Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9545
  • Joined

  • Days Won

    16

யாயினி last won the day on May 11

யாயினி had the most liked content!

About யாயினி

  • Birthday 03/30/1868

Contact Methods

  • AIM
    ----------------------------------------
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Female

Recent Profile Visitors

62202 profile views

யாயினி's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

3.1k

Reputation

Single Status Update

See all updates by யாயினி

  1. காலச்சுவடு இதழில் முனைவர் தேமொழி எழுதிய தமிழர் புலப்பெயர்வு என்ற எனது நூலுக்கான திறனாய்வு வெளிவந்துள்ளது. வாசித்து மகிழ்க..
     
    தமிழர் புலப்பெயர்வு;
    உலகளாவிய பயணங்கள், குடியேற்றங்கள், வரலாறு
    க. சுபாஷிணி
    பதிப்பகம்: தமிழ் மரபு அறக்கட்டளை
    பக்.370 ; ரூ.450
     
    தமிழர்கள் கல்விக்காகவும் உயர்திறன் சார்ந்த பணிகளுக்காகவும் வணிகத்திற்காகவும் அயல்நாடு களுக்குப் புலம் பெயர்கிறார்கள் என்றாலும், வரலாறு நெடுகிலும் தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தரை வழியாகவும் கடல் வழியாகவும் தொடர்ந்து பல தேவைகளுக்காகப் புலம்பெயர்ந்துகொண்டே இருந்தார்கள்.
     
    புலம் பெயர்தல் பொருளியல், உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி எதிர்காலம் பற்றிய நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. இருப்பினும், “எத்தனையோ சிரமங்களும் துன்பங்களும் இருந்தாலும் மனிதர்கள் ஏன் புலம்பெயர்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு விடை தேடுகிறார்” க. சுபாஷிணி.
     
    தமிழ் மக்களின் தொடக்கக் கால வெளிநாடுகளுக்கான பயணங்கள் பெரும்பாலும் தன் விருப்பத்துடன் பொருள் திரட்டும் நோக்கில் அமைந்தவை. வணிகப் பயணங்கள்தான் என்றாலும் சமயம் பரப்புதல், தூது, போர் போன்ற காரணங்களுக்காகவும் தமிழர்களின் பயணங்கள் தொடர்ந்தன. இதற்குச் சான்றாகத் தமிழகத்தின் பண்டைய துறைமுக நகரங்கள் சிலவற்றிலும் அவற்றைச் சுற்றியும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் தமிழகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வணிகச் சூழலை விவரிக்கும் சான்றுகளை வெளிக்கொணர்ந்துள்ளதை நூல் சுட்டிக்காட்டுகிறது.
     
    பண்டைய தமிழ்நாட்டின் முக்கிய வணிகக் குழுக்களாக ஐயப்பொழில் ஐநூற்றுவர், திசையாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார் இருந்துள்ளதை அறிகிறோம். தமிழர்களின் பல தடயங்கள் அயல்நாடுகளிலும் கிடைத்துள்ளமை தமிழர்களின் வணிகப் பரவலை உறுதிப்படுத்தும் சான்றுகளாகின்றன. இவை வரலாறு நெடுகிலும் பல காலகட்டங்களைச் சார்ந்தவை. இந்திய-ஐரோப்பியக் கடல்வழிப் பாதையில், இடையில் உள்ள ஓமன் நாட்டில் கிடைத்த “ணந்தை கீரன்” என்று ‘தமிழி’ எழுத்தில் கிடைத்த மட்பாண்ட ஓடு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலகட்டத்தில் கிடைக்கும் ஒரு தொல்லியல் சான்று.
     
    பொ.ஆ.3 அல்லது 4ஆக இருக்கக்கூடிய, ‘பெரும் பத்தன் கல்’ (பெரிய பொற்கொல்லனின் கல் எனப் பொருள் தரும்) கல்வெட்டு ஒன்று தென் தாய்லாந்தில் கிடைத்துள்ளது. அதன் தகுவாபா பகுதியில் கிடைத்த பொ.ஆ. 8-9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு மூன்றாம் நந்திவர்மனின் அரசு அதிகாரி மணிக்கிராமத்தார் வணிகக் குழுவினரின் பயன்பாட்டிற்காக ஒரு குளத்தை அப்பகுதியில் வெட்டியதாகக் கூறுகிறது.
     
    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் லாபூ தோவா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொ.ஆ. 11ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கல்வெட்டு திசை ஆயிரத்து ஐநூற்றுவர் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகிறது. நியூசிலாந்து நாட்டின் மேற்குக் கரையோரம் கிடைத்த வெண்கல மணி ஒன்றின் உடைந்த பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும் ‘முகைய்யதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி’ என்ற சொற்கள் இன்னொரு சான்று. இது பொ.ஆ. 18ஆம் நூற்றாண்டின் பழவேற்காட்டிலிருந்து இந்தோனேசியா வழியாக நியூகினியா சென்று பின்னர் நியூசிலாந்து அருகிலுள்ள சாலமன் தீவுகளுக்கும் சென்ற முகைதீன் பக்ஸ் என்பவரின் கப்பலின் மணி என்று இந்த நூலின் வழி அறிகிறோம்.
     
    முற்காலத்தில், வணிகம் தவிர்த்துச் சமயம் தொடர்பான பணிகளுக்காகவும் தமிழர்கள் அயல்நாடுகளுக்குச் சென்றனர். ஆறாம் நூற்றாண்டில் சீனா சென்று புத்த மதம் பரப்பியவர் பல்லவ இளவரசன் போதி தர்மர் என்ற புத்த வர்மன். அசோகர் காலத்தில் தொடங்கப்பட்ட பௌத்த சமய விரிவாக்கம் தமிழ் நிலப்பகுதியிலிருந்து வணிகர்களின் உதவியால் கிழக்காசிய, தூரக்கிழக்காசிய நாடுகளுக்கும் விரிவு கண்டது. இது தமிழ் பௌத்தப் பிக்குகளின் நாடுகடந்த பயணங்களுக்கும் காரணமாகியது.
     
    இப்பயணங்கள் பெரும்பாலும் கடல்வழிப் பயணங்களாகவும் நிலவழிப் பயணங்களாகவும் அமைந்தன. போதி தர்மர்போல தென்னிந்தியாவிலிருந்து சீனாவுக்குப் பயணம் செய்த மற்றொரு தென்னிந்தியப் பௌத்த பிக்கு வஜ்ரபோதி. இவர் ஒரு பெர்ஷிய வணிகக் கப்பலில் பயணம்செய்து ஸ்ரீவிஜயப் பேரரசின் துறைமுக நகரம் ஒன்றிற்கு பொ.ஆ. 719இல் வந்துசேர்ந்தார். அதன் பின்னர் அக்கப்பல் சீனாவின் குவான்சோவ் நகருக்கு வந்தபோது அதே கப்பலில் பிக்கு வஜ்ரபோதியும் பயணம்செய்து சீனா வந்துசேர்ந்தார் என்ற அறியப்படாத தகவலையும் பெற முடிகிறது.
     
    கிறிஸ்துவப் பணிகளில் ஐரோப்பியரோடு உள்ளூர்த் தமிழ் மக்களும் உதவியாளர்களாக ஐரோப்பாவின் பல நாடுகளுக்குச் சென்ற நிகழ்வுகளும் இக்காலகட்டங்களில் அடங்கும்.
     
    வரலாறு முழுவதும் பல நூற்றாண்டுகளாகத் தமிழ் மக்கள் பயணம் செல்வதும் புதிய குடியிருப்புக்களை அமைத்துக்கொண்டு தங்குவதும் நிகழ்ந்தாலும்கூட பொ.ஆ. 14ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தமிழ் மக்களின் புலப்பெயர்வு அதிகரித்தது. அத்துடன் அவை தமிழர்கள் வணிகம் மூலம் செல்வம் திரட்டச் செல்லாமல் வாழ்வாதாரம் தேடி விரும்பியோ அல்லது விரும்பாமலோ செய்யும் பயணங்களாகவும் அமைந்தன.
     
    துருக்கியின் ஒட்டமான் பேரரசின் உச்சக்கட்ட விரிவாக்கம் காரணமாக 14ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு தமிழகத்துடன் ஐரோப்பிய நாடுகள் கொண்டிருந்த வணிகத் தொடர்பில் மாற்றம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வடக்கு ஆப்ரிக்கா என்று விரிந்து பரவிவிட்ட ஒட்டாமன் பேரரசு வணிக வரிகளை உயர்த்தியதால் மாற்று வணிக வழி தேடி ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகள் இந்தியாவிற்குப் புதிய கடல்வழி தேடியதும், வாஸ்கோ-ட-காமா 16ஆம் நூற்றாண்டில் கேரளாவின் கோழிக்கோட்டில் புதிய வழிமூலம் வந்து கரை இறங்கியதும் உலக வணிக வரலாற்றில் புதிய திருப்புமுனையாகும்.
     
    போர்த்துக்கீசியரைத் தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவுடன் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கடற்கரையோர நகரங்களில் தங்களின் வணிக மையங்களை உருவாக்கிக்கொண்டன.
     
    ஐரோப்பியரின் விரிவாக்கத்தை விளக்கும் வரலாற்று ஆசிரியர்கள் அவர்களின் குறிக்கோள் “God, Gold, and Glory” என்று இருந்ததாக விளக்குவார்கள். வெடிமருந்து கொண்ட புதிய தொழில்நுட்பப் போர்க்கருவிகளும், பலமற்றுப் பிரிந்துகிடந்த உள்நாடுகளின் அரசுகளும் மற்ற நாடுகளில் ஐரோப்பியர் வணிகத் தொழிலையும் சமய வளர்ச்சியையும் விரிவாக்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கின. உலக நாடுகளில் தாங்கள் கால்பதித்த இடங்களிலெல்லாம் உழைப்பாளர் தேவைகளுக்கு இந்தியாவின் உள்ளூர் மக்களை முதலில் அடிமைகளாகவும்,
     
    அடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் ஒப்பந்த உழைப்பாளர்களாகவும் அழைத்துச் சென்றனர் ஐரோப்பியர். அவ்வாறு புலம் பெயர்ந்த இடங்கள் எந்த ஐரோப்பிய நாட்டின் வணிகக் கட்டுப்பாட்டில் இருந்ததோ (இங்கிலாந்தின் பிரித்தானிய காமன்வெல்த் நாடுகள்போல) அந்தந்த நாடுகளாக அமைந்தன. அவை உழைப்பாளர் தாங்களே தேர்வுசெய்து சென்ற நாடுகள் அல்ல. இவ்வாறாக, தமிழர்கள் புலம் பெயர நேரிட்ட காரணம் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றிய வறட்சியும் பஞ்சங்களுமாகும். தமிழ் மக்கள் பெருமளவில் அயல் நாடுகளில் பரவுவதற்கு அவர்களின் வறுமையான சூழ்நிலை காரணமாகியது.
     
    பஞ்சம் காரணமாக அடிமைகளாகத் தங்களை விற்றுக்கொண்டவர்கள் 17ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினத்திலிருந்து மணிலாவுக்கு அனுப்பப்பட்டுப் போர்த்துக்கீசியர்களின் வணிகச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர். அவ்வாறே மணிலாவில் ஸ்பானியர் வசம் சென்ற அடிமைகளைப் பற்றி அவர்களின் ஆவணங்களும் காட்டுகின்றன. இந்தோனேசியா, மலாக்கா, மெக்சிகோ, இலங்கை, ஆப்பிரிக்கா, மொரீஷியஸ், ரீ யூனியன், டென்மார்க் என மேலும் பல நாடுகளுக்குத் தமிழர்கள் அடிமைகளாகச் சென்றனர். ஸ்பெயின், போர்த்துகல், டேனிஷ், டச்சு, பிரஞ்சு, பிரிட்டிஷ் என அனைத்து ஐரோப்பிய வணிக நிறுவனங்களும் தமிழ் அடிமைகளை விற்பதில் ஈடுபட்டிருந்ததை ஆவணங்கள் வழி அறியும்போது தலைக்குனிவும் மனக்கலக்கமும் ஏற்படுகின்றன.
     
    குறிப்பாக 1834ஆம் ஆண்டு முற்றிலும் தடைசெய்யப்படும்வரை அடிமை வணிகம் தமிழ் மக்களின் வலுக்கட்டாயமான புலப்பெயர்வுக்கு ஒரு காரணமாகியது. ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தமிழ் மக்கள் புலம்பெயர்வதற்கு முன்னர் பெருமளவில் தமிழ் மக்களின் புலப்பெயர்வு அடிமை வணிகத்தின் வழிதான் நடந்தேறியது.
    ‘துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
    மீட்டும் உரையாயோ’ என்று பிஜித் தீவின் கரும்புத் தோட்டங்களில் பணிபுரியச் சென்ற இந்தியப் பெண் தொழிலாளர்கள் சென்ற நூற்றாண்டில் எதிர்கொண்ட அல்லல் நிறைந்த வாழ்வின் அவலத்தை “பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள்” என்ற கவிதையாக வடித்து மனம் குமுறினார் பாரதி.
     
    அந்தத் ‘துன்பக்கேணி’ என்ற சொல்லையே தன் சிறுகதைக்கும் தலைப்பாகத் தேர்வு செய்து, பஞ்சம் பிழைக்க இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாகப் பணியேற்று, கோழிக் கூடுகள் போன்று இருந்த காரைக் குடிசைகளில் வாழ்ந்து, உழைத்து ஓடாகிப்போன தமிழர்களின் துன்பநிலைமையைச் சிறுகதையாக வடித்தார் புதுமைப்பித்தன். அகிலனின் ‘பால்மரக் காட்டினிலே’ என்ற புதினம் மலேசிய இரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் துயர வாழ்க்கையையும் அவர்களின் போராட்டங்களையும் சித்திரித்தது.
     
    பஞ்சம் பிழைக்க அடிமைகளாக நெரிசலான அறையில் கப்பலில் அடைக்கப்பட்டவர்களும், பல மைல் தூரம் கால்நடையாகச் சென்று, சரியான உணவும் ஊதியமும் இல்லாமல் துன்பத்தில் உழன்றவர்களும் உண்டு. ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கரும்பு, தேயிலை, காப்பி, ரப்பர், செம்பனைத் தோட்டங்களில் பணிபுரியச் சென்றவர்களும், ஆப்ரிக்காவிற்குச் சுரங்கத் தொழிலாளர்களாகச் சென்றவர்களும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளானவர்களே.
     
    க. சுபாஷிணி ஒரு மலேசியத் தமிழர். மலேசியாவில் பிறந்து, அங்கும் ஆஸ்திரேலியாவிலும் ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் கல்வி கற்று ஜெர்மனியில் கணினித் துறையில் பணியாற்றி வருகிறார். பணி நிமித்தம் பல்வேறு நாடுகளுக்குச் செல்லவும், அங்கு வாழும் தமிழர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பண்பாட்டையும் புலம்பெயர் வரலாற்றையும் அறியவும் வாய்ப்புக் கொண்டிருந்தவர். கடந்த 15 ஆண்டு காலப் புலம்பெயர் தமிழர்கள் குறித்துச் செய்த ஆய்வுகளையும் சேகரித்த குறிப்புகளையும் நூல் வடிவில் வெளிக்கொணர்வதின் இன்றியமையாத முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் இந்த நூலை விரிவாக எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்களும் அரசும் செய்ய வேண்டிய பணிகளைத் தனி ஒருவராகத் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் செம்மையாகப் பயன்படுத்திச் செய்துள்ளது பாராட்டப்பட வேண்டிய முயற்சி.
     
    தேமொழி: புலம்பெயர் தமிழர், சான்ஃப்ரான்சிஸ்கோ, அமெரிக்கா
    May be an image of 2 people, map and text
     
     
     
     
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.