Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. “போராடி வென்றவள்" விதை செடியாக வளர மண்ணுடன் ஒரு போராட்டம் செடி நிலைத்து நிற்க வானிலையோடு ஒரு போராட்டம். பூ மலர இதழ்களோடு ஒரு போராட்டம் நதி ஓட நிலத்தோடு ஒரு போராட்டம் கோழிக்குஞ்சு வெளியேவர முட்டைஓட்டோடு ஒரு போராட்டம். மீன்கள் உயிர்வாழ அலைகளோடு ஒரு போராட்டம். அருளம்மா மட்டும் இதற்கு விதிவிலக்காக ? ஆமாம், அருளம்மாவின் வாழ்க்கை, போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பின்னணியில், ஒரு போர்க்களமாகவே இருந்தது. முல்லைத்தீவின் ஒரு அமைதியான கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவள், அது பின்னாளில் ஒரு கலவரப் பூமியாக மாறும் என்று, என்றும் நினைக்கவில்லை. அர்ப்பணிப்புள்ள ஒரு மனைவியாகவும் மூன்று சிறு பிள்ளைகளின் அன்பான தாயாகவும் அன்று இருந்தாள். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கைச் சூழ்ந்த வன்னிப் போரின் இறுதிக் கட்டம் அவளது வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியமைத்தது. அவளது இளம் விவசாயிக் கணவர், போரின் பயங்கரங்களுக்கு மத்தியில் காணாமல் போனார். அவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்று அறியும் சூழ்நிலை அன்று இருக்கவில்லை. எங்கும் குண்டு சத்தங்களும், எறிகணை வெடிச்சத்தங்களும் கேட்டுக்கொண்டு இருந்தன. அதிரடிப் படையினரின் மோசமான கைதுகள், அடக்குமுறைகள், காரணமின்றி சுட்டுக்கொல்லுதல் போன்றவை நிகழ்ந்த காலப்பகுதி அது. அங்கு முறையிடுவதற்குக்கூட ஒரு நீதியான முறையான சூழ்நிலை இருக்கவில்லை. என்றாலும் தான் 'போராடி வெல்வேன்' என்று, அருளம்மா தனக்குள் ஒரு மனவலிமையை, உறுதியை ஏற்படுத்தினாள். மூன்று இளம் குழந்தைகளை முறையாக வளர்க்கவும், தனது வாழ்க்கையை மீண்டும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியாக கட்டியெழுப்புவதற்கான கடினமான சவாலை சமாளிக்கவும் அதை எதிர்த்துப் போராடவும் துணிந்தாள். முதல் கட்டமாக, நெல் வயல்களில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து, கொளுத்தும் வெயிலையும், உடல் களைக்கும் கடின உழைப்பையும் தாங்கிக் கொண்டு, தன் பிள்ளைகளுக்கு உணவும், கல்வியும் கிடைப்பதை உறுதி செய்தாள். அதேவேளை, இரண்டாவது நடவடிக்கையாக, அவள் அகதிகள் முகாம்கள், கோவில்கள் மற்றும் எஞ்சியிருக்கும் சில அரசாங்க அலுவலகங்களைத் தன் கணவனின் அடையாளத்திற்காகத் தேடுவதுடன், இராணுவம் மற்றும் காவல் நிலையங்களிலும் விசாரித்தாள். காமரம் முரலும் பாடல், கள், எனக் கனிந்த இன் சொல்; தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும் அணங்கு ஆம்" என்னத் தாமரை இருந்த தையல், சேடி ஆம் தரமும் அல்லள்; யாம் உரை வழங்கும் என்பது ஏழைமைப்பாலது அன்றோ? காமரம் என்ற இசை தொனிக்கும், கள்ளைப் போல இனிமையான சொற்கள், தேன் நிறைந்து இருக்கும் மலர்களைச் சூடிய கூந்தல், தேவ லோக பெண்களும் போற்றும் தாமரை மலரில் இருக்கும் அந்தத் திருமகளும், அவளுக்குப் பணிப் பெண்ணாகக் கூட ஆகும் தரம் இல்லை என்று சொல்லும் படி, அருளம்மாவின் அழகு இருந்தது. அதிலும் அவள், இனிமையாக பேசுவது ஒரு அழகு. ஒரு வசீகரம். அவளின் உடல் அழகை விட, அவளின் அந்த பேச்சு அழகு எல்லோரையும், குறிப்பாக ஆண்களை, கட்டிப் போடும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவளும் அதற்குத் விதிவிலக்கல்ல. அதைவிட, அவளின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போலவும் மற்றும் பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் அடிக்கடி துள்ளுவதும், கரிய விழிகளில் புருவம் வில்லைப்போல் வளைந்திருப்பதும் எவரையும் அவளை திரும்பி பார்க்க வைக்கும். நாளடைவில் அவளுடைய அந்த பேரழகும் இளமையும் ஒரு நல்வாக்காகவும் சாபமாகவும் மாறியது. முள்ளிவாய்க்கால் கடலில், அலை படகை அடித்து செல்வது போல் காற்றில் அசையும் அவளுடைய கருமையான, பளபளப்பான கூந்தல், அவளின் உள் வலிமையை, சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கும் பெரிய, வெளிப்படையான கண்கள், அதேவேளை எவரையும் சிக்கவைக்கும் வலையையும், கொன்று குவிக்கும் வாளையும் நினைவூட்டிக்கொண்டும் இருந்தது. அவளுடைய ஒவ்வொரு நடத்தையும் அவளுடைய குடும்பத்தை பாதுகாக்க, உறுதியான ஒரு பெண்ணின் கண்ணியத்தை சுமந்து கொண்டு இருந்தது. போரினால் சீர்குலைந்த ஒரு சமூகத்தில், அவளது பாதிப்பை சுரண்ட முயன்ற ஆண்களிடமிருந்து அவளுடைய அழகு தேவையற்ற கவனத்தையும் ஈர்த்து அவளுக்கு பல தொல்லைகளையும் கொடுத்தது. ஆனால் அவள், தனது ஒவ்வொரு முன்னேற்றத்திலும், உழைப்பிலும், தேடலிலும், ஒரு வெற்றியை நோக்கி போராடிக் கொண்டே இருந்தாள். மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக் கென்றும் மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகை யென்றும் கன்னற்கட்டி யென்றுஞ்சீனிக் கற்கண் டென்றும் பூவையென்றும் பாவையென்றும் பொன்னே யென்றும் பூந்திருவே என்றுமென்றன் பொக்கிஷ மென்றும் கோவையென்றுங் கோதையென்றுங் கோகில மென்றும் மங்கையர் ஒயில்கண்டே வலை வீசும் ஆண்களின் பொல்லாத ஆசை சொல்லாத துன்பம் தூவும் [முதல் ஆறு வரியும் பாம்பாட்டி சித்தருடையது] மின்னலை போன்ற மேகமும், ஒளி பொருந்திய கண்களை உடையவளே, மெல்லிடை உடையாளே, மேனகயை போல் அழகு நிறைந்தவளே, சீனி சர்க்கரை கட்டியே என்றும் பூவை போன்றவளே, அழகு உருவம் உடைய பொம்மையை போன்றவளே, தங்கமே, பொக்கிஷமே என்றும், கோவைப்பழம் போன்றவளே, முத்தே என்றும் மங்கையின் அழகில் கவர்ந்திழுக்கப்பட்ட ஆண்களின் பொல்லாத ஆசை சொல்லாத துன்பம் கொடுக்கும் என்பதை அருளம்மா நன்றாகவே அறிவாள். அவளுக்கு முதல் சோதனை ஒரு பணக்கார நில உரிமையாளர் இடமிருந்து வந்தது. அவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியைக் தன்னகத்தே கொண்டிருந்தார். அவர் தனது வீட்டில் மிகவும் வசதியான வேலையை அவளுக்கு வழங்கி, அவளுடைய குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை வழங்குவதாக உறுதியளித்தார். அவரது வார்த்தைகள் தேனாய் இருந்தன, ஆனால் அவரது உள்நோக்கங்கள் தெளிவாக இருந்தன. அருளம்மாவின் இதயம் கோபத்தாலும் வெறுப்பாலும் எரிந்தது. அவள் கவனமாக அவனது நடவடிக்கைகளை நிராகரித்தாள். அதனால், அவளுடைய வேலைக்கு ஆபத்து என்பதை நன்கு அறிந்திருந்தாள். ஆனால் அவளது மானம் அவளுக்கு முக்கியமாக இருந்தது. அது அவளின் முதல் போராட்டம். இரண்டாவது போராட்டம் விசாரணையின் போது வந்தது. அந்த பிராந்தியத்தில் அதிகாரம் செலுத்திய சில நபர்களில் ஒருவரான அரசாங்க அதிகாரியிடமிருந்து அது வந்தது. போரின் போது காணாமல் போனவர்கள் பற்றிய இரகசிய தகவல்களை தேடி அறிந்து, அவன் அவளது கணவரைக் கண்டுபிடிக்க அல்லது என்ன நடந்தது என்பதை அறிய உதவ முன்வந்தான். பதிலுக்கு, அவன் அவளுடைய தோழமையைக் கோரினான். தன் கணவனின் தலைவிதியையும், தன் தார்மீக திசைகாட்டியையும் அறிந்து கொள்ள வேண்டிய அவலத்திற்கு இடையே, அருளம்மா திண்டாடினாள். அவள் மீண்டும் தன்மானத்தையே முதன்மைப் படுத்தி, அதிகாரியின் கோரிக்கையை நிராகரித்தாள். மூன்றாவது போராட்டம், மிகவும் நயவஞ்சகமான சவாலாக, ஒரு பயண வணிகரின் வடிவத்தில் வந்தது. மற்றவர்களைப் போலல்லாமல், அவன் அவளை அன்புடனும் மரியாதையுடனும் அணுகினான். அவளுடைய இதுவரையான போராட்டங்களைக் கேட்டு ஒரு அனுதாபத்தைக் காட்டினான். என்றாலும் காலப்போக்கில், அவன் அவளிடம் திருமணத்தை முன்மொழியத் தொடங்கினான். அவளுடைய குழந்தைகளுக்கு ஒரு தந்தை தேவை என்றும் அவள் தன்னுடனான தோழமைக்கு தகுதியானவள் என்றும் வாதிட்டான். முதல் முறையாக அருளம்மா தயங்கினாள். அவனது வார்த்தைகள் கவர்ச்சியாக அதேநேரம் நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருந்தன, அவளது தனிமை பெரும் சுமையாக இருந்தது. ஆனால், காணாமல் போன கணவனுக்கு அவளது விசுவாசமும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான அவளது அர்ப்பணிப்பும் இறுதியில் அவளுடைய முடிவை வழிநடத்தியது. அவள் மீண்டும், தான் பிள்ளைகளுடன் எப்படியும் 'போராடி வெல்வேன்' என்ற மன உறுதியுடன் நிராகரித்தாள். வருடங்கள் கடந்தன, அருளம்மாவின் பிள்ளைகள் திறமையான இளைஞர்களாக வளர்ந்தார்கள். அவளது மூத்த மகன் ஆசிரியராகவும், மகள் செவிலியராகவும், இளையவர் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சமூக சேவகியாகவும் ஆனார்கள். அருளம்மாவின் தியாகங்கள் பலனளித்தன, அவர்களின் வெற்றியில் அவள் ஆறுதல் கண்டாள் ஒரு 'போராடி வென்றவள்' என்ற நம்பிக்கையில். இதற்க்கிடையில், இலங்கை அரசும் 2024 இறுதியில் மாறியது. அவளது மற்றும் காணாமல் போனவர்களின் கோரிக்கைகளை தாம் நீதியின் அடிப்படையில் ஆராய்வதாகவும் கூறியது. என்றாலும், அது நிறைவேறும் மட்டும், அவள் நம்ப மறுத்தாள். அது வரலாற்றின் அனுபவமாகும். அவளது போராட்டங்கள் வெற்றிகளுடன் நகர்ந்து கொண்டே இருந்தன. இந்த இறுதி போராட்டமும், குறைந்தது அரசின் பார்வைக்கு முறையாக வந்ததும் ஒரு வெற்றியே! கணவர் இனி வருவார் என்று அவள் எண்ணவில்லை. ஆனால், அவருக்கு என்ன நடந்தது, இதற்க்கு யார் காரணம் ?, இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கைகளை அரசு எடுக்கும் மற்றும் இதற்கான நீதி என்ன? இதைத்தான் தான் அவள் எதிர்பார்க்கிறாள். "போராடி வென்றவள்" என்ற உணர்வுடன் தன் மண்ணின் வாழ்வை மகிழ்வாக முடிக்க! ஆழமான போராலும் துயரத்தின் புயல்களாலும் அவளுடைய உறுதியான உள்ளம் அழமறுத்தது அருளம்மாவின் கதை வழிகாட்டும் விண்மீன் ஆசையும் உறுதியுமிருந்தால் போராட்டம் வெற்றியே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  2. "மௌனம் சம்மதமா?" இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பகலவன் என்ற இளைஞன், கொழும்பின் மையப் பகுதியில், வணிக நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில், மிகவும் சுறுசுறுப்பாக பணிபுரிந்தான். அவனது நாட்கள் கூட்டங்கள், அறிமுகப்படுத்துகை [விளக்கக் காட்சிகள் / presentations] மற்றும் நகர வாழ்க்கையின் சலசலப்பு ஆகியவற்றால் நிரம்பி வழிந்தன. அப்படியான மும்முரமான ஒரு வேலையான நாளின் போதுதான், சமீபத்தில் அந்த நிறுவனத்தில் இணைந்து இருந்த பயிற்சி ஊழியரான மட்டக்களப்பைச் சேர்ந்த ஆழினி என்ற இளம் பெண் சிறிது நேரத்தில் தனது அலுவல்கள் பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ள அவனை சந்திப்பாள் என்ற அறிவிப்பு அவனுக்கு வந்தது. அவன் அந்த மின்னஞ்சல் [ஈ-மெயிலில்] குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணின் பெயரை மனதில் பெரிதாக கவனிக்காமல் மேலோட்டமாக முதலில் மெயிலை படித்திருந்தான். என்றாலும் ஒரு ஆவலால் மீண்டும் வரப்போகும் பெண்ணின் பெயரையும் மற்றும் விபரங்களையும் பார்ப்பதற்காக மின்னஞ்சலை மறுமுறை படிக்க தொடங்கினான். அதே கணத்தில், அவளும் "மன்னிக்கவும் ஐயா" என்று, அவனை சந்திக்க உள்ளே வந்தாள். அவளின் மெல்லிசை போன்ற இனிய குரல் கேட்டு திரும்பியவன், ஒரு கணம் அதிர்ச்சியில் அப்படியே உறைந்தான். "நான் ஆழினி, உங்கள் குழுவில் பயிற்சியாளராக இன்று பதவியேற்றேன்" என்று கூறி தன்னை அறிமுகப் படுத்தினாள். பகலவன் மௌனமாக அவளை பார்த்தபடியே இருந்தான். பின் தன்னை சமாளித்துக்கொண்டு "ஆமாம், எனக்குத் தெரியும் ஆழினி, அன்புடன் நாம் எல்லோரும் வரவேற்கிறோம், ஆனால் நீ உன் முழு நேரத்தையும் அறிவையும் எம் வணிக நிறுவனத்தைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்" என்ற அறிவுரையுடன் அனறைய முதல் சந்திப்பு நிறைவு பெற்றது. என்றாலும் அவளின் வருகை அவன் கவனத்தை ஈர்த்தது. அவள் அதன் பிறகு தன்னை அங்கு இருந்த மற்ற ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்திய போது அவளது பேச்சு திறனையும் வேலையில் அவளது நம்பிக்கையையும் அவனால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த நிமிடத்திலிருந்து, பகலவன் தன்னால் முடிந்த போதெல்லாம் ஆழினியின் பார்வையைத் தன்பக்கம் திருடத் தொடங்கினான். காதல் ஒன்றை மனது உச்சரித்த மாத்திரத்தில், இதயத்தின் உள்ளுக்குள் உயிர் பூக்கச் செய்யும் என்ற பலர் சொல்லி கேட்டதை அன்றே, அவளை பார்த்தபின் அவன் உணர்ந்தான்! ஏதேதோ எல்லாம் அவன் வாய் மௌனமாக முணுமுணுத்தது. நாட்கள் வாரங்களாக மாற, பகலவன் மற்றும் ஆழினியின் தொழில் சம்பந்தமாக தொடர்புகள் சாதாரண உரையாடல்களாக, முதலாளி மற்றும் ஊழியர் நிலையில் உருவெடுத்தன. என்றாலும் அவர்கள் இருவரும் தங்களுக்குள் எதோ ஒரு ஈர்ப்பு மற்றும் பொதுவான ஆர்வங்கள் இருப்பதை உணர்ந்தனர். அதை கண்டும் காணாததுமாக சிலவேளை நகைச்சுவைகளைப் பரிமாறிக் கொண்டனர், அவர்களின் நடத்தைகள் படிப்படியாக வலுவான நட்பை இருவருக்கும் இடையில் உருவாக்கியது. ஆழினியின் நெருக்கம் மற்றும் அவளின் புத்திசாலித்தனம் ஆகியவற்றால் பகலவன் தன்னை அறியாமலே அவள் மேல் ஈர்க்கப்பட்டான், அவளிடம் ஏதோ ஒரு சிறப்பு, கவர்ச்சி இருக்கிறது என்ற உணர்வை அவனால் அசைக்க முடியவில்லை. "தேவதையை நான் பார்த்தேன் சொர்க்கம் அவளில் கண்டேன் இடையோடு இசைந்தாடும் குழலோடு விளையாடி அவள் இதழோரம் தேன்குடிக்க துடித்தேன்!" "விழியோடு வளைந்தாடும் புருவத்திலும் மார்போடு கோலமிடும் மாலையிலும் காதோடு கவி பாடும் தோட்டிலும் மணிக்கட்டில் முத்தமிடும் வளையலிலும் என் இதயத்தை தொலைத்தேன்!" மீண்டும் ஒரு நாள் அலுவலக உணவு விடுதி ஒன்றில் இருவரும் சந்தித்தனர். பகலவன், ஆழினி இருவரும் எதிரெதிரே அமர்ந்து, அலுவலகத்தின் சலசலப்புக்கு மத்தியில் மதிய உணவு இடைவேளையை சாப்பாட்டிலும் கதைப்பதிலும் பொழுது போக்கினார்கள். பகலவன்: "அப்படியானால், ஆழினி, இன்று இரவு உணவிற்கு அந்த புதிய இத்தாலிய பீட்சா & பாஸ்தா [Pizza & Pasta] உணவகத்துக்கு போவது பற்றி நீ என்ன நினைக்கிறாய்? நகரத்தில் சிறந்த பாஸ்தா அவர்களிடம் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்." ஆழினி, ஒரு புன்னகையை மிளிரச் செய்தாள்: "அங்கு மக்கள் தொகை கூட, ஆரவாரமாக இருக்கும், பகலவன், ஆனால் நம் வழக்கமான அந்த சின்ன உணவகத்துக்கே போனால் என்ன? அங்கே எமக்கு சுதந்திரமான சூழ்நிலை உண்டு. மற்றவர்களின் பார்வையும் இடைஞ்சலும் இருக்காது, அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும், உங்களுடன் தனிமையில் ரசித்து பேச, சாப்பிட" பகலவன், சற்று ஏமாற்றத்துடன்: "நிச்சயமாக, ஆழினி. உன் விருப்பமே என் விருப்பம்." அவர்கள் உரையாடலைத் தொடரும் போது, ஆழினி தன்னிடம் நெருங்கி சாய்ந்த நுட்பமான விதத்தை பகலவன் கவனித்தான். அவள் கண்கள் குறும்புகளால் மின்னின. என்றாலும் அவளிடம் ஒரு காதலின், நட்பின் நம்பிக்கையின் அடையாளத்தைக் அவனால் உணர முடியவில்லை, ஆனாலும் அவளுடைய கவர்ச்சிகரமான, காதல் உணர்வுகளைத் தூண்டும் செயல்களை தவறாகப் புரிந்துகொள்வதில் அவன் எச்சரிக்கையாகவே இருந்தான். அவர்களது அலுவலக எல்லைக்கு வெளியே, பகலவனும் ஆழினியும் தங்கள் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் அச்சங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, கொழும்பின் பரபரப்பான வீதிகளில் அல்லது கடற்கரையில் ஒன்றாக உலாவி, அடிவானத்திற்குக் கீழே சூரியன் மறைவதைப் பார்த்து ரசித்தார்கள். அந்த மங்கலான இருட்டு அவர்களின் நெருக்கத்துக்கும் வழிவகுத்தன. ஆழினியுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியும் பகலவனுக்கு ஒரு பொக்கிஷமாக இருந்து, ஒவ்வொரு நாளும் அவள் மீது அவன் ஆழ்ந்த காதலில் மேலும் மேலும் விழுந்தான். ஆனால், அவள் சாதுரியமாக எந்த சந்தர்ப்பத்திலும் கவனமாக, மனம் விட்டு தன் காதலை தெரிய படுத்தா விட்டாலும், நெருக்கமாக பழகுவதில் என்றும் பின்வாங்கவில்லை? ஒரு நாள், அந்தி சாயும் நேரத்தில் பகலவனும் ஆழினியும் கொழும்பு கடற்கரையில் அருகருகே கைகோர்த்து, அவன் மார்பில் அவள் சாய்ந்து, சூரியன் அடிவானத்தில் அஸ்தமிப்பதைப் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அப்பொழுது மெல்லிய குளிர் காற்று அவர்களின் தலைமுடியை தொட்டு அசைத்து சென்றது. இருவரும் ஒரு பாறையில் அமர்ந்தார்கள், அவள் அவன் மடியில் தலை சாய்ந்து படுத்தபடி, ஆழினி, தனது மென்மையான கைகளால் அவனை வருடியபடியும் சிந்தனையுடனும்: "அழகா இல்லையா பகலவன்? வானம் வண்ணங்களின் கோலமாக மாறி, அமைதியான உணர்வை எமக்குள் தருகிறதே!" பகலவன் அவள் வார்த்தைகளில் மெய்மறந்தான், அவளின் கன்னத்தை தட்டிக் கொடுத்தபடி : "ஆமாம், அது உண்மைதான். ஆனால் அதைவிட அழகானது எது தெரியுமா? இங்கே என் மடியில் பூத்துக்குலுங்கும் அழகாக நீ இருப்பது, இந்த தருணத்தை இன்னும் மாயாஜால மாக்குகிறது அன்பே!" ஆழினி, பகலவன் மீது அவளது பார்வையை திருப்பி, அவனின் முடியை வருடியபடி : "உனக்கு எப்பொழுதும் இனிமையான விஷயங்களைச் சொல்லத் தெரியும். சில சமயங்களில், என் மனதைப் நீ படிக்க முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது." என்றாள். பகலவனின் இதயம் துடித்தது, அவன் அவளை அணைத்து தூக்கி ஆழினியின் காதில் ரகசியமாக : "ஒருவேளை என்னால் முடியும், ஆழினி. ஒருவேளை என்னால் முடியும்." என்றான். ஆனால், அவன் அப்படி முடியும் முடியும் என்று சொன்னாலும், அவர்களது எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க ஆழினியின் தயக்கம், அவளது உணர்வுகளின் உண்மையான தன்மையைப் புரிந்துகொள்ள முடியாமல் அமைதியற்றவனாக பகலவன் காணப்பட்டான்! அவர்களுக்கு இடையே மறுக்க முடியாத, மறைக்க முடியாத வெளிப்படையான தொடர்பு இருந்த போதிலும், ஆழினியிடம் எதோ ஒரு மர்மம் மறைக்கப்பட்டு. அங்கு அவளிடம் நிலைத்திருந்த நிச்சயமற்ற தன்மையை பகலவனால் பல நேரங்களில் உணர முடிந்தது. அவர்களது உறவைப் பற்றி அவன் பேசும் போதெல்லாம், ஆழினி ஒரு மென்மையான புன்னகையுடன் அல்லது ஒரு ரகசியக் கருத்துடன் உரையாடலைத் தவிர்த்துக் கொண்டே வந்தாள். அவளது மௌனம் அவனைத் திகைக்க வைத்தது, அவள் அவனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டாளா அல்லது வெறுமனே கற்பனை செய்து கொண்டிருக்கிறாளா என்று அவனை வியக்க வைத்தது. உணர்ச்சிகளின் சூறாவளியில் சிக்கிய பகலவன், "மௌனம் சம்மதமா?" என்று தெரியாமல் அவதிப்பட்டான். ஆழினி அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கத் தயங்குவது, அவள் அவனுக்கு எதோ சொல்ல முற்படுகிறாளா அல்லது அவளது சொந்த தயக்கத்தின், வெட்கத்தின் அடையாளமா என்று அவனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அவர்களது உறவில் நிச்சயமற்ற நிலை, நிலவிய போதிலும், அவர்கள் ஒன்றாகப் பகிர்ந்துகொண்ட தருணங்களில் பகலவன் ஆறுதல் அடைந்தான். தங்களுக்குப் பிடித்தமான உணவகத்தில் உணவைப் பகிர்ந்து கொண்டாலோ அல்லது சுகமான மௌனத்தில் ஒருவரையொருவர் சகஜமாக அனுபவிப்பதாலோ, ஆழினியுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியையும் அவன் உண்மையில் நேசித்தான். ஒரு நாள் பகலவனும் ஆழினியும் மேலதிகமாக வேலை செய்ய வேண்டிய நிலை வந்தது. அவர்களைத் தவிர அலுவலகம் முழுவதும் வெறிச்சோடிக் கிடந்தது. ஆழினி, மௌனத்தைக் கலைத்தாள்: "பகலவன், நமக்கு எதிர்காலம் என்னவாகும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நாம் நண்பர்களாக மட்டுமே இருக்க வேண்டியிருக்கிறோமா அல்லது அங்கே நமக்காக இன்னும் ஏதாவது காத்திருக்கிறதா?" என்றாள். பகலவன், அவளின் இந்த திடீர் பேச்சால் திகைத்தான், மகிழ்ந்தான்: "நான் அதைப் பற்றி யோசித்தேன், ஆழினி. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் நம் எதிர்காலத்தை கதைக்க முயற்சிக்கும் போது, உன் மௌனம், அதை ஒரு கணப்பொழுது கனவைப் போல உணர்ந்தேன், ஆனால் நான் உண்மையில் உன்னைக் காதலிக்கிறேன், மனைவியாக நீயே என்று நினைக்கிறன்! " ஆழினி, அவள் பெயருக்கு ஏற்ற, இனிய கடல் பரப்பின் தலைவி தான்! அவள், அவனிடம் எங்கும் கடல் போல் பரந்து இருந்தாலும், அவளின் மனதின் ஆழத்தை, கடலின் ஆழம் போல், அறிய முடியாத மர்மமாகவே இருந்தாள். : "சில கனவுகள் அப்படியே இருந்து விடும்! பகலவன், எனவே நாளை என்ன வரக்கூடும் என்பதைப் பற்றி கவலைப்படாமல், இப்போது இருக்கும் எங்கள் தருணங்களை, நாங்கள் ஒன்றாக அனுபவித்து ரசிப்பது நல்லதே!" என்றாள். பகலவன், அவன் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் பகல்செய்வோன், தன் செயல்களை, சொற்ககளை வெளிச்சத்தில் காட்டுபவன் அவளின் இந்த நிச்சயமற்ற வார்த்தையால் அவன் இதயம் கனக்க : "ஆனால் நாளை வரவே இல்லை என்றால் என்ன செய்வது, ஆழினி? என்றான். அவள் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. மௌனமாக இருந்துவிட்டாள். ஆழினி அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கத் தயங்குவது அவளது உள்ளக் கொந்தளிப்பின் பிரதிபலிப்பா என்று பகலவன் ஆச்சரியப் பட்டான். அவள் தன் குடும்பத்தில் இருந்து தூரத்தில் அல்லது விலகி இருப்பதால், அதை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, தன்னுடன் அவள் மாயமான, நிரந்தரமற்ற காதல் நட்பு உறவில் பொழுது போக்காக ஈடுபட முயல்கிறாளா அல்லது இன்னும் ஏதாவது அவளைத் தடுத்து நிறுத்துகிறதா, அல்லது அவள் இன்னும் எதிர்கொள்ளத் தயாராக இல்லையா ? அவன் மன அலை ஓயவில்லை! என்றாலும் பரபரப்பான கொழும்பில் காதல் மற்றும் நட்பின் சிக்கல்களை, ஒரு நாள், ஆழினி தனது மௌனத்தைக் கலைத்து, தான் ஏங்கிய பதிலைத் தருவாள் என்று பகலவன் நம்பிக்கையுடன் இருந்தான். அவளின் "மௌனம் சம்மதமா?" என்று அவனைக் கேட்டால், அவனின் பதில் ஆமா மட்டுமே, அந்த நம்பிக்கையில் தான் அவன் இன்னும் அவளுடன் நெருங்கி பழகுகிறான், ஆனால் அவள் ? நாம் அறியோம் பராபரமே! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. "தனிக் குடித்தனம்" இலங்கையின் யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், பரபரப்பான தெருக்கள் மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு மத்தியில், அகநகை மற்றும் இளங்கவி என்ற புதுமணத் தம்பதிகள் வாழ்ந்தனர். புதிதாகத் திருமணமாகி, உற்சாகத்தில் மூழ்கிய அவர்கள், தங்கள் பெற்றோரின் வீடுகளின் ஆறுதலான அரவணைப்பிலிருந்து விலகி, தங்களுக்கென சொந்தக் கூடு அல்லது தனிக் குடித்தனம், "இனித்திட இனித்திடத்தான் நகைமுத்தன் எழில் அறம் நடத்துதற்கு தனியில்லம் கொண்டான்" என்று பாரதிதாசனார் கூறியது போல, கட்டுவதற்கான பயணத்தைத் தொடங்கினார்கள். ஆனால், அகநகையின் பெற்றோர் அதற்கு முதலில் சம்மதிக்கவில்லை, " நீ ஆரம்பத்தில் இருந்தே செல்லமாக, சுதந்திரமாக வாழ்ந்துவிட்டாய், காலையில் நேரத்துடன் கூட எழும்பமாட்டாய், அவசரமாக அரைகுறை குளிப்புடன், வாசனையை முகத்துக்கும் உடலுக்கும் அடித்து விட்டு ஸ்கூட்டரில் பல்கலைக்கழகம் போய்விடுவாய், ஒரு தேநீர் கூட ஒழுங்காகப் போடத் தெரியாது, இப்ப திருமணம் ஆகி ஒரு கிழமை தான், எப்படி தனிக்குடும்பம் போய் சமாளிப்பாய், கொஞ்சம் யோசி?" தாய் அழாக்குறையாக கேட்டாள். தந்தையும் தாய்க்கு ஒத்துப்பாடினார். ஆனால் அவளோ " இல்லை அம்மா, என்னால் முடியும், இப்ப சமையல் எல்லாம் பெரும் பிரச்சனை இல்லை, முன்னமே தயாரிக்கப்பட்ட [ரெடிமேட்] இட்டலி கலவை, தயார் செய்து பெட்டியில் அடைக்கப்பட்ட கறித்தூள், போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் இப்ப நகர்ப்புறத்தில் இலகுவாகப் பெறலாம். சமையல் புத்தகம் இருக்கிறது, அவர் கட்டாயம் சமையலுக்கு ஒத்துழைப்பர், அப்பா மாதிரி இல்லை?" என்று கூறிவிட்டு அப்பாவை ஒரு பார்வை பார்த்தாள், அப்பாவின் செல்லப்பிள்ளை! "அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே", தந்தை தன் மகளை கட்டிப் பிடித்தார். அவர் வாய் பாரதிதாசனின் பாடலை முணுமுணுத்தபடி, அவளின் விருப்பத்துக்கு ஆமா போட்டார். "உவந்தொருவன் வாழ்க்கை சரியாய் நடத்த உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்! அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான் அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்!" மணம் கமழும் மல்லிகைக் கொடிகளாலும், வண்ணமயமான மெல்லிய காகிதப் பூவாலும் அலங்கரிக்கப்பட்ட அவர்களது அழகிய சிறிய வீட்டிற்குள் அவர்கள் காலடி எடுத்து வைத்தபோது, யதார்த்தம் அவர்களுக்குப் புலப்பட்டது. சமைப்பதில் இருந்து சுத்தம் செய்வது வரை, நிதியை நிர்வகிப்பது முதல் புது திருமண காதல் உறவை நல்ல புரிந்துணவுகளுடனும் நட்புடனும் வளர்ப்பது வரை, அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் அவர்கள் இப்போது பொறுப்பாக, தாமே இருப்பதை உணர்ந்தனர். ஆரம்ப நாட்களில் காதல் உணர்ச்சிகள் மற்றும் புதிய தம்பாத்திய வாழ்வின் சவால்களின் சூறாவளியில் இருவரும் தங்கள் புது அனுபவத்தைக் கண்டனர். அகநகை, தன் பெற்றோரிடம் இருந்த காலத்தில், ஒரே ஒரு செல்ல மகளாக இருந்தபடியால், சமையலறைக்குள் அதிகம் செல்லவில்லை. தன் தாயின் சமையல் திறன்களை தான் எப்படி உருவாக்கலாம் என்பதில் கவனம் செலுத்தினாள். பானைகள் முழங்க, மசாலாப் பொருட்கள் பறக்க, அவளும் இளங்கவியும் தங்களின் அரைகுறை சமையலை ருசித்தபோது இருவரும் மனம் நிறைந்த சிரிப்பைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் வீடு விரைவில் எரிந்த கறிவேப்பிலை மற்றும் அதிக வேகவைத்த அரிசியின் நறுமணத்தால் நிரம்பியது, ஆனால் அவர்கள் சுதந்திரமான பெரியவர்களாக, தம்பதிகளாக மாறுவதற்கான ஆரம்ப பயணத்தில் இந்த குளறூபடியான அனுபவங்களை பாடங்களாக ஏற்றுக் கொண்டனர். ஆளுக்கு ஆள் உதவி செய்து ஒன்றாக, அவர்கள் சமையல் கலையை மெல்ல மெல்ல கற்றுக் கொண்டனர், சுவைகளை பரிசோதித்தனர் மற்றும் மசாலாப் பொருட்களின் நுட்பமான சமநிலையில் தேர்ச்சி பெற்றனர். ஆனால் சிரிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கு இடையில், விரக்தி மற்றும் கருத்து வேறுபாடுகளின் தருணங்கள் வராமல் இல்லை. ஊடல் இல்லையேல் கூடலில் சுவை இருக்காது என்பது அவர்களின் வாழ்விலும் பொருத்தமாக இருந்தது. "காதல் கொடுக்கும்; ஈர்ப்பு எடுத்துக்கொள்ளும். காதல் நிரந்தரம்; ஈர்ப்பு வரும் போகும். காதல் உளமார்ந்தது; ஈர்ப்பு உடல் சார்ந்தது" இதை நன்கு புரிந்தவள் தான் அகநகை. அதனால் தான் என்னவோ அவளுக்கு முதலில், செல்லமான சண்டைகள், சமாதானம் பின் புணர்தல். பிரியாமல் நெடுங்காலம் நிலைத்துக் கண்ணனுடன் நின்ற ஆய்ச்சியர் [இடையர்குலப் பெண்கள்] விளையாடும் கூடல் விளையாட்டு ஞாபகம் வந்தது. "ஊடல் கூட லுணர்தல் புணர்தலை நீடு நின்ற நிறையுக ழாய்ச்சியர் கூட லைக்குழற் கோதைமுன் கூறிய" தன் சொந்த வழிகளுக்குப் பழக்கப்பட்ட பெற்றோரின், அண்ணன்மார்களின் செல்லத் திருமகள் அகநகை, வீட்டு வேலைகள் மற்றும் பழக்க வழக்கங்களில் சமரசம் செய்து கொள்வது அவளுக்கு பெரும் சவாலாக இருந்தது. இளங்கவியும் தனது பெற்றோரின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் ஆறுதலுக்காக ஏங்கி, அவர்களின் புதிய வாழ்க்கையை சரிசெய்ய தன்னால் இயன்றவரை போராடினார். அகநகை: பதட்டமாகச் சிரித்தாள் "சரி, சமையல் குறிப்பு நமக்குத் தேவை... ம்ம்ம்... எவ்வளவு கறிவேப்பிலை?" இளங்கவி : சிரித்துக்கொண்டே "ஆமாம், பார்த்து சொல்லேன்? அகநகை: செய்முறைப் புத்தகத்தை புரட்டிப் புரட்டிப் பார்த்து, "இது ஒரு கைப்பிடி அளவு என்கிறது. ஆனால் அதிர்ஷ்டத்திற்காக இன்னும் கொஞ்சம் சேர்க்கப்போகிறேன்" அகநகை தாராளமாக கறிவேப்பிலையை சலசலக்கும் எண்ணெயில் வீசும் போது இருவரும் ஒன்றாக கட்டிப்பிடித்துக் கொண்டு சிரித்தார்கள். அப்பொழுது அகநகை, புகை எழும்போது கண்கள் விரிந்து "அச்சச்சோ! அவை எரிகின்றன என்று நினைக்கிறேன்!" என்றாள். இளங்கவி: சிரித்துக் கொண்டே "அதுதான் ஸ்மோக்கி ஃப்ளேவர் [smoky flavor] சேர்க்க இப்ப எமக்கு ஒரே ஒருவழி, சரியா?" மீண்டும் இருவரும் அரவணைத்துக் கொண்டு சிரித்தார்கள். அந்த சமையல் குளறூபடியிலும் அவர்களின் காதல் மட்டும் மாறாமல் இருந்தது. கிசுகிசுப்பான மன்னிப்புகள் மற்றும் மென்மையான வருடல்கள் மூலம், ஒருவருக் கொருவர் விசித்திரங்களையும் தனித்துவங்களையும் பாராட்ட கற்றுக் கொண்டனர். அன்றாட வாழ்க்கையின் குழப்பங்களுக் கிடையில் காதல் மலர்ந்த இடமாக அவர்களின் வீடு ஒரு சரணாலயமாக மாறியது. அப்பொழுது, அகநகையை பார்க்கும் பொழுது, இளங்கவிக்கு கி மு 200 ஆண்டை சேர்ந்த குறுந்தொகை 167 பாடல் நினைவுக்கு வந்தது. “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.” கொஞ்சம் சாதத்தை பாத்திரத்தில் போட்டு, அதில் நன்கு முற்றிய கட்டியாகியிருந்த தயிரை உறியிலிருந்து இறக்கி எடுத்து விட்டு, புதிதாக திருமணம் செய்த தலைவி தன் காந்தள் மலர் போன்ற விரலால் பிசைகிறாள். பிசைஞ்சாச்சு. கைய கழுவனும். துடைக்கணும். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. அக்கம் பக்கம் பார்த்தாள். தன் சேலையில் துடைத்துக் கொள்கிறாள். படபடப்பு ... பழக்கம் வேறு இல்லை. தலைவன் வருவதற்குள் சமைக்க வேண்டுமே என்ற ஆவல் வேறு. விறகு வேறு ஈரமாய் இருக்கிறது. ஒரே புகை. புகை அடித்து அவள் உடல் எல்லாம் புகை வாடை அடிக்கிறது. தலைவனுக்கு புளிக் குழம்பு பிடிக்குமே என்று அதன் பின் புளிக் குழம்பும் செய்கிறாள். புளித் தண்ணியில், உப்பு, மிளகாய் தூள் எல்லாம் போட்டு விரலால் கலக்குகிறாள் என்கிறது அந்த பாடல். ஒரு முறை இருவருக்கும் இடையில் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டது அகநகை: "கவி, இன்னைக்கு குப்பையை வெளியே எடுக்க ஞாபகம் இருக்கா? மறுபடியும் நிரம்பி வழிகிறது." இளங்கவி: "ஆமாம் ஆமாம், பிறகு செய்வேன்." அகநகை: விரக்தியுடன் "நீங்கள் எப்பொழுதும் அப்படிச் சொல்கிறீர்கள், பிறகு அது நிறைவேறாது. இப்போது உடனே செய்ய முடியுமா, தயவுசெய்து?" இளங்கவி: "ஏன் என்னை எப்பவும் நச்சரிக்கிறே? நான் செய்வேன் என்று சொன்னேன், சரியா?" அகநகை: "நான் நச்சரிக்கவில்லை கவி. நாம் நம் வீட்டை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவ்வளவு தான்." இளங்கவி: "ஓகே, தெரியும், மன்னிக்கவும். உடனே எடுத்துவிடுகிறேன்." அகநகையும் இளங்கவியும் திருமண வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளில், எல்லா பொதுவான குடும்பங்கள் போல் பயணிக்கும் போது, பெற்றோரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறவும் மற்றும் ஒருவருக் கொருவர் திறம்பட தொடர்பு கொள்வதைக் கற்றுக் கொள்வும் பழகிக் கொண்டார்கள். அவர்களின் அன்பும் உறுதியும் பிரகாசிக்கத் தொடங்கி, ஒன்றாக ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பாதையை அவர்களுக்கு ஒளிரச் செய்தன. "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக!" என்று இளங்கவி பாடிக்கொண்டு, அகநகையை வருக வருக என்று ஒருநாள் சாப்பாடுக்கு அழைத்தான்! ஆனால் அவளோ "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும்!" என்று போட்டிக்கு ஒரு பாட்டு பாடி, பார்த்தாலே ஒரு பார்வை உடலுக்கும், கூடலுக்கும் அவர்களின் வாழ்வில் குறைவே இல்லை! நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறியபோது, அகநகையும் இளங்கவியும் தங்கள் இருவரும் உள்ளத்தால், புரிந்துணர்வால், விட்டுக் கொடுப்பால், காதலால் நெருங்கி வருவதைக் கண்டனர், அவர்கள் ஒன்றாகச் சமாளித்த சவால்கள் அவர்களது பிணைப்பை வலுவூட்டியது. அவர்கள் இனி தங்களை இரு நபர்களாகப் பார்க்கவில்லை, ஆனால் அன்பு மற்றும் தோழமையின் வாழ்நாள் பயணத்தில் பங்காளிகளாகப் பார்த்தார்கள்! தனிக்குடும்பம் தனித்துவமாக ஒளிவீசியது!! "வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம் பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே! நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத் தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  4. கூடுவேம் என்பது அவா / குறள்1310 ஊடல் காட்டுவது அழகின் வடிவமே ஆடல் கலையின் ஒரு முத்திரையே வாட விடாமல் அருகில் இருந்தே மடவரல் பெண்ணைத் தேற்றினால் என்ன? கூடல் இல்லா இன்பம் உண்டா பாடல் தராத இசை இருக்கா தேட வைத்து கண்ணீர் வரவழைக்காமல் மடந்தை நெஞ்சுடன் இணைந்தால் என்ன? தேடல் கொண்டு உள்ளம் அறிந்து உடல் வனப்பை பார்த்து மகிழ்ந்து அடக்கம் தூவும் நாணம் அகற்றி ஆடவள் மனதில் குடிகொண்டு வாழ்ந்தாலென்ன? கூடுவேம் என்பது அவாவின் வெளிப்பாடு நாடும் ஆசைக்கும் வடிகால் அதுவே கூடு போட்டு அதைச் சிறைவைக்காமல் கேடுவிளைக்கும் பொய்க் கோபம் அழிந்தாலென்ன? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. "இளங்கவியும் 'ஏடிஎச்டி' யும் [ADHD]" பரபரப்பான திருகோணமலை நகரில், இளங்கவி என்ற சாதாரண மனிதர் வாழ்ந்து வந்தார். தனது வாழ்க்கையின் முதன்மையான ஆண்டுகளை பொறியியலாளராக அர்ப்பணித்த இளங்கவி, பிற்பகுதியில் சூழ்நிலை காரணமாக ஒரு நிறுவனத்தின் கிளையில் மேலாளராக பணியாற்றி இன்று ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெற்ற பிறகு, ஒரு பொழுது போக்காக தமிழர்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை மையமாக வைத்து எழுதும் ஆர்வத்தை அவர் ஏற்படுத்தினார். அவரது கட்டுரைகள், கவிதைகள் மற்றும் சிறு கதைகள் வலைத்தளங்களில் ஓரளவு ஆழமாக எதிரொலித்தது, அவருக்கு ஒரு அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றது. ஒரு முறை சிரிப்பும் உரையாடல்களும் அவரின் வீட்டின் காற்றில் நிறைந்திருக்க, இளங்கவி ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து தன் சொந்த எண்ணங்களில் மூழ்கி இருந்தார். அங்கு நடப்பனவற்றில், உரையாடல்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை, ஆனால் தனக்கு தெரிந்தவற்றில் மற்றும் உடனடி தேவையானவற்றில் மட்டும் இடைக்கிடை பங்கு பற்றினார். மற்றும் படி அங்கு இருந்தாலும், முழுமையாக ஈடுபடவில்லை. அவர் எதோ யோசனையில் மூழ்கி மூழ்கி இருந்தார். ஒரு குடும்ப உறுப்பினர் அவரை அங்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் உரையாடலில் ஈடுபடுத்த முயன்ற போது அவர் உடனடியாக பதிலளிக்கத் தவறிவிட்டார். இந்தச் சம்பவம் குடும்பத்தாரின் பெருகிய சந்தேகத்திற்கு தூண்டுதலாக அமைந்தது. மீண்டும் ஒரு முறை, அவர் தனது அறையில் சிறு கதை ஒன்றை எழுதுவதில் கணனியில் மூழ்கி இருக்கும் தருவாயில், அவர் அறைக்குள் நுழைந்த ஒரு குடும்ப உறுப்பினர் அங்கு எதோ ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே போனார். ஆனால் இளங்கவி அதை, அவரை திரும்பி பார்க்கவில்லை, கணனியிலேயே தன் கவனத்தை செலுத்தியபடி இருந்தார். ஆனால் அவருக்குத் தெரியும் வந்தது ஒரு குடும்ப உறுப்பினர், வெளியார் யாரும் இல்லை, எனவே தமக்கு வேண்டியதை அவர் எடுப்பதில் அவருக்கு எந்த ஆட்சேபமும், அதேநேரம் அது எது என்று அறிவதும் முக்கியமாக அவருக்கு இருக்கவில்லை, அதற்கு முக்கிய காரணம் அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் மேல் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆகும். மேலும் அவை எல்லா குடும்ப உறுப்பினருக்கும் பொதுவானவையும் கூட. ஆனால் அந்த குடும்ப உறுப்பினரோ, இப்படி கவனக் குறைவாக இருந்தால், வீடு எதோ ஒரு குறைபாடால் தீ பற்றினாலும், அது தெரியாமல் இருந்து விடுவார் என்று அவர் மேல் ஐயப்பாடு கொண்டார். இன்னும் ஒரு முறை ஒரு சாப்பாட்டு மேசை விவாதத்தின் போது, அவர் இப்ப எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு புதிய கதையின் நுணுக்கங்களை உணர்ச்சியுடன் விரிவாக குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஆனால், குடும்பம், அவரது இந்த உண்மையைப் போன்று அல்லது உயிருடையது போன்று கதை சொல்லலை மனக்கிளர்ச்சியான நடத்தை [impulsive behavior] என்று தவறாகப் மீண்டும் புரிந்து கொண்டனர். எனவே இளங்கவி ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தும் பொழுது, சுற்றாடலில் நடப்பதை கவனிப்பது இல்லை என்ற ஒரு குறைபாடை அவர் மேல் கூறி, அது சிலவேளை ஆபத்துகளை கொண்டு வரலாம் என நேரடியாகவே அவரிடம் கூறியதுடன், அவரது நடத்தையை அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு [ஏடிஎச்டி (ADHD; attention deficit hyperactivity disorder)] என்று முடிவும் எடுத்து, அதைப் பற்றி ஒரு விளக்கமும் எப்படி அதில் இருந்து வெளியே வருவது என்ற அறிவுறுத்தலும் கொடுத்தனர். இளங்கவி பொறுமையாக கேட்டார். தான் கவனக் குறைவு இல்லை என்றும், ஆனால் தேவை இல்லாதவற்றில் அல்லது அந்த நேரம் தனக்கு அல்லது ஏதாவது பாதுகாப்புக்கு முக்கியம் இல்லாதவற்றில் அக்கறை செலுத்துவது இல்லை, அவ்வளவுதான் என்று கூறினார். இளங்கவி அதன் பின் அவரின் வீட்டுக்கு அண்மையில் இருந்த சிவன் கோவிலுக்கு முன்னால் இருக்கும் மதகில் இருந்து கொண்டு தன் ஆரம்ப வாழ்க்கையை அலசிப் பார்த்தார். பாடசாலையில் படிக்கும் காலத்தில் கொஞ்சம் முரடாகவும், தன் பாட்டிலும் மற்றும் தனக்கு விருப்பமானவற்றில் அல்லது அந்த நேரம் தேவையானவற்றில் மட்டும் கவனம் செலுத்தி, மற்றவற்றில் அக்கறை எடுக்காதது தெரிய வந்தது. கணிதம், கணிதத்தை உள்வாங்கிய ஏனைய பாடங்களில் மனம் விரும்பி, கூட அக்கறையுடன் படித்ததையும், அதேநேரம் மொழி, சமயம், உயிரியல் போன்ற பாடங்களில் எனோ பின் நின்றதும் தெரியவந்தது. அதுமட்டும் அல்ல, மொழி இன்னும் ஒரு பிரச்சனையாக தொடர்வதும் தெரியவந்தது. இளங்கவி ஆரம்பகாலத்திலேயே அவரின் ஆர்வத்தைப் பிடிக்கும் அல்லது உடனடி மனநிறைவை அளிக்கும் பணிகளில் அல்லது பாடங்களில் அதி தீவிர கவனம் செலுத்தியதும், அதனால்த்தான், மொழியில் அதை ஒத்த பாடங்களில் குறைபாடுகள் இருந்தாலும், கணிதம் அல்லது கணிதத்தை உள்ளடக்கிய குறிப்பிட்ட பாடங்களில் பெரும் சித்தி அடைந்து பல்கலைக்கழகம் போனது ஏன் என்பதை இளங்கவி அறிந்து கொண்டார். என்றாலும் இக்குறைபாடு வயது போகப்போகச் பொதுவாக சீர்நிலைக்குத் திரும்புமாயினும் சிலருக்கு முதிர்பருவத்திலும் நிலைத்து நிற்க வாய்ப்புண்டு என்பதை இளங்கவி நிராகரிக்கவில்லை. ஆனால் அவர்கள் கருதுவது போல் இன்று தனக்கு சில குறைபாடுகள் இருந்தாலும், முக்கியமானவற்றில் அல்லது உடனடி வாழ்க்கைக்கு தேவையான வற்றில் கவனக்குறைவு ஒன்றும் இல்லை என்பது தான் அவரின் நிலைப்பாடு. இன்று ஓய்வு பெற்று வெற்றிகரமான வாழ்வும் வாழ்ந்து விட்டேன், இனி மொழியின் குறைபாடு பெரும் பிரச்சனையாகாது, அதேபோல தேவை இல்லாத நாளாந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தாதது ஒரு பெரும் பிரச்சனையாகாது. ஆனால் கட்டாயம் குடும்ப உறுப்பினர் கவலைப்படுவது போல் முக்கியமானவற்றில் கட்டாயம் தன் கவனம் இருக்கும் என்பது தான் இளங்கவியின் வாதம். இன்றும் ஏடிஎச்டி நோயால் பாதிக்கப் படுகிறேனோ இல்லையோ என்பது இனி தேவை இல்லாத ஒன்று, எனவே குடும்ப உறுப்பினர் தனது நடத்தையைப் நல்ல நோக்கத்துடன் புரிந்து கொள்ளாமல், அவர்களின் தவறான கணிப்பும் தொடர்ச்சியான உரையாடல்களும் இளங்கவிக்கு மனஉளைச்சலை கொடுத்தது. அது தான் அந்த மதகில் தனிய இருந்து யோசித்துக் கொண்டு இருந்தார். அவர்களின் இந்தப்போக்கால் தான் தனிமைப் படுத்தப்பட்டதாக உணர்ந்த இளங்கவி, குடும்பக் கூட்டங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளில் இருந்து ஓரளவு மேலும் விலகி இருக்க முடிவு செய்தார். அவர் தனது எழுத்தில் முழுக்கவனம் செலுத்தி, தனிமையைக இருக்க மேலும் மேலும் விரும்ப தொடங்கினார். ஆனால் அதை ஏடிஎச்டி உடன் மேலும் தொடர்பு படுத்தி, குடும்ப உறுப்பினர் குழப்பத்தில், கவலையில் ஆழ்ந்தனர். இதனால், ஒரு காலத்தில் துடிப்பான குடும்ப இயக்கம் ஒரு பதட்டமான சூழ்நிலையாக மாறியது, இதனால் அவரது இலக்கிய எழுத்து முயற்சிகள் வெற்றியடைந்தாலும், இளங்கவியின் தனிமை ஆழமடைந்தது. அவரது குடும்பத்தினர் அவரது இந்த நடத்தையை, அதற்கான காரணத்தை தேடாமல், அமைதியான தொனியில் தொடர்ந்து தங்களுக்குள் விவாதித்தனர். அந்த சரியான புரிதல் இல்லாத அல்லது விளக்கம் இல்லாத விவாதம் தான் அவரை இப்படி மேலும் மேலும் ஆக்குகிறது என்பதை அவர்கள் எனோ புரியவில்லை. அவர் தனது சொந்த வீட்டிலேயே ஒரு அமைதியான நபராக மாற்றப்பட்டார் அல்லது ஒதுக்கப்பட்டார். இளங்கவி ஏடிஎச்டி தான் தனது மொழி மற்றும் சில விடயங்களில் கவனம் செலுத்தாமல் போனதுக்கு இளமையில் காரணமா இருந்தது என்பதை உணர்ந்தார். ஆனால் அது காலம் கடந்த முடிந்த முடிவு, என்று தனக்குள் கூறிக்கொண்டார். ஏன் என்றால் இனி இளமை திரும்பவும் வராது. என்றாலும் காரணம் அறிந்தது ஒரு நிம்மதியும், மற்றும் இப்படியான நிலையில் இருப்பவர்களை சரியாக கணிக்க, உணர அது உதவும் என்பதில் மகிழ்ச்சி அடைந்தார். "நான் நானாக தான் இன்னும் இருக்கின்றேன். எனக்கு ஏடிஎச்டி இருந்தது, அது எப்படி இப்ப இருக்கிறது என்பது இனி கவலை இல்லை " அவர் தான் அதனால் உடைந்து விட்டதாக உணரவில்லை, எனவே தன்னைத் அவர்கள் சொல்வது போல, இந்த முதிர்ந்த காலத்திலும் சிரமப்படுத்த வேண்டும் என்பது அவசியமும் இல்லை, ஆனால் தன்னைப் பற்றிய சிறந்த வெளிப்பாட்டை குடும்பத்தினருக்கு காட்ட வேண்டிய உத்திகளைப் சிந்தித்தார். தனிமையில் இளங்கவி தன் எழுத்தில் ஆறுதல் கண்டார். ஒவ்வொரு வார்த்தையும் அவரைச் சூழ்ந்திருந்த தவறான எண்ணங்களுக்கு எதிரான அமைதியான எதிர்ப்பாக மாறியது. அவரது படைப்புகள் வெறும் கதைகள் அல்ல; தனிமைப் படுத்தப்பட்ட போதிலும் அவரது ஆர்வத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அவரது நெகிழ்ச்சி மற்றும் உறுதியின் பிரதிபலிப்பாக அவை இருந்தன. காலம் செல்ல செல்ல இளங்கவி குடும்பத்தினர் தங்களின் நிலைப்பாட்டை அல்லது புரிதலின் தன்மையை உணர ஆரம்பித்தனர். அவர்களின் அனுமானங்கள் சரியாக இருந்தாலும், இன்றைய அவரின் முதிர்ந்த காலத்தில், அது அவரின் மனநிலையில், நல்வாழ்வில் சில தாக்கங்களை தெரிந்தும் தெரியாமலும் ஏற்படுத்தியது, ஒரு காலத்தில் வெளிப்பாடாக இருந்த மனிதரை அவரது சொந்த வீட்டிற்குள்ளேயே அமைதியான பார்வையாளராக மாற்றியது. மெதுவாக, அவர்கள் தங்கள் முன்கூட்டிய கருத்துக்களைக் கேள்வி கேட்கத் தொடங்கினர் மற்றும் அவரது எழுத்தின் மீதான அர்ப்பணிப்பின் ஆழத்தைப் புரியத் தொடங்கினர். ஏடிஎச்டி- ஐச் சுற்றியுள்ள களங்கத்தின் ஒரு பகுதியை அனுபவித்து விட்டேன், ஆனால் அதை இன்னும் தொடருகிறேனா என்பது தான் இளங்கவியின் இன்றைய கேள்வி? இது பெரும்பாலும் இன்னும் தனக்கு ஒரு குறைபாடா அல்லது குறைபாடாக கட்டமைக்கப் படுகிறதா? என்பது தான் இளங்கவியின் ஆதங்கம்! - இது துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால் இந்த வகையான மூளை வயரிங் [brain wiring] உண்மையில் நிறைய பரிசுகளுடனும் வருகிறது என்பதாகவே இளங்கவி உணர்ந்தார். எடுத்துக்காட்டாக, ஏடிஎச்டி உள்ளவர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமான சிந்தனையாளர்களாக இருப்பார்கள் என்று இளங்கவி தன் நேரடி அனுபவம் மூலமும் மற்றும் ஆய்வுகள் மூலமும் கண்டறிந்தார். அதாவது இப்படியானவர்கள் ஒரு பிரச்சனையை, மற்றவர்கள் நினைக்காத புதிய வழிகளில் அணுகக் கூடியவர்கள் என்று அறிந்தார். நமது நிலைமைகள் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் களங்கங்கள் எவ்வளவு அதிகமாக சவால் செய்யப்படுகிறதோ, அந்தளவுக்கு ஒவ்வொரு வகையான மூளைக்கும் இடமளிக்கும் கலாச்சாரத்தை நோக்கி நாம் மாற முடியும் என்பது இன்று இளங்கவியின் நம்பிக்கை. மேலும் ஏடிஎச்டி உள்ளவர்களை சில வல்லுநர்கள் கூற்றின்படி "ஆர்வம் அடிப்படையிலான நரம்பு மண்டலம் [interest-based nervous system]" உள்ளவர்கள் என்கிறார்கள். இதைத்தான் இளங்கவியும் நம்புகிறார். அவர்களுக்கு ஆர்வமுள்ள ஒரு தலைப்பு அல்லது ஒரு யோசனை பற்றிய சாத்தியமான ஒவ்வொரு உண்மையையும் கற்றுக் கொள்வதில் அவர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள் என்பதாகும். அது தான் ஓய்வின் பின் இளங்கவி தமிழர் தொடர்பான அல்லது தமிழ் இலக்கியம் தொடர்பான பலவற்றை ஆய்வு செய்து அவ்வற்றை கட்டுரை, கவிதை, சிறுகதை போன்ற தளங்களில் இளங்கவி எழுதத் தொடங்கினார், அது தான் உண்மை! "எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியர் ஆகப்பெரின்", என வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பே கூறியதையும், "எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணவேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்", என மகாகவி பாடியதையும், முணுமுணுத்தபடி இளங்கவி தன் சாய்வு நாற்காலியில், குடும்பத்தாரின் கதைகளை ஓரம்கட்டிவிட்டு சற்று தனிமையில் ஓய்வு எடுத்தார். அது இப்ப அவருக்குப் பழக்கப் பட்ட ஒன்றே!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  6. "சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிகிறதே!" சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிகிறதே பார்த்து அனைத்து இனிமை கொட்டுகிறதே வார்த்து எடுத்த சிலையாய் நின்று கூர்மை விழியால் என்னைக் கொல்லுகிறதே! அருகில் வந்து ஏதேதோ சொல்லுதே அமைதியாக உறங்க மடியைத் தருகிறதே அழகு மலராய் பூத்துக் குலுங்கி அன்பு சொரிந்து ஆசை ஊட்டுகிறதே! மோதல் இல்லாக் கூடல் கொண்டு இதழ்கள் சுவைக்கும் இன்பம் கண்டு இதயம் இரண்டும் பின்னிப் பிணைந்து காதல் தோட்டத்தில் தேன்மாரி பொழிகிறதே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. "கந்துவட்டி" தமிழ்நாட்டின் பசுமையான பண்டைய சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கிய பூம்புகார் கிராமத்தில் ராஜன் குடும்பம் வாழ்ந்து வந்தது. அவர்கள் ஒரு காலத்தில் தங்கள் செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக அறியப்பட்டனர். இருப்பினும், அவர்கள் கந்துவட்டியின் பிடியில் சிக்கியபோது விதி ஒரு கொடூரமான திருப்பத்தை எடுத்தது. பொதிய மலை, இமய மலை போலத் தனிப்பெருமை வாய்ந்தது பூம்புகார். பொதிய மலையும், இமய மலையும் நடுங்குவது இல்லை. அதுப்போல, புகாரில் மிகுந்த செல்வமும், பகையின்மையும் சேர்ந்து விளங்குவதால், இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் புகாரை விட்டு எங்கும் செல்வதில்லை. இதனால் பூம்புகார், நாகலோகம் போலப் போகத்திலும், தேவலோகம் போலப் புகழிலும் சிறந்து விளங்கியது என்று சிலப்பதிகாரம் கூறும். ஆனால் இன்று அதே பூம்புகாரில் வாழ்ந்த ராஜன் குடும்பம் என்ன ஏது இனியும் நடக்குமோ என்று அஞ்சி நடுங்கின்றனர்! காலம் செய்த கோலம் இதுவோ? கடந்த காலங்களில் விவசாயிகள் மழை, வரட்சி காலங்களை துல்லியமாக அறிந்து தமது விவசாய செய்கைகளை அதற்கு ஏற்றவாறு செய்து சீரும்‌ சிறப்புமாக வாழ்ந்தனர். ஆனால் இன்று அப்படி இல்லை. ஒழுங்கற்ற காலநிலை சூழல்கள் பல விவசாயிகளை கஷ்டத்தில் மூழ்கடித்தது. ராஜன் குடும்பத்தின் ஒரே உழைப்பாளியான திரு. ராஜன், அறுவடை காலம் பெய்த பெரும் மழையால், பயிர்கள் எல்லாம் சேதமடைந்து நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டான். தனது குடும்பத்தை காப்பாற்ற ஆசைப்பட்டு, உள்ளூர் கந்துவட்டிக்காரரான திரு. குமாரவேலுவிடம் உதவி பெற்றான். ஆனால் அவரோ உதவி கரம் நீட்டுகிறேன் என்ற போர்வையில், ராஜனுக்கு அதிக வட்டி விகிதத்தில் கடன் வழங்கினார். ராஜனுக்கு உண்மையில் கந்துவட்டி என்றால் என்னவென்றே தெரியாது. எதோ கொஞ்ச வட்டியுடன் திருப்பி கொடுத்து விடுவேன் என்ற நம்பிக்கை தான் அவனிடம் இருந்தது. "தனிவட்டி கூட்டுவட்டி தெரியாதவனுக்கு கந்துவட்டிக் கணக்கு எப்படித் தெரியும் ?" ஆழிப்பேரலை இலங்கை மற்றும் தென் இந்தியாவை டிசம்பர் 26, 2004 தாக்கும் வரை சுனாமி என்றால் என்ன என்று பலருக்குத் தெரியாது. அப்படித்தான் ராஜனுக்கு முதலில் அதன் கொடுமை தெரியவில்லை "குழந்தைகள் போலத்தானே அலைக்கரம் கொண்டு குறும்புகள் செய்தாய்!" "அன்னையைப் போலத்தானே மயங்கிக் கிடக்க மணல் மடி தந்தாய்!" "வள்ளல் போல வாரி வழங்கி வளமைகள் செய்தாய்!" இப்படித்தான் அவனின் எண்ணம் அந்த நேரம் இருந்தது. "அரக்கனைப் போலே கொலை முகம் காட்டி ஏன் கொன்றாய் கடலே!" என்று தான் கதறப் போகிறேன் என்று அப்ப அவனுக்குத் தெரியாது? முதலில், அடுத்த அறுவடையுடன் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என்று ராஜன் நம்பினான். ஆனால் பயிர்கள் மீண்டும் தோல்வியடைந்ததால், கடனுக்கான வட்டி வேகமாகக் குவியத் தொடங்கி, அது குடும்பத்தை கடனில் ஆழமாகப் புதைத்தது. அன்பான மனைவியும் தாயுமான திருமதி ராஜன், கடனின் மன உளைச்சல் தன் கணவனை ஆட்கொண்டதை மிக கவலையாக கவனித்தாள். அவள் அவனை ஆறுதல் படுத்த தன்னால் இயன்றவரை முயன்றாள், ஆனால் கடன் தொடர்ந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், அது அவர்களின் உறவைப் பாதிக்கத் தொடங்கியது. வாக்குவாதங்கள் அன்றாட நிகழ்வாக மாறியது, ஒரு காலத்தில் மகிழ்வாக மற்றும் அன்பாக இருந்த குடும்பம் பதட்டமாகவும் வெறுப்பாகவும் மாறியது. அவர்களின் குழந்தைகள், ராம் மற்றும் பிரியா, பெற்றோரின் பதற்றத்தை உணரத் தொடங்கினர், அவர்கள் தங்கள் பெற்றோரின் புன்னகை மீண்டும் மலரும் என்ற நம்பிக்கை கொண்டு இருந்தாலும், அவர்களின் முகத்தில் கவலைக் கோடுகள் பதியத் தொடங்கின, அவர்களின் வீட்டில் நிறைந்திருந்த மகிழ்ச்சிக்கு பதிலாக விரக்தியின் மூச்சுத்திணறல் தான் ஆழிப்பேரலையாக அவர்களின் வீடு முழுவதும் ஒலித்துக்கொண்டு இருந்தன, கடன் சுமை அதிகமானதால், திரு. ராஜன் விரக்தியில் ஆழ்ந்தார். அவர் இரவும் பகலும் அயராது உழைத்தார், அவர்களின் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து ஒரு வழியைக் கண்டு பிடிக்க முயன்றார், பல தன் உற்ற நண்பர்களின் வீடுகளுக்கு ஏறி இறங்கினார், ஆனால் யாரும் உதவுவதாகத் தெரியவில்லை. ராஜன் ஒவ்வொரு முறையும் சோர்ந்து போய் வேதனையோடு வீடு திரும்பினான். அது ஒரு கடக்க முடியாத மலை போல் இப்ப அவனுக்குத் தோன்றியது. ஒரு நாள் காலை குமாரவேலு அவன் வீட்டுக்கே வந்துவிட்டார். காலிங் பெல் அடிப்பதை கேட்ட ராஜனின் மகள் பிரியா கதவைத் திறந்தாள். “இது ராஜனின் வீடு தானே?” “ ஆமாம்…சார்! , கொஞ்சம் இருங்க அப்ப குளித்துக்கொண்டு இருக்கிறார். வந்துவிடுவார் என்று உள்ளே அழைத்து விட்டு, தாயை கூப்பிட்டாள். நீ அவர் பொண்ணா… என்ன படிக்கிறே? என்று பேச்சை தொடங்கினார் குமாரவேலு. ஆனால் அவள் மௌனமாக தன் அறைக்குள் போய்விட்டாள். திருமதி ராஜன் " என்ன இந்தப்பக்கம்?" என்று கதையை ஆரம்பித்தாள். ஆனால் குமாரவேலுவோ எந்த மரியாதையும் இல்லாமல், என் கடங்காரன் ராஜனை பார்க்க வந்தேன் என்கிறார். அதற்குள் ராஜனும் குளித்து முடிந்து அங்கு வந்தான். “என்ன ராஜன், மாதம் முடிந்தா ஒழுங்கா வட்டி தர முடியாதா? உன்னைத் தேடி உங்க வீட்டிற்கு வந்தா இங்கு கொஞ்சம் கூட எனக்கு மரியாதை இல்லே! உம் பொண்ணு கதவை அடித்து சாத்திக்கொண்டு போறார், மனைவியோ ஒரு தேநீர், காபியோ தருகிற எண்ணம் இல்லை?" கொஞ்சம் அதட்டலாக பேசத் தொடங்கினார். “ உங்க வீட்டுக்காரன் காசும் வட்டியும் தர வேண்டும், பணத்தை எடுத்து வச்சா நான் எதற்கு இங்கு நிற்கிறேன்? நான் பாட்டுக்குப் போய் விடுவேன்!” என்று, ராஜனை பார்க்காமல் ராஜனின் மனைவியிடம் கடுமையாக பேசினார். ராஜன் நாளை மாலைக்கு, முதலும் வட்டியும் தந்துவிடுவேன், இப்ப வீடடை விட்டு பேசாமல் போய்விடு என்று சொல்லி, குமாரவேலுவை திருப்பி அனுப்பினான். அனால் மேலும் மேலும் அவமானத்தையும் அழுத்தத்தையும் தாங்க முடியாமல் திரு.ராஜன் அன்று இரவு ஒரு அதிரடியான நடவடிக்கை எடுத்தான். தன் குடும்பத்தின் மீதான தனது ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் ஒரு குறிப்பை எழுதி வைத்து விட்டு, தன்னை தூக்கு கயிற்றில் போட்டுவிட்டான். ராஜன் தற்கொலை செய்து கொண்ட செய்தி கிராமத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த ராஜன் குடும்பத்திற்கு நேர்ந்த சோகத்தை அக்கம் பக்கத்தினர் கிசுகிசுத்தனர். திருமதி. ராஜன் நொறுங்கிப் போனார், துக்கம், குற்ற உணர்வு மற்றும் பெரும் கடன் சுமை ஆகியவற்றால் சிக்கித் தவித்தார், கடனைத் திருப்பிச் செலுத்த வழியின்றி, அவர்களது வீட்டையும் குமாரவேலு கைப்பற்றி, எதிர்காலத்தில் குடும்பத்தை வீடற்றவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும் ஆக்கி, நடுத்தெருவில் அகதிகளாக அலைய விட்டு அவர்களை முழுவதுமாக தின்றுவிடும் போல் அவளுக்குத் தோன்றியது. எனவே, திருமதி ராஜன், குமாரவேலுவின் சுரண்டல் நடவடிக்கைகளுக்கு எதிராக கிராமத்தின் ஆதரவைத் திரட்டி, நியாயம் தேட நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். ஒரு நீதியான வழக்கறிஞரின் உதவியுடன், அவர் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினார், தனது குடும்பத்தின் துன்பங்களுக்குப் கந்துவட்டிக் காரனான குமாரவேலுவே பொறுப்புக்கூற வேண்டும் என்பதில், நீதியின் முன் உறுதியாக இருந்தார், பூம்புகார் கண்ணகி போலவே! இருப்பினும், திருமதி ராஜன் நீதியை நாடுவதால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த திரு.குமாரவேலு, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இழிவான தந்திரங்களைக் கையாளத் தொடங்கினார். திருமதி ராஜனின் முயற்சிகளை முறியடிக்க, செல்வாக்கு மிக்க வழக்கறிஞர்களை பணியமர்த்தவும், மற்றும் அவளைப்பற்றி கட்டுக்கதைகளை அவிழ்த்து விடவும் - குறிப்பாக அவளது கற்பைக் கேள்விக்குள்ளாக்கும் பொய்யான வதந்திகளைப் பரப்பி, சமூகத்தில் அவளது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த - அவர் தனது செல்வத்தை பயன்படுத்தினார். அது விரைவில், திருமதி ராஜனின் மனதில் ஒரு கருமேகத்தை உண்டாக்கி, அவளை விரக்தியின் ஆழமான படுகுழியில் தள்ளியது. அசைக்க முடியாத உறுதி இருந்த போதிலும், திருமதி ராஜன் வஞ்சகம் மற்றும் துரோகத்தின் வலையில் சிக்கிக் கொண்டார். தவறான குற்றச்சாட்டுகள் மற்றும் சமூக ஒதுக்கல் ஆகியவற்றின் இடைவிடாத தாக்குதல் தாங்க முடியாத அளவுக்கு அவளை வருத்தியது. அவமானம் மற்றும் நம்பிக்கையின்மையால் நுகரப்பட்ட அவள், விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவளை வேட்டையாடும் கொடூரமான கிசுகிசுக்களுக்கு இறுதியில் அடிபணிந்தாள். அவளும் தன் கணவன் ராஜன் போலவே சோகமான முடிவுக்கு தன்னை உள்ளாக்கிக் கொண்டாள். அவளின் மறைவு குறித்த செய்தி கிராமத்தில் மீண்டும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது மட்டும் அல்ல ராமையும் பிரியாவையும் அனாதைகளாகவும் ஆக்கியது. கிராமவாசிகள் தங்கள் சமூகத்தின் அன்பான உறுப்பினரின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கும்போது, கோபம் மற்றும் வெறுப்பின் தீ, சுடர்களாக எழும்பி குமாரவேலுவின் வீட்டை முற்றுகையிட்டது. "கந்துவட்டி எண்ணெயில் கொதித்து கொப்பளிக்கிறதே குமாரவேலுவின் வீடும்! பல ஏழைகளின் உடல்களை எரித்துத் தின்ற குடல்களும் அங்கு திணறத் தொடங்குதே!!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  8. "எங்களுக்கும் காலம் வரும்" இன்றைக்கு குறைந்தது ஏழு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் வட மாகாணத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக அனைத்து குளங்களும் நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமை ஏற்பட்டது. அதன் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்கின்ற நிலையும் உருவாகியது. அந்தவகையில், வவுனியா குளம், நொச்சிக்குளம், பத்தினியார் மகிழங்குளம், தாண்டிக்குளம், வைரவபுளியங்குளம், அரசமுறிப்புகுளம், பாவற்குளம், பேராறு நீர்த்தேக்கம் போன்ற பல்வேறு குளங்களை அண்டி வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருத்திதான் கனகம்மா. அவள் கடந்த காலப் போரில், விசாரணைக்கு என்று அழைத்துப்போன கணவன் இற்றைவரை வீடுவாராமல், என்ன நடந்தது என்றும் அறியாமல் காணாமல் போக, தன் ஒரே மகளுடன் பண்ணையாரும் முதலாளியுமான வெங்கடேச பண்ணையார் வீட்டில் தொட்டாட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தாள். அவளின் மகள் தான் சரளா, அழகு மட்டும் அல்ல, நல்ல ஒழுக்கமான குணமும் உடையவள். உயர் வகுப்பில் கலைப் பாடம் பயின்றுகொண்டு இருந்தாள். அவளது வகுப்பில் ஒரு கெட்டிக்கார மாணவியும் கூட. சரளா தனது உயர் பாடசாலைக்கு வயல் வெளிக்கூடாக நடந்து போகையில், பாலர் பாடசாலை இளம் ஆசிரியர் சுரேஷை காண்பது ஒரு வழமையாகிவிட்டது. இருவரும் வெவ்வேறு திசையில் சென்றாலும், ஒருவரை ஒருவர் கடக்கும் பொழுது சிறு புன்முறுவலுடன் அந்த சந்திப்பு தொடங்கியது. போகப்போக 'ஹலோ , எப்படி இன்று?' என ஓர் இரு வார்த்தைகளாக அது விரிவடைந்தது. அந்த காலகட்டத்தில் தான் வெள்ளத்தால் கனகம்மா குடும்பம் பாதிக்கப்பட்டது. அவர்களின் குடிசை வீடு தாழ்நிலப் பகுதிகளில் அமைந்து இருந்ததால், அங்கு அவர்களின் வீட்டுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துவிட்டது. எனவே கனகம்மா வெங்கடேச பண்ணையாரிடம். அவர்களின் பின் வளவில் தேவையற்ற அல்லது பாவனையில் தற்சமயம் இல்லாத சாமான்கள் மற்றும் கருவிகள் வைக்க அமைக்கப்பட்டிருந்த சரக்கு அறை ஒன்றில் ஓர் சிலநாட்கள் தானும் மகளும் தங்க இடம் கேட்டார். கேட்டது தான் தாமதம், பண்னையார் 'உங்களுக்கு எல்லாம் வேலை தந்ததே பத்தாது, இப்ப ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த மாதிரி ... ' கனகம்மாவிடம் சீறி பாய்ந்தார். அவரிடம் எள்ளளவும் கருணை நெஞ்சில் இருக்கவில்லை. சக மனிதர்களை மதிக்கும் எந்த பண்பாடும் அங்கு வறண்டு போய், பணத்திமிர் மட்டுமே பெரிதாக தெரிந்தது. கனகம்மா ஒன்றும் பேசவில்லை. பண்ணையார் மிகுதி பேசி முடிக்கும் முன்பே, அங்கிருந்து புறப்பட்டு விட்டாள். 'எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே! நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை!' கனகம்மா கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்தபடி, வேலையையும் இடையில் அந்தந்த படி விட்டுவிட்டு தன் குடிசை நோக்கி புறப்பட்டாள். அவளைப் பொறுத்தவரையில் இனி அங்கு வேலை செய்து பிழைப்பதை விட, பிச்சை கூட எடுக்கலாம் போல இருந்தது, எனினும் அவள் உழைத்து வாழ்வதையே விரும்புவாள். தாய் நேரத்துடன் வேலையில் இருந்து வருவதையும், தாயின் முணுமுணுப்பையும் கவனத்த சரளா, வீட்டுக்குள் வந்த வெள்ளத்தை, வெளியே தள்ளுவதை நிறுத்திவிட்டு, தாயின் முகத்தைப் பார்த்தாள். கண்ணீர் அவள் இரு கன்னத்தால் வடிந்து மார்பை நனைப்பதை பார்த்தாள். "கருங்கால் வெண்குருகு மேயும் பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே" தாயின் கண்ணீர் நிறைந்து அவளது முலைகளின் இடைப்பகுதி நாரைகள் மேய்கின்ற குளம் போல் ஆகிவிட்டது. அவளுக்கு தாயின் நிலை புரிந்துவிட்டது. ' அம்மா, சுரேஷ் மாஸ்டரை நான் கேட்கப் போகிறேன். அழவேண்டாம். அவர் கட்டாயம் உதவிசெய்வார்' அவள் மனதில் தானாக ஒரு நம்பிக்கை வந்தது. சுரேஸுடன் இது வரை பெரிதாக கதைக்கவில்லை என்றாலும், இருவரின் உள்ளங்களும் பல கனவுகள் கண்டு தங்களுக்குள் தாங்களே பேசியதை யாரும் அறியார்கள். இதை தாயிடம் கூறிவிட்டு, சுரேஷின் வீட்டை நோக்கி புறப்படும் பொழுது, அவளது முகமும் முழுமதியாக ஒளிர்ந்தது. பிரமன் அளந்து தான் செதுக்கியிருக்க வேண்டும் அப்படி ஒரு அழகு அவளில் மின்னியது. "நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், மயில் ஓரன்ன சாயல், செந் தார்க் கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், 5 பாவை அன்ன வனப்பினள் இவள்'' என, காமர் நெஞ்சமொடு பல பாராட்டி, யாய் மறப்பு அறியா மடந்தை தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே." நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற் போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயிலின் ஒரு தன்மை யொத்த சாயலையும்; கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒரு தன்மை யொத்த சொல்லையும்; பருத்த தோளையும்; கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடைய...அகிலின் நெய் பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள் போல், என்றும் இல்லாதவாறு இன்று ஏனோ இப்படி அவள் அழகு தேவதையாக இந்த வெள்ளத்தின் நடுவிலும் இருந்தாள். ஆமாம் அவள் மனதில் காதல் வெள்ளம் நெருங்குகின்றது போல ஒரு உணர்வு போலும், யார் அறிவார் பராபரமே? அவள் யாரை நினைத்துக்கொண்டு இவ்வளவு காலமும் காத்திருந்தாளோ, அவனை சந்திக்கப்போகிறாள். "உள்ளின் உள்ளம் வேமே உள்ளா திருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி வான்றோய் வற்றே காமம் சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே !" மாறனோ அம்புமேல் அம்புபொழிகிறான். காமமோ வானளாவப் பெருகிவிட்டது. அவனை நினையாதிருக்கவும் அவளால் முடியவில்லை. அப்படி நினைத்தாலும் அவள் மனம் வேதனை அடைகிறது, அதை தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை என்று இது வரை காலமும் இருந்தவளுக்கு இப்ப அவனை இன்னும் சிறிது நேரத்தில் சந்திக்கப் போகிறாள், உதவி ஒன்று கேட்கப் போகிறாள் என்றால் எப்படி இருக்கும்?.அந்த பூரிப்பில் அவள் அழகு மேலும் மேலும் மெருகேறியது .ரம்பை, ஊர்வசியை விட மிக சிறந்த மற்றொரு அழகியை பிரம்மா படைத்தார். அது தான் திலோத்துமை. அப்படித்தான் இவளும் இருந்தாள். "பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை" என்ற பழைய வெள்ளித்திரை பாடல் வரிகள் நெஞ்சில் வந்து மோத, சரளா சுரேஷின் வீட்டு கதவை தட்டினாள். சுரேஷின் தாயும் தங்கையும் கதவை திறந்தார்கள். அவர்களுக்கு இவளை பெரிதாக தெரியா விட்டாலும், சுரேஷ் பட்டும் படாமல், இவளைப்பற்றி தங்கையிடம் முன்பு கூறியிருந்தால், அவளை உள்ளே வந்து அமரும் படி அழைத்து, வந்த காரணம் என்ன வென வினவினார். அவள் மௌனமாக இருந்தாள். எனவே, சுரேஷ் வீட்டின் பின்பக்கம் உள்ள தனது மட்பாண்டம் செய்யும் குடிசைக்குள் இருப்பதாகவும், தான் போய் கூட்டி வருவதாகவும் தங்கை புறப்பட்டாள். சுரேஷ் ஓய்வு நேரத்தில் ஒரு சிறு தொழிலாக மட்பாண்டங்கள் செய்வது சரளாவுக்கு இதுவரை தெரியாது. சுரேஷ் வந்ததும் சரளா தங்கள் குடும்பத்தின் நிலையை எடுத்து கூறினாள். சுரேஷ் பதில் சொல்ல முன்பே, அவனின் தாய், ' தாராளமாக இங்கு வந்து தங்கலாம், மற்றும் உங்க அம்மா, வேறு வேலையை தேடாமல், இங்கேயே சுரேஷின் இந்த வேலைக்கு உதவலாம். அதுவும் ஒரு முழுநேர வேலையாக மாறும் தானே?' என்று படபட என்று கூறி முடித்தாள். நாளடைவில், இரு குடும்பங்களின் பந்தம் அவர்களின் கிராமத்தைச் சூழ்ந்திருந்த பழமையான மரங்களின் வேர்களைப் போல வலுவாக மாறியது. அதேவேளை சரளா சுரேஷ் காதலும் தங்கு தடையின்றி நெருக்கமாக வளர்ந்தது. அவர்கள் இருவரும் சாதாரண பின்னணியை கொண்டு இருந்தாலும், இருவரும் பெரும் கனவுகளைக் தன்னகத்தே கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் திறன்களில் அசைக்க முடியாத நம்பிக்கையும், ஒரு சிறந்த வாழ்க்கை பற்றிய பார்வையையும் கொண்டு இருந்தனர். ஒரு நன்னாளில், கிராமத்து மக்கள் புடைசூழ இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்கள் இருவரின் அசைக்க முடியாத நம்பிக்கையும் குடும்பங்கள் இரண்டினதும் அயராத முயற்சியும் பலனைத் தரத் தொடங்கியது, அவர்களின் வாழ்க்கை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. சரளாவின் கலைபடைப் பாற்றலும், சுரேஷின் சமயோசிதமும் ஒரு வினோதமான மட்பாண்டக் கடையை விரைவில் கிராமத்தின் மையமாக மாற்ற வழிவகுத்தது. அவர்களின் கைவினைப் படைப்புகள், அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ஊடுருவி, தொலைதூர மக்களின் கண்களைக் கூட கவர்ந்தன. விரைவில் சுரேஷ் ஆசிரியர் பணியில் இருந்து ஒதுங்கி, முழுநேர சிறு தொழில் முதலாளியாக மாறினான். விதி அவர்களைப் பார்த்து புன்னகைத்ததோ இல்லையோ, அவர்களின் வணிகம் செழித்தது, ஒரு காலத்தில் அவர்களின் அடக்கமான ஏழ்மை வாழ்க்கையை எள்ளிநகையாடியோர் அவர்களின் வளர்ச்சியைக் கண்டு கொஞ்சம் சஞ்சலம் அடைந்தார்கள். ஆனால் அவர்களோ தங்கள் வெற்றியின் மத்தியிலும், சரளாவும் சுரேஸும் பணிவுடன் வேரூன்றி இருந்தனர், அவர்கள் தங்கள் தாழ்மையான வாழ்வின் தொடக்கத்தை ஒருபோதும் மறக்கவில்லை. அவர்களின் செல்வம் அவர்களின் இதயங்களை மாற்ற வில்லை; மாறாக, அது கருணைக்கான அவர்களின் திறனை விரிவுபடுத்தியது. அவர்களின் கடந்த கால போராட்டங்களை நினைவுகூர்ந்து, தேவைப் படுபவர்களுக்கு ஆதரவளிக்கும் கலங்கரை விளக்கங்களாக மாறினர். அவர்கள் போராடும் விவசாயிகளுக்கு உதவினார்கள், பின்தங்கிய குழந்தைகளுக்கான கல்விக்கு நிதியுதவி செய்தனர், மேலும் ஏழைகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினர். அவர்களின் செயல்கள் அவர்களின் செல்வத்தை விட சத்தமாக எங்கும் எதிரொலித்தது, அவர்களின் தாராள மனப்பான்மையை மற்றவர்களை பின்பற்ற தூண்டியது. அவர்கள் பள்ளிகளைக் கட்டினார்கள், சமூகத் திட்டங்களுக்கு நிதியுதவி செய்தார்கள், மேலும் முழு கிராமத்திற்கும் நம்பிக்கையின் சின்னங்களாக மாறினர். அவர்களின் கதை வெகுதூரம் பரவியது மட்டும் அல்ல, அவர்களை இந்த நிலைக்கு தள்ளிய, தூண்டிய வெங்கடேச பண்ணையாரின் பெயரும், குறிப்பாக மற்றவர்களின் அவலத்தை அலட்சியப் படுத்தியதற்காக மக்களிடம் பரவலாக பரவத் தொடங்கியது. சரளா மற்றும் சுரேஷின் பரோபகாரத்தால் தீண்டப்பட்ட வெங்கடேச பண்ணையார், தன் குறையை உணர்ந்து தனக்கே உரித்தான ஒரு மாற்றத்தை தன்னில் ஏற்படுத்தினார். செல்வத்தின் உண்மையான சாரத்தை அவருக்குக் காட்டிய சரளா சுரேஷ் தம்பதியினரால் ஈர்க்கப்பட்டு, சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் அவர் தனது வளங்களைத் திருப்பி அமைக்க தொடங்கினார். "எங்களுக்கும் காலம் வரும்" என்று செய்து காட்டியது மட்டும் அல்ல, வறட்டு கௌரவத்துடன் பணப்பெட்டி தான் வாழ்வு என்று இருந்தோரையும் அவர்களின் கதை திருப்பி பார்க்க வைத்தது. "எங்களுக்கும் காலம் வரும், அந்த நாள் இனிய வாழ்வாகும்! உண்மையை மறக்காமல் முன்னுக்கு போவோம் ஊருடன் சேர்ந்து சுமைகளை சுமப்போம்!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  9. "பொறுப்பற்ற ஒரு ஊதாரி கணவன்" இலங்கையின் வடமாகாணத்தில், மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களை எல்லைகளாக கொண்ட , பசுமையான மற்றும் சுறுசுறுப்பான மக்கள் நடமாட்டம் கொண்ட வவுனியா நகரின் மத்தியில், கவிதன் என்ற இளம் குடும்பத்தர் ஒருவர் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு ஊதாரித்தனமான கணவன் மட்டும் அல்ல, சுயநலமி, பொறுப்பற்றவன், அளவு கடந்து பொய் சொல்பவனாகவும் கவலையற்ற இயல்பு உடையவனாகவும் இருந்தான். அவனது மனைவி ஆதிரா, பொறுமை மற்றும் கருணையின் உருவகமாக இருந்ததுடன் எல்லா சூழ்நிலைகளிலும், எவ்வளவு கடினமாக இருந்தாலும் கணவனின் குறையை, குடும்பத்தின் பலவீனத்தை வெளியே காட்டாமல் சமாளித்து வாழ்வை கொண்டு இழுத்தாள். தான் சம்பாதித்த அல்லது சம்பாதிக்காத பணத்தை எவன் ஒருவன் எளிதில் கவலையே படாமல் ஊதி காற்றில் பறக்க விடுவது போல செலவு செய்வானோ அவன் தான் ஊதுற+தாரி = ஊதாரி அது இவனுக்கு நன்றாக பொருந்தும். ஒவ்வொரு முறையும் அவன் பொறுப்பற்று செலவழித்துவிட்டு திரும்பி வரும் பொழுது, கடிந்து கணவனை பேசினாலும், அவனைக் கண்டதும், கட்டித்தழுவி முத்தமிட்டு, அந்த அன்பின் நெருக்கத்தினால், குடும்பத்தை பலப்படுத்தி, அவனை திருத்தலாமா என்று பார்ப்பாளே தவிர, ஒரேயடியாக விலத்தி, குடும்பத்தில், மகளின் வாழ்வில் ஒரு விரிசலும் ஏற்பட விடமாட்டாள். அவர்களின் மகள் சிறுமி நிலா அவர்கள் வாழ்க்கையில் சூரிய ஒளியின் ஒளிக்கற்றையாக இருந்தாள். அவளுடைய சிரிப்பு அவர்களின் சஞ்சலமான வீட்டிலும் எதிரொலித்து, அவர்களின் மந்தமான நாட்களையும் பிரகாசமாக்கியது. ஆனால், கவிதன் தன் மகளை எவ்வளவு நேசித்தாலும், பொறுப்பு என்று வரும் பொழுது என்றும் தடுமாறினான். தந்தை மகள் உறவு மிகவும் அபூர்வமானது, பலகீனமானதும் கூட தந்தை மகள் உறவு பலமாக இருக்குமானால் குடும்பம் சிறந்து விளங்கும் .தந்தை மகள் உறவு மேலோங்க மகள் மனதில் தந்தை ஒரு உதாரண புருஷராக, ஹீரோவாக பதிந்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் இங்கு ஒரு பெரும் குறையாக இருந்தது. கவதன் வேலைக்கு போய், ஒழுங்காக உழைத்து குடும்பத்தை காப்பாற்றி மகிழ்வாக வைத்திருப்பதை விட, தன் நண்பர்களுடன் ஊர் ஊற்றாக சுற்றி , இருப்பதையும் செலவழித்து பொழுது போக்குவதிலேயே கூடுதலான காலத்தை செலவளித்தான். பெரும்பாலும் ஆதிராவின் தோள்களில் எல்லா பொறுப்பின் பாரத்தையும் விட்டு விட்டுச் சென்றுவிடுவான். தான் விரைவில் திரும்பி வருவேன் என்று உறுதிமட்டும் தாராளமாக சத்தியம் கூட செய்து கொடுப்பான். ஆனால் எல்லாம் காற்றில் பறந்துவிடும். என்ன இருந்தாலும் தந்தையை ஹீரோவாகவோ வில்லனாகவோ சித்தரிக்கும் பொறுப்பு தாயிடம் நிறைய உள்ளது என்பதை ஆதிரா நன்கு உணர்வாள். ஒரு நாள் அவன் திருந்துவான் என்ற நம்பிக்கையில், "உனது தந்தை உழைப்பாளி எப்படியும் சாதித்து காட்டுவார், பாவம் அவரின் போதாத காலம் இப்படி அவரை அலைக்கழிக்கிறது . உன்னை இதுவரை ஆளாக்கியது, உன் அப்பாவின் உழைப்புதான், கெட்டக்காலம், கெட்ட நண்பர்களின் கூட்டு இப்படி ஆக்கிவிட்டது. என்ன இருந்தாலும் உன் அப்பா சிறந்த மனிதர்தான் – மகளே” என கூறி மகளின் மனதில் தந்தை பற்றிய உணர்வை உயர்வான இடத்தில் வைத்துக்கொள்வாள். ஆனால் அவளின் உள்மனதில் அவனின் செயல்கள் நெருப்பாக எரிந்துகொண்டு தான் இருக்கும். குடும்ப பலத்தின் தூணான ஆதிரா, இரு பெற்றோரின் பாத்திரத்தை ஏற்று, உண்மையில் தாயும் தந்தையாய், நிலாவுக்கு ஒன்றும் குறையாமல் இருப்பதை உறுதி செய்தாள். அவள் தனது அரவணைப்பு, அன்பு மற்றும் போதனைகளால் வீட்டை மகிழ்வாக ஒரு குறையும் இல்லாமல் நிரப்பினாள், அதற்கு அவளின் நல்ல சம்பளத்துடன் கூடிய மதிப்பான உத்தியோகமும் துணையாக இருந்தது. அது நிலாவை கனிவான இதயம் மற்றும் நெகிழ்ச்சியான இளம் பெண்ணாக இதுவரை வடிவமைத்தது. என்றாலும் ஊதாரியான ஆனால் தந்தையின் நல்ல வியாபார நிலையத்தின் உயர் பதவியில் இருக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்ட அழகும், அன்பும், அறிவும் நிறைந்த பெண்ணான ஆதிராவின் வாழ்க்கை, பணப்பிரச்சனையால் பாதிக்கப்படாவிட்டாலும், மகளின் வருங்கால வாழ்வை தந்தையின் போக்கு கெடுத்துவிடுமோ அல்லது இடைஞ்சலாக மாறுமோ என்பது தான் ஆதிராவின் முழுக்கவலை. வருடங்கள் கடந்தன, தந்தையின் பழக்கத்தில் எந்த மாற்றத்தையும் நிலா காணவில்லை. என்றாலும் உதாரித்தனத்தை விட வேறு எந்த கெட்ட பழக்கமும் தந்தையிடம் இல்லை என்பது ஒரு ஆறுதலாக மட்டுமே அவளுக்கு இருந்தது, மற்றும் படி அவளின் தந்தை மேல் உள்ள பாசம் குறைய குறைய தொடங்கியது மட்டும் அல்ல, அவளுக்கு தாயின் நிலையை பார்த்து பார்த்து கல்யாணத்தில் கூட ஒரு வெறுப்பு அடிமனதில் பதியத் தொடங்கியது. எது என்னவென்றாலும் அவள் தந்தையுடன் பகிர்ந்து கொண்ட சின்ன சின்ன தருணங்களை அவள் மிகவும் நேசித்தாள், ஆனாலும் தந்தையின் ஒரு நிலையான இருப்பை அல்லது பிடிப்பை நம்பாமல் இருக்க கற்றுக்கொண்டாள். இது ஆதிராவுக்கு மேலும் மேலும் கவலையை கொடுத்துக் கொண்டே இருந்தது. கவிதானின் கெட்ட சகவாசம் அவனை வெகுதூரம் அழைத்துச் சென்றன, ஆனால் ஒவ்வொரு முறையும் எதோ சாட்டு சொல்லிவிடுவான். இறுதியில் தந்தையும் அவனை தன் வியாபார நிலையத்தில் இருந்து பதவி நீக்கினார். என்றாலும் தான் மருமகளுக்கும் பேத்திக்கும் எந்த பண உதவியும் செய்வேன் என்று ஆதிராவுக்கு உறுதியளித்தார். ஆனால் ஆதிரா அதை நிராகரித்து, ஒரு சிறிய வீடு ஒன்றை தன் பணிமனைக்கு அருகில் எடுத்து அங்கு போய்விட்டாள். கவிதன் அப்பொழுது தூர நகரம் ஒன்றில் நின்றதால், அவள் அவனுடன் இதைப்பற்றி கலந்து ஆலோசிக்கவில்லை. அது மட்டும் அல்ல, அவளுக்குள்ளும் ஒரு வெறுப்பு வளர்ந்துவிட்டது. அவளின் உழைப்பு தாராளமாக ஒரு சாதாரண வாழ்வுக்கு காணும். அவளின் கவலை இப்ப மகள் நிலா மட்டுமே! குறிப்பாக அவளின் மாற்றம் வேதனை கொடுத்துக்கொண்டே இருந்தது. கவிதன் தன் பதவி நீக்களையும், மனைவியும் மகளும் தனிக் குடித்தனம் போனதையும் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டான். அப்பொழுதுதான் அவன் முதல் முதல் உண்மையில் கண்ணீர் வடித்ததுடன் ஒரு வருத்தம், துன்பம் அவனைப் பற்றிக் கொண்டது. தனக்கும் தன் குடும்பத்துக்கும் இடையில் ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத தூரத்தை உணர்ந்தான். அன்று மாலை, அவன் தங்கியிருந்த அந்த தொலைதூர நகரத்தில் பரபரப்பான சந்தைகளில் தன்னந்தனியாக அலைந்து திரிந்தபோது, ஒரு தந்தை தனது மகளை கூட்டத்தின் வழியாக அன்பாக வழிநடத்துவதைக் கண்டான். ஆதிரா மற்றும் நிலாவின் ஞாபகத்தை அந்த காட்சி எழுப்பியதுடன் உடனடியாக அவர்களிடம் போக வேண்டும் என்ற ஆழ்ந்த ஏக்கத்தையும் கவிதனுக்குள் அது ஏற்படுத்தியது. அதனால் அவன் உடனடியாக கிடைத்த அடுத்த சந்தர்ப்பத்தில் வவுனியா திரும்பினான். அவன் திரும்பி வந்ததும், நிலா வயது முதிர்ந்த நிலை போல இருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். ஆதிரா தன் கண்களில் நீருடன் அவனை வரவேற்றாலும் மௌனமாக தன் மகளுடன், மகளின் அறைக்குள் போய் கதவை மூடிவிட்டாள். என்றாலும் அறைக்குள் இருந்த படியே சாப்பாடு குளிரூட்டிக்குள் எடுத்து சாப்பிட்டு மற்ற அறையில் உறங்கலாம் என்று மெதுவாக கூறிவிட்டு, தன் அறையின் மின் ஒளியை அணைத்தாள், என்றாலும், நிலா, ஏதாவது தந்தை செய்வாரோ என்ற ஒரு எச்சரிக்கையாக தாயுடன் உறங்கினாள். மகளின் தோற்றத்தில், மனைவியின் நடத்தையில் கவிதன் தன்னைப்பற்றி முதல் முதல் சிந்திக்கத் தொடங்கினான். அவனுக்கு நித்திரை வரவே இல்லை. விடியும் வரை அறைக்கு போகாமல் கதிரையில் இருந்தான். பின் நிலாவின் படத்தை அருகில் எடுத்து வைத்து பார்த்தபடி ஏதேதோ கதைக்கத் தொடங்கினான். தான் புறக்கணித்த பந்தத்தின் ஆழத்தையும், தான் ஏற்படுத்திய வலியையும் உணர்ந்தான். அவனின் முணுமுணுப்பைக் கேட்டு நிலா தன் அறையில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தாள். தந்தையின் கண்ணீரை இது தான் அவள் முதல் முதல் காணுகிறாள். அவள் ஓடோடி வந்து தந்தையின் மடியில் இருந்து , அவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். இந்த ஆரவாரம் கேட்டு ஆதிராவும் வெளியே வந்தாள். கணவரும் மகளும் ஒன்றாய் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாள். நாளடைவில், மெதுவாக ஆனால் நிச்சயமாக, கவிதன் நிலாவின் ஆதிராவின் நம்பிக்கையை மீண்டும் சம்பாதிக்க ஆரம்பித்தான். அதன் பின் அவர்களுக்கிடையில் பகிரப்பட்ட தருணங்கள் மற்றும் இதயப்பூர்வமான உரையாடல்கள் மூலம், ஒரு புதிய அத்தியாயத்தை கண்டுபிடித்தனர். அது அவர்களின் உறவை குணமடைவதற்கான நல்ல பாதையில் இருந்து, மகள் மீதான அவனது அன்பு அவனை முன்னோக்கி செலுத்தியது. இதற்க்கு ஆதிரையின் விட்டுக் கொடுப்புகளும் ஒரு காரணமாக அமைந்தது. சூரியன் வவுனியாவில் அஸ்தமிக்கும் போது, வானத்தை ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களால் வரைய, குடும்பம் ஒன்றாக - கவிதன், ஆதிரா மற்றும் நிலா - அவர்களின் வீட்டு முற்றத்தில் கலகலப்பாக அமர்ந்திருந்தனர். மென்மையான மாலை காற்றுக்கு மத்தியில், சிரிப்பு மீண்டும் ஒருமுறை அவர்களது வீட்டை நிரப்பியது, அன்பு மற்றும் புரிதலின் மீது கட்டப்பட்ட எதிர்காலத்தின் வாக்குறுதியை அது சுமந்தது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. "உன்னைச் செதுக்கு" உலகைப் புரிந்து உன்னைச் செதுக்கு உண்மை அறிந்து உளியைப் பிடி உங்கள் மதிப்புகளை கவனமாகப் பதித்து உயிராகப் பண்பாட்டை வார்த்து எடு! ஞாழல் மணமாய் பண்பு கமழ ஞாயமான வழியைத் தேடி அமைத்து ஞானம் கொண்டு அலசிப் பார்த்து ஞாலத்தை சரிப்படுத்த ஆன்மாவை வடிவமை! பூமி ஒரு சுழலும் சூறாவளி நவீன வாழ்க்கையின் தாளம் அது மாற்றம் அலை போல நிலைக்காது சமூகத்தை இணைத்தாலும் இதயங்கள் விலகிவிடும்! வெறுப்பை மூழ்கடித்து பயத்தை அமைதிப்படுத்தி ஒற்றுமை நிலைநாட்டி பிரிவை அகற்றி கருணை பாசம் இரண்டுடனும் வளர்த்து மனிதத்தை சீராக்கு மானிடம் உயரவே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  11. "வாடகை வீடு..!" இலங்கையின் துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில் கவி என்ற இளைஞன் இருந்தான். அவன் உயரமானவன், வசீகரிக்கும் புன்னகை மற்றும் சாகச மனப்பான்மையுடன் மக்களை சிரமமின்றி தன்னிடம் ஈர்த்தான். கவி, தனது உயர் படிப்பைத் பேராதனை பல்கலைக்கழகத்தில் தொடரும் போது தங்குவதற்கு ஒரு இடத்தைத் கண்டியில் தேடி, அமைதியான சுற்றுப்புறத்தில் அமைந்திருந்த ஒரு விசித்திரமான வீட்டைக் கண்டான். உரிமையாளர் திரு ராஜன் அவனை அன்புடன் வரவேற்று வாடகைக்கு தனது வீட்டில் ஒரு அறை கொடுத்தார். திருவாளர் ராஜன் கண்டியில் பெரும் வர்த்தகராகும். அவர் நுவரெலியாவில் தேயிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்த பெற்றோருக்கு ஒரே மகனாக இரு சகோதரிகளுடன் பிறந்து, லைன் அறை குடிசையில் [வரிசை வீடு ஒன்றில்] தனது வாழ்வை ஆரம்பித்தவர். என்றாலும் கடுமையான உழைப்பால், விடா முயற்சியால் இன்று பெயர் சொல்லக் கூடிய செல்வந்தவர்களில் ஒருவராக திகழ்ந்தாலும், தன் பழைய வாழ்வை மறவாத பெருந்தகையும் ஆவார். அதனால்த் தான், கல்வியின் மேல் உள்ள கவியின் ஆவலைப் பார்த்தும், மற்றும் அவன் அவருடன் ஆற்றிய உரையாடலில் தெரிந்த பண்பாட்டை பார்த்தும், அவனுக்கு ஒரு அறை ஒதுக்க தீர்மானித்தார். மற்றும்படி அவரின் வீடு பெரிதாக இருந்தாலும், வாடகைக்கு விடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. வாடகை வீடு எடுக்க அவன் கண்டியில் ஏறி இறங்கிய அனுபவத்தை அவன் இன்னும் மறக்கவில்லை. அதிலும் அந்த கடைசி வீடு, அவர்களுக்கே போதுமானதாக இல்லா விட்டாலும், அவர்களின் தோட்ட வாழ்வின் நிலைமை காரணமாக, அவனுக்கு அறை ஒன்று கொடுக்க சம்மதித்தது இன்னும் ஞாபகத்துக்கு வந்தது. என்றாலும் இரு சின்ன பிள்ளைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி என ஒரு கூட்டு குடும்பமே அதற்குள் முடங்கி வாழ்வது கட்டாயம் அமைதியான படிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால், எதோ சாட்டுச் சொல்லி தட்டிக்கழித்து விட்டான். அதை அவனால் இன்னும் மறக்க முடியவில்லை. ஒருவேளை தான் அதை எடுத்து இருந்தால், அவர்களின் வாழ்வில், அந்த வாடகைப் பணத்தால், கொஞ்சம் முன்னேற்றம் கண்டு இருக்கலாம் என்பது மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. "சின்னஞ் சிறுசுகளை பேத்தியாருடன் லைன் குடிசையில் விட்டுவிட்டு, மலைஉச்சியில் தேயிலைக் கொழுந்தை அலைந்து அலைந்து பறித்து எடுத்து, கோதுமை ரொட்டியும் சாம்பலும் அரை வயிறுக்கு நிரப்பிக் கொண்டு, உறங்கிடும் மழலைக்கு தாய்ப்பாலை ஊட்டுவார் - கால் நீட்டி இளைப்பாறுவார், ஓடுவார் - மீண்டும் அடுத்தநாள் மலைக்கே, வாழ்க்கையின் சக்கரம் இது ஒன்றே!" என்ற கவிதை வரி அவன் மனதில் மலர்ந்து மலை நாட்டு தமிழரின் இன்ப துன்பங்களின் வெளிப்பாடாக அது இருந்தது. ராஜன் முதலியாரின் அந்த வீடு தன் தலைக்கு மேல் கூரையாக மட்டும் மாறாமல் காதல் மற்றும் சவால்களின் எதிர்பாராத பயணத்திற்கு தன்னை அழைத்துச் செல்லும் என்று கவிக்கு அன்று தெரியாது. ராஜன் முதலியாருக்கு மீரா என்ற மகள் இருந்தாள், அவளுடைய அழகும் புத்திசாலித்தனமும் நாளடைவில் கவியின் கவனத்தை ஓரளவு ஈர்த்தது என்றாலும், அவன் அதை வெளிக்காட்டவில்லை. அவனின் நோக்கம் எல்லாம் அமைதியான சூழலில் படிப்பை தொடருவது மட்டுமே. ஒரு நாள் மாலை மீரா தனது உயர் கல்லூரி வகுப்புகளை முடித்து வீடு திரும்பியபோது, நேரடியாக இருவரும் சந்தித்தனர். அவள் ஒரு புன்முறுவலுடன், ' நீங்க கொஞ்சம் பிரீ என்றால், எனக்கு ஒரு கணக்கு புரியவில்லை, விளங்கப் படுத்துவீர்களா?' என்று கேட்டபடி மாடிக்கு போய்விட்டாள். எனவே அவன் அவளின் கேள்வியை பொருட் படுத்தவில்லை. அவனும் தன் அறைக்கு போய்விட்டான். ஆனால் ஒரு மணித்தியாலத்தின் பின், தனது அறைக் கதைவை யாரோ தட்டுவது கேட்டு, கவி திறந்தான். அங்கே முதலியார் ராஜனின் மனைவி நின்றார். ' சாரி, தம்பி நீங்க பிரீ என்றால், மீராவுக்கு எதோ பாடம் விளங்கவில்லையாம், கொஞ்சம் சொல்லிக்கொடுக்க முடியுமா?', என்று கேட்டார். அவன் கொஞ்சம் யோசித்து விட்டு, ஒரு அரை மணித்தியாளத்தால் அனுப்புங்க என்றான். ' இல்லை, நீங்க மேலே வசதியாக படிக்கும் அறை இருக்கு, அங்கு வந்தால் நல்லது தம்பி' என்று இழுத்தார். அவன் ஓகே என்றுவிட்டு தன் அறைக்குள் உடன் போய்விட்டான். "கொழுந்து கிள்ளும் கோதையர்க்கே மாலைசூடுங்கள் - அவர்கள் கோடி செல்வம் தேடித்தரும் திறனைப்பாடுங்கள்! விழுந்தெழுந்து தளர்ந்திடாமல் மலைச்சரிவிலே - கொழுந்தை விரைந்தெடுக்கும் விரலசைவின் அழகைக் கூறுங்கள்!" எங்கேயோ கேட்ட ஒரு பாடல் அவனுக்கு நினைவு வந்தது. அதை மனதில் ரசித்தபடி, மேல்மாடிக்குப் போனான். படிப்பு அறை ஒரு சிறு நூல்நிலையம் மாதிரி, பல விதமான புத்தகங்களுடன் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. ' நன்றி' என்று மெல்லிய குரலில் கூறியபடி, தனது சந்தேகத்தை நேரடியாக, உடனடியாகவே கேட்கத் தொடங்கினாள். அவனும் வந்த வேலையை முடித்துவிட்டு போவோம் என்று, உடனடியாகவே பாடத்தை விளங்கப்படுத்த தொடங்கினான். என்றாலும் கண்கள் நாலும் மௌனமாக ஏதேதோ பேச மறக்கவில்லை. கண்களுக்கு தெரியுமா அது காணப்போகும் பிரச்சனைகள்? 'மையோ மரகதமோ மரிகடலோ மலை முகிலோ அய்யோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான் அவன் நிறம் மையோ, பச்சை நிற மரகதமோ, மறிக்கின்ற நீலக்கடலோ, கார்மேகமோ, ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவை கொண்டு உள்ளானே' ............ என்று அவளின் இரு கண்களும், ‘கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம் வெல்லும் வெல்லும்' என்ன மதர்க்கும் விழி கொண்டாள்; சொல்லும் தன்மைத்து அன்று அது; குன்றும், சுவரும், திண் கல்லும், புல்லும், கண்டு உருக, பெண் கனி நின்றாள்’ கொல்லும் வேலையும், கூற்றத்தையும் வெல்லும் என்னுமாறு இவளது விழி மதமதத்து, இவளது அழகைக் கண்டு குன்று, சுவர், கல், புல் அனைத்தும் உருகுமாறு கனியாகி நிற்கிறாள் என்று அவனும் ..... இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். நாட்கள் வாரங்களாக மாற, கவி மீரா இருவரும் வெளிப்படையாகவே காதலிக்க தொடங்கிவிட்டார்கள். அவர்கள் அடிக்கடி பேசாத வார்த்தைகளால் நிரப்பப்பட்ட பார்வைகளைப் பரிமாறிக் கொள்வார்கள், மேலும் அவர்களின் உரையாடல்கள் சிரமமின்றி படிப்பித்தல், பாடம் கேட்கிறேன் என்ற நிகழ்ச்சிகளுக்குள் பின்னிப்பிணைந்து இருந்தன. இருப்பினும், அவர்களின் மலர்ந்த காதல் தடைகள் இல்லாமல் இல்லை. மீராவின் குடும்பம் பாரம்பரிய மலையக மதிப்புகளை தன்னகத்தே கொண்டு, தங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக வைத்திருந்தது. அவர்களின் மனதில் எதோ ஒரு மூலையில் யாழ் மேலாதிக்கம் பற்றிய தவறான புரிந்துணர்வு குடிகொண்டு இருந்தது. உண்மையில் யாழ் மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். உண்மையில் யாழ் மேலாதிக்கம் என்பது பொதுவாக யாழ் மக்களை குறிக்காமல் அந்த சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகள் கொண்டிருக்கின்ற இனமேலாதிக்க கருத்தியலை குறிக்கின்றது என்பதே சரியானதாகும். ஆனால் அதை புரியும் அறிவு ராஜன் குடும்பத்தாரிடம் இருக்கவில்லை. மேலும் தங்கள் மகளை, தங்களுடைய வீட்டில் தற்காலிகமாக வசிக்கும் ஒரு குடியிருப்பாளன் காதலிப்பது ஒரேயடியாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. முதலியார் ராஜன், கவியை விரும்பினாலும், அவனின் குடும்பம் பற்றி சரியாகத் தெரியாதது ஒரு தடையாகவும் இருந்தது. எனவே தன் மகளிடம் கவியில் இருந்து விலகி இருக்கும் படி அறிவுறுத்தினார். அத்துடன் கவியையும் தங்களுக்கு விருந்தினர் சில மாதங்களுக்கு வருவதாகவும், வேறு வீடு பார்க்கும் படி கூறினார். என்றாலும் உண்மையான காரணத்தை அவனுக்கு கூறவில்லை. ஒரு தற்காலிக ஏற்பாடு என்று அவன் நம்பியதால், அவன் தான் முன்பு கடைசியாக பார்த்த அந்த கூட்டு குடும்ப வீட்டுக்கு, ராஜன் குடும்பத்துக்கு இதுவரை தங்க இடம் கொடுத்ததுக்கு நன்றி கூறிவிட்டு, புறப்பட்டுவிட்டான். ஆனால் மீரா அவனுக்கு விடைகொடுக்க முன்னுக்கு வரவில்லை. அப்பத்தான் அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. என்றாலும் அவன் அதை காட்டிடாமல், விடை பெற்று சென்றான். என்றாலும் மீரா, தன் பூட்டிய அறைக்குள் சாளரத்தினூடாக அவன் போவதையே கண்ணீருடன் பார்த்துக்கொண்டு இருந்தாள். "முதல் பார்வையில் உன்னை அறிந்தேன் மறுபார்வையில் உலகம் கண்டேன் விழி அசைவினில் உன் விழி தேடினேன் கனவினில் திளைத்து காவியங்கள் படைத்தேன் எப்படியும் உன்னை மீண்டும் சந்திப்பேன் தப்பான எண்ணத்தை சுக்கு நூறாக்குவேன்!" என்று அவள் வாய் முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. சவால்கள் இருந்தபோதிலும், மீரா பெற்றோரின் இதயத்தை வென்று அவர்களது அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். கவியின் வாடகை வீடாக இருந்த தங்கள் வீடு, அவனுக்கு நிரந்தர வீடாக மாறவேண்டும் என்பதே இப்ப அவளின் தினப் பிரார்த்தனையாக இருந்தது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. "புதிய ஆரம்பம்" யாழ் குடாநாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத் தொகையை கொண்ட வேளாளர்கள் எந்த போட்டியுமின்றி விவசாயக் காணிகளின் உரிமையாளர்களாக இருந்ததுடன் அவர்கள் குடாநாட்டின் வர்த்தக, நிர்வாக மற்றும் அரசியலில் பிரத்தியேக ஏகபோக பதவிகளையும் வகித்தனர். என்றாலும் பிரித்தானியர் வருகையுடன் மேலாதிக்கச் சாதியின் அதிகாரம் மெல்ல மெல்ல உடையத் தொடங்கியது. அதனால் 20 ஆம் நூற்றாண்டில் பள்ளர், நளவர் என்ற இரு விவசாய ஊழிய சாதிகள் மீதே குறிப்பாக வேளாளர்கள் தம் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தனர். இவ்விரு சாதிகளினதும் ஒன்றிணைந்த சனத் தொகை குடாநாட்டின் மொத்தத் சனத்தொகையின் 18 வீதம் ஆகும். ஆயினும் அதே நூற்றாண்டில் வேளாளர்களுக்கும் பள்ளர், நளவர்களுக்கும் இடையில் இருந்த உறவின் தன்மை அடிமை நிர்பந்தத்திலிருந்து பொருளாதார நிர்பந்தமாக மாற்றம் பெற்றது. உதாரணமாக 1950பதுகளில் தாழ்த்தப்பட்டோரில் பலர் பனங்கூடல்களாகவோ அல்லது தரிசு நிலமான கட்டாந்தரையாகவோ இருந்த வேளாளருக்குரிய காணிகளில் வாழ்ந்து வந்தனர். வேளாளர்களுக்கு உழைப்பையும் தொண்டூழியத்தையும் வழங்கத் தவறினால் காணிகளில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்தில் வாழ்ந்தனர். பொருளாதாரக் கட்டுப்பாடுகள், முறைசாரா அரசியல் கட்டுப்பாட்டோடு இணைந்திருந்தது. தங்களது வாழ்நிலையை உயர்த்துவதற்கு தாழ்த்தப்பட்டோர் முயன்றபோது வேளாளரின் காடையர் குழுக்கள் அவர்களின் குடிசைகளுக்குத் தீவைத்தும், கிணறுகளில் நஞ்சைக் கலந்தும் கொடுமைகளை இழைத்தனர். அப்படியான சூழல் காலம் செல்லச் செல்ல மாற்றம் அடைந்து கொண்டு வந்தது. என்றாலும் இன்றும் சாதிய பாகுபாடுகள் நிகழ்ந்து வருவதும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் சாதியின் அடிப்படையில் மீன்பிடித்தல், கள் இறக்குதல், குப்பை அகற்றுதல், சுத்தம் செய்தல், கூலி வேலைகள் போன்ற பணிகளைச் செய்வதும் தொடர்கிறது. இந்த யாழ்ப்பாண சூழலில் தான், நெல் வயல்களின் அமைதிக்கும் பனை மரங்களின் ஓசைகளுக்கும் மத்தியில் காவியா என்ற இளம் பெண் வாழ்ந்து வந்தாள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த காவியாவின் நாட்கள், வாழ்வதற்கான போராட்டத்தால் நிரம்பி நிறைந்தது. அவளது பெற்றோர் முழு நேரம் வயல்களில் உழைத்தும் சொற்ப வருமானம் மட்டுமே ஈட்டினார்கள், அதே சமயம் காவியா தங்கள் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு முன்னேற்ற வாழ்க்கையைக் கனவு கண்டாள். அது தனக்கும் தன் சமூகத்துக்கும் ஒரு 'புதிய ஆரம்பம்' தரும் என்று திடமாக நம்பினாள். பாகுபாடு மற்றும் கஷ்டங்களை தன் சமூகமும், தன் குடும்பமும் எதிர்கொண்ட போதிலும், காவியா அந்த தலைவிதியை மாற்றுவதற்கான கடுமையான உறுதியுடன் இருந்தாள். அதற்கு கல்வியே அவளுடைய நம்பிக்கையின் விளக்காக இருந்தது. "வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே" கல்வியின் முன்னுரிமை பற்றி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், 'நான்கு பிரிவுகளில் கீழ்க்குலத்தில் பிறந்த ஒருவன் கற்றிருந்தால் மேல்குலத்தில் பிறந்தவனும் அவனிடம் அடக்கமாவான்' என்ற பொன்னான வாசகம் அவள் மனதில் ஒரு தெம்பைக் கொடுத்தது. அதுமட்டும் அல்ல, "மேற்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு" என்ற திருவள்ளுவரின் 'உயர் குடியில் (ஜாதியில்) ஒருவர் பிறந்து படிக்கா விட்டால், கீழ்க்குடியில் பிறந்து படித்துப் பட்டம் பெற்ற வரை விட ஒருபடி தாழ்வே' என்ற அறிவுரை அவளை மகிழ்ச்சியில் மேலும் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும், அவள் தனது கிராம பள்ளியை அடைய தூசி நிறைந்த மண் பாதைகளில் வெறுங்காலுடன் நடந்தாள். அவளுடைய அறிவுப் பசி மற்றும் அவளுடைய அர்ப்பணிப்பு இவைகளைப் பெரிதாக எடுக்கவில்லை. அவள் தனக்கு கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் அலசி ஆராய்ந்தாள். அவள் மனதில் பதிந்த, எப்படியும் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற அவா, அவளுக்குள் ஏற்படுத்திய தைரியம், வெற்றியின் கதைகளை திறந்து அவளது அபிலாஷைகளைத் தூண்டத் துணையாகத் நின்றது. "காட்சியின் தெளிந்தனம் ஆயினும், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” 2300 ஆண்டுகளுக்கு முன்பு கணியன் பூங்குன்றனார் அழகுறக் கூறிய 'சமூகத்தைச் சரிவரப் புரிந்து கொண்டால் பெரியோரை மதித்தலும் செய்யோம். சிறியோரை இகழ்தலும் செய்யோம். அவரவர் ஒழுக்கம் ஒன்றையே யாமும் கருதுவோம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவுகளைப் பார்க்க மாட்டோம்' பொதுவுடமைக் கருத்தை அவள் முணுமுணுக்காத நாள் ஒன்றும் இல்லை. ஒரு நாள், காவியாவின் திறனை உணர்ந்த, ஒரு நல்ல உள்ளம் கொண்ட அவளின் வகுப்பு ஆசிரியை, அவள் மேல் விசேட கவனம் செலுத்த தொடங்கினார். இந்த ஆசிரியையின் வழிகாட்டலாலும் அவர் கொடுத்த ஊக்கத்தாலும், காவியா தனது படிப்பில், எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் மிகவும் சிறந்து விளங்கினாள். அதனால் அவளது கல்வித் திறமை, ஒளிமயமான எதிர்காலத்திற்கான பயணச் சீட்டாக அமைந்தது. தளராத உறுதியுடன் மற்றும் அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக, காவியா கொழும்பில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பிரிவுக்கு, முழு உதவித்தொகையைப் பெற்று படிக்கச் சென்றாள். தன் கிராமத்தையும், தன் வீட்டின் பரிச்சயத்தையும் விட்டுவிட்டு, இந்தப் புதிய அத்தியாயத்தை கொஞ்சம் நடுக்கத்துடனும், ஆனால் உற்சாகத்துடனும் ஏற்றுக்கொண்டாள். பல்கலைக்கழக வாழ்க்கையில் பல சவால்கள் அங்கும் சந்திக்க நேரிட்டாலும் காவியா, அவ்வற்றை எல்லாம் தாண்டி, அவள் இதயத்தில், நெடுஞ்செழியன், திருவள்ளுவர் மற்றும் கணியன் பூங்குன்றனார் விதைத்த விதைகளின் வேர்களில் இருந்து வலிமையைப் பெற்றுக் கொண்டு நிமிர்ந்து நின்றாள். அவளுடைய நெகிழ்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் விரைவில் அவளது பேராசிரியர்கள் மற்றும் சகாக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. "புதிய ஆரம்பம்" ஒன்று அவளைக் மறைத்துக் கொண்டு இருந்த சாதி என்ற முகில்களைக் கிழித்துக்கொண்டு முதல் அடியை எடுத்து வைத்தது. என்றாலும் பொன்னம்பலம் இராமநாதன், செல்லப்பா சுந்தரலிங்கம் போன்ற படித்த தலைவர்களின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்களை அவள் மறக்கவில்லை. எனவே தனது புதிய ஆரம்பத்தின் ஒவ்வொரு அடியையும் கவனமாக தந்திரமாக எடுத்து வைத்தாள். ஆகவே தன்னைத் திடப்படுத்தவும், தன்னை சூழ்ந்து இருப்பவர்களை தயார் படுத்தவும், பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில், காவியா சமூக செயல்பாட்டின் மீதான தனது ஆர்வத்தை தனக்குள் பெருக்கினாள். எனவே ஓரங்கட்டப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்து, அனைவருக்கும் சமத்துவம் மற்றும் கல்விக்காக குரல் கொடுக்கத் தொடங்கினாள். இது இலங்கை முழுவதும், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாடு வரை சாதி மற்றும் சமூகப் பொருளாதார நிலைகளின் தடைகளைத் தாண்டிப் பரவி, பலரைத் அது தூண்டியது. உயர்தரத்தில் மருத்துவ பட்டம் பெற்ற பிறகு, காவியா ஒரு புதிய நோக்கத்துடன் தனது யாழ்ப்பாணத்துக்கு திரும்பினாள். அவள் தனது கடமை நேரம் தவிர, நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியுடன் பின்தங்கிய குழந்தைகளுக்காக ஒரு பயிற்சி கல்லூரி நிறுவி, அந்த குழந்தைகளுக்கு மேல் அதிகமான கற்றலுக்கான உதவி வழங்கி, அவர்களின் அறியாமையின் சங்கிலிகளை உடைத்து அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான திறவுகோலை வழங்கும் 'புதிய ஆரம்பத்தை' ஏற்படுத்தினாள். இது, இந்த அவளுடைய கதை யாழ்ப்பாணத்தின் குடாநாட்டில் மட்டும் இன்றி, இலங்கை முழுவதும் எதிரொலித்து, எண்ணற்ற இளம் உள்ளங்களின் இதயங்களில் நம்பிக்கையின் தீப்பொறிகளைப் பற்றவைத்தது. காவியாவின் விடாமுயற்சி மற்றும் வெற்றியின் கதை சமூக மாற்றத்தின் கலங்கரை விளக்கமாக மாறி, "புதிய ஆரம்பம்" இலங்கையில், குறிப்பாக தமிழர் சமூகத்தில் தோன்றியது. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது "புதிய ஆரம்பம்" மட்டுமே!. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  13. "தை பிறந்தால்" & "பரோபகாரம்" "தை பிறந்தால்" தைவரல் காற்றோடு பொங்கலும் பொங்க தைத்த ஆடையோடு சிறுவரும் மகிழ தையல் கடிமனம் நன்று நிறைவேற தை பிறந்தால் வழி பிறக்குமே! தமிழர் திருநாள் உழவர் பெருநாள் தனித்துவம் கொண்ட எங்கள் அடையாளம் தங்கக் கதிரவனை விழுந்து கும்பிட்டு தலைவி தலைவன் கொண்டாடும் கொண்டாட்டம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. "பரோபகாரம்" யாதும் ஊரே யாவரும் கேளிரென்று காதும் காதும் சொல்லி வைத்தானே! தீதும் வந்து தமிழை அழித்ததே போதும் இனி நீக்குவோம் 'பரோபகாரத்தை' அது 'பிறருக்கு உதவுதல்' ஆகட்டுமே! தன்னலம் அற்று செய்யும் பணியும் புன்னகை வழங்கும் அன்புப் பார்வையும் இன்பம் மலரும் ஏழைகளுக்கான கொடையும் நன்றே புரியும் எந்த மனிதருமே மண்ணின் மைந்தரே மக்களின் ஆண்டவனே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  14. “காலம் எல்லாம் உனக்காகக் காத்திருப்பேன்” நன்முல்லை, ஒரு கடற்கரையோரம் இருந்த, பழமையான மரத்தடியில் அமர்ந்திருந்தாள். மெல்லிய குளிர் காற்றில் அவளின் சேலை அசைந்தது. அவள் கூந்தலில் சூடிய மல்லிகைப் பூக்களின் நறுமணம் உப்புக் காற்றில் கலந்திருந்தது. பழைய மகிழ்வான நினைவுகளால் நிரம்பிய அவளது கண்கள், தனக்கு நன்றாகத் தெரிந்த, ஆனால் பல ஆண்டுகளாகப் பார்த்திராத, ஒரு உருவத்தைத் தேடுவது போல, அடிவானத்தை நோக்கியது. அவளுடைய மகிழ்ச்சியான மற்றும் சோகமான தருணங்களைக் கண்ட கடல், அவள் இதயத்தில் உள்ள வலியை மறந்து, தனது நித்திய தாளத்தைத் தொடர்ந்தது. பனிமலை போல் பரந்திருக்கும் வெண்மணலின் முடிவில், பாரிய கடல் ஆர்ப்பரித்து அலை மேலெழுந்து, அவள் காலை முத்தமிட்டது. அந்த அழகே தனிதான்! ஆனால் அவள் அதை விரும்பி பார்க்கும் நிலையில் இல்லை. அவள் மலரவனைப் பார்த்துப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த மரத்தடியில் சோக கண்ணீருடன் விடைபெற்று இன்று பத்து ஆண்டுகள். அப்போது அவள் இளமையாகவும் கனவுகள் நிறைந்தவளாகவும் இருந்தாள். அவன், தனது புத்திசாலித்தனமான மனதுடன், அவர்களின் சிறிய கிராமப் பள்ளியில், எப்போதும் தனித்து நின்றான். நன்முல்லை, கல்வியில் அவ்வளவு திறமை இல்லாவிட்டாலும், அவனது இதய நட்சத்திரமாக ஒளிர்ந்துகொண்டு இருந்தாள். அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக, அன்பாக ஒன்றாக வளர்ந்தார்கள். அவர்களின் பந்தம் குறுகிய தூசி நிறைந்த பாதைகள் மற்றும் அவர்களின் கிராமத்தின் அமைதியான வயல்களுக்கு மத்தியில் வளர்ந்தது. கடற்கரை ஓரத்தில் துள்ளி விளையாடியது. பழைய ஒற்றை மரத்தடியின் கீழ் முழுமைபெற்றது. மலரவன் கொழும்பு மருத்துவ பீடத்திற்குத் தெரிவான செய்தி கிடைத்ததும், அந்தக் கிராமத்தின் பெருமைக்கு எல்லையே இல்லை. அவர்களின் பள்ளியில் இருந்து, இப்படி ஒரு சாதனையை நிகழ்த்திய முதல் மாணவன், அவனே ஆகும். ஆனால், கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நன்முல்லையின் இதயம் கனத்தது. அது ஏன் என்று அப்பொழுது அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் இப்ப கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினாள். அவன் அங்கிருந்து வெளியேற எல்லாம் மாறும் என்று. அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த கடைசி மாலையில், மலரவன் அவளை, அதே கடலோர ஒற்றை மரத்தடியில் சந்திக்கச் சொன்னான். கதிரவன் மறைந்து கொண்டிருந்தது, தண்ணீரின் மேல் ஒரு தங்க நிறத்தை அது வீசியது. அவன், அவளின் இரு கைகளையும் இறுக்கமாகப் பிடித்திருந்தான். அவன் கண்கள் உணர்ச்சியால் நிரம்பி வழிந்தது. “நன்முல்லை” என்று அவன் குரல் கொஞ்சம் நடுங்கியது, “எதுவாக இருந்தாலும் சரி, நான் மருத்தவனானவுடன் உனக்காக இங்கு கட்டாயம் திரும்ப வருவேன்" என்று உறுதியளிதான். "நீ என் உயிர், என் எல்லாம் நீயே. எனக்காக காத்திருங்கள், தயவு செய்து." என்று கெஞ்சினான். அவள் தலையசைத்தாள், அவள் முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. அவள் நெற்றியிலும் கன்னங்களிலும் மென்மையான முத்தங்களைப் பதித்து அவளை இறுக அணைத்தான். அந்தக் கணம், அவள் உள்ளத்தில் மகிழ்ச்சியான நினைவாகப் பதிந்தது. அவள் என்றென்றும் சுமந்து செல்லும், ஒரு இன்பமான நினைவாக அது இருந்தது. ஆனால் அது ஒரு முடிவாகும் என்று அவள் அன்று நினைக்கவே இல்லை. முதலில் கொடுத்த வாக்கை அவன், கொழும்புப் பல்கலைக்கழகம் போன புதிதில் காப்பாற்றினான். கொழும்பிலிருந்து மின் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் வந்தன, அவனது படிப்புகள், அவனது வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கான அவனது கனவுகள் நிறைந்த கதைகள். ஆனால் திங்கள்கள், ஆண்டுகளாக மாற, தொடர்புகள் அடிக்கடி வருவதில்லை. "நான் எனது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்" என்று அவன் தனது கடைசித் தொடர்பு ஒன்றில் கூறினான். பிறகு, மௌனம் தான் பதிலாக இருந்தது. விரைவில் மீண்டும் தொடர்புகொள்வான் என்று, தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு, நன்முல்லை காத்திருந்தாள். ஆனால், நாளாக நாளாக, அவள் ஆழ்மனதில் ஒரு பயம் வளர ஆரம்பித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவன், தனது இறுதித் தேர்வில் முதலிடம் பெற்றதாகவும், இலண்டனில் படிக்க மதிப்புமிக்க தகுதிசார் கல்வி உதவித்தொகை பெற்றதாகவும், செய்தி அவளை எட்டியது. அவள் இதயம் பெருமிதத்தால் வீங்கியது, ஆனால் அவன் மேலும் விலகிச் செல்கிறான் என்பதை உணர்ந்து, அதுவும் வலித்தது. என்றாலும் அவள் காத்திருந்தாள். அவன், தன் கனவுகளை அடைய தன்னைத் துரத்திக் கொண்டிருப்பதாகவும், அவன் உறுதியளித்தபடியே தனக்காகத் திரும்பி வருவான் என்றும், அவள் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள். மலரவன் இறுதியாகத் தன் மேற்படிப்பை இலண்டனில் முடித்துக் கொண்டு, கிராமத்திற்குத் திரும்பியதும், எண்ணற்ற முறை நன்முல்லை நினைத்திருந்த மகிழ்ச்சியான சந்திப்பு, அங்கு நடைபெறவில்லை. அவன் அங்கு, அந்த இலண்டன் பல்கலைக்கழகத்தில் கண்டு பழகிக், காதலித்த தனது காதலியுடனும் அவளின் பெற்றோருடனும், பெற்றோருக்கு நேரடியாக அறிமுகப்படுத்தவும், தனது திருமணத்தைப் பெற்றோரின் வாழ்த்துடன் உறுதிப்படுத்தவும் திரும்பி வந்ததாக மற்றவர்களிடமிருந்து அவள் கேள்விப்பட்டாள். நன்முல்லையின் இதயம் நொறுங்கியது, ஆனால் அதைத் தனது, தன் கண்களால் பார்க்கும் வரை நம்ப மறுத்தாள். ஒரு நாள் மாலை, அவள் அந்தப் பழைய ஒற்றை மரத்தடியில் நின்றபோது, அவன், தன் வருங்கால மனைவியுடன் கடற்கரையோரம் நடந்து செல்வதைப் பார்த்தாள். அவனைப் பார்த்ததும் அவள் உள்ளம் துடித்தது. ஆனால், அவன் முன்போல் இருக்கவில்லை. அந்த முன்னைய கிராம மண்வாசனை அங்கு இருக்கவில்லை. அதிக மெருகூட்டப் பட்டவனாகவும், அதிக நம்பிக்கையுடையவனாகவும், மற்றும் ஒரு நகர்ப்புற மண் வாசனைதான் அவனில் தெரிந்தது. ஆனால், அவளைப் பொறுத்தவரையில், அவன் இன்னும் அவள் நேசித்த மலரவன்தான். தன் தைரியத்தை எல்லாம் வரவழைத்துக் கொண்டு, அவன் தன்னைக் கவனிக்கும் வரை காத்திருந்தாள். அவர்களின் கண்கள் சிறிது நேரம் சந்தித்தன, ஆனால் அவனது பார்வையில் எந்த உடன்பாடும் இல்லை. அவள் யார் என்று அவனது காதலி கேட்டபோது, அவன் தனக்குத் தெரியாது என்று நிராகரித்தான். "ஓ, சில பைத்தியக்கார கிராமத்து பெண் போலும், " என்று அவன் சாதாரணமாக, ஆனால் கொஞ்சம் உரத்த சத்தத்துடன் கூறினான். "அவள் தன் கணவனை இழந்திருக்கலாம் அல்லது எதையாவது இழந்திருக்கலாம்." என்றான். நன்முல்லையின் உலகம் சிதைந்தது. அவள் கத்த விரும்பினாள், அவனுடைய வாக்குறுதிகளை, அவர்கள் பகிர்ந்து கொண்ட அன்பை அவனுக்கு நினைவூட்ட. ஆனால் அவள் அமைதியாக இருந்தாள். அவளுடைய கண்ணியம் அவளைக்அந்த இடத்திலேயே வேரூன்ற வைத்தது. அவன் விலகிச் செல்வதைக் கண்டு அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அவன் காதலியுடன் பேசும் போது, அவனது சிரிப்பு காற்றில் அவளுக்கு எதிரொலித்தது. அன்று முதல், நன்முல்லை வாழ்வு, கடலோர மரத்தடியில் நிலைத்தது. கிராமவாசிகள் அவளை அங்கு அடிக்கடி பார்ப்பார்கள். ஒரு புரியாத வெளிப்பாட்டுடன் அவள் அடிவானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாள். சிலர் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர். மற்றவர்கள், அவளை கிராமத்தின் பைத்தியக்காரப் பெண் என்று கேலி செய்தனர். ஆனால் நன்முல்லை அவை எதையும் பொருட்படுத்தவில்லை. அவள் இதயத்தில், மலரவனின் நினைவுகளில், அவன் கொடுத்த வாக்குறுதியில், இன்னும் ஒட்டிக்கொண்டாள். அவள் தொடர்ந்து காத்திருந்தாள், அவன் திரும்புவதற்காக அல்ல, ஆனால் அவள் அறிந்த காதலுக்காக, தன் வாழ்க்கையை வரையறுத்த காதலுக்காக மட்டுமே! மலரவன் எண்ணம் இதயத்தில் எரிய அங்கு இருந்தாள்; கல் மருங்கு எழுந்து, என்றும் ஓர் துளிவரக் காணா நல்மருந்து போல், நலன் அற உணங்கிய நங்கை மென் மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள். - அசோகா வனத்தில் சீதையின் நிலை / சுந்தர காண்டத்தில் இருந்து இறுதி மூன்று வரியும் எடுக்கப்பட்டது - (மருங்கு – பக்கத்திலே; உணங்கிய – வாடிய) மலரவனின் எண்ணம் அவளை எரித்து துன்புறுத்த, நன்முல்லை, [சீதை அசோக வனத்தில் இருந்தது போல்] கற்பாறைக்குப் பக்கத்திலே [ பழைய ஒற்றை மரத்தின் கீழ் இருந்த] தோன்றி வளர்ந்து, எக்காலத்திலும் ஒரு நீர்த்துளி கூட வருவதை அறியாத உயர்ந்த மூலிகையைப் போல, உடலும் உள்ளமும் அற்றுப்போக வாடிய அவள், மெல்லிய இடையைப் போல, மற்றைய அங்கங்களும் இளைத்து விடும்படி துயருற்று இருந்தாள். ஆண்டுகள் கடந்தன, நன்முல்லையின் தலைமுடி நரைத்தது. ஆனால் அந்த கடலோரத்தில் இருந்த ஒற்றை மரம் வலுவாக நின்றது. அதன் கிளைகள் காற்றில் அசைந்தன. அவளுடைய தளராத காதலுக்கு மௌன சாட்சியாக. ஒரு நாள், கதிரவன் மறைந்து வானம் கருஞ்சிவப்பு நிறமாக மாறியபோது, நன்முல்லை கண்களை மூடிக்கொண்டாள். அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை இன்னும் தெரிந்தது. அவளுடைய காத்திருப்பு, இந்த மண்ணில் கடைசியாக முடிந்தது. இந்த பிறவியிலோ அல்லது மறுமையிலோ, மீண்டும் தன் மலரவனைக் கண்டுபிடிப்பேன் என்று அவள் நம்பினாள். அதுவரை கடல் அவளின் கிசுகிசுக்களை சுமந்துகொண்டே இருக்கும், மரம் அவள் நினைவுகளைக் காத்துக்கொண்டிருக்கும் - காலம் தாண்டிய காதலுக்குச் சான்றாக! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  15. "எங்கே எனது ஒளி" & "காளையை அடக்கு கன்னியை மடக்கு " "எங்கே எனது ஒளி" எங்கே எனது ஒளி சொல்வாயோ அங்கே எனக்கு இடம் வேண்டும் மங்காத ஒளியாய் வெண் பிரம்பு ஏங்கும் இதயத்துக்கு ஒரு வழிகாட்டி சங்கு ஊதி வழிகாட்டுவது போல தங்கக் கோல் குருடனின் வெளிச்சம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................. "காளையை அடக்கு கன்னியை மடக்கு " காளையை அடக்கு கன்னியை மடக்கு மாலையை அணிந்து தாலியைக் கட்டு மேளத்தைத் தட்டி ஊர்வலம் செல்லு கோலத்தைப் போட்டு பொங்கலைப் பொங்கு! சிவப்புத் துணியை கையில் ஏந்து மஞ்சள் நிலாவில் மார்பில் சாய கருத்த எருதின் திமிலைப் பிடி வெள்ளை நெற்றியில் திலகம் இட! இடுப்புச் சிறுத்தவளை பரிகாசம் செய்தவளை இறுமாப்பு கொண்ட மண்டை பெருத்தவளை ஏறுதழுவி வெற்றி கண்டு மடக்கு வீறாப்பு விட்டு வந்திடுவாள் உன்னுடன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  16. "உழவர் திருநாள்" & "தித்திக்கும் பொங்கல் திருநாள்" "உழவர் திருநாள்" உழவர் திருநாள் பொங்கி மலரட்டும் அழகுப் பெண்கள் கோலம் போடட்டும்! ஆழமாக வரலாறு மனதில் பதியட்டும் ஈழ மண்ணில் ஒற்றுமை ஓங்கட்டும்! உலகமும் சுழலாது உழவு இல்லையேல் உண்மையைப் புரிந்தால் வாழ்வு செழிக்கும்! உண்பது நாழி உடுப்பவை இரண்டே உயர்வு கொண்ட தொழிலும் அதுவே! உயிர்கள் வாழ உணவு தேவை பயிர்கள் பண்ணைகள் அங்கு வேண்டும்! குயில்கள் மயில்கள் பாடி ஆட மையிட்ட மங்கை பொங்கட்டும் பொங்கல்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................... "தித்திக்கும் பொங்கல் திருநாள்" பத்திக்கும் பெருமைக்கும் புகழ் வீசும் புத்திக்கும் ஆற்றலுக்கும் களம் அமைக்கும் கத்திக்கும் வெறுப்புக்கும் இடம் இல்லா தித்திக்கும் பொங்கல் திருநாள் இதுவே! நாத்து நட்டு புது நெல்லில் காத்து இருந்து தை ஒன்றில் தத்தி நடக்கும் மழலையும் மகிழ மூத்த மகளீர் பொங்கும் பொங்கலே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  17. "தை மகளே வருக" தை மகளே வருக மகிழ்வாக கை கூப்பி உன்னை வாழ்த்துகிறேன்! மை பூசிய அன்பு விழியாளே வா, வந்து அருள் புரிவாயே! கார்த்திகை மழை பெய்து பெருகி ஆர்ப்பரித்து வெள்ளமாய்ப் பாய்ந்து ஓடி ஊர்வலமாய் வயல் வெளி தாண்டி மார்கழியில் அங்கே குளம் ஆனாள்! தையில் குள நீர் தெளிந்திட தையால் தன் கடிமனம் வேண்டி தையில் முன்பனி நீர் ஆடி தைத்தாடை உடுத்து தவம் முடித்தாள்! வண்ணக் கோலம் இட்டு அவள் விண்ணின் கதிரவனை வணங்கிப் போற்றி கண்ணான உறவினருடன் பொங்கல் படைத்து மண்ணின் பெருமையை உலகத்துக்கு அறிவித்தாள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.