ஆற்றல் மிக்க கதை சொல்லி எஸ்.பொ .. அவர்குறித்து ஒரு சுவாரஸ்யமான செய்தியைப் பகிர விரும்புகிறேன்.
போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த கவிஞன் பெர்ணான்டோ பெஸோவா. 127 புனைபெயர்களில் எழுதியதாக அறிய முடிகிறது. தமிழில் எனது வாசிப்பிற்கு உட்பட்டவரை, வாசித்தவற்றில் ஞாபகங்களில் உள்ளவரை எஸ்.பொ தான் அதிக புனை பெயர்களில் எழுதியிருக்கிறார். முகநூல் வந்தபிறகு பெர்ணான்டோ பெஸோவாவைக் கூட மிஞ்சுமளவு பலர் பேக் ஐடிகளை வைத்திருக்கிறார்கள் என்பது வேறு விசயம்.
தனது பெயரை எஸ்.பொ.என்று சுருக்கி வைத்துக்கொண்ட எஸ்.பொன்ணுத்துரை, ஆரம்பக்காலத்தில் 'நான்' என்ற புனைபெயரைப் பயன்படுத்தினார். நாற்பதுகளில் சுதந்திரனில் ஆறுபுனைபெயர்களில் வாரமொன்றுக்கு இருகதை வீதம் எழுதியுள்ளார். 'சிறீதரன்' என்ற பெயரில் முதலில் கட்டுரைகள் வெளியிட்டார்.
கல்கி ஈழத்துச் சிறுகதைப் போட்டியை 'மரகதம்' என்ற இதழில் நடத்தினார். அவ்விதழில் 'எழுவானோர் ஏகாம்பரம்' என்ற பெயரில் எஸ்.பொ. விமர்சனக் கட்டுரைகளைச் செய்துள்ளார். இலங்கை அரசியலை அலச 'அபிமன்யு' என்ற பெயரை 'அக்கினிக்குஞ்சு'ல் பயன்படுத்தினார்.
ஈழநாட்டில் 'போதிமரநிழலில்' என்ற தலைப்பில் 'வெள்ளாங்காடு வீ. வியாச தேசிகர்' என்ற பெயரிலும், தேசாபிமானியில் 'போகிற போக்கில்' என்ற தலைப்பில் 'பொக்கன் கணபதி' என்ற பெயரிலும், இளம்பிறையில் 'நாமும் நாங்களும்' என்ற தலைப்பில் 'கொண்டோடிச்சுப்பர்' என்ற பெயரிலும், 'பிருகண்ணளை' என்ற பெயரில் நூல் விமர்சனங்களையும் எழுதியுள்ளார்.
நையாண்டிக் கவிதைகள் எழுதுவதற்கு 'மூப்பன் முருகன்', 'துமிலைத் திமிலன்' என்ற பெயர்களையும், பெயர் தெரியாமல் எழுத முயன்றபோது 'பெயர்விழையான்' என்கிற புனைபெயரையும் கையாண்டுள்ளார். எஸ்.பொன்னுத்துரை என்று எழுதுவதற்கு முன், சா.பொன்னுத்துரை என்றும், பொதுஊசி, துரை, பழமைதாசன், புரட்சிப்பித்தன், ராஜ், மித்ர, நச்சாதார்க்கும் இனியன் என்ற புனைபெயர்களையும் பயன்படுத்தியுள்ளார்.