-
மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான விசேட நடமாடும் கால்நடை வைத்திய நடவடிக்கை
12 Dec, 2025 | 05:33 PM மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் பாரிய இழப்பை சந்தித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை அளிக்கும் நடமாடும் சேவை வெள்ளிக்கிழமை (12) மாவட்ட ரீதியில் மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் கனியூட் பேபிதுரை வின்சன்ட் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் பாரிய இழப்பை சந்தித்துள்ளனர். மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. குறிப்பாக ஆடு,மாடு,கோழி பன்றி ,எருமை மாடு போன்ற இழப்புக்களை பண்ணையாளர்கள் சந்தித்துள்ளனர். குறித்த பண்ணையாளர்களின் எஞ்சிய உயிரினங்களை பாதுகாக்கும் வகையிலும்,பண்ணையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கால்நடை வைத்தியர்கள் ஆறு பேர் உள்ளடங்களாக மிருக வைத்திய குழு ஒன்றை அமைத்து 6 குழுக்களாக வெவ்வேறு இடங்களில் இலவசமாக கால்நடை வைத்திய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அமைச்சு,கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்,இலங்கை கால்நடை அரச வைத்தியர் சங்கம்,இலங்கை கால்நடை வைத்தியர் சங்கம் ஆகியோர் அனுசரணை வழங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தொடர்ந்து தமது தொழிலை முன்னோக்கி செல்வதற்கு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான விசேட நடமாடும் கால்நடை வைத்திய நடவடிக்கை | Virakesari.lk
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல். மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இவரால் கடந்த வெள்ளிக்கிழமை (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எல்லா கோயில் காணிகளிலும், எல்லா சிதம்பரத்து காணிகளிலும், எல்லா தர்ம காணிகளிலும் மலையக மக்களை குடியேற்றி அவர்களை காப்பாற்ற வேண்டும். அவர்கள் இங்கு வந்தால் விவசாயத்தில் செழிப்பாகும் என இயற்கை பேரிடருக்கு முகம் கொடுத்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மலையக மக்கள் விடயத்தில் அவசர உணர்வு பூர்வமான கருத்தினை வெளியிட்டு இருக்கிறார் சிவ பூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி. ஆறு. திருமுகம் திருமுருகன். ஐயாவின் உணர்வு பூர்வமான உளவெளிபாட்டுக்கு மலையக சமூக ஆய்வு மையம் நன்றி கூறுகின்றது. இவ்வாறான உணர்வுபூர்வமான கருத்தினை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் வெளிப்படுத்தி இருந்தார். மலையக மக்களின் நிலையினை இன சுத்திகரிப்பு மற்றும் இன அழிப்பிற்கு உள்ளாகி வரும் மக்களின் நீண்டகால பாதுகாப்பு கருதி அரசியல் அறவியலில் நின்று கூட்டாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே எமது கருத்து நிலைப்பாடு. மலையக மக்களும் 1948க்கு பின்னர் திட்டமிட்ட இன அழிப்பிற்க்கும், இன சுத்திகரிப்பிற்கும் உள்ளாகி நாளாந்தம் சிதைவுகளையே சந்தித்தவரும் ஒரு தேசிய இனமாகும். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க மலையகத்தில் வீடற்றிருக்கும் 1,50,000 பேருக்கு கொடுப்பதற்கு போதுமான காணி மலையகத்தில் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறத் தொடங்கி இருக்கின்றார். இது அவர்களின் நீண்ட கால அரசியல் சித்தாந்தம். அதுவே சிங்கள பௌத்த கருத்தியலுமாகும். தற்போது அவர்கள் பேரிடர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மலையக மக்களை சிதைக்க முயல்வதை இன அழிப்பிற்கும் இன படுகொலைக்குப் முகம் கொடுக்கும் சமூகமாக அதனை தடுத்து நிறுத்துவதற்கும் அவர்களின் எதிர்கால அரசியல் பாதுகாப்பினையும் கருதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் வேண்டும். மலையக மக்கள் நாட்டின் சனத்தொகையில் இரண்டாம் இடத்தில் இருந்த போது அவர்களின் அரசியல் எழுச்சிக்கு பயந்து 1948 ஆம் சமூகத்தின் வாக்குகளை பறித்ததோடு மட்டும் நின்று விடாது இந்தியாவின் அயல் நாடுகளுடன் அரசியல் உறவில் ஏற்பட்டிருந்த விரிசலை தனக்கு அதனை சாதகமாக்கி 1964 ல் பல லட்சம் மலையகத்தவர்களை நாட்டை விட்டே வெளியேற்றும் ஒப்பந்தத்தை (சிரிமா-சாஸ்திரி) சிறிமாவோ பண்டாரநாயக்கா மேற்கொண்டார். இது இரு நாடுகளும் இணைந்து நடாத்திய முதலாவது இனப்படுகொலை என்றே அடையாளப்படுத்தல். அதே சிறிமாவோ பண்டார நாயக்க தமது 1970- 77 ஆட்சி காலகட்டத்தில் தோட்டங்களை அரசுடைமையாக்குவதாக கூறி சிங்களமயமாக்கி பல தோட்டங்களில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி; உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து சிங்கள காடையர்களைக் கொண்டு அடித்து துரத்த இடமளித்த வரலாறும் உண்டு. மேலும் நாட்டின் பொருளாதார சீர்திருத்த செயல் திட்டத்தினை முன்னெடுத்து மலையத்தவர்களை பட்டிணி சாவிற்குள் தள்ளி கொலை செய்ததையும் மறக்க முடியாது.இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் உயிர் பாதுகாப்பு தேடி சுயமாகவும், காந்திய வழிகாட்டலோடும் வடக்கு மற்றும் கிழக்கு சென்று குடியேறினர். இதனையே சிங்கள பௌத்தமும் விரும்பியது. அடுத்து வந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் திறந்த பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி எனும் பேரில் மலையகத்தவர் வாழுடங்கள் சூறையாடப்பட்டு அவ் அவ்விடங்களில் இருந்து மலையக மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் காலத்தில் நடந்த திட்டமிட்ட இனவாத வன் செயலின் காரணமாக பாதிக்கப்பட்டோர் வடக்கு கிழக்கிற்கும், இந்தியாவிற்கும் சென்றனர். மலையகத்தை அபிவிருத்தி திட்டத்திற்குள் கொண்டுவராது, பெருந்தோட்டத் தொழிலுக்கு அப்பால் தொழில் வாய்ப்பினை உருவாக்காது, கல்வி, சுகாதாரத் துறைகளை மேம்படுத்தாது கைவிட்டதால் ஆயிரக்கணக்கானோர் மலையகத்தை விட்டு தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் தினமும் வெளியேறிவருகின்றனர். இதிலே மௌன மகிழ்வு காண்பது சிங்கள பௌத்த பேரினவாதமே. அதுமட்டுமல்ல கடந்த காலங்களில் மலையக மக்களுக்கு காணி கொடுப்பதாக கூறிய எந்த பேரினவாத ஆட்சியாளர்களும் அதனை கொடுப்பதற்கு துணியவில்லை. அரசியலுக்காக வீடுகளைக் கட்டி சலுகை மாயைக்குள் அவர்களை தள்ளி தேர்தல் அரசியலையே முன்னெடுத்தனர். வீட்டுக்குரிய உரிமை முழுமையாக இதுவரை கொடுக்காது இருப்பதும் காணி உரிமை நிரந்தரமாக அவர்களுக்கு கிடைக்கக் கூடாது எனும் மனநிலையிலாகும். மலையக மக்கள் தமக்கே உரிய இன அடையாளங்களை பாதுகாப்பு தேசிய இனமாக வளர்ந்து நிற்கும் சூழ்நிலையில் அவர்கள் தங்களது கடும் உழைப்பாலும் உயிர்த்தியாகத்தாலும் உருவாக்கிய மலையகம் எனும் தேசத்தில் வாழ்வதே அவர்களுக்கான அரசியல் பாதுகாப்பாகும். தற்போது நிகழ்ந்திருக்கும் இயற்கை பேரிடர் இக்கட்டான சூழலை பயன்படுத்தி மலையக மக்களின் நில உரிமையை தட்டி பறிக்கும் செயல்பாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரும் துணை போகக்கூடாது. நாட்டில் வடகிழக்கு தமிழர்களும், மலையகத் தமிழர்களும் இந்துக்கள் அல்லது சைவர்கள் என்பதற்காக இதுவரை ஒடுக்கப்படவுமில்லை படுகொலை செய்யப்பட்டவுமில்லை. தமிழர்கள் என்பதற்காகவே நாம் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றோம். அழிக்கப்படுகின்றோம்.நில பறிப்பிற்கு உள்ளாகின்றோம். இதற்கு எதிராக கூட்டு அரசியல் செயல்பாடு என்பது அவரவர் நிலத்தில் அவரவரது அடையாளங்களோடு அரசியல் கௌரவத்தோடு வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதாகும். இயற்கை அனர்த்தத்தை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் மலையக மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துக்கு எடுக்கும் முயற்சிக்கு எந்த வகையிலும் எவரும் இடமளிக்காத இருப்பதோடு அவர்களின் அரசியல் பாதுகாப்பு மிகு எதிர்காலம் கருதி மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என்று தெரிவித்துள்ளார். மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல் | Virakesari.lk
-
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. மழைவீழ்ச்சி மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு
11 Dec, 2025 | 01:30 AM (எம்.மனோசித்ரா) வடகீழ் பருவ பெயர்ச்சி காலநிலை காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு,மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேனைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மேலும் புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. களுத்துறையிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது. களுத்துறையிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொத்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை தித்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக நேற்று மாலை வரை 639 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதோடு, 193 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 524 678 குடும்பங்களைச் சேர்ந்த 1 814 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை 26 841 குடும்பங்களைச் சேர்ந்த 85 351 பேர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 5346 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 86 245 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்தோடு பதுளை, கம்பஹா, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டள்ள இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. மழைவீழ்ச்சி மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு | Virakesari.lk
-
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி
Editorial / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 12:03 - 0 - 56 மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த ரிப்பர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இச் சம்பவத்தில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் சோபனாத் வயது 35 என்பவரே பலியாகியுள்ளார். கிளிநொச்சி நகரிலிருந்து இரணைமடு நோக்கி தனது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவர் வில்சன் வீதி மொட்டை பாலத்திற்கு அருகில் வீதியின் ஓரமாக உந்துருளியை நிறுத்த முற்பட்ட போது அவரை பின் தொடர்ந்து மணலுடன் வந்த ரிப்பர் உந்துருளியை நோக்கி நெருங்கி வருவதனை அவதானித்த மனைவி உந்துருளியிலிருந்து வேகமாக இறங்கி வீதியின் மறுபுறம் ஓடியுள்ளார். அந்த சமயத்தில் ரிப்பர் குறித்த நபரின் மீது மோதியத்தில் அவர் ரிப்பரின் பின்பக்க சில்லுக்குள் சிக்குண்டதோடு மணலும் அவரின் மீது கொட்டியத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான சிசிரிவி காட்சிகளிலும் மேலே குறிப்பிட்டவாறே பதிவாகியுள்ளது. சம்பவத்தின் போது ரிப்பர் சட்டவிரோத மணலுடன் காணப்பட்டதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர். திருவையாறு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக கிளிநொச்சி மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களுக்கு சம்பவத்தில் இறந்தவர் தகவல் தெரிவித்து வருபவர் என்பதுடன் 119 க்கும் தகவல் வழங்கியவர் எனவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இச் சம்பவம் விபத்தாக இருக்க முடியாது என்றும் இது திட்டமிடப்பட்ட கொலையாகவே காணப்படுகிறது என்று உறவினர்கள் குறிப்பிடுகின்றனர். Tamilmirror Online || சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி
-
வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் இணைந்த வெளிநாட்டவர்
Janu / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 02:10 - 0 - 40 பதுளு ஓயா பெருக்கெடுத்ததால் வெள்ளத்தில் மூழ்கிய பதுளை ஓயா தோட்டம் கிராமத்தில் உள்ள வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. இந் நிலையில் எல்ல பகுதிக்கு வருகை தந்த சுவீடன், ஜெர்மனி, நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இரண்டு நாட்களாக மக்களுடன் இணைந்து வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமனசிறி குணதிலக்க Tamilmirror Online || வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் இணைந்த வெளிநாட்டவர்
-
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி மாயம்
மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு மறுப்பு Editorial / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 02:11 - 0 - 41 கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன மஞ்சள் அனகொண்டா குட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை தெஹிவளை மிருகக்காட்சிசாலை மறுத்துள்ளது. அந்தக் குட்டி இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதிப் பணிப்பாளர் கசுன் ஹேமந்தா தெரிவித்தார். காணாமல் போன ஊர்வன இலங்கையில் உள்ள ஒரே மஞ்சள் அனகொண்டா குட்டி என்று கூறினார். “தெஹிவளை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். கன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. தேடுதல் வேட்டை இன்னும் நடந்து வருகின்றன,” என்றும் அவர் கூறினார். அடைப்பின் பூட்டு சேதப்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். இருப்பினும், விசாரணைகளின் போது, பாம்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்து தப்பியிருக்கலாம் என்பதைக் குறிக்கும் ஒரு பகுதியை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். “விலங்கு திருடப்பட்டதா அல்லது அது தானாகவே தப்பித்ததா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நடந்து வரும் காவல்துறை விசாரணை மற்றும் துறை அளவிலான விசாரணைகளில் இருந்து உறுதியான பதில் கிடைக்கும்” என்று ஹேமந்தா குறிப்பிட்டார். காணாமல் போன மஞ்சள் அனகொண்டா குட்டி, தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு செப்டம்பர் 12 ஆம் திகதி அன்று சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பாம்புக் குழுவில் ஒன்றாகும். மூன்று இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகள் அடங்கிய இந்தப் பாம்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பறிமுதல் செய்யப்பட்டு, தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டது. அது காணாமல் போகும் வரை, அந்தக் குட்டி ஊர்வன பூங்காவின் காட்சிப்படுத்தப்படாத இடத்தில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படாத விலங்குகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது என்றார். Tamilmirror Online || மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு மறுப்பு
-
கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பபெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டார். மரண மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியவில்லை என்று கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோர் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தர். இருவரும்2011 டிசம்பர் 10 ஆம் திகதியன்கடத்தப்பட்டதாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (10) ஆஜரான முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) கல்வி விவகாரங்களுக்கான செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்தார். Tamilmirror Online || கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு
-
இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பித்துள்ள கூகுள் மெப்
10 Dec, 2025 | 01:30 PM நாட்டின் சுமார் 12,000 கிலோமீட்டர் நீளமுள்ள வீதி வலையமைப்பு தொடர்பான தகவல்களை கூகுள் மெப் புதுப்பித்திருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, A மற்றும் B தரத்திலான பிரதான வீதிகள் தொடர்பான தகவல்களை இணைத்து Google Map அதன் பாதை வரைபடங்களை புதுப்பித்துள்ளது. வீதி மூடல்கள், பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் போன்ற 6 குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை தகவல்களுடன் இந்த புதிய பாதை வரைபட அம்சம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது, பயணங்களை சிறப்பாக திட்டமிடவும், நேரத்தை மீதப்படுத்தவும், எதிர்பாராத போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கவும் மிகப் பெரும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த கூகுள் மெப் நடைமுறைக்கான முன்னோட்டம் இடம்பெறும் என்றும் Google Map செயலியை பார்த்து பாதுகாப்பாக பயணித்தை தொடர முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பித்துள்ள கூகுள் மெப் | Virakesari.lk
-
களப் பணியாற்றியபோது உயிரிழந்த விமானப்படை, கடற்படை வீரர்களுக்கு யாழில் அஞ்சலி
10 Dec, 2025 | 06:09 PM நாட்டில் ஏற்பட்ட பேரிடரின்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் மரணமான விமானிக்கும், சுண்டிக்குளம் பகுதியில் முகத்துவாரம் வெட்டச் சென்ற நிலையில் உயிரிழந்த 5 கடற்படையினருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் பதாதை கட்டப்பட்டுள்ளது. வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் மீட்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தபோது கடந்த 30ஆம் திகதி ஹெலிகொப்டர் ஒன்று கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது. அதன்போது, விமானியான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய (வயது 41) என்பவர் உயிரிழந்தார். அதேவேளை சுண்டிக்குளம் பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி களப்பு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் கடமையில் ஈடுபட்டிருந்தபோது 5 கடற்படையினர் உயிரிழந்தனர். களப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த ஆறு வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய ஸ்ரான்லி வீதியில் பதாகை கட்டப்பட்டுள்ளது. களப் பணியாற்றியபோது உயிரிழந்த விமானப்படை, கடற்படை வீரர்களுக்கு யாழில் அஞ்சலி | Virakesari.lk
-
வவுனியா வடக்கை அத்திப்பட்டியாக்க போகின்றீர்களா?; து.ரவிகரன் எம்பி!
அதிகரித்துள்ள சிங்களக் குடியேற்றங்களால் வவுனியா வடக்கிலிருந்து வெளியேறும் தமிழர்கள்; 23 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு. 10 Dec, 2025 | 07:07 PM வுனியா வடக்கில் தற்போது அதிகரித்துள்ள சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் காணி அபகரிப்பு நெருக்கடிகள் காரணமாக வவுனியா வடக்கிலிருந்து அதிகளவில் தமிழ் மக்கள் வெளியேறியுள்ளதாகவும், கிராமங்களில் மக்கள் இன்மையினால் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 23பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், மேலும் சில பாடசாலைகள் மூடப்படும் நிலையிலும் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே வவுனியா வடக்கில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் அபகரிப்புக்களைத் தடுக்குமாறும், தமிழ்மக்கள் தமது பூர்வீக நிலங்களில் வாழும் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துமாறும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். வவுனிய மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் அதிக பாடசாலைகள் மூடப்பட்ட கல்விவலயமாக வவுனியா வடக்கு கல்வி வலயம் காணப்படுகின்றது. அந்தவகையில் வவுனியா கல்வி வலயத்தில் 23பாசாலைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகளவில் பாடசாலைகள் மூடப்படுவதற்கு காரணமென்ன? அந்தக்காரணத்தினை அதிகாரிகளான நீங்கள் எம்மிடம் தெரிவித்தாலேயே எம்மாலும் அந்தப் பாரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக வவுனியா வடக்கில் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதால் எமது மக்கள் வெளியேறுகின்றனர். அத்தோடு பாடசாலைகளில் வளப்பற்றாக்குறைகளும் காணப்படுகின்றன. இந்தக் காரணங்களினாலேயே வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இவ்வாறு பாடசாலைகள் அதிகளவில் மூடப்பட்டுள்ளது - என்றார். இந்நிலையில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் இதன்போது பதிலளிக்கையில், எம்மைப் பொறுத்தவரைக்கும் வளப்பற்றாக்குறை காரணமாக எந்தப்பாடசாலைகளும் மூடப்படவில்லை. மாணவர்கள் இல்லாமையினாலேயே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அந்தவகையில் வவுனியா வடக்கு கல்விவலயத்தில் மூடப்பட்ட 23பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளை, ஆளுனரையும் அழைத்துச்சென்று பார்வையிட்டிருந்தோம். அந்தவகையில் அந்தப்பகுதிகளில் மக்கள் இல்லாமையினாலேயே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் தொகை குறைவடைவதால் மூடப்படுகின்ற நிலையிலும் இன்னும் சில பாடசாலைகள் காணப்படுகின்றன - என்றார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், வவுனியா வடக்கு என்பது மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசமாகும். இங்கு சிங்கள குடியேற்றங்களினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள், காணிகள் அபகரிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புக்களினால் இந்தப்பிரதேசத்திலிருந்து எமது மக்கள் வெளியேறிவருகின்ற மிகமோசமான பாதிப்பு நிலை காணப்படுகின்றது. இந்தவிடயத்தில் ஆளுநரும், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும் கவனஞ்செலுத்தவேண்டும். வவனியா வடக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கள் தொடர்பில் ஒரு மாதகாலத்திற்குள் ஆராயப்படுமென பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். அதனை விரைந்து மேற்கொள்ளுமாறு பிரதி அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். வவுனியா வடக்கில் சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் அபகரிப்பு நெருக்கடிகளைத் தடுத்து எமது தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களிலிருந்து வெளியேறாமல் வாழ்வதற்குரிய வாழ்வுரிமையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதனைவிட வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் மிக அதிகளவில் வளப்பற்றாக்குறைகளும் காணப்படுகின்றன. அதனை வடக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மறுக்கமுடியாது. எனவே வவுனியா வடக்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் வளப் பற்றாக்குறைகளைத் தீர்ப்பதற்கு வடமாகாணகல்வி அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதிகரித்துள்ள சிங்களக் குடியேற்றங்களால் வவுனியா வடக்கிலிருந்து வெளியேறும் தமிழர்கள்; 23 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு | Virakesari.lk
-
ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது
ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது Editorial / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 02:44 - 0 - 26 இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபை மத்திய அவசரகால மீட்பு நிதியிலிருந்து (CERF) 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாய் 1.38 பில்லியன்) ஒதுக்கியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவு விநியோகம், தங்குமிடம் ஆதரவு, நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட அவசர உதவிகளை விரைவாக அதிகரிக்க இந்த நிதியுதவி உதவும். இலங்கை முழுவதும் உள்ள சமூகங்கள் பரவலான தாக்கங்களுடன் தொடர்ந்து போராடி வருகின்றன, வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட விரிவான சேதம் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் இடம்பெயர்ந்துள்ளன. சமீபத்திய மதிப்பீடுகள் சூறாவளியின் விளைவுகள் ஆரம்பத்தில் புரிந்து கொள்ளப்பட்டதை விட பரந்ததாகவும் கடுமையானதாகவும் இருப்பதால், பலர் முழுமையாக மீள்வதற்கு நிலையான ஆதரவு அவசரமாக தேவைப்படுவதாகக் காட்டுகின்றன. "இந்த நிதி இலங்கைக்கு ஒரு முக்கியமான தருணத்தில் வருகிறது" என்று இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் கூறினார். "டித்வா சூறாவளி நாடு முழுவதும் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துள்ளது, மேலும் பல குடும்பங்கள் இன்னும் தங்கள் அடிப்படை அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடி வருகின்றன. அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் உபகரணங்களுடன் ஐ.நா. விரைவாக ஆதரவளித்தது. சான்றுகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகளால் வழிநடத்தப்படும் ஒருங்கிணைந்த பதிலை உறுதி செய்வதற்காக நாங்கள் அரசாங்கம், சிவில் சமூக கூட்டாளிகள் மற்றும் மனிதாபிமான சமூகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். இந்த அவசர நிதி, மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஆதரவை அடைய உதவும்." ஐ.நா.வின் உலகளாவிய அவசர நிதியம், CERF, திடீர் நெருக்கடியின் ஆரம்ப கட்டங்களில் உயிர்காக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்க மனிதாபிமான பதிலளிப்பவர்களுக்கு விரைவான நிதியை வழங்குகிறது. Tamilmirror Online || ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது
-
பதுளைக்கு மீண்டும் எச்சரிக்கை
பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன அறிவுறுத்தியுள்ளார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல், தற்போது தங்கியுள்ள தங்குமிடங்கள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் தங்குமாறு மாவட்டச் செயலாளர் மேலும் மக்களுக்கு அறிவுறுத்துகிறார். பதுளை மாவட்டத்தில் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட பேரழிவுகளால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களின் இடிபாடுகளை மக்கள் இன்னும் தேடி வருவதாகவும், மாவட்டத்தில் மீண்டும் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு, பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும், எனவே மக்கள் பாதுகாப்பான மையங்கள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் தங்குமாறு மாவட்டச் செயலாளர் கேட்டுக் கொண்டார். Tamilmirror Online || பதுளைக்கு மீண்டும் எச்சரிக்கை
-
யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்ட பாலத்தை பார்வையிட்டார் இந்திய துணைத்தூதுவர்
09 Dec, 2025 | 05:21 PM இந்திய இராணுவத்தினரின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் பாலத்தினை யாழ் இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி பார்வையிட்டார். பரந்தன் முல்லைத்தீவு A-35வீதியின் பதினோராவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய இராணுவத்தினரின் பங்களிப்புடன் இலங்கை இராணுவம் ,வீதி அபிவிருத்தி அதிகார சபை இணைந்து புனரமைப்பு பணியில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுவருகின்ற நிலையில் யாழ் இந்தியத்துணைத்தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (09) பார்வையிட்டனர். இதன்போது யாழ் இந்தியத்துணைத்தூதுவர் சாய் முரளி அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஒப்ரேஷன் சாகர் பந்து நடவடிக்கையின் மூலம் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் இந்திய இராணுவத்தினர் அபிவிருத்தி பணியினை முன்னெடுத்து வருகின்றனர் அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியின் 11 ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலத்தின் அபிவிருத்தி பணிகள் தற்பொழுது இந்திய இராணுவத்தின் ஒப்ரேஷன்சாகர் பந்து அணியினர் முன்னெடுத்த வருகின்றனர். அது மட்டும் இன்றி தற்பொழுது ஏற்பட்ட வெள்ள அர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இதுவரையில் இந்தியா உணவு மற்றும் உடை மருத்துவம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கையிலும் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து தனது உறவை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். இந்த விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளர், கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள் கடற்தொழில் அமைச்சின் செயலாளர் மருங்கன் மோகன் என பலரும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்ட பாலத்தை பார்வையிட்டார் இந்திய துணைத்தூதுவர் | Virakesari.lk
-
பறங்கி, பாலி ஆறுகளின் தாழ்நில பிரதேசங்களுக்கு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை
09 Dec, 2025 | 05:35 PM பறங்கி, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களான சீது விநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கவும். கால்நடை மேய்ப்பர்களும் வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் உங்கள் கால் நடைகளை பராமரிக்கவும். தொடர்ச்சியாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகளை கவனித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. பறங்கி, பாலி ஆறுகளின் தாழ்நில பிரதேசங்களுக்கு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை | Virakesari.lk
-
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி மாயம்
09 Dec, 2025 | 03:49 PM தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளது. இந்நிலையில், மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். இந்த மஞ்சள் அனகொண்டா உட்பட மூன்று பாம்பு இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளை பெண் ஒருவர் செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்தார். இதன்போது, குறித்த பாம்புகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால் கைப்பற்றப்பட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டன. மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி காணாமல் போனது தொடர்பில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் கசுன் ஹேமந்த சமரசேகர தெரிவிக்கையில், ஆறு பாம்புகளும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் காலம் முடிவுற்ற பின்னர் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. தற்போது காணாமல் போன அனகொண்டா பாம்புக் குட்டி இதற்கு முன்னர் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி மாயம் | Virakesari.lk