Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. விந்தன் அண்ணாவுடனான அறிமுகம் கிடைத்தது எனது ஒன்றுவிட்ட அண்ணன்கள் மூலம்தான். அது 1983களின் பிற்பகுதி. ஆடிக்கலவரம் ஓரளவு ஓய்ந்திருந்தாலும் தமிழ் இளைஞர்களிடம் அது விட்டுச்சென்ற தாக்கம் அதிகம். இளைஞர்கள் எல்லோரும் ஏதேனுமொரு அமைப்புடன் தொடர்புகொண்டு தீவிரமாக இயங்கியகாலமது. அவ்வாறே விந்தன் அண்ணாவும் புலிகள் அமைப்புடன் இணைந்து தீவிரமாக இயங்கத்தொடங்கியிருந்தார். அண்ணன்களைப்போலவே அவரும் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் படித்துக்கொண்டு பகுதிநேரமாக வல்லையிலும் வெவ்வேறு இடங்களிலும் இரவில் சென்றிக்கு செல்வார். அக்காலத்தில் சென்றிக்கு செல்வோர் கொழித்தி எறியும் கிரனைட்டையே வைத்திருப்பார்கள். குமுழமுனையில் வாழ்ந்துவந்த மாமாவின் வீட்டிற்கு மட்டக்களப்பு சிறையுடைத்து வெளியேறிய புளொட் உமாமகேஸ்வரன் போன்றோர் மட்டக்களப்பிலிருந்து யாழ் வரும் வழியில் குமுழமுனையில் மாமா வீட்டில் தங்கிச்சென்றதிலிருந்து மாமாவும் குடும்பத்தினரும் புளொட்டின் தீவிர ஆதரவாளர்கள். மாமாவின் இளைய மகளின் பெயர் உமாபிரபா என்னுமளவில் மாமா உமா அவர்களதும் பிரபா அவர்களதும் தீவிர ஆதரவாளர். அவ்வகையில் எனது ஒன்றுவிட்ட அண்ணன்கள் புளொட்டின் ஆதரவாளர்களாக இருந்ததில் ஆச்சரியமில்லை. புளொட்டின் ஐயர் எங்கள் ஊருக்கு வந்து கூட்டங்கள் வைக்குமளவிற்கு அவர்கள் புளொட்டுடன் தீவிரமாக இயங்கினார்கள். புலிகளுடன் தீவிரமாக விந்தன் அண்ணா இயங்கியபோதிலும் அவர் தனது பாடசாலை தோழர்களான எனது அண்ணன்களுடன் அன்னியோன்னியமாகவே பழகினார். விக்னேஸ்வராவிலிருந்து கரணவாய் சில்லியோடைப் பகுதியில் இருந்த தனது வீட்டிற்கு செல்லும் வழியில் அண்ணன்கள் வீட்டிற்கு வந்து அரசியல் பேசுவது அவர்வழமை. இவ்வளவிற்கும் எனது அண்ணன்களுக்கும் விந்தன் அண்ணாவிற்கும் வயசு என்னவோ 15-16 வயதுதான். விந்தன் அண்ணனது இயற்பெயர் அரவிந்தன். அவரது அப்பா யாழ்ப்பாணம் முழுவதும் மிகவும் பெயர்பெற்ற இரசாயனவியல் (Chemistry) ஆசிரியரான சண்ணர் என அறியப்பட்ட சண்முகசுந்தரம் மாஸ்ரர். அவர் இயக்கத்தில் சேர்ந்ததும் அவரது இயக்கப்பெயர் சலீம். சிங்களம் வடமராட்சிப்பகுதி மீது லிபரேசன் ஒப்பரேசன் (விடுதலை நடவடிக்கை) எனும் பெயரில் அந்நேர அதன் நம்பிக்கை நட்சத்திரம் பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ தலைமையில் ஒரு விரைவு தரையிறக்கத்தை வடமராட்சியின் எல்லை பகுதிகளான தொண்டைமனாறு கடல்நீரேரியை அண்டிய கரவெட்டி யாக்கரு ஆயத்து சந்தி முள்ளி சந்தி போன்ற இடங்களில் ஹெலிமூலம் தரையிறக்கஞ்செய்த அதே நேரத்தில் தொண்டைமானாறு சந்நதி கோவில் பகுதியில் தங்கியிருந்த இராணுவம் வேகமான நகர்வைச்செய்து வல்லைச்சந்தி மற்றும் மண்டான் பகுதிக்கு நகர்ந்தனர். இதேபோன்று கடற்கரையூடு நகர்ந்து வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் இருந்த சிங்கள இராணுவத்துடனும் அதன் பின்னர் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி சுற்றுவட்டாரத்தில் இருந்த சிங்கள முகாமுடன் இணைந்ததன் மூலம் வடமராட்சிமீதான முற்றுகை முழுமை பெற்றது. விந்தன் அண்ணனுக்கு சிங்களம் தொண்டமனாற்றிலிருந்து முன்னேறியதிலிருந்து வல்லைவெளியில் சிங்களத்திற்கு தொடர்த தொல்லையைக் கொடுத்து முற்றுகையை சிதைப்பதே கொடுக்கப்பட்டவேலை. நெல்லியடி மத்தியகல்லூரியில் முகாமிட்டிருந்த சிங்களம்மீது கப்டன் மில்லர் அவர்கள் வரலாற்றுத் தாக்குதலான தற்கொடை தாக்குதலில் விந்தன் அண்ணாவினது பங்கும் குறிப்பிடத்தக்கது. நெல்லியடி முகாம் தாக்குதலின் பிற்பாடான ஒரு நாளில் சிங்களத்துடன் எதிர்பாராதவிதமான தாக்குலில் வல்லைப் பகுதியில் 12/07/1987 அன்று லெப் சலீம் அவர்கள் வீரச்சாவடைந்தார். ஒரு இனிமையான தேசப்பற்றுடன் மனிதநேயம் மிகுந்த மகனை தமிழ்தேசம் அன்று இழந்திருந்தது. விந்தன் அண்ணனுக்கு வீரவணக்கம். https://www.facebook.com/photo.php?fbid=2391995034163397&set=pb.100000587714856.-2207520000.&type=3
  2. சீலன்- விசுவாசத்தின் உருவம் துரோணர்- சாவுக்குள் நின்று சதுராடும் சாமர்த்தியம் போராட்ட களத்தில் எல்லோரையும் செதுக்கி செம்மைப்படுத்துவார்கள் ஆயினும் அரிதாய் ஒரு சிலரே அதிசிறந்த சிற்பிகளின் உளிகளால் செதுக்கப்படும் பெரும் பாக்கியத்தை பெறுவார்கள். சிலருக்கு இருக்கும் இடம் தேடி வாய்ப்புகள் வரலாம், ஆயினும் இவன் அந்த வாய்ப்புக்காய் முழுமையாய் அர்ப்பணித்த நாள் தொடக்கம் தன்னை அதற்காய் ஒப்புக்கொடுத்தான்,தன்னை தானே செதுக்கிக்கொண்டான், ஒரு சில களங்களில் தனி ஒருவனாய் நின்றான், தளபதிகளுக்கு தனித்தே தெரிந்தான். கிண்ணி அண்ணாவும், கஸ்ரோ அண்ணாவும் ஒரே களத்தில் கூட்டாய் தோள்தட்டிக்கொடுத்த பாக்கியம் பெற்ற சாதாரண முன்னரங்க போராளி. கோபம் வந்தால் முகம் சிவக்கும் வெள்ளைத்தோல் புலி தன்னை கரியபுலி கரும்புலியாய் உருமாற்றிய காலத்திடையே இவன் நின்ற களங்கள் தளங்கள் இவன் வாழ்க்கைக் குறிப்பின் முதல் பாகம். கரியபுலி கரும்புலியாய் உருமாறி துரோணராய் முழுஅவதாரம் தரித்தபின்னான இரண்டாம் பாகம் துரோணாச்சாரியாரின் வில் வித்தையை போன்றது. வேகம், விவேகம், தந்திரம், சாமர்த்தியம், சாணக்கியம் நிறைந்தது. தை 1 "எல்லாம் வெல்லலாம்" என்றவனை கரிகாலனிடம் இருந்து காலன் வென்ற கதை ...... ஏமாற்றம்...வலிநிறைந்தது!.. காலம் கடந்தே சில விதைகள் விருட்சமாய் முளைக்கும். -தேவராசா ஞானராஜ்
  3. கேணல் வாகீசன் (சீலன்/துரோணர்) தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் புலனாய் நடவடிக்கையின் “தாயக விடுதலைக்காய் தன்னையே மறைத்து எதிரியின் சாம்ராஜ்யத்தில் சாதனைகள் பல படைத்து விடுதலை அமைப்பின் நகர்வுக்கு வித்திட்ட போராளி” புலனாய்வுக் கட்டமைப்பே ஒரு இராணுவ அமைப்பை சீராக வழிநடத்த ஊன்றுகோலான ஒன்றாகும். போராட்டத்தில் இணைந்த ஆரம்பத்திலேயே புலனாய்வு சம்பந்தமான துறையில் இணைந்து விடுதலைப் பணியாற்றிய தளபதி துரோணர். இவரின் பணியில் விடுதலை தீ வீச்சாக தென்பட்டது. காலம் உருண்டோட பொறுப்பாளர்களின் அதி நம்பிக்கைக்குரியவனாக திகழ்ந்தான். விடுதலையை வேண்டி போராடும் ஒரு இராணுவ அமைப்பு கட்டுக் கோப்பாக சீர்குலைவின்றி வளர புலனாய்வுத் துறையே முக்கியம் என்பதை உணர்ந்து செயலாற்றியவர். புலனாய்வுத்துறையின் முக்கிய தளபதிகளின் வீரச்சாவின் பின் அந்த வெற்றிடங்களை இவரே பொறுப்பெடுத்து செயலாற்றினார். இவரின் செயற்திறன் தலைமையின் கவனத்தை ஈர்த்தது. பல செயற்பாடுகளில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரின் பாராட்டைப் பெற்றவர். அமைப்பின் தலைமை இவரின் புலனாய்வு ஆளுமையை உணர்ந்து இவருக்கு சிறந்த ஒரு புலனாய்வு அணியை வழிநடத்தும் பொறுப்பைக் கையளித்தது. தனது பொறுப்பை சரிவரச் செய்து தன் விடுதலைப் பணியில் சிறந்து விளங்கினார். கடமை தவறும் போராளிகளை சரியாகத் தண்டித்து பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தி சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார். போராளிகளோடு மிகவும் அன்பாகப் பழகுவார். பாராபட்சம் பாராது தனக்கு கீழ் இருக்கும் போராளிகளை வழிநடத்திய சிறந்த தளபதி. இவரின் விடுதலைப் பணியான புலனாய்வுத்துறையின் அவசியம் எவ்வளவோ அதே நேரம் ஆபத்தும் அதிகம். எதிரியின் கட்டுப்பாட்டு முக்கிய நகரங்களில் நிகழ்ந்த நடவடிக்கையின் சாதனையாளர். மக்களோடு மக்களாய் அன்பாகப் பழகி அவர்களை பயன்படுத்தியே பல சரித்திரங்கள் படைத்தவர். தன் போராளிகளை சந்திக்கும் நேரங்களில் தலைவரின் கரத்தை நாங்கள் தான் பலப்படுத்தோணும். அந்த ஆள் என்ன செய்யிறது, எத்தனை என்று கவனிக்கிறது. அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை எங்கட உயிர பணயம் வைத்தாவது செய்து குடுப்பம். என்று தான் அடிக்கடி கதைப்பாராம். ஆடம்பரத்தை முற்றாக புறந்தள்ளி வாழ்ந்த தளபதி. தமிழீழத்தின் வெளிப் புலனாய்வு நடவடிக்கைகளின் பல வெற்றிகளின் வேராகவும் செயற்பட்டவர். இவரின் சாதனைகள் பற்றி பலருக்கு தெரியாது. இருந்தாலும், அந்த சாதனை வீரனைப் பற்றி குறிப்பிட்டவர்களுக்கு நன்கு தெரியும். இவரின் விடுதலைப் பணியின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட ஒரு சம்பவம் நினைவில் குறிப்பிடுகிறேன் ஒரு இறுக்கமான காலகட்டத்தில் இலங்கையின் தலைநகரில் ஒரு நடவடிக்கைக்கான புலனாய்வு அணி நகர்த்தப்பட்டது. எந்த நேரமும் ஆபத்தும் அதிஉயர் பாதுகாப்புக்களை உடைத்து இவரின் திறமையால் அந்த அணி குறிப்பிட்ட இடத்தை அடைந்தது. எதிர்பாராத விதமாக அந்த அணியின் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டார். உடனே அந்த நடவடிக்கைக்கான காலத்தை நீடித்து அந்த அணிக்கு வரப்போகும் ஆபத்தான சூழலை உணர்ந்து அணியை தளத்தை நோக்கி நகர்த்தி பின்பு குறிப்பிட்ட காலவோட்டத்தின் பின் அந்த நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நிலமைகளை உணர்ந்து கண்ணும் கருத்துமாக செயற்பட்டவர். இவரின் சாதனைகளை எளிதில் விபரித்து சரித்திரம் எழுதிவிட முடியாது. எதிரி அவிழ்க்க முடியாத பல விசித்திரமான வேட்டைக்காரன் இவன். தமிழீழத் தேசியத்தலைவர் மனதிலும், மக்களிடத்திலும், போராளிகளிடத்திலும் தனி இடத்தை பிடித்த ஓர் தளபதி. மாற்று இன மக்கள் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் சாதனைகளையும், வீரத்தையும், தியாகத்தையும் அறிந்தவர்களால் நிச்சியமாக இவரை ஒரு சாதரண வீரனாகப் பார்க்க முடியாது. இவரின் செயல்கள் ஒவ்வொன்றும் வியப்பையே அளிக்கும். கடமை நேரத்தில் மிக மிக கண்டிப்புடன் இருப்பார். கடமை தவறும் போராளிகளோடு கோபம் கொண்டு சில மணி நேரங்களின் பின் அவர்களை அழைத்து ஆற்றுப்படுத்துவார்.இவரின் வீரச்சாவு உயிரை எம்மிடமிருந்து பிரித்ததே தவிர விடுதலை உணர்வை வீச்சாக்கியுள்ளது. விடுதலைப் போராட்டப் பாதையில் இவரின் சாதனைகள் வெளிச் சொல்ல முடியாத பொக்கிஷங்கள். பெயர் புகழை மறந்து எந்த நேரமும் பேராபத்தை எதிர்கொள்ள தாயாராக செயற்பட்ட உன்னத வீரன். எதிரிகள் விடைகண்டு பிடிக்க முடியாத பல கேள்விகளின் உரிமையாளன். 13.02.2009 அன்று சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சுக்கு இலக்காகி தமிழ்த்தாய் மடியில் வீரகாவியமானார். தாயக விடுதலையை கனவாய் நெஞ்சமதில் சுமந்து தமிழ் மக்களின் மண்,உரிமைகளை மீட்டெடுக்கும் எம் புனிதப் போரிலே கேணல் துரோணரோடு வீரகாவியமான ஏனைய அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவுகூர்ந்து பூசித்து வணங்கி இவர்களின் உயரிய உன்னத இலட்சியத்தை மனதில் நிறுத்தி விடுதலை வேண்டி வீறுநடை போடுவோமாக… ---------------- மாவீரர்களின் வீரவரலாறுகளோடு “ராஜ் ஈழம்”
  4. 1991ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த ஒஸ்காா் மணியந்தோட்டத்தில் லெப் கேணல் சாரா அவர்களின் தலைமையில் பயிற்சிபெற்றுக்கொண்டிருந்த வேளையில் (இவர் மன்னாா் மாவட்டத் தளபதியான லெப் கேணல் விக்ரர் அண்ணையின் தமையனது மகனென அறிந்த சரா அண்ணை விக்ரர் அண்ணையின் சங்கேதப் பெயரானா ஒஸ்காரை இவனுக்கு வைத்தார்.அத்தோடு விக்ரர் அண்ணையைப் பற்றி சில அறிவுரைகளையும் வழங்கினாா்.) 'ஆகாயக் கடல் வெளிச்' சமருக்கான பின்களப்பணிகளுக்கான சென்றாா். ஆகாய கடல் வெளி சமருக்குப் பின் கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக உருவாக்கப்பட்டபோது அங்கு சென்று ஐப்பான் 01 இல் பயிற்சிபெற்று கடற்புலியானான். 29.08.1993 ம் ஆண்டு பருத்தித்தித்துறைக் கடற்பரப்பில் கரும்புலித்தாக்குதலில் அழிக்கப்பட்ட டோறா பீரங்கிப் படகில் கைப்பற்றப்பட்ட 20மிமீ இன் துணைச் சூட்டாளாராகச் செயற்பட்டு அதன் பின் சூட்டாளாராகச் திறமையாகச் செயற்பட்டதால் கடற்புலிகளுக்காக முதன் முறையாக வந்த கனரக ஆயுதத்தின் பிரதான சூட்டாளராகவும் அதன் பொறுப்பாளராகவும் செயற்பட்டான். வீரச்சாவடையும் தருணத்திலும்கூட அவனது கை கனரக ஆயுதத்திலேயே இருந்தது. கிளாலி தொடக்கம் திருகோணமலை வரை வீரச்சாவடையும் வரை ஐம்பத்திரண்டு சமர்களில் பங்குபற்றி தனது ஆற்றலை வெளிப்படுத்தினான். அது மட்டமல்லாது தமிழீழத்திற்க்கு பலம் சோ்க்கும் நடவடிக்கையிலும் முன்னின்று செயற்பட்டான். பொறுப்பாளராக படகின் கட்டளை அதிகாாியாக பலம் சோ்க்கும் அணிகளின் பொறுப்பாளாராக லெப் கேணல் நரேஸ் படையணியின் தளபதியாக என பலவேறு கடமைகளை பொறுப்பெடுத்து போராளிகளின் திறமைகளை அறிந்து அதற்கேற்றவாறு வளர்த்தெடுத்தான். 12.01.1999 அன்று திருகோணமலையில் கொலரா நோயின் தாக்கத்தால் இருந்த தென்தமிழீழப் போராளிகளை வன்னிக்கு எடுக்கும் நடவடிக்கையினை விநியோக அணி செய்து கொண்டிருக்க அதற்க்கு பாதுகாப்புப் வழங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இடம்பெற்ற இலங்கைகடற்படையினருடனான கடும் சமரில் வீரச்சாவடைகிறான். 1999ம் ஆண்டு பிற்பகுதியில் இவனது பெயரைத் தாங்கிய கடற்சண்டைப்படகு வடிவமைக்கப்பட்டு கட்டளைப்படகாக செயற்பட்டதுடன் இவனால் வளர்த்தெடுக்கப்பட்ட போராளிகள் ஆயுதச்சூடுனராகவும் கட்டளை அதிகாரிகளாகவும் அப்படகில் செயற்பட்டனர். மூலம்: http://irruppu.com/2021/01/11/லெப்-கேணல்-ஆதிமான்-ஒஸ்கா/ எழுத்துருவாக்கம் - சு.குணா.
  5. http://www.errimalai.com/wp-content/uploads/2022/05/லெப்.கேணல்-பிரசாந்தன்-1024x683.jpg 1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து அதன் பின் கனரக ஆயுதப் பயிற்சியையும் பெற்று வெளியேறிய காலப்பகுதியில் கடற்புலிகளின் விசேட தரைத்தாக்குதலனி ஒன்று மாவீரான லெப் கேணல் டேவிட்/ முகுந்தன் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டபோது அவ்வணிக்குள் உள்வாங்கப்பட்ட பிரசாந் . அங்கு தனது திறமையான செயற்பாட்டால் போராளிகள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றான். இப் படையணி ஒரு பெரும் தாக்குதல் ஒன்றிற்கான பயிற்சிக்காக மற்ற தரைத்தாக்குதலணிகளுடன் இணைந்து அப்பயிற்சிகளில் பங்குபற்றியது.பயிற்சிகள் முடிவடைந்தவுடன் .இவர்கள் எடுத்த பயிற்சிக்கான சமரான பூநகரிக் கூட்டுத்தளம் மீதான தாக்குதலில் பங்குபற்றி தனது முதலாவது தாக்குதலிலேயே தனக்கான ஒரிடத்தை பதித்தான். அதனைத் தொடர்ந்து .1994ம் ஆண்டு ஆரம்பத்தில் இப்படையணியில் இருந்த போராளிகளும் வேறு பலபோராளிகளும் உள்வாங்கப்பட்டு தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக கடற்புலிகளின் கடற்தாக்குதலனியாக (கிளாலிக் கடற்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சாள்ஸ் அவர்களின் நினைவாக) சாள்ஸ் படையணியாக உருவாக்கம் பெற்றது. இப்படையணியில் உள்ளவர்களுக்கு அனைத்துப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு கடற்சமர் மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்கும் ஏற்றவாறு வளர்த்தெடுக்கப்பட்டனர். இப்பயிற்சிகளில் சிறந்து விளங்கியவன் குறிப்பாக ஐம்பது கலிபர் துப்பாக்கியின் சிறந்த சூட்டாளனாக அங்கிருந்த போராளிகளுள் சிறந்து விளங்கிய பிரசாந். அக்காலப் பகுதியில் நடைபெற்ற பெரும்பாலான கடற்சமரில் முன்னனி ஆயுதமாக தனது ஐம்பது கலிபர் துப்பாக்கியுடன் செனறு வந்தவன் . ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் படகுச் சாரதியாகவும் சென்று வந்தான்.சிலகாலம் கப்பலிலும் கடமையாற்றிய பிரசாந் கடலனுபவங்களையும் எனைய பல அனுபவங்களையும்.பெற்றுத் திரும்பியவன் இங்கு வந்து முல்லைத்தீவுச் சமரில் கைப்பற்றப்பட்ட ஆடலறிப் பீரங்கிகளை சக போராளிகளுடன் இணைந்து பாதுகாப்பாக நகர்த்துவதில் முக்கிய பங்காற்றினான். அதன் பின் சாள்ஸ் படையணியின் துணைப் பொறுப்பாளராக சிறப்புத் தளபதி சூசை அவர்களால் நியமிக்கப்படுகிறான்.அப் பணிகளில் மிகவும் திறமையாகக் செயற்பட்ட பிரசாந் தொடர்ந்து சிறப்புத் தளபதி அவரகளின் பணிப்புரைக்கமைவாக விமானத்தாக்குதலால் விநியோகம் பாதிக்கப்படாமலிருக்க சாளையில் பிறிதொரு ஒடுபாதை (படகுகள் இறக்கி ஏற்றுவதற்க்கு )அமைக்கச் சொன்னதற்கமைவாக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அமைத்தான் . என்ன வேலையாகிலும் சிறப்பாகச் செய்வதிலும் பிரசாந்திற்க்கு நிகர் பிரசாந்தே தொடர்ந்து புதிய கனரக ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவ் ஆயுதங்கள் வன்னிக்குக் கொண்டு வருவதிலும் பெரும் பங்காற்றியவன் .அக் கனரக ஆயதங்கள் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்டபோது அவ் ஆயுதங்களுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டபோது பிரசாந்தும் ஒருவனாகச் சென்று பயிற்சியில் சிறந்து விளங்கி அக் கனரக ஆயுதத்தின் சிறந்த சூட்டாளனாகவும் அவ் ஆயுதத்தின் பொறுப்பாளனாகவும் பயிற்சி முடித்து வெளியே வந்தான். அக்காலப் பகுதியில் கடற்புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாத கடற்படையினர் அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கடற்புலிகளின் படகுகள் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர்.இது சம்பந்தமாக சிறப்புத் தளபதி சூசை அவர்கள் போராளிகளுடன் கலந்தாலோசித்து கொண்டிருந்தபொழுது நான் எனது ஆயுதத்தால் அடித்து நிற்பாட்டுவேன் என்று போராளிகளுக்கு நம்பிக்கையூட்டினான். 25.05.1999 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் விநியோகப் பாதுகாப்பு நடவடிக்கையின்போது கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது தனது நீண்ட கடற்சண்டை அனுபவத்தின் மூலமும் மதிநுட்பமாகவும் சக போராளிகளின் துணையுடனும் தனது கனரக ஆயுதத்தால் சிறிலங்காக் கடற்படையின் அதிதொழில் நுட்பம் கூடிய அதிவேக டோறாப் படகை அடித்து சொன்னதைப் போலவே நிற்பாட்டி வீரச்சாவடைகிறான். பல போராளிகளை ஆயுதத்துறையில் தன்னைப்போலவே வளர்த்த ஒருவீரன் பெரும் நெருக்கடிக்குள்ளும் போராளிகளை கட்டுப்பாட்டோடு வைத்திருந்த பொறுப்பாளன்.இப்படியாக பிரசாந்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.இவனது பெயரில் உற்பத்தி செய்யப்பட்ட படகு ஆழ்கடல் சண்டைப் படகுகளின் கட்டளைப் படகாக செயற்பட்டதுடன் இவனால் வளர்க்கப்பட்ட போராளிகள் அப்படகின் முன்னனி ஆயுதத்தின் சூடுனராகவும் கட்டளை அதிகாரிகளாகவும் செயற்பட்டனர். மூலம்: erimalai.com
  6. நன்றி ஐயனே. (தெளிவிற்காக, இது எதுவும் நான் எழுதவில்லை. இது புலவர் என்ற முன்னால் கடற்புலிகளின் கட்டளையாளர் எழுதியவையே.)
  7. கடற்புலிகளின் முதலாவது தரைத்தாக்குதல் படையணியின் பொறுப்பாளராக லெப் கேணல் அருச்சுனா அண்ணை நியமிக்கப்பட்டபோது அது அருச்சுனா படையணியாகவே 1995 யூலை முற்பகுதிவரை அழைக்கப்பட்டு வந்தது. லெப் கேணல் சூட்டியண்ணையின் வீரச்சாவிற்கு (மண்டைதீவுத் தரையிறக்கம் மற்றும் தாக்குதலில்) பின்னர் கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணி “சூட்டி படையணி”என 1995/யூலை 5 கரும்புலிகள் நாளன்று சிறப்புத்தளபதி சூசை அவர்களால் பெயர் சூட்டப்பட்டு தரைத்தாக்குதல்களில் பங்குபற்றியிருந்தது. யாழ்தேவி எதிர்ச்சமர், பூநகரி வெற்றிச்சமர், உடுத்துறை நாகர்கோவில் முன்னரங்க தடுப்பு. மண்டைதீவு முகாம் தாக்குதல், சூரியக்கதிர்-1 எதிர்ச்சமர், சூரியக்கதிர்-2 எதிர்ச்சமர், யாழ்/தொண்டமனாறு முன்னரங்க தடுப்பு, யாழ்/வடமராட்சித் தாக்குதல்கள், ஓயாத அலைகள்-1 நடவடிக்கை, சத்ஜெய எதிர்ச்சமர், ஓயாத அலைகள்-2 நடவடிக்கை, கிளிநொச்சி-பரந்தன் நிலமீட்பு நடவடிக்கை, ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள்-3 நடவடிக்கை மற்றும் ஆனையிறவு வெற்றிச்சமர், யாழ் அரியாலை, தனங்கிளப்பு, நாவற்குழி, கைதடி, சாவகச்சேரி நோக்கிய முன்னேற்ற நடவடிக்கை, மன்னார் முன்னரங்கத் தடுப்பு, மணலாறு முன்னரங்கத் தடுப்பு, தண்ணிமுறிப்பு முன்னரங்கத் தடுப்பு, வட்டுவாகல் முன்னரங்கத் தடுப்பு, சாலை முன்னரங்கத் தடுப்பு, முள்ளிவாய்க்கால் சமர்கள் என இறுதிப்போர் வரை சூட்டி படையணி களமாடியிருந்தது. அதன் தளபதிகளில், லெப் கேணல் அருச்சுனா, லெப் கேணல் சூட்டி, லெப் கேணல் சுதர்சன், லெப் கேணல் விடுதலை, ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். 1993 காலப்பகுதியில் கடற்புலிகளின் யாழ் மாவட்ட தளபதியாக செயற்பட்டு பின்னர் கடற்புலிகளின் தரைத்தாக்குதல் தளபதியாகச் செயற்பட்டு 1995 இல் இதே நாளில் யாழ்/மண்டைதீவில் அமைந்துள்ள சிங்களப் படைமுகாம் தகர்ப்பில் வீரமரணத்தை தழுவிக்கொண்ட லெப். கேணல் சூட்டி அவர்களுக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வோம். நினைவுகளுடன்... புலவர் கடற்புலிகள்
  8. அன்னலிங்கம் பகவதி தம்பதியினரின் மூத்த புதல்வன் . ராஜ்கண்ணா என்ற இயற்பெயர் கொண்ட எங்கள் கஜேந்திரன். முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு சிவநகரில் சூரிய உதயத்தை முந்திக்கொண்டு அழகிய குழந்தையாய் பிறந்த பொழுது பெற்றோரும் அறிந்திருக்கவில்லை. இவன் இந்த மண்ணின் மைந்தன் என்று. ஒரே தங்கையும் அன்பு தம்பியுமாய் கலகலப்பான அழகிய குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்தாலும் தமிழர் நிலங்களில் நடைபெற்ற சிங்கள ஆக்கிரமிப்புக்களைக் கண்டு சிறுவதிலையே சீற்றம் கொண்டான். தானும் போராடவேண்டும் என்று நினைத்து போராட்டத்திற்கு இணைவதற்கு சென்றவனை மீண்டும் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். "உனக்கு போராட போற வயது இன்னும் வரவில்லை இப்போது படி" "என்ற தந்தையின் அறிவூட்டலில் சிறிது காலம் அமைதியாய் வாழ்ந்தான் . பாடசாலை கல்வி மட்டுமன்றி விளையாட்டிலும் சிறந்த ஈடுபாடுடையவனாக இருந்தவன். ஆரம்ப கல்வியை பொக்கனை மகா வித்தியாலத்திலும் பின்னர் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலத்திலும் கற்றுக்கொண்டிருந்தான் வலிகாம இடப்பெயர்வுகளின் போது மக்கள் பட்டவலிகளை எண்ணி கண்கலங்கி அவர்களிற்கு மாணவராக உள்ளபோதே பல உதவிகளை செய்தான். "அண்ணா ஏன் எங்களை விட்டிற்று போறாய் என்ற தங்கைக்கு வீட்ட இருந்தால் யார் உங்களுக்கு பாதுகாப்பு தாறது" என்று சொல்லி.சென்றவனின் ஒரே தங்கை குழந்தைகளையும் பரிதவிக்கவிட்டுவிட்டு மாத்தளனில் எறிகனை வீச்சில் பலியானாள் என்ற செய்தியை அவன் இருந்தால் இன்று தாங்கியிருக்கவே மாட்டான். 1997 ஆண்டு போராளியாக தன்னை இணைத்துக் கொள்ளுமாறு லெப் கேணல் தமிழ்வாணன் அண்ணா விடம் சென்று இணைந்து கொள்கிறான். பின்னர் அடிப்படைப்பயிற்சி முடிக்காமலே மருத்துவ பிரிவின் வன்னி மேற்கின் நிர்வாக முகாமின் நிர்வாக வேலைகளிலும் தொலைத் தொடர்பாளராகவும் கடமை செய்து கொண்டிருந்தவனின் திறமைகளை இனங்கண்ட மருத்துவ பொறுப்பாளர் மருத்துவ கற்கை நெறியை தொடங்க அனுப்படுகின்றான். .அதன் பின்னரான செயல்பாடுகளில் மருத்துவ போராளியாகிய பின்பே அடிப்படை இராணுவப்பயிற்சியையும் பெற்று கொண்டு படிப்படியாயக வளர்ச்சிகண்டான். மருத்துவ போராளி கஜேந்திரன் எங்களுக்கு எல்லாம் சிறியவனாய் எமது மருத்துவ குழுவில் இருந்தாலும் அவனிடம் சிறந்த அறிவும் ஆழுமையும் நிறைந்து கிடந்தன.. யாழ்வேள் மருத்துவமனையின் மருந்து களஞ்சிய பொறுப்பாளராக நீண்ட காலங்கள் இருந்திருக்கிறான் மருத்துவத்துறையில் . அவன் தன்னுடைய பொறுப்பில் எந்த நேரத்திலும் கடமை தவறாதவன் . தனக்கு கொடுக்கப்படும் பணியை காத்திரமாகவும் விருப்பத்துடனும் செய்து முடிப்பான். அது அவனுடைய தனிச் சிறப்பாகும். பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடின்றி தனக்கு தேவையானதையும் தெரியாதவற்றையும் கேட்டறிவதில் அவன் ஒருபோதும் பின்னின்றதில்லை. சரியான குறும்புக்காரன் ஒரு பொழுது குளவிக்கூட்டிற்கே கல் எறிந்து குளப்பிவிட்டு ஓடியவன் .இன்னொரு நாள் யாள்வேள் மருத்துவ மனையில் மதியநேரம் வெயில் உச்சத்தைதொட்டுக்கொண்டிருந்தது. பெண்கள் பகுதியின் வாசலில் கஜேந்திரன் குரல் "அவசரமாக திருமணமான அக்காக்கள் எல்லோரையும் டொக்டர் வரட்டாம் வேகமாக வரட்டாம் " அப்போது தான் வேலை முடித்து சாப்பிட்டு கொண்டிருந்த எல்லோரும் அரையும் குறையுமாக ஏன் என்ற வினாவுடன் அவசரமாக ஓடுகின்றார்கள். இரத்த வங்கியில் நின்ற என்னிடமும் சொல்கின்றான் "டொக்டர் வரட்டாம் அனுமதிக்கும் விடுதிக்கு உங்களை " நானும் செல்கிறேன் எதுவும் அறியாதவனைப் போல் நின்று விட்டு சரி எல்லோருக்கும் ஒரு விடயம் "நாளைக்கு வரும்போது கோல்மஸ்(colmans) பைக்கற் ஒன்று வேண்டிக்கொண்டுவாங்கோ எறிக்கும் வெயில் தாங்க முடியல்ல என்ன Brand என்று குயில் அக்கா விடம் கேளுங்கள் சரி நீங்கள் எல்லோரும் போய் வச்சீட்டுவந்த சாப்பாட்டை சாப்பிடுங்கோ நான் சொன்னதை மறக்க வேண்டாம் " என்று சொல்லி விட்டு ஓடி விட்டான் .இப்படி பல குறும்புகள் அவனை பேசிவிட்டு போனாலும் அடுத்த நிமிடம் வந்து நிற்பான். நோயாளர்களை அன்பால் தன் வசப்படுத்துவது மட்டுமன்றி அவர்களுக்கு குறுக்கெழுத்துப் போட்டியில் கட்டங்களை நிரப்புதல், நுண்ணறிவு போட்டிக்கான கணக்குகளை தயாரித்து கொடுத்தல் .சதுரங்கம் விளையாடல் என்று அவர்களுடன் தோழமையுடன் ஆற்றுப்படுத்தும் புதுவழியை கையாள்வதில் வல்லவன்..அவனின் பாரமரிப்பில் இருந்த எந்த போராளி நோயாளர்களும் அவனை இன்றும் மறந்து விடமாட்டார்கள் . சற்று சாய்வான துள்ளல் நடையும் கூரிய பார்வையும் விரல் நகங்களை கடிக்கும் குறும்புக்காற கஜேந்திரன் தான் இத்தனை திறமைகளின் சொந்தக்காறன். கணனி பாவணை பெரிதாக இல்லாத காலத்திலே அந்த துறைசாரந்த தேடலும் அறிவும் அவனிடம் இருந்தது "மென்பந்து,கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டுவான். . ஒரு முறை உலககோப்பை கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று கொண்டிருந்ததை வெளியில் சென்று பார்த்து விட்டு வந்து தானே தலைமை வைத்தியரிடமும் அதைப்பற்றி கலந்துரையாடி அதற்கு தண்டனையும் வாங்கினான் ."ஏன் பொல்லை கொடுத்து அடிவாங்கினாய் "தம்பி என்று கேட்டபோது சரி பாவம் தானே அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்றான் சாதாரணமாக .. மருத்துவ பிரிவில் மாதாந்தம் நடத்தப்படும் பொது அறிவு பரீட்சை யில் அனேகமாக அவனுக்கு தான் முதல் இடம் கிடைக்கும் .எப்போது எங்கே புத்தகம் படிப்பான் என்றே எங்களுக்கு தெரியாது. ஆனாலும் மருத்துவமனையின் நூல் நிலையத்திற்கும் வரும் புத்தகங்களை முதலாவதாக அவன் வாசித்துவிடுவான். அவன் வாசித்த பிறகுதான் எமக்கு அந்தப் புத்தகங்கள் கிடைக்கும் . போர்க்காலத்திற்கே உரிய மருந்து தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, மருத்துவ களஞ்சியத்திற்கு பொறுப்பாக இருந்த காலங்களில் கடும் சிக்கனமாக மருந்துகளைப் பிரித்து வழங்குவான். முக்கியமான மருத்துகளை இல்லை என்று சொல்லி கைவிரிக்காது சேகரிப்பில் வைத்திருந்து மிக அவசர நிலைலைகளில் தன் தொழிற் திறமையைக்காட்டி பொறுப்புவைத்தியர் அஜோ விடம் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறான். புதுக்குடியிருப்பிலிருந்து கிளிநொச்சிக்கு லான்மாஸ்ட்ரில் தான் மருந்துப்பொருட்களை எடுத்து வரவேண்டியிருந்த காலம் அது . தானே நேரடியாக சென்றுவிடுவான் . திரும்பி வரும் போது அடையாளம் காணமுடியாத அளவிற்கு அவனை செம்மண் புழுதி மூடியிருக்கும். அப்படி இருந்த போதிலும், மருந்துப் பொருட்களை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். தமிழீழ சுகாதாரசேவையில் இருந்த நாட்களில் தன் திறமைகளை வெளிப்படுத்த அவன் தவறியதில்லை. மன்னார் மாவட்ட தமிழீழ சுகாதாரசேவைப் பொறுப்பாளராக இருந்தபோது அவனது ஆளுமையான பொறுப்புமிக்க செயற்பாட்டைக்கண்டு அப்போது சுகாதார சேவைக்கு பொறுப்பாக விருந்த விக்கி டொக்டரிடம் பல முறை பாராட்டை பெற்றதுடன் அவனுக்கான பணிகளும் கூடுதலாக வழங்கப்பட்டது. பின்னர் வைத்தியர் சுஐந்தன் தமிழீழ சுகாதாரசேவைக்கு பொறுப்பாக இருந்த போதும் கஜேந்திரனின் பணி சுகாதாரசேவையுடன் தொடர்ந்தது. மாவீரன் கஜேந்திரன் பற்றி மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிய போராளி வைத்தியர் இப்படிக் கூறுகிறார் " சுகாதார சேவையின் பணிகள் ஆரம்பமாகும் நேரம் காலை 9 மணியாக இருக்கும் போது கஜேந்திரன் அதிகாலை 4 மணிக்கே எழும்பி களநிலமைகளை ஆராய்ந்து சரியான தரவுகளுடன் பணியாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதுடன் பணிசார்ந்த விடயங்களில் கண்டிப்பாகவும், மற்றவர்களையும் சரியாக வழிநடத்தி செல்லும் விரைவான செயற்பாட்டாளராகவும் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பேசப்பட்டான். " இவ்வாறு பல தியாகங்கள் அர்பணிப்புகளுடன் செயற்பட்ட கஜேந்திரனின் களங்கள் மேலும் விரிந்தன. 2006 ஆண்டு சமாதான இடைவெளியின் பின் மீண்டும் போர் தென் தமிழீழத்தில் ஆரம்பித்தது. கடற்புலிகளின் ஆழ்கடல் வினியோக கப்பல் தொகுதிகளில் பணிபுரியும் போராளிகள் தரைக்கு வருவது சில நாளோ மாதங்களோ தடைப்படலாம் அதனால் போராளிகள் காயமடைந்தாலோ நோய் வந்தாலோ ஆழ்கடலில் தான் நின்று சிகிச்சை பெறவேண்டும் என்று கடற்புலிகளின் தளபதிகளின் முன்கூட்டியே கணிப்பின் பின் அதற்கான சிறப்பு மருத்துவ போராளி ஒருவரைக் கேட்டிருந்தார்கள் . அதற்கு தகுதியானவராக கஜேந்திரன் தெரிவு செய்யப்படுகின்றான். அந்த கப்பலை சென்றடைவதற்காக சரியான களம் கிழக்கு மாகாண மாக அறிவிக்கப்பட்டதால் 2006.6 .மாதம் பல தடைகளை தாண்டி நீண்ட நடைப்பயணத்தில் சென்ற அணியுடன் கஜேந்திரனும் கிழக்கு மாகாணத்தின் வெருகல் பகுதியை சென்றடைகின்றான். அங்கு நின்ற மருத்துவ போராளிகளை சந்தித்துவிட்டு அவர்களிற்கான சில பொருட்களை கொடுத்துவிட்டு தனக்கான பணிக்கு செல்ல காத்திருந்தவன் இரவோடு இரவாக வெருகல் முகத்தூவாரப்பகுயிருந்து தனக்கு வழங்கப்பட்ட பணிக்காக ஆழ்கடல் வினியோக தொகுதிக்கான சிறப்பு மருத்துவ போராளியாக பயணமாகிறான் பின் ஒரு நாளில் அவன் இல்லாத செய்தி எம் மருத்துவ மனை முழுவதும் நிறைந்தது அந்த வீரர்களின் ஈரவரலாறு ஈழ மண் எங்கும் விதையாகிபோனது. உலக வல்லரசுகள் இலங்கை அரசிற்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில். 10.09.2007 அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல்(1500NM )மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் "எம்.ரி. மன்யோசி" (M.T. Manyoshi) எண்ணெய்க் கப்பல் மற்றும் "எம்.வி. செய்ஸின்" (M.V. Seishin), "எம்.வி. கொசியா" (M.V. Koshia) ஆகிய வணிகக் கப்பல்களை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்த வேளையில் 11.09.2007 அதிகாலை வரை தொடர்ந்து தம்மிடம் இருந்த ஆயுதங்கள் உயிர்ப்பு இழக்கும் வரை தொடர்ந்து போராடினார்கள். இத்தகவல்களை தமிழீழத்திலுள்ள கட்டளை மையத்திற்கும் கிடைத்தது. மூன்று கப்பல்களும் வெவ்வேறு திசைகளில் பயணித்துக் முற்பட்டபோது போது முறையே மதியம் ஒருமணியளவில் லெப்.கேணல் சோபிதன் தலைமையிலான வணிகக் கப்பலும் லெப் கேணல் செம்பகச்செல்வன் தலைமையிலான எண்ணெய்க்கப்பலும் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கிபோயின. அதிலிருந்த போராளிகளும் எதிரியிடம் பிடிபடாமல் சயனைற் கடித்து கடலிலே காவியமானார்கள் .முன்றாவது வணிகக்கப்பலான லெப் கேணல் எழில்வேந்தனது கப்பலில் தான் கஜேந்திரனும் இருந்தார் இவர்களை நோக்கி வந்த கடற்படையினர் மீது கப்பலிலிருந்த சிறிய மோட்டார்களை பயன்படுத்தி இறுதிவரை தாக்குதல் நாடாத்தினார்கள் மிகவும் மூர்க்கத்தோடும் உறுதியோடு களமாடி 11.09.2007 அன்று கடலிலே புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்றார்களில் லெப் கேணல் கஜேந்திரனும் (தமிழ்மாறன்).இணைந்து கொண்டான் உன்னத இலட்சியத்திற்காக ஆழ்கடலில் சங்கமித்த இந்த மாவீர்களின் வீரக்கதைகள் ஆர்பரித்து எழும் அலையாகி தினம் அடித்துக்கொண்டேயிருக்கும் .............. -மிதயா கானவி, மருத்துவப் போராளி
  9. 1990 களில் இடம்பெற்ற முப்படைகளின் மக்கள் மீதான கொடுரத் தாக்குதலின் விளைவாக போராடப் புறப்பட்டவர்களில் ஒருவனாக புறப்பட்ட சிறி பயிற்சி முடிவடைந்தவுடன் கடற்புறாவிற்க்கு சிலபோராளிகள் உள்வாங்கப்பட்டபோது சிறியும். ஒருவனாக வந்தான்.பின்னர் விநியோகநடவடிக்கைக்காக லெப். கேணல்.டேவிட் அண்ணாவுடன் சிலமாதங்கள் தீவகப்பகுதியில் கடமையாற்றினார். ஆர்.பி.ஐி பயிற்சி எடுத்து அதில் மிகவும் தேர்ச்சி பெற்று சிறந்த வீரனாகத் திகழ்ந்தார். பின்னர் ஆகாய கடல் வெளிச் சமரில் பங்கு பற்றி தனது முதலாவது சமரும் நீண்ட நாட்கள் தொடர்ந்த சமரில் சளைக்காமல் போரிட்டான்.தொடர்ந்து கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக மாற்றம் பெற்றபோது கடற்புலிகள் அணியில் தனது பணியைத் தொடர்ந்தவன் கிளாலி கடல் நீரேரியில் மக்கள் போக்குவரத்திற்கான பாதுகாப்புச் சமரின்போது கடற்புலிகளின் தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இரு ஆர்.பி.ஐிக்களைப் படகில் ஒரே தளத்தில் பூட்டி ஒரே நேரத்தில் தாக்குதல் நடாத்தி புதிய ஒரு சாதனையை படைத்த பெருமை அண்ணாச்சியையே சாரும் .படகுச் சாரதியாகவும் சென்று கிளாலிக் கடல் நீரேரிச் சமரில் மிகத் திறமையாகச் செயற்பட்டு தனக்கான ஒரிடத்தைப் பதித்தான். தொடர்ந்து பூநகரிச் சமரில் பங்குபற்றி பாரிய விழுப்புண்ணடைந்தான்.தொடர்ந்து விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு முகாம் மீதான வெற்றிகரத் தாக்குதலிலும் முக்கிய பங்காற்றிய அண்ணாச்சி .அதன் பின் கடற்புலிகளின் பொறியியற் துறையிலும் சிலகாலம் கடமையாற்றியிருந்தான். இவனதுசெயற்பாடுகளை கவனித்த சிறப்புத் தளபதி அவர்கள் இவனை மாவீரரான மேஐர் காமினி /சுதாகர் அவர்களுக்கு உதவியாக கடற்புலிகளின் முதுகெலும்பான படகுகளை தரையில் காவிச் செல்லும் படகுக்காவிகள் (டொக் ) அணியுடன் நின்றான் .படகுகளைத் தேவைக்கேற்ப இடங்களுக்கு தரையால் நகர்த்துவதே இவ்வணியின் பணியாகும் . தொடர்ந்து காமினி அவர்களை சிறப்புத் தளபதி அவர்கள் தன்னுடன் அழைத்துச் செல்ல காமினி அவர்களின் இடத்திற்கு அண்ணாச்சி நியமிக்கப்படுகிறான். அந்த நேரத்தில் தான் யாழ் இடப்பெயர்வும் நடைபெற்றது .அதன் பின் போராட்டத்தை பலப்படுத்துமுகமாக சாலைப் பகுதியில் தொடர்ச்சியாக விநியோகம் நடைபெற அவ் விநியோக நடவடிக்கைக்கு படகுகளை வேகமாக நகர்த்துவது.அப்படகுகளை விநியோகம் முடிந்து அதிகாலை வரும்பொழுது வேகமாக அப்படகுகளை படகுக்காவியில் ஏற்றி உழவு இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பன இடங்களுக்கு நகர்த்தி விமானத்தாக்குதலுக்கு அப்படகுகள் உள்ளாகாமல் பாதுகாத்த பெருமை அண்ணாச்சியின் அணியையே சாரும். அவ்வளவிற்கு படகுகாவிகளை பராமரித்ததாகும். செம்மலைத் தொகுதி ,வட்டுவாகல் தொகுதி, சாலைத் தொகுதி ,கடற்சண்டை மற்றும் விநிேயோகப் படையணிகளின் படகுகள் நகர்த்துவது மற்றும் படகுக் காவிகள் படகுக்காவிகளை இழுக்கப் பயண்படுத்தப்படும் உழவு இயந்திரங்களுக்கான பொறுப்பாளனாகவும் செயற்பட்ட அண்ணாச்சி சாலை யிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் விநியோக நடவடிக்கைக்கும் சென்றுவந்தான் . இரவு விநியோக நடவடிக்கைக்குச் சென்று வந்தாலும் பகலில் படகுக்காவிகளின் வேலைகளை மிகவும் திறம்படச் செய்தான் . இக்காலப்பகுதியில் குறிப்பிட்டளவான இளையபோராளிகளைக் கொடுத்தார் சிறப்புத்தளபதி சூசை அவர்கள். அப்போராளிகளை திறம்பட பயிற்றுவித்த அண்ணாச்சி அப்போராளிகளை தனது சொந்தச் சகோதர்களைப் போல பார்த்துக் கொண்டான்.ஒரு தடவை தலைவர் அவர்களை சந்தித்த பொழுது படகு நகர்த்துவதற்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களிடமே கேட்டு வாங்கிக்கொண்டார்.கடலில் சண்டைபிடிப்பது இலகு ஆனால் படகுக்காவிகளை பராமரிப்பதென்பது மிகவும் கடினமான விடயமாகும்.அதுவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் செய்வதென்பது இலகுவானதல்ல அப்படியிருந்தும் அண்ணாச்சி செயலால் செய்து காட்டினான். நீண்டகடலனுபவம் கொண்ட அண்ணாச்சி விநியோக நடவடிக்கைக்கு படகின் எந்த நிலையாகிலும் சென்று வந்தார்.எந்த வேலையாகிலும் மிகவும் திறம்படச் செய்வதில் அண்ணாச்சிக்கு நிகர் அண்ணாச்சியே எத்தனையோ போராளிகளை தனது துறையில் வளர்த்துவிட்ட ஒரு வீரன் சகபோராளிகளை அண்ணாச்சி என்று அழைத்து பண்பாக கதைப்பதிலும் அதுமட்டுமல்லாமல் நகைச்சுவையாக கதைப்பதிலும் அண்ணாச்சிக்கு நிகர் அண்ணாச்சியே.01.10.1999.அன்று கப்பலிலிருந்து எரிபொருள் ஏற்றிக்கொண்டு வரும்பொழுது சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலில் இன்னும் ஒன்பது போராளிகளுடன் வீரச்சாவடைகின்றார். இவர் வீரச்சாவடைந்தாலும் இவரால் பயிற்றப்பட்ட போராளிகள் இறுதிவரை அப்பணிகளில் நினைத்துப் பார்க்கமுடியாதவாறு மிகத் திறமையாகச் செயற்பட்டனர்.அண்ணாச்சி நினைவாக கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவினால் கட்டப்பட்டபடகு”அண்ணாச்சி”என்ற அவரின் பெயருடன் நீண்டகாலம் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கும் அவருடன் வீரச் சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும் இந்நாளில் எமது வீரவணக்கத்தினை செலுத்துவோம்.
  10. ஒயாத அலைகள் -1 முல்லைத்தள வெற்றிச்சமருக்கான கடினமான கடற்பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது, அதேவேளை உயரக்கடல் ஆயுத வினியோக நடவடிக்கையும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வினியோக நடவடிக்கைகளில் கொலின்ஸ், வினோத், தர்மன், தீபன் போன்ற அதிவேகப்படகுகள் ஈடுபடுத்தப்பட்டு நடுச்சாம வேளைகளில் இரகசியக் கடற்பயணங்கள் நடைபெற்றுவந்தது. முதன்முதலாக எமது இயக்கத்துக்கு இரட்டைக்குழல் கனொன் பீரங்கிகள் இறக்கப்பட்டு சமவேளையில் அதற்கான பயிற்சிகளும் பிரமந்தனாறு காட்டுப்பகுதியில் லெப் கேணல் இரும்பொறை தலைமையினான பயிற்சியாசிரியர்களால் கடற்புலிகளின் விசேட அணியினருக்கு வழங்கப்பட்டுவந்தது. முல்லைச்சமருக்கான விமான எதிர்ப்பு நடவடிக்கையில்கூட கடற்புலிகள் விசேட அணியினரே ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதில் லெப். கேணல் ஆதிமான்/ஒஸ்கார், லெப். கேணல் பிரசாந்தன் ஆகியோர் முதன்மையானவர்கள். இதுபற்றி வேறொரு பதிவில் முழுமையாக பதிவிடுகின்றேன். இவ்வாறான நெருக்கடியான கடல்வினியோகம் மற்றும் கனரகப்பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக வெறுமனே நூற்றுக்கும் குறைவான கடற்புலிகளே அனைத்தையும் மாறிமாறி செய்துவந்தனர். உயரக்கடல் வினியோக நடவடிக்கையில் ஆண் போராளிகள் மட்டுமே ஈடுபட்டுவந்த அக்காலத்தில் முதல் முறையாக பெண்போராளிகளையும் ஈடுபடுத்துவதுபற்றி யோசிக்கப்பட்டதும் அதற்கான வெள்ளோட்டமாக மேஜர் காந்தியும், இன்னொரு பெண் போராளியும் படகேற்றப்பட்டு உயரக்கடல் வினியோக நடவடிக்கையில் பெண்புலிகளின் கால்த்தடம் புதுப்பாய்ச்சலுடன் பதியத் தொடங்கியது. (இதுபற்றிய வரலாற்றுப்பதிவொன்றை முழுமையாக பதிவதற்கு முயற்சிக்கின்றேன்) கடற்புலிகளின் பிரதான தளமான சாளைத்தளத்தின் ஆளணித் தட்டுப்பாட்டை நேரடியாக கண்ட தேசியத் தலைவர் அதனை நிவர்த்திசெய்யும் பொருட்டு தனது மெய்ப்பாதுகாவலர் அணியை ஆயுதங்களைக் கரையேற்றும் பணிகளில் ஈடுபடுத்திவந்தார். அதேவேளை கடற்சிறுத்தை மகளிர் அணியின் ஒரு தொகுதியையும் கடற்புலிகள் விசேட அணியில் இணைத்துச் செயற்படவைத்தார். கடற்புலிகளின் விசேட அணியோடு அன்று இணைக்கப்பட்ட பெண்புலிகளில் அணித்தலைவியாக எமக்கு அறிமுகமானவளே கடற்சிறுத்தைப் போராளி நாதினி அவர்கள். அன்றிலிருந்து ஓயாத அலையாக கடலேறி வலம்வரத்தொடங்கிய நாதினி பல கடற்சமர்களில் முன்னின்று போராடிய துணிகரப்போராளி. கடற்புலிகளின் வளர்ச்சியில் நாதினியின் பெயரும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய வரலாறு. முள்ளிவாய்க்கால் இறுதிப்போர்வரை ஆழக்கடலில் ஓயாமல் சுழன்றடித்த இந்தச் சிறுத்தைப்பெண்புலி, நந்திக்கடலோரம் நடைபெற்ற இறுதிச்சமரில் ஆயுதவெடிபொருட்கள் தீர்ந்துவிட்ட நிலையில் தன்னைத்தானே அழித்து விழிமூடிக்கொண்டாள். நினைவுகளுடன்…. புலவர் கடற்புலிகள்.
  11. இவர் 17/02/2000 ஆம் ஆண்டு சரியாக மாலை 6.25 மணிக்கு கொடிகாமத்தில் வைத்து பெல் 206 வகையைச் சேர்ந்த உலங்குவானூர்தி ஒன்றை 9கே34 ஸ்டெர்லா-3 வகையைச் சேர்ந்த மேற்பரப்பிலிருந்து வான்நோக்கி ஏவும் ஏவுகணை செலுத்தியிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தினார். மூலம்: இவர் பயன்படுத்திய ஏவுகணை செலுத்தியில் புலிகளால் எழுதப்பட்டிருந்த ஆவணப்படுத்தப்பட்ட தகவல்.
  12. கடற்புலிப் போராளி ஒருவர் எழுதும் பெல்லைச் சுட்டு விழுத்திய வான்காப்புப் போராளியுடனான அனுபவக் குறிப்பு https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid02QCe82AjRUgM9vWsM7aNuMgHaGcQBDkzm6euvLHdC4cvDvgaduymY8z3TDsx1xgHwl&id=203560776450352&locale=ta_IN இந்திய இராணுவத்தாலும்,ஒட்டுக்குழுவாலும் எமது குடும்பம் இலக்குவைக்கப்பட்டபோது குடும்பத்துடன் தலைமறைவு வாழ்வொன்றிற்குள் தள்ளப்பட்டோம். வலிகாமத்திலிருந்து வடமராட்சிக்கு வந்து சேர்ந்தபோது கூடவே கல்வியும் தடைப்பட்டிருந்தது. தும்பளை சைவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் தரம் ஆறில் கல்வியைத் தொடர்ந்தபோது நண்பனானவன் ஜெயசீலன்.குடும்ப உறவாக இருந்தபோதும் பாடசாலைதான் எமது நட்பின் உருவாக்கத்திற்கு காரணமாய் அமைந்தது. நான் இயக்கத்திற்கு போனபிறகு பல வருடங்கள் அவனைச் சந்திக்கவில்லை. விடுமுறையில் வீடுசென்றபோது அவனது வீட்டிற்கு சென்றபோதுதான் தெரியும் அவனும் இயக்கத்திற்கு வந்துவிட்டான் என்பது. ஆனாலும் அவனது இருப்பிடங்களை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. 1999 ஆனையிறவு பெருந்தளத் தாக்குதலுக்காக எமது படகுத்தொகுதிகள் தயாரானபோது கடற்கரை வெளியில் விமான எதிர்ப்புக் கருவியுடன் நின்றிருந்தான். எமது போராளிகளில் ஒருவர் என்னைக் கூப்பிட்டுச் சொன்னபோதுதான் அதிர்ந்துபோனேன் என்னைப் பார்ப்பதற்கு ஜெயசீலன் சுவர்ணனாக மாறி குத்துவரிச் சீருடையில் வந்திருந்தான். ஏழு ஆண்டுகளின் பின்னர் அவனைச் சந்தித்தபோது தொலைந்துபோன ஏதோவொரு பொக்கிசம் மீளக்கிடைத்ததான உணர்வு மேலிட்டது. அன்றிரவு தாக்குதலுக்காக எமது படகுகள் தயார்நிலையில் நின்றதால் தூக்கம் தொலைத்து நீண்டநேரம் உரையாடிக்கொண்டே இருந்தோம். நான் இயக்கத்திற்கு வந்ததற்கு காரணம் இருக்கு அது உனக்கும் தெரியும் ஆனால் நீ இயக்கத்திற்கு வந்தது ஏன் என்று எனக்கு தெரியேல ஏன்டா வந்தனி என்றபோது அவன் கூறியது.... நீயும் போனாப்பிறகு பலபெடியள் வெளிக்கிட்டிற்றாங்கள்.அவங்கள் வீரச்சாவடைந்து சிலரின்ர வித்துடலும் ஊரில் ஊர்வலத்தோட கொண்டுவந்து பார்வைக்கு வச்சவங்கள்.அதெல்லாம் பார்த்தாப்பிறகு நான் மட்டும் படிச்சு பட்டம்பெற்று சுயநலமானதொரு வாழ்க்கைக்குள் போவதற்கு விரும்பவில்லை.அதுதான் வந்திட்டன் என்று இழுத்தான். அவனது தந்தை அரேபிய நாடொன்றிலும் அவனது தாயும் தங்கையும் பருத்தித்துறையிலும் இருப்பதாக கூறியவன் யாழ்ப்பாணச் சண்டை வெற்றியுடன் முடிந்தால் வீட்டிற்குச் சென்று அனைவரயும் பார்க்கலாமெனத் தெரிவித்திருந்தான். ஒரு வாரமாக அடிக்கடி வோக்கியிலும்,நேரடியாகவும் எமது சந்திப்புகள் தொடர்ந்திருந்தபோது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல் அவனுக்கான முக்கிய பணியொன்று வழங்கப்பட்டது. சாவகச்சேரிப் பகுதிக்குள் சென்று எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவானூர்தியை தாக்கி வீழ்த்துவதற்காக புறப்படத் தயாராகினான். பத்திரமாக மூவர் கொண்ட அவனது அணியைத் தரையிறக்குவதற்காக எமது படகுகளைத் தயாராக்கி கச்சாய்ப் பகுதியில் தரையிறக்கித் திரும்பினோம். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றவன் தலைமையின் கட்டளைப்படி பெல் 206 தாக்குதல் உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்திவிட்டு வரும்வழியில் இராணுவச் சுற்றிவளைப்பில் அகப்பட்டுக்கொண்டான். அதை ஊடறுத்து அவன் களமாடியபோது சன்னக்கள் துளைத்து அந்த மண்ணிலே மடிந்து சரித்திரமானான். அவன் வித்துடல்கூட எமக்கு கிடைக்கவில்லை, அவன் குடும்பமும் அவனின் வித்துடலைக்கூட பார்க்கவில்லை. அவனின் சாதனைகள் எதுவும் அவர்கள் அறியவில்லை. இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்திருந்த அவர்கள் தங்கள் மகன் மாவீரனாகிவிட்ட செய்திகூடத் தெரியாமல் அவனை நினைத்து அழுதுகொண்டிருந்தனர். ஒருபுறம் தேடிக்கொண்டிருந்தனர். சமாதான உடன்படிக்கையின் பின்னரே எமது இயக்கம் உத்தியோகபூர்வமாக நேரடியாகச் சென்று அவனது சிரித்த முகத்துடனான வீரவணக்கப்படம் ஒன்றையும் அவன் போட்டிருந்த சேட் ஒன்றையும் கொடுத்து அவனது வீரச்சாவை அறிவித்திருந்தது. அக்காலப்பகுதியில் நான் அங்கு சென்றபோது அவர்கள் தங்கள் ஒரேயொரு மகனை இழந்து தவிக்கும் தவிப்பிற்கு என்னால் ஆறுதல் வார்த்தைகள் எதுவும் கூறுவதற்கு இயலாமல் போனது. தொண்டைக்குழிக்குள் ஏதோவொன்று உருண்டுகொண்டேயிருந்தது. "என்ர பிள்ளையை கடைசியாக ஒருக்கால்கூட பார்க்க குடுத்துவைக்காத பாவியாகிப் போனேனே ஐயோ....." என்று அவனின் அம்மா படத்தை அணைத்துக் கதறியது இன்றும் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. நினைவுகளுடன் புலவர் கடற்புலிகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.