மதுரயும் கோபாலன் குடும்பமும்(சிறுகதை)
70 வதுகள்ல மதுர ஒரு தூங்கா நகரம் 24 மணிநேரமும் ஒரு ஊரு முழிச்சிகிட்டு இருக்கும்னா அது தூங்கா நகரம் தான. அப்பயெல்லாம் மதுரையில மில்கள் தொழிற்ச்சாலைகள் மும்முரமா இயங்கிட்டுஇருந்தகாலம் மதுரைகோட்ஸ் ராஜாமில் விசாலாட்சி மில் மீனாட்சிமில்ன்னு 24 மணிநேரம் ஓடிக்கிட்டு இருக்கும் காலையில 7 மணி மதியம் 3மணிராத்திரி 11 மணின்னு மில்லு சங்குகள் ஊதி வேலைக்கு வாங்கன்னு கூவும் அதுமட்டுமில்லாம பென்னர்கம்பெனி டி வி எஸ் கம்பெனின்னு தொழிற்சாலைகள் வேற இதுபோக செளராஸ்ட்ரா மக்கள் தறிபோட்டு நெசவு செய்வாங்க, அப்புறம் ரயில்வே அரசுபேருந்து பாண்டியன் பி ஆர் சி போன்ற நிறுவனங்களும் நல்ல வேலை வாய்ப்பை வழங்கின
தீபாவளி சமயத்திலஎல்லாம் மில்லுகள்ல எல்லாரும் போனஸ் எதிர்பார்த்து காத்திருப்பாங்க தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் அதுல ஏதாவது முடிவாகி போனஸ் வழங்கப்படும் அப்புறம் தீபாவளி களைகட்டி வியாபாரம் தூள் கெளப்பும்அப்ப இந்த மில்லுகள்ல கம்பெனிகள்ல வேலைபாக்குறவங்க எல்லாம் மாசச்சம்பளக்காரவுக.
அவுகளை நம்பிக் கடன் குடுப்பாங்க ஒருபைசா வில இருந்து 3பைசா வட்டி வரை வாங்கிட்டுக் கடன் குடுப்பாங்க
இதுல பென்னர் கம்பெனில நல்ல சம்பளம் குடுப்பாங்க
. அதுல வேலை பாக்குறவங்கன்னா பணக்காரவுகன்னு எல்லாரும் பேசிக்கிருவாங்க நம்ம ஆள் கோபாலனோட அப்பா சித்தப்பாக்கள்னு அவங்க குடும்பத்திலயே 4 பேர் மதுரை கோட்சிலும்ஒருத்தர் பென்னரிலும் வேல பாத்தாங்க.
அதுனால அந்த குடும்பம் செல்வாக்கான குடும்பமா இருந்துச்சு. ஊரில பெரிய மனுசங்கன்னா அவங்கதான். அவங்க எங்க சொந்தக்காரவுங்கன்னு சொல்றதுல பெருமைப் படுவாங்க. தீவாளின்னா அவங்க வீட்டுலதான் விடிய விடிய வெடிப்போடுவாங்க கோபாலன் குடும்பத்தில வருமானம் எவ்வளவு அதிகமோ அந்த அளவுக்கு பிள்ளைகளும் அதிகம் நம்ம கோபாலன் கூடப்பிறந்தவங்க 4 ஆம்பளைங்க ரெண்டு பொண்ணுக.
கோபாலன் கையில நல்லா காசுபொழங்கும் அதுனால டீக்கடைக்குக் காசு குடுக்குறது படத்துக்கு டிக்கெட் எடுக்குறது எல்லாம் அவன் தான். அவங்க வீட்டுக்கு ஆரு போனாலும் காப்பி சாப்பிடுறீங்களான்னு கேட்டு காப்பி குடிக்காம விடமாட்டாங்க அந்த ஊரில அப்ப வரவேற்பரைனு இருந்தது அவங்க வீட்டுல தான் அதுல சோபா போட்டிருக்கும் அப்புறம் ஒரு பெரிய ரேடியோ தானாக இசைத்தட்டுகள் போட்டு பாட்டுப்பாடும் வசதி இருக்கும் அதுனால அவனோட நண்பர்கள் எல்லாம் அவன் வீட்டுலதான் கெடப்பானுக
தேர்தல் நேரத்துல முடிவுகளைக் கேக்க அவங்க வீட்டுல கூடிருவாங்க. அப்ப அப்ப கேண்டினில் வாங்கி வந்த ஸ்வீட் காரம் வேற கெடைக்கும். அவங்க வீடேஎப்போதும் ஜே ஜேன்னு இருக்கும் அவங்க வீட்டுல கலியாணம் கோபாலன் அண்ணனுக்கு நடந்தப்ப ( அவரும் மதுரை கோட்சில்தான் வேலை பாத்தாரு) தெருவே அடைச்சி பந்தல் கிட்டத்தட்ட ஊரில இருக்குற எல்லாருக்கும் அழைப்பு நு தடபுடலாநடந்துச்சு
பொண்ணு கொடுக்க பொண்ணு எடுக்க போட்டா போட்டி.
கோபாலனுக்கு அவனோட சொந்த அத்தைபொண்ணத்தான் கலியாணம் பண்ணி வைச்சாங்க அப்ப அவன் வேலைக்கிப்போகல. எப்புடியும் மில்லில் வேலை வாங்கிடலாம் நு நம்பிக்கிட்டு இருந்தாங்க. ஏன்னா அப்ப 50 வய்சுக்கு மேல வேலை செய்யிறவங்க வேலைய எழுதிக்கொடுத்தா ரொக்கமா சில ஆயிரங்களும் வாரிசு வேலைவாய்ப்பும் நு பென்னர் உடபட பல மில்லுகள்லயும் அறிவிச்சிருந்தாங்க அது சீனியர்னா சம்பளம் அதிகம் கொடுக்கனும் புதுசா வாரவங்கன்னா கொஞ்சமா குடுத்தாப்போதும்ன்ற பாலிசி நெறையாபேர் இத ஏத்துக்கிட்டு எழுதிக்கொடுத்து பிள்ளைகளை வேலைக்கி சேத்துட்டு வந்த பணத்த பிள்ளகளுக்கு கலியாணம் இல்ல நெலம் வீடுன்னு வாங்கிபோட்டாங்க ஆனா நம்ம கோபாலன் அப்பா ஏற்கனவே 20 வேலை செஞ்சதுக்கு மூத்தமகன வேலைக்கி சேத்திருந்தாரு. இந்தத் திட்டம் வந்தவன்ன அவருக்கு சம்பளம் அதிகம் புதுசா மகன வேலைக்கிச்சேத்தா அம்புட்டுச்சம்பளம் வராது கொஞ்சம் பொறுப்போன்னு யோசனை பண்ணுனாரு.
கோபாலனையும் வேலைக்கிச்சேக்க காத்திருக்கச் சொன்னாருஇவனும் நம்பிக்கையோட காத்திருந்தான். அதுக்குள்ள கலியாணம் பண்ணி பிள்ளையும் பெத்திருந்தான் அப்பத்தான்மதுரையில தொழிற்சாலையின் போக்குகள்ல மாறுதல் வந்துச்சு. முன்னாடி படிச்சிருந்தாலும் படிக்காட்டினாலும் வேலை கொடுத்தகன்பெனிகள் ஐ.டி.ஐ மற்றும் டிகிரி டிப்ளோமா ஆளுகளை வேலைக்கி எடுக்க ஆரம்பிச்சாங்க.
வாலெண்டரி ரிட்டயர் மெண்ட் ஸ்கீமிலயும் மாத்தம் வந்துச்சு படிச்சிருந்தா மாத்திரம் வேலை அதுவும் ஐ.டி.ஐ டிப்ளோமா படிச்சவங்களுக்கு மட்டுமேவேலை அப்புடி ஆள் இல்லைன்னா கூடுதலா பணம் கொடுத்து செட்டில் பண்ணி அனுப்ப ஆரம்பிச்சாங்க
இந்தக்காலாட்டத்துல மில்லுக எல்லாம் மூட ஆரம்பிச்சாங்க. மதுரைகோட்ஸ் தவிர பல மில்லுகளை மூட ஆரம்பிச்சி அதை எல்லாம் இடிச்சிட்டு ரியல் எஸ்ட்டேடா மாத்தி வீடுகட்டி விக்க ஆரம்பிச்சாங்க .
மதுரயோட பொருளாதாரம் சாதாரண ஜனங்க கையில இருந்து நழுவ ஆரம்பிச்சது சங்கு ஊதுறது நின்னதுனால பலருடைய வாழ்க்கை யில சங்கூதுறபடியா ஆயிருச்சி நம்ம கோபாலன் படிச்சது எஸ் எஸ் எல் சி தான் அதுனால அவங்க அப்பாவால மில்லில் வேலை வாங்கித்தர முடியல அதே நேரத்துல அவங்க அப்பா ரிட்டயர்டு ஆயிட்டாரு.
அண்ணன் தனிக்குடித்தனம் போனதால குடும்ப வருமானம் கேள்விக்குறியாச்சு. இருந்த காசெல்லாம் கரைய ஆரம்பிச்சது. குடும்பம் எவ்வளவு செல்வாக்கா இருந்ததோ அவ்வளவு வறுமைய நோக்கி நகர ஆரம்பிச்சது
இவனுக்கும் உருபடியான வேலை கிடைக்கல தம்பிகளும் சரியாப்படிக்கல. ஒருநாள் அவனோட அப்பா திடீருன்னு மாரடைப்புல இறந்துபோயிட்டாரு.
அப்ப அவங்ககிட்ட இருந்தது குடியிருந்த வீடும் கொஞ்சப் பணமும் தான் அதுனால வீட்டை விக்க வேண்டிய சூழ்நிலை ஆயிருச்சு இதே கால கட்டத்துல மதுரயில மில்லுகள் மூடினதால 10 மணிக்கு மேல ஆள் நடமாட்டம் கொறைய ஆரம்பிச்சது மதுர தன்னோட தூங்காநகரம் பெயரை கொஞ்சம் கொஞ்சமா இழக்க ஆரம்பிச்சது.
யானைக்கல்லுல மாத்திரம் காலையில 3 மணியாவாரம் தொடர்ந்துச்சு. பெரும் வேலைவாய்ப்புகள் கொறைஞ்சதுனால வேலை தேடி திருப்பூர் போன்ற ஊர்களுக்கு மக்கள் குடிபெயர ஆரம்பிச்சாங்க அப்ப நிறைய இஞ்சினியரிங் டிப்ளோமா கல்லுரிகள் திறந்து படிச்சி சென்னை போன்ற நகரங்களுக்கு இடம் பெயற ஆரம்பிச்சாங்க.
மதுர தொழில் நகரமாயிருந்தது வியாபார நகரமா மாற ஆரம்பிச்சது வியாபார நிறுவனங்கள் தொறந்தாங்க நகைக்கடை துணிக்கடை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்னு வேலை வாய்ப்புகள் ஆனா எல்லாம் சம்பளம் கொறவு குடும்பத்துல எல்லாரும் வேலைக்கிப்போனாத்தான் குடுமபம் ஓடும்ற சூழ்நிலை வர ஆரம்பிச்சது
நம்ம கோபாலன் குடும்பமும் அந்த நெலைக்கித் தள்ளப்பட்டுச்சு ஏதாவது கடையில ஸ்கூல்ல வேலை நு ஆயிப்போச்சு. கோபாலன் மனைவி பிரைவேட் ஸ்கூல்ல வேலைக்கிப்போனாங்க.
இவன் ஒரு கடையில வேலைக்கிச்சேந்தான் பூர்வீக வீட்ட வித்துட்டு வேற பக்கமா குடிபெயந்தாங்க நல்லா வாழ்ந்த குடும்பம் இந்த மாதிரி அதள பாதாளத்துக்குபோயிருச்சு.
இப்ப யெல்லாம் அவன் தான் இருந்த தெருவுக்கு வாரதையே தவிர்த்தான் அவங்க வீட்ட வாங்குனவர் வீட்ட இடிச்சிட்டு காலி எடமா விக்க முயற்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தார் ஒருநாள் அந்தப்பக்கமா போக நேர்ந்தது அவங்க வீடு இடிக்கப்பட்டு மண்ணாக் கெடந்ததப்பாத்து அழுகைய அடக்க முடியல நாம் வாழந்த வாழ்க்கையென்ன இந்த வீட்டுல எவ்வளவு பேர் வந்து சாப்புட்டுப் போயிருப்பாங்க இப்ப எல்லாம் மண்ணாகி நிக்கிறதத் தாங்க முடியல அழுகைய அடக்கிக்கிட்டு வீட்டுக்கு வந்து குமுறிக் குமுறி அழுதான். அழுதா மட்டும் போனது திரும்பப்போகுதா.
அதேபோலத்தான் மில்லுக இருந்த எடத்துல அப்பார்ட் மெண்டுகள் கட்டி மாறிக்கிட்டு இருந்துச்சு. எல்லாம் புதுசு ஆனா அங்க இருந்த தொழிலாளர்கள் மக்கள் எல்லாம் காணாம்போயிட்டாங்க கோபாலன் குடும்பத்தைப்போலவே இன்னிக்கி மதுரையில வியாபாரம் மெயின் ஆயிப்போச்சு.
சித்திரைத்திருவிழாவுக்கு மாத்திரம் கூட்டம் கொறையல மத்தபடி மதுரை உணவுக்கு பெயர் போனதாவும் போத்தீஸ்சென்னை சில்க் சரவணா போன்ற வியாபாரிகள் வந்து கடைவிரிச்சாங்க
குறுநில மன்னர்களா கோபாலன் போல இருந்த மக்கள் எல்லாம் கடைகளில் சொற்ப சம்பளத்துக்கு வேலைக்கிப்போக வேண்டியதாப்போச்சு.
ஆனாலும் மதுரை செயற்கையா ஜொலிக்குது வியாபார நிறுவனங்களால் ஆனால் மக்கள் வருமானம் வெவசாயத்தைப்போல கொறைய ஆரம்பிச்சிருச்சு. கோபாலன் குடும்பம் போல எத்தனையோ குடும்பங்கள்
அன்னிக்கி ஒருநாள் அவனை நான் பார்த்தேன் சேர் ஆட்டோவில. பாக்கவே பரிதாபமா இருந்துச்சு எலும்பு தோலுமா ஏழ்மையின் உச்சத்தில் இருந்தான் .
அவனைப்பார்த்து அறிமுகம் செஞ்சிக்கிட்டேன் . அவரா நீங்கள் நு கேட்டான். வா டீ சாப்பிடலாம் நு கூப்பிட்டேன் உடனே பையைத் தடவிப்பாத்துட்டு வாப்பா போகலாம்னு போய் டீ சாப்பிட்டோம் அப்பவும் தன் பையில் இருந்து டீ கடைக்காரருக்குக் காசு குடுத்தான். என்னைக்குடுக்க விடவில்லை . நீதான் வெளியூராச்சே உன்னைக்காசு குடுக்கவிட்டாஎன் கெளரவம் என்னாகிறது நீ என் விருந்தாளின்னான்
அந்த நிலையில் அவனைப்பார்த்து என் கண்கள் கலங்குச்சு. என்ன நிலையிலும் விருந்தோம்பலை மதுர மறக்காதுன்னு தோணிச்சி அண்ணார்ந்து பாக்கையில் மீனாட்சிஅம்மன் கோவில் கோபுரம் விளக்கோடு பளபளத்துச்சு ஆனா கோபுரத்திம் கீழ் கடைகளில் எரிந்த விளக்குகளில் வேற்று முகங்கள் கல்லாவில்
உட்கார்ந்திருந்தார்கள் வெளுப்பாக.
அ.முத்துவிஜயன்