Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோவிந்தனின் புதியதோர் உலகம் : மறு வாசிப்பு - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவிந்தனின் புதியதோர் உலகம் :மறு வாசிப்பு - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

govindan_CI.jpg

புதியதோர் உலகம் நாவலின் முதல் பதிப்பு 1985 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. அதனது இரண்டாவது பதிப்பு 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. முதலாவது பதிப்பு வெளியானபோது உயிருடன் இருந்த கோவிந்தன் இரண்டாவது பதிப்பு வெளிவரும் முன்பே, கவிஞர் செல்வியைப் போலவே விடுதலைப் புலிகளால் ‘காணாமல்’ போகச் செய்யப்பட்டார். 1985 ஆம் ஆண்டு வெளியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உட்கட்சிப் போராட்டம் பற்றிய கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலை விடுதலைப்புலிகள் பரவலாக விநியோகித்தார்கள். கோவிந்தனின் நாவல் வெளியான காலத்தின் பின், சில மாதங்களில் 1986 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைக் கழகத்தையும், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியையும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தையும் பிற விடுதலை அமைப்புக்களையும் விடுதலைப்புலிகள் தடைசெய்தார்கள்.

விடுதலைப்புலிகள் தடை செய்த மூன்று பிரதான அமைப்புக்களும் உட்கட்சி முரண்பாடுகளைக் கொண்டிருந்தன. தலைமைக்கும் அணிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வின்மையில் இந்த இயக்கங்களின் தலைமைகள் சிதைந்து வந்தன. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் போராளியான செழியனின்வானத்தைப் பிளந்த கதையும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் போராளியான கோவிந்தனின் புதியதோர் உலகமும் இதனைப் பதிவு செய்கின்றன. தமிழீழ விடுதலைக் கழகத்தினுள்ளும் பிளவுகள் தோன்றுகின்றன. இந்த இயக்கங்களின் உட்கட்சிப் போராட்டமும் பிளவுகளும் வெளியுலகிற்கு வந்ததற்கான காரணமாக இந்த இயக்கத்திலிருந்த, சர்வதேசீயப் புரட்சியோடு ஈழவிடுதலையை இனம் கண்ட இடதுசாரிகளின் குரல்களே இருந்தன.

கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவல் குறிப்பிடுவது போல விடுதலை அமைப்புகளினுள் தேசியவாதிகள்-அராஜகவாதிகள்-மார்க்சியர்களுக்கிடையிலான போராட்டம் முனைப்புப் பெற்று வந்த காலம் அது. இந்த அமைப்புக்களில் நிலவிய குறைந்த பட்ச ஜனநாயகமும், அதனை ஆதரிக்கிற போராளிகளுமே இந்த உட்கட்சிப் போராட்டங்கள் இயக்கங்களின் உள்ளும் வெளியிலும் நடக்க, தெரியவரக் காரணமாக இருந்தார்கள்.

தனிநபர் வழிபாட்டை மையமாகக் கொண்ட விடுதலைப்புலிகளின் அமைப்பு வடிவத்தினுள் உட்கட்சிப் போராட்டத்துக்கோ, அல்லது குறைந்த பட்சம் அத்தகைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை வெளியில் முன்வைப்பதற்கோ ஆன குறைந்தபட்ச ஜனநாயக வெளியோ அறவே இல்லை. வர்க்க குணாம்சம் எனும் அளவில் தேசியவாதிகளே அதிகாரம் செலுத்திய அவ்வமைப்பில் இடதுசாரி விமர்சனம் என்பது இருந்திருக்க வாய்ப்பேயில்லை. ஆயுதமேலாண்மையின் மூலம் ஒற்றை இயக்க அதிகாரம் என்பதனை உருவாக்க இயக்கங்களுக்குள்ளான இந்த உட்கட்சிப் போராட்டங்களும், தலைமைகளின் சிதைவும் விடுதலைப்புலிகளுக்குச் சாதகமாக அமைந்தன.

கோவிந்தன் கோரிய இயக்கத்திற்குள் ஜனநாயகம், மார்க்சீய-இடதுசாரி மரபார்ந்த விடுதலை இயக்கம் நோக்கிய கருத்தியல் செயல்பாடு என்பது விடுதலைப்புலிகள் இயக்கத்தை வழிநடத்திய தேசியவாதத்திற்குச் சவலாகவே இருந்திருக்கும். ஆகவேதான், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உட்கட்சிப் போராட்டம் குறித்த கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலை விநியோகித்த அதே விடுதலைப் புலிகள், இயக்கங்களைத் தடை செய்த ஐந்து ஆண்டுகளில், 1991 மே 17 கோவிந்தனை விசாரணைக்கென அழைத்துச் சென்று, ‘காணாது போக’ச் செய்தார்கள்.

கால் நூற்றாண்டுக்கும் முன்பாக கோவிந்தன் நாவலில் வெளிப்பட்ட மார்க்சீயம் இப்படி இருந்தது :

நான் என் காலத்தில் முனைப்பாக இருந்த தமிழ் சிங்கள மக்களின் ஐக்கியப்பட்ட சோசலிப் போராட்டத்தைச் செய்ய வேண்டும் என அரசியலில் ஈடுபட்டேன். அதில் வெற்றி காண முடியவில்லை. நீ உன் தலைமுறைப் போராட்டமான தமிழீழ விடுதலையினூடாக ஒரு சோசலிசப் புரட்சியை முன்னெடுக்க அரசியலில் நுழைந்திருக்கிறாய் (பக்கம் : 14).

நாவலின் பிரதான கதை சொல்லி அல்லது நாயகன் சங்கருக்கும் அவனது தந்தைக்கும் இடையிலான உரையாடல் என்பது மார்க்சீயத்துக்கும் தேசியத்துக்கும் இடையிலான உரையாடல். தொழிலாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலம் முழு மனித குலத்தையும் விடுவிக்கும் என்புது போல, தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது முழு சிங்கள சமூகத்தையும் விடுவிக்கும், சோசலிசப் புரட்சிக்கு இட்டுச்செல்லும் என்று நம்புகிறார் சங்கரின் தந்தை.

வரலாறு மறுபடி திரும்புகிறது. முள்ளிவாய்க்காலின் பின் சிங்கள மக்களுடன் ஒன்றுபட்ட சோசலிசப் புரட்சிக்கான குரல்கள் மறுபடி கேட்கின்றன. சங்கரது தந்தையின் அவநம்பிக்கை இப்போது நம்பிக்கை ஆகிவிட்டதற்கான சான்றுகள் தென்னிலங்கையில் இருக்கிறதா? முன்னணி சோலிசக் கட்சி உள்ளிட்ட புதிய இடதுசாரிகள் இனப் பிரச்சினைக்கான தீர்வாக ஏதேனும் தீர்க்கமாகச் சொல்கிறார்களா? இனப்பிரச்சினையைப் புரிந்துகொள்வதில் விக்ரமபாகு, ஜெயசூரியா போன்ற ஸ்தாபன பலமற்ற இடதுசாரிகள் தவிர, தென்னிலங்கை முதலாளித்துவவாதிகளுக்கும், சோசலிசவாதிகளுக்கும் இடையில் என்னதான் வித்தியாசம்? தமிழ் மார்க்சியர்களுக்கும் தேசியவாதிகளுக்கும் கால்நூற்றாண்டுக்கு முன் துவங்கிய உரையாடல், புதிய நிலைமைகளில், கோவிந்தனது நாவல் முன்வைத்த அதே முரணுடன்தான் இன்றும் இருக்கிறது.

சங்கர்-நடேசன்-கலாதரன்-கீதா-பிறேம்-கோபாலன்-சங்கரின் தந்தை,வசீகரன் போன்ற புரட்சியின் மார்க்சீய இலட்சியவாதிகள் ஒரு புறம். அவர்களது முரண்தர்க்கமாக பெரியய்யா என அழைக்கப்பெறும் செயலதிபர்-ராமநாதன்-சிற்றம்பலம்-உளவுப்படையினர்-போதை மருந்து கடத்துபவர்கள்- ஆயுதப்படைத் தலைவர் வரதன்-சித்திரவதைக் கூட நிர்வாகிகள் எனப் பிறிதொரு புறம். இவர்களுக்கிடையில் அன்றாட வாழ்வின் ஒடுக்குமுறை தோற்றுவிக்கும் துயர், அதிலிருந்து எழும் போராட்ட உணர்வு, எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் ஊர்வலங்களில் கலந்துகொள்ளும், போராளிகளுக்கு உதவும் வெகுமக்களாக-உறவுகளாக, சங்கரின் தாய்- வசீகரனின் தாய்- சங்கரின் காதலி நிர்மலா- சென்னை இயக்கக் கந்தோரில் செயலாற்றும் ரூபி,பத்மா- ஆயுதம் ஒளிக்க உதவும் முதிய தம்பதிகள், விடுதலைக்காகத் தம்மை ஒப்புவித்துப் பயிற்சிக்கு வந்த ஈழ இளைஞர்கள் என ஒரு விடுதலைப் போராட்ட சமூகத்தின் பல தாரைகளையும் அனுபவங்களையும் திரட்டிக் கொண்டதொரு படைப்பாக புதியதோர் உலகம் இருப்பதால்தான் இன்றும் இந்த நாவல் புத்தம் புதிதான சிந்தனைகளைக் கிளர்த்துவதாக இருக்கிறது.

போராளிகள் உருவாகி வந்த சமூகச் சூழல், விடுதலை நோக்கிய அவர்களது புனிதமான அற உணர்வுகள், பெண்களுக்கிடையில் உருவாகி வந்த போராட்ட உணர்வு, ஆண்மைய எதிர்ப்புணர்வு, பெண்கள் இயக்கத்தின் பகுதியாக ஆன பரிணாம வளர்ச்சி என விடுதலைப் போராட்டம் எனும் பிரக்ஞை ஒரு சமூகம் முழுவதும் தழுவி வருவதை கோவிந்தனின் நாவல் வெகு இயல்பாக சொல்லிக் கொண்டு போகிறது.

சங்கர் பயிற்சிக்காக தமிழகம் போய்விட்டான். அவன் காதலித்த பெண்ணான நிர்மலாவுக்கு வீட்டில் நெருக்கடி. வீட்டைவிட்டு வெளியேறி சங்கர் வீட்டுக்கு வந்துவிட நினைக்கிறாள் நிர்மலா. இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்யவும் விரும்புகிறாள். சங்கரின் தகப்பன் நேர்மையும் இலட்சியப் பிடிப்பும் கொண்ட ஒரு கம்யூனிஸ்ட் ஊழியர். எளிமையான வாழ்க்கை அவருடையது. நிர்மலா ஒப்பீட்டளவில் வசதியாக வாழ்ந்த பெண். தமது வீட்டுக்கு வந்ததால் பிற்பாடு அவள் தனது வீட்டின் சௌகரியங்களை இழந்துவிட்டதாகக் கருதக்கூடாது என அவர் நினைக்கிறார். நகைகள், பணம் ஏதுமற்று உடுபுடவையுடன் தனது வீட்டுக்கு அவள் வரவேண்டும் எனவும், ஒரு மகளைப் போல அவளைத் தமது குடும்பம் பார்த்துக் கொள்ளும் எனவும் அவர் நிர்மலாவிடம் சொல்கிறார்.

நிர்மலாவின் அப்போதைய மனநிலையைப் பற்றி கோவிந்தன் அப்போது எழுதுகிறார் : அந்த வீட்டிலுள்ள பொருட்கள் எல்லாம் இப்பொழுது பிரகாசமாகவும் சுத்தமாகவும் இருப்பது போலவும், அவைகளை உடனடியாக தொட்டுப் பார்க்க வேணடும் போலவும் ஒரு இன்பக் கிளுகிளுப்பு அவளுக்கு ஏற்பட்டது (பக்கம் 129). நாவல் இப்படியான எழுதுமுறையால்தான் ஜீவனுள்ள வாழ்வைப் பற்றிப் பிடித்ததாக ஆகிறது. நாவல் முழுக்கவும் இத்தகைய மனிதர்களது மனநுட்பத்தை கோவிந்தன் பதிவு செய்திருக்கிறார்.

எந்தப் படைப்பையும் சிலர் வாசக இன்பத்துக்காகவும் அது தரும் விறுவிறுப்புச் சுகத்துக்காகவும்தான் வாசிக்கிறார்கள். அதனையே படைப்பின் வெற்றியாகவும் சிலாகித்துச் சொல்கிறார்கள். வெகுஜன வாசகனுக்கும் இலக்கிய வாசகனுக்கும் இதில் வித்தியாசமில்லை. ஓரு ஆழ்ந்த அரசியல் நாவலைப் புரிந்து கொள்ள இந்த மனநிலை மட்டும் போதாது. ஓரு ஆழமான அரசியல் நாவல் மானுட நாடகத்தை, உறவுகளுக்கிடையிலான உன்னதத்தை, விகாரத்தை மட்டுமே தனது சித்தரிப்பில் கொண்டிருப்பதில்லை. அதனைக் கடந்து அந்த வாழ்வைக் உன்னதப்படுத்தும், கீழ்மைப்படுத்தும், அலைக்கழிக்கும் ஆழ்ந்த அரசியல்-கருத்தியல் சித்தரிப்புக்களையும், எக்காலத்திற்கும் பொருத்தமான தத்துவம் சார்ந்த விடுதலைத் தேட்டத்தினையும் அது கொண்டிருக்கும். அந்த வகையில் ஈழப் போராட்டம் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் இன்றுவரையிலும் புதியதோர் உலகம் நாவலுக்கு ஈடான நாவல் என எதுவும் இல்லை. அதற்கான காரணம் கோவிந்தனுக்குள் இருந்த படைப்பு குறித்த பார்வை :புதியதோர் உலகம் ஒரு இலக்கியமாகக் கருதி மாத்திரம் படைக்கப்படவில்லை. ஓரு அறைகூவலாகவும் கருதியே இது வந்துள்ளது (பக்கம் : 5 : கோவிந்தனின் முன்னுரை).இந்த அறைகூவல் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த தார்மீகமும் அறமும் அதற்கான நடைமுறை அரசியல் தேட்டமும் குறித்த அறைகூவல்தான்.

ஆயுதப் போராட்டத்தை வெறுமனே ஆயுதங்களின் மீது காதல் கொண்டவர்கள் எவ்வாறு புரிந்து கொண்டிருந்திருப்பார்கள் என்பதற்கு சான்று போல, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆயுததாரிகளின் முகாம் குறித்த கோவிந்தனின் சித்திரம் இவ்வாறு இருக்கிறது :

இந்தச் சிறிய அறையில் இரண்டு கட்டில்கள் எதிரும் புதிருமாகப் போடப்பட்டிருந்தன. மூலையில் இறுக்கமாகக் கயிறு கட்டப்பட்டு உடுப்புக்கள் தாறுமாறாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. சினிமா சஞ்சிகைகளின் முன்பக்க நடுப்பக்க கவர்ச்சி நடிகைகளின் படங்கள் வேறுவேறு கோலத்தில் சுவரெல்லாம் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன. இரத்தக் கீறல்களுடனான புரூஸ்லீயின் கலண்டரும், மொஹமட் அலியின் குத்துச் சண்டைப் புகைப்படமும் நடுவில் இருந்தன. வாசலுக்கு எதிர்ப்புற சுவரில் கழகத்தின் இலச்சினையும் அதன்கீழ் ‘சகல ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்’ என்ற வாசகமும் பெரிதாக பென்சிலால் எழுதப்பட்டிருந்தது. நிலமெல்லாம் கொட்டிக் கிடந்த சிகரெட் கட்டைகள் நீண்ட நாட்களாக அந்த அறை கூட்டிப் பெருக்காமல் விடப்பட்டதை அப்படியே சுட்டிக்காட்டியது. தூசியும் குப்பையும் கலந்த ஒரு துர்நாற்றம் சதா உள்ளே வீசிக் கொண்டிருந்தது. மேற்கூரையில் சுழன்று கொண்டிருந்த விசிறியின் வேகமான காற்றால் கூட அந்தப் புழுங்கி அவியும் பிணவாடை நாற்றத்தை விரட்டி அடிக்க முடியாமல் இருந்தது (பக்கம் : 203).

அரசியலை அதிகாரத்தில் வை என்பதற்கு மேலாக ஆயுதத்தை அதிகாரத்தில் வைத்த நிலைமை என்பது ஈழவிடுதலைப் போராட்டத்தின் பிரதான இயக்கங்களில் அனைத்திலும் இருந்து வந்திருக்கிறது. இயக்கங்கள் உளவு அமைப்பினால் வழிநடத்தப்பட வேண்டிய நிலைமை வந்தது, சொந்தத் தோழர்களையே கடத்திக் கொன்றது, துரோகிகளை சொந்த இயக்கத்திற்குள்ளேயே உற்பத்தி செய்தது என அனைத்தும் இதனது தர்க்கரீதியான விளைவுகளாக அமைந்தன. விடுதலைப் போராட்டத்திற்கு கியூப விடுதலையினதும் பிடல், சே குவேரா போன்றோரினது பங்களிப்பு என எதனையேனும் நாம் சொல்ல வேண்டுமானால், உள்கட்சிப் போராட்டங்களில் அரசியலையும் விவாதங்களையும் ஆணையில் முன்வைத்த அவர்களது பார்வைகளையும், மாறுபட்ட அரசியல் பார்வைகள் கொண்டவர்களையும் இயங்க அனுமதித்த அவர்களது ஜனநாயகப் போக்கிலும், இயன்ற வரையிலும் போராளிகள் அல்லாத நேச சக்திகளோடும் ஒப்பந்தத்திற்கு வந்த அவர்களது மேதமையையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆயுதப் போராட்டத்தை நடத்தினாலும் கூட மனிதாபிமானம் என்பதை தமது அமைப்பினுள்ளும் தம்மிடம் சரணடைந்தவர்களிடமும் பாவித்தவர்கள் அவர்கள். போராட்டத்தின் போது சரணடைந்தவர்களை அவர்கள் சித்திரவதை செய்து கொலை செய்யவில்லை. பிடலும் சேகுவேராவும் தம்மிடம் அகப்பட்டவர்களை, சரணடைந்தவர்களை விடுதலை செய்தார்கள். ஈழவிடுதலைப் போராட்டத்தில் அதனது பிரதான இயக்கங்கள் எதிலும் இந்த நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளிடம் இந்த மனநிலை உச்சத்தில் இருந்தது.

எண்பதுகளில் இயக்கங்களின் தோற்ற நிலைகளிலேயே இந்த அராஜகங்களுக்கு எதிரான போராட்டங்களை இயக்கங்களில் இருந்து மார்க்சியவாதிகள் துவங்கிவிட்டிருந்தார்கள் :

நாம் சிங்கள முதலாளித்துவ அரசின் அராஜகங்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தால் போதாது. தமிழீழ விடுதலை அமைப்பிலும் உள்நுழைந்து வரும் அராஜகப் போக்குகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். அராஜகமும் ஒடுக்குமுறையும் எந்த ரூபத்தில் வந்தாலும் அதற்கு எதிராகப் போராட வேண்டும். தன்னளவில் இந்தக் கயமைகளை வைத்துள்ள எந்த அமைப்பாலும் தமிழீழ மக்களுக்கு விமோசனத்தை வழங்க முடியாது (பக்கம் : 243)

மட்டுமன்று, விமோசன நோக்கமற்ற கடும் தேசியவாதிகளிடமிருந்து தேசிய விடுதலைப் போராட்டத்தையும், அதனது மனிதாபிமான உள்ளடக்கத்தையும் காப்பாற்றக் கருதுகிற போராளிகள் அதிலிருந்து விலகி நிற்பதும், வேறு இயக்கம் கட்டுவதற்குமான தேவையும் தவிர்க்கவியலாமல் எழுந்தது. இத்தகைய மாற்று இயக்கம் உருவாகுவது என்பதனை அன்று அமைப்பாக உருவாகிக்கொண்டிருந்த எந்த இயக்கங்களும் அங்கீகரிக்கவில்லை. தத்தமது அமைப்பிலிருந்து வெளியேறியவர்களை தீர்த்துக் கட்டவும், அவர்களுக்கு அமைப்பு ரீதியில் மரணதண்டனை வழங்கவும் இயக்கங்கள் பட்டியல்களைத் தயார் செய்தன. இயக்கத்திலிருந்து வெளியேறியமைக்கு உமா மகேஸ்வரனுக்கு விடுதலைப் புலிகள் மரணதண்டனை வழங்கினார்கள். உமா மகேஸ்வரின் தமது இயக்கத்திலிருந்து விலகியவர்களைக் கொலை செய்ய வேட்டையாடினார். தமிழீழ விடுதலைக் கழகத்தில் உட்கட்சிக் கொலைகள் உச்சத்தில் இருந்தன. இச்சசூழலில் இயக்கத்திலிருந்து பிரிந்து போகும் உரிமைக்கும், அதன் பின் அரசியல் செய்வதற்கான உரிமைக்கும் போராடுவது என்பது ஒரு தாபனப் பிரச்சினையாகவே விவாதத்திற்குள்ளானது :

இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் தாபனம் உடையப்போவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஏனென்றால் பிற்போக்கு அராஜகவாதிகளுடன் முற்போக்கு மார்க்சியவாதிகள் நீண்ட காலத்திற்கு தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒத்துழைக்க மாட்டார்கள். அதுவும் தேசியவிடுதலைப் போராட்டம் முடிவுற்றதும் என்றோ ஒரு நாள் புரட்சிகர சக்திகள் இந்தப் பிற்போக்கு அராஜகவாதிகளிடமிருந்து பிளவுபடவே செய்வார்கள். அதை யாரும் தடுக்க முடியாது. அந்த வேளையிலும் நீங்கள் பிரிந்து செல்பவர்களுக்கு மரணதண்டனை விதிப்பதுதான் உங்கள் தீர்ப்பாக இருக்கப் போகிறதா அல்லது பிரிந்து போகும் உங்களுக்கு மரணதண்டனை வழங்குவது நியாயம் என்று ஒத்துக்கொள்ளப் போகிறீர்களா? இதுவெல்லாம் சுத்த அராஜகம். சுயமாக ஒருவன் அரசியலில் ஈடுபடும் சுதந்திரத்திற்காக நாம் ஆரம்பத்திலிருந்தே போராடி வந்திருக்கிறோம். கழகம் அந்தப் போராட்டத்திற்கூடாகவே வளர்ந்து வந்த தாபனம். ஆனால் இன்று நீங்கள் அந்த சுதந்திரத்தை அங்கீகரிக்க மறுத்து குரல் எழுப்புவது இந்த மத்தியக்குழ தனது ஜீவனை இழந்துவிட்டது என்பதையே காட்டுகிறது (பக்கம் : 236)

கோவிந்தன் தனது நாவலில் எழுப்புகிற இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஆயுதவிடுதலை இயக்கங்களில் இன்றும் இருக்கிறது. கால் நூற்றாண்டின் முன்னால் இப்பிரச்சினைகள ஈழப் போராட்ட உள்ளடக்கத்தில் வைத்துப் பேசியிருப்பதுதான் இந்நாவலின் காலம் கடந்த இருத்தலுக்குக் காரணமாகிறது.

கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவல், ஷோபா சக்தியின்கொரில்லா தொட்டு, குழந்தைவேலின் கசகறணம் வரை விரவியிருக்கிற விடுதலைப் போராட்டத்தின் இருண்மை எனும் பண்பை மட்டுமே சித்தரிக்கவில்லை. ஆயுதவிடுதலைப் போராட்டத்தை சத்துராதிகளின் போராட்டமாகவோ மிருகத்தன்மை கொண்ட போராட்டமாகவோ மட்டும் சித்தரிக்கவில்லை. விடுதலைப் போராட்டத்தின் நடத்தை குறித்த பகடி என்பதாகவோ அல்லது எள்ளல் என்பதாகவோ அது தன்னை முடித்துக்கொள்ளவில்லை. விடுதலை இயக்கத்தினுள் அராஜகவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மட்டுமல்ல, ஈழ விடுதலைப் போராட்டத்தின், குறிப்பாக ஆயுதவிடுதலைப் போராட்டத்தின் மனிதாபிமான உள்ளடக்கத்தினையும், மனித விமோசனத்திற்கான அதனது தேடலையும் கோவிந்தனின் நாவல் முன்னிறுத்தியிருக்கிறது. இன்றும் கோவிந்தனதும், புதியதோர் உலகம் நாவலினதும் உன்னதமும் மேதைமையும் முக்கியத்துவதும் இதுதான்.

இச்சூழலில், ஆயுதவிடுதலைப் போராட்டத்திற்கு, குறிப்பாக ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான தமிழக இலக்கியவாதிகள் கோவிந்தனது புதியதோர் உலகம் நாவலின் முக்கியத்துவத்தைப் புறக்கணித்து, விடுதலைப் போராட்டத்தின் இருண்மையை, பைத்தியக்காரத்தனத்தை, மிருகத்தனத்தை மட்டுமே பிரதானமானப் பேசம் ஷோபா சக்தியின் கொரில்லா நாவலை மட்டுமே தமிழகத்தில் முன்னிலைப்படுத்துவதில் உள்ள இலக்கிய விமர்சன அரசியலின் ‘அறியாமைகள்’ குறித்தும் நாம் பேச வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கெதிரான பொதுப்புத்தியை, விடுதலைப் புலிகளதும், பிற இயக்கங்களினதும் தமிழக நிலம் சார் அரசியல் தவறுகளை மட்டுமே வைத்து ஊடகங்கள் உருவாக்கின. இயக்கங்களின் மீதான விமர்சனம் என்பதற்கு அப்பால், விடுதலை அரசியலின் பாலான விரோதமாகவும், இலங்கை அரசுக்குச் சாதகமான அரசியலாகவும் இது ஊடகங்களால் உருவாக்கப்பட்டன. இந்தத் தளத்திலிருந்துதான் ஒரு விடுதலைப் போராட்டத்தில், விமோசனத்தை அடிப்படையாகக் கொண்ட விடுதலை அரசியலுக்கும், அராஜகவாதத்திற்கும் இடையிலான போராட்டத்தை இலக்கியதளத்தில் கூட புறக்கணிப்பதாக இலக்கிய விமர்சன அரசியல் செயல்பட்டது. இந்த அரசியலில் பிரதானமானது எழுத்தாளர் ஜெயமோகனின் இலக்கிய அரசியல். அவருக்கு கோவிந்தனின் நாவல் வெறுமனே ‘தன் வரலாற்று நாவல்’ என்பதற்கு மேலாக எதுவும் இல்லை. மாறாக ஈழவிடுதலைப் போராட்டத்தின் இருண்மையும் மிருகநிலையும் பைத்தியக்காரத்தனமும் மட்டுமே குறித்த கொரில்லா அவருக்கு இலக்கிய உன்னதம்.

கோவிந்தனின் புதியதோர் உலகம் பற்றிய வெங்கட் சாமிநாதனின் (ஈழம் உணர்வின் ஆரம்பங்கள் : விக்கி லீக்ஸ் வெங்கட் சாமிநாதன் பகுப்புகள்) இந்திய தேசியப் பெருமிதப் ‘பகுப்பு‘ இவ்வாறாக இருக்கிறது:

எண்பதுகளில் இந்த போராட்டம் பெற்ற மூன்றாம் கட்ட வளர்ச்சியைத் தான் மூன்றாவது புத்தகமான புதியதோர் உலகம் பதிவு செய்துள்ளது. இப்புத்தகத்தின் முன்னுரையில் இதன் ஆசிரியர் கோவிந்தன் தான் ஒரு இலக்கிய கர்த்தா அல்லவென்றும் அதனால் இதை நாவல் எனக் கருதத் தேவை இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். கோவிந்தன் நம்மைப் போராடும் ஒரு இயக்கத்தின் உள்ளே அழைத்துச் சென்று அவ்வியக்கத்தின் குணச்சித்திரம் ஒன்றையும் அங்கு நடப்பவற்றையும் அவற்றிற்கான உந்துதல் களையும் இது காறும் அவற்றை மறைத்த திரையை விளக்கி வெளி உலகின் முன் வைக்கிறார். நிலவும் சூழ்நிலைகள், நிகழ்வுகள், அதன் பாத்திரங்கள் எல்லாம் உண்மை. ஒன்றும் கற்பித்துக் கதையாக்கப்படவில்லை. ஆசிரியரின் சம்பந்தப்பட்ட பாத்திரங்களின் பெயர்கள் மாத்திரம் அவர்களின் உயிர் காக்கும் பொருட்டு மாற்றப்பட்டு உள்ளன.

இதன் ஆசிரியர் கோவிந்தன் (இது ஒரு புனை பெயர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை) இவ்வியக்கத்தின் அரசியல் குழுவில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். போர்ப்பயிற்சியும் பெற்ற போராளியாகவும் இருந்திருக்கிறார். இந்த நாவலின் மையப்பாத்திரமாக உள்ள சங்கர் என்ற பாத்திரத்தோடு அவர் தன்னை அடையாளப்படுத்துகிறார் என்று தோன்றுகிறது.

ஆயிரக்கணக்கான் ஈழத்தவர் தொடர்ந்து செய்து வருவது போல தமிழ் மார்க்ஸீய போராளியான சங்கரும் ஈழத்தை விட்டு வெளியேறி இரகசியமாக ஒரு இரவில் படகில் ஏறி தமிழ் நாடு வந்து ஒரு போர்ப் பயிற்சி முகாமில் சேர்கிறார். அவருடைய தந்தையும் மார்க்ஸிஸ்ட் தான். அரசியல் போராட்டக்காரர். எனவே தன் மகனின் உணர்வுகளை தீவிரவாதத்தைப் புரிந்து கொண்டவர். தன் மகனுக்கு அவர் தந்த ஒரே புத்திமொழி, அவன் எந்த விடுதலை இயக்கத்தை, குழுவைச் சேர்கிறானோ அதற்கு விஸ்வாசமாக உழைக்கவேண்டும் என்பதே. ஆனால் அந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தில் சேர்ந்த குறுகிய காலத்திற்குள்ளேயே அவன் தன் வாழ்க்கையின் மிகப் பெரிய ஏமாற்றத்துக் குள்ளாகிறான். இயக்கத்திற்குள் நடப்பவற்றின் யதார்த்த சொரூபம், அவனுக்கு நேரடியாகவும் ஒருவருக்கொருவர் காதுக்குள் பரிமாறிக்கொள்ளும் இரகசியங்களாகவும் தெரிய வருகிறது.

புலம் பெயர்ந்த தமிழர்களில் சிலர் ரகசியமாக போதைப் பொருட்களை ஐரோப்பிய சந்தைக்குக் கடத்தி, ஈழப்போராட்டத்து நிதி உதவி தரப்படுகிறது. சாதாரண முணுமுணுப்பாக வரும் மறுப்புக்களைக் கூட சகித்துக் கொள்ளாத மேலிடம் மனிதாபிமானம் சற்றும் அற்று கொடூர சித்திரவதையைத் தண்டனையாகத் தருகிறது. ஈழத்தில் போராடிக்கொண்டிருக்கும் காலத்தில் தியாக உணர்வுடனும், தம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் கூட சாத்தியப்படும் அளவு குறைத்துக்கொண்டும் இருந்த அதே விடுதலைப் போராட்டத் தலைமைகள், தமிழ் நாட்டில் கிடைக்கும் பாதுகாப்பின் சௌகரியத்தில் போராளிகளின் மேலிடத் தலைவர்கள் அனுபவிக்கும் ராஜபோக சுகவாழ்வு, இயக்கத்தில் நிலவும் தலைவர் வழிபாடு, இயக்கத்தில் நிலவும் தலைவரின் யதேச்சாதிகாரம், ஸ்டாலினஸ நடைமுறையை நினைவுபடுத்தும். கொஞ்சம் சந்தேகம் இருந்தால் கூட, அடிக்கடியும் பெரிய அளவிலும் நடைபெறும் கட்சி நீக்கம், இயக்கத்துள் நடக்கும் உள்விரோத சண்டைகள் எல்லாம் தெரிய வருகின்றன.

இப்புத்தகத்தின் பக்கங்களிலிருந்து வெளிப்படும் இயக்கத்தின் தலைவரைப் பற்றிய சித்திரம் அவரை இன்னொரு ஸ்டாலின் அவதாரமாகவே காட்சிப்படுத்துகிறது. அதிகம் படிப்பில்லாத, தந்திர புத்தி கொண்ட, சூழ்ச்சி மனமும், இரக்கமற்ற ஒரு இரத்த வெறியனின் சித்திரம் அது. இத்தகைய தலைமைக்கு எதிராக இருக்கும் குழுத் தலைமையோ இயக்கத்திற்கு பெரும் பங்களிப்பு தந்தவர், அதன் போர்த் திறமை மிக்கவர், இயக்கத்தைக் கட்டமைத்துக் கொண்டு செல்லும் நிர்வாகத்திறமை உள்ளவர், இலட்சிய தாகம் நிறைந்தவர், இயக்கத்திற்காக தியாகங்கள் செய்தவர், ஆனால் அவரும் கடைசியில் ஒழித்துக் கட்டப்படுகிறார். இவையெல்லாம் நமக்கு ட்ராட்ஸ்கி, புகாரின் போன்றோருக்கு கிடைத்த துர்கதியை நினைவு படுத்தும்.

ஈழத் தமிழ் இயக்கப் போராளிகள் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து, தமிழ் நாட்டினரின் பாதுகாப்பும் போர்ப்பயிற்சியும், நிதியும் இன்னும் பல உதவிகளும் பெற்று வரும் காலத்தில், தமிழ் நாட்டின் தமிழ் சமூகத்தினரைப் பற்றியும், இந்திய அரசாங்கத்தைப் பற்றியும் என்ன நினைக்கிறார்கள், பேசிக் கொள்கிறார்கள் என்று இப்புத்தகத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்துடன் அவர்களது மனப்பான்மை என்னவாக இருக்கவேண்டும் என்பது பற்றி முகாமில் அடிக்கடி பேசப்படும். இயக்கத்தின் எல்லாத் தரப்பினரிடமும் ஒருமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு அடிப்படைப் பார்வை ஒன்று, அந்த அடிப்படை நோக்கில் தான் எல்லா சர்ச்சைகளும் யோசனைகளும் நடக்கும். இந்த அடைப்படைப் பார்வையை யாரும் மறுத்ததில்லை. கேள்வி எழுப்பியதில்லை. ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் இயக்கத்தைப் பற்றிய அணுகுமுறை மேலாண்மை மனப்பான்மை கொண்டதாகவே இருக்கும். இதைப் போராளிகள் எப்போதும் நினைவில் கொண்டு எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும். இதற்கு பதிலாக போராளிகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும், எப்படி எதிர்வினையாக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகள் அடிக்கடி எழும். இதற்கு தலைவர் அளிக்கும் பதில், நாம் எச்சரிக்கையாக இருக்கும் அதே நேரத்தில், தற்போதைய தற்காப்பு தந்திரோபாயமாக நாம் நட்புறவுடனேயே இருக்கவேண்டும். நாம் அவர்களது நோக்கங்களை சந்தேகிக்கிறோம், எச்சரிக்கையோடு இருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ளாது நாம் பழக வேண்டும்.

இயக்கத்தினரின் அடிப்படைக் கொள்கை இதுவாகத் தான் இருக்கவேண்டும். இன்னொரு விஷயம் பற்றியும் இயக்கத்தின் தலைவரிடமும், எல்லாத்தரப்பினரிடமும் வேற்றுமையின்றி நிலவும் பொது அபிப்ராயம், தமிழ் நாட்டு அரசியலின் தரக்கேட்டிற்கும், அதன் துர்நாற்றத்திற்கும் தாங்களும் இரையாகாது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அந்தக் குட்டையில் நாமும் மூழ்கிவிடக்கூடாது என்பதுதாகும். போராளிகள் சென்னை நகரத்தில் சுதந்திரத்துடன் எங்கும் செல்வார்கள். நகரத்தில் எங்கும் காணும் அசுத்தமும் குப்பை கூளங்களும் நகரத்தைப் பீடித்திருக்கும் சுவரொட்டி கலாச்சாரத்தின் உரத்த பாசமும் பற்றியெல்லாம் அவர்களிடையே கேலிப் பேச்சுக்கள் பரிமாறிக்கொள்ளப்படும். ஈழப் போராளிகள் யாரானாலும், தலைவரோ அடிமட்டத்தினரோ யாராயினும் அவர்களுக்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் அரசு அமைச்சர்களும் தரும் மரியாதையும் ராஜோபசாரமும் அவர்களது பரிகாசப்பேச்சுக்களுக்கு இரையாகும். அவர்கள் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு பெறும் தமிழ் சமூகத்தையே அவர்கள் இழிவாகப் பார்க்கும் மனப்பான்மை தான் அங்கு நிலவியது.

மத்திய அரசாங்கமானாலும் சரி, தமிழ் நாட்டு அரசானாலும் சரி, யாரையும் சுலபத்தில் ஏமாற்றி தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள முடியும் என்ற பொதுவான ஒரு முன் தீர்மானம் அவர்களிடம் இருந்ததும் இப்புத்தகத்தில் அடிக்கடி சொல்லப்படுகிறது.

எல்லா விஷயங்களைப்பற்றியும் அவரவரது மனப்பான்மைகள் செயல்கள் பற்றியுமான இவ்வளவு விஸ்தாரமான ஆழ்ந்த அலசல்கள், சுய விமர்சனங்கள் செய்யும் இதன் ஆசிரியர் தானும் ஒரு மார்க்ஸிஸ்ட்டாக இருந்த போதிலும் ஸ்ரீலங்காவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகளைப் பற்றியோ ஈழப்போராட்டத்தில் அவர்களது கட்சிக் கொள்கைகள் பற்றியுமோ வெகு கவனமாக எதுவும் பேசாது மௌனம் சாதித்து விடுகிறார். ஈழ இனப் பிரச்சினை என ஒன்றோ அதற்கான ஒரு நீண்ட போராட்டம் என ஒன்றோ இல்லாதது போலவே அந்தக் கட்சி கண்களை மூடிக்கொண்டு இருந்து வருகிறது. நாம் முதலில் பார்த்த மு. தளையசிங்கம், தாம் ஒரு மார்க்ஸிஸ்டாக இருந்த போதிலும் ஸ்ரீலங்காவின் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கேலி செய்திருக்கிறார். ஈழ விடுதலைப் போராட்ட இயக்கத்தைப் பற்றியின் நோய்க்கான காரணங்களை, அதன் தலைமையின் குணப் பிறழ்ச்சியிலும் தான் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கொள்கைகளைக் கைவிட்டதிலும் தான் காண வேண்டும் என்பதே இப்புத்தகத்தின் ஆசிரியரான கோவிந்தனின் பார்வையாக இருக்கிறது.

சங்கர் என்னும் மத்திய பாத்திரத்திற்கு அடிக்கடி ஒரு சந்தேகம் எழுவதாக இப்புத்தகத்தில் சொல்லப்படுகிறது. இயக்கத்தின் தலைவரும் அவரது கூட்டாளிகளும் உண்மையிலேயே மார்க்ஸிஸ்ட்டுகள் தானா இல்லை அவர்கள் மார்க்ஸீய வேடம் தரித்த வெற்று தேசீயவாதிகள் தாமா? என்பது தான் அந்த சந்தேகம். இந்தக் கேள்வியின் தோரணையிலேயே ஆசிரியரின் பார்வையில் தேசீயவாதி என்பதையே ஒரு வசைச் சொல் தான் போலும். தேசீயவாதிகளைச் சகித்துக்கொண்டு நட்புறவுடன் இருப்பதை ஒரு தாற்காலிக தந்திரமாகத்தான் இயக்கத்தின் தலைவர் மேற்கொண்டுள்ளார் என்று தெரிய வந்ததும் அவர் மனம் சமாதானம் கொண்டு விடுகிறது.

இப்புத்தகத்தின் ஆசிரியர் இப்போது அவ்வியக்கத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்றும், இப்போது அவரும் அவரைப் போன்று தலைமையுடன் கருத்து வேற்றுமை கொண்டு வெளியேறிய மற்ற கூட்டாளிகளும் இன்னொரு குழுவைத் தொடங்க முயன்று கொண்டிருப்பதாக புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதன் முன்னுரையில் ஆசிரியர் சென்னையிலேயே தான் தன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தலைமறைவாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஆசிரியர் இப்போது உயிருடன் இல்லை. இப்புத்தகம் வெளிவந்ததும் அவர் யாரிடமிருந்து தன் மரணத்தை எதிர்பார்த்து பயந்திருந்தாரோ அவர்களாலேயே கொல்லப்பட்டு விட்டார்.

வெங்கட் சாமிநாதனின் மார்க்சிய வாசிப்பும் அது குறித்த அவரது விமர்சனமும் ஆழ்ந்த வாசிப்பற்ற மிக மேற்போக்கான பார்வைகள் என்பதுதான் எனது முடிவான புரிதல். அவர் தன் போக்கில் முன்வைக்கிற பல விஷயங்கள் வேண்டுமென்றே அவர் ‘மோசடி’ செய்கிறாரா அல்லது ‘அறியாமை’யில் எழுதுகிறாரா என்ற சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு. அவர் தமிழ் ஹிந்து தளத்தின் ஆஸ்தான எழுத்தாளராகவும், இந்திய பெருந்தேசிய பக்தராகவும் இருப்பதால்தான் இந்தச் சந்தேகம். வெங்கட் சாமிநாதன் சொல்கிறார் : ஆசிரியர் கோவிந்தன் தான் ஒரு இலக்கிய கர்த்தா அல்லவென்றும் அதனால் இதை நாவல் எனக் கருதத் தேவை இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

கோவிந்தனது ஆவிதான் வெங்கட் சாமிநாதனிடம் மட்டும் இரகசியமாக இப்படிச் சொல்லியிருக்க வேண்டும். கோவிந்தன் தனது முன்னுரையில் இப்படிச் சொல்கிறார் :புதியதோர் உலகம் ஒரு இலக்கியமாகக் கருதி மாத்திரம் படைக்கப்படவில்லை. ஓரு அறைகூவலாகவும் கருதியே இது வந்துள்ளது.

வெங்கட் சாமிநாதன் ‘பொய்’ சொல்கிறாரா, அல்லது கோவிந்தன் சொல்வதை அவரால் ‘புரிந்துகொள்ள’ முடியவில்லையா என்பது சத்தியமாகவே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. வெங்கட் சாமிநான் அவர்களே, நான் இலக்கியகர்த்தா மட்டும் அல்ல, இது இலக்கியம் மட்டும் அல்ல, அதற்கும் மேலான நோக்கங்கள் இதற்கு இருக்கிறது என்றுதான் கோவிந்தன் சொல்கிறார். அந்த மேலான நோக்கங்கள் பற்றித்தான் கோவிந்தன் நாவலினுள் பேசுகிறார், கட்டுரையாசிரியராக கால்நூற்றாண்டு கழித்து நானும் அதனைத் பேசுகிறேன் என்பதுதான் கோவிந்தனது வார்த்தைகளின் அர்த்தம்.

போகட்டும், நாவலையாவது வெங்கட் சாமிநாதன் உருப்படியாக வாசித்து, உருப்படியாகப் பாத்திரங்களின் மன அமைப்புக்களைப் புரிந்து கொண்டிருக்கிறாரா? அதுவும் இல்லை. கதையின் நாயகனான சங்கரினது தந்தை குறித்து வெங்கட் நாமிநாதனின் சித்திரம் இது : தன் மகனுக்கு அவர் தந்த ஒரே புத்திமொழி, அவன் எந்த விடுதலை இயக்கத்தை, குழுவைச் சேர்கிறானோ அதற்கு விஸ்வாசமாக உழைக்கவேண்டும் என்பதே. அடுத்ததாக அவர் நாவலாசிரியாக கோவிந்தன் மீது வைக்கும் குற்றச்சாட்டு :இதன் ஆசிரியர் தானும் ஒரு மார்க்ஸிஸ்ட்டாக இருந்த போதிலும் ஸ்ரீலங்காவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகளைப் பற்றியோ ஈழப்போராட்டத்தில் அவர்களது கட்சிக் கொள்கைகள் பற்றியுமோ வெகு கவனமாக எதுவும் பேசாது மௌனம் சாதித்து விடுகிறார்.

நாவலில் சங்கரின் தந்தை தனது மகனிடம் சொல்வது பின்வருமாறு : நான் என் காலத்தில் முனைப்பாக இருந்த தமிழ் சிங்கள மக்களின் ஐக்கியப்பட்ட சோசலிப் போராட்டத்தைச் செய்ய வேண்டும் என அரசியலில் ஈடுபட்டேன். அதில் வெற்றி காண முடியவில்லை. நீ உன் தலைமுறைப் போராட்டமான தமிழீழ விடுதலையினூடாக ஒரு சோசலிசப் புரட்சியை முன்னெடுக்க அரசியலில் நுழைந்திருக்கிறாய் (பக்கம் : 14). தமிழ் சிங்கள மக்களின் ஐக்கியப்பட்ட சோசலிசப் போராட்டத்தை முன்னெடுக்கு முடியாது போனதற்குக் காரணமென்ன? சிங்களவர்களைத் தலைமையாகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிதான் காரணம். ஆகவேதான் தமிழ் கம்யூனிஸ்ட்டுகள் ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். மட்டுமன்று நாவலின் பல இடங்களில் அவர் தாபனத்தில் கம்யூனிஸ்ட்டுகளினிடையில் இருந்த சுயநலம், ஊழல், ஒழுக்கமீறல் என்பன அக்கட்சியைச் சீரழித்தன எனவும் விமர்சனம் செய்கிறார். சேர்கிற ஸ்தாபனத்திற்கு விஸ்வாசமாக உழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தவில்லை, தேர்ந்துகொண்ட இலட்சியத்திற்கு விசுவாசமாக இரு என்றுதான் அவர் சொல்கிறார். அப்படிச் சொன்ன அவர்தான் தனது மகன் சார்ந்த இயக்கம் அராஜகவாதத்தினை, சீரழிவினை நோக்கிப் போகும்போது இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார்.

வெங்கட் சாமிநாதனின் இவ்வாறான ‘தப்புத் தப்பான’ வாசிப்புகள் அல்லது ‘திட்டமிட்ட’ வாசிப்புகள் வழி அவர் தமிழ்கூறு இலக்கிய நல்லுலகுக்கு சில செய்திகளைத் திட்டவட்டமாகச் சொல்கிறார் : புதியதோர் உலகம் இலக்கியம் இல்லை. நாவல் இல்லை. இதனை அதன் ஆசிரியரே சொல்லிவிட்டார். இது வெறும் வரட்டு அரசியல். மார்க்சிஸ்ட்டாக நாவலாசிரியரும் கம்யூனிஸ்ட்டுகளை விமர்சனம் செய்யவில்லை. நாவலுக்குள் வருகிற மார்க்சிஸ்ட் கதாபாத்திரமும் ஸ்டாலினிஸ்ட்டு என்பதற்கு அப்பால் சொல்லிக் கொள்கிற மாதிரி நாவலில் எதுவுமில்லை. இதனைவிடவும் அதிரடியான விஷமொன்றினை அவரது விமர்சனத்தில் இறுதியில் சொல்கிறார் வெங்கட் நாமிநாதன் : இப்புத்தகம் வெளிவந்ததும் அவர் யாரிடமிருந்து தன் மரணத்தை எதிர்பார்த்து பயந்திருந்தாரோ அவர்களாலேயே கொல்லப்பட்டு விட்டார். கடவுளே, அவர் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்தது அவர் இயங்கிவந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைமையினரால். அவரைக் ‘காணாமல் போகச் செய்தவர்கள்’ அந்த இயக்கத்தின் எதிரிகளாகத் தம்மை வரித்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள். வெங்கட் சாமிநாதன் அவர்களே, உங்கள் வாசிப்பும் ‘சரியாக’ இல்லை. வரலாறும் ‘சரியாக’ இல்லை. இதைப்பற்றியெல்லாம் உங்களுக்குக் கவலையும் இல்லை.

உங்கள் கவலையெல்லாம் இந்தியா பிற மக்களுக்கு எவ்வளவு கொடுமைகளையும் துரோகங்களையும் அழிவையும் செய்தாலும், அதனையெல்லாம் விமர்சிக்காமல், அதற்கு விஸ்வாசமாகவும் தேசபக்தியுடனும் இருக்க வேண்டும் என்பதுதான். ஆகவேதான் நாவல் குறித்து உங்கள் பார்வையிலிருந்து இப்படியான அவதானங்களையெல்லாம் உங்களால் மிக ‘இயல்பாகச்‘ செய்ய முடிகிறது :

அவர்கள் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு பெறும் தமிழ் சமூகத்தையே அவர்கள் இழிவாகப் பார்க்கும் மனப்பான்மை தான் அங்கு நிலவியது. மத்திய அரசாங்கமானாலும் சரி, தமிழ் நாட்டு அரசானாலும் சரி, யாரையும் சுலபத்தில் ஏமாற்றி தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்ள முடியும் என்ற பொதுவான ஒரு முன் தீர்மானம் அவர்களிடம் இருந்ததும் இப்புத்தகத்தில் அடிக்கடி சொல்லப்படுகிறது.... ........ இந்தக் கேள்வியின் தோரணையிலேயே ஆசிரியரின் பார்வையில் தேசீயவாதி என்பதையே ஒரு வசைச் சொல் தான் போலும். தேசீய வாதிகளைச் சகித்துக் கொண்டு நட்புறவுடன் இருப்பதை ஒரு தாற்காலிக தந்திரமாகத்தான் இயக்கத்தின் தலைவர் மேற்கொண்டுள்ளார் என்று தெரிய வந்ததும் அவர் மனம் சமாதானம் கொண்டு விடுகிறது.

வெங்கட் சாமிநாதனுக்கு மார்க்சியர்கள் பிரச்சினைக்கு உள்ளாக்குகிற தேசியம் எனும் கருத்தாக்கம் தொடர்பான விவாதங்கள் புரிவதில்லை. மார்க்சியம் மனித விமோசனத்திற்கானது. அவர்களளவில் தேசியப் போராட்டம் என்பது ஒரு இடைக்காலகட்டம். தேசியத்திடம் பக்தியோ அல்லது புனித உணர்வோ ஏதும் அவர்களுக்கு இல்லை. தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் வந்துவிட்டதால் அவர்கள் தமிழகத்தின், இந்தியாவின் அரசியல் நலன்களுக்கு முழுமையாக விஸ்வாசமாக இருக்க வேண்டியதில்லை. ஏனெனில் தமிழகமோ இந்தியாவோ தமது அரசியல் நலன்களுக்காகத்தான் தமிழர் பிரச்சினையைப் பாவிக்கிறது. இது அரசியல் பிரச்சினை. வெறும் அறம்சார் பிரச்சினை இல்லை. இந்திய தேசியவாதியான வெங்கட் சாமிநாதனுக்கு தேசியத்தைச் சந்தேகிப்பது உவப்பானதாக இல்லை. உவப்பானது, உவப்பல்லாதது கருத்துரீதியிலானது எனும் அளவில் அதனைக் கொண்டிருப்பது வெங்கட்சாமிநாதனது உரிமை. ஆனால் அதனைப் பின்புலத்தில் வைத்துக் கொண்டு ஒரு நாவலின் இலக்கியத் தகுதியையும் பாத்திரப் படைப்பையும் வரலாற்றையும் குறித்து பொய்யும் புனைசுருட்டும் பரப்புவது இலக்கிய ஊழல்.

அருளரின் லங்கா ராணி முதல், சயந்தனின் ஆறா வடுவரை ஈழப் போராட்டத்தின் மானுட அழிவுகள், உறவின் சிதைவுகள், கருத்தியல் போராட்டங்கள் என இக்கட்டுரை எழுதப்படும் காலம் (17 ஏப்ரல் 2012) வரையிலும் ஈழத் தமிழ், தமிழகத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என நான்கு மொழிகளில், ஈழ-தமிழகத் தமிழர்கள், சிங்களவர், பர்கர் இனத்தவர், தமிழ்-சிங்கள கலப்பினத்தவர், புகலிடத்தமிழர் போன்றோரால் எழுதப்பட்ட 25 இற்கும் மேலான நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நாவல்கள் அனைத்திலும் இரண்டு நாவல்கள் மிகுந்த கருத்தியல் தரிசனத்துடன் எழுதப்பட்டிருக்கின்றன என என்னால் உறுதியாகச் சொல்ல முடிகிறது. முதலாவது நாவல் கோவிந்தனது புதியதோர் உலகம். இரண்டாவது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அ.சிவானந்தனின் நினைவுகள் மரணிக்கும் போது - வென் மெமரி டைஸ் - எனும் நாவல். இந்நாவல் 2007 ஆம் ஆண்டு உலகெங்கிலும் வெளியானது.

புதியதோர் உலகம் நாவல் வெளியாகி கால்நூற்றாண்டு கடந்துவிட்டது. அந்நாவல் தோன்றிய உலகம் இன்று இல்லை. சோசலிசம்-முதலாளித்துவம் என நாடுகள் இன்று இரு முகாம்களாக இல்லை. ஆயுதவிடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிற சோசலிச நாடு என ஏதும் இல்லை. இனங்கள் ஒடுக்கப்பட்ட, பலம்வாய்ந்த ஒன்றுபட்ட நாடே இன்று சீனா,கியூபா உள்ளிட்ட ‘சோசலிச’ நாடுகளதும் அதனை அடியொற்றிய கம்யூனிஸ்ட் கட்சிகளதும் நிலைபாடு. மேலாக, சோசலிசம் என்றால் என்ன என்பதை இப்போது மார்க்சீயர்கள் மறுவரையறை செய்ய வேண்டும். புதிய சமூக இயக்கங்கள், சிறுபான்மையின மக்களின் உரிமைகள், மனித உரிமைகள், ஜனநாயகம் போன்றவற்றை இனிவரும் சோசலிசம் எவ்வாறு அனுசரிக்கப் போகிறது என்ற மறுபரிசீலனைகளும் இன்று தேவை. நிலமும் சொத்தும் வாங்கலாம் எனும் கியூப கம்யூனிஸ்ட் கட்சி சீர்திருத்தங்கள், மில்லியனர்களைத் தோற்றுவித்திருக்கிற சீன ‘சோசலிசம்’ எல்லாவற்றையும் கவனம் கொண்டு அவரவர் நாட்டுக்குகந்த புரட்சிகரப் பாதையும் எதிர்கால சமூகம் குறித்த திட்டமும் வகுக்கப்பட வேண்டும். எண்பதுகளில் போராளிகள் பயிற்சிபெறப் போன பாலஸ்தீனம், நிகரகுவா நாடுகள் இன்று இலங்கை அரசின் உறுதியான நட்புநாடுகள்.

என்றாலும் கோவிந்தனின் நாவல் இன்றும் புதிதாக இருக்கக் காரணம் என்ன? இன்று பன்முகத்துவக் குரல் என்பது எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக படைப்பினுள் ஒலிக்கிறதோ அதனைச் சார்ந்தே நாவலின் அழகியல் வெற்றி, அல்லது முழுமை என்பது கணிக்கப்படுகிறது. மாவோவின் முரண்பாடுகளைப் படித்தவர்களுக்கு, மார்க்சீயப் பகுப்பாய்வின் அடிப்படையான இயங்கியலை அறிந்தவர்க்கு, பக்தின் பேசுகிற பன்முகக்குரல் குரல் எனும் கருத்தாக்கத்தின் வேர்கள் எங்கிருந்து வருகின்றன என்பது புரிந்து கொள்ள முடியாதது அல்ல. புதியதோர் உலகம் நாவல் முதல் பக்கம் முதல் இறுதிப் பக்கம் வரையிலும் மனிதர்களுக்கிடையிலான உறவையும் முரணையும் உணர்ச்சிவசமான உரையாடலாகக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் வாழ நேர்ந்த சூழல் அவர்களது நடத்தைகளில் கருத்தியல் முரண்கள்-உறவுகளாக நாவல் முழுக்க உரையாடலாகப் பரிணமித்திருக்கிறது. மனிதர்கள் மற்றும் கருத்தியல் உறவுக்கும் முரணுக்கும் இடையிலான எண்ணற்ற கிளைப் பாதைகள் நாவலில் பிரிந்து செல்கின்றன.

இன்று வாசிக்கும்போது, கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவல் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்ததாக மட்டும் அல்ல, முழு உலக விடுதலைப் போராட்ட அனுபவங்கள் குறித்த விசாரணையாகவும் இருப்பதை என்னால் உணர முடிகிறது. இந்த ஒரேயொரு காரணத்துக்காக மட்டும், ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த ஒரேயொரு நாவலை உலக மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்றால் அதற்கென கோவிந்தனின் நாவலையே நான் பரிந்துரை செய்வேன்.

http://www.globaltam...q5chbw.facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.