Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9545
  • Joined

  • Days Won

    16

யாயினி last won the day on May 11

யாயினி had the most liked content!

About யாயினி

  • Birthday 03/30/1868

Contact Methods

  • AIM
    ----------------------------------------
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Female

Recent Profile Visitors

62191 profile views

யாயினி's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

3.1k

Reputation

Single Status Update

See all updates by யாயினி

  1. தொழிலாளர் தினக் குறிப்புகள் - நோர்வே
    ...................
    அதிகநேரம் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலை, குறைந்த அளவு ஊதியம், பெண்களின் பங்களிப்பு மறுப்புப் போன்ற சமூகப் பின்னடைவுகளை முன்னொரு காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்த நாடாகவே நோர்வே இருந்தது. சில தசாப்தங்கள் முன்புவரை நோர்வே நாட்டின் நிலை வேறு, இன்றைய நிலை வேறு. இன்று, வாழ்க்கைத் தரத்தில் உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக நோர்வே முதலிடத்தில் இருந்து வருகிறது.
    நோர்வே நாட்டின் இன்றைய வளர்ச்சியின் அடைவுகளுக்கான பாதையில், தொழிற்சங்கங்களின் உருவாக்கம், கூட்டுணர்வு, வேலைநிறுத்தப் போராட்ட முன்னெடுப்புகள் என்பனவற்றின் பங்களிப்புகள் முக்கியமானவை என்பது அறிஞர்களின் கருத்து.
     

    8 மணிநேர வேலை – போராட்டம் – ஊதிய உடன்படிக்கை

     
    adbfebdb-9a6f-4aed-bfc6-0a25e9ba0cdf.jpe தீப்பெட்டித் தொழிற்சாலை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் (1889

     

    வேலைநிறுத்தம் செய்வது பெருமிதத்திற்குரியது.

    • ஜனநாயகம் மட்டுமல்ல, நடைமுறையில் வாழ்வதற்கு உலகின் சிறந்த நாடாக நோர்வே இருப்பதற்கான காரணங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் முதன்மையானதாகும்.

    அதிகநேரம் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலை, குறைந்த அளவு ஊதியம், பெ¯ண்களின் பங்களிப்பு மறுப்புப் போன்ற சமூகப் பின்னடைவுகளை முன்னொரு காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்த நாடாகவே நோர்வே இருந்தது. சில தசாப்தங்கள் முன்புவரை நோர்வே நாட்டின் நிலை வேறு, இன்றைய நிலை வேறு. இன்று, வாழ்க்கைத் தரத்தில் உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக நோர்வே முதலிடத்தில் இருந்து வருகிறது.

    நோர்வே நாட்டின் இன்றைய வளர்ச்சியின் அடைவுகளுக்கான பாதையில், தொழிற்சங்கங்களின் உருவாக்கம், கூட்டுணர்வு, வேலைநிறுத்தப் போராட்ட முன்னெடுப்புகள் என்பனவற்றின் பங்களிப்புகள் முக்கியமானவை என்பது அறிஞர்களின் கருத்து.

    தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் உள்ள அதிகார இடைவெளியை சமநிலையாக்குவதையும், குறைந்த அளவிலான ஏற்றத்தாழ்வுகளைக் நடைமுறைப்படுத்துவதையும் வேலைநிறுத்தப் போராட்டங்களே இங்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றன. இதனால் வேலைநிறுத்த முன்னெடுப்புகள் தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இம் முன்னெடுப்புகளின் பின்னால் தொழிச்சங்கங்களின் கூட்டுணர்வும், கூட்டிணைவும், தொடர்ச்சியும் இருக்கின்றன.

     

    நோர்வேயின் முதல் வேலைநிறுத்தப் போராட்டம்

    • பெண்களும் தீப்பெட்டித் தொழிற்சாலையும்

    1875 ஆம் ஆண்டு 134 தொழிலாளர்களுடன் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்று நோர்வேயில் கிறான்வொல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இத்தீப்பெட்டிச் தொழிற்சாலை பெண்களையும், குழந்தைகளையும் பிரதான தொழிலாளர்களாகக் கொண்டிருந்தது. 500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தீப்பெட்டித் தொழிற்சாலையைச் சார்ந்திருந்தன. இவர்களில் 38 பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் குழந்தைத் தொழிலாளர்களை அங்கீகரித்து வந்த நாடாகவம் நோர்வே இருந்தது. 1890ஆம் ஆண்டில் க்ரோன்வொல்லில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 510 ஆக உயர்ந்தது. இவர்களில் 55 பேர் 12 முதல் 14 வயதுக்கு இடைப்பட்டவர்கள், 16 பேர் 12 வயதுக்குட்பட்டவர்கள்.

    குறைந்த ஊதியமும், மோசமான சுகாதார நிலைமையும் உள்ள தொழிற்சாலையாகவே இது செயற்பட்டது. பணியாளர்களின் வேலைநேரம் ஒரு நாளைக்கு 13 – 16 மணிநேரங்களாக இருந்தது. மற்றும் தீப்பெட்டி செய்யவதற்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துத் துகள்கள் (பொஸ்பரஸ் – The phosphorus) நச்சுத்தன்மை கொண்டதாகவும், உடலுக்குப் பாரிய தீங்குகளை விளைவிப்பதாகவும் இருந்தன. தொழிற்சாலையில் சவர்க்காரம் மற்றும் தண்ணீர் போன்ற சுகாதார வசதிகள் எதுவும் இருக்கவில்லை. பல தொழிலாளர்கள் – ஆண்கள் மற்றும் பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் தீங்கு விளைவிக்கும் -பொஸ்பரஸால்- (The phosphorus) நோயினால் தாக்கப்பட்டனர்.

     

    7045014.jpeg?w=1024 பாஸ்பரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோற்றம்

    ..

    ‘பொஸ்பரஸ்’ குச்சிகளைக் கொண்டு வேலை செய்த கைகளினாலேயே தமது மதிய உணவை உட்கொண்டதால் நோயின் தாக்கம் பலமாக ஏற்பட்டது. பொஸ்பரஸ் துகள்கள், கைகள் மற்றும் உணவு வழியாக பற்களின் துளைகளுக்குட் சென்று அங்கிருந்து தாடை எலும்பை அடைந்தன. இதனாற் தாடை எலும்புகள் சிதைந்தன. பற்கள் கழற்ற வேண்டிய நிலைக்கு பல தொழிலாளர்கள் ஆளாகினர். பலருக்குத் தாடை எலும்பின் பாகங்கள் வெட்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பாதிமுகங்கள் வெட்டப்பட்ட நிலை பலருக்கும் ஏற்பட்டது. ஆண்களுக்குப் பெண்களைக் காட்டிலும் அதிக அளவு ஊதியம் வழங்கப்பட்டது. அத்துடன் ஆண்கள் அதிகமாக நீராவி சார்ந்த பிரிவில் வேலைசெய்ததால் அவர்களுக்கு நோய்கள் சார்ந்து பாரிய சேதம் ஏற்படவில்லை.

    ஏற்கனவே மிகக் குறைந்த ஊதியத்தில் வேலைபுரிந்த பெண்களின் ஊதியம் மேலும் 20 சதவீதம் குறைக்கப்படும் என்று தொழிற்சாலை உரிமையாளர்கள் 1889ல் அறித்தனர். இதன் எதிரொலியாகப் பெண்கள் பணியை நிறுத்திப் போராட்டத்தில் இறங்கினர். 23.ஒக்டோபர் 1889 அன்று 372 பெண் தொழிலாளர்களுடன் நோர்வேயில் முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

    வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஆரம்பக்கட்ட விளைவுகள்

    நோர்வே தீப்பெட்டித் தொழிச்சாலைப் பெண்களின் போராட்டத்திற்கு சில காலங்களுக்கு முன் இலண்டனில் வேலைநிறுத்தப் போராட்டங்கள் தொடங்கப்பட்டிருந்தன. இலண்டனில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தம் பற்றி நோர்வேயின் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டன. கிழக்கு இலண்டனின் பெண்தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை ஒழுங்கமைக்கத் தொடங்கினர் என்ற செய்திகளும் பரவின. இலண்டனில் எழுந்த வேலைநிறுத்த போராட்டங்கள் பற்றிய செய்திகளால் நோர்வே நாட்டுப் பெண்களும் உத்வேகம் பெற்றனர்.

    1889ல் – போராட்டத்திற் பங்குகொண்ட பெண்கள் நிறுவன ரீதியாகத் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்ளவில்லை. பெண்களுக்குப் பின்னால் எந்த அமைப்பும் இருக்கவில்லை. வேலைநிறுத்தக் கொடுப்பனவு நிதியும் இருக்கவில்லை. வருமான நட்டஈட்டுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையிலும், அவர்களுடைய மோசமான வேலைதளங்களிற்கு எதிராக வேலை செய்வதை நிறுத்தி நடவடிக்கை எடுக்கத்தொடங்கினர்.

    349dc748-38b8-43be-8ec3-261d2426f48c.jpe

     

     

    நோர்வே நாட்டின் பெண்களும், சிறுமியரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தொடங்கியதும், தொழிற்சாலை உரிமையாளர்கள் பிற கிராமங்களில் இருந்து புதிய தொழிலாளர்களைக் கொண்டுவந்தனர். பிற தொழிலாளர்களிடம் ஊதிய-பேரம் பேசப்பட்டது. மிகக்குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யச் சம்மதித்தவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டனர். இதன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நிலை கேள்விக்குள்ளானது.

    தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் ஆண்களும் பணிபுரிந்தனர் எனினும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிக ஊதியத்தின் காரணமாக ஆண்கள் யாரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற் கலந்துகொள்ளவில்லை. மேலும் பெண்களுக்கு ஆண் தொழிலாளர்களிடமிருந்தோ வீட்டில் இருந்த ஆண்களிடமிருந்தோ எவ்வித உதவிகளும் கிட்டவில்லை. அவர்கள் பெண்களைப் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குப் போகுமாறு வலியுறித்தியபடியே இருந்தனர்.

    தொழிற்சங்கமோ வேலைநிறுத்தத் தலைமையோ இல்லாமல், முழு வேலைநிறுத்தமும் விரைவிற் கைவிடப்படும் அபாயத்தில் இருந்தது. பெண்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கப் பணிகளில் அனுபவம் இருக்கவில்லை. மேலும் அவர்களே மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த காலகட்டம் அது. தாமாகவே எழுந்து நின்று பிரச்சாரத்தைத் தங்கள் சொந்த முயற்சியினால் மட்டுமே முன்னெடுத்துச் செல்லவேண்டியிருந்தது.

    ஒக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட போராட்டம் டிசம்பர் மாதம் வரை நீடித்தது. வேலைநிறுத்தம் செய்த பெண்களுக்கு எவ்வித நியாயங்களும் வழங்கப்படமலேயே போராட்டம் முடிவுக்கு வந்தது. எனினும், மக்களிடம் தொழிலாளரின் கூட்டிணைவின் முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டது. தொழிலாளர் இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. போராட்டம் காரணமாக தொழிலாளர் பாதுகாப்புக் குறித்த மாற்றங்களும், சிறந்த சுகாரதார நிiமைகளும் தொழிற்சாலைகளிற் கொண்டுவரப்பட்டன. வேலை நிறுத்தத்தை ஒரு போராட்ட வழிமுறையாக மாற்றுவதற்கு இப்பெண்களின் போராட்டம் பெரிதும் வழிவகுத்து. இது போராட்டக்கார்களின் முதற்கட்ட வெற்றியாக அமைந்ததெனினும் எட்டவேண்டிய தூரம் நோக்கிய பயணம் மிக நீண்டதாகவே இருந்தது.

    கவிஞரும், சமூகப் போராளியுமான பியோன்;ஸ்தியான பியோன்சன் (Bjørstjerne Bjønson) அவர்கள் 1889ஆம் ஆண்டு பத்திரிக்கையில் எழுத வாசகம்.

    ”தீப்பெட்டிபெண்களின் கைகள்
    இப்போது சாதுவாகத்தான் தட்டுகின்றன
    அடுத்தமுறை அவை
    முஸ்டிகளைப்போல இருக்கும்
    அதற்கும் அடுத்தமுறை
    சாட்டைகளை கையில் வைத்திருக்கும்
    இந்தப்பிடிகளை நாம் விட்டுவிடுவதற்கில்லை”

    Dagbladet 22. november 1889

    «நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தது போன்ற உணர்வு» என்று 1889ல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். பெண்களின் தீப்பெட்டித் தொழிற்சாலைப் பெண்களின் வேலைநிறுத்தம் நோர்வே நாட்டின் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.

     

    வேலைநிறுத்தப் போராட்ட இயக்கம்

     

    1501_b_1.jpeg?w=1024 “வேலைநிறுத்தம்” Theodor Kittelsen, 1879.
    தொழிற்சங்க அமைப்புத் தொழிலாளர்கள் தமது முதலாளிகளிடம் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவிக்கும் காட்சி. தொப்பிகளைக் கழற்றி கையில் வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

    ..

    சோஷலிஸப் பத்திரிகையான சமூக ஜனநாயக நாளிதழின் (ளுழஉயைட னுநஅழஉசயஉல) ஆசிரியர் கார்ல் ஜெப்சென் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கான இயக்கத்தின் தேவையை உணர்ந்தவராகக் காணப்பட்டார். ஆவர்களுக்கு உதவவும் முன் வந்தார். ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் மூன்று பெண்களைக் கொண்ட ஒரு போராட்டக் குழு அமைக்கப்பட்டது.

    நாளொன்றுக்கு 14 மணி நேரத்திற்கு மேல் பணி செய்யும் வழக்கம், ஊதியக் குறைப்பு மற்றும் அபராத முறை அனைத்தையும் நீக்கம் செய்தல், தீப்பெட்டித் தொழிற்சாலையின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை ஆலை உரிமையாளர்களிடம் போராட்டக்குழு முன்வைத்தது.

    தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் 14இல் இருந்து 16 மணிநேரம் பணி கொடுக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலையில் ஊதியம் குறைவாக இருந்தாலும், குடும்பங்கள் இவ்வேலையை நம்பியே இருந்தன. பெண்கள் நீண்ட நாட்களாக வருமானம் இல்லாமல் இருக்க முடியவில்லை. வேலைநிறுத்தக் கொடுப்பனவு இல்லாமையினாற் பெண்கள் விரைவில் வேலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கார்ல் ஜெப்சென் அறிந்துகொண்டார். எனவே வேலைநிறுத்தப் பங்களிப்புகளுக்குப் பணம் வசூலிக்க ஜெப்சென் முன்முயற்சி எடுத்தார்.

     

    வேலைநிறுத்தக் கொடுப்பனவு சார்ந்து பொதுமக்களின் மனசாட்சியுடன் பேசுவது முக்கியமானதாக அவருக்குப் பட்டதால் ஒக்டோபர் 27 அன்று அவரது சொந்தப் பத்திரிகையான சோஷல் டெமோக்ரட்டனில், “தொழிளாலர் சங்கம் இல்லாமல் மக்களாற் தங்கள் நிலையை மேம்படுத்த முடியாது. ஒரு சங்கத்தின் மூலம் மட்டுமே அவர்கள் எதையாவது சாதிக்கும் சக்தியையும் வலிமையையும் பெற்றிட முடியும். வேலைநிறுத்தப் போராட்டத்திற்கும் அமைப்புக்கும் பங்களிப்பு வழங்குங்கள்” என்று பத்திரிக்கைகள் மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    scale.jpeg?w=560

    இதுவரை பெண்களுக்கான தொழிற்சங்கம் முறையாக உருவாக்கப்படாத நிலையில், கார்ல் ஜெப்சென் தலைமையிலான பெண்கள் குழு தொழிற்சங்கத்தை உருவாக்க கடுமையாகப் போராடியதன் காரணமாக தொழில்முறை இயக்கம் ஒன்று நோர்வேயில் 28 ஒக்டோபர் மாதம் நிறுவப்பட்டது. ஆண்கள் அடுத்த நாளே (29 ஒக்டோபர்) தமக்கான சொந்த தொழிற்சங்கத்தை உருவாக்கினர்.

    ஆண்கள் தொழிற்சங்கத்தை நிறுவியநாளே பின்னர் தொழிற்சங்கத்தின் அடித்தள நாளாகக் கருதப்பட்டதாக ஐம்பதாம் தொழிற்சங்க அறிக்கை தெரிவிக்கிறது. முதல் பல ஆண்டுகளாக தொழிற்சங்கத் தலைவர்களாக பெண்களின் பெயர்களை மட்டுமே கொண்டிருந்த தலைவர்கள் பட்டியல், 1913ல் இரண்டு சங்கங்களும் இணைந்த பிறகு, ஒரு பெண் தலைவர்களின் பெயர் கூட பட்டியலில் இல்லை.

     

    «பெரு-வேலைநிறுத்தம்”

    879ff845-9e8a-4689-aec1-bebd54e7a4fd.jpe சுரங்கத் தொழிலாளர்கள்

    தொழிலாளர் வேலைநிறுத்தம் ஏற்படுத்திய தாக்கங்களின் காரணமாக, பெரும்பாலான நாடுகளில், வேலைநிறுத்தங்கள் விரைவாக சட்டவிரோதமாக்கப்பட்டன. தொழிற்புரட்சிக் காலத்தில் மேலும் வேலைநிறுத்தங்கள் பரவலாக முன்னெடுக்கப்படத் தொடங்கின. இதன் காரணமாக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல மேற்கத்தேய நாடுகள் பகுதி நேர வேலைநிறுத்தங்களைச் சட்டப்பூர்வமாக்கின.

    அன்றைய காலத்தில் மனித உழைப்பு இன்றியமையாத ஒன்றாக இருந்தது. தொழிற்சாலைகளுக்கும் சுரங்கங்களுக்கும் அதிக அளவு தொழிலாளர்கள் தேவைப்பட்ட காலம் அது. அக்காலத்தில் தொழிற்சாலை உரிமையாளர்கள் அதிக அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருந்தனர்.

    நோர்வேயின் பெண்களினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு வேலைநிறுத்தம் 1921ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்-வேலைநிறுத்தம், 1898இல், ராணா நகரில் 100 சுரங்கத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

    நோர்வேயில் சுரங்கத் தொழிலுக்கு நீண்ட வரலாறு உண்டு. சுரங்க வேலைகள் 1623இல் தொடங்கப்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட புதிய சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    தமது கைகளினாலேயே பாறைகளை உடைக்க வேண்டிய கட்டாயம் ஆரோக்கியமற்ற வேலைசு; சூழல்கள்;, சுரங்கங்களுக்குள் காற்று இல்லாமை, அருவருக்;கத்தக்க பாரபட்ச நடவடிக்கைகள் மற்றும் அகங்காரத்துடன் செயற்பட்ட நிர்வாகம் போன்ற நெருக்கடிகள் நிலவின. இவைகளின் மீதான அதிருப்திகளின் விளைவாக 1898ஆம் ஆண்டின் கோடை காலத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் வெடித்தது.

    முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் தொடங்கிய இவவேலைநிறுத்தம் «பெரு-வேலைநிறுத்தம்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தம் பின்னால் ஒரு தொழிற்சங்கத்தின் பலத்துடன் இயங்கிய நோர்வேயின் முதற் போராட்டமான இது நான்கு மாதங்கள் நீடித்தது. பின்னர் அது கைவிடப்பட்டது. இவ்விரு போராட்டங்களையும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பல வேலைநிறுத்தப் போராட்டங்கள், பல துறைகளிலும் நோர்வேயில் எழுச்சிபெற்றன.

     

    முக்கியமாக நாடகக்கூழுக்கள், கலைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    மே 1 – தொழிலாளர் தினம்

    1.mai-tog-vp.jpg?w=1024 மே 1 – கவனயீர்ப்புப் பேரணி

    தொழிலாளர் இயக்கத்தின் ஆரம்ப நாட்களில், முதன்மையாக வேலை நேரத்திற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. 1856 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் கட்டுமானத் தொழிலாளர்கள் குழு – 8 மணிநேர உழைப்பு, 8 மணிநேர ஓயு;வு, 8 மணிநேர உறக்கம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து மே 1, 1886 அன்று, 2 இலட்சம் அமெரிக்கத் தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலைக்காக போராட்டம் செய்தனர். வேலைநிறுத்தப் போராட்டம் பல நாட்கள் நீடித்தது. இப்போராட்டம், போராட்டக்காரர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல்களும் குண்டுத் தாக்குதல்களுடனும் முடிவடைந்தது. 1889 இல் பாரிஸில் நடந்த தொழிற்சங்க மாநாட்டில் மே முதல் தேதியை சர்வதேச வேலைநிறத்தப் போராட்ட நாளாக ஆக்க முடிவு செய்யப்பட்டது.

    மே 1, 1889 அன்று, பாரிஸ் மாநாட்டினைத் தொடர்ந்து, நோர்வே, ஒஸ்லோவில் ஏறத்தாழ 4,000 தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர். நோர்வேயின் பிற நகரங்களிலும் பெரும் ஆதரவுடன் உரிமைக்கான ஆர்ப்பாட்டப் பேரணிகள் தொடர்ந்தன.

    நோர்வேயிற் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் 1892 ஆம் ஆண்டு முதன்முறையாக நடைமுறைக்கு வந்தது. முதன்மையாக, இது தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழில்களில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. காலப்போக்கிற் தொழில் உரிமை, தொழிற் சூழல், பாதுகாப்பு, நேரவிதிகள் என்று தொழிலாளர் இயக்கம் படிப்படியாக தன் கோரிக்கைகளில் வெற்றி பெற்றது.

    1956 ஆம் ஆண்டின் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் வேலை நேரத்தை ஒரு தொழிலாளியின் சாதாரண வேலை நேரம் ஒரு நாளைக்கு 9 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் வாரத்திற்கு 40 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் விதித்தது.

    20 ஆம் நூற்றாண்டு முழுவதும், வேலை நேரத்தைக் குறைப்பது தொழிலாளர் இயக்கத்தின் மிக முக்கியமான செயற்பாடுகளில் ஒன்றாக இருந்தது. மேலும் மே 1 கோரிக்கையை முன்னெடுப்பதற்கான அடையாள நாளாகவும் இருந்துவருகிறது. பல நீண்ட போராட்டங்களின் பின் சட்டப்பூர்வ 8 மணிநேர வேலை போன்ற குறைந்தபட்ச உரிமைகள் கிடைக்கப்பெற்ற நாளாக உலகம் முழுவதும் அடையாளப்படுத்தப்படுகின்றது.

    தமக்கான நியாயமான ஊதியம் மற்றும் எட்டுமணிநேரப் பணி போன்றவற்றைப் பெற்றுத் தந்த தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்;டம், சமூகத்தை வகைப்படுத்தும் முறைகளையும், உத்திகளையும் தந்து சென்றுள்ளன.

    பெரும்பான்மை நோர்வே மக்கள் தமது தொழிற்சாலைகளில் ஏற்;பட்ட முரண்பாடுகளுக்குத் தாமே தீர்வுகண்டுள்ளனர். இன்று முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அரசாங்கங்களின் கொள்கைகளை மாற்றுவதற்கும், அவற்றை அகற்றுவதற்கும் கூட பயன்படுத்தப்படுகின்றன.

    சமூகம் இந்த நிலைமையை அடைவதற்குப் பல துணிச்சலான பெண்களும் ஆண்களும் முன்னோடிகளாகப் போராடத்தை நடாத்திச் சென்றனர். ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்க இயக்கத்தின் மதிப்பையும் அதன் மூலம் தாம் பெற்ற வாழ்க்கைத் தரத்தினையும் நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளனர்.

    உழைக்கும் மக்கள் ஒன்றுகூடி தொழிற்சங்கங்களாகக் கூட்டிணைந்து வேலை செய்தால் உழைப்பும் வாழ்வும் மேம்படும் என்ற கூட்டிணைவில், வருடாவருடம் மே மாதத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துகிறன்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • கவிதா லட்சுமி
     
     
     
    1. யாயினி

      யாயினி

      காற்றில் கலந்தது கானக்குயில் - உமா ரமணன்
       
      எண்பது, தொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மிக பிரபலமாக வலம் வந்த அழகிய குரலுக்கு சொந்தக்காரர் உமா ரமணன். ஹிந்தியில் அறிமுகம் அமைந்தாலும், 1977ல் கிருஷ்ண லீலை படத்தில் எஸ்.வி.வெங்கராமன் இசையில் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து திரை வாய்ப்புகள் அமையாமல் தனது கணவர் ஏ.வி.ரமணனின் ம்யூசியானோ குழுவில் மேடைப் பாடகியாக தொடர்ந்து கொண்டிருந்தார். இந்த காலகட்டத்தில் 1980 ல் தனது கணவர் ஏ.வி.ரமணன் இசையமைத்த ‘நீரோட்டம்’ திரைப்படத்தில் 'ஆசையிருக்கு நெஞ்சுக்குள்ளே' பாடலை பாடியும் திரையிசைக்குள் நின்றுவிட ஒரு முயற்சியை மேற்கொண்டிருந்தார்.
       
      இந்த நீரோட்டத்தின் மூலம் அவர் எடுத்த முயற்சியானது, மற்றொரு நீரோட்டத்தின் மூலம் பிரபல பாடகி என்கிற அந்தஸ்திற்கும் அவரை உயர்தியது. ’நிழல்கள்’ படத்தின் ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடலில், உமா ரமணனுக்கான தொடக்க வரிகளே ‘நீரோட்டம் போலோடும்’ என்பதாகத்தான் அமைந்திருக்கும். நிழல்கள் படத்திற்கு முன்பாகவே இளையராஜாவின் இசையில் உமா ரமணன் பாட ஆரம்பித்துவிட்டார் என்றாலும், உமா ரமணன் என்றொரு பாடகியையும் , தனித்துவமான அவரின் குரலையும் ரசிக பரப்பில் கொண்டு வந்து சேர்த்து , திரையிசை என்னும் பூங்கதவின் தாழினைத் திறந்தது இந்த நீரோட்டம்தான் என்றால் மிகையில்லை.
       
      உமா ரமணின் குரல் மிகவும் தனித்துவான ஒன்று. இவரின் குரலுக்கென்று சில விசேஷ குணங்கள் உண்டு. இன்ன இன்ன சூழல்களில் வருகிற பாடலுக்கு இந்த குரலை ஒலிக்கவிட்டால், அந்தக் குரலின் விசேஷ குணங்கள் இந்தப் பாடல்களுக்கு நியாயம் செய்யும் என ராஜா யோசித்து செய்தாரா அல்லது ரேண்டம் சாய்ஸாக உமா ரமணன் அமைந்து, இந்த பாடலுக்குள் வந்ததன் பின், ராஜாவின் இசைக்குறிப்புகளில் அவரின் குரலின் இந்த விசேஷ குணங்கள் அடையாளப்பட்டனவா என்கிற கேள்வி ஒன்றை எப்போது உண்டு செய்யும் இரண்டு பாடல்கள் உண்டு. 1981 ல் வெளியான ‘நண்டு’ படத்தின் ‘மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே’ மற்றும் ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தின் ‘ஆனந்தராகம் கேட்கும் காலம்’ ஆகிய இந்த இரண்டு பாடல்களே அவை.
       
      திரைப்பாடல்களில் சில சொற்கள் ரொம்பவே வசீகரமாகத் தெரியும். அதன் பின்னணியை கூர்ந்து நோக்கினால், மெட்டில் பொருந்தி போகிற பாங்கில் சில சொற்கள் அழகாகும் , வரிகளில் பொதிந்து கிடக்கும் பொருளால் சில சொற்கள் அழகாகும், சில சொற்கள் பாடுகிற குரலால் அழகேறி தெரியும். இன்னும் சில சொற்கள் வெறும் சொற்களாகவே ஈர்ப்பினை கொண்டவையாக இருப்பதும் உண்டு. உதாரணமாக ‘வெண்ணிலா’, ‘மழை’, ‘நேசம்’ , ‘குயில்’ இப்படி சில சொற்கள் ஒரு பாடலுக்குள் இட்டு நிரப்புதலுக்காக அமர்ந்தாலும் கூட, அந்த குறிப்பிட்ட சொற்கள் இடம்பெறும் வரிகள் மட்டும் நம்மையறியாமல் கவனத்தை ஈர்க்கும். அது போன்றதொரு சொல் ‘மஞ்சள்’. ’என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட’ பாடலில் ,
       
      எஸ்.பி.பியின் ’மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே’, ஜானகியின் ‘குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்’ , மலேசியாவின் ‘மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி’ , ‘ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா’ பாடலில், சித்ராவின் ‘நித்தம் நித்தம் நான் குளிக்கும் மஞ்சளுக்கு’ , ’செம்மீனே செம்மீனே’ பாடலில், ஜெயச்சந்திரனின் ‘கல்யாண மாலை கொண்டு வாரேன், மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்’ என இந்த மஞ்சளை உச்சரிக்கும் போது, பாடகர்களின் குரல்களுக்கு கூடுதல் வசீகரம் சேர்வதை கவனிக்க முடியும். குறிப்பாக, உச்சரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ராஜாவின் மெட்டமைப்பில் உருவாகும் மஞ்சளுக்கு தனி அழகு இருக்கும்.
       
      இப்படியான ஒரு மயக்கம் தரும் சொல்லினை பாடலின் தொடக்கமாகக் கொண்ட ‘மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே’ பாடலில், உமா ரமணனின் தனித்துவமான குரல், இந்த மஞ்சளுக்கு செய்த அழகு ராஜாவின் மஞ்சள் பாடல்களிலேயே உச்சமான ஒன்றாக சொல்லுவேன். அழுத்தம் திருத்தமாக, உமா ரமணன் ஆரம்பிக்கிற இடத்திலேயே புல்லரிப்பை தந்துவிடும் அழகு மஞ்சள் அது. இந்தப் பாடலில் ‘உன் வண்ணம்; உந்தன் எண்ணம்’ வரியினை உமா ரமணன் பாடுகிற முறையை கவனிச்சிருக்கீங்களா? ராஜாவின் கம்போசிஷன்தான், எந்த பாடகி பாடியிருந்தாலும் கவனிப்பை பெற்றிருக்கக் கூடிய மெட்டுத்தான். ஆனால் இந்த குறிப்பிட்ட இசைக்குறிப்பில், உமா ரமணனின் குரல் சிந்திச் சென்ற அழகு என்பது இந்தப் பாடலுக்காகவே செய்த குரல் போல இருக்கும்.
       
      ‘ஆனந்த ராகம்’ பாடலும் இந்தப் பாடலுக்கு நிகரான ஒன்றே. குறிப்பாக ,
      ”கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ
      பற்றிக்கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ”
      என்று சரணத்தில் பாடிக்கொண்டே சென்று, அப்படியே ‘ஆனந்த ராகம்’ என்று உச்சஸ்தாயிக்கு தாவுகிற இடத்தில் அவரின் பாடுகிற திறமையும் வியக்க வைக்கும், குரலும் மயக்கும்.ராஜாவின் இசையில் பாட ஆரம்பித்த தொடக்க காலத்திலேயே, இப்படி சவாலான இரண்டு அழகான தனிப்பாடல்கள் உமா ரமணனிற்கு அமைந்தது வரம்தான்.
       
      ராஜாவின் இசையிலான பாடல்களில் உமா ரமணனின் குரலில் வெளிப்பட்ட மற்றொரு அழகிய அம்சம், ஹம்மிங். உமா ரமணனின் ஹம்மிங் வித்தியாசமானவை. வழக்கமான பாணியில் இல்லாமல், சிறு சிறு துணுக்குகளாக இவரின் குரலை ஹம் செய்ய வைத்திருப்பார் ராஜா. ‘பொன்மானே கோபம் ஏனோ’ பாடலில் தொடக்கத்தில் வரும் ஹம்மிங்கே வித்தியாசமான ஒன்று, எனினும் பாடலின் இறுதியில் குட்டி குட்டியாக வெட்டி வெட்டி வரும் ஹம்மிங்கை, முழுக்க முழுக்க உமா ரமணனின் ஸ்பெஷல் என்றே சொல்லலாம். அவரின் குரலை மனதில் இருத்தி, ராஜா செய்த இசைக்குறிப்பு என்றே தோன்றும். அந்த அளவிற்கான விநோத முனகல் அது. இதே போன்றதொரு அழகு துணுக்குதான் ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடலின் இரண்டாவது சரணத்தில் ‘திருத்தேகம், எனக்காகும்..’ என்று தீபன் சக்கரவர்த்தி பாடும் போது, ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் உமா ரமணனின் குரலில் ’ம்ம்ம் ம்ம்ம்’ என்று ஒலிக்கும். இந்த மாதிரி அழகான சிறு சிறு ஹம்மிங் துணுக்குகளை ‘ஓ உன்னாலே நான் பெண்ணானேனே’, ‘யார் தூரிகை தந்த ஓவியம்’ பாடல்களிலும் கேட்கலாம்.
       
      சொற்களை உச்சரிக்கும் விதத்தில் ஒவ்வொரு குரலுக்கும் ஒரு பிரத்யேக அழகு கூடும். அப்படி சில பாடல்கள் உமா ரமணனின் கணக்கில் உண்டு. ‘பாண்டி நாட்டு தங்கம்’ படத்தின் ‘ஏலேலக் குயிலே’ பாடலில்,
      ‘தெம்மாங்கு பாட்டு படிச்சேன் என் ராசா,
      கும்முன்னு பூத்து குலுங்கும் உன் ரோசா’
      என்கிற வரியில் அந்த ‘கும்முன்னு’ உச்சரிப்பு, ‘பொன்மானே கோபம் ஏனோ’ பாடலின், ‘ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்’ என்கையில் அந்த ‘வம்சம்’ உச்சரிப்பு, ‘ஆறும் அது ஆழமில்ல’ பாடலில் ‘அய்யா’ என்று வருகிற அனைத்து இடமும் என இதற்கும் ஒரு பட்டியல் போடலாம். இந்த உச்சரிப்பு அழகினை ஒட்டி உச்சமான பாடலாக ‘மெல்ல பேசுங்கள்’ படத்தின் ‘செவ்வந்தி பூக்களில்’ செய்த வீடு பாடலைச் சொல்லலாம். இந்தப் பாடலின் தொடக்கமாக வரும் ’கூவின பூங்குயில் கூவின கோழி’ என்னும் திருவம்பாவை வரிகளை, உமா ரமணன் பாடும் போது, அவரின் பிரத்யேக உச்சரிப்பு பாணியை நிறைய ரசிக்கலாம்.
       
      தனித்த அடையாளம் உள்ள குரல்கள், டூயட் பாடல்களில் டாமினேட் செய்கிற ஓர் அம்சத்தோடு இருக்கும் அல்லது என்னளவில் அப்படியொரு எண்ணம் உண்டு. உமா ரமணனின் டூயட் பாடல்களில் கூட அதை உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக , ‘கும்பக்கரை தங்கையா’ படத்தின் ‘பூத்து பூத்து குலுங்குதடி பூவு’ பாடலில் எஸ்.பி.பியுடன் இணைந்து பாடியிருப்பார். அந்தப் பாடலில், திரைப்பாடல் பாடுவதில் சாகச நாயகனான எஸ்.பி.பி வழக்கம் போல அசத்தியிருப்பார். ஆனால், இந்தப் பாடலை எப்போது நாம் யோசித்தாலும், ’வெக்காத செந்தூரந்தான் வச்சி வந்தேன் ஒன்னோடுதான்’ என்கிற உமா ரமணனின் குரலே சட்டென நினைவில் எழும். அதுதான் அந்தக் குரலின் ஸ்பெஷல். இந்த ஸ்பெஷலுக்காகவே திரும்ப திரும்ப கேட்கவும் வைக்கும் அந்தப் பாடல். எனினும், எஸ்.பி.பியின் குரலோடு உமா ரமணனின் குரல் இணையாமல், தனி வழியில் பயணிப்பது போலவே இருக்கும். இருந்தும் சில பாடகர்களின் குரல்களோடு இணையும் பொழுது உமா ரமணனின் குரல் பொருத்தமான இணை குரலாகவும் தோன்றியதும் உண்டு. கே.ஜே.ஏசுதாஸ் மற்றும் இளையராஜா ஆகியோரோடு இணைந்து பாடுகிற போது அந்த கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாகத் தோன்றும்.
       
      ‘கண்மணி நீ வர காத்திருந்தேன்’, ‘கஸ்தூரி மானே கல்யாணத் தேனே’, ‘பூபாளம் இசைக்கும்’, ‘நீ பாதி நான் பாதி கண்ணே’ , ‘ஆகாய வெண்ணிலாவே’ என்று ஏசுதாஸோடு உமா ரமணன் இணைந்து பாடிய அனைத்து பாடல்களுமே பெரிய வெற்றி பெற்றவை. இதில் எந்தப் பாடலை எடுத்துப் பார்த்தாலும் அம்சமான ஜோடிக் குரல்கள் என்கிற உணர்வு எழும். இன்னொரு பக்கம் ‘செவ்வரளி தோட்டத்திலே’, ‘மேகங் கருக்கையிலே’, ‘நில் நில் நில் பதில் சொல் சொல் சொல்’ என இளையராஜாவின் குரலோடு இணைந்து ஒலிக்கும் போதும் இந்த இணை குரல்களும் ஸ்பெஷலாகத் தெரியும். தீபன் சக்கரவர்த்தோடு பாடிய ‘பூங்கதவே தாழ் திறவாய்’ மற்றும் ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு’ பாடல்களிலும் ஜோடிக்குரலாக கெமிஸ்ட்ரி நன்றாகவே இருக்கும்.
       
      தனித்த அடையாளம் இருக்கும் பெண் குரலுக்கு எப்போதும் இன்னொரு வாசல் பெரிதாகத் திறக்கும். இரண்டு பெண்கள் இணைந்து பாடுவது போல அமைகிற பாடல்களுக்கான வாய்ப்புதான் அது. இப்படியான பாடல்களில் மாறுபட்ட ஒரு குரலையேனும் பயன்படுத்தினால்தான், இரண்டு பெண்கள் பாடுகிறார்கள் என்கிற விஷயமே பிடிபடும். எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டுமானால் ‘இன்று நீ நாளை நான்’ படத்தின் ‘மொட்டுவிட்ட முல்லக்கொடி’ பாடலை ஜானகியும், எஸ்.பி.சைலஜாவும் பாடியிருப்பார்கள், ஆனால் வீடியோவாக பார்க்காமல், ஆடியோவாக மட்டும் கேட்கும் போது, ஒருவர் மட்டுமே பாடிக்கொண்டிருப்பது போலத்தான் இருக்கும். ஷைலஜாவின் குரலுக்கென்று தனித்த அடையாளங்கள் உண்டு என்றாலும் அது ஜானகியின் குரலின் தன்மையை அதிகமாக கொண்டிருக்கும் குரலும் கூட, அதனால், இருவர் இணைந்து பாடுகிற பாடல் போலவே அது தெரியாது. அதே போல ‘வட்டத்திற்குள் சதுரம்’ படத்தில் ‘இதோ இதோ என் நெஞ்சிலே’ பாடலில் ஒலிக்கும் ஜானகியின் குரலும், சசிரேகாவின் குரலும் இதே போன்ற உணர்வையே கொடுக்கும். பாடகிகளில், குரல்களை அடையாளம் கண்டு ரசிக்கும் போக்கு அல்லாத ஒரு நபருக்கும் கூட, இந்தப் பாடலில் இரண்டு குரல்கள் ஒலிக்கின்றன என உணர வைக்க, தனித்த அடையாளக் குரல்களே வசதியாக இருக்கும். அந்த வகையில் உமா ரமணனிற்கு நிறைய நல்ல வாய்ப்புகள் அமைந்தன.
       
      பி.சுசீலாவோடு ’கோயில் புறா’ படத்தின் ‘அமுதே தமிழே’ , எஸ்.ஜானகியோடு ‘இன்று நீ நாளை நான்’ படத்தின் ‘தாழம்பூவே கண்ணுறங்கு’ , சித்ராவுடன் ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் ‘ஏ , மரிக்கொழுந்து’, மின்மினியுடன் ‘ஆணழகன்’ படத்தின் ‘பூச்சூடும் புன்னைவனமே’, சுனந்தாவுடன் ‘வால்டர் வெற்றிவேல்’ படத்தின் ‘பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டிய பாடல்கள். இது போன்ற தனித்த அடையாளம் கொண்ட குணத்திற்காக, நிறைய ஃபீமேல் டூயட்களில் 90-களில் வலம் வந்த குரல் ஸ்வர்ணலதாவினுடையது. அப்படியிருக்க ‘புதுப்பட்டி பொன்னுத்தாயி’ படத்தின் ‘ஊரடங்கும் சாமத்திலே’ பாடலில் உமா ரமணன் - ஸ்வர்ணலதா என்று தனித்த அடையாளம் உள்ள இரண்டு குரல்களை இணைத்து விட்டிருப்பார் இளையராஜா. இந்த அனுபவமும் வித்தியாசமாகவே இருக்கும். ’மகுடம்’ படத்தில் இதே இருவரோடு, சித்ராவும் இணைந்து ‘இந்த மாமாவுக்கு தண்ணி வைக்கலாமா’ பாடலில் மூவராக பாடும் போது, எந்த குழப்பமும் இல்லாமல் மூன்று குரல்களையும் அடையாளம் காண முடிவதும் நல்ல அனுபவத்தை தரும்.
       
      இளையராஜாவின் இசையில், உமா ரமணன் பாடிய சில வித்தியாசமான பாடல்கள் உண்டு. ‘சின்னத்தாயி’ படத்தின் ‘கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும்’, ‘ராக்காயி கோயில்’ படத்தின் ‘உந்தனின் பாடல்’ , ‘எங்க தம்பி’ படத்தின் ‘இது மானோடு மயிலாடும் காடு’ , ‘பெரிய மருது’ படத்தின் ‘சிங்காரமா நல்ல ஒய்யாரமா’, ‘நந்தவனத் தேரு’ படத்தின் ‘வெள்ளி நிலவே’ போன்ற பாடல்களில் ஒலிக்கும் உமா ரமணின் குரலும் ரொம்ப வித்தியாசமான உணர்வைக் கொடுக்கும். ‘மகாநதி’ படத்தின் ‘ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்’ பாடலில் ‘கொள்ளிடம் நீர் மீது’ என்று அவர் ஆரம்பிக்கும் போது, அந்தக் குரலின் மீது பிறக்கிற மயக்கத்தை, கண்களின் ஓரம் எட்டிப் பார்க்கும் நீர்த்துளிகளைக் காட்டி வேண்டுமானால் புரிய வைக்கலாமே அன்றி சொற்களால் அந்த உணர்வை புரிய வைத்தல் சிரமம்.
       
      மற்ற இசையமைப்பாளர்களிடம் பாடிய பாடல்களில் முக்கியமான பாடல்களாக டி.ஆரின் இசையில் ’ஒரு தாயின் சபதம்’ படத்தின் ‘ராக்கோழி கூவையில’, சங்கர் கணேஷின் இசையில் ‘மனைவி ஒரு மந்திரி’ படத்தின் ‘நீ பார்க்காம போறியே இது நியாயமா?” , தேவாவின் இசையில் ‘சிஷ்யா’ படத்தின் ‘யாரோ அழைத்தது போல்’ , வித்யாசாகரின் இசையில் ‘அரசியல்’ படத்தின் ‘வாசகி வாசகி’ மற்றும் ’புதையல்’ படத்தின் ‘பூத்திருக்கும் வனமே’ ஆகிய பாடல்களைச் சொல்லலாம்.
      பாடுகிற திறமையோடு குரலுக்கும் தனித்த அடையாளம் அமைந்துவிட்டால் அவர்களுக்கு திரைப்பாடல் வாய்ப்புகளும் பிரகாசமாக அமைந்துவிடும். தனித்த அடையாளமும், கேட்கவும் சுகமான குரலாகவு இருக்கும் உமா ரமணனுக்கு, அவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்தனவா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இவரின் தனித்துவமான குரலின் அழகை, சரியாக பயன்படுத்திக் கொண்டவர் இசைஞானி இளையராஜா மட்டுமே என்றால் மிகையில்லை. ஜானகி, சித்ரா போன்ற மற்ற பாடகிகளை ஒப்பிட உமா ரமணனுக்கு இளையராஜா அவர்கள் கொடுத்த பாடல்கள் மிகக் குறைவே. எனினும் உமா ரமணனின் திரையிசைப் பயணத்தை எடுத்துக் கொண்டால், அவர் அதிகமான பாடல்களை பாடியது ராஜாவின் இசையிலேயே என்பதையும் கவனிக்க முடியும். குறைவான எண்ணிக்கை என்றாலும் இளையராஜாவிடம் அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் முத்து முத்தானவை. இளையராஜாவின் இசையில் சொற்ப பாடல்களையே பாடியிருந்தாலும், ஜென்ஸியை கொண்டாடிக்கொண்டே இருக்கிறோமே அப்படியான ஒரு இடத்தில் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர் உமா ரமணன். ஜென்ஸியைப் போலவே ராஜாவிடம் இவர் பாடிய அநேக பாடல்களும் ஹிட் அடித்தவை.
      இளையராஜா அவர்கள் இன்னமும் கூட உமா ரமணனுக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்திருக்கலாம் என்பது திரையிசை ரசிகர்களிடம் இருக்கும் பெரிய ஆதங்கங்களில் ஒன்று. இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது அன்றைய நாளில் ராஜா தவிர்த்த மற்ற எத்தனையோ இசையமைப்பாளர்கள் இயங்கி கொண்டுதான் இருந்தார்கள். அவர்களிடம் உமா ரமணன் பாடிய பாடல்கள் என்று பார்த்தால், பேருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமான வாய்ப்புகளையே கொடுத்திருப்பதை கவனிக்க முடியும். இளையராஜாவிடம் பாடிய பாடல்களை ஒரு பக்கம் வைத்து, மற்ற அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலுமாக அவர் பாடிய பாடல்களை இன்னொரு பக்கம் வைத்தால், ராஜாவிடம் இவர் பாடிய பாடல்களில் அவை பத்து சதவிகிதம் கூட இருக்காது. ஆக, ஒப்பீட்டளவில் இளையராஜா மட்டுமே உமா ரமணனின் குரலை அதிகமாக பயன்படுத்தியவர்.
       
      தனித்த அடையாளம் கொண்ட நல்ல குரல் வளம், முறையாக சங்கீதம் பயின்றவர், அந்தக் குரலில் சங்கதிகள் எல்லாமும் நன்றாகவே பேசுகிறது. பிறகு ஏன் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன என்கிற ஒரு கேள்விக்கு, ரசிக கோணத்தில் விடை தேட முயன்றால் கவனிக்க முடிந்த ஒரு விஷயம், சினிமா பாடல்களுக்கு அவசியமான எக்ஸ்பிரஷன் என்கிற விஷயத்தில், அவரின் குரல் அத்தனை ஒத்துழைக்கவில்லையோ என்பதாக ஓர் அவதானிப்பை கொள்ள முடிந்தது. உதாரணத்திற்கு ‘மணிக்குயில்’ படத்தின் ‘தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே’ மற்றும் ‘காதல் நிலாவே பூவே’ ஆகிய இரண்டு பாடல்களையும் எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் ஒன்று மகிழ்வாய் பாடுகிற ஜோடி பாடல், மற்றொன்று சோகத்தை பாடு பொருளாக கொண்டது. இவற்றில் சோக பாடலான ‘காதல் நிலாவே பூவே’ பாடலில் சோகத்தை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கும் இவரின் குரல், ஆனால் மகிழ்வாய் பாட வேண்டிய ‘தண்ணீரிலே முகம் பார்க்கும்’ பாடலிலும் அதே தொனியிலேயே ஒலிக்கும்.
       
      அவரின் தனித்துவமான குரலின் அழகுதான் பாடலுக்கு வசீகரமாக அமைந்திருக்கும். இருப்பினும், இந்த எக்ஸ்பிரஷன் கோணத்தில், பெரிய வேறுபாடுகள் தெரியாத மாதிரியான ஒரு குரலாகவும் அது அடையாளப்படுவதை கவனிக்க முடியும். உமா ரமணன் மகிழ்வான சூழலுக்கு பாடின அநேக பாடல்களிலும் இந்த விஷயத்தை உணர முடியும். காட்சி வடிவில் பார்க்கும் போது, அந்த நாயகிகள் கொடுக்கும் முக பாவத்தில்தான், இவை மகிழ்வான பாடலாக மாறுவதாக ஓர் அவதானிப்பும் என்னளவில் உண்டு. மற்றபடி ஆடியோவாக மட்டும் கேட்டால், பெரும்பாலும் எல்லா பாடல்களிலுமே சோகம் எங்கேயோ அந்தக் குரலில் பிணைந்திருப்பது போலவே ஓர் உணர்தலை கொள்ள முடியும்.
       
      இந்த உணர்தலை பொதுமைப்படுத்தி பார்க்க முடியுமா என்றாலும் இல்லை. விதிவிலக்காகவும் அவரின் குரல் சில பாடல்களில், அந்த அந்த உணர்ச்சிக்கு ஏற்ப எமோட் ஆகியிருப்பதையும் கவனிக்க முடிந்தது. குறிப்பாக ‘பொன் விலங்கு’ படத்தின் ‘சந்தனக் கும்பா ஒடம்பிலே’ பாடலில் மோக ரசத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ‘தந்து விட்டேன் என்னை’ படத்தின் ‘முத்தம்மா முத்து முத்து’ பாடலில் காதல் உணர்ச்சியை வெளிப்படுத்துவது அழகாக பதிவாகி இருக்கிறது, ‘மல்லு வேட்டி மைனர்’ படத்தின் ‘ஒன்ன பார்த்த நேரத்துல’ பாடலில் மலேசியா வாசுதேவனின் குரல் காட்டும் குறும்புக்கு , உமா ரமணனின் குரலில் வெளிப்படும் குறும்பு நிகர் செய்திருக்கிறது. மொத்தத்தில், சோக ரசம் எட்டிப்பார்க்கிற குரலாக அது இருப்பதாலா அல்லது தனித்துவமான இந்தக் குரலை டிமாண்ட் செய்கிற மெட்டுக்கள் அமையாததாலா என்று அரிதியிட்டு சொல்ல இயலாத ஒரு குழப்ப நிலையே இவருக்கான வாய்ப்புகள் அமையாதன் பின்னணியில் யோசித்து முட்டி நிற்கிற இடமாக இருக்கிறது.
       
      2004 ஆம் ஆண்டு தினாவின் இசையில் வெளியான ’திருப்பாச்சி’ படத்தின் ‘கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு’ பாடலே, இப்போது வரைக்குமான அவரின் இறுதி பாடலாக இருக்கிறது. அத்தனை வருடம் கழித்து பாடிய போதும் அந்தக் குரலின் இளமை வளம் குன்றியிருக்கவே இல்லை. இந்த தலைமுறை பாடல்களுக்குமான குரலாகவே அது அழகு காட்டியது. இளையராஜாவிற்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கிய 1990 களின் பிற்பகுதியில் இருந்தே உமா ரமணனுக்கு வாய்ப்புகள் கிட்டத்தட்ட இல்லாத நிலை போலதான் இருந்தது.
       
      திறமையை நிரூபித்து, அவருக்கான ரசிகர்களையும் கொண்டிருக்கிற ஒரு பாடகியை, இன்றைய இசையமைப்பாளர்கள் யோசிக்காமல் விட்டது, அவர்களே அறியாமல், இசை ரசிகர்களுக்கு செய்த பிழை என்றுதான் சொல்ல வேண்டும். உமா ரமணன் அவர்களின் உயிர் இன்று பிரிந்திருக்கலாம் , ஆனாலும் இசை ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவரின் ஆனந்த ராகங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும் காலமாகவேதான் இருக்கும்.
       
      © நாடோடி இலக்கியன் @ அ.பாரி
      May be an image of 1 person
       
       
       
       
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.