Everything posted by நன்னிச் சோழன்
-
thevar anna (1).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
sornam-2.webp
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
thevar anna (3).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
1989 பகை வரவை அவதானிக்கின்றனர் புலிவீரர்
- 382 replies
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
-
ராஜபக்சே திருமாவளவன் (5).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
ராஜபக்சே திருமாவளவன் (4).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
ராஜபக்சே திருமாவளவன் (3).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
ராஜபக்சே திருமாவளவன் (2).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
ராஜபக்சே திருமாவளவன் (1).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
வீரவேங்கை சிந்து
வடமாகாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான தெல்லிப்பளை யா/ மகாஜனாக் கல்லூரியின் மாணவனான சரவணபவன் தரம் பத்தில் கல்வி கற்கும் போதே மாணவர் அமைப்பில் இணைந்ததின் மூலம் தனது தாய்நாட்டுக்கான விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தான். பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களில் தனது வகுப்பில் எப்போதும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று முதலாவது அல்லது இரண்டாவது தரநிலையைத் தட்டிச் செல்லுவான். கற்றல் செயற்பாடுகளில் மட்டுமல்ல விளையாட்டு ஓவியம் வரைதல் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினான். அத்துடன் முதலுதவிப் பயிற்சிகளும் பெற்று அவற்றிலும் சிறந்து விளங்கி எல்லாவற்றிலும் முன்னணி மாணவனாகத் திகழ்ந்தான். வீரவேங்கை சிந்து (சரவணபவன் ரகுநாதன்) உடுவில் சுன்னாகம். பிறந்த திகதி – 11.07.1974 வீரமரணம் – 25.02.1991. தாய் தந்தைக்கு குலம் தளைக்க வந்த ஒரேயொரு செல்வ மகனாக பிறந்து வளர்ந்த சரவணபவனின் குடும்பநிலையானது எந்தக் குறையுமற்ற நல்ல வசதிவாய்ப்பைக் கொண்ட பாரம்பரியமிக்கதாக அமைந்திருந்தது. தந்தையார் ரகுநாதன் அரசாங்க உதவி வைத்திய அதிகாரியாகவும் தாயார் அரசாங்க ஆசியராகவும் பணி புரிந்திருந்தனர். இவர்களது பணிகள் பெரும்பாலும் சிங்கள மொழி பேசும் மாகாணங்களிலேயே அமையப் பெற்றதனால் சரவணபவன் ஆண்டு 3 வரை தனது ஆரம்பக் கல்வியை சிங்கள மொழி பேசும் பிரதேசங்களிலேயே கற்க வேண்டிய தேவை இருந்திருந்தது. ஆனால் தமிழ் மீது பற்றுக் கொண்டிருந்த அவனது பெற்றோர் தமது ஒரேயொரு மகனின் பிரிவையும் பொறுத்துக் கொண்டு அவனது எதிர்கால தரமான கல்விக் கற்கை நெறிக்காக வலிகாமத்தில் யாழ். தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய சிறிய தாய், சிறிய தந்தையினரிடம் அனுப்பி வைத்தனர்.இதன் காரணத்தினால் தான் அவனுக்கு தெல்லிப்பளை மகாஜனா மாதாவிடம் கல்விகற்கும் சிறந்ததொரு சந்தர்ப்பம் அமைந்தது. 1987 இல் தியாகி திலீபனின் வரலாற்றுப் பதிவுத் தியாகம் அந்தச் சிறுவனின் மனதில் ஆழ வேரூன்றியதன் காரணமாக அவனது மனதில் புரட்சித்தீ கொழுந்து விட்டெரிந்தமை அப்போதே அவனது உரையாடல்கள் மூலம் இனங்காணக் கூடியதாக இருந்தது. 1989 இல் அவனது தந்தையார் இயற்கை மரணமெய்தினார். தாயாரும் சிங்களமொழி பேசும் பிரதேசத்தில் பணி புரிந்தமையினால் தந்தையை இழந்த நேரத்தின் பிறகும் அவனது தாயாருடன் ஒன்றாக வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் 1990 ஆம் ஆண்டு தை மாத முற்பகுதியில் வலிகாமம் இளவாலைப் பிரதேசத்தில் “ஐயன் முகாமில் ” தன்னை ஒரு முழுநேரப் புலிப் போராளியாக இணைக்கக் கோரிச் சென்று பின்னர் செம்மலை – நாயாறு பயிற்சிப் பாசறையில் ஆரம்பப் பயிற்சியைப் பெற்று “சிந்து” எனும் பெயருடன் தனது A. K 47 சுடுகலனை முதுகில் சுமந்தபடி பெருமிதத்துடன் தனது தாயாரைச் சந்தித்தான். துப்பாக்கியுடன் வந்த தனது செல்ல மகனைப் பார்த்து அரண்டு போன தாயிற்கு நம்பிக்கையையூட்டி அவரின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டதுடன் தனது பாட்டனாரின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டவன் மண்கிண்டி மலைச் சமர் போன்ற தான் பங்குபற்றிய சமர்களைப் பற்றி நகைச்சுவை கலந்த வீராப்புடன் எடுத்துக் கூறி தனது தாயினதும் மற்றைய உறவினர்களினதும் பயத்தினைப் போக்கினான். செம்மலைப் பாசறை வாழ்க்கையின் போது எமது விடுதலைப் போராட்ட அமைப்பின் கட்டளைப்படி மருத்துவப்பிரிவுடன் இணைந்து விழுப்புண்ணடைந்த, சுகவீனமுற்ற போராளிகளுக்காகக் காத்திரமான பணி புரிந்தான்.போர் முன்னரங்கப்பகுதிகளில் சுடுகலனை ஏந்தியபடி அந்த இளம் போராளி விழுப்புண்ணடைந்த போராளிகளை மிகவும் பாதுகாப்பாக மீட்டு மருத்துவ முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சையளிப்பதில் தன்னையும் கவனியாது முன்னின்று உழைத்தான். எல்லாப் போராளிகளைப் போலவே அவனும் மற்றைய போராளிகளையும் தனது உடன்பிறப்புகள் போல கருதி தனக்கு தாயாரினால் வழங்கப்படும் அனைத்துப் பொருட்களையும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்வான்.அப்படி ஒரு சம்பவம் அவனது தாயாரினால் நினைவு கூரப்பட்டது. ஒருமுறை அவன் மட்டுவில் பகுதியிலுள்ள மருத்துவப்பிரிவு முகாமில் பணி புரிந்து கொண்டிருந்தபோது தாயாரினை வந்து சந்தித்து விட்டுப் போகும் போது அவனது தாயாரிடம் கேட்டு தனது முகாமிலுள்ள அனைத்துப் போராளிகளுக்கும் தாராளமான அளவுக்கு போதுமான உணவுப்பொருட்களை அவரைக் கொண்டு தயாரித்துக் கொண்டதுடன் அப்போது காணப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணத்தினால் போராளிகளுக்கு தலைக்கு வைப்பதற்கு எண்ணெய் போதுமான அளவு வழங்கப்படாத காரணத்தினால் தனது தாயாரிடம் கேட்டு அனைத்துப் போராளிகளுக்கும் போதுமான அளவுக்கு நல்லெண்ணெயையும் வாங்குவித்து அனைவருக்கும் வழங்கினான். விழுப்புண்ணடைந்த போராளிகளை ஒரு தாயைப் போன்ற மகிழ்வுடன் தலைக்கு எண்ணெய் தேய்த்து முழுகச் செய்து உணவூட்டுவான். மானிடர்கள் அந்த இளம் போராளியிடமிருந்து தான் பாச உணர்வைக் கற்றுக் கொள்ள வேண்டும். அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக விளங்கிய மேஜர் செங்கதிர், டொமினிக் அண்ணா, ஜவான் அண்ணா , மூர்த்தி மாஸ்டர், தயா மாஸ்டர் போன்ற தளபதிகள், பொறுப்பாளர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய செல்லப்பிள்ளையாக விளங்கினான். அவனது கல்வித்திறமையைக் கவனித்த அவர்கள் அவனைக் கல்வி கற்பிப்பதற்கு முயன்றும் அவன் அதனைத் தவிர்த்து போர் முன்னரங்கப் பகுதிகளில் பணியாற்றுவதிலேயே முனைப்பாக நின்றான். அவனது களப்போராட்டப் பணியில் முக்கியமானது யாழ் கோட்டை விடுவிப்புச் சமர். அங்கு போர் முன்னரங்கப்பகுதியில் தன்னுயிரையும் பாராது எதிரியை எதிர்த்து ஓர்மத்துடன் சமராடியபடியே விழுப்புண்ணடைந்த போராளிகளையும் பாதுகாப்பாக மீட்டெடுத்து மருத்துவ முகாமுக்கு கொண்டு சென்று காப்பாற்றி தன் பணியினைக் காத்திரமாக ஆற்றியிருந்தான் சிந்து. தன் சகபோராளிகளில் பேரன்பைக் கொண்டிருந்த சிந்து மக்களுடன் பழகுவதிலும் மிகவும் கண்ணியமானவனாகவும் ஆளுமையுடயவனாகவும் பொறுப்பாளர்களினால் இனங் காணப்பட்டான். இதன் காரணத்தினால் 1991 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அரசியல் பரப்புரைக்காக மாவீரர் மேஜர் செங்கதிர் அவர்களுக்கு உதவியாளனாக எமது அமைப்பால் வன்னிப்பகுதிக்கு அனுப்பப்பட்டான். அங்கு செல்ல முதல் தனது தாயாரிடமும் பாட்டனாரிடமும் சென்று ஆசீர்வாதம் பெற்று பிரியாவிடை பெற்றுக் கொண்டான்.அப்போது அவனும் அறிந்திருக்கவில்லை தனது தாயாரையும் பாட்டனாரையும் சந்திப்பது இதுவே இறுதித் தடவை என்பதை… அவனது தாயாரும் அறிந்திருக்கவில்லை தனக்கென்றிருந்த ஒரேயொரு உயிர் சொத்தான ஆருயிர் மகனைக் காண்பது இதுவே இறுதி என்பதை…. வன்னிப் பகுதிக்குச் சென்ற சிந்து மேஜர் செங்கதிருடன் அரசியல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கு பற்றி மக்களுக்கு எமது போராட்டத்தின் உண்மைத் தன்மையையும் முக்கியத்துவத்தையும் அழகுற எடுத்துக் கூறி மக்களின் மனங்களில் எமது போராட்டம் பற்றிய தெளிவை உணர வைப்பதில் பெரும் பணியாற்றினான். பின்பு எமது அமைப்பினால் மேஜர் செங்கதிரையும் அவனையும் மீண்டும் யாழ் நோக்கி வருமாறு பணிக்கப்பட்டதற்கு அமைவாக யாழ் நோக்கி தாண்டிக்குளம், ஓமந்தைப் பகுதிகளினூடாக உந்துருளியில் இரவுப் பயணத்தை மேற்கொண்டான். மீண்டும் தனது தாய், பாட்டனாரையும் சக போராளிகளையும் சந்திப்பதில் பெருமகிழ்வு கொண்டு உற்சாகத்துடன் புறப்பட்ட சிந்து அங்கு தனது உயிருக்கு பேராபத்து காத்திருப்பதை உணரவில்லை. தனது பொறுப்பாளரான மேஜர் செங்கதிரை பாதுகாப்பாக கொண்டு வருவதில் முழுக் கவனத்தையும் செலுத்தியபடி சிந்து மன்னார் கல்மடு காட்டுப் பகுதியில் கும்மிருட்டில் அஞ்சாது தனது உந்துருளியை செலுத்திக் கொண்டிருந்தான். இருட்டிலே காட்டுப் பாதையிலே யாழ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது இராணுவத்தினரின் திடீர் வழி மறிப்புத் தாக்குதலுக்கு உள்ளாகி தீரமுடன் போராடி தாம் உயிருடன் பிடிபடக் கூடாது என்ற எமது அமைப்பின் கொள்கைப்படி சயனைட் மருந்தினை அருந்தி சிந்துவும் அவனது பொறுப்பாளரான மேஜர் செங்கதிரும் வீரமரணத்தினைத் தழுவிக் கொண்டார்கள் . அவர்களது வித்துடலும் கிடைக்கப்படவில்லை. சிறிலங்கா இனத்துவேச இராணுவத்தினால் அவர்களது வித்துடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன. சிந்துவினது விடுதலைப் போராட்ட வீரவரலாறு விடைகாணா விடுகதையானது. இந்த இளம் புலிவீரன் சிந்து தனது இளம் வயதிலேயே தனது தாய் நாட்டிற்காக தன் இன்னுயிரீந்து கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் ” நினைவுக்கல் 500 ” இல் வீரவேங்கை சிந்துவாக தன்னைப் பதிவு செய்து கொண்டு எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரவரலாறு ஆகினான். தாய் நாட்டுக்காக தனது ஒரேயொரு தனயனையீந்த அவனது தாயாரும் தற்போது தனிமரமாக தனது வீர மைந்தனின் நினைவுகளைச் சுமந்தபடி ஒரு வீரத்தாயாக தனது காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் தாயைப் போன்ற எத்தனையோ வீரத்தாய்கள் எமது போராட்ட வரலாற்றில் தமது வரலாற்றைப் பதித்துச் சென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. -நிலாதமிழ். குறிப்பு :- இவ் நினைவுப் பகிர்வுக்கு நினைவுக் குறிப்புகளைத் தந்து உதவியவர் வீரவேங்கை சிந்துவின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆமியிட்ட மட்டும் பிடிபட்டிராதையுங்கோ – பிரசன்னா அண்ணா
சுகந்திரபுரம் சுடுகாடாய் எரிந்து கொண்டிருந்தது எறிகணைகள் கண் மூடித்தனமாக விழுந்து வெடித்தது. எரிபொருள் களஞ்சியங்கள் தீப்பற்றி எரிந்தது.அங்கு இயங்கிய எமது தற்காலிக மருத்துவ மனையும் இடம்பெயர்ந்து போவதற்காகன ஆயத்தங்கள் நடந்தன. எனது குழந்தைகள் எனது அப்பாவுடனும் எனது மாமாவின் வீட்டாரின்(மேஜர் அரி மாறனின் தாய் தந்தையுடன்) பாதுகாப்பிலும் இருக்கின்றனர். நானும் அங்கு செல்கின்றேன் சுகந்திர புரம் பிரதான வீதி. பகுதியில் இருந்து சற்று உள்நோக்கி இருந்த எமது இருப்பிடத்தில் பிரசன்னா அண்ணாவின் மனைவியும் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். தொடர் இடப்பெயர்வுகளால் அந்த காணியில் தறப்பாள் கொட்டில்களைப் போட்டுக் கொண்டிருந்த 10 மேற்பட்ட குடும்பங்கள் அரையும் குறையுமா தறப்பாள் கொட்டில்களை பிடுங்கி இடம்மாறிவிட்டதால் அரை நாள் பொழுதில் இடம் காலியாகியது. மக்கள் வள்ளிபுனம் பகுதியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள் நாங்கள் குழந்தைகளை வங்கருக்குள் இருத்தி விட்டு வாசலில் இருக்கின்றோம் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க்க தொடங்க இனி இருக்க முடியாது ஆமி கிட்ட வந்திட்டான் என்று ஊகிக்க முடிந்தாலும் தொடர்ந்து விழுந்து கொண்டே யிருந்த எறிகைணகள் வெளியில் குழந்தைகளை அழைக்க அச்சமூட்டியது. ஆளையாள் தெரியாத மம்மல் இருட்டில் எங்கு பார்த்தாலும் தீ பற்றி எரிந்து கொண்டேயிருந்தது. அப்போது தோளில் தொங்கும் துப்பாக்கியுடன் எங்கள் முன் பிரசன்னா அண்ணா வந்து நின்றார் பிரசன்னா அண்ணா வின் குழந்தைகள் அவரின் குரலைக்கேட்டு “அப்பா என்றார்கள் குதுகலமாய். வங்கருக்க இருங்க” வரவேண்டாம் என்றார் . அவரது மனைவி எதுவும் பேசாது மெளனமாய் இருந்தார். நானும் அப்படியே அவரையே பார்த்தேன் எதையாவது களநிலை சொல்வார் என்று .. ஆனால் அவரிடம் சொல்வதற்கு அன்று நல்ல செய்தியில்லை…. “நின்ற நிலையிலையே கண்கள் கொப்பளிக்க ஏன் இன்னும் இருக்கிறிங்கள் வெளிக்கிட்டு போங்கோ என்றார். “ஆமி கிட்ட நிக்கிறான்” இன்னும் ஒன்றையும் எனக்கும் அவரது மனைவிக்கும் தெளிவாக சொன்னார். “ஆமியிட்ட மட்டும் பிடிபட்டிராதையுங்கோ ஆமி யை கண்டாலும் ஓடுங்கோ” என்று அவசரமாக சொல்லிவிட்டு தன் கடமைக்கு திரும்பிவிட்டார் நாங்களும் உடனடியாக கால்கள் போன திசையில் குழந்தைகளுடன் அவ்விடத்தைவிட்டு நடந்தோம். இது தான் நான் அவரைப்பார்த்த இறுதி நாளும் குரலும் இன்னும் அப்படியே ஈரமாய் அப்பிக் கிடக்கிறது பிரசன்னா அண்ணா ஒரு உறவினராக இருந்தாலும் போராட்ட களங்களில் தான் நான் அதிகமாக அறிந்திருக்கின்றேன் அடிக்கடி அவரை சந்தித்துக் கொள்வது நான் வேலை செய்த மருத்துவமனையிலும் மாவீர்துயிலும் இல்லத்திலும் தான் அதை விட களமுனையிலும் அவரது திறமைகளை பார்த்து வியந்திருக்கின்றேன். ஒரு நாள் இரவு பத்து மணி இருக்கும் வன்னேரியில் இயங்கிய நீலன் மருத்துவமனைக்கு அவரினது துறை சேர்ந்த காயமடைந்திருந்த போராளி ஒருவரை சந்திக்கவந்திருந்தார். அப்போது இரவு காயமடைந்து வந்த போராளிக்கு 0_ மைனஸ் குருதிவகை தேவைப்பட்டது . எங்களிடம் வாகன வசதியும் இருக்கவில்லை எங்களிடம் இருந்த இரு குருதி பைகளும் ஏற்றி முடிவதற்குள் இன்னுமொன்று வேணும் என்ன செய்வது என்று ஒவ்வொருவராகா தேடிக்கொண்டிருந்தேன் கடவுளைப்போல் பிரசன்னா அண்ணா வந்து இறங்கினார் ஓடிப்போய் நிலமை சொல்லி உதவிகேட்டேன் .பதில் கூட சொல்லாமல நின்ற இடத்திலிருந்து அண்மையில் இருந்த அவரது முகாங்களிற்கு தொடர்பு கொண்டு 0 மைனஸ் குருதியிருக்கிறார்களா என்று கேட்டு ஒருவர் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியபின் என்னிடம் வந்து சொன்னார் .(போராளிகளிற்கு முன்னரே குருதிவகை தெரியும்) “நான் ஒரு ஒருவரை கொண்டுவாறன்” என்று வந்த வேலையை விட்டு திரும்பி சென்று அந்த போராளியை அழைத்து வந்தார் இது அவரது பணி இல்லாவிட்டாலும் ஒவ்வொரு போராளின் உயிரின் பெறுமதி அறிந்தவர்.இப்படி காலம் தேவை அறிந்து பணி செய்பவன் போராளியாக தனித்துவம் அடைகின்றான். பல தடவைகள் விழுப்புண்ணடைந்து மீளக் களம் சென்ற வீரன். நெடிய உயரிய தோற்றமும் எப்போதும் குறு குறு என விழித்திருக்கும் புலணாய்வு கண்களும் தனியாக கம்பீரம் கொடுக்கும் . எப்போதும் மரணத்திற்குள் வாழ்ந்தவன் மரணம் அவனைக் கண்டு அஞ்சிய நாட்கள் பல உண்டு . எப்போதும் எதையோ சாதிக்க துடிப்பவன் பல்துறை ஆளுமையாளன் போர்கலையில் மட்டுமன்று விளையாட்டிலும் சிறந்த வீரன். இவனைப்பற்றி வெளியில் தெரியாத பக்கங்கள் பல உள்ளன. இவனின் இலட்சிய உறுதியின் சாட்சியாய் எமது தேசத்தையும் மக்களையும் காக்க முள்ளிவாய்க்காலில் காவியமானான் இன்னும் தொடரும் நினைவுகள் …. மிதயா கானவி 17.05.20
-
இயக்கத்தின் வேலைகளை விடுதலைத்துடிப்புடன் செய்தவர் மேஜர் ஜொனி
அந்த நீண்ட சண்டை முடிந்த போது…… எங்கள் ஜொனி…… அவன் வரவில்லை; முதல்நாள் எம்மிடம் அவன் சொல்லிவிட்டுப் போனதைப் போல இன்றுவரை அவன் வரவேயில்லை… எங்களால் என்றுமே மறக்க முடியாத அந்த இருள் சூழ்ந்த நாட்கள். இங்கே “அமைதி தேடுகின்றோம்” என வந்து – அக்கிரமங்கள் புரிந்த இந்தியத் துப்பாக்கிகளின் ஆட்சிக்காலம். வன்னியில் கருப்பட்ட முறிப்பு என்ற சிற்றூர்ப் பொறுப்பாளனாக ஜொனி இருந்தான். ஒரு நாள் அப்போதைய எமது பிரதான போக்குவரத்துச் சாதனமாக இருந்த மிதி வண்டியில் போய்க்கொண்டிருக்கிறான். அவன் சென்றுகொண்டிருந்த பாதை யாழ்ப்பாணப் பிரதான வீதியில் சந்திக்கின்ற மூலை. மிதிவண்டி வளைவில் திரும்பவும் பதுங்கியிருந்த இந்தியப் படையினர் அவன் மீது பாயவும் சரியாக இருந்தது. எதிர்பாராத தாக்குதல் – கண்ணிமைப்பொழுதிற்குள் அவன் செயற்பட்டான். தன்னைப் பிடிக்க வந்த படையினர் மீது வண்டியைத் தூக்கி வீசினான்; அருகில் பதுங்கியிருந்தவர்கள் மீது கைக்குண்டுகளை வீசினான். தப்பி விடுகிறான் ஜொனி. இந்தச் சம்பவத்தில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இப்படியாக அந்த ஊரில் ஜொனி அரசியல் வேலை செய்த நாட்களில் அடிக்கடி இந்தியப் படையினரைச் சந்தித்திருக்கிறான். அவை ஒவ்வொன்றும் மயிர்க்கால்களைக் குத்தி நிமிர வைக்கும் சம்பவங்கள். அப்போதெல்லாம் அவன் ஒரு புலிவீரனுக்கே இருக்கக்கூடிய சாதுரியத்துடன் தப்பிவிடுவான். அந்த ஊரில் மிகவும் நெருக்கடியான அந்தக் காலகட்டத்தில், கடினமான ஒரு சூழ்நிலைக்குள் நின்று அவன் போராட்டப் பணிகளை ஆற்ற வேண்டியிருந்தது. இந்தியப் படையினரும், இந்திய அடிவருடிகளும் எங்கும் நிறைந்திருந்த அந்த நாட்களில் கிராமங்களிலோ, நகரங்களிலோ அரசியல் வேலை செய்வதென்பது ஒரு சுலபமான காரியமாக இருக்கவில்லை. காடுகள், ஆறுகள், குளங்கள், வயல்வெளிகளினூடாக மைல் கணக்கான தூரங்களிற்கு அவனது கால்கள் நடக்கும். தனது பொறுப்பாளர்களால் ஒப்படைக்கப்படும் வேலைத் திட்டங்களை, இவ்வாறாகச் சிரமப்பட்டுத்தான் அவன் செவ்வனே செய்து முடிப்பான். கருதப்பட்ட முறிப்பு என்ற அந்த ஊர், எங்களது போராளிகளின் அணிகள், பொருட்கள், ஆயுதங்கள், ஆவணங்கள் என்பவற்றோடு முக்கிய தகவல்களையும் பரிமாறுகின்ற பிரதான இடங்களுள் ஒன்றாக இருந்தது. போராட்டத்தின் பெறுமதிமிக்க இவ்வகையான வேலைகளுக்காக, இந்த ஊருக்கு வருகின்ற போராளிகளை ஜொனி மிகுந்த இடர்களுக்கு நடுவில் பாதுகாத்துப் பராமரித்திருக்கிறான். இந்தியர்கள் வளைத்து நிற்கும் போதே கிராமத்துக்குள் நுழைந்து, போராட்டக் கருத்துக்களடங்கிய சுவரொட்டிகளை ஒட்டிவிட்டோ, பிரசுரங்களை விநியோகித்துவிட்டோ மிகச் சாதுரியமாகத் தப்பி, அவர்களின் முற்றுகைக்குள்ளிருந்து ஜொனி வெளியேறிய சம்பவங்கள் பல உண்டு. மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள், புத்திஜீவிகள் எனச் சமூகத்தின் எல்லா மட்டத்தினருக்குள்ளும் நுழைந்து, ஜொனி போராட்டக் கருத்துக்களை விதைத்தான். இதன்மூலம் இளைஞர்களையும், பெண்களையும் பெருமளவில் போராட்டத்தோடு இணைத்தான். 1989 ஆம் ஆண்டு எமதுதேசம் மாவீரர் நாளை முதற்தடவையாக அனுஸ்டித்த போது, கருப்பட்ட முறிப்புப் பகுதியில் அதனைச் சிறப்பாக நடத்தினான். தம்மை நோக்கி இந்தியர்களின் துப்பாக்கி முனைகள் நீண்டிருந்தபோதும், அந்த மக்கள் உணர்வுபூர்வமாக அந்நாளை அனுஸ்டித்தனர். அந்த அளவுக்கு ஜொனி அவர்களோடு இரண்டறக் கலந்து, அவர்களைப் போராட்டத்தின்பால் ஈர்த்திருந்தான். அவனையும், தோழர்களையும் ஆபத்து நெருங்கி வந்த பல சந்தர்ப்பங்களில், அவன் நேசித்த இந்த மக்கள் தான் அவர்களுக்குக் கவசமாக நின்றிருக்கின்றார்கள். 1990 இன் ஆரம்பம். இந்தியர்கள் எங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். இவனது திறமையான செயற்பாடு காரணமாக இவன் மல்லாவிப் பிரதேசப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். போர் நின்றிருந்த அந்த நாட்களில் மக்களிடையில் அரசியல் வேலைத்திட்டங்கள் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட போது, ஜொனி அவ்வேலைகளைச் சிறப்பாகச் செய்துடித்தான். கிராம அபிவிருத்தி வேலைகள், சிறுவர்களுக்குக் கல்வி வசதிகள் செய்தல், பெண்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் என இவனது செயற்பாடுகள் வளர்ந்தன. அந்த நாட்களில் சின்னக் குழந்தைகள் முதல் ஆச்சி அப்புவரை, மக்கள் ஒவ்வொருவரோடும் இவன் நெருக்கமான உறவுகளை வளர்த்திருந்தான். அவர்களால் என்றுமே ஜொனியை மறந்துவிட முடியாத அளவுக்கு அது இருந்தது. 1990இன் நடுப்பகுதி. சிறீலங்காப் படையினருடன் இரண்டாவது ஈழப் போர் ஆரம்பித்தது. சண்டைக்குப்போக வேண்டும் என்ற ஜொனியின் ஆவலைப் பூர்த்திசெய்யும் களமாக, அது அமைந்தது. மாங்குளம் இராணுவ முகாம்மீதான முதலாவது தாக்குதல் தொடுக்கப்பட்டது. எனினும்இ வெற்றியீட்டமுடியாமல் போய்விட்ட அந்தத் தாக்குதலின் போது, ஜொனி காலில் காயமடைந்தான். காயம் மாறி, வட்டக்கச்சிப் பிரதேசப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டுப் பணியாற்றிக்கொண்டிருந்த போதும், ‘என்றைக்காவது ஒரு நாள் இந்த முகாமை நிர்மூலமாக்கியே ஆகவேண்டும்.’ என்ற வேட்கையே, அவனுள் விஸ்வரூபம் எடுத்திருந்தது. அந்த நாளும் வந்தது. இரண்டாவது தடவையாகவும், இறுதியானதாகவும் மாங்குளம் இராணுவ முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஜொனி பெரும் பங்காற்றினான். அந்தத் தாக்குதலின் வெற்றி ஜொனியைப் பூரிப்படைய வைத்தது. இந்தத் தாக்குதல் முடிந்து சிறிது காலத்தின்பின், அவனது நீண்டநாள் கனவு நனவானது. அரசியல் வேலையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு அவன் சமர்முனைக்கு அனுப்பப்பட்டான். அந்த நாட்களில் அவனைக் காண்கின்றபோது ஓர் ஆத்மதிருப்தி அவன் முகத்தில் தெரிந்தது. ஒரு சின்னக்குழந்தை மிகமிக ஆசையோடு எதிர்பார்த்த ஒரு பொருளை வாங்கிக்கொடுக்கும் போது, அக் குழந்தைக்கு ஏற்படும் மகிழ்வோடு, அவன் சண்டைக் களங்களில் உலாவினான். எவ்வளவு ஆர்வத்தொடும் திறமையோடும் அவன் அரசியல்துறை வேலைகளைச் செய்தானோ, அதைவிட அதிக ஆர்வத்தோடும் அவன் படைத்துறை வேலைகளில் ஈடுபட்டான். அரசியல் வேலைகளைச் செய்யும்போது, ஒரு சிற்றூர்ப் பொறுப்பாளனாக இருந்து பின்னர் கிளிநொச்சி மாவட்ட அரசியல் பொறுப்பாளனாக வளரும் அளவுக்கு அவனுள் இருந்த ஆற்றல், சண்டைகளின் போதும் வெளிப்படத் தவறவில்லை. நீண்டகாலமாக அரசியல் வேலை செய்துகொண்டிருந்த அவனுக்கு, அந்தச் சண்டைக்களங்கள் புதிய உற்சாகத்தைக் கொடுத்தன. போர் அரங்கிலே ஒரு முன்னணிச் சண்டைக்காரனாக நின்று…… ஓய்வின்றி உறக்கமின்றி அவன் போரிட்டான். ஜொனி 1969ஆம் ஆண்டு, ஓகஸ்ட் திங்கள் 19ஆம் நாள் பிறந்தான். அப்பாவும் அம்மாவும் இவனுக்குச் செல்லமாக இட்ட பெயர் ஜெகதீஸ்வரன். குடும்பத்தில் 3 ஆண்களும் 4 பெண்களுமாக 7 உடன்பிறப்புகளுக்குப் பின்பு, இவன் பிறந்தான். இவனுக்குப் பின்பு ஒரு தங்கை. எவருடனும் அதிகம் பேசாத சுபாவமுடைய ஜொனி, ஆடம்பர வாழ்வு முறைக்கும் புறம்பானவனாக இருந்தான். மீசாலை இவனது ஊர். வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற இவனுக்கு, சமூகத்திற்குச் சேவை செய்ய வெண்டும் என்ற சிந்தனையும், ஆர்வமும் இயல்பாகவே இருந்தன. சின்ன வயதிலிருந்தே பொது வேலைகளில் ஈடுபடுவான். மீசாலையின் புழுதி படிந்த தெருக்களில், வயல் நிலங்களில், தோட்ட வெளிகளில்…… எங்கும் அவனது சேவை பரந்திருந்தது. பாடசாலையில் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும் திறமைமிக்கவனாக ஜொனி இருந்தான். அங்கு மாணவர் தலைவனாக இருந்த அவன், திறமையான செயற்பாடுகளுக்காகப் பரிசுகளும் பெற்றிருக்கிறான். இந்திய இராணுவம் எமது தாயகத்தை ஆக்கிரமித்திருந்த அந்தக் காலம், இவனுக்குள் ஒரு புயலையே வீசச் செய்தது. இயல்பாகவே மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்ற சுபாவமுடையவனாக இருந்த ஜொனி, அன்றைய நெருக்கடியான நாட்களில், ஊரில் எமது போராளிகளுக்கு உற்ற துணையாக நின்றான். வீட்டாரிற்கும் வெளியாட்களுக்கும் தெரியாமல், மறைமுகமாக இயக்கத்திற்கு வேலை செய்துகொண்டிருந்த ஜொனி, 1989 இன் முற்பகுதியில் போராட்டத்தோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டான். இரணைமடுவில் வன்னியின் அடர்ந்த காடுகளின் நடுவில் தனது பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறிய இவனுக்கு, எல்லாப் புலிவீரர்களுக்கும் இருப்பதைப் போல, சண்டைக்குப் போகவேணும் என்ற ஆசை இருந்தது. ஆனாலும், இயக்கம் அரசியல் வேலைகளை வழங்கியபோது, திறமையுடன் அதனைச் செய்யத் தொடங்கினான். எங்கள் தேசத்தில் 1991 ஆம் ஆண்டின் சிறப்பான நிகழ்வு அதுதான். ஆனையிறவுப் பெருஞ்சமர்…… அந்த நீண்ட சண்டைகளின்போது, ஜொனி உயிர்த்துடிப்புடன் களங்களில் போரிட்டான். அந்தச் சமரின் இறுதி நாட்களில் ஒன்று. ஒரு மாலை நேரம்; ஐந்து மணிப் பொதுழு. எங்கள் காவலரணிற்கு வந்த ஜொனி எம்மோடு மகிழ்ச்சியாகக் கதைத்துக்கொண்டிருந்தான். நீண்ட நேரம் அன்பான உரையாடல். நேரம் போனதே தெரியவில்லை. இருண்டுவிட்டதால் தனது காவலரணிற்குப் போவதற்காக எழுந்தான். தட்டுவன்கொட்டிப் பகுதியில் இவனது அரண்கள் இருந்தன. அப்பகுதியின் பொறுப்பாளனாகவும் இவன்தான் இருந்தான். எழுந்தவன், திரும்பிச் சொன்னான்…… “என்ர பொயின்ரைக் கடந்து ஆமி வாறதெண்டால் என்ர உடம்புக்கு மேலாலதான் வருவான்” அவன் சொல்லிவிட்டுப் போனபோது நாங்கள் எவருமே அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்று இரவு கடந்து மறுநாள் விடிந்து விட்டது. நேரம் ஓடியது. காலை 11 மணியை நெருங்கியபோது விமானங்கள் இரைய, குண்டுகளை அதிரச் சண்டை தொடங்கிவிட்டது. ஜொனியின் காவலரண் பகுதியை நோக்கி படை நகரத்துவங்கியது. வானிலிருந்து குண்டுகள் பொழிய, எறிகணைகள் கூவிவர, கனரக வாகனங்கள், கனரன ஆயுதங்கள் சகிதம் எதிரி மெல்லமெல்ல முன்னேறினான். அது ஒரு கடுமையான மூர்க்கத்தனமான சண்டையாக இருந்தது. தங்களில் சிலர் பிணங்களாய்ச் சரிய, எதிரி அங்குலம் அங்குலமாக நகர்ந்து வந்தான். அந்த நீண்ட சண்டை முடிந்த போது…… எங்கள் ஜொனி…… அவன் வரவில்லை. இன்றுவரை அவன் வரவேயில்லை; முதல்நாள் எம்மிடம் அவன் சொல்லிவிட்டுப் போனதைப் போல ஆனால், அவனோடு பழகிய அந்த இனிய நாட்களின் நினைவுகள் என்றும் எம்மோடு பசுமையாய் வாழும். இந்த இலட்சியப் பயணத்தில் அவனது நினைவுகள், எம்மோடு துணையாய் வரும். நினைவுப்பகிர்வு: நிமால். வெளியீடு – விடுதலைப்புலிகள் இதழ்
-
லெப் கேணல் இசைவாணன்
தமிழீழ விடுதலைப்போராட்டம் பல போராளிகளின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டது. எங்கள் தேசத்தின் விடியலுக்காக தமது வாழ்க்கையினை தியாகம் செய்த எம் போராளிகள் ஒவ்வொருவரும் எதோ ஒருவகையில் பெரும் தியாகத்தின் உச்சத்தை தொட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் சுரேன் என்றும் இசைவாணன் என்றும் அழைக்கப்படும் போராளியும் ஒருவராகிறார். தமிழீழ விடுதலைக்காக ஒரு காலை கொடுத்துவிட்டு அதற்கு மாற்றீடாக ஒற்றைச் செயற்கை காலோடு தன் வாழ்க்கையை தமிழீழ விடுதலைக்காக கொடுத்த உன்னதமான வேங்கை இசைவாணன். இன்று நாம் இழந்து விட்டோம் என்ற உண்மை ஏற்க முடியாது தொண்டைக்குள் சிக்குண்டு கிடக்கிறோம். ஒற்றைக்கால் என்பது சில வேளைகளில் அவர் நடக்கும் போது புலனாகினும் அவரின் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் அதை வெளிக்காட்டியதே இல்லை. இதை உணர்த்தக் கூடிய ஒரு நிகழ்வாக கீழ் வருவதை குறிப்பிடலாம். 1991 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் குறிபார்த்து சுடுதல் (Sniper) பயிற்சிக்காக ஒரு அணி தயாராகிய போது தன்னை அதில் இணைக்கும் படி பல முறை தலமையை நச்சரித்து கொண்டிருந்தார். ஆனால் அந்த பயிற்சி கடினமானதாக இருக்கும் என்ற நிலையில் அவரின் ஒற்றைக்கால் பெரும் குறையாக பார்க்கப்பட்டு உள்வாங்கப்படாது தவிர்க்கப்பட்டார். இதை அறிந்த இசைவாணன் தனது தளபதியோடு பலமுறை சண்டையிட்டு தலைவரிடமும் பலமுறை வேண்டுதல் செய்து அந்த அணிக்குள்ளே சென்றார். பல மாத பயிற்சிகள், மிகக் கடினமான பயிற்சிகள். ஆனாலும் அவை அத்தனையையும் பொடியாக்கி உடைத்தெறிந்து வெற்றி பெற்றார். இறுதி பயிற்சி நடந்து முடிந்து போட்டிகள் நடந்தன. அப்போது குறிபார்த்து சுடுதல் போட்டி நடந்த போது கொடுக்கப்பட்ட அனைத்து ரவைகளையும் இலக்கினில் சரியாக பொருத்தி அனைவரிலும் சிறந்தவனாகவும் முதன்மையானவனாகவும் வந்த அந்த பொழுதுகளை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது. அன்றில் இருந்து விடுதலைப்புலிகளின் பதுங்கிச்சுடும் அணிப் போராளியாக பயணித்தார். இந்தக் காலத்தில் தேசியத்தலைவரின் சிந்தனையில் உருவாகியது தமிழீழ மருத்துவக் கல்லூரி. 1982 நவம்பர் 27 ஆம் நாள் ஆண்டு தன் மடியினில் தலைவைத்து முதல் வித்தாக வீழ்ந்த சங்கரை போல இனி வரும் காலங்களில் எம் போராளிகள் சீரான மருத்துவக் காப்பு இல்லாமல் வீரச்சாவடையக் கூடாது என்ற தமிழீழ தேசிய தலைமையின் உன்னத நோக்கத்தின் பின்னால் உருவானதே ” தமிழீழ மருத்துவக்கல்லூரி”. இந்தக் கல்லூரி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் அழகையா துரைராஜா அவர்களின் வழிகாட்டலில் , தமிழீழ மருத்துவக்கல்லூரியின் பீடாதிபதி ஜெயகுலராஜா, பேராசிரியர் சிவபாலன், மற்றும் வேறு பல பேராசிரியர்களின் ( அவர்களின் பெயர்கள் இப்போது வெளியில் குறிப்பிட முடியவில்லை) முழுமையான ஆதரவோடு உருவாக்கம் பெறுகிறது. அப்போது பல பிரிவுகளில் இருந்து போராளிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அதில் ஒரு போராளி இசைவாணன். பதுங்கிச்சுடும் அணியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட இசைவாணன் ஒரு மருத்துவப் போராளியாக கல்லூரிக்கு அனுப்பப் படுகிறார். அவ்வாறு மருத்துவப் பிரிவில் வளர்த்தெடுக்கப்பட்ட பெரு வீரர்களில் ஒருவன். சண்டைக் களங்களை தம் ஆளுகைக்குள் வைத்திருக்கும் ஒவ்வொரு போராளிகளுக்கும் மட்டுமல்ல மருத்துவ தேவைகள் உணரப்பட்ட அத்தனை இடங்களிலும் மக்களின் சேவையாளனாக, தன்னை நிலை நிறுத்திய ஒரு இலட்சியவாதி. போராளி மருத்துவராக பயணிக்கத் தொடங்கி சில காலங்கள் கழிந்த நிலையில் 1993 பங்குனி மாதம் 23 நாள் அன்று தமிழீழ மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களை தேசியத்தலைவர் கல்லூரியில் வைத்துச் சந்திக்கிறார். அங்கு பலர் இருந்தார்கள். ஆனாலும் எமது தேசத்தின் தலைமகன் “சுரேன் நீ இங்கயா இருக்கிறாய் …?’’ என பெயரைக் கூறி அழைத்து நலம் விசாரித்தது போராளி மருத்துவர் இசைவாணனைத்தான். (சுரேன் என்பது இசைவாணனின் முன்னாள் பெயர் ) அப்பிடி தலைவனின் நெஞ்சில் ஆழமாக பதிந்திருந்தவர், போராளி மருத்துவர் லெப். கேணல் இசைவாணன் தனக்கு ஒரு கால் இல்லை என்பதை உணர்ந்ததும் இல்லை, மற்றவர்களுக்கு அதை காட்டிக் கொண்டதும் இல்லை. எப்போதும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவே இருந்தார். தமிழீழ மருத்துவக்கல்லூரி என்றும் இராணுவக் கட்டுப்பாடுகள் நிறைந்ததாகவே இருக்கும். அவர்கள் விடும் சிறு தவறுகளும் தண்டனையில் தான் முடியும். அவ்வாறான தண்டனை ஒன்றில் இசைவாணனின் உறுதியை அவருடன் கூடப் பயணித்த அனைத்துப் போராளிகளும் உணர்ந்து கொண்டார்கள். எந்த நிலையிலும் கால் இல்லை என்பதைக் காரணம் காட்டி இசைவாணன் வேலைகளிலிருந்தும், கற்றலிலிருந்தும் பின்தங்கியது இல்லை. என்றும் முன்னிலை மருத்துவ மாணவனாகவே விளங்கினார். ஒரு பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தினால் மட்டுமே போதுமானதாகும். எந்த விதமான ஆளணி மற்றும் உதவிகளின்றி, அந்த முக்கியம் வாய்ந்த பணியை முடித்து பொறுப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் பண்பு நிறைந்தவர். அதற்காக பல முனைகளில் பலருடன் விவாதங்கள் என்றும் சண்டைகள் என்றும் நிறைய பின்னடைவுகளைச் சந்திப்பார். ஆனாலும் சாதுரியமான பேச்சினால் அவர்கள் மனதை வென்று பணியை முடித்திருப்பார். அவ்வாறான பெரும் சாதுரியம் மிக்க போராளி மருத்துவர். யாழ்ப்பாண மாவட்டம் சிங்களத்தின் சந்திரிக்கா தலைமையிலான, அரச படைகளால் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட போது பெரிதும் நொந்து போனார். உரிமைகளை மீட்டெடுக்க போராளியாகியவர்கள் இவரும் இவரது தோழர்களும். ஆனால் தமது கண் முன்னே தமது தாயகம் எதிரியின் கைகளுக்குள் போவதைத் தாங்கிக் கொள்ள முடியாது விக்கித்து நின்றனர். ஆனால் தேசக் கடமை இவர்களை மருத்துவர்களாக மாற்றிய தேசியத் தலைவர் உரைத்த வார்த்தைகளை நினைத்தார்கள். “ஆயுதம் தூக்கி எதிரியின் உயிரை எடுக்க வந்த உங்களை நான் உயிர் காக்கும் பனி ஒன்றுக்காக தாயாராகுங்கள் என்று விட்டிருக்கிறேன். இது பலருக்கு ஏமாற்றத்தைத் தரலாம் ஏனெனில் போராளிகள் அனைவரும் எதிரியின் கொடூரங்களை எதிர்க்கவே புலியானவர்கள். ஆனாலும் இந்தப் பணியும் எம் அமைப்புக்கு மிக முக்கியமானது என்பதை நீங்கள் மருத்துவர்களாக கற்றுத் தேர்ந்ததும் புரிந்து கொள்வீர்கள். களமுனையில் ஒரு உயிரைஎதிரியைக் கொள்வதை விட அதே களமுனையில் எமது போராளி ஒருவனின் உயிரைக் காப்பாற்றும் போது இந்த பெறுபேற்றை அறிவீர்கள் ” என்ற கருத்துத் தாங்கிய செய்தி ஒன்றை அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதைப்போலவே இப்போது தலைமையின் கட்டளைக்கு ஏற்ப வன்னிக்கு இடம்பெயர்கிறார்கள். வன்னி மண்ணில் தொடர்ந்த அவர்களது மருத்துவக் கற்கை இசைவாணனையும் அவருடன் கூட இருந்த போராளி மருத்துவர்களையும் மருத்துவத்துறையில் புடம் போட்டது. மருத்துவப் போராளிகள் கற்கைகளை கற்கும் அதே நேரம் சண்டைகளிலும் பங்குபற்ற வேண்டியவர்களாக இருந்தார்கள். அதனால் முழுமையான போர் வீரர்களாகவும் மருத்துவர்களாகவும் வாழ்ந்தார்கள் அதில் இசைவாணனும் சிறப்பான இடத்தை வகிக்கிறார். எதற்கும் அஞ்சாத நெஞ்சம் கொண்ட இசைவாணன் முதன்முதலாக ஒரு விடயத்துக்காக அஞ்சத் தொடங்கினார். எந்த வேலைக்கும் யாரிடமும் உதவி கேட்காத இசைவாணன் முதல்தடவையாக தனது வாழ்க்கைத் துணைவிக்காக நண்பனிடம் உதவி கேட்கிறார்.களத்துக்கு அஞ்சாத மருத்துவர் இசைவாணன், காதலுக்காக அஞ்சியதை அவரது தோழர்கள் அன்று கண்டார்கள். “ரதி” மருத்துவர் இசைவாணனின் மனத்தைக் கவர்ந்த பெண் போராளி. மருத்துவப்பிரிவின் முதலாவது தாதியப் பிரிவில் பயின்று ஒட்டிசுட்டானில் அமைந்திருந்த “மேஜர் அபயன்” இராணுவ மருத்துவமனைக்கு பணிக்காக வந்திருந்த போதே முதலில் இசைவாணன் கண்டிருந்தார். ஏனோ ரதியை பிடித்திருந்தது. ஆனாலும் மனதில் பயமாக இருந்தது. அமைதி காத்தார். கிளிநொச்சி எதிரியிடம் “சத்ஜெய” நடவடிக்கை மூலம் வீழ்ந்த போது “மேஜர் அபயன் ஞாபகார்த்த ” இராணுவ மருத்துவமனை மருத்துவப்போராளி அருண் தலைமையில் தோற்றம்பெறுகின்றது. மாமனிதரான வைத்தியக் கலாநிதி கங்காதரன் அவர்களால் ஒரு வயிற்றறுவைச் சிகிச்சையுடன் ஆரம்பிக்கப்பட்ட “மேஜர் அபயன்” மருத்துவமனை போராளிகளுக்கும், மக்களுக்குமான மருத்துவப்பணியில் இயங்கியது. இந்த மருத்துவமனையே முல்லைத்தீவுச் சமர் ஜெயசிக்குறு சமர்களில் எல்லாம் முக்கிய இராணுவ மருத்துவ மனையாக இயங்குகின்றது. அமைப்பின் மூத்த மருத்துவர்களான மருத்துவ கலாநிதி பத்மலோஜினி கரிகாலன் (அன்ரி), மருத்துவ கலாநிதி சூரி, மருத்துவ கலாநிதி பாலன், மருத்துவ கலாநிதி சுஜந்தன், மருத்துவ கலாநிதி அஜந்தன் ஆகியோர் அடங்கிய அணி அங்கு கடமையில் இருக்கின்றது. இந்த அணியில் ஒருவராகவே இசைவாணன் பணியில் இருந்தார். அப்போது தான் ரதி மீதான அவரது காதல் மலர்ந்திருந்தது. ஆனால் அதை வெளிப்படையாக கூற மருத்துவர் இசைவாணனால் முடியவில்லை. ஏனெனில், தனது பொறுப்புக்கு கீழ் இருக்கும் “மேஜர் அபயன்” இராணுவ மருத்துவமனையின் சத்திரசிகிச்சைக் கூடத்தில் பணியில் இருக்கும் ஒரு பெண் போராளியை தான் விரும்புவதாக கூறும் போது அவள் மறுத்து விட்டால்…? அல்லது தனது பொறுப்பாளர் தன்னைக் காதலிப்பதாக கூறுகிறார் என்று வெளியில் சொல்லி விட்டால்? போராளிகள் மத்தியில் பேசு பொருளாகி விடக்கூடிய அபாயத்தை அவர் உணர்ந்திருந்தார். அதனால் நண்பனின் உதவியை நாடினார். நண்பனின் உதவியோடு அவரது காதல் திருமணத்தில் முடிந்தது. திருமண வாழ்வு எல்லையில்லா மகிழ்வை தந்தது அந்த சந்தோசத்தின் சிகரமாக அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். இவ்வாறான அவரது மகிழ்வான பக்கங்களை மேஜர் அபயன் மருத்துவமனை தாங்கி நின்றது. இந்த நேரத்தில் “ஜெயசிக்குறு” தொடர் நடவடிக்கை மூலம் எதிரி வன்னியை இருகூறாக்கக்க முனைகையில் வன்னிப்பெருநிலப்பரப்பு வன்னி மேற்கு, வன்னி கிழக்கு என இரண்டாக பிரிந்து போனது. மாங்குளத்துக்கும் கிளிநொச்சியின் இரணைமடுச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியே இரண்டு பிரதேசங்களையும் இணைக்கும் பகுதியாக இருந்தது. இதனால் இரண்டு பிரதேசங்களுக்குமான மருத்துவ அணியின் தேவை உணரப்பட்டு ஒரு மருத்துவ அணி வன்னி மேற்கிற்கு நகர்ந்தது. அந்த அணி வன்னேரிக்குளம் பகுதியில் தமது மருத்துவக் களத்தை விரிவாக்குகின்றது. அங்கே அபயன் மருத்துவமனையில் இருந்து பிரிக்கப்பட்ட போராளிகளின் அணி மருத்துவ கலாநிதி சுஜந்தன், மருத்துவ கலாநிதி அஜந்தன் உட்பட்ட மருத்துவ ஆளணியாகி விரைந்து இயங்குகின்றது. மாங்குளத்தில் அசைவற்று நின்ற அந்த “வெற்றிநிச்சயம் (ஜெயசிக்குறு )” நடவடிக்கையில் சிங்கள படைகள் பல முறை தோல்விக்குமேல் தோல்வியடைகிறன. இந்த சண்டைகளுக்கெல்லாம் பிரதான மருத்துவ அணியாக இவர்கள் இயங்கினார்கள். இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் அதே நேரம் கிளிநொச்சியை மீட்கும் ஓயாதலைகள் -2 நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் செய்ப்பட்டு மருத்துவ அணிகள் தயாராகின்றன. மருத்துவ களநிலைகளில் போராளி மருத்துவர் லெப்.கேணல் காந்தனும், போராளி மருத்துவர் லெப். கேணல் இசைவாணனும் முறிகண்டிக்கு அண்மையில் உள்ள வசந்தநகர் கிராமத்தில் தமது மருத்துவ நிலையை அமைக்கின்றனர். போராளிமருத்துவர் தணிகை மற்றும் பெண் போராளி மருத்துவர் மீனலோஜினி ஆகியோர் ஜெயந்திநகர் பக்கமாகவும், போராளி மருத்துவர் மேஜர். சுசில் மற்றும், போராளி மருத்துவர் மேஜர் றோகிணி ஆகியோர் முரசுமோட்டைப் பகுதியிலும் மருத்துவ நிலைகளை அமைத்து நிற்கின்றனர். இந்த மருத்துவ நிலைகள் சாதாரணமான மருத்துவ நிலைகளாக இல்லாது பிரதான மருத்துவ நிலைகளாக உருவாக்கி இருந்தார்கள். உலக அரங்கிலையே முன் வைத்தியசாலை பராமரிப்பு நிலையங்களில் குருதி மீளேற்றம் அல்லது Intercostals Drainage Tube (ICD Tube), Traumatic Amputation, Blood Transfusion(some time auto transfusion), போன்ற சிறு சத்திரசிகிச்சைகள், Inserting Urinary Catheter for check the urine out put , Giving Tetanus toxoid , Proper Splinting for fractures போன்றவை செய்யப்படுவதில்லை. ஆனால் இங்கே அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் மருத்துவ நிலைகள் அனைத்திலும் இவை அனைத்தையும் செய்யக் கூடிய வகையிலையே அமைத்திருந்தார்கள். ஏனெனில் அப்போது பிரதான இராணுவ மருத்துவமனையாக ஒட்டிசுட்டான் பகுதியில் மேஜர் அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை அமைந்திருந்தது. அதனால் கிளிநொச்சியில் இருந்து அபயன் ஞாபகார்த்த மருத்துவமனைக்கு காயப்பட்டவர்களைக் கொண்டு செல்வதற்கு கிட்டத்தட்ட ஒன்று தொடக்கம் இரண்டு மணித்தியாலங்கள் தேவைப்படும். அதனால் அந்த தூர இடைவெளிக்குள் காயப்பட்ட போராளிகள் குருதி வெளியேற்றத்தால் வீரச்சாவு அடைவதை தடுக்கவும் காயங்கள் மேலும் பாதிப்படைவதைத் தடுக்கவும் இவ்வாறான முன் மருத்துவ பராமரிப்பு நிலையங்களிலையே அவற்றைச் செய்ய வேண்டி இருந்தது. அந்தச் சண்டையில் மேஜர் சுசில், மேஜர் றோகிணி மற்றும், களமருத்துவப் பொறுப்பாளர் மேஜர் திவாகர் பெண் மருத்துவ நிர்வாகப் போராளி மேஜர் எஸ்தர் மற்றும் மேஜர் கமல் மாஸ்டர் போன்றவர்கள் மருத்துவ நிலைகள் மீதான எதிரியின் தாக்குதல்களில் வீரச்சாவடைய காயப்பட்ட போராளிகள் இசைவாணனின் மருத்துவ நிலை மற்றும் தணிகையின் மருத்துவ நிலைகளில் குவிகின்றனர். அதனால் வேலைப்பளு அதிகமாகிறது. தொடர்ந்து நிற்க முடியாத சூழல். அவரது ஒற்றைக் கால் புண்ணாகுகிறது. தொடர்ந்தும் பொய்க்காலை போட்டிருந்ததால் அந்தக்கால் பயங்கர வேதனையைத் தருகிறது. ஆனாலும் சோர்வு அவரில் வரவில்லை பணிமுடித்து தளம் மீள்கிறார். இவ்வாறான உறுதிமிக்க போராளி மருத்துவர் போராளிகளின் மருத்துவத்தை மட்டுமல்லாது மக்களையும் தன் மருத்துவப் பணியால் அரவணைத்ததை வன்னியில் இருந்த அனைவரும் அறிந்திருப்பர். வன்னியில் இருந்த மருத்துவ ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தமிழீழ மருத்துவப் பிரிவால் உருவாக்கப்பட்ட பயிற்சிக் கல்லூரிகளில் முதுநிலை விரிவுரையாளராக இருந்து மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்குவதில் முன் நின்றார் இசைவாணன். அதை விட அரச மருத்துவர்கள், போராளி மருத்துவர்கள் என்ற இரு வேறு பிரிவுகளுக்குள் அடக்கப்பட்டிருந்த தமிழீழ மருத்துவ அணி உள்ளே ஓரணியாகவும் வெளியில் மட்டும் இரு அணியாகவும் பணியாற்றியது குறிப்பிட வேண்டிய ஒன்று. (எதிரிக்காக )அவசர கால சூழல்களைத் தவிர்ப்பதற்காக அனைவரும் அரச மருத்துவமனைகளிலோ அல்லது இராணுவ மருத்துவமனைகளிலோ ஒருங்கிணைந்து செயற்படுவர். அச்செயற்பாடுகளில் எல்லாம் இசைவாணனும் முன்நிலை வகிப்பது குறிக்கப்பட வேண்டியது. வன்னிப் பெருநிலம் எங்கும் மலேரியா ( Malaria) தலைவிரித்து ஆடிய 1996- 1998 காலப்பகுதியில் தமிழீழ சுகாதார சேவைகள் முற்றுமுழுதான வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்த வன்னிக்குள் கொடிய மலேரியா நோய்த் தாக்கத்தை இல்லாமல் செய்தார்கள் அந்த செயற்பாட்டின் முன் நிலை வகிப்பவர்களுள் இசைவாணனும் ஒருவர் என்றால் மிகையல்லை. அன்றைய நாட்களில் இலங்கை சுகாதாரத் திணைக்களத்தால் தடுக்க முடியாமல் திணறிய மலேரியா நோய்த் தாக்கத்தை வன்னிக்குள் முழுமையாக தடுத்தருந்தது தமிழீழ சுகாதார சேவைகள் திணைக்களம். இந்த செயற்பாடானது சர்வதேச சுகாதார வல்லுனர்களையே எம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் அது தவறில்லை. அதற்காக இசைவாணன் காத்திரமான பங்கை கொடுத்திருந்தார். 2006 ஆண்டின் நடுப்பகுதியில் வன்னி மண் இறுதிப்போருக்குத் தயாரானது போது. எதிரி ஊடுருவித் தாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருந்தான். அதே நேரம் சர்வதேச அளவிலான பலத்தை வன்னிமீது திருப்பி எம்மை இல்லாது செய்வதற்கான திட்டமிடலில் எதிரி வெற்றியடைந்துவிட்டிருந்தான். ஆனாலும் எந்த நிலையையும் வெற்றியின் படிக்கற்களாக்கும் போராளிகள் தடுமாறவில்லை. இயக்கத்தின் வழிநடத்தலை முழுமையாக நடைமுறைப்படுத்தும் எந்த ஆபத்தான சூழலிலும் பணியாற்ற எமது போராளிகள் தயாராகவே இருந்தார்கள். வழமையில் இராணுவ மருத்துவ மனைகளில் தொங்கும் போரரங்கின் வரைபடங்கள் தினமும் விவாதத்துக்கும் அனுமானங்களுக்கும் களமமைக்கும். “எதிரி மக்களை இலக்கு வைப்பதன் மூலம் உளவுரன் ரீதியில் பலவீனப்படுத்த முனைவான். சிவில் நிர்வாகத்தை உடைத்துப் போரொன்றை எதிர்கொள்ளும் சக்தியை உடைக்கவும் மூல உபாயம் வகுத்துள்ளான் ” என்று இசைவாணன் வாதிடுவார். அவரின் கூற்றுப்படியே பல சம்பவங்கள் நடந்து முடிந்தன. அதன்படி தொண்டு நிறுவன வாகனங்கள், மருத்துவக் காவுவண்டிகள், சுகாதார சேவைகள், உணவு விநியோகம் போன்றவற்றைத் தான் முதலில் எதிரி இலக்குவைத்தான். சர்வதேச தொண்டு நிறுவனங்களை வன்னியில் இருந்து வெளியேற்றினான். இந்த நிலையில் முற்று முழுதாக எதிரியால் தடைசெய்யப்பட்ட அனைத்து வளங்களையும் எம் மக்களுக்காக நாமே ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை எழுந்திருந்தது. தன்னிறைவுப் பொருளாதார வளர்ச்சியில் நாம் வளர வேண்டிய தேவையைத் தேசியத் தலைவர் போராளிகளுக்கு உணர்த்திய போது மக்களுக்கான போசாக்கு உணவுத் தயாரிப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கினார் இசைவாணன். அதற்காக ஒரு தொழிற்சாலையையே இயக்கினார். இதனை வடிவமைக்கும் பொறுப்பை தமிழீழ சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி. சுஜந்தன் அவர்கள் இசைவாணனிடம் ஒப்படைத்த போது நிட்சயமாக அதன் பலன் பெரும் வெற்றியைத் தரும் என்றே நம்பினார். அதைப் போலவே கர்பிணித் தாய்மாருக்கும் குழந்தைகளுக்கும் பயன்படக்கூடியதான “போசாக்கு மாவை ” ( அரசாங்கத்தால் கொடுக்கப்படும் திரிபோசா மாவின் தரத்தோடு) உற்பத்தி செய்தார் இசைவாணன். இந்த உற்பத்தியானது இறுதிச்சண்டை வரை தொடர்ந்ததும். பட்டினியால் வாடிய மக்களின் பசி போக்குவதற்கு பெரிதும் உதவியதும் வரலாறு. இவ்வாறான போராளி மருத்துவர் இசைவாணன் மன்னார் மாவட்ட தமிழீழ சுகாதாரசேவைகள் பொறுப்பாளராக இருந்த போது மக்களுக்கான பணிகளை சரியாக செய்தார். களமுனை கொஞ்சம் கொஞ்சமாக எமது பிரதேசங்களுக்குள் நகர்ந்த போதெல்லாம் படையணிப் போராளிகளுக்கான மருத்துவம் மட்டுமல்லாது மக்களுக்கான பணிகளையும் செவ்வனவே செய்தார். அவ்வாறான ஒரு இக்கட்டான சூழலில் இராணுவம் எமது பிரதேசம் ஒன்றைக் கைப்பற்றிய போது இவரின் பொறுப்பில் இருந்த போசாக்குமாத் தொழிற்சாலை எமது படையணிகளின் எல்லை வேலிக்கும் எதிரிக்கும் இடையில் சிக்குண்டது. ஆனாலும் கட்டாயமாக அங்கிருக்கும் தானியங்கள், மற்றும் பாத்திரங்கள் இயந்திர உபகரணங்கள் கட்டாயமாக மீட்கப்பட வேண்டும். ஆனாலும் பாதுகாப்பு என்பது அறவே இல்லை. லெப்கேணல். இசைவாணனும் விடுதலைப்புலிகளின் முதன்மை இராணுவ மருத்துவர் வாமனும் அவற்றை மீட்டே ஆக வேண்டும் என்பதில் திடமாக இருந்தார்கள். இவர்களிடம் பிஸ்டலையும், கழுத்தில் இருந்த குப்பியையும் தவிர வேற எதுவும் இல்லை. அதைவிட அவர்களிடம் இருந்த வாகனமோ இயங்குநிலை தடைப்பட்டால் திரும்பத் தள்ளித் தான் இயக்க வேண்டும். இந்த நிலையில் எப்படி அவர்களால் அந்த போசாக்கு மா தொழிற்சாலையை மீட்க முடியும். ஆனால் இரு இராணுவ மருத்துவர்களும் தமது வாகனத்தோடு அந்த கொட்டகைக்கு சென்றார்கள். ஒற்றைக் கால் வலிக்க வலிக்க அத்தனை பொருட்களையும் வாகனத்தில் ஏற்றினார்கள். ஆனால் வாகனம் இயங்கவில்லை. இருவருமே திட்டமிட்டு வாகனத்தை விட்டிருந்த இடம் ஒரு ஏற்றமான பகுதி. வாகனத்தைத் தள்ளி இயங்க செய்வது இலகு என்பதால் அவர்கள் அவ்வாறு செய்திருந்தார்கள். இப்போது மருத்துவர் வாமன், மற்றும் இசைவாணன் ஆகியோர் தமது வாகனத்தை மெதுவாக தள்ளி இயங்கு நிலைக்கு கொண்டுவந்து அந்த சூனியப் பிரதேசத்தில் இருந்து தப்பி வருகிறனர். தருணம் தப்பினால் மரணம் என்ற நியத்தை சவாலாக ஏற்று மக்களுக்காக அந்த பொருட்களை மீட்டு வந்தார்கள் மருத்துவர்கள். இவ்வாறான போராளி மருத்துவர்கள் இறுதி வரை தளராது களமாடிய பெரும் வேங்கைகள். ஆனாலும் அவர்கள் ஒரு விடயத்தில் சில மாறுதலான முடிவுகளை எடுத்திருந்தார்கள். ஏனெனில், அப்போது இறுதிப் போர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கை சிங்கள அரசு திட்டமிட்டதைப் போலவே வன்னி மண்ணில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கு துணை போன சர்வதேசம் போட்ட நிகழ்ச்சி நிரலில் வன்னியில் மக்கள் காப்பற்றப்படுகிறார்கள் என்று வெளிச்சமிட்டுக் கொண்டு இனப்படுகொலைகள் அரங்கேறின. அதனால் தமது வருங்காலக் சந்ததியினரான குழந்தைகளை காத்துவிடத் துடித்தார்கள் சில போராளிகள். ஆனாலும் தமது பிள்ளைகள் தம்முடனே இருக்கட்டும் என்ற முடிவில் இருந்து பல போராளிகள் மாறவில்லை. யாருக்காக இந்த போராட்டம் நடக்கிறதோ? எந்தச் சந்ததி வாழ வேண்டும் என்று அவர்கள் களத்தில் நிற்கிறார்களோ ? அந்த சந்ததி அழிந்து கொண்டிருப்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை. சிங்களத்தின் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் வலயங்களிலெல்லாம், பெரும் உயிர் சேதங்கள் வந்த போதெல்லாம் மருத்துவப்பிரிவின் போராளி மருத்துவர்கள் தமது உயிர் காக்கும் செயற்பாடுகளை இறுதிவரை செய்தார்கள். இவ்வாறான சூழல் ஒன்றில் தான், போராளி மருத்துவ அணியில் இருந்த பல மூத்த மருத்துவர்கள் சண்டைகளில் வீரச்சாவடைகிறார்கள். லெப்கேணல் வளர்பிறை, லெப்கேணல் கமலினி, லெப்கேணல் காந்தன், லெப்கேணல் சத்தியா, லெப்கேணல் தமிழ்நேசன் ஆகியோர் வீரச்சாவடைந்த நிலையில் இறையொளி, செவ்வானம் ஆகியோரும் இறுதி சண்டையில் நடந்த மருத்துவமனை மீதான தாக்குதலில் வீரச்சாவடைகின்றனர். இப்போது மிகுதியாக இருக்கும் மருத்துவ வளமோ மிக சிறியது. மூத்த மருத்துவர்கள் மிக குறுகியவர்களே பணியில் இருக்கிறார்கள், அரச மருத்துவர்களான மருத்துவக் கலாநிதி வரதராஜன், மற்றும் மருத்துவக் கலாநிதி சண்முகராஜா ஆகியோருடன் தமிழீழ மருத்துவர்கள் இடைவிடாத உயிர்காப்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறார்கள். இந்த நிலையில் தான் சிறு ஓய்வுக்காக வீட்டுக்குச் சென்றிருந்த (வீடு என்பது தரப்பாளால் அமைக்கப்பட்டிருந்த சிறு கொட்டகை அதனோடு இணைந்த பதுங்ககழி ) இசைவாணன் 12.05.2009 அன்று அவரது குடும்பத்தோடு எறிகணை வீச்சுக்கு இலக்காகுகிறார். அந்த எறிகணை வீச்சில் பவிதா(8) றோகிதா(5) தமிழ்வேந்தன்(3) ஆகிய மருத்துவர் இசைவாணனின் மூன்று குழந்தைகளும் சாவடைகின்றனர். தமது கண்முன்னே தம் குழந்தைகள் துடித்துச் சாவதை இசைவாணனும் அவரது மனைவியும் மருத்துவப்பிரிவுப் போராளியுமான ரதியும் பார்க்கிறார்கள். ஆனால் எதையும் செய்ய முடியாத சூழல். மூன்று குழந்தைகளை கண்முன்னே பறி கொடுத்த தாய் தனது கணவனான இசைவாணன் முழுமையாக இருந்த கால்த் தொடையில் பெரியளவிலான முறிவுக் காயமடைந்ததையும் பார்க்கிறார். ஒரு பக்கம் மூன்று குழந்தைகளின் சாவு, மறுபக்கம் உயிருக்குப் போராடும் கணவன். என்ன செய்வது என்று அறியாத நிலையில் கத்திக் குழறும் பெண் மருத்துவப் போராளியை அருகில் இருந்தவர்களால் ஆற்றுகைப்படுத்த முடியவில்லை. அவரைத் தேற்ற வழியற்றுப் போனார்கள். எமது விடுதலை அமைப்பு சாவுகளைக் கண்டு அஞ்சியதில்லை. ஆனால் பெற்ற குழந்தைகள் மூவரும் ஒரே இடத்தில் சாவடைந்த கொடூரத்தை எந்த தாய் தந்தையால் ஏற்றுக்கொள்ள முடியும்? குருதி பெருக்கெடுத்து ஓட, இசைவாணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். மீள் உயிர்ப்பித்தல் சிகிச்சை தரப்பட்டு, இசைவாணன் காப்பாற்றப் படுகிறார். இந்த நிலையில் இறுதி வரை இயங்கி வந்த அலன் இராணுவ மருத்துவமனை சிங்களத்தால் முற்றுகையிடப்படும் நிலை வந்தது. அதனால் அங்கிருந்து இயலுமானவரை காயப்பட்ட போராளிகள் எமது கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி கொண்டு செல்லப்படுகின்றனர். அவர்களில் ஒருவனாக இசைவாணனும் கொண்டு செல்லப்படுகிறார். துணைவி ரதியும் தமிழீழ சுகாதார பரிசோதகரும் போராளியுமான தீபனும் இசைவாணனுடன் நிற்கிறார்கள். அருகில் காயமடைந்திருந்த மூத்த போராளி மருத்துவர் வாமனும் இருக்கின்றார். இசைவாணன் காயமடைந்து மூன்று நாட்கள் கடந்த நிலையில் முற்றுமுழுதாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக இருந்த குறுகிய நிலப்பரப்பு சிங்களப் படைகளால் கண்மூடித் தனமாக தாக்கப் படுகிறது. இந்த நிலையில் அடிக்கப்பட்டுக் கொண்டிருந்த எறிகணைத் தாக்குதல்களில் இருந்து தனது பிள்ளைகளைக் காத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு மருத்துவர் வாமன் இவர்களை விட்டு வெளியேற முனைந்தார். அப்போது “மச்சான் நிலைமை சிக்கலாகிவிட்டது. இனி என்னை இயக்கம் வைச்சு பராமரிக்கிறது என்பது பயங்கர சிக்கல் நிறைஞ்சது. ரதியும் பாவம் என்னை வைச்சு எப்பிடி பராமரிப்பா? அதை விட இப்படியே சிங்களவனிடம் சரணடையவும் என்னால் முடியாது. அவன் எங்களை நாயைச் சுடுவது போல சுட்டுத் தள்ளுவான். அப்பிடி அவனிடம் சாக நான் தயாராய் இல்ல… மச்சான் நான் குப்பி கடிக்கப்போறன்” என்கிறார் இசைவாணன். சிங்களப் படைகளை அவர் சரியாக புரிந்திருந்தார். தனக்கு நடக்கப்போகும் அவலச்சாவை அவர் விரும்பவில்லை. தீர்க்கதர்சனமாக முடிவை எடுத்தார். அதைக் கேட்டு உடனடியாக மறுக்கிறார் வாமன்… “இல்ல மச்சான் நான் சொல்லும் வரை அப்பிடி எதுவும் செய்யாத… நான் நிலைமையைப் பார்த்து சொல்லுறன். இப்ப எதுவும் முடிவெடுக்காத மச்சான்” இசைவாணனின் தலையை வருடியபடி ஒற்றைக்காலில் நின்றுகொண்டு மருத்துவர் வாமன் கூறிய போது இசைவாணன் அவரது கூற்றை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், மச்சான் நீ போய் பிள்ளைகள் எப்பிடி என்று பார்த்திட்டு வாடா … என வாமனை அனுப்புகிறார் இசைவாணன். மருத்துவர் வாமனும் தனது பிள்ளைகளை காத்திட வேண்டும் என்ற துடிப்போடு ஊன்றுகோலின் உதவியோடு வெளியேறி விட்டார். ரதி என்னோட பொய்க்கால ஒருக்கா எடுத்து வாறியா…” மனைவியிடம் வேண்டுகிறார் இசைவாணன். ரதி அவரது பொய்க்காலை எடுப்பதற்காக வெளியில் செல்கிறார். அப்போது இசைவாணனின் அருகில் நின்ற போராளி தீபனை அருகில் அழைத்து. “நான் குப்பி அடிக்கப்போறன் நான் சாகும் வரை ரதியை உள்ள விடாத…” அண்ண வேண்டாம் அண்ண… பிளீஸ் வேண்டாம் அண்ண அண்ணி தாங்க மாட்டா அண்ண ஏற்கனவே பிள்ளைகளை இழந்து தனிய நிக்கிறா நீங்களும் இல்லை என்றால் அவா தாங்க மாட்டா அண்ண… அவன் தடுக்கிறான் ஆனால் இசைவாணன் முடிவை மாற்றவில்லை. தீபன் இது என்னோட இறுதிக் கட்டளை… அண்ணியை உள்ள வர விடாத நான் செத்ததும் வரவிடு… தீபன் பார்த்துக் கொண்டிருக்க இசைவாணனின் துடிப்பு அடங்கிப் போகிறது. பல ஆயிரம் உயிர்களுக்கு மீள் உயிர்ப்பூட்டிய மருத்துவ வேங்கை தான் கட்டி இருந்த நஞ்சுக் குப்பிக்குள் தனது வாழ்வை அடைத்துச் சென்று விட்டார். இரண்டு கால்களும் செயலியக்கத்தை இழந்த நிலையில் தன்னால் இயக்கத்துக்கும் தனது துணைவிக்கும் சிரமம் இருக்கக் கூடாது என்ற நினைப்பு அவரை இந்த முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது. இறுதி முடிவை அவர் உணர்ந்திருந்தார் எதிரியிடம் பிடிபட்டு கேவலச்சாவு சாவதை விட வீரனாக சாக எண்ணினார். அதனால் அவர் சுமந்து திரிந்த குப்பி அவரை உண்டு தின்றது. இசைவாணன் என்ற பெரும் மருத்துவ மரம் சாய்ந்து எம் மண்ணுக்கு உரமாகி, விதையாகி என்றோ ஒருநாள் விடியப்போகும் சுதந்திர தமிழீழத்துக்காக காத்திருக்கிறது. கவிமகன். இ 04.04.2018
-
லெப்.கேணல் அருணன் (சந்திரன்)
இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது…. காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்….. வணக்கம்…. தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று. யாரெண்டு தெரியுதா? இல்லை… என்ற எனக்குத் தன்னை ஞாபகப்படுத்திய குரல். 3 வருடங்கள் மேலாக தொடர்பற்றிருந்த தோழனின் குரல் அது. குழந்தைகள், குடும்பம் என விசாரிப்புகள் நீண்டு இறுதியில் வன்னிக் களமுனையில் போய் விழுந்தது கதை. செய்தியேதும் அறிஞ்சியளோ ? என்ன வளமையான செய்திதானே… சாவும் துயரும் இதைவிட என்னத்தை இப்பெல்லாம் அறியிறம்…..? என்ற எனக்கு… நேற்று “அருணாண்ணை” வீரச்சாவு என்றான் அந்தத் தோழன். உண்மையாவா ? நம்பிக்கையிழந்து மீளவும் கேட்ட எனக்கு அவன் மீளவும் சொன்னான். ஓம்…. ‘அருணாண்ணை’ இழந்தோமா உங்களை ….? அந்தத் தோழன் விடைபெறும் வரையிலும் ஒளிந்திருந்த அழுகையை வெளிப்படுத்தாமல் கண்களும் குரலும் என்னைக் காத்துக் கொள்கின்றன. அருணாண்ணை அருணாண்ணையின் குடும்பம் , அடுத்து அந்தக் களமுனையில் வாழும் தோழ தோழியர்கள் அவர்கள் குடும்பங்கள் என விசாரிக்கிறேன். மேலும் பலர் வீரச்சாவுகள் , விமானத்தாக்குதலில் இழப்புகள் என அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அடுத்ததென்ன நடக்கப்போகுது ? கேட்ட எனக்குச் சொன்னான். யாரையும் எதையும் சொல்ல முடியாத நிலமையிருக்கு…..எல்லாம் முடியப்போகிறது…..நம்ப முடியாதவைகள் எல்லாம் நடக்கப்போகிறது….. எல்லாம் முன்னறிந்த கடவுள் போல அவன் சொன்னான். ஏன் அப்பிடி ? அவன் அடுக்கிக் கொண்டு போன காரணங்களில் நியாயம் உண்மையென்று பல்லாயிரம் விடயங்களை ஏற்றுக் கொள்ளும்படியாக அவனது கதையிருந்தது. அழிபடாமல் வரலாறுகளைச் சேகரிக்க வேணும்….அதற்கான வேலைகளைச் செய்ய வேணும்…..அதற்கான வழிகள் பலவற்றையும் சொன்னான். மீண்டும் தொடர்புகளோடு இருப்போமென விடைபெற்றுக் கொண்டான். இமை விட்டிறங்காமல் முட்டிய கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அருணாண்ணை நினைவுகளை விட்டிறங்காமல் எங்களுக்குள் நிரந்தரமாகிப் போனாரா? நம்பவே முடியவில்லை. கதைப்பதை விட அதிகம் கடிதங்களில் தான் அருணாண்ணை பேசுவது நிறைய….2006 வரை அவ்வப்போது கடிதங்களோடு களம் நிலம் காவியம் மாவீரம் என அருணாண்ணை எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் கனமான பொழுதுகளில் மீளவுமான உயிர்ப்பையும் எழுச்சியையும் தரும் வல்லமை மிக்கவை. „மீழும் நினைவுகள்“ என அரசபயங்கரவாதம் செய்த இன அழிவுகளையெல்லாம் தன் எழுத்துக்களுக்குள் சேமித்து அவர் அனுப்பிய தொலைமடல்கள் கையெழுத்துப் பிரதிகள் ஏராளம். ஐரோப்பிய வானொலிகள் பலவற்றில் அருணாண்ணையின் எழுத்துக்கள் ஒலிவடிவாக உயிர்த்து அவலங்களையெல்லாம் ஆவணமாக்கியது. தமிழ்வெப்றேடியோ என்ற இணைய வானொலியின் பெரும்பான்மையான நிகழ்ச்சிகளில் அருணாண்ணையின் ஆக்கம் இருக்காது போகாது. தமிழினம் மீதான சிங்களப்பயங்கரவாதப் புடுகொலைகள் 1956 முதல் 2001 கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் வரை எழுதிய ‘மீழும் நினைவுகள்‘ இன்றுவரையும் மீட்கப்படக் காரணமாய் தனது எழுத்துக்களால் பதிந்த ஒரு போராளி. போர்க்குணம் மிக்க அந்த மனிதனுக்குள் அரசியல்ஞானம் உலகியல் விஞ்ஞானம் என எதைக்கேட்டாலும் இலகுவாய் புரிவிக்கும் திறன்மிக்க ஆழுமையென அருணாண்ணையின் அமைதியான தோற்றத்திற்கும் பின்னாலும் பேச்சுக்குப் பின்னாலும் ஆல்போல் விழுதேற்றிப் பரவியிருக்கிறது. சட்டென்று மூக்குநுனியில் நிற்கும் அவரது கோபம்….சொன்ன வேலையை சொன்ன நேரத்துக்குள் செய்து கொடுக்கப்படாவிட்டால் தனது அமைதியால் அதையுணர்த்தி அடுத்த வேலையை அவர் கேட்கும் அவகாசத்துக்கு முன்னால் செய்வித்துவிடுகின்ற சாதுரியம் எல்லாம் அருணாண்ணையின் ஆழுமை தான். 2001 அக்கினி கீல நடவடிக்கையில் இலங்கையரச படைகள் ஆயிரமாயிரமாய் செத்துடிந்து வல்லமை பொருந்தியதாய் நம்பப்பட்ட அரச இராணுவபலம் புலிகளின் காலடியில் விழுந்தபடியிருக்க ஒரு கடிதம் எழுதியிருந்தார்….. அந்தக் களமுனையின் நுனியிலிருந்து களமாடிக் காவியமான தனது தோழர்கள் பற்றியும் உலகு அந்தக்கள முனையை எப்படிப் பார்க்கப்போகிறது என்பதையெல்லாம் தனது எழுத்துக்குள் நிரப்பியனுப்பிய நீலக்கடித உறைக்குள் நான் கண்டது ஒரு சாமானியக் குணத்தையல்ல…..ஒரு போராளியின் இதயத்தை…..அக்கடிதத்திலிருந்து சில வரிகள் இவை…… உலகே வன்னிக்கு உலாப்போய்வரக் கிடைத்த சமாதான காலம் ஊர் போன போது அருணாண்ணையைச் சந்தித்தது கதைத்தது சேர்ந்து உணவருந்தியது மாவீரர் துயிலிடங்கள் சென்றது என நினைவுகள் யாவும் அருணாண்ணையுடனான அந்து நாட்களைத்தான் மீளமீளக் கொண்டு வந்தது. தனது தோழர்கள் தனது தொடர்பில் உள்ளவர்களென அருணாண்ணையை நேசிக்கும் அனேகருக்கு எங்களை அறிமுகம் செய்து அவர்களுடனான உறவுகளை ஏற்படுத்தித் தந்து விட்டதெல்லாம் ஒருநாள் இப்படி இழந்து போவதற்கா…..? மறுமுறை சந்திப்பதாய் பயணம் சொல்லிய அந்தக் கடைசிச் சந்திப்பு……வன்னிப் பெருநிலப்பகுதியிலிருந்து வவுனியா வர வெளிக்கிட்ட நேரம்….பிள்ளைகள் ஒவ்வொருவராய் மாமா அக்கா அன்ரி அண்ணாவென விடைபெற்று கடைசியில் அருணாண்ணையிடம் விடைபெறப் போனார்கள். பிள்ளையள் நல்லாப்படிச்சு கெட்டிக்காறரா எங்கடை நாட்டுக்குத் திரும்பி வரவேணுமென்ன….. எனச்சொல்லி என் மகன் பார்த்திபனை கட்டிப்பிடித்துக் கொஞ்சினார். எனது மகள் வவுனீத்தா மட்டும் ஏதோ கோபித்துக் கொண்டு நின்றாள். மாமாக்குச் சொல்லீட்டு வாங்கோம்மா…. என்ற எனக்குப் பின்னால் வந்து நின்றாள். என்னம்மா என்ன சொல்லீட்டு வாங்கோவன்….. இல்லையென்பதைத் தலையசைப்பால் உணர்த்தினாள். ஏன் ? என்னம்மா ? மாமா மருதன்மாமாவைப் பேசினவர். அதான் நான் அவரோடை கோவம். ஆக்களைப் பேசக்குடாது…அவருக்ககொண்டும் தெரியாது……என்றாள். காலையில் ஏதோ அருணாண்ணை சொன்னவிடயமொன்றை மருதன் மறந்து போனதற்காக விழுந்த பேச்சு அது. அது மாமா சும்மா பேசினவரென்னை….என மருதன் சொன்ன சமாதானத்தையும் அடம்பிடித்தாள். பிள்ளையைக் கொண்டு போய் யாழ்ப்பாணத்தில விட வேணும் கனபேருக்குப் பாடம் நடத்தப்பிள்ளைதான் சரி….என்றான் இன்னொரு போராளி….. இறுதியில் எல்லாரும் சேர்ந்து அவளைச் சமாதானம் செய்து வாகனத்தில் ஏற்றிவிட்டு கையசைத்து விடைதந்து அனுப்பி வைத்தனர். மாலையில் அருணாண்ணையின் இருப்பிடம் வந்து சேரும் போது பிள்ளைகளை ஒருதரம் மோட்டார் சயிக்கிளில் ஏற்றிச் சுற்றி அவர்கள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் ஒரு மாமாவாய் அருணாண்ணை எத்தனையோ அவதாரங்களாய்……பணம்மட்டுமே குறியாய் கடிதங்களால் குதறியும் காசைமட்டுமே கறந்த உறவுகளின் சபித்தலால் சோர்ந்து போய்விடும் வேளைகளில் அருணாண்ணைக்கு அதையெல்லாம் கடிதங்களாய் எழுதுவேன். எனது கடிதங்களுகெல்லாம் தனது பதில்களால் துணிவையும் மீண்டும் எழுகைக்கான எழுத்துக்களாக எழுதிய கடிதங்கள் யாவும் ஒரு நல்ல தோழமையின் அண்ணணின் ஆதரவைத் தரும் வல்லமை மிக்கவை…..எதை மறந்து எதை நினைத்து……இனி எங்கள் அருணாண்ணையை எங்கே தேட…… ஆட்கள் வந்து சந்தித்துச் செல்லவென அமைக்கப்பட்ட ஒற்றையறை மர நிழலில் பேசியவை……பகிர்ந்தவை…….அவர் அனுப்பிய வைத்த ஈழநாதம் வெள்ளிமலர்…..முதல் முதலாகப் பதிப்பித்த “சாள்ஸ் அன்ரனி“ படையணியின் சிறப்ப நூல் என்னையும் வந்தடைய வழிசெய்த அருணாண்ணையிடமிருந்து விடைபெற்று அவரை அவரது தோழர்களை நினைக்க நேசிக்கவென நிறையவே அறிமுகங்கள் தந்த அந்தத் தோழனின் ஆழுமையைச் சொல்ல பல்லாயிரம் பக்கங்கள் நீட்ட வேண்டும். தொடர்ந்த தொலைபேசி உரையாடல்….கடிதங்கள்…..என தொடர்ந்தது உறவு. என் குழந்தைகளின் நினைவுகளுக்குள் நிற்கும் பலருக்குள் அருணாண்ணைக்குத் தனியிடம் உண்டு. எங்கே நின்றாலும் மறக்காமல் பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்துமடல் அனுப்ப மறப்பதில்லை. யார் அனுப்புகிறார்களோ இல்லையோ அருணாண்ணையின் வாழ்த்துமடல் வந்தால் போதும் என்ற நிலைக்கு என் குழந்தைககளின் மனசுக்குள் குடியிருந்த இராஜகுமாரன் அருணாண்ணை. பிள்ளைகளுக்குத் தனித்தனியே கடிதம் எழுதி அவர்களின் கடிதம் மாமாவாகி…….எங்களுக்கும் கடிதம்மாமாவென்றே நினைவுகொள்ள வைத்த அருணன் என்ற ஆழுமை……27.02.09 அன்று நிரந்தரமாய் பிரிந்துவிட்டதாய் வந்த செய்தி…..செய்தி கேட்டதும் என் மகன் பார்த்திபன் உடைந்து கலங்கியதும்…மகள் வவுனீத்தா மெளனமாகி அருணாண்ணை எழுதிய கடிதங்களை ஒவ்வொன்றாய் எழுத்துக்கூட்டி வாசித்ததும்…..மாவீரர் துயிலிடத்தில் மாமாவை சந்திப்போமென்று சமாதானம் கூறியதும்……பொய்த்து எல்லாம் எங்கள் கைகளைவிட்டுத் தொலைவாகிக்கிடக்கிறது…… காலம் அருணாண்ணையையும் குடும்பமாக்கி ஒரு குழந்தைச் செல்வத்துக்குத் தந்தையுமாக்கியது……அந்தச் செல்வத்தைச் சிரித்தபடி தூக்கி வைத்திருந்த படம் மட்டும்தான் இன்று அருணாண்ணையின் ஆழுமையைச் சொல்லியபடி நினைவுகள் நீண்டு விரிந்து நிழல்பரப்பிக் கிடக்கின்றன…… நினைவுப்பகிர்வு :- சாந்தி ரமேஷ் வவுனியன் (03.07.2009).
-
உறவுகளின் இழப்பால் உயிராயுதமாகத் துடித்தவள் – லெப்ரினன்ட் சாந்தா
எமது புரட்சிகரத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இளமைக் காலத்தில் உற்ற உறவுகளை மறந்து ஒரு சராசரி மாந்தன் அனுபவிக்கும் அத்தனை இன்பங்களையும் துறந்து தாயகத்தின் மீது கொண்ட தீராத பற்றினாலும் அரசியல், சமூக அக்கறையினாலும் பெண் விடுதலை வேண்டியும் பல்லாயிரக்கணக்கான தமிழீழப் பெண் போராளிகள் எமது தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களுடன் இணைந்து, அவரின் தலைமையினையும் வழிகாட்டல்களையும் உளமார ஏற்றுப் போராடி தம்முயிரீந்து மாவீரர்களாகியுள்ளார்கள். அவ்வாறே லெப்ரினன்ட் சாந்தாவும் சிறீலங்கா இராணுவத்தினரின் கொடும் ஒடுக்குமுறைகளாலும், திட்டமிடப்பட்ட இனவழிப்பினாலும் தனது குடும்பமும் மக்களும் இன்னலடைவதைக் கண்டு அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், இந்த ஒடுக்குமுறைகளிலிருந்து எம் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் தமிழீழப் பெண் போராளியாக இணைந்து எம் தலைவன் காட்டிய திசையில் விடுதலைப் பற்றுடன் களமாடி, தமிழீழ மண்ணுக்காய் தனையீந்து மாவீரராகினார். தமிழீழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வலிகாமம் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வடலியடைப்பு எனும் அழகான ஊரிலே திரு.திருமதி அரியநாயகம் மண இணையருக்கு மூன்று அக்காக்கள் இரண்டு தங்கைகளுடன் நான்காவது செல்ல மகளாக 23.07.1969 அன்று “அனுலா” எனும் இயற்பெயருடன் லெப்ரினன்ட் சாந்தா அவர்கள் வந்துதித்தார். அனுலாவின் குடும்பத்தினரும் ஆரம்பகாலந்தொட்டு எமது போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்து முழுநேரப் பங்காளர்களாகச் செயற்பட்டு வந்தார்கள். ஆரம்பகாலங்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடமிருந்தும் பின்பு இந்திய வல்லாதிக்க இராணுவத்தினரிடமிருந்தும் எமது போராளிகளை மறைவாக வைத்திருந்து உணவளித்து தமது பிள்ளைகள், உடன்பிறப்புகள் போல கருதி பாதுகாத்து வந்தனர். இதனாலும் அனுலாவிற்கு சிறுபராயத்திலிருந்தே எமது போராட்டத்தில் ஈடுபாடு ஏற்படத் தொடங்கியிருந்தது. லெப்ரினன்ட் சாந்தா வீரப்பிறப்பு 23.07.1970 – வீரச்சாவு 10.11.1995 சங்கானை, யாழ்.மாவட்டம் அனுலா சிறுவயது முதல் கல்வி, விளையாட்டு என இரண்டிலும் சிறந்து விளங்கினார். அவர் ஆரம்பக் கல்வி முதல் க.பொ.த சாதாரணம் வரை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் தனது கல்வியைக் கற்று வந்தார். 1985 ஆம் ஆண்டில் அவர் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் அவரது குடும்பத்தினருக்கு யாரிற்குமே ஏற்படக் கூடாத பேரிழப்பு ஒன்று ஏற்பட்டது. ஆம், நெடுந்தீவில் மணமுடித்து அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மூத்த அக்காவும், அவரைப் பார்ப்பதற்குச் சென்ற இரண்டாவது அக்காவும் திரும்பி தம் உறவுகளைக் காண நெடுந்தீவு மக்களின் வெளியுலகை அறிய ஓர் அன்பு இணைப்பாக இருந்த “குமுதினிப் படகில்” அழகாய் கரையொதுங்குவதற்கு ஆர்வமாக வந்து கொண்டிருந்தபோது, 15.05.1985 அன்று நெடுந்தீவுக்கும் புங்குடுதீவுக்கும் இடையில் நடுக்கடலில் வைத்து கண்ணாடி இழைப்படகில் கத்தி,கோடரி,சுடுகலன்களுடன் வந்த சிங்களக் கடற்படைக் காடையர்களினால் குழந்தைகள், பெண்கள், முதியோர் என்ற வேறுபாடின்றிக் கொடூரமாகக் கதறக் கதற வெட்டியும் கொத்தியும் சுட்டும் கொல்லப்பட்டு திட்டமிடப்பட்ட இனக்கொலை செய்யப்பட்டனர். இதில் அனுலாவின் இரு அக்காக்களுடன் சேர்த்து 36 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள பேரிவாதத்தின் இந்த நரபலிப்படுகொலையில் தனது உயிரிலும் மேலான தனது இரண்டு அக்காக்களை இழந்தமையானது அனுலாவின் மனதில் என்றும் ஆறாத வடுவாக புரையோடிப் போய் இருந்தது. இவ் ஆற்றொணாத் துன்ப நிகழ்வு நடந்த காலத்திலும் மனம் சோராது தனது கல்வியைக் கைவிடாது வைராக்கியத்துடன் கற்று க.பொ.த சாதாரணதரத்தில் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரக் கல்வியை மானிப்பாய் மகளிர் கல்லூரியில் 1988 வது அணியில் வர்த்தப் பிரிவில் தொடர்ந்தார். அவர் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது 1987-1988 காலப்பகுதியில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய வல்லாதிக்க இராணுவம் எம் ஈழ மண்ணிற்கு வந்து நரபலி வெறியாட்டம் ஆடியது. அந்தக் காலப்பகுதியில் இந்திய வல்லாதிக்கப் படையினரால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்த போதிலும் கற்றலின் மீதுள்ள ஈடுபாட்டினால் கல்வியினைத் தொடர்ந்து கற்று க.பொ.த உயர்தரத்தில் தோற்றிய போதும் அவரால் பல்கலைக்கழக நுழைவிற்கு ஏற்ற வகையில் புள்ளிகளைப் பெற முடியாமல் போனது. எனினும் அவர் மனந்தளராது தொடர்ந்து 1989 வது அணியில் கல்வி கற்று திரும்பவும் தோற்றி அதிலும் மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்றபோதிலும் அந்தக் காலப்பகுதியில் நிறைய தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்டது போல் அனுலாவுக்கும் சிறிலங்கா பேரினவாத அரசின் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட கல்வியில் தரப்படுத்தல் சட்டத்தின் விளைவாக ஏற்பட்ட வெட்டுப்புள்ளி தொடர்பான சிக்கலால் பல்கலைக்கழக நுழைவிற்கு இரண்டு புள்ளிகள் போதாமல் இருந்து அந்த வாய்ப்பும் பறிபோனது. இந்நிகழ்வும் அவரது மனதில் ஆறாத வடுவாய் பதிந்து இருந்தது. 1990-1991 காலப்பகுதிகளில் படிப்பினை முடித்து விட்டு வீட்டில் ஆண் மகவு இல்லாத குறையினைப் போக்கும் வண்ணம் தந்தையாருக்கு வேளாண்மை தொடர்பான அனைத்து வேலைகளுக்கும் உதவியாக இருந்து வந்தார். அத்துடன் சுதந்திரப்பறவை அமைப்பினருடன் சேர்ந்து துண்டறிக்கை விநியோகம் செய்தல், போராளிகளுக்கு உணவு சேகரித்து விநியோகம் செய்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வந்தார். மற்றபடி வீட்டில் ஓய்வாக இருந்த பொழுதுகளில் இரு அக்காக்களின் இழப்பு, பல்கலைக்கழகநுழைவு வாய்ப்பு பறிபோனமை போன்ற காரணங்களினால் அனுலாவின் மனமானது உலைக்களமாகக் கொதித்துக் கொண்டிருந்தது. அதனை ஆற்றுப்படுத்துவதற்கான வழியாக, முதன்மையாக தனது உடன் பிறந்த அக்காமாரை ஈவிரக்கமற்றுக் கொன்றொழித்த சிங்கள இராணுவக் காடையர்களைக் கருவறுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் எம் தலைவன் அணியில் 1991ஆம் ஆண்டுகால நடுப்பகுதியில் இணைந்து மகளிர் படையணியின் 19 வது பயிற்சி முகாமில் அடிப்படைப் பயிற்சியை முடித்துக்கொண்டு “சாந்தா” எனும் பெயர் சூட்டப்பட்டு போராளியாகினார். அங்கு அவரின் கல்வித் தகுதியடிப்படையில் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப்பகுதிக்கு உள்வாங்கப்பட்டார். எம் இனத்தைக் கருவறுக்கும் சிறிலங்கா இராணுவத்தினரை அழிக்க சண்டையணியில் இணைந்து செயற்படும் அவாவில் வந்த சாந்தாவிற்கு இது சிறிது மனத் தாங்கலாகத்தான் இருந்தது. ஆயினும் இயக்கம் சொல்வதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரைகுறை மனதோடு நிதித்துறை மகளிர் பிரிவுக்கு சென்றார். அங்கு கணக்காய்வு, கணக்கியல், பொருளியல் தொர்பான கற்கைநெறிகளையும் மேற்கொண்டு மேலும் ஆங்கிலமொழியினையும் பயின்று தன் தகுதியை மேலும் வளர்த்துக் கொண்டதோடு நிதித்துறை வாணிபங்களுக்கான கணக்காய்வுப் பணியினையும் மேற்கொண்டார். நிதித்துறை மகளிர் பிரிவுக்கு வந்த சிறிது காலத்திலேயே அவரது நிருவாகத் திறன், பணிகளில் செய்நேர்த்தி, மற்றைய போராளிகளை அரவணைத்துக் கூட்டாக உழைக்கும் பாங்கு என்பன இனங்காணப்பட்டு மகளிர் படையணியின் சிறப்புத் தளபதியால் நிதித்துறை மகளிர் பிரிவுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அங்கு அத்தனை நிருவாக வேலைப்பளுவுக்குள்ளும் கணக்காய்வுப் பணியையும் திறம்பட மேற்கொண்டார். பின்பு 1993 ஆம் ஆண்டின் இறுதிக் காலப் பகுதிகளில் நிதித்துறை மகளிர் பிரிவில் வடமராட்சிப் பகுதியில் ஆயப்பகுதி தொடங்கப்பட்டபோது லெப்.கேணல் வரதா அக்கா அவர்கள் நிதித்துறை மகளிருக்கான முழு நிருவாகப் பொறுப்பையும் ஏற்க, சாந்தா அக்கா அவர்கள் வடமராட்சிப் பகுதியில் ஆயப்பகுதிக்கான பொறுப்பையும் அந்தப் பகுதி வாணிபங்களுக்கான கணக்காய்வு அணியின் அணிப்பொறுப்பாளராகவும் செயற்பட்டார். சாந்தா அக்கா எப்போதும் ஏதோ ஒரு வைராக்கியத்துடன் இருப்பது போன்று இறுகிய முகத்துடன் கவலைதோய்ந்தவராகக் காணப்படுவார். ஆனால் எந்தக் கடினமான வேலையையும் மிகவும் எளிதாகச் செய்து முடிக்கும் திறன் அவரிடம் காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பிடுங்குதல், முகாம் கிணறு வற்ற இறைத்து துப்பரவாக்குதல் போன்ற பணிகளை யாருடைய உதவியும் இன்றி தானே தனிய செய்து முடிப்பார். அவரது குணவியல்புகளைப் பொறுத்தவரை மிகவும் இரங்கும் மனப்பாங்கு உடையவர். சக போராளிகள் அனைவரையும் தனது கூடப்பிறந்த உடன்பிறப்புகளைப் போலவே நினைத்துப் பழகுவார். அதிலும் பெற்றோரின் தொடர்பற்று இருக்கும் போராளிகள் என்றால் அவர்களை ஒரு தாய் போன்று அரவணைத்துப் பார்த்துக்கொள்வார். அவரது பெற்றோர் அவருக்கு உடைகள், பிறபொருட்கள் வாங்கி வரும்போது பெற்றோரின் தொடர்பற்று இருக்கும் போராளிகளுக்கும் சேர்த்து வாங்கி வருமாறு கோரிக்கை விடுத்து வாங்கிக் கொடுப்பார். அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் பழக விட்டு அவர்களுக்கு குடும்ப உறவுகள் இல்லாத குறையினைத் தீர்த்து வைப்பார். அவரது குடும்பத்தினரும் அனைத்துப் போராளிகளையும் தமது வீட்டுப்பிள்ளைகள் போன்றே நினைத்து உரிமையுடன் பழகுவர். சாந்தா அக்கா வீரச்சாவடைந்த பின்னரும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வருகை தரும் அனைத்துப் போராளிகளையும் தமது மகளைப் போன்றே/ உடன்பிறந்தவரைப் போன்றே உருவகித்து அன்புடன் பழகுவர். வன்னிப்பகுதியில் நாம் வசித்தபோது அவர்களினது வீடானது தொலைவிடங்களிற்குப் பணி நிமித்தம் சென்று வரும் அனைத்துப் போராளிகளுக்கும் தங்கி இளைப்பாறி தேநீர் அருந்தி உணவு உண்டு மகிழ்ந்த, ஒரு சொந்த வீடு போல் நினைக்கும் அளவிற்கு “தாய்வீடாக” அமைந்தது என்றால் மிகையாகாது. சாந்தா அக்கா அவர்கள் வெளி நிருவாகப் பணிகளில் ஈடுபட்டிருந்த போதிலும் அவரின் மனதிலே கரும்புலிகள் அணியில் இணைந்து தனது குடும்ப உறவுகளைக் கொன்றொழித்த சிங்கள இராணுவத்தினரின் மீது உயிராயுதமாக பாய்ந்து கொன்றழிக்க வேண்டும் என்ற ஓர்மம் வைராக்கியமாக குடி கொண்டிருந்தது. இதன் காரணத்தினால் எமது தேசியத் தலைவர் அவர்களுக்கு ஐந்தாறு தடவைகளுக்கு மேலே தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பிருந்தார். ஆயினும் அவரின் பணியின் தேவைகருதி தேவை ஏற்படும் போது அழைப்பதாகவும் இப்போது தரப்பட்ட பணியினை மேற்கொள்ளுமாறும் ஒவ்வொரு தடவையும் தேசியத் தலைவர் அவர்களிடமிருந்து பதில் வந்தது. அதில் மனநிறைவடையாத சாந்தா அக்கா நிதித்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தியப்பா அவர்களுடன் அடிக்கடி சென்று நேரடியாகக் கதைத்து தனது கொள்கையில் வைராக்கியமாக இருந்து கடைசியில் சண்டையணிக்காவது செல்ல அனுமதி தருமாறு கேட்டு அனுமதி பெற்று 1994 ஆம் ஆண்டு பிற்பகுதிகளில் மாலதி படையணிக்கு பிரிவு மாறிச் சென்றார். மாலதி படையணியில் களப்பயிற்சியினைப் பெற்று போர் முன்னரங்கப் பகுதிகளில் களப்பணிகளுக்கு உள்வாங்கப்பட்டார். பின்பு யாழ் நகரை முற்று முழுதாக தம் கைவசப்படுத்தும் நோக்கில் “இடிமுழக்கம்” என்ற பெயரில் எதிரி வலிந்த தாக்குதல் ஒன்றை மேற்கொண்டபோது அதனை முறியடிக்கும் சமரில் மாலதி படையணியினருடன் இணைந்து ஓர்மத்துடன் களமாடினார். பின்பு 17.10.1995 அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்கில் மீண்டும் தொடங்கப்பட்ட “சூரியக்கதிர்” நடவடிக்கையில் தனக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் எதிரியை முன்னேற விடாது தொடர்ந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்றும் எமது மண் பறிபோகக் கூடாது என்றும் தனது குடும்ப உறவுகளைக் கொன்றொழித்த சிங்கள இராணுவத்தினரை அழித்தொழிக்க வேண்டும் என்ற எண்ணவுறுதியுடன் ஓர்மத்துடனும் வைராக்கியத்துடனும் போராடி 10.11.1995 அன்று சுதந்திர தமிழீழம் எனும் கனவை நெஞ்சில் சுமந்து தான் விட்டுச் சென்ற கனவை மற்றைய போராளிகள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தன்னுயிரீந்து லெப்ரினன்ட் சாந்தாவாக வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். லெப்ரினன்ட் சாந்தா அக்கா போன்ற பல்லாயிரக்கணக்கான மானமாவீரர்களின் சுதந்திர தமிழீழம் எனும் கனவைத் தோளில் சுமந்து அவர்களின் தடம்பற்றி நடக்க வேண்டும் என நாமனைவரும் உறுதியேற்று எம்பணி தொடர்வதே அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும். -நிலாதமிழ்.
-
அன்புக்கு இலக்கணம் சங்கவி
அன்புக்கு இலக்கணம் ஆகிய அழகிய வதனம் கொண்ட சங்கவியை தெரிந்தவர்கள் யாராலும் மறக்கவே முடியாது…… அமைதியான சுபாபம் கொண்டவள். கூட இருப்பவர்களுக்கு உதவிடும் நல்ல உள்ளம் படைத்தவள். இரக்க குணம் அவளோடு கூட பிறந்தது. பழகியவர்களால் அவளை மறப்பது மிகவும் கடினம். 1998ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டவள் சிறுத்தைப் படையணியில் நித்திலா 1 பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்துக் கொண்டு மூன்றுமுறிப்பு களமுனையில் அவளது தோழிகளுடன் தடம் பதிக்கிறாள். முன்னணிக் காவலரண்களை பலமாக்கி பாதுகாப்பது, எதிரியின் ஊடறுப்பு தாக்குதல்களை முறியடித்து சமர் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டவள். தொடர்ந்து வந்த காலங்களில் அம்பகாமம், ஒட்டு ஒட்டுசுட்டான் போன்ற பகுதிகளிலும் அவளுடைய களப்பயணம் தொடர்கிறது. இன்றுவரை உலகவல்லரசுகளால் வியந்து பார்க்கப்படும் தீச்சுவாலைச் சமரில் பங்கு பற்றி தன்னுடைய திறமையை அங்கும் நிரூபிக்கிறாள். மிகப்பெரிய வெற்றியை ஈட்டித் தந்த அச் சமரில் தலையிலும் ,காலிலும் படு காயமடைந்தவள் ஆறுமாதங்கள் மருத்துவமனையில் ஓய்வுக்காக அனுமதிக்கப்படுகின்றாள். இயங்க முடியாத நிலையிலும் அமைதியான புன்னகையுடன் அடுத்த கட்டப் பணிக்காக தயாராகிறாள். தலையில் பலமான காயம் ஏற்பட்டதால் அடிக்கடி மயக்கம் வருவதும், தொடர் தலைவலியாலும் களமுனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படவே படையப் புலனாய்வுப் பிரிவின் பின்தள பணிக்காக அனுப்பப்படுகிறாள். ஆர்ப்பரிப்புக்கள் ஏதுமின்றி அமைதியாக சாதித்துவிட்டு எதுவும் நடவாதது போல் இருக்கும் அவள் தன்னுடைய மன வேதனைகளை எப்பவுமே யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. களமுனைக்கு செல்லமுடியாமல் போகுமளவுக்கு காயம் அடைந்ததால் மனரீதியாக பலமாக பாதிக்கப்பட்டிருந்தாள். அவளுடைய எண்ணக் கிடக்கைகளை புரிந்துகொண்டு ஆறுதலாகப் பேசினால் கூட ஓர் சிறிய புன்சிரிப்போடு அமைதியாக இருப்பாள். தன்னுடைய இயலாமையை கூட வெளிக்காட்டாமல் தினமும் தலைவலியால் அவஸ்தை பட்டுக்கொண்டும் கொடுக்கப்படும் பணியை நேர்த்தியாகச் செய்து முடிக்கும் பண்பு அவளிடம் நிறையவே இருந்தது. சின்னச் சின்ன விடயங்களில் எல்லாம் மிகவும் அக்கறை எடுத்து அவற்றை அழகாக்கும் அழகே அவளுடைய பேரழகு. சிறு வயதிலேயே வறுமையின் வலியை அனுபவித்தவள். தனது குடும்பத்தின் மீது அளவுகடந்த பற்று இருந்த போதும், தனது குடும்பத்தின் சுமையை சுமக்க வேண்டிய மூத்த பிள்ளையாக இருந்தும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தாய்மண்ணை காக்க ஓடி வந்தவள். அவளுக்கு அடுத்து பிறந்த அவளது தம்பி மீது அளப்பெரும் அன்பு கொண்டவள். அவன் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தை நன்றாகப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள் . கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அவள் தனது தம்பிக்கு வாழ்க்கையை புரியவைக்கும் முகமாக கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், குடும்பத்தை பொறுப்போடு பார்க்க வேண்டும் என்றும் கடிதம் மூலம் எழுதி அனுப்புவாள். அவளின் விருப்பம் போலவே அவளுடைய தம்பியும் படிப்பில் மிகவும் சுட்டி. இறுதி யுத்தத்தின்போது அனைவரும் களமுனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டபோது சங்கவியும் மிக்க மகிழ்ச்சியுடன் களமுனைக்குச் சென்றாள். 10.02.2009 அன்று தொலைத்தொடர்பு சாதனம் எடுப்பதற்காக எமது இடத்துக்கு வந்திருந்தாள் .என்னுடன் கதைக்க வேண்டும் என்று என்னிடம் வந்தாள் என்றுமே இல்லாதவாறு அவளுடைய முகம் மிகவும் வாடி இருந்தது. ஸ்ரீலங்கா இராணுவம் நடத்தும் கொடூரமான யுத்தத்தால் தன்னுடைய தம்பியின் கல்வி தொடர முடியாமல் போனதையும், தனது குடும்பச் சூழலையும் நீண்ட நேரமாக கண்ணீருடன் பகிர்ந்து கொண்டாள். எந்த ஒரு விடயத்தையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதவள் நீண்ட நேரமாக என்னிடம் தன்னுடைய ஆதங்கங்களை சொல்லிக் கொண்டிருந்தபோது எனக்குள் ஒருவித ஆச்சரியம் ஆனாலும் அவளுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன். செல்லும் போதும் திரும்பத் திரும்ப “அக்கா என்னை மறந்துடாதையுங்க” என்றாள் . அவளுடைய பேச்சிலும்,செயலிலும் கண்டுகொண்ட மாறுதல்களால் கலவரம் அடைந்தாலும் “ஒரு தாயால் எப்படி தன் குழந்தைகளை மறக்க முடியும்” என சிரித்தபடி சொன்னேன். அவளைப் பார்க்கும் இறுதிக் கணங்களும் அவளுடன் நான் பேசும் இறுதி வார்த்தைகளும் இவைதான் என்பது தெரியாமல்…..????? அவள் என்னிடம் பேசிச் சென்ற அடுத்த நாள் 11.02.2009 அன்று தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வல்லிபுனம் என்ற ஊரில் எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில்…… தன்னை ஆகுதி ஆக்கிக் கொண்டாள். சிறந்ததோர் அணித் தலைவியாக கொடுக்கப்பட்ட பணியினை சிறப்புடன் ஆற்றி இறுதி மூச்சு உள்ளவரை எதிரியுடன் சமராடி , அவள் உயிரிலும் மேலாக நேசித்த அன்னை மண்ணை முத்தமிட்டாள் . மறக்கவே முடியாத உறவுகளில் இவளும் ஒருத்தி .அடிக்கடி இவளின் நினைவுகள் எனக்குள் சுழன்றடிக்கும். தேநீரை தானே தயாரித்துத் தந்துவிட்டு குடித்த பாதி தேனீருக்காக காத்திருப்பாள் .சிலவேளைகளில் காத்திருப்பதை மறந்துபோய் பருகி விட்டால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அன்று முழுவதும் அமைதியாகி விடுவாள். எனது மகள் பிறந்திருந்த போது என்னிடம் வந்தாள். போகும்போது என்னிடம் ஒரு கவரை தந்து “அக்கா பிள்ளைக்கு ஒரு சட்டை வேண்டிவந்திருக்கிறேன். என்னிடமிருந்த காசுக்கு வேண்டினான் நீங்க பிள்ளைக்கு போடூறீங்களோ தெரியாது ,நான் போன பின்பு பிரித்துப் பாருங்கள் “என்றாள். அவள் போன பின்பு பிரித்துப் பார்த்தேன் மிகக் குறைந்த விலையில் மிக மிக அழகான ஒரு சட்டை இருந்தது . அவளுடைய குடும்ப சூழலுக்கு அந்தப் பணம் எவ்வளவு பெறுமதியானது என்பது எனக்கு தெரியும். .அந்த சட்டையை ஒரு பொக்கிஷம் மாதிரி பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி னேன். இடப்பெயர்வின் போது மிகவும் முக்கியமான பொருட்களை கூட நான் மறந்து விட்டுச் சென்றிருந்தேன். ஆனால் அவளுடைய அந்த நினைவுப்பரிசை பத்திரப்படுத்தி எடுத்துச் சென்றேன்….. இவ்வாறு பல நினைவுகளை என்னிடம் விட்டுச்சென்ற என் தங்கையே உன் நினைவுகளில் மூழ்கும் போதெல்லாம் என் இதயத்தில் ஏற்படும் வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது…. நீங்கள் இல்லாத இந்த உலகத்தில் உயிர் இருந்தும் வெறும் வெற்று கூடுகளாக வாழ்வது எத்தனை நரக வாழ்க்கை என்பதை தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் உங்கள் நினைவுகளுடன்…….🙏💐 கலைவிழி
-
கப்டன் சிறிமதி / சிறீமதி
அன்றைய நாள் மிகவும் சோகமாக விடிந்தது போலத் தோன்றியது. மனதில் ஏதேதோ நெருடல்கள். நெஞ்சம் கனத்தது. ஏனென்றே தெரியவில்லை, எதையோ இழந்துவிட்டதுபோல் தவிப்பு உண்டானது. சக போராளிகள் இருவர் வந்தனர். இவர்கள் முகங்களிலும் சோகம். காரணத்தை அறிய மனம் துடித்தது. “உங்கட றெயினிங் மாஸ்ரர் சிறீ மதியல்லோ வீரச்சாவு” “ஆ………..? சிறீமதியக்காவோ ? எங்க ” “மணலாத்தில…………” நான் அழவும் முடியாமல், கதைக்கவும் முடியாமல், வாயடைத்துப் போனேன். சிறீமதி, உறுதியும், துணிச்சலும், தனக்கு கொடுக்கப்பட்டவேலையைப் புரிந்து கொண்டு செயற்படக்கூடிய திடகாத்திரமான உள்ளமும் படைத்தவள் அவள். அல்லிப்பளையில், ஒருநாள் மண்வெட்டி வாங்குவதற்காக வீடொன்றுக்குச் சென்றோம். எம்முடன் சிறீமதியும் வந்தாள். அங்கே எம்மை வரவேற்றவர் ஒரு வயோதிபத் தாய் சுகவீனமுடையவர். இருந்தாலும், தன்னால் இயன்றளவுக்கு எம்மை உபசரித்து, தேநீர் தயாரித்துத் தந்தார். நாங்கள் தேநீரை ஆவலோடு பார்த்தவண்ணம் இருக்க, சிறீமதியோ ஓடிச்சென்று, அம்மாவிடம் இருந்து தேநீரை வாங்கி எல்லோருக்கும் பரிமாறத் தொடங்கினாள். தாயோடு பிள்ளையாக, மக்களோடு மக்களாக ஒன்றுபடுகின்ற அந்தப் பண்பு அவளோடு கூடவே பிறந்தது. இன்னொரு நாள், நாம் பதுங்குகுழி வெட்டிக் கொண்டிருந்தோம். எமக்கு உதவியாக மக்களும் சேர்ந்து வெட்டிக் கொண்டிருந்தார்கள். மதியமாகி வெகு நேரத்திற்குப் பின்னரும் உணவு வரவில்லை . எமக்கு உதவியாகப் பதுங்குகுழி வெட்டிக் கொண்டிருந்த மக்கள் பசியுடன் இருக்கின்றார்களே என்ற எண்ணம் மனதை உறுத்த, உணவு வரும் வழியைப் பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போன சிறீமதி, பக்கத்தில் ஒரு சைக்கிளை வாங்கிக் கொண்டு நாம் தங்கியிருந்த இடத்திற்குப் போனாள். அங்கே நின்ற ஏனைய போராளிகள் ஏதோ வேலையாக இருந்ததால் அவர்கள் உணவை எடுத்து வருவதற்குத் தாமதமாகி விட்டது. வேகமாக வந்திறங்கிய சிறீமதியைக் கண்டதும், அவள் கோபமாக இருப்பது எல்லோருக்கும் விளங்கிவிட்டது. எல்லோரும் பதட்டத்துடன் இருந்தார்கள். “ஏன் இவ்வளவு நேரமும் சாப்பாடு கொண்டு வரேல்லை? வேலை செய்யிறசனங்கள் பாவமல்லோ ?” என்று பொரிந்து தள்ளிவிட்டு, உணவை எடுத்துக் கொண்டு, போனவேகத்திலேயே திரும்பி வந்துவிட்டாள். இவளுக்கு இரண்டு ஆண் சகோதரர்களும், இரு சகோதரிகளும் இருக்கிறார்கள். அவளது சகோதரன் ஒருவர் எமது முழுநேர உறுப்பினராகக் கடமையாற்றுகிறார். இவள் தனது பாடசாலை நாட்களில் சக மாணவர்களினதும் ஆசிரியர்களினதும், மதிப்பைப் பெற்றிருந்தாள். படிப்பிலும், விளையாட்டிலும் கலை நிகழ்ச்சிகளிலும் முன்னணியில் திகழ்ந்தாள். தான் படித்த ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர் ஒன்றியத் தலைவியாகவும், அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர் அமைப்பு உறுப்பினர்களுக்குப் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டாள். இவள் சமகால நிகழ்வுகளையும், அரச படைகளால் மக்கள்படுகின்ற அவலங்களையும் கலைப் படைப்புக்களினூடாக மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாள். அத்தோடு பெண்களை விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்காக அணிதிரட்டுவதிலும் ஈடுபட்டாள். இப்படியிருக்கும் போது, ஒரு நாள் தன் தாயிடம், “அம்மா, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இயக்கத்துக்கு ஆட்களை எடுக்கிற வேலையையே செய்து கொண்டிருக்கிறது? இயக்கத்திலே சேரப்போறன்” என்று கேட்டாள். அந்த வீரத்தாயும் மறுப்பேதும் சொல்லாமல், மகளைக் கூட்டிச்சென்று எம்மவரோடு இணைத்துவிட்டாள். எவராலும் அடக்கமுடியாத மதங் கொண்ட யானையைப் பிடித்துக் கட்டிய ‘அரியாத்தை ‘ பிறந்த முல்லைத்தீவு மண்ணிலேதான் சிறீமதியின் தாயும் பிறந்தவள் அல்லவா? அரியாத்தையின் வீரமும் உறுதியும் அவளிடமும் இருக்கத்தானே செய்யும்? பயிற்சியை முடித்த சிறீமதி அரசியல் வேலைக்கென நியமிக்கப்பட்டு, மணலாற்றில் தனது வேலையைத் தொடங்கினாள். அப்போதுதான், ஆயிரக்கணக்கான போராளிகளை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் அவளிடம் உண்டானது. அவளது எண்ணத்துக்கு ஏற்ப, அவளின் திறமையால் பயிற்சியாசிரியராக நியமிக்கப்பட்டாள். பதின்மூன்றாம் பயிற்சி முகாமுக்குத் துணையாசிரியராக இருந்த சிறீமதி, சிறீலங்கா இராணுவத்துக்கெதிரான எமது முதலாவது மரபுவழிப் போரான ஆகாயக்கடல் வெளித்தாக்குதலுக்கு உதவிக் குழுவாகச் சென்றாள். தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். இவள் மீது பொறாமை கொண்ட தடியொன்று இவளின் காலைப் பதம் பார்த்துவிட்டது. அந்தப் புண் நாளடைவில் பெரிதாகிவிட்டது. நடப்பதற்குக்கூடச் சிரமப்பட்டாள். இழுத்து இழுத்துத்தான் நடக்க முடிந்தது. ஆனாலும் தளரவில்லை . போர் ஒரு முடிவுக்கு வரும்வரை தனது பணியைத் தொடர்ந்து செய்தாள். அங்கிருந்து திரும்பியதும் மீண்டும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்களைப் புதிய போராளிகளாக மாற்றியமைத்தாள். ஒருமுறை, எமக்குப் பயிற்சி நடந்துகொண்டிருந்தது. களைப்பு மிகுதியால் காவற்கடமையில் இருப்பவர்கள் தவிர, மற்றவர்கள் நித்திரைக்குச் சென்றுவிடுவார்கள். இரவில் சாப்பிடுவது பெரும்பாலும் குறைவு. உடல் அலுப்பால் உறங்கிவிடுவார்கள். எஞ்சுகின்ற உணவு கொட்டப்படும். இதைக்கண்ட பயிற்சி முகாம் பொறுப்பாளர் சிறீமதியைக் கூப்பிட்டார். “சிறீமதி, ஒருக்காப் போய் உன்ர பிள்ளையள் இருக்கற அறையளுக்குப் பின்னாலை பார், எவ்வளவு சாப்பாடு கொட்டிக்கிடக்குது எண்டு. நாளைக்கு முழுக்க அவையளுக்குச் சாப்பாடு குடுக்கக்கூடாது. அப்பத்தான் தெரியும் சாப்பாட்டின்ரை அருமை” என்று சொல்லிவிட்டார். மறுநாள் காலை பயிற்சியை முடித்துக்கொண்டு எல்லோரும் வரிசையில் இருக்கிறோம். எங்களிடம் வந்த சிறீமதி கண்டிப்பான தொனியில், “ஏன் பிள்ளையள் இவ்வளவு சாப்பாட்டையும் கொட்டியிருக்கிறியள்? இரவிலை ஏன் ஒருதரும் சாப்பிடுறதில்லை ? இப்படி இரவில சாப்பிடாமவிட்டா விடிய என்னெண்டு றெயினிங் எடுக்கிறது?” என்று, தொடர்ந்து ஒரு குட்டிப் பிரசங்கம் செய்துவிட்டு, “இண்டைக்கு முழுக்க நீங்க ஒருதரும் சாப்பிடக்கூடாது. அப்பத்தான் உங்களுக்குச் சாப்பாட்டின்ர அருமை தெரியும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அன்று முழுவதும் எவருமே சாப்பிடவில்லை . இவளும் சாப்பிடவில்லைத்தான். நாங்கள் எவ்வளவோ கெஞ்சியும் இவள் சாப்பிடவில்லை. வழமைபோல் நாளாந்தப் பயிற்சியை முடித்தபின் இரவு சாப்பிடாமல் படுத்த ஒவ்வொருவரையும் எழுப்பி, சாப்பிடவைத்து நாங்கள் சாப்பிட்டபின் தான் அவள் சாப்பிட்டாள். அந்த நேரத்தில் அவளது உணர்வு, எங்களின் உணர்வுகள் எப்படி இருந்தனவென்று வார்த்தைகளால் சொல்வது கடினம். அன்னையின் அரவணைப்பில் உள்ளது போல், அதற்கும் மேலே மேலே… உணர்ந்தோம். பிள்ளைகளைத் தண்டிக்க விரும்பாத சிறீமதி அடிக்கடி கூறுவது இதுதான்.”பிள்ளையள், சும்மா சும்மா குழப்படி செய்து அநியாயமாப் பனிஸ்மென்ற் வாங்காதேங்கோ”. பயிற்சியை முடித்த பின்னர் எமது குழுக்களில் ஒரு பகுதி தொண்டைமானாறுக்குச் சென்றது. அதற்குத் தலைமை தாங்கியவள் சிறீமதிதான். அங்கிருந்து வளலாய் இராணுவ முகாமுக்குக் காவற்கடமையைச் செய்வதற்காகச் சென்றுவருவோம். எந்த நேரமும் இராணுவம் முன்னேறலாம், சண்டை தொடங்கலாம் என்பதால் எதிரியை எதிர்பார்த்தே நின்றோம். அப்போது எங்களுக்குப் போர் அனுபவம் எதுவுமில்லை . “பிள்ளையள், பயப்பிடக்கூடாது, நல்லா அடிபடோணும். அதுக்காக மோட்டுத்தனமாய்ப் போய்மாட்டுப்படக்கூடாது. கவனமா, நிதானமா அடிபடோணும், என்ன ?” என்ற இவளுடைய வார்த்தைகள் எம்மை உறுதியாக்கும். போருக்குத் தயார்படுத்தும். இவளுடன் நாம் இல்லாவிட்டாலும், எம்மை எங்காவது காணும் பொழுதுகூட எம்மில் கவனம்தான். “என்ன பிள்ளையள் இந்த உடுப்பின்ர நிறம்? ஒழுங்காத் துப்பரவா இருக்கிறதுக்கென்ன, ஆ?” என்று செல்லமாகக் கண்டிப்பாள். அப்போது, எமது இதயபூமியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறீலங்கா இராணுவத்தினர் மீண்டும் காட்டுக்குள் முன்னேறமுயன்றனர். எதிரியுடன் மோத எமது படையணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. சிறீமதிக்கோ புதிய போராளிகளுக்குப் பயிற்சி கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. விடுவாளோ அவள்? மகளிர் படையணியின் தளபதியிடம் போய்ச் சண்டைபிடித்தாள். “என்னைச்சண்டைக்குப் போகவிடுங்கோ. போயிட்டு வந்து றெயினிங் குடுக்கிறன்” இறுதியில் சிறீமதியின் பிடிவா தந்தான் வென்றது. சண்டைக் குச் சென்றாள். போர்முனைக்குப் போகும் போது, மீண்டும் ஒரு புறநானூறு எழுந்தது. மகளிர் படையணியினர் பயணம் செய்த வாகனம், போகும் வழியில் சிறீமதியின் வீட்டு வாசலின் முன்னால் பழுதடைந்து நின்றுவிட்டது. வாகனத்தைத் திருத்துவதற்கு இவளது குடும்பத்தினர் உதவி செய்தனர். தமிழீழத்தின் வீரத் தாய்மாருள் ஒருத்தியும் சிறீமதியின் அன்னையுமான அந்த மாதர்குல மாணிக்கம்,”நல்லாச்சண்டை பிடிச்சு, அவங்களை அடிச்சுத்திரத்திப் போட்டு வெற்றியோட வாங்கோ” என்று தன் மகள்களை ஆசிர்வதித்து, விடைகொடுத்தாள். தன்பெண் குழந்தைகளை ஒரு தாய் போருக்கு அனுப்பும் புதிய புறநானூறு ஒன்று அங்கே எழுதப்பட்டது. இதுதான் இந்த மண்ணுக்கேயுரிய இயல்பு. வாகனம் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தது. சிறீமதி திடீரென்று தன் மனதில் ஏதோ நினைத்தவளாய்… கண் கலங்க தனக்கருகில் இருந்த தோழியிடம் கூறுகிறாள். “நான் இயக்கத்துக்கு வந்ததற்கு ஒரு நாள் கூடக் கவலைப்படேல்ல. இப்ப அம்மா, அப்பா, சகோதரங்களையும் கண்டிட்டன். ஆனா உயிரையும் விடப் பெரிசெண்டு தான் நினைக்கிற இந்த மண்ணையும், மக்களையும் காக்கவெண்டு வெளிக்கிட்டவரைத்தான் காணேல்ல. அதுதான் எனக்கு இப்ப கவலையா இருக்கு”. அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. போர் முனையைப் படையணிகள் அடைந்துவிட்டன. சிறீமதி ஒரு குழுவுக்கு தலைமை தாங்கினாள். எதிரியிடமிருந்து எண்ணற்ற ரவைகளும் குண்டுகளும் எம்மை நோக்கிவந்து கொண்டிருந்தன. “செல் குத்துறான். எல்லாரும் கவரில நிண்டு அடிபடுங்கோ ” “கவனமா ஒருதரையும் விடாம தூக்கிக்கொண்டு போங்கோ” சிறீமதியின் குரல் முன்னணியில் நின்று வழி நடத்திக் கொண்டிருந்தது. எதிரியிடம் இருந்து வந்த எறிகணை ஒன்று தன்னிடம் இருந்து இவள் எல்லோரையும் தப்பவைக்கிறாளே என்ற கோபத்தினாலோ என்னவோ, இவளது தலையைச் சீவிச்சென்றது. ரீ81 துப்பாக்கியையும், வோக்கியையும் தனது இருகைகளாலும் அணைத்துப் பிடித்தபடி, விழுந்த சிறீமதியின் வாயிலிருந்து . “பிள்ளையள்” என்ற ஒரு சொல் மாத்திரமே வந்தது என்று, அவளோடுகளத்தில் நின்ற தோழிகள் விம்மலுடன் கூறினார்கள். முல்லைமண்பெற்றெடுத்த புதல்வியின் குருதியால், எமது இதயபூமி தன் வளத்துக்கு மேலும் உரம் சேர்த்துக்கொண்டது. அவள் காவல் செய்த தொண்டைமானாற்றுக் கடலோ தனது அலைகளை உயர்த்தி, “சிறீமதி எங்கே? எங்கே?” என்று தேடுகிறது. இவளின் அக்கா மகன் தீபன், “அன்ரி அன்ரி” என்று, வீட்டுக்கு வரும் பெண் போராளிகளில் சிறீமதியைத் தேடுகிறான். அவள் வளர்த்தெடுத்த புதிய தலைமுறைகளோ அவளின் இலட்சியக் கனவுகளையும், ஆசைகளையும் சுமந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். – உலகமங்கை – –களத்தில் இதழ்
-
படைக்கல பாதுகாப்பு அணியின் கணக்காளர் சுகுமார்
தமிழீழத்தின் வளம்மிக்க கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுர கிராமத்தில் இராசு ரட்ணசிங்கமாக 09/01/1980 ஆண்டு மூன்று சகோதரிகளுக்கு தம்பியாக பிறந்தான் மிகவும் செல்லமாக வளர்ந்து வந்தான் அவனது சிறுவயதில் தந்தை இறந்துவிட தாயார் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பிள்ளைகளை படிக்கவைத்து வளர்த்து வந்தார் இவனை எல்லோரும் சுதா என்றே அழைத்துவந்தனர் பாடசாலை கல்வி கற்றுவந்த வேலையில் யாழ்ப்பாணத்தை சிறிலங்கா படைகள் ஆக்கிரமித்ததன் விளைவாக பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வன்னியில் குடியேறியிருந்தனர் அதன்படி தர்மபுர கிராமத்திலும் மக்கள் குடியேறியிருந்தனர் அவனுக்கு போரின் தாக்கம் அவனை பாதிக்க தொடங்கிய வேலை கிளிநொச்சி யை இராணுவம் ஆக்கிரமித்தவுடன் விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்து கொள்கிறான். அதன்படி 1996 ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து லெப்.கேணல் இம்ரான் பாண்டியன் படையணியில் மேஜர் மாறன் -01 பயிற்சி முகாமில் சுகுமார் என்கிற இயக்கபெயருடன் ஆரம்ப பயிற்சியை பெற்றான். பயிற்சியில் நல்ல திறமையாக செயற்பட்டான் அதேவேளை அவனுக்கு திடகாத்திரமான உடலமைப்பும் குறிபார்த்து சுடுவதிலும் வல்லவனாக இருந்தபடியால் ஆரம்ப பயிற்சி நிறைவுற்கு பின் தாக்குதல் அணியாக பிரிக்கும்போது LMG இலகுரக கனரக ஆயுத சூட்டாளனாக தேர்வு செய்யப்படுகிறான். LMG பயிற்சி மனலாறு முகாமில் நடைபெற்றுக்கொண்டுயிருக்கும் போது சிங்களப்படைகளின் ஜெயசிக்குறு படைநடவடிக்கை ஆரம்பமாக போவதை அறிந்த புலிகள் அதனை தடுப்பதற்கு பல தாக்குதல் அணிகளை களமுனைற்கு அனுப்பினார்கள். அதில் சுகுமாரின் அணியும் கலந்து கொண்டு பலமுன்னேற்ற முயற்சிகளை முறியடிப்பதில் வீரத்துடன் ஈடுபட்டான். இராணுவத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கில் முன்னரங்கில் நின்றவேளை தவறுதலான சூட்டில் சுகுமார் கையில் காயப்பட்டு சிகிச்சைற்காக பின்நகர்த்தப்பட்டான். காயம் மாறியபின் தான் சண்டைக்களத்திற்கு போகவேணும் என்கிற எண்ணத்தை தனது படையணி சிறப்புத்தளபதிற்கு தெரியப்படுத்தினார். ஆனால் அவர் அவனை தொலைத்தொடர்பு கற்கைநெறிக்கு அனுப்பிவைத்தார். விருப்பமில்லாமல் சென்றாலும் தொலைத்தொடர்பு கல்வியை சிறப்பாக கற்றுதேர்ந்தான். இந்த காலத்தில் சண்டைற்கு செல்லும் எண்ணம் நிறைவேறாத காரணத்தாலும் சிங்களப்படைகளுக்கு எதிரினான தனது ஓர்மத்தை வெளிப்படுத்தும் நோக்கில் தன்னை கரும்புலிகள் அணிற்கு தேர்வு செய்யும்படி சிறப்புத்தளபதி கடாபியண்ணாவுற்கும் தமிழீழ தேசியத்தலைவருக்கும் தொடர்ச்சியாக பல கடிதங்களை அனுப்பியும் அவனது முயற்சி பயன் அளிக்கவில்லை. ஆனால் கடாபியண்ணாவின் நன்மதிப்பை பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகவும் இரகசியம் வாய்ந்த தேசியத்தலைவரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் படைக்கல பாதுகாப்பு அணிற்கு தொலைத்தொடர்பாளனாக 1998 ஆரம்ப காலத்தில் அனுப்பபட்டான். படைக்கல பாதுகாப்பு பணி அந்த காலத்தில் மிகவும் ஆட்பற்றாக்குறை கடுமையான வேலைப்பலுவுடன் இயங்கி வந்த நேரம். சுகுமார் தனிஒருவனாக 24 மணிநேரமும் தொலைத்தொடர்பு கடமையை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அதேநேரம் தாக்குதலுக்கான வெடிபொருட்களை பார ஊர்திகளில் ஏற்றி அனுப்ப வேணும் அத்தோடு விடுதலைப்புலிகளால் கொள்வனவு செய்து வரும் வெடிபொருட்களை முகாங்களில் களஞ்சியப்படுத்த வேணும் என பல வேலைகளை குறிப்பிட்ட போராளிகளே செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் தனது தொலைத்தொடர்பு கடமையோடு இரவுபகல் பாராமல் எல்லாவேலையிலும் சோர்வு இன்றி ஈடுபடுவான். 2000 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் போரியல் வெற்றியின் உச்சத்தில் இருந்த நேரத்தில் வெடிபொருட்களின் கணக்காளராக இருந்த திருமாலுக்கு உதவியாக சுகுமாரை பொறுப்பாளர் சுயாகியண்ணா நியமித்தார். சுகுமார் தனக்கு தந்த பணியின் இரகசியத்தையும் முக்கியத்தையும் உணர்ந்து மிகவும் ஈடுபாட்டுடன் வேலைசெய்து வந்தான்.2002 சமாதான காலப்பகுதியில் இம்ரான் பாண்டியன் படையணி இரண்டாக பிரிக்கப்பட்டு லெப். கேணல் ராதா வான்காப்புப் படையணி என்கிற புதிய படையணியின் பெயருடன் இருந்த படையணிற்குள் படைக்கல பாதுகாப்பு அணி இயங்கிவந்தது. புதிய படையணியின் நிதிப்பொறுப்பாளராக திருமால் 2003 செல்ல சுகுமார் படைக்கல பாதுகாப்பு அணியின் கணக்காளராக நியமிக்கப்பட்டான். சுகுமார் கணக்காளராக வந்த பின் வெடிபொருட்களின் மாதாந்த இருப்பு வரவுசெலவுகளின் கணக்கறிக்கை தேசியத்தலைவருக்கு அனுப்பிய விதம் வடிவமைப்பு தேசியத்தலைவருக்கு பிடித்து தலைவரின் பாராட்டுகளை பெற்றான். சுகுமாருக்கு எந்த ஆயுதம் எந்த வெடிபொருள் எந்த மாவட்டத்தில் எந்த களஞ்சியத்தில் பாதுகாப்பாக இருப்பில் உள்ளது என்கிற மனதிலே பதியவைத்துவிடுவான் அவனது திறமையான செயல்பாட்டை பார்த்து பொறுப்பாளரால் பீல்ட்பைக் மோட்டர்சைக்கிள் கொடுக்கப்பட்டுயிருந்தது தேசியத்தலைமையிடமிருந்து .ஆயுத வெடிபொருட்களை குறிப்பிட்ட படையணி அல்லது தளபதியிடம் கொடுக்க சொல்லி கட்டளை வந்தால் சுகுமாரின் பீல்ட்பைக் உறுமிக்கொண்டு போகும். 2006 நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான பின் சுகுமாரின் பணி கடுமையானது முக்கியமான வெடிபொருட்கள் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கவேணும் என்றால் தனி ஒருவனாகவே பார ஊர்திகளில் வெடிபொருட்களை ஏற்றி கொண்டுபோய் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுப்பான் அவனது கன்டர் வாகனம் எப்போதும் வெடிபொருட்களை ஏற்றிய வண்ணமே இருக்கும். இந்த காலப்பகுதியில் சுகுமார் முன்னர் கொடுத்த கரும்புலிகள் அணிற்கான கடிதத்திற்கான பதிலாக அவனை கரும்புலிகள் அணிற்கு வரும்படி அழைப்பு வந்தது சுகுமாரும் உற்சாகமாக கரும்புலிகள் அணிற்கு செல்ல தயார் ஆனான் ஆனால் பொறுப்பாளர் சுயாகியண்ணை சுகுமாரின் வேலையின் முக்கியத்தையும் தற்போதைய நிலையில் அவனை அனுப்பமுடியாமல் உள்ள காரணத்தையும் தேசியத்தலைவருக்கு தெரியப்படுத்தி அவனை தனது கடமையை தொடர்ச்சியாக செய்ய அனுமதி வேண்டினார் இதனால் சுகுமார் மீண்டும் மனமுடைந்தான் இருந்தபோதிலும் தனது வேலையின் முக்கியத்துவத்தையும் தன்மீது பொறுப்பாளர் மற்றும் தேசியத்தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கைற்கு ஏற்றார்போல் சிறப்பாக செயல்படவேண்டும் உத்வேகத்துடன் செயல்பட்டான். 2008 ஆண்டு சிங்களப்படைகள் வன்னியை ஆக்கிரமிக்க தொடங்க படைக்கல இருப்புமுகாங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு நாளாந்த மாறிக்கொண்டுயிருந்தது 2009 ஆண்டு ஐனவரி மாதம் விசுவமடுவை ஆக்கிரமிக்க சிங்களப்படைகள் முன்னேறிவர படைக்கல பாதுகாப்பு அணியின் பிரதான தளமும் கைவிடப்பட்டு வெடிபொருட்கள் பின்நகரத்தப்பட்டன. தேசியத்தலைவருக்கும் மட்டுமே தெரிந்த விடுதலைப்புலிகளின் ஆயுதப்பலம் சுகுமாருக்கும் தெரியும் ஏனெனில் கடந்த 9 வருடங்களாக எவ்வளவு ஆயுத வெடிபொருட்கள் எமது அமைப்புற்கு வந்தது அது எந்தெந்த படையணிற்கு எவ்வளவு கொடுத்தது என்பதை அறிந்தவன் முள்ளிவாய்க்கால் மண்ணில் மே 15 திகதிவரை தேசியத்தலைவரின் கட்டளைற்கு அமைய ஆயுத வெடிபொருட்கள் வினியோகத்தை செய்தவன் அன்றிறவு தேசியத்தலைமையுடன் முள்ளிவாய்க்கால் முற்றுகையை உடைத்து வெளியேறும் அணியில் படைக்கல பாதுகாப்பு அணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு பேரில் ஒருவனாக புறப்பட்டான் ஆனால் பிரிகேடியர் சொர்ணம் வீரச்சாவுடன் அந்த நாள் திட்டம் கைவிடப்பட, அடுத்த நாள் பகல் வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையில் வீதியோரமாக சுகுமாரின் அணிகளை பாதுகாப்பாக இருக்கும்படி கட்டளை கொடுக்கப்பட்டுயிருந்தது ஆனால் மக்களும் பெருமளவில் வெளியேற மக்களை கேடயமாக வைத்து இராணுவம் முன்னரங்க பாதுகாப்பை உடைத்துகொண்டு சுகுமாரின் அணிகள் நின்ற இடத்தை நெருங்கிவந்துவிட்டது உடனடியாக இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கில் சுகுமாரின் அணி முன்னேற்றத்தை முறியடிக்கும் கடும எதிர்தாக்குதலை மேற்கொண்டு முன்னேற்ற முயற்சியை தடுத்தனர் ஆனால் 16/05/2009 அன்று மாலைப்பொழுதில் சிங்களப்படையின் தாக்குதலில் வீரச்சாவடைந்தான். விடுதலைப்புலிகளின் படைக்கல பலத்தை முழுமையாக அறிந்த இரகசியகாப்பாளன் முள்ளிவாய்க்கால் மண்ணில் தன் மூச்சை நிறுத்தினான்.
-
லெப்.கேணல் அன்புமணி(திவாகர்)
நான் நடுராத்தியில் பல தடவை நித்திரையில் இருந்து எழுப்பியிருக்கின்றன். எந்தவித சலிப்பின்றி அவரே வந்து வேலை செய்து தருவார். பிரின்ரர் சிலவேளைகளில் வேலைசெய்யாமல் இருக்கும், சிலவேளைகளில் ரோணர் பிரச்சினையாக இருக்கும், உடனயாடியாக அன்புமணி அண்ணையிடம் ஓடிபோனா காணும், வேலை முடிஞ்சதிற்கு சமன். தன்னுடைய இடத்திலே வேலை செய்ய சொல்லிவிடுவார். யாருடைய வெளியீடு என்றாலும் உதவி என்று கேட்டால், எந்த மறுப்பின்றி உரிய நேரத்திற்குள் செய்து கொடுக்கும் அன்புமணி அண்ணையை இழந்து 12 ஆண்டுகளை கடக்கின்றோம். விடுதலைப்புலிகளின் உத்தியோக பூர்வ ஏடான “விடுதலைப்புலிகள்” பத்திரிகையின் இதழ் -01 தொடக்கம் 138 வரையான பதிப்புக்களை இணையத்தில் அனைவரும் பார்வையிடலாம். அந்த பணிகளுக்கு உரித்தானவர் இவரே. ஆவணப்படுத்தல்களை மிகவும் அக்கறையாக செய்து முடித்தவர். அவரையும் இந்நாளில் நினைவு கூருகின்றேன். “அன்புமணி அண்ணை எப்பொழுதும் எங்களோடயே இருப்பார்.”
-
கணக்கிலும் களத்திலும் க(ச)ளைக்காத பூம்பாவை!
வைகாசி மாதம் வருகின்றதென்றால் அது ஓர் இருள் சூழ்ந்த மாதமாகவும், மனதில் கவலைகள் பெருகி குரல்வளையை நெரிக்கின்ற ஓர் உணர்வையும் தரும். இம் மாதத்திலே எங்களோடு இருந்த எத்தனையோ நூற்றுக்கு மேற்பட்ட போராளிகளை இழந்துள்ளோம். அவர்கள் இறுதிவரை நின்று களமாடியும், அவர்களது இவ்வுலக இருப்புப்பற்றி உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் நாங்கள் இன்னும் எத்தனையோ மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்த முடியாத நிலையில், ஓர் ஆண்டின் பின்போ அல்லது மூன்று, ஐந்து ஆண்டுகளின் பின்போ அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் ஊமைகளாக உள்ளோம். அந்த வகையில் எங்களோடு நிதித்துறை கணக்காய்வுப் பகுதியில் இருந்து இறுதிப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பூம்பாவை அக்காவைப் பற்றி எழுத நான் கடமைப்பட்டுள்ளேன். 1995ஆம் ஆண்டு மார்கழி மாதம் நானும் இன்னும் நான்கு போராளிகளும் அடிப்படைப் பயிற்சி முடித்து ஒரு இரவு நேரத்தில் நுணாவில் பகுதியில் இருந்த நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு கொண்டு வந்து விடப்பட்டோம். நாங்கள் அங்கு சென்றடைந்த போது இரவு 8 மணி இருக்கும். அங்கே நிறைய அக்காக்கள் பெரிய மண்டபத்தில் (hall) எல்லோரும் ஒவ்வொரு மேசையில் இருந்து பெரிய பெரிய கணக்கேடுகளில் பச்சைநிற எழுதுகோலை வைத்துக்கொண்டு அங்க பார்த்து இங்கயும் இங்க பார்த்து அங்கயும் சரி போட்டுக் கொண்டு இருந்தார்கள். (அப்ப எங்களுக்கு பெரிய பெரிய புத்தகங்கள் காசேடு, பேரேடு என்றும் பச்சைப் பேனையால கணக்காய்வு செய்யினம் என்றும் தெரியாது). அப்போது ஒரு அக்கா வந்து “பிள்ளைகள் இரவு ஆயிட்டுது அந்த அறையில் கொண்டு போய் உங்கட பைகளை (bags) வைச்சிட்டு வந்து முகம், கைகால கழுவிப்போட்டு வந்து சாப்பிட்டிட்டு படுங்கோ”என்றார். எங்களுக்கும் வந்த புதுசு தானே நல்ல பிள்ளைகளாக போய் சாப்பிட்டு விட்டு வந்து பயணம் செய்து வந்த களைப்பில் தூங்கி விட்டோம். அடுத்த நாள் காலை 4.30 மணியளவில் ஒரு அக்கா வந்து “பிள்ளைகள் எழும்பி போய் காலைக் கடன்களை முடித்து விட்டு சத்தியப் பிரமாணத்துக்கு வாங்கோ” என்றார். நாங்களும் காலைக் கடன்களை முடித்து விட்டு சத்தியப் பிரமாணம் எடுத்து விட்டு வந்தோம். நாங்கள் வந்த புதிது என்றபடியால் எங்கள் ஐவரையும் அன்று மட்டும் முகாமில் விட்டு விட்டு மிகுதி எல்லோரும் ஓட்டப் பயிற்சிக்கு சென்று விட்டு வந்தார்கள். மக்கள் குடியிருப்புக்குள் எங்கள் முகாம் இருந்தபடியால் விடிவதற்கு முன் ஓட்டப் பயிற்சியை முடித்து விட்டு வர வேண்டும். நாங்கள் ஐவரும் குளித்து சீருடை அணிந்து வரவேற்பறையில் வந்து இருந்தோம். ஒவ்வொரு அக்காமாரும் வந்து தங்களை அறிமுகப்படுத்திவிட்டுப் போனார்கள். அப்போது உயர்ந்த மெல்லிய வெள்ளை நிற கம்பீரமான தலையை இரண்டாக பின்னி வளைத்து கட்டிய, வெள்ளை நிற மேற்சட்டையும் கறுப்பு நிற நீளக்காற்சட்டையும் இடுப்பில் கறுப்பு நிற பட்டியும் அணிந்த படி ஒரு உருவம் எங்களிடம் வந்து தனது பெயர் பூம்பாவை என்று அறிமுகம் செய்தது. பெயருக்கு ஏற்ற மாதிரி மிகவும் அழகான கம்பீரமான எவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிற தோற்றம் பூம்பாவை அக்கா. அறிமுகப்படலத்தின் போது சொந்த ஊரை விசாரித்த போது நானும் அவாவும் ஒரே ஊர். என்னை தனது ஊர்க்காரி என்று தான் அழைப்பார். இப்படித் தான் எனக்கும் பூம்பாவை அக்காவுக்குமான உறவு ஆரம்பித்தது. தெல்லிப்பளை,யாழ்ப்பாணம் பூம்பாவை அக்கா யாழ்ப்பாணத்தின் வலிகாமப் பகுதியிலுள்ள தெல்லிப்பளை எனும் ஊரில் திரு.திருமதி சண்முகலிங்கம் இணையருக்கு மகளாக ஜெயசக்தி எனும் இயற்பெயருடன் 01.11.1971 அன்று பிறந்தார். அவர் சிறு அகவை முதல் படிப்பு, விளையாட்டு இரண்டிலும் முதன்மை நிலை வகித்தார். மேலும் கவிதை எழுதுதல், சிறுகதை எழுதுதல் போன்றவற்றிலும் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். 1990 – 1991 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் வர்த்தகப் பிரிவில் தோற்றி சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர். பல்கலைக்கழகத்திற்கான அனுமதி கிடைத்தும் தாய் நாட்டின் மீதும் மக்களின் மீதும் தலைவர் மீதும் இருந்த பற்றின் காரணமாக பல்கலைக்கழகக் கல்வி பயிலும் வாய்ப்பையும் தூக்கி எறிந்து விட்டு எமது போராட்டத்தில் 1992 இல் இணைந்தார். முதலில் அரசியற்துறையில் இருந்து பின்பு 1993 ஆம் ஆண்டில் நிதித்துறை கணக்காய்வுப்பகுதிக்கு வந்தார். அங்கு தான் அவரின் ஆற்றலும் ஆளுமையும் திறமையும் வெளிப்பட்டது. எமது நிதித்துறைக் கணக்காய்வுப் பகுதியின் மிகப் பெரிய ஆளுமையாக அவர் இருந்தார். ஆரம்ப காலத்தில் அவர் சேரன் வாணிபத்தின் எழிலகம், புடவை வாணிபங்களில் கணக்காய்வை மேற்கொண்டார். பின்பு அவரின் திறமை கண்டறியப்பட்டு நீண்டகாலம் கடைசி வரை நகை வாணிப கணக்காய்வு அணிக்கு பொறுப்பாளராகத் திறம்படச் செயற்பட்டார். வன்னியில் குப்பி விளக்கின் உதவியுடன் தரையில் பாய் விரித்து அதில் வாணிபங்களின் ஆவணங்களை எல்லாம் விரித்து வைத்தபடி இரவிரவாக உறக்கமில்லாமல் கணக்காய்வு செய்வார். வேலை என்று வந்துவிட்டால் அவருக்கு உணவு, தண்ணீர், உறக்கம் எல்லாம் மறந்தேபோகும். வேலையை முடிக்க வேண்டும் என்பதை மட்டுமே நினைவிற் கொண்டு செயற்படுவார். (அப்போது வன்னியில் மிகவும் கடினமான போராட்ட சூழல் நிலவிய காரணத்தினால் முகாம்களில் வசதியான முறையில் பணிபுரிய முடிவதில்லை. ஏதோ கிடைத்த வளங்களைக் கொண்டு தான் நிறைவான முறையில் எங்கள் பணிகளை மேற்கொள்வோம்). அந்தக் காலப்பகுதியில் காணப்பட்ட ஆளணிப் பற்றாக்குறையின் காரணமாக ஒரு போராளி பத்து பணியாளர்கள் புரியும் வேலையை தனி ஒருவராக நின்று பணிபுரியும் அளவிற்கு எமது அமைப்பினால் கற்கைநெறிக்குள் உள்வாங்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டு, புடம் போடப்பட்டனர். அந்த வகையில் பூம்பாவை அக்காவும் தனது கணக்காய்வுப் பணியினை கூடுதல் பணிச்சுமைக்கு நடுவிலும் தனது பணியினை திறம்பட அர்ப்பணிப்புடன் மேற்கொண்டார். நிறுவனங்களில் கணக்காய்வுப் பணிகளை மேற்கொள்ளும் போது பணியாளர்களுடன் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் அதே வேளை தேவையான போது கண்டிப்பாகவும் மிகவும் ஆளுமையுடனும் செயற்படுவார். பூம்பாவை அக்கா இருக்கும் இடத்தில் எப்போதும் கலகலப்புக்கு குறைவிருக்காது. எப்போதும் நகைச்சுவையாகவே பேசுவார். முன்னர் அவர் அரசியற்துறையில் இருந்தபோது யாழ்ப்பாணம் பண்ணையில் இருந்து மரக்கறிகளை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று திண்ணைவேலிச் சந்தையில விற்ற கதையை மிகவும் நகைச்சுவையாக அடிக்கடி சொல்லுவார். பின்னரும் அந்த நினைப்பில எங்கட முகாமில் இருந்த மொழி அக்காவின் தலைப் பின்னலை பிடித்து மாட்டுவண்டி ஓட்டி அவாவிடம் முறைப்பையும் திட்டையும் பரிசாக வாங்குவார். ஏதாவது வேலை செய்து களைப்படைந்து விட்டார் என்றால் அவரின் வாயில் இருந்து “அப்பனே முருகா! பழம் பிள்ளையாரே! வைரவக் கிழவா!” என்ற சொல் தான் அடிக்கடி வரும். தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் அவருக்கு எவ்வளவு பற்று, நம்பிக்கை இருந்ததோ அதற்கு அடுத்த படியாக கடவுள் மீதும் பற்று அதிகம். கந்தசஷ்டி விரதத்தை தன்னால் இயன்றளவு தொடர்ந்து பிடித்து வந்தார். அதே போல மாவீரர் நாள், திலீபன் அண்ணா நினைவு நாள் போன்றவற்றிற்கும் அன்று பகல் முழுவதும் நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து இரவு மட்டும் உணவு உண்ணுவார். நாங்கள் சில பேர் மட்டும் பசி தாங்க முடியாமல் “திலீபன் அண்ணைக்கு எங்களுக்குப் பசிக்கும் என்று தெரியும் தானே கோவிக்க மாட்டார். வாங்கோ அக்கா வெளியில போய் களவாக சாப்பிட்டு வருவோம்” என்று கூப்பிட்டால், எல்லாக் குழப்படிகளுக்கும் களவுகளுக்கும் எங்களோட சேர்ந்து வருபவர் இதற்கு மட்டும் வரமாட்டார். பொதுவாக திலீபன் அண்ணா நினைவு இறுதி நாளில் எங்கள் முகாமில் உணவு சமையல் பகுதியிலிருந்து எடுப்பதில்லை. எல்லோரும் விரதமாக இருந்து இரவு உணவை சைவ உணவாக சமைத்து உண்ணுவோம். பூம்பாவை அக்கா விதவிதமாக சுவையாக சமைப்பதிலும் படு விண்ணி. நாங்கள் கொஞ்ச பேர் 1995ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் கற்க ஆரம்பித்த புதிதில் போராட்டத்தில் இணைந்த காரணத்தினால், எங்களின் பணித்தேவை காரணமாக (கணக்காய்வுப் பகுதியில் போராளிகளாக இருந்த அனைவரும் பல்கலைக் கழகத்திலோ அல்லது உயர் தொழில்நுட்பக் கல்லூரியிலோ கல்வி கற்றவர்களாக இருந்தார்கள்) க.பொ.த உயர்தரம் படித்து சித்தியடைந்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால் 1997ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்திற்கு தோற்றுவதற்கு எமது அமைப்பினால் பணிக்கப்பட்டோம். அப்போது எங்களுக்கு பாடங்களில் ஏற்படும் தெளிவின்மைகளைத் தீர்ப்பதற்கு பூம்பாவை அக்கா பெரிதும் உதவி செய்வார். கணக்கியலில் அவர் ஒரு புலி. எந்தக் கடினமான கணக்கு என்றாலும் மிகவும் இலகுவான முறையில் எங்களின் மரமண்டைகளுக்குப் புரியவைத்து விடுவார். மற்ற நேரங்களில் மிகவும் இயல்பாக எங்களில் ஒருவராக அகவை வேறுபாடு பாராது பழகும் அவர் படிப்பு, வேலை என்று வந்து விட்டால் மிகவும் கண்டிப்பு நிறைந்த பெண்ணாக மாறி விடுவார். அவரிடம் பல மொக்கை கேள்விகள் கேட்டும் குரங்கு சேட்டைகள் புரிந்தும் மண்டையில் குட்டு வாங்கிய பெருமை என்னையே சாரும். கல்வி மற்றும் பணி தொடர்பான விடயங்களில் கண்டிப்பாக இருக்கும் அவர், மற்றைய நேரங்களில், நாங்கள் வேலிப் பொட்டுக்குள்ளால புகுந்து போய் கச்சான் விற்கும் ஆச்சியிடம் கச்சானும், குளிர்களி விற்கும் அண்ணையிடம் குளிர்களியும் ஒருவாறு தண்டல் தண்டி வாங்கி வந்து சாப்பிடும் போது “கழுகுக்கு மூக்கில வேர்த்தது போல” சரியான நேரத்துக்கு என்னை விட்டிட்டுச் சாப்பிடுறீங்களோடி …என்றபடி பங்கு கேட்க வந்துவிடுவார். ஒரு போராளி எந்நேரமும் களத்திற்கு செல்வதற்கு அணித்தமாக இருக்கும் வகையில், வெளிநிருவாகப் பணிகளில் மட்டுமல்ல களப்பணிகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எம் தேசியத் தலைவனின் அவா. அவ்வாறே வெளிநிருவாகப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் போராளிகள் தேவைப்படும் போது கடும் போர்ப் பயிற்சிகள் வழங்கப்பட்டு களப்பணிகளுக்குள் உள்வாங்கப்படுவதுண்டு. அந்த வகையில் பூம்பாவை அக்காவும் 1997 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எமது பிரிவிலிருந்து படையறிவியற் கல்லூரியில் அதிகாரிகள் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டார். அங்கு திறம்பட செயற்பட்டு ஒரு போர் அதிகாரிக்குரிய தகுதியோடு முகாம் திரும்பினார். வெளிப்பணிகளில் மட்டுமல்ல சண்டைக்களங்களிலும் பூம்பாவை அக்கா திறம்பட செயற்பட்டார். அவரின் பணித் தேவையின் முதன்மை கருதி இயக்கம் சண்டைக்கு விடாத போதும் வலுக்கட்டாயமாக பொறுப்பாளருடன் சண்டை பிடித்து இரண்டு தடவைகள் சண்டைக்களத்திற்குச் சென்றார். 1999ஆம் ஆண்டு நெடுங்கேணிப் பகுதியில் உள்ள போர் முன்னரங்கப் பகுதிக்கு சோதியா படையணியுடன் இணைந்து ஒரு படைப் பிரிவுக்கு (platoon) அணிக்குத் தலைவியாக சென்று ஆறு மாதங்கள் திறம்படச் செயற்பட்டு பின் முகாம் திரும்பினார். பின்பு 2000 ஓயாத அலைகள்-4 இற்கும் ஒரு அணிக்கு தலைவியாகச் சென்று திறம்படச் செயற்பட்டு பின் முகாம் திரும்பினார். அவர் திருமண அகவையை அடைந்ததும், 2001 ஆம் ஆண்டு தலைவரின் கட்டளைக்கு ஏற்ப ஒரு போராளியை இணையேற்றார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிய பின்பும் குழந்தைகளை தளிரில் விட்டு விட்டு (திருமணமான பெண்போராளிகள் தடையின்றி பணிகளைச் செய்வதற்கு இலகுவாக அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்கு தலைவரால் உருவாக்கப்பட்ட காப்பகம் தான் தளிர்) நகை வாணிப கணக்காய்வு அணிக்கு பொறுப்பாளராக கடைசி வரை திறம்படச் செயற்பட்டார். பின்பு 2009 இல் எமது போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியைக் காணப் பொறுக்காமல் சிறிலங்கா அரசும் ஏனைய உலக வல்லாதிக்கங்களும் ஒன்று சேர்ந்து எங்கள் போராட்டத்தை நசுக்குவதற்கு திட்டம் போட்டு காய் நகர்த்தி எம்மையும் எமது மக்களையும் முள்ளிவாய்க்காலிலே ஒரு சிறிய வட்டத்திலே அடைத்தன. அப்போது பூம்பாவை அக்காவின் கணவர் 2009 பங்குனி மாதம் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். பின்பு பூம்பாவை அக்கா இரண்டு சிறு குழந்தைகளோடும் வயோதிபத்தாயோடும் மிகவும் சிரமங்களுக்கு நடுவில் பிள்ளைகளுக்காக வாழ்ந்து வந்தார். இறுதியில் வைகாசி மாதத்தில் எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அவரின் இரண்டு பெண்குழந்தைகளும் தாயும் இன்றி தந்தையும் இன்றி வயதான அம்மம்மாவின் அரவணைப்பிலும் பூம்பாவை அக்காவின் சகோதரனின் அரவணைப்பிலும் வாழ்ந்து வருகின்றார்கள். இப்படி நாட்டுக்காக தங்களையே அர்பணித்த பல மாவீரர்களின் அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. பூம்பாவை அக்காவைப் பற்றி கூற இன்னும் மலையளவு விடயங்கள் உள்ளன. பூம்பாவை அக்காவே உங்கள் கனவு ஈடேறும் என்றும், எல்லா மானமாவீரர்களின் கனவும் ஈடேறும் என்றும் நினைவிலிருத்திக் கொண்டு உங்களுக்கு எமது வீரவணக்கங்களைச் செலுத்துகின்றோம். என்றும் உங்கள் மீளா நினைவுகளுடன்…. நிலாதமிழ்
-
லெப்ரினன்ட் புகழினி
புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் “லொட லொட” என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு “தெண்டித் தெண்டி”சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் அணிவாள். எந்த வேலையென்றாலும் நாளைக்குச் செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.எங்களின் நாவற்பழ நிறத்தழகி அவள்.தெற்றுப் பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்….பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அவள் சராசரி உயரத்தை விட சற்றுக் குறைவான குள்ளமான உருவத்தை உடையவள்.இதனால் அவள் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது.உதாரணத்துக்கு சைக்கிள் ஓட்டுவதற்குக் கூட ஏதாவது ஒரு புட்டியான இடம் பார்த்து தான் ஏறி ஓடுவாள்.இதனால் எல்லோரிடமும் நல்ல அறுவையையும் வாங்கிக் கட்டுவாள். எல்லோரையும் போலவும் தான் புகழினியின் பிள்ளைப் பராய வாழ்க்கையும் இன்பத்துடன் அமைந்தது.அம்மா,அப்பா,தம்பி,அவள் என அழகிய சிறிய குடும்பம் அவளுடையது.அவளது சொந்தப் பெயர் மேரி கொன்ஸ்ரலின்.வீட்டில் ஒரேயொரு மூத்த பெண்பிள்ளை என்பதால் சரியான செல்லமாக வளர்ந்தாள்.அவளது சொந்த இடம் வலிகாமப் பகுதியில் சில்லாலை என்ற கிராமம்.அவள் தனது கல்வியை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் கற்றாள்.வலிகாமம் பகுதியில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக அடிக்கடி இடப்பெயர்வு ஏற்பட்டதின் காரணத்தினால் அவளாலும் ஒழுங்காக கல்வி கற்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது. 1994 க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்தியடைந்து க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலைப் போராட்டமானது மிகவும் உச்ச நிலையை அடைந்திருந்தது.வலிகாமப் பகுதியில் எதிரியானவன் எம் நிலத்தை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்த போது எமது போராட்டத்தின் உண்மை நிலையை உணர்ந்து பல்லாயிரக் கணக்கான இளைஞர்,யுவதிகள் தாமாகவே மனமுவந்து வந்து எமது அமைப்பில் இணைந்து கொண்டார்கள்.அந்த வகையில் மேரி கொன்ஸ்ரலினும் “வண்ணக் கனவுகள் தன்னில் கரைந்துமே பெண்மை கரைந்தது போதும்….இனி கண்ணைத் திறந்தொரு மின்னல் எழுந்திட விண்ணை விழுத்தலாம் வாரும்….பூகம்பமே என்னில் சூழட்டும் நெஞ்சில் போர் எனும் தீ வந்து மூழட்டும்”என்று 1995ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் எமது அண்ணன் கரிகாலன் சேனையில் இணைந்து கொண்டாள்.அங்கு அவள் மகளிரணியின் 30ஆவது பயிற்சிப் பாசறையில் புகழினி எனும் நாமத்துடன் போராளியாக புடம் போடப்பட்டாள். பின்பு 1995ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு அனுப்பப்பட்டாள்.புகழினி கணக்காய்வுப் பகுதிக்கு வந்த காலம் தொட்டு நீண்ட காலம் மருந்து பால்மா அணியிலேயே என்னுடன் இணைந்து கணக்காய்வை மேற் கொண்டாள்.அவள் பணியிடத்தில் பணியாளர்களிடம் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் அதேவேளை தேவைப்படும் போது கண்டிப்பாகவும் பணியை மேற்கொள்ளுவாள்.அவள் கணக்காய்வில் மட்டுமல்ல மற்ற இதர செயற்பாடுகளிலும் தன்னை வளர்த்துக் கொண்டாள். தற்காப்புக்கலையிலும் திறம்பட பயின்று கறுப்புப் பட்டி வரை பெற்றவள்.அது மட்டுமல்ல அவள் முறிப்பு நடனம்(break dance)ஆடுவதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவள்.எங்கள் முகாமில் நத்தார்தின நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் முறிப்பு நடனமாடி அவள் தான் கதாநாயகியாக திகழ்வாள்.மேலும் அவள் வாகன ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரியிலும் பயின்று உழவு இயந்திரமும் நன்றாக செலுத்துவாள்.இயக்கத்துக்கு வரும் போது புகழினிக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது.ஆனால் பின்பு உழவு இயந்திரம் செலுத்தக் கூடிய அளவுக்கு அவளை எமது அமைப்பு வளர்த்து விட்டிருந்தது. 1996ஆம் ஆண்டு ஆரம்ப காலம் தொடக்கம் 2000 ஆண்டு வரை நானும் புகழினியும் ஒன்றாகவே மருந்து பால்மா அணியில் கணக்காய்வு பணி பேற்கொண்டமையினால் எனக்கும் அவளுக்குமான உறவானது பலமானதாகவும் பல இனிமையான தருணங்களைக் கொண்டதாகவும் இருந்தது.அதில் சிலவற்றை அவளது ஞாபகமாக பகிர்ந்து கொள்ள அவாக் கொண்டுள்ளேன். 1996ஆம் ஆண்டு வன்னிக்கு வந்த புதுசில நானும் புகழினியும் மருந்து பால்மா அணியில் தான் கணக்காய்வை மேற் கொண்டோம். எங்களுக்கு பணிக்குச் செல்வதற்கு சைக்கிள் கூட இல்லை.நானும் புகழினியும் சைக்கிள் இல்லாத காரணத்தினால் நடராசாவில்(நடையில்) தான் பணிக்குச் செல்வோம்.எங்களின் முகாமில் உள்ள போராளிகள் அனைவருக்கும் ஒவ்வொரு பட்டப் பெயர் வைத்து தான் கூப்பிடுவோம். புகழினிக்கு “பேணி”தான் பட்டப் பெயர்.(எந்த நேரமும் “லொட லொட” என்று தகர டப்பா மாதிரி அலட்டுவதால் அவளுக்கு “பேணி” என்ற பட்டப் பெயர் உருவானது).என்னைப் பேணி “அரியத்தார்” என்று தான் கூப்பிடுவாள்.பின்பு பணிக்குச் செல்வதற்கு இரண்டு பேருக்கு ஒரு சைக்கிள் என்ற ரீதியில் கொடுக்கப்பட்டது.அதில் நானும் பேணியும்(புகழினி)தான் ஒன்றாக பணிக்குச் செல்வோம்.வழமையாக அவளை மருந்து பால்மா கடையில் விட்டு விட்டு நான் பொன்னம்பலம் வைத்தியசாலைக்குச் செல்வேன். நாங்கள் பணி முடித்து விட்டு மதிய உணவு நேர இடை வேளைக்கு முகாமில் சென்றுதான் சாப்பிடுவோம்.அப்போது சாப்பிடும் தட்டுக் கழுவிற பஞ்சியில நானும் புகழினியும் ஒரு தட்டில தான் உணவு உண்ணுகின்றனாங்கள்.சாப்பிட்ட தட்டைக் கழுவோணும் என்ற கள்ளத்தில நான் முதலாவதாகச் சாப்பிட்டிட்டு தட்டை அவளிடம் தள்ளி விட்டு ஓடி விடுவேன்.அவள் என்னைத் திட்டிக் கொட்டிப் புறுபுறுத்தபடி ஒருவாறு தட்டைக் கொட்டிக் கழுவிப் போட்டு வருவாள்.அவ்வாறு அவளது புறுபுறுப்பைக் கேட்பதிலே எனக்கு பெரிய ஒரு சந்தோசமாக இருக்கும். 1997ஆம் ஆண்டு நாங்கள் க.பொ.த உயர்தரத்தை முடிக்காமல் எமது அமைப்பில் இணைந்த படியால் பணித்தேவையின் தகுதி கருதி உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு பணிக்கப் பட்டோம்.எங்களுடன் புகழினியும் இணைந்து கல்வி கற்றாள்.அவள் இயல்பாகவே மிகவும் கூச்ச சுபாவமும்,இரக்க குணமும்,பயந்த சுபாவமும் உடையவள். அதனாலேயே அவளை எந்நேரமும் கிண்டலடிப்பது தான் எமது பொழுது போக்கு. உயர்தரம் படிக்கும் போது எமது பொறுப்பாளரால் நாம் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.ஆனால் எமக்கோ வெளியில் விடுப்பு பார்க்காமல் இருக்க முடிவதில்லை.எங்கள் முகாம் முற்றத்திலே பெரிய அடர்ந்து செழித்து வளர்ந்த மாமரம் ஒன்று உண்டு.அதிலே ஏறிப் பார்த்தால் வெளியே குறிப்பிட்டளவு தூரம் மட்டும் என்ன நடந்தாலும் தெரியும்.அதனால் நாங்கள் மாமரத்துக்கு மேல ஏறி அமைதியாக இருந்து படிக்கிறம் என்று கதை விட்டு மாமரத்துக்கு மேல ஏறி இருந்து விடுப்புப் பார்த்துக் கொண்டு படிப்பதுண்டு.புகழினிக்கு மாமரத்தில எங்களோட சேர்ந்து ஏறி இருந்து விடுப்பு பார்க்க ஆசை….ஆனால் ஏறத் தெரியாது.அதனால் நாங்கள் இரண்டு பேர் அவளை மேலேயிருந்து அவளது இரண்டு கைகளையும் பிடித்து இழுக்க கீழே இருந்தும் ஒராள் தள்ளி விட்டு ஒரு மாதிரி ஏற்றிப் போடுவோம். மேலேயிருந்து படிக்கிறம் என்று போட்டு நாங்கள் மரத்தில இருக்கிற மாம்பிஞ்சுகளால றோட்டால மோட்டார் சைக்கிளில போற எங்கட இயக்க அண்ணாக்களுக்கு எறிவதுண்டு.அண்ணாக்களும் எறிவது நாங்கள் என்று தெரிந்தாலும் பாவம் பிள்ளைகள் தானே என்று விட்டுக் கண்டும் காணாத மாதிரி போய் விடுவினம். ஆனால் புகழினிக்கு நன்றாக இலக்கு பார்த்து எறிய தெரியாது.அவள் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு மாம்பிஞ்சால எறிய வெளிக்கிட்டு அது போய் பின்னால சைக்கிளிலே வந்த அப்பு மேல பட்டு அந்த அப்பு வந்து பொறுப்பாளரிட்ட வந்து பிள்ளையள் மாம்பிஞ்சால எறிஞ்சு போட்டுதுகள் என்று சொல்லிக் கொடுத்து புகழினியால நாங்கள் நான்கு பேரும் நூறு தோப்புக் கரணம் போட்டதை இப்பவும் மறக்க முடியாது. புகழினிக்கு எங்களோட சேர்ந்து கள்ள வேலைகள் செய்வதற்கு சரியான பயம்.நாங்கள் வலுக்கட்டாயமாக இழுத்தாலும் வரமாட்டாள்.எங்களது முகாமில் இருக்கும் போராளிகளின் பெற்றோர் அவர்களின் பிள்ளைகளைப் பார்க்க வரும் போது சாப்பிடுவதற்கு நிறைய உணவுப் பொருட்கள் கொண்டு வந்து தருவதுண்டு.அதை தமா அன்ரா தான்(ஒரு அக்காவின் பட்டப் பெயர் தான் தமா அன்ரா)எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்பார்.அவர் எல்லோருக்கும் அளவாகக் கொடுத்து விட்டு மிகுதியை ஒரு மேசையில் கடைசி இழுப்பறையில் (இலாச்சி) பதுக்கி வைப்பார்.அதில் கடைசி இழுப்பறைக்கு (இலாச்சி) மட்டும் தான் பூட்டு உள்ளது.மற்றைய இரண்டு இழுப்பறைகளுக்கும் பூட்டு இல்லை.தமா அன்ரா கடைசி இழுப்பறையில் (இலாச்சி) வடிவாக வைத்து பூட்டிப் போட்டு அங்கால போனதும் நாங்கள் பூட்டில்லாத மேல் இழுப்பறையைக் (இலாச்சி)கழட்டிப் போட்டு கீழ் இழுப்பறையில் (இலாச்சி) உள்ள தின்பண்டங்களை எல்லாம் எடுத்துச் சாப்பிடுவோம்.புகழினியை இதுக்கு கூட்டுச் சேர்த்தால் வரவும் மாட்டாள் நாங்கள் கொண்டு போய்க் கொடுத்தாலும் சாப்பிடவும் மாட்டாள்.சாப்பிட்டால் பிறகு தமா அன்ராவிடம் நல்ல கிழி வாங்க வேண்டிவரும் என்ற பயம் அவளுக்கு.(எங்களுக்கு எவ்வளவு கிழி வாங்கினாலும் சாப்பாட்டு விசயத்தில சொரணை வராது). எங்கட முகாமுக்கு பின் புறத்தில் இரண்டு பெரிய பலா மரமும் உண்டு.அதில் நிறைய பலாப்பழங்கள் கனிந்து தொங்குவதுண்டு.எங்கள் முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சி முகாமுக்கு பக்கத்து வீட்டில தான் இருக்கிறவர்.அவர் அடிக்கடி முகாமுக்கு வந்து எத்தனை பலாப்பழம் காய்த்து இருக்கிறது என்று கண்காணிச்சுக் கொண்டு தான் இருப்பார்.எங்களுக்கோ அந்தப் பலாப்பழங்களைக் கண்டால் வாயூறும்.ஆச்சியின் கண்ணில மண்ணைத் தூவிப் போட்டு அந்த பலாப்பழங்களை அடிக்கடி நாங்கள் பிடுங்கிச் சாப்பிடுவதுண்டு.இந்தப் பலாப்பழம் பிடுங்குகின்ற நிகழ்வானது அடிக்கடி எங்கட இரவு காவற்கடமை நேரத்தில் தான் நிகழும். மற்ற குழப்படி வேலைகளுக்கு பயப்படுகின்ற புகழினி பலாப்பழத்தில இருக்கிற அலாதிப் பிரியத்தில இதுக்கு மட்டும் எங்களோட கூட்டுச் சேருவாள்.பலாப்பழம் ஏறிப் பிடுங்கவோ வெட்டவோ வரமாட்டாள்…நாங்கள் ஏறிப் பிடுங்கி வெட்டி வைத்தால் மற்றைய எங்கட கூட்டுக் களவாணிகளை(முகாமில இருக்கிற எல்லோரையும் நாங்கள் இந்த நிகழ்வுக்கு சேர்ப்பது இல்லை…பல விசுவாசக்குஞ்சுகளும் இருந்ததால் போட்டுக் கொடுத்து விடுவினம் என்ற பயம்)நித்திரையில் இருந்து எழுப்பிக் கூட்டி வந்து அவைக்கும் பரிமாறி தானும் சாப்பிடுகின்ற வேலையை மட்டும் தான் பார்ப்பாள். இப்படித்தான் ஒருநாள் இரவு காவற்கடமை நேரத்தில் பலாப்பழத்தை இறக்கிச் சாப்பிட்டுப் போட்டு பலாச்சக்கையை புகழினியின் மொக்கை ஐடியாவால பக்கத்து வீட்டு வளவுக்கை தூக்கிப் போட்டு அந்த பக்கத்து வீட்டுக்காரி முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சியிடம் போட்டுக் கொடுத்து அந்த ஆச்சி முகாமுக்கு வந்து பொறுப்பாளரிடம் சொல்லி சண்டை பிடித்து பொறுப்பாளர் ஆச்சியை ஒரு மாதிரி சமாளிச்சு அனுப்பின கதையை இப்பவும் மறக்க முடியாது.(எங்களின் பொறுப்பாளர் சாப்பாட்டு விசயங்களில எங்களுக்குத் தண்டனை தருவது இல்லை).இப்படி புகழினியால நாங்களும் மாட்டுப் பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. புகழினியின் குடும்பத்தின் சூழ்நிலையானதுனது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவே காணப்பட்டது.அவளது குடும்பம் சொந்த இடத்தில் இருந்த போது சொந்த தொழில் செய்து வந்த படியால் நல்ல வசதியாகத் தான் வாழ்ந்து வந்தார்கள்.பின்பு வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்ததால புகழினியின் அப்பாவிற்கு தொழில் வாய்ப்பின்றி அன்றாட உணவுத் தேவைக்குக் கூடக் கஷ்டப்பட்டார்கள்.புகழினியின் அம்மா மகள் இயக்கத்துக்கு வந்ததாலே யோசித்து யோசித்து இருதய நோய் மற்றும் ஆஸ்துமா நோய் பீடிக்கப் பட்டு மிகவும் கஷ்டப்பட்டார்.அப்பா தான் ஓலைப் பாய்,பெட்டி இழைத்து விற்றுபிழைப்பு நடத்தி வந்தார்கள்.புகழினியின் தம்பியோ மிகவும் சிறிய பையன்.அப்போது பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தான்.இதனால் நாங்கள் புகழினியுடன் அவளது வீட்டுக்குச் செல்லும்போது புகழினியின் அம்மா”என்ரை மகள் வீட்டை இருந்திருந்தால் படித்து உழைத்து எங்களைப் பார்த்திருக்கலாம் தானே” என்று சொல்லி அழுது கவலைப்படுவார்.ஆனால் புகழினியோ “வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்குத் தேவை தானே”உங்களுக்கு தம்பி இருக்கிறான் தானே என்று சொல்லி சிரித்து சமாளித்து விடுவாள். புகழினி எமது தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் எல்லாப் போராளிகளைப் போன்றே மிகுந்த பற்றும் விசுவாசமும் உடையவள்.எமது தலைவரின் புகைப்படங்களைச் சேகரித்து அதை ஒரு செருகேடாக(album) வைத்து இருந்தாள்.சில போராளிகள் வீட்டில “அம்மாவாணை “என்று சத்தியம் செய்வதைப் போல இயக்கத்திலே “அண்ணையாணை “என்று கதைப்பதுண்டு.அது புகழினிக்குப் பிடிக்காது.சும்மா அண்ணையை போட்டு உங்கட லூசுக் கூத்துக்களுக்கு இழுக்காதையுங்கோ என்பாள். எங்களின் பொறுப்பாளர் புகழினியின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவளைச் சண்டைக் களங்களுக்கு அனுப்புவதில்லை.1999ஆம் ஆண்டு எங்கள் முகாமில் இருந்து சிலபேர் நெடுங்கேணிப் பகுதிக்குச் சண்டைக் களத்திற்குச் சென்ற போது பொறுப்பாளர் புகழினியை அங்கே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.ஆனால் அவள் அழுது சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து அவரோடு சண்டை பிடித்து சண்டைக் களத்துக்குச் சென்று அங்கு திறம்பட செயற்பட்டு முகாமுக்கு திரும்பினாள். பொதுவாக நாங்கள் வெளிப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பெரிய பெரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளின் போது போராளிகள் பற்றாக்குறை காரணமாக உடற் குறையுள்ள விழுப்புண்ணடைந்த மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் மட்டும் தேவையான கொஞ்சப் பேரை மட்டும் முகாமில் விட்டு விட்டு மிகுதிப் பேரை இடையிடையே போர்ப் பயிற்சிகள் தந்து களப்பணிகளுக்கு இணைத்துக் கொள்வார்கள்.எங்களுக்கும் களப்பணிகளில் ஈடுபடுவதில்லை என்று குற்றவுணர்ச்சி ஏற்படுவதால் இப்படி இடையிடையே இணைப்பதால் நாங்களும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் களப் பணிகளுக்குச் சென்று வருவோம்.எமது தலைவரும் ஒரு போராளிக்கு வெளிப் பணிகளில் மட்டுமல்ல களப்பணிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். அந்த வகையில் நிதித்துறை மகளிர் அணியைச் சேர்ந்த நாங்கள் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் மாலதி படையணியுடன் இணைந்து வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்காக சுண்டிக்குளம் பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.அதே வேளை எங்கள் புகழினி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் பயின்று கொண்டிருந்த படியால் அவர்களுடன் சேர்ந்து பளைப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் எம் மக்களின் காவற் தேவதையாக காவற்கடமை புரிந்து கொண்டிருந்தாள். 29.05.2000அன்று எங்களுக்கு “புகழினி வீரச்சாவாம் ” என்ற கொடிய செய்தி வந்தடைந்தது.எல்லோரும் கலங்கிப் போய் நின்றோம்.பளைப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் அவள் காவற்கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் சுற்றிவளைப்பின் போது எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரமுடனும் தீரமுடனும் போராடி எங்களின் புகழினி லெப்ரினன்ட் புகழினியாக வீரமரணத்தைத் தழுவிக் கொண்டாள். பின்பு நாங்கள் அனைவரும் எங்களது பயிற்சி முகாம் பொறுப்பாளரிடம் ஒரு நாள் அனுமதி கேட்டு புகழினியின் இறுதி வணக்க நிகழ்வுக்குச் சென்றோம்.அங்கே எங்கள் புகழினியின் வித்துடலை கடைசியாகக் கூட பார்க்க முடியாமல் வித்துடல் பேழை அடைக்கப்பட்டிருந்தது.அதைவிட புகழினியின் அப்பா என்னைப் பார்த்து “பிள்ளை உன்னோட தானே என்ரை மகள் ஒன்றாகத் திரியுறவள் நீ மட்டும் தான் வந்திருக்கிறாய் என்ரை மகள் எங்கே”என்று என்னைக் கட்டிப் பிடித்துக் கதறி அழுததும் நானும் குற்றவுணர்வால் அழுததும் நான் சாகும் வரை என் நினைவை விட்டுப் போகாது.பின்பு2002ஆம் ஆண்டு புகழினியின் அப்பா பொன்னம்பலம் வைத்தியசாலையில் நான் பணியை மேற்கொண்டிருந்த போது என்னை வந்து சந்தித்து பிள்ளை தாங்கள் அனைவரும் சொந்த இடத்திற்கு (சில்லாலைக்கு)செல்லப் போறோம் என்று சொல்லி விட்டு “என்ர பிள்ளையில்லாமல் போகப் போறேன் “என்று கதறி அழுததை இன்றும் நினைத்தால் மனதை பாறாங்கல்லால் வைத்து அழுத்தியது மாதிரி ஒரு உணர்வைத் தருகிறது. எங்களின் அன்புத் தோழி புகழினியே…. உன்னை இழந்த இந்த நாளில் மட்டுமல்ல எங்கள் வாழ்நாட்கள் முழுக்க எந்நாளுமே எங்கள் பழைய தோழிமார் யாரோடு கதைத்தாலும் உன் நினைவைத்தான் மீட்டிக் கொண்டிருக்கின்றோம்.உன்னைப் போன்ற ஒன்றாய்க் கூடி வாழ்ந்த தோழர்கள்,தோழியர்களை இழந்து விட்டு நாங்கள் மட்டும் தப்பி வந்து குற்றவுணர்வுடன் நடைப்பிணங்களாக எங்களின் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக புன்னகை என்னும் அரிதாரத்தைப் பூசிக் கொண்டு மனதுள்ளே எரிமலை போன்று குமுறிக் கொண்டுஉயிர் இருந்தும் ஜடமாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இப்பொழுதும் நீ என்னை “அரியத்தார்” என்று கூப்பிடும் ஒலி காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எம் தமிழீழ வரலாற்றில் என்றும் உன் கதை எழுதி வைக்கப்படும். – நிலாதமிழ்.
-
நாட்டுப்பற்றாளர் மா.கனகரெத்தினம் அவர்களின் வரலாறு
நாட்டுப்பற்றாளர் மாசிலாமணி கனகரெத்தினம் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டம் வீரப்பிறப்பு : 25-01-1950 வீரச்சாவு : 13-05-1980 தொண்டனாக வாழ்ந்து மறைந்த நாட்டுப்பற்றாளர் மா. கனகரெத்தினம்! அமரர் மா.கனகரெத்தினம் அதிபர், தான் வாழ்ந்த 38 வயதுக்குள் தன் மேலதிகாரிகள், தன்னோடொத்தவர்கள், தன்னிலும் இளையோர் ஆகிய முத்திறத்தாரையும் ஒரு சேரக் கவர்ந்துள்ள தனிச்சிறப்புப் பெற்றவர். தன் நல்லெண்ணத்தாலும், ஆளுமையினாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் அவர் விரும்பப்பட்டார். இப்படியான சிறப்புக்கள் பொருந்திய மட்டக்களப்பு மண்ணுக்கும், தமிழ் பேசும் நல்லுலகத்துக்கும் பெருமை சேர்த்த மா.கனகரெத்தினம் ஐயாவின் நினைவு தினம் இன்றாகும். எந்தவொரு காரியத்தைப் பொறுப்பெடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பது இவரது மாற்றுரு திறமை. சிறிய உதவிகளாக இருந்தாலும் சரி, பலரை தொடர்பு கொண்டு முடிக்க வேண்டிய பெரிய வேலைகளாக இருந்தாலும் சரி எப்படியும் அதை முடித்தே தீருவார். முடியவில்லை என்று சாக்குப் போக்கு சொல்வது இவர் அகராதியிலேயே இல்லை. எந்நேரமும் எவருக்காவது உதவி செய்ய தயாராகவிருப்பது இவரது மற்றொரு பண்பு. தனக்குரிய பல வேலைக் கஷ்டங்களுக்கு மத்தியிலும் ‘உதவி’ என்று கோரிவந்த ஒருவரையும் தட்டிக் கழிக்கமாட்டார். மட்டக்களப்பு பிரஜைகள்குழு செயலாளராகவும், ஆரையம்பதி சமாதானக் குழு அமைப்பாளராகவும், நெருக்கடியான கட்டங்களில் எல்லாம், இவர் உயிரைத் துச்சமென மதித்து பணியாற்றியமை இங்கு நினைவு கூரத்தக்கது. ஆரம்பகாலத்தில் விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவரும், விடுதலைப் போராளிகளினால் அன்பாக மாஸ்டர் என்று அழைக்கப்பட்டவருமான நாட்டுப்பற்றாளர் கனகரெத்தினம் அவர்கள் ஊருக்காகவும், சமூகத்திற்காகவும் ஆற்றிய பணிகள் பல. தளபதி அருணா, பொட்டு அம்மான், குமரப்பா, ரமணன், தளபதி றீகன் ஆகியோரின் பெரு மதிப்பைப் பெற்றவரும், அவர்களுடன் இணைந்து செயற்பட்டவருமான மா. கனகரெத்தினம், காத்தான்குடி, ஆரையம்பதி கிராமங்களைச் சேர்ந்த தமிழ் – முஸ்லீம் இனக்கலவரம் உச்சக்கட்டம் அடைந்திருந்த வேளையில் இரு சமூகங்களிடையேயும் இவர் சென்ற சமாதானத் தூதின் மூலம் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தங்களை தவிர்ப்பதற்காக செயற்பட்ட மாபெரும் மனிதர். இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்குத் தனிப்பட்ட முறையிலும், மேற்படி அமைப்புகள் மூலமும் இவர் பெரிதும் உதவினார். தமிழ், முஸ்லீம் இனங்களுக்கு அவர் செய்த அந்த உன்னத பணியை இன்றுவரை அந்த மக்கள் நினைவுகூருவதோடு இன்னும் நன்றியுடையவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தற்பொழுதைய கிழக்கின் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மிகவும் கேவலமாக தங்களின் அரசியல் இலாபத்திற்காகவும், விடுதலைப்புலிகள் கட்டிக்காத்த தேசிய ஒற்றுமையை அழிக்கும் நோக்கிற்காகவும் அந்த மாமனிதன் செய்த மாபெரும் தேசியப் பணியை ஒரு நொடியில் அழித்து விட்டிருக்கிறார்கள். எனவே மக்கள் இப்படியான இனத்துரோகிகளைக் இனம்கண்டு அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். "புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" - ஆரையம்பதியில் இருந்து தமிழின் தோழன்.
-
லெப்.கேணல் குட்டிசிறி மோட்டார் படையணித் தளபதிகளில் ஒருவரான கேணல் அமுதா
பெண்ணாக பிறந்து புலியாக மாறி புயலாக எழுந்து பல களம் கண்ட வீரத் தளபதி இவள். ஆனந்தபுரத்தில் மோட்டார் அணியின் பெண் போராளிகளை வழிநடத்தி களத்தில் காவியமானவள். அமுதா பயிற்சிமுகாம் முடிந்த கையோடு கனரக ஆயுதப்பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அங்கு 60mm மோட்டார் அணியில் ஒரு காப்பாளராக பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போதே எனக்கு அறிமுகம். நிறத்த மெல்லிய நெடுத்த அவளது தோற்றம் கனரக ஆயுதத்திற்குப் பொருத்தமில்லாதவாறே பார்ப்பவர்கள் கணிப்பிடுவர்.முகத்தில் என்றும் அமைதி குடிகொள்ள யாரை கண்டாலும் ஒரு சிரிப்பே இவளது பதிலாக இருக்கும். கதைப்பது குறைவு ஆனால் பயிற்சி வேளையில் உருவத்திற்கு பொருத்தமில்லாதா சுமையை 60mm செல் பெட்டியை நிறைத்த மணலோடு தூக்கி கடின பயிற்சிகளை எல்லாம் இலாவகரமாகச் செய்து முடித்தாள். படிப்படியாக 60mm மோட்டார் சூட்டாளன், இரண்டு மோட்டார்களின் பொறுப்பாளர் என இவளுடைய பயிற்சி ஆசிரியர்களின் அரவணைப்பில் வளர்ந்தாள் எனலாம். மேஜர் சௌதினி,மேஜர் கோகிலா இவளுடைய பெரும் வழிகாட்டிகள். தொடர்ந்து 82mm மோட்டார் தொட்டு 120mm மோட்டார் வரை வைத்து இலகுவாகச் சண்டை செய்தவள். தனது ஒரு காலை இழந்த பின்பும் பல மோட்டார் அணிகளின் ஒருங்கிணைப்புப் பொறுப்பாளராய் சிறப்பாகச் செயல்ப்பட்டு ஆனந்தபுரத்தில் கேணல் அமுதாவாக விதையாகிப் போனாள்.
-
தமிழீழ தேச மீட்புப் போராட்டத்தில் கரிகாலன் (மாவீரர்)
எமது தமிழீழ போரியல் வரலாற்றில் எத்தனையோ வீரமறவர்களையும் கல்விமான்களையும் பிரசவித்த யாழ்ப்பாணத்தின் புன்னாலைக்கட்டுவன் எனும் கிராமத்தில் திரு.திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனாக 14.04.1987 இல் ஞானகணேஷன் எனும் கரிகாலன் வந்துதித்தான்.மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன் என்று எல்லோருக்கும் கடைக்குட்டியாய் வீட்டில் மிகுந்த செல்லத்துடன் வளர்ந்து வந்தான்.அவனது தந்தையார் ஒரு வைத்தியராகக் கடமை புரிந்தார்.அத்துடன் ஒரு தமிழ் ஆர்வலராகவும் செயற்பட்டு வந்தார். தாயார் ஒரு ஆசிரியையாக இருந்த போதிலும் பிள்ளைகளை சிறந்த கல்விமான்களாகவும் பண்பாளர்களாகவும் சிறந்த முறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில் தனது ஆசிரியப் பணியைத் துறந்து பிள்ளைகளை வளர்த்து வந்தார்.பெற்றோரது சிறந்த ஊக்குவிப்பு,அர்ப்பணிப்பு போன்றன வீண் போகவில்லை.அவர்களது ஒரு புதல்வனும் இரு புதல்விகளும் வைத்தியர்களாகவும் மற்றைய புதல்வி வங்கித் துறையிலும் சீரான முறையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்று சித்தியடைந்து பணிபுரிந்தார்கள்.அந்த வகையில் கடைக்குட்டியான ஞானகணேசனும் சிறு வயது முதல் கல்வியை யாழில் பிரபல்யம் பெற்ற பாடசாலைகளில் ஒன்றான யாழ்.பரியோவான் கல்லூரியில் (st.johns college) கல்வி பயின்று வந்தான். அவன் சிறு வயது முதல் படிப்புடன் விளையாட்டு,பேச்சுப்போட்டி,கவிதைப் போட்டிகள், பட்டிமன்றம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினான். பூப்பந்து(badminton), கூடைப்பந்து (basket ball),கைப்பந்து (volley ball) போன்ற விளையாட்டுக்களில் யாழ் மாவட்டத்தில் அனைத்துப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் தனது பாடசாலை சார்பாக விளையாடி சிறப்பாகச் செயற்பட்டு colors சிறப்பு விருது பெற்று அவனது பாடசாலைக்கு பெருமை பெற்றுக் கொடுத்தான்.மற்றும் பாடசாலை மாணவர் அணித் தலைவனாகவும் (prefect)சிறப்பாகச் செயற்பட்டான்.மேலும் சாரணர் இயக்கத்திலும்(scout) இணைந்து சிறந்த சாரணனாகவும் செயற்பட்டான்.அவன் படிப்பிலும் குறை வைக்கவில்லை.ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சையிலும் அதி திறமைச் சித்தி பெற்று சித்தியடைந்தான். மற்றும் க.பொ.த சாதாரண தரத்திலும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தான்.சட்டத்துறை சார்ந்து உயர் படிப்பு படிப்பதே அவனது கல்வி இலட்சியமாக இருந்தது. தமிழீழத்திற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டத்தின் உண்மைத் தன்மை,அவர்களது அர்ப்பணிப்பு,தியாகம்,ஒழுக்கமான வாழ்க்கை முறை என்பன ஞானகணேஷனுக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.அதனால் அதன்பால் ஈர்க்கப்பட்டு அவனும் 2005 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் எமது அமைப்பில் அரசியல்துறையினரிடம் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு வன்னிப் பெருநிலப் பரப்புக்கு வந்து அடிப்படைப் பயிற்சியை முடித்துக் கொண்டு கரிகாலன் எனும் நாமத்துடன் வரிப்புலியாகி அரசியல்துறைக்குச் செல்லப் பணிக்கப்பட்டான். ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு கல்வி,அறிவாற்றல் என்பன மிக முக்கியமானது.அந்த வகையில் எமது தேசியத் தலைவரும் எமது போராளிகள் கல்வி,அறிவாற்றல் என்பனவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஒப்புரவு கொண்டவர்.அவ்வாறே கரிகாலனும் 2005-2007 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழி கற்பதற்கும் கணனிக் கற்கை நெறி கற்பதற்கும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களால் பணிக்கப்பட்டான்.அங்கே அவன் ஆயுத தளபாடங்கள் சம்பந்தமான பொறி முறை பற்றிய நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழ்மொழிக்கும் தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்தல் சம்பந்தமான கற்கை நெறிகளைப் பயின்றான்.இயல்பாகவே மனம், புலன்களை கட்டுப்படுத்தி எளிதில் புரிந்து கொள்ளும் கற்பூர புத்தி கொண்டவன் கரிகாலன்.அவனுக்கு அந்த கற்கை நெறி இலகுவாகவே இருந்தது.மிகவும் விசுவாசத்துடனும் ஈடுபாட்டுடனும் அவன் அந்தக் கற்கை நெறியை மேற்கொண்டான். அவனுக்கு கல்வி கற்பதிலும் பார்க்க சண்டைக் களங்களுக்கு செல்வதிலேயே மிகவும் ஆர்வம் இருந்தது.ஆனால் தனக்கிடப்பட்ட பணியை செவ்வனே மேற் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தனது கல்வி கற்கை நெறியை மேற்கொண்டான்.மேலும் அவன் கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு தேசியத் தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தான்.ஆனால் அவனது தேவை முக்கியமான வேறு பணிக்கு எமது அமைப்புக்குத் தேவைப்பட்டதால் அவனது பொறுப்பாளரினால் அவனை கரும்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட முடியவில்லை.இது அவனுக்குப் பெரும் கவலையைக் கொடுத்தது. அவன் எமது போராட்டத்தில் இணைந்து மிகக் குறுகிய காலமென்றாலும் மிகுந்த நம்பிக்கைக்குரியவனாகவும் விசுவாசமானவனாகவும் ஓர் சிறந்த போராளிக்குரிய ஓர்மம் உடையவனாகவும் அவனது பொறுப்பாளரினால் இனங் காணப்பட்டான். அவனது முகாமில் புதிதாக இணைந்த போராளிகளுக்கு எமது போராட்டத்தின் உண்மை நிலையை எடுத்துரைத்து நல்வழிகாட்டுவதற்கு அவர்களது பொறுப்பாளர் கரிகாலனைத் தான் பரிந்துரை செய்வார்.அந்தளவுக்கு எமது போராட்டத்தின் உண்மைத் தன்மையை விளக்கி அவர்களது மனவுறுதியை நிலை நாட்டும் அளவுக்கு பேச்சுத் திறமையும் சக போராளிகளை அனுசரித்துப் போகும் பாங்கும் அவனுக்கு இருந்தது. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணா கரிகாலனின் பொறுப்பாளரிடம் அவரின் கீழ் உள்ள போராளிகளில் ஒருவரை தனது தனிப்பட்ட காரியதரிசியாகத்(personal secretary) தரச் சொல்லிக் கேட்ட போது அவர் கரிகாலனைத் தான் பரிந்துரை செய்யும் அளவுக்கு அவனுக்குத் திறமையும் ஆளுமையும் தனது பணியில் முழுமையான ஈடுபாடும் அர்ப்பணிப்பும் கொண்டவனாக விளங்கினான்.(இது கரிகாலன் தொடர்பாக அவனது பொறுப்பாளருடன் நான் உரையாடிய போது கூறப்பட்டது). 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகப் போகுவதாக இலங்கை அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்து எம்மண்ணில் எமக்கு எதிரான தாக்குதலை வான்,கடல்,தரை என மும்முனைகளிலும் தீவிரப்படுத்தியது.இதனால் வெளி நிர்வாகப் பணியிலிருந்த பெருமளவான போராளிகள் களமுனைக்கு அனுப்பப்பட்டனர்.அந்த வகையில் கரிகாலனும் சண்டைக் களங்களுக்கு அனுப்பப்பட்டான்.ஏற்கனவே சண்டைக் களங்களுக்குச் செல்ல ஏங்கிக் கொண்டிருந்த கரிகாலனுக்கு இந்தச் செய்தி கரும்பாக இனித்தது. 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வீரச்சாவடையும் வரை சண்டைக் களங்களிலேயே சூறாவளியாக எதிரிகளைக் கலங்கடித்தான். 2008ஆம் ஆண்டு பங்குனி மாதம் மணலாற்றில் போர் முன்னரங்கப் பகுதியில் களப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காலில் விழுப்புண்ணடைந்து மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டான்.பின்பு சிகிச்சையிலிருந்து மீண்டெழுந்து 2008ஆம் ஆண்டு சித்திரை மாதம் தொடக்கம் ஆனி மாதம் வரை படையறிவியற் கல்லாரியில் பயின்று பின்பு ராதா படையணியுடன் இணைந்து சிறப்புப் பயிற்சி பெற்று சண்டைக் களங்களுக்குச் சென்றான். 2008ஆம் ஆண்டு ஆனி மாதம் கரிகாலன் படையறிவியற் கல்லூரியில் தனது சிறப்புப் பயிற்சியை முடித்துக் கொண்டு இரணைமடுப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் களப்பணியாற்றிக் கொண்டிருந்த போது அவன் மிகவும் திறமையாகச் செயற்பட்ட சம்பவம் ஒன்று அவனது பொறுப்பாளரினால் எனக்கு நினைவு கூரப்பட்டது. இரணைமடுப் பகுதியில் எமது விமான ஓடு பாதைப் பகுதியில் இவன் உட்பட ஆறு பேர் கொண்ட அணி ஒன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது.அப்போது அங்கே வந்த இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியொன்று இவனது அணியைச் சுற்றி வளைத்துக் கொண்டது.அதன் போது ஏற்பட்ட நேரடி மோதலில் அவனது அணித் தலைவர் விழுப்புண்ணடைந்ததும் அணித் தலைவரின் தொலைத் தொடர்பு சாதனத்தை உபயோகித்து அவன் அணியைத் தலைமையேற்று திறம்பட வழிநடத்தி மிகவும் ஓர்மத்துடன் போரிட்டு இராணுவத்தினருக்கு கண்ணாமூச்சியாட்டம் காட்டி அவர்களுக்கு பேரிழப்பை உண்டாக்கி தனது அணியைப் பாதுகாப்பாகப் பின் நகர்த்தினான்.அன்று அவன் உட்பட ஆறு போராளிகளும் கரிகாலனின் தலைமையேற்று போரிடும் திறனாலும் சமயோசிதப் புத்தியினாலுமே காப்பாற்றப்பட்டனர். பின்பு விசுவமடு ரெட்பானா பகுதி,புதுக்குடியிருப்புப் பகுதி,இரணைப்பாலை,மாத்தளன் போன்ற எல்லா போர் முன்னரங்கப் பகுதிகளிலும் சிறப்பாகச் செயற்பட்டான்.இவ்வாறு இறுதி யுத்தத்தில் இவன் செல்லாத சண்டைக் களங்கள் இல்லை.எல்லாச் சண்டைக் களங்களிலும் திறமையாகச் செயற்பட்டு எதிரிகளைக் கலங்கடித்தான். எல்லாப் போராளிகளையும் போன்றே கரிகாலனும் வெளிப் பார்வைக்கு கடினமானவனாகத் தெரிந்தாலும் அவனது மனம் பூவிலும் மென்மையானது.இதற்கு உதாரணமாக அவனுடன் நின்ற ஒரு போராளி கூறிய ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றேன். முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் பால்மா வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவிய காலத்தில் இரத்த தானம் செய்தால் இரத்த தானம் செய்த நபருக்கு போதிய ஊட்டச்சத்து தேவை என்ற படியால் பால்மா பக்கற் கொடுப்பார்கள் எனும் நடைமுறை நிலவியது.அவன் தனது முகாமுக்கு அருகில் இருந்த குடும்பம் ஒன்றில் இருந்த சிறு குழந்தையொன்று பால்மா இன்றி அழுவது கண்டு மனம் வருந்தி தான் இரத்த தானம் செய்து அதனால் கிடைத்த பால்மா பக்கற்றை அச் சிறு குழந்தைக்குக் கொடுத்தான்.சிறு குழந்தைகளைக் கண்டால் தானும் ஒரு சிறு குழந்தையாகவே மாறி விடுவான். இரண்டு தடவைகள் அவனது பெற்றோர் வந்து சந்தித்த போது எனது வீட்டில் தான் விடுமுறையில் வந்து தங்கியிருந்தான்.நானும் ஒரு போராளியாக இருந்தும் என்னை விட மிகவும் வயதில் இளையவனான அவனின் உறுதியையும் நெஞ்சுரத்தையும் கண்டு நான் மிகவும் வியந்திருக்கின்றேன்.இயக்கத்தில் இணைந்து சிறிது காலமேயென்றாலும் எமது போராட்டத்தின் உண்மைத் தன்மையை “அக்கு வேறு ஆணிவேறாக “அவன் அலசி ஆராய்ந்து புரிந்து வைத்திருந்தான்.எமது தேசியத் தலைவரில் மிகுந்த நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருந்தான்.விடுமுறையில் வீட்டில் வந்து தங்கியிருந்த போதும் நேரத்தை வீணடிக்காமல் அங்கிருந்தும் எமது போராட்டம் சம்பந்தமான நூல்களை வாசித்துக் கொண்டேயிருப்பான். அவன் ஒரு போராளியாகிய தனது கடமையில் மட்டுமன்றி ஒரு உறவினனாக உடன் பிறவாச் சகோதரனாக தனது குடும்பக் கடமையிலிருந்தும் சிறிதும் வழுவவில்லை. இறுதி யுத்தத்தில் எனது கணவர் வீரச்சாவடைந்திருந்த வேளை அதனைக் கேள்விப்பட்டு அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனது பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டு வந்து நான் இரு சிறு குழந்தைகளுடன் பரிதவித்து நின்ற வேளை ஒரு உடன் பிறவாத சகோதரனாக வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்து எங்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி விட்டுத்தான் சென்றான்.இறுதி யுத்த நேரத்தில் பெரும்பாலான போராளிகளை அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் விரும்பினால் பெற்றோர்,உறவினருடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லுமாறு கூறப்பட்டது.நானும் கரிகாலனிடம் “அம்மா,அப்பா கவலைப்படுவினம் எங்களுடன் வாங்கோ”எனக் கேட்ட போது அவன் “என்ர முடிவில மாற்றம் இல்லை அக்கா நான் இறுதி வரை நின்று போராடப் போகிறேன்” என்றும் “நீங்கள் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் எப்படியாவது ஆமிக் கட்டுப்பாட்டுக்கை போயிடுங்கோ அக்கா” என்றான்.இறுதி வரை அவன் தன் கொள்கையிலேயும் முடிவினிலேயும் உறுதியாக இருந்தான். இறுதியில் 14.05.2009 சுனாமிக் குடியிருப்புப் பகுதி முள்ளிவாய்க்காலில் போர் முன்னரங்கப் பகுதியில் குறி பார்த்துச் சுடும் அணியில் (சினைப்பர் அணி) களப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் தன் கொள்கையில் இருந்து வழுவாது இறுதி வரை களமாடி தன்னுயிரீந்து ஈழ மண்ணை முத்தமிட்டான் எங்கள் கரிகாலன். அவனது பொறுப்பாளருடன் நான் அவன் தொடர்பாக உரையாடிய போது அவர் அவன் நினைவாக கவலையுடன் கூறியது “இயக்கம் அவன் திறமைகளை முழுமையாகப் பெற முதல் அவன் வீரச்சாவடைந்து விட்டான்” என்பது தான். “ஓ… வீரனே எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும்…நீ மடியவில்லையடா…. உன் கதை முடியவில்லையடா….காலமெல்லாம் புலிக் குகையில் நீ தங்கினாய் கண் மூடி இன்று படமாய் தொங்கினாய்….” – நிலாதமிழ்.
-
கப்டன் கலைமதி
அது 1995 காலப்பகுதி,வெள்ளை மேற்சட்டையும்(shirt) கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் அணிந்து தமக்கு இடப்பட்ட கணக்காய்வுப் பணியுடனும் வெளிவாரி வர்த்தகப் பட்டப் படிப்பை (first in commerce) படிக்கவென யாழ் நாவலர் வீதியூடாக தனது ஈருருளியில் செல்லும் ஒரு போராளியாக கலைமதி அக்காவைக் காணலாம்.எப்பொழுதும் எதற்கும் தயாராக இருப்பது போல் அவருடைய எறும்பு போன்ற சுறுசுறுப்பான ஆனால் அடக்கி வைத்திருக்கும் அமைதியான ஆளுமை முதிர்வு எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கிறது. கலைமதி அக்காவும் எல்லோரும் போலவே திரு,திருமதி ஜெகதீசன் தம்பதியினருக்கு மகளாக 28.06.1966 இல் ரேணுகாதேவி என்ற இயற் பெயருடன் அக்காமார் , அண்ணன்,தங்கை ,தம்பிகள் கொண்ட சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான்.தந்தை ஒரு புகைப்பட வல்லுனராக அந்தக் காலத்தில் பிரபல்யம் பெற்ற நிறுவனம் வைத்திருந்தார்.மற்றவர்கள் போலவே கல்வி,வாழ்க்கை என்று போனது.கணக்கியல் உயர் தேசிய கல்வி (HNDA)கூட முடித்திருந்தார்.பின்பு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்தார். காலத்தின் தேவை கருதி 1993 காலப் பகுதியில் தனது பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்,புரட்டாதி மாதம் தனது ஆரம்பப் பயிற்சியை மகளிர் பயிற்சிப் பாசறையில் 27ஆம் அணியில் “சுகி” முகாமில் மேற்கொண்டார்.பயிற்சியில் ஓடும் போது அவருடைய ஒரு கால் புரண்டு விட்டது.அப்படியிருந்தும் அடிப்படைப் பயிற்சியைத் தொடர்ந்து மேற் கொண்டதால் கால் முறிந்து விட்டது.அதனால் மிகுந்த சிரமப்பட்டதுடன் மிகுந்த மன வேதனையும் அடைந்தார். அதன் பின் 1994 பங்குனி மாதமளவில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதிக்கு பணிக்கு அனுப்பப்பட்டார்.சிறிது காலம் சிகிச்சையில் அவர் இருந்தாலும் கணக்காய்வுப் பணியைத் தொடர்ந்தார்.அங்கு தான் அவருடைய ஆளுமை வெளிப்பாடு தெரிய வந்தது.அத்துடன் வெளிவாரி வர்த்தக பட்டப் படிப்பையும் ( first in commerce)அங்கிருந்தே தொடர்ந்தார். நிதித்துறை வழங்கல் பிரிவின் வாணிபங்களின் கணக்காய்வுப் பகுதிக்கு பணிக்கப்பட்டிருந்தார்.அவருடைய பணி நேர்த்தி அவர்களுடன் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும்.தானும் நேரத்தை வீணடிக்காமல் மற்றவர்களையும் வீணடிக்க விடாமல் வேலை செய்வது அவரின் திறமை.வழங்கல் பகுதியில் இரும்புத் தொழிலகம்,புடவை வாணிபம்,கோல்சர் வாணிபம்,தையல் தொழிலகம்,அடுக்கணி வாணிபம் என பல வாணிபங்களிலும் தனது கணக்காய்வுப் பணியை திறம்பட மேற்கொண்டார். 1995 ஐப்பசி மாத காலப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக வான் தாக்குதல்கள்,எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.அங்கிருந்து சென்று சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் முகாமை ஒழுங்கமைத்து பணிகள் தொடர்ந்தன.மீண்டும் தரை வழியாகவும் கரையோரத் தாக்குதல்கள் மூலமும் பகுதி பகுதியாக இராணுவத்தினர் ஊர்களைக் கைப்பற்றிக் கொண்டிருந்தனர். 1996 பங்குனி மாத நடுப் பகுதியில் அங்கிருந்தும் இடம் பெயர்ந்து வன்னிப் பகுதிக்குச் சென்ற போதும் வாணிபங்களுக்கான கணக்காய்வுப் பணி ஒழுங்கு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்றது.ஆரம்பத்தில் கடினமானதாக இருந்தாலும் மனம் சோராமல் அவற்றையெல்லாம் எதிர் கொண்டு நீண்ட தூரம் சென்றும் வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்த போதும் பணிகள் சீராக்கப்பட்டன. அத் தருணத்தில் தான் இழந்த ஒன்றிற்காக இன்னொன்றைப் பெறுவதற்காக ஓயாத அலைகள்1 நடவடிக்கைக்காக மேலதிக தேவை கருதி நிதித்துறை மகளிர் அணியும் படையணிக்காகத் தெரிவு செய்யப்பட்டனர்.அதில் கலைமதி அக்காவும் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டார்.பயிற்சியின் போது உடைந்து பொருந்திய காலுடன் மிகவும் சிரமப்பட்டார்.ஆனால் ஒருநாளும் பயிற்சிக்குப் பின் நின்றதே இல்லை.குறிப்பிட்ட எண்ணிக்கை முழு வட்டமும் ஓடி முடித்தே ஆக வேண்டும்.அவரால் ஓட முடியாத நிலையில் நடந்தே மீதித் தூரத்தையும் முடிப்பார். இயலாவிட்டால் முகாமுக்குத் திரும்பச் சொன்னாலும் போக மாட்டேன் எனக் கூறி விட்டார்.தனக்குக் கிடைத்த சண்டைக்குச் செல்லும் சந்தர்ப்பத்தைத் தவறவிட அவர் விரும்பவில்லை.சாப்பாடு எடுக்கும் முறை அணிக்குழுவில் அவருக்கு வரும்போது அவர் கொஞ்சம் குள்ளமாக இருப்பதால் சாப்பாடு எடுக்கும் பெரிய சட்டியை(டாசர்) கீழே பிடித்துக் கொண்டு வர கொஞ்சம் சிரமமாக இருக்கும்.அதனால் சட்டியை(டாசர்)தலையில் சுமந்து கொண்டு தாண்டித் தாண்டி நடக்க வெளிக்கிட்டு விடுவார்.ஓயாத அலைகள் 1 வெற்றியடைய சத்ஜெய 1 நடவடிக்கையும் நடந்து முடிந்தது. மீண்டும் முகாம் திரும்பி தனது தொடர்ச்சியான பணியை மேற்கொண்டார்.சில வேளைகளில் நாங்கள் முகாமில் சமைத்தும் சாப்பிடுவதுண்டு.அப்போது அவர் முட்டைப் பொரியல் உண்டால் சவர்க்காரம் போட்டுக் கைகழுவ மாட்டார்.ஏனென்றால் கையில் அடிக்கடி அதை மணந்து பார்த்து மகிழலாம் என்பார்.அத்துடன் சமையற்கூடப் பகுதியில் சோறு கூட எடுத்து வரச் சொல்லிக் கூறுவார்.ஏனென்றால் அதில் நீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் வெங்காயம்,பச்சை மிளகாய்,உப்பு,தேசிப்புளி எல்லாம் விட்டு பழஞ் சோறு குழைத்துத் தருவதற்கு தான்.அவர் அவ்வாறு தரும் பழஞ்சோற்றின் சுவையோ தனிதான். அவரை முகாமில் ஒரு மூத்த அக்கா போல் கருதுவார்கள்.ஏனெனில் அறிவுரைகள் சொல்வதிலும் வழிகாட்டுவதிலும் சிறந்தவர்.சக போராளிகளாயினும் பணியாளர்களாயினும் யாரையும் இலகுவில் பகைத்துக் கொள்ள மாட்டார்.கண்டிப்பாகவும் சகசமாகவும் பழகக் கூடியவர்.எனவே அவருக்கென்று ஒரு தனி மரியாதை எல்லோரிடத்திலும் இருந்தது.நீண்ட காலமாக வழங்கல் பகுதி வாணிபங்களின் கணக்காய்வை அவர் திறம்பட செய்து வந்தார்.வழங்கல் பகுதிப் பொறுப்பாளராக அம்மா அண்ணை இருந்து வந்தார். இருப்பு எடுத்தல் தொடங்கி விட்டால் கலைமதி அக்காவை கேட்கவே தேவை இல்லை.”திருவெம்பாவை பாட வெளிக்கிட்டுட்டா” என எல்லோரும் கூறுவார்கள்.இரவில் பெற்றோல் மக்ஸ் விளக்கையும் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு கொட்டிலாக பார்ப்பதற்கு கிளம்பி விடுவார்.”இந்த மனிசியுடன் குடும்பம் நடத்த இயலாது”என இவருடன் பணி செய்பவர்கள் பகிடிக்கு கூறுவர்.இதனையும் ஒரு நாள் அவர் கேட்டு விட்டார்.ஆனால் கோபிக்காமல் சிரித்து சமாளித்து வேலை செய்விப்பார். வழங்கல் பகுதி புடவை வாணிபம் சுதந்திர புரத்தில் தான் இருந்தது.கணக்காய்வுப் பணி நிமித்தம் அங்குள்ள முகாமில் கலைமதி அக்கா மற்றைய போராளிகளுடன் தங்கியிருந்து வந்தார்.அதிகாலை புலர்ந்தது.அன்று புதுக்குடியிருப்புக்கு சென்று தனி நபர் வழங்கல் எடுக்கும் நாள்.தன்னுடன் துணையாக பணி செய்த போராளியை அங்கு செல்லத் தயாராகுமாறு கூறி விட்டு தேநீர் தயாரிக்க பால் காய்ச்சிக் கொண்டிருந்தார்.அந்தப் போராளி தயாராகி வந்து பார்த்த போது பாற் சட்டி கருகியிருந்தது.கலைமதி அக்கா அங்கு தான் நின்றவர்.ஆனால் அவருக்கு அது தெரியவில்லை. 1998 ஆனி மாதம் பத்தாம் நாள் அன்று தான் அந்தத் துயரமான சம்பவம் நடந்தது.திடீரென சிறிலங்கா இராணுவம் அப்பகுதி மீது வான்,தரை,கடலிலிருந்து ஒரே நேரத்தில் மும்முனைத் தாக்குதல் நடாத்தியது.அதில் பெருமளவு மக்கள்(33 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்), பல பணியாளர்கள் படுகாயமடைந்தும் பலர் கொல்லவும் பட்டனர்.யார் நினைத்தார் இப்படி நடக்கும் என்று? அச் சம்பவத்தில் எமது கலைமதி அக்காவும்(கப்டன் கலைமதி)அம்மா அண்ணாவும்(லெப்.கேணல் அன்பு/அம்மா)வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.” புடவை வாணிபம் இல்லா விடில் தான் இல்லை”எனக் கூறும் எங்கள் கலைமதி அக்கா என்றும் எம் தேச வரலாற்றில் நீங்காமல் நிறைந்திருப்பார். – விண்ணிலா.