரப்பட்டது என்பது குறித்துத் தெரியவில்லை. இவ்வாறாக இருந்துவந்த நடைமுறையில் சில மாற்றங்கள் ஆகக்கூடியது 1986 ஒக்டோபருக்குப் பின்னர் கொண்டுவரப்பட்டன. உடலை புதைவிடம்/ சுடுகாடு நோக்கி கொண்டு செல்லும் போது சமய அடையாளங்களை மக்கள் கொண்டு செல்வதை புலிகள் தவிர்த்தனர். மேலும் புலிகளின் செலவிலேயே அலங்கார ஊர்திகள் கொணரப்பட்டு அதில் சவப்பெட்டிகள் வைக்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டன. இச்சவப்பட்டிகளானவை சந்தன மரத்தால் செய்யப்பட்டவை அல்ல. அவை சாதாரண மரங்களாலாஅன சவப்பெட்டிகள் தாம். மேலும், பொதுமக்களுக்கும் வீரமரணமடைந்த போராளிக்கும் இடையிலான உறவும் வீரமரண நிகழ்வுகளின் போது ஒரு வகையான தாக்கத்தை செலுத்திருந்தது எனலாம். புலிகள் இயக்கத்தில் வீரமரணத்தின் பின்னர் லெப். கேணல் தரநிலையை முதன்முதலில் பெற்றவரான லெப். கேணல் விக்ரரின் (இவர் அப்போதைய மகளிர் பிரிவின் கப்டன் தரநிலை போராளியான அனோஜாவின் மடியில் தான் மாவீரரானார் என்றும் அன்னாரிற்கான புனித படைய மரியாதையின் போது முதல் வேட்டினையும் அனோஜாவே தீர்த்ததாகவும் நேரில் கண்ட இன்னொரு விடுதலைப் போராட்ட வீரர் என்னிடம் தெரிவித்தார். ) இவரது சாவுவீட்டு நிகழ்வானது புலிகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வீரமரணமடைந்த பின்னர், அவரின் உடலானது முறைப்படி கழுவப்பட்டு புதுச் சீருடை அணிவிக்கப்பட்டது. பின்னர் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு அன்னாரின் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டு அவரது பெற்றாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்னாரின் உடல் அவரின் வீட்டிற்குள்ளேயே சமய முறைப்படியான செய்கைகளுக்காக வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அது அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் மக்களின் இறுதிவணக்கத்திற்காக வைக்கப்பட்டது. இறுதிவணக்கம் முடிந்த பின்னர், அவரின் சவப்பெட்டி பிற போராளிகளால் (ஆண்கள்) தூக்கி செல்லப்பட்டு புலிகளின் அலங்கார ஊர்தியில் (பிக்-ப்) ஏற்றப்பட்டு ஆட்காட்டிவெளி புதைவிடம் நோக்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கொண்டு செல்லும் போது மக்கள் திரளாக இறுதிவணக்கம் செலுத்தினர். அங்கே புதைவிடத்திற்கு கொஞ்சம் தொலைவில் அலங்காரவூர்தி நிறுத்தப்பட்டு அதிலிருந்து சவப்பெட்டி போராளிகளால் தூக்கி வரப்பட்டது. பின்னர் புதைகுழியினுள் புதைக்கப்பட்டது. அதன் பின்னர் மக்கள் வரிசையாக வந்து மண் தூவிசென்றனர். பின்னர், புதைகுழியினை சுற்றி 27 பெண்போராளிகள் நின்று 27 தடவை வேட்டுகளைத் தீர்த்தனர் (இத்தகவல் மட்டும் போராளி ஒருவர் எனக்கு வழங்கிய வாக்குமூலம்). இந்நடைமுறையே பின்னாளில் மாவீரர் துயிலுமில்லங்கள் கட்டப்பட்ட பின்னர் சில மாற்றங்கள் மற்றும் புதிய புகுத்தல்களுடன் இயக்க மரபாக கைக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் உடலின் தலைமாட்டில் சமய செய்கைக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதைக் காண்க உடலிற்கு புத்தம் புதிய சீருடை அணிவிக்கப்பட்டுள்ளதைக் காண்க உடல் மக்கள் திரளிற்கு நடுவணில் ஆட்காட்டிவெளி புதைவிடம் நோக்கி எடுத்துச் செல்லப்படுவதைக் காண்க ஆட்காட்டிவெளி புதைவிடத்தில் பிக்கப்பிலிருந்து அன்னாரின் சவப்பெட்டி இறக்கிக்கொண்டு புதைகுழி நோக்கி கொண்டு செல்லப்படுவதைக் காண்க புதைகுழியினுள் மக்கள் மண்தூவுவதைக் காண்க 27 மகளிர் போராளிகள் 27 சன்னங்கள் தீர்ப்பதைக் காண்க இவ்வாறான இறுதிவணக்க நிகழ்வுகள் படைத்துறைக் கட்டுப்பாட்டில் இருந்த குடும்பத்திற்கு மாறுபட்டன. உடல் குடும்பத்தினரின் கைகளில் கிடைத்திருப்பின், புலிகளின் படைய அணிவகுப்பின்றி உடல்கள் பொதுமக்களால் எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன என்பதுவே அதுவாகும். (தொடரும்) ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  2. பாகம் - 02 அடுத்து கட்டுரையின் நோக்கப் பகுதியைப் பார்ப்போம். அடிக்கற்கள் சிலரின் உடல்களிற்கு நடந்தவை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப போராளிகளின் உடல்கள் (வித்துடல் என்ற சொல்லின் பாவனையானது 1991இற்குப் பின்னரே வந்தது) அடக்கம் (அனைத்துக் காலத்திற்கும் ஏற்ற பொதுச்சொல்லாக இதனைக் கையாண்டுள்ளேன்) செய்யப்பட்டன. "அடிக்கற்கள்" சிலரும் வேறு சில போராளிகளும் தொடக்க காலத்தில் வீரமரணமடைந்த போது அவர்களின் உடல்கள் பல்வேறு காரணங்களுக்காக பெற்றாரிடம் ஒப்படைக்கப்படவில்லை.. லெப். சங்கர் எ சுரேஸ், லெப். சீலன் எ ஆசீர், லெப். சந்திரன் எ செல்லக்கிளி எ அம்மான், வீரவேங்கை ஆனந்த் எ ஆனந்தன், வீரவேங்கை புத்தூர் மாமா மற்றும் வீரவேங்கை புறோக்கர் ஆகியோரின் உடல்களுக்கு இவ்வாறு நிகழ்ந்தது. "தமிழீழத்தின் முதல் மாவீரர்" லெப். சங்கர் எ சுரேஸ்: சிறிலங்காக் காவல்துறையினரின் சூட்டில் வயிற்றின் பளுப் பகுதியில் காயமடைந்த லெப். சங்கர் அவர்கட்கு யாழ் பல்கலைக் கழகத்திற்கு எதிரே இருந்த குமாரசாமி வீதியில் இருந்த வீடொன்றில் வைத்து யாழ் பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் சிலரால் முதலுதவிப் பண்டுவம் அளிக்கப்பட்டது (மாவீரர் நாள் மரபாகி வந்த கதை, 2010>). பின்னர் மேலதிக மருத்துவத்திற்காக, நான்கு நாட்களின் பின்னர், நவம்பர் 24, 1982 அன்று, மூத்த உறுப்பினர் திரு. அன்ரன் மாஸ்டர் அவர்களின் துணையுடன் தமிழ்நாட்டிற்கு கடலேற்றப்பட்டார். தமிழ்நாட்டில் கோடியக்கரையில் கொண்டுவந்து இறக்கப்பட்டார். பின்னர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் பண்டுவம் நடைபெற்றது. அப்போது இவரின் உடலில் ஏவுண்ணியிருந்த சன்னத்தினை அவ்வைத்தியசாலையின் (இவ்வைத்தியசாலை புலிகளுக்காக கமுக்கமாக இயங்கியதென்பது பின்னாளில் தெரிய வந்த செய்தி) பொறுப்பாளர் மரு. என்.எஸ்.மூர்த்தி நீக்கினார் (ஆதாரம்: ஈழப்போரில் தமிழகம் செய்த உதவிகளின் பட்டியல், 2014). எனினும் பலனின்றி உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் கேணல் கிட்டுவின் மடியில் நவம்பர் 27 மாலை 6:05 மணிக்கு காயச்சாவடைந்தார். 'விடுதலைத் தீப்பொறி' என்ற நிகழ்பட ஆவணத்தின் படி, இவரது உடலை மருத்துவமனையிலிருந்து புலிகளின் முதலாவது தாக்குதல் கட்டளையாளரான லெப். சீலனே பொறுப்பெடுத்தார். பின்னர் அங்கே ஆதரவாளர் ஒருவரின் துணையோடு அவரின் குடும்ப அங்கத்தவர் போன்று பதிந்துவிட்டு அன்றிரவே செத்தவீடு செய்தனர். ' "தமிழீழத்தின் முதல் மாவீரர்" லெப். சங்கரின் உடல்' பிறகு ஊரடங்கிய சாமம் போல், கேணல் கிட்டு, லெப். கேணல் பொன்னம்மான், இளங்குமரன் எ பேபி சுப்பிரமணியம் (மாவீரர்), போன்ற மூத்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களோடு பழ. நெடுமாறன் ஐயா அவர்களது கட்சி தொண்டர்கள் என சொற்பமானவர்களுடன் அன்னாரது உடலை மதுரையில் உள்ள கீரைத்துரை சுடலையிற்கு எடுத்துச் சென்றனர். அங்கே அனைவரினது முன்னிலையிலும் லெப். கேணல் அப்பையாவால் உரிய மரியாதையுடன் முறைப்படி தகனம் செய்யப்பட்டது (மாவீரர் நாள் மரபாகி வந்த கதை, 2010>). பின்னர், லெப். சீலனின் சாம்பலை மட்டும் ஒரு செம்பில் எடுத்துவந்து பாதுகாத்துவந்தனர். அவரது மைத்துனரான தாடியிடமிருந்து மிகுந்த சமாளிப்புகளுக்குப் பின்னர் அவருடைய புகைப்படத்தை பின்னாளில் புலிகள் பெற்றுக்கொண்டனர். பேந்து, ஓராண்டிற்குப் பின்னர் அவருடைய புகைப்படத்துடன் சேர்த்து அன்னாரின் சாம்பலையும் அவரின் வீட்டிற்கு கொடுத்தனுப்பினர், புலிகள். அவ்வேளையில் தமிழீழத்தின் சில இடங்களில் இருந்த சுவர்களில் அவரின் வீரமரண செய்தியும் புலிகளால் எழுதப்பட்டது, பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக. லெப். சங்கர் அவர்களின் நினைவாய் உதயபீடம் படைமுகாம் துயிலுமில்லத்தில் எழுப்பப்பட்ட கல்லறை உதயபீடம் படைமுகாம் துயிலுமில்லத்தில் முதன்மைக் கல்லறையாய் கல்லறை கட்டமைக்கப்பட்டுள்ளதைக் காண்க எள்ளங்குளம் மா.து. உள்ள லெப். சங்கரின் நினைவுக்கல் பின்னாளில் மணலாற்றுக் கோட்டத்திலிருந்த உதயபீடம் படைமுகாம் துயிலுமில்லத்தில் லெப். சங்கர் அவர்களின் நினைவாய் கல்லறை ஒன்று எழுப்பப்பட்டது. அன்னாரின் கல்லறையை பிற மாவீரர்களின் கல்லறைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இதை முதன்மைக் கல்லறை போன்று கட்டி அதன் மேல் ஓர் வளைவையும் நிரந்தரமாக கட்டியுள்ளனர். அதன் மூலம் இதை முதன்மைக் கல்லறை போன்று தோற்றப்படுத்தியுள்ளனர். அதே போன்று எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் அன்னாருக்கு நினைவுக்கல் கட்டப்பட்டுள்ளது. லெப். சீலன் எ ஆசீர் மற்றும் வீரவேங்கை ஆனந்த் எ ஆனந்தன்: தமிழீழத்தின் முதல் தாக்குதல் கட்டளையாளர் லெப். சீலன் எ ஆசீர் (இவருக்கு 'பாலன்' என்ற இன்னொரு புனைபெயரும் இருந்தது என்று ஈழநாடு நாளேடு மூலம் அறியக்கூடியவாறு உள்ளது) மற்றும் வீரவேங்கை ஆனந்தன் ஆகியோர் மீசாலை தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் காட்டிக்கொடுப்பால் மாலை ஐந்தரை மணியளவில் வீரமரணமடைந்தனர்(ஈழநாடு 16/05/1983). அன்னவர்களுடைய உடல்களானவை சிங்களப் படைத்துறையால் கைப்பற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன (ஈழநாடு 16/05/1983). அவற்றில் லெப். சீலனின் உடல் தான் முதலில் அடையாளம் காணப்பட்டது. அவருடைய தாயாரான திருமதி மரியசெபமாலை 17/05/1983 அன்று தமது மூத்த மகனுடன் வந்து சிறிலங்கா காவல்துறையினர் முன்னிலையில் தமது ஐந்தாவது மகனான லெப். சீலனை அடையாளம் காட்டினர் (ஈழநாடு 18/05/1983). தனது சமயப்படியான இறுதிச் செய்கைகளுக்காக தலைநகர் திருமலைக்கு கொண்டு செல்ல சிங்களவரிடம் அனுமதி வேண்டினார். ஆயினும் அவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அறிவித்துவிட்டதாகவும் மறுமொழி கிடைத்ததும் தெரிவிப்பதாகக் கூறி உடலை ஒப்படைக்க மறுதலித்துவிட்டனர். அதே நாளில் மற்றைய உடல் அடையாளம் காணப்படவில்லை. அதுவோ ஊதிப் பொருமி காணப்பட்டது. 'முதற் கட்டளையாளர் லெப். சீலனின் உடலின் திருமுகம்' அடுத்த நாள், 18/05/1983 அன்று, புலிகள் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி ஆகிய இடங்களில் நினைவஞ்சலி சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். சிவப்பு மையினால் எழுதப்பட்டிருந்த அதில், "தமிழ் ஈழ வேங்கைகளான 'சீலன்', 'ஆனந்தன்' ஆகியோருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்." என்றும் கீழே, "தமிழ் ஈழ விடுதலைப்புலிகள்" என்றும் எழுதப்பட்டிருந்தது (ஈழநாடு 19/05/1983). அதே நேரம் கச்சேரி, முத்திரைச்சந்தி, சங்கிலியன் சிலையடி, அரசடி, கந்தர்மடம், சாவகச்சேரி ஆகிய இடங்களில் மற்றொரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில், "தமிழ் ஈழ வேங்கைகள் சீலன், ஆனந்தனைக் காட்டிக்கொடுத்த துரோகிகளைப் பழிக்குப்பழி வாங்காமல் விடமாட்டோம்." என்றும் கீழே, "தமிழீழ விடுதலைப்புலிகள்" என்றும் எழுதப்பட்டிருந்தது (ஈழநாடு 19/05/1983). அடுத்தடுத்த நாள், 19/05/1983 அன்று, வீரவேங்கை ஆனந்தனின் உடலும் அடையாளம் காணப்பட்டது. அவருடைய பெற்றார் நீர்கொழும்பில் வசித்து வருவதும் அன்னார் அவருடைய மைத்துனர் நாகமணி வடிவேஸ்வரனுடன் தங்கியிருந்ததும் தெரியவந்தது (ஈழநாடு 20/05/1983). இருவரினதும் உடல்களைப் பார்க்க குடும்பத்தினர் அனுமதிக்கப்பட்டனர். ஆயினும் அவைகளை இறுதிச் செய்கைகளுக்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை; ஏனெனில், தமிழர்களின் கிளர்ச்சியை ஒடுக்க அப்பொழுது நடைமுறைப்பட்டிருந்த அவசரகால சட்டத்தின் சிறப்புப் பிரிவின் கீழ் சிங்களப் படைத்துறையால் சுட்டுக்கொல்லப்படும் எவரிற்கும் பிணச் சோதனையோ அல்லது மரண உசாவலோ நடத்தப்படமாட்டாது என்பதோடு சடலங்களும் அரச செலவிலேயே அடக்கம் செய்யப்படும் என்பது சட்டமாகும். அற்றை நாளே, இருவரினதும் உடல்கள் பாயில் சுற்றப்பட்டு படையப் பாரவூர்தியில் ஏற்றப்பட்டன. கடைசியாகப் பார்க்க குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் இருவரினது பொடிகளும் சிங்களக் காவல்துறை மற்றும் படையினரின் பாதுகாப்புடன் ஊர்காவற்றுறைக்கு எடுத்துச்செல்லப்பட்டு ஒதுக்குப்புறமான இடமொன்றில் எரியூட்டப்பட்டதாக தெரியவருகிறது என்று ஈழநாடு செய்தி வெளியிட்டுள்ளது (ஈழநாடு 20/05/1983). லெப். சந்திரன் எ செல்லக்கிளி எ அம்மான்: புலிகளின் இரண்டாவது தாக்குதற் கட்டளையாளரான லெப். செல்லக்கிளி அவர்கள் 23/07/1983 அன்று இரவு மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப் புகழ்பூத்த திருநெல்வேலிக் கண்ணிவெடித் தாக்குதலில் வீரமரணமடைந்த ஒரே புலிவீரர் ஆவார். அன்னாரின் உடலிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக கேணல் கிட்டு அவர்களால் தேவி வார இதழிற்கு 1988ம் ஆண்டு எழுதப்பட்டு வெளியான ''விடியலை நோக்கி முடியாத போராட்டங்கள்'' என்ற தொடர் கட்டுரையின் பாகங்களான 5, மற்றும் 18 ஆகியவற்றில் எழுதப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் பின்னர் லெப். செல்லக்கிளி அம்மானின் உடல் போராளிகளால் மீட்கப்பட்டது. அம்மான் வீரமரணமடைந்த இடமான கடையின் மேலிருந்து அவரின் உடல் இறக்கப்பட்டு கேணல் கிட்டு கொண்டுவந்த வானினுள் (தமிழில் வையம் என்றும் சொல்லலாம்) ஏற்றப்பட்டது. அதோடு அங்கே கைப்பற்றப்பட்ட படைக்கலன்களும் வானினுள் ஏற்றப்பட்டன. பின்னர் வான் புறப்பட்டுச் செல்லும் போது திடிரேன கீழிறங்கி ஓடிய லெப். கேணல் விக்ரர் தனது கையில் இருந்த கைக்குண்டுகளை சிறிலங்காப் படையினர் வந்த படையப் பாரவூர்தியினுள் போட்டுவிட்டு வந்து ஏறினார். அவை வெடித்துச் சிதறின. இவர்கள் திரும்பிய போது இடிமின்னலோடு மழையும் தூறிலிட்டது. பின்னர், அந்த வான் வலிகாமத்தின் நீர்வேலிப் பரப்பில் அமைந்திருந்த இவர்களின் முகாமான வீடொன்றிற்குச் சென்றது. அபோது நள்ளிரவென்பதால் வெகு சில மக்களின் நடமாட்டமே அத்தெருவில் தென்பட்டது. வானை இவர்கள் மனைக்குள் கொண்டுசென்றனர். அன்னாரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தால் அவர்களுக்கு தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படுமென்பதால் இவர்களே உடலை புதைக்க முடிவெடுத்தனர். வானை நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலைக்குப் பின்னால் உள்ள தரவை வெளிக்குக் கொண்டு சென்றனர். அப்போது முதலில் பாதைக்காலும் பின்னர் தரவை வெளிக்குள்ளாலும் செலுத்தினார் கேணல் கிட்டு. தரவையில் செலுத்தும் போது மிகக் கடினப்பட்டே செலுத்தினர். சிறிது நேரத்திற்குப் பின்ன்னர் மேலும் செலுத்தமுடியாமல் போக சற்றுத் துரத்தில் இருந்த தாழம் புதருக்கு அருகில் ஓரிடத்தில் கிடங்கு வெட்டினர். களிமண் தரையாக இருந்ததால் மிகவும் கடினப்பட்டே வெட்டினர். பின்னர் எல்லோருமாக சேர்ந்த்து - அனைவரும் அவரது உடலைத் இறுதியாகத் தொட்டனர் - அவரது உடலை கிடங்கினுள் இறக்கினர். லெப். செல்லக்கிளியிற்கு மிக நெருக்கமான கேணல் கிட்டு மட்டும் அழுதுகொண்டே கிடங்கினுள் இறங்கி செல்லக்கிளி அவர்களுக்கு முத்தமிட்டுவிட்டு வந்தார். பின்னர் அவரது குழியினை மூடிவிட்டு அனைவரும் அங்கிருந்து சென்றனர். சில காலம் கழித்து அன்னாரின் குடும்பத்தினருக்கு அவரின் வீரமரணம் தொடர்பில் தகவல் தெரிவித்தனர், புலிகள். வெலிக்கடை சிறைக் கோரம்: அடுத்து, 83 கறுப்பு சூலை இனப்படுகொலையின் போது வெலிக்கடைச் சிறையில் சிங்களக் காடையர்களின் தாக்குதலில் மாவீரர்களாகியோரின் நிலைமையோ இவற்றைவிட மோசமான கோரமாகயிருந்தது. இவர்களில் பெரும்பாலானோரின் உடல்கள் சிங்களக் காடையர்களால் துண்டு துண்டாக்கப்பட்டு சிறைக்குள்ளிருந்த புத்தரின் சிலைக்குப் படைக்கப்பட்டது. புலி வீரர்கள் இருவரினதும் (வீரவேங்கை புத்தூர் மாமா மற்றும் வீரவேங்கை புறோக்கர்) தனிக்குழுவினர் ஏழு பேரினதும் உடல்கள் உள்ளிட்ட 53 பேரின் சடலங்கள் கூட குடும்பத்தில் உள்ள எவருக்கும் தெரியாமலேயே புதைக்கப்பட்டது அல்லது தகனப்பட்டது. அன்னவர்களைக் கடைசியாகப் பார்க்கும் வாய்ப்புக் கூட அந்த ஏழைத் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. இவ்வளவு ஏன், அவர்கள் கொல்லப்பட்ட செய்தியே, அவர்களின் குடும்பத்தினருக்கு வானொலி மூலம் மட்டுமே தெரியவந்தது என்பது மிகவும் கொடுமையானது (Welikada_Massacre, sangam.org). (தொடரும்) ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  3. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! பாகம் - 01 தமிழீழ விடுதலைப் போராட்டக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து வீரச்சாவடைந்த போராளிகளின் சடலங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன என்பது குறித்து இக்கட்டுரையில் அலசப்பட்டுள்ளது. இந்த அடக்கம் தொடர்பாக பார்பதற்கு முன்னர் இவற்றைக் குறிக்க புலிகளால் பாவிக்கப்பட்ட சில விதப்பான சொல்லாடல்கள் பற்றி முதற்கண் பார்ப்போம். பிடாரச்சொற்கள் (Newly coined terms) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களானோர் சிறிலங்காப் படைத்துறையுடனோ அல்லது இந்தியப் படைத்துறையுடனோ அல்லது தமிழ் தேசவெறுப்புக் கும்பல்களுடனோ மிண்டி ஏற்படும் அடிபாடுகளால் மரணமடையும் போது அச்சாவானது "வீரச்சாவு" என்று புலிகளாலும் தமிழ் மக்களாலும் சுட்டப்பட்டது. இவ்வீரச்சாவானது களத்திடை நிகழும் போது "களச்சாவு" என்றும் களத்தில் விழுப்புண்ணேந்தி மருத்துவமனையில் பண்டுவம் பெற்றுவரும் போது அஃது பலனளிக்காது சாவடைய நேரிட்டால் "காயச்சாவு" என்றும் சுட்டப்பட்டது. எவ்வாறெயினும் வேறுபாடில்லாமல் பொத்தாம் பொதுவாக "வீரச்சாவு" என்ற சொல்லே பாரிய பெரும்பான்மையாக பாவிக்கப்பட்டுள்ளது. "களச்சாவு" என்ற சொல் ஆங்காங்கே இலக்கியத்திலும் இயக்கப்பாடல்களிலும் பாவிக்கப்பட்டுள்ளது. "காயச்சாவு" என்ற சொல்லின் பாவனையோ புலிகள் கால எழுத்துலகில் என்னால் காணமுடியவில்லை! வீரச்சாவடைந்த புலிவீரர் "மாவீரர்" (மா+வீரர்) என்று விளிக்கப்பட்டார். பல்பொருளுடைய இந்த மா என்ற ஓரெழுத்துச் சொல்லானது ஒருவரின் நல்ல, கெட்ட குணங்களை மிகுதிப்படுத்தும் பெயரடையாகும். அத்துடன் இக்கூட்டுச்சொல்லானது மிகப் பெரிய பெருமையும் வலிமையும் உடைய வீரர் என்று வீரச்சாவடைந்த அவ்வீரரை குறிக்கிறது. இது ஆகக்குறைந்தது 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் மாவீரர் வாரத்திலிருந்து பாவிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் இச்சொல்லை சரியாக எப்போதிலிருந்து பாவிக்கத் தொடங்கினர் என்பது தெரியவில்லை. இம்மாவீரரின் சடலமானது "வித்துடல்" (வித்து + உடல்) என்று சுட்டப்பட்டது. இவ்வித்துடல் "துயிலும் இல்லத்தில்" புதைக்கப்படும் செயலானது "விதைத்தல்" என்று அழைக்கப்பட்டது. இச்சொல்லினை, ஒரு தாவரத்தின் வித்து (உவமை) நாட்டப்படும் போது பெரும்பாலும் முளைக்கிறது என்ற நியதியின்படி தமிழ் விடுதலை வீரர்களின் சடலங்களான (உவமேயம்) வித்துடல்கள் விதைக்கப்படும் போது அதனைக்காணும் தமிழர்களும் புதிதாய் இயக்கத்தில் சேர்வார்கள் என்று பொருள்படும் படியான உவமைச் சொல்லாக உண்டாக்கியிருந்தனர். "வீரவணக்கம்" என்ற சொல்லானது 1986ம் ஆண்டு வெளியான விடுதலைப்புலிகள் இதழில் முதன் முதலில் பாவிக்கப்பட்டுள்ளது. இது வீரச்சாவடைந்த ஒருவருக்கு செய்யும் வீரமான வணக்கம் என்ற பொருளில் பாவிக்கப்படுகிறது. ஒருவரின் வீரச்சாவு அறிவித்தல் வெளிவரும் போதோ அல்லது அவரது நினைவு நாள் அறிவித்தலின் போதோ இச்சொல்லானது பாவிக்கப்படுகிறது. இந்தியப் படைக்குப் பின்னான காலகட்டத்தில் மாவீரர் கல்லறைகளின் தலைப் பகுதியின் மேற்பகுதியிலும் மற்றும் நினைவுக்கற்களின் மேற்பகுதியிலும் 'வீரம் நிறைந்த புலி' என்ற பொருள்படத் தக்கதான சொல்லான "வீரவேங்கை" என்ற சொல் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இச்சொல் தான் தவிபுஇன் அடிப்படைத் தரநிலையும் கூட. இம்மாவீரரின் தரநிலையுடனான இயக்கப்பெயருக்கு மேலே "வீரவேங்கை" என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளதைக் காண்க. படிமப்புரவு (Image Courtesy): ஈழநாதம் 1990.12.20 | பக்கம் 2 ஆகக்குறைந்தது 20/12/1990 அன்று தொடக்கமாவது "வீரவேங்கை" என்ற சொல் பாவிக்கப்பட்டிருப்பதை அற்றை நாளில் வெளியான ஈழநாதம் நாளேடு மூலமாக அறியக்கூடியவாறு உள்ளது. அற்றை நாளேட்டில் 'லெப். சுஜி' என்ற மாவீரரின் 45ம் நாள் நினைவஞ்சலி பதிவில் அவரது தரநிலைக்கு மேலே வீரவேங்கை என்ற இச்சொல் எழுதப்பட்டுள்ளது. அதாவது கல்லறை மற்றும் நினைவுக்கற்களின் மேல் எழுதப்பட்டிருப்பதைப் போன்றே இச்சொல் பாவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சொற்கள் யாவும் புலிகளால் உருவாக்கப்பட்டு மக்கள் நடுவணில் பரவலறியாகி புழக்கத்திற்கு வந்தன. இன்றளவும் புழக்கத்தில் உள்ளன. புழக்கச் சொற்களின் பாவனை அப்படியானால் இச்சொற்களிற்கு முன்னர் எத்தகைய சொற்கள் பாவனையில் இருந்தன என்று உங்கள் மனதில் கேள்விகள் எழலாம். இதற்கு முன்னரான காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்று மேற்கூறப்பட்டவை போன்ற தனியான பிடாரச் சொற்கள் (newly coined terms) இருந்ததில்லை. பொதுவாக மக்கள் நடுவணில் புழக்கத்திலிருந்த சொற்களே புலிகளாலும் கையாளப்பட்டன; வீரமரணம், Body (த.உ.: பொடி) அ புகழுடல், தகனம் அ புதைத்தல், கண்ணீர் அஞ்சலிகள் ஆகியனவே அவையாகும். எடுத்துக்காட்டாக, 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 திகதியில் வெளியான புலிகளின் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இதழில் தமிழீழ விடுதலை போரின் முதல் மாவீரரான லெப். சங்கரின் வீரச்சாவின் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி ஓர் சுவரொட்டி வெளியாகியிருந்தது. படிமப்புரவு: விடுதலைப்புலிகள் மாத இதழ், 1984 திசம்பர் இச்சுவரொட்டியில் அன்னாரின் தரநிலையுடன் இயக்கப்பெயருக்குப் பகரமாக முதலெழுத்துடனான இயற்பெயரே வழங்கப்பட்டுள்ளது. இயக்கப்பெயரானது மாற்றுப்பெயராக தரநிலையுடன் கீழே வழங்கப்பட்டுள்ளதைக் காண்க. இம்முறைமையானது, "லெப்டினன்ட்" வரையான தரநிலை உடையோருக்கு மட்டுமே 1987ம் ஆண்டு வரை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிவந்த அனைத்து "விடுதலைப்புலிகள்" இதழ்கள் மூலமாக அறியக்கூடியவாறு உள்ளது. எனினும், கப்டன் முதல் லெப். கேணல் ஈறான தரநிலைகளிற்கு பிற்காலத்தில் அவர்களால் கைக்கொள்ளப்பட்டு இறுதிவரை கடைப்பிடிக்கப்பட்ட 'தரநிலையுடனான இயக்கப்பெயர்' என்ற முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 1984ம் ஆண்டு சூலை மாதத்தில் வெளியான விடுதலைப்புலிகள் இதழில் "கப்டன் ரஞ்சன் லாலா" என்று ஒரு போராளியின் (அடிக்கற்களில் ஒருவர்) வீரச்சாவு குறிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தான் பிற அடிக்கற்களில் சிலரான லெப். கேணல் விக்ரர், மேஜர் கணேஸ் உள்ளிட்டோரின் விரிப்புகளும் விடுதலைப்புலிகள் இதழில் வெளியாகியுள்ளன. மேலும், அச்சுவரொட்டியில் வீரச்சாவு என்ற சொற்பதத்துக்குப் பகரமாக "வீரமரணம்" என்ற சொற்பதத்தையே தொடக்கத்தில் பாவித்துள்ளனர். இச்சொல்லானது 1992 நடுப்பகுதி வரை பாவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரிருந்து "வீரச்சாவு" என்ற சொல் பாவானைக்கு வந்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே வீரமரணம் என்ற சொல்லும் சமாந்தரமாக கையாளப்பட்டுள்ளது. இதே காலப்பகுதியிலும் இதற்குப் பின்னான காலப்பகுதியிலும் "களப்பலி" (களச்சாவு என்ற சொல்லுக்கு ஈடான சொல்) பாவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போரின் தொடக்க காலத்திலிருந்து 1991 இன் ஒரு குறித்த (சரியான காலம் தெரியவில்லை) காலம் வரை போராளிகளின் வித்துடல்கள் "பொடி/Body" என்றுதான் பேச்சு வழக்கில் விளிக்கப்பட்டுவந்தது. அக்கால புலிகளின் படைத்துறை ஆவணங்களில் வித்துடல்களைக் குறிக்க 'உடல்' என்ற சொல் பாவிக்கப்பட்டிருப்பதை "விடியலை நோக்கி முடியாத போராட்டங்கள்" என்ற கேணல் கிட்டுவால் 1988இல் எழுதப்பட்ட தொடர் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது. எவ்வாறெயினும் ஆகக்குறைந்தது 1991ஆம் ஆண்டின் கார்த்திகை மாதத்திலிருந்து "புகழுடல்" என்ற சொல்லானது போராளிகளின் வித்துடல்களைக் குறிக்க பாவிக்கப்பட்டது என்ற தகவலை 1991ஆம் ஆண்டின் ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏட்டிலிருந்து அறியமுடிகிறது. பிடாரச்சொல்லான "வித்துடல்" என்ற சொல் புலிகள் அமைப்பில் பாவனைக்கு வந்த காலத்தை அறியமுடியவில்லை. இதே போன்று பிற்காலத்தில், 1986இலிருந்து, பாவிக்கப்பட்ட "வீரவணக்கம்" என்ற சொல்லுக்கு ஈடாக சாதாரணமாக ஒரு பொதுமகன் இறப்பாராயின் அவரை நினைவுகொள்ள பாவிக்கப்படும் "கண்ணீர் அஞ்சலிகள்" என்ற சொல்லையே புலிகளும் அவர்களின் ஆரம்ப காலத்தில் பாவித்துள்ளனர் என்பதை அவர்கள் லெப். சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந்த் ஆகியோருக்கு 19/05/1983 அன்று ஒட்டிய சுவரொட்டிக்கள் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது. தொடக்க காலத்தில் போராளிகளின் வித்துடல்கள் சுடுகாடுகளில் தகனப்பட்டன அ இடுகாடுகளில் புதைக்கப்பட்டன. அதனைச் சுட்ட தகனம் அல்லது எரியூட்டல் மற்றும் புதைத்தல் போன்ற வழக்கமான சொற்கள் பாவிக்கப்பட்டன. புலிகள் அமைப்பில் வித்துடல்களை விதைக்கும் பழக்கம் ஏற்பட்ட 1991ஆம் ஆண்டிலும் "புதைப்பு" என்ற சொல்லே இச்செயலைச் சுட்டப் பாவிக்கப்பட்டுள்ளது. விதைத்தல் தொடர்பில் புலிகளால் வெளியிடப்பட்ட முதலாவது அலுவல்சார் கட்டுரை வெளிவந்த ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏட்டில் கூட "புதைப்பு" என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது! எவ்வாறெயினும் "விதைப்பு" என்ற சொல்லின் பாவனை தொடங்கப்பட்ட காலத்தையும் அறியமுடியவில்லை. (தொடரும்) ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  4. 1986ம் ஆண்டு புலிகளால் தாக்கப்பட்டு சேதமடைந்த 4 கடற்கலங்கள் தொடர்பான தகவல் சேர்க்கப்பட்டுள்ளது
  5. மட்டக்களப்பு காவல் நிலையத்திற்குள் கைக்குண்டை வீசும் பச்சை வரி அணிந்துள்ள புலிவீரனொருவன். 1990

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.