2009 ஆம் ஆண்டிற்க்கு முற்பட்ட காலங்களில் நமது ஈழ தேசம், நான் நன்கறிந்த யாழ்ப்பாண சமூகம் ஒழுக்கம்
கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களால் கட்டியெழும்பப்பட்ட ஒருபெரும் சாம்ராஜ்ஜமாகவே திகழ்ந்தது. பொருளாதாரத் தடை, தொழில் நுட்ப வளர்ச்சியின்மை, போர்ச்சுழல், போன்ற அத்தனை இடர்களுக்கும் மத்தியில் எம் சுயமென்னும் சுடர் உலகத்தின் எந்த மூலையிலிருந்து பார்த்தாலும் ஈழத்தமிழன், யாழ்ப்பாணத்தான் என்பதே கௌரவ அடையாளமாகத்தான் மிளிர்ந்தது..
இப்போது பெற்றோக இருப்பவர்கள் எல்லோரும் 2009 காலப்பகுதிகளைக் கடந்து வந்தவர்கள்தான், இளைஞர்கள் யுவதிகள் கூட 2009 காலப்பகுதிகளிற்கு முன்னராகவே பிறந்தவர்கள்தான். போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு நமது பண்பு ஒழுக்கங்கள் பற்றியும் ஒவ்வொரு பெற்றோரும் சகோதர சகோதரிகளும் மௌனித்ததோ மறந்ததோ ஏன்..?
இங்குள்ள மாந்தர்களுக்கு ஒரு கோரிக்கை,
எத்தனை ஆயிரம் வளர்ச்சிகள் எழுச்சிகள் வந்தாலும் எந்த உயரத்தைத் தொட்டாலும்
நம்பண்புகளை மாற்றிடக் கூடாது. நாங்கள் வாழ்ந்த ஈழதேசத்தில் நம் இளமைக் காலத்தில் நாம் பெற்றதைத்தான் இன்றுவரை விதைத்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் வாழ்வின் போக்கு எப்போதும் ஒரு வரையரைக்குள்ளும் கலாச்சார பண்பாட்டு எல்லைக்குள்ளும்தான் இருக்க வேண்டுமே தவிர, மாறாக முகத்தைச் சுழிக்குமளவிற்கு பிற்போக்குத்தனமாக அமைந்துவிடக் கூடாது.
இசை நிகழ்ச்சிக்காக அழைத்து வந்தவர் சொன்னது போல, விரும்பியோ விரும்பாமலும் convince பண்ணி வந்திருந்தாலும் வந்தவர்களை மரியாதையோடு நடத்தி அனுப்பி வைப்பதே நம் ஒழுக்கம்.
நமது பாரம்பரியங்களை மாறாது மீறாது வாழ்வது உயிருள்ள ஒவ்வொரு தனிமனிதனதும் தார்மீகக் கடமை. இதை நாம் நேற்று இழந்துவிட்டோம் என்பது ஜீரணிக்க முடியாத உண்மை.
இதில் ஆயிரம் தவறு இருக்கலாம்,
* ஏற்பாட்டாளரின் வாய் வார்த்தைகள் பிடித்தமற்றவையாக..
* ஏற்பாட்டுக் குழுவினர் காசு சேர்க்கும் எண்ணம்
கொண்டவர்களாக..
* நிகழ்வு சிறப்பான முறையில் ஒழுங்கமைப்புச்
செய்யப்படாமை..
போன்ற காரணிகள் கூட இப்படியானதொரு அசம்பாவிதங்களுக்கும் குழப்பங்களுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறன. இதற்கு முன்பு தென்னிந்திய இசையமைப்பாளரும் பாடகருமான சந்தோஷ் நாராயணன் அவர்களின் நிகழ்வு மிகச்சிறப்பானதாக நிகழ்ந்துமுடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எத்தனை ஆயிரம் காரணிகள் இருந்தாலும், சரி பிழைகளுக்கு அப்பால் குழப்பங்களைத் தவிர்த்திருக்க வேண்டும். சுய ஒழுக்கமொன்றே உயிரிலும் மேலானது..
இப்போது நம்கென்று ஒரு சுயமும் இல்லை. அதை புடம்போட்டுக் காட்ட மேய்பானுமில்லை.
இன்னும் வல்வெட்டித்துறை மண்ணையும் அந்தக் காற்றையும் நேசித்துக்கொண்டும் சுவாசித்துக்கொண்டும்தான் சீவித்துக்கொண்டிருக்கிறோம் பலர்..