நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டால் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கடந்த 2 நாட்களாக பாரதீய ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய பாரதீய ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் எல்.கே.அத்வானி தலைமையில் நடந்தது. இதில் வெங்கையா நாயுடு உள்பட அனைத்து எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகக் கோரி போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பிரச்சினையில் பிரதமர் ராஜினாமா செய்யாத வரை எந்த விவாதத்துக்கும் இடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் மூத்த தலைவர் வெங்கைய நாயுடு நிருபர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசாங்கம் இந்த நாட்டின் ஊழல் கறை படிந்த அரசாங்கமாக செயல்படுகிறது. நிலக்கரி சுரங்க முறைகேட்டை பாராளுமன்றத்தில் தொடர்ந்து கிளப்புவோம். மக்களிடம் நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. சமூக விரோதிகளை தண்டிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை. ஆனால் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் ஊழல்வாதிகளை பாதுகாக்க முயற்சி செய்கிறது என்றார்.
எல்.கே.அத்வானி கூறும் போது, இந்த அரசு நாட்டுக்கு களங்கமாகவும், பாரமாக அமைந்து இருக்கிறது. எனவே இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். நிலக்கரி முறைகேடு பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.
எனவே மம்தா பானர்ஜியை பாரதீய ஜனதா தலைவர்கள் சந்தித்து ஆதரவை கோரினர். இந்த விஷயத்தில் பிரதமர் ராஜினாமா செய்ய கோருவதற்கு ஐக்கிய ஜனதாதளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம் என்று கூறியுள்ளது
மாலைமலர்