Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் மகிந்தவின் அகம்பாவம்! இந்தியாவின் அடுத்த நகர்வு என்ன? (பூராயப்பார்வை)

Featured Replies

இலங்கை வந்த இந்திய பாராளுமன்றக் குழுவிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெளிவாகவே கூறிவிட்டார்: "வடக்கில் உள்ள படையினரை அங்கிருந்து வெளியேற்ற முடியாது." அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் "அங்கிருந்து படையினரை வெளியேற்றி இந்தியாவுக்கா அனுப்ப முடியும்?" எனவும் பதில் கேள்வி ஒன்றைக் கேட்டு இந்தியக் குழுவினரை மகிந்தர் வாயடைக்கச் செய்திருக்கின்றார்.

இலங்கைத் தமிழர்கள் இன்று எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் பிரதானமானது வடக்கு, கிழக்கில் காணப்படும் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம்தான். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் சுமார் ஆறு பேருக்கு ஒருவர் என்ற வகையில் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கின்றது. வன்னியில் பத்து வீடுகளுக்கு ஒரு முகாம் என்ற வகையில் இராணுவ முகாம்கள் உள்ளன. தமிழர்களை எதிரிகளாகப் பார்க்கும் ஒரு இராணுவம் இந்தளவுக்குச் செறிவாக நிலைகொண்டுள்ள நிலையில் மக்கள் எவ்வாறு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்?

வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் மக்கள் சொன்னவைகளை, தாம் நேரடியாகக் கேட்டவைகளை ஜனாதிபதியிடம் சனிக்கிழமை காலை இந்தியக் குழுவினர் வெளிப்படுத்திய போதுதான், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மேலே உள்ளவாறு பதிலளித்திருக்கின்றார்.

ஜனாதிபதியின் பதில் இந்தியக் குழுவினரை வாயடைக்கச் செய்திருக்கலாம். ஆனால், தமிழர்களின் இயல்பு வாழ்வுக்காக எதனையும் செய்வதற்கு அவர் (மகிந்தர்) தயாராகவில்லை என்பதை இதன் மூலம் இந்தியக் குழுவினர் புரிந்துகொண்டிருப்பார்கள் என நம்பலாம்.

பெரும் அரசியல் பரபரப்புக்களுக்கு மத்தியில்தான் இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் இலங்கை விஜயம் இம்முறை இடம்பெற்றிருக்கின்றது. இலங்கை அரசியலிலும் தமிழகத்திலும் பரபரப்பை மட்டுமன்றி, ஒருவித எதிர்பார்ப்பையும் இந்த விஜயம் ஏற்படுத்தியிருந்தமைக்கு சில காரணங்கள் இருந்துள்ளன. இந்தியக் குழுவின் வருகை ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதில் அழுத்தத்தைக் கொடுப்பதாக இருக்குமா என்பதையே இப்போது நாம் ஆராய வேண்டியுள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு ஒன்று காணப்படும் என்பதில் நம்பிக்கை வைக்க முடியாதவர்களாகவே ஈழத் தமிழர்கள் உள்ளனர். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. சர்வதேசம் சொல்வது எதனையும் கேட்கமாட்டேன் என்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் போக்கு ஒரு புறம், மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொடுக்கும் முடியாத நிலையில் இந்திய அரசு மட்டுமன்றி சர்வதேசமும் இருப்பது மறுபுறம் ஈழத் தமிழர்களை நம்பிக்கையற்றவர்களாக்கியிருந்தது.

இந்த நிலைமையிலும் இந்திய நாடாளுமன்றக் குழுவின் வருகை தமிழர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக இருந்துள்ளது. அதிமுக, மற்றும் திமுக என்பன இடம்பெறாமையால் ஒருவகையில் வலுக்குறைந்த நிலையிலேயே இந்திய குழு இலங்கை வந்துள்ளது என்பது உண்மைதான். இருந்த போதிலும், இந்தியத் தூதுக்குழுவின் வருகை ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தமைக்கு மூன்று காரணங்களைக் கூறமுடியும்.

முதலாவது, தற்போதைய இந்திய பாராளுமன்றத் தூதுக்குழு அனைத்துக்கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கியிருக்கின்றது. குறிப்பாக இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ்தான் இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றிருந்தார். இந்தியாவின் காங்கிரஸ் அரசைப் பாதுகாக்க வேண்டும் அல்லது அதனை நியாயப்படுத்த வேண்டும் என்ற எந்தவொரு தேவையும் அவருக்கு இருக்கவில்லை. அதனால் சுயாதீனமான முறையில் செயற்பட்டு தகவல்களைச் சேகரித்து தன்னுடைய அறிக்கையை அவர் கொடுப்பார் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. அதனைவிட, மத்திய அரசுக்கும் தேவையானளவுக்கு அழுத்தங்களை அவர் கொடுக்கலாம்.

இரண்டாவது, இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட போது, இந்தியப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள். இலங்கைப் பிரச்சினைக்கு கௌரவமானதும் நிலையானதுமான ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியாவின் அனைத்துக் கட்சிகளும் கொண்டுள்ள அக்கறையை இது வெளிப்படுத்தியது. இதனால், அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய குழு அரசியல் ரீதியில் வலுவானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

மூன்றாவதாக, ஏற்கனவே இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழு தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதனால், தற்போதைய குழு அதேபோன்று செயற்படாது எனவும், வலுவான ஒரு அறிக்கையைக் கொடுத்து மத்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் உள்ளது.

தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் இந்தியத் தூதுக்குழுவில் இடம்பெறாமை குழுவின் பலத்தைக் குறைப்பதாகவே இருந்தது. இந்திய மத்திய அரசையும், திமு.க.வையும் சங்கடத்துக்குள்ளாக்கும் நோக்கத்துடனேயே இறுதி வேளையில் இக்குழுவில் இடம்பெறப்போவதில்லை என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இது ஒரு அரசியல் நோக்கத்துடனான காய்நகர்தலாகவே கருதப்படுகின்றது. இதனையடுத்து ஜெயலலிதாவின் வியூகத்துக்குள் தான் அகப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக திமுகவும் குழுவில் இடம்பெறாது என அதன் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

தமது அரசியல் நலன்களுக்காக காய்நகர்த்திய இவ்விரு தரப்பினரும் இலங்கை வந்து ஈழத் தமிழர்களின் நிலைமைகளையிட்டு தமது கவனத்தை செலுத்தியிருக்கலாம். இலங்கை அதிகாரிகளைக் கேள்வி கேட்டிருக்கலாம். இந்தியா சென்ற பின்னர் தனியாகக் கூட அறிக்கைகளை வெளியிட்டிருக்கலாம். இதற்காகக் கிடைத்த சந்தர்ப்பத்தை இரு தரப்பினரும் குறுகிய அரசியல் நலன்களுக்காக தவறவிட்டுள்ளார்கள் என்பதே உண்மை! அதேவேளையில் தம்மைச் சங்கடப்படுத்தக் கூடிய கேள்விகளைக் கேட்கக்கூடியவர்கள் யாரும் இந்தக் குழுவில் இடம்பெறாததையிட்டு மகிந்த அரசு சற்று மகிழ்ச்சியடைந்திருக்கலாம் என்பதும் உண்மை!

கொழும்பு, வடக்கு, கிழக்கு மலையகம் என ஆறு நாட்களில் இந்தக் குழுவினர் சூறாவழியாகச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போதிலும், ஈழத்தமிழர்களின் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட மூன்று விடயங்களே இவர்களுடைய கவனத்துக்குரியதானதாக இருந்தது!

முதலாவது, தமிழ் மக்களுடைய பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கான அதிகாரப்பரவலாக்கலை வழங்குவது. இது தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்ற போதிலும், மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் செயலளவில் எதனையும் காண்பிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு வருடமாக நடத்திய பேச்சுக்களைக் கூட அரசாங்கம் கடந்த டிசெம்பருடன் இடைநிறுத்திவிட்டது. இவ்விடயத்தில் இந்தியா அழுத்தம் கொடுத்தாலும், அதனையிட்டு மகிந்தர் எந்தளவுக்கு அக்கறைப்படுவார் என்பது கேள்விக்குறிதான்!

இரண்டாவது, போர் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் சென்றுள்ள போதிலும் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீளக்குடியேற்றப்படவில்லை. வவுனியாவிலுள்ளன மெனிக் பாம் முகாமில் சுமார் 8,000 பேரும், திருமலை சம்புரிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 7,000 மக்கள் கிழக்கிலங்கையிலும் அகதி முகாம்களில்தான் இன்னும் உள்ளார்கள். இவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாமைக்கு அவர்களுடைய சொந்த இடங்களில் இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதுதான் பிரதான காரணம். தம்மால் தொடர்ந்தும் எந்த வசதிகளுமற்ற முட்கப்பி முகாம்களில் இருக்க முடியாது என்பதை மெனிக் பாம் முகாமிலிருந்த மக்கள் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினரிடம் தெளிவாகவே சொல்லிவிட்டார்கள்.

இந்தியக் குழுவினர் முட்கம்பி முகாம்களுக்குச் சென்று வந்திருக்கின்ற போதிலும், அவர்களுடன் இலங்கை அமைச்சர்களும், அவர்களுக்கான பாதுகாவலர்களும் மட்டுமன்றி இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் சென்று வந்தமையால் முகாம் மக்களால் சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்ல முடியவில்லை. பல விடயங்களை சுயமாக 'தணிக்கை' செய்ய வேண்டியவர்களாகவே அவர்கள் இருந்துள்ளார்கள். இந்தியக் குழுவினர் தனியாகச் சென்றிருந்தார் மேலும் பல தகவல்களை அவர்களால் பெற்றிருக்க முடியும். இதனைவிட பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் சம்பூர் பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிவதில் போதிய அக்கறை காண்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில், போரால் இடம்பெயர்ந்த மக்களின் தற்போதைய அவலமான நிலை தொடர்பில் போதிய தகவல்களை அவர்கள் பெற்றுள்ளார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது! மீள்குடியேற்றப்பட்டதாகச் சொல்லப்படுபவர்கள் கூட வழமையான வாழ்க்கைக்குத் திரும்பவோ தமது வாழ்வாதாரங்களைப் பெற்றுக்கொள்ளவோ முடியாதவர்களாகவே உள்ளனர்.

மூன்றாவதாக, போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கு கிழக்குப் பகுதி இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட ஒரு பகுதியாகவே காணப்படுகின்றது. இந்தியக் குழுவினர் ஹெலிக்காப்டரைத் தவிர்த்து தரை வழயாக வடபகுதிக்குச் சென்றிருந்தால் இதனைத் தெளிவாகப் பார்த்திருக்க முடியும். இந்த இராணுவ ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் வழமையான வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தடையாகவே உள்ளது. வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என யாழ்ப்பாணத்தில் மக்கள் இந்தியக் குழுவினரிடம் கோரிக்கை விடுத்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.

போரில்லாத நிலையில் இராணுவத்தை வெளியேற்றிவிட்டு பொலிஸ் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தை அரசு ஏற்கத் தயாராக இருக்கவில்லை.

இந்தியக் குழுவினர் ஆறு நாட்கள் இலங்கையில் இருந்துள்ள போதிலும், அரசாங்கத்தினால் வழிநடத்தப்பட்ட ஒரு சுற்றுப்பயணத்தையே அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். இதனால், தமிழர்களின் அவல நிலை தொடர்பில் முழுமையான தகவல்களை அவர்களால் பெற்றிருக்க முடியுமா என்பது சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. இருந்த போதிலுரும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்ததன் மூலம் போதிய தகவல்களை அவர்கள் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

இனி இந்தியக் குழுவினர் தெரிவித்த விடயங்களுக்கு இலங்கை அரசின் பிரதிபலிப்புக்கள் எவ்வாறானதாக இருந்துள்ளது என்பதைப் பார்ப்போம்

1. அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் மீண்டும் தொடங்க வேண்டும் என்ற இந்தியத் தரப்பின் கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து தெளிவான பதில் இல்லை. மீண்டும் காலங்கடத்தப்படலாம்.

2. இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் ஜூன் இறுதிக்குள் மீள்குடியேற்றம் பூர்த்தியாகிவிடும் என அரச தரப்பு கூறியிருக்கின்றது. இது போன்ற வாக்குறுதிகள் புதிதல்ல!

3. இராணுவத்தை அகற்றுவது தொடர்பான கேள்விக்கு "முடியாது" என ஜனாதிபதி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இந்த நிலையில் இந்தியா கையில் எடுத்த மூன்று விடயங்களும் அப்படியேதான் இருக்கப்போகின்றது. இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ் கையளிக்கப்போகும் அறிக்கையும், அது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கையை எடுப்பது என்பதில் மன்மோகன் சிங் அரசாங்கம் எடுக்கும் முடிவிலும்தான் அடுத்த கட்டம் உள்ளது என கூறலாம்.

பூராயத்துக்காக கொழும்பிலிருந்து பார்த்தீபன்.

http://www.pooraayam...3-07-25-15.html

Edited by ஊர்பூராயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.