படைப்பு ; கவிதை ரசிகன்
குமரேசன்
மலரை
நுகர்ந்துப் பார்த்திருக்கிறாய்....
தேனை
சுவைத்துப் பார்த்திருக்கிறாய்....
தென்றலை
தீண்டிப் பார்த்திருக்கிறாய்.....
இயற்கையை
ரசித்துப் பார்த்திருக்கிறாய்...
இசையைக்
கேட்டுப் பார்த்திருக்கிறாய்...
என்றாவது
பட்டினிகிடந்து பார்த்திருக்கிறாயா ?
காற்றில்
தூசுகளும் மாசுக்களும்
சப்தமும் மணமும் மட்டும்
அலைந்துக் கொண்டிருக்கவில்லை...
"அம்மா பசிக்கிறதே!" என்ற
வார்த்தையும்
அலைந்து கொண்டுதான் இருக்கிறது......
ஔவையார் சொன்னது போல்
"மனிதராய் பிறப்பது அரிதல்ல
குருடு செவிடாய் பிறக்காமல்
இருப்பது அரிதல்ல .....
ஔவையார் சொன்ன
அரிதுகளிலேயே
அரிதானது
'மூன்று வேளை உணவு '
கிடைப்பதுதான் அரிது.....!
உடலில் பற்றிய 'செந்தீ'' கூட
ஒரே ! நாளில் கொன்று விடுகிறது
இந்த வயிற்றில் பற்றிய
'பசித்தீ' தான்
ஒவ்வொரு நாளும் கொள்ளும்...!
ஒருவனுக்கு அறிவு பசி !
ஒருவனுக்கு ஆன்மீகப் பசி !
ஒருவனுக்கு அன்பு பசி !
ஒருவனுக்குப் பணப்பசி !
ஒருவனுக்குப் பதவிப்பசி!
எந்தப் பசி வேண்டுமானாலும்
இருக்கலாம்
ஆனால்
ஒருவனுக்கு
" வயிற்றுப்பசி "மட்டும்
இருக்கவே கூடாது.....!
தனித்திரு
விழித்திரு
பசித்திரு என்று
விவேகானந்தர் சொன்னார்
ஆனால்....
பலர்
"பசித்தே இறக்கின்றனர்...!'
காற்றில் வரும் பல ஓசையைக்
கேட்டவர் உண்டு....
வயிற்றை நனைக்க
" பால் " இல்லாமல்
கண்கள் நனைய
கன்னம் நனைய
ஏன்?
'உடல் ' நனையவே!
கதறியழும்
பச்சிளம் குழந்தையின்
குரளைக் கேட்டவர் உண்டா ?
"பசிக்கிறது
ஏதாவது கொடுங்கள் " என்று
கேட்பதற்குக் கூட
'சக்தி 'இல்லாமல்
சாலை ஓரத்தில் கிடப்பவர்களின்
'கண்ணீரின் ஈரம் '
'காற்றின் ஈரமாக'
வருவதை
உணர்ந்தவர் உண்டா ?
'உணவில்லாமல்' இறந்த
ஒரு 'குழந்தையின் '
அல்லது
ஒரு 'முதுமையின் '
சடலத்தின் ' வாசணையை '
சுமக்க முடியாமல்
சுமந்து வரும்
காற்றின் சுமையை
அறிந்தவர் உண்டா ?
"தனி ஒருவனுக்கு
உணவில்லை எனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதியார்....
தனி ஒருவனுக்கு என்ன?
ஏழு நிமிடத்திற்கு ஒருவர்
உணவில்லாமல் இறக்கிறார்கள் ஆனால் ....நாங்களோ!
கைக்கட்டி
வேடிக்கைப் பார்க்கிறோம்...
"நாய் சாப்பிடும்
எச்சில் தொட்டியில்
மனித வாய் சாப்பிடும் "
இந்த தேசத்திற்கு
எதற்கடா தேசியக்கொடி ?
பசியின் அழுகையும்
பட்டினியின் கதறலுமே !
இந்நாட்டின்
"தேசிய கீதமானப்" பிறகு
இங்கு
"ஜன கன மன" எதற்குடா....?
பசி படடினி தீரும் வரை...
மக்களாட்சி
ஜனநாயகம்
சமதர்மம்
சுந்திரம் என்பதெல்லாம்
வெறும் வார்த்தைதானடா....!
நிலவிற்குச் செயற்கைக்கோள் விட்டோம் என்று
'மார்பைத் தட்டிக் '
கொள்கின்றவர்களே !
இங்கு பசிக்கு
'வயிற்றைத்
தட்டிக் : கொண்டிருப்பவர்கள்
ஏராளம் ! ஏராளம் !
லட்ச லட்சமாய் செலவழித்து
சிலை வைப்பதும்
கோடி கோடியாய் செலவழித்து
கோயில் கட்டுவதும்
இவர்களின்
பசி பட்டினியை தீர்க்குமா ?
கொடிகட்டி ஆண்டவனே
ஒரு நாள்
மாண்டானடா..!
நீ கொள்ளையடித்து
ஆள்கிறயே
நீ என்ன மடையனாடா....?
உடையில்
துண்டுப் போட்டுக் கொள்பவன்
அரசியல்வாதி இல்லையடா...!
ஏழையின் வயிறு கண்டு
உணவு போடுபவனே
அரசியல்வாதியடா....!
உன் பிள்ளைகளின்
கழுத்தில் கிலோ கிலோவாக
நகை போட
மூன்று வேளையும்
அறுசுவை உணவு போட
என்னமோ செய்யடா...!
ஆனால் இந்த ஏழையின்
வயிறு பசிக்கும் போது
உணவு போட ஏதாவது செய்யடா..!
எரிந்த வீட்டில் தான்
எதுவுமில்லாமல் போகும்
திருடிய வீட்டில்
ஏதாவது
இல்லாமலா போய்விடும்....
என்னை
மன்னித்து விடுங்கள்...
யாருக்கும்
உணவு கொடுக்காதீர்கள்....!
முதுமையாக இருந்தால்
மட்டும் உணவு கொடுங்கள்
இளமையானவர்களாக இருந்தால்
வேலை கொடுங்கள்
சிறுவர் சிறுமிராக இருந்தால்
படிப்பு கொடுங்கள்
நீங்கள் இன்றைய உணவை
கொடுத்து விடுவீர்கள்
நாளை உணவை
அவர்களுக்கு யார் கொடுப்பார்...?
உங்களிடம்
கையெடுத்து கும்பிட்டு
கேட்கிறேன்......
பசித்தீயால்
இறந்தவர்களின் உடல்களை
மீண்டும் சிதைத்தீயால்
எரிக்காதீர்கள்......!
அப்படியே எரித்தாலும்
அவர்கள் உடலில்
என்ன இருக்கிறது எரிவதற்கு? அதுதான் எல்லாம்
எறிந்து விட்டதே பசித்தீயில்...!
பட்டினி கிடக்கும்
அனைவருக்குமாக
அழுவதையும்
எழுதுவதையும் தவிர
வேற என்ன செய்ய முடியும்
கவிஞனாய்
பிறந்து விட்ட என்னால்......!!!
ஏதாவது
உதவி கேட்டவருக்கு
முடிந்ததைச் செய்வோம்
'பசிக்கிறது' என்று கேட்டவருக்கு
'முடியாததையும் ' செய்வோம்...