தம் வாழ்வின் பெரும்பகுதியை குழந்தைத்தனமாகவே வாழ்ந்து மறைந்தவர்களின் பிரிவு ஆறாத இழப்பைத் தரக்கூடியது. உலகிலேயே எடைகூடிய பிரதேப்பேழை குழந்தைகளுடையதுதான் என்பதுபோல, இவ்வகையானோரின் பிரிவு மிகவும் பாரமானது. அவ்வரிசையில் ஒருவர்தான் ஈழவேந்தன்.
ஒரு நடு இரவில் அறிமுகமானவர். உதயனில் பணி புரிந்த ஒருநாளில் - மறுநாள் பத்திரிகைக்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நடு இரவொன்றில் - கொழும்பிலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பினால் வித்தி அண்ணர் பரபரப்பானார். அகப்பட்ட காகிதமொன்றில் தாறுமாறாக எதையோ எழுதினார். "ஈழவேந்தனை நாடு கடத்திப்போட்டாங்களாம். லைப்ரரிக்கு வா, அவற்ற படத்தைத் தேடுவம்" - என்றார். வேகமாக நூலகத்துக்குள் சென்ற வித்தியண்ணர்,
தூசியேறிக்கிடந்த தமிழக சஞ்சிகைகளுக்குள் ஈழவேந்தனைத் தேடினார். நான் யாரைத் தேடுவது? யாரென்றே தெரியாத நபரை நான் எந்தப் புத்தகத்தில் தேடுவது. கடைசியில், 'நக்கீரன்' சஞ்சிகை ஒன்றுக்குள்ளிருந்து ஈழவேந்தன் கண்டுபிடிக்கப்பட்டார். கறுப்பு வெள்ளைப் படம்தான். வலப்பக்கம் பார்த்தபடி கண்ணாடி அணிந்த ஈழவேந்தனை அன்றுதான் முதன் முதலாகக் கண்டேன்.
ஏற்கனவே முடிக்கப்பட்டிருந்த அடுத்தநாள் பதிப்பின் முன்பக்கத்தின் தலைப்புச் செய்தி சற்றுக் கீழே இறக்கப்பட்டது. அதற்குமேல், "ஈழவேந்தன் நாடு கடத்தப்பட்டார்" என்று செய்தி செருகப்பட்டது. நாடு கடத்தப்படுவதற்கு முதல்நாள், சென்னையில் அவரது வீட்டிலிருந்து குடிவரவு - குடியகல்வு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூட்டிச்செல்லப்பட்ட ஈழவேந்தன், மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு நேரே கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து நாடுகடத்தப்பட்டார். இறுதித் தருவாயில், தான் நாடு நடத்தப்படப்போவதை அறிந்து, குந்து மறியல் போராட்டம் நடத்த முயற்சித்தபோது, அவரைக் குண்டுக்கட்டாகத் தூக்கிவந்து, விமானத்தில் போட்டு, கொழும்புக்கு அனுப்பிவைத்தார்கள் இந்திய அதிகாரிகள். தனது கையில் ஐம்பது ரூபாவைக் கொடுத்த அதிகாரி ஒருவர், நாட்டைவிட்டுப் போய்த் தொலையுமாறு சொன்னதாகப் பின்னர் ஒரு தடவை பேசும்போது ஈழவேந்தன் சிரித்தபடி சொன்னார்.
சுடரொளியில் நான் பணிபுரிந்த காலத்தில், ஈழவேந்தன் அங்கு ஒரு கட்டுரையாளராக பணியமர்த்தப்பட்டார். இன்னொரு வகையில் சொல்லப்போனால், அவருக்கு இலங்கையில் எங்கேயும் தங்குவதற்கு அப்போது இடமிருக்கவில்லை. நாடுகடத்தப்பட்ட அவரை அனைவரும் நக்ஸலைட்டு போலவே பார்த்தார்கள். ஆக, சுடரொளி குழுமத்தில் இணைந்துகொண்டால், ஏதோவொரு வகையில், அங்கு அவர் தன்னை செயல்படுத்திக்கொள்ள வசதியாகவிருக்கும் என்பது, கொழும்புக்கு வந்த நாள் முதல், அடைக்கலம் கொடுத்த சரவணபவனின் எண்ணமாக இருந்தது.
நட்ட நடு இரவில் நக்கீரனுக்குள் பார்த்த ஈழவேந்தனை நேரில் பார்த்தபோது, விநோதமானவராகத் தெரிந்தார். வேகமான நிமிர்ந்த நடை. வேட்டியும் தோளில் ஒரு துணிப்பையும். இரண்டு வைப்பர்கள் பூட்டக்கூடியளவு பரந்த மூக்குக் கண்ணாடி. தமிழைச் சுவை சொட்டப்பேசக்கூடிய தெளிவும் நிதானமும். அதே புலமை செறிந்த ஆங்கிலம். யாரையும் நின்று நிதானித்து கேட்கவும் பேசவும் தெரிந்த கனிந்த உடல்மொழி. இவை அனைத்தும் அவரை அனைவரிடமும் நெருக்கமாக்கியது.
சுடரொளி வார இதழில் அவருக்குரிய பத்தி ஒதுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய அரசியலின் சுவாரஸ்யமான வரலாற்றுச் சம்பவங்களை எழுதுவதற்கு ஈழவேந்தன் விரும்பினார். ஆதர்ஷத் தலைவரான செல்வநாயகத்துடனான தனது உறவு, அவருடன் இணைந்து பயணித்த அரசியல் போன்ற விடயங்களைப் பகிர்ந்துகொள்வது ஈழவேந்தனின் நோக்கமாகவிருந்தது. அவருக்கிருந்த மிகப்பெரிய சிக்கல், அவரது சிந்தனை மிகவும் வேகமானது. பேசுவது அதைவிட வேகமானது. அவற்றையெல்லாம் முழுமையாக எழுத்தில் கொண்டுவருவதற்கு அவரால் ஒருபோதும் முடியவில்லை. அவரது கட்டுரை கோர்வையாக அமையவில்லை.
தகவல்களும் சம்பவங்களும் சொல்லவந்த விடயங்களும் துண்டு துண்டாகத் தொங்கிக்கிடந்தன.
மிக முக்கியமான விடயத்தைக் கட்டுரையாக எழுதுகிறார் என்பதால், ஆசிரியர் இரட்ணசிங்கம்தான் ஈழவேந்தனின் கட்டுரைகளை மேற்பார்வையிட்டார். ஒரு வாரம் பார்த்தார். இரண்டு வாரம் பார்த்தார். மூன்றாவது வாரத்திலேயே ஆசிரியர் பீடத்தில் ஈழவேந்தனுக்கு முன்னால் அணு உலை புகையத் தொடங்கியது. "மிஸ்டர் ஈழவேந்தன், இந்தக் கட்டுரையில நீர் உம்முடைய அட்டகாசங்களை எழுதுவதிலதான் கவனமாக இருக்கிறீரே தவிர, எழுத வந்த விஷயத்தில எந்தக் கவனத்தையும் காணம். எழுதுற நோக்கத்தையும் காணம்" - என்று தொடங்கி, பொத்தி வைத்த அத்தனை கோபத்தையும் இரட்ணசிங்கத்தார் எத்திவிட்டார்.
ஈழவேந்தன் வழக்கம்போல சிரித்தபடி, அவருக்கு விளக்கம் கொடுத்தார். அது இரட்ணசிங்கத்தாருக்கு இன்னமும் சினத்தை மூட்டியது. அடர்ந்த வெண்தாடிக்குள்ளிருந்து கர்ஜிக்கும் இரட்ணசிங்கத்தார் பாய்ந்து ஈழவேந்தனின் கழுத்தைக் கடிக்காததுதான் குறை. ஆனால், ஈழவேந்தன் குழந்தைபோல எல்லா ஏச்சுக்களையும் ஏற்றும் சுமந்தும் சிரித்தும் முடித்துவிட்டு தனது கதிரையில் வந்து அமர்ந்துகொண்டு, ஆசியர் பீடத்திலிருந்த எங்கள் அனைவரையும் பார்த்து, இரண்டு கண்களையும் சுருங்கிச் சிரித்தார்.
சுடரொளியைவிட்டு போகும்வரைக்கும் அவர் இவ்வாறு இரண்டு கண்களையும் பூஞ்சையாக சுருக்கி கண்ணாடி உயரச்சிரிப்பதே வாடிக்கையாகிப்போனது. அவ்வாறு சிரிப்பதற்கு முன்பு தவறாமல், இரட்ணசிங்கத்தாரிடம் திட்டு வாங்கினார்.
ஒரு கட்டத்தில், இந்த மனுசன் நாடுகடத்தப்பட்டு கொழும்புக்கு வந்த பிறகு, எங்காவது சிறைச்சாலையில் போயிருந்திருந்தால்கூட நன்றாக வாழ்ந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.
சுடரொளிதான் எல்லா குழப்படிகாரர்களையும் அணைத்து வைத்துக்கொண்ட புனர்வாழ்வு மையம் ஆயிற்றே. ஈழவேந்தன் தொடர்ந்து அங்கு வந்துபோனார். காலையில் வந்து - இரட்ணசிங்கத்தார் வருவதற்கு முன்னர் - ஆசிரியர் பீடத்தின் நடுவிலிருந்த செய்தியாளர்களுக்கான பொதுத் தொலைபேசியிலிருந்து, கொழும்புக்கான அப்போதைய "இந்து" நிருபர் நிருபமா சுப்ரமணியத்திற்கு அழைப்பெடுத்து, அவர் எழுதிய செய்திகள் குறித்து நக்கலாகப் பேசுவார். அவர் யாரோடு பேசினாலும் அதில் செழித்திருந்த ஆங்கில - தமிழ் புலமையை கூர்ந்து கேட்பது, அப்போதெல்லாம் எனக்கு விருப்பத்துக்குரிய ஒற்றுக்கேட்டலாக இருந்தது. ஆசிரியர் இரட்ணசிங்கம் உள்ளே வந்தவுடன், சத்தமின்றி வெளியேறிவிடுவார்.
சுடரொளியில் அவருடனான நினைவுகள் நீண்டவை. "நீங்கள் இறந்த பிறகு உங்களது மூளையை இன்னொருவருக்கு கொடுக்கும் கொடுப்பினையிருந்தால் எவ்வளவு நல்லது" - என்று அவரோடிருந்து சாப்பிடும்போது ஒருநாள் சொல்ல, இதேபோல தான் சேர்.பொன். இராமநாதனின் மூளைக்கு இலக்கு வைத்ததாக சொல்லிச் சிரித்தார்.
சுடரொளியிலிருந்து அவர் விலகிவிட்ட காலப்பகுதியென்று நினைக்கிறேன்.
ஒரு தடவை கொழும்புத்துறையில் அவர் தங்கியிருந்த உறவினர் வீட்டிற்குச் சென்று பேட்டியெடுத்தேன். அவர் பேசுவதில் எதை எழுதுவது, எதைத் தவிர்ப்பது என்று வழக்கம்போல குழம்பியபடி அவரது பேச்சையே பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் பேட்டியில் அவர் சந்தத்தோடு சொன்ன இரண்டு வசனங்கள் இன்றும் நினைவில் உள்ளன.
"தன்மானம் இழந்தும் தமிழ்மானம் காப்பேன். ஆனால், பாசமிகு பாரதத்தை பகைக்கமாட்டேன்"
"இலங்கையுடன் இந்தியா செய்தது ஒப்பந்தம் அல்ல. அது நிர்ப்பந்தம். காலப்போக்கில் ஒரு தீப்பந்தமாக அது இந்தியாவையே சுட்டுக்கொண்டது"
வரலாற்றைத் தகவல் செறிவோடும் - கேட்போரை வசீகரிக்கும் ஆளுமைத் தொனியோடும் - கொள்கைப் பற்றோடும் பேசக்கூடிய நல்ல பேச்சாளர். பேராற்றல் கொண்ட பெரு மனிதர்களின் நிழலில் வளர்ந்து, தன்னையும் ஒரு சுயம்பாக வளர்த்துக்கொண்டவர். தன் மதிப்பீட்டில் சரியென்று எண்ணியதை எவர் முன்பும் துணிச்சலோடு பேசியவர். தமிழ்த் தேசிய அரசியலின் அத்தனை ஆள்கூறுகளையும் தன் ஆயுளில் தரிசித்துச் செல்லுமளவு அதிஷ்டம் வாய்த்தவர்.
தமிழகத்திலிருந்துகொண்டு அன்றைய காலகட்டத்தில் வீரப்பனுக்கு ஆதரவாகவெல்லாம் பேசியிருக்காவிட்டால், நாடு கடத்தப்பட்டிருக்கமாட்டார். ஆனால், அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. தாம் நம்பிய தமிழ்த்தேசிய கருத்துநிலைகளோடு யார் ஒத்து நின்றார்களோ, அவர்கள் அனைவரையும் தன் கொள்கையோடு ஆரத்தழுவிக்கொண்டார்.
அவரது எல்லாத் துணிவுகளையும் எல்லா ஆளுமைப் பண்புகளையும் எல்லா திறைமைகளையும் அவருக்குள்ளிருந்த குழந்தைத்தனம் விஞ்சி நின்றது. அதனால், அவரால் எதிலும் நிரந்தரமாக நிலைகொள்ளவும் முடியவில்லை. நீண்ட பயணங்களில் நிலைத்திருக்கவும் முடியவில்லை.
ஈழவேந்தன். நாம் கடந்த காலமொன்றின் மறக்கமுடியாத மனிதர்.