Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 20 "மற்றவைகளும் முடிவும்" ஆண்டவன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கைம்மாறு செய்வான் [சரிசமமாகத் திருப்பிக்கொடுபான்] என்ற நம்பிக்கை மக்களை சபதம் செய்ய வைத்து, அதை நிறைவேற்ற வைக்கிறது. அதாவது ஏதாவது ஒன்றை வேண்டி நேர்த்திக்கடன் செய்கிறார்கள். உதாரணமாக பிள்ளை பாக்கியம் வேண்டுபவர்கள், அப்படி ஒரு பாக்கியம் பெற்றால், இதை தருவோம் அல்லது இது செய்வோம் என வேண்டுகிறார்கள். பின் அதை ஒரு நேர்த்திக் கடனாக செய்து வழிபடுகிறார்கள். ஒருவர் புது கார் / வாகனம் /வண்டி வாங்கினால் முதல் பயணத்தை ஆலயத்திற்கு செலுத்துகிறார்கள். இவை எல்லாம் ஒரு நம்பிக்கையின் அடிப்படையே. "தென்னையிளம் நீருக்குள்ளே தேங்கி நிற்கும் ஓட்டுக்குள்ளே தேங்காயை போலிருப்பான் ஒருவன் - அவனை தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்" என்றான் கவியரசு கண்ணதாசன். அதனால் தானோ, என்னவோ தேங்காய் தமிழர்களுடன் ஒட்டிவிட்டது. மேலும் ஒரு தேங்காய் ஆலயத்தில் உடைக்கும் போது, தேங்காயின் கண்ணுக்கு குறுக்காக உடையாமைல் இரண்டு ஒழுங்கான சரிசமமான பாதிகளாக உடைவதையே விரும்புகிறார்கள். அழுகிய அல்லது சிதைந்த தேங்காய் ஆனால் அது பக்தருக்கு விபத்து அல்லது எதிர்பாரா இடையூறு நடைபெறுவதற்கான முன்கூட்டிய அறிவிப்பாக நம்புகிறார்கள். இந்த தேங்காய் உடைத்தல் மிகவும் ஒரு பொதுவான நிகழ்ச்சி. வீட்டிற்கு அத்திவாரம் போடும் போதும் உடைப்பார்கள். வீடு கட்டி முடிந்து, குடி புகும் போதும் உடைப்பார்கள். இப்படியே எல்லா நிகழ்வுகளிலும் உடைப்பார்கள். சிதறிய தேங்காய் ! [thanks-eluthu.com/kavithai] "இருக்கா இல்லையா என்று தெரியாத சிலைக்கு பால் அபிசேகமும் நெய்வேத்தியமும் உயிரோடு இருக்கும் மனிதபிறவிகளுக்கு பிச்சை காசும் வேண்டுதலுக்கு உடைக்கும் சிதறிய தேங்காயும் என்று புரிந்துகொள்ள போகிறது மனித இனம் அன்பே கடவுள் என்று" [சைவ சித்தாந்தம் கூறியவாறு ] அது போல ஆலய தேரின் அச்சு உடையுமாயின், அது அந்த கிராமத்திற்கே துன்பம் நிகழப்போவதாக நம்புகிறார்கள். முதலாவது அறுவடையை ஆலய சமையல் அறைக்கு காணிக்கையாக கொடுக்கிறார்கள். கண்ணாடி உடைவதை தீயசகுனமாக நம்புகிறார்கள். இதனால் எளிதில் உடைகிற பொருட்களாகிய கண்ணாடி போன்ற வற்றை கவனமாக கையாளவைக்கிறார்கள். அந்த காலத்தில் பொதுவாக பெரும்பாலோர் வெறும் காலால்தான் வீட்டிற்குள் உலாவினார்கள் என்பதும் இப்படியான பொருட்கள் காயங்களை ஏற்படுத்தக் கூடியன என்பதும் குறிப்பிடத்தக்கது. இடது கையால் ஏற்பதோ கொடுப்பதோ முன்யோசனையில்லாத செயலாக கருதுகிறார்கள். இது ஏன் என்றால் இடது கை தான் பொதுவாக துப்பரவு செய்யும் வேலைகளுக்கு பாவிப்பதால். அந்த காலத்தில் கையுறையோ கழிப்பறை ரோல் போன்றவையோ இல்லை என்பதால், இந்த முன் ஏற்பாடு. ஏதாவது ஒரு சந்தேகம் ஏற்படும் போது ஆலயத்திற்கு போய், அங்கு கடவுள் காலடியில் இரண்டு சிறு பொதியில் இரண்டு மாறுபட்ட நிறம் உள்ள பூவை வைத்து அர்ச்சனைக்கு பின் ஏதாவது ஒன்றை குறிப்பிலாமல் எதேச்சையாக [தன்னிகழ்வாக] எடுப்பார்கள். அதை கடவுள் கட்டளையாக ஏற்று அதன் படி நடப்பார்கள். புது வருடப்பிறப்பு அன்று கை விசேசம் வாங்கும் / கொடுக்கும் பழக்கம் தமிழர்களிடையில் உண்டு. பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை என்ன சொல்லுகிறது என்று பாருங்கள். (கடைச்சங்க காலத்தை சேர்ந்த பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று ஆசாரக்கோவை) 30. உறங்கும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா) "கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள் உடற்கொடுத்துச் சேர்தல் வழி." படுக்கும்பொழுது கடவுளை வணங்கி, வடதிசையில் தலை வைக்காமல், மேலே போர்த்துக் கொள்ளப் போர்வையை போர்த்திப் படுத்தல் ஒழுக்கமாகும் என்கிறது. என்ன தான் நாம் 21வது நூற்றாண்டில் வாழ்ந்தாலும் கணினி யுகமாக இருந்தாலும் மனிதன் மூட நம்பிக்கைகளை விடுவதாக இல்லை. எத்தனை பகுத்தறிவு பகலவன் வந்தாலும் மக்கள் மூட நம்பிக்கைகளை மட்டும் விட மாட்டார்கள் என்பது மட்டும் எனக்கு புரிகிறது. "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" இது எல்லோருக்கும் தெரிந்த பழமொழி. வளரும் வயதிலேயே நல்ல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் அது எக் காலத்துக்கும் நின்று நிலைக்கும் என்பதே அதன் பொருள். ஆகவே மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மை குறித்த விளக்கங்கள் அல்லது பிரச்சாரம் இடைவிடாது இளம் வயதினருக்கு நடத்தப்பட வேண்டும் என நம்புகிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 21 : "முடிவுரை" தொடரும்
  2. "உன்னோடு வாழ்வது உவப்பானதே" & "புது விடியல்" "உன்னோடு வாழ்வது உவப்பானதே" "உன்னோடு வாழ்வது உவப்பானதே என்றாலும் உயிரோடு போராடும் நோயாளி இவனால் உரிமையோடு இன்பம் சுவைத்திட முடியுமா? உண்மையோடு வாழா வாழ்வும் வாழ்வா?" "மண்ணோடு மண்ணாய் போகும் உடலுக்கு பெண்ணோடு இணையும் ஆசை எதற்கு? பண்போடு சொல்கிறேன் விலகிச் செல்லாயோ? விண்ணோடு பறக்க நேரம் குறித்தாச்சே!" "என்னோடு நீயும் காலத்தை வீணாக்காமல் துன்பத்தின் சுமையை தோளில் சுமக்காமல் அன்புடன் வாழ்த்துகிறேன் விடையும் தருகிறேன்! இன்பத்தின் சுவையை அனுபவித்து மகிழ்வாயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................. "புது விடியல்" "புது விடியல் இன்று பிறந்தது புலரும் புத்தாண்டே மகிழ்வாக வாராயோ! இழிவூட்டும் இன்னல்களை நேற்றோடு அகற்றி இதயத்தோடு நிம்மதியை எல்லோருக்கும் கொடுப்பாயோ!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. "நெஞ்சோடு நிழலாடுதே" & "ஒளிரட்டும் புத்தாண்டு மிளிரட்டும் நம்வாழ்வு" "நெஞ்சோடு நிழலாடுதே" "இதமான கனிவில் அன்பு ஊற்றி இளமை துள்ளும் காலம் காட்டி இடையின் வண்ணத்தில் மயக்கம் தந்து இதய வீட்டில் என்னை நிறுத்தி இனிமை கொட்டும் காதல் விதைத்தவளே!" "வஞ்சகம் இல்லா இனிமைப் பேச்சும் கொஞ்சும் சலங்கையின் மணி ஓசையும் நஞ்சு கலக்கா காமப் பார்வையும் பிஞ்சு உள்ளத்தின் உண்மையைக் கட்டிட நெஞ்சோடு நிழலாடுதே உன் அழகு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. "ஒளிரட்டும் புத்தாண்டு மிளிரட்டும் நம்வாழ்வு" "ஒளிரட்டும் புத்தாண்டு மிளிரட்டும் நம்வாழ்வு வளரட்டும் மனிதம் தளைக்கட்டும் அன்பு மலரட்டும் உரிமை மதிக்கட்டும் பண்பு துளிரட்டும் தேசம் செழிக்கட்டும் மனிதன்!" "மாற்றங்கள் வேண்டி வாக்களித்தது உண்மையாகின் மானிடம் ஓங்கட்டும் ஒற்றுமை உயரட்டும் மாயை அகலட்டும் சமாதானம் நிலவட்டும் மாண்பு கொண்ட அரசியல் அமையட்டும்!" "வசதி படைத்த வாழ்வு அமைத்து வறுமை இல்லா நாடு கட்டி வஞ்சனை அற்ற நீதி உரைத்து வடக்கும் தெற்கும் இணைந்தால் மகிழ்வே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  4. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 19 "கர்ப்பிணி [புள்ளதாய்ச்சி]" "அம்ம வாழி தோழி காதலர் இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ மு நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ ஒதுங்கல் செல்லாப் ,பசும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு விசும்பி இவர் கல்லாது தாங்குபு புணரிச் செழும்பல் குன்றம் நோக்கிப் பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே." [குறுந்தொகை287] இந்த பாடல் வழியே நாம் அறிவது கருவுற்ற மகளிரை நீர் கொண்ட மேகத்துடன் ஒப்பிடுவதையும், கருவுற்ற மகளிர் புளிச்சுவையை மிகவும் விரும்புவர் என்பதையும், மேலும் மகளிர் கருவுறும் காலம் 12 மாதம்? என இப்பாடல் சுட்டும் கருத்து புதுமையாகவும் உள்ளது. [மு நால் திங்கள்-three times four,months, பசும் புளி வேட்கைக் -desire green tamarind ] கருவுற்ற காலத்தில் முதல் ஒன்பது மாதமும் இந்த குழந்தை எப்படிபட்டது, அதாவது இது கம்பீரமாக இருக்குமா?, பெருந்தன்மையுள்ளதாக இருக்குமா? செல்வச் செழிப்பாக இருக்குமா?, அழகாக இருக்குமா?, பலசாலியாக இருக்குமா? பொறுமையாளியாக இருக்குமா? இப்படியெல்லாம் ஆராய்ந்து கொண்டிருப்பார். இவைகள் சில முட நம்பிக்கைகளை நம்ப வழிவகுக்கிறது. சூரிய, சந்திர கிரகணத்தின் பாதிப்புக் கருதி, கருவுற்ற பெண்கள் குழந்தைகளுக்குத் தீங்கு ஏற்படாதிருக்க வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அந்நேரங்களில் காய்கறி நறுக்குதல், வெற்றிலை போடுதல், பிற உயிர்களைத் துன்புறுத்துதல் போன்ற செயல்களைச் செய்யக்கூடாது என்றும், கிரகணம் முடியும் வரை எவ்வித உணவும் உண்ணுதல் கூடாது என்றும் நாட்டுப்புற மக்களிடையே நம்பிக்கை காணப்படுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் நாய், பூனை போன்ற விலங்குகளைத் தாண்டிச் செல்லுதல், ஊசி, நூல் இவைகளைக் கொண்டு துணிகளைத் தைத்தல் போன்ற செயல்களைச் செய்யக்கூடாது. மேலும் கருவுற்றிருக்கும் பெண்கள் விரும்பிக் கேட்கும் அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை இன்றளவும் காணப்படுகிறது. மேலும் கர்ப்பனியில் தேரை (toad) பாய்ந்தால் கால் சொத்தியாய் தேய்ஞ்சு பிறக்கும் எனவும் நம்புகிறார்கள். சில மூட நம்பிக்கைகள் அவர்களின் ஒரு பாதுகாப்பிற்காக அந்த காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படியனவைகளில் ஒன்று கர்ப்பிணி பெண், இரவில் தனிய அலைந்து திரியக் கூடாது அல்லது வெறுமையான வீட்டிற்குள் நுழையக் கூடாது என்பதாகும். அது மட்டும் அல்ல சன நெரிச்சல் கூடிய இடங்கள் அல்லது ஆலயம் போன்றவற்றிற்கும், குறிப்பாக இருட்டில், பிள்ளை பெறுவதற்கு ஒரு சில மாதங்களே இருக்கும் தருவாயில் போவது தடை செயப்படுகிறது. இதற்கு கூறும் காரணம் கெட்ட ஆவிகள் பரவித் தாக்கும் அல்லது அவளுக்கு துயரளிக்கும் என்பது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. அந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப, தனிமையில் அல்லது இருட்டில் போகும் போது, ஒரு அவசரத்திற்கு ஆள் உதவி தேவை என்பதால். அது போலவே அவளின் கணவன் அந்த நேரத்தில் வீடு கட்டக்கூடாது என்பார்கள். அப்படி கட்டிக் கொண்டு இருந்தால் அவனின் முழு கவனமும் கர்ப்பிணியான அவனது மனைவியின் மேல் இருக்காது என்பதே. அது மட்டும் அல்ல ஒரு பெண் கர்ப்பம் தரித்து இருக்கும் போது, கணவனின் இருப்பு, ஒரு தார்மீக கடமையும் கூட. இது அவளுக்கு ஒரு தெம்பு, ஊக்கம் கொடுக்கிறது. இதனால் தான் இந்த தடைகள், ஆவிகள், பேய்கள் எல்லாம். இதனால் தான் கணவனின் தேவையற்ற நீண்ட பயணங்கள் அல்லது ஏதாவது செய்பணி ஒன்றில் ஆழ்ந்த ஈடுபாடு தவிர்க்கப்படுகிறது அல்லது பின்போடப்படுகிறது. மேலும் கர்ப்பிணி பெண்ணை படம் பிடிக்கக் கூடாது என்றும், அவள் கேட்கும் உணவு பொருட்களை, பயன்படு பொருள்களை [edibles and consumer articles] வாங்க்கிக் கொடுக்க வேண்டும் என்பார்கள். அழகான பெண்ணொருவர் குழந்தை உண்டானால் கர்ப்ப காலம் முன்னோக்கி நகர, அவரது அழகு பின்னோக்கி நகரும். வனப்பும், பொலிவும் குறையும். இயற்கையான தன்மையிது. கர்ப்ப காலம் கடந்து குழந்தைப்பேறு முடியும் வரை அழகு குறித்து மனைவியிடம் வெறுப்பு காட்டக்கூடாது. அன்பு காட்டிப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளணும். அதனால் தான் இப்படியான கட்டலைகள் போலும். இதை உறுதிபடுத்துவது போல விவேகச் சிந்தாமணி பாடல் 16 ‘‘கெற்பத்தான் மங்கையருக்கு அழகு குன்றும்.. கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம்.. நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார்... .. " இப்படி அமைந்துள்ளதோ? கர்ப்பிணி பெண் வாழும் வீட்டிலோ அல்லது அதை சுற்றியோ உள்ள குளவி அல்லது குருவி [பறவை] களின் கூடுகளை அகற்றவோ அல்லது குழப்பவோ கூடாது என்றும் கூறுவார்கள். என்னதான் நாம் மேலே கூறியிருந்தாலும், இன்னும் பெண்ணை சிலர் கேவலமாக அல்லது ஒரு குறைபாடாகத்தான் கருதுகிறார்கள். ஏன் பேயை, பேய் மகன் என்று கூட கூறமாட்டார்கள். அதை பேய் மகள் என்றே பாடல்களில் அழைக்கிறார்கள். அது மட்டும் அல்ல பெண்களை குறிக்கும் சொற்களை பாருங்கள். அதாவது பேதை, மடந்தை, மடவார் ... ஆகியவை முட்டாள்தனமான ஒரு ஆளை குறிக்கிறது என்பது தெரிய வரும். அதே நேரத்தில் ஆண் என்ற சொல்லை பாருங்கள். இது ஆண்மை என்ற சொல்லுடன் தொடர்புடையது. மேலும் கணவன் என்பது "கண் + அவன்" என பிரித்து உணரலாம்? இது மட்டுமா?"ஆசைக்கு ஒரு பெண் .. ஆஸ்திக்கு ஒரு பிள்ளை .", "கோணல் பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை" என்று வேறு சொல்லி விட்டு போயுள்ளார்கள். "பெண் புத்தி பின் புத்தி", "தையல் சொல் கேளேல் /ஆத்திசூடி63" ... இப்படி அடிக்கிக் கொண்டு போகலாம். ஆகவே அதை விட்டுவிட்டு, இறுதியாக விவேக சிந்தாமணி — பாடல் 30 யை கிழே தருகிறேன். பெண்ணின் நிலை சிலர் மத்தியில் என்ன பாடு படுகிறது என்பது புரியும். "படியினப் பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம் பழி நமக்கென வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம் கொடுமதக்குவ டெனவளர்த்திடு குஞ்சரத்தையும் நம்பலாம் ……………… நடை குலுக்கி முகம் மினுக்கி நகை நகைத்திடு மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே" “உடனே கொல்லும் விஷத்தை நம்பலாம், பழியைக் கருதாத ஒரு வணிகனை வழிமறித்துக் கொலை செய்த பழையனூர் நீலியை நம்பலாம், கொடிய மும்மதங்களை உடைய மலை போன்று வளர்ந்த யானையையும் நம்பலாம் …………….. என்று சொல்லிக்கொண்டே போய் “நடை குலுக்கி முகம் மினுக்கி நகை நகைத்திடு மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே” என்று முடிகிறது கவிதை. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 20: "மற்றவைகளும் முடிவுரையும்" தொடரும்.
  5. "இதுவும் கடந்து போகட்டும்" & "மாற்றங்கள்" [அந்தாதிக் கவிதை] "இதுவும் கடந்து போகட்டும்" "இதுவும் கடந்து போகட்டும் என்கிறாய் இதயம் உடைந்து சிதறுவது தெரியாதோ? இதமாகப் பழகி ஆசையைத் தூண்டி இன்பக் கடலில் என்னை மூழ்கடித்து இப்படிச் சொல்வதின் நோக்கம் என்னவோ?" "காதல் உணர்வை வியாபாரம் செய்கிறாய் காத்து கிடந்தவனைத் தட்டிக் கழிக்கிறாயே? காலம் போக்க ஆடவன் நாடுபவளே காமம் ஊட்டி விளையாடும் ஆடவளே காரணம் தேடி கண்ணீர் கொட்டுதே?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ "மாற்றங்கள்" [அந்தாதிக் கவிதை] "மாற்றங்கள் வேண்டி வாக்குரிமை செலுத்தியவனே செலுத்திய உனக்கு வேறுபாடு தெரிகிறதா? தெரிவதை உண்மையில் பாடமாக எடுத்து எடுத்த நடவடிக்கை என்னவென்று சொல்வாயோ? சொல்லிச் சொல்லித்தான் மேம்பாடு காணலாம் காணக் காணத்தான் எதிர்பார்த்தது நிறைவேறும்!" "நிறைவேறும் கட்டளைகள் நேர்மையாக இருக்கட்டும் இருக்கும் உரிமைகள் சமமாக வளரட்டும் வளரும் மனிதம் வேறுபாடு அகற்றட்டும் அகற்றும் எதுவும் தீமைகளை ஒழிக்கட்டும் ஒழிக்கும் செயல்கள் வெளிச்சத்துக்கு வரட்டும் வரவு எல்லாம் சொல்லட்டும் மாற்றங்கள்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  6. "சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய்" [எமது தந்தை / திரு கணபதிப்பிள்ளை கந்தையா [11/06/1907-18/02/2000]] சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய் சால்வை வேட்டியுடன் கம்பீரமாய் நடந்தாய் சாமக்கோழி கூவும் நேரத்தில் எழுவாய் சாமி கும்பிட நல்லூர்கந்தன் போவாய் ! மாடு இரத்ததைப் பாலாய்க் கொடுக்கும் மாமனிதன் நீயோ இரத்தத்தை பாசமாக மாறாத அன்பை வியர்வை உழைப்பாக மாட்சிமை கொண்ட வாழ்வு தந்தாய்! நல்லூரில் பிறந்து அத்தியடியில் வாழ்ந்தாய் நட்பு உலகில் 'க க' என்று பெயரெடுத்தாய் நம்பிக்கை ஒன்றே உன் ஆயுதம் நன்மை ஒன்றே உன் நோக்கம்! மானம் பெரிதென எமக்கு போதித்தாய் மாதா பிதா இருவருமே கடவுளென்றாய் மாலுமியாய் எமக்கு வலி காட்டி மாயை உலகிற்கு விடைகொடுத்தது எனோ? சாதாரண வாழ்வை இனிமை ஆக்கினாய் சாமானிய மனிதனாய் என்றும் இருந்தாய் சான்றோரை கற்றோரை நன்று மதித்தாய் சாமியாய் இன்று எம்மிடம் வாழ்கிறாய்! அக்கினி உன்னுடலை மட்டுமே எரிக்கும் அன்போ எம்முள்ளத்தில் என்றும் வாழும் அயராத உழைப்பு அடிமையில்லா வாழ்வு அணையாத தீயாய் எமக்குள் எரியும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 18 "பெண்கள்" பெண் பிள்ளை பிறப்பு: "யாயே, கண்ணினும் கடுங் காதலளே எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’ யாமே,......" [அகநானூறு 12,] எம் தாய் தன் கண்ணினும் இவள்பால் மிக்க காதலுடையாள். எம் தந்தையும் (இவள் எங்கேனும் செல்வது காணின்) நிலத்தே இவள் அடி பொருந்தி நடக்கப் பொறாதவனாகி, ஏடி! இளைய மகளே!, நின் சிறிய அடி சிவப்புற என் செயச் சொல்கின்றாய் என்று கூறும் - இப்படித்தான் சங்க காலத்தில் பெண் பிள்ளையின் நிலை இருந்தது. ஆனால் வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை.ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது? தமிழன் வரலாற்றில் கிறிஸ்துவுக்கு முன், சங்க கால தொடக்கத்தில் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஆரியர் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு வீழ்ச்சியாக [அஸ்தமனமாக] இருந்தது எனலாம். தாய்வழி மரபு, திராவிடர்களின் அல்லது ஆரியர் அல்லாதவர்களின் சிறப்பியல்பாக / விசேஷ அம்சமாக முன்பு இருந்தது. அது இன்னும் நடைமுறை வழக்காக சில தெற்கு இந்தியா பகுதிகளில் காணப்படுகிறது. திராவிடர்கள் பெண்களுக்கு நன் மதிப்பு கொடுத்தார்கள். இதனால் தான் இன்னும் கிராமிய / நாட்டுப்புற மக்கள் அம்மன் வழிபாட்டில் அடிக்கடி ஈடுபடுகிறார்கள். இது சங்க பாடல்களில் காணக் கூடியதாகவும் இருக்கிறது. பண்டைய தமிழர்களுக்கு மகள் / பெண் தொல்லையாக இருக்கவில்லை. ஆணின் உயிராதாரமான, இன்றியமையாத பாதியாகவே பெண் கருதப்பட்டது. எப்படியாயினும், சங்க காலத்திற்கு பின் இந்த நிலை, ஆரியர் கொண்டுவந்த பல மூட நம்பிக்கைகளாலும் கோட்பாடுகளாலும், மெல்ல மெல்ல சாய / சரிய தொடங்கியது. மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் பெண் பிள்ளை பிறப்பையிட்டு பெற்றோர் புலம்புவதை காணக்கூடியதாக உள்ளது. பெண் பிள்ளை / மகள், பிறக்கும் வரிசைமுறையில், ஒற்றை எண்ணில் பிறந்தால் நல்லது என்ற நம்பிக்கை உண்டு. அதாவது முதலாவது, மூன்றாவது, ஐந்தாவது, இப்படி பிறந்தால் சிறப்பு என்பார்கள்.நாலாவதாக பிறந்த பெண் பிள்ளை வீட்டை பாழாக்கும் என்பார்கள். அது போல ஐந்தாவதாக பிறந்த பெண் பிள்ளை வீட்டிற்கு தங்கம் கொண்டு வரும் என்பார்கள். ஆனால் ஐந்தாவது ஆண் பிள்ளையோ ஊதாரியாய் எல்லா செல்வத்தையும் அழித்திடுவான் என்பார்கள். ஆறாவது பெண் பிள்ளையோ செழிப்பை அல்லது வறுமையை கொண்டுவரும் என்பார்கள். எட்டாவது பெண் பிள்ளையோ எல்லாவற்றையும் அழித்து விடும் என்பார்கள். "எட்டாவது பெண் எட்டி பார்த்த இடம் குட்டிச்சுவரு" என பழ மொழியும் கூறிச் சென்றுள்ளார்கள். மேலும் ஒரு குழந்தை நண்பகலோ நள்ளிரவோ பிறக்கக் கூடாது. அது மட்டும் அல்ல சித்திரை நட்சத்திரத்துடனும் பிறக்கக் கூடாது. ஏன் என்றால் யமனின் நன்றி உள்ள ஏவலர், "சித்திர குப்தன்" பிறந்த நட்சத்திரம் அது. இப்படி பல பல எமது வாழ்வில் வந்து சேர்ந்து விட்டன. "பல் போனால் சொல் போகும்" குழந்தையின் முதல் பல் விழும் போது, அதை கவனமாக செழுமை அல்லது வளத்திற்கு இடுகுறியான சாணத்தில் வைத்து வீட்டு கூரையின் மேலாக எறிவார்கள். அப்படி செய்வது விரைவாக பல் வளர வழி வகுக்கும் என்ற நம்பிக்கையால் ஆகும். மேலும் குழந்தைக்கு கண்ணாடி காட்டக் கூடாது என்பார்கள். அது குழந்தையை ஊமை ஆக்கிவிடும் என்ற ஒரு நம்பிக்கை அவர்களிடம் இருப்பதால். கல்யாணம்: ஒருவரின் வாழ்க்கையில் கல்யாணம் ஒரு முக்கிய சம்பவம் ஆகும். இங்கும் பல மூட நம்பிக்கைகள் இணைந்து இருக்கின்றன. புது மணப் பெண், அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவருவாள் என நம்பப்படுகிறது. முதல் ஒரு வருடத்தில் நடைபெறும் சம்பவங்களை பொறுத்து மணப்பெண் மங்களகரமானவள் அல்லது அமங்கலமானவள் என கருதப்படுகிறது. என்றாலும் பொதுவாக புது மணப்பெண் மங்களகரமானவள் என்றே கருதப்படுகிறது. இதற்கு முரண்பாடாக கைம்பெண்ணை [விதவையை] அமங்கலமானவள் என்றே குறிப்பாக கருதப்படுகிறது. இவர்களை எந்த நல் காரியங்களுக்கும் முன் நிற்க அனுமதிப்பதில்லை. அந்த காரியத்தின் வெற்றியை அது குறைக்கும் என்ற நம்பிக்கையாகும். அது மட்டும் அல்ல பிள்ளை பெறாத மலடிகளை [barren woman] தடை செயா விட்டாலும், முடிந்தவரை தவிர்த்து கொள்கிறார்கள். கல்யாணம் சம்பந்தமான நிகழ்வுகளில் சுமங்கலி பெண்களையே [married girl ] முன் நின்று நடத்த அனுமதிக்கிறார்கள். பொதுவாக மணமக்கள் கிழக்கு நோக்கியே மணமேடையில் இருப்பார்கள். மேலும் திருமணம் பற்றிய கனவு நல்லதன்று என்றும், இரண்டு திருமணங்கள் ஒரே வீட்டில் ஒரே இடத்தில் நடந்தால் ஒன்று சிறக்கும் மற்றது கெடும் என்றும். மணமான பெண் மாப்பிள்ளை வீட்டில் நுழையும் போது வலது காலை எடுத்து வைத்து நடக்க வேண்டும் என்றும் புது மணத் தம்பதியினர் புது வீட்டில் குடி ஏறக் கூடாது என்றும் கருதப்படுகிறது. அது போல காலையில் சுமங்கலிப் பெண்கள் முகத்தில் விழிப்பது நல்லது என்பார்கள். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 19: "கர்ப்பிணி [புள்ளதாய்ச்சி]" அடுத்த வாரம்தொடரும்.
  8. "சொல்ல துடிக்குது மனசு" & "பாலகன்பிறந்தார்" "சொல்ல துடிக்குது மனசு" "சொல்ல துடிக்குது மனசு எனக்கு மெல்ல மெல்ல ஆசை பிறக்குது நல்ல அழகில் நெஞ்சைப் பறிகொடுத்து நல்லாள் அவளை அணைக்கத் தோன்றுது!" "கள்ள எண்ணம் என்னிடம் இல்லை குள்ளப் புத்தியும் அறவே கிடையாது அள்ள அள்ள குறையாத அன்பே உள்ளம் நாடும் ஆடவள் நீயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................................... "பாலகன்பிறந்தார்" "பாலகன்பிறந்தார் குமாரன் கொடுக்கப்பட்டார் கேளுங்கள் கதையை அன்பு இரட்சகரின் வானத்தில் ஒளிர்ந்து தாரகை வழிகாட்டிட அன்புத் தெய்வத்தை தேடிவந்தனர் ஞானிகள்!" "கந்தல்களில் மறைந்திருந்த பாலகனைக் கண்டு மண்ணுக்கும் விண்ணுக்கும் அடையாளம் காட்டினர் கண்ணுக்குத் தெரிந்த மழலையின் சிரிப்பின் கருணை வெள்ளத்தில் மனிதம் தேடுவோம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  9. "அன்பு வலிமையானது" & "ஓடுகிற தண்ணியிலே" "அன்பு வலிமையானது" "அன்பு வலிமையானது மனிதம் வளர்ப்பது துன்பம் வேதனையானது மனதை வாட்டுவது இன்பம் மகிழ்வானது சேர்ந்து அனுபவித்தால் புன்னகை கொடுப்பது இனிய வரவேற்பே நன்றாய் இவையை அறிந்தால் சொர்க்கமே!" "பண்பு என்பது பாடறிந்து ஒழுகுதல் கண்கள் போல் காக்கவேண்டிய ஒன்றே மாண்போடு வாழ்தல் மனிதனின் தேவை விண்ணில் ஒளிரும் மீன்கள் போல வண்ண அழகில் மானிடம் மலரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................................... "ஓடுகிற தண்ணியிலே" "ஓடுகிற தண்ணியிலே வாடிநிற்கும் கொக்கே தேடுகிற என்னழகியை கண்டதுண்டோ சொல்லாயோ? பாடுகிற குயிலே கிளையிலே இருக்கிறியே கூடுகிற ஆசையை தூரத்தே எறிந்துவிட்டு ஆடுகிற என்னெஞ்சுக்கு ஆறுதல் தாராயோ?" "வட்டவட்டப் பாறையிலே முட்டியோடும் ஆறே வளைகுலுங்கப் போகும் என்னவளைக் கண்டாயோ? விரிச்ச நெற்றியுடன் வீறாப்பு பேசுபவளை வெற்றிலைப் பாக்குடன் குறும்பு செய்பவளை கண்ணில் அம்பிட்டால் [அகப்படில்‌] எனக்குக் கூறாயோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. "கும்மிருட்டில் நடனம்" முள்ளிவாய்க்காலில் இரவு கனமாக இருந்தது, சொல்லொணாத் துயரம் கிசுகிசுக்கும் அமைதியற்ற அமைதியில் மறைந்திருந்தது. இந்த மண்ணில் நடந்த கொடுமைகளை வானமே புலம்பியது போல, மேலே உள்ள நட்சத்திரங்கள் மங்களாகி கும்மிருட்டாய் ஆகியது. இலங்கையின் நீண்ட மற்றும் கொடூரமான உள்நாட்டுப் போரின் இறுதிப் போர்க்களமான முள்ளிவாய்க்கால், கேட்கப்படாத ஒரு ஆயிரம் ஆயிரம் அழுகையின் கனத்தைத் தாங்கியது. இந்த மண்ணிலிருந்து திருடிய அல்லது அழித்த எல்லா உயிர்களும், அந்த மோதலின் நிழலில் சிக்கிக்கொண்டு, அதன் எரிந்த பூமிக்கு அடியில் இருந்து, அவர்களின் குரல்கள் இன்னும் நீடித்துக்கொண்டே இருந்தது. "உடைதலையும் மூளையும் ஊன்தடியும் என்பும் குடருங் கொழுங்குருதி யீர்ப்ப – மிடைபேய் பெருநடஞ்செய் பெற்றித்தே" "ஓகை உயர்மாடத் துள்ளிருந்து – கூகை படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே" இரத்த வெள்ளத்தில் நிணமும், தசையும் எலும்பும் மிதந்துவரும் போர்க்களத்தில் பேய்க் கூட்டங்கள் மகிழ்ச்சியினால் கூத்தாடும். போரில் அழிக்கப்பட்ட மாடத்தின் உச்சியிலிருந்து கூகை தாலாட்டு பாட அழிந்த நகரத்தில் பேய்கள் உறங்கும், இப்படி முத்தொள்ளாயிரம் கூறுகிறது. ஆனால் இங்கு முள்ளிவாய்க்காலில் வலுக்கட்டாயமாக, நீதிக்குப் புறம்பாக கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிரும் பேயாக மண்ணில் இருந்து எழுந்து நியாயம் கேட்கிறது! மே 18, 2009 அன்றுதான், பல தசாப்தங்களாக உரிமைக்காகப் ஆயுதம் ஏந்தி போராடிய தமிழ் இயக்கத்தை அழித்துவிட்டோம் என்று இலங்கை இராணுவம் வெற்றியை அறிவித்தது. ஆனால் அந்த வெற்றி ஒரு வேதனையான, நீதிக்கு அப்பாற்பட்ட இராணுவ தாக்கங்களில் இருந்து வந்தவை - இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தப்பிப்பிழைத்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர், முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் அல்லது "விசாரணைகளின்" பின் காணாமல் போனார்கள். அவர்களின் கனவுகள், அவர்களின் கதைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை இந்த மண்ணின் இருண்ட, இரத்தம் தோய்ந்த வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியது. அதை இன்னும், ஆண்டுகள் போனாலும், முள்ளிவாய்க்காலின் இரத்தம் தோய்ந்த மண்ணால் மறக்கமுடியவில்லை. கடிகாரம் நள்ளிரவைத் தாண்டியதும், அங்கு காற்று அமைதியாக, அமைதியாக்கப்பட்ட, மண்ணுக்குள் புதைக்கப்பட்ட, ஒவ்வொருவரின் ஆத்மாவினதும் புலம்பல்களை, சுமந்துக்கொண்டு காற்று வீசியது. அந்தக் காற்றின் துக்கம், தன் நினைவுக்கு வருவது போல், இருளும் அடர்ந்த கருமையாக மாறியது. இடிபாடுகள், சாம்பல் மற்றும் நிழல்களில் இருந்து ஒவ்வொரு உருவங்களும் வெளிவரத் தொடங்கின. அவை புலன்கடந்த, நுண்பொருளான, கட்புலனாகாத, காற்று போன்ற ஒன்றாக ஒளிஊடுருவக்கூடியதாக இருந்தது. ஆனால் அவைகள் ஒவ்வொன்றும் தங்கள் தங்கள் துன்பத்தின் அடையாளங்களைச் சுமந்தனர்: எறிகணை துண்டுகளால் ஏற்பட்ட தழும்புகள், உடைந்த கைகால்கள் மற்றும் ஒருமுறை பயத்தில் மூழ்கிய கண்கள். இவை வெறும் தோற்றங்கள் அல்ல; அவர்கள் அநீதியின் கொடூரங்ககளால் மண்ணில் மூழ்கிய ஆன்மாக்கள். "வாருங்கள், வந்து கை கொடுங்கள் இமைகள் மூடி பல நாளாச்சு ... சொல்லுங்கள், எங்கள் வேதனைகளை வட்டமாய் நின்று கும்மி அடித்தன -- தாருங்கள், நீதியை வஞ்சகம் இல்லாமல் கேள்விகள் கேட்டு துணங்கை ஆடின ..." "நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன் நங்கை நான் உண்மை உரைத்ததாள் ... முலையை சீவினான் கொடூர படையோன் பேதை நான் காமம் சுரக்காததாள் ... வரிசையில் நின்று கூத்து ஆடின இடையில் சின்னஞ் சிறுசு சிலஆயிரம் ... " "முழங்கினர், கதறினர் குரவை ஆடினர் விசாரணை எடு -உண்மையை நிறுத்து ... கூடுங்கள், ஒன்றாய் உண்மையை உரையுங்கள் கூடிநின்று 'கும்மிருட்டில் நடனம்' ஆடின ... " அங்கே பல பல மகாகாளியின் வேண்டுதல் மற்றும் முறையிடுதல் காற்றை நிரப்பியது, வலி மற்றும் துயரத்தில் பிறந்த பாடல் அது. இது அன்று நடந்த அட்டூழியங்களின் புலம்பலாக இருந்தது - பெண்கள் மீது மீறப்பட்ட கதைகள், குழந்தைகள் தங்கள் தாயிடமிருந்து பிரிந்த கதைகள் மற்றும் ஆண்கள் விசாரணையின்றி காணாமல் ஆக்கப்பட்ட கதைகள். ஒவ்வொரு ஆத்மாவும் பேய்களாக 'கும்மிருட்டில் நடனம்' ஆடின, அவற்றின் அசைவுகள் வேதனையையும் கண்ணீரையும் தந்தன, ஆனாலும் உறுதியானவை. அவர்கள் அசைந்து சுழன்று கூத்தாடினார், ஒவ்வொரு முத்திரையும் அடிகளும் தங்கள் தங்கள் கதைகளை, உண்மையாக நடந்தவற்றை விவரித்து கேள்விகேட்டன. ஒரு தாய் கண்ணுக்குத் தெரியாத குழந்தையைத் தொட்டிலிட்டு நடனமாடினாள், அவளுடைய பாடல் தனது குழந்தையின் திருடப்பட்ட எதிர்காலத்திற்கான வேண்டுகோள். ஒரு இளைஞன் தடுமாறி முன்னோக்கிச் சென்றான், அவனது உடல் தன்னைத் துளைத்த தோட்டாக்களை இன்னும் உணர்வது போல் நெளிந்தது நெளிந்து வேதனைப்பட்டது. இந்த பேய்களின் கூட்டத்தின் ஒரு மூலையில், ஒரு மூத்த ஆவி, தமிழ் மக்களின் பெருமையைக் கொண்டாடிய, சங்கப் புலவர்களில் ஒருவரான ஈழத்து புலவர், ஈழத்துப் பூதன்தேவனாரின் பாடல்களை பாடத் தொடங்கியது. "அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்திழை அல்குல், பெருந்தோள் குறுமகள் மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇக், கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த" அவள் தன் அல்குல் பகுதியில் திருந்திய மணி கோத்த ஆடை அணிந்திருப்பாள். அது பாம்பு உரித்த தோல் போல் மென்மையான ஆடை. அதன் ஊடே அவள் அல்குல், கண் இமைப்பது போல் அவ்வப்போது தெரியும். அவள் அகன்ற மார்பகத் தோள் கொண்ட சின்னப் பெண் (குறுமகள்). தூசு இல்லாமல் நூய்மையாகக் கழுவி, கருநீல மணி போல் அழகொழுகத் தோன்றும் கூந்தலை உடையவள். குளிர் காலத்தில் பூக்கும் குறுகிய காம்பை உடைய முல்லை மலரை அந்தக் கூந்தலில் சூடிக்கொண்டிருப்பாள். அதில் வண்டுகள் மொய்க்கும். அப்படித்தான் நானும் இருந்தேன். ஆனால் இன்று, அது கண்ணீருடன் அந்தப்பாடலை திருப்ப திருப்ப பாடிக்கொண்டு இருந்துது. அதன் அருகில், மகாவம்சத்தைத்தில் கூறிய, நாட்டைவிட்டு துரத்திவிடப்பட்ட இளவரசர் விஜயனின் வருகையை, மற்றொரு ஆவி விவரித்தது. "அவர்கள் அதை வரலாறு என்று அழைக்கிறார்கள், ஆனால் இது மத குருவால், " பௌத்தர்களது [பௌத்த பக்தர்களது] மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக தொகுக்கப்பட்டது" [“serene joy of the pious”], என்ற அறைகூவலை திருப்ப திருப்ப பதித்து எழுதப்பட்ட கதை," என்று அது கூறிக்கொண்டு இருந்தது. “ விஜயன் இந்த மண்ணில் காலடி வைப்பதற்கு முன்பே நம் முன்னோர்கள் இந்த மண்ணை உழுது அரசுகளை உருவாக்கினார்கள். நாங்கள் புதியவர்கள் அல்ல; நாங்கள் இலங்கையின் மூத்த குடிமக்களில் ஒருவன் . 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் திராவிடர்களின் இருப்புக்கு சாட்சியாக இருந்த தொல்பொருள் சான்றுகள் - பொம்பரிப்புவில் உள்ள பெருங்கற்கால புதைகுழிகள், தமிழ் பிராமி எழுத்துக்களில் உள்ள கல்வெட்டுகள் பற்றி இன்னும் ஒன்று பேசிக்கொண்டு இருந்தது. கும்மிருட்டு முடியும் மட்டும் நடனம் தொடர்ந்து, உரையாடலின் ஒவ்வொரு துணுக்குககளும் காற்றில் பறந்தன. மற்றொன்று யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகம் எரிக்கப்பட்டபோது தங்கள் புனித நூல்களை இழந்துவிட்டதாக புலம்பியது . "அவர்கள் எங்களை அழிக்க முற்பட்டனர்," இன்னும் ஒரு பெண் கிசுகிசுத்தது, அவள் குரல் எனோ நடுங்கியது. "ஆனால் வரலாறு என்பது எங்கள் இதயங்களிலும் கற்களிலும் எழுதப்பட்டுள்ளது." என்று பெரும் அறைகூவலுடன் நடனம் ஆடியது. அவர்கள் ஒன்றாக மரணம் வேதனையின் பயங்கரமான ஓலத்தை எழுப்பினர். “வாழ்க்கையில் நாங்கள் அமைதியாகிவிட்டோம்; மரணத்தில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். எங்கள் கதைகள் எதிரொலிக்கும், எங்கள் வலி பேசும். முள்ளிவாய்க்காலின் சாம்பலில் இருந்து நீதி எழும்” என்று விடியும் வரை கூக்குரலிட்டனர். ஆவிகளின் புலம்பல் பயங்கரங்களை விவரிப்பதோடு நிற்கவில்லை. அவர்கள் தங்கள் கைகளை நீட்டி, உயிருள்ளவர்களை அழைத்தனர்: "எங்களை மறந்துவிடாதே, இருள் உண்மையை விழுங்க விடாதே. ஒன்றாக நில், ஒன்றாக எழு, நீதி எங்கள் ஒளியாக இருக்கட்டும்." பேய்களின் "கும்மிருட்டில் நடனம்" ஒரு சடங்காக மாறியது, இறந்தவர்களுக்கு நீதி கேட்டு அவர்களைக் கௌரவிக்கும் கூட்டுப் பொறுப்பை நினைவூட்டியது. ஒவ்வொரு ஆண்டும், போர் முடிவடைந்த ஆண்டு நிறைவில், ஆன்மாக்களின் இருப்பு வலுவடைந்தது. முள்ளிவாய்க்கால் புனித பூமியாக மாறியது, வென்றவர்களுக்காக அல்ல, ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, அழிந்தவர்களுக்காக, நினைவுகூரப்பட வேண்டும் என்று கோருபவர்களுக்காக! உயிருள்ளவர்களிடையே கிசுகிசுக்கள் செயல் உருவம் பெற்றது. தப்பிப்பிழைத்தவர்கள் திரளத் தொடங்கினர். அவர்களின் மெழுகுவர்த்திகள் கும்மிருட்க்கு எதிராக மின்னியது. இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டவர்களின் பெயர்களை கோஷமிட்டனர். இன்று முள்ளிவாய்க்காலின் கும்மிருட்டு நடனம் மற்றும் முள்ளிவாய்க்காலின் முழக்கங்கள் உலகிற்கு ஒரு பேரணியாக மாறியது: "இனி ஒருபோதும் இது வேண்டாம்" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "கும்மிருட்டில் நடனம்" [சுருக்கிய கதை] முள்ளிவாய்க்காலில் இரவு கனமாக இருந்தது, இந்த மண்ணில் நடந்த கொடுமைகளை வானமே புலம்பியது போல, மேலே உள்ள நட்சத்திரங்கள் மங்களாகி கும்மிருட்டாய் ஆகியது. இந்த மண்ணிலிருந்து திருடிய அல்லது அழித்த எல்லா உயிர்களும், அந்த மோதலின் நிழலில் சிக்கிக்கொண்டு, அதன் எரிந்த பூமிக்கு அடியில் இருந்து, அவர்களின் குரல்கள் இன்னும் நீடித்துக்கொண்டே இருந்தது. "உடைதலையும் மூளையும் ஊன்தடியும் என்பும் குடருங் கொழுங்குருதி யீர்ப்ப – மிடைபேய் பெருநடஞ்செய் பெற்றித்தே" இரத்த வெள்ளத்தில் நிணமும், தசையும் எலும்பும் மிதந்துவரும் போர்க்களத்தில் பேய்க் கூட்டங்கள் மகிழ்ச்சியினால் கூத்தாடும். ஆனால் இங்கு முள்ளிவாய்க்காலில் வலுக்கட்டாயமாக, நீதிக்குப் புறம்பாக கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிரும் பேயாக மண்ணில் இருந்து எழுந்து நியாயம் கேட்கிறது! இறுதி போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தப்பிப்பிழைத்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர், முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் அல்லது "விசாரணைகளின்" பின் காணாமல் போனார்கள். அவர்களின் கனவுகள், அவர்களின் கதைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை இந்த மண்ணின் இருண்ட, இரத்தம் தோய்ந்த வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியது. அதை இன்னும், ஆண்டுகள் போனாலும், முள்ளிவாய்க்காலின் இரத்தம் தோய்ந்த மண்ணால் மறக்கமுடியவில்லை. கடிகாரம் நள்ளிரவைத் தாண்டியதும், அங்கு காற்று அமைதியாக, இடிபாடுகள், சாம்பல் மற்றும் நிழல்களில் இருந்து ஒவ்வொரு உருவங்களும் வெளிவரத் தொடங்கின. அவைகள் ஒவ்வொன்றும் தங்கள் தங்கள் துன்பத்தின் அடையாளங்களைச் சுமந்தனர்: எறிகணை துண்டுகளால் ஏற்பட்ட தழும்புகள், உடைந்த கைகால்கள் மற்றும் ஒருமுறை பயத்தில் மூழ்கிய கண்கள். இவை வெறும் தோற்றங்கள் அல்ல; அவர்கள் அநீதியின் கொடூரங்ககளால் மண்ணில் மூழ்கிய ஆன்மாக்கள். ஒவ்வொரு ஆத்மாவும் பேய்களாக 'கும்மிருட்டில் நடனம்' ஆடின. அவற்றின் அசைவுகள் வேதனையையும் கண்ணீரையும் தந்தன. ஒவ்வொரு முத்திரையும் அடிகளும் தங்கள் தங்கள் கதைகளை, உண்மையாக நடந்தவற்றை விவரித்து கேள்விகேட்டன. ஒரு தாய் கண்ணுக்குத் தெரியாத குழந்தையைத் தொட்டிலிட்டு நடனமாடினாள், அவளுடைய பாடல் தனது குழந்தையின் திருடப்பட்ட எதிர்காலத்திற்கான வேண்டுகோள். ஒரு இளைஞன் தடுமாறி முன்னோக்கிச் சென்றான், அவனது உடல் தன்னைத் துளைத்த தோட்டாக்களை இன்னும் உணர்வது போல் நெளிந்தது நெளிந்து வேதனைப்பட்டது. இந்த பேய்களின் கூட்டத்தின் ஒரு மூலையில், ஒரு மூத்த ஆவி, தமிழ் மக்களின் பெருமையைக் கொண்டாடிய, சங்கப் புலவர்களில் ஒருவரான ஈழத்துப் பூதன்தேவனாரின் பாடல்களை பாடி ஆடியது . அதன் அருகில், விஜயனின் வருகையை, மற்றொரு ஆவி விவரித்தது. "அவர்கள் அதை வரலாறு என்று அழைக்கிறார்கள், ஆனால் இது மத குருவால், " பௌத்தர்களது மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக தொகுக்கப்பட்ட கதை," என்று அது கூறிக்கொண்டு இருந்தது.“ விஜயன் இந்த மண்ணில் காலடி வைப்பதற்கு முன்பே நம் முன்னோர்கள் இந்த மண்ணை உழுது அரசுகளை உருவாக்கினார்கள். நாங்கள் புதியவர்கள் அல்ல; நாங்கள் இலங்கையின் மூத்த குடிமக்களில் ஒருவன் என்று இன்னும் ஒன்று நடனம் ஆடிக்கொண்டு இருந்தது. 'கும்மிருட்டு நடனம்' விடியும் மட்டும் தொடர்ந்து, அவர்கள் ஒன்றாக மரணம் வேதனையின் பயங்கரமான ஓலத்தை எழுப்பினர். “வாழ்க்கையில் நாங்கள் அமைதியாகிவிட்டோம்; மரணத்தில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். முள்ளிவாய்க்காலின் சாம்பலில் இருந்து நீதி எழும்” [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  11. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 17 நீலியின் கதைமட்டும் அல்ல,மேலும் பேயும் தீய சக்திகளும் தாக்காமல் தடுக்க ஐயவி எனப்படும் வெண்கடுகை நெருப்பில் இட வேண்டும், மணி அடிக்க வேண்டும், வேப்பிலையைப் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தகவல்களையும் சங்க இலக்கியம் தருகிறது. அது மட்டும் அல்ல, சதுப்பு நிறைந்த வயல் நிலங்களில் நடக்கும் ஒருவரை கொள்ளிவாயுப் பேய் அல்லது கொல்லி வாய் பிசாசு நெருப்பாகப் பின்தொடரும் எனவும் ஓட முற்பட்டால் இதுவும் ஓடும் எனவும் கூறப்படுகிறது. அறிவியல் ரீதியில் அணுகுபவர்கள் இதைச் சதுப்பு நிலத்தின் கீழ் அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து உயிரிவாயு எனப்படும் மெதேன்[Methane CH4 ] வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும் கால் வெளியில் எடுக்கப்படும் போது வாயு வெளியேறி காற்றில் தீப்பற்றிக் கொள்ளுவதாகவும் விளக்குகின்றனர். இறப்பை பற்றி பல மூட நம்பிக்கைகள் பரவலாக உண்டு. குறிப்பாக மரணம் ஏற்பட்ட வீட்டில் சாப்பாடு சமைக்க மாட்டார்கள்.துடக்கு[தீட்டு/ unclean ] என்று கருதி சமையல் அறைப்பக்கம் போகமாட்டார்கள். அயலவர்கள் சமைத்து உணவு கொடுப்பார்கள்.ஒரு குடும்பத்தில் மரணம் நிகழும் போது அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து இருப்பதாலும் சமைப்பதில் ஒரு விருப்பமோ அல்லது நேரமோ இல்லாததால் அன்றைய கூட்டு குடும்ப வாழ்வில் இப்படி ஒரு பழக்கம் தோன்றியது என நம்புகிறேன்.அது மட்டும் அல்ல இது,ஒரு பிரச்சனையான நேரத்தில், சமுகத்தின் உணர்வை[sense of community] பலப்படுத்துகிறது. காகம் கரைதல்,ஆந்தை அலறல், பூனையின் கரைவு என்பன நிமித்தம்[சகுனம்] ஆக கருதப்படுகிறது அது போல வால் நட்சத்திரம் ஆகாயத்தில் தோன்றுவது அரசனின் சாவை குறிப்பதாக ஷேக்ஸ்பியரும்[ஜூலியஸ் சீசர்] புறநானுறும் கூறுகிறது. In the play 'Julius Ceasar' where Shakespeare says " When beggars die there are no comets seen, The heavens themselves blaze forth the death of princes." [Julius Caesar (II, ii, 30-31)] புறநானூறு 117 - கபிலர் மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும், தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும் ..................................., அதாவது சனிமீன் புகைகளோடு கூடிப் புகையினும்; எல்லாத் திசையினும் புகை தோன்றினும்; தென்றிசைக்கண்ணே வெள்ளி போக்குறினும்...என்கிறது.இப்படியான பாடல் வரியை சிலப்பதி காரத்திலும் காணலாம். "கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்,விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்" (சிலப்.10:102: 3) வால் நட்சத்திரம் போல, ஒரு வீட்டருகே ஆந்தை அலறினாலோ அல்லது கோட்டான் (அது ஒரு வகை ஆந்தை) கூவினாலோ அந்த வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும் என்பது சிலர் எண்ணம். ஏனென்றால் அது 'powwa powwa',அதாவது "போவா போவா" என்று கத்துவதால். பெரும்பாலான தமிழர்கள் இன்னும் தம் முனோர்கள் காகத்தின் தோற்றத்தில் வருகிறார்கள் என நம்புகிறார்கள்.அதனால் தான் காகத்திற்கு படைக்கிறார்கள். பிண ஊர்வலம் எதிர்ப்பட்டால் எடுத்த காரியம் நல்ல முறையில் முடியும் என்றும் நீண்ட நாள் நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு அமாவாசை ஒரு கண்டமாகக் கருதப்படும் என்றும் நம்புகிறார்கள். ஏனெனில் எமன் அந்நாளில் கூடுதலான வேலை செய்யும் நாளாக மக்கள் நம்புகின்றனர் "அண்டம் காக்கா கரைந்தால், நாய் தொடர்ந்து ஊளையிட்டால் யாரோ சாகப்போகினம் என்றும் அது போல சாகக் கிடப்பவன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள சுடர் ஆடினால் இறந்துபோவான் என்றும் நம்புகிறார்கள். "என்னை மார்பிற் புண்ணும் வெய்ய நடு நாள் வந்து தும்பியும் துவைக்கும்; நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா; துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்; அஞ்சு வரு குராஅல் குரலும் தூற்றும்;" [புறநானூறு 280] அதாவது என் கணவனின் மார்பில் உள்ள புண் மிகவும் கொடியது. நடுப்பகலில் வண்டுகள் வந்து ஒலிக்கின்றன; என்னுடைய பெரிய அரண்மனையில் ஏற்றிவைத்த விளக்குகள் நின்று நிலைத்து எரியாமல் அவிந்துவிடுகின்றன; என் கணவன் துன்பத்திலிருக்கும் பொழுது நான் உறங்க விரும்பாவிட்டாலும் என் கண்கள் உறக்கத்தை விரும்புகின்றன; அச்சத்தைத் தரும் கூகை தன் குரலால் அலறுகிறது,,என்கிறது. இந்த நூற்றாண்டு பாரதி,தன் நெஞ்சு பொறுக்காமல் “அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்களென்பர்; துஞ்சுது முகட்டிலென்பார்; அந்த மரத்திலென்பார்; இந்தக் குளத்திலென்பார்" என்று குமுறினான்.இப்படி சில பேர் குமுறினாலும் சில சுயமரியாதையுள்ள பெரியார்கள் பேய்களுக்கெதிராக கடும் பிரச்சாரம் செய்தாலும் பேய் விசுவாசிகளின் நம்பிக்கையை இன்றுவரை அசைக்க முடியவில்லை.இது அவர்களின் இடையில் சாதாரணமாக இன்றுவரை காணப்படும் பழமொழியில் இருந்தும் உணரலாம்.இதோ அந்த பழமொழிகள்: "பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" "பெண் என்றால் பேயும் இரங்கும்" "நோய்க்கும் பார்க்க வேண்டும்; பேய்க்கும் பார்க்க வேண்டும்." இவை தமிழர்களின் உள்ளங்களில் பேய்களுக்கு இருக்கும் இடத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.அது மட்டும் அல்ல பிசாசுகள், மோகினி, இரத்தக் காட்டேரி...... என பேய்களுக்கு இருக்கும் செல்வாக்கு மேலும் சான்றுகள் ஆகின்றன.இவை மட்டும் அல்ல,நாட்டுப்புற மக்களின் உணர்ச்சியின் வெளிப்பாடாக அமையும் ஆடல், பாடல் அடங்கிய நாட்டுப்புறக் கலைகளிலும் "பேய் ஆட்டம்" இடம் பெறுகிறது என்றால் பாருங்களேன்! பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையதே. தற்போது இந்த வழக்கங்கள் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இருப்பினும் ஒரு சிலரிடம்,குறிப்பாக கிராமங்களில் இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கிறது.சமுதாயக் கட்டுப்பாடுகளால், உள் மனதில் சில அடக்கி வைக்கப்பட்ட ஆசைகள் இருக்கும். இவையே பின்னர் அடக்க இயலாமல் வெளிக் கிளம்பும் போது ஹிஸ்டீரியா[hysteria நரம்புத் தளர்ச்சி நோய்/உள வெறுப்பு நோய்] எனும் மனஅதிர்ச்சி நோயாக மாறுகிறது. இந்த நோயுடையவர்கள்தான் பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் போன்ற செயல்களில் இறங்குகின்றனர் என நம்புகிறேன் மேலும் இந்த நோய் பெரும்பாலும் மத உணர்வு மற்றும் கடவுள் நம்பிக்கை அதிகமுடையவர்களுக்குத்தான் பொதுவாக வருகிறது. இறுதியாக தமிழர்களின் நாகரிகம் என கருதப்படும் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து வெளி நாகரிகத்தில் கண்டு எடுக்கப்பட்ட இரண்டு பக்க மொகெஞ்சதார முத்திரை ஒன்று பேய் அல்லது பிசாசு போன்ற உருவத்தை காட்டுகிறது. இதைப்பற்றிய சரியான விளக்கம் இன்னும் இல்லை.ஆனால் பேய்,பிசாசு நம்பிக்கைகள் இதன் மூலம்,அன்றே இருந்திருக்கலாம் என நம்பலாம். கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பகுதி 18: "பெண்கள்" தொடரும்
  12. "உனக்காக் காத்திருக்கேன் [14 பெப்ரவரி 2025 ]" [காதலர் தினம் கொண்டாடும் உறவுகளுக்காக] வடமாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்களின் கட்டட நிர்மாண, மீள்நிர்மாண, புனர்நிர்மாண மற்றும் பராமரிப்பு தொடர்பான சேவை வழங்கும் கட்டட திணைக்களத்தில் ஒரு இளம் பொறியியலாளராக ஆராமுதன் அன்று கடற்கரை வீதி, குருநகரில் அமைந்துள்ள பணிமனைக்கு முதல் முதல் 01 பெப்ரவரி 2020, வேலையில் சேர, தனது தற்காலிக வதிப்பிடத்தில் இருந்து புறப்பட்டான். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வரை இலகுவாக சென்றவன், அதன் பின் கொஞ்சம் தடுமாறினான். அப்பொழுது மாணவர்கள் கடக்க தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தவன், தனக்கு பக்கத்தில் ஸ்கூட்டரில், தனது கடிகாரத்தை பார்த்து முணுமுணுத்துக் கொண்டு இருந்த அந்த பெண்ணிடம் ' ஹலோ மேடம், எப்படி கட்டட திணைக்களத்திற்கு போவது?' என்று வழி கேட்டான். அவள் அவனை திரும்பி பார்க்காமலே, எனக்கு வேலைக்கு நேரமாகி விட்டது, முதலாம் குறுக்கு தெருவில் திரும்பி, அம்மன் ஆலயத்தில் இடது பக்கம் திரும்பி கடற்கரை வீதியால் போகலாம் என்று கூறியபடியே வேகமாக போய் விட்டாள். என்றாலும் அது அவனுக்கு போதுமானதாக இருந்தது. அவன் அங்கு பணிப்பாளரை சந்தித்து, முறைப்படி வேலையை பாரம் எடுத்த பின் தனக்காக ஒதுக்கிய அலுவலக அறைக்கு, கட்டட திணைக்கள பணிப்பாளருடன் சென்றான். பணிப்பாளர் அவனுக்கு ஜூனியர் கிளார்க் மற்றும் தட்டச்சராக அவனுக்கு பணிபுரியப் போகிற நறுமுகையையும், சிவலிங்கம் என்ற பியூனையும் அறிமுகப் படுத்தினார், என்ன ஆச்சரியம், வேலைக்கு நேரமாகி விட்டது என்று விரைவாக சென்றவள் தான் இவள். ஆனால் அவன் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. என்றாலும் அவளுக்கு அது புரிந்து விட்டது என்பது, பணியாளர் சென்ற கையேடு. 'சாரி சார்' என்று அவள் உடனடியாக கூறி விட்டு, தன் இருக்கைக்கு போனது அவனுக்கு சொல்லாமல் சொன்னது. ஆராமுதன் இது புது வேலை என்பதால், தன் பணியை சரியாக, ஒழுங்காக, விரைவாக ஆரம்பிக்க முன்னைய வேலைகளை, அதன் இன்றைய நிலையை அலசுவதிலும், நேரடியாக கள நிலவரத்தைப் போய் பார்ப்பதிலும் முழுமூச்சாக இருந்தான். அதனால் அவன் தன் அலுவலக அறையில் முதல் இரு கிழமையும் தங்கியது மிக மிக அரிதாக இருந்தது. அதனால் ஆரமுதனும் நறுமுகையும் அதன் பின் பெரிதாக சந்தித்து கொள்ளவில்லை. நறுமுகை, தன் பெயருக்கு ஏற்ப அன்பு என்ற நறுமணம் வீசும் மலர் மொட்டுவாக, ஆனால் வேலையில், தன் கருத்தில் உறுதியாகவும் இருப்பவள். இதனால் சிலர் தலைக்கனம் பிடித்தவள் என்றும் கூட கூறுவார்கள். அதற்கு அவளது அழகும் ஒரு காரணம் தான்!. இரு கிழமைக்கப் பின், ஆராமுதன், தனது வேலைகளைப் பற்றி சரியாக புரிந்து ஒழுங்கு படுத்திக் கொண்ட பின், கொஞ்சம் ஆறுதலாக தனது அடுத்த அடுத்த வேலைத் திட்டங்களைப் பற்றி, தனது அலுவலக அறையில் சாவகாசமாக ஆய்வு செய்து கொண்டு இருந்தான். அது 14 பெப்ரவரி 2020, ஒரு கணம் அவன் நறுமுகையை சில குறிப்புகளை கொடுத்து தட்டச்சு செய்ய அழைப்பதற்காக நிமிர்ந்தான். அவளும் சிறிய புன்னகையுடன் ' சார், ஏதாவது வேலையா?' என்று கேட்டாள். அப்ப தான் அவன் அவளை முழுதாகப் பார்த்தான். 'முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு' மலரப் போகின்ற மொட்டில் இருக்கும் மணம் போல இப்பெண்ணினது நகைமொக்குள் ஒரு குறிப்பு உண்டு என்று அவன் மனம் அவனுக்கு சொல்லியது. காதல் வயப்படாத ஆணோ பெண்ணோ கிடையாது. இது மனிதன் தோன்றிய காலம் முதல் உள்ள மனித இனத்துக்கே உள்ள தனி இயல்பு. காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு என்று என்றோ ஒரு நாள் அவன் படித்த வரிகள் அந்த குறிப்பில் அவன் உணர்ந்தான். காதல் உச்சரிக்க, உணர சுகமானது, பட்டாம் பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தரும் என்று சங்க இலக்கியத்தில், இன்றைய சினிமா டூயட் பாடல்களில் பார்த்துள்ளான். ஆனால் பலருக்கு அது வாழ கடினமானது என்பது அப்பொழுது அவனுக்குத் தெரியாது. அவள் தன் குறிப்பு புத்தகத்துடன் அவன் அருகில் வந்தாள். அவன் அப்படியே ஒரு கணம் கண் அசையாமல் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான். நீண்ட காலம் தனியாக, எந்த காதலிலும் விழாமல் தானும் தன்பாடுமாக இருந்த அவள், இன்று எனோ தடுமாறி விட்டாள். அவளின் அந்த திடீர் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் அவளுக்கு இருந்தது. அவள் தனக்குள் தானே சிரித்துக் கொண்டாள். அவள் தன்னை சமாளித்துக் கொண்டு, “ஹலோ சார், நான் ரெடி” என்றாள். அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த அவன் ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து மண்ணிற்கு கொண்டு வந்தான்! ஏன் அவள் கூட இன்னும் அவனில் இருந்து தன் கண்ணை எடுக்கவில்லை. கடமை என்ற ஒரு வார்த்தையில் அவள் கட்டுண்டு குறிப்பு புத்தகத்துடன் நின்றாலும், தன் கண்களை அவன் மீதிருந்து அவளால் எடுக்கவே முடியவில்லை. அதெப்படி ஒருவனைப் பார்த்தவுடன் காந்தம் போல் மனம் அவனிடம் சென்று ஒட்டிக் கொள்ளும்? அவளுக்கு அது புரியவும் இல்லை. தன் உடலின் ஒவ்வொரு அணுவிலும் பூக்கள் பூத்திருப்பது போல, அதிகாலை குளிரில் ஆற்றில் முங்கி எழும்போது வருமே ஒரு சில்லிட்ட உணர்வு அது போல, அனைவரும் உறங்கிய பின் நாம் மட்டும் விழித்திருந்து ரசிக்கும் நிலவு தரும் சுகம் போல, அவளுக்குள் ஒரு உணர்வு ஊசலாடிக்கொண்டு இருந்தது. அது தான் உண்மையில் காதலர்களாக மாறிய முதல் சந்திப்பு! அதுவும் இன்று 14 பெப்ரவரி, காதலர் தினம்! அவன் தன்னை அறியாமலே 'மகிழ்வான காதலர் தினம்' என்று அவளுக்கு வாழ்த்தினான். அவளும் இதுவரை கொஞ்சம் தன்பாட்டில், மற்றவர்கள் 'தலைக்கனம் பிடித்தவள்' என்று கூறும் அளவு இருந்தவள், அவன் சொல்லி முடிக்க முன்பே, அவளும் 'ஹாப்பி வேலன்டைன் டே சார்' என்றாள். அதன் பின், வேலைத்தளத்தில் எசமான் [பாஸ்] மற்றும் அலுவலக ஊழியராகவே தொடர்ந்து கடமைக்கு இடைஞ்சல் இல்லாமல் இருந்தாலும், கடமை நேரத்துக்குப் பின், அவர்கள் இருவரும் குருநகர் கடற்கரையில் இருந்த ஒரு பழைய ஆலமரத்தின் கீழ் சந்திப்பது வழமையாகி விட்டது. விரைவில் அவர்கள் இருவரும் ஆழமாக காதலித்தனர். அவர்களின் பிணைப்பு ஒவ்வொரு நாளும் வலுவடைந்தது, ஆனால் வாழ்க்கையில் திருப்பங்கள் சொல்லிக் கொண்டு என்றும் வருவதில்லை. ஆராமுதனுக்கு வெளிநாட்டில் உயர் படிப்புக்கான, அவனாலேயே நம்பமுடியாத, ஒரு வாய்ப்பு தானாக கிடைத்தது. அந்த நேரம் தான் நறுமுகையை விரைவிலேயே பிரியப் போகிறேன் என்ற கவலை அவனை வாட்டியது. ஆனால் இது வாழ்வின், அறிவின் முன்னேறத்துக்குத் தானே, சென்று வாருங்கள், நான் என்றும் உங்களுக்காக காத்திருப்பேன் என்று உறுதி வழங்கி, அவனுக்குத் தைரியம் கொடுத்தாள். பின் "நான் என்றும் உனக்காக் காத்திருக்கேன்" அவள் முணுமுணுத்தபடி அவனின் தோளில் உரிமையுடன் மௌனமாக சாய்ந்தாள். அவன் அவளின் முகத்தை கையில் ஏந்தி, அவளையே அசையாமல் பார்த்தான். அந்த ஒரு பார்வை என்ன செய்துவிடும்? அம்மாவின் பார்வை அணைத்துக் கொள்ளச் சொல்லும். அப்பாவின் பார்வை ஆசி தந்து செல்லும். ஆசானின் பார்வை அடங்கி அமரச் சொல்லும். ஆனால் இவன் பார்வை அவளுக்குள் பல மாற்றங்கள் நிகழ்த்தியது. அவனின் அந்த ஒற்றைப் பார்வை என்னவெல்லாமோ நினைவுகளைத் தட்டி எழுப்பி, உணர்வுகளை அவளுக்கு ஆர்ப்பரிக்கச் செய்தது. முழு நிலவைத் தீண்டி விடத் துடிக்கும் கடலலையின் கரங்கள் போல, அவள் மேல் பட்ட காற்று அவனைத் தீண்டி விட கொஞ்சம் கொஞ்சமாய் நீண்டு கொண்டிருந்தது. "ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள் நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே; இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்; சில மெல்லியவே கிளவி; அனை மெல்லியல் யான் முயங்குங்காலே." அழகாக ஒடுங்கிய அடர்த்தியான கூந்தலை உடையவள், பிறை போல் வளைந்த வாசனை நெற்றியை உடைய சின்னப் பெண், சுவையான குளிர்ந்த நீரைப் போன்றவள் என் நறுமுகை , அவளைப் பிரிந்தால் வருத்தம் தருகிறாள், அவள் இப்படி பட்டவள் தான் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை , அவளைப் பற்றி சொல்ல வார்தையில்லை. கொஞ்சம் தான் பேசுகிறாள், ஆனால் திரும்ப திரும்ப அவள் பேச்சை கேட்க வேண்டும் என்று தோணுகிறது, அணைக்கும் போது மென்மையான இலவம் பஞ்சால் செய்யப்பட்ட தலையணை போல் மென்மையாக இருக்கிறாள். அவன் மனம் நறுமுகையை வர்ணனை என்ற மலர்களால் பூசை செய்துகொண்டு இருந்தது. 'திரும்பி வருவேன்' என்று அவன் உறுதியளித்து அவள் கண்ணீரை துடைத்து விடை பெற்றான். மாதங்கள் வருடங்களாக மாறியது, நறுமுகை தனது வேலையை அலுவலகத்தில் இன்னும் ஒரு பொறியியலாளரின் கீழ் விடா முயற்சியுடன் தொடர்ந்தாலும், அவளுடைய இதயம் அவனையே நினைத்து ஏங்கியது. அவள் அடிக்கடி அவர்கள் இருவரும் வழமையாக சந்திக்கும் பழைய ஆலமரத்தின் அருகே உட்கார்ந்து, அவர்கள் பகிர்ந்து கொண்ட தருணங்களை நினைவு கூர்ந்தாள். ஆராமுதன் தொடக்கத்தில் அடிக்கடி தொலை பேசியில் தொடர்பு கொண்டாலும், பின் அவனின் ஆராச்சி, மேற்படிப்பு கடுமையாக கடுமையாக தொடர்பு குறையத் தொடங்கியது. அவனுக்கு அந்த பல்கலைக்கழகத்திலேயே ஆராய்ச்சி அறிஞர் மற்றும் விரிவுரையாளர் பதவி கிடைத்தது. அதனால் அவன் அங்கேயே நிரந்தர குடியுரிமையும் பெற்றான். அவனின் ஆராச்சிக்கு துணையாக மேற்படிப்பு படிக்கும் அந்த நாட்டு இளம் பெண்ணும் அவனுடன் சேர்ந்து பணியாற்றினாள். இருவரும் ஆராச்சி நிமித்தம் நெருக்கமான நண்பர்களாகவும் மாறினார். ஒரு முறை நறுமுகை, ஆராமுதனுக்கு தொலைபேசி எடுத்த பொழுது, அந்த வெளிநாட்டு பெண்ணே மறுமொழி கொடுத்தாள். பின் ஆரமுதன் தொடர்பு கொள்வான் என்று கூறி உடனடியாக துண்டித்து விட்டாள். இதனால் உணர்ச்சிகளின் சூறாவளி அவள் மீது வீசியது. அவனின் வெற்றிகளுக்காக அவள் பரவசமடைந்தாதாலும், அவளுடைய இதயத்தின் வலிக்கு அது உதவ முடியவில்லை. அவனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும், அவனிடம் கேட்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. திருப்பவும் அழைப்புவிட எனோ அவள் தயங்கினாள். ஆனால் அவனிடம் இருந்து ஒரு நாளாகியும் அழைப்பு வரவில்லை . எனவே அன்று இரவு, அவள் ஒரு இதயப்பூர்வமான கடிதத்தை அவனுக்கு எழுதினாள்: "என் அன்பான ஆராமுதனுக்கும் மரியாதைக்குரிய என் சார்க்கும், எங்கள் அழகிய யாழ் நகரத்தில் சூரியன் உயர்ந்த பனை மரங்களுக் கூடாக மறையும் போது, உங்கள் சாதனைகளை மற்றும் நல்ல ஆய்வு, விரிவுரை பணியையும் நினைத்து என் இதயம் பெருமிதம் கொள்கிறது. என்றாலும் உறக்கம் என்னை கவ்வ பலவேளை மறுக்கிறது. நீங்கள் இல்லாதது எனக்கு பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்தது என்றாலும், அது என் மனதை ஆறுதல் படுத்தவில்லை. குறைந்து போகும் தொடர்பும் உங்கள் பிஸியான வாழ்க்கையும் எமக்கிடையில் இடை வெளியைக் கூட்டினாலும், நாம் இருவரும் ஒன்றாக ஆலமரத்தடியில் பகிர்ந்து கொண்ட நினைவுகளையும், நாம் நெய்த கனவுகளையும், நாங்கள் அளித்த வாக்குறுதிகளையும் நான் இன்னமும் மிகவும் மதிக்கிறேன். வாழ்க்கை நம்மை தனித்தனி பாதையில் அழைத்துச் சென்றாலும் என் இதயம் உறுதியாக உள்ளது. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். ஆனால் இதை நினைவில் வையுங்கள், நீங்க எவ்வளவு தூரத்திற்கு போனாலும் எவ்வளவு காலம் எடுத்தாலும், எங்கள் காதல் மலர்ந்த எங்கள் ஆலமரத்தின் கீழ், நான் உனக்காக காத்திருப்பேன். இன்று 14 பெப்ரவரி 2025, காதலர் தினம். இன்றாவது என் எண்ணம் மலரும் என்று எண்ணுகிறேன் 'ஹாப்பி வேலன்டைன் டே' என்றும் மாறாத அன்புடன், நறுமுகை" அவள் உறையை மூடியபோது, அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. அவள் ஆலமரத்திற்குச் சென்று, கடிதத்தை அதன் தண்டுகளில் பொருத்தி, சலசலக்கும் இலைகளை நோக்கி, "நான் உனக்காக் காத்திருக்கேன்" என்று கிசுகிசுத்தாள். ஆனால் அவள் கடிதம் போட்டுவிட்டு ஸ்கூட்டரில் ஏறமுன்பு, அவளுக்கு தொலை பேசியில் ஒரு குறும் செய்தி ஒன்று வந்தது. "அன்புள்ள என் நறுமுகைக்கு, இந்த காதலர் தினத்தில் , நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், நான் உன்னைக், அன்று போல் இன்றும் காதலிக்கிறேன். ஏனென்றால் நீ எனக்கு வேண்டும் என்பதால் அல்ல, உண்மையில் நீ எனக்கு வேண்டும் என்பதால், நான் உன்னைக் காதலிக்கிறேன், அதை நீ உணர்வாய் என்று எண்ணுகிறேன்!" என்று அமெரிக்க சமூக உளவியலாளர் எரிக் ஃப்ரோம் (Erich Fromm) இன் புகழ் பெற்ற வசனம் அதில் இருந்தது [Immature love says: "I love you because I need you." Mature love says: "I need you because I love you.”] 'ஹாப்பி வேலன்டைன் டே, மை ஸ்வீட் கேர்ள்!' மேலும் "ஆனால் நான் என் ஆராச்சியில் மூழ்கி விட்டால் என்னையே மறந்து விடுகிறேன். அது தான் என் பலவீனம், நல்ல காலம் என்னுடைய உதவி ஆராய்ச்சியாளர் எமிலி நான் பட்டினியா இருக்காமல் கவனித்துக் கொண்டார். மூன்று ஆண்டுகள் எப்படியோ ஓடிவிட்டது. இப்ப நாலாவது ஆண்டை நிரந்தர வேலையுடன் தொடர்கிறேன். எனவே விடுதலை எடுத்து உன்னிடம் விரைவில், அந்த எங்கள் ஆலமரத்திற்கு வருவேன், உன்னைக் கூட்டிப்போக" அன்புடன் உன், ஆராமுதன்" அவள் முகத்தில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அவள் மெதுவாக கிசுகிசுத்தாள், "நீங்கள் திரும்பி வருவீர்கள் என்று எனக்குத் தெரியும், "நான் உனக்காக் காத்திருக்கேன்". அந்த நேரம் பார்த்து, பக்கத்து தேநீர் கடையில் இருந்து “என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை, சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை” என்று இசைஞானியின் பாடல் ஒலித்தது. ஆரமுதனே தன்னை நினைத்து பாடுவதாக அது அவள் மனதுக்கு ஒரு ஆறுதல் கொடுத்தது ! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்
  13. "வாழ்வில் வசந்தம்" & "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல" "வாழ்வில் வசந்தம்" "வாழ்வில் வசந்தம் கட்டாயம் வரும் தாழ்வில் ஒரு உயர்வு வந்தால்! தோல்வியில் வெற்றி மனதுக்கு அமைதி சொல்லில் அடங்கா மகிழ்ச்சி அது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................. "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல" "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல தையல் அருகிலே தாளாத காதலுல தைத்த வண்ணத்துல தாமரை அழகில தைவரல் சுகத்துல தாலாட்டி மகிழ்ந்ததேனோ?" "கற்றாழை முள்ளு குத்தியதோ பாதத்தில் கண்கள் இரண்டும் கலங்கியதோ வேதனையில் கஞ்சி குடிக்கையிலே கதறல் கேட்டுதே கலைமகளே உன்னை நடக்க விடுவேனோ?" "வேகாத வெயிலுக்குள்ளே ஆலமர நிழலிலே போகாத ஆசைக்குள்ளே ஆயிரம் எண்ணத்திலே தீராத காதலுக்குள்ளே ஆடிமாத தடையிலே சேராத உறவென்று இனிமேலும் வேண்டாம்?" "மஞ்சள் புடவைக்காரி மச்சனின் ஆசைக்காரி நெஞ்சில் அன்பை நெருப்பாய் தந்தவளே வஞ்சம் இல்லா வட்ட முகத்தாளே மஞ்சம் காத்திருக்கு மயக்கம் தந்தாலென்ன?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 16 ஒவ்வொரு சமுதாயத்திலும் பேய், கூளி, பிசாசு, ஆவி, முனி என்பன ஒரு பங்கு வகிக்கின்றன. இறந்தவர், சுடலை, இருண்ட இரவு, தெரு நாயின் ஊளை என்பனவற்றின் பயம் நாட்டுப்புறத்தில் எம்மை கட்டுப்படுத்துகிறது. அங்கு பேயோட்டுதல் இன்னும் ஒரு சாதாரண சங்கதியாக உள்ளது. ஆலயக்குருக்கள், மரபுப் படியான பேய் ஓட்டிகள், ஆன்மீக குருக்கள் [Temple priests, traditional ghost busters, spiritual gurus ] என்பவர்கள் இதில் வல்லுனராக இருக்கிறார்கள் இயற்கைக்கு புறம்பாக, தற்கொலை, கொலை, அல்லது விபத்து மூலம் திடிரென மரணிக்கும், முக்கியமாக இளம் வயதினர் ஆவியாக உலாவுவதாக நம்புகின்றனர். அவர்கள் நிறைவேறப்பெறாத அவாக்களை கொண்ட பேயாக உலாவுகின்றன எனவும் நம்புகின்றனர். அது மட்டும் அல்ல, இந்த பேய்களை பேயாட்டிகள் [ghost charmer] கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவர்கள் என்றும், தனது எதிரியை தாக்க, இப்படியான பேய்களை இவர்கள் மூலம் பெறலாம் எனவும் நம்புகிறார்கள். ஒவ்வொரு தமிழனும் அவன் எங்கு இருந்தாலும் கல்விக்கு [படிப்பிக்கு] முதல் இடம் கொடுக்கிறான். இதனால் தமிழன் பல மருத்துவர்களையும் பொறியியலாளர்களையும் தனது சமுதாயத்தில் உண்டாக்கிறான். ஆனால் ஒரு தெளிந்த இரு கவர்ப்பிரிவு முறையை [dichotomy: division into two mutually exclusive, opposed, or contradictory groups: a dichotomy between thought and action.] உள்ளத்தில் கொண்டுள்ளார்கள். இவர்கள் விஞ்ஞானத்தை படிக்கிறார்கள் அனால் அதில் அறிவியல் மனநிலை [scientific temper] இல்லாமல். ஆகவே தான் இன்னும் பல மூட நம்பிக்கைகள் அவர்களிடம் நிறைந்து உள்ளன. ஆகவே அதில் இருந்து விடுபட குறள் 355 இன் தேவை அவர்களுக்கு ஏற்படுகிறது. "எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு."- 355 எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத் தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய் யுணர்வாகும் என்கிறார் வள்ளுவர். அது போல தத்துவமேதை சோக்கிரட்டீஸ் சொன்னார் எதிலும் சந்தேகம் கொள். ஏன் எப்படி எதற்காக என்று பல கேள்விகள் உன்னுக்குள் வரட்டும் என்றார். மேலும் பேய் பற்றிய நம்பிக்கைகள் ஈராயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன. சுடுகாட்டில் பேய் மகள் இருப்பாள் என்றும் சுடுகாட்டிற்குப் போனால், அதைத் திரும்பிப் பார்க்காமல் வர வேண்டும் என்றும், போர்க்களத்தில் காயமடைந்து உயிர் நீக்கப் போகும் வீரர்களைச் சுற்றிப் பேய்கள் நிற்கும் என்றும் தமிழர்கள் நம்பினார்கள். பண்டைய தமிழன், பேய் மகள் கொண்டிருந்த தோற்றத்தையும், அவளது கொடிய செயலையும் கண்டு அஞ்சினர் என்பதும், அவை பற்றி சில நம்பிக்கைகள் கொண்டிருந்தனர் என்பதும் சங்கப் பாடல்களினின்றும் [புறநானுறு 356,359,371 ....], சிலப்பதிகார கனாத்திறம் உரைத்த காதையில் இருந்தும் திருமுறைகளினின்றும் [முதல் திருமுறை / 045 திருவாலங்காடு / பாடல் 01, பதினொன்றாம் திருமுறை /002 மூத்த திருப்பதிகம் / பாடல் 12, ... . ], மற்றும் விவேக சிந்தாமணி — பாடல் 30 இல் இருந்தும் நன்கு புலனாகிறது. இதில் சிலவற்றை இங்கு பார்ப்போம். "களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி விழுக்கொடு விரைஇய வெள்நிணச் சுவையினள் குடர்த்தலை மாலை சூடி உணத்தின ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து 25 வயங்குபன் மீனினும் வாழியர் பலஎன உருகெழு பேய்மகள் அயரக் குருதித்துக ளாடிய களம்கிழ வோயே! " புறநானுறு [371:22-26) அதாவது பன்றியின் கொம்பு போன்ற வெண்ணிறமான பற்களால் கடித்து இழுத்து, கொழுப்புக் கலந்த வெண்மையான தசையைத் தின்று சுவைப்பவளாய்க், குடல்களைத் தலையில் மாலையாக அணிந்து கொண்டு, உண்ணுதற்குக் குறையாதவாறு பெரிய வளமாகிய பிணங்களைத் தந்த இவ்வேந்தன் [பண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்], வானத்தில் விளங்கும் பல விண்மீன்களைவிடப் பல்லாண்டுகள் வாழ்வானாக என்று, அச்சம் பொருந்திய பேய்மகள் பாடிக் கூத்தாடும் குருதி கலந்த செந்தூள் பறக்கும் போர்க்களத்திற்கு உரிமையுடையவனே! என்கிறது "படுபிணம்தா என்று பறித்துஅவள்கைக் கொண்டு சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்குஇருளில் சென்றுஆங்கு 20 இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி மடியகத்து இட்டாள் மகவை, இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன்" [9. கனாத்திறம் உரைத்த காதை/சிலப்பதிகாரம்] அதாவது அப்புகாரிலுள்ள சுடுகாட்டுக் கோட்டம் என்னும் நன்காட்டிலே மாந்தர் வாளாது போகட்டுப் போகின்ற பிணங்களைத் [பிணத்தை எரிக்காமலும் புதைக்காமலும் அங்கே கிடத்திப் போகும் பிணங்களைத் / இவ்வாறு வாளாது இட்டுப் போதலும் அக்காலத்து ஒருவகைச் சமய வொழுக்கமாக இருந்தது] தின்று ஆங்குறைகின்ற இடாகினி [பெண் பேய்] என்னும் ஒரு பேயானது; தூங்கு இருளில் ஆங்கு ஏசும்படி [இகழ்ந்து அறிவுறுத்துவாள் போன்று] ஓர் இளங்கொடியாய்ச் சென்று .. என்கிறது. "துஞ்சவருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய் நெஞ்சம்புகுந்தென்னை நினைவிப்பாரு முனைநட்பாய் வஞ்சப்படுத்தொருத்தி வாணாள்கொள்ளும் வகைகேட் டஞ்சும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே" [முதல் திருமுறை / 045 திருவாலங்காடு / பாடல் 01] அதாவது முற்பிறவியில் நட்பாய் இருப்பது போலக் காட்டித் தன்னை வஞ்சனை செய்து கொன்ற கணவனை மறுபிறப்பில் அடைந்து அவனது வாழ்நாளைக் கவர்ந்த பெண்ணின் செயலுக்குத் துணைபோன வேளாளர்கள் அஞ்சி உயிர்த்தியாகம் செய்த திருவாலங்காட்டில் உறையும் எம் அடிகளாவார் என்கிறது. இந்த பாட்டில் தமிழ்நாட்டை உலுக்கிய பயங்கரப் பேய் நீலியின் கதை நினைவுட்டப்படுகிறது. இந்த கதையில் இருந்து தான் "நீலிக் கண்ணீர் வடிக்காதே" என்ற பழமொழி வந்தது. நவக்ஞானி என்ற பார்ப்பனி காசியில் தந்தையுடன் வசித்துவந்தார். அவரை ஒரு வணிகர் பொய் சொல்லி மணம் புரிந்தார். ஊருக்குத் திரும்பிய அவர் வீட்டுக்கு வரும் முன்னரே ஆலங்காட்டில் நவக்ஞானியக் கொலை செய்து விடுகிறார். அவளுடைய மறு அவதாரம்தான் நீலி. அவள் அவனைப் பழிவாங்க எண்ணி மறுபிறவியில் புரிசைகிழார் என்னும் வேளாளர்க்குப் புத்திரியாகப் பிறந்திருந்தாள். தோற்றத்தைக் கண்டு அவளைப் பேயென்று ஊரார் புறக்கணித்தனர், முற்பிறப்பின் கணவனாகிய பார்ப்பான் தரிசனச் செட்டி என்னும் பெயரோடு பிறந்திருந்தான். அவனைக் கண்டதும் இவள் அவன் மனைவிபோல நடித்துப் பழிவாங்கத் தலைப்பட்டபோது அவன் அஞ்சியோடி அவ்வூர் வேளாளர் எழுபதுபேரிடம் அடைக்கலம் புகுந்தான். ஆனால் அவள், ஊர் மக்கள் அனைவரையும் கூட்டி தரிசன செட்டி தன் கணவர் என்று கதறி அனுதாபத்தைப் பெற்றாள். (இதுதான் நீலிக் கண்ணீர் [பொய்க்கண்ணீர்] !!) அவர்கள் பிணை கொடுத்தனர். இருந்தும் இவள் செட்டியை வஞ்சித்துக் கொன்றாள். பிணைகொடுத்த அந்த எழுபது வேளாளரும் தீப்புகுந்து உயிர்துறந்தனர். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 17 : "சாவும் பேயும்" இரண்டாம் பாகம் தொடரும்.
  15. "ஏனிந்தக் கோலம்" "ஏனிந்தக் கோலம் வாலைக் குமரியே ஏமாற்றிப் பிழைப்பதும் ஒரு வாழ்க்கையா ஏராளம் வேடம் ஏன் உனக்கு ஏக்கத்தில் இனியும் தவறு செய்யலாமா?" "பெண்ணியம் சொல்லுவது எல்லோரும் சமம் கண்ணியம் காக்கும் செயல் பாடுகளே மண்ணும் பெண்ணும் இயல்பில் ஒன்றே எண்ணமும் கருத்தும் ஒன்றாய் இருக்கட்டும்!" "அன்பும் நீதியும் ஒருங்கே நின்றால் அழகு பெண்ணும் மகிழ்ச்சி அடைவாள் அடிமைச் சங்கிலியை உடைத்து எறிந்து அச்சம் மடம் நாணம் ஒழியட்டும்!" "உண்மையை உணர்ந்து உலகை அறிந்து பண்பாட்டு நிலையில் சமநிலை போற்றி கண்கள் போகும் வழிகளில் போகாமல் பெண்ணே உங்கள் கைகள் சேரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  16. "அன்புடன் தேன்மொழி" யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கையிலுள்ள 13 பல்கலைக்கழகங்களுள் ஒன்று. இது சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து, 1974 ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டது. இன்று [2024] இலங்கையில் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் என்றும் சலசலப்பாக , அதன் சிவப்பு செங்கல் சுவர்கள் கல்வி அபிலாஷைகள் மற்றும் இளமைக் கனவுகளின் நறுமணத்தில் மூழ்கி இருந்தது. 2024 இல், மாணவர்களின் கடலில், ஒரு பெயர் அடிக்கடி பாராட்டுக்களுடன் பலர் இதயங்களில் கிசுகிசுத்தது: அழகும் அன்பும் தன்னகத்தே கொண்ட, முதலாம் ஆண்டு அறிவியல் பீட மாணவி, 'தேன்மொழி' தான் அவள். சிகப்பு நிறமும், ஒல்லியும், சராசரி உயரமும் கொண்ட அவள், தன்னம்பிக்கையான தோரணையுடன், சிரமமின்றி எல்லோர் கவனத்தையும் தன்பால் ஈர்த்தாள். ஒரு பெண்ணின் அழகு இலக்கணத்தில் நீண்ட கால்கள், ஒரு மெல்லிய இடுப்பு மற்றும் அழகான மார்பு ஆகிய, மூன்று அடிப்படைக் கருத்துக்களைக் கொண்டது. அவள் இந்த இலக்கணத்துக்கே பொருள் சொல்லுபவளாக இருந்தாள். அழகிய தோற்றத்தையும், முகப்பொலிவையும் தரும் பிரகாசமான கண்களையும், சிரிக்கும் போது பார்ப்பதற்கு கவர்ச்சியையும் அழகையும் கொடுக்கும் கொழு கொழு கன்னங்களையும், கவர்ச்சியான முழு உதடுகளையும், மற்றும் சுருண்ட நீண்ட கருங் கூந்தலையும் கொண்ட அவள், தனது கனிவான புன்னகையாலும் கடுமையான இதயங்களைக் கூட உருக்கும் குரலாலும் ஒவ்வொருவரையும், குறிப்பாக ஆண்களை தனக்குத் தெரியாமலே கவர்ந்தாள். அவளுடைய அழகு சங்க இலக்கியங்களில் காணப்படும் விளக்கங்களை எதிரொலிப்பது போல் தோன்றினாலும் - உமாதேவியின் நேர்த்தியையும் கவர்ச்சியையும் அழகையும் சுட்டிக்காட்டும் முதலாம் திருமுறை தேவாரத்துடன் அவள் ஒப்பிடக் கூடியவள். "மாதர்ம டப்பிடியும் மட வன்னமு மன்னதோர் நடை யுடைம் ...... தேமரு வார்குழலன் னந டைப்பெடை மான்விழித் திருந் திழை பொருந் துமே னி ...... வார்மலி மென்முலை ....... வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும் விண் நின்ற மதியின் மென் பூஞ் சிகழிகைக் கோதை வேய்ந்தார் ...... " அதாவது, விரும்பத்தக்க இளம்பிடியையும் [அழகிய பெண்ணையும்], இள அன்னத்தையும் போன்ற நடையினை உடையவளாகிய ....... இனிமையும், மணமும் பொருந்திய நீண்ட கூந்தல், அன்னம் போன்ற நடை, பெண்மான் போன்ற விழி இவற்றை உடையவளும் திருத்தம் பெற்ற அணிகலன்கள் பூண்டவளும் .......... கச்சணிந்த மென்மையான தனங்களை [பெண்ணின் மார்பகம்] உடைய ......... கரிய வண்ணமும் கொண்ட கூந்தல் தொகுதியை வட்டமாகப் பின்னி, கூந்தல் வட்டத்தில் மேகத்திலே தோன்றும் கிரணங்கள் விரிய, சந்திரனைப் போல, மெல்லிய பூக்களால் ஆன ’சிகழிகை’ [தலையைச் சூழ அணியும் மாலைவகை] என்னும் தலைமாலையைச் சூடிய ...... ' என்கிறது இந்த தேவார வரிகள். ஆனால் அவள் உண்மையில் இதைவிட அழகு! தேன்மொழி ஒரு செல்வந்த பிராமண குடும்பத்திலிருந்து வந்தவள், பாரம்பரியம் மற்றும் மதிப்புகளில் அவளுடைய குடும்பம் வாழ்ந்து வந்தது. அவளுடைய சிறப்புப் பின்னணி மிகவும் நன்றாக பெருமையாக இருந்த போதிலும், அவள் அடக்கமாகவும், கனிவாகவும், கூர்வமான புத்திசாலியாகவும் இருந்தாள். அவளுடைய அரவணைப்பு மற்றும் வசீகரத்திற்காக அவளுடன் கூடப்படிக்கும் சகாக்கள் மற்றும் மூத்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் என்றும் காத்திருந்தனர், ஆனால் அவளுடைய இதயம் எனோ அமைதியாக ஒரு துணையை, நண்பனை தானே ஒருதலையாகத் தேர்ந்தெடுத்தது, அவன் தான் கலாநிதி [டாக்டர்] ஆய்வகன். கலாநிதி ஆய்வகன் புதிதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு நியமிக்கப்பட்ட இயற்பியல் [பௌதிகவியல்] விரிவுரையாளர், வயது ஒன்றும் பெரிதாக இல்லை, ஒரு இருபத்தி ஆறு அல்லது இருபத்தி ஏழு இருக்கும். இவனின் வருகை குறிப்பாக பெண்களை திரும்பி பார்க்கவைக்கும். ஒரு கிரேக்க கடவுளின் அல்லது மன்மதனின் கவர்ச்சியுடன், அவன் கம்பீரமான உடல் அமைப்பையும், உடல் வலிமை மற்றும் ஒழுக்கத்தை சுட்டிக்காட்டும் ஒரு தடகள உடலமைப்பையும் கொண்டிருந்தான். ஒரு கவிஞன் அவனைப் பார்த்திருந்தால், வீரத்தின் தமிழ் கடவுளான முருகனுடன் கூட ஒப்பிட்டிருக்கலாம்? அவனது ஒளிரும் அழகு மற்றும் வசீகரம் வர்ணிக்க முடியாது. அவனின் அழகை சுருக்கமாக சொலவதென்றால், கம்பனைத்தான் கூப்பிடவேண்டும். "தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரை ஒத்தார்." ஆய்வகனின் தோள்கள், தாமரை மலரையொத்த பாதங்கள், திடமான கைகள் என ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்த பெண்கள் அவ்வங்கத்தை விட்டுப் பார்வையை நீக்க விரும்பாத அளவு அதன் வனப்பால் ஈர்க்கப் பட்டதால் வேறோர் அங்கத்தைப் பார்க்காமல் இருந்துவிட்டார்கள். அப்படி ஒரு கம்பீரம்! கலாநிதி ஆய்வகனின் அறிவுத்திறனும் அமைதியான கவர்ச்சியும் அவனைச் சந்தித்த அனைவரையும் கவர்ந்தன. அவன் தனது தொழில்முறை எல்லைகளில் உறுதியான நம்பிக்கை கொண்டு இருந்ததுடன், தனது வேலையிலும் முறைப்படி ஆழ்ந்த கவனம் செலுத்தினான். தேன்மொழியின் பின்னணியும் ஆய்வகனின் பின்னணியும் முற்றிலும் மாறுபட்டது. ஒரு கிறித்தவ கூலித்தொழிலாளியின் மகன் தான் இவன். என்றாலும் வறுமையின் பிடியிலிருந்தும், வசதிகளற்ற சூழலில் இருந்தும் தன் விடாமுயற்சியினூடாக எல்லா முரண்பாடுகளையும் உடைத்தெறிந்து, கடினமான உறுதியாலும், அறிவுக்கான தீராத தாகத்தாலும் உந்தப்பட்டு, இந்த நிலைக்கு உயர்ந்தவன் தான் அவன். அவன் அதை என்றும் மறக்ககவும் இல்லை, மறைக்கவும் இல்லை. தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஒரு பிறநாட்டு கலாநிதி பட்டத்துக்கான அவனது பயணம் பெருமைக்குரியது. "சாதிகள் இல்லையடிபாப்பா - குலத் தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்தமதி கல்வி - இவை நிறைய வுடையவர்கள் மேலோர்" இன்று சாதியம் பற்றிய அண்மைக்காலக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவோரில் ஒரு பகுதியினர், சாதியம் என்பது யாழ்ப்பாண தமிழ்ச் சமூகத்தில் இல்லவே இல்லை, அல்லது பெரிதளவில் இல்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். “இப்பெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?” என்பது தான், அவர்களது மகுட வாக்கியமாக இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை, சாதாரண நகர்ப்புறச் சூழலில், வெளிப்படையான சாதியப் பாகுபாடுகள் இல்லாத நிலைமை, அங்கு முற்றிலும் சாதியமே இல்லையென ஒரு முடிவை எடுக்கத் தூண்டியிருக்கலாம். ஒரு வகையில், அந்த எண்ணத்தில் சிறிதளவில் உண்மை இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியினர் சந்தித்த நேரடியான ஒடுக்குமுறைகள் தற்போது குறைந்திருக்கின்றன. ஆனால் அதற்காக, சாதியே இல்லையென்று கூறிவிட முடியுமா? இது தான் ஆய்வகனின் அனுபவம் கூட . அவனது ஒரு விரிவுரையின் போதுதான் தேன்மொழி முதன்முதலில் தன் இதயம் அவனை நோக்கி அசைவதைக் உணர்ந்தாள். பூதேவியான தனக்கு அருகில் சந்திரனைப் போல ஆண்கள் சுற்றி இருந்தாலும், அந்த பூமி [தேன்மொழி], தள்ளி நடுவில் நின்று ஈர்ப்பு விசைகள் பற்றி ஆழமாக விளங்கப்படுத்திக் கொண்டு இருக்கும் சூரியனான, ஆய்வகனின் கவர்ச்சியில் தன்னை இழந்து, சூரியனை சுற்றுவது போல, அவள் அவனைச் சுற்றி சுற்றி தன் எண்ணங்களை கற்பனை செய்து கொண்டே இருந்தாள். சிக்கலான கோட்பாடுகளை அவன் தெளிவுடன் விளக்கிய விதம், ஆழ்ந்த சிந்தனையில் இருந்தபோது அவனது புருவங்கள் ஏறி இறங்குவதிலும் சுருங்குவதிலும் அவள் கண்ட அழகு, இயற்பியல் பற்றி விவாதிக்கும் போது அவனது குரலில் இருந்த ஆர்வம் - இவை அனைத்தும் அவளைக் கவர்ந்தன. முதலில், அவள் அவனின் புத்திசாலித்தனமான மனதைப் போற்றுவதாக இருந்தாலும், நாட்கள் வாரங்களாக மாறியபோது, அது அதைவிட அதிகம் என்பதை அவள் உணர்ந்தாள். காதல் சொல்லிக்கொண்டு வராது என்பதை அப்பத்தான் அவள் உணர்ந்தாள். ‘கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ! திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!’ கண்ணனுடன் எப்போதும் கூடவே இருக்கும் பேறுபெற்ற சங்கு, அவனது கையில் எப்போதும் இருக்கும் பாக்யம் பெற்றது. அத்தோடு அவனது வாயமிர்தத்தை நுகரும் பேறும் பெற்றது. இவ்வெண்சங்கைப் பார்க்கும் போதெல்லாம் அதனிடத்தே தன் ஆற்றாமையை காட்டி பாடினாள் ஆண்டாள், அப்படித்தான் தேன்மொழி இருந்தாள். ஆய்வனுடன் நெருங்கிப் பழகுவதற்கு தேன்மொழியின் முயற்சிகள் முதலில் ஒரு சாதாரணமான பல பெண்களின் அணுகுமுறையாக இருந்தது. வகுப்பிற்குப் பிறகு, கொஞ்சம் விளக்கம் தேவை என்ற கேள்விகளுடன் நீடித்தது, முடிந்த அளவு அவனது திசையில் குறுக்கிட்டு அவனது பிரகாசமான புன்னகைக்கு காத்திருந்தாள். ஆய்வகன் அவளிடம் மற்றவர்களை விட கூடுதலான அன்பைக் காட்டினாலும், அவன் எப்பவும் ஒரு இடைவெளியைப் பேணினான். என்றாலும் அவன் ஒரு இளைஞன் தானே, அவளது அழகும் வசீகரமும் அவனது கவனத்தில் இருந்து தப்பவில்லை. ஆனால் அவன் இன்றைய சமூக பார்வையில் தன் பங்கையும் இருவருக்கும் இடையே சமூகம் ஏற்படுத்திய வேறுபாடுகளையும் தடைகளையும் என்றும் மறக்கவில்லை. "காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை? நியூட்ரான் எலெக்ட்ரான் – உன் நீலக்கண்ணில் எத்தனை?" 2011 –ஆம் ஆண்டு வெளிவந்த ‘எந்திரன்’ என்ற அமரர் சுஜாதாவின் கதை திரைப்படமாக வெளிவந்தபோது, அதில் வைரமுத்துவின் பாடல் வரிகள் இது. ஆனால் இது ஒரு பழைய பௌதிகம். புதிய குவாண்டம் இயற்பியலில் உள்ள சிக்கலைப் பற்றிய கருத்தை ஒரு உருவகமாகப் பயன்படுத்தி, காதலில் அனுபவிக்கும் ஆழமான தொடர்பையும் தீவிர உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியும் என்று தன் மனதில் 'காதல் பாசக் கோட்பாடு' ஒன்றை நிறுத்தினாள். குவாண்டம் இயற்பியலின் அடிப்படைகள், பொருளா ஆற்றலா என்று இனம் பிரிக்க இயலா தன்மை உடையவை. அப்படித்தான் அவள் மனதும் இரட்டை மனநிலைகளில், ஏன் எல்லாம் நாம் காண்பதுபோல் இருக்கின்றன? இல்லை, காண்பதுதான் இருக்கிறதா என்று மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் இரண்டிற்குமிடையில் தவித்தாள். ஒரு மாலையில், குவாண்டம் இயற்பியல் பற்றிய விரிவுரைக்குப் பிறகு, தேன்மொழி தன் உணர்வுகளை ஒப்புக்கொள்ள தைரியத்தைத் திரட்டினாள். மற்ற மாணவர்கள் வெளியேறும் வரை காத்திருந்த அவள் உறுதியும் பதட்டமும் கலந்து, ஆய்வகனை அணுகினாள். “டாக்டர் ஆய்வகன்,” என்று அவள் ஆரம்பித்தாள், அவளுக்குள் புயல் வீசினாலும் அவள் குரல் உறுதியாக சீராக இருந்தது, “எனக்கு ஒரு தனிப்பட்ட விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். தயவு செய்து என்னைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள், நான் ... உங்களை ஆழமாக நேசிக்கிறேன். இது சாதாரண அன்பை விட அதிகம். நான் உங்களை காதலிக்கிறேன் என்று என் மனம் உறுதியாகச் சொல்கிறது" என்றாள். ஆய்வகனின் இதயமும் துடித்தது. அவளுடைய பாசத்தை அவன் சிலதடவை முன்பும் அவளின் செயல்களில், அணுகும் முறைகளில் உணர்ந்தான் ஆனால் அவள் இவ்வளவு தைரியமாக குரல் கொடுப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம், அவளின் கனிவான பார்வையில் அவன் தொலைந்து போனான், ஆனால் அவனின் உள் உணர்வு, அவனை அதில் இருந்து வெளியே இழுத்தது. "தேன்மொழி," அவன் மெதுவாக ஆனால் உறுதியாக அழைத்தான், "நீங்கள் ஒரு விதிவிலக்கான மாணவி, நான் உன்னை மிகவும் மதிக்கிறேன். ஆனால் இது... உங்கள் ஆசை ... இது நடக்காது. நமது உலகங்கள் மிகவும் வேறுபட்டவை. உங்கள் குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், சமூகத்தின் நெறிமுறைகள் - இவைகள் எல்லாம் கட்டாயம் பல தடைகளை ஏற்படுத்தும்." என்றான். அவனுடைய வார்த்தைகளில் அவளின் இதயம் உடைந்தது, ஆனால் அவள் கைவிட மறுத்தாள். அடுத்த வாரங்களில், அவள் அவனுக்கு ஈ - மெயில் கடிதங்களை எழுதினாள். அவளுடைய இதயத்தை காகிதத்தில் ஊற்றினாள். ஒவ்வொன்றும் “அன்புடன், தேன்மொழி” என்ற வார்த்தைகளுடன் முடிவடைந்தது. இந்த கடிதங்களில், அவள் அடிக்கடி பழங்கால தமிழ் இலக்கியத்தின் கூற்றுக்களை, பாடல்களை, அன்பு மற்றும் அறம் பற்றிய திருக்குறளில் இருந்து வரிகளை மேற்கோள் காட்டினாள். அதில், ஒரு குறிப்பிட்ட வசனம் ஆழமாக எதிரொலித்தது: "அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது." நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவனுடைய நெஞ்சு அவனுக்குத் துணையாக இருக்கும்போது நீ எனக்குத் துணையாக இல்லாமல் அவனை நினைத்து உருகுவது ஏன்?. அவள் தன் உள்ளத்தையே கேட்டுக் கொண்டாள். அவளுக்கு வேறுவழி தெரியவில்லை. என்றாலும் அவளின் உணர்ச்சிகளின் உண்மைத் தன்மையை அவன் புரிந்துகொள்வான் என்று அவள் நம்பினாள். அவள் ஒரு சில மாதங்கள் காத்திருந்தாள், ஆனால் ஆய்வகனிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அவள் இறுதியாக ஒரு தனிப்பட்ட கடிதம் எழுதி, அதுவே தனது இறுதிக் கடிதமாக, நேராகவே அவனின் கையில் "தயவுசெய்து இதைப் படியுங்கள், சார் ," என்று சொல்லிக் கண்ணீருடன் ஒரு நாள் கொடுத்தாள். அவள் குரலில் நம்பிக்கை மற்றும் உறுதி ஆகிய இரண்டும் இருந்தது. “இது தான் கடைசி. இனி உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன்." என்றாள். அன்று மாலை, ஆய்வகன் தனது ஆடம்பரமற்ற சாதாரண அறையில் அமர்ந்து, கடிதத்தை கையில் எடுத்து திருப்ப திருப்பப் பார்த்தான். அவளுடைய வார்த்தைகள் எளிமையாக, ஆனால் ஆழமாக, அவனுடைய ஆன்மாவைத் தொட்ட வார்த்தைகளால் நிரப்பப்பட்டு இருந்தன. அன்புக்குரிய டாக்டர் ஆய்வகன், உங்கள் காரணங்களை நான் புரிந்துகொள்கிறேன், உங்களின் எந்த முடிவையும் நான் மதிக்கிறேன். ஆனால் உங்கள் மீதான எனது அன்பு சமூக எதிர்பார்ப்புகளுக்கோ அல்லது குடும்ப அழுத்தங்களுக்கோ கட்டுப்பட்டதல்ல என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன். இது தூய்மையானது மற்றும் தன்னலமற்றது, நீங்கள் அதை ஏற்றுக்கொண்டாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது அப்படியே இருக்கும். என்றும் மாறாது! நீங்கள் எனக்கு இயற்பியலைக் காட்டிலும் அதிகம் கற்றுக் கொடுத்துள்ளீர்கள்; ஒருவரின் வலிமை, குணம் மற்றும் இதயத்திற்காக அவரைப் போற்றுவதன் அர்த்தம் என்ன என்பதை நீங்கள் எனக்குக் காட்டியுள்ளீர்கள். அதை நான் எப்போதும் போற்றுவேன், கடைப்பிடிப்பேன். உங்கள் விடைக்காக என்றும், எவ்வளவு காலம் சென்றாலும் காத்திருப்பேன். 'அன்புடன் தேன்மொழி' ஆய்வகன் தன் கொள்கைகளுக்கும் அவளை நோக்கி, ஒரு விளங்க முடியாத உணர்வு ஒன்று இழுக்கும் வலிமைக்கும் இடையே போராடி போராடி மணிக்கணக்கில் அந்தக் கடிதத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவளது தைரியம், அவளது அசைக்க முடியாத அன்பு மற்றும் அவன் மீதான அவளுடைய நம்பிக்கை அவன் இதயத்தைச் சுற்றி சுற்றி அவன் கட்டியிருந்த ஒவ்வொரு சுவருக்கும் சவாலாக இருந்தது. தமிழ் வரலாறு, இலக்கியம் பற்றிய நினைவுகள் அவன் மனதில் தோன்றின. சமூகக் கட்டுப்பாடுகளைத் தாண்டிய காதலைப் பற்றியும், புறப் பிரிவினைகளுக்கு மேல் உள்ளத் தூய்மையைக் கொண்டாடும் பண்டைய தமிழர் மதமான, தமிழ்ச் சைவத்தின் மரபு பற்றியும் நினைத்தான். காதலுக்காக அவன் தன் சமுதாயத்தை மறுக்க முடியுமா? இரவு செல்லச் செல்ல, வாழ்க்கை, அன்பு மற்றும் தனது சொந்த மதிப்பு பற்றி தனக்குத் தெரியும் என்று நினைத்த அனைத்தையும் அவன் கேள்விக்குள்ளாக்கினான். ஆனால் பதில் எளிதில் அவனுக்கு வரவில்லை, ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக இருந்தது - தேன்மொழியின் காதல் அவனது இதயத்தில் ஒரு அழியாத அடையாளத்தை வைத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. அவன் இன்னும் பதில் கொடுக்காமலே, அந்தக்கடிதம் அப்படியே இருந்தது. அதேவேளை, பதிலை எதிர்பார்த்து எதிர்பார்த்து தேன்மொழியும்; "சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே! துறை போகு அறுவைத் தூ மடி அன்ன நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே! எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ, சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி, 5 அனைய அன்பினையோ, பெரு மறவியையோ ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே!" குருகே! எம் ஊர்மக்கள் நீருண்ணும் துறைக்கு வந்து கெளிற்றுமீனை உண்டுவிட்டு அவர் ஊருக்குப் பறந்து செல்கிறாய். இங்கு நான் அவரை எண்ணி மெலிந்ததால் என் அணிகலன்கள் கழன்று விழுவதை அருக்குச் சொல்லுவாயோ சொல்ல மறந்துவிடுவாயோ தெரியவில்லையே! என்று ஏதேதோ பிதற்றிக் கொண்டே காலத்தைக் கழித்தாள். அவள் அறையில் ஆண்டாள் படமும், அவளின் ஒரு சில பாடல் வரிகளும் தொங்கிக்கொண்டு இருந்தன. ‘ஆசை வெட்கமறியாது’ என்ற பழமொழி இங்கும் சரியாய் போய்விட்டது. மிகுந்த காதல் கொண்டதால் இனிமேல் தன் காதலை மறைக்க முடியாது என்பது தெரிந்து எல்லோர் முன்னிலையிலும் தன் காதலை ஒத்துக் கொண்டு தன்னை எப்படியாகிலும் அவனுடன் கொண்டு சேர்க்குமாறு வேண்டுகோள் விடும் ஆண்டாளின் பாடல் அது! ‘நாணி இனியோர் கருமமில்லை நாலயலாரும் அறிந்தொழிந்தார் பாணியாது என்னை மருந்து செய்து பண்டுபண்டாக்க உறுதிராகில் மானியுருவாய் உலகளந்த மாயனைக் காணில் தலைமை றியும் ஆணையால் நீரென்னைக் காக்க வேண்டில் ஆயர்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்’ ‘நாணி இனியோர் கருமமில்லை நாலயலாரும் அறிந்தொழிந்தார் பாணியாது என்னை மருந்து செய்து பண்டுபண்டாக்க உறுதிராகில் மானியுருவாய் உலகளந்த மாயனைக் காணில் தலைமை றியும் ஆணையால் நீரென்னைக் காக்க வேண்டில் ஆயர்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்’ நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.