-
ஈழத்தின் ஓவிய, சிற்ப ஆளுகை ரமணி மறைவு !
ரமணி மாஸ்டரின் இரசிகர்கள், அவருடைய ஓவியங்களைப் பார்த்த உடனேயே அதன் பாணி மூலமாக அவர் வரைந்தவை என்பதை அடையாளப்படுத்தி விடுவார்கள். நல்ல உடற்கூற்றியலுடன் கூடிய மனித உருவங்களும், விரைவான தன்மை கொண்ட எளிமையான, ஆனால் மிகச்சரியாக அமைந்துள்ள கோடுகளும் அவரின் தனித்தன்மையாகும். அவருடைய நீர்வண்ணம் தீட்டும் பாணி இலங்கையில் முன்னோடியானது. அது, மென்மையான வண்ணக் கலவைகளையும் துடிப்பான தூரிகை வீச்சுகளையும் உள்ளடக்கிய ஒரு தனித்துவமான நுட்பமாகும். அவர் நீர்வர்ணத்தின் ஈரமான தன்மையைப் பயன்படுத்தி, பின்னணிகளில் வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று மென்மையாகக் கலக்கும்படி தீட்டியுள்ளதோடு, தாளின் வெள்ளை நிறத்தையே ஒளியாகப் பயன்படுத்தி நிழல்களுக்கும் வெளிச்சத்திற்கும் இடையிலான முப்பரிமாணத் தன்மையை உருவாக்கியிருப்பார். ஓஃப்செட் வருவதற்கு முன்னமே, புளொக் அச்சடிக்கும் நேரத்திலும் அவர் எளிமையான கோடுகளுடனும் சிறப்பான நிறத் தெரிவுகளுடனும் கவர்ந்திழுக்கும் வகையிலான முகப்போவியங்களைப் படைத்திருந்தார். கருப்பு வெள்ளையில் படத்துக்கான ஸ்கெட்ச் வரைந்து, ஒயில் பேப்பரை அதன் மேல் இருக்குமாறு ஒரு பக்கம் மட்டும் ஒட்டி, அதன் மேல் வண்ணங்களைத் தீட்டிக் குறித்திருப்பார். 1990 அளவில் அவர் தீருவிலில் போராளிகளின் சிற்பத்தைச் செய்தார். ஏழு போராளிகள், ஏழும் வேறு வேறு நிலைகளில், ஆண்கள், பெண்கள், வேறு முகங்கள் முக பாவனைகள் அப்படி ஒரு அமைவு இலங்கையில் வேறு எங்கும் இல்லை. அதன் பிறகு கிட்டு பூங்கா நல்லூரில் அமைக்கும் போது அங்கே கிட்டுவின் சிலையை உருவாக்கினார். கிட்டுவுடைய நிறையப் படங்கள் வைத்துக் கொண்டு அவருடைய முப்பரிமாணத் தோற்றத்தைக் கம்பீரமாக உருவாக்கினார். கிட்டுவின் மனைவியும் அங்கே அடிக்கடி வந்து தனது கருத்துக்களைச் சொல்வார். சிலை முடிந்த பிறகு அவர் சிலையைத் தொட்டுத் தடவி மிகவும் பூரிப்படைந்தார். அடுத்ததாக நெல்லியடி மத்திய கல்லூரியில் மில்லர் சிற்பமும் அருமையாக அமைந்து இருந்தது. மில்லரின் தாயார் கூட அவரை மிகவும் பாராட்டினார். பின்னராக அவர் உருவாக்கிய சேர் பொன் ராமநாதன் சிலை, நுண்கலைக் கல்லூரியின் முகப்பில் கம்பீரமாய் நிற்கிறது. தந்தை செல்வா, இந்து போர்ட் ராஜரத்தினம், கந்தையா உபாத்தியாயர், சரஸ்வதி சிலை என்று அதன் பின்னர் தொடர்ந்து சிற்பங்களைச் செய்து கொண்டே இருந்தார். அதன் பின்னர் ஆறுமுக நாவலர், தேவரயாளி நிறுவுனர் சூரன், பின்னர் அவர் செய்த சரஸ்வதி சிலையைத் திறந்து வைத்த தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுடைய சிலையையும் செய்தார். கடைசியாக அவர் உருவாக்கிய சிவசிதம்பரம் அவர்களுடைய சிலை நெல்லியடிச் சந்தியில் நின்றிருக்கிறது. அவர் தன்னால் இனிமேல் சிற்பங்கள் செய்ய உடல்நிலை ஒத்துழைப்பதில்லை என்பது தெரிந்ததும், தன் சிறப்பான மாணவர்களை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டி அவர்களை ஊக்குவித்தார். ஈழத்தில் நவீன ஓவியத்தை வெகுஜன ஊடகங்களில் அனைவரும் அடையும் வகையில் அறிமுகப்படுத்தியதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. பத்திரிகைகளில் வந்த வரைபடங்களிலும் முகப்போவியங்களிலும் அவர் நவீன மற்றும் மறைபொருள் ஓவியங்களை நிறையவே படைத்தார். இதன் மூலம் நவீன ஓவிய ரசனையைத் தமிழ் மக்களிடையே பரப்பினார். கற்பனைத்திறனோடு புத்துருவாக்கம் செய்யும் பிரம்மாவாக அவர் உருவாக்கிய பல ஓவியப் படைப்புகளும் சிற்பங்களும் காலத்தால் அழியாதவை. எங்கள் சமூகத்தில் மீளுருவாக்கத்துக்கும் புத்துருவாக்கத்துக்கும் உள்ள வித்தியாசங்களைப் பிரித்தறியும் ஓவிய ரசனையை வளர்க்க அவர் தன்னாலானவற்றைச் செய்தார். காலம் தான் அதற்கான விடையை இனிமேல் அளிக்க வேண்டும். அவருடைய விவரங்களும் படைப்புகளும் இலங்கை ஓவியப்பாட ஆண்டு 10,11 பாடத்திட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளது. அவருடைய கடின உழைப்புக்குக் கிடைத்த ஒரு மரியாதையே அதுவாகும். தனியே ஒரு வர்த்தக ரீதியிலான ஓவியராக இல்லாமல் அவருடைய தனிப் பாணியில் இலங்கைத் தீவில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த மாபெரும் ஓவியரின் தனிச்சிறப்புக்கு இந்த அங்கீகாரம் கட்டியம் கூறி நிற்கிறது. தற்பொழுது அவரிடம் பயின்ற, மற்றும் ஓவியம் பயிலும் மாணவர்களுக்கெல்லாம் அவர் படைப்புகள் உந்துசக்தியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பது அவருக்குப் பெருமை. வாழ்க அவர் புகழ்!
-
கதைப்படங்கள்
-
IMG_5085.JPG
-
600px-34704.JPG
-
117.jpg
-
Theeruvil.jpg
-
Sivakumaran.jpg
-
PhotoEditorCollageMaker_10_01_2026_09_41_07_pm.jpg
-
IMG_20260103_102836_small.jpg
-
sdgdcsuy8gca7dg3.jpg
-
6cr8dk6cr8dk6cr8.jpg
-
தொன்மம்.jpg
-
சிலந்தி.jpeg
-
ஊர்ந்து.jpg
-
Winner.jpg
-
நாய்.jpg
-
விதி.png
-
பூனை.jpg
-
காத்திருப்பு.jpg
-
goldsmith200CE.jpg
-
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.
-
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
தனித்துவம் மிக்க ஓவியக் கலைஞர் ஓவியங்கள் - கதைகளுக்கு உயிர்த் துடிப்பை ஊட்டுவதோடு கதை சித்திரிக்கும் பாத்திரம், பகைப்புலம், காட்சிகளை வாசகர் மனதில் பதியவும் செய்கிறது என்பதில் தவறிருக்க முடியாது. சிலவேளை எனது கதைகளுக்கு வரையப்பட்டுள்ள படங்களைப் பார்த்துக் கொண்டு அதில் நான் ஒன்றிப்போய் விடுகின்றேனென்றால் அது ரமணியின் படங்களில் தான். இப்படிச் சொல்லும் போது ஒரு ஓவியன் எவ்வளவு தூரம் வெற்றியடைகின்றானென்பதை, அப்படைப்பாளியால் தான் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும் என்ற உண்மையை யாரும் மறுக்க மாட்டார்களென்றே நினைக்கிறேன். அப்போதெல்லாம் யார் இந்த ஓவியர் ரமணி? பெரிய பத்திரிகை நிறுவனங்களில் கொழுத்த சம்பளத்துடன் கடமையாற்றுகின்றவரோ! என்ற எண்ணம் தவிர்க்க முடியாது ஏற்பட்டதுதான்! அன்று......... பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் முதல் வருட மாணவனாகப் பிரவேசித்த முதலாம் நாள் - முன்பே தெரிந்த சில நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போதுதான், புன்னகை சிந்திய படி சாந்தம் ததும்பும் அந்த உருவம் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. 'இவர்தான் ரமணி இவரது சொந்தப் பெயர் வி. சிவசுப்பிரமணியம்' அறிமுகப் படலம் நடக்கிறது. திறமையில் மாத்திரமல்ல வயதிலும் முதிர்ந்தவர் தானென்று எனது எண்ணத்தை உடனே மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. மகிழ்ச்சித் துடிப்பில் அந்த ஆற்றல் மிக்க கரத்தை என்னால் விட்டு விட முடியவில்லை. அவருடைய அனுபவங்களையிட்டுக் கதைக்க வேண்டும் போலவும் இருந்தது. ஆயினும் இனித் தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்பு முழுமையாக இருக்கிறது தானே என்பதால் கூடவே ஒரு நிம்மதி. 'காலையில் இருந்தே எதிர் பார்த்திருந்தனான்' இதுதான் முதன் முதலில் என் செவிகள் சந்தித்த ரமணியின் குரல். முதல் வருட மாணவர்களை, பழைய மாணவர்கள் - ஆசிரிய கலாசாலை. பல்கலைக் கழகம் முதலிய இடங்களில் எதிர்பார்ப்பது எதற்காகவென்று தெரியும்தானே..........? அத்தகைய முதன்மைத் திமிர்களைத் தாண்டிய அக்குரலில் ஒரு புலமை நெஞ்சின் துணை முதல் நாளிலேயே கிடைத்துவிட்ட பூரிப்பு எனது மெய்யெல்லாம் பரவியது. அதைத் தொடர்ந்து எந்த வேளையிலென்றாலும் எத்தனை முறையென்றாலும் தனக்கேயுரித்தான புன்னகையை உதிர்த்த படிதான் செல்வார். நானும் கூட எப்பொழுது கலாசாலை நேரத்தில் ஓய்வு கிடைக்கிறதோ, அப்பொழுது நுண்கலைப் பகுதியை ஒருமுறை நோட்டம் விட்டு, அங்கும் பாடவேளையில்லாமலிருந்தால் ரமணியை நெருங்கி விடுவேன். நண்பர் அன்பு ஜவஹர்ஷாவும் கூடவே வந்து விடுவார். பிறகென்ன? பரஸ்பரம் கருத்துப் பரிமாறல்களும் அனுபவ வெளிப்பாடுகளும் தான். கொழும்பிலிருந்த காலத்தில் சில பத்திரிகாசிரியர்கள் நாலைந்து கதைகளைத் தூக்கித் தந்து, விருப்பமானதொன்றுக்குப் படம் கீறித் தருமாறு தந்துவிடுவதாகவும் இதனால் மிகுந்த ஆர்வத்துடன் அனுப்பும் குறிப்பாக இளம் எழுத்தாளர்களின் நிலையை எண்ணிப் பார்க்கத் தவறுகிறார்களென்றும் அவர் சொல்லும் போது, ஒரு பத்திரிகாசிரியன் எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டுமென்ற கருத்தை ரமணி அனுபவ வாயிலாகச் சொன்னது இன்று கூட பத்திரிகாசிரியர்களுக்குப் பொருத்தமானதுதான். இன்று நேற்றல்ல, கடந்த பத்தாண்டுக்காக ஓவியத் திறமையை, பத்திரிகைத் துறையோடு பிணைத்துப் பணிபுரிந்து வரும் இவர் இதுவரை சுமார் நூறு புத்தகம், சஞ்சிகைகளுக்கு அட்டைப்படம் வரைந்துள்ளார். அநேகமாக எல்லா ஈழத் தமிழ் தேசியப் பத்திரிகைகளிலும், 'தவச', வீரகேசரி வெளியீடுகளிலும் படம்வரைந்து வருகின்றார். குறிப்பாக நவீன பாணித் தமிழ் எழுத்துக்களையும் பத்திரிகை, சஞ்சிகைகளில் அறிமுகப்படுத்தியதும் ரமணி என்றே சொல்ல வேண்டும். இதை எழுதும் போது, அண்மையில் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட 'பூ' ஞாபகம் வருகின்றது. அதன் உள்ளடக்கத்தைப் பாராட்டியவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமானோர் நேரிலும் கடிதமூலமும் அதன் அட்டையைத்தான் பாராட்டினார்கள் என்ற செய்தி இதைப் படித்த பின்புதான் ரமணிக்குக் கூடத் தெரியவரலாம். 'பஞ்சமர்' வெளிவந்த புதிதில், அதன் அட்டையைப் பார்த்தவுடனே ஒருவர்... 'ஏன் இந்த முகங்கள் இவ்வளவு ஆவேசமாக இருக்கின்றன?' என்று கேட்டதாக மன்னார் நண்பரொருவர் சொன்னார். 'போராட்ட உணர்வு கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களை டானியல் சித்திரித்துள்ளார். அதைத் தானே ரமணி அட்டையில் தீட்டியுள்ளார்' என்று அவரிடம் கேட்டேன் நான். அதிகமேன் கடந்த பல வருடங்களாக 'மல்லிகை' அட்டையை அலங்கரித்து வருவது இவரது நவீன படங்கள்தானே. 'மல்லிகை அட்டையா? அது ரமணிதான் வரைய வேண்டும்' என்று திரு. டொமினிக் ஜீவா வாய்விட்டுச் சொல்வார். 'ஈழத்தின் முதல் தரமான ஓவியர்' என்று ஓவியக் கலைஞரான 'சிரித்திரன் - சுந்தர்' கூடப் பலதடவை மனந் திறந்து கூறியுள்ளார். இத்தனைக்கும் இவர் ஒரு சிற்பக் கலைஞரும் கூட என்பது பலருக்குத் தெரியாமலிருக்கலாம். என்ன இருந்தாலும் இங்கு கலைஞர்களுக்கு ஏற்ற சன்மானங்களும் கௌரவங்களும் அளிக்கப்படுவதில்லையென்ற உண்மையை 'சில வேளை நான் அட்டை வரைந்த புத்தகங்களை நானே வாங்கிப் பாதுகாக்க வேண்டியுள்ளது' என்று கூறும் பொழுது அறிந்துகொள்ள முடிகிறது. இந்த நிலைமை எப்போதுதான் மாறுமோ? ஒருநாள் கையில் 'கணையாழி' யுடன் நடந்து கொண்டிருந்தேன் நான். எதிர்ப்பக்கமாக சைக்கிளில் வந்தவர், நிறுத்தி இறங்கி என் கையிலிருந்த சஞ்சிகையை வாங்கி அட்டைப் படத்தைப் பார்த்தவர் 'இத்தகைய நவீன ஓவியங்களை ஈழத்துச் சஞ்சிகைகளும் வெளியிட வேண்டும். இத்தகைய படங்களை வாசகர்கள் இரசிக்கச் செய்ய வேண்டுமல்லவா?' என்று கேட்டவாறே பக்கங்களைப் புரட்டத் தொடங்கினார். இடையிடையே அவரது கவனம் புதுக்கவிதைகளில் படிவதை நான் அவதானிக்கத் தவறவில்லை. 'ஆழமான விடயங்களைக் கூட மிக அழகாகப் புதுக்கவிதைகளில் எழுதுகிறார்கள். ஈழத்தில் கூட நிறைய வெளிவருகின்றன' என்று தனது கருத்தைக் கூட அப்போது கூறி வைத்தார். இயற்கையான கலைத்துவம் கொண்ட ரமணி அத்தோடு மாத்திரம் நின்றுவிடவில்லை. நுண்கலைகளைக் கல்லூரியில் பயின்று, தனது ஆற்றலை நெறிப்படுத்தி 'டிப்ளோமா இன் ஆர்ட்' இல் முதற்தரத்தில் சித்தியடைந்ததைத் தொடர்ந்து, தேசிய நூதன சாலையில் தயாரிப்பு உதவியாளராக மூன்று வருடம் கடமையாற்றியுள்ளார். மல்லாகத்தில் வசிக்கும் இவர் தற்பொழுது ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலயத்தில் விசேட ஆசிரியராகப் பணிபுரிகிறார். ரமணியிடமிருந்து கலையுலகம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்பு நிச்சயம் வீண் போகாது என்றே நம்புகிறேன். - திக்குவல்லை கமால் (மல்லிகை அட்டைப்பட ஓவியங்கள் - மார்ச் 1974)
-
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
மனதை விட்டு மறையாத ஓவியம் ரமணி நினைவாஞ்சலி ------------------------- 1972 ஆம் ஆண்டு என ஞாபகம் எழுத்தாளர் டானியலின் பஞ்சமர் நாவல் வெளிவருகிறது. பலரை ஒரு உலுப்பு உலுப்பிவிட்ட நாவல் அது. பேசாமல் இருந்த ஒருசாரார் அதில் பேசினர், அந்த நூல் வெளியீட்டுக்கு டானியல் என்னை யாழ்ப்பாணம் அழைத்திருந்தார், அப்போது நான் கொழும்பில் வசித்துக் கொண்டிருந்தேன், அப்படிச்சென்றபோது டானியலின் ஸ்ரார் கரேஜில் நான் சந்தித்த ஒரு இளஞைர்தான் புதுவை இரத்தினதுரை, திருநெல்வேலியில் அதன் வெளியீட்டை ஒழுங்கு செய்தவர் புதுவை இரத்தினதுரை டானியலின் அபிமானி அப்போதுதான் அவரது காலம் சிவக்கிறது எனும் கவிதை நூல் வந்த காலம் என நினைக்கிறேன் பஞ்சமரின் அட்டைப்படம் வித்தியாசமாக இருந்தது பஞ்சமர் ஒருவரின் உடல் மொழி வெளிப்பட அது வரையப்பட்டிருந்தது அந்த உடலினுள் அடக்க ஒடுக்கமும் காணப்பட்டது அதற்குள்ளால் மீறி எழுந்த அடக்குமுறைக்கு எதிரான ஒரு ஓர்மமும் காணப்பட்டது சமூக உணர்வுள்ள ஓர் ஓவியக் கலைஞனின் பார்வை அது அந்தப் அட்டைப்பத்தை வரைந்தவர் ஓவியர் ரமணி எனும் இளம் ஓவியர் என அறிந்தேன் ரமணியை நான் அறிந்த கதை இது ரமணி என் மதிப்புக்குரிய ஒருவர் ஆனார் ரமணியின் தொடர்பும் ஏற்படுகிறது ஏற்படக் காலாக இருந்தவர் டானியல் 1976 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து மாற்றலாகி யாழ்ப்பாணம் வருகிறேன் கொழும்பில் கல்வி டிப்ளமோ கோர்ஸ் முடித்த கையோடு எனக்கு யாழ்ப்பாணத்திற்கு மாறுதல் கிடைக்கிறது மனைவி ஏற்கனவே மகனோடு அங்கு சென்று விட்டாள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விரிவுரையாளராக. நான் ஆசிரியராக மாற்றலாகி யாழ்ப்பாணக் கல்வி அலுவலகம் செல்கிறேன் நகரில் உள்ள பாடசாலைகள் எல்லாம் பட்டதாரிகள் நிரம்பி வழிகிறார்கள் எந்த பாடசாலையிலும் இடம் கிடைக்கவில்லை ஒரே ஒரு இடம் இருக்கிறது ஒஸ்மானியா கல்லூரி அங்கு செல்லுங்கள் என்று நியமனக் கடிதம் தரப்படுகிறது ஒஸ்மானியாக் கல்லூரி செல்கிறேன் அதிபர் ஹமீம் அதிபர் அறையில் நியமனக் கடிதத்தைக் கொடுத்து உத்தியோகம் ஏற்கும் சடங்குகளை முடித்த பின்னர் ஆசிரியர் அறைக்குச் செல்கின்றேன் பலர் இருக்கிறார்கள் பேராயிரவர் பெயர், ஞாபகம் வருகிறது. அவர்களோடு பத்மநாதன் , கவிதாயினி சிவரமணியின் அப்பா சிவானந்தன் இன்னும் பல இஸ்லாமிய ஆசிரியர்கள் தமிழ் ஆசிரியரக்ள் தெரிந்த முகம் ஒன்றும் தென்படுகிறது ஏற்கனவே நான் அறிந்திருந்த ரமணி அவர்கள் வாருங்கள் வாருங்கள் என்று வாஞ்சையோடு வரவேற்கிறார் அங்கே அவர் ஓவிய ஆசிரியராக இருக்கிறார் நான்கு வருடங்கள் அவருடன் அங்கு பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கிறது ஓரளவு முன்னரேயே அறிந்திருந்த ரமணி இப்போது மிக நெருக்கமாகி விடுகிறார் நாலு வருடங்கள் தினமும் அருகே இருந்து உறவாடி உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட அந்தக் காலங்கள் ஞாபகம் வருகின்றன யாழ்ப்பாண வாழ்வில் மிக அருமையான காலங்கள் ஓஸ்மானியாக் கல்லுரியில் கற்பித்த அந்தக் காலங்கள் அக்காலத்தில் சிறுகதை நாவல் எழுதுவோர் கைலாசபதியிடம் ஒரு முன்னுரை வாங்குவதைப் பெறுமதியாகக் கருதினார்கள் . அதேபோல பல எழுத்தாளர்கள் ரமணி யிடம் ஒரு அட்டைப்படம் வாங்குவதையும் பெறுமதியாகக் கருதினார்கள் அவர் டானியல், செங்கை ஆழியான், தெணியான், போன்ற பிரபல எழுத்தாளர்களுக்கெல்லாம் படம் வரைந்தவர் அந்த அட்டைப் படங்களில் வரும் கோடுகள் ரமணியின் அடையாளம். அவர் அட்டையில் வரையும் உருவங்களும் அவற்றின் பரிமாணங்களும் அவர் வரையும் நடனமிடும் எழுத்துக்களும் இந்த ஓவியம் ரமணியின் ஓவியம் என்பதை உடனே காட்டி விடும் மல்லிகை ஜீவாவின் ஆஸ்தான ஓவியர் போல அவர் அன்று செயற்பட்டதாக ஞாபகம் அந்த காலத்திலேயே தான் நான் சங்காரம் நாடகம் போடுகிறேன் அந்த நாடகத்திலே ஒரு கட்டம் வருகிறது மனிதர் விலங்கோடு வேட்டையாடும் கட்டம் மிருகங்களுக்கான வேட முகங்களைத் தயாரித்து எனக்கு தந்தவர் ரமணி அவர்கள் அந்த நாடகத்துக்கான உடை அமைப்பை நான் திட்டமிட்ட போது அவற்றை கோடுகளில்ல் வரைந்து காட்டி அதற்கான ஆலோசனைகளை வழங்கியவர் ரமணி அவர் வரைந்த ஸ்கெட்சுகளை நான் அரசையாவிடம் காட்ட அதனை அடிப்படையாக வைத்து சங்காரம் நாடகத்தில் வரும் இன மத சாதி வர்க்க அரக்கர்களுக்கான உடை தயாரித்தவர் அரசையா சங்காரம் நாடக உருவாக்கலில் ரமணிக்கும் மிகுந்த பங்குண்டு அந்த நாடகத்தில் நான் தொழிலாளர் தலைவன் பாத்திரம் ஏற்று ஆடிப்பாடி நடித்தேன் அந்த நாடகம் பார்க்க வந்த அவர் என்னை அணைத்துக்கொண்டதும் பின்னர் நாம் அதுபற்றி ஆசிரிய அறையில் உரையாடியமையும் ஞாபகம் வ்ருகிற து எவ்வளவோ பேசுவோம் எல்லாம் பேசுவோம் அரசியல் இலக்கியம் ஓவியம் நாடகம் சமூகம் என அவ்வுரையாடல் விரியும் அவ்ர் ஒரு பரந்த வாசகரும் கூட மிக மிக மென்மையாக பேசுவர் அவர் முகமும் பேசும் பின்னால் நான் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆகிய பின்னரும் அந்த நட்பு தொடர்ந்தது அவர் உரையாடும் பாணி வித்தியாசமானது அது அவருக்கே உரியது அவர் வரையும் சித்திரங்களில் அவர் தெரிவார் அது அவருக்கான கோடுகளும் கோலங்களும் ரமணி ஸ்டைல் அதுதான் என்பது அது காட்டிக்கொடு காட்டிவிடும் பின்னால் அவர் அவர் பல ஓவியங்கள் வரைந்தார் புகழ் பெற்ற சிலைகளைச் செய்தார் புகழ் பெற்றவரானார் அந்தச் சிலைகளில் அவர் வாழ்கிறார் இருவரும் 80 வயது தாண்டி விட்டோம் நான் இறக்கு முன்னர் சிலரை கண்டு பேச வேண்டும் என்று ஆவல் அடிக்கடி எனக்கு எழுவதுண்டு அதில் முக்கியமானவராக இருந்தவர் ரமணி அவர்கள் பேசாமலேயே சென்று விட்டார் இப்படிக் காணாமலேயே பேசாமலேயே சென்று விடுவோர் அதிகம் நேற்றுத்தான் மதிப்பிற்குரிய பெரியவர் பஞ்சலிங்கத்தைப் பற்றி ஒரு பதிவிட்டேன் இன்று அன்பிற்குரிய ரமணி பற்ற எழுத வேண்டியது ஆயிற்று எழுத இன்னும் நான் இருந்துகொண்டிருக்கிறேன் இது துயரா மகிழ்ச்சியா என யோசிக்கிறேன் துயரமும் சோகமும் மகிழ்வும் கலந்த ஒரு மனோநிலையில் நண்பரை நினைக்கிறேன் நண்பரே சென்று வருக உங்கள் நினைவு நெஞ்சில் அழியாது நிலைத்து நிற்கும் அவர் அட்டை ஓவியங்கள் சிலவற்றை நண்பர் முகநூலில் பதிந்திருந்தார் அவருக்கு எனது நன்றிகள் -பேராசிரியர் சி. மௌனகுரு
-
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
ஈழத்தின் ஓவிய சகாப்தம் ஒன்று ஓய்வு பெறுகிறது! oசிவகுமாரன் முதல் சிவசிதம்பரம் வரை தமிழர் அரசியல் வாழ்வில் தம் கலையால் இணைந்த கலைஞர். oதாம் படைத்த படைப்புகள் தம் கண் முன்னே அழிக்கப்பட்டதைக் கண்ட ஒரு கலைஞர். oதமது பெயருக்குள்ளேயே நவீனத்தைப் புகுத்திய கலைஞர். -------------------------------------------------------------------------- அறிமுகம்: சின்ன வயதிலிருந்தே நான் 'ரமணி'யின் இரசிகன். அப்பா கொண்டு வரும் சிரித்திரன் இதழ்களிற் தான் அந்த 'ரமணி' யைக் கண்டேன். படங்களின் கீழே 'ரமணி'அல்லது ' RAMANI' என்று எழுதப்பட்டிருக்கும் பெயரைத்தான் குறிப்பிடுகிறேன். அம்புலிமாமா வில் வரும் சித்ரா ( Chithra) சங்கர் ( Sankar) தினபதி- வீகே, தினகரன் மூர்த்தி போன்றவர்களின் ஓவியங்களை விட ரமணியின் ஓவியத்தில் எம்மைக் கவர்ந்த ஏதோ ஒன்று அப்போதிருந்தது. பாடசாலை நாட்களில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பெற்ற மாணவர் சஞ்சிகையான 'வளர்மதி' யில் அவர் வரைந்த ஓவியங்கள் எம்மை ஏனோ கவர்ந்தவை. துப்பறியும் தொடர் ஒன்றுக்கு வரைந்திருந்தார். பிற்காலத்தில் க.பொ.த உயர்தர மாணவர் பௌதிகம் என்ற கருணாகரரின் புத்தகத்திலும் அதன் அட்டைப்படத்தில் வந்தெமைக் கவர்ந்தார். இலங்கைத் தீவு முழுதும் பெயர் பெற்ற நூல் அது. பின்னர் அவரை 'ரமணி மாஸ்டராக' நேரில் சந்தித்தபோது இதனைச் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் நான் புதுமையாக ஏதும் செய்ய வேண்டும்; யாரையும் பிரதி பண்ணக் கூடாது என்று நினைத்து நினைத்து என் கைகள் அப்படியே உணரத் தொடங்கிவிட்டன...' பெயரிலும் நவீனம்: அவரது பெயரிலும் அந்த நவீனத்தைப் படைத்தார். பொதுவாக சிவசுப்பிரமணியம் சிவநாதன், சிவகுமார், சிவராஜா போன்ற பெயருடையவர்களை நாம் 'சிவா' என்றே அழைப்பது வழக்கம். ஆனால், நானறிந்த வரையில், சிவசுப்பி[ரமணி]யம் என்ற தமது பெயரில் உள்ள [ரமணி] யை எடுத்து, 'ரமணி' என்று மட்டும்- தமது ஓவியங்களின் கீழே இட்டு வந்தவர் ரமணி மாஸ்டர். அது பற்றியும் எனது முதற் சந்திப்பிற் கேட்டபோது ' அதுவும் ஒரு புதுமைதான்; கொழும்பில் அழகியற் கல்லூரியிற் படிக்கும் போது வெளியில் நாங்கள் வெளிப்புற, வெளிக்களச் சுற்றுலா போகும் போது 'ரமணி' என்று ஒவ்வொருவரும் கூப்பிடும் போது அறிமுகமில்லாதவர்கள் முதலில் 'சிங்களவர்' என்றுதான் உணர்ந்தனர் என்று சுவையாகச் சொன்னார். ரமணியின் ரசிகன் நான்:- 'நீங்கள் வரையும் பாத்திரங்கள் உங்களைப் போன்றே அடர்ந்த முடியுடன் மேவிச் சீவியிருப்பர் என்று நான் சொல்ல..' என் படங்களை உற்று இரசித்திருக்கிறீர்கள் ' என்று சொன்ன அவர், அப்படி வேறு பலரும் குறிப்பிட்ட தாகவும் அது ஒரு கலைஞர் உணர்ந்து ஊறிப் படைக்கும் போது அப்படி வரலாம் என்று மூத்த கலை உளவியலாளர் ஒருவர் சொன்ன தாகவும்- குறிப்பிட்டார். நான் பண்டாரவளையிலிருந்து கரவெட்டி வரை அவரது ஓவியங்கள் வந்த பக்கங்களைச் சேமித்த ஒருவன். அதனால் அவர் எனக்கு ஒரு வேலை தந்தார். அதனைப் பிறகு வேறு ஒரு தருணத்திற் தருவேன். தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழர் வரலாற்றில் இணைந்த பல நினைவுச் சின்னங்களையும் அடையாளங்களும் தலையங்கங்களையும் வரைந்தவரும் வடித்தவரும் எழுதியவருமான அவரது ஓவியங்களின் கீழுள்ள ரமணி என்பதும் RAMANI என்பதும் என்றும் எம்மில் நிற்கும் நினைவுச் சின்னங்களாகும். ரூபவாஹினியில் ரமணி:- எண்பதுகளில் நான் ரூபவாஹினியிற் பணியாற்றிய காலத்தில் 'டெலிதுட' என்ற ஓவிய நிகழ்ச்சித் தொடரின் தயாரிப்பாளரான காமினி அபேகோனுக்கும் அவரது சில நிகழ்ச்சிகளில் உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பை நான் பெற்றேன். அப்போது அவர் - காமினி- தெற்கின் பல ஓவியர்களை நேரிற் கண்டு ஒளிப்பதிவு செய்யும் அந்த நிகழ்ச்சியை இயக்கினார். அதனால் பல ஓவியர்களைச் சந்திக்கும்,ஊடாடும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அவர்களில் சிலருக்கு ரமணி யைத் தெரிந்திருந்தது. அவர்கள் நுண்கலைக் கல்லூரியில் அவருடனும் அவரது கற்கைக் காலத்திலும் கற்றதனால் அந்த அறிமுகமிருந்தது. சர்வதேசக் கண்காட்சிகளில் பங்கேற்ற பிரபல ஓவியர் விமலசார ரமணி பற்றிக் குறிப்பிடும்போது - ' ரமணி ஒரு சிறந்த ஓவியர். நவீனத்துவம் விரைவு என்பன அவரிடமிருந்தவை. அபாரமான கலைஞன். ஆனால்.. commercial artist ஆகிவிட்டார். அவரிடம் நிறைய ஆற்றல் உண்டு.' என்றார். ' நல்ல சிற்பி ...ஆனால் அவர் வர்த்தக மயமான ஓவியராகிவிட்டார்' என்றும் ஒருவர் சொன்ன நினைவு. ஒருவர் சொன்னதல்ல இரண்டொருவர் சொன்ன விமர்சனம் அது. அவர்களும் இவருடன் ஸ்ரான்லி அபேசிங்க, கருணாரட்ன போன்ற தெற்கின் மூத்த ஓவியர்களிடம் பயின்றவர்கள்; ஓவிய உலகில் புகழ் மிக்கவர்கள். அவர்கள் அவரை 'வர்த்தக மயத்துக்குள் உள்ளான' ஒருவர் என்று கருதியது- அவர்கள் அன்று கண்ட ரமணியையே. அவர்களின் அளவுப் பரிமாணத்தில் நியாயமிருக்கலாம். அது எழுபதுகளிலான கணிப்பு. காரணம், ரமணி மாஸ்டர் ஜெர்மனிக்குப் போகும் வரையில் அட்டைப் படங்கள் , வர்த்தக விளம்பர அடையாளங்கள், விளம்பரப் பலகைகள், என Commercial sector இற்குள்ளேயே Commercial designs, Logos, Illustrations என்ற வரையறைக்குள் தமது கலைப் பயணத்தைக் கடந்துள்ளார். தியாகி சிவகுமாரன் சிலை தியாகி பொன்.சிவகுமாரனின் சிலையை அன்றைய இளைஞர்களான முத்துக்குமாரசாமி, தவராசா முதலானோர் அவர் மறைந்து சில நாட்களிலேயே நிறுவவேண்டும் என்று கேட்டபோது அதே அரசியற் சூழலின் சமாந்தர உணர்வுடனிருந்த இவரும் அதனை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். அடிமை விலங்குச் சங்கிலியை உடைத்தபடி நிற்பதுபோன்ற சிலை அது. அந்தச் சிலை உடைத்து நொறுக்கப்பட்டு, இரண்டு தடவை திருப்பி நிறுவப்பட்ட மை தமிழர் வரலாறு. சிவகுமாரனின் சிலை வரை,தமது பணியை ஒரு தொழில் சார் பணியாக இதழ்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் மட்டுமே வழங்கிக் கொண்டிருந்தார். தேசிய நூதன சாலையிற் தொழில்:- தேசிய நூதன சாலையில் பணியாற்றிய காலத்தில் பகுதிநேரமாகவே சில வர்த்தக விளம்பரப் பணிகளைச் செய்தார். அதனாலேயே தெற்கின் ஓவியர்கள் எனக்கு அப்படிச் சொல்லியிருக்கக் கூடும். அங்கு பணியாற்றும் போதுதான் எழுத்தாளர் நடராசன் என்பவருக்கு முதலாவது அட்டைப் படத்தை வரைந்ததையும் பின்னர் சிரித்திரன் சுந்தரின் நட்பும் அவர்தம் பணிகளும் கிடைத்ததாகவும் சொல்லியுள்ளார். சிரித்திரன் சுந்தரும் கூட- இவர் அப்போது செய்யும் வேலைகளை விடவும் இன்னும் நிறையச் செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவரெனப் பாராட்டினாராம். ஓவிய இரசனையும் ஆதரவும் - வடக்கும் தெற்கும்: தென்னிலங்கையைப் போல அரச ஆதரவும் மக்களின் ஓவியம் மீதான அக்கறையும் புரிதலும் ஓவிய ரசனையும் தெற்கின் ஊடகங்கள் அந்த ஓவியர்களுக்குக் கொடுத்த மதிப்பும்- இருந்திருந்தால் அவர் அவர்கள் எதிர்பார்த்த 'ஓவியராக' அவர்கள் பார்வையிற் பரிமளித்திருக்கலாம். இந்த வகையில், இடதுசாரிகளுக்கும் ரமணிக்கும் உள்ள தொடர்பு கூட நீண்ட ஒன்றெனத் தோன்றும். தேசாபிமானி: இடதுசாரிப் பத்திரிகையான 'தேசாபிமானி' தான் அவரை முதன் முதலிற் பாவித்துள்ளது. சிரித்திரன் சுந்தரின் ஆசியும் நட்பும்:- பின்னர் சிரித்திரன் சிவஞான சுந்தரம் தமது சஞ்சிகையின் பட , தலைப்புகள் வேலைக்குப் பயன்படுத்தியுள்ளார்; தம்மை உற்சாகமூட்டி ஊக்குவித்தவர் அவர் என்பார் ரமணி. பின்னர் டானியல், டொமினிக் ஜீவா, செங்கை ஆழியான், தெணியான்,செம்பியன் செல்வன், கல்வயல் குமாரசுவாமி, கலாமணிஎனப் பல இலககியவாதிகளும் கல்விமான்களும் இவரின் கலைத்துவத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மல்லிகை ஜீவா மல்லிகை இதழின் முகத் தலைப்பு என்றும் ரமணியை நினைவூட்டும். ஆசிரியர் டொமினிக் ஜீவா ஆரம்பகாலம் முதல் அதன் ஆண்டு மலர்களிலும் ரமணி மாஸ்டரின் ஓவியங்களைப் பாவித்து வந்ததைக் காணலாம். திருமறைக் கலாமன்றம்:- அடுத்து அவர் குறிப்பிடுவது திருமறைக் கலா மன்றத்தின் காப்பாளரான கலாநிதி மரியசேவியர் அடிகளாரை. மன்றத்தின் இலச்சினை அட்டைப்படம் சஞ்சிகையான கலை முகத்தின் முகத்தலைப்பு( Masthead) யாவையும் ரமணியே வரைந்துள்ளார் ரஜனி வெளியீடு ஈழநாட்டில் அப்போது உதவி ஆசிரியராகப் பணியாற்றிய குகநாதன் அவர்கள் தமது ரஜனி வெளியீட்டகத்தின் கதைகளுக்கு ரமணியைப் பாவித்துள்ளார். செங்கை ஆழியானின் கிடுகுவேலி, மழைக்காலம் போன்றன நூல்களாக வந்தபோது ரமணியே அவற்றை அலங்கரித்தார். செங்கை ஆழியான் தமது கல்வி நூல்களின் அட்டைப்படங்களுக்கு ரமணியையே பெரிதும் பாவித்துள்ளார். ஈழமுரசு:- ஈழநாடு மட்டுமே பிராந்திய நாளிதழாகக் கோலோச்சிய காலத்தில் புரட்சிகரமாக ஈழமுரசு நாளிதழ் யாழ்ப்பாணத்தில் வெளிவந்தபோது அதன் ஆசிரியர் எஸ்.திருச்செல்வம ரமணி அவர்களிடமே அதன் Masthead ஐப் படைக்கும் வேலையை ஒப்படைத்தார். ஈழமுரசின் தாய் நிறுவனமான 'தமிழர் நிதியத்தின்' இலச்சினை முகப்புப் பலகை எழுத்தமைப்பு யாவும் ரமணியினுடையவை. ரமணி வரைந்த ஈழமுரசு முகஅடையாளமே இன்று அப்பெயர் வெளிவரும் உலக நாடுகளில் வருவது குறிப்பிடத்தகது. நிறங்களும் சுரங்களும்:- ரமணி மாஸ்டர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் பணியாற்றியபோது நான் அவரை ஊடகர் என்ற வகையிலும் மாற்கு மாஸ்டர் மூலமாயுமிருந்த தொடர்பால் அறிவேன். அதுதான் அவருடனான எனது நேரடி அறிமுகம். அவ்வேளைகளில், எமது வீட்டுக்கு வந்தால் அம்மாவுடன் இசை பற்றி ஆர்வத்துடன் அளவளாவுவார். ஒரு முறை மேளகர்த்தா பற்றிக் கதை வந்தபோது எனது தாயார் மேலோட்டமாக 'தியறி' மூலமும் பாடியும் விளக்கினார். 'எங்களது வண்ணங்கள் போலத்தான். ஒரு ராகத்துக்குரிய சுரங்களை நாம் மாற்றினால் அது வேறாகிவிடும். அதுபோலத்தான் எங்கள் தூரிகை களும்.. மாறிக் கீறிக் கொஞ்சம் கூட வேறு நிறத்தை என்ன ஒரு நிறத்தையே கூடக் கொஞ்சம் சேர்த்தால் அது மாறிவிடும்.. சிறுவருக்கானது, தொழிலாளருக்கு, புரட்சி , சோகம் என்று எங்களுக்குள்ளேயே ஒரு ராகம் போய்க் கொண்டிருக்கும்.. அது சுருதி மாறாமல் போகும்போது தான் நல்ல படைப்பாக வரும்...மாறி வேறு நிறத்தை ...' என்று அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். இதைப் பின்னர் எமது தாயாரின் நினைவாக வெளியிடப்பெற்ற நூலின் அட்டைப்படம் தொடர்பாக அவரிடம் போனபோது நினைவுபடுத்தினேன். என்ன நிறத்தில் வேண்டும்? என்று அவர் கேட்ட போது இந்தக் கதையைச் சொன்னேன். அவரையே பொருத்தமான நிறத்தைத் தீர்மானிக்கும்படி சொன்னேன். சிரித்திரன், பாதுகாவலன், மல்லிகை, ஈழமுரசு ஈழநாதம் மட்டுமன்றி தினகரன், வீரகேசரி, உதயன், சஞ்சீவி என்பனவற்றிலும்,தொண்ணூறுகளில் தாயகத்தில் வெளிவந்த வெளியீடுகள் பலவற்றிலும் அவரது எழுத்தோவியங்களைக் காணலாம். சஞ்சீவியில் , செங்கை ஆழியான் தாம் எழுதிய தொடர் கதைக்கு இவரே வரைய வேண்டும் என்று கோரியபோது, பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் அதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தார். முதலுதவி நூல். எண்பதுகளில், கட்டை வேலி நெல்லியடி பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அனுசரணையில், மருத்துவர் சுகுமார் அவர்களின் மூலம் எழுதப்பட்ட முதலுதவி நூலுக்கான பல செய்முறை ஓவியங்களை வரைய ரமணி மாஸ்டரை அணுகினோம். நான் அப்போது சென்.ஜோன்ஸ் முதலுதவிப் படையின் வடமராட்சி ஒருங்கிணைப்பு அலுவலர்( தன்னார்வலர்). ஏலவே ஓர் ஊடகராகப் பழகிய எனக்கு,அப்போது தான் அவருடன் மேலும் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. நான் எங்கள் குடும்பத்தவரால் எமது தாயாரின் நினைவு நூல் விடயமாகச் சென்றபோது நூலில் உள்ள அம்சங்களை மட்டும் சொன்னேன். வழக்கமாக இலக்கிய நூல்களுக்கு- நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு களுக்கு-அட்டைப்படம் வரையும் போது அவற்றைப் பல தடவை வாசித்த பின்னரே வரைவதாகச் சொன்னார். 'வாசிக்கத் தான் நேரம் போகும்; ஆனால் கவர் கை வைத்தவுடன் ஸ்கெட்ச் வந்துவிடும் ' என்றார். நான் நூலின் பிரதான கட்டுரையை பேராசிரியர் சிவத்தம்பி எழுதியிருந்தார். அதனை முழுமையாக அவரிடம் பெறப் பல மாதங்கள் பிடித்தன. சிவத்தம்பி சேரின் கட்டுரையை மட்டும் கொண்டு சென்றேன். ' எப்போ கொழும்பு திரும்புகிறீர்கள் ? என்றார். நான் நாளைச் சொன்னதும் அதற்கு இரண்டு நாள் முன்னதாக நாளைக் குறிப்பிட்டு வரச் சொன்னார். அட்டைப்படம் ' ரெடியாக' இருந்தது. சிவத்தம்பி சேரின் கட்டுரையையும் உங்கள் அம்மாவுடன் பழகியபோது பேசியவற்றையும் மனதில் வைத்து வரைந்தேன்' என்றார். அந்த நூலில் எனது தாயாருக்குள்ள ஆற்றல்களை எல்லாம் சுருக்கமாகப் பிரதிபலிக்கும் வகையில் அட்டைப் படமாக வரைந்து தந்தார். ஆவணமான ( விவரணமான) நூல் என்பதால் அட்டையின் பெயரை Notation- சுர வடிவிலான ( music score) கணினி எழுத்திலேயே அமைப்பதாகச் சொன்னார். 'நான் உங்கள் எழுத்தையே வரவேண்டும் என்று விரும்பினேன் சேர்' - என்றேன். நான் எழுதினாலும் அப்படித்தான் எழுதுவேன். அதைவிடக் கணினி எழுத்து அமைப்பானதாகவே இருக்கும்' என்றார். கணினிகளில் வெவ்வேறு எழுத்தமைப்புகள்( fonts) பல வர முன்னதாக, தசாப்தங்களுக்கு முன்னரேயே அவற்றைத் தமது கற்பனையிலிருந்து தந்த கலைத் தீர்க்கதரிசி அவர் என்பேன் . ரமணி மாஸ்டர் ஈழத்தமிழ் ஓவியத்தில் நாம் கண்ட விண்ணர்களின் வழி வந்த விண்ணர்களில் ஒருவர். ஆனால் அவர்களின் மரபு ஓவியப் பாணியிலிருந்து மாறியவர். சங்க காலப் பாடல்கள் படித்தவர்களுக்கு பாரதி தோன்றியது போலவே ரமணியின் வருகை எமக்கு அமைந்தது எனலாம். அப்படியான உணர்வையே அவரது கோடுகளும் தூரிகைகளும் ஏற்படுத்தின. யாழ் ஓவியப் பரம்பரை என்றால் நான் அறிந்தளவில் பெனடிகற் மாஸ்டரைக் குறிப்பிடலாம். சென் சார்ள்ஸ் மகாவித்தியாலயத்தில் பணியாற்றியபோது அவர் மாலை நேர வகுப்புகளை நடத்தியவர்.( எனது தந்தையாரும் அப்போது புனித சார்ள்சில் படிப்பித்தவர்; பெனடிக்ட் மாஸ்டரின் ஓவியங்கள் சில எங்கள் வீட்டிலுமிருந்தமை- நினைவு) பெனடிக்ற் மாஸ்டரின் வகுப்புகளில் மாணாக்கராயிருந்தவர்களில் ஒருவர் மார்க் மாஸ்டர். மார்க் மாஸ்டர் புகழ் பெற்ற ஓவியர் டேவிற் பெயின்ரரின் மாணவர்; அவரின் மதிப்பையும் பெற்றவர். ஐம்பதுகளில் அவர் தமது மாணாக்கரின் ஓவியங்களை வைத்து நடத்திய கண்காட்சிக்கு மார்க்கரின் இருபதுக்கு மேற்பட்ட ஓவியங்களை வைத்தார். ஏனைய மாணவர்களின் இவ்விரண்டு ஓவியங்கள் தான் வைக்கப்பட்டனவாம். அப்படிப்பட்ட மார்க் மாஸ்டரின் விடுமுறைக் கால வகுப்பு ( Holiday Painters Group )மாணவர்களில் ஒருவர் தான் ரமணி. மார்க் மாஸ்டர் அந்தக் குழுமத்தின் மூலம் யாழ் மாநகர சபை மண்டபத்திலும் யாழ் மத்திய கல்லூரியிலும் ஓவியக் கண்காட்சிகளை அறுபதுகளில் நடத்தியிருந்தாராம். ஆனால் பொதுமக்களினதும் பத்திரிகைகளினதும் ஆதரவு கிடைக்காமையால் அவற்றைத் தொடர்ந்து நடத்த முடிவில்லை என்பார். அதுபோல மார்க் மாஸ்டரின் கனவு யாழ்ப்பாணத்தில் தெற்கைப் போல ஒரு நுண்கலைக் கழகம் வந்து அதில் ஓவியம், சிற்பம் கைப்பணி போன்றன பயிற்றப்படல் வேண்டும் என்பதும் ஆகும். அந்தக் கனவை ரமணி மாஸ்டர் நனவாக ஏற்படுத்தியுள்ளார் என்று நினைக்கிறேன். ரமணி மாஸ்டர் அழகியலுக்கான உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றியதுடன், இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார். மார்க் மாஸ்டர் இப்போதிருந்தால் சந்தோசப்படுவார் என்றும், பல சிற்பக் கலை ஆர்வலர்களான மாணவர்களும் உள்ளதாயும் ரமணி மாஸ்டர் என்னிடம் குறிப்பிட்டார். மரபு ஓவியம்:- ரமணி மாஸ்டர் மரபு ஓவியத்திலும் தமது கைவண்ணத்தை பல ஆலயங்களின் திரைச் சேலைகள் சிற்பங்களில் காட்டத் தவறவில்லை. சிலைகளில் நினைவாய் நிற்கிறார்:- அவரது கலைத்துவத்தைப் பேசும் படைப்புகளாக அவர் ஆக்கிய நினைவுச் சிலைகள் பலவும் அமைந்துள்ளன. நல்லை நகர் ஆறுமுகநாவலர், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி தாபகப் பெரியார் சூரன் சேர். பொன். இராமநாதன் மருத்துவ நிபுணர் சுப்பிரமணியம் கந்தையா உபாத்தியாயர் என்பவற்றுக்கப்பால், விடுதலைப் போராட்ட காலத்தில் யாழ் குடாநாட்டிலிருந்து மாங்குளம் வரை தோன்றி நிமிர்ந்துநினற பல சிலைகள் அவர் தம் கைவண்ணத்தைக் காட்டி நின்றன. நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முதன் முதலில் நிறுவப்பட்ட போராளி மில்லரின் சிலை, தீருவிலில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவான எழுவர் என்பன அவரது உச்சகாலப் படைப்புகள். தீருவிலில் அமைக்கப்பட்ட சிலைகள் அவை அமைந்த மைதானத்தின் முன்னே உள்ள பாடசாலையில் அவர் பாட விளக்க அதிகாரியாகப் பணியாற்றிய நேரத்தில் அவர் கண் முன்னாலே உடைத்தழிக்கப்பட்ட காட்சியைக் கண்ட உளக் கொடூரத்தையும் தாண்டியுள்ளார். அது போல அழிப்பட்ட அவர் படைத்த சிலைகள் பல. கலைகளில் கண்களோடும் கரங்களோடும் உறவாடும் கலைஞர் ஓவியர் என்பர். அந்த உறவின் துயரைத் தம் வாழ்வில் அனுபவித்த ஒரு கலைஞர் அவர். தொடக்கமும் முடிவும்:- நெல்லியடியில் அமைக்கப்பெற்ற தமிழர் தலைவர் சிவசிதம்பரம் அவர்களது சிலையே ரமணி அவர்கள் கடைசியாகச் செதுக்கிய சிலை ஆகும். நான் முதலில் குறிப்பிட்டதுபோல தமது பெயரின் சுருக்கத்தில் அவர் பொதுமையான வழமைபோல சிவா என்று இடாமல்விட்டிருந்தாலும் அவரது கலையுலக வாழ்வில் அவருக்குப் பிடித்த சிற்பக் கலையில், அவர் வடித்த முதலாவது சிலை சிவகுமாரனுடையது. கடைசியாக வடித்ததும் உடுப்பிட்டி சிவா! இரண்டு சிவாக்கள்!! தொடக்கமும் முடிவும் சிவாவே! சென்று வாருங்கள் சேர்!! - வரதராஜன் மரியாம்பிள்ளை
-
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
ஓவியர், சிற்பக் கலைஞர் கலாபூஷணம் ரமணி (முன்னாள் வருகைதரு விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம்) கலைகளும், கலைப்படைப்புகளும், கலைஞர்களும் இல்லாமல் உலகைக் கற்பனை பண்ணிப் பாருங்கள்... வேண்டாம் அந்த விபரீதக் கற்பனை. மரணமில்லா வாழ்வு கலைஞனுக்கு மட்டும்தான். அதனால்தான் கவியரசு கண்ணதாசன் என்ற பன்முகக் கலைஞன் கம்பீரமாக நிமிர்ந்து நின்று தன்னை "மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என உறுதிபடப் பாடியதோடு மட்டுமின்றி விடாது "பாமர ஜாதியில் தனிமனிதன் - நான் படைப்பதனால் என்பேர் இறைவன்" எனப் பிரகடனமும் செய்துவிட்டுப் போயுள்ளான். இது உண்மையான ஆற்றல்மிகு கலைஞரின் புவிசார் தகைமையை அர்த்தபூர்வமாகச் சொல்லும் யதார்த்த வரிகளாகும். ஒரு மனிதன் அவன் எப்படியானவனாக இருந்தாலும் அவன் ஒரு படைப்பியல் திறன் கொண்ட கலைஞனாகத் தன் சுயத்தை வெளிப்படுத்தி நிற்பவனேயானால் அவனது சாகாவரம் பெற்ற கலைப்படைப்புகள் தரும் பிரமிப்பும், ரசனையும் அவனது அனைத்துக் குறைபாடுகளையும் மறக்கவைத்து அவனை வணங்க வைத்துவிடும் என்பதே நிசம். "நாளும் நலியாக் கலையுடையோம்" என எம்மண்ணின் கவிஞனும் அத்தகைய ஒரு அமர கலைஞனுமான மஹாகவி உருத்திரமூர்த்தி அவர்கள் பாடிய வரிகள் இப்போது நினைவுக்கு வருகின்றமை தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. "யாழ்பாடி" என்ற பார்வையற்ற இசைக்கலைஞனின் கலாகீர்த்தியைப் பாராட்டி அவருக்கு அன்பளிப்பாக வெகுமதியாக அரசனால் வழங்கப்பட்ட பிரதேசமே யாழ்ப்பாணம் என இன்று எம்மால் எம் தந்தையர் பூமியாகப் போற்றப்படுகிறது. எனவே யாழ்ப்பாணத்தின் தோற்றமே கலைஞனோடு தொடர்பு கொண்டதாக இருப்பது புளங்காகிதம் தரும் விடயமாகும். பழம்பெரும் தமிழ் பேரகராதி ஒன்றில் யாழ்ப்பாணம் என்ற பெயருக்கு (சொல்லுக்கு) "வீணாகான புரம்" என அழகான - கலைத்துவமான விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதை இங்கு கூறவே வேண்டும். இலங்கை வேந்தன் தேவ கலைஞன் இராவணேஸ்வரன் வீணை வாசிப்பதில் நிகரற்றவன் என்பதை புராண, இதிகாச, மற்றும் தேவாரப் பதிகங்கள் பதிவு செய்துள்ளமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தத் தசமுகவை வீணைக் கொடியுடை வேந்தன் எனவே இதிகாசம் வர்ணிக்கிறது. எனவே கலைகளுக்கும் ஈழத் தமிழனுக்கும் இடையேயான தொடர்பின் அடிப்படையில்தான் கவிஞர் "மஹாகவி" அவர்கள் "நாளும் நலியாக் கலையுடையோம்" எனப் பாடியிருக்கிறார் எனக் கருதலும் பொருத்தமேயாகும். எமக்கென்று தனித்துவமான கலை, பண்பாட்டு மற்றும் கலாசாரப் பாரம்பரியம் உண்டென்பது வரலாற்றுரீதியாக நிர்ணயமான விடயமாகும். மிகப்பெரிய அறிஞர்களை, கலாவிற்பன்னர்களை, இலக்கியப் பெருமக்களை உலகிற்கு குறிப்பாகத் தமிழுலகிற்கு வழங்கி வருகின்ற பெருமை ஈழ மண்ணுக்குண்டு. இத்தகைய மாண்புமிகு மனிதர்களுள் இன்று நம்மிடையே வாழ்ந்து தமிழுக்கும், தாய் மண்ணிற்கும் கௌரவம் பெற்றுத் தரும் கலைஞர்களுள் - சிற்ப, ஓவிய நுண்கலைத் துறையில் தனக்கென ஒரு தனித்துவமும் கலைத்துவமும் மிக்க இடத்தை வகித்து வரும் வாழ்நாள் சாதனையாளரான "ரமணி" என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அமைதியும், ஆழமும் மிக்க கலைஞனாக நாம் பெருமைப்படக்கூடிய கலாவிற்பன்னராக விளங்கும் வைத்தீஸ்பரன் சிவசுப்பிரமணியம் ரமணி முக்கியத்துவம் பெறுபவராகிறார். நல்ல கலைஞன் மிகப்பெரிய அடையாளம் அவர் கலைச்செருக்கு, வித்துவக்கிறுக்கற்ற நல்ல மனிதனாகவும் அவர் விளங்குவதுதான். அந்தவகையில் ரமணி அவர்களின் அடக்கமும், அமைதியும் மிக்க மனிதநேயப் பண்புதான் அவரது கலாசிருஷ்டிகளின் கலைத்துவ தனித்துவத்திற்கும் மூலகாரணியாகும். முதலில் அவர் நல்ல மனிதர், நல்ல ஆசான், அது அவரது கலைப் படைப்புக்களின் ஆத்மாவாக வெளிப்பட்டு நிற்பதை அனைவரும் உணர்வர். அந்த கலைவளம் மலிந்த ஊரில் கல்வி, மற்றும் இசைக்கலைத் துறையில் பேரார்வம் கொண்டவரான அட்சலிங்கம் வைத்தீஸ்பரன் என்பவருக்கும் மங்கையற்கரசி என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர் ரமணி. அவரது இயற்பெயர் சிவசுப்பிரமணியம். இப்பெயரின் இடையே வரும் "ரமணி" என்ற பெயர் இவரது கலையுலக பெயராக இவரே வைத்துக்கொண்டதாகும். 1942 ஆவணி 3ஆம் நாளில் பிறந்த இவரிடம் பரம்பரை கலையார்வம் இயல்பாகவே இணைந்து கொண்டதில் வியப்பில்லை. இவர் மட்டுமல்ல இவர் குடும்பத்தவர் அனைவருமே கலைத்துவ ஆளுமை கொண்டவர்கள் தான். இவரது அண்ணா சச்சிதானந்தசிவம் மிகச்சிறந்த ஓவியர். அற்புதமான இலக்கியப் படைப்பாளி, ஞானரதன் என்ற பெயரில் சிறுகதைகள் - நாவல்கள் பலவற்றை படைத்தவர். திரைப்படத் துறையில் சாதனை படைத்த இயக்குநர். இந்தியாவில் இணையற்ற இயக்குநராக, ஒளிப்பதிவாளராக விளங்கும் பாலு மகேந்திராவின் பள்ளித்தோழர், பல பல்துறைக் கலைஞர்களை உருவாக்கிய நல்லாசான். "கலாகீர்த்தி" விருது பெற்றவர். ஏனைய சகோதரர்களும் சகோதரிகளும் கூட அவரவர் வாழ்வியல் தொழிற்றுறைகளுடன் மேலதிகமாக கலைத்துறை ஈடுபாடுகளையும் கொண்டவர்கள். அவர்களின் வாரிசுகளும் அப்படியே... வாழையடி வாழையாக கலைஞானம் கொண்டவர்களாக விளங்குவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆகவொரு பெரும் கலாவிருட்சத்தின் அங்கங்களாக அவரவர் தனித்துவத் திறனை வளர்த்துக்கொள்ள அந்தக் கலைக் குடும்பத்தில் தடையேதும் இருக்கவில்லை. தந்தையின் ஆதரவும், தமையனின் வழிகாட்டலும், சக நண்பர்கள், அயலவர்களின் உற்சாக ஊக்குவிப்பும் "ரமணி" அவர்களை அவர் துறையில் உச்சத்தை நோக்கி உயர வழிவகுத்தது. அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் தனது இளமைக் காலக் கல்வியை மேற்கொண்ட "ரமணி" அவர்கள் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சித்தி பெற்று உயர்தரப் பேறு பெறுவதற்கான கல்வியைத் தொடர நினைத்த வேளை அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. கலைத்துறைசார் கல்வியை மேற்படிப்புக்காக தெரிவு செய்ய திரு.எஸ்.பொன்னம்பலம் (ஆதவன்) என்பவரின் வழிகாட்டல் ஊக்குவிப்பு காரணியாகியது. இவர் அக்காலத்தில் அளவெட்டியில் புகழ்பெற்ற பல்துறைக் கலைஞராகவும், சித்திர ஆசிரியராகவும் விளங்கியவர். இவரை ரமணி அவர்களுள் மிளிர்ந்து கொண்டிருந்த ஓவியக் கலையை துல்லியமாக இனங்கண்டு அவரைப் பாராட்டி ஊக்குவித்து உயர்தரப் பரீட்சையில் ஓவிய பாடத்தில் விசேட சித்தி பெற வழிவகுத்தார். தன் இன்றைய கலைசார் பெருமைகளுக்கான காரணகர்த்தா திரு. பொன்னம்பலம் அவர்களே என மிக நன்றியுடன் நினைவு கூறுகிறார் "ரமணி". 07.03.1978 இல் "கலைஞானக் கதிர்" என்ற விருதினை ஓவியம், சிற்பம் ஆகிய துறைகளில் இவர் ஆற்றும் சேவைக்காக பருத்தித்துறை பிரதேசசபை வழங்கிக் கௌரவித்தது. 01.10.2000 அன்று வடமராட்சி கலைஞர் வட்டம் சிறப்புக் கேடயம் வழங்கிக் கௌரவித்தது. 18.11.2001 ஆம் ஆண்டு வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தமிழ் விவகாரங்களுக்கான அமைச்சினால் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினூடாக “கலைஞான கேசரி” என்ற கௌரவ விருது வழங்கப்பட்டது. 05.05.2002 இல் : யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவையால் "சிவ கலா பூஷணம்" என்ற விருது வழங்கப்பட்டது. 22.05.2006 : கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் "கலாபூஷணம்" எனும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 2008 இல் இவருக்கு வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சால் "ஆளுநர் விருது" வழங்கப்பட்டது. 2010 இல் : மன்னார் தமிழ்ச்சங்கம் நடாத்திய செம்மொழி மாநாட்டில் கலாயோகி ஆனந்தக் குமாரசாமி ஞாபகார்த்த "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கப்பட்டது. 2011 இல் : பருத்தித்துறை பிரதேச செயலக கலாசாரப் பேரவை "கலைப்பரிதி" என்ற விருதை வழங்கியது. 2012 இல் : வடமராட்சி கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட நிறைமதி விழாவில் ஓவிய-சிற்பத் துறையில் இவர் ஆற்றிய பணிகளுக்காக "கலைவாரிதி" விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. விருதுகள், பட்டங்கள், பாராட்டுக்கள் அனைத்தும் "ரமணி" என்ற அற்புதமான கலைஞனுள் ஆளுமை பெருமிதச் செருக்கைப் புறந்தள்ளி அடக்கத்தையும், பணிவையும் மட்டுமே வளர்த்துள்ளமையை அனை வரும் ஆச்சரியத்துடன் நோக்குவது வழமை. நிறைகுடம் தளும்புவதில்லையே. ஓவியர்-சிற்பி என பன்முகத்திறன் கொண்ட ரமணி அவர்களை ஆரம்பத்திலேயே அவரது திறனை இனங்கண்டு ஊக்குவித்து அவரது வளர்ச்சியில் மகிழ்வும் நிறைவும் கொண்டு அவருக்குரிய அங்கீகாரத்தை வழங்கிய புகழ்பெற்ற ஓவியரும், கேலிச் சித்திர விற்பன்னருமான சிரித்திரன் சுந்தர் அவர்கள் "ரமணி" குறித்து கூறிய கருத்தை இங்கு முத்தாய்ப்பாகக் கூறமுடியும். "ரமணி இலங்கையில் அதுவும் தமிழ்க் கலைஞனாக பிறந்தபடியால் அவரது முழுமையான ஆளுமைதிறன் வெளிவராமல் இருக்கிறது. இவர் மட்டும் வெளிநாட்டில் பிறந் திருப்பாரேயானால் இவரது தூரிகையும், உளியும் பெரும் அற்புதங்களைப் படைத்திருக்கும்....." உண்மையில் இது ஓவிய, சிற்ப ஆளுமை மிகு "ரமணி" அவர்கள் பற்றிய சுந்தரின் துல்லியமான மதிப்பீடேயாகும். ஒரு பெரும் கலைஞனை இன்னொரு பெருங்கலைஞனால்தான் இனங்காணவும் மதிப்பிடவும் முடியும் என்பது உண்மை தான். -ராதேயன் [தமிழ் முற்றம் 2015] இம்மாபெரும் கலைஞன் கடந்த 29/12/2025 அன்று காலமானதைத் தொடர்ந்து இக்கட்டுரை பதிவேற்றம் செய்யப்படுகிறது.
-
மரப்பாவம்
சிறப்பான கதை அண்ணை. கடைசி வரியில் சிறப்பான(!) சம்பவம் ஒன்றோடு முடித்திருக்கிறீர்கள் 😁. உங்கள் கதைகளில் உரையாடல்கள் மிகவும் இயற்கையாக அமைவது ஒரு நல்லியல்பு.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இது விடயத்தில் எனக்கும் சிலபல அனுபவங்கள் உண்டு ரசோதரன் அண்ணை. எமது பகுதி மக்களுடைய புறக்கணிப்பை ஒரு விதமான மனப் பிறழ்வாகவே பார்க்க முடிகிறது ஆழ்மனத்தில் புரையோடியுள்ள இவ்வாறான கருதுகோள்களிலிருந்து அவர்கள் வெளிப்படுவதற்கு சில தலைமுறைகளோ இல்லை தன்னலத்திலிருந்து வெளிப்பட்டு வாழ்க்கையை நோக்கக்கூடிய மன முதிர்ச்சியோ தேவை. எவ்வளவோ படித்தும் அனுபவமிக்கவர்களாகவும் உள்ளோருமே தம் மனம் எனும் வட்டம் சிறு கிணற்றளவேயாய்ச் சமைத்துக் கொண்டு அதனுள்ளே தாவும் தவளைகளாய் வாழ்தல் யாழ்ப்பாணத்தில் மிக அதிகம்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
@ரசோதரன் அண்ணை நீங்கள் குறிப்பிட்டுள்ள படி அவர்களுக்கான தீர்வு அவர்களுடைய நிலையான (sustainable) பொருளாதார முன்னேற்றத்துடன் கூடிய கெளரவமான சமூகப் பங்காளிகளாக வாழக்கூடிய தீர்வாக இருக்க வேண்டும். இதையே இயற்கைப் பேரிடர்களின் தாக்கம் குறைவாகவும் மற்றும் வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கக்கூடியதாகவும் வடக்கில் அவர்களைக் குடியிருத்த முடியும் என்றால் அது ஆங்கிலேயர் அவர்களைக் குடியிருத்தியது போல் அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஆங்கிலேயர் செய்தது தமது பலனுக்காக, ஆனால் இது அவர்களுடைய நன்மைக்காகவும் பாதுகாப்பான எதிர்காலத்துக்காகவும். எடுத்ததெற்கெல்லாம் வெள்ளைக்காரன் நிறவெறி பிடித்தவன் என்று கூப்பாடு போடும் தமிழர்கள் தமது முதுகையும் கண்ணாடி கொண்டு பார்த்துக் கொஞ்சம் ஆதிக்க மனப்பான்மையிலிருந்து வெளிவர வேண்டும்.
- அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
- தவிக்கும் தன்னறிவு
-
பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
@ரசோதரன் அண்ணை உங்கை முந்தி பயிற்சி செய்தவர் தானே, அவர் சொன்னாக் கேட்பினம் சில நேரம். வடமராட்சி கிழக்கு எனக்குத் தெரிஞ்ச காலம் முதல் எல்லா அரச திணைக்களங்களாலையும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடேயே அணுகப்பட்டு வந்திருக்குது. இ.போ.ச மட்டும் என்ன விதி விலக்கா?
-
உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழப்பு!
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
வருத்தத்திற்குரிய நிகழ்வு. ஆநிரை நல்ல உவமானம் @ரசோதரன் அண்ணை, அதை வைத்து நனவிடை தோயும் போது, ஆடு - கறுப்பாடு மேய்ப்பன் - ஏய்ப்பன் மீட்பன் - அழிப்பன் கடவுள் - சாத்தான் எல்லாமே ஒன்று போல் தான் தெரிகிறது, பார்வையின் கோணம் மாறும் போது.