-
Posts
9545 -
Joined
-
Days Won
16
யாயினி's Achievements
Single Status Update
-
நியண்டர்தால் மனித இனத்திற்கும் காசநோய் இருந்ததுஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நியண்டர்தால், ஒரு நவீன மனிதர் என இரண்டு எலும்புக்கூடுகளின் உயிரியக்கவியல் பகுப்பாய்வு மற்றும் உருவவியல் தொடர்பான ஆய்வுசெய்யபட்டது. அந்த இருவருக்கும் காசநோய் இருந்ததை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நியண்டர்தால்கள் சுமார் 400,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன ஹோமினின்களின் அழிந்துபோன இனமாகும். இந்த மனித இனம் ஹோமோ சேபியன்ஸுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இனமாக அறியப்படுகிறது.1932ஆம் ஆண்டில் வடக்கு ஹங்கேரியின் சபாலியுக் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளின் கரிம ஆய்வு (கார்பன் டேட்டிங்), மத்திய வயது கொண்ட ஒருவர் சுமார் 37,000 முதல் 38,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகவும், மூன்று அல்லது நான்கு வயது குழந்தை ஒன்றின் எலும்பு எச்சங்கள் 33,000 முதல் 34,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகவும் தெரியவந்தது.Szeged பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பால்ஃபி (Gyorgy Pálfi) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், மத்திய வயது கொண்ட நியண்டர்தால் மனிதனின் முதுகெலும்பு மற்றும் குழந்தையின் மண்டை ஓட்டின் உட்பகுதியில் காசநோய் தொற்றினால் ஏற்படும் எலும்புப் புண்களைக் கண்டறிந்தனர். ஒவ்வொரு எலும்புக்கூடுகளிலிருந்தும் எலும்பு மாதிரிகள் காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவும் மைக்ரோபாக்டீரியாவும் காசநோய் உள்ளதா என்ற வகையில் சோதிக்கப்பட்டது. கூடுதலாக, ஆராய்ச்சியாளர்கள் ஸ்போலிகோடைப்பிங் (spoligotyping - ஒரு டிஎன்ஏ மாதிரியில் காசநோயின் மரபணு வரிசைகளை அடையாளம் காண பயன்படுத்தப்படுகின்ற முறை) மூலம் இதனை உறுதிப்படுத்தினர்.பைசன் போன்ற பாதிக்கப்பட்ட விலங்குகளை வேட்டையாடுவதும் உண்பதும் போன்றவற்றால் நியாண்டர்தால் மனித இனம் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அந்த நோய் அவற்றின் அழிவுக்கு பங்களித்திருக்கலாம் என்றும் பால்ஃபியும் அவரது ஆய்வுக் குழுவினரும் கருதுகின்றனர்.-சுபா9.2.2024
-
முதன்முறையாக நான் அவனை ஒரு கைகழுவும் தொட்டிக்கு அருகே பார்த்தேன், அவன் சுவற்றோடு ஒடுங்கியபடி சில பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தான்.சத்தமாகப் பேசுபவர்களைக் கண்டால் அவன் திடுக்கிட்டு நிமிர்வதும், பிறகு வேலையைத் தொடர்வதுமாய் இருந்தான், அவனுடைய கண்களில் ஒரு அச்சம் சூழ்ந்திருந்தது.அவன் இமயமலைக்குப் பின்புறமாக இருக்கும் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வந்திருப்பதை என்னால் உணர முடிந்தது, வெளுத்த மஞ்சள் கலந்த தோலும், கருகருவென்று வளர்ந்திருந்த புருவங்களும், இளங்கருப்பு நரம்புகள் தெரிகிற கைகளுமாய் அவன் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தான்.நான் சாப்பிட்டுவிட்டு கைகழுவச் சென்றபோது ஒரு பெயர்தெரியாத பூச்சியைப் போல விலகி வழிவிட்டு சுவற்றுக்குள் நுழையப் பார்த்தான், நிதானமாக ஒருமுறை அவனைப் பார்த்து அதிராமல் புன்னகைத்தேன்.அவனால் ஒரு எளிய புன்னகையை நம்ப முடியவில்லை, சக மனிதர்களின் புன்னகை என்பது அவனுக்கு ஒரு பொருந்தாத சட்டையைப் போலிருந்திருக்க வேண்டும்.கைகளைக் கழுவி விட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்து ஹிந்தியில் "உன் பெயர் என்ன?" என்று கேட்டேன், மலங்க மலங்க விழித்தவன், 15 வினாடிகளுக்குப் பிறகு என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்.அவனால், ஹிந்தியைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுடைய மொழி அழுத்திக் கொண்டு தொண்டைக் குழி வரைக்கும் பிதுங்கிப் பிறகு அவனால் விழுங்கப்பட்டது.மூன்றாவது நாள் நான் அவனைப் பார்த்தபோது ஒரு இளம் நேபாளத் தம்பதியினரோடு உணவுவிடுதியின் வாசலில் இருந்து சற்று விலகி மாடிக்குப் போகும் படிக்கட்டுச் சந்தில் நின்று பேசிக்கொண்டிருந்தான்.அந்த இளம்பெண்ணின் முகம் இவனது முகத்தைப் போலவே இருந்தது, அவனது முகத்தில் அன்று சிரிப்பையும் மலர்ச்சியையும் என்னால் பார்க்க முடிந்தது.அவர்கள் திளைக்கத் திளைக்க நேபாள மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள், அந்த இளம்பெண் அவனுடைய சகோதரியாக இருக்க வேண்டும்.அவர்கள் நீண்ட நேரமாக, அதாவது 10 நிமிடங்கள் வரையில் பேசிக்கொண்டிருப்பதை ஒரு திருட்டுப் பூனையின் கண்களோடு அந்தக் கடையின் முதலாளி கல்லாவில் இருந்து அவ்வப்போது பார்த்தான்.அவனுடைய கண்களில் அந்த உரையாடலை மிக வேகமாக முடிக்கச் சொல்கிற ஒரு அதிகாரத்தோரணை இருந்தது. முதலாளியின் கண்கள் தன்னை வேவு பார்ப்பதை அறிந்த பிறகு அந்தச் சிறுவனால் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்க முடியவில்லை.விடைபெறும் போது அந்த இளம்பெண் அவனுடைய முன்நெற்றியில் கைகளைத் துழாவி அவனை மென்மையாக வருடினாள், அவளது கண்களில் அளப்பரிய அன்பும் கருணையும் இருந்தது. பிறகு அவர்கள் விடை பெற்றுப் போனார்கள்.நீண்ட நேரமாக அவர்கள் சென்ற பாதையைப் பார்த்துக் கொண்டே நின்றவன், பிறகு பாத்திரங்களைக் கழுவும் இடத்திற்குப் போய் நின்று கொண்டான், அவனுடைய சிறிய கண்கள், ஒருவிதமான அச்சத்தோடுதான் இன்னுமிருந்தது.நான் மீண்டும் கைகழுவப் போனபோது "உன் பெயரென்ன?" என்று ஹிந்தியில் கேட்டேன், இப்போது அவனால் பதிலளிக்க முடிந்தது, "பட்ஷா". நான் அவனுடைய அழுக்குப் படிந்திருந்த சட்டையின் வழியாக தோளை அழுத்தி நீ "பாட்ஷா" என்றேன். "பட்ஷா" என்று ஒருமுறை அழுத்தமாக எனக்கு மட்டுமே கேட்கும் குரலில் சொன்னான்.பிறகு குனிந்து பாத்திரங்களை எடுத்துக் கொண்டான். ஒரு மூத்த நேபாளி அந்த உணவு விடுதியின் உணவு பரிமாறுபவனாக இருந்தான், அந்தச் சிறுவனால் அவன் ஒருவனிடம் மட்டுமே உரையாடலை நிகழ்த்த முடியும் .அந்த உரையாடல் பெரும்பாலும் கட்டளைகளாக, வெப்பமேறிய சொற்களை உமிழும் ஒரு கெட்ட கனவைப் போல இருக்கும், ஆனாலும், மொழியும், மனிதர்களும் துணைக்கில்லாத ஊர்களில் சுடுசொற்களும், கட்டளைகளும் நமக்கு திருப்தியைக் கொடுத்து விடுகின்றன.அப்படியே அந்த சொற்களை அந்தச் சிறுவன் எதிர்கொண்டான், கடுமை நிறைந்த அந்த மூத்த நேபாளியின் குரலை அவன் தனக்குள்ளாக நிறைத்துக் கொள்கிறான்.சில வாரங்களுக்குப் பிறகு அவன் பாத்திரம் கழுவும் வேலையைத் தவிர தண்ணீர் ஊற்றுகிற, மேசையைத் துடைக்கிற வேலைகளையும் செய்யத் துவங்கி இருந்தான், இப்போது அச்சம் கொஞ்சம் விலகியதைப் போலிருந்தான்.நான் வாசலில் வருவதை பார்த்தால் ஓடிச் சென்று துடைத்த மேசையை மீண்டும் ஒருமுறை துடைப்பான், பிறகு மிகுந்த மரியாதையோடு குவளையை எடுத்து ஓசையின்றி வைத்து தண்ணீர் நிரப்புவான்.அநேகமாக அந்தச் சிறுவனோடு ஒரு இணக்கமான உரையாடலை நிகழ்த்த முயற்சி செய்கிற பெருமைக்குரிய, விருந்தோம்பலுக்குப் பெயர் போன முதல் தமிழன் நானாக இருப்பேன் என்பது ஒருவிதமான வெட்கத்தையும், வெறுப்பையும் எனக்குள் சுரந்து கொண்டிருந்ததை நான் அறிந்து கொண்டேன்.ஆனால், அவனுடைய கண்களில் என் மகளின் கண்களில் இருந்து சுரக்கிற அதே பேரன்பு நிறைந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன், பொருளுலகம் அவனது நிலத்தில் இருந்தும், அவனது தொட்டில்களில் இருந்தும் அவனைத் துரத்திய எங்கோ அனுப்பி இருக்கிறது.யாரோ சாப்பிட்ட பாத்திரங்களை அவன் கழுவும்படி வாழ்க்கை அவனுக்கு விதித்திருக்கிறது, ஆனால், எல்லா நிலங்களிலும், ஒரு நேசத்தின் புன்னகையையும், கருணையின் மகத்தான வருடல்களையும் நம்மால் எந்த விலையுமின்றிக் கொடுக்க முடியும்தானே?உலகமெங்கும், உடலின் நிறத்தையும், நிலங்களின் ஏற்ற இறக்கங்களையம் ஊடுருவிச் செல்கிற ஒற்றைக் கம்பியைப் போல துயரமும், மகிழ்ச்சியும், சிரிப்பும், அழுகையும் தான் மானுடத்திற்குள் நிரம்பி இருக்கிறது.துயரத்தின் நிறம் எல்லா இனத்திற்குள்ளும் ஒன்றாகவே இருக்கிறது, ஒரு புன்னகைக்கு முன்னால் எல்லா வேறுபாடுகளும் அடித்துச் செல்லப்பட்டு விடுகின்றன. பேரண்டமெங்கும் புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒற்றை மொழியாக அன்பொன்று தானே காலம் காலமாய் நிலைத்திருக்கிறது.புதிய இடத்தில், புதியவர்கள் நிறைந்திருக்கும் விழாக்களில் அப்பாவையோ, அம்மாவையே தேடுகிற குழந்தையின் கண்களைப் போலத்தான் அவனது கண்கள் கருணை நிரம்பிய கைகளைத் தேடுகிறது.திடீரென்று ஒருநாள், அந்த உணவு விடுதியின் புழக்கடையிலும், சுவற்றோரங்களிலும் அவனை என்னால் பார்க்க முடியவில்லை, மூத்த நேபாளியை அழைத்துக் கேட்டபோது அவனது வயதை உறுதி செய்ய எந்த ஆவணமும் இல்லாததால் இனி வேலைக்கு வரமுடியாதென்று சொன்னார்.பிறகு அந்த நெருக்கடியான உணவகத்தில் நான் தனிமையை உணர ஆரம்பித்தேன், காலம் மெல்ல மெல்ல நம்முடைய வாழ்க்கையை நமக்களித்து விடும், பிரிவுகளை நாம் சகிக்க வேண்டியிருக்கும்.மரணத்தில் உருவாகிற பிரிவும் கூட முற்றிலும் இயலாத நிலை ஒன்றை உருவாக்கி விட்டு கண்களை அடைத்துப் பின்பு பசியைக் கொண்டு வந்துவிடும். நாம் நமக்கென்று எஞ்சியிருக்கிற உடலின் வாழ்க்கையை வாழத்தான் வேண்டும்.நேற்றைய மாலையில் வங்கக் கடலின் மிதமான குளிர் காற்று முகத்தில் அடிக்க நடந்து போகிறபோது "பாட்ஷா" எதிரே நடந்து வருகிறான், நான் இன்னொரு நண்பனோடு வருவதைப் பார்த்தவன் கொஞ்சமாக விலகி பக்கத்தில் இருக்கிற சிலை மாடத்தில் நிற்கிறான்.கால்களை வேகமாக நகர்த்தி "பாட்ஷா" என்று அவனுடைய தோள்களை அழுத்தி ஒருமுறை அணைத்துக் கொண்டேன், நானும் பாட்ஷாவும் பக்கத்தில் இருக்கிற கடையில் ஒரு தேநீர் குடித்தோம், அவன் இப்போது திக்கித் திணறி தமிழ் பேசுகிறான்.தான் வேறொரு கடையில் சேர்ந்து விட்டதாகச் சொன்னான். விடைபெறுகிற போது அவனது தலைமுடிக்குள் கைகளை நுழைத்து அவனுடைய சகோதரி வருடியதைப் போலவே செய்வதற்கு நான் முயற்சி செய்தேன்.அவனுடைய கண்களுக்குள் உலகின் குழந்தைகள் காட்டுகிற அதே நேசத்தின் சுவடுகள் தான் இருந்தது. எல்லாம் கடந்து பார்க்கிற போது நானும் பாட்ஷாவும் அன்பைத் தேடுகிற மனிதப் பயல்கள் என்பது மட்டும்தான் நிலையான உண்மையாக இருக்கிறது.
-