‘கிழக்கில் கொரோனா தொற்று இல்லை’
சகா
கிழக்கு மாகாணத்தில், அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்று எதுவும் ஏற்படவில்லைனெவும் எந்தவொரு நோயாளியும் இனங்காணப்படவில்லையெனவும் தெரிவித்த கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் அழகையா லதாகரன், கிழக்கு மாகாண மக்கள், சுகாதார கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு வேண்டினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாகவது, “ஆரம்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும் அம்பாறை மாவட்டத்தில் இருவரும் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களும் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு, குணமாகி வீடு சென்றுள்ளனர். அதன்பிறகு யாரும் இனங்காணப்படவில்லை.
“எனினும், ஒலுவில் துறைமுகக் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமில் சிலர் இனங்காணப்பட்டு, சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.
“மேலும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இதுவரை சிகிச்சைபெற்றுவந்த 62 பேரில் 61 பேர் பூரண சுகமடைந்து, அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
“இவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்துக்கு வெளியே அதாவது கொழும்பு, கம்பஹா, களுததுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். ஒருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்” என்றார்.
http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கிழக்கில்-கொரோனா-தொற்று-இல்லை/73-250329