Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீட்டப்படும் நேசக்கரங்களும் முஸ்லீம் தலமைகளின் சலுகை அரசியலும் - நடராசா குருபரன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் நீங்கள் இருவரும் எனது வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் உரையாடி ஆறுதல் கூறி விடைபெற்றுச் சென்றமை என் நினைவில் இன்றும் நிலைத்திருக்கிறது.

அது மட்டும் அல்லாது நான் கடத்தப்பட்ட அன்றே ஊடகங்களுக்கு முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் நீங்கள் வெளியிட்ட காரசாரமான கண்டன அறிக்கையையும் இப்பொழுதும் ஆவணமாகப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். என் மீது நீங்களும் உங்கள் இருவர் மீது நானும் தனிப்பட்ட வகையில் வைத்திருக்கும் மதிப்புப்பற்றி எங்கள் மூவருக்கும் நன்றாகத் தெரியும்.

சூரியன் எவ் எம்மெனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக் கூறுமாறு நான் அழைத்த போதெல்லாம் மறுப்பு தெரிவிக்காமல் நீங்களும் உங்களது நண்பரும் எனது நண்பருமான பசீர் சேகுதாவுத்தும் கலந்து கொண்டு உங்கள் அரசியற் கருத்துக்களை என்னுடனும் வாசர்களுடனும் பகிந்து கொண்டிருந்தீர்கள்.

நான் இலங்கையில் இருந்து நீங்கி லண்டன் வந்த பின்பு ஆரம்பித்த குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கும் ஜீரீபீசி வானொலிக்கும் கூட எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது நீங்கள் செவ்விகளையும் கருத்துக்களையும் வழங்கியதை நினைவு கூருகிறேன்.

இன்றைக்கு மீண்டும் ஒரு முறை பொதுத்தளத்தில் உங்களுடன் பேசியே ஆக வேண்டும் என்று உணர்கிறேன்.

இலங்கையின் சிறுபான்மை இனங்கள் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு காலகட்டத்தில் நிற்கின்றன. நீங்களும் நானும் இந்தச்சிறுபான்மை இனங்களின் உறுப்பினர்கள் என்ற வகையில் இந்தச்சந்தர்பத்தில் பெறுமதியான ஒரு உரையாடலை செய்ய வேண்டிய தேவை உள்ளது.

21 வருடகால ஊடகவாழ்வில் பல அனுபவங்களை நடைமுறையில் பெற்றுக் கொண்டவன் என்ற வகையில் எமது சகோதர இனமான முஸ்ஸீம் மக்களை நோக்கியும் அதன் வழி முஸ்லீம்மக்களின் பெருந்தலைவர்கள் என்ற வகையில் உங்கள் இருவரை நோக்கியும் நீங்கள் என் நண்பர்கள் என்ற உரிமையுடன் சில முக்கியமான விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன். இதனால் உங்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டால் அதற்காக முன்கூட்டியே என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

போருக்குப் பின்னான அல்லது புலிகள் அழிக்கப்பட்ட பின்னான சூழலிலும் கூட சிங்களப் பெருந் தேசியவாதத்தின் தொடர்ச்சியான ஒடுக்குதல்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாகி வரும் சிறுபான்மைத் தமிழர்களும் முஸ்லிம்களூம் மலையகமக்களும் தம்மிடையே பரஸ்பர புரிந்துணர்வும் அங்கீகாரமும் கொண்ட ஐக்கிய முன்னணியை அல்லது அதற்குத் தேவையான அடிப்படையான வேலைத் திட்டத்தையாவது உருவாக்க வேண்டும் என்ற பலமான எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும் இன்றைக்கு எழுந்து வருகின்றன. தமிழ் முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் சாதாரண மக்கள் தொடங்கி இவற்றின் சனநாயகச்சிந்தனை மிக்க புத்திசீவிகள் செயற்பாட்டாளர்கள் வரைக்கும் இந்த எதிர்பார்ப்பே நிரம்பியிருக்கிறது.

மகிந்த அரசாங்கத்தினது கடுமையான அழுத்தங்கள் மற்றும் கட்சிக்குள் உள்ளவர்களின் அழுத்தங்கள் காரணமாக நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அரசாங்கவரிசைக்குச் சென்றீர்கள்.

சலுகைகள் இன்றி நெடுநாள் எதிர்க்கட்சியாக இருந்து களைத்துப் போனதன் விளைவில் கட்சிக்குள் எழுந்த அழுத்தங்கள் காரணமாக நீங்கள் மகிந்தவின் அழுத்தங்களுக்கு பணிந்து கொண்டதை ஒருவகையில் எங்களாற் புரிந்துகொள்ள முடிந்தது.

சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தின் தேவை இலங்கை சுதந்திரமடைந்தநாளில் இருந்து கடுமையாக பேசப்பட்டும் உணரப்பட்டும் வருவதை நாங்கள் இங்கு மீண்டும் ஒருமுறை நினைவு கொள்வோம்.

இந்த நிலையிற் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களை ஒட்டி முஸ்லீம் காங்கிரஸ் அல்லது நீங்கள் வெளியிடும் அறிக்கைகள் சிறுபான்மைச் சமூகங்களின் வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றன.

நேற்று (23.07.12) சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லீம் காங்கிரஸ் கூட்டணி சேரப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.*1ஹசன் அலியினுடைய இந்த அறிக்கை நீங்கள் பங்காளியாக இருக்கும் அரசாங்கத்தை அமைதிப்படுத்துவதற்காகவும் அவர்களை ஆசுவாசப்படுத்துவதற்காகவும் அவசர அவசரமாக விடப்பட்டு இருக்கிறது என நினைக்கிறேன்.

அது மட்டும் அல்ல உங்கள் பங்காளியைத் திருப்திப்படுத்த நீங்கள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கீறீர்கள் என்பதனைக் வெளிப்படுத்த “ஆளும் கட்சியுடன் எந்த முரண்பாடும் கிடையாது”*2என நீங்கள்கூட அண்மையில் அறிக்கை ஒன்றையும் விடுத்திருந்தீர்கள்.

ஆனால் இப்போது மாகாணசபைத் தேர்தல் என்றதொரு விடயம் தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமையை கோரிநிற்கிற முக்கியமான வரலாற்றுக் கணத்தில் ஆளும் பேரினவாத சர்வாதிகார மற்றும் இராணுவ முகம் கொண்ட வலிமையான சனநாயக மறுப்பு அரசொன்றுக்கு சாதகமாக உங்களது அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இந்தவிடத்தில் தற்போதுள்ள மாகாணசபைகளுக்கு எந்த அரசியற் பெறுமானமும் இல்லை என்பதையும் சிறுபான்மை இனங்களின் அடிபடையான அரசியற் பிரச்சனைகளுக்கு எந்ததீர்வையும் தரக்கூடிய அதிகாரங்கள் எதனையும் அவை கொண்டவையல்ல என்பதையும் நாங்கள் நினைவிற் கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல தற்போதைய மாகாண சபைகளை ஏற்றுக் கொள்வது என்பது 13 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சட்ட ரீதியானதும் நடைமுறைசார்ந்ததுமான அங்கீகாரத்தை வழங்குவதாக அமையும் என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும். வடக்கையும் கிழக்கையும் பிரித்த பின் இவ் மாகாண சபைத் தேர்தலில் ஏன் சிறுபான்மை இன அரசியல்வாதிகள் பங்கு பற்ற வேண்டும்? மத்திய அரசினுடைய இரும்பு பிடிக்குள் இருந்து மாகாணசபையூடாக எதனைச் சாதிக்க முடியும்? என்பன போன்ற நியாயமான கேள்விகள் எழுகிறன.

ஆனால் நடைமுறையைப் பார்ப்போமானால் ஆறாவது திருத்தச் சட்டமூலத்தை ஏற்றுக்கொண்டு அதாவது இலங்கை நாட்டின் இறைமை, சுயாதிபத்தியம், ஒருமைப்பாடு, ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு சத்தியப் பிரமாணம் செய்து இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் செல்வதற்கு தமிழ் அரசியல் தலமைகள், அரசியல்வாதிகள் முன்வைக்கிற அதே காரணங்களை இந்த மாகாண சபைத் தேர்தலில் நிற்பதற்கான காரணங்களாக சிறுபான்மை இன அரசியல்வாதிகள் வைக்கிறார்கள் எனக் கருதிக்கொள்வோம்.

இந்த நிலையில் இந்தத் தேர்தலால் ஏற்படக்கூடிய ஒரே ஒரு நன்மை என்னவெனில் அதாவது இந்த மாகாணசபைத் தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் தங்களுக்கு இருக்கும் பலத்தை வெளிக்காட்ட முடியும் என்பதே.

அந்த வகையில் சிறுபான்மையினங்கள் பரஸ்பர புரிந்துணர்வுடன் இந்தத் தேர்தலை எதிர்கொண்டு கிழக்கிலும் பின்னர் வடக்கிலும் பிற்போக்கான சிங்களப் பெருந்தேசியவாதத்தின் சட்டரீதியான ஆளுமைக்குச் சவால்விடுக்க முனையவேண்டும் என ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தவிடத்தில் சலுகை அரசியல் பற்றியும் ஒரு முறை திரும்பிப்பார்ப்போம்.

காலாதிகாலமாக இலங்கையின் ஆளும் பேரினவாதக் கட்சிகளுடன் முஸ்லீம் அரசியல்வாதிகள் இணைந்துகொண்டு (இப்போ சில தமிழ் அரசில்வாதிகளும் இதற்கு விலக்கல்ல) பெற்ற சலுகைகள் யாருக்குப்பலன் தருபவையாக இருந்தன என்ற கேள்வி எழுகிறது.

அண்மையில் எழுதிய கட்டுரையொன்றில் அரசியற் செயற்பாட்டாளாரனான திரு பௌசர் பின்வருமாறு கூறுகிறார்:*3

இன்றைய மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், முஸ்லிம் மக்களின் தேசிய இன உரிமைகளையோ, அவர்களுக்கான சமத்துவ இருப்புக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களையோ வழங்கக் கூடிய அரசாங்கம் அல்ல என்பது பகிரங்கமாக தெரிந்த உண்மைதான். ஒரு படி மேலாக இந்த அரசாங்கத்தினுள் அமைச்சர்களாக ,பிரதி அமைச்சர்களாக பதவி வகிக்கின்ற முஸ்லிம் மக்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரிந்ததே. ஆனாலும் ஆளும்வர்க்க அதிகாரத்தின் ருசி நன்கு தெரிந்தவர்களாக முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் இன்று உள்ளனர்.

பாராளுமன்றத்தில் உள்ள பதினாறு முஸ்லிம் உறுப்பினர்களில் பதின்நான்கு பேர், ஆளும் கூட்டணியை சேர்ந்தவர்களே. அரசாங்கத்திற்கு யார் கூடிய விசுவாசத்தினை காட்டமுடியும் என்ற சந்தர்ப்பங்களுக்காக காத்துக் கொண்டிருப் பவர்களாகவும், யாரை கவிழ்த்து முழு அதிகாரத்தினை பெறலாம் என சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கக் கூடிய காய்நகர்த்தலில் கைதேர்ந்தவர்களாகவும் இவர்கள் உள்ளனர்.

மகிந்தஅரசாங்கம் முஸ்லிம்களின் தேசிய இன உரிமைகளையோ பாதுகாப்பு உத்தரவாதங்களையோ வழங்கக்கூடியது அல்ல*3

இன்னுமொரு அரசியற் செயற்பாட்டாளாரான லத்தீப் பாரூக் தனது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்:

“'தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் பாராளுமன்ற அரசியல்வாதிகள் ஒருவர் பின் ஒருவராகத் தனித்தனியாகவும் கூட்டாகவும் அரசாங்கம் அளித்த சலுகைகளின் பின்னாற் சென்றனர். பலவீனமான எதிர்க்கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து எதனையும் சாதிக்கப் போவதில்லை எனவும் அரசுடன் சேர்ந்து எமது சமூகத்திற்கு நல்லது செய்வோம் எனவும் கூறப்பட்டது.

இப்போது அவர்கள் அரசுடன் இணைந்திருக்கிறார்கள். எனவே முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி அவர்கள் கவனம் எடுப்பார்கள் என முஸ்லீம்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்கிறார்களே தவிர சமூகத்திற்கு எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.

முஸ்லீம் அரசியல்வாதிகள்அதிகாரத்திற்கும் தங்களது நலன்களுக்குமாக முஸ்லீம் மக்களைப் பயன்படுத்தியதன் பின் கைவிட்டுவிட்டதாகவும் முஸ்லீம் மக்களை உண்மையிலும் பிரதிநிதிப் படுத்துபவர்களாக இருக்கவில்லை எனவும் முஸ்லீம் சமூகத்துள் எண்ணம் வளர்ந்து வருகிறது.

உதாரணமாக அண்மையில் வினைத்திறனற்றுத் தொழிற்படும் நிறுவனங்களையும் அவற்றின் சொத்துக்களையும் சுவீகரிக்கும் அரசின் சட்டமூலத்தை அரசு பாராளுமன்றத்தில் கொண்டு வந்த போது நிசப்தமே நிலவியது. முஸ்லீம் அரசியல்வாதிகள் வாயே திறக்கவில்லை!

தீவிர சிங்களத்தேசியவாதிகளான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் கூட தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.*4

உங்கள் கட்சியில் இருந்தவரும் மக்றூம் அஸ்ரப் அவர்களின் உறவினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதுர்க்கனி 1990 களில் முதலாவது முஸ்லீம் காங்கிரஸ் மகாநாட்டிற்கான மலரை என்னிடம் அச்சிட வந்தபோது (அப்பொழுது நான் அச்சுக்கூட உரிமையாளராகவும் இருந்தேன்) நிகழ்ந்த உரையாடலின் போது பின்வருமாறு கூறி வருத்தப்பட்டார்.

குருபரன் எங்களுடைய அரசியல் என்பது நான் உட்பட சலுகைகளை நோக்கியதாக மாறிவருகிறது. தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்ட அரசியல் போலல்லாது இப்போ இந்தப் பேரினவாத அரசாங்கங்களுடன் சலுகைகளுக்கான பேரம் பேசும் அரசியலாக முஸ்லீம் அரசியல் இழுபட்டுச் செல்கிறது

இவற்றில் இருந்து மிகவும் தெளிவாகத் தெரிவது என்னவெனில் சலுகை அரசியலால் சாதாரணமான முஸ்லீம் மக்கள் எந்த நன்மையையும் அடையவில்லை என்பதுடன் முஸ்லிம் சமுகத்தின் அரசியல் உரிமைகளும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதாகும். அது மட்டுமல்ல முஸ்லிம் சமூகத்தின் உண்மையான அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் சனநாயகவாதிகளும் இந்த அரசியல் நிலைபாட்டுடன் உடன்பாடு கொள்ளவில்லை என்பதும் வெளிப்படுகிறது. ஒருசிலரின் நலன்களுக்கு மட்டும் பிரயோசனப்படும் இந்தச்சலுகை அரசியலை என்றேன்றும் கட்டிகொண்டிருப்பதற்காகத்தான்

இங்கே இன்னொரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது “சட்டத்தரணியான மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருக்கும் அரசாங்கத்தில் அவரிக் கீழ் நான் நீதி அமைச்சராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்*5என நீங்கள் அன்று கூறியிருந்தீர்கள்

உள்நாட்டிற் சிங்களப் புத்திஜீவிகளில் இருந்து சிங்கள மனித உரிமைவாதிகள் வரையும் சர்வதேச அளவில் மனித உரிமைகள் அமைப்புகளில் இருந்தும் ஐநா மனித உரிமைக் கவுன்சில் வரையும் மகிந்த ராஜபக்ஸமீதும் அவரது சகோதரர்கள் மீதும் இலங்கைப்படைகள் மீதும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் பற்றிக் குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டிருந்த போது சிறந்த சட்டத்தரணியும் சட்ட வல்லுனரும், அரசியற் புத்திஜீவியாகவும் மதிக்கப்படும் நீங்கள் மகிந்தவின் ஆட்சியில் அவரின் கீழ் நீதி அமைச்சராக இருப்பதற்கு பாக்கியம் செய்திருப்பதாக தெரிவித்தமையை உங்களின் ஆன்மாவின் மரணமென்று சொல்ல வேண்டாமென்று சொல்வீர்களோ?

சரி இவற்றையெல்லாம் விட்டு விடுங்கள் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் சிறுபான்மைக்கட்சி ஒன்றுடன் ஏன் உங்களால் கூட்டுச்சேர முடியாது அதனைத்தடுத்து நிற்பது இந்தப்பாழாய்ப்போன சலுகை அரசியல்தானே?

சிறுபான்மை இனங்களுடன் கூட்டுச்சேர்வதால் நிட்சயமாக அரசியல் உரிமைகளுக்கு பலமாக கோரிக்கை வைக்க முடியும் ஆனால் எந்தச் சலுகைகளயும் பெறமுடியாது.

மற்றப்படித் தமிழ்த்தலைவர்களும் விடுதலைப்புலிகளும் இழைத்த வரலாற்றுத் தவறுகளாற்தான் அவர்களுடன் கூட்டுச்சேர முடியாதுள்ளது என நீங்கள் கூறுவது அர்த்தமற்றது என்றே கருதுகிறேன். ஏனேனில் இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து முஸ்ஸிம் மக்களுக்கு மோசமான கொடுமைகளைச் செய்த சிங்கள அரசுகளுக்கு முஸ்லீம் தலைமைகள் பரிபூரண ஆதரவை அளித்தே வந்துள்ளன.

இவற்றுக்கான உதாரணங்களாகச் சிலவற்றைக் கீழே தருவதற்கு முன் அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான்ஜான் கனடாவில் ஆற்றிய உரை ஒன்றையும் இங்கு தருகிறேன்.

"தம்புள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் என்பது ஒன்றும் முதன்முதலாக நடப்பது அல்ல. புலிகளுடனான யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமது கவனங்களை யுத்தத்தை ஆதரிப்பதில் தீவிரமாக குவித்திருந்த சிங்கள தேசியவாதிகள், யுத்தம் முடிந்த உடனேயே தமக்கான புதிய இலக்குகளை தேர்ந்தெடுத்து அவற்றின்மீது தமது தாக்குதல்களை தொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். மலையக மக்களது இந்து ஆலயங்கள் மணி அடிப்பது தொடர்பான பிரச்சனையை கிளப்பியதிலிருந்து அடுத்து அடுத்து வெவ்வேறு இடங்களில் இதுபோன்ற பிரச்சனையை கிளப்பி வந்தவர்களின் அண்மைக்கால இலக்குத்தான் தம்புள்ள பள்ளிவாசலாகும். இந்த போக்கு இத்துடன் நிறுத்தப்பட மாட்டாது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் சிங்கள தேசியவாதத்தின் இருப்பானது இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மூலமாகவே தம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடியும். சிங்கள அரசியல் தலைமையும், சட்ட ஒழுங்கைக் காக்க வேண்டிய படையினரும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட முடியாதவர்களான இருக்கும் வரையில் இந்த சிங்கள தேசியவாத சக்திகள் முழுச்சுதந்திரமாக செயற்படமுடியும்: அவ்வாறுதான் செயற்படும். ஏனெனில் சிங்கள தேசியவாத சக்திகள் சிங்கள சமூகத்தின் மீது தமது சித்தாந்த மேலாண்மையை திடமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் வரையில், இலங்கை சமூக உருவாக்கத்தின் திசைவழியை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகளாக இவர்களே திகழப்போகிறார்கள்" *6 அந்த வகையில்

இலங்கையின் வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1915ல் முதன்முதலாகக் கண்டியிற் மிகப்பெரிய கலவரம் முஸ்லீம்களுக்கு எதிராகப் பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தால் ஏற்படுத்தப்பட்டது. அது பின் நாடு முழுவதுமாக பரவியது. இதில் பெருமளவு உயிரழிவுகளும் சொத்து அழிவுகளும் ஏற்பட்டன.

முஸ்லீம்களுக்கு எதிரான இரண்டாவது மிகப் பெரிய இனக் கலவரம் புத்தளத்தில் 1976 ஆம் ஆண்டு இடம்பெற்றது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் இடம்பெற்ற இந்தக் கலவரத்தில் புத்தளமும் அதனை அண்மித்த கிராமங்களும் முஸ்லீம் பள்ளிவாசல்களும் கடுமையாக தாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் பெரும் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இதில் பல முஸ்லீம்கள் கொல்லவும்பட்டனர்.

1982ல் ஐக்கியதேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் காலியில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இதன் பின்னர் தொடர்ச்சியாக கண்டி மாவட்டம் மாவனல்லவில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த இனக் கலவரத்திற் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.“

இவை தவிரவும் களுத்துறை, பேருவில பகுதிகளிலும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்ததனை வரலாறு மறக்காது.

சந்திரிக்காவினுடைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இறுதித் தேர்தலின் போது கண்டி உடத்தலவின்னவில் முஸ்லீம் இளைஞர்கள் துடி துடிக்கக் கொல்லப்பட்டார்கள். (இது உங்களது சொந்த மாவட்டடம்.) அன்றைய பிரதி பாதுகாப்பு அமைச்சரான அனுருத்த ரத்வத்தை முஸ்லீம் காங்கிரசிற்கும் உங்களுக்கும் சவால் விடுத்து தனது கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் மூலம் இந்த முஸ்லீம் இளைஞர்களைக் கொன்று முடித்தார். அவரை இந்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் கடைசிவரை பாதுகாத்தது.

இவைதவிர இன்றுவரையும் முஸ்லீம்மக்கள் அனுபவித்து வரும் சில முக்கியமான பிரச்சனைகளையும் பார்ப்போம்

அம்பாறை மாவட்டத்தில் தீகவாபி பிரதேசத்தைச் சூழ உள்ள பிரதேசங்களில் முஸ்லிம்களுடைய நிலங்கள் சிங்களத் தரப்பால் அபகரிப்பப்பட்டு வருகின்றன.

அந்நிலங்கள் தொடர்பாக முஸ்லிம்கள் நீதிமன்றுக்குச் சென்று நீதிமன்றம் அவை முஸ்லிம்களுடைய நிலங்கள் தான் என்று தீர்ப்புரைத்த பின்னரும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தால் அந்நிலங்கள் முஸ்லிம்களிடம் திருப்பி வழங்கப்படவில்லை (இது உங்களுக்கும் ஏனைய முஸ்லீம் தலைமைகளுக்கும் தெரியும்.)

தம்புல்லவில் அரை நூற்றாண்டாக முஸ்லீம்களால் பேணப்பட்டு வணங்கப்பட்டு வந்த பள்ளிவாசல் நீங்கள் நீதி அமைச்சராக இருக்கும் போதே மிகப் பிரபலமான பௌத்த பிக்குவொன்றின் தலைமையில் வெளிப்படையாகவே அடித்து நொருக்கப்பட்டது மட்டுமன்றி இது இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சனையாக நீறுபூத்த நெருப்பாக உள்ளது( நேற்று இது பற்றி அஸ்கிரிய பீடாதிபதி மீண்டும் வெளியிட்டுள்ள கருத்தை இணைப்பில் பார்க்க*7)

மேலும் தெகிவளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்குத் தொடர்ச்சியாக பெரும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கும் பின்பும் தனிப்பட்ட சலுகைகளுக்காக அவர்களுடன் கை கோர்க்க முடியுமென்றால்…. இன்றைக்கு ஒட்டுமொத்தமான சிறுபான்மை நலன்களுக்காக, நேசக்கரம் நீட்டும் தமிழ்பேசும் மக்களுடன் ஏன் உங்களாற் கரம் கோர்க்க முடியாது..

தமிழ் சமூகத்திற்கு தனது நல்லெண்ணத்தையும் சகோதரத்துவத்தையும் வெளிக்காட்ட முஸ்லீம் தலைவர்களான நீங்கள் ஏன் சந்தர்ப்பம் வழங்கக் கூடாது.

தமிழ்த் தலைவர்கள் இந்த நிலையில் தங்களது ஆதிக்க உணர்வையும் பிரபுத்துவ உணர்வையும் விட்டு சனநாய உணர்வுடன் சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமைகள் என்ற பெரும் தளத்தில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் தமிழ்மக்களுக்கும் உள்ளது.

இதேவேளை 1980களின் பின் எழுச்சி பெற்ற தமிழ்த் தேசிய ஆயுத போராட்டம் முஸ்லீம்கள் தொடர்பில் சரியான புரிதல்களைக் கொண்டிருக்கவில்லை என்பதனை அரசியல்அறிவு படைத்த சிறுபான்மை இனங்களின் உரிமைகளை மதிக்கிற தமிழ்த்தரப்புகள் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன. 1990களின் நடுப்பகுதியில் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதனைத் தேசியத் தற்கொலை எனத் தமிழ்த் தரப்பினர் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். தாம் முஸ்லீம்களை வெளியேற்றியது வேண்டத்தகாத கசப்பான சம்பவம் என புலிகளும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் உங்களிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டிருந்தார்கள். தவிரவும் புலிகளுக்கு முன்பிருந்த இயக்கங்களால் கிழக்கில் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் காலம் தாழ்த்தினாலும் அவர்கள் இப்போ தமதுசுயவிமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் முஸ்லீம் ஊர்காவற் படையினராலும், கிழக்கில் அரச படைகளுடன் இயங்கிய முஸ்லீம் ஆயுததாரிகளாலும் மற்றும் புலனாய்வாளர்களால் கிழக்கில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டமை குறித்தோ அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்தோ எனது அறிவுக்கு எட்டியவகையில் முஸ்லீம் தலமைகளோ, புத்திஜீவிகளோ, உலாமாக்கள் சபைகளோ, பள்ளிவாயில்களோ வருத்தம் தெரிவித்ததாகப் பதிவுகள் இல்லை. இதனைக் கூறுவதன் நோக்கம் பழையவைகளைக் கிளறி பிரிவினையை வளர்ப்பதல்ல மாறாக ஒரு நடுநிலையான பத்திரிகையாளன் என்ற வகையில் நிகழ்வுகளை நிதானமாக எடைபோடவேண்டியே.

ஒரு நுற்றாண்டு காலமாக முஸ்லீம்களைக் கிள்ளுக் கீரையாகப் பயன்படுத்தும் பிற்போக்கான சிங்களப் பெருந்தேசியவாத அரசாங்கங்களோடு, முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொண்ட அனைத்து விதமான அராஜகங்களுக்கும் இன்றுவரையும் ஒரு வருத்தத்தையேனும் தெரிவிக்காத அரசாங்கங்களோடு கூட்டுச்சேர முடியுமென்றால்… நேசக்கரம் நீட்டும் தமிழர்களோடு ஏன் முடியாது..?

புலிகள் இல்லாது ஒழிக்கப்பட்டு மூன்று வருடங்கள் முடிந்து விட்டன.

புலிகள் முஸ்லீம்களை விரட்டிய கதையை இன்னும் எவ்வளவு காலத்திற்கு சொல்லி அரசியல் நடத்தப் போகிறீர்கள்?

பசீர் சேகுதாவுத் அவர்களே கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்பு லண்டனில் இருந்து உங்களோடு ஒரு முறை தொலைபேசியில் கதைக்கும் போது நீங்கள் கூறினீர்கள்

இனிமேல் நாம் சிங்களத் தலைமைகள் முஸ்லீம்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதனை கேட்பதனை விட தமிழ்த் தேசியம் முஸ்லீம் தேசியத்திற்கு என்ன செய்யப் போகிறது எனக் கேட்பது தான் முக்கியமானது எனச் சொன்னீர்கள்.

ஆம் இப்போ தமிழ்த்தேசியம் உங்களைச் சகோதர இனமாக மதித்து ஒட்டு மொத்தமான சிறுபான்மை இனங்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு முதற்படியைப் போடுவதற்காக நேசக்கரம் நீட்டுகிறது…

சரி இந்தக்கரங்களைப்பற்ற விருப்பமில்லை என்று வையுங்கள் ஆனால் உங்களை ஒடுக்குகிறவனின் கரங்களைப் பற்றாமலாவது விடமுடியுமல்லவா?

அதன் மூலம் தமிழ்த் தேசியத்தாலும் சிங்களத் தேசியத்தாலும் ஒடுக்கப்படுகிற முஸ்ஸீம் சமூகம் மறந்து போயும் ஒடுக்குபவனுக்குப் துணைபோகவில்லை என்று அழியாப்புகழ் தரும் வரலாறு உங்களுக்கு!!!

இந்த வரலாற்றுத் தடத்தில் உங்கள் கையில் உள்ள பேனா முஸ்லீம் மக்களின் (ஒட்டுமொத்த சிறுபான்மைச் சமூகத்தின்) உரிமைகள் தான் முக்கியம் என்று எழுதப் போகிறதா? அல்லது நூற்றாண்டுகள் கடந்தாலும் எமது அரசியற் தலைமைகளின் தனிப்பட்ட சலுகைகள் தான் எமக்கு முக்கியம் என எழுதப் போகிறதா என்பதனை நீங்களே தீர்மானியுங்கள்.

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.