Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேள்விக்குறியாகத் தொடரும் சிரியாவின் எதிர்காலம். - விவேகன்

Featured Replies

`கேடுகாலம் வந்தால் புடலங்காயும் பாம்பாகும், ஒட்டகத்தில் போனாலும் பாம்பு கடிக்கும்’ என்பார்கள். சிரிய அதிபர் ஆசாத்திற்கும் இப்போது இந்த நிலைதான் என்பது சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. மரத்தில் இருந்து கிளைகள் வெட்டப்படுவது போன்று அவரது ஆட்சியில் இருப்பவர்கள் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியுள்ளனர். கடாஃபியும் இவ்வாறு தான் கடைசியில் தனிமரமாக்கி விழுத்தப்பட்டதை உலகம் அறியும். அந்த வகையில்தான் இப்போது சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியும் ஆட்டம் கண்டுகொண்டிருக்கின்றது.

ஆசாத் அரசில் பிரதமராக இருந்த ரியாத் ஹ்ஜாப் அண்மையில் யாரும் எதிர்பாராத நிலையில் ஜோர்டானுக்கு தப்பியோடியுள்ளார். தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி ஜோர்டான், துருக்கி, ஈராக் ஆகிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். ஆசாத்துக்கு எதிராக கிளம்பியுள்ள முக்கிய அரசியல் தலைவர்களும், அவரது ஆதரவாளர்கள் ஜோர்டானுக்கே அதிகமாகத் தப்பி ஓடுகின்றார்கள்.

இதனால், ஜோர்டான் எல்லையில் சிரியப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் சிரிய - ஜோர்டான் எல்லைப் பகுதியான டெல் ஷிஹாப்-துர்ரா வழியாக சிரியாவில் இருந்து ஏராளமானோர் ஜோர்டானுக்கு தப்பி ஓடியபோது, அதனைத் தடுப்பதற்காக சிரியா இராணுவத்தினர் குண்டுகளை வீசி தாக்கினர். இதில் பல குண்டுகள் ஜோர்டான் பகுதிக்குள்ளும் விழுந்தன. இதனால், ஆத்திரமடைந்த ஜோர்டான் சிரிய எல்லைப் படையினர் மீது பதில்த்தாக்குதலை நடத்தியது. சுமார் ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சிரியாவின் 2 எல்லைப் பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதன்போது தங்கள் தரப்பில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என ஜோர்டான் இராணுவ தரப்பு கூறியுள்ளது. ஆசாத் அரசில் பிரதமராக இருந்த ரியாத் ஹ்ஜாப்பும் ஜோர்டானுக்கே தப்பியோடியுள்ளார். கடந்த யூன் மாதம் 6ம் திகதிதான் விவசாயத்துறை அமைச்சராக இருந்த இவரை பிரதமர் பதவிக்கு ஆசாத் நியமித்தார். ஆனால், பதவியேற்ற இரு மாதங்களுக்குள் அவர் பதவியில் இருந்து வெளியேறித் தப்பியோடியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆசாத் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி ஆரம்பமானதையடுத்து அரசாங்கத்தை விட்டு வெளியேறிய உயர்மட்ட அரசியல்வாதியாக இவர் கருதப்படுகிறார்.

இவ்வாறான தப்பியோட்டங்கள் இனித் தொடரும் என்கின்றார்கள். இவரது வெளியேற்றத்தையடுத்து, சுகாதாரதுறை அமைச்சராக இருந்த வால் நடேர் அல் ஹல்கியை புதிய பிரதமராக ஆசாத் நியமித்துள்ளபோதும், ஆசாத்தின் ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கிவிட்டதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு மாதத்திற்கு முன் பஷார் அல் ஆசாத்துக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட பிரிகேடியர் ஜெனரல் மனாப் தலஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறினார். இதுவரை 30ற்கும் மேற்பட்ட ஜெனரல் தர இராணுவ உயரதிகாரிகள் சிரிய எல்லையைத் தாண்டி துருக்கிக்குள் பிரவேசித்து ஆசாத்திற்கு எதிரான படையினருடன் இணைந்துள்ளனர்.

தற்போது இவர்களின் வழிகாட்டல்களில் சிரியப் படையினருக்கு எதிரான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. லிபியாவில் கடாஃபிக்கு எதிராகவும் இவ்வாறான நகர்வுகளே மேற்கொள்ளப்பட்டது உங்கள் நினைவுக்கு வரலாம். ஆசாத் அரசில் இருந்து இவ்வாறு அரசியல் உயர்மட்டத் தலைவர்களும், இராணுவ உயரதிகாரிகளும் பதவி விலகுவது மட்டுமல்ல, அவர்கள் எதிரணியினருடன் இணைந்துகொண்டு செயற்படுவதானது அரச படையினருக்கும் இழப்புக்களையும் ஆசாத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை தடுக்கும் ஆபத்தையுமே ஏற்படுத்தும் என்கின்றார்கள். ஆனாலும், ஆசாத் இதுவரை வளைந்துகொடுப்பதாக இல்லை.

அலெப்போ நகரை மீட்பதற்காக மிகக்கடுமையான போர் ஒன்றை ஆசாத்தின் இராணுவத்தினர் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நடத்தியுள்ளனர். சுமார் 25 இலட்சம் மக்கள் வசிக்கும் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவையும், டமாஸ்கசின் சுற்றுப்புற பகுதிகளையும் மீட்க இராணுவத்தினர் இழப்புக்களுடன் மிகக் கடுமையாக சண்டையிட்டுள்ளனர்.

அலேப்போ நகர் வீழ்ச்சியடைந்தால் தலைநகர் டமாஸ்கஸ்சின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகிவிடும். இந்த நகரை இழப்பதென்பது நாட்டை இழப்பதற்கு சமம் என சிரிய ஆட்சியாளர்கள் படைத் தளபதிகளுக்கு எச்சரித்திருந்தார்கள். இந்நகரின் பெரும் பகுதியை எதிரணியினர் கைப்பற்றியிருந்த நிலையில், அலேப்போ நகரின் வீழ்ச்சி ஆசாத் ஆட்சிக்கு அடிக்கப்பட்ட கடைசி ஆணி என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் லியோன் பார்னெட்டா குறிப்பிட்டிருந்ததும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

இதனால் இந்நகரை மீட்டெடுப்பதற்கு சிரியப் படையினர் தீவிரமாக முனைந்திருந்தனர். குறிப்பாக அலெப்போ நகரை மீட்பதற்காக சுமார் 2 வாரத்துக்கும் மேலும் தாக்குதல் நீடித்திருக்கின்றது. இந்நகரை மீட்பதற்காக ஆசாத்தின் சுமார் 20 ஆயிரம் படையினர் களமிறக்கப்பட்டு முற்றுகைத் தாக்குதலை நடத்தியிருந்தனர். தரைப் படையினரும், விமானப் படையினரும் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஆசாத்தின் படை பெரும் வெற்றி பெற்றுள்ளது. எனினும், ஆங்காங்கே சண்டைகள் இன்னமும் இடம்பெற்று வருவதுடன், சிரிய வான் படையின் தாக்குதல்களும் அங்கு தொடர்வதாக அறியவருகின்றது.

அலெப்போவில் இராணுவம் நடத்திய பீரங்கி தாக்குதல்களால் 600ற்கும் மேற்பட்ட இடங்களில் பாரிய பள்ளங்கள் தோன்றி இருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக ஐ.நா தகவல்கள் கூறுகின்றன. பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகேயும் பீரங்கி தாக்குதல்களால் பள்ளங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அப்பாவி பொதுமக்களை காக்க இராணுவமும், புரட்சிப் படையும் தவறி வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது.

‘உலகப் பாரம்பரிய நகரமாக, வரலாற்று அடையாளங்களைக் கொண்ட நகரமாகக் கருதப்படும் அலெப்போ மீது சிரியா இராணுவத்தினர் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளதனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் அனைத்தும் சேதமடைந்து வருகின்றன’ என்று அரசு எதிர்ப்புப் படையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அரசை எதிர்த்துப் போராடும் சிரியன் தேசியக் குழு வெளியிட்ட அறிக்கையன்றில், வரலாற்று சிறப்பு வாய்ந்த அலெப்போ நகரத்தில் இராணுவத்தினர் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

சிரியாவின் வர்த்தக தலைநகரான அலெப்போ, அரசு எதிர்ப்புப் படையினர் வசம் இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது. அரசுக் கட்டடங்கள், தொலைக் காட்சி நிலையம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை குண்டு வீசி தாக்கப்படு

கின்றன. இத்தாக்குதலுக்கு பாரம்பரியமிக்க இடங்களும் தப்பவில்லை. 13வது நூற்றாண்டைச் சேர்ந்த கோட்டை உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்டடங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நகரத்தின் வரலாற்றுச் சிறப்பை உணர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு சார்பில் உலகப் பாரம்பரிய நகரம் என்று 1986ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அலெப்போவின் பாரம்பரிய இடங்களை காப்பாற்றுவதற்காக, இராணுவத்தினரை எதிர்க்காமல் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் அரசு எதிர்ப்புப் படையினர் உள்ளனர் என்று அக்குழு தெரிவித்துள்ளது. அலெப்போ நகர் முழுமையாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சிரிய அரச தொலைக்காட்சி ‘அல்-இக்பாரியா’ தலைமையகத்தினுள் எதிர்ப்படையினர் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தலைநகர் டமாஸ்கஸின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள அரசு தொலைக்காட்சி தலைமையகத்தின்’ 3வது தளத்தில் நிகழ்ந்த இக்குண்டு வெடிப்பால் உயிரிழப்பு ஏதுமில்லை எனும்போதும் சிலர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இங்கு தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த யூன் 27ம் திகதி ‘அல்-இக்பாரியா’ அலுவலகத்தில் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 3 செய்தியாளர்களும், 4 பாதுகாவலர்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் நிகழ்ந்துவரும் இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வன்முறையை தடுத்து நிறுத்த ஐ.நா. சபை மற்றும் அரபு நாடுகளின் சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அனான் கடந்த பெப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். அவர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி சமரச திட்டம் ஒன்றையும் வகுத்தார். ஆனால் அதை சிரியா இராணுவமும், எதிரணிப் படையினரும் கடைபிடிக்கவில்லை. ‘தனது 6 அம்ச சமாதானத் திட்டத்துக்கு போதிய ஆதரவு கிடைக்காமையாலும், அங்கு இடம்பெறும் மோதல்களில் இராணுவ மயமாக்கம் அதிகரித்து வருவதால் அதிருப்தியுற்றுமே தான் பதவி விலகுவதாக’ ஜெனிவாவில் இடம்பெற்ற ஊடக

வியலாளர் மாநாட்டில் அறிவிப்புச் செய்து கோபி அனான் பதவி விலகிக்கொண்டார்.

அவருடைய இந்த திடீர் முடிவு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அரபு நாடுகள் அதிர்ச்சி அடைய செய்தது. சிரியா மீது நடவடிக்கை மேற்கொள்ள சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தான் பலமுறை முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வந்தன. என்றாலும் தற்போது கோபி அனனின் விலகல் முடிவுக்கு சீனா வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஹோங் லீயி கூறுகையில், ‘சிரியா விவகாரத்தில் அவருக்கு ஏற்பட்ட சிக்கல்களை அறிவோம். அவர் மேற்கொண்ட செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. அரசியல் ரீதியில் தீர்வு கண்டால் அதை நாங்களும் ஏற்போம்’ என கூறினார்.

இதேவேளை, மிகச் சிறந்த இராஜதந்திரியும் நேர்மைமிக்க ஒருவருமான கோபி அனான், பதவி விலகியமை மாபெரும் அவமானத்துக்குரிய ஒன்றென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இலண்டனில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார். இலண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியைப் பார்வையிட அண்மையில் அங்கு வந்திருந்த புட்டின் சிரிய விடயம் குறித்தே பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியிருந்தார். ஆனால், கோபி அனானின் பதவி விலகலுக்கு ரஷ்யாவும் சீனாவுமே காரணமென அமெரிக்க வெள்

ளைமாளிகைப் பேச்சாளர் ஜே கார்னி நேரடியாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதேவேளை, அனானின் அர்ப்பணிப்பு, திட்டமிட்ட முயற்சிகள், சேவை என்பனவற்றுக்கு நன்றி தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சூஸன் றைஸ், ஐக்கிய நாடுகள் தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டமை அவரது செயல் நிறைவேற்றத்தை சாத்தியமற்றதாக மாற்றியதாக கூறினார்.

இந்த முட்டுக்கட்டை சீனா, ரஷ்யாவால் போடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சிரியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் ரஷ்யாவாலும் சீனாவாலும் 3 தடவைகள் தோல்வியைத் தழுவின என்பது அனைவரும் அறிந்ததே. வீட்டோ அதிகாரம் கொண்ட இவ்விரு நாடுகளும் சிரியாவில் ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான எந்தவொரு செயற்பாடும் அந்நாட்டுக்கு வெளியிலிருந்து முன்னெடுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சிரியாவுக்கான சமாதானத் தூதுவர் பதவி நிலைக்கு புதிய ஒருவரை நியமிப்பது குறித்து அரபு கூட்டமைப்புடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்தார். கோபி அனான் சிரிய மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒருவராக தொடர்ந்து இருந்து வருவதாக தெரிவித்த பான் கீ மூன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிலவும் தீவிர பிரிவினைகள் அவரது நடவடிக்கைகளுக்கு தடையாக மாறியுள்ளதாக கூறினார்.

இதற்கிடையே, ‘சிரியா பிரச்சினையில் ஈரான் தலையிடுவது என்பது ஆக்கப்பூர்வமானதாக இருக்காது மாறாக அழிவுக்கே வழிவகுக்கும்’ என அமெரிக்கா எச்சரித்துள்ளது. சிரியா பிரச்சினையில் மத்தியஸ்தராகச் செயல்படத் தயார் என ஈரான் அறிவித்திருந்தது. ஆனால், ஈரானின் செயல்பாடு சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் சிரியா அதிபர் ஆசாத்தின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாகவே அமையும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானப் பயணத்தின் போது, உடன் பயணம் செய்த செய்தியாளர்களிடம் வெள்ளை மாளிகை செய்தித்துறைச் செயலர் ஜே கார்னி இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். (இது குறித்து வரும் தொடர்களில் விரிவாகப் பார்ப்போம்) நிலைமை இவ்வாறிருக்க, சிரியா குறித்து ஐ.நா. பொதுக்குழுவில் கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழமை ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிரியாவில் நீடித்து வரும் வன்முறையைத் தொடர்ந்து சவூதி அரேபியா வரைவு செய்த தீர்மானம் ஐ.நா.வின் பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்டது. 193 உறுப்பினர் நாடுகள் கொண்ட பொதுக் குழுவில், 133 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. 31 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

‘சிரியா அதிபர் பதவி விலக வற்புறுத்தல், அந்நாட்டுடன் சர்வதேச உறவுகளைத் துண்டித்தல், ஆட்சி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இரசாயன, உயிரி ஆயுதங்களை பயன்படுத்தாமல் இருத்தல்’ உள்ளிட்டவற்றை வலியுறுத்துகிறது பொதுக் குழு தீர்மானம். ‘ஐ.நா.வின் முடிவுகளை சிரியா அரசு செயல்படுத்துவதை உறுதி செய்ய பாதுகாப்புக் குழு தவறியதில் வேதனை தெரிவித்தும்’ தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், இவற்றை நடைமுறைப்படுத்துவது என்பது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமென்பது கேள்விக்குரிய ஒன்று. ‘வீட்டோ அதிகாரம்’ கொண்ட நாடுகளை ஒரு வழிக்கு கொண்டுவந்து, சிரியாவில் ஒரு அமைதியை அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இடையில் இன்னும் எத்தனை ஆயிரம் அப்பாவி மக்கள் பலிக்கடாவாகப் போகின்றார்களோ தெரியவில்லை.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.