Jump to content

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8740
  • Joined

  • Last visited

  • Days Won

    103

Everything posted by ரஞ்சித்

  1. கிழக்கில் இயங்கும் படைகள் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் ராணுவம், கடற்படை, பொலீஸார் மற்றும் விசேட அதிரடிப்படை ஆகிய படைப்பிரிவுகள் தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. 2006 இல் இப்பகுதிக்கு விஜயம் செய்த மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் தகவல்ப்படி இந்தப் படைப்பிரிவுகளின் விபரங்கள் வருமாறு, மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பினை ராணுவமே பொறுப்பேற்றிருக்கிறது. இதனை தனது பாரிய முகாம்கள் மூலமாகவும், சிறிய முகாம்கள் மூலமாகவும் அது நடைமுறைப்படுத்தி வருகிறது. இம்மாவட்டத்தில் மூன்று பிரதான பிரிகேட் தரப் பிரிவுகள் நிலைகொண்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதிக்கான பாதுகாப்பினை கேணல் வீரமன் தலைமையிலான 231 ஆவது பிரிகேட்டும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கிற்கான பாதுகாப்பினை கேணல் நாபகொட தலைமையிலான 232 ஆவது பிரிகேட்டும், மட்டக்களப்பு நகருக்கான பாதுகாப்பினை லெப்டினன்ட் கேணல் அநுர சுதசிங்ஹெ தலைமையிலான 233 ஆவது பிரிகேட்டும் பொறுப்பெடுத்திருக்கின்றன. இம்மூன்று பிரிகேட் படைப்பிரிவுகளும் பிரிகேடியர் தயா ரட்னாயக்க தலைமையில் வெலிக்கந்தைப் பகுதியில் அமைந்திருக்கும் 23 ஆவது பிரிவின் தலைமையகத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. 2006 இன் பெரும்பகுதிவரை கிழக்கு மாகாண படைகளின் தளபதியாக மேஜர் ஜெனரல் நிசன்க விஜேசிங்ஹெ செயற்பட்டு வந்ததுடன், 2006 இன் இறுதிப்பகுதியில் மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டிய இந்த பிரிகேட் தலைமையகத்திற்குப் பொறுப்பேற்றார். திருகோணமலை மாவட்டத்தில் மேஜர் ஜெனரல் சமரசிங்ஹெ தலைமையில் 22 ஆவது பிரிவு பாதுகாப்பு வழங்கிவருகிறது. இதற்கு மேலதிகமாக திருகோணமலையில் அமைந்திருக்கும் பாரிய கடற்படைத்தளத்தினையொட்டி கடற்படையின் பெரும்பகுதியொன்றும் அங்கே நிலகொண்டுள்ளதாகவும், திருகோணமலைப் பகுதியின் பாதுகாப்பிற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சமிரதுங்கவே பொறுப்பாக இயங்குவதாகவும் கூறப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே முப்படைகளின் தளபதியாக இருப்பதோடு, பாதுகாப்பு அமைச்சினையும் தன்வசப்படுத்தியிருக்கிறார். மேலும் பாதுகாப்புச் செயலாளராகவும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றிற்கு அவரது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷெ பொறுப்பாகவிருக்கிறார். அத்துடன் பாதுகாப்புப் பிரதானிகளின் அதிகாரியாக எயர் வைஸ் மார்ஷல் டொனால்ட் பெரேராவும், ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேக்காவும் இருக்கிறார்கள். http://s3.amazonaws.com/themorning-aruna/wp-content/uploads/2021/01/29050330/STF.jpg ஆடி 2006 இலிருந்து ராணுவத்தின் வடக்கு நோக்கிய முன்னேற்றத்திற்கு ஏதுவாக விசேட அதிரடிப்படை கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இக்காலப்பகுதியிலேயே மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பினை விசேட அதிரடிப்படை பொறுப்பெடுத்துக்கொண்டது. http://4.bp.blogspot.com/_otWn2PlEOdY/Rx67OZhOUxI/AAAAAAAACHA/Do0NuhPowbQ/s1600/TMVP..jpg கிழக்கின் மாவட்டங்களுக்கான கருணா குழுவின் தளபதி யாரென்பதில் இன்னும் சரியான தெளிவு எவருக்கும் இருக்கவில்லை. கடத்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள், உள்ளூர் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோரின் கூற்றுப்படி மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான கருணா குழுவின் தலைவராக பிரதீபன் என்பவர் செயற்பட்டு வருவதாகவும், இவரது அலுவலகம் மட்டக்களப்பு நகரில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரைப்போன்றே இதே பகுதியில் மங்களன் எனப்படும் ஆயுததாரியும் செயற்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. அக்கரைப்பற்றில் சிந்துஜன் எனப்படும் ஆயுததாரி கருணா குழுவின் தலைவராகச் செயற்பட்டு வருகிறார். அதேபோல வெலீகந்தைப் பகுதியில் கருணா குழுவினரால் கடத்தப்பட்டுக் கொண்டுவரப்படும் சிறுவர்களுக்குப் பொறுப்பாக பாரதி எனப்படுபவர் அமர்த்தப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
  2. கருணா குழுவுடனான அரசாங்கத்தின் உறவும் அதனை மறைக்கும் அரசின் கைங்கரியமும் பல பெற்றோர்கள் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை தாம் மட்டக்களப்பு நகரில் அமைந்திருக்கும் கருணாவின் அரசியல் அலுவலகத்தில் கண்டதாகக் கூறுகின்றனர். சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் தாம் இதே அலுவலகத்தில் ஆயுதம் தரித்த சிறுவர்களைக் கண்டதாகக் கூறுகின்றன. 2006 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி இந்த அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட மனிதவுரிமைக் கண்காணிப்பக அதிகாரிகள் இந்த அலுவலகத்திற்கு சூழவுள்ள மூன்று பக்கங்களில் இருந்து பொலீஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். கருணாவின் இந்த நகர்ப்பகுதி அலுவலகத்திற்கான கட்டட வேலைகள் ஆரம்பமாகிய காலத்திலிருந்தே இக்கட்டடத்திற்கு கடுமையான பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதை சர்வதேச தொண்டுநிறுவன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறே அக்கரைப்பற்றில் கருணாவின் அரசியல் அலுவலகத்திற்கான பாதுகாப்பினை விசேட அதிரடிப்படையும், திருகோணமலை நகரில் அமைந்திருக்கும் கருணாவின் அலுவலகத்திற்கு இலங்கைக் கடற்படையும் பாதுகாப்பு வழங்கிவருவதாக மனிதவுரிமை கண்காணிப்பகம் தெரிவிக்கிறது. துணைராணுவக் குழுவான கருணா குழுவினருக்கான அரசின் பாதுகாப்பு, புலிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கவே என்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் நம்புகின்றது. ஆனால், இந்த அலுவலகங்களுக்கு ராணுவத்தினரின் பாதுகாப்பினை வழங்கிக்கொண்டே இங்கே தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களைக் கண்டபின்னரும் இக்கடத்தல்கள் தொடர்பாக தமக்கு ஏதும் தெரியாதென்று அரசு கூறுவது ஏற்றுக்கொள்ளக் கடிணமாக இருப்பதாக கண்காணிப்பகம் கூறுகிறது. இலங்கை அரசாங்கமும், கருணா குழுவும் தமக்கிடையே ஒத்துழைப்பு இருக்கிறதெனும் குற்றச்சாட்டினை மறுத்தே வருகின்றன. இதுபற்றி அரசின் ஊடகப் பேச்சாளர் கெகெலிய ரம்புக்வல்ல கூறுகையில், " எங்களுக்கும் கருணா குழுவுக்கும் இடையே இருப்பதாக கூறப்படும் ஒத்துழைப்பினை நாம் தொடர்ச்சியாக மறுத்தே வருகிறோம்" என்று கூறினார். அவ்வாறே கருணாவும் இதுபற்றிக் கூறுகையில், " நாங்கள் ராணுவத்தோடு சேர்ந்து செயற்படவில்லை, அவர்களும் எம்மோடு சேர்ந்து செயற்படவில்லை" என்று கூறினார். மேலும், உங்களின் உறுப்பினர்களுக்கு சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறதே என்று கேட்டதற்கு, "எமது உறுப்பினர்களில் 30 பேர் ஆயுதங்களுடன் நடமாடியதற்காக ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார். ஆனால், கிழக்கு மாகாண மக்கள் கருணா குழுவும் ராணுவமும் மிகவும் நெருங்கிச் செயற்பட்டு வருவதை நாள்தோறும் அவதானித்தே வருகின்றனர். மட்டக்களப்பில் இயங்கும் இரு சர்வதேச அமைப்புக்களின் அதிகாரிகளைக் கேட்டபோது, "கருணாவுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு நாம் ராணுவத்தையே நாடுகிறோம், அவர்கள் மிக இலகுவாக கருணாவுடனான தொடர்புகளை எமக்கு ஏற்படுத்தித் தருகிறார்கள்" என்று கூறினர். தமது நாட்டு மக்களைப் பாதுகாப்பதும், சிறுவர்கள் கடத்தப்பட்டு ராணுவப் பயிற்சியிலும் அதன்பின்னரான யுத்த நடவடிக்கைகளிலும் பாவிக்கப்படுவதைத் தடுப்பதும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால், தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இதனைச் செய்யும் கடமையிலிருந்து அரசாங்கம் தவறியிருக்கிறது என்றும் கண்காணிப்பகம் கூறுகிறது.
  3. கருணா குழுவுடனான அரசாங்கத்தின் உறவும் அதனை மறைக்கும் அரசின் கைங்கரியமும் கடத்தல்களுக்காக கருணா பாவிக்கும் ஏ 11 நெடுஞ்சாலையின் ஒருபகுதியும், அங்கே அமைக்கப்பட்டிருக்கும் இலங்கை அரச ராணுவத்தின் சோதனைச் சாவடியும் இவையெல்லாவற்றிற்கும் மேலாக கருணா குழுவுக்கு பாதுகாப்பினையும், முகாம்களையும், வளங்களையும் வழங்கி காத்து வருவது அரசுதான் என்பதற்கு கருணாவினால் கடத்தப்பட்ட சிறுவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முகாம்கள் அமைந்திருக்கும் பகுதியினைப் பார்க்கும்போது நன்கு தெளிவாகிறது. வெலிக்கந்தைப் பகுதியில் கருணாவுக்காக அரசு அமைத்திருக்கும் முகாம்களுக்குத் தமது பிள்ளைகளைப் பார்க்கச் சென்ற பெற்றோரின் கூற்றுப்படி இம்முகாம்கள் முற்றான ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், ராணுவ முகாம்களுக்கு மிக அருகில் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறுகின்றனர். கருணாவின் முகாம்களுக்குச் செல்லும் பெற்றோர் தொடர்பான விபரங்களை சோதனைச் சாவடியில் உள்ள ராணுவ வீரர்கள் தொலைத்தொடர்புக் கருவிகளைப் பாவித்து கருணா குழுவின் முகாம்களுக்கு வழங்கிவருவதை இப்பெற்றோர்கள் கண்டிருக்கின்றனர். கருணா குழுவின் முகாம்களுக்குச் செல்வதற்கு ஏ 11 பாதையில் இருந்து செவனப்பிட்டிய எனும் சிங்களக் கிராமத்திற்கு பல சோதனைச் சாவடிகளூடாகவே பேரூந்துகளில் இப்பெற்றோர்கள் பயணித்து வருகின்றனர். இச்சோதனைச் சாவடிகளிலேயே இப்பெற்றோரின் பெயர் விபரங்கள், கடத்தப்பட்ட பிள்ளையின் பெயர் ஆகிய விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் ராணுவ வீரர்கள் அதனை உடனடியாகவே குறிப்பிட்ட கருணா குழு முகாமின் உறுப்பினர்களுக்கு அறியத் தருகின்றனர். பலவிடங்களில் பேரூந்துகளை விட்டு இறங்கியவுடன் தயாராக நிற்கும் முச்சக்கரவண்டிகளில் ஏற்றப்படும் இப்பெற்றோர்களை அப்பகுதி சிங்கள்வர்கள் கருணா குழுவின் முகாம்களுக்குக் கொண்டு சென்று இறக்கிவிடுகின்றனர். இப்பகுதியில் கருணா குழுவின் ஆயுததாரிகள் அனைவருமே ராணுவத்தினரின் சீரூடைகளையே அணிந்து உலாவருகின்றனர் என்று பெற்றோர் தெரிவிக்கின்றனர் . "சோதனைச் சாவடியில் ராணுவத்தினர் எனது பெயர், அடையாள அட்டை இலக்கம், கடத்தப்பட்ட எனது மகனின் பெயர், கடத்தப்பட்ட நாள், அவரைத் தடுத்து வைத்திருக்கும் கருணா முகாம் ஆகிய விபரங்களைப் பெற்றுக்கொண்டபின்னர் , என்முன்னாலேயே அவர் தொலைபேசியில் கருணா குழுவின் முகாமைத் தொடர்புகொண்டு நான் வந்திருப்பதுபற்றிக் கூறிவிட்டு, என்னைத் தொடர்ந்து பயணிக்க அனுமதியளித்தார்" என்று கடத்தப்பட்ட தனது 16 வயது மகனைத் தேடிச் சென்ற தாயொருவர் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் கூறினார். மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திற்கு வழங்கிய செவ்வியில் பல பெற்றோர்கள் தாம் வெலிக்கந்தைக்கு வந்திருப்பது தமது பிள்ளைகளைத் தேடித்தான் என்பது நன்கு தெரிந்தும், அவர்களை விடுவித்து எம்முடன் அனுப்பிவைக்க எதுவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை, மாறாக அம்முகாம்களுக்கு சகலவிதத்திலும் ஒத்துழைப்பு வழங்கி, கருணாவின் கடத்தல்களை ஊக்குவிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது என்றும் கூறுகின்றனர். "முதுகல பகுதியில் கருணாவுக்காக ராணுவத்தால் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கு நாம் முதல்முறையாகச் சென்றபோது , அருகிலிருந்த ராணுவ முகாமிலிருந்து வந்த இரு படைவீரர்கள் நாம் எதற்காக இங்கே நிற்பதாகக் கருணா குழுவினரிடம் கேட்டனர். அவர்கள் தமது பிள்ளைகளைப் பார்க்க வந்திருப்பதாக கருணா குழு ஆயுததாரிகளால் கூறப்பட்டது. அதன்பின்னர் சிங்களத்தில் எம்மிடம் பலகேள்விகளை அப்படைவீரர்கள் கேட்டதுடன், இவர்களை இங்கே நிற்க விட வேண்டாம், உடனடியாக வெளியேறச் சொல்லுங்கள் என்று கருணா குழுவிடம் கூறியபோது, எம்மை அப்பகுதியிலிருந்து கருணா குழுவினர் விரட்டினர்" என்று அப்பெற்றோர்கள் கூறுகின்றனர் . மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திற்கு கொடுக்கப்பட்ட முறைப்பாடொன்றில், வெலிக்கந்தைப் பகுதி கருணா குழு முகாம் ஒன்றிலிருந்து தப்பியோடிய சிறுவன் அருகிலிருந்த ராணுவ முகாமில் தஞ்சமடைந்து, தன்னை காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டபோது, அம்முகாமிலிருந்த ராணுவ வீரர்கள் அச்சிறுவனை மீண்டும் கருணாகுழு முகாமிற்கு இழுத்துச் சென்று, அவனைக் கடத்திவந்தவர்களிடமே கையளித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை வெலிக்கந்தையெனும் சிங்களக் குடியேற்றப்பகுதியுடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலையாக ஏ 11 இருக்கிறது. ராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டிலும், பூரணமாக ராணுவமயப்படுத்தப்பட்ட நிலையிலும் இப்பிரதேசம் இயங்கிவருகிறது. இப்பகுதியில் ஐந்து பாரிய முகாம்களை அமைத்து பலநூற்றுக்கணக்கான கடத்தப்பட்ட சிறுவர்களை இப்பகுதிக்குக் கொண்டுவந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்துவதென்பது ராணுவத்தினருக்குத் தெரியாமல் நடப்பதற்குச் சாத்தியமேயில்லாதது. சாதாரண மக்களுக்கே இப்பகுதிக்குள் பிரவேசிப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளும், சோதனைகளும் விதிக்கப்படுமிடத்து, பல வாகனங்களில், ஆயுதங்கள் சகிதம் கருணா குழு இப்பாதையினூடாக இப்பிரதேசத்தினுள் நுளைவது எப்படிச் சாத்தியம்?
  4. மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையிலிருந்து..... கருணா குழுவுடனான அரசாங்கத்தின் உறவும் அதனை மறைக்கும் அரசின் கைங்கரியமும் கிழக்கில் வாழும் அனைத்து மக்களும் கருணா குழுவினை பின்னால் இருந்து இயக்குவதே அரசுதான் என்பதை உறுதியாக நம்புகின்றனர். மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சிங்கள அரச ராணுவம் மற்றும் பொலீஸாருடன் இணைந்து சோதனைச் சாவடிகளில் கருணா குழு உறுப்பினர்கள் காவலில் ஈடுபட்டுவருவதும், ராணுவ வாகனங்களில் ரோந்துபுரிந்துவருவதும் பொதுமக்களால் பரவலாக வெளிக்கொணரப்பட்டபோதும், அரசும் ராணுவமும் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. அருகருகே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, ராணுவத்தின் கடுமையான கண்காணிப்பின் கீழிருக்கும் பல தமிழ்க் கிராமங்களிலிருந்து சிறுவர்கள் கருணா குழுவால் கடத்தப்பட்டு சிங்கள மக்களால் குடியேற்றப்பட்டிருக்கும் மட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களில், அரச ராணுவத்தின் பாரிய முகாம்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் கருணா குழுவின் முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்படுவது அரசுக்குத் தெரியாமல் நடப்பதற்குச் சாத்தியமில்லை என்பது வெளிப்படையானது. சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு ஆகிய அமைப்புக்கள் கருணா குழுவுக்கும் அரச ராணுவத்திற்குமிடையிலான உறவுபற்றி மிகத் தெளிவான பார்வையையே கொண்டிருப்பதாகத் தெரிகிறது. "கருணா குழுவினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையிலான ஒத்துழைப்புப் பற்றி நாம் நீண்ட நாட்களாகவே கண்காணித்து வருகிறோம். இதுதொடர்பான பல ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம். முடிவில் இதுதொடர்பான விரிவான அறிக்கையொன்றினை அரசாங்கத்திடம் முன்வைக்க இருக்கிறோம்" என்று நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்தக் கண்காணிப்புகுழுவின் அதிகாரியொருவர் கார்த்திகை மாதம் 2006 இல் கண்காணிப்பகத்திடம் தெரிவித்தார். கருணா குழுவினரால் சிறுவர்கள் ராணுவப் பயிற்சிக்காக இழுத்துச் செல்லப்படுவதுபற்றி உள்ளூர் மனிதவுரிமை அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "அவர்கள் எங்கள் சிறுவர்களை வெளிப்படையாகக் கடத்திச் செல்கிறார்கள். அவர்களைக் கேள்விகேட்கவோ தடுக்கவோ எவருக்கும் இங்கு அதிகாரமில்லை. சட்டத்திலிருந்து அவர்களுக்கு முற்றாக விலக்களிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இக்கடத்தல்கள் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று அரசாங்கம் கையை விரிப்பதை எம்மால் நம்பமுடியாமல் இருக்கிறது" என்று அவர் விரக்தியுடன் கூறுகிறார். 2006 கார்த்திகையின் நடுப்பகுதிவரை கருணா குழுவினரால் கடத்தல்கள் நடத்தப்படுவதை ஏற்கமறுத்துவந்த அரச அதிகாரிகள், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் முறைப்பாடுகள் மற்றும் ஆதாரங்களையடுத்து இக்கடத்தல்கள் பற்றி தமக்குத் தெரியும் என்பதை இப்போது ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், கடத்தல்கள் ஆரம்பிக்கும்போதே அரச அதிகாரிகளுக்குத் தெரிந்தே ஆரம்பிக்கப்பட்டன என்று நம்புவதற்கு எம்மிடம் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. ஆனி 2006 இல் கருணா மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமம் ஒன்றிலிருந்து 13 சிறுவர்களையும் ஒரு இளைஞனையும் கடத்திச் சென்றார். கடத்தப்பட்ட சிறுவர்களில் நான்கு சிறுவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கருணா கடத்தி இழுத்துச் செல்லும்போது ராணுவம் அருகே நின்றிருந்தது என்றும், ராணுவ முகாமின் அருகிலேயே கடத்தல் நிகழ்த்தப்பட்டதென்றும் சாட்சி வழங்கியிருக்கிறார்கள். தமது பிள்ளைகளை விடச் சொல்லுங்கள் என்று ராணுவத்திடம் பெற்றோர்கள் கெஞ்சியபோதும் அவர்கள் சிரித்துக்கொண்டே நின்றதாக அவர்கள் மேலும் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனி 22 ஆம் திகதி யுனிசெப் அமைப்பு விடுத்த அறிக்கையில், கருணா குழுவினரின் சிறுவர் கடத்தல்களை அரசாங்கம் தடுத்து நிறுத்தவேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டிருந்தது. மேலும், கருணா , சிறுவர்களைக் கடத்திச் செல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சாடியிருந்ததோடு, கடந்த மாதத்தில் மட்டும் 18 வயதிற்கும் குறைந்த 30 சிறுவர்களைக் கருணா கடத்திச் சென்றுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தது. ஆடி மாதம், கருணாவினால் கடத்திச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்கக் கோரி அவர்களின் தாய்மார்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்திருந்தனர். 48 தாய்மார்கள் தமது பிள்ளைகளின் விபரங்கள், கடத்தப்பட்ட நாள், இடம் ஆகிய விபரங்களோடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷெ, இடர் நிவாரண - மனிதவுரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்ஹெ, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐ நா மனிதவுரிமை ஆணையகத்திற்கும் இவற்றின் பிரதிகளை அனுப்பியிருந்தனர். ஆனால், மார்கழி மாதத்தில் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திற்கு மகிந்த சமரசிங்ஹெ அளித்த விளக்கத்தில் இந்த முறைப்பாடு குறித்து தாம் ஐப்பசி மாதத்திலேயே அறிந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த 48 சிறுவர்களினது கடத்தல்கள் பற்றி ஆராயப்போவதாக ராணுவம் மார்கழியில் தெரிவித்திருந்தது. ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், இந்த முறைப்பாட்டைப் பாவித்த ராணுவம், அத்தாய்மார்களைத் தொடர்புகொண்டு, "கடத்தியது கருணா குழு என்பதை மாற்றி, இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டனர்" என்று கூறும்படி அழுத்தம் கொடுத்திருந்தது. பின்னர் இந்த முறைப்பாடுகள் விசாரணைக்காக 2007 இல் பொலீஸாரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
  5. கருணாவின் கடத்தல்களும் பொலீஸாரின் அசமந்தமும் https://ibb.co/3sJNnvK கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கொலைப்படையின் முக்கியஸ்த்தர்கள் (பிள்ளையான் பிரியுமுன்) மேலே விபரிக்கப்பட்டதுபோல, கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட பல ஆட்கடத்தல்களும், கட்டாய ராணுவப் பயிற்சிக்குமான ஆட்சேர்ப்பும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களால் முறைப்பாடுகள் எதுவும் பதியப்படாமலேயே மறைக்கப்பட்டு விட்டன. பல கடத்தல் சம்பவங்கள் பொலீஸாருக்குக் கூட கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதை பொலீஸாருக்கு தாம் அறியத் தராமைக்கான காரணங்களாக பின்வருவனவற்றை அவர்கள் முன்வைக்கிறார்கள். முதலாவது, அச்சம். கருணா குழு இவர்களது பிள்ளைகளைக் கடத்திச் செல்லும்போது சர்வதேச அமைப்புக்களான யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றிற்கோ, பொலீஸாருக்கோ தெரிவிக்கக் கூடாதென்று அச்சுருத்தியிருந்தமை. " நான் உங்களுடன் இதுபற்றிப் பேசுவதைக் கேள்விப்பட்டாலே கருணா குழுவினர் என்னை இன்றிரவே சுட்டுக் கொன்றுவிடுவார்கள்" என்று கருணா குழுவினரால் கடத்தப்பட்ட 18 வயது நிரம்பிய இளைஞனனின் சிறியதாயார் தெரிவித்தார். இரண்டாவது காரணம், பொலீஸாரிடம் முறையிடுவதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை என்கிற மக்களின் நம்பிக்கை. பொலீஸாரிடம் தமது பிள்ளைகள் கருணாகுழுவினரால் கடத்தப்பட்டதை முறையிட்ட பெற்றோர்கூட தமது பிள்ளைகளைப் பொலீஸார் கண்டுபிடித்துத் தருவார்கள் என்பதை நம்பவில்லையென்பது தெளிவாகத் தெரிகிறது. "அவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் எங்கள் பிள்ளைகளைக் கடத்திச் சென்றார்கள்?" என்று கடத்தப்பட்ட சிறுவன் ஒருவரின் பேத்தியார் தெரிவித்தார். மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தினால் செவ்வி காணப்பட்ட 20 குடும்பங்களில் 15 குடும்பங்கள் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதுபற்றி பொலீஸில் முறையிட்டதாகச் சொன்னார்கள். இந்த முறைப்பாடுகளைப் பொலீஸார் பதிவுசெய்து வைத்துக்கொண்டதுடன் அவர்களின் கடமை முடிந்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள் என்று இந்தப் பெற்றோர் தெரிவிக்கின்றனர். ஆனால், பல சந்தர்ப்பங்களில் கருணா குழுவுக்கெதிரான முறைப்பாடுகளை தம்மால் ஏற்கமுடியாதென்று பொலீஸார் பெற்றோர்களை திருப்பியனுப்பிய சம்பவங்கள் நிறையவே நடந்திருப்பதாக மனிதவுரிமை கண்காணிப்பகம் கூறுகிறது. "எமது பிள்ளைகளைக் கடத்திச் சென்றது கருணாதான் என்று நாம் வாக்குமூலம் கொடுத்தபோதும், பொலீஸார் இதுபற்றி விசாரணைகளை மேற்கொள்ளவோ அல்லது இதுவரையில் கடத்தப்பட்ட எமது பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தரவோ எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை" என்று கடந்த புரட்டாதி மாதம் கடத்திச்செல்லப்பட்ட சிறுவன் ஒருவரின் தாயார் வருத்தத்துடன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது பிள்ளைகளைக் கருணா குழுவினரிடம் பறிகொடுத்த பல பெற்றோர்கள் தாம் பொலீஸாரிடம் இதுபற்றி முறையிடச் சென்றவேளையில் தமக்கு அளிக்கப்பட்ட பதில்களைப்பற்றி விவரிக்கிறார்கள். ஒரு சில முறைப்பாடுகளை பொலீஸார் கவனமெடுத்துப் பதிவுசெய்துகொண்டதாக தெரிகிறது. ஆனால், பல சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட பொலீஸார் பெற்றோருடன் மிகவும் கடுமையாகவும், அநாகரீகமான முறையிலும் நடந்துகொண்டதாக மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் பெற்றோர் தெரிவிக்கின்றனர். "நான் ஏறாவூர் பொலீஸாரிடம் எனது மகன் கடத்தப்பட்டதுபற்றி முறையிட்டபோது, உங்களின் முறைப்பாட்டைப் பதிவுசெய்துகொள்கிறோம், ஆனால் கருணாவினால் கடத்தப்பட்ட உங்களது பிள்ளையை நாங்கள் மீட்டுத் தரப்போவதில்லை" என்று ஏளனமாகக் கூறியதாகவும் தன்னை ஒரு நாயைப்போல அடித்துவிரட்டியதாகவும் தனது மகனைப் பறிகொடுத்த தாயொருவர் கண்ணீருடன் கூறுகிறார். இவ்வாறே, கருணாவினால் கடத்தப்பட்ட தமது மகனை மீட்டுத்தருமாறு ஒரு குடும்பம் பொலீஸாரிடம் வேண்டியபோது, "உங்களின் பிள்ளையைக் கடத்திச் சென்றது கருணாதானே, அப்படியானால் அவரிடம் தானே நீங்கள் போய் உங்கள் பிள்ளையை விடுவிக்குமாறு கேட்கவேண்டும்? இங்கே எதற்காக வருகிறீர்கள்?" என்று கடிந்துகொண்டதாக அக்குடும்பம் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் தெரிவித்தது. "பொலீஸாரின் அசமந்தமும், போலியான அக்கறையும் பாதிக்கப்பட்ட பெற்றோரை நோகடித்தாலும் கூட, பொலீஸாரினாலோ அல்லது விசேட அதிரடிப்படையினராலோ செய்யப்படும் அநீதிகளை முறையிட ஒரு வழியிருக்கிறது. ஆனால் கருணாவினால் கடத்தப்பட்டுவரும் எமது பிள்ளைகளைப் பற்றி எங்கே முறையிடுவது, யாரை நோவது? கருணாவைக் கேள்விகேட்கும் அதிகாரம் இங்கே யாருக்கு இருக்கிறது" என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னார்வ மனிதவுரிமை அமைப்பொன்றில் செயற்பட்டுவரும் நண்பர் ஒருவர் கண்காணிப்பகத்திடம் கேட்டார். பொலீஸாரிடம் முறைப்பாடுகளைச் செய்தபோது, அவர்கள் கடத்தலின் முழு விபரங்களையும் பெற்றுக்கொள்வதில் அக்கறை காட்டவில்லையென்பது தெரிகிறது. மேலும், பல முறைப்பாடுகளுக்கான பதிவு இலக்கத்தினை பெற்றோருக்கு வழங்குவதைப் பொலீஸார் மறுத்துவிட்டதாகவும் தெரியவருகிறது. ஏறாவூரில் கடத்தப்பட்ட தனது மகன் தொடர்பாக பொலீஸாரிடம் முறைப்பாடு செய்யச் சென்ற தகப்பன் ஒருவரிடம் சில விபரங்களைக் கேட்டுக்கொண்ட பொலீஸார், அந்தப் முறைப்பாட்டிற்கான பதிவு இலக்கத்தினை இடாது அம்முறைப்பாட்டினைப் பதிவு செய்ததாகவும், தகப்பனிடம் முறைப்பாடு தொடர்பான இலக்கம் ஒன்றை வழங்கவில்லையென்றும் தெரியவ்ருகிறது. தனது மகனின் புகைப்படத்தினைத் தகப்பன் பொலீஸாரிடம் கொடுக்க முனைந்தபோது, அது தமக்குத் தேவையில்லை, உங்கள் மகனைக் கண்டுபிடித்தால் சொல்கிறோம் என்று அலட்சியமாகக் கூறி அனுப்பியதாக அத்தகப்பன் தெரிவிக்கிறார். இடர் நிவாரண மற்றும் மனிதவுரிமையமைச்சர் மகிந்த சமரசிங்க தமது அரசாங்கம் கடத்தப்பட்ட சிறுவர்கள் தொடர்பாக பொலீஸார் முறைப்பாடுகளை உரியமுறையில் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிவுருத்தியிருப்பதாக சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களிடம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றபோதும்கூட, இவ்வறிக்கை வெளிவரும்வரை பொலீஸார் ஒரு கடத்தல் முறைப்பாடுபற்றியும் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லையென்றும், இதுவரையில் கடத்திச் செல்லப்பட்ட ஒருசிறுவனையாவது விடுதலை செய்து மீட்டுவர முயலவில்லையென்றும் தெரிகிறது.
  6. "எனது மகன் கருணாவால் விடுவிக்கப்பட்டாலோ அல்லது அவர்களின் பிடியிலிருந்து தப்பிவந்தாலோ, என்னால் அவனை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது" என்று கடத்தப்பட்ட 18 வயது இளைஞன் ஒருவனின் தாயார் தெரிவித்தார். "எப்படி அவர் தப்பிவந்தார் என்பதைப் பொறுத்து கருணா குழுவோ, இராணுவமோ அல்லது புலிகளோ அவனைத் தேடலாம். அவனுக்கு எப்படி பாதுகாப்பை வழங்குவதென்றே எனக்குத் தெரியவில்லை. கருணாவின் பிடியிலிருந்து தப்பிவரும் சிறுவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு நிலைமைகளை யாராவது ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் அதிகமான சிறுவர்கள் அவர்களின் பிடியிலிருந்து தப்பிவரச் சந்தர்ப்பம் இருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார். கடத்தப்பட்ட 21 வயதுடைய இளைஞனின் தாயார் கூறுகையில், "எமது பிள்ளைகள் கருணாவின் பிடியிலிருந்து தப்பிவந்தாலும், அவர்களுக்கு எமது வீடுகள் பாதுகாப்பாக இருக்கப்போவதில்லை. அவர்களைத் தேடி நிச்சயம் கருணா குழு வரும், அவர்களை மீண்டும் இழுத்துச் செல்லும் அல்லது வீட்டிலுள்ள ஏனையவர்களையாவது பலவந்தமாக இழுத்துச் செல்லும் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று கூறினார். கருணா குழுவினரால் கடத்தப்பட்டவர்கள் என்று முறைப்பாடு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கருணா துணைராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட மொத்த சிறுவர்களினதும் இளைஞர்களினதும் சரியான எண்ணிக்கை இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால், செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் நோர்வேயின் தலைமையிலான யுத்தக் கண்காணிப்புக் குழுவும் யுனிசெப் அமைப்பும் சில புள்ளிவிபரங்களை வைத்திருக்கின்றன. பெற்றோரால் உறுதிசெய்யப்பட்ட கடத்தல் விபரங்களை மட்டுமே கணக்கெடுத்திருக்கும் இவ்விரு அமைப்புக்களினதும் புள்ளிவிபரங்கள் உண்மையான கடத்தப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையினைக் காட்டிலும் மிகவும் குறைவானவை. பெரும்பாலான குடும்பங்கள் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதுபற்றி வெளியே சொல்லத் தயங்குவதாகத் தெரிவிக்கிறார்கள். இக்கடத்தல்கள்பற்றி வெளியே சொல்லுமிடத்து தாம் பழிவாங்கப்படலாம், அல்லது தமது பிள்ளைகள் கொல்லப்படலாம் என்கிற அச்சத்தில் பல பெற்றோரும், பெருந்தொகைப் பணத்தினைக் கப்பமாகக் கொடுத்து தமது பிள்ளைகளை விடுவிக்க தாம் எடுத்துவரும் முயற்சிகளை முறைப்பாடுகள் பாதித்துவிடும் என்பதற்காக இன்னொரு பகுதியினரும் இக்கடத்தல்கள்பற்றி வெளியே பேசத் தயங்குவதாகத் தெரியவருகிறது. யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புள்ளிவிபரப்படி 2006 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 18 வயதிற்கு உட்பட்ட 117 சிறார்களும், 167 இளைஞர்களும் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேகாலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் 3 சிறார்களும் 7 இளைஞர்களும் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதே காலப்பகுதியில் யுனிசெப் அமைப்பு மேற்கொண்ட விசாரணைகளில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் குறைந்தது 208 சிறுவர்கள் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றுள் 181 கடத்தல்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலும், 23 கடத்தல்கள் அம்பாறை மாவட்டத்திலும் 4 கடத்தல்கள் திருகோணமலை மாவட்டத்திலும் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. ஆனால், இதே அறிக்கையில் யுனிசெப் அமைப்பு பின்வருமாறு கூறுகிறது, "கடத்தப்பட்டவர்களின் உறவினர்களின் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தப் புள்ளிவிபரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைப்போல மூன்று மடங்காக இருக்கும் என்றும், பல பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட விபரத்தைச் சொல்லத் தயங்குவதாகக் கூறுவதோடு, உள்ளூர் மனிதவுரிமை அமைப்புக்களின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்ட கடத்தல்களின் எண்ணிக்கையான 600 - 700 எனும் எண்ணிக்கை சரியானதாக இருக்கலாம்" என்றும் கூறுகிறது. இங்கு குறிப்பிடத்தக்க இன்னொரு விடயம் யாதெனில், 18 வயதிற்கு மேற்பட்ட கடத்தல்களின் புள்ளிவிபரம்பற்றி யுனிசெப் அமைப்பு தகவல்களைச் சேகரிக்கவில்லையென்பது. யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவைப் போல் அல்லாது யுனிசெப் அமைப்பு கடத்தப்பட்ட சிறுவர்களின் விபரங்களை அவர்களின் வயது அடிப்படையில் பட்டியலிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் 2006 கார்த்திகை மாதம் யுனிசெப் அமைப்பினால் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் கருணா குழுவால் கடத்தப்பட்ட சிறுவர்களின் விபரம் வருமாறு: வயது 10 இலிருந்து 12 வரையான சிறுவர்கள் : 02 வயத்யு 12 இலிருந்து 14 வரையான சிறுவர்கள் : 08 வயது 14 இலிருந்து 16 வரையான சிறுவர்கள் : 59 வயது 16 இலிருந்து 18 வரையான சிறுவர்கள் : 109
  7. கடத்தப்பட்டவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்குமிடையிலான தொடர்பாடல் தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட இரு வாரங்களிலிருந்து ஒரு மாத காலப்பகுதிக்குள் அவர்களைப் பார்க்க தமக்கு அனுமதி வழங்கப்பட்டதாக சில பெற்றோர் தெரிவித்தனர். இவ்வாறு தமது பிள்ளைகளைப் பார்க்கச் சென்றவேளையில் அவர்கள் ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்டு, ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்க முடிந்ததாக இவர்கள் கூறுகின்றனர். இன்னும் சில குடும்பங்களுக்கு கடத்தப்பட்ட சிறுவர்களுக்கான மாதக் கொடுப்பனவாக 6000 இலங்கை ரூபாய்களை கருணா குழு வழங்கிவந்ததாகத் தெரியவருகிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் கடத்தப்பட்ட சிறுவர்களில் சிலர் பயிற்சியின்பின்னர் வேறு கருணா குழு உறுப்பினர்களின் பாதுகாப்புடன் குடும்பங்களை இரவுநேரங்களில் சென்று பார்த்துவரவும் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இப்படியான சந்தர்ப்பம் ஒன்றில், தன்னைக் கடத்திச்சென்றவர்களின் பாதுகாப்பிலேயே ஒரு சிறுவன் தனது பெற்றொரைப் பார்க்க அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிகிறது. கருணா குழுவினரால் விடுவிக்கப்பட்ட மற்றும் தப்பியோடிய சிறுவர்கள் 2006 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சிறுவர்களில், மிகவும் அரிதான ஓரிரு சந்தர்ப்பங்களில் சில சிறுவர்கள் கருணா குழுவினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இப்படி விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் தமது பிள்ளை விடுவிக்கப்பட்டதுபற்றி வெளியே சொல்லத் தயங்கியதாகவும், அவர் மீண்டும் கடத்தப்படலாம் என்கிற அச்சமே இதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெருமளவு பணத்தினைக் கப்பமாகச் செலுத்தியபின்னர் விடுவிக்கப்பட்ட தமது பிள்ளை தொடர்பான தகவல்களை பெற்றோர்கள் வெளியே சொல்லத் தயங்கினர் என்றும் கூறப்படுகிறது. யுனிசெப் அமைப்பின் அறிக்கையின்படி கடத்தப்பட்ட பலநூற்றுக்கணக்கான சிறுவர்களில் 23 சிறார்கள் கப்பம் செலுத்தியபின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், 18 சிறுவர்கள் பயிற்சியின்போது தப்பியோடியதாகவும் இன்னும் இருவர் பயிற்சியின்போது கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கருணா குழுவின் பிடியிலிருந்து தப்பிவந்த பல சிறுவர்கள் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தப்பிவந்ததற்கான தண்டனையாக மீண்டும் கடத்தப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்கிற அச்சமும், கருணா குழுவில் செயற்பட்டதற்காக புலிகளால் தண்டிக்கப்படலாம் என்கிற அச்சமும் இவர்களுக்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கில் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு அச்சுருத்தலுக்குள்ளாகும் சந்தர்ப்பங்களில் அவர்களை பாதுகாப்பாக கொழும்பிற்கு அனுப்புவதை வழமையாகக் கொண்டிருந்த பெற்றோர்கள், கொழும்பிலும் இடம்பெற்ற கருணா குழுவினர் கடத்தல்கள் மற்றும் படுகொலைகளையடுத்து பிள்ளைகளைத் தம்மோடு ஊரில் வைத்திருப்பதே பாதுகாப்பானது என்று கருதியதாகப் பலர் தெரிவிக்கின்றனர்.
  8. கருணா சிறுவர்களைக் கடத்துவதற்காக பாவித்த உத்திகள் !................. சிறுவர்களையும், பதின்ம வயது இளைஞர்களையும் கடத்திச் சென்ற கருணா குழு, அவர்களை கடத்தப்பட்ட இடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் தமது அரசியல் அலுவலகத்திலேயே தற்காலிகமாக அடைத்து வைத்தது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடிச் சென்ற பெற்றோர்கள் தமது கிராமங்களுக்கு அருகிலிருந்த கருணா குழுவின் அரசியல் அலுவலகங்களில் தமது பிள்ளைகள் கருணா குழுவால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டதாகவும், குறைந்தது தமது பிள்ளைகள் அந்த அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள் என்று கருணாவின் அரசியல்க்த்துறை தம்மிடம் உறுதிப்படுத்தியிருந்ததாகவும் கூறுகின்றனர். அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் மனிதவுரிமை அமைப்பு ஒன்றின் அதிகாரி தெரிவிக்கையில் கருணா குழுவின் அரசியல் அலுவலகத்தில் சிறுவர்கள் ஆயுதங்களுடன் நிற்பதைத் தான் கண்டதாகக் கூறுகிறார். "அவர்களில் ஒரு சிறுவனின் இடது கையில் காயமேற்பட்டிருந்தது, வலது கையில் வாக்கி டோக்கியொன்றை அவன் வைத்திருந்தான். அவனுடன் இன்னும் குறைந்தது 10 அல்லது 12 சிறுவர்களைக் கண்டேன். எல்லோரும் 14 அல்லது 15 வயதுடையவர்களாகத்தான் இருப்பார்கள். சிலரைப் பார்க்க அவர்களின் பெற்றோர்கள் அங்கே காத்துநின்றது தெரிந்தது" என்று அவர் மேலும் தெரிவிக்கிறார். மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி மட்டக்களப்பு நகரில் அமைந்திருந்த கருணாவின் முகாமிற்குச் சென்ற பெற்றோரும், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் அம்முகாம்களில் கருணா மிகக் குறைந்த வயதுடைய சிறுவர்களை ஆயுதங்களுடன் காவலுக்கு அமர்த்தியிருந்ததாகத் தெரிவிக்கின்றனர். 2006, புரட்டாதி மாதம் செங்கலடிப்பகுதியில் கருணாவால் கடத்தப்பட்ட தனது மகனைத் தேடி அங்கிருந்த கருணா குழுவின் முகாமிற்குச் சென்ற தாயிற்கு அவரது மகன் மட்டக்களப்பு முகாமில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. தன்னுடன், இன்னும் கடத்தப்பட்ட பிள்ளைகளின் தாய்மாரையும் கூட்டிக்கொண்டு மட்டக்களப்பில் அமைந்திருந்த கருணாவின் முகாமுக்குச் சென்றிருந்த அத்தாய் மனிதவுரிமைக் காப்பகத்திடம் பின்வருமாறு கூறுகிறார், " எமது பிள்ளைகளை அவர்கள் மேல்மாடியில் அடைத்து வைத்திருந்தனர். எம்மைக் கண்டவுடன், இங்கே நிற்கவேண்டாம், உங்களைக் கண்டால் எங்களை அடித்துத் துன்புறுத்துவார்கள், நீங்கள் போய்விடுங்கள் என்று சைகை காட்டினார்கள்" என்று கூறுகிறார். சில நாட்களின் பின்னர் கடத்தப்பட்ட சிறுவர்களையும் இளைஞர்களையும் மட்டக்களப்பு நகரிலிருந்து 50 கிலோமீட்டர்கள் வடமேற்கே பொலொன்னறுவை மாவட்டத்தில் இருக்கும் வெலிக்கந்தைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தமது முகாம்களுக்கு கருணா குழு இழுத்துச் சென்றது. இம்முகாம்களுக்குச் சென்ற பெற்றோர்கள் மற்றும் மனிதவுரிமை அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களின் கருத்துப்படி ஏ 11 நெடுஞ்சாலைக்கு வடக்கே குறைந்தது 5 முகாம்களை கருணா ராணுவத்தின் துணையுடன் அமைத்திருந்ததாகத் தெரிவிக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் பரிபூரண கட்டுப்பாட்டில் இருக்கும் ராணுவமயப்படுத்தப்பட்ட இப்பிரதேசத்தில் குறைந்தது 5 முகாம்களை ராணுவத்தின் துணையில்லாமலும், அவர்களுக்குத் தெரியாமலும் கருணா நடத்திவருவதென்பது இயலாத காரியம் என்றும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு நகரில் அமைந்திருக்கும் கருணா குழுவின் அலுவலகத்தின் முன்னால் நபர் ஒருவர் - இம்முகாமைச் சூழவுள்ள மூன்று வீடுகளிலும் ராணுவமும் பொலீஸாரும் கருணா குழுவுக்குப் பாதுகாப்பு வழங்கிவருவதாகவும் நகர் வாசிகள் தெரிவிக்கின்றனர். மனிதநேய அமைப்பொன்றில் ஊழியராகப் பணியாற்றும் தமிழர் ஒருவர் வெலிக்கந்தைப் பகுதியில் இயங்கிவரும் கருணா குழுவின் ஐந்து முகாம்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொணர்ந்தார். இந்த ஐந்து முகாம்களில் மூன்று முத்துகல பகுதியிலும், ஒன்று கிராமத்திற்குள்ளும், மற்றையது, கிராமத்திற்குச் சற்று வெளியேயும் அமைந்திருந்ததாக அவர் கூறுகிறார். அனைத்து முகாம்களும் பூரணமாக மறைக்கப்பட்ட உயர்ந்த வேலிகளைக் கொண்டிருந்ததாக அவர் மேலும் கூறுகிறார். அவரின் கூற்றுப்படி முதுகல ராணுவ முகாமின் வேலியோடு ஒரு கருணா முகாமும், ஏனையவை இரண்டும் மிக அருகிலும், நான்காவது முகாமும் அதனுடன் இணைந்த போர் வைத்தியசாலையும் மதுரங்கலப் பகுதியிலும், ஐந்தாவது முகாம் கரபொல பொலீஸ் நிலையத்துடனும் சேர்த்து அமைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.
  9. மனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் 2006 ஆம் ஆண்டு அறிக்கையின்படி கிழக்கில் கருணா குழுவினரின் கடத்தல்கள் பற்றிய செய்தித் தொகுப்பு : பாகம் 2 கருணா சிறுவர்களைக் கடத்துவதற்காக பாவித்த உத்திகள் ! கருணா குழுவினரின் கடத்தல்களைக் கண்ணால் கண்ட சாட்சியங்கள் அனைவருமே, இக்குழு தமது கடத்தல்களின்போது ஒரேவகையான உத்தியையே பாவித்ததாகக் கூறுகின்றனர். குறைந்தது 6 ஆயுதம் தரித்த கருணா துணைராணுவக்குழு உறுப்பினர்கள் கிராமத்திற்கு வருவர். பெரும்பாலான நேரங்களில் இலங்கை ராணுவத்தினரின் சீருடையில் கருணா துணைராணுவக் குழு உறுப்பினர்கள் கடத்தல்களில் ஈடுபட்டாலும்கூட, சிலவேளைகளில் கறுப்புநிற நீளக் காட்சட்டையும், சேர்ட்டும் அணிந்திருந்தனர். சிலவேளைகளில் தமது முகத்தைத் துணியினால் மூடிக் கட்டியிருந்தாலும்கூட, பெரும்பாலான வேளைகளில் பகிரங்கமாகவே கடத்தல்களில் இவர்கள் ஈடுபட்டனர். பல சந்தர்ப்பங்களில் கடத்தல்களில் ஈடுபட்ட கருணா குழு உறுப்பினர்களை கிராமத்தவர்கள் அடையாளம் கண்டிருந்தனர். மிகச் சரளமாகவும், கிழக்கு மாகாணத் தமிழிலும் பேசிய இக்கடத்தல்காரர்கள், தாம் தேடிவந்தவர் பற்றிய துல்லியமான தகவல்களைக் கொண்டிருந்தனர். தம்மீதான தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களால் சினமடைந்த கருணா, இக்கடத்தல்களுக்கும் தனக்கும் தொடர்பில்லையென்று கூறியிருந்ததுடன், இக்கடத்தல்களை புலிகளே செய்வதாக கூறத்தொடங்கியிருந்தார். ஆனால், கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள், கண்ணால் கண்ட சாட்சிகள், உள்ளூர் மனிதவுரிமை அமைக்குக்கள் மற்றும் அரச சார்பற்ற சர்வதேச நிறுவனக்களின் ஊழியர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இக்கடத்தல்களை கருணா குழுவே செய்ததாக உறுதிபடக் கூறுகின்றனர். சில நூறு மீட்டர்கள் இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கும் ராணுவச் சாவடிகளினூடாக பூரண ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளால் சிறுவர்களைக் கடத்துவது எப்படிச் சாத்தியம் என்று இவர்கள் மேலும் கேட்கின்றனர். பொதுவாகவே சிறுவர்களைக் கடத்தவரும் கருணா குழு உறுப்பினர்களுடன் ராணுவமும் பாதுகாப்பிற்கு வருவதுடன், தாம் கருணா குழுவை சேர்ந்தவர்கள் என்று கூறியே சிறுவர்களையும் இளைஞர்களையும் இக்குழு சுற்றிவளைக்கிறது என்று மக்கள் தெரிவிக்கின்றனர். உள்ளூரில் இருந்து கருணா குழுவிற்குச் சேர்க்கப்பட்ட இளைஞர்கள் பின்னர் தாமே கடத்தல்களை முன்னின்று நடத்துவதாகவும், பல சந்தர்ப்பங்களில் இந்த இளைஞர்களை ஊர்மக்கள் தெளிவாகவே அடையாளம் கண்டுகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவையெல்லாவற்றிற்கும் மேலாக, கடத்தப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி அருகிலுள்ள கருணா குழுவின் முகாமிற்கு பெற்றோர்கள் சென்றவேளை தமது பிள்ளைகள் அடைத்துவைக்கப்பட்டிருப்பதையும், கடத்திச் சென்றவர்கள் அங்கே நிற்பதையும் கண்டிருக்கின்றனர். சிறுவர்களைக் கடத்திச் சென்று அடைத்துவைக்கப் பாவிக்கப்பட்ட கருணா துணைராணுவக் குழுவின் அலுவலகம் ஒன்று 2006 ஆம் ஆண்டு முழுவதும் கருணா துணைராணுவக் குழு 15 வயதில் இருந்து 30 வரையான ஆண்களை மட்டுமே கடத்தி வந்தது. இக்காலப்பகுதியில் 11 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் உட்பட பல பதின்மவயதுச் சிறுவர்களைக் கருணா குழு கடத்தியிருந்தது. திருமணமான இளைஞர்களையும் பள்ளிச் சிறுவர்களையும் கடத்திச் செல்வதைக் குறைத்திருந்தபோதும், அவ்வபோது பள்ளிச் சிறார்களும் இக்குழுவினரால் லடத்தப்பட்டிருக்கின்றனர் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். ஆனால், இதே காலப்பகுதியில் இரு சிறுமிகளையும் கருணா குழு கடத்திச் சென்றிருப்பதாக தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாக மனிதவுரிமைக் காப்பகம் அறிவித்திருக்கிறது. கடத்தப்பட்ட பெரும்பாலான சிறுவர்கள் கிராமப்புரங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். கல்விகற்பதற்கான வசதிகள் குறைவாகவும், தம்மைக் கடத்தல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் திராணியுமற்ற இவ்வறிய குடும்பங்களே கருணா குழுவினரால் இலக்குவைக்கப்பட்டனர். மேலும் புலிகள் இயக்கத்தில் சகோதரனையோ அல்லது சகோதரியையோ கொண்ட பல போராளிகளின் குடும்பங்களைக் கருணா குழு இலக்குவைத்துக் கடத்தியது. சிலசந்தர்ப்பங்களில் ஒரே வீட்டில் புலிகள் இயக்கத்தில் ஒரு பிள்ளையும், கருணா துணைராணுவக் குழுவில் இன்னொரு பிள்ளையும் இருந்த சந்தர்ப்பங்களும் இருந்திருக்கின்றன. ஒரு சந்தர்ப்பத்தில் தனது மகனைக் கடத்திச்சென்ற கருணா குழு அத்தாயிடம், "உனது ஒருபிள்ளை புலிகள் இயக்கத்தில்த்தானே இருக்கிறான், இவனை கருணாவுக்குத் தா" என்று கூறி இழுத்துச் சென்றதாகவும், "மூத்தவனைப் புலிகள் பலவந்தமாகத்தான் இணைத்தார்கள்" என்று தான் கூறியதை கருணா குழு ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் அவர் கூறினார். அடுத்ததாக, கருணா குழுவினரால் இலக்குவைக்கப்பட்ட இளைஞர் அணியானது புலிகளியக்கத்தின் முன்னாள்ப் போராளிகளாக இணைந்து கருணா ராணுவத்துடன் சேர்ந்தபோது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்கள். கிழக்கு மாகாணத்தில் கருணா புலிகள் இயக்கத்திற்கென்று இணைத்துக்கொண்ட சுமார் 1800 ஆண் மற்றும் பெண்போராளிகளை தான் பிரிந்துசென்றபோது கருணா வீடுகளுக்கு அனுப்பியிருந்ததாதகத் தெரியவருகிறது. கருணாவுக்கெதிரான புலிகளின் ராணுவ நடவடிக்கையின் பின்னர் இந்த முன்னாள்ப் போராளிகளில் ஒருபகுதியினர் புலிகளுடன் மீண்டும் சேர்ந்துகொண்டனர். மீதமிருந்த பலபோராளிகளை கருணா குழு பலவந்தமாக கடத்தத் தொடங்கியது. ஐ நா சிறுவர் பாதுகாப்பு அமைப்பின்படி 2006 ஆம் ஆண்டின் குறிப்பிட்ட காலப்பகுதியொன்றில் குறைந்தது 208 முன்னாள்ப் போராளிகளைக் கருணா குழு கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இவர்களுள் 15 போராளிகள் கருணா தனித்து இயங்க முடிவுசெய்தபோது தனது அணியைப் பலப்படுத்த பலவந்தமாக இணைக்கப்பட்டு பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் 2006 இல் கருணாவினால் பலவந்தமாக இணைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
  10. 2006 இல் இடம்பெற்ற கடத்தல்கள் 2006 ஆனி மாதத்தில் கருணா குழுவினரால் கடத்தப்பட்ட சிறுவன் ஒருவனின் தாயாரை மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் செயற்பாட்டாளர்கள் செவ்விகண்டனர். ஆனி மாதத்தில் தன்னிடமிருந்து கருணா குழுவினரால் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட மகன் ஐப்பசியில் இறந்துவிட்டதாக கருணா குழுவினரால் அத்தாய்க்கு அறிவிக்கப்பட்டது. அயலவர்களின் கருத்துப்படி கொல்லப்பட்ட சிறுவனை தீவுச்சேனைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தமது முகாமிலேயே கருணா குழு எரித்ததாகவும், தான் எவ்வளவுதான் கெஞ்சிக் கேட்டுக்கொண்டபோதும்கூட தனது மகனின் உடலைத் தன்னிடம் தரமறுத்துவிட்டதாகவும் அத்தாய் கூறுகிறார். இப்படிக் கொல்லப்பட்ட சிறுவனும், மேலே இன்னொரு சிறுவனால் தன்னருகில் குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சிறுவனும் ஒரே ஆளாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்றது. மட்டக்களப்பின் கிராமப்புறங்களில் பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்குச் செல்வதிலிருந்து நிறுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். கருணா குழுவினரால் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டு தேவையற்ற போர் ஒன்றிற்குள் பலியிடப்படலாம் என்கிற அச்சமே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. அரச ராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தத்தில் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு கருணா குழுவினரால் நடத்தப்பட்டு வரும் கடத்தல்கள் கடுமையான அச்சத்தினை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. "நான் எனது 14 மற்றும் 15 வயதுப் பிள்ளைகளை பாடசாலைக்குச் செல்லவேண்டாம் என்று நிறுத்திவிட்டேன்" என்று ஒரு தாய் கூறினார். "எனது கணவரைக் கொன்றுவிட்டார்கள், எனது பிள்ளைகளையும் இழக்க நான் தயாரில்லை" என்று இன்னொரு தாய் கூறினார். இன்னும் சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் தாமும் பாடசாலைக்குச் சென்றுவருவதாகக் கூறுகின்றனர். மட்டக்களப்பில் சில பெற்றோருடனும், மனிதவுரிமை செயற்பாட்டாளர்களுடனும் பேசியபோது, சில சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் சிலர் தாமாகவே கருணா குழுவுடன் இணைந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தனர். சர்வதேச சட்டங்களின்படி, ஆயுதக் குழுவொன்றிலோ ராணுவத்திலோ தமது விருப்பத்தின்பேரில் ஒருவர் இணைய விரும்பினால்க் கூட தகுந்த வயதினை அடையும்வரை அவரை இணைத்துக்கொள்ள முடியாதென்கிற நியதி இருக்கிறது. "எமது அயல்க் கிராமத்தில் 10 அல்லது 12 வயதுள்ள சில சிறுவர்கள் கருணா குழுவில் இணைய விரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. தமது வயதினை ஒத்த சிறுவர்கள் ஆயுதங்களுடன் வலம்வருவதைப் பார்க்கும்ப்போது இச்சிறார்களுக்கு ஆயுதக் குழுவில் இணையும் ஆசை உருவாகியிருக்கிறது, அத்துடன் அவர்களுக்குச் சம்பளமும் வழங்கப்பட்டுவருவதாக அறிகிறேன்" என்று ஒரு தாய் கூறினார். தை மாதம் 2007 ஆம் ஆண்டில் ஐ நா செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட இலங்கையில் சிறுவர்களை போரில் ஈடுபடுத்துதல் தொடர்பான கண்டனத்தில் கருணா குழுவினரின் பலவந்த ஆட்ச்சேர்ப்புப் பற்றியும், சிறுவர் கடத்தல்களில் ராணுவத்தினரின் பங்குபற்றியும் குறிப்பிட்டிருக்கிறார் .
  11. 2006 இல் இடம்பெற்ற கடத்தல்கள் 2006 ஆடி மாதத்திலிருந்து தனது ராணுவ நண்பர்களுடன் மக்கள் மத்தியில் பகிரங்கமாக உலாவரத் தொடங்கியது கருணா குழு.இக்குழு தனது ஆயுததாரிகளின் பிரசன்னத்தை மட்டக்களப்பு எல்லைகளைத் தாண்டி பொலொன்னறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தைவரை விஸ்த்தரித்தது. அத்துடன் தனது அரசியல்ப் பிரிவு என்று சொல்லிக்கொண்ட தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் எனும் அமைப்பை கிழக்கின் பலவிடங்களிலும் திறக்க ஆரம்பித்தது. ஆனால், இந்த அரசியல் அலுவலகங்களிலிருந்துதான் கருணா குழு கடத்தல்களை நடத்தியிருந்தது. மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் கருணா குழுவின் கடத்தல்கள் தலைவிரித்தாடத் தொடங்கிய நாட்களுக்கு சற்று முன்னரே நகரில் தனது அரசியல் அலுவலகத்தினை அது திறந்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. திருகோணமலை மாவட்டத்திலும் இதேவகையான யுத்தியையே கருணா குழு கைக்கொண்டது. திருகோணமலை நகர்ப்பகுதியில் கருணாவால் அரசியல் அலுவலகம் திறக்கப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே நகர்ப்பகுதியில் இருந்து குறைந்தது 20 சிறுவர்களைக் கருணா குழு கடத்திச் சென்றிருக்கிறது. 2006, புரட்டாதி மாதம் 24 ஆம் திகதி செங்கலடியில் , சித்தாண்டி ராணுவ முகாமிற்கு அருகாமையில் கருணாவினால் அரசியல் அலுவலகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. அவ் அலுவலகம் திறக்கப்பட்டு நாளிலேயே அப்பகுதியில் 12 சிறுவர்களை கருணா குழு கடத்திச் சென்றிருந்தது. அவ்வாறே அம்பாறை மாவட்டத்தில், அக்கரைப்பற்று பகுதியில் கருணா குழுவின் அரசியல் அலுவலகம் திறக்கப்பட்ட நாட்களிலேயே கடத்தல்கள் ஆரம்பிக்கப்பட்டதாக உள்ளூர் மனிதவுரிமை அமைப்புக்கள் பதிவுசெய்திருக்கின்றன. ஆடி, ஆவணி புரட்டாதி ஆகிய மாதங்களில் கருணா குழுவினர் ஆயுதங்களுடன் மட்டக்களப்பு நகரில் உலாவருவதனை உள்ளூர் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் அவதானித்துள்ளனர். மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் அதிகாரிகள் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு விஜயம் செய்தபோது கருணா குழுவினரின் பலமான பிரசன்னத்தை கண்ணுற்றதாகத் தெரிவித்திரிக்கிறார்கள். கருணா குழுவின் பெயர்ப் பலகைகளும், பதாதைகளும் நகர வீதிகளிலும், தெருக்கோடிகளிலும் பரவலாகக் காணப்பட்டதாக இவ்வதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். நகரின் பெரும்பாலான ராணுவ மற்றும் பொலீஸ் சோதனைச் சாவடிகளில் ராணுவத்தினருடன் ஆயுதம் தரித்த கருணா குழு உறுப்பினர்களும் பகிரங்கமாகவே மக்களை சோதனைசெய்வது மற்றும் தடுத்துவைப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக மக்கள் முறையிட்டிருக்கின்றனர். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்கள் அரச ராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருக்கும் தறுவாயில், இப்பகுதிகளில் கருணா குழு அருகருகே அமைந்திருக்கும் சோதனைச் சாவடிகளினூடாக சிறுவர்களை ராணுவத்தினரின் அனுமதியின்றிக் கடத்திச் செல்வதென்பது இயலாத காரியம் என்று மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். புரட்டாதி மாதமளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான், மாங்கேணி, சந்திவெளி, செங்கலடி, வாழைச்சேனை, மண்முனை (வடக்கு மற்றும் தென்மேற்கு) போரதீவுபற்று, கோரளைப்பற்று ( வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு), காத்தான்குடி, ஏறாவூர் நகர்ப்பகுதி, மற்றும் ஏறாவூர்ப்பற்று ஆகிய பல பகுதிகளில் கருணா குழுவினரால் சிறுவர்கள் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தனர். இந்த கிராமங்கள் ராணுவ பொலீஸ் முகாம்களுக்கு மிக அண்மையிலும், ஒவ்வொரு கிராமத்திற்குமிடையிலான வழிநெடுகிலும் ராணுவச் சோதனைச் சாவடிகள் தொடர்ச்சியாக இருப்பது இங்கே குறிப்பிடத் தக்கது. கருணா குழுவினரால் சிறுவர்களும் பதின்ம வயதினரும் வீடுகள், வேலை செய்யும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது வீதிகள் மற்றும் திருமண நிகழ்வுகள் ஆகிய பல இடங்களிலிருந்து கடத்திச் செல்லப்பட்டனர். இவற்றுக்கும் மேலாக வாகரைப் பகுதியில் அரச ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து உயிரைக் காப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் அகதிகளாகக் குடியேறியிருந்த முகாம்களிலிருந்து பல சிறுவர்களைக் கருணா குழு கடத்திச் சென்றதாக முறைப்பாடுகள் உள்ளூர் மனிதவுரிமை அமைப்புக்களிடம் பதியப்பட்டிருந்தன. இவ்வாறு கடத்தப்பட்ட சிறார்களில் பலர் கட்டாய ராணுவப் பயிற்சியின் பின்னர் போர் நடவடிக்கைகளில் கருணாவினால் ஈடுபடுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைத் தேடி கரபோல பகுதியில் கருணா அமைத்திருந்த முகாமிற்கு வந்திருந்த அச்சிறுவனின் தந்தை தனது மகன் மோதலில் காயமுற்றுக் கிடப்பதை கண்ணுற்றிருக்கிறார். "அவனது காதும், கால்களும் நெருப்பில் எரிந்து கறுப்பாக இருந்தன. மோதல் ஒன்றின்போது தனக்கருகில் குண்டொன்று வெடித்ததாகவும் தனது நண்பன் தனக்கருகிலேயே இறந்துவிட்டதாகவும் தான் காயப்பட்டதாகவும் அவன் என்னிடம் கூறினான்" என்று அத் தந்தை தெரிவிக்கிறார்.
  12. 2006 இல் ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் எனப்படும் மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் வெளிவந்த கருணாவின் பலவந்த ஆட்கடத்தல்கள் மற்றும் சிறுவர்களைப் பலவந்தமாக தனது துணை ராணுவக் குழுவில் சேர்த்தது தொடர்பான விரிவான தகவல்கள் பாகம் 1 : 2006 இல் இடம்பெற்ற கடத்தல்கள் 2004 இல் கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி ராணுவத்துடன் சேர்ந்துகொண்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பரவலாக பல இடங்களிலும் சிறுவர்களைக் கடத்திச் செல்லும் நடவடிக்கையில் அவரது குழு இறங்கியிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்நாட்களில் செயற்பட்டுவந்த உள்ளூர் மற்று சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் கருத்துப்படி கருணா குழு மட்டக்களப்புச் சிறுவர்களை பொலொன்னறுவை மாவட்டத்தில் வேலை செய்வதற்கு எங்களுடன் வாருங்கள் என்று பலவந்தமாக அழைத்துச் சென்றதாகவும், இவ்வாறு பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் ஒருபோதுமே தமது வீடுகளுக்குத் திரும்பவில்லையென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2006 ஜூன் மாதமளவில் கருணா குழுவால் கடத்திச்செல்லப்பட்ட சிறுவர்களினதும் இளைஞர்களினதும் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துக் காணப்பட்டதாக இவ்வறிக்கை மேலும் கூறுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாதத்தில் மட்டும் கடத்தப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 40 இற்கும் அதிகம் என்றும், இவர்களுள் 23 சிறுவர்கள் ஒரு நாளில் கடத்திச்செல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. இவ்வாறு ஒருநாளில் கடத்திச்செல்லப்பட்ட சிறுவர்கள் இரு கிராமங்களிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாக இச்சிறுவர்களின் குடும்பங்களை செவ்விகண்ட மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறியிருக்கிறார்கள். இச்சிறுவர்களின் பெற்றோர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் தமது பிள்ளைகளை விட்டுவிடுமாறு தாம் கருணா குழு ஆயுததாரிகளைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டபோதும், அவர்களை இழுத்துச் சென்றுவிட்டதாகவும், பின்னர் கருணாவின் முகாம்களுக்கு தாம் தமது பிள்ளைகளைத் தேடிச் சென்றவேளை தமது பிள்ளைகள் கருணா குழு ஆயுததாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டதாகவும் கூறியிருக்கிறார்கள். இன்னும் சில பெற்றோர் தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விபரிக்கையில் காலையில் தமது கிராமத்திற்குள் புகுந்த இலங்கை ராணுவம் 7 சிறார்களை இழுத்துச் சென்று அவர்களது புகைப்படங்களை எடுத்துக்கொண்டதுடன் வேறு விபரங்களையும் பதிவுசெய்துவிட்டு திருப்பியனுப்பியதாகவும், அதே நாள் இரவுவேளையில் தமது வீடுகளுக்கு வந்த கருணா குழு ஆயுததாரிகள் அப்பிள்ளைகளை இழுத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர். கருணா குழுவிற்கு சிறுவர்களை பலவந்தமாகச் சேர்க்கும் நடவடிக்கையில் இலங்கைராணுவமும் ஈடுபடுகிறதா என்னும் கடுமையான சந்தேகத்தினை இம்மாதிரியான சம்பவங்கள் உருவாக்கிவருகின்றன என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. மனித உரிமைக் கண்காணிப்பகம் இன்னொரு கிராமத்தில் கடத்திச் செல்லப்பட்ட 13 சிறுவர்களின் பெற்றோருடன் பேசியதில் இன்னும் சில தகவல்களை சேகரித்துவைத்திருக்கிறது. அப்பெற்றோரின் கருத்துப்படி தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட நாளில் தமது கிராமத்திற்கு ராணுவத்தினரின் சீருடையில் வந்த 15 கருணா குழு ஆயுததாரிகள் தமது பிள்ளைகளை கிராமத்திலிருக்கும் கடையொன்றின் முன்றலுக்கு இழுத்துச்சென்று சில மணிநேரம் அவர்களை வைத்திருந்து பின்னர் வாகனங்களில் ஏற்றிச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். இக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் கருணா குழு ஆயுததாரிகள்தான் என்று உறுதிபடக் கூறும் பெற்றோர்கள், தாம் தமது பிள்ளைகளைத் தேடி கருணா குழுவின் முகாமிற்குச் சென்றதபோது இதே கடத்தற்காரர்கள் அங்கே நின்றிருந்ததையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். கருணா குழுவினரால் பலவந்தமாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு அருகில் நின்ற இராணுவத்தினரை இப்பெற்றோர்கள் வேண்டிக்கொண்டபோதிலும், ராணுவம் அவர்களை அசட்டை செய்து கருணா குழுவுடன் அலவலாவிக்கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லப்பட்ட கருணா குழுவின் சிறுவர்களைப் பலவந்தமாகக் கடத்திச் செல்லும் நடவடிக்கைகளையடுத்து ஐநா வின் சிறுவர்களுக்கான அமைப்பு வெளியிட்டிருந்த பொது வேண்டுகோளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்கள் பற்றி விசேடமாகக் குறிப்பிட்டிருந்தது. மேலும் அந்த வேண்டுகோளில், "சிறுவர்களைக் கடத்துவதையும், கட்டாய ராணுவப் பயிற்சிக்கும் இழுத்துச்செல்வதையும் கருணா குழு நிறுத்த வேண்டும் என்றும், இதுவரை கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்கள் அனைவரையும் அக்குழு விடுவிக்கவேண்டும் " என்றும் கேட்டிருந்தது. அத்துடன் இக்கடத்தல்கள் பற்றி இலங்கை அரசாங்கம் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சிறுவர்களுக்கான பாதுகாப்பினை உறுதிசெய்யவேண்டும் என்றும் அது அரசாங்கத்தைக் கேட்டிருந்தது. ஐ நா வின் இந்த அறிக்கை சாதகமான நிலையினை சில நாட்களுக்கு ஏற்படுத்தித் தந்திருந்தது. இவ்வறிக்கையினையடுத்து கருணா குழுவின் சிறுவர் கடத்தல்கள் சற்றுக் குறைந்திருந்ததாக கருதப்படுகிறது. ஆனாலும், ஒரு சில வாரங்களிலேயே கருணா குழு மீண்டும் தனது பலவந்த சிறுவர் கடத்தல்களை தீவிரமாக்கியிருந்தது. புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே ஆரம்பித்த மோதல்களை தனது கடத்தல்களுக்குச் சாதகமாகப் பாவித்த கருணா 2006 ஜூலை மாதத்தில பல சிறுவர்களைக் கடத்திச் சென்றதாக உள்ளூர் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் பதிவுசெய்திருக்கின்றன. ஆடி மாதத்திலிருந்து மார்கழி மாதம்வரையான 5 மாத காலத்தில் கருணாகுழுவினரால் குறைந்தது 200 சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கருணா துணைராணுவக் குழுவிடம் தமது பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மர்கள் 48 பேர் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் இதுதொடர்பான முறைப்பாடொன்றினைக் கொடுத்திருந்தனர். மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. தமது பிள்ளைகள் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டார்கள் என்றும், அவர்களை உடனடியாகத் தேடி மீட்டுத்தருமாறும் கோரப்பட்ட இவ்வழக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், இடர் நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருந்தது. ஐந்து மாதங்களின் பின்னர் கண்துடைப்பிற்காக ராணுவ அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்குழு, இத்தாய்மார்களைத் தொடர்பு கொண்டு, "கருணா குழு என்று குறிப்பிட வேண்டாம், இனந்தெரியாத குழு என்று குறிப்பிடுங்கள்" என்று வற்புறுத்தியதாக இத்தாய்மார்கள் தெரிவித்திருக்கின்றனர். தொடரும்
  13. கடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்........................... கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015 "நான் இந்த நாட்டில், சாதாரண கல்வித்தரத்தினைக் கொண்ட சாதாரண குடிமகன்.என்னைப்பொறுத்தவரை இந்த நாட்டின் சமூகவியல், சமூக விழுமியங்கள் தொடர்பாக தெளிவான பார்வை எப்போதுமே இருந்ததில்லை, குறிப்பாக இந்த நாட்டின் நீதித்துறை பற்றி மிகவும் குழப்பகரமான பார்வையே எனக்கு இருக்கிறது. உதாரணத்திற்கு விபச்சார விடுதிகளில் தொழில்புரியும் பெண்களை கண்ணிமைக்கும் நேரத்தில் கைதுசெய்து இழுத்துச் செல்லும் பொலீஸார் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்றுதள்ளி, அப்பாவிகளை வலிந்து கடத்திச் சென்று காணாமலாக்கிய ஆயுததாரியான கருணாவை கைதுசெய்யாது, அவரைப் பாதுகாத்து, கெளரவப்படுத்தி அன்புடன் "சேர்" என்று அழைக்கக் காரணமென்ன? " "இந்த நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கெதிராக கொடுமைகளை நிகழ்த்திவரும் சட்டத்திற்கும் மேலான அரச ராணுவத்தை ஒருவர் நீதியின் முன்னால் நிறுத்துவதென்பது நினைத்துக் கூடப் பார்க்கமுடியாதது. போர் வெற்றி நாயகர்களாக அலங்கரிக்கப்பட்டு, கடவுள்களுக்குச் சமமாக பூசிக்கப்படும் இந்த வெற்றி நாயகர்கள் தமிழினத்திற்கெதிராகச் செய்த அக்கிரமங்கள் எல்லாம் "விடுதலைப் புலிகளை அழித்தல் எனும் முக்கிய நோக்கத்திற்காக" பெரும்பான்மையினச் சிங்களவர்களால் "அவசியமான நடவடிக்கைகள் தான்" என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது". "கடந்த காலங்களில் இந்தக் கருணா அம்மாண் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட கொடூரங்களுக்கு நிகராக சிங்களவர்களையும் கொடுமைப்படுத்தியிருக்கிறார். ஆனால், இன்றுவரை சிங்களத் தலைமைகள் இவருக்கெதிராக நடவடிக்கை எதனையும் எடுக்க விரும்பவில்லையே, அது ஏன்? கருணாவுக்கெதிராகக் எடுக்கும் நடவடிக்கைகள் சங்கிலித் தொடர்போல மீண்டும் தமது காலடியிலேயே வந்து நிற்கும் என்கிற பயம் இருக்கிறதா அவர்களுக்கு ? இதன்மூலம் தெளிவாவது என்னவெனில், சிங்கள ராணுவ வீரர்கள் கடவுள்களுக்குச் சமமானவர்கள் என்றால் கருணா அம்மாண் கடவுளுக்கும் மேலானவர் என்பதுதானே?" "மைத்திரி ரணில் நல்லிணக்க அரசாங்கத்தில்க்கூட இந்த நிலைமை மாறும் என்று நான் நம்பவில்லை. மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் உருண்டோடிவிட்டன, இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை. இலங்கையின் மக்களுக்கெதிராக மிகக் கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியின் முன்னால் நிறுத்தும் முயற்சியில் இந்த அரசாங்கம் படுதோல்வியைத் தழுவியிருக்கிறது. இத்தனை தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் பின்னரும்கூட தான் கொடுத்த நீதியை நிலைநாட்டும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று அது மீண்டும் மீண்டும் கூறி வருகிறது". "இந்த அக்கிரமங்களைச் செய்தது யாரென்று எங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தே இருக்கிறது. ஆனாலும், எமக்கு எதுவுமே தெரியாது என்பதுபோல நாம் பாசாங்குசெய்துகொண்டு ஏதோவொருநாள் விசாரணைகள் நடைபெறும் என்று எங்களை நாங்களே எமாற்றிக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் யாரை ஏமாற்றப் பார்க்கிறோம்? இன்றுவரை காணாமல்ப்போன தமது பிள்ளைகள் வருவார்கள் என்று நம்பித் தவமிருக்கும் அந்த அப்பாவித் தாய்மார்களையா? அல்லது மனிதவுரிமைகளுக்காக வேலைசெய்வதாகக் கூறும் அமைப்புக்களையா? அல்லது எமது குடும்பத்தில் எவருக்கு இந்த அக்கிரமங்கள் நிகழும்வரை எது நடந்தால் எனக்கென்ன என்று இருந்துவிடும் மனோநிலைக்கு வந்துவிட்டோமா? "இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் எமது சக இன மக்களைக் கொன்று, பாலியல் வன்கொடுமை புரிந்து, கடத்திச்சென்று காணாமலாக்கிய ஒரு இரத்தவெறிபிடித்த கயவனை இன்னும் "சேர், ஐய்யா" என்று அழைத்து மகிழப்போகிறோம்?" ஆங்கில மூலம் : வி. கந்தைய்யா
  14. கடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்........................... கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015 அரந்தலாவையில் சிங்கள விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட காலத்தில் கருணாவே கிழக்கு மாகாணத்திற்கான புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். அவ்வாறே 1990 இல் புலிகளிடம் சரணடைந்த 600 சிங்கள, முஸ்லீம் பொலீஸாரை இழுத்துச்சென்று சுட்டுக்கொன்றபோதுகூட கருணாவே கிழக்கு மாகாண விசேட தளபதியாக இருந்தார். இதே காலப்பகுதியில் கருணாவின் கட்டளையின் கீழ் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள், சம்மாந்துறைப் படுகொலை, பல்லியகொடல்ல மற்றும் கொணேகல படுகொலைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன. இப்படுகொலைகள் எவையுமே கருணாவின் அனுமதியின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் , இன்றுவரை எந்த சிங்கள, முஸ்லீம் அரசியவாதியோ தமது மக்கள் படுகொலைசெய்யப்படக் காரணமான கருணாவினை கேள்விகேட்க முன்வரவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தமது அரசியல் லாபங்களுக்காக கருணாவின் பாவங்களை அவர்கள் மன்னித்துவிட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. கருணாவை அரசுடன் இணைத்து செயற்படுவது குறித்து அவர்கள் விருப்பம் கூடத் தெரிவித்திருக்கிறார்கள். சிங்கள தலைவர்களைப் பொறுத்தவரையில் பிரபாகரனைக் கொன்று, புலிகளை அழித்து, தமிழரை ஆட்கொள்வதுடன் ஒப்பிடும்போது, கருணாவின் படுகொலைகள் பற்றிப் பேசுவது முக்கியமற்ற ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால், முஸ்லீம் தலைவர்களுக்கு என்னவாயிற்று? தமது மக்களைப் படுகொலைசெய்து, தமது வர்த்தகர்களைப் பணத்திற்காகக் கடத்திச்சென்று கொன்று, காணாமலாக்கிய கருணா மீது ஏன் இதுவரை ஒரு முஸ்லீம் தலைவர் தன்னும் கேள்வி எழுப்பவில்லை?
  15. கடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்........................... கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015 கொழும்பு ரமடா ரினைஸன்ஸில் அழகியுடன் நடனமாடும் கருணா இலங்கையின் பாதுகாப்புப் படைகள் ஒருபுறம் இருக்கட்டும். அவர்கள் சட்டத்திற்கும் மேலானவர்கள். அவர்களின் குற்றங்களுக்காக அவர்களைத் தண்டிக்க எவராலும் முடியாது. ஆனால், துணைராணுவக் குழுக்கள் இலங்கையின் மக்கள்மீதும், ஒட்டுமொத்த மானிடத்தின்மீதும் நடத்திவரும் வலிந்த கடத்தல்கள் , சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளுக்காக அவர்களை தண்டிக்க முடியாமலிருப்பது ஏன்? அவர்கள் தமது கொலைகளுக்கான சாட்சியங்களை ஒருபோதும் விட்டுச் செல்வதில்லையென்பதாலா? இல்லையே, பெரும்பான்மையான கருணாவின் கடத்தல்களும் படுகொலைகளும் பல மக்கள் பார்த்திருக்க, பலர் சாட்சியங்களாக இருக்க பபகலில்தானே நடந்திருக்கின்றன? எத்தனை தடவைகள் பேரூந்துகளில் பயணித்த இளைஞர்களை வெளியே இழுத்துச் சென்ற கருணா, கெஞ்சி அழும் தாய்மாரை அடித்து விரட்டியிருக்கிறார்? இவ்வாறு எத்தனை கடத்தல்களை நாம் பார்த்தாயிற்று? அப்படியானால் இந்தக் கடத்தல்க்காரர்கள் தொடர்ச்சியாக எங்கோ ஒளிந்து மறைந்து வாழ்கிறார்களா? இல்லை, அவர்கள் அங்கேதான் இருக்கிறார்கள். எங்கள் கண்முன்னேயே, அவர்களின் குடும்பங்களுடன் எம்முன்னால் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் சிரித்து அகமகிழ்ந்தும், நடனமாடியும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தான் பிரபாகரனைக் கொன்றதெப்படி, புலிகளை வீழ்த்தியதெப்படி என்று வீரப்பிரதாபங்களை நாட்டுக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளைக் கடத்திச் சென்று, படுகொலை செய்து, பெண்களைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை புரிந்து, கப்பத்திற்காக அப்பாவிகளைக் கடத்திக் கொன்றபின்னரும்கூட அவருக்கு "கெளரவ கருணா அம்மாண்" எனும் நாமம் சூட்டப்பட்டு அழகுபார்க்கப்பட்டுத்தான் வருகிறது. கடந்த 2013 கார்த்திகை மாதத்தில் பொதுநலவாய அமைப்புக்களின் மாநாடு ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருணா தொடர்பாக பின்வருமாறு கூறினார். "எம்முன்னே இன்று வீற்றிருக்கும் கருணாவின் பிரசன்னம் முன்மாதிரியானது. புலிகள் இயக்கத்திலிருந்து போராளிகள் பிரிந்துவந்து சமாதானத்தைத் தழுவிக்கொள்கிறார்கள் என்பதனைக் காட்டுவதற்கு இந்தச் சந்தர்ப்பமே போதுமானது" என்று அவர் கூறினார். நீதித்துறை அமைச்சராக அன்றிருந்த ரவூப் ஹக்கீமின் இந்த பேச்சு விசித்திரமானது. 2004 பங்குனியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா நடத்திய நரவேட்டைகளின் கொடூரங்களை அவர் எப்படி மறந்தார் என்பது கேள்விக்குறியது. அவர் கூறுவதுபோல "சமாதானத்தைத் தழுவிக்கொண்ட கருணா" எவ்வாறு வலிந்த கடத்தல்களையும் படுகொலைகளையும் அரங்கேற்றினார் என்பதை அவர் எப்படி மறந்தார்? துணைராணுவக் குழுத் தலைவர்கள் கருணாவும் டக்கிளஸும் அவர்களின் எஜமானாருடன் மஹேந்திர பேர்சி ராஜபக்ஷவின் கொடுங்கோலாட்சி கருணாவுடனான தனது அரசின் ஒருங்கிணைவினை "ஒரு பயங்கரவாதியின் ஜனநாயதினை நோக்கிய சாய்வு" என்று சந்தைப்படுத்திவருகிறது. மகிந்தவின் அரசு, கருணாவை லைபீரியாவின் " நிர்வாண, மனிதமாமிசம் உண்ணும்" ஒரு ஆயுததாரியின் மனமாற்றத்துடன் ஒப்பிட்டுக் கிலாகிக்கிறது. கருணாவினதும் லைபீரியாவின் மனித மாமிசம் உண்ட ஆயுததாரியினதும் இன்றைய நிலைகள் வேறு வேறாகவிருந்தாலும், இவர்கள் இருவரது மானிடத்தின்மீதான சொல்லில் வடிக்கமுடியாத அக்கிரமங்களும் பாதகங்களும் ஒரேவகையானவை. ஆனால், லைபீரியாவின் கொலைகார ஆயுததாரியோ லைபீரியாவின் யுத்தத்தில் தான் செய்த கொடுமைகள் பற்றியோ, கொன்று தின்ற மனிதர்கள் பற்றியோ எதனையும் மறைக்கவில்லை. தனது குற்றங்களுக்காக சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ளவும் தயார் என்றே சொல்லியிருக்கிறான். அப்படியானால், கருணா எனப்படும் கொலைகாரனின் நிலையென்ன? கருணாவின் கொடூரங்கள் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் சுஜீவ சேனசிங்க விமர்சித்தபோது கொதித்தெழுந்த கருணா, "உங்களின் முன்னாள் தலைவர் பிரேமதாசா புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதை மறந்துவிட வேண்டாம், எனது வாயைக் கிளறினீர்கள் என்றால் இன்னும் பல ரகசியங்களை வெளியே விடுவேன்" என்று பாராளுமன்றத்தில் எகிறிப் பாய்ந்தது நினைவிற்கு வரலாம். கருணாவுக்கும் அவரது எஜமானர்களுக்கும் இடையே இருக்கும் உறவு சுவாரசியமானது. பிரபாகரனுக்குத் துரோகமிழைத்து அவரிடமிருந்து பிரிந்துசெல்லும்வரை அவர் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், கிழக்கில் எவருமே கேள்விகேட்க முடியாத அதிகாரத்தில் இருந்தவர். ஆனால், புலிகளிடமிருந்து பிரிந்துசென்று அரச ராணுவத்துடன் அவர் இணைந்துகொண்டவுடன் உடனடியாகவே கிழக்கு மாகாணத்தில் வலிந்த கடத்தல்கள், சிறுவர்களை ஆயுதப் போருக்கு இணைத்தல், கப்பம் கோருதல், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் என்று பல கொடூரங்களில் இறங்கினார். கருணாவின் இந்த மனிதவுரிமை மீறல்களையும், மானிடத்திற்கெதிரான குற்றங்களையும் ஊக்குவித்த மகிந்தவின் அரசு, புலிகளுக்கெதிரான போருக்கு கருணாவின் அவசியமான நடவடிக்கைகள் என்று நியாயப்படுத்தியே வந்தது. புலிகளுக்கெதிராகவும், தமிழினத்திற்கெதிராகவும் கருணா நிகழ்த்திய கொடூரங்களுக்காக மகிந்த அரசு அவருக்கு 2008 இல் நீர்ப்பாசனத்திற்கான துணையமைச்சர் பதவியினை வழங்கியிருந்தது. கருணா இன்றும்கூட அதேவகையான செல்வாக்கினையே ரணில் - மைத்திரியின் "நல்லாட்சி" அரசாங்கத்திலும் அனுபவித்து வருகிறார். கருணா தனது வாழ்வில் ஒரேயொருமுறை மட்டும் தான் சவாலுக்கு முகம்கொடுத்தார். அதுகூட தனது சகாவான பிள்ளையானின் வடிவில் அவருக்கு வந்தது. மொத்தக் கிழக்கு மாகாணமுமே இந்த இரு கொலைகார ஆயுததாரிகளினதும் போர்க்களமாக மறியது. இந்த மோதல்களிலேயே கருணா குழுவின் புலநாய்வுத்துறைப் பொறுப்பாளனும், தமிழர் புணர்வாழ்வுக்கழக பிரதம ஆய்வாளர் பிரேமினியைக் கடத்திச்சென்று கூட்டாகப் பாலியல் வன்கொடுமை புரிந்தவனுமாகிய சிந்துஜனை பிள்ளையான் குழு சுட்டுக் கொன்றது.
  16. கடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண் கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015 "பிரேமினிக்கு நடந்த கொடூரம் மிகவும் மிருகத்தனமானது. சற்று நிறங்குறைந்தவராக இருந்தாலும், அவர் அழகானவர்தான். கடத்தி இழுத்துச் செல்லப்பட்ட அவரை இன்னொரு முகாமிற்குக் கொண்டுசென்று முதலில் வன்புணர்வில் ஈடுபட்டவர் அவரைக் கடத்திய சிந்துஜன் தான். அதற்குப் பிறகு நடந்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் ஆயுததாரிக் குழுவினரால் அவர் மீது நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்புணர்வு. அங்கிருந்த அனைவரும் ஒவ்வொருவராக அந்தப் பெண்மீது தமது வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டனர். எல்லாமாக 14 கருணா குழு ஆயுத தாரிகள் அன்று பிரேமினியைக் கூட்டாக வன்புணர்ந்திருந்தார்கள். ஆரம்பத்தில் கத்திக் கதறிய பிரேமினியின் அழுகுரல்கள் நேரம் போகப் போக உயிரற்ற முனகல்களாக மாறி இறுதியில் ஓய்ந்துபோயின". "எமது இச்சைகளைத் தீர்த்துக்கொண்ட பின்னர் அவரைக் கட்டிற்குள் இழுத்துச் சென்றோம். அவர் அழவில்லை, அவர் முகத்தில் எந்தச் சலனமும் இருக்கவில்லை" என்று பிரேமினியைக் கூட்டாக பாலியல் வன்கொடுமை புரிந்த கருணா குழு ஆயுததாரி ஒருவர் பின்னர் கூறினார். அவரது கூற்றுப்படி பிரேமினியை வாட்களால் துண்டு துண்டுகளாக வெட்டி அந்தக் காட்டுப்பகுதியெங்கும் வீசியெறிந்திருக்கிறார்கள் கருணா குழுவினர். நீர்வேலியைச் சேர்ந்த காணாமல்போன இளைஞர் ஒருவரின் தாயாரை நான் அறிந்திருந்தேன். அவரது இழப்பின் வலி மிகக் கொடியது. உங்களின் உறவொன்று கடத்தப்பட்டு, கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து பின்னர் கொடூரமாகக் கொல்லப்படுவதும் அதனை நீங்கள் வேறு வழியின்றி அமைதியாக ஏற்றுக்கொண்டு வாழப்பழகுவதும் கொடுமையானது. உங்களின் குடும்பத்தில் ஒருவர் காணாமற் போய்விட்டால் அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா, அவர் உயிருடன் இருந்தால் எங்கிருக்கிறார், அவரைக் கடத்தியவர்கள் அவரை எப்படி நடத்துகிறார்கள், அவருக்கு என்னவகையான கொடுமைகளை அவர்கள் வழங்குகிறார்கள், அவரை விடுவிப்பதென்றால் நாம் யாரை அணுகவேண்டும் என்று பல கேள்விகள் உங்களுக்கு இருக்கும். ஒருவர் கடத்தப்படும்பொழுது, கடத்தப்பட்டவரைப் போலவே, அவரைப் பறிகொடுத்த உறவுகளுக்கு இருக்கும் வலியும் மிகவும் கொடியது. தனது மகன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்று நிச்சயமில்லாது, அச்சத்தினுள் வாழும் அந்தத் தாயாரின் வலி பெரியது. தேடிக் களைத்த நிலையில் தனது மகன் எங்கே என்று சாத்திரிகளை அவர் போய்க் கேட்டார். அவர்களில் பலர் உனது மகன் உனது வீட்டிலிருந்து தெற்குத்திசையில் எங்கோவொரு இடத்தில் இன்னும் உயிருடன் தான் இருக்கிறான் என்று கூறியிருக்கிறார்கள். அதனால் அந்தத் தாயும் தனது மகன் தென்னிலங்கையில் எங்கோவொரு இடத்தில் இன்னும் உயிர்வாழ்வதாக எண்ணி வாழ்ந்துவருகிறார். தனது மகன் இன்னும் உயிருடன் இருக்கிறான் எனும் நினைவே அவனைத் தேடும் அவரது முயற்சியில் அவரைச் சளைக்காமல் இயங்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருமுறையும் தொலைபேசி அழைக்கும்போது அது தனது மகனாகவோ அல்லது மகனின் இருப்பைப் பற்றி தெரிந்தவர்கள் ஆராவதோ இருக்கக் கூடாதோ என்று அவர் ஏங்குகிறார். அவரது மகன் காணமலாக்கப்பட்டு இத்துடன் ஐந்து வருடங்களாகிவிட்டன. அவர்போன்றே இன்னும் பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள் வடக்குக் கிழக்கில் தமது பிள்ளைகளைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். வலிந்து காணமலாக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமது பிள்ளைகளையோ, துணையினையோ, பெற்றோர்க்களையோ கடத்தியவர்கள் யாரென்பது அவர்களின் உறவுகளுக்குத் தெரிந்திருந்தது. கடத்தியவர்கள் கருணா குழுவா, டக்கிளஸ் குழுவா, ராணுவமா அல்லது பொலீஸா என்பதை அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருந்தார்கள். முக்கியமாக கடத்தியவர்கள் எந்த முகாமிலிருந்து வந்திருந்தார்கள் என்பதும் அவர்களுக்கு நன்கே தெரிந்திருந்தது. பலநேரங்களில் தமது உறவுகளைக் கடத்திச்சென்ற தனிநபர்கள் பற்றிய விபரங்கள் கூட அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், இன்றுவரை இந்தக் கடத்தல்களின் சூத்திரதாரிகள் கைதுசெய்யப்படவுமில்லை, அவர்கள்மேல் இலங்கையின் நீதித்துறை வழக்குகள் எதனையும் பதிவுசெய்யவுமில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைப்பின் முன்னால் சாட்சியமளித்த பலநூற்றுக்கணக்கான தாய்மார்கள் தமது பிள்ளைகளைக் கடத்திச் சென்றது கருணா குழுதான் என்று வெளிப்படையாகவே சாட்சியமளித்திருந்தாலும் இன்றுவரை எந்தச் சிங்கள அரசும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மறுத்தே வருகின்றன
  17. பிரபாகரனைக் கொன்று, புலிகளை அழிக்க உதவினேன், இன்று என்னைத் தூக்கி எறிந்துவிட்டார்கள் - கருணா ஆதங்கம் ஆங்கிலமூலம் : கொழும்பு டெலிகிராப், ஐப்பசி 2015 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தான் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகுவதாகவும், வீ. ஆனந்தசங்கரியின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் இணையப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். பிரபாகரனைக் கொன்று, புலிகளை அழிக்க உதவினேன் - கருணா அவர் தனது முடிவுபற்றி மேலும் தெரிவிக்கையில் தன்னை ஆதரிக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் இனிமேல் இலங்கையில் இடம்பெறும் அனைத்துத் தேர்தல்களிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிலேயே போட்டியிடுவார்கள் என்றும் தெரிவித்தார். தனது தற்போதைய முடிவு குறித்து இருவார காலத்தில் நடக்கவிருக்கும் பத்திரிக்கையாளர் மாநாட்டில் விபரமாக விளக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமை மீது தான் கடுமையான அதிருப்தியையும், விசனத்தையும் கொண்டிருப்பதாகக் கூறிய கருணா, தன்மீதான பல மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகளின்போது அரசியல் ரீதியாக தன்னை அந்நியப்படுத்தியுள்ளதுடன் எதுவித ஆதரவினையும் நல்காது கட்சித் தலைமை தன்னை கைவிட்டு விட்டதாக அவர் மேலும் கூறினார். ஆனால், நாட்டிற்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தேவையேற்பட்டபோது தான் அனைத்து வழிகளிலும் உதவியதாகக் கூறிய கருணா, பிரபாகரனைக் கொன்று, புலிகளைத் தோற்கடிக்க தான் ஆற்றிய சேவையினை இன்று நாட்டின் தலைவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே மறந்துவிட்டார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார். கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகதீத் எக்லியகொட தன்னாலேயே கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகக் கூறிய கருணா, இதுபற்றிய விசாரணைகள் ஆரம்பிக்குமிடத்து, தான் அஞ்சப்போவதில்லையென்றும், இதன் பின்னால் இருப்பவர்கள் யாரென்பது அப்போது தெரியவரும் என்றும் அவர் கூறினார். அண்மையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைக் கவுன்சிலினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கருணா குழுவின் கடத்தல்கள் , சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், அரசியல்வாதிகள் மீதான படுகொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதுபற்றிப் பேசிய கருணா, அதுபற்றி தான் அச்சப்படவில்லையென்றும், தேவையென்றால் விசாரணைகளைச் சந்திக்க தான் தயார் என்றும் சவால் விட்டார். இவ்வறிக்கை பற்றி மேலும் பேசிய கருணா, கருணா குழு என்று ஒரு குழு இருப்பதே எனக்கு இந்த அறிக்கையினைப் பார்த்த பின்னர் தான் தெரியவந்தது என்றும், புலிகளிடமிருந்து பிரிந்து சென்று ராணுவத்துடன் இணைந்துகொண்டபின்னர் தான் ஆயுதங்களை மீண்டும் தொட்டுக் கூடப் பார்க்கவில்லையென்றும் கூறினார். http://1.bp.blogspot.com/_otWn2PlEOdY/RtP1QNRrQcI/AAAAAAAAAfs/vz9JcWMuM9I/s320/author.jpg ஆனந்த சங்கரியுடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தான் மேற்கொண்டதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய பல திட்டங்களை ஆனந்தசங்கரி கொண்டிருப்பது கண்டு தான் வியந்ததாகவும் கருணா கூறினார். இறுதியாக, சுதந்திரக் கட்சியிலிருந்து விலகுவதான தனது முடிவினை இன்று கட்சியின் பொதுச் செயலாளருக்குத் தான் அறிவித்திருப்பதாகவும் கூறினார்.
  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜைக் கொல்வதற்கு கருணாவிடம் 50 மில்லியன் ரூபாய்களைக் கொடுத்தார் கோட்டாபய ராஜபக்ஷெ - பொலீஸ் அதிகாரி சாட்சியம் முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் மனிதவுரிமை சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜ் அவர்களைக் கொல்வதற்கு அந்நாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷெ துணைராணுவக் கொலைக்குழு ஆயுததாரி கருணாவுக்கு 50 மில்லியன் ரூபாய்களை வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேயின் முன்னால் சாட்சியமளித்த முன்னாள் தேசிய புலநாய்வுத்துறை பொலீஸ் உத்தியோகத்தர் லியனராச்சி அபெயரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷெ அப் பொலீஸ் அதிகாரி மேலும் சாட்சியமளிக்கையில், கருணாவுக்கான இந்தக் கொடுப்பனவு பாதுகாப்பு அமைச்சகத்தினூடாக, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியான வசந்தவினால் வழங்கப்பட்டதென்று கூறினார். ரவிராஜைக் கொல்வதற்கான இந்தப் பேரத்தின்பொழுது பிரதிப் பொலீஸ் மா அதிபர் கீர்த்தி கஜனாயக்க மற்றும் தேசிய புலநாய்வுச் சேவைகள் பிரிவின் சிரேஷ்ட்ட பொலீஸ் அத்தியட்சகர் மஹில் டோலேயும் சமூகமளித்திருந்தனர் என்று அவர் மேலும் கூறினார். பங்குனி மாதம் 2 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை இப்படுகொலைப் பேரத்தினை கண்ணால்க் கண்ட சாட்சியான அஞ்செலோ ரோய் என்பவரை மீண்டும் வழக்கு நீதிமன்றில் விசாரிக்கப்படுமிடத்து சமூகமளிக்கும்படியும் கோரப்பட்டது. முன்னாள்ப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு கார்த்திகை 10 ஆம் நாள் கொழும்பிலிருந்த அவரின் வீட்டிற்கு மிக அருகாமையில் வாகனத்தில் செல்ல எத்தனிக்கும்போது கருணா துணைராணுவக் கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவிராஜைக் கொன்றது மகிந்த ராஜபக்ஷெவின் அரசுதான் என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும், மனிதவுரிமை அமைப்புக்களும் குற்றஞ்சாட்டிய நிலையில், அரசு இதனை மறுத்திருந்தது.
  19. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோசேப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரைக் கொன்றது கருணாவும் டக்கிளஸும் தான் - பாராளுமன்ற உறுப்பினர் ரொபேட் பிளேக்கிடம் தெரிவிப்பு : விக்கிலீக்ஸ் வெளியீடு ! "இலங்கையில் அரசின் பின்புலத்தில் இயங்கிவரும் துணைராணுவக் குழுக்களில் கருணா குழுவே மிகக் கொடூரமானதும் வீரியம் மிக்கதாகவும் காணப்படுகிறது. ஆட்களைக் கடத்துதல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் என்பவற்றில் இக்குழுவே முன்னின்று செயற்பட்டு வருகிறது". "கடந்த பங்குனி மாதம் 20 ஆம் திகதி எனைச் சந்தித்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டவல்லுனருமான க. விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கருணாவைக் கொண்டு இலங்கையரசாங்கம் படுகொலை செய்யும் என்று நாம் அச்சப்படுகிறோம் என்று என்னிடம் கூறினார்". "இதேபோல் கொழும்பு மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுமக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான மனோ கணேசன் அவர்களும் இதே வகையான அச்ச உணர்வு தனக்கும் இருக்கிறதென்று கடந்த பங்குனி 29 ஆம் திகதிச் சந்திப்பில் எம்மிடம் கூறினார். இவர்களைப்போலவே இன்னும் பல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும், சில முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கருணாவினால் தாம் கொல்லப்படலாம் என்கிற அச்சத்தில் இருப்பது தெரிகிறது". "திரு விக்னேஸ்வரன் மேலும் கூறுகையில், கடந்த 2005 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கத்தைக் கொல்லும் திட்டத்தினைத் தீட்டிய கருணா, டக்கிளஸ் தேவானந்தாவின் ஆதரவுடன் நத்தார் ஆராதனையில் அவரைக் கொன்றார் என்று எம்மிடம் தெரிவித்தார். அவ்வாறே கடந்த 2006, கார்த்திகை 10 ஆம் திகதி யாழ்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல மனிதவுரிமைச் சட்டத்தரணியுமான திரு நடராஜா ரவிராஜ் அவர்களைக் கொழும்பில் திட்டம் தீட்டிக் கொன்றது கூட கருணாதான் என்று அவர் எம்மிடம் மேலும் கூறினார்". பிரபல துணைராணுவக் கொலைக்குழு முக்கியஸ்த்தர்கள் கருணா மற்றும் டக்கிளஸ் தேவானந்தாவுடன் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் அமெரிக்கத் தூதுவர் ரொபேட் பிளேக்கினால் வோஷிங்க்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பின் விக்கிலீக்ஸின் வெளியீடு பின்வருமாறு சொல்கிறது. "யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கத்தோலிக்கக் குருவானவர் பேர்ணாட் எம்முடன் பேசும்போது கருணா தனது துணைராணுவக் குழுவின் நடவடிக்கைகளை கிழக்கில் மட்டுமல்லாமல் வடக்கிற்கும் விஸ்த்தரித்திருப்பதாகக் கூறினார். 2005 கார்த்திகை முதல் 2007 மாசி வரை குறைந்தது 747 தமிழர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் கருணாவினால் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று எம்மிடம் கூறிய குருவானவர், இவற்றுள் கடந்த 2007 பங்குனி மாதத்தில் மட்டும் கருணாவினால் 52 தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்" "காணமலாக்கப்பட்டவர்களைப்பற்றிய விசாரணைகளுக்கென்று மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் கமிஷனிடம் தான் சேகரித்த 200 கடத்தல்கள் பற்றிய முறைப்பாடுகளை வழங்கியதாகவும், ஆனால் இவ்விசாரணைக் கமிஷனின் தலைவரும் ஜனாதிபதி மகிந்தவின் நெருங்கிய நண்பருமான திலகரட்ன மஹநாம இதுவரையில் எந்தவொரு கடத்தல்பற்றியும் நடவடிக்கை எடுக்க மறுத்துவருவதாகவும் அவர் மேலும் கூறினார்" "யாழ்ப்பாணத்தில் கருணாவினால் நடத்தப்பட்ட 747 கடத்தல்களில் பல சம்பவங்களில் பொலீஸாரின் அசமந்தத்தினாலும், அரச இடையூறுகளினாலும் தன்னால் 200 கடத்தல்கள் பற்றிய விபரங்களையே சேகரித்து ஆவணப்படுத்த முடிந்ததாகக் கூறும் குருவானவர், இவ்வாறான ஒரு கடத்தல் சம்பவத்தில் புலிகளின் அனுதாபியொருவரைக் கடத்திச்சென்ற கருணா குழு அவரது உறவினர்களிடம் கருணாவின் புகைப்படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டியை கொடுத்துவிட்டு "இவனின் காலம் முடிந்துவிட்டது" எனும் தொனியில் கூறிவிட்டுச் சென்றதாக முறையிடப்பட்டிருப்பதாகக் கூறினார்" என்று ரொபேட் ஓ பிளேக்கினால் வோஷிங்டனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  20. கருணாவைப் பாவித்து ஊடகவியலாளர்களுக்குக் கொலைப்பயமுறுத்தல் விடுத்த கோத்தா விக்கிலீக்ஸில் வெளிவந்த செய்தி : செய்தி அனுப்பப்பட்ட நாள், மே 18, 2007. அனுப்பியவர் அமெரிக்கத் தூதர் ரொபேட் ஓ பிளேக் "கருணாவுக்கு தாம் ஆதரவளிக்கவில்லையென்று அரசாங்கம் திரும்பத் திரும்பக் கூறிவந்தாலும் கூட, கடந்தமாதம் 16 ஆம் திகதி அஸோஸியேட்டட் பிரஸ் அமைப்பின் தென்னாசிய நிருபர் மத்தியூ ரொசென்பேர்க்கிற்கு அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தா வழங்கிய செவ்வியின் ஒலிவடிவம் கிடைக்கப்பெற்றது. அச்செவ்வியில் கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று ராணுவத்துடன் இணைந்து செயற்படுவதை வானளாவப் புகழ்ந்த கோத்தாபய, கருணாவின் உதவியின் மூலம் ராணுவத்திற்குக் கிடைத்த நண்மைகள் , வெற்றிகள் பற்றிப் பெருமையாகப் பேசினார்" என்று வோஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில் ரொபேட் பிளேக் குறிப்பிட்டிருக்கிறார். கோத்தாவும் கருணாவும் விக்கிலீக்ஸில் வெளிவந்த இந்தச் செய்திக்குறிப்பை கொழும்பு டெலிகிராப் வெளியிட்டிருக்கின்றது. "உச்ச பட்ச ரகசியம்" என்று குறிப்பிடப்பட்டு வெளிவந்திருக்கும் இந்த செய்திக்குறிப்பில் கருணா தலைமையிலான துணைராணுவக் கொலைக்குவின் நடவடிக்கைகள் பற்றி அது விளக்குகிறது. இச்செய்திக் குறிப்பு அன்றைய தூதுவர் ரொபேட் பிளேக்கினால் மே மாதம் 18 ஆம் திகதி, 2007 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. அதேவேளை, கடந்த சித்திரை மாதம் 16 ஆம் திகதி டெயிலி மிரர் பத்திரிக்கையின் ஆசிரியர் சம்பிக்க லியனாராச்சி அவர்களை நேரடியாகத் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, வாகரையில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் முகம்கொடுத்துவரும் இன்னல்கள் பற்றிய எழுதியதற்காக அவரையும், அச்செய்தியைச் சேகரித்து வழங்கிய நிருபரையும் (விபச்சாரி என்று விழித்து) "கருணாவைக் கொண்டு கொல்வேன்" என்று மிரட்டியிருக்கிறார். இதனையடுத்து சம்பிக்க லியனராச்சி கருணாவைத் தொடர்புகொண்டு இதுபற்றிப் பேசியபோது, "நீங்கள் கவலைப்படவேண்டாம், நான் உங்களைக் கொல்லப்போவதில்லை, கோத்தா சும்மாதான் சொல்கிறார்" என்று பதிலளித்திருக்கிறார். ரொபேட் பிளேக்கினால் வோஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட முழுச் செய்திக்குறிப்பின் விபரம் கீழே: "அரசாங்கத்தின் உதவியுடன் கருணா துணைராணுவக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் கடந்தவருடத்தில் மிகவும் அதிகமாகக் காணப்பட்டன. கருணாவைக் கொண்டும், டக்கிளஸைக் கொண்டும் புலிகளுக்கு ஆதரவானவர்களையும், அனுதாபிகளையும் கொன்றுவரும் அரச ராணுவம் பழியினை இலகுவாக இக்கொலைக் குழுக்கள் மீது போட்டுவிட்டுத் தப்பிவிடுகிறது". "இந்த துணைராணுவக் கொலைக் குழுக்களுடன் தனக்குத் தொடர்பில்லை என்று தொடர்ச்சியாகக் கூறிவரும் அரசாங்கம் கண்துடைப்பிற்காக கடத்தல்களையும் காணாமற்போதல்களையும் விசாரிக்க தனிநபர் விசாரணைக் கமிஷன் ஒன்றினையும் நிறுவப்போவதாகக் கூறிவருகிறது. ஆனால், இந்த முயற்சிகள் எல்லாம், வெளிநாட்டில் சரிந்திருக்கும் தனது பெயரினை மீள கட்டியெழுப்பவே அது செய்கிறதென்பதும், உள்நாட்டில் உண்மையாகவே மனிதவுரிமை மீறல்களை அடக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லையென்பதும் தெளிவானது". "கொழும்பிற்கு வெளியே இந்த துணைராணுவக் குழுக்களால் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல்கள், காணாமற்போதல்கள், பிள்ளைகளைக் கடத்துதல், சிறுவர்களைக் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், கப்பம் அறவிடுதல் ஆகிய விடயங்கள் அரசின் ஆசீர்வாதத்துடன் தொடர்ச்சியாக நடைபெற்றே வருகின்றன". "பெரும் பணத்தட்டுப்பாட்டில் சிக்கியிருக்கும் ராஜபக்ஷேவின் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட துணைராணுவக் குழுக்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை முற்றாக நிறுத்தியிருப்பதோடு, கருணா மற்றும் டக்கிளஸ் ஆகிய துணைராணுவக் குழுக்கள் நேரடியாகவே மக்களைக் கடத்திச் சென்று கப்பம் அறவிடுவதை ஊக்குவித்து வருவது தெரிகிறது". "இந்த துணைராணுவக் குழுக்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான நெருக்கம் பொதுவெளிகளில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு உள்ளூர் தொடர்புகள் மூலம் மேலும் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றன" என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
  21. செய்திக்குறிப்பு 1 : மார்கழி 2011 சிறார்களை தனது துணைராணுவக் குழுவில் இணைத்த கருணா ஆங்கிலத்தில் : உவிந்து குருகுலசுரிய 2005 ஆம் ஆண்டு, இலங்கையினுள்ளும், வெளியேயும் மனிதவுரிமைகளுக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டதற்காக ராதிகா குமாரசுவாமிக்கு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா தேஷமான்ய எனும் உயர்ந்த கெளரவத்தினை வழங்கியிருந்தார். ராதிகா அப்பொழுது ஐ நா வின் சிறுவர்களுக்கும் ஆயுதப் பிணக்குகளுக்குமான நடவடிக்கைக் குழுவில் விசேட பிரதிநிதியாகச் செயலாற்றிவந்தார். ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுவரும் சிறுவர் சிறுமியரின் உரிமைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அவரது பிரதான கடமையாக இருந்து வந்தது. கார்த்திகை 2011 இல், இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் எனும் நபருக்கு இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதே உயர் கெளரவமான தேஷமான்ய எனும் பட்டத்தினை வழங்கி கெளரவித்திருக்கிறார். கடந்த 18 ஆம் திகதி திருக்கோயில் பகுதியில் இடம்பெற்ற ஆடம்பர நிகழ்வொன்றில் இனியபாரதிக்கு இந்த நாட்டின் மகத்தான கெளரவம் வழங்கப்பட்டதை அம்பாறையிலிருந்த அவரது அலுவலகம் சண்டே லீடர் பத்திரிக்கை இதுதொடர்பாக அவர்களைத் தொடர்புகொண்டபொழுது உறுதிப்படுத்தியிருந்தது. யார் இந்த இனியபாரதி ? சிறுவர் சிறுமியரை கடத்திச் சென்று கட்டாய ராணுவப் பயிற்சியின் பின்னர் துணைராணுவக் குழுவில் இணைத்துவருபவர் என்று ஐ நா வால் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் இவர். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோயில், வினாயகபுரம் ஆகிய பகுதிகளில் பலநூற்றுக்கணக்கான கடத்தல்களுக்கும் காணாமற்போதல்களுக்கும் காரணமானவர் என்று மக்களால் அடையாளம் காணப்பட்டவர் இவர். ராஜபக்ஷவின் அரசில் துணையமைச்சராகவிருக்கும் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் துணைராணுவக் குழுவில் மிக முக்கிய ஆயுததாரியாகச் செயற்பட்டு வருபவர் இவர். அதுமட்டுமல்லாமல், அம்பாறை மாவட்டத்தின் மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டுவருபவர் இவர். அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான விசாரணைக் குழுவின் அமர்வுகளில் சாட்சியமளித்த மக்களில் 90 வீதமானவர்கள் தமது பிள்ளைகள், கணவன்மார்கள், மனைவிமார்களைக் கடத்திச் சென்று காணமாலக்கியது இனியபாரதியே என்று வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர். திருக்கோயிலில் அமைந்திருக்கும் கருணா துணை ராணுவக் குழுவின் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இலக்கத்தகடு பத்திரிக்கையால் மறைக்கப்பட்ட வெள்ளை நிற வானும் அருகே இனியபாரதியுடன் அவரது சகா ஜீவேந்திரனும் கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்கள் அனைத்திலும் வாக்காளர்களுக்கு கொலைப் பயமுருத்தல் விடுத்தது, மகிந்தவின் கட்சிக்கு வாக்களிக்குமாறு அச்சுருத்தியது, தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டது போன்ற பல வன்முறைகளில் இனியபாரதியே தலைமை தாங்கிச் செயற்பட்டதாக தேர்தல்க் கண்காணிப்பாளர்கள் அறிக்கைகளை விடுத்திருக்கின்றனர். இந்த வன்முறைகளின்பொழுது குற்றவாளியென்று கண்டறியப்பட்ட இனியபாரதிக்கு 10 வருட சிறைத்தண்டனையினை கல்முனை நீதிமன்றம் வழங்கியிருந்தது. இனியபாரதியும் அவரது வெள்ளை வான் கடத்தல்களும் நான் இந்த மனிதரை ஆனி 19, 2007 அன்று திருக்கோயிலில் அமைந்திருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். சுதந்திர ஊடகம் சார்பாகவும், இலங்கை ஊடக நிலையம் சார்பாகவும் நானும், சர்வதேச ஊடக நிலையத்தின் இயக்குனர் டேவிட் டாட்ஜ், சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சுகுமார் முரளிதரன், இலங்கை ஊடகத் தொழிலாளர்கள் சார்பாக அதுல லியனகே மற்றும் இலங்கை முஸ்லீம் ஊடகவியலாளர் அமைப்பின் ஜாவிட் முனவ்வரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டோம். பேச்சுக்களில் ஈடுபட்ட சுதந்திர ஊடகவியலாளர்களும், இனியபாரதியுடன் அவரது உதவித் தலைவரும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கருணா குழுவினால் இழைக்கப்பட்டு வந்த அநீதிகளைச் சரிசெய்யும் நோக்கிலேயே எமது இந்தப் பயணம் அமைந்திருந்தது. அந்தவருடத்தில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இனியபாரதியால் பல தடவைகள் கொலைப்பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. நாம் அம்பாறை மாவட்ட கருணா துணைராணுவக் குழுத் தலைவரும் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளருமான இனியபாரதி மற்றும் அவரது உப தலைவரான ஜீவேந்திரன் ஆகியோரை அவர்களின் அலுவலகத்தில் அன்று சந்தித்தோம். அவரது அலுவலகத்தினுள்ளே பல சிறுவர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதை நான் கண்டேன். அதுல லியனகேயுடன் சேர்ந்து இரகசியமாக அச்சிறுவர்களைப் படமெடுக்க நான் எண்ணினேன். அத்துடன், அவர்களின் அலுவலகத்தின் முன்னால், இலக்கத்தகடு பத்திரிக்கையினால் மறைக்கப்பட்ட வெள்ளைநிற வான் ஒன்றைக் கொண்டோம். அருகில் சென்று பார்க்கும்பொழுதுதான் அவ்வாகனத்தில் இலக்கத்தகடே இருக்கவில்லையென்பது எமக்குப் புரிந்தது. கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் இலக்கத்தகடற்ற வெள்ளை நிற வான் தற்போதைய தேசமான்ய கெளரவத்தினைப் பெற்றிருக்கும் இனியபாரதியுடன் சேர்த்து அவ்வாகனத்தினைப் படம்பிடித்துக் கொண்டேன். அவர்களுடன் கூடவே ஆயுதம் தாங்கிய இரு சிறுவர்களையும் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இப்புகைப்படம் என்னாலேயே முதன் முதலாக வெளிக்கொண்ரப்பட்டது. பல்வேறு ஊடகங்கள் இப்புகைப்படத்தினைப் பகிருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டபோதும்கூட, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளரின் பாதுகாப்புக் கருதி அதனைப் பகிர நான் விரும்பியிருக்கவில்லை. கருணா துணைராணுவக் குழுவினரின் அலுவலகத்தின் முன்னால் இலக்கத்தகடற்ற வெள்ளைநிற வாகனம் நிறுத்தப்பட்டிருப்பது அவர்கள் ஆட்களைக் கடத்திச் செல்ல இந்த வாகனத்தைப் பாவிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. பலநூற்றுக்கணக்கான கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பான முறைப்பாடுகள் பொலீஸாரிடம் கிடைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை ஒருவர் கூட விடுவிக்கப்படவுமில்லை, குற்றமிழைத்தவர்கள் கைதுசெய்யப்படவுமில்லை. பலவந்த சிறுவர் ராணுவப் பயிற்சியும் இனியபாரதியும் ஐ நா சிறுவர் நிதியத்தின் அறிக்கைப்படி, "64 வீதமான சிறுவர்கள் புலிகளால் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு இணைக்கப்பட்டிருக்கலாம்" என்று கூறுகிறது. ஆனால், தவறாகப் பிரசுரிக்கப்பட்ட இவ்வறிக்கையினைப் பார்த்த பிரபல சிறுவர் உரிமைகள் அமைப்பின் பிரமுகர் ஒருவர் என்னிடம் தொடர்புகொண்டு, கடத்தப்பட்ட சிறுவர்கள் அரச ராணுவத்தாலும் கருணா குழுவாலும் கடத்தப்பட்டிருக்கும்பொழுது, இதனைப் புலிகள் செய்தார்கள் என்று அறிக்கை வெளியிடுவது எப்படிச் சாத்தியம் என்று வினவினார். அரசு நேரடியாக கடத்தல்களில் ஈடுபடவில்லையென்று நான் கூறினாலும் கூட, இவ்வளவு பெரிய தவறை இந்தவறிக்கை எப்படி சுமந்து வந்தது என்று எண்ணுகிறேன். ஆனால், உண்மையென்னவெனில், அரசின் ஆதரவுடனேயே கருணா துணைராணுவக் குழு இக்கடத்தல்களைச் செய்துவருகிறது என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். புலிகளுடனான போருக்காகவே இவர்கள் தமிழ்ச் சிறார்களைக் கடத்திச்சென்று பயிற்றுவிக்கிறார்கள் என்பது வெளிப்படையானது. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட செய்திக்குறிப்பில் இங்குநடக்கும் கடத்தல்களும் காணாமற்போதல்களும் பற்றி அமெரிக்கா நன்கு அறிந்தே வைத்திருக்கிறதென்பது தெளிவாகிறது. அத்துடன், நாட்டின் ஜனாதிபதி மகிந்த மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ஆகியோருக்கும் இக்கடத்தல்கள் பற்றி தெளிவாகவே தெரிந்திருக்கிறது. கருணாவினால் கட்டாய ராணுவப் பயிற்சிக்காக கடத்தப்பட்டு போரில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள் "ஜனாதிதிபதியுடனும், பாதுகாப்புச் செயலாளருடனுமான சந்திப்புக்களில் எமது இரு நாடுகளுக்குமிடையேயான பரஸ்பர ராணுவ உதவிகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கு சிறுவர்களை துணைராணுவப் படையில் இணைக்கும் விடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என்று தூதுவர் கோரியிருந்தார். அதன் போது பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், துணைராணுவக் குழுக்களை நிராயுதபாணிகளாக்கும் நடவடிக்கையினைத் தாம் ஆரம்பித்திருப்பதாகவும், அதன் ஒரு கட்டமாக துணைராணுவப் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சிறுவர்களை விலக்குவதும் அடங்கும்" என்றும் கூறியிருந்தார். மே மாதம் 26 ஆம் திகதி, 2009 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த கேபிள் செய்தியின் காலப்பகுதியில் தூதுவராக ரொபேட் ஓ பிளேக்கே இருந்தார். அமெரிக்காவுக்கு, சிறுவர்களை படையில் சேர்த்து போரில் ஈடுபடுத்திவருவது இலங்கை அரசும், துணைராணுவக் குழுக்களும்தான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் யுனிசெப் அமைப்பு புலிகளை மட்டும் குற்றஞ்சாட்டுவது ஏன்? அவர்கள்கூட அரசாங்கத்தின் பிரச்சார இயந்திரமாக மாறிவிட்டனரா? கோத்தாபய அவர்கள் ஐலண்ட் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் "100 ஆட்டிலெறிக் குண்டுகளால் செய்யமுடியாததை ஒரு மூளைச்சலவை செய்யப்பட்ட சிறுவர் தற்கொலைப் போராளியைக் கொண்டு பிரபாகரனால் செய்யமுடிந்தது. இன்று சிறுவர்களை நாம் படையில் சேர்க்கிறோம் என்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள் அன்றே பிரபாகரனுக்கெதிராக நடவடிக்கைகளில் இறங்கியிருந்தால் அவர்களால் ஆயுதங்களைத் தருவித்தோ, கட்டமைப்புக்களை உருவாக்கியோ போராடியிருக்க முடியாது. அவர்களின் சொத்துக்களை, கட்டமைப்பினை, வங்கிக் கணக்குகளை முடக்கியிருந்தால், அவர்களாகவே போராட்டத்தைக் கைவிட்டு, சிறுவர்களை இணைப்பதையும் நிறுத்தியிருப்பார்கள். ஆகவே, இன்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், யுனிசெப்பை விமர்சிக்காமல், புலிகளுக்கெதிரான அதன் விமர்சனத்தை ஆதரிக்க வேண்டும்" என்று கூறினார். பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவை ஐலண்ட் நாளிதழுக்கு வழங்கிய செய்தியில் இறுதிப்போரில் நடந்த மனிதவுரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் பற்றிப் பேசுபவர்கள், சிறுவர்களை படையில் சேர்த்தது பற்றிப் பேசவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். அப்படியானால், புலிகளால் சேர்க்கப்பட்ட சிறுவர்கள் மட்டுமல்லாமல் அரசாலும், துணைராணுவக் குழுக்களாலும் சேர்க்கப்பட்ட சிறுவர்கள் பற்றியும் பேசப்படுவதுதான் நியாயமாக இருக்கும்.
  22. துரோகத்தின் நாட்காட்டி : பாகம் 2 கொழும்பு டெலிகிராப் எனும் இணையத் தளத்தில் வெளிவந்த இனத்துரோகி கருணாவினதும், அவனது சகாக்களினதும் அக்கிரமங்கள் தொடர்பான செய்திகளின் தொகுப்பு. தொடரும்..... https://www.colombotelegraph.com/index.php/page/5/?s=vinayagamoorthy
  23. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, ஆவணி 2020 இனைக்கொலையாளிகளினதும், துணைராணுவக் கொலைக்குழுக்களினதும் அச்சுருத்தலினையும் மீறி மட்டக்களப்பில் இடம்பெற்ற காணமலாக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டம் சர்வதேச காணமலாக்கப்பட்டவர்களுக்கான நாளில், வடக்கிலும் கிழக்கிலும் தமது உறவுகளை இனக்கொலையாளிகளிடமும், இனத்துரோகக் கொலைகாரர்களிடமும் பறிகொடுத்த பெற்றோர்களும் உறவுகளும் இனக்கொலையாளிகளினதும், துணைராணுவக் கொலைப்படையினரினதும் அச்சுருத்தலினையும் மீறி இம்மாதம் 30 ஆம் திகதி எழுச்சிகரமாக தமிழர் தாயகத்தில் முன்னெடுத்திருக்கிறார்கள். கொரோனா தொற்றினைத் தடுக்கிறோம் என்கிற போர்வையில் பேரினவாதிகளின் காவல்த்துறையும், நீதித்துறையும் சேர்ந்து இட்ட முட்டுக்கட்டைகளை உதாசீனம் செய்த காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த எழுச்சியின் மூலம் இனக்கொலையாளிகளுக்கும் துணைராணுவக் கொலைப்படையினருக்கும் தெளிவான செய்தியொன்றினைச் சொல்லியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளையான் மற்றும் ராணுவப் புலநாய்வுத்துறையினரால் கடத்திக் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் தலைவியான அமலநாயகி அமல்ராஜ் அவர்களை காவல்த்துறையும், நீதித்துறையும் 1000 பேருக்கு மேல் மக்களை ஒன்றுதிரட்டியதாக குற்றஞ்சுமத்தியிருக்கின்றன. அத்துடன், இந்த போராட்டத்தினை தாம் தடுக்க முயல்வதன் நோக்கம் புலிகள் மீளவும் ஒருங்கிணைவதைத் தடுக்கவே என்று மட்டக்களப்பு மாவட்ட காவல்த்துறை தனது முறையீட்டில் தெரிவித்திருக்கிறது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவனயீர்ப்பு நிகழ்வினை இனக்கொலையாளிகளும், இனத் துரோகிகளின் கொலைக்குழுக்களும் தடுக்க முனைந்ததையடுத்து இப்போராட்டத்திற்கான பொதுமக்களினதும், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளினதும் ஆதரவு பெருகியிருக்கிறதென்பது குறிப்பிடத் தக்கது. இப்போராட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பொலீஸாரின் உத்தரவினையும் மீறி இளைஞர்களுக்குத் தலைமைதாங்கிச் சென்றதாக பொலீஸார் கூறுகின்றனர். இனக்கொலையாளிகளின் பணத்திற்காகக் கட்சிதாவி இன்றுவரை அபிவிருத்தி, வேலைவாய்ப்பு எனும் போர்வையில் இனத்திற்கெதிராகச் செயற்பட்டு வரும் வியாழேந்திரன் தலைமையில் பேரணியொன்றினை மட்டக்களப்பில் நடத்திய இனக்கொலையாளிகள், தமது பேரணியினை மட்டும் கொரோனாவினைக் காட்டி தடுக்க நினைப்பது எங்கணம் என்று சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். இதேவேளை, காணமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களுக்கு அருகில் பவனிவந்த இளைஞர்கள் பொலீஸாரை எச்சரித்ததாகவும், தாய்மாரைத் தடுக்கவிடமாட்டோம் என்று பொலீஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கருணா மற்றும் பிள்ளையானினால் கடத்திச்சென்று கொல்லப்பட்ட தமது பிள்ளைகளுக்கான நீதியினைப் பெற்றுத்தரவேண்டும் என்று சர்வதேசத்திடம் கோரிக்கையொன்றினை தமது அமைப்பு முன்வைத்திருப்பதாக அமலநாயகி அன்று மாலை இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். ஆக்கிரமிப்புப் போரின் இறுதிக்கட்டத்தில் ராணுவத்திடம் சரணடைந்த தமது பிள்ளைகளையும், பின்னர் கொலைக்குழுக்களைக் கொண்டு கடத்தப்பட்ட பிள்ளைகளையும் அரசு கொன்றிருப்பது அப்பட்டமான இனக்கொலையென்று அவர் மேலும் கூறினார். "2009 இல் பாதுகாப்புச் செயலாளராக இருந்த இன்றைய ஜனாதிபதி அன்று நடந்த அக்கிரமங்களைப் பற்றிய உண்மைகளை வெளியிடத் தயங்குவதேன்?" என்றும் அவர் கேள்வியெழுப்பினார். பேரினவாதத்தின் நீதித்துறையின் மீது முற்றாக நம்பிக்கையிழந்த தாய்மார்கள் சர்வதேசத்திடம் மட்டுமே தமது பிள்ளைகளுக்கான நீதியினைக் கோருவதாக அவர் கூறினார். 2009 முதல் இன்றுவரை காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடும் போராட்டத்தில் இதுவரையில் குறைந்தது 72 தாய்மார்கள் இறந்துபோயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வடக்கிலும் இம்மாதிரியான போராட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
  24. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, ஆவணி 2020 கிழக்கில் பலமிழக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளும், இனக்கொலையாளிகளை ஆதரித்தும், முஸ்லீம்களை தீவிரமாக எதிர்த்தும் பிரச்சாரம் செய்யும் கருணாவும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 ஆசனங்களில் ஆறு ஆசனங்களை வட மாகாணத்தில் பெற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியே தேர்தலில் களமிறங்கும் இரு தமிழ்த் தேசியக் கட்சிகளான தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் வடமாகாணத்தில் குறைந்தது 8 ஆசனங்களை தேசியத்திற்கு ஆதரவான கட்சிகள் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சனத்தொகையில் அதிகமுள்ள கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களில் மூன்று இடங்களை மட்டுமே பெற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மட்டக்களப்பில் இரு ஆசனங்களையும், திருகோணமலையில் ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளும் கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளான கூட்டமைப்பு, காங்கிரஸ், தேசியக் கூட்டணி ஆகியவற்றின் பலவீனத்தினைப் பயன்படுத்தியும், முஸ்லீம்களுக்கெதிரான அதிதீவிர இனவாதத்தினைக் கக்கியும் இனக்கொலையாளிகளின் ஏவலாளியும், ராணுவப் புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் கொலைக்குழுவின் தலைவரான கருணா இனக்கொலையாளிகளின் சார்பாக இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ்த் தேசியத்திற்கெதிராகவும், முஸ்லீம்கள் மீதான துவேஷ அரசியலினை முன்னெடுத்தும் வரும் கருணா இத்தேர்தலில் வெற்றிபெறுவாராகவிருந்தால் தமிழர்களின் உரிமைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்திச் செய்யப்பட்டுவரும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு பாரிய பின்னடைவினை இது உருவாக்கும் என்று கிழக்கின் அரசியல் செயற்ப்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இன்னொரு கொலைக்குவின் தலைவனான பிள்ளையானின் கட்சி சுமார் 68,000 வாக்குகளை இதேர்தலில் பெற்றிருப்பதோடு, தேசியக் கூட்டமைப்புப் பெற்ற 79,000 வாக்குகளுக்கு மிக அண்மையாக வந்திருப்பதும் குறிப்பிடத் தக்கது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசியக் கூட்டமைப்பு இரு ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நிலையில், துணை ராணுவக் கொலைக்குழுக்களின் ஊடாக ஒரு ஆசனத்தை இனக்கொலையாளிகள் பெற்றிருப்பதன் மூலம் மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குச் சவால் விடும் நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது. இனக்கொலையாளிகளின் வழிநடத்தலில் செயற்பட்டு வரும் துணைராணுவக் கொலைப்படை ஆயுததாரி பிள்ளையானும், மகிந்தவின் கட்சியில் நேரடியாகப் போட்டியிட்ட கொலைப்படை ஆயுததாரி கருணாவும் செய்துவரும் "அபிவிருத்தியும், சந்தர்ப்பவாதமும்" எனும் அரசியலின் மூலம் தமிழர் தாயகத்தில் உரிமைகளுக்கான அரசியலைனை சிங்களப் பேரினவாதம் முற்றாக அழித்துவிடக் கங்கணம் கட்டியிருக்கிறதென்று கிழக்கின் அரசியல் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். தமிழ்த் தேசியத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கயீனத்தினை ஏற்படுத்தும் அரசியலை முன்னெடுத்த கூட்டமைப்பு, காங்கிரஸ், மக்கள் கூட்டணி ஆகிய தேசியம் சார்ந்த கட்சிகளே இனக்கொலையாளிகளின் ஏவலாளிகள் மட்டக்களப்பில் வேரூன்றுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள் என்றும் அவர்கள் மேலும் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, சிங்களப் பேரினவாதிகளின் ஏவலாளிகள் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் தலா ஒரு ஆசனத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது. இது இவ்வாறிருக்க தமிழ்பேசும் முஸ்லீம்கள் சஜித்தின் கட்சிக்கே பெருமளவில் வாக்களித்திருப்பதாகத் தெரியவருகிறது. புலிகள் இயக்கத்தின் முன்னாள்ப் போராளியொருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இறுதிநேரத்தில் வடமாகாணத்தின் துணைராணுவக் கொலைக்குழுவான டக்கிளஸின் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு இனக்கொலையாளிகள் சார்பாக ஒரு ஆசனத்தினைப் பெற்றிருக்கிறார். வன்னியில் இனக்கொலையாளிகள் பெற்றுக்கொள்ளும் முதலாவது பாராளுமன்ற ஆசனம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது. இனக்கொலையாளிகளும், போர்க்குற்றவாளிகளுமான ராஜபக்ஷ சகோதரர்களின் கட்சியே இத்தேர்தலில் அமோக வெற்றியீட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  25. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, ஆவணி 2020 கடற்படையினருடன் இணைந்து கிழக்கில் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை அழித்துவரும் பிள்ளையான் துணைராணுவக் கொலைக்குழு கரையிலிருந்து 10 மைல்களுக்குள் பாரிய இழுவைப்படகுகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபடக் கூடாதெனும் சட்டத்தினையும் மீறி கடற்படையின் ஒத்துழைப்புடன் கிழக்கின் கடல்வளத்தினை நாசமாக்கிவருவதாக பிள்ளையான் துணை ராணுவக் கொலைக்குழு ஆயுததாரிகள் மீது கிழக்கின் மீனவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். பிள்ளையான் கொலைக்குழுவினால் பயன்படுத்தப்படும் பாரிய இழுவைப்படகுகளின் சுருக்கு வலையில் பெருமளவு மீன்குஞ்சுகள் உட்பட அழிந்துபோகும் நிலையிலிருக்கும் பல மீன்களும் அகப்பட்டுவருவதால் இது கடல்வளத்தினை நீண்டகால அடிப்படையில் அழித்துவருகிறதென்றும், சில மீனினங்கள் முற்றாகவே அழியும் நிலையினை இந்த சட்டத்திற்கு முரணான மீன்பிடிமுறை உருவாக்கிவிட்டுள்ளதாகவும், கிழக்கின் கடல் வளத்தின் சமநிலையினை இது வெகுவாகப் பாதித்துவருவதாகவும் சமூகவியலாளர்கள் கூறுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் அமைக்கப்பட்டிருக்கும் "காஷியப்ப" எனும் சிங்கள ஆக்கிரமிப்புக் கடற்படை முகாமிலிருந்து இயங்கிவரும் படையினர் பிள்ளையான் கொலைப்படையினரும், தென்னிலங்கை மீனவர்களும் பாரிய இழுவைப் படகுகளைப் பாவித்து கிழக்கின் கரையினை அண்டிய பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவதை ஊக்குவித்து வருகின்றனர். அத்துடன் உள்ளூர் மீனவர்களால் பிடிக்கப்படும் மீன்களுக்கு கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய்களை கடற்படைக்குக் கப்பமாக வழங்கவேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றனர். வடக்கில் இன்னொரு கொலைப்படையான டக்கிளஸின் ஈ பி டி பீ ஆயுததாரிகள் வடபகுதி மீனவர்களிடம் பறிக்கும் பணத்திற்கு நிகராக கிழக்கில் பிள்ளையான் கொலைக்குழுவும் பணப்பறிப்பில் ஈடுபட்டுவருவதுடன் தமது பாரிய படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பதன் மூலம் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாரியளவில் அழித்துவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட கடற்பகுதியில் தென்னிலங்கை மீனவர்களையும், முஸ்லீம் மீனவர்களையும் இழுவைப்படகுகளைப் பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவதை ஊக்குவித்துவரும் கடற்படையினர், அதேவேளை பிள்ளையான் கொலைக்குழுவினரைப் பாவித்து தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை முடக்கிவருகின்றனர் என்று பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஆக்கிரமிப்புப் படைகளுடன் இணைந்து இனத்துரோகிகள் செய்துவரும் இந்த சூழல் நாசகார செயலினால் குறைந்தது 1000 தமிழ் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தினை இழக்க நேரிட்டுள்ளதோடு, அவர்களின் குடும்பங்கள் இப்பகுதியிலிருந்து அகன்றுசெல்லும் நிலையினையும் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.