Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சே குவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தொபரின் வீடு - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]சே குவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தொபரின் வீடு [/size]

யமுனா ராஜேந்திரன்

ஹேபர்ட் மார்க்யூஸ் கூறுவது போல 'புள்ளிவிபரங்கள் ஒருபோதும் குருதி சிந்துவதில்லை'. கதை சொல்லிகளே புள்ளிவிபரங்களை குருதிசிந்த வைக்கிறார்கள். ஆவணங்கள் அறிக்கைகளில் வரும் புள்ளிவிபரங்களை விடவும் கதைசொல்லிகளால் ரத்தம் சிந்த வைக்கப்படும் உண்மைகள் அதிகம் கூரானவை, உயிருள்ளவை. - நிலாந்தன்

நிலவிய சோசலிசம் குறித்து, பின் புரட்சிகர சமூகங்கள் குறித்து, சோவியத் யூனியன் மற்றும் சீனாவின் அடியொற்றிச் சென்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து எந்தப் பிரமைகளும் இல்லாதது போலவே ஈழப் போராட்டம் குறித்தும், விடுதலைப் புலிகள் அதனோடு பிற இயக்கங்கள் குறித்தும் விடுதலை அரசியலில் நாட்டமுள்ள எவருக்கும் இன்று எந்தப் பிரமைகளும் இருக்கமுடியாது. உலக அரசியலின் இந்தப் புறநிலை யதார்த்தம் குறித்த புரிதலுடன், இந்த மனநிலையில் இருந்து யோ. கர்ணன் கதைகளை அணுகுகிறபோது எனக்கு அதனது கலை சார்ந்த மற்றும் அரசியல் சார்ந்த முக்கியத்துவத்தினை உணர்வதில் எந்தத் தயக்கங்களுமில்லை. முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் குறித்த இலக்கிய ஆவணம் யோ. கர்ணன் கதைகள் என்பதனை மிகதெளிவாக நான் பதிவு செய்கிறேன்.

தேவதைகளின் தீட்டுத்துணி (வடலி பதிப்பகம் : ஆகஸ்ட் 2010) மற்றும் சே குவேரா இருந்த வீடு (வடலி பதிப்பகம் : பிப்ரவரி 2012) என யோ. கர்ணனின் இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளியாகி இருக்கின்றன. முதல் தொகுதியில் 10 சிறுகதைகளும் இரண்டாம் தொகுதியில் 13 சிறுகதைகளும் இருக்கின்றன. தொகுக்கப்படாமல் உதிரிகளாக 5 கதைகள் இணையத்தில் கிடைக்கின்றன. மொத்தமாக, யோ.கர்ணனின் 28 கதைகள் எனக்கு வாசிக்கக் கிடைத்தன. இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலுமுள்ள பெரும்பாலுமான கதைகள் முள்ளிவாய்க்கால் பேரழிவின் போதான நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. அந்த வகையில் யோ.கர்ணனின் இரு தொகுப்புக் கதைகளையும் நாம் முள்ளிவாய்க்கால் பேரழிவுக் கதைகள் எனக் குறிப்பிட வேண்டும்.

2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தின் புதுவிசை இதழில் வெளியாகி பரவலாகத் தமிழகத்தில் விமர்சனத்துக்கு உள்ளான துவாரகாவின் தந்தையின் பெயர் பிரபாகரன் எனும் பிரச்சினைக் கதை, 2012 பிப்ரவரியில் கதை வெளியாகி 7 மாதம் கழித்து வெளியான சே குவேரா இருந்த வீடு எனும் தொகுதியில் உள்ளிடப்படவில்லை என்பதனை இங்கு பதிய விரும்புகிறேன்.

இரு கதைத் தொகுதிகளுக்குமான முன்னுரை, பின்னட்டைக் குறிப்பு என்பதோடு மிகவிரிவான அரசியல் விமர்சனங்களையும் வழங்கியிருப்பவர்கள் ஈழத்தின் இலக்கிய ஆளுமைகளும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பில் செயல்பட்டவர்களுமான கருணாகரன் மற்றும் நிலாந்தன் ஆகியோர். இதில் கருணாகரன் விடுதலைப்புலிகளின் இலக்கிய இதழான வெளிச்சம் ஆசிரியராகவும் இருந்தவர் என்பதனையும் நினைவுறுத்திக்கொள்ள வேண்டும். நிலாந்தன், கருணாகரன் போன்றவர்களது கருத்துக்கள், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் கருத்துக்கள், துவாரகாவின் தந்தையின் பெயர் பிரபாகரன் கதை தொடர்பான விவாதங்கள், அக்கதையை வெளியிட்ட ஆதவன் தீட்சண்யா தொடர்பான சிக்கலில் அவருக்கு அதிகாரபூர்வ ஆதரவளித்த தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்க அறிக்கை, என்பவற்றோடுதான் எனக்கு யோ.கர்ணன் கதைகள் அறிமுகமாகின.

அரசியல் ரீதியிலான யோ.கர்ணனின் கதைகள் நான் மேலே குறிப்பிட்ட கலாச்சார-அரசியல்வாதிகளின் மதிப்பீடுகளுடன்தான் பரவலான வாசிப்புக்கு வந்தன. இச்சூழலில் அரசியலை விட்டுவிட்டு யோ.கர்ணன் கதைகளை இலக்கிய வாசிப்பு மட்டும் செய்யுங்கள் எனச் 'சுத்த' இலக்கியவாதிகள் கோராமாட்டார்கள் என நம்புகிறேன்.

சே குவேரா 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இலங்கையின் ஹொரானா பிரதேசத்திலுள்ள ஹகல கெலா இரப்பர் தோட்டத்துக்கு விஜயம் செய்தார். இரப்பர் மர வளர்ப்பு பற்றி அறிந்து கொள்வது அவரது திட்டம். அந்த ஆண்டு அவர் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் புதுதில்லியில் சந்தித்தார். மூன்றாம் உலக நாடுகளின் காதலராக சே குவேரா தென் ஆசிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டது அன்று அவரது இயல்பு. காலத்தின் கோலம் மகிந்த ராஜபக்சேவும் கியூபா சென்று சே குவேராவின் மனைவி அலீடா மார்ச்சையும் குவேராவின் புதல்வர் கொமிலாவையும் சந்தித்து வந்திருக்கிறார். இலங்கையில் சே குவேரா இயக்கம் என அறியப்பட்ட ரோகண விஜேவீராவின் <em>ஜனதா விமுக்தி பெரமுனா </em>ஆகத்தீவிர சிங்கள இனவாதக் கட்சியாக இருந்துகொண்டிருக்கிறது. மலையகத் தமிழர் வடகிழக்குத் தமிழர் என அனைவரும் ஜேவிபிக்கு இந்திய விரிவாக்கத்தின் பிரதிநிதிகள். இவையனைத்தையும் எப்படிப் புரிந்து கொண்டு, எப்படித் தொடர்புபடுத்துவது?

இது போலத்தான் 2005 ஆம் ஆண்டு கிறிஸ்தொபரின் வீடு எனும் பெயரில் இருந்த யோ.கர்ணனின் கதை, எப்படி 2012 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சே குவேரா இருந்த வீடாகவும் ஆகிப்போகிறது என்று புரிந்துகொள்வதும், தொடர்புபடுத்துவதும் சிக்கலாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் நிதானமாக யோசிக்க சிக்கல்கள் படபடவென அவிழ்கின்றன. சே குவேராவின் அரசியலுக்கும் அவர் பேசிய புரட்சிகர அறத்துக்கும் அவரது சர்வதேசீய அரசியலுக்கும் அவர் உருவாக்க விரும்பிய விடுதலைபெற்ற சோசலிச மனிதன் எனும் கருத்தாக்கத்திற்கும் இலங்கைக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை எனும் புரிதல்தான் என்னளவில் அந்த சிக்கலின் முடிச்சு அவிழ்ந்து வீழ்ந்ததற்கான காரணம்.

சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள் என இரண்டுமே சே குவேராவின் புரட்சிகர ஆன்மாவைத் தீண்டவே முடியாது. இதுவே மெய். பிறகு எதற்காக யோ.கர்ணன் தனது சிறுகதைத் தொகுப்பை கிறிஸ்தொபரின் வீடு என்பதற்கு மாற்றாக சே குவேரா இருந்த வீடு எனக் குறிப்பிடுகிறார்? வீடு என்பது விடுதலை. வீடு என்பது நினைவுகள் வாழும் இடம். வீடு என்பது அங்கு வாழ்பவரின் முதுசம். சே குவேரா ஒரு போதும் அவரது அரசியல் நோக்கில் புரட்சிகர ஆன்ம நோக்கில் இலங்கையில் நுழைந்திருக்கவேயில்லை. நுழைந்தேயிராத ஒருவர் எவ்வாறு அந்த வீட்டில் குடியிருக்க முடியும்? சே குவேரா இன்று ஒரு விளம்பரப் பொருளாகவும் விற்பனைப் பொருளாகவும் ஒரு மோஸ்தராகவும் ஆகமுடியும் என்பதற்கான சான்றுபோலத்தான் யோ.கர்ணன் சிறுகதைத் தொகுதியின் தலைப்பாகவும் அவர் ஆகியிருக்கிறார். 2006 இல் கிறிஸ்தொபர் வீடாக இருந்த தலைப்பு 2009 மே 18 முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் சே குவேரா குடியிருந்த வீடாக ஆன குறியீட்டின் கதை இப்படித்தான் இருக்க முடியும். தலைப்பின் அரசியல் குறித்தே நிறையப் பேசமுடியும் என்றாலும் கட்டுரையின் விரிவஞ்சி அதனைத் தவிர்க்கிறேன்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேரத் தொழிற்சங்கவாதியும் அதனது கலை இலக்கியப் பிரிவான முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளருமான ச.தமிழ்ச்செல்வன் யோ.கர்ணன் கதைகள் குறித்துக் குறிப்பிடும்போது, பான்கீ மூன் அனுப்பிய மூவர் குழு அறிக்கை அல்லது இனி நடக்கப்போகும் விசாரணைகள் எல்லாவற்றையும் பார்க்க இக்கதைகளே உண்மையான முழுமையான யுத்த சாட்சியமாக ஒரு கலைஞனின் அசலான பொய்களற்ற வாழ்க்கைப் பதிவுகளாக நம் கைவந்து சேர்ந்துள்ளன. தவிர இவை ஈழத்து வாழ்வைப் பற்றிய கதைகளாக மட்டுமில்லை. மனித குல வரலாற்றின் மீது வைக்கப்படும் கேள்விகளாகவும் இக்கதைகள் வெடிக்கின்றன என்கிறார். இந்த அரசியலோடுதான் ஈழப் போராட்டம் பற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையான, இருண்ட பிரச்சாரத்துக்கு உகந்ததாக யோ. கர்ணனின் கதைகள் தமிழகத்தில் முன் வைக்கப்பட்டன.

யோ. கர்ணன் கதைகளுக்கு நேர்ந்த ஒரு துரதிருஷ்டம் என்றுதான் இதனைச் சொல்ல வேண்டும். யோ. கர்ணன் கதைகளுக்கு நேர்ந்த இன்னொரு துரதிரஷ்டம், ஈழத்தில் இனக்கொலை நடக்கவில்லை எனச் செப்பிய நேர்முகத்தை தனது புதுவிசையில் வெளியிட்ட, மலையகத் தமிழர்கள், தலித்துகள் போன்றோரைக் கண்டுகொள்ளாத ஈழத்தமிழரை அவர்கள்படும் துயரங்களை நான் ஏன் கண்டுகொள்ள வேண்டும்? எனக் குரூரமாகப் பேசிய ஆதவன் தீட்சண்யா, யோ.கர்ணன் கதைகளைக் கொண்டாடிக் கொண்டு திரியும் அவலம். இந்த மதிப்பீடுகளினோடு யோ. கர்ணன் கதைகளை எதிர்கொள்வது என்பது அரசியல் கடப்பாடு கொண்டவர்களுக்குத் தவிர்க்கவியலாமல் ஆகிறது.

யோ. கர்ணனது கதைகளை முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பான இலக்கிய ஆவணம் என்று நான் சொல்லும்போது, அதனது 'பகுதித் தன்மையை' நான் வலியுறுத்த விரும்புகிறேன். 'அசலான, பொய்களற்ற' ஆவணம் யோ. கர்ணனது கதைகள் என்றால், முள்ளிவாய்க்கால் பேரவலம் தொடர்பான ஐநா அறிக்கை, அம்னஸ்டி அறிக்கை, நோர்வே அறிக்கை, சர்வதேச நெருக்கடிக் குழுவின் அறிக்கை, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை போன்றவற்றின் தகைமை இங்கு என்ன? அவைகள் 'அசலற்றவை, பொய்கள்' என்பதுவா? தமிழ்ச்செல்வன் சார்ந்திருக்கிற மாரக்சிஸ்ட் கட்சித்தலைவர் ரங்கராஜன் இலங்கையில் சர்வதேச விசாரணைக்கும் ஒப்புக் கொள்ள மாட்டாராம், ஈழத் தமிழர்களே விரும்பினாலும் வெகுசன வாக்கெடுப்புக்கு அவரது கட்சி ஒப்பாதாம். மகிந்த ராஜபக்சேவைக் காப்பாற்ற இதைவிடவும் தெளிவான ஒரு அரசியல் திட்டம் இருக்க முடியுமா?

முல்லைப் பெரியாறு, கூடங்குளம் பிரச்சினைகளில் மட்டுமல்ல, ஈழத்தமிழர் பிரச்சினையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு என்பது தமிழர் விரோதமான இந்தியப் பெருந்தேசிய நிலைப்பாடுதான். இன்று ஈழவிடுதலைக்காகவும் ஈழத்தமிழ் உடன்பிறப்புகளுக்காகவும், யோ.கர்ணனுக்காகவும் உணர்ச்சிகரமாகக் கண்ணீர் விடுகிற தமிழச்செல்வனின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈழ விடுதலை அமைப்புக்களைச் சார்ந்த இளைஞர்கள் இந்தியா வந்தபோது அவர்களை அரவணைக்கவும் இல்லை, குறைந்தபட்சம் அங்கீகரிக்கவும் இல்லை, அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவவும் இல்லை. இவர்களோடுதான் யோ.கர்ணனின் அரசியல் கூட்டு என்றால், அவரது அரசியலை அப்படி வைத்துத்தான் எவரும் இன்று அணுகமுடியும்.

ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையைப் புறந்தள்ள தமிழ்ச்செல்வன் யோ. கர்ணனைத் தூக்கிப் பிடிக்கிறார். முள்ளிவாய்க்கால் பேரழிவு குறித்த குறிப்பிட்ட அனுபவங்களைப் பேசுகிற யோ.கர்ணனின் கதைகளின் அரசியல் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. பகுதி உண்மைகளை மட்டுமே முன்வைப்பது. யோ.கர்ணனது அனுபவங்களைக் காட்டிலும் விரிந்தது, சிக்கலானது முள்ளிவாய்க்கால் யதார்த்தம். சேனல் நான்கின் இலங்கைக் கொலைக்களம் குறித்த இரு ஆவணப்படங்கள், அல்ஜஜீராவின் ஆவணப்படம் முன்வைக்கும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் யோ.கர்ணனின் படைப்புலகத்தினுள்ளும் இல்லை, அவரது அனுபவங்களாகவும் இல்லை. அதிகமும் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த அனுபவங்களே யோ.கர்ணனின் படைப்புலகமாக இருக்கிறது. அது அப்படித்தான் இருக்கவும் முடியும்.

இன்று புலி எதிர்ப்பு என்பது ஒரு மிகப்பெரும் இதழியல், இலக்கியத் தொழிற்சாலையாக இருக்கிறது. தமிழக-இந்திய-சர்வதேச ஊடகப் பரப்பில் புலியெதிர்ப்பு என்பது மிகப்பெரும் வியாபாரமாக இருக்கிறது. மிகவும் ஆதாரமான அனுபவங்களின் அடிப்படையில் யோ.கர்ணன் புலிகள் அமைப்பு சார்ந்து முன்வைக்கும் படைப்புக்களைத் 'தந்திரோபாய ரீதியாக' உடனடியாகவே தமிழக-புகலிட 'இலங்கை அரசு ஆதரவாளர்கள்' தமது அரசியல் பிரச்சாரத்தின் பகுதியாகச் சுவீகரித்துக் கொள்கிறார்கள். புதுவிசை- ஆதவன் தீட்சண்யா -தமிழ்ச்செல்வன்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- புகலிட ஜனநாயகவாதிகள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் போன்றவர்களின் அணி அப்படித்தான் யோ.கர்ணனைச் சுவீகரிக்கிறது.

யோ. கர்ணனின் கதைகள் அவரது அனுபவங்களின் இயல்பினால் விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களைத்தான் ஆதாரபூர்வமாக இரத்தமும் சதையுமாக முன்வைக்கிறது. இலங்கை அரசின் திட்டமிட்ட போர்க்குற்றங்கள், பாலியல் வல்லுறவுகள், போர்க் கைதிகளின் படுகொலைகள், சரணடைந்தவர்களைக் கொல்தல், நோயாளிகளைப் பட்டினியிட்டுக் கொல்தல் போன்றவற்றை யோ.கர்ணனின் 28 கதைகள் எதிலும் நீங்கள் காணமுடியாது. சேனல் நான்கு, ஐநா அறிக்கை, நோர்வே அறிக்கை போன்றன இதனை ஆவணப்படுத்தியிருக்கின்றன.

முள்ளிவாய்க்காலின் இந்தப் பிறிதொரு யதார்த்தமும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களும் குறித்து யோ.கர்ணனது கதைகளை உயர்த்திப் பிடிக்கிற எவரும் இதுவரை பேசியதில்லை. இதுதான் யோ.கர்ணன் கதைகளை தூக்கிப்பிடிப்பவர்களின் அரசியல். சங்கம் நாவலை எழுதிய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதி கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை முடித்துவிட்டு இலங்கை அரசு ஆதரவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்ததையும் இதனோடு சேர்த்துக் கொண்டுதான் யோ. கர்ணனது கதைகள் குறித்த தமிழ்ச் செல்வனின் விதந்தோதல்களையும் எவரும் அணுகவேண்டும்.

பிரதிக்குள் நின்றுமட்டும் இன்று ஒரு பிரதி சமூகத்தில் பெறும் இடத்தை மதிப்பிடமுடியாது. பிரதி குறித்து உருவாக்கப்படும் துணைப்பிரதிகள், அதனைத் தொடரும் அரசியல், அதனைத் தொடரும் படைப்பாளியின் அரசியல் நகர்வுகள் என அனைத்தும் கொண்டுதான் இன்று ஒரு இலக்கியப் பிரதியை மதிப்பிட முடியும். யோ.கர்ணனின் சிறுகதைகளை அணுகுகிறபோது அதன் பின்னணியில் ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த ஞாபகமனமும் இலக்கிய வாசிப்பும் இருக்கிறது. குறிப்பாக ஷோபா சக்தியின் சிறுகதைகள், போராளிகளின் வாழ்வும் அனுபவமும் பற்றிய கோவிந்தன் முதல் சயந்தன் வரையிலான நாவல்கள் இருக்கின்றன. யோ.கர்ணனின் கதைகளை ஒப்பிடுகிறபோது மேற்குறிப்பிட்டவை பிறிதொரு காலத்தையும் அல்லது முன்னொரு காலத்தையும் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பநாட்கள் பற்றியவையும், குறைந்தபட்சம் இரு தசாப்தங்களுக்கு முந்திய அனுபவங்களையும் அதனது புகலிட நீட்சிகளையும் அடிப்படையாகக் கொண்டவை என வரையறுக்க முடியும்.

யோ. கர்ணன் முள்ளிவாய்க்கால் இறுதி நாட்கள் வரை அவர் பேசும் நிலத்தில் வாழ்ந்தவர். அந்த அனுபவங்கள் கொண்டவர். இன்னும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இயங்கிய ஒருவரின் புனைவுகள், யோ.கர்ணன் போல ஒப்பிட்டுச் சொல்ல ஒருவருடையதும் வெளியுலகினால் அறியப்படவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவு என்பதும் அதனது அனுபவங்களும், அதில் விடுதலைப் புலிகளின் பாத்திரம் என்பதும் உலக மற்றும் இலங்கை அரசுசார் நிறுவனங்களதும் அறிக்கைகளில்தான் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதேயொழிய புனைவிலைக்கியத்தில் அது பதிவுபெறவில்லை. யோ. கர்ணனனின் சிறுகதைகள் அந்த இடைவெளியை நிறைக்கிறது அல்லது அந்த இல்லையை மறுக்கிறது. ஈழ இலக்கியப் பரப்பில் யோ.கர்ணன் சிறுகதைகள் பெறும் முக்கியத்துவம் இதுவே என நினைக்கிறேன்.

யோ. கர்ணனின் சிறுகதைகள் அதன் இயல்பாகக் கொண்டிருக்கிற இந்த அரசியல் முக்கியத்துவமே அவர் கதைகள் குறித்த வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவிக்கிறது.

யோ. கர்ணனின் இருபத்தெட்டு கதைகளையும் விமர்சன சௌகரியத்திற்காகச் சில பொதுப் பண்புகளின் அடிப்படைகளுக்குள் கொண்டுவர விளைகிறேன். தனித்தனிக் கதைகளுக்கிடையில் உள்ள நுட்பமான வேறுபாடுகளால் பொதுப்பண்புகளை இக்கதைகள் மீறிச் செல்லும் என்பதனை உணர்ந்த அளவிலேயே இதனைச் செய்ய விரும்புகிறேன். ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும், பாவமன்னிப்பு என இரு கதைகளும் விடுதலைப்புலிப் போராளிகளின் வாழ்வும் மரணமும் அர்ப்பணிப்பும் குறித்துப்பேசும் கதைகள். நொடிகளுக்கு இடையில் வாழ்வும் மரணமும் தொங்கிக் கொண்டிருப்பதைப் பேசும் கதைகள். போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் ரஸ்ய-சீன-வியட்நாமியக் கதைகளைப் போல வீரசாகசமும் தியாகமும் குறித்த கதைகளாகக் கொண்டாடப்படக் கூடிய இக்கதைகள் போராட்டத்தின் வீழச்சியினால் அபத்தமும் அர்த்தமற்றதுமான மரணங்கள் குறித்ததாக உள்வாங்கப்படும். போராட்டத்தின் வெற்றி தோல்வி மனிதர்களின் அர்ப்பணிப்பை எப்போதும் தீர்மானிக்கும் கருவிகளாக இருக்கமுடியாது.

மன்னிக்கப்படாதவனின் தொலைபேசி, திரும்பி வந்தவன், ஐயனின் எஸ்.எல்,ஆர், வசனம், சே குவேரா இருந்த வீடு போன்ற கதைகள் இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகள், இயக்கங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள், கடத்தல்கள், கொலைகள், பிற இயக்கத்தவர் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகள், பாலியல் தொழிலாளர் படுகொலைகள் போன்றன குறித்துப் பேசும் கதைகள். இயக்கங்களின் அடிப்படைவாதமும் அராஜகமும் குறித்தவை இக்கதைகள்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் உள்ளார்ந்த பிரச்சினைகளை, அமைப்பினுள் புரையோடியிருந்த போலித்தனங்களை, புலிகள் அமைப்பு மறைத்துச் செய்த அரசியல் பேரங்களை, அபத்தங்களைப் பேசும் கதைகள் பெயர், சுதந்திரம், சடகோபனின் விசாரணைக் குறிப்பு, திரும்பி வந்தவன், சீட்டாட்டம் போன்ற கதைகள். நேரடியிலான புலத்தின் அரசியல் சாராத கதைகள் என நான் கருதுகிற தஸ்யுக்குகளின் பாடல், எல்லோருக்கும் இருக்கும் வானம், இஸ்தான்புல் இளவரசி, தமிழ்க் கதை எனும் மூன்று கதைகள் தவிர பிற அனைத்துக் கதைகளையும் விடுதலைப் புலிகள் ஈழமக்கள் மீது செலுத்திய ஆதிக்கமும் வன்முறையும் குறித்த கதைகள், அதனோடு யுத்தத்தின் இறுதி நாட்களில் புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் எனப் புதிது புதிதாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்களை, குறுகிக் கொண்டிருந்த நிலப்பரப்புக்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்த மக்களுக்கு நேர்ந்த பேரழிவு குறித்த கதைகள்.

விடுதலைப் புலிகள் பேசமறுக்கிற, அங்கீகரிக்கத் தயங்குகிற, கண்டுகொள்ளாமல் விலக்க நினைக்கிற, ஈழத்தின் வெகுமக்களுக்கு நேர்ந்த துயரமும் கோரமும் கொண்ட அனுபவங்கள் இவைகள். இவைகளை முதன் முதலில் ஆவணப்படுத்தியிருக்கிற இலக்கியப் பதிவு யோ.கர்ணனின் இந்தக் கதைகள். பாதுகாப்பு வலயம், திருவிளையாடல், றூட், தேவதைகளின் தீட்டுத் துணி, கதை கதையாம் காரணமாம், அரிசி, வேதாளத்துக்குச் சொன்ன கதை, சோசலிசம் போன்றன இக்கதைகள்.

முள்ளிவாய்க்கால் என்பது ஒன்றின் முடிவு பிறிதொன்றின் தொடக்கம் எனக் கொள்வோமானால், ஈழ வாழ்விலும் அரசியலிலும் அதனது தொடர்ச்சிகள் இருக்கின்றன. இயக்க முரண்பாடுகளின் எச்ச சொச்சங்கள் இன்றும் தொடர்கின்றன. ஆயுதக் குழுக்கள் இன்றும் இருக்கின்றன. முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் இருத்தலியல் பிரச்சினைகள் இருக்கின்றன. பேச்சுவார்த்தை பயனில்லை ஆயுதம் ஒன்றுதான் தீர்வு என நினைத்தவர்களும், விடுதலைப் புலிகளே அரசியல் தீர்வுக்கான தடை, அவர்கள் அழிந்தால் அரசியல் தீர்வு சாத்தியம் எனச் சொன்னவர்களும் அவரவர் எதிர்கால அரசியலைத் தீர்மானிக்க வேண்டும். யோ.கர்ணனின் கதைகள் இந்த பின்-முள்ளிவாய்க்கால் அரசியலையும் பேசுகின்றன. துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன் , வசனம், இரண்டாவது தலைவர் போன்றன இத்தகைய சிறுகதைகள்.

யோ.கர்ணன் கதைகளில் அவர் சார்ந்த, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சார்ந்த பெயர்கள் புனைவாக்கம் பெறவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முதல், சூசை, புதுவை ரத்தினதுரை வரை கதைகளின் 'மெய்மைக்கு' ஆதாரமாக இருக்கிறார்கள். இதனால்தான் யோ.கர்ணனின் கதைகளின் ஆன்மாவாய் இயங்குவது 'மெய்' என்கிறார் பதிப்பாளரான த.அகிலன். இந்தக் காரணத்தினால்தான் 'பிக்சன்' என்பதற்கு மாறாக 'பேக்சன்' என, புனைகதைகள் என்பதற்கு மாறாகச் சம்பவக்கதைகள் என யோ.கர்ணன் கதைகளைக் குறிப்பிடுகிறார் நிலாந்தன்.

வாழ்வைப் புனைவாகவும் புனைவை வாழ்வாகவும் எழுதுகிற போஸ்ட்மாடர்னிசக் கதைகள் அல்ல இக்கதைகள். அறியவராத, பதியப்படாத வரலாற்று சம்பவங்களை, அந்த மனிதர்களின் இரத்தமும் சதையுமான வாழ்வை ஆக்கஇலக்கிய மொழியில் முன்வைப்பது யோ.கர்ணனின் கதைகள். ஐ.நா.அறிக்கை, அம்னஸ்டி அறிக்கை போன்றவை முன்வைத்ததும், முன்வைக்கத் தவறியதுமான முள்ளிவாய்க்கால் யதார்த்தம் பற்றிய 'குருதிசிந்தும் புள்ளிவரங்கள்' என யோ.கர்ணன் கதைகளை நாம் அடையாளப்படுத்தலாம். என்றாலும் கூட யோ.கர்ணன் கதைகள் முன்வைக்கும் முள்ளிவாய்க்கால் யதார்த்தமும் அது குறித்த அரசியலும் 'பகுதியானதுதான்'.

இந்தப் புரிதலில் இருந்துதான் யோ.கர்ணன் கதைகள் குறித்த கருணாகரன், நிலாந்தன் மற்றும் தமிழ்ச்செல்வன் போன்றவர்களின் கருத்துக்கள் அணுகப்பட வேண்டும் என நினைக்கிறேன்.

கருணாகரன், தேவதைகளின் தீட்டுத்துணி தொகுப்பிற்கான தனது முன்னுரையில் யோ.கர்ணனின் கதைகளை ஒரு புறம் ஸ்டாலினுக்கு எதிராக உண்மைகளைப் பேசிய அன்ன அக்மதோவா, பிறிதொருபுறம் சியோனிஸ்ட்டுகளுக்கு எதிராக உண்மைகளைப் பேசிய அதோனிஸ், நிஸ்ஸர் கப்போனி போன்றவர்களின் பின்னணியோடு புரிந்து கொள்ளக் கோருகிறார். பாலஸ்தீன-சியோனிஸ்ட் பிரச்சினையை இலங்கைச் சூழலில் எவ்வாறு பொருத்துவது? தமிழர்கள் பாலஸ்தீனர்கள். சிங்கள ஆட்சியாளர்கள் சியோனிஸ்ட்டுகள். சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக யோ.கர்ணன் என கருணாகரன் கோரிக் கொள்கிற மாதிரியான பண்பு யோ.கர்ணன் கதைகளில் மிகக் கொஞ்சமாகவே இருக்கின்றன. அவ்வாறு கர்ணன் கதைகளைக் கோரமுடியாது.

ஸ்டாலினுக்கு எதிராக அக்மதோவா. இலங்கைச் சூழலில், ஈழச் சூழலில் இதனை மூன்றுவிதமாக வியாக்யானப்படுத்தலாம். ஸ்டாலினிஸ்ட்டான பிரபாகரனுக்கு எதிராக யோ. கர்ணன் கதைகள் அல்லது ஸ்டாலினிஸ்ட்டான டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக யோ.கர்ணன் கதைகள் அல்லது ஸ்டாலினிஸ்டான மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக யோ.கர்ணன் கதைகள். யோ. கர்ணன் கதைகள் பெரும்பாலுமானவை விடுதலைப்புலிகளை விமர்சிப்பவை. இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலத்தில் புலிகள் அதிகாரத்தில் இல்லை. புலித்தலைமை தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுவிட்டது. கர்ணனது தனித்தன்மை என்று சொல்லப்படுகிற எள்ளல் விடுதலைப் புலித்தலைவர்களும் அவர்களது நடத்தைகளும் குறித்ததாகத்தான் இருக்கிறது. இலங்கை அரசு குறித்த அதனது அரசத் தலைவர்கள் குறித்த எள்ளல்கள் ஏதும் கதைகளில் இல்லை.

பிரபாகரன், துவாரகா குறித்த எள்ளல் போன்று சீமாட்டி சிராந்தி மற்றும் நடிகை அசின் குறித்த எள்ளல் யோ.கர்ணன் கதைகளில் இல்லை. ஐயனின் எஸ்.எல்.ஆர் கதை தவிர இன்று யாழ்ப்பாணத்தை ஆளும் அரசு ஆதரவுத் தமிழ் தரப்பினர் குறித்த எள்ளலும் யோ.கர்ணன் கதைகளில் இல்லை.

இன்று யோ. கர்ணன் கதைகளை விதந்தோதுபவர்கள் அல்லது வெளிப்படையாகத் தூக்கிப் பிடிப்பவர்கள் ஒன்று அரச ஆதரவாளர்கள் எனப்படும் மாற்றுக் கருத்தாளர்கள் மற்றவர்கள் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். விடுதலைப் புலிகள் எதிர்ப்பு அல்லது ஈழவிடுதலையை முற்றாக மறுப்பது, இந்தியப் பெருந்தேசியக் கண்ணோட்டம், போராட்டம் பற்றிய முற்றிலுமான இருண்மைக் கண்ணோட்டத்தை முன்வைப்பது எனும் காரணங்களுக்காகவே யோ.கர்ணன் கதைகளை ஆதவன் தீட்சண்யாவும் தமிழ்ச்செல்வனும் பாவிக்கிறார்கள். அந்த வகையில் யோ.கர்ணன் கதைகள் குறித்த கருணாகரனின் கோருதல்கள் அதீதமானவை.

இந்தக் கதைகளை வாசிக்கும் பெரும்பாலான தமிழ் வாசகர்கள் சனங்களின் துயரங்களையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் விட அதிகாரத்தரப்புகளைப் பற்றியே அதிகமும் சிந்திக்கிறார்கள். அதிலும் தாம் விரும்புகின்ற அதிகாரத்தரப்புகளைப் பற்றியே அதிகமாகச் சிந்திக்கிறார்கள். ஆகவேதான் கர்ணனுடைய கதைகளையிட்ட அக்கறைகள் இவர்களுக்கு வரவில்லை. கர்ணனுடைய கதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் நிச்சயமாக அதிகாரத்தரப்புகளான விடுதலைப் புலிகளைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் நிச்சயமாகப் பேசியே தீரவேணும். அப்படிப் பேசும்போது நிச்சயமாக இந்த இரண்டு தரப்பினாலும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும். அப்படிப் பேச இவர்களுடைய நாக்குக் கூசுகிறது. மனம் தயங்குகிறது. ஏனெனில் தமிழ்ச்சூழலில் பெரும்பாலானவர்கள் நாம் முன்னரே குறிப்பிட்டதைப் போல 'கட்சி மனோபாவத்துடன்' இருப்பதால் தமது தரப்பைப் பற்றிய விமர்சனங்களை ஏற்கவேண்டியிருக்கும் என்று அஞ்சுகிறார்கள். எனவேதான் கர்ணன் கண்டு கொள்ளப்படாதிருக்கிறார். கர்ணனின் கதைகள் 'கண்டும் காணாமல்' விடப்படுகின்றன என்கிறார் கருணாகரன்.

யோ.கர்ணன் கதைகளைக் குறித்துப் பேசும்போது சமகாலத்தில் வெளியான உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை நாவல் பெற்ற கவனம் யோ.கர்ணன் கதைகள் பெறவில்லை என்கிறார் கருணாகரன். ஈழத்தில் நிலைமை என்னவென எனக்குத் தெரியாது. புகலிடத்திலும் தமிழகத்திலும் யோ. கர்ணன் கதைகள் பெற்ற கவனமும் விவாதத்தளமும் உமா வரதராஜனின் நாவலுக்குக் கிட்டவில்லை. மக்களைப் பற்றி நினைக்காமல் அதிகாரத்தரப்புக்களைப் பற்றியே நினைக்கிறாரகள், கறுப்பு வெள்ளையாகப் பார்க்கிற அவர்களே கர்ணன் கதைகளை நிராகரிக்கிறார்கள் என்று கருணாகரன் மதிப்பிடுவதில் உண்மை இல்லை.

முள்ளிவாய்க்கால் பேரழிவின்போதும் அதன் பின்னும் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை முன்வைத்துத்தான் உலக அமைப்புக்களின் அறிக்கைகள் வெளியானது. தமிழகத்தில் மிகப்பெரும் இயக்கங்கள் அதற்கான நீதி கேட்டுத்தான் எழுந்தன. இங்கு மக்களுக்கான நீதி என்பது இரண்டு பண்புகள் கொண்டன. முதலாவதாக, இலங்கை அரசினால் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பிரதானமானது. குறிப்பாக 40,000 வெகுமக்கள் கொல்லப்பட்ட பிரச்சினை. இரண்டாவது, விடுதலைப் புலிகளால் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகள்.

விடுதலைப் புலிகளால் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத் தூக்கிப் பிடிக்கிறவர்கள், இலங்கை அரசினால் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி எதுவுமே பேசியதில்லை. 40,000 வெகுமக்கள் கொல்லப்பட்டமை, போர்க்கைதிகள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டமை, பெண்போராளிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை, வெகுமக்கள் மருந்தின்றி பட்டினி போட்டுக் கொல்லப்பட்டமை, மருத்துவமனைகள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டமை, ஆயுதக் குழுக்களின் வெள்ளை வான் கடத்தல்கள், ஊடகவியலாளர்கள் மீதான அரச அடக்குமுறை என இவை குறித்து சதா விடுதலைப் புலிகளை மட்டுமே விமர்சித்துக் கொண்டேயிருப்பவர்கள் வாய் திறந்து பேசியதில்லை. இத்தகையவர்கள்தான் புகலிடத்திலும் தமிழகத்திலும் யோ.கர்ணனைத் தூக்கிப் பிடித்தவர்கள்.

கறுப்பு வெள்ளை அரசியலைக் காவித் திரிந்தவர்கள் இவர்கள்தான். தமது கறுப்பு வெள்ளை அரசியலுக்கு யோ.கர்ணனைப் பாவித்தவர்களும் இவர்கள்தான். இன்று கருணாகரனைச் சுற்றியிருப்பவர்களும், யோ.கர்ணனைச் சுற்றியிருப்பவர்களும் இவர்கள்தான். கறுப்பு வெள்ளை அரசியலைக் கடைப்பிடித்துக் கொண்டே கறுப்புவெள்ளை அரசியலையும் மக்கள் நல அரசியலையும் குறித்துப் பேசுகிற அவலமாகவே கருணாகரன் அவர்களது அவதானம் இருக்கிறது.

நிலாந்தன் யோ.கர்ணன் கதைகளை விமர்சிப்பவர்களை அவரது பகைவர்கள் எனக் கருதிக் கொள்வாரானால் அது துரதிருஷ்டம். கறுப்பு வெள்ளை அரசியல் குறித்தும் சாம்பல் அரசியல் குறித்தும் பேசுகிற அவரே, இருதுருவ அரசியலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கான சான்றே இந்த மதிப்பீடு. யோ.கர்ணன் கதைகள் முக்கியத்துவத்தை ஏற்றபடியே அதனை விமர்சனத்துக்கும் உட்படுத்த முடியும்.

ஒரு வீரயுகத்தின் எந்தப் புனிதங்களும் விழுமியங்களும் திருச்சொரூபங்களும் தனது எள்ளற் பரப்புக்கு வெளியில் இல்லை என்று கூறமுற்படும் அவர் தேவதைகளுக்கும் தீட்டுவரும், அந்தத்தீட்டுத்துணியும் நாற்றமெடுக்கும் என்று கூறும்போது ஒரு வீரயுகத்தின் புனிதபடிமங்கள் எள்ளலுக்குள்ளாகின்றன. இது அந்தத் தேவதைகளைத் துதிப்போர், ரசிப்போர், விசுவாசிப்போருக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. இங்கேதான் கர்ணனின் எள்ளல் பகையைச் சம்பாதிக்கிறது. அவருடய பலமே அவருடய எள்ளல்தான். ஆனால் அதுதான் அவருக்குப் பகைவர்களைப் பெற்றுக்கொடுக்கிறது என்கிறார் நிலாந்தன்.

எள்ளல் எனும் சுவை குறித்து முதலில் நாம் பேசியாக வேண்டும். எள்ளல்கள் எப்போதும் ஒருபடித்தானவை இல்லை. அதிகாரம் கொண்டிருப்பவரை நோக்கி அதிகாரம் இல்லாதவர் செய்யும் எள்ளலுக்கும், அதிகாரம் கொண்டிருப்பவன் அதிகாரமற்றவரை நோக்கிச் செய்யும் எள்ளலுக்கும் இடையில் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. அலி, திக்குவாய், ஊனம் போன்றவற்றை முன்வைத்து எவரும் இன்று எள்ளலை மேற்கொள்ள முடியாது. ஒரு பார்ப்பனர் தலித் ஒருவரைப் பார்த்து எள்ளல் செய்வதற்கும், ஒரு தலித் தன்னைக் கீழ்மைப்படுத்தும் பார்ப்பனியச் சடங்குகளை முன்வைத்து எள்ளல் செய்வதற்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. ஊடல் ஊனமுற்றவர், தலித்துகள், கறுப்பு நிறத்தவர் போன்றவர்களைப் படுகேவலமாக எள்ளலுக்கு உள்ளாக்கும் கவுண்டமணி-செந்தில் எள்ளலுக்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் எள்ளலுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

எள்ளல் எங்கு மேட்டிமைத்தனமும் அதிகாரமும் வக்கிரமும் கொண்டிருக்கிறது எனக் கண்டடைவதும் ஒருவருக்கு முக்கியம்.

புனைவிலாயினும் சரி, உரைநடையிலாயினும் சரி எள்ளலை எல்லாச் சமயத்திலும் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது. முகமது நபி குறித்த டேனிஷ் கார்ட்டூன் பிரச்சினையும், பாடப் புத்தகத்தில் அம்பேத்கர் குறித்த கார்ட்டூனும் இப்படித்தான் விவாதங்களுக்கு உள்ளாகிறது. எம்.ஜி.ஆரது திக்குவாய் பற்றி எழுதி ஜெயமோகன் வாங்கிக் கட்டிக் கொண்டதும், பிற்பாடு அந்தப் பதிவையே தனது தளத்தைவிட்டுத் தூக்கியதும் இப்படித்தான். ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் குறியீடுகளாக இந்தப் பிம்பங்களைக் கொண்டிருப்பவர்கள் கொந்தளிப்புக்கு ஆளாவதும் இப்படித்தான் நிகழ்கிறது.

துதிப்போர், ரசிப்போர், விசுவாசிப்போர் என்று அல்லாது வரலாற்று ரீதியில் பிரச்சினைகளையும் மெய்மையைக் காண்பவர்களும் கூட எள்ளலின் குணரூபத்தினை வரையறுக்கத்தான் வேண்டியிருக்கிறது.

எள்ளலில் இருக்கிற இத்தனைச் சிக்கல்களையும் மறந்துவிட்டு அதுதான் யோ.கர்ணனின் இயல்பு என்றால், 'இருக்கட்டும், அதற்கான பதில்களையும் அவர் கொண்டிருக்க வேண்டும்' என்பதுதான் அதற்கான நேர்மையான எதிர்வினையாக இருக்க முடியும்.

ஒரு பிரளயத்தை அதன் உயிர்ப்பரிமாணங்களோடு வாழ்ந்து கடந்தவர்களுக்கும் அதை முப்பரிமாணக் காட்சியாகக் கண்டவர்களுக்கும் இடையில் அனுபவ வேறுபாடுகள் நிச்சயமாக இருக்கும். வன்னியால் வந்தவர்கள் எதையாவது சொல்லமுற்படும்போது அதை வன்னிக்கு வெளியே இருந்தவர்கள் எதிர்கொள்வதில் இந்த அனுபவ வேறுபாடுகளுக்கும் ஒரு பங்கிருக்கும். நந்திக்கடல் வீழ்ச்சிக்குப் பின்னரும் நாடு வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்குமிடையே இரண்டாகப் பிளவுண்டிருக்கிறது. கொழும்பில் முன்னெப்பொழுதையும் விட பலமாகக் காணப்படும் கறுப்பு வெள்ளை அரசியலின் விளைவே இது எனலாம். கொழும்பில் அதிகாரத்தில் இருப்பவர்கள் கறுப்பு வெள்ளையாகச் சிந்திக்கும் ஒரு நிலை உள்ளவரை அதன் விளைவாக உருவான யுத்தவெற்றி வாதம் தென்னிலங்கையில் வெகுசனமயப்பட்ட ஒரு நிலை உள்ளவரை நந்திக்கடல்த் தோல்விக்குப் பின்னரான தமிழ்மக்களின் கொந்தளிப்பான உளவியலில் மாற்றமேற்பட வாய்ப்பில்லை. இத்தகைய ஒரு கொந்தளிப்பான உளவியலோடு கர்ணனின் எள்ளலை எதிர்கொள்வதே இங்குள்ள பிரச்சினை.

கர்ணனுடைய இரண்டாவது தொகுப்பாகிய சே குவேரா இருந்த வீடு அவர்மீதான விமர்சனங்களுக்கு ஓரளவுக்குப் பதிலாக வந்திருக்கிறது. மொத்தம் பதின்மூன்று கதைகள் இதிலுண்டு. ஏறக்குறைய ஏழுகதைகள். அவரை அதிகாரத்தின் ஒரு அடுக்கை மட்டுமல்ல. எல்லா அடுக்குகளையும் எள்ளிநகையாடுபவராக நிறுவி இருக்கின்றன. இதை இன்னும் திருத்தமாகச் சொன்னால் வன்னியிற் தோற்கடிக்கப்பட்ட அதிகாரத்தின் ஓர் அடுக்கை மட்டுமல்ல, இலங்கைத்தீவின் அதிகாரத்தின் ஏனைய அடுக்குகளின் மீதும் கர்ணனின் விமர்சனம் பாய்கிறது. இப்படிப்பார்த்தால் இந்தத் தொகுப்பின் மூலம் கர்ணன் அதிகாரத்தின் எல்லா அடுக்குகளையும் எள்ளி நகையாடும் ஒருவராகத் தன்னை வெளிப்படுத்த முற்படுவதன் மூலம் தான் எந்த அணிகளுக்குள்ளும் சிக்காத ஒரு சுயாதீனமான கதை சொல்லியாக நிறுவ முற்படுகிறார் என்கிறார் நிலாந்தன்.

நிலாந்தனது எழுத்தைத் தொடர்வதிலுள்ள மிகப்பெரும் சிக்கல் அவரது குறிப்பானதல்லாத, பொதுமைப்படுத்தப்பட்ட, அருவமான, கூடார்த்தமான மொழிநடை. உண்மையில் விவாதங்களுக்கு இத்தகைய மொழிநடை பொருத்தமானது இல்லை. நான் எவரதும் ரசிகனோ, பதிப்பாளனோ, விசுவாசியோ இல்லை. வரலாற்றைச் சமநிலையுடன் பயில நினைப்பவன் மட்டுமே. மட்டுப்படுத்தபட்ட அளவிலேனும் கடந்த முப்பதாண்டு கால ஈழ வரலாற்றின் பங்கேற்பாளனாக, ஈழ இலக்கியத்தின் வாசகனாக யோ. கர்ணன் கதைகள் எழுதப்பட்ட விதத்திலும் அது தமிழகத்திலும் புகலிடத்திலும் முன்னிறுத்தப்பட்ட வித்திலும் பல்வேறு சமநிலையின்மைகளை என்னால் அவதானிக்க முடிகிறது. குறிப்பிட்ட சில கதைகளில் யோ.கர்ணனின் கறுப்பு வெள்ளை அரசியலைப் பார்க்க முடிகிறது.

தேவதைகளின் தீட்டுத்துணி கதையிலோ, போராளிகளுக்கு முன்பாக இலங்கைப் படையினரிடம் சரணடைந்த புலிப்பொறுப்பாளர்களின் போலித்தனம் குறித்த கதைகளிலோ, பெண் குழந்தைகளையும், சிறார்களையும் பிள்ளைபிடிப்பாளர்கள் போல் விடுதலைப் புலிகள் யுத்தத்தின் இறுதி நாட்களில் படையில் பலவந்தமாக இணைத்த அனுபவங்கள் குறித்த கதைகளிலோ, பாதுகாப்பு வலயத்தினுள் மக்கள் தமது அன்றாடத் துன்பங்களோடு வாழ்ந்த நிலைமையிலும் புலிகள் அவர்கள் மீது செலுத்திய அதிகாரம் குறித்துப் பேசும் கதைகளிலோ முரண்படவோ, ஆத்திரப்படவோ ஏதுமில்லை. குருதிசிந்தும் புள்ளிவரங்களைத்தான் யோ. கர்ணன் படைத்திருக்கிறார் என்பதிலும் சந்தேகமில்லை.

ஈழ இலக்கிய வரலாற்றில் தேவதைகளின் தீட்டுத்துணி வகைக்கதைகளும், ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும் வகைக்கதைகளும் யோ.கர்ணனின் முக்கியத்துவத்தை நிறுவும் கதைகள். ஐநா அறிக்கை, அம்னஸ்டி அறிக்கை அரசியலில் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டவையோ அந்த அளவு இலக்கியத்தில் முக்கியத்துவம் கொண்ட கதைகள் இவை. இந்தக் கதைகளுக்காக உண்மையில் கர்ணன் புகலிடத்திலும் தமிழகத்திலும் எதிர்ப்பைச் சம்பாதிக்கவில்லை என நினைக்கிறேன்.

அவர் சொல்லும் சில கதைகளோடு எனக்கும் உடன்பாடில்லை. இத்தொகுப்பில் உள்ள தமிழ்க்கதையை தவிர்க்குமாறு அவரிடம் கேட்டிருந்தேன். அவரும் சம்மதித்திருந்தார். ஆனால் தொடர்பாடற்தடைகள் காரணமாக அந்தக் கதை பிரசுரத்துக்கு வந்துவிட்டதாக அவர் பின்னர் கூறினார். அவர் கூறும் சிலவற்றோடு நான் உடன்படவில்லைத்தான். ஆனால் அவற்றைச் சொல்ல அவருக்குள்ள உரிமைகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அந்தக் கதைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதை எழுதட்டும். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்கிறார் நிலாந்தன்.

சிக்கல் என்னவென்றால், தமிழ்க் கதை எனும் சிறுகதையை நிலாந்தன் கேட்டுக் கொண்டதற்கிணங்க யோ.கர்ணன் அவரது தேவதைகளின் தீட்டுத்துணி எனும் அவரது முதல் தொகுதியில் சேர்க்காது விட ஒப்பினார் என்றும், தொடர்பாடல் பிரச்சினையினால் அது இயலாது போனது எனவும் நிலாந்தன் பதிவு செய்கிறார். துவாரகாவின் தந்தையின் பெயர் பிரபாகரன் சிறுகதையையும் இவ்வாறு சே குவேரா இருந்த வீடு தொகுப்பில் சேர்க்க வேண்டாம் என நிலாந்தன் யோ.கர்ணனிடம் சொல்லியிருக்கவும் கூடும். அக்கதை சே குவேரா இருந்த வீடு தொகுப்பில் இடம்பெறவில்லை.

நிலாந்தன், யோ. கர்ணன் குறித்த தனது மதிப்பீட்டில் ஒரு விடயத்தில் திட்டமிட்டு மௌனம் காக்கிறார். யோ.கர்ணனின் முக்கியத்துவத்தினையும் அவர் கதைகள் எவ்வாறு புரிந்து கொள்ளப்பட வேண்டும் எனவும் வருந்தி வருந்தி எழுதுகிற அவர், ஏன் தமிழ்க் கதையைத் தொகுப்பில் சேர்க்க வேண்டாம் என்று சொன்னார் எனும் காரணத்தையோ, அவர் பொதுவாகச் சொல்கிற தனக்குப் பிடிக்காத கதைகள் எவை என்பதனையோ நிலாந்தன் பதிவு செய்யவில்லை. அதற்கான காரணத்தையும் அவர் சொல்லவில்லை. அவரது மௌனத்தில் யோ.கர்ணன் கதைகள் எதிர்கொள்ளும் விமர்சனங்களுக்கான பதில் பொதிந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

தமிழ்க் கதை புகலிட இலக்கியச் சூழலையும் பெண்நிலைவாதிகளையும் சாடும் ஒரு கதை. உண்மையில் புகலிட சிறுபத்திரிக்கைச் சூழல் யோ.கர்ணனுக்குத் தெரியவில்லை என்றுதான் அதனை வாசிப்போர் உணர்வர். புகலிட சிறுபத்திரிக்கைச் சூழலும் பெண்ணிலைவாதச் சூழலும் கர்ணன் சித்திரிக்கிற மாதிரி அந்தக் கதையில் வரும் சிறுகதையாசிரியனையோ, குறிப்பிட்ட சிறுகதை சித்தரிக்கும் விஷயங்களை மறுக்கும் சூழலாக இங்கு இல்லை. புகலிடத்தை புலத்திற்கு எதிரில் நிறுத்தும் காரணத்திற்காக அல்லது புகலிட 'மெய்மையை' அறியாமல் எழுதப்பட்ட காரணத்திற்காக நிலாந்தனுக்கு அந்தக் கதை பொருத்தமில்லாததாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

யோ. கர்ணன் குறித்த காரசாரமான விவாதத்தைத் தூண்டிய கதை துவாரகாவின் தந்தையின் பெயர் பிரபாகரன் எனும் சிறுகதை. இந்தச் சிறுகதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கவாதியும் முற்போக்கு எழுத்தாளர் சங்க முக்கியஸ்தருமான ஆதவன் தீட்சண்யா நெறிப்படுத்தும் புதுவிசை (ஜூன் 2011) இதழில் வெளியானது. இதில் பிரபாகரன் பொரிக்கடை வைத்திருப்பவர். முள்ளிவாய்கால் பேரழிவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் பெற்றவர். மகள் துவாரகா பொரிக்கடைக்காரர் மகள். துவாரகாவை கைது செய்யும் இலங்கைப் படையினர் சிறுவன் என்பதற்காக அவரது தம்பியை விட்டுவிடுகிறார்கள். பிரபாகரன் துவாரகாவை ஆஸ்திரேலியா கூப்பிட, அவர் மகள் நாட்டைக் காட்டி மறுக்க, பிரபாகரன் நாடாவது மசிராவது, என்பதோடு அந்தக் கதை முடிகிறது.

பிரபாகரனோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் அனைவரதும் பெயர்கள் 'நிகழ்ந்த சம்பவங்களுடன் சேர்த்து' யோ.கர்ணனின் கதைகளில் இடம்பெறுகிறது. தேவதைகளின் தீட்டுத்துணி' தொகுப்பின் பதிப்பாளர் அகிலன், யோ.கர்ணன் கதைகள் மெய்மையை, உண்மையைப் பேசுகிறது என்கிறார். நிலாந்தன் யோ. கர்ணன் கதைகள் &'பிக்சன்' அல்ல 'பேக்சன்' என்கிறார். உண்மைகளோடு அல்லது உண்மையின் வகைமாதிரிகளின் மீதான புனைவுகளோடு கர்ணன் கதைகள் வருகின்றன என்கிறார் நிலாந்தன்.

பிரபாகரன், துவாரகா தொடர்பான மெய்மை-உண்மை என்ன? அல்லது நிலாந்தன் பேசுகிற உண்மையின் வகைமாதிரிகளின் மீதான புனைவு என்ன?

பிரபாகரன் மற்றும் அவரது மூத்த புதல்வரான சார்லஸ் ஆன்டனி மற்றும் அவரது இளைய மகனான சிறுவன் பாலச்சந்திரன் போன்ற அனைவரதும் கொல்லப்பட்ட உடல்கள் புகைப்படங்களாக இருக்கின்றன. அவரது துணைவியார் மதிவதினி கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அமைச்சர் கருணா அம்மான் குறிப்பிட்டிருக்கிறார். பிரபாகரனது பெற்றோர் மரணித்துவிட்டனர். பிரபாகரன் கொல்லப்பட்டிருக்கிறார். இலங்கை அரசு, சரத் பொன்சேகா எல்லோரும் சொல்வது இதுதான்.

நோர்வே அறிக்கை, அமெரிக்கா-நோர்வே-இந்தியா கூட்டாக முன்னெடுத்த திட்டத்தை மறுத்து, பிரபாகரன் சரணடைய மறுத்து இறுதிவரை போராடி மடிந்தார் எனப் பதிவு செய்கிறது. யாழ் பல்கலைக் கழக மனித உரிமை அறிக்கை பிரபாகரன் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறது. பிரபாகரன் மிக அருகாமையில் இருந்து நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறது சேனல் நான்கு ஆவணப்படம். இலங்கைப் படையினரால் அவரது உடல் கேவலமாக அவமானப்படுத்தப்பட்டது. அவரது இளைய புதல்வன் பாலச்சந்திரன் மிருகத்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான் என்கிறார் சேனல் நான்கு தடயவியலாளர். அவரது முழுக் குடும்பமும் போர்முனையில் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் மெய்மை. உண்மை. இதில் என்னவகையில் உண்மையின் வகைமாதிரிகளின் மீதான புனைவை உருவாக்க முடியும் என்பதனை நிலாந்தன் விளக்க வேண்டும். யோ.கர்ணனின் இக்கதையைப் புரிந்து கொள்ள அது எல்லோருக்கும் நிச்சயமாக உதவும்.

எந்த மெய்மையை, உண்மையைப் பேசுவதற்காக நிலாந்தனும் கருணாகரணும் அகிலனும் யோ.கர்ணனின் முக்கியத்துவத்தினை உயர்த்திப் பிடிக்கிறார்களோ அதே மெய்மையின்-உண்மையின் அடிப்படையில்தான் இக்கேள்வியை நான் முன்வைக்கிறேன். எனது விசுவாசம் இங்கு மெய்மை சார்ந்ததேயல்லாது தனிநபர் விசுவாசமோ அல்லது ரசிகமனப்பான்மையோ சார்ந்தது இல்லை.

எந்த விடுதலைப் போராட்டத்திலும் பல்வேறு வகையான சமூக சக்திகள் எப்போதுமே ஈடுபாடு செலுத்தும். அந்த ஈடுபாடு தத்தமது வர்க்க, சாதீய நலன்களின் பொருட்டும் செயல்படும். சந்தர்ப்பவாதிகளும் பிழைப்புவாதிகளும் எந்த இயக்கத்திலும் உண்டு. கம்யூனிஸ்ட் கட்சிகள் சோசலிச நாடுகளில் மூன்றாம் வர்க்கமாகப் பரிமாணம் பெற்றதையும் ஊழலில் திளைத்ததையும் அறிந்தவர்க்கு, யுத்தத்தின் இறுதிநாட்களில் தமது போலிமுகங்களைக் காட்டிய விடுதலைப்புலிகளின் முன்னணித் தலைவர்களைப் புரிந்து கொள்வதில் பிரச்சினையில்லை. பிரபாகரனையும் பிரபாகரனது மரணத்தையும் அவரது புதல்வர்கள் புதல்வியையும் அப்படி மதிப்பிட முடியாது.

எமக்கு பிரபாகரனது வழிமுறையிலும், அவர் விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு செலுத்தியதிலும் எத்தனைதான் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் அவர் போராடித்தான் மரணமுற்றார், சரணடையாது மரணமுற்றார் என்பதனை எவரும் கொச்சைப்படுத்தமுடியாது. விடுதலைப் புலிகளுக்குள் இருந்த பிழைப்புவாதிகளோடு அவரது நிலையைச் சமப்படுத்தி எள்ளலுக்கு உள்ளாக்குவதற்கான எந்த அடிப்படைகளும் இல்லை.

பிரபாகரனது மரணம் நேர்ந்தவிதமும் அவரது இளைய புதல்வன் சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விதமும், பெண் போராளிகள் பாலியல் வல்லுறவின் பின் கொல்லப்பட்டார்கள் எனும் குற்றச்சாட்டின் பின் துவாரகாவின் மரணமும் இலங்கை அரசின் மீது மிகப்பெரும் சர்வதேச நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழலில் யோ. கர்ணன் இந்தக் கதையின் மூலம் என்ன உண்மையை அல்லது மெய்மையைச் சொல்ல முனைகிறார்? விடுதலைப் போராட்டத்தையும் அதனது விளைவுகளையும் கருணாகரனதும் ஷோபா சக்தியினதும் எழுத்துக்கள் கறுப்பாகப் பார்க்கிறது எனும் நிலாந்தனின் மதிப்பீட்டில் உடன்பாடு தெரிவிக்காத யோ. கர்ணன் எங்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்?

முதலில் யோ. கர்ணனின் இயல்பு எள்ளல் என்பதே ஒரு பொய்யான கட்டமைப்பு. முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான இரண்டு ஆண்டுகளின் நிலைமை குறித்த அவரது அரசியல் கட்டுரையில் எள்ளல் இல்லை. கொழும்பு எழுத்தாளர் சங்க நிகழ்வுகள் தொடர்பான அவரது கட்டுரையில் சகட்டுமேனிக்கு எல்லோரையும், எல்லாவற்றையும் எள்ளலுக்கு உட்படுத்துகிறார். இக்கட்டுரையில் வெளிப்படுவது யோ.கர்ணனின் கறுப்பு மனநிலை.

யோ. கர்ணனின் இக்கதை குறித்த தமிழக விவாதம் அதனது அழகியல் அரசியல் மதிப்பு குறித்த விவாதமாக ஆகாமல், ஆதவன் தீட்சண்யா மீதான கொலைமிரட்டல் தொடர்பான பிரச்சினை ஆகியதும், ஆதவன் தீட்சண்யா பாதிக்கப்பட்ட ஒருவர் போல அனுதாபத்தைத் தேடியதும் உண்மையில் ஒரு அபத்த நாடகம். சுந்தர ராமசாமியின் பிள்ளை கெடுத்தாள் விளை சிறுகதைக்கு ஆவேசமாக எதிர்வினையாற்றிய ஆதவன் தீட்சண்யா, அதே அளவு ஆவேசமான எதிர்வினைக்கு உரியது துவாரகாவின் தந்தையின் பெயர் பிரபாகரன் கதை எனும் உணர்வையும் தாண்டி, அவரை அக்கதையைப் பிரசுரிக்கச் செய்த மனநிலை, அவரது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈழப்போராட்ட எதிர்ப்பு அரசியல் மனநிலைதான்.

இக்கதையில் பிரபாகரன் பெயர்போல, ஐயனின் எஸ்.எல்.ஆர் கதையில் பாலியல் வல்லுறவு புரிந்த தாடிக்காரர்களின் இயக்கத்தின் தலைவரின் பெயர் குறிப்பிட்டு யோ.கர்ணன் எழுதாமையின் அரசியலையும் பின் முள்ளிவாய்க்கால் யதார்த்தத்தில் வைத்து நான் புரிந்து கொள்ள முயல்கிறேன். நிலாந்தன் இவ்வாறு சொல்கிறார் : கர்ணன் சொல்லும் கதைகளையும் அதை எதிர்கொள்ளும் தோல்விக்குப் பின்னரான உளவியலையும் எதிரெதிர் நிலைகளில் வைத்துப் பார்ப்பதுதான இங்குள்ள பிரச்சினை. உண்மையில் அவை இருவேறு எதிரெதிர் யதார்த்தங்களல்ல. மாறாக அவை ஒரு முழுமையான யதார்த்தத்தின் இருவேறு கூறுகளே. அவற்றை எதிரெதிராக வைத்துப் பார்ப்பது என்பதே ஒருவகைக் கறுப்பு வெள்ளை நோக்குநிலைதான். கர்ணன் சொல்லும் கதைகள் ஒரு யதார்த்தம். அதை எதிர்கொள்ளும் உளவியல் மற்றொரு யதார்த்தம். இரண்டுமே ஒரு முழுமையை உருவாக்கும் இருவேறு யதார்த்த மூலக்கூறுகள்தான்.

நிலாந்தனது சாம்பல் அரசியலைப் புரிந்து கொள்வது ஈழநிலைமையில் மிகவும் சிக்கலானது. ஈழவிடுதலைப் போராட்டத்தினை கறுப்பாகப் பார்க்கிற கருணாகரன், சமவேளையில் பிறரின் கறுப்புவெள்ளைப் பார்வை குறித்துப் பேசுகிறார். யோ.கர்ணன் புகலிட கறுப்பு மற்றும் தமிழகக் கறுப்பு மனநிலை கொண்டவர்களுடன் தன்னை இனம் காண்கிறார். அது குறித்த விமர்சன உணர்வு கொண்டவர்களை வெகு சாதாரணமாக வெள்ளை அணியில் அவர் தள்ளிவிட்டு நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார். நிலாந்தன் அரசியலிலும் இலக்கியத்திலும் முன்வைக்கும் சாம்பல் அரசியல் யோ.கர்ணனுக்கு உடன்பாடானது இல்லை.

யோ. கர்ணனது புனைவுகளும் புனைவல்லா கட்டுரைகளும் குறித்த வாசிப்பென்பது பின்வரும் மனநிலையையே எனக்குத் தருகிறது : முள்ளிவாய்க்கால் யதார்த்தங்களைக் கணிசமான அளவில் கதைகளில் முன்வைத்த யோ.கர்ணன், விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்து அதனது மேன்மைகளையும் கீழ்மைகளையும் மக்களின் சார்பு நிலையில் நின்று பதிவு செய்த யோ.கர்ணன், அதனது அரசியல் நீட்சியை நிதானமாகச் சமநிலையுடன் பேணியிருக்க முடியும். நிலாந்தனிடம் அந்த அரசியல் மற்றும் அழகியல் தேடலைக் காணமுடிகிறது. துவாரகாவின் தந்தையின் பெயர் பிரபாகரன் கதையோடு யோ. கர்ணன், கருணாகரன் போலவே புகலிட-தமிழகப் புலி எதிர்ப்பாளர்களின், ஈழவிடுதலை எதிர்ப்பாளர்களின், இலங்கை அரச ஆதரவாளர்களின், இந்த அரசியலைப் பிரதிநிதிதுவப்படுத்துபவர்களின் அணிகளை நோக்கி நகர்ந்து விட்டார் என்றே தோன்றுகிறது. இலக்கியம் பற்றிய விவாதத்தில் அரசியல் முடிவுக்கு வருவது சரியா எனும் கேள்வி எழுந்தாலும், துரதிருஷ்டவசமாக யோ. கர்ணன் கதைகளின் பேசு பொருளும் அவை குறித்த விவாதங்களும் அரசியல் விவாதங்களாக இருக்கும்போது நான் மட்டும் எவ்வாறு அதிலிருந்து மீள முடியும்? தஸ்யுக்குகளின் பாடல் யோ.கர்ணனது படைப்பாற்றலின் உச்சம் என்பதோடு நிறைவு செய்கிறேன்.

குறிப்பு : கட்டுரையில் இடம்பெறும் அனைத்து மேற்கோள்களும் யோ.கர்ணனது இரு சிறுகதைத் தொகுப்புகளிலிருந்தும், யோ.கர்ணனது வலைத்தளத்திலிருந்தும், எடுத்தாளப்பட்டிருக்கிறது. பதிப்பாளர் அகிலனுக்கும் யோ. கர்ணனுக்கும் எமது நன்றி

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=9&contentid=06567601-8841-4e60-83e5-4dd7fad9f87f

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யமுனா ராஜேந்திரன் அறிந்தேயிராத ஈழத்துக் குடிசைகள்

யோ. கர்ணன்

பொங்குதமிழ் இணையத்தளத்தில், ‘சேகுவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தோபரின்வீடு’ என்றொரு ‘அரை அவதூறுக்கட்டுரை’ அண்மையில் பிரசுரமாகியிருந்தது. கியூபாவிலோ வடகொரியாவிலோ வாழ்ந்துவரும் யமுனா ராஜேந்திரன் என்பவர் இதனை எழுதியிருந்தார். (ஒரு நண்பர் அடித்துச் சொல்கிறார்- யமுனா லண்டனிலிருப்பதாக. அந்தத் தகவலை நான் நம்பவில்லை. இடதுசாரிகள் ஆளும் கியூபாவிலோ, வடகொரியாவிலோதான் இருப்பாரென்றே இந்தக்கணம் வரையும் நம்புகிறேன். நண்பரின் கதையைக் கேட்டு யமுனா லண்டனிலிருப்பதாக எழுதினால் அது அவதூறாகத்தான் முடியும்)

யமுனாவின் அவதூறுகளிற்கான எதிர்வினையொன்றை எழுதலாமென முடிவுக்கு வந்திருந்த சமயத்தில், எதேச்சையான சம்பவமொன்று நிகழ்ந்தது. முன்னாள் விடுதலைப்புலியுறுப்பினரொருவர்- அனைத்துலக செயலகத்தில் பணியாற்றியவர்- தொலைபேசியில் கதைத்தார். விடயத்தை சொன்னேன். அவர் சொல்லித்தான் தெரியும், யமுனா விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட ஐ.பி.சி வானொலியைத் தாங்கிய தூண்களிலொன்று என்பது.

வன்னியிலிருந்த காலப்பகுதியில் அந்த வானொலியைக் கேட்டுவிட்டுத்தான் அன்றைய நாளை ஆரம்பிப்போம். எண்ணற்ற போராளிகள் இப்படித்தான். ஆனால் வெகுசிலர்தான் பி.பி.சியைக் கேட்டுவிட்டு உறங்கச் சென்றனர். பணிகளை ஆரம்பிக்க முன்னர் காலையில் ஐ.பி.சியை கேட்டு, அதன்படி ‘ஒழுகியதாக’ யாரும் அர்த்தப்படுத்தத் தேவையில்லை. ஆனால் இவ்வகையான குரல்களின் வழியாக எமது செயல்கள் ஒவ்வொன்றிற்குமான நியாயங்களை-எமக்கே தெரியாதவற்றை- கண்டடைந்து கொண்டிருந்தோம். வேறுவேறு இயல்புடையவர்கள், வேறுவேறு அளவுகளில் ‘விளைவுகளில் நம்பிக்கை வைத்து’ காரியமாற்றியவர்களிற்கான நியாங்களெல்லாம் இவ்விதம்தான் கிடைத்தன.

அந்த வானொலியை பிரபாகரனும் பல தடவைகள் கேட்டிருக்கிறார். அவருக்கு நெருக்கமனவர்கள்-எந்தத் தகவலையும் உடனடியாகத் தெரியப்படுத்தக் கூடியவர்கள்- பலர் அதன் அன்றாட நேயர்களாகயிருந்தனர். சில சந்தர்ப்பங்களில் போராளிகளிடம் ஐ.பி.சி குறித்து பிரபாகரன் விதந்தோதியுமிருக்கிறார். ஆனால் துரதிஸ்டம் எதுவெனில், தான் என்ன பிரயத்தனம் செய்தாலும் சேகுவேராவின் ஆன்மாவைத் தீண்ட முடியாதென்ற யமுனாவின் அபிப்பிராயத்தைத்தான் இறுதிவரை அவரால் தெரிந்து கொள்ளவே முடியாமல்ப் போய்விட்டது.

எனது கதைகள் குறித்தெழுதப்பட்டுள்ள அந்த அவதூறுக் கட்டுரையில் சிங்கள, தமிழ் தலைமைகளினால் சேகுவேராவின் ஆன்மாவைத் தீண்டவே முடியாதென்று யமுனா எழுதியிருக்கிறார். இந்த அபிப்பிராயம் பிரபாகரன் இறந்ததற்குப் பின்னர்தான் ஏற்பட்டதென்றோ, ஐ.பி.சியில் அதனைச் சொல்லாமலிருந்திருப்பாரென்றோ நான் நம்பவில்லை. ஆயுதக்கப்பல்கள் அடிபட்டது, இலங்கையுடனான சர்வதேசக் கூட்டிணைவு போன்ற சந்தர்ப்பங்களையும்விட ஈழப் போராட்டத்திற்கு நேர்ந்த மிகப்பெரிய துரதிஸ்டமாக இதனைக் கொள்ளலாம். இரகசிய தருணமொன்றில் ஐ.பி.சியில் ஒலித்த இந்தக் கருத்தை பிரபாகரனில்லாவிட்டாலும், யாரேனுமொரு தமிழ்பேசுபவர் கேட்டிருந்தால் கூட விடயத்தையறிந்து, சேகுவேராவின் ஆன்மாவைத் தொடும் எத்தனங்களில் பிரபாகரன் ஈடுபட்டிருக்கலாம். ஈழப்போராட்டமும் தப்பிப்பிழைத்திருக்கலாம்

அந்தக் கட்டுரையில் என்னைத்தவிர்த்து கருணாகரன், நிலாந்தன் ஆகியோர் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதற்கு அவர்கள் பதிலளிக்கலாம். இது எனது தனிப்பட்ட எதிர்வினை. இந்த மூவரையும்- அதிலும் குறிப்பாக கருணாகரனையும் என்னையும்- ஒரேவிதமான அரசியல் பார்வையும், நோக்கமுமடையவர்கள் என யமுனா எழுதியிருப்பதே அவதூறுதான். லண்டனிலிருக்கும் ஒரு தொகுதி so called இலக்கியவாதிகள் வழங்கிய பிழையான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட அவதூறது. மேற்குறிப்பிட்ட இருவருடனும் சில விடயங்களில் ஒத்ததாகவும் சில விடயங்களில் வேறுபட்டதாகவும் என் அரசியல்ப் பார்வைகளுண்டு. குறிப்பாக கருணாகரனது அரசியலும் எனது அரசியல்ப்பார்வைகளும் பெரும்பாலும் வேறானவை. ஆனாலும் தனிப்பட்ட ரீதியில் அவர் எனக்கு நெருக்கமானவர் என்பதுடன் எந்த அரசியல்நிலைப்பாட்டையும் எடுப்பதற்கு அவரிற்கிருக்கும் உரிமையை மதிக்கவும் செய்கிறேன். வேறுவேறான அரசியல் பார்வையுடையவர்களும் வாழ்வதற்குகந்ததாகவேயிந்தப் பூமியமைந்துள்ளதாகக் கருதுகிறேன். அவர்களை எதிர்கொள்வதற்கு அவதூறுதான் ஒரேவழியெனக் கருதவுமில்லை. சரியானதையும் பிழையானதையும் சனங்களும், காலமுமே தீர்மானித்துக் கொள்ள முடியுமென நம்புகிறேன். போட்டியாளர்களில்லாமல் தனியொரு ஓட்டக்காரன் மைதானத்தில் ஓடும் காலமெல்லாம் இப்பொழுதில்லை.

யமுனாவின் கட்டுரை அவதூறுக்கட்டுரையென்ற அளவில் சுருங்கிப் போனதற்கு பிரதான காரணமாகயிருப்பவை இரண்டு காரணங்கள். முதலாவது, அது கொண்டிருக்கின்ற தகவல்ப்பிழைகள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தனிமனிதர்கள் மீதான விமர்சனத்திலும், எனது கதைகள் பற்றிய குறிப்புக்களிலும் கணிசமானளவு தகவல்ப்பிழைகளுள்ளன. தகவல்ப்பிழைகளுடன் குத்துமதிப்பாக எழுதப்படுபவை அவதூறன்றி வேறென்ன? இரண்டாவது, எனது கதைகள் குறித்து எழுதுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த கட்டுரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கதைகள் பற்றிய குறிப்புக்கள் இருந்த பொழுதும், தனது தனிப்பட்ட பகையாளிகளை- குறிப்பாக முன்னாள் தமிழகத் தோழர்களை- தாக்குவதற்கான ஒரு உத்தியாகவே அந்தக்கட்டுரையை எழுதியுள்ளார். இந்த வகையான எழுத்துக்கள் அவதூறன்றி வேறென்ன?

முன்னால் நின்றாலும் அவருடன் பேசாது, அவரின் பின்னால் யாராவது நிற்கிறார்களா என எட்டிப்பார்த்துப் பேசும் கைப்புள்ளப் பாணிப் பேச்செல்லாம் சினிமாவிற்கும் வடிவேலுவுக்கும்தான் பொருத்தமானது. கட்டுரைகளிற்கு உகந்ததல்ல. இப்படியான எழுத்துக்களின் வழி புலப்படும் துயரமென்னவெனில், தமிழ்ச்சூழலில் நிலவும் எழுத்து வறுமை. குறிப்பாக தமிழில் கட்டுரையாளர்களிற்கிருக்கும் பஞ்சத்தை இது வெளிப்படுத்துகிறது. இல்லையெனில், புலம்பெயர் தமிழ்ச்சூழலில் இந்த வகையான அவதூறாளர்கள் தொடர்ந்து எப்படி இயங்க முடிகிறது?

அந்தக் கட்டுரையில் அதிக முக்கியத்துவம் கொடுத்து அலசப்பட்டுள்ள விடயம் ச.தமிழ்செல்வன், ஆதவன் தீட்சண்யா முதலான தமிழக நண்பர்களுடனான நட்பு. இந்த நட்பின் மூலமாக நான் மன்னிக்க முடியாத குற்றத்தையிழைத்ததான தொனி அவரது கட்டுரை முழுவதும் நிறைந்திருக்கிறது. இந்த அடிப்படையில் கோட்டைப் போட்டு, அந்தக் கட்சி ஈழப்போராட்டத்தில் அப்படி நடந்தது, அந்த சஞ்சிகை இப்படி கதைத்தது, மாற்றுக்கருத்தாளர் அணி சுவீகரிக்கிறது, ஆகவே இவர் அவர்களின் ஆள்த்தான் என எழுதி மளமளவென றோட்டையும் போட்டுவிடுகிறார். இணையப் புரட்சியாளர்கள் எழுதும் வழமையான அவதூறுக் கட்டுரைகளின் இலட்சணங்கள்தானிவை. பெரும்பாலும் தனிப்பட்ட அவதூறுகளினால் நிறைந்திருந்த போதும், அங்கொன்றுமிங்கொன்றுமாக கதைகள் குறித்த ஓரிரண்டு கேள்விகளுமுண்டுதான். ஆனால் நான் அவற்றிற்குப் பதிலளிக்கப் போவதில்லை. தனது கதைகளிற்கு தானே நியாயம் வேண்டிப் போராட முனைவதெல்லாம் அபத்தமானதெனக் கருதுகிறேன். பிரதியின் அரசியல், பிரதியின் துணைகொண்டு உருவாக்கப்படும் அரசியல், அதனைத் தொடரும் அரசியல் பற்றியதான யமுனாவின் அபத்தங்கள் குறித்துப் பேசலாம்.

யமுனா ராஜேந்திரனிற்கு மேற்படி நண்பர்களுடன் அல்லது அவர்கள் சார்ந்த கட்சியுடன் ஏதாவது தத்துவ, அரசியல் அல்லது தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்ப் பிரச்சனைகளிருந்தால் அந்தத்தளங்களிலேயே பிரச்சனையை அணுகி முடித்துவிட வேண்டுமென தாழ்மையான விண்ணப்பமொன்றை ஆரம்பத்திலேயே வைத்துவிடுகிறேன். மாறாக, செல்லுமிடமெல்லாம் காவிச் சென்று, எழுதும் விடயங்களையெல்லாம் அந்த அடிப்படையில் எழுதுவது ‘மொக்கை’ என்றளவில்த்தானிருக்கும். ‘சேகுவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தோபரின் வீடு’ கட்டுரை அதற்கு நல்ல உதாரணம். தென்னையைப்பற்றி எழுதிவிட்டு, இறுதியில் மாட்டை தென்னையில் கட்டிவிடுவதற்கொப்பாக, மேற்படி நபர்களை விமர்சித்தவிட்டு இறுதியில் என்னை அவர்களுடன் கட்டிவிடுகிறார். அவர்கள் துரோகிகள். இவரும் துரோகிகளின் நண்பன். ஆகவே துரோகியென வழமைபோலவே கணக்கை நிறுவியுள்ளார்.

இந்தத் தேற்றம் தமிழ்ச்சூழலில் புதிதல்லத்தான். எல்லோரும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இதனைப் பயன்படுத்தித்தான் கணக்கை முடித்திருக்கிறார்கள். யமுனா அதனைப் பயன்படுத்தி அவதூற்றைத்தான் இறைத்திருக்கிறார். முன்னர், முடிக்கப்பட்ட பல கணக்குகளில் ஆட்களே எஞ்சவில்லை. அப்படியான முயற்சிகளெதனிலும் இறங்காததனால் யமுனாவிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

யமுனாவிற்கு ஈழ விவகாரங்களில் பற்றாக்குறையான அறிவேயிருப்பதனால் – அதனை அவரே குறிப்பிட்டிருக்கிறார்- ஈழவிவகாரங்கள் பற்றி தெளிவாக புரியவைப்பதையும் ஒரு தாயக்கடமையாக கருதுகிறேன். வழிதவறி பிரயாணித்தபடியிருக்கும் மந்தையொன்றிற்கு வழிகாட்டி, கூட்டத்துடன் இணைத்தால் ஆட்பலத்தில் ஒரு எண்ணிக்கை அதிகரிக்கும்தானே. (ஆனால் இது கட்டாய ஆட்சேர்ப்பு கிடையாது)

கணிதத்திலுள்ள தொடையைப் போன்றதுதான் தனிமனித உறவுகளெல்லாம். முழுமையான ஒத்திசைவான இரண்டு மனிதர்களைக் காணவே முடியாது. அப்படிக் காண்பதெனில் கண்ணாடிகளின் முன்னால் நின்று தத்தமது உருவங்களைத்தான் காண வேண்டும். இரண்டு மனிதர்களிற்கிடையிலான உடன்பாடான பிரதேசங்களிருக்கும். அவைதான் நட்பை மட்டுமல்ல, காதலுட்பட்ட மற்றமற்ற மனிதஉறவுகளையும் தீர்மானிக்கின்றன. அவரவர் அரசியல் நிலைப்பாடு அவரவர்களுடன். பொருந்தும் புள்ளிகளில் இணைந்து செயற்படலாம். பொருந்தாத இடங்களில் தனித்துச் செயற்படலாம். தனி மனிதர்களுடன்தான் எனது நட்பு. எப்பொழுதும் முரண்பட்ட புள்ளிகளில் மோதிக் கொண்டிருக்க இது முகமாலைக் களமுனையல்ல. நர்ங்கள் யுத்தம் புரிந்து களைத்தவர்கள்.

ஏறத்தாள தமிழகத்திலுள்ள எல்லாக் கட்சிகளின் மீதும் அவர்களின் ஈழநிலைப்பாடு குறித்து எனக்கு விமர்சனங்களுண்டு. தமிழக இடதுசாரிக்கட்சிகளிற்கும் பொருந்தும், திராவிடக் கட்சிகளிற்கும் பொருந்தும், எதுவுமில்லாத நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும். இடதுசாரிகள் ஈழத்தமிழர்களின் துரோகிகள் என எங்களிற்கு வகுப்பெடுக்கும் யமுனா, ஈழத்தமிழர்கள் நட்பு வைக்கக்கூடிய கறையற்ற கட்சியொன்றை அடையாளம் காட்ட வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைக்கிறேன்.

இந்த இடத்தில் தவிர்க்கவே முடியாமல், இஸ்ரேயலர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளென ஆண்டவர் மோசேக்கு உரைத்ததாக கிறிஸ்தவத்தின் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள்தான் நினைவிற்கு வருகின்றது. ‘செத்ததைத் தொட்டவனும் தீட்டானவன். தொட்டவனைத் தொட்டவனும் தீட்டானவன்’ என்பதுடன், தொட்டவனைக் கண்டவனும் தீட்டானவன் என்ற ரீதியில் சிந்திப்பதை விட்டுவிடுங்கள்.

ஆதவனும், தமிழ்ச்செல்வனும் எழுதிய விமர்சனங்களின் மூலமாகவும், எனது கதையொன்றைப் பிரசுரித்ததனால் ஆதவன் தீட்சண்யா சந்தித்த நெருக்கடிகளிற்கெதிரான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க அறிக்கை மூலமாகவும், புகலிட புலியெதிர்ப்பாளர்களின் விதந்தோததல்களின் மூலமாகவுமே எனது கதைகளை தனக்கு படிக்க கிடைத்ததாகவும், அந்த அரசியல் அடித்தளத்திலிருந்தே கதைகளை அணுக வேண்டுமெனவும் அடம்பிடிக்கும் யமுனாவின் எத்தனங்கள் அதீதமானவை மட்டுமல்ல சிறுபிள்ளைத்தனமானவை. ஒரு வாதத்திற்கு எனது கதைகளை சீமான் வெளியிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது எந்த விமர்சனமுமின்றி ஆதரிப்பீர்களா?

அண்மையில் இந்திய இந்துத்துவ கட்சியான சிவசேனா விடுதலைப்புலிகளை ஆதரித்து அறிக்கையொன்று விட்டிருந்தது. (இந்த இடத்தில் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதையும் நினைவூட்டுகிறேன்) யமுனாவின் தர்க்கம் சரியெனில், விடுதலைப்புலிகளின் நேச சக்தியாக சிவசேனா ஆகிவிடுவதுடன், புலிகளமைப்பு இந்துத்துவ கட்சியென்றல்லவா ஆகிவிடும்?

அரசியல் நிலைப்பாடுகளின் வழியாக நட்பை தீர்மானிப்பதில்லையென்பது எனது நிலைப்பாடு. அதற்கு காரணமுமுள்ளது. ஓரேயொரு சம்பவம் சொல்கிறேன்.

இன்றைய திகதியில் அகில உலகத்திலுமுள்ள சொல்லப்பட்ட நாட்டுப்பற்றாளரான இலண்டனிலுள்ள முன்னாள் என்.எல்.எவ்.ரி போராளியொருவரின் கதை தெரியுமா? ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளினால் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் எப்படியோ தப்பித்து, பல தமிழ்ப்பத்திரிகைகளில் புலிகளைத் திட்டி கதை, கவிதை, கட்டுரையென படைப்பின் அத்தனை சாத்தியங்களையும் முயன்று பார்த்தவர்.

திடீரென ஒருநாள் வன்னியில் நிற்கிறார். சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானதும் சொல்ஹெய்ம்மிற்கு முன்னதாகவே வந்திறங்கிவிட்டார். அனேகமாக வன்னிக்கு வந்த முதல் பஸ்சில் சாரதிக்குப் பக்கத்திருக்கையில் உட்கார்ந்து வந்திருக்க வேண்டும். கிளிநொச்சியிலுள்ள நந்தவனம் அலுவலகத்திற்குப் போய் வரவேற்பறையிலிருந்த பிரபாகரனின் படத்தின் முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ‘என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் தெய்வமே’ என கதறியழுதார். படாத பாடெல்லாம்பட்டு, புலிகளின் நான்காம் மட்டத்தலைவரொருவரின் மனதை உருகச் செய்து, பாவமன்னிப்பு வாங்கி ‘நாட்டுப்பற்றாளராகி’ விட்டார்.

வெற்றியாளர்களிற்கும் பணக்காரர்களிற்கும்தானே எல்லோரும் நண்பர்கள். அதுவரை புலிகளிற்கு புள்ளிமேல் புள்ளி குத்திக் கொண்டிருந்தவர்களெல்லோரும் தங்கள் உடலில் நீளநீளமாக வர்ணக்கோடுகள் போட்டபடி உலாவந்தனர். புலிகளின் சாப்பாட்டுக்கடையில் சாப்பிடுவதையே பெருமையாக நினைப்பவர்கள், புலிகளிடம் பணிபுரிவதை பேறாகக் கருதுவதில் வியப்பில்லைத்தானே. தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டதை அகில உலகமும் அறிந்து கொள்ளும்விதமாக, ஐ.பி.சியில் வேலை வேண்டுமென அடம்பிடித்தார்.

இதற்காக அவர் அணுகியது புலிகளின் ஐந்தாம் மட்டத்தலைவரான நந்தகோபனை. கிளிநொச்சியிலுள்ள நந்தவனம் அலுவலகத்தின் முற்றத்திலிருந்த பிலாமரத்தினடியில் காலைமாலையென இதற்காக தவமிருந்தார். அங்கு பணிபுரிந்த என் நண்பனொருவனைக் காண்பதற்காக சென்ற சமயங்களிலெல்லாம்- சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக- இந்தக்காட்சியை கண்டேன். அவரை அந்தப்பணியில் சேர்த்துக் கொள்ள மறுத்த நந்தகோபன், அவரை தன்னிடம் அழைத்து வருபவர்களை திட்டினார்.

சில வருடங்களிலேயே காலம் காட்சிகளை மாற்றிப் போட்டது. நந்தகோபன் இப்பொழுது துரோகி. புலிகளின் சில பிரிவுகளின் இணையத்தளங்கள் வெளிப்படையாக குற்றம் சுமத்துகின்றன. லண்டன்வாசி தியாகி. அங்கிருந்தபடியே, தியாகிகளை இனம்கண்டு ‘ஞானஸ்தானம்’ கொடுப்பதுடன், ‘துரோகி’களை ஊருக்கு வெளியில் ஒதுக்கிக் கொண்டுமிருக்கிறார்.

இப்படி எண்ணற்ற கதைகளுண்டு. எங்களிற்கு முதல் தலைமுறையினர்- இந்தப் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் செயற்பட்டவர்கள்- எப்பொழுது எங்கு நிற்கிறார்கள் என்பதே தெரியாமல் நாங்கள் குழப்பத்துடன் வளர்ந்தவர்கள். ஈழப்போராட்டம் முழுவதும் தனது நிழலிலிருந்தவர்களை ஏமாற்றிய விருட்சங்கள் பற்றிய உதாரணங்கள் ஏராளமிருக்கின்றன.

இப்பொழுது சொல்லுங்கள் யமுனா, அரசியல்க்காரணங்களினால் நட்பைத் தீர்மானிப்பதென்பது எவ்வளவு அபத்தமென?.

இதனை யமுனா மாதிரியாக புத்தகங்களில் புரட்சியை கண்டவர்களிற்கு புரிந்து கொள்வது சிரமாக இருக்கலாம். கடந்த முப்பது வருடங்களிற்கதிகமாகவே ஆயுத மோதல் சூழலுக்குள் பழக்கப்பட்டு, வேறுபட்ட அரசியல்க் கருத்துக்களைக் கொண்டவர்கள் பரஸ்பரம் மோதி அழிந்து கொண்ட இரத்தமொழுகும் வரலாற்றின் அனுபவத்தினூடாகப் பெற்ற பட்டறிவிது. காகித அறிவு பெற்றவர்களினால் புரிந்து கொள்வது சிரமமாகத்தானிருக்கும்.

சரி. இன்னொன்றும் செய்யலாம். யமுனாவின் வழியிலேயே பிரச்சனையை முடிக்கலாம். இப்பொழுது உயிர்ப்புடனிருக்கும் விடுதலைப்புலிகளின் பிரிவுகளான நாடுகடந்த தமிழீழ அரசு, நாடு கடக்காத தமிழீழ அரசு, விநாயகமணி, நெடியவன் அணி, தலைமைச்செயலக அணி, இளையவன் அணி, ஸ்டைல் அணி, காட்டிற்குள் கரைந்துறைபவர்கள் அணி மற்றும் இன்னும் பெயர்களெதுவும் வைத்துக் கொள்ளாமல் நல்ல பெயருக்கும், இலக்கிற்கும் காத்திருக்கும் ஐந்து வரையான விடுதலைப்புலிகளின் குழுக்களை எனக்குத் தெரியும். இந்த அணிகளிடம் ‘இவர் நம்ம ஆள்த்தான்’ என கடிதம் வாங்கித் தந்தால் ஜமுனா சாந்தியடைவாரா? இந்த வகையான அக்கினிப்பிரவேசத்திற்கும் நான் தயாராகவேயிருக்கிறேன்.

யமுனாவின் இரண்டாவது பிரச்சனை, 2005இல் கிறிஸ்தோபரின் வீடு என்றிருந்த தலைப்பு 2012இல் சேகுவேரா இருந்த வீடெனவாகியது எப்படியென்பதே. உலகத்திலுள்ள எந்தக் கதாசிரியருக்கும் இனிமேல் இப்படியான சோதனைகளெதுவும் வரக்கூடாதென்பதே எனது இப்போதைய பிரார்த்தனைகள். 2005 காலப்பகுதியில் ‘கிறிஸ்தோபரின் வீடு’ என்றொரு கதைத்தொகுதியை வெளியிட முயன்றது உண்மைதான். பல்வேறு காரணங்களினால் அது சாத்தியப்படவில்லை. அதற்காக 2012 இல்‘சேகுவேரா இருந்த வீடு’ என்ற கதைத்தொகுதியை வெளியிட்டதனால் என்ன வகையான குற்றத்தை இழைத்தவனானேன் என்பதை யமுனா தயவுகூர்ந்து தெளிவுபடுத்த வேண்டும். இரண்டிற்குமிடையிலான முடிச்சுக்கள் மெல்லமெல்ல தனக்கு அவிழ்வதாக அவர் குறிப்பிட்டாலும், சத்தியமாக எனக்கெதுவுமே அவிழவில்லை.

2005இல் கிறிஸ்தோரின் வீடென்றிருந்தது, 2012இல் சேகுவேரா இருந்த வீடென ஆகியதற்கு பின்னாலிருந்தது வெகு சாதாரணமான, ஒருவரிக்கதை. தத்துவ அரசியல்பின்னணிகளெதுவுமே கிடையாது.

நாங்கள் சந்தித்த யுத்தமும் இடப்பெயர்வும்தான் காரணங்கள்.

2002 தொடக்கம் 2006 ஆரம்பம் வரையாக எழுதியவற்றை, இடப்பெயர்வில் தொடர்ந்து காவிச்செல்ல முடியாமல் ஒரு இடத்தில் புதைத்து வைத்துவிட்டேன். இப்பொழுதது உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ளது. இனி அவை மீளக்கிடைக்குமென்ற துளியளவு நம்பிக்கைகளெதுவுமே என்னிடமில்லை. நண்பரொருவரின் உதவியினால் 2005இல் எழுதிய தஸ்யுக்களின் பாடல், மன்னிக்கப்படாதவனின் கைத்தொலைபேசி என இரண்டு கதைகள் மட்டுமே கிடைத்தன. கிறிஸ்தோபரின் வீடு கிடைத்திருந்தால் அதனை அப்படியே வெளியிடுதற்கு எனக்கு தயக்கங்களெதுவுமே கிடையாது. மாறாக மிகுந்த சந்தோசமே உண்டாகும். ஆனால் பிரதிதான் கிடைக்கவில்லையே. என்னால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்றேயொன்றுதான். 2005ற்கு முன்னெழுதிய அந்தக்கதையின் பருமட்டான உருவத்தை வைத்து, 2012இல் மீளவுமெழுதினேன். யமுனா இந்தியாவிலிருந்து இலண்டன் போன கதையல்ல, சனங்கள் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் சென்ற கதையென்தை அவருணர்ந்து கொள்ள வேண்டும். தவிரவும், அவர் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பார்த்த சண்டையல்ல அங்கு நடந்த சண்டையும்.

அடுத்ததாக, ‘சேகுவேரா இருந்த வீடு’ தொகுப்பிலிருந்த ‘தமிழ்க்கதை’ முதல்த்தொகுப்பான ‘தேவதைகளின் தீட்டுத்துணி’யில் ஏன் இடம்பெறவில்லையென்றொரு கேள்வியைக் கேட்டிருந்தார். இப்படியான கேள்விகள் எழுத்தாளர்களை மிகவும் அச்சுறுத்துபவை. ஏனெனில் நானறிந்த வரையில் எழுதாத கதைகளை தொகுக்கும் வித்தைகளை யாரும் பெற்றிருக்வில்லை. தேவதைகளின் தீட்டுத்துணி வெளியாகி சில மாதங்களின் பின்பாக அந்தக்கதை எழுதப்பட்டதனால், அந்தத் தொகுதியில் சேர்க்க முடியவில்லையென்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தக் கதையைச் சேர்க்க, அல்லது நீக்க நிலாந்தன் சொன்னதாக குறிப்பிடுவதே அபத்தமானது. கதை ‘வல்லினம்’ இதழில் வெளியான பொழுது கதை குறித்த தனது அபிப்பிராயத்தை சொன்னார். வழமையில் எனது எழுத்துக்களைப் படித்துவிட்டு உடனுக்குடன் அபிப்பிராயம் சொல்பவர்களில் அவருமொருவர். சில காலம் அவரது மாணவனாயிருந்தேன் என்பது மட்டுமே அதற்குக் காரணம். கதை பிரசுரமான பொழுதும், தொகுப்பு வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதும், கதையில் இடம்பெற்ற புதுவை இரத்தினதுரையின் பெயரை நீக்கலாமென்பது தனது அபிப்பிராயமென்றார். (நிலாந்தன் உத்தரவிட்டார் என்ற தொனிப்பட யமுனா எழுதியிருப்பதே அபத்தமானதுதான்) இதனடிப்படையில் நடந்தவற்றை புத்தக வெளியீட்டிலும் சொன்னார். அந்த உரையின் சுருக்கப்பட்ட வடிவம்தான் இணையங்களில் பிரசுரமானது. (அதன் முழு வடிவத்தையோ, வீடியோவையோ வெளியிடுவதற்குகந்த சூழல் நிலவியிருக்கவில்லை) சுருக்கப்பட்ட வடிவத்தைப் படித்ததனால் யமுனா பிழையான முடிவிற்கு வந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவதூறாளனின் மனம் சரியானதிலிருந்தும் பிழையானவற்றையே எடுக்கும்.

அவதூறுகளிற்கு எதிர்வினையாற்றுவதில்லையென்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கின்ற பொழுதும், சில சமயங்களில் அதிலிருந்து விலகிவிட வேண்டியேற்படுகிறது. அத்தியாவசியமான தருணங்களில் தனிப்பட்ட நிலைப்பாடுகளிலிருந்து விலகிவருவதில் தவறுகள் இருக்கப் போவதில்லையென்றே நினைக்கிறேன்.

யுத்தத்தின் பின்னரான சூழலில் புதிய பலகுரல்கள் இலங்கையிலிருந்து வருவதற்கு எத்தனித்தபடியிருக்கிறன. இதுவரை காலமும் அகவயமாகவும், புறவயமாகவும் ‘வகுக்கப்பட்டிருந்த நியதிகளிற்குள்’ வாழ்ந்து துயருற்ற இளையதலைமுறை தனது கதைகளை- உடலிலும் மனத்திலும் மாறாதிருக்கும் காயங்களின் வலிகளையும், மறுக்கப்பட்ட வாழ்வையும், ‘விளைவுகளில் நம்பிக்கை வைத்து’ ஆடிய பகடையாட்டங்களின் குரூர முகங்களையும், சிதைக்கப்பட்ட நம்பிக்கைகளையும், வாழ அனுமதிக்கப்படாத நாட்களையும்- சொல்ல எத்தனிக்கிறது. அவர்கள் தமது சொந்தக்குரலில் பேச வேண்டுமென விரும்புகிறேன். தங்கள் வாழ்க்கையை அவர்களே வாழ்ந்து முடிக்க வேண்டுமென விரும்புகிறேன். இன்னும் பிறரை மகிழ்ச்சிப்படுத்தும் மேடைகளில் ஏறிநின்று, யார்யாரினதோ பிற்பாட்டுக்களிற்காக வாயசைக்காமல், காலெடுத்தாடாமல் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். மனமகிழ்வான நாட்டியக் காட்சியொன்றை காண விரும்புபவர்கள் ஒன்றில் தாங்களே ஆடிக் கொள்ளட்டுமென அல்லது தங்கள் பிள்ளைகளைக் கொண்டு ஆடி முடித்துவிடட்டுமென விரும்புகிறேன்.

இலங்கையிலிருந்து எழும் புதிய குரல்கள், பழைய பாட்டுக்காரர்களிற்கு ஒவ்வாததாக இருந்த போதும் அது வரவேண்டும். அவற்றை நசுக்கும் எத்தனங்களிற்கெதிராக குரல் கொடுப்பது ஒவ்வொருவரதும் வரலாற்றுக்கடமையென கருதுகிறேன். அதனால் இப்படியான எதிர்வினைகளையாற்ற வேண்டியதாகிவிடுகிறது. இந்தப் பொறுப்பு ஒவ்வொருவருக்குமுரியதென்றும் கருதுகிறேன். குறிப்பாக தங்கள் வாழ்நாட்களின் பெரும்பகுதியை யுத்தப்பகுதிகளில் கழித்தவர்கள் பிறரைவிடவும் அதிகமாக தமது பொறுப்புக்களை உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இன்னும் நடுநிலைப்பாத்திரமேந்தி அங்கீகாரங்களிற்காக நச்சுமௌனம் காப்பவர்களின் பாத்திரங்கள், அவர்களது சந்ததியின் சதைத்துண்டங்களினாலோ, இரத்தத்தினாலோதான் நிரப்பப்படலாமென்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். இப்படிப்பெறும் ராஜரிசிப்பதவிகளைவிடவும், எங்கள் வாழ்க்கையை நாங்களே வாழும் எளிய தருணங்கள் மகோன்னதமானவை.

இலங்கையிலிருந்தெழும் குரல்கள் யாரை அதிகம் கலவரப்படுத்துகிறதெனில், கேள்விச் செவியர்களாக கருத்துக்களை பரப்புபவர்களிற்கும், கிடைக்கின்ற இடைவெளிகளிலெல்லாம் ‘விடுதலை’க் கடை போடுபவர்களிற்குமே. விடுதலைப்புலிகள் களத்தில் இல்லாமல்ப் போனதன் பின்னர் விடுலைக்காக குரல் கொடுப்பதாக பாவனை பண்ணியபடி இன்று உலகமெங்கும் நூற்றிற்குமதிகமான குழுக்கள் கொத்துரொட்டிக்கடை போடுகின்றன. இதில் துயரமென்னவெனில் சில குழுக்களில் ஒருவர் அல்லது இருவர்தானுள்ளனர். எல்லோருமே தமிழீழத்தையடைவதுதான் தமது ஒரே குறிக்கோளெனக் கூறிக் கொண்டிருந்தாலும், இவர்களின் செயற்பாடுகள் விடுதலைக்கான திசைகளில் பிரயாணிக்கவேயில்லை. ஆரம்பத்திலேயே குறிப்பிட்ட இலண்டன் போராளியும் இயக்கமொன்றின் தலைவர்தான். பெரும்பாலான இயக்கங்களைப் போலவே அவர்களும் முகப்புத்தகத்தைப் பார்த்தே தியாகியையும், துரோகியையும் வகிடுபிரிக்கின்றனர். முகப்புத்தகத்தில் அவர்களிடும் பதிவுகளிற்கு ‘லைக்’ பண்ணும்பட்சத்தில் எந்தச்சிரமுமில்லாமல் ஒருவன் போராளியாகிவிட முடிகிறது.

அதேபோல, அவர்களது எல்லைகளிற்கு வெளியிலிருப்பவர்களை எதிர்கொள்ளும் விதமும் சுவாரஸ்யமானதுதான். அப்படியான ஒருவர் இலங்கையிலிருந்தால் மகிந்தவின் ஆள். தமிழகத்திலிருந்தால் கருணாநிதியினதோ (நன்றாக கவனிக்கவும் தமிழக இடதுசாரிகளின் ஆள் எனக் குறிப்பிடப்படுவதில்லை) றோவினதோ ஆள். பிறநாடுகளிலிருந்தால் கே.பியின் ஆள். போராட்டம் முடிந்தது.

அதிலும் குறிப்பாக தமது பிரம்மைகளிற்கு மாற்றான குரல்கள் இலங்கையிலிருந்து வரும் சமயங்களில் அவர்களடையும் பதட்டத்திற்களவேயில்லை. இந்தச் சமயங்களில் நிதானம் தப்பி, ‘அரச நிகழ்ச்சி நிரலில் இயங்குபவர்’ என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். யமுனாவும் இதனை வேறு வார்த்தைகளில் சொல்லியுள்ளார்.

கடந்த முப்பது வருடங்களாகவே இந்த வகையாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களை ஈழத்தமிழ்ச் சூழல் எவ்வாறு எதிர்கொண்டதென்பதை யமுனா அறிந்திருப்பார். அரசு சார்பாக தேர்தலில் போட்டியிட்டாலும் சரி, கோழி களவெடுத்தாலும் சரி. ஆயுதம் வைத்திருப்பவர்கள் தீர்மானித்தால் சரி. இப்போதைய எனது அச்சமெல்லாம் இதுதான். பாதுகாப்பான சூழலிலிருப்பவர்களின் இந்தவகையான உணர்ச்சியூட்டல்களிற்கு பலியான உணர்ச்சியாளனொருவன் கிடைக்கும் ஆயுதத்தை -அது ஏ.கே யாகவுமிருக்கலாம். கறள்ப்பிடித்த கத்தியாகவுமிருக்கலாம்- தூக்கமாட்டான் என்பதற்கு உத்தரவாதமுள்ளதா? தமது பிரம்மைகளிற்கு மாற்றான குரல்கள் என்ற ஒரே காரணத்திற்காக, ‘அரச ஆதரவாளர்கள்’ என யமுனா முதலான இணையப்புலிகளினால் பிரகடனப்படுத்தப்பட்டவர்களின் முன்னால் வந்தால், அதற்குப் பின்பாக நடப்பவற்றிற்கு அவர்கள்; பொறுப்பேற்பார்களா? அல்லது, இவ்வகையான அவதூறுகளை வெளியிடும் இணையத்தளம்தான் பொறுப்பேற்குமா?

எல்லா அணிகளுமே இதைத்தான் செய்கின்றன. ஈழத்தமிழர்கள் மிகுந்த ஒற்றுமையாக தம்மை வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் இவர்களெல்லோரும் இரண்டு மூன்று பேராக தத்தமது கூரடாரங்களினுள் ஒடிஒளிந்திருந்தபடி வெளியே கற்களை வீசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதிலுள்ள இன்னொரு அபத்தமென்னவெனில், தத்தமது அணிக்கு ஆட்பிடிக்கவும், பணம் சேர்க்கவும் இவர்கள் ஆடும் கூத்து கேவலமானது. பொதுவாகவே ஈழத்தமிழர்களில் இந்திய நிழல் அழுத்தமாகவே படிந்திருக்கும். உள்ளுரில் விளையும் அரிசியைவிடவும், இந்தியாவில் விளையும் அரிசிதான் மகோன்னதமானதென்றுதான் நினைத்துக் கொள்பவர்கள். இப்பொழுது தமது விடுதலைக்காக அவர்கள் நம்பியிருப்பவர்களும் இந்தியர்களே. ஓவ்வொரு அணிக்கும் ஒவ்வொருவர் மீது நம்பிக்கை. சோனியாவிலிருந்து நமீதாவரை அந்தப்பட்டியல் நீண்டது. இடையில் லண்டன் இயக்கத்துடன் யமுனாவும் நிற்கிறார்.

இயக்கங்களெல்லாம் புலன்களை அடக்கியபடி இந்திய மீட்பர்களை நோக்கி கடுந்தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள். தெருத்தெருவாக அலைந்து சேர்த்த பணத்தை மீட்பர்களின் காலடிகளை நோக்கி வீசியெறிந்து கொண்டிருக்கிறார்கள். மீட்பர்களும் ஒரு கையினால் பணத்தைப் பொறுக்கியபடி மறுகையினால் ஆசிவழங்கிக் கொண்டிருக்கிறார்கள். நாடுகடந்த தமிழீழ அரசு செய்யும் யாகங்களையெல்லாம் தூக்கிச்சாப்பிட வல்லன இந்த இயக்கங்களின் தவங்கள். எல்லா மீட்பர்களும் ஒரே மாதிரியில்லை. விழி திறக்க வேண்டிய சோனியா மாதிரி சிலர் விழிகளையே திறக்கவில்லை. யமுனா, சீமான் மாதிரி சிலர்தான் வழிகாட்டுகிறார்கள். ஆனால் அதற்கு நிதி வழங்க வேண்டும். துரதிஸ்டமென்னவெனில், தங்கள் பயணங்களை தங்களின் கால்களினால் தாங்கள்தான் செய்யவேண்டுமென்பதை நம்மவர்கள் புரிவதேயில்லை.

விடுதலையின் பெயரால் திரட்டப்பட்ட நிதியின் பங்கீடும், பயன்பாடும் சரியானதாகயில்லையென்ற விமர்சனம் தமிழீழ விடுதலைப்புலிகள் உயிர்ப்புடனிருந்த காலத்தில், களத்திலிருந்த பல சாதாரண போராளிகளிடம்கூடயிருந்தது. புலிகள் களத்திலில்லாமல்ப் போனதன் பின்னர், பினாமிகள் வெளிப்படையான நிதிச்செயற்பாட்டாளர்களாக மாறியதன் பின்னர் மிகவும் துயரமானதும், கேவலமானதுமான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. வருடம் முன்னூற்றறுபத்தைந்து நாட்களும் பூத்துக்குலுங்கி காசு காய்க்கும் அந்த மரத்தின் கனிகளெதுமே பசியோடிருப்பவர்ளிற்கு கிடைக்கவில்லை. ஏற்கனவே அருள்எழிலனிற்கு எழுதிய கட்டுரையில் இதனைக் குறிப்பிட்ருக்கிறேன்.

வன்னியில் மட்டும் இடுப்பின் கீழ் செயலிழந்த சுமார் நூற்றைம்பது வரையானவர்கள் (இந்தத் தொகை இன்னமும் அதிகரிக்கலாம்) இப்பொழுதுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் போராளிகள். அவர்களின் இரத்தத்தை உறிஞ்சித்தான் அந்த மரம் வளர்ந்தது. மூன்று மாதங்களின் முன், இந்த வகையான பெண் போராளியொருவர் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்ததற்கு காரணம், தொடர்ந்து படுக்கையிலிருந்தமையினால் உண்டாகும் காயத்திற்கு சிகிச்சை செய்ய பணமில்லாதது.

இன்னொரு பெண்போராளியின் கதை துயரமானது. அவரது சகோதரிகளை கைது செய்யப் போவதாக அச்சுறுத்தி இராணுவப்புலனாய்வாளர்கள் அவரை தமது பாலியல் அடிமையாக உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். ஊரைவிட்டு தப்பிச் செல்லவும் பணமில்லாமல் அவர் நீண்டநாட்கள் அந்தக் கொடுமையைச் சகித்தார். இறுதியில் கடந்த மாதம்தான் யாழ்ப்பாணத்திலுள்ள சில தனிநபர்களின் உதவியுடன் இதிலிருந்து மீண்டார்.

பினாமிகளிற்கு இதெதுவுமே பொருட்டல்ல. தமது பொருட்களை கூவிவிற்பவர்களை பெருந்தொகைப்பணம் கொடுத்து உபசரிக்கிறார்கள். உபசரிக்கப்படுபவர்களும் ஐந்தாம் கட்ட ஈழப்போர் பற்றிய ஆரூடங்களைச் சொல்லியும், தியாகிகளையும் துரோகிகளையும் வகிடுபிரித்தும் உபசாரகர்களை குசிப்படுத்துகிறார்கள்.

தமது உழைப்பிற்கான ஊதியமிதுவென இவர்களில் யாராவது சப்பைக்கட்டு கட்டலாம். எல்லா வியாபரிகளிடமும் தத்தமது செயல்களிற்கான நியாயங்கள் இல்லாமலா இருக்கும்?

எழுத்தும் ஒரு தொழில்தான். அதில் வெட்கப்பட ஏதுமில்லை. உலகமெங்கும் உள்ள வழமைதானது. ஆனால் இலட்சியவாதிகளாயிருந்த எழுத்தாளர்கள் யாருமே திருப்திகரமாக எழுதிப் பிழைக்கவில்லையென்ற துயரத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மூலதனம் நூலிற்காகக் கிடைத்த ரோயல்ட்டி, அந்த நூலை எழுதும் பொழுது சுருட்டுப் புகைக்க செலவழித்த பணத்தைவிட குறைவானதென கார்ல்மார்க்ஸ் சொல்லியிருந்தார். இதுதான் உலகம் முழுவதுமான பொது நடைமுறை. ஜெயமோகன் முதல் எஸ்.ரா வரை அனைவருமே தமது கறாரான நிலைப்பாடுகளிலிருந்து இறங்கிவந்து வணிகப்பத்திரிகைகளுடன் சமரசம் செய்தவர்கள்தான். அதற்காக அவர்கள் வெட்கப்படவோ, விடயத்தை மறைக்கவோ வேண்டிய அவசியமெதுவுமில்லை. காரணம் அவர்கள் உபதேசிகள் கிடையாது. ஆனால் ஒரு உபதேசிக்கு அந்த வகையான சலுகைகள் கிடையாது.

ஈழத்திலும் எழுத்தினால் ஜீவித்த மிகச்சிறு தொகையினர் இருந்தார்கள்தான். அந்தச் சிறுதொகையென்பது விரல்விட்டு எண்ணத்தக்கது. நான் பேசவிளைவது, இலட்சியவாதிகளாகயிருந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் பற்றியே. தளையசிங்கம், சு.வி, எஸ்போ என நீண்ட பட்டியலுண்டு. அவர்கள் எழுத்தை பிழைப்பாக கொண்டிராதவர்கள். அவர்கள்தான் பெரும்போக்காகயிருந்தார்கள். அந்தப் போக்கு ஒரு மரபாகவுமிருந்தது. விடுதலையை வேண்டிய சமூகமொன்றில் ஒரு தொகுதியினர் ஆயுதம் தூக்கி போராடிக் கொண்டிருக்க, இவர்கள் பேனாக்களினால் போராடிக் கொண்டிருந்தனர். அப்படியான பலரின் நிழல்களின் கீழேயே எனது இளமைக்காலங்களின் ஆரம்பநாட்கள் கழிந்தன.

இவர்கள்தான் எழுதியதற்காக கொல்லப்பட்டவர்கள். நாட்டைவிட்டு விரட்டப்பட்டவர்கள். இன்றும் சொந்தப் பெயரில் எழுத முடியாதிருப்பவர்கள். தலைமறைவாக வாழ்கின்றவர்கள். இப்படியான சூழலிலுள்ள ஒருவர் தனது சூழல் பற்றிய உரையாடலிற்கு வருபவர்களுடன், குறிப்பாக இப்படியான வாழ்க்கைமுறையைக் கொண்டவர்களை கேள்வி கேட்பவர்களுடன் அந்தச் சூழலின் நியாயங்களினடிப்படையிலிருந்தே பேச முடியும். இந்த நியாயங்களிற்கு உட்படாமல், ஆனால் இந்த நியாயங்களிற்குட்பட்டவர்கள் மீதான தீர்ப்புகளை வழங்க யமுனா என்ன சர்வதேச நீதிபதியா?

எழுத்திற்கும் வாழ்விற்குமிடையில் பேதமற்று வாழ்ந்து, எந்தச் சனங்களிற்காக எழுதியதாக நம்பினார்களோ அந்தச் சனங்களுடன் வாழ்ந்து மறைந்த படைப்பாளிகளவர்கள். அவர்களது வாழ்வும் வளமானதாகயிருக்கவில்லை. எழுத்தை பிழைப்பாக கொண்டவர்கள் பற்றி நான் பேசவில்லை. பிழைப்பதற்காக எழுதுபவர்கள் பற்றியதே எனது கேள்விகளெல்லாம். விடுதலைச் செயற்பாடுகளுடன் இடைவெளியின்றி வாழ்ந்த எழுதி ஜீவித்த மேற்படி உதாரணங்களும், விடுதலைச் செயற்பாடுகளெதனிலும் நேரடியாகவோ மறைமுகவோ சிறிதளவும் தொடர்பற்று, ஜீவிப்பதற்காக எழுதும் யமுனா வகையறாக்களும் ஒன்றல்ல. ஒரேஅளவுகோல்களினால் அளவிடவே முடியாது. ஈழவரலாற்றின் பங்கேற்பாளன் என்றபடி தனது பெயரையும் பதிந்துவிட சீமானிற்கடுத்ததாக வரிசையில் நிற்கும் யமுனா, உண்மையிலேயே ஈழவரலாற்றின் பங்காளியாகவும், எழுதி ஜீவிப்பவராகவுமிருந்தால் அவர் வாழ்ந்திருக்க வேண்டிய இடம் இலண்டனல்ல. நான் மேலே குறிப்பிட்ட வரலாற்றின் பங்காளிகள் யாரும், பிழைப்பதற்காக எழுதுபவர்களாக இருந்திருந்தால் அவர்கள் இங்கே இறந்திருக்கமாட்டார்கள்.

நானறிந்த வரையில் புலிகள் மற்றும் புலிகளென்று சொல்பவர்களினால் அன்ரன் பாலசிங்கத்திற்கடுத்ததாக யமுனாதான் உபசரிக்கப்படுகிறார். அன்ரன் பாலசிங்கத்தை விடுதலைப்புலிகள் உபசரித்தார்கள். அதற்கு நியாயமுமுண்டு. அந்த உபசரிப்பு நீதியானது. யமுனாவை புலிகளென்று சொல்லிக் கொள்பவர்கள் உபசரிக்கிறார்கள். ஈழம்பற்றிய உபதேசங்களை செய்வதற்கு ஒரு இந்தியர் கிடைத்தது, தமது ‘போராட்டத்திற்கு’ இலாபம் தரக்கூடியதென கருதுகிறார்கள். யமுனாவிற்கும் புளியம்கொப்பைப் பிடித்த திருப்தி. அன்ரன் பாலசிங்கம் தன்னையொரு புலியென வெளிப்படையாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். அர்ப்பணிப்புமிக்க கடந்த காலமொன்று அவரிடமுண்டு. ஆனால் புலியென்று சொல்லிக் கொள்பவர்களின் அணியென்று யமுனா தன்னை வெளிப்படையாக அடையாளப்படுத்தவில்லை.

தனக்குத் தரப்படும் ஊதியத்தின் மூலம், நோக்கம் குறித்த தெளிவு எல்லோரிற்குமிருக்கப் போவதில்லை. எல்லோரிடமும் அந்தக் கேள்விகளை கேட்கவும் முடியாது. ஆனால் உபதேசிகளும், நீதிபதிகளும் அவற்றை அறிந்திருக்கமாட்டார்கள் என நம்ப முடியாது. குறிப்பாக யமுனா ராஜேந்திரன் மாதிரி நுண்ணரசியல், நுண்ணடுக்குகள், பிரதிக்கு வெளியிலான அரசியல், அதனைத் தொடரும் துணையரசியல் குறித்தெல்லாம் பேசுபவர்கள் நிச்சயம் அறிந்தேயிருப்பார்கள். தவிரவும், அவர்கள் பெறுவது பினாமி நிதி. அவற்றிற்கு தெளிவான பதில்களை அவர்கள் சொல்ல வேண்டும். இந்த நிதியாதாரங்கள் குறித்து அவர்கள் சப்பைக்கட்டு கட்டி தப்பிக்க முனைந்தால், அவர்களால் கேள்விக்குட்படுத்தப்படும் எல்லாவற்றிற்கும், எல்லோருக்கும் பொருந்தி வரும்.

எனக்கு யமுனாவிடமுள்ள முதலாவது கேள்வி, இந்த வகையான ஊதியத்தைப் பெற உங்கள் மனச்சாட்சி எவ்வாறு இடமளித்தது? பல இலட்சம் சனங்களின் இரத்தத்தையும், உயிரையும் ஈடுவைத்துத் திரட்டப்பட்ட நிதி, இன்று ஒருசில வியாபரிகளினால் அவர்கள் வியாபார ஸ்தாபனங்களில் ஊழியம் செய்பவர்களிற்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களது அங்காடிகளில் பொருள் விற்பனையாளராக பணிபுரிபவரிடம் நான் இந்தக் கேள்வியை முன்வைக்கவில்லை. அவர்களது ஊடகமொன்றில் கருத்து விற்பனையாளராகப் பணிபுரிபவரிடம், ஒரு சர்வதேச நீதிபதியிடம், வரலாற்றை சமநிலையுடன் பயில முனைபவரொருவரிடம்தான் முன்வைக்கிறேன். ஏனெனில் நீங்கள் பெறுவது, வேறு யாருக்கோ சேர வேண்டிய பணத்தை. அவர்களின் பெயரால் திரட்டப்பட்ட நிதியை. அது கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டிருப்பவர்களது பணத்தை.

பினாமிகளிடம் கேட்பதற்கும் என்னிடம் பல கேள்விகளுள்ளன. தமிழீழ விடுதலை குறித்த உங்களின் ஈடுபாடு ஆத்மார்த்தமானதா? ஆமெனில், அதற்காக என்னவகையான செயல்களிலீடுபடுகிறீர்கள்? ஊரெல்லாம் இரகசியக் கமராக்கள் பொருத்தி துரோகிகளை அடையாளம் கண்டு, போராட்டத்தை பலவீனப்படுத்துகிறார்களே என அங்கலாய்ப்பவர்கள், போராடுவதற்காக தங்கள் பிள்ளைகளையிங்கே குடியேற்றலாம்தானே. ஏனெனில் நாம் போராட வேண்டியிருப்பது சிங்கள அரசுகளுடன். நீங்கள் வசிக்கும் தேசங்களிற்கு எப்பொழுதாவதொரு முறை மகிந்த ராஜபக்ச வரும் போது போராடினால் சரியென்றா நினைக்கிறீர்கள்? அல்லது கடந்தவற்றையல்லாம் கனவென்று ஒதுக்கிவிட எத்தனிக்கிறீர்களா? ஆக்கபூர்வமான செயல்த்திட்டங்களை வைத்திருப்பீர்களெனில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சனங்களும், போராளிகளும் மீண்டெழ உதவி செய்கிறீர்களா?

பிரபாகரனதும் அவர் குடும்பத்தினரதும் பெயரை எழுதுவதில்க் கூட பிசிறிருக்கிறதா என எல்லோரையும் வேவு பார்த்தபடி அலையும் ‘தேசியக்காவலர்கள்’, பிரபாகரனைப் போலவே நம்பிய இலட்சியத்திற்காக தங்கள் வாழ்வைப்பயணம் வைத்தவர்களை கண்டுகொள்ளாதிருப்பது எதனால்? பிரபாகரன் இன்று விளம்பரப் பொருளாகவும், விற்பனைப் பொருளாகவும், மோஸ்தராகவும் தான் மட்டுமா ‘தேசியக்காவலர்களிடம்’ எஞ்சியுள்ளார்? ஆமெனில், நந்திக்கடற்கரையில் அந்த உடலை சேறுபூசி மகிழ்ந்த குரூரத்திற்கும் உங்கள் மனங்களிற்குமிடையில் அதிக பேதங்களில்லை.

பிரதிக்குள் நின்று மட்டும் பிரதியின் பெறுமானத்தை மதிப்பிட மறுத்து, பிரதி குறித்து உருவாக்கப்படும் துணை பிரதிகள், அதனைத் தொடரும் அரசியல், அதனைத் தொடரும் படைப்பாளியின் அரசியல் என்பவற்றையும் கணக்கிலெடுத்தே பேச வேண்டுமென யமுனா அடம்பிடிப்பதனால், மேற்படி பின்னணியிலிருந்தே அவரையும் அணுக வேண்டியிருக்கிறது. புலம்பெயர் பினாமிகளுடன்தான் யமுனாவின் அரசியல், பொருளாதாரக் கூட்டெனில் அவரை எவ்வாறு மதிப்பிடுவது? இந்தக் கூட்டின் அபத்தம் புரிவதால்த்தான் தன்னையொரு நடுநிலையாளனென வரிக்குவரி அவர் பிரகடனம் செய்ய வேண்டியிருக்கிறது. இது தமிழ்த்திரைப்பட கதாநாயகர்களின் ‘மாறுவேசங்களை’யே நினைவுபடுத்துகிறது. முகத்தில் எங்காது சிறு பொட்டொன்றை ஒட்டி, எதிரிகளை ஏமாற்றும் தமிழ்ப்பட கதாநாயகத்தன்மைகள் வாழ்விற்குகந்தவையல்ல.

நடுநிலையாக எழுதுவதாக் கூறுவதெல்லாம் ஒரு உத்திதான். உண்மைகளை நீர்த்துப் போகச் செய்யும் உத்தியது. யுத்தத்திலீடுபட்ட இரண்டு தரப்பின் அனுதாபிகளும் இந்த வகையான கோருதல்களைத்தான் முன் வைக்கிறார்கள். சனல் நான்கின் காட்சிகள் வெளியான சமயத்தில் அரச அனுதாபிகளிடம் வெளிப்பட்ட பதற்றத்தைத்தான் யமுனா வகையானவர்களிடமும் காண்கிறேன். அதனால்த்தான், படைப்புக்களின் அரசியல் நீட்சியை சற்று நடுநிலையாக நான் அணுகியிருக்கலாமென்று ஆதங்கப்படுகிறார்.

.

உண்மைக்கு நடுநிலையென்பதிருப்பதில்லை. அது சரியானதையும் பிழையானதையும் மட்டுமே சுட்டும். ஏனெனில் இதுவரையான யுத்தத்தில் யாருமே நடுநிலையாக யாரையும் கொல்லவில்லை. நடுநிலையாக யாரையும் நாட்டைவிட்டு விரட்டவில்லை. நடுநிலையாக யாரும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கவில்லை. நடுநிலையாக யாரும் சிறையிலடைக்கப்பட்டிருக்கவில்லை. நடுநிலையாக யாரும் படைகளிற்கு இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. நடுநிலையாக யாருமே சரணடைந்திருக்கவில்லை. அப்படி சரணடைந்தவர்கள் யாருமே நடுநிலையாகக் கொல்லப்படவில்லை.

இதெல்லாம் நடுநிலையாக இடம்பெறாத போது, இவற்றை பேசுமொருவர் மட்டும் எப்படி நடுநிலையாகப் பேசமுடியும்?

உண்மைக்கு பக்கச்சார்பு கிடையாது. அது பூனைகளிற்கு அப்பம் பிரித்துக் கொடுக்கும் காரியமுமல்ல. குரங்குகளால் பூனைகளிற்கு நடுநிலையாக அப்பம் பிரித்துக் கொடுக்கலாமே தவிர, மனிதர்களினால் நடுநிலையாக உண்மைகளைச் சொல்ல முடியாது. தமது பக்கப் பிழைகளை பார்ப்பதைவிட்டு, அதிக தவறு செய்த மறுதரப்புத் தவறுகளைப் பாருங்களென்றுதான் இரண்டு தரப்பினரும் சொல்கிறார்கள். சனங்களின் தரப்பு யாருக்குமே பொருட்டல்ல. துயரமென்னவெனில், இந்தவகையான அபிப்பிராயங்களை பரப்பித் திரிபவர்கள் யாருமே யுத்தத்தின் வடுக்களைச் சுமப்பவர்களல்ல. யுத்த வலயங்களில் வாழ்ந்துமிருக்கவில்லை.

உண்மைக்கு பக்கச்சார்பு கிடையாதென்பதைப் போலவே வர்ணங்களுமில்லையென்றே நம்புகிறேன். சாம்பல் இயக்கியத்திலிருந்து நான் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதற்கு காரணம், உண்மை குறித்த எனது அசைக்க முடியாத நம்பிக்கையினடிப்படையிலானது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘ஆறாவடு’ நாவலின் அறிமுகக்கூட்டத்தில் சாம்பல் இலக்கியத்தின் சிறந்த வகைமாதிரிகளிலொன்றாக நிலாந்தன் அதனைக் குறிப்பிட்டிருந்த சமயத்திலும், அந்த வகைமாதிரிகள் பற்றிய எனது வேறுபட்ட அபிப்பிராயத்தை எழுதியிருந்தேன். அதனை சாம்பலிலக்கியத்தின் சிறந்த வகைமாதிரிகளிலொன்றாகக் கொண்டால், உண்மையின் நிறமென்ன என்ற கேள்வி இயல்பாகவே எழும்.

எப்பொழுதும் உண்மைகள் வரவேற்பறையில் வைத்துக் காட்சிப்படுத்தும் விதமான அழகுடனிருப்பதில்லை. கற்பனைகளையும் புனைவுகளையும்தான் காட்சிக்கு வைக்க முடியும். சில சமயங்களில் வீட்டின் கோடிப்புறத்தில் வைத்திருப்பதற்குக்கூட முடியாத நாற்றமெடுப்பனவாக உண்மைகள் இருந்து விடுகின்றன என்பதுதான் துயரமானது.

ஆதவனும், தமிழ்செல்வனும் விமர்சனமெழுதினால் அந்தப்படைப்பாளி துரோகியென்ற சாரப்பட யமுனா எழுதுவதையெல்லாம் எந்த வகைக்குள் அடங்குவதென்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. மறுவளமாக யமுனா விமர்சனமெழுதும் படைப்புகளின் ஆசிரியர்கள் நாட்டுப்பற்றாளர்களாகிவிடுவார்களா? கோவிந்தன் இப்படியாக எத்தனை படைப்பாளிகளை யமுனா ‘ஞானஸ்தானம்’ கொடுத்து உலவவிட்டிருக்கிறார்?

ஈழவிவகாரத்தில் யமுனாவிற்கிருக்கும் பற்றாக்குறையான அறிவு, அவர் ‘செயந்தனின்’ ஆறாவடு நாவலுக்கு எழுதிய விமர்சனக் குறிப்பில் புலப்பட்டது. அந்த நாவலை நடுநிலையான நாவலென்ற சாரப்பட யமுனா குறிப்பிட்டிருந்தார். கூடவே, அது அவரை இருண்மையிலிருந்து ஒளிக்கு வேறு அழைத்து வந்திருந்தது. யமுனா கண்டடைந்த ஒளியெதுவென அடையாளம் காட்டுவதற்காகவும், யமுனாவின் நடுநிலை அபத்தங்களைப் புரிந்து கொள்வதற்காகவும் ஆறாவடு குறித்து பேச வேண்டியதாகிறது.

அடிப்படையில் அந்த நாவல் விடுதலைப்புலியுறுப்பினராக இல்லாத ஒருவரினால், விடுதலைப்புலிகள் பற்றி அறிந்த தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டது. பெரும்பாலான ஈழத்து நாவல்களிற்கேயுரித்தான விபரிப்புக் குறைபாடு, பாத்திர உருவாக்க பலவீனங்களுடன் நாவலிருந்தாலும், அது வாசிப்புச் சுவாரஸ்யமுள்ள நாவல்தான். அதிலெல்லாம் சந்தேகமில்லை. ஆனால், பிரச்சனையென்னவென்றால், நாவலின் ஆதாரமாக இருந்திருக்க வேண்டிய உயிர்ப்பு அதிலிருக்கவில்லை. என்னைக் கேட்டால் சயந்தன் வேறு களங்களை நாவலாக்கியிருக்கலாம் என்றுதான் சொல்வேன். ஏனெனில் அந்த விடயத்தில் அவரால் வெற்றியடைய முடியவில்லை. (புலியெதிர்ப்பு மிகச்சிறந்த சந்தை வாய்ப்பைக் கொண்டிருப்பதாக யமுனா குறிப்பிட்டிருந்தார். உண்மையில் பங்குச்சந்தையில் எதனது பங்கு உச்சவிலையிலிருக்கிறதென்பதற்கு இது உதாரணமாகயிருக்கும்)

ஆறாவடு விடுதலைப்புலிகள் பற்றிய வாழ்க்கையை அசலாகப் பதிவுசெய்யவில்லை. சற்றே கறாராக இருந்தாலும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. விடுதலைப்புலிகள் பற்றிய விபரிப்புக்களில் கிட்டத்தட்ட தென்னிந்தியத் திரைப்படங்களைத்தானது நினைவுபடுத்தியது. அதில் சித்தரிக்கப்பட்டதல்ல விடுதலைப்புலிகளின் வாழ்க்கை. தவிரவும், அதில் குறிப்பிடப்படதெதுவுமே விடுதலைப்புலிகள் மீதான ஆழமான விமர்சனங்கள் கிடையாது. அவையெல்லாம் புலிகளின் சாதாரண முகங்கள். அந்த முகங்கள் மீது சனங்களிற்கு ஆழமான விமர்சனங்களெதுவுமேயிருந்திருக்கவில்லை. செல்லக் கோபங்களுடன் சனங்கள் அனுசரித்துச் செல்லும் விடயங்களவை. விடுதலைப்புலிகள் குறித்து வெளிநாட்டிலிருந்து ஆய்வுசெய்பவர்களே சுமத்தவல்லதான மென்போக்கான விமர்சனங்கள். அதாவது விடுதலைப்புலிகள் மீதான பிம்பங்களை உடையவிடாத மனமொன்றின் பதிவுகள்.

யமுனாவிற்கு இதெதுவுமே புரியவில்லை. அதாவது யமுனாவிற்கிருந்த புலிகள் பற்றிய எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை நாவல் பூர்த்தி செய்துள்ளது. அல்லது யமுனாவும் புலிகளை அப்படித்தான் கற்பனை பண்ணியிருந்தார். அதனால்த்தான் அதனை நடுநிலையான நாவலென குறிப்பிட்டிருந்தார்.

இப்பொழுது சொல்லுங்கள், நடுநிலையென்பதன் அர்த்தமென்ன?

ஒரு சம்பவத்தை வெளியிலிருந்து பார்ப்பவர்கள், அல்லது ஒரு கதையை அறிந்தவர்கள் செய்யவல்ல காரியமது. அனர்த்தமொன்றை வாழ சபிக்கப்பட்டவர்களினால் நடுநிலையாக எழுத முடியாது. பி.பி.சி வானொலியில் செய்தியறிக்கை தயாரிக்கும் விடயமல்ல இது. ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றால், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதையும் சொல்லி, குற்றம்சாட்டப்பட்ட தரப்பைத் தொடர்பு கொண்டு அவர்கள் சம்பிரதாயமாகத் தெரிவிக்கும் மறுப்பையும் வெளியிடுவதையொத்த காரியமல்ல.

எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும். பதிலளிக்கத் தெரியாதென்று அவர் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கையில் யமுனா வகையானவர்களிடம் பதில்க் கேள்விகளும் கேட்கலாம்.

கார்ல் மார்க்ஸ் சொல்லியிருக்கிறார், ‘இனி இந்த உலகத்திற்கு வரலாற்றை வியாக்கியானம் செய்யும் தத்துவஞானிகள் தேவையில்லை. வரலாற்றை முன் கொண்டு செல்லும் தத்துவஞானிகளே தேவை’ என. அதாவது செயற்படுபவர்கள். யமுனா யார்? செயற்படும் இடதுசாரியா அல்லது எழுதும் இடதுசாரியா? செயற்படுபவரெனில் தொடர்ந்தும் பேசலாம். பலனிருக்கும். எழுதுபவரெனில் தொடர்ந்து உரையாடுவதனால் பலனிருக்காது.

நாம்தான் வரையறுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தோம். எழுதவும், பேசவும் எந்தத் தடையுமற்ற பகுதிகளிலிருந்து கொண்டு, இதுவரை எதனைச் சாதித்தீர்கள்? சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்கள், பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டவர்கள், வைத்திசாலைகளில் கொல்லப்பட்டவர்கள், பாதுகாப்பு வலயமென்று அறிவித்து ஒன்று குவிக்கப்பட்ட பின்னர் எறிகணைகளினால் கொல்லப்பட்டவர்கள், விரும்பிய இடங்களிற்குச் செல்ல முடியாமல் தடுத்து வைக்கப்பட்டவர்கள், தப்ப முனைகையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், பலவந்தமாக படைகளிற்கு இணைத்துக் கொல்லப்பட்டவர்கள் போன்ற எண்ணற்ற வழிகளில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்க என்ன வழிகளில் பங்களித்தீர்கள்? இந்த வகையான அநீதிகளை உலகத்தின் முன் பகிரங்கமாக்க ஏதாவது முயற்சிகள் செய்தீர்களா?

யுத்தவலயத்தில் அகப்பட்டிருந்த எங்களது உயிருக்கு ஆபத்தில்லாமல் வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை அரசும், புலிகளும் வழங்க வேண்டுமென நீங்கள் எந்த ஊடகத்திலாவது எழுதியிருக்கிறீர்களா?

நாமெல்லாம் யுத்த வலயத்தில் சிக்குண்டிருந்த சமயத்தில், எங்களிற்காக ஏதாவது போராட்டங்களில் ஈடுபட்டீர்களா?

புலம்பெயர் ஊடகங்களில் பணியாற்றிய சமயங்களில் என்றாவது புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பிற்கெதிராக, மக்களை வெளியேறவிடாமல் தடுத்தமை தொடர்பாக குரல் கொடுத்திருந்தீர்களா?

இல்லைத்தானே.

அதனைச் செய்ய முடியாமல்ப் போனதற்கு என்ன காரணம்? எனக்கும் புலிகளின் மீது விமர்சனமுண்டு என்ற பொதுவான பேச்செல்லாம் வேண்டாம். ஏனெனில், மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களில் சிலரும், ‘இந்த அரசாங்கத்தில் எனக்கும் விமர்சனமுண்டு’ என்றுதான் கூறுகிறார்கள்.

இதுவரையும் விடுலைப்புலிகளை கேள்வியெதனையுமே கேளாமல் வெளிவந்த எத்தனை கண்மூடித்தனமான ஊகப் படைப்புகளிற்கு யமுனா எதிர்வினையாற்றியுள்ளார்? எப்பொழுதாவது, நடுநிலையான படைப்புகளில்; புலிகளின் இன்ன குற்றங்கள் பதியப்படவில்லையெனக் குறிப்பிட்டுள்ளாரா?

இவையெதுமேயில்லையென்றல் யமுனாவின் பாத்திரம்தான் என்ன? வெறும் சர்வதேச நீதிபதியாக உட்கார்ந்திருக்க விரும்புகிறாரா?

அல்லது, திருமண உறவுகளால் கிடைக்கும் in low உறவை ஒத்ததாக, இலங்கைப் பெண்ணொருவரை ஒரு காலத்தில் திருமணம் செய்திருந்தமையினால் in low tamil nationalist அந்தஸ்து கிடைத்ததா?

ஒரு இடதுசாரியாக என்ன வகையான போராட்டங்களை இந்தியாவில் நிகழ்த்தியிருக்கிறார்? என்ன வகையான தியாகங்களை புரிந்திருக்கிறார்?

இப்பொழுது ஜமுனாவின் முன்னுள்ள அத்தியாவசிய பணி, இந்த சர்வதேச நீதிபதிப் பணியல்ல. முதலில் இந்தியா செல்லுங்கள். அங்கு சாதிச் சுவருண்டு. பூந்தமல்லியில் ஈழத்தமிழர்களிற்கான தடுப்பு முகாமுண்டு. இன்னும் பல இடங்களில் ஈழத்தமிழர்களின் அகதி முகாங்களுண்டு. சாதிக் கொடுமைகளுண்டு. இப்படி செய்வதற்கு எண்ணற்ற வேலைகள் இருக்கையில், இந்த வெட்டிவேலையை யார் தந்தது? இந்த வகையானவர்களிடம் வைப்பதற்கு என்னிடம் ஒரேயொரு வேண்டுகோள்தானுள்ளது. ஒரு சீமானை வைத்துக் கொண்டே ஈழத்தமிழர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து எங்களிற்கு இன்னொரு சீமான் வேண்டாம்.

இந்த விதமான பார்வைகளைக் கொண்டிருந்தால், யமுனாவினால் லண்டன் சுற்றுவட்டாரத்தில்த்தான் இயங்க முடியும். வரலாற்றைப் பயில ஆரம்பித்துள்ள மாணவனிற்கு இப்படியான அவலங்கள் இடம்பெற்றுவிடக் கூடாதென்பதே என் விருப்பம்.

கடலை, கடற்கரையில் நின்று பார்ப்பதற்கும் ஜன்னலினூடாகப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு.

யமுனா ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்து, கடல் அழகியதென்றும், அலைகள் மிருதுவாக ஒருவனை ஏந்திச் செல்கிறதென்றும் சொல்கிறீர்கள். நானோ கடற்சுழியொன்றிலிருந்து மீண்டு வந்த கதை பற்றிச் சொல்கிறேன். கடலலை சுழியாகி மனிதர்களை அமிழ்த்தும் கதைகளைச் சொல்கிறேன். நீங்களோ ஜன்னலினூடாகக் கண்ட அலை, அழகிய நுரைகள் கக்குவதைப் பற்றி ஏன் சொல்லவில்லையென்கிறீர்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

படைப்புகளில் சார்பு நிலையிருப்பதாக உணர்வதெல்லாம் அபத்தம். புலம்பெயர் சூழலில் வாழ்வதனால், அல்லது யுத்தத்தை ரி.ரி.என் இலும் பிபிசியிலும் மட்டுமே பார்த்ததனாலும் இப்படியான எண்ணங்கள் உருவாகியிருக்கலாம். சரணடைந்து கொல்லப்பட்ட போராளியொருவன், சாவதற்கு முதல்க் கணத்தில் யோசிப்பதில்லை- தன்னைச் சுடும் துப்பாக்கியை எந்த நாடு உற்பத்தி செய்ததென்று. தன்னைக் கொல்லப் போகும் ரவையை சீனாவா, ரஸ்யாவா உற்பத்தி செய்ததென்று. அல்லது தன்னை நடுநிலையாகக் கொல்கிறார்களா என்று. அவனது பிரச்சனையெல்லாம் மிக எளியது. சுடும் விரல்களும், விசைவில்லுமே அவனது பிரச்சனைகள்.

புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டவனொருவன், இறப்பதற்கு முதல் கணத்தில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம், புரட்சி, ஜனநாயகமின்மை பற்றியெல்லாம் யோசிப்பதேயில்லை. தனது மரணச் செயதிக்குப் பக்கத்தில் அரசினால் கொல்லப்பட்டவனொருவனது மரணச் செய்தியும் வர வேண்டுமென்று கடைசிஆசை சொல்வதுமில்லை.

ஈழவிவகாரத்தில் யமுனா கற்றுக் கொண்டவை மிகச் சொற்பம். ஆனால் வரலாற்றை சமநிலையுடன் பயில விரும்பும் மாணவனை நடுத்தெருவில் விட்டுச் செல்வது முறையல்ல என்பதால் அவர் விரும்பும் பட்சத்தில் எனக்குத் தெரிந்த ஈழ விவகாரங்களை தொடர்ந்தும் அவருடன் பகிர விரும்புகிறேன்.

ஐரோப்பாவில் தமிழீழம் என்ற பெயர்ப்பலகை தொங்கும் பங்களாக்களிற்குள் நுழைந்து தமிழீழப் போராட்டம் குறித்த புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். அங்கிருக்கும் நூலகர்கள் தரும் தகவலினடிப்படையில் வரலாற்றைப் புனைய முயன்று கொண்டிருக்கிறீர்கள். எல்லாவற்றையும் காவு கொண்ட யுத்தம், மிச்சமாக விட்டுச் சென்ற கசப்பும் நிராதரவும் மட்டுமே எஞ்சியிருக்கும் ஈழத்துக் குடிசையொன்றிற்குள்ளிருந்து அது பற்றிய சித்திரத்தை வரைய முயன்று கொண்டிருக்கிறேன்.

சேகுவேராவிற்கான விற்பனையுரிமையை ஜமுனாவை ஒத்த இணையஇடதுசாரிகள் வாங்கியதையறியாமல் பயன்படுத்தியது எனது தவறுதான். ஆனால், யமுனா ராஜேந்திரன் அறிந்தேயிராத ஈழத்துக் குடிசைகளிருப்பது என் தவறல்ல. இனியாவது அவற்றை அறிய முயற்சியுங்கள்.

http://yokarnan.com/?p=363

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]அனுபவத்தின் காயங்களை கேள்வி ஞானத்தினால் கண்டடைய முடியாது[/size]

த.அகிலன்

சமீபகாலமாகவே சிற்றிதழ்களையும் இணையதளப் பக்கங்களையும் நிரப்பிவரும் யமுனா ராஜேந்திரன் அண்மையில் வடலி வெளியீடாக வெளியான யோ.கர்ணனின் இரண்டு சிறுகதைத் தொகுதிகள் உள்ளடங்கலான கர்ணனின் கதைகள் குறித்த கட்டுரையில் மெய்யென்பது எதுவெனக் கேட்டிருந்தார். ஒளவையாரில் இருந்து வள்ளுவர் வரைக்கும் மெய்யைப் பற்றி நிறையச் சொல்லியிருந்தாலும் விக்கிபீடியாவில் அவை இல்லாவிட்டால் என்ன செய்வது.....

ஒரு விவாதத்திற்காக வடலி வெளியீட்டினால் வெளியிடப்பட்ட கர்ணனுடைய சிறுகதைத் தொகுதிகளில் இடம்பெறாத கதையொன்றினைக் குறித்த கேள்விகள் ஏன் எம்மிடம் எழுப்பப்படுகின்றன? என்று நான் கேட்கலாம். உதாரணத்திற்கு பொங்குதமிழ் இணையத்தளத்தில் யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார் என்பதற்காக, யமுனா ராஜேந்திரன் வேறொரு இடத்தில் எழுதிய கட்டுரையைக் குறித்து நான் பொங்குதமிழ் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்ப முடியுமா? அதுஒரு புறம் இருக்க.. 'தேவதைகளின் தீட்டுத்துணி' புத்தகம் வெளிவந்து பலமாதங்களின் பின் கர்ணன் எழுதிய கதையொன்றில் மெய்யிருக்கிறதா என்பதை கர்ணன் கதை எழுதுவற்கு முன்பாகவே கண்டுபிடித்து நான் எழுதியிருக்கவேண்டும் என்று யமுனா ராஜேந்திரன் எப்படித்தான் எதிர்பார்க்கிறாரோ என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எழுத்தாளனின் கதைகளையெல்லாம் அவர் எழுதுவதற்கு முன்பே படித்துவிடும் வரங்கள் எதுவும் எனக்குச் சித்திக்கவில்லையென்பது துயரம்தான்.

சரி இனி மெய்...

புள்ளி விபரங்கள் குருதி சிந்துகிறதோ இல்லையோ, கதைசொல்லிகள் அவற்றை குருதி சிந்த வைக்கிறார்களோ இல்லையோ - எனக்குத் தெரியாது. ஆனால் புள்ளிவிபரங்களின் தானங்களிலொன்று பேசுவதே காலத்தின் குரலென்று நான் நம்புகிறேன். அப்படிப் பார்த்தால் அம்னஸ்டி அறிக்கை, ஐ.நா அறிக்கை போன்ற பல அமைப்புகளின் அறிக்கைகளின் புள்ளிவிபரங்களின் தானங்களில் ஒன்று கர்ணனுடைய தலையும். மேசைகளில் இருந்து கொண்டு புள்ளி விபரங்களை அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போட்டு, நடந்து முடிந்த ஈழப்போரை எழுத்துக்களாகவும், மிஞ்சி மிஞ்சிப்போனால் காட்சிகளாகவும், வதந்திகளாகவும் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கும் கேள்விச் செவியர்கள் கண்டடையும் மெய்யை விடவும் மேலானதாகவே இருக்கும். மேற்குறித்த புள்ளி விபரங்களின் தானங்கள் ஒன்றினது வாக்குமூலத்தில் வெளிப்படும் மெய், புள்ளி விபரங்களின் தானமாயிருப்பதன் சங்கடமும் வலியும் கேள்வி ஞானத்தால் கண்டடைய முடியாதவையே. ஆகவே அவற்றை யமுனா ராஜேந்திரன் கண்டடையவில்லை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

கர்ணனிடம் இருக்கும் மெய் என்பது அவருடைய அனுபவம். உயிரும் சதையுமாய், ரணமும் தழும்புகளுமாய், தூக்கமற்ற இரவுகளையும், வியர்த்து விழிக்கப் பண்ணுகிற கனவுகளையும், அந்தரத்தில் மிதக்கும் ஒரு காலையும் கொண்டிருக்கும் குருதி சிந்திய மெய் நினைவுகளில் என்றைக்கும் பிசுபிசுத்தபடியிருக்கும் சொந்த உடலின் பசிய குருதியின் நெடிலென்பதே கர்ணனிடம் இருக்கும் மெய். யமுனா, இன்றைக்கு நீங்கள் எல்லாரும் பெரிதாக எதிர்த்துக் கிழிப்பதாய் சொல்லிக் கொள்கிற சிங்கள அரசாங்கத்துக்கெதிராக, அதன் இனவாத ஒடுக்குமுறைக்கெதிராக, ஊர் முழுதும் மேய வந்த இராணுவத்துக்கெதிராக சொற்களை மட்டுமல்ல சன்னங்களையும் தொடுத்தவர்களே நாங்கள். அதன் விளைவுகளையும் சுமந்தவர்கள் நாங்களே. விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு மட்டுமல்ல விடுதலைப் புலிகளாகவே இருந்தவர்கள். அதனால்தான் விடுதலைப்புலிகளின் அகவயப்பட்டும் புறவயப்பட்டும் அனுபவங்களைப் பதிவு செய்ய முடிகிறது கர்ணனால். விடுப்புப் பார்த்தவர்கள் எழுதுகின்ற 'உள்ளிருந்த பார்வைகள்' போன்றதல்ல கர்ணன் போன்றவர்களுடைய எழுத்து. மெய்யைப் பேசுவதற்கான தகுதியும், அறமும், தார்ப்பரியமும், கடமையும் கூடக் கர்ணனைப் போன்றவர்களுக்குண்டு. அதைத்தான் அவர் செய்துவருகிறார் என்று நான் நம்புகிறேன். கர்ணனின் கதைகளில் வெளிப்படுவது மெய்தான் என்று இந்த வரியை எழுதிக்கொண்டிருக்கும் போதும் நான் நம்புகிறேன்.

கொஞ்ச காலமாகவே தொப்புள்கொடி உறவுகள் என்று சொல்லிக்கொள்கிற இந்தியத் தமிழர்கள் மேய்ப்பராகும் கனவுகளோடு ஈழத் தமிழர்களைக் குறிவைத்து அலைந்து திரிகிறார்கள். தமிழ்த் தேசியத்தின் பல்வேறு தளங்களிலும் சீமான் முதல் யமுனா ராஜேந்திரன் வரைக்கும் அந்தப் பட்டியல் பெரிது. அதுவும் புலிகளின் ஆயுதப் போராட்டம் அழிந்துவிட்டது என்பது ராஜபக்சவுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ நிறையப் பேருக்கு திண்ணை காலியாகிருச்சு அண்ணன் இடம் நமக்குத்தான் என்கிற மகிழ்ச்சி தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது. புலிகள் தம் ஆயுத பலத்தை இழந்ததன் பின்னர் திசைக்கொன்றாய் முளைத்து தமிழர் நலம்காக்கும் இணையத் தளங்களின் எண்ணிக்கையும், தமிழர் அமைப்புக்களுமே அதற்குச் சாட்சி. அவர்களுக்கு ஆயிரம் கனவுகள் இருக்கலாம், அதையெல்லாம் ஈழத்தமிழர்களின் தலையிலா கட்டுவது. அதோடு மட்டும் நில்லாமல் என்ன பேச வேண்டும், எப்படிப் பேசவேண்டும், இதைத் தான் பேசவேண்டும் என்று உத்தரவு போடுகிறார்கள். சீமான் எப்படி விடுதலைப்புலிகளின் நிதி ஆதாரங்கள் அனைத்தையும் எனக்கே தரவேண்டும், நான் வாயால வண்டில் தமிழீழத்துக்கு விடுவேன் என்று சொல்கிறாரோ, அதைப் போலவே யமுனா ராஜேந்திரனும் நானும் ஈழப்போராட்டத்தின் பங்காளனே என்று குத்துவிளக்கில் பெயரைப் பொறிக்கும் உபயகாரராய் லைனில் நிக்கிறார். நிண்டதும் பத்தாமல் இலங்கையில் இருந்து கொண்டு வரும் குரல்களை நசுக்க நினைக்கிறார்.

உண்மையில் இலங்கையில் இருப்பவர்களைப் பேசவிடுவதென்பது தங்களது பிழைப்புக்கு ஆபத்தானதென்று யமுனா ராஜேந்திரனுக்குப் பயமிருக்கலாம். இலங்கையின் நிலவியலையும், மக்களின் வாழ்வியலைப் பற்றியும் எதுவும் அறியாது அவர்களைப் பற்றியும் அவர்களது அரசியல் பொருளாதார, வாழ்வியல் அணுகுமுறைகள் குறித்து, வண்டை வண்டையாய் இணையதளப் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு அங்கிருந்து எழும் மாறுபட்ட குரல்கள் அச்சத்தையே தரும். மாறாக மேற்குறித்த தொப்புள் கொடிகளிடமிருந்து அங்கீகாரங்கள் வேண்டி நிற்கும் ஓமணக் குட்டிகளாய் நிற்பவர்களின் குரல்களே அவர்களிற்குப் பிடித்தவையாய் இருக்கின்றன. அங்கேயிருந்து கொண்டே யாரேனும் எழுதினால், அதுவும் தங்களுடைய கேள்வி ஞானத்தினால் தாங்கள் கண்டடைந்து வழங்கிக் கொண்டிருக்கும் அரசியல் பொழிப்புரைகளுக்கு பாதகமாக யாரேனும் எதையாவது சொன்னால், அவர்களால் தாங்கிக் கொள்ளமுடிவதில்லை. அய்யய்யோ அவன் அரசாங்கத்தின் ஆள் என்று அலறுகிறார்கள். அங்கேயிருப்பவர்கள் பேசவும் எழுதவும் வந்தால் இந்தக் கேள்விஞானிகள் கணிணிக்கு முன்னால் குந்தியிருந்து அடுத்தது என்ன? தமிழீழத்துக்கான புதிய பாதை. முப்பத்து வருடம் கழித்து புதியதோர் உலகத்துக்கு விமர்சனம் என்று நாடுநாடாகப் பறந்து பிழைக்க முடியாதே! என்ன செய்வது அவரவருக்கு அவரவர் பிரச்சினை.

உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். 'சேகுவேரா இருந்த வீடு' சிறுகதைத் தொகுதி யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டபோது ஒரு மூத்த எழுத்தாளரை வழிமறித்து இராணுவத்தினர் புத்தகத்தை பறித்துச் சென்றிருக்கின்றனர். கூட்டத்தின் இடையிலும், கூட்டம் முடிந்த பின்னரும் கர்ணன் விசாரிக்கப்பட்டார். எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஒருவேளை கர்ணன் மீது வைக்கப்படுகின்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவது, அரசு ஆதரவு அணியில் சேர்வது என்று இதைத்தான் குறிப்பிடுகிறீர்களா என்று எனக்கொரு சந்தேகம். இத்தகைய சவால்களையும் எதிர்கொண்டுதான் ஒருவர் இலங்கையிலிருந்து எழுதவேண்டியிருக்கிறது. இதனைப் பெரிதாக விளம்பரப்படுத்தி தமிழ்த்தேசியத்தின் தியாகச் சொருபமாக கர்ணனை மாற்றும் மார்க்கெட்டிங் எமக்கு வாய்க்காததால் கர்ணன் தமிழ்த்தேசிய விரோதியாகவே வாழ்ந்து தொலைக்கவேண்டியிருக்கிறது.

தவிர புலியெதிர்ப்பிலக்கியம் என்பது விற்றுத் தீர்கிறது, பெரிய தொழிற்சாலை, கோடிகள் புரளும் வர்த்தகம் என்கிற ரீதியில் எழுதுகிறீர்களே யமுனா, உங்களுக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியேல்லயா? 'மாண்ட வீரர் கனவு பலிக்கும். மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்' எண்டு போட்டாத்தான் இண்டைக்கு தமிழ்ச் சூழலில் கொத்துரொட்டியே விற்கமுடியும் (கனடா வந்தனீங்க தானே). நிலைமை அப்படியிருக்க புலியெதிர்ப்பிற்கு வியாபாரம் கோடிகளில் என்று மஞ்சளும் சிவப்புமாய் புழுகுகிறீர்களே இது அடுக்குமா? உண்மையில் புலியெதிர்ப்பாளர்கள் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு பாதியாகக் குறைந்து விட்டார்கள். அவர்களில் கொஞ்சப்பேர் உங்களைப்போல வரலாற்றை சமநிலையுடன் பழகப் போய் விட்டார்கள். மிச்சப் பேர் அண்ணையின்ர கதிரையைக் குறிவைச்சு புலிக்காவடி எடுக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதே உண்மை. இன்னும் கொஞ்சப் பேர் புத்திசாலிகள், இவ்வளவு நாளும் மாற்றுக் கருத்தாளர்களாக அடையாளம் காட்டிக்கொண்டிருந்துவிட்டு இப்ப சேம்சைட் கோல் போட்டு, நீங்க என்ன செய்தீர்கள் என்று அவர்களையே கேட்கிறார்கள். கேள்வி கேட்கிற இடத்தில் இருப்பதுதான் எப்பவும் பாதுகாப்பானது என்றறிந்த அறிஞர்கள். இன்னும் கொஞ்சப்பேர் 2009ம் ஆண்டு வரையிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கொழும்பெல்லாம் போய் வந்து அமைச்சர்மாரோட கைலாகு கொடுத்துக் கொண்டு, அரச தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்துக் கொண்டு திரிஞ்ச புத்திசீவிகள், திடீரென்று என்ன மாயமோ மந்திரமோ அரசாங்கத்தின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்று விட்டார்கள்.

உங்களை வரலாற்றை சமநிலையுடன் பயில நினைப்பவன் என்கிறீர்கள். எனக்கு உங்களிடம் ஒரு கேள்வியொன்றுண்டு யமுனா. பயில நினைப்பதோடு சரியா அல்லது அதை நடைமுறைப்படுத்துவதும் உண்டா? அப்படி நடைமுறைப்படுத்துவதென்றால் எப்போதிருந்து அதைத் தொடங்கினீர்கள்? நினைப்பதோடு நிறுத்திக் கொள்கிறீர்கள் என்றால் அதையாவது எப்போதிருந்து தொடங்கினீர்கள். சமீபத்தில்தானா? சமீபம் என்றால் நீங்கள் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் பணியாற்றிய ஐ.பி.சி நிறுவனத்திலிருந்து விலகிய பிறகா? அப்படியென்றாலும் உங்களுடைய பிரச்சினை என்னால் விளங்கிக் கொள்ளக்கூடியதுதான். நாங்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும்போது வெளிப்படையாக எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. அதற்கான காரணங்கள் வெளிப்படையானவையே. அதே மாதிரியான ஏதாவதொரு காரணம் உங்களுக்கும் இருக்கக் கூடும்தான். சரி பரவாயில்லை.

உங்களுடைய கட்டுரையின் ஆரம்பத்தில் 'சேகுவேராவின் ஆன்மாவை தமிழ் சிங்கள தலைமைகள் தீண்டக்கூட முடியாது' என்ற வாக்கியத்தினூடு பூடகமாக நீங்கள் சொல்லவருவது எதை? ராஜபக்சேவாக இருந்தாலும் சரி பிரபாகரனாக இருந்தாலும் சரி சேகுவேராவுக்கு கிட்டவாக வரமுடியாது என்பதுதானே? பிரபாகரனை கர்ணனை விடவும் அதிகமாக விமர்சிக்கிறவராக நீங்கள் இருக்கிறீர்களே? இது வரலாற்றை சமநிலையுடன் பழகத் தொடங்கிய ஐ.பி.சிக்கு பிந்தியகாலத்தைய விமர்சனம் தானா? மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரையும் அரச ஆதரவாளர்கள் என்ற ஒரே கூட்டுக்குள் அடைத்துக்கொள்கிற நீங்கள், விடுதலைப்புலிகளைப் பார்த்து 'ம்' என்கிறவர்களைக் கூட கூட்டுக்குள் போட்டு, கூட்டில் இடநெருக்கடி மிகுந்து கிடக்கிறது. இதில் நீங்கள் வேறு பிரபாகரனை இவ்வளவு காட்டமாக விமர்சிக்கிறீர்கள். நீங்களாகவே கூட்டைத் திறந்து உள்ளே வருகிறீர்களா?

உங்களுக்கும் புலிகள் மீது சில விமர்சனங்கள் இருப்பதாக, அல்லது வைக்கப்படும் விமர்சனங்களில் உடன்பாடிருப்பதாக, கட்டுரை வாசிக்கிறவனாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படியானால் உங்களுக்கிருக்கிற கருத்துக்களுக்கு என்ன பெயர்? அதற்குப் பெயர் மாற்றுக் கருத்தென்றால், நீங்கள் அரச ஆதரவாளரா? இப்படியிருக்க, நீங்கள் கர்ணன் குறித்து வைக்கின்ற விமர்சனம் எப்படியிருக்கின்றதெனில், 'புலிகள் மீது எனக்கும் விமர்சனம் உண்டு. ஆனாலும் யோ.கர்ணன் புலிகளை விமர்சிக்க முடியாது.' ஏன் முடியாது? 'ஆதவன் தீட்சண்யாவும், தமிழ்ச்செல்வனும் யோ.கர்ணனை வாசித்திருக்கின்றனர். அவர்களோடு எனக்கு பரம்பரைப் பகை. அதனால் யோ.கர்ணன் தமிழர்களின் எதிரி.' இப்படித்தான் உங்கள் கட்டுரையை விளங்கிக் கொள்ள முடிகிறது யமுனா. நீங்கள் விமர்சிக்கலாம், உங்களுக்கு மாற்றுக் கருத்திருக்கலாம். ஆனால் யார் யாருடைய புத்தகத்தையெல்லாம் ஆதவன் தீட்சண்யாவும், தமிழ்ச்செல்வனும் வாசித்திருக்கிறார்களோ அல்லது யார் யாருடைய புத்தகத்திற்கெல்லாம் அவர்கள் விமர்சனம் எழுதியிருக்கிறார்களோ, அந்த எழுத்தாளர்கள் பிரபாகரனையோ அல்லது புலிகளையோ விமர்சிக்க முடியாது. அப்படித்தானா யமுனா ராஜேந்திரன்?

பகுதி உண்மைகள் தொடர்பில் நீங்கள் நிறையக் கவலைப்படுகிறீர்கள். ஏன் கர்ணன் பகுதி உண்மைகளை எழுதுகிறார், மிகுதி உண்மையையும் எழுத வேண்டியதுதானே என்று சர்வசாதாரணமாக கேட்கிறீர்கள். வரலாற்றை சமநிலையுடன் பயில நினைக்கும் நீங்கள், கர்ணன் சொல்லாததாக நீங்கள் சொல்லும் மிகுதி உண்மைகளை (அரச தரப்பு பிழைகளை மட்டும்) பேசுவோரிடம் என்றைக்காவது அவர்கள் சொல்லாமல் விட்ட மிகுதி உண்மைகள் தொடர்பில் கேள்வியெழுப்பியதுண்டா? அல்லது வரலாற்றை சமநிலையுடன் பயில்வதென்பதை நிபந்தனைகளுக்குட்பட்டுத்தான் பாவித்துக்கொண்டிருக்கிறீர்களா? உண்மையில், கர்ணன் விடுதலைப் புலிகளின் இருண்ட பக்கத்தை மட்டும் பேசுபவரல்ல என்பதை கர்ணனுடைய கதைகள் குறித்த உங்களுடைய வகைப்பாடுகளின் வழியே நிறுவ முடியும். புலிகளின் பெயர்களை வெளிப்படையாகச் சொன்ன மாதிரி, ஏன் தாடிக்காரர்களின் பெயர்களை பகிரங்கமாகச் சொல்லவில்லை? கர்ணன் புலிகளின் ஆளுகைக்குள் இருந்தபோது எப்படி அவர்களின் பெயர்களைச் சொல்ல முடியாதோ, அதே போலத்தான் இப்போதும் அவர் இருப்பது தாடிக்காரர்களின் ஆளுகைப் பகுதிக்குள்.

விடுதலைப்புலிகள் வெளியாட்களான உங்களுக்குத் தான் போராடும் அமைப்பு (புலம் பெயர் தமிழர்களையும் சேர்த்தே சொல்கிறேன்). ஆனால் எங்களுக்கு அவர்கள்தான் அரசு. அதாவது அதிகார மையம். தமக்கெதிராக எதையும் பேசவிடாத, இயங்கவிடாத ஒரு அரசு. நிதி, நீதி, நிர்வாகம், அரசியல் இப்படி அரசு கொண்டிருக்கக்கூடிய அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு, சோலை வரி தொடக்கம் சுங்க வரி வரைக்குமான அத்தனை வரிகளையும் எங்களிடமிருந்து வசூலித்த அரசு அது. இன்னும் சொல்லப் போனால், அரைமணிநேரம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் நேர வித்தியாசம் கூட இருந்தது. உண்மையில் எல்லா மக்களையும் விட அதிகச் சுமையுடைய மக்களாய் நாமிருந்தோம். இரண்டு அரசுகளுக்கு நாங்கள் வரி செலுத்திக் கொண்டிருந்தோம். ஒரு அரசுக்கெதிராய் விடுதலைப்புலிகளோடு நின்று தீர்க்கமாய் போராடியிருக்கிறோம். அதே சமயத்தில் அவர்களுடைய அதிகாரபோதையின் ஆட்டங்களை தேசத்தின் பெயரால் சகித்திருக்கிறோம். களத்தில் குருதி சிந்தியிருக்கிறோம். மரணம் துரத்தத் துரத்த ஓடியிருக்கிறோம்.

எங்களிடம் யாராலும் புறந்தள்ள முடியாத கடந்த காலம் ஒன்றுண்டு. அந்தக் கடந்தகாலத்தின் அனுபவங்களை எங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்த பொழுதில் வெளிக்கொண்டு வருகிறோம். எல்லா உண்மைகளையும் தெரிந்து வைத்துக்கொண்டு, வன்னிக்கு வெளியில் நின்று, உங்களைப் போன்றவர்கள் சனங்களுக்குச் சொன்ன 'பகுதி உண்மை'களைப் போலல்ல எங்களிடமிருந்து வரும் 'பகுதி உண்மைகள்'. ஒரு காலத்தில் நீங்கள் சொல்லி வந்த பகுதி உண்மைகளே முழுமையானவை என்று நாங்கள் தீவிரமாக நம்பிக்கொண்டுமிருந்தோம். ஆனால் வரலாறு ஒரு மாயக்கண்ணாடியல்ல, வனப்பும் எழிலுமாய் சூனியக்காரர்களை எந்நேரமும் பிரதிபலிப்பதற்கு. எங்களிடமிருக்கும் மெய்யை வரலாற்றின் கண்ணாடியில் பிரதிபலிப்பதற்காக எங்களுடைய குருதியே சிந்தப்பட்டிருக்கிறது. நாங்களே அதற்காய் விலைகொடுத்தோம்.

எங்களை ஆண்ட அதிகாரத்திற்கெதிராகவே அல்லது அதைக்குறித்த விமர்சனமாய் வருகிற எள்ளலே கர்ணனிடமிருப்பது. நீங்கள் சொல்வது போல அது பேரினவாதத்தின் பக்கமிருந்து அதிகாரத்திலிருந்து வீழ்ந்தவரை நோக்கிச் செய்யப்படுகின்ற எள்ளலல்ல. இயலாமையின், ஏமாற்றத்தின், வீணாகச் சிந்தப்பட்ட அல்லது சிந்த வைக்கப்பட்ட குருதியின், இழந்துபோன கடந்த காலத்தின் மீது வைக்கப்படுகின்ற எள்ளல். நீங்கள் சொல்வது போன்ற அதிகாரம் மீதான எள்ளலல்ல. கர்ணனிடமிருந்திருப்பின் அவர் இரண்டாவது தலைவர் கதையையோ, ஆதிரையின் நாற்பது ஆமிக்காரர்களும் கதையையோ எழுதியிருக்கவே மாட்டார். உங்கள் கேள்விஞானத்தால் கண்டடைய முடியாதவற்றை எதிர்த் தரப்பிற்குத் தள்ளிவிட்டு உங்களுடைய நடுநிலை பயிலும் பாத்திரத்திற்குக் குந்தகம் வராத வகையில் தப்பிக்க நினைக்கிறீர்கள்.

எந்தக் குற்றவுணர்முமின்றி நீங்கள் கையில் கற்களோடு நிற்கிறீர்கள். எந்த சங்கடமுமின்றி உங்களை நீங்களே நீதிபதியாக நியமித்துக் கொள்கிறீர்கள். இன விடுதலைக்காக உண்டியலில் காசு போடுகிறவர்கள் காசு போடலாம், தோசை சுட்டுக் கொடுக்கிறவர்கள் தோசை சுட்டுக் கொடுக்கலாம். உதிரம் சிந்துகிறவர்கள் உதிரம் சிந்தலாம் என்று வந்தபோது, உண்டியலுக்குக் கிட்டச் சில்லைறைகளோடும். தோசைக்கரண்டியோடும் ஓடிப்போய் முண்டியடித்தபடி நின்ற மிகப்பெரிய கூட்டம், (இதில் நான் சாகசத்தை வேடிக்கை பார்க்கக் காத்திருந்த தொப்புள் கொடிகளைச் சேர்க்கவில்லை) உதிரம் சிந்தியவர்களை எந்தச் கூச்சமும் இன்றி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் தங்கள் குற்றவுணர்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கான வழியாகவே இதனைப் பின்பற்றுகிறார்கள் என்பதே உண்மை.

நிலாந்தன் மற்றும் கருணாகரன் குறித்து யமுனா ராஜேந்திரன் வைத்திருக்கின்ற விமர்சனங்களும் அபத்தமானவையே. ஆனால் யமுனா ராஜேந்திரன் வைத்திருக்கிற விமர்சனங்கள் மீதான தத்தமது அபிப்பிராயங்களை சமூக அசைவியக்கத்தில் அக்கறை கொண்டவர்கள் என்ற வகையிலும், தங்களுடைய மௌனத்தின் விலையை ஏற்கனவே கொடுத்தவர்கள் என்ற வகையிலும் நிச்சயமாக நிலாந்தனும் கருணாகரனும் பதிவு செய்யவேண்டும் என்று நான் வேண்டுகோள் வைக்கிறேன்.

யமுனா ராஜேந்திரன், நீங்கள் வாசிப்பினாலும், கேள்விப்பட்டமையினாலும், பார்த்தவைகளினாலும் உங்களுக்கிருக்கின்ற கேள்வி ஞானத்தை வைத்துக்கொண்டு, அனுபவத்திலிருந்து வரும் சொற்களை மறுக்கிறீர்கள். உங்களுடைய கேள்வி ஞானம் தன் உடலோடு குண்டைக் கட்டி வெடிக்க வைக்கிற போராளி ஒருவன், அதற்கு முன்பாக குப்பியைக் கடித்து, பின் குண்டை உடலோடு கட்டி வெடிக்க வைத்தான் என்கிற இன்னுமொரு கேள்விஞானியிடமிருந்து வரும் புழுகு வார்த்தைகளை இருண்மையிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் சத்திய வசனமாகப் பிரகடனம் செய்ய உதவுமேயன்றி, மெய்யான அனுபவத்தின் காயங்களை, அதன் வலியையும் உங்களுடைய கேள்விஞானத்தால் கண்டடைய முடியாது என்பதே மெய்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=9&contentid=5126cfda-f788-431a-b534-0195b96262b0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=6]பங்காளன் அல்ல; பங்கேற்பாளன்[/size]

யமுனா ராஜேந்திரன்

'மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் கடந்த முப்பதாண்டு ஈழவரலாற்றின் பங்கேற்பாளனாக' எனும் இந்த வரியை மிகுந்த யோசனையின் பின் எழுதினேன். இப்போது நான் இதனை எழுதியதன் அர்த்தத்தில் உறுதியாக இருக்கிறேன். சீமான் போல நான் ஈழ வரலாற்றில் 'பங்கு' கோருவதாக அகிலன் எழுதியிருக்கிறார். எனது கட்டுரையை அகிலன் ஒழுங்காக வாசிக்கவில்லை என்பதற்கு இது ஒரு சான்று. பங்காளன் அல்ல அகிலன், பங்கேற்பாளன். அதுவும் 'மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான' பங்கேற்பாளன். பங்காளன் இயல்பிலேயே பிரச்சினைக்குள்ளான அமைப்பினுள் இருப்பவன். அவனது விருப்பு-விருப்பமின்மையை மீறி அதனுள் வாழ விதிக்கப்பட்டவன் அவன். உதிரம் சிந்துபவனாக, இடையில் சிக்குப்பட்டு மரிப்பவனாக, அரசபடையின் கையாளாக, வன்பாலுறுவுக்கு உட்படும் பெண்ணாக பாத்திரம் வகித்தே தீரவேண்டியவர் இவர். நான் இப்படிப்பட்ட பங்காளன் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

பங்கேற்பது என்பது சுயவிருப்பில் ஒன்றில் ஈடுபடுத்திக்கொள்வது. இதனை ஆதரவாளனின், தோழனின் பாத்திரம் எனப் புரிந்திருக்கிறேன். நான் பங்காளன் இல்லை. நான் பழகி, அறிந்து, சில பொழுதுகளேனும் என்னோடு வாழ்ந்தவர் என் கண்ணெதிரில் மரிக்கும்போது விடுப்புப் பார்க்கிற பார்வையாளனும் இல்லை நான். பங்கேற்பாளன். இதனை அகிலன் மட்டுமல்ல, 'அனுபவத்துக்கு ஏகத்துவம் கோருகிற' எவரும் என்னிடம் இருந்து பறித்துவிட முடியாது. 1983 முதல் எனது சொந்த வாழ்வு ஈழவிடுதலைப் போராட்டத்தின் பகுதியாகத்தான் இருக்கிறது. அது எனது தனிப்பட்ட வாழ்வையும் மாற்றியமைத்திருக்கிறது. இந்தப் பங்கேற்பாளன் பங்கு கேட்பவனாக மாறி, யோ.கர்ணன் அல்லது அகிலன் வைத்திருக்கும் பீடத்தை எடுத்துக் கொள்வதற்காக போட்டி போடுவதாக எவரும் அச்சப்படத்தேவையில்லை.

அகிலனின் முதல் வாக்கியத்தைப் படித்தவுடன் ஒரு ஐந்துவயதுப் பாலகன் தந்தையின் விரல்பிடித்தபடி கைசூப்பிக் கொண்டு தொறான்ரோ நகர மையத்தில் போகவரும் வாகனங்களைப் பராக்குப் பார்க்கும் காட்சிதான் எனக்கு ஞாபகம் வந்தது. நான் பிரதி சார்ந்து தர்க்கபூர்வமாக எழுப்பியிருக்கும் கேள்விகளுக்குப் பதிலாக அனுமானங்களின் அடிப்படையில் என்னைச் சாதுர்யமாகக் குற்றக்கூண்டில் ஏற்றிவிட்டு பெருமிதப்படுகிறார் அகிலன். அவரது வேண்டுகோளின்படி யோ.கர்ணன், நிலாந்தன், கருணாகரன் போன்றவர்களையும் கைபிடித்து அழைத்துக்கொண்டு அகிலன் பொங்குதமிழுக்கு வரவேண்டும். அவரது நண்பர் தன் சொந்த அறைக்குள்ளிருந்து புறுபுறுக்கிற மாதிரி முகநூலில் குய்யோ முறையோ என்று பொங்குதமிழை 'வாழ்த்தி' அவதூறுக் கூப்பாடு போடுவதை நிறுத்திக் கொள்ளவும் அவர் கோர வேண்டும். தன் கட்டுரையைப் போடுகிற வரைக்கும் சுதந்திர ஊடகம், தன்னை நியாயமாக விமர்சனத்துக்கு உட்படுத்தினால் அது அவதூறு ஊடகம் என்று பிலாக்கனம் பாடுவது அந்த 'எள்ளல்' கடவுளுக்குத்தான் வெளிச்சம் அகிலன்.

அகிலனைக் குழந்தை என்று சொன்னேன். 'சமீபகாலமாக சிற்றிதழ்களையும் இணையதளப் பக்கங்களையும் நிரப்பிவரும் யமுனா ராஜேந்திரன்' என்று தனது கட்டுரையைத் துவங்குகிறார் அகிலன். அகிலன் ஒன்று ஐந்து வயதுப் பாலகனாக இருக்க வேண்டும் அல்லது மணிவிழாக் கண்ட குடிமைச் சமூக மூத்த பிரஜையாக இருக்க வேண்டும். 'சமீபம்' என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் அகிலன்? ஒரு நொடி? ஒரு மணிநேரம்? ஒரு நாள்? ஒரு வாரம்? ஒரு மாதம்? ஒரு வருடம்? ஒரு தசாப்தம்? சொற்களைப் பாவிப்பது எவ்வாறு என்பதற்கு முதலில் அகிலன் பயிற்சி பெறவேண்டும். 'விக்கிபீடியா தலைமுறை'யைச் சார்ந்த அகிலனுக்கு அவரது கடந்த காலமே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் துவங்குகிறது. எழுபதுகளிலான எனது பள்ளிப் பருவத்திலிருந்து நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். விக்கிபீடியாவின் தோற்றத்துக்கு முன்பானதுதான் எனது பெரும்பாலுமான புத்தகங்கள். சிற்றிதழ்களுக்கு அதனது ஆசிரியர்கள் கேட்கிற அளவு என்னால் எழுதமுடிவதில்லை. 'சமீப' காலத்தில்தான் எழுத்துக்கூட்டிப் படிக்கத்துவங்கியிருக்கிற குழந்தைபோலவே எனக்கு அகிலன் தென்படுகிறார். இந்த ஒன்றரை ஆண்டுகளில் இணையத்தில் நான் தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் எழுதக் காரணம், எனக்கு எழுத விஷயங்கள் இருக்கின்றன. யதேச்சையாக எனது ஊதியத்துக்குரிய வாழ்வின் பகுதியாகவும் அது அமைந்துவிட்டிருக்கிறது என்பதுதான். சிறுபத்திரிக்கைகள் என்னிடம் கேட்டுத்தான் நான் எழுதுகிறேனேயல்லாது அவை எதனையும் நிரப்ப வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் எழுதுகிற பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் அந்த அவசியம் இல்லை. இன்னும் சில பத்திரிக்கைகளுக்கும் சில மாற்றுக் கருத்து மாணிக்கங்களுக்கும் அவர்கள் கேட்டாலும் நான் எழுதப் போவது இல்லை. அவர்கள் என்னிடம் கேட்கமாட்டார்கள் என்பதுவும் எனக்குத்தெரியும். இதுதான் நிஜம். தனது வாழ்நாளில் ஐந்து கட்டுரைகள்தான் எழுதியிருக்கிற அகிலன் அடக்கமாகப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம். அடக்கம் அமரருள் உய்க்கும் அகிலன்.

'அனுபவத்தின் காயங்களைக் கேள்வி ஞானத்தால் கண்டடைய முடியாது' என்பதுதான் அகிலனின் கட்டுரையின் பிரதான பேசுபொருள். நான் அப்படி ஏதேனும் எனது கட்டுரையில் கோரிக் கொண்டிருக்கிறேனா என்ன? 'அனுபவத்தின் காயங்களைக் கேள்வி ஞானத்தால் கண்டடைய முடியாது' என்பது ஒரு இருத்தலியல் நிலை. இது யோ.கர்ணனுக்கும், அகிலனுக்கும், யமுனா ராஜேந்திரனுக்கும், கருணாகரனுக்கும், நிலாந்தனுக்கும், இந்தப் பரந்த பூமியில் வாழ்கிற அல்லது நாமறிந்திராத வகையில் இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்கிற எந்த ஜீவராசிக்கும் பொருந்தும். பிரச்சினை இந்த அனுபவம் எவ்வாறு பிரக்ஞையாகவும், பகிர்தலாகவும், மனிதர்களுக்கு இடையிலான ஊடாட்டமாகவும் மாறுகிறது என்பதுதான். இவ்வகையில் ஒரு சமூகத்தின் - 'இலட்சோப இலட்சம் தன்னிலைகளின்- அனுபவத்திற்குப் பதிலியாக' எவ்வாறு ஒரு 'தனித்த தன்னிலையின் அனுபவம் ஆக முடியும்?' என்பதுதான் எனது கேள்வி. ஒரு தன்னிலையின் அனுபவம் எவ்வாறு இலட்சோப இலட்சம் தன்னிலைகளது அனுபவங்களை தனது 'ஏகத்துவப் பிரதேசமாக'க் கோரிக்கொள்ள முடியும்? என்பதுதான் எனது கேள்வி. யோ.கர்ணனின் கதைகளை முன்வைத்து கருணாகரன், நிலாந்தன், அகிலன் போன்றவர்கள் அவ்வாறுதான் கோரிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சினை அங்குதான் துவங்குகிறது.

ஒரு தன்னிலையின் அனுபவத்தை பிறிதொரு தன்னிலை ஒரு போதும் கொண்டிருக்க முடியாது. அப்படிப் பாசாங்கு செய்யவும் முடியாது. ஒருவரது அனுபவம் பிறிதொருவருக்கு மனம்சார்ந்த உணர்தலாக, பிரக்ஞையாக, பகிர்தலாக மட்டுமே கடத்தப்பட முடியும். மனம்சார்ந்த உணர்தல் மற்றும் பிரக்ஞை என்பதனை வரலாற்று அனுபவம், அதன்வழி உருவாகும் கூட்டுமனநிலை என நான் இங்கு அர்த்தப்படுத்துகிறேன். இந்தக் கூட்டுப் பிரக்ஞைதான் அரசியல் பிரக்ஞையாகத் தார்மீக மனநிலையாக மக்கள் கூட்டத்தினிடம் செயல்படுகிறது. இரு தனிமனிதருக்கு இடையிலான உறவாக, இந்த அனுபவம் எவ்வாறு உணர்தலாக உருவாகிறது? மகப்பேறு என்பது பெண்ணுக்கு உதிரப்போக்கும் நிணமும் வலியும் கொண்டது. இதனை ஒரு போதும் ஒரு ஆணினால் அனுபவம் கொள்ள முடியாது. இது ஒரு இருத்தலியல் நிலை. இதனை ஒரு ஆண் எவ்வாறு கடந்து போதல் முடியும்? தனது சகஜீவியின் வலியை தன்னுணர்வாக ஒருவர் மாற்றிக்கொள்ள முடியும். அது ஒரு போதும் அனுபவத்திற்கு ஈடானது அல்ல என்றாலும் 'அடுத்த' மனிதனுக்கு அதுவே சாத்தியம். இதிலிருந்து அந்த சகஜீவி அந்தப் பெண்ணை எவ்வாறு அணுகுகிறான் என்பதுதான் முக்கியம். தாய்மையை அவன் போற்றுகிறான். அவளோடு அவளது வலியைப் பகிர்ந்துகொள்ள வேறு வேறு வகைகளில் அவன் முனைகிறான். பெண்களின் பாலான ஆண்களின் இந்தத் தன்னிலைப் பகிர்வு ஆண்களின் கூட்டுப் பிரக்ஞையாக ஆகும்போது அது சமூகச்செயல்பாடாக வடிவமெடுக்கிறது. பேருந்தில் ஒரு கர்ப்பணிப் பெண் இருக்கையில்லாமல் நிற்கும்போது தனது இருக்கையைத் தருகிற மனநிலையைப் பொதுச்சமூகத்துக்கு உருவாக்கிய அறம் இவ்வாறுதான் உருவாகிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவின்போது தமிழக மக்கள் நேரடியாக அந்தக் கொடும் அனுபவத்திற்குள் இருந்திராவிட்டாலும் தமிழகமே அந்தக் கொடுமைக்கு எதிராகப் பொங்கி எழுவது இவ்வாறுதான் நேர்கிறது. இந்தப் பகிர்தல் மட்டுமே மனிதர்களுக்கிடையில் சாத்தியம். இதுதான் அகிலனுக்கும் யோ.கர்ணனுக்கும் எனக்கும் கூடச் சாத்தியம். அனுபவித்தவன் மட்டுமே ஒன்றைக் குறித்துப் பேசமுடியும், எழுதமுடியும் என்றால், ஒரு பெண் போராளியைப் பற்றிப்பேச, ஒரு தற்கொலைப் போராளியைப் பற்றிப்பேச, பிரபாகரனின் மகள் துவாராகாவைப் பற்றிப்பேச 'இவர்களது வாழ்வை வாழ்ந்திராத' அகிலனுக்கும், யோ.கர்ணனுக்கும் உள்ள தகைமை என்ன? பிறரை உங்களது அனுபவத்தை முன்னிறுத்தி ஓரம்கட்ட நினைக்கும் நீங்கள், பிறரது அனுபவங்களுக்கு 'ஏகத்துவம்' கோருவது எப்படிச் சாத்தியம்? அருளர் முதல் சாந்தன், கோவிந்தன் ஈறாக சயந்தன் வரை எல்லோரும் ஈழ அனுபவத்திலிருந்துதான் எழுதுகிறார்கள். இவர்கள் யாரும் ஈழ அனுபவத்தின் முற்றுண்மைகள் எங்களது எழுத்துக்கள் எனக் கோரிக்கொள்வதில்லை. யோ.கர்ணனின் எழுத்துக்கள் ஒரு மக்கள் கூட்டத்தின் - இலட்சோப இலட்சம் தன்னிலைகளின் - பகுதிதானேயொழிய அதுவே முற்றுண்மை இல்லை.

யோ.கர்ணனைத் தமிழகத்தில் தாங்கிப்பிடிக்கும் தமிழ்ச்செல்வனும் ஆதவன் தீட்சண்யாவும், புகலிடத்தில் இன்றைய ஈழம் என்றால் யோ.கர்ணன் கதைகள்தான் என்று தூக்கிப்பிடிக்கும் மாற்றுக் கருத்தாளர்களும் யோ.கர்ணன் கதைகள்தான் 'ஈழம் குறித்த முற்றுண்மை' என்கிறார்கள். பான்கி மூன் அல்லது இனிவரும் மனித உரிமை அறிக்கையைவிட உண்மையானது, மெய்யானது யோ.கர்ணன் கதைகள்தான் என்கிறார்கள். இதனையே நான் கேள்விக்கு உட்படுத்துகிறேன். அகிலன், நீங்கள் குழந்தைத்தனமாக எழுதுகிறீர்கள் என்றேன். தமிழ்ச்செல்வனும் ஆதவன் தீட்சண்யாவும் நீங்கள் சித்தரிக்கிற மாதிரி 'வெறுமனே' தனிமனிதர்களோ அல்லது 'எழுதமட்டுமே தெரிந்த' எழுத்தாளர்கள் மட்டுமோ அல்ல. அவர்கள் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினதும் தொழிற்சங்கவாதிகள். தமிழ்ச்செல்வன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர். ஈழப் போராட்டமும் அது சார்ந்த வரலாறும் எழுத்துக்களும் நிகழ்கால அரசியலின் பகுதியாக இருப்பவை. தமிழக அளவில் அதனை அரசியல் நீக்கம் செய்துவிட்டு நீங்கள் காட்ட நினைப்பது அறிவுப் பாசாங்குத்தனம் என்பதை உங்களது அந்தராத்மா என ஒன்று இருந்தால் அது உங்களுக்குச் சொல்லும்

அகிலனது கட்டுரையினுள் மீதம் விரவியிருக்கும் நக்கல், நையாண்டிகளை நான் உதாசீனப்படுத்திவிட்டு மேற்செல்கிறேன். எனது அனுபவத்தில் இவைகளை எவ்வாறு அணுகவேண்டும் என்பது குறித்த எனது தேர்வு அது. அதுபோலவே யோ.கர்ணனுக்கும், கருணாகரனுக்கும், நிலாந்தனுக்கும் 'பதிலியாக இருந்து' அகிலன் பேசுகிற விஷயங்களும் நான் விரும்புகிற உரையாடலுக்குப் பயனற்றது என்பதால் அதனையும் கடந்துசெல்கிறேன். அவரவர் தமது சொந்தக்குரலில் பேசும்போது அதற்குத்தகப் பேசுவதுதான் உரையாடலின் அறப்பண்பு என கருதுவதால் இம்முறையை நான் கடைப்பிடிக்கிறேன்.

கட்டுரையை அகிலன் நிதானமாகப் படித்திருக்கவில்லை என்றேன். அவசரத்தில் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார் என்று சொல்கிறேன். கட்டுரை எதைப் பேசுகிறது? ஈழ வரலாற்றுப் போக்கில் யோ.கர்ணன் கதைகளின் முக்கியத்துவத்தை அது உறுதி செய்கிறது. விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வரலாறு எழுதுதலுக்கு மாற்றாக அவர்களால் சொல்லப்படாத ஈழவரலாற்றின் பக்கங்களைச் சொல்லியிருக்கிறது என்பதை உறுதிசெய்கிறது. தமிழக மார்க்சிஸ்ட் கட்சியினரும் புகலிட மாற்றுக் கருத்தாளர்களும் கோரிக்கொள்கிற மாதிரி யோ.கர்ணன் கதைகள் ஈழநிலைமை குறித்த முற்றுண்மை அல்ல, உண்மையின் ஒரு பகுதியே எனக் கட்டுரை வலியுறுத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், புகலிட மாற்றுக் கருத்தாளர்களும் யோ.கர்ணன் கதைகளை தமது இருண்மைப் பிரச்சாரத்திற்குப் பாவித்தது யோ.கர்ணன் கதைகளுக்கு நேர்ந்த துரதிருஷ்டம் என்கிறது கட்டுரை. எங்கேயுமே நான் யோ.கர்ணன் கதைகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மறுக்கவில்லை.

யோ.கர்ணன் கதைகளில் அது குறித்த கருணாகரன், நிலாந்தன் மற்றும் அகிலனது மதிப்பீட்டில் எனக்குள்ள பிரச்சினை என்ன? யோ.கர்ணன் கதைகள் ஈழத்து மெய்மை என்று இவர்கள் சொல்கிறார்கள். மெய்மையை இரு வகைகளில் அணுகவேண்டும் என நான் சொல்கிறேன். முதலாவதாக, ஒற்றை மெய்மை என்றோ ஏகத்துவ மெய்மை என்றோ ஒன்று இல்லை என்கிறேன் நான். இரண்டாவதாக, மெய்மைக்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படவேண்டும் என்கிறேன். யோ.கர்ணன் கதைகளில் வெளிப்படும் மெய்மை ஈழ மெய்மையின் பகுதி மெய்மைதான் என்கிறேன் நான். யுத்தக் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட போராளிகள் குறித்த மெய்மை யோ.கர்ணன் கதைகளில் இல்லை. பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்ட்டுக் கொல்லப்பட்ட பெண் போராளிகள் குறித்த மெய்மை யோ. கர்ணன் கதைகளில் இல்லை. இலங்கை அரசினால் மருந்துகள் தராது, பட்டினிபோட்டுக் கொல்லப்பட்ட 40,000 வெகு மக்கள் குறித்த மெய்மை யோ.கர்ணன் கதைகளில் இல்லை என்கிறேன் நான். இந்த மெய்மை குறித்து யோ.கர்ணன் கதைகளைத் தூக்கிப் பிடிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் புகலிட மாற்றுக்கருத்தாளர்களும் பேசவில்லை என்கிறேன் நான்.

துவாரகாவின் தந்தையின் பெயர் பிரபாகரன் கதை வெறும் அதிர்ச்சி மதிப்புக்காக எழுதப்பட்ட மெய்மைக்கான எந்த ஆதாரமும் கொண்டிராத கதை என்கிறேன் நான். இது யோ.கர்ணனைத் தமிழகத்தில் பிரபலப்படுத்திய மிகமுக்கியமான கதை. யோ.கர்ணன் கதையில் பிரபாகரன் அகதியாக அவுஸ்திரேலியா போகிறார். துவாரகா இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகிறார். புதல்வன் சிறுவன் என்பதால் விடுவிக்கப்படுகிறான். இது யோ.கர்ணனின் வரலாற்று அபத்தம் என்கிறேன் நான். இது முற்றிலும் அபத்தக் கற்பனை என்கிறேன் நான். பிரபாகரனது குடும்பத்தினரது மரணம் குறித்த வேறுபட்ட சாத்தியங்களையும், வேறுபட்ட மெய்மைகளையும் ஆதாரங்களாக நான் முன்வைக்கிறேன். மெய்மை குறித்துக் 'குத்துமதிப்பாக'ப் பேசாமல், யோ.கர்ணன் கதைகளின் மெய்மை குறித்த உங்களது கோரல் 'பம்மாத்து' என்று சொல்கிறேன். அகிலனின் எனக்கான பதில் கட்டுரையில் தேடித்தேடிப் பார்க்கிறேன். இது குறித்து ஒரு சொல்லையும் காணோம். பொத்தாம் பொதுவாக மெய்மையைப்பற்றி எனக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார் அகிலன். தான் பதிப்பித்த இரு தொகுப்புக்களில் இல்லாத கதையின் மெய்மைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும் எனச் சாதுரியமாகக் கேட்கும் அகிலன், மறுபடியும் பொத்தாம் பொதுவாக யோ.கர்ணன் கதைகளின் மெய்மை குறித்து வலியுறுத்தத் துவங்கிவிடுகிறார். மெய்மையைக் கற்பனைகளில் அல்ல ஆதாரங்களில் முன்வைக்க அகிலன் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

புலியெதிர்ப்பு இலக்கியம் என்பது விற்றுத் தீர்கிறது. பெரிய தொழிற்சாலை. கோடியில் புரளும் வர்த்தகம் என்கிற ரீதியில் நான் எழுதியிருப்பதாக வருத்தமுற்று நிரம்பவும் ஆவேசப்பட்டு எழுதியிருக்கிறார் அகிலன். நான் எழுதியது இவ்வாறு : இன்று புலி எதிர்ப்பு என்பது ஒரு மிகப்பெரும் இதழியல், இலக்கியத் தொழிற்சாலையாக இருக்கிறது. தமிழக-இந்திய-சர்வதேச ஊடகப் பரப்பில் புலியெதிர்ப்பு என்பது மிகப்பெரும் வியாபாரமாக இருக்கிறது வியாபாரம் என்பதனை வெறுமனே பொருள்சார்ந்த அர்த்தத்தில் மட்டுமே புரிந்து கொள்வதால் வரும் ஆவேசம் அகிலனுடையது. பொருளாதார ரீதியில் பதிப்பாளனாக அவரது ஆவேசத்திற்கு நியாயமும் இருக்கிறது. நான் எழுதியது பொருளதார சந்தை எனும் அர்த்தத்தில் மட்டும் இல்லை. உலகெங்கிலும் இன்று பயங்கரவாதத்திற்கு எதிரான எழுத்து, விடுதலை இயக்கங்களின் இருண்மை குறித்த எழுத்து என்பது இதழியல்-இலக்கியத் தொழிற்சாலையாகத்தான் இருக்கிறது. இது கருத்தியல் மேலாண்மைக்கான உற்பத்தித் தொழிற்சாலை. இன்று இவ்வகை எழுத்துக்களுக்கு கருத்தியல் சந்தை மதிப்பும் விற்பனை மதிப்பும் இருக்கிறது. இதைப்போலத்தான் தமிழக-இந்தியச் சூழலில் கருத்தியல் மேலாண்மைக்கான தொழிற்சாலையாகத்தான் தமிழக-இந்திய ஊடகங்கள் செயல்படுகின்றன. இன்று விடுதலைப் புலிகள் குறித்தும், ஈழ விடுதலையின் இருண்மை குறித்து எழுதுவதற்கும் ஒரு சந்தை மதிப்பு இருக்கவே செய்கிறது. இது குறித்த எழுத்துக்களைப் பதிப்பிப்பதில் இன்று இந்திய-இலங்கை ஊடகங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதனை அவை இரு கைகூப்பி வரவேற்கும். ஏனெனில் அவர்களைப் பொறுத்து அனைத்துப் போராட்டங்களுமே பயங்கரவாதம்தான். இது வெறுமனே பொருளாதார ரீதியிலாக மட்டும் மதிப்பிடக்கூடியதல்ல, மாறாக அரசியல் ரீதியிலும் மதிப்பிடக்கூடியதாகும்.

பிறிதொரு பிரச்சினை சே குவேராவுக்கும் சிங்கள-தமிழ் ஆயுத விடுதலை இயக்கங்களுக்கும் உள்ள உறவு தொடர்பான எனது அவதானம் குறித்த அகிலனது புரிதல். அகிலன், எதனையும் நீங்கள் அதனது ஆரம்பநிலைப்பட்ட அடிப்படையில்தான் புரிந்துகொள்வீர்களா? இலங்கை நிலைமையில் ராஜபக்சேவுக்கும் சே குவேராவுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவரை இதற்குள் கொண்டு வந்து குழப்பிக் கொள்கிறீர்கள்? ரோகண விஜேவீராவின் ஜேவிபி சேகுவேரா இயக்கம் எனவே அழைக்கப்பட்டது. தமிழ் ஆயுதப் போராட்டத் தலைமைகள் அனைத்தும் சே குவேரா குறித்து நூல்கள் வெளியிட்டன. தமது இதழ்களில் சே குவேரா குறித்துக் கட்டுரைகளை வெளியிட்டன. சே குவேராவின் சோசலிச மனிதன் குறித்த கட்டுரையை வாசியுங்கள். நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்களுக்குப் புரியவரும். நான் தமிழ்த் தலைமைகள் என்று சொல்கிறேனேயல்லாது விடுதலைப் புலிகள் என்றோ, பிரபாகரன் என்றோ தனித்துக் குறிப்பிடவேயில்லை. அகிலன், எதற்கும் எதிர்வினை செய்வதற்கு முன்னால் தயவுசெய்து பிரதியை நிதானமாக வாசிக்கப் பழகுங்கள். பிற்பாடு எழுதத் துவங்குங்கள்.

'யமுனா ராஜேந்திரனை குறை சொல்வது ஒரு புறமிருக்க அவரை எதையாவது எழுதிக் கொடுங்கள் சன்மானம் தருகிறோம் என ஆசை காட்டி, அவரை சன்மானத்திற்காக எதையாவது எழுத வைக்கும் இணைய வியாபாரிகள் ஊடகங்களில் அவதூறையும் அசிங்கத்தையுமே வாரி வழங்கும் ஈழப் பிழைப்பாளர்களின் நடவடிக்கைகளே முதலில் கண்டிக்கப் பட வேண்டும். 30 வருடங்களாக கட்டியமைக்கப்பட்ட பிம்பங்களில் தாம் குளிர் காய்வதை (புலத்தில் மிக costlyயான விஷயம்) தொடர்ந்து பிழைப்பு நடத்துவதை கர்ணன் சிதிலமாக்கி விடுவாரோ என்ற பயத்தில் அலறுகிறார்கள். அவர் கதைகளில் குறை கண்டுபிடிப்பதுடன் நின்று விடாமல் வழக்கமாக அவர்கள் செய்யும் அரசாங்கத்தின் ஆள் பிரச்சாரத்தையும் தமது இணையங்களிலும் பத்திரிகைகளிலும் முடுக்கி விடுகிறார்கள். 'துவாரகாவின் தந்தை பிரபாகரன்' என்ற கதையை விட அதன் தலைப்பே அவர்களை இன்னும் பைத்தியம் மித மிஞ்சி அலற வைக்கிறது. கர்ணன் மீது எப்படியும் வஞ்சம் தீர்க்க முனையும் வெறி அவர்களுடைய 30 வருடப் பிழைப்பு முறை தொடர்பானது. முள்ளிவாய்க்காலின் எதிர்பாராத சடுதியான முடிவு இவர்களின் பிழைப்பில் ஏற்படுத்திய திடீர் தாக்கத்தை சரி செய்வதற்கான மாற்று வழிகளை காண முடியாமல் மூச்சுத் திணறுவதன் வெளிப்பாடாக வருமானத்தை தொடர்ந்து நிலை நிறுத்த பெரும் கம்பனிகள் பின்பற்றும் உத்தியையே இவர்களும் கையாள்கிறார்கள். ஒரு சிறு தொகையை யமுனாவுக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் அவர்கள் கிள்ளித் தெளிப்பதன் மூலம் இது சாத்தியப்படுமா என மூளையைக் கசக்குகிறார்கள்.'

இதை எழுதியவர் இன்றும் எனது 'நம்பிக்கைக்குரிய' நண்பராக 'நான்' கருதிக்கொண்டிருப்பவர். இந்தப் பின்னூட்டம் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது எனக்குக் கோபமோ ஆத்திரமோ வரவில்லை. சுய ஆற்றாமையே என்னைச் சூழ்ந்தது. எனது நண்பரிடமிருந்து இதனை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என்னைச் சுற்றிய உலகம் சுக்கல் சுக்கலாகிச் சரிவது போல இருந்தது. அதன் காரணங்களை அவர் அறிவார் என்பதால் அதனை இங்கு எனது விவாதத்தின் அங்கமாக நான் கருதவில்லை.

அகிலன், இந்தப் பின்னூட்டம் இப்போது பொங்குதமிழில் நீங்கள் எனக்குப் பதிலாக எழுதிய கட்டுரைக்கான பின்னூட்டம். உங்களது கட்டுரையை யோ.கர்ணன் தனது முகப்புத்தகத்தில் மறுபிரசுரம் செய்தபோது அவர் அனுமதித்த பின்னூட்டம் இது. இந்தப் பின்னூட்டம் குறித்து நீங்களும், யோ.கர்ணனுக்காக அவரது கதைகளின் மெய்மைக்காக அது முன்வைக்கும் மதிப்பீடுகளுக்காக வாதிடும் நீங்கள் அனைவருமே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். இதே பொங்குதமிழில் நீங்கள் இப்போது எழுதியிருக்கிறீர்கள். யோ.கர்ணன் எழுதியிருக்கிறார். கருணாகரன் எழுதியிருக்கிறார். நிலாந்தன் எழுதியிருக்கிறார். உங்களது நண்பர் யோ.கர்ணனின் கருத்து ஒப்புதலின்படி இந்தக் கருத்து குறித்த 'மெய்மையை' நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் அனைவரும் பொங்குதமிழ் 'கிள்ளிப்போட்ட தொகைக்காகத்தான்' எழுதினீர்களா? அல்லது பொங்குதமிழ் 'கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து' உங்களது கட்டுரையையும் யோ.கர்ணனதும் பிற இருவரதும் கட்டுரையை வெளியிட்டதா? மனசாட்சியுடன் நீங்கள் அனைவருமே பதில் சொல்ல வேண்டிய கேள்வி இது.

யோ.கர்ணன், கருணாகரன் போலவே அரசு சார்பாளர்களை நோக்கி நகரத் துவங்கிவிட்டார் என நான் எழுதுவது ஒரு அரசியல் மதிப்பீடு. இலங்கை அரசில் அமைச்சர்களாக இருக்கிறவர்களுடன் தொடர்பு கொண்ட, அவர்களுக்காக வெளிப்படையாகச் செயல்டுபவர்கள்தான் புகலிட நாடுகளில் கருணாகரனதும் யோ.கர்ணனதும் எழுத்துக்களை 'ஈழத்தின் இன்றைய முற்றுண்மை' என உயர்த்திப் பிடிப்பவர்கள். முள்ளிவாய்க்காலுக்கு முன்புவரை இலங்கை ஜனநாயகத்திற்கெனவே அமைப்பைக் கொண்டிருந்து, முள்ளிவாய்க்கால் முடிவுடன் இலங்கையில் ஜனநாயகம் வந்துவிட்டது எனச் சொல்பவர்கள் இவர்கள்தான். கடந்த முப்பதாண்டுகளாக ஈழவிடுதலைப் போராட்டத்தின் நியாயத்தினை மறுத்துவந்தவர்கள்தான் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். அதனது எழுத்துப் பிரதிநிதிகள்தான் ஆதவன் தீட்சண்யாவும் தமிழ்ச்செல்வனும். சிங்கள இனவாதிகளான ஜேவியின் நண்பர்கள் இவர்கள். இடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுக்கு அவர்களை அனுமதிக்க மறுத்தவர்கள், இப்போது தமது இளைஞர் அமைப்பு மாநாட்டில் அவர்களைக் கலந்துகொள்ளச் செய்திருக்கிறார்கள். இவை எனது மதிப்பீடுகளுக்கான நடைமுறை அரசியல் ஆதாரங்கள். இவை எனது அரசியல் மதிப்பீடுகள். இதனை நீங்கள் மறுப்பதானால் எதிர் ஆதாரங்களை முன்வைத்து அது அப்படி இல்லை என மறுக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு யோ. கர்ணன் இதனை எப்படி அணுகுகிறார் : 'இதற்கு எள்ளலாகவும் பதில் சொல்ல மாட்டேன்; அறிவார்ந்தும் பதில் சொல்ல மாட்டேன்; மூன்றாவது வழியில் பதில் சொல்வேன்' எனும் பின்னூட்டத்தைத் தனது முகப்புத்தகத்தில் அனுமதிக்கிறார். அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் எதிராகப் போராடுவதாகவும், மெய்மைக்கும் மனிதஉரிமைக்கும் போராடுவதாகவும் நீங்கள் அனைவருமே கோரிக்கொள்கிறீர்கள். மேலே குறிப்பிட்ட யோ.கர்ணனது முகப்புத்தகத்திலுள்ள இந்த இரு பின்னூட்டங்களும் அவதூறு மற்றும் அச்சுறுத்தல் அல்லாமல் வேறென்ன?

இறுதியாக, அனுமானங்களை மறுத்து தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டேயிருப்பது சோர்வாக இருக்கிறது. யோ.கர்ணன் போலவோ அல்லது அகிலன் தன்னைக் கோரிக் கொள்வது போலவோ நான் எந்த ஈழவிடுதலை இயக்கத்தினுள்ளும் இருக்கவில்லை. அதனது உறுப்பாகவும் இருக்கவில்லை. நான் நம்பிய அரசியலில் இருந்து சார்புநிலைகளையே நான் எடுத்திருக்கிறேன். எழுதுபவன் எனும் அளவில் என்னைக் குறித்து நான் சொல்பவற்றுக்கு எனது எழுத்துக்களே ஆதாரம். அகிலன், யோ.கர்ணன், நிலாந்தன். கருணாகரன் குறித்து நான் முன்வைக்கும் கேள்விகளுக்கு ஆதாரமும் அவர்களது எழுத்துக்கள்தான். நான் பிரதி ஆதாரத்தை முன்வைத்து எழுதுகிறேனேயல்லாது அனுமானங்களை முன்வைத்து அல்ல. நான் ஒரு போதும் இயக்கப் பிரச்சார நோக்கில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அல்லது எதிராக என இருதுருவ நிலைபாட்டிலிருந்து எழுதியது இல்லை. உலக விடுதலைப் போராட்ட அனுபவங்களின் பின்னணியில் இருந்துதான் நான் ஈழ விடுதலைப் போராட்டப் பிரச்சினைகளை அணுகிவருகிறேன்.

சிலருக்கு தமது அனுமானங்களின் அடிப்படையில் எனக்கு முத்திரை குத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஐபிசி, நிருபம், குளோபல் தமிழ் நியூஸ் என வேறுபட்ட தளங்களில் நான் ஊதியத்திற்கென வேலை செய்தாலும் எனது சுயாதீன நிலைபாட்டிலேயே நான் இருந்து வந்திருக்கிறேன். இந்த மூன்று இடங்களிலும் இதனைச் செய் என எவரும் என்னை நிர்ப்பந்தித்தது இல்லை. அதற்கு நான் அடிபணிந்ததும் இல்லை. அகிலனோ அல்லது என் மீது இயக்க முத்திரை குத்துபவர்களோ எனது எழுத்துக்களில் இருந்து அதற்கான ஆதாரங்களை முன்வையுங்கள் எனத் திரும்பத் திரும்பக் கோரி வருகிறேன். எவராலும் அதனை முன்வைக்க முடிவதில்லை. அதனை எவராலும் முன்வைக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும். ஐபிசி யில் நான் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரச்சார வேலையைச் செய்து கொண்டிருக்கவில்லை. இந்திய-தமிழக-ஈழ-உலகத் திரைப்படங்கள் குறித்த நிகழ்ச்சிகளை நான் செய்தேன். தமிழக-ஈழக் கலைஞர்களை, ஆளுமைகளை நேர்காணல் செய்தேன். நிருபம், குளோபல் தமிழ் நியூஸ் போன்றவற்றில் எனது நிலைபாட்டிலிருந்து நான் சுயாதீனமாகக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். வேறுபட்ட அரசியல் நம்பிக்கைகள் கொண்ட சிவரஞ்ஜித், நகுலேந்திரன் எனும் கீரன், நடராஜா குருபரன் போன்றோருக்கு இதற்காக நான் நன்றி சொல்ல வேண்டும். விடுதலைப் புலிகள் இருந்த வரைக்கும் அவர்கள் குறித்துப் பேசஇயலாமல் இருந்ததற்கான காரணங்களை அகிலன் சொல்லும்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. புலிகள் வீழ்ந்த பின்னால் முழுமையாக எதிர்மறையாகப் பேசுவதனைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறேன் நான். இது சமநிலை பிறழ்ந்த செயல்பாடு என்கிறேன் நான். இதே ஆபத்து இன்றைய நிலை குறித்த உங்களது மௌனத்திலும் இருக்கிறது என்கிறேன் நான்.

இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை. மனித உரிமைப் பிரச்சினை இல்லை. இலங்கை சுதந்திர பூமி என உலகுக்கு அறிவிக்கவே நாங்கள் கொழும்பில் எழுத்தாளர் மாநாடு நடத்தி ஊர்வலம் போனோம் என்கிறார் ஒரு எழுத்தாளர். இலங்கை ராணுவம் கைசூப்பும் குழந்தைப் பிள்ளைகள் போன்றது, இலங்கையின் இரண்டு நரகாசுரர்கள் பிரபாகரனும் ரோகண விஜே வீராவும் என்கிறார் பிறிதொரு தமிழ் எழுத்தாளர். இவர்கள் இருவரும் ஆதரித்துப் பங்குபெறும் எழுத்தாளர் மாநாட்டுக்கு ஆதரவாகக் கையொப்பம் இடுகிறார் அகிலன். இந்த எழுத்தாளர் மாநாட்டை ஆதரிக்கும் இன்னொரு எழுத்தாளர், பசில் ராஜபக்சே அவர்கள் கா.சிவத்தம்பி மரணவீட்டிற்கு வந்தார், அவராலும் புதுவை இரத்தினதுரையை விடுவிக்க முடியவில்லை என்கிறார். இதனை இவர் எழுதுகிற சமகாலத்தில் தமிழ்ச் சிறைக் கைதிகள் சிறையினுள்ளேயே அடித்துக் கொல்லப்படுகிறார்கள். இதுபற்றி இவர் எழுதுவது இல்லை. இவர்களது செயல்பாடுகளை தனிநபர்களின் செயல்பாடுகள் என்று பார்ப்பதா அல்லது நல்லெண்ண வகையிலான அப்பாவிகள் இவர்கள் எனப் பார்ப்பதா? இவர்களது செயல்பாடுகளுக்கு எதுவும் அரசியல் பரிமாணம் இல்லை என்றா அகிலன் கருதுகிறார்? இவர்கள் சந்திக்கும் வெளி யதேச்சையாகவா உருவாகிறது? இதனை நான் சுட்டிக்காட்டினால் யோ. கர்ணனுக்குக் கோபம் வருகிறது. இவர்களைக் கூட்டிவைத்து வசவு மழையில் நனைந்து ஆனந்தக் கும்மியடிக்கிறார் அவர். இதுவெல்லாம் யதேச்சையானது என்று அகிலன் எனக்குச் சொல்கிறாரா?

'சேகுவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தோபரின் வீடு' கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்த ஒரு விடயம் குறித்து கட்டுரையாசிரியரினால் அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பு இது. பொருத்தம் கருதி தற்போது வெளியிடுகின்றோம் - ஆசிரியர்

'முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயல்பட்டவர்களுமான கருணாகரன், நிலாந்தன்' எனும் வாக்கியம் பொருள்மயக்கத்தைக் கொண்டிருப்பதாக பொங்குதமிழ் ஆசிரியர் குழுவுக்குக் கருத்துக்கள் வருவதாக அவர்கள் அறிவுறுத்தியதையடுத்து பின்வரும் விளக்கத்தை முன்வைக்கிறேன்:

இவர்கள் இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருக்கவில்லை என்பது எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கருணாகரன் தனது நேர்முகம் ஒன்றிலும் அதனை ஏலவே தெரிவித்திருக்கிறார். கருணாகரனைப் பொறுத்து அந்த அர்த்தத்தில் நான் அந்தச் சொல்லைப் பாவிக்கவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டுக் கழகத்தின் அதிகாரபூர்வ இலக்கிய ஏடாகவே வெளிச்சம் இருந்தது எனக் கருதுகிறேன். அதனது ஆசிரியராக அவர் இருந்தார் என்பதனையே நான் அவ்வாறு குறிப்பிட விரும்பினேன். விடுதலைப் புலிகளின் தேசியத்தை ஏற்காமல் கருணாகரன் வெளிச்சத்திற்கு ஆசிரியராக இருந்திருக்க இயலாது எனும் அடிப்படையிலேயே அந்த வாக்கியம் அமைகிறது.

நிலாந்தனைப் பொறுத்து விடுதலைப் புலிகள் முன்வைத்த தமிழ் தேசியத்தை அவர் ஏற்றிருந்தார் எனும் அளவிலேயே அந்த வாக்கியத்தினுள் அவரை அடையாளப்படுத்தியிருந்தேன். இருவரையும் 'ஒரே பொதுமைக்குள் கொணர்ந்தது' பொருள்மயக்கத்திற்கான காரணமாக அமைந்துவிட்டதற்காக எனது வருத்தத்தைப் பதிவுசெய்கிறேன். சுட்டிக்காட்டிய வாசகர்களுக்கு எனது நன்றி.-

- யமுனா ராஜேந்திரன்.

http://www.pongutham...df-897b7307407e

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்கட்டும்[/size]

த.அகிலன்

'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்' பைபிளிலிருந்து

***

பொங்குதமிழ் இணையத்தில் வெளியான அனுபவங்களின் காயத்தினை கேள்வி ஞானத்தினால் கண்டடைய முடியாது என்னும் என்னுடைய கட்டுரைக்குப் பதிலாக யமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதைப் பதில் கட்டுரையாகப் பார்ப்பதா அல்லது 'சேகுவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தோபரின் வீடு' என்ற தன் முன்னைய கட்டுரையில் யமுனா ராஜேந்திரன் என்னென்ன சொற்களை தான் என்னவிதமான அர்த்தங்களின் பயன்படுத்தினார் என்பதற்கான வழிகாட்டல் குறிப்பாகப் பார்ப்பதா என்றெனக்கு குழப்பமாகவே இருக்கிறது.

எப்போதும் எவரதும் சொற்களுக்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது என்பதை யமுனா ராஜேந்திரன் அறியார் போலும். வயதாவதால் ஏற்பட்ட மறதியாய் இருக்கலாம். சின்னப் பொடியனான எனக்கு அது நினைவில் இருக்கிறது. அவரது கட்டுரையை நான் படித்திருக்கவில்லை என்று குற்றம் சாட்டும் யமுனா ராஜேந்திரன் எனது கட்டுரையில் தலைப்பைத் தவிர வேறெதையும் படித்திருக்க மாட்டார் போல. த.அகிலன் என்ற பெயரைப் பார்த்ததுமே வழக்கமாக எல்லாக் காலாவதியானவர்களுக்கும் வருகிற கோவம் யமுனா ராஜேந்திரனுக்கும் வருகிறது. பொடிப்பயல் என்னைக் கேள்வி கேட்பதா? அந்த மனப்பிரச்சினையை தத்துவார்த்தப் பிரச்சினையாக்கி, சொற்களின் அர்த்தங்களைக் கட்டுரையாக எழுதிமுடித்துவிட்டுத்தான் மூச்சே விட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

யமுனா ராஜேந்திரனின் கட்டுரையைப் படித்ததும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க சிரமப்பட்டபடி, எப்போதோ ஒரு காலத்தில் சண்டியராய் இருந்த அதே நினைப்பில் முறைத்துப் பார்த்தபடி நிற்கிற பென்சன் எடுத்த பிரின்சிப்பலின்ர தோற்றமே கண்முன்னால் வந்தது. அவர் என்னை சின்னப்பொடியன் என்று சொன்னதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. ஏனெனில் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் சின்னப்பெடியன்களின் பாத்திரம் மிகவும் முக்கியமானது. சின்னப் பெடியன்களே காலம் முழுதும் வரலாற்றை முன்னகர்த்துகிறவர்களாக இருக்கிறார்கள், இருப்பார்கள்.

அரசியல் சூழலை விளங்கிக் கொள்வதற்கு நான் ஒரு கதையை எப்போதும் நினைவுகொள்வதுண்டு. யமுனா போன்ற தங்களைத் தத்துவ அறிஞர்களாக் கருதிக்கொண்டு, யார் யாருடைய காசுக்கோ ஜிங் ஜக்.. அடிப்பவர்களைப் பார்த்தால் எனக்குடனே அந்தக் கதைதான் நினைவுக்கு வரும். அதுவும் ஒரு சின்னப் பொடியன் பற்றிய கதைதான். அந்தக் கதையை இங்கே எழுதி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. ஏனெனில் யமுனாவுக்கு கொடுப்பதைப்போல எழுதுவதற்குக் காசு தருவதற்கு எனக்கு யாருமில்லை. நான் வெல்பெயராரும் அடிக்க முடியாது. ஆக கதைச் சுருக்கும்..

உலகத்திலேயெ அழகான ஆடையைத் தயாரிக்கிறோம் என்று அரசனின் காசில் சந்தோசமாயிருந்துவிட்டு இரண்டு நெசவுத் தொழிலாளிகள், அறிவுள்ளவர் கண்களுக்கு மட்டுமே அந்த ஆடை தெரியும் என்று சொல்லி வெறுந்தறியைக் காட்டுவார்கள். யமுனா ராஜேந்திரன் மாதிரி தத்துவஞானிகள், புலவர்கள், அமைச்சர்கள் என்று பெருங்கூட்டம் ஆஹா ஓஹோ என்று வெற்றுத் தறியைப் பார்த்துப் புகழக், கடைசியில் அரசன் அம்மணமாய் ஊர்வலம் போவான். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு சின்னப்பெடியன் கத்துவான் அரசன் அம்மணமாயெல்லோ போறான் என்று. இந்தக் கதைதான் எனக்கிப்போதும் நினைவுக்கு வருகிறது. சின்னப் பெடியன்களே மெய்யைச் சொல்லுகிறார்கள். எனவே என்னைக் சின்னப் பெடியன் என்று சொன்னமைக்காக உங்களுக்கு நன்றி யமுனா.

சொற்களை எப்படிக் கையாள்வது என்று யமுனா ராஜேந்திரன் சொல்லித்தருகிறார். அவரது பெருங்கருணைக்கு நன்றி. எந்தப் பொருளையும் விற்கிறவர்கள் அதை அழகாகவே காட்சிப்படுத்த வேண்டும், அப்படியல்லாவிட்டால் எப்படிப் போணியாகும். எனக்கு அது அப்படியல்ல. யமுனா ராஜேந்திரனே ஒத்துக்கொண்டபடி, யமுனா ராஜேந்திரன் எழுதி வாழ்கிறவர். அல்லது எழுதி வாழும் வாய்ப்புப் பெற்றவர். நாங்கள் வாழ்ந்ததை அல்லது வாழ்க்கையைத் தான் எழுதுகிறோம். எங்களுக்கிடையிலான வித்தியாசம் இங்கேதான் இருக்கிறது யமுனா. நீங்கள் எழுதுவதற்கான விசயங்களைத் தேடுகிறீர்கள். நாங்கள் எங்களிடமிருக்கும் விசயங்களையே முழுமையாக எழுத முடியாமல் உள்ளே அமுங்கிக் கொண்டிருக்கிறோம்.

அனுபவத்திற்கு ஏகத்துவம் கோருகிறோம் என்று சொல்கிறார் யமுனா ராஜேந்திரன். அப்படி அர்த்தப்பட எதையாவது எழுதித் தொலைத்திருக்கிறேனா என்று மறுபடியும் பார்த்தேன். அப்படியெதுவும் எழுதவில்லை. உண்மையில் நான் கர்ணன் எழுதியிருப்பது அனுவம் என்று சொன்னேனே தவிர, வேறு யாருக்கும் அனுபவமே கிடையாது என்று சொல்லவில்லை. இலட்சோப லட்சம் தன்னிலைகளின் அனுபவத்திற்குப் பதிலியாக எங்களுடைய அனுபவங்களைக் கோருகிறோம் என்று சொல்கிறீர்கள். நான் எழுதியிருப்பது இதுதான்.

புள்ளி விபரங்கள் குருதி சிந்துகிறதோ இல்லையோ? கதைசொல்லிகள் அவற்றை குருதி சிந்த வைக்கிறார்களோ இல்லையோ? எனக்குத் தெரியாது. ஆனால் புள்ளிவிபரங்களின் தானங்களிலொன்று பேசுவதே காலத்தின் குரலென்று நான் நம்புகிறேன். அப்படிப் பார்த்தால் அம்னஸ்டி அறிக்கை, ஐ.நா அறிக்கை போன்ற பல அமைப்புகளின் அறிக்கைகளின் புள்ளிவிபரங்களின் தானங்களில் ஒன்று கர்ணனுடைய தலையும். மேசைகளில் இருந்துகொண்டு புள்ளி விபரங்களை அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போட்டு, நடந்து முடிந்த ஈழப்போரை எழுத்துக்களாகவும், மிஞ்சி மிஞ்சிப்போனால் காட்சிகளாகவும், வதந்திகளாகவும் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கும் கேள்விச் செவியர்கள் கண்டடையும் மெய்யை விடவும் மேலானதாகவே இருக்கும், மேற்குறித்த புள்ளிவிபரங்களின் தானங்கள் ஒன்றினது வாக்குமூலத்தில் வெளிப்படும் மெய். புள்ளி விபரங்களின் தானமாயிருப்பதன் சங்கடமும் வலியும் கேள்வி ஞானத்தால் கண்டடைய முடியாதவையே. ஆகவே அவற்றை யமுனா ராஜேந்திரன் கண்டடையவில்லை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நான் இங்கே புள்ளிவிபரங்களின் தானங்களிலொன்று என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதே போலப் புள்ளிவிபரங்களின் தானங்களின் மற்றொன்று பேசுவதையும் நான் நிராகரிக்கவேயில்லை. இவற்றில் எங்கேயிருந்து இலட்சோபலட்சம் தன்னிலைகளின் அனுபவத்திற்குப் பதிலியாக கர்ணனுடைய அனுபவங்கள் இருக்கின்றன என்கிற அர்த்தத்தை நீங்கள் கண்டடைகிறீர்கள் என்றெனக்குத் தெரியவில்லை. அல்லது கட்டுரையை நீங்கள் படிக்காமல் யாரும் கவனத்துக்குக் கொண்டுவருபவர்களின் வாயிலிருந்து வந்ததைக் கேட்டு எழுதிவிட்டீர்களா?

யமுனா ராஜேந்திரன் போன்ற வெளியாட்களுக்கு அல்லது அவரது சொற்களிலேயே பங்கேற்பாளருக்கு அனுபவம் கிடையாதுதான். பங்கேற்பாளருக்கிருப்பதும் கேள்விஞானமே. உண்மையில் வன்னியில் இடம்பெற்ற போரைப்பற்றி எக்கச்சக்கமான வாக்கு மூலங்கள் வருகின்றன. நாங்கள் எதை மறுத்திருக்கிறோம்? எதையுமே மறுத்ததில்லை. அவை ஏன் மிச்சப் பகுதி உண்மைகளைப் பேசவில்லை என்று கேள்வி கேட்டதில்லை. ஆனால் நீங்கள் கேட்டீர்கள். அதனால் தான் நான் என்னுடைய முந்தைய கட்டுரையில் இப்படி எழுதியிருந்தேன்.

பகுதி உண்மைகள் தொடர்பில் நீங்கள் நிறையக் கவலைப்படுகிறீர்கள். ஏன் கர்ணன் பகுதி உண்மைகளை எழுதுகிறார். மிகுதி உண்மையையும் எழுத வேண்டியதுதானே என்று சர்வசாதாரணமாக கேட்கிறீர்கள். வரலாற்றை சமநிலையுடன் பயில நினைக்கும் நீங்கள், கர்ணன் சொல்லாததாக நீங்கள் சொல்லும் மிகுதி உண்மைகளை (அரச தரப்பு பிழைகளை மட்டும்) பேசுவோரிடம் என்றைக்காவது அவர்கள் சொல்லாமல் விட்ட மிகுதி உண்மைகள் தொடர்பில் கேள்வியெழுப்பியதுண்டா? அல்லது வரலாற்றை சமநிலையுடன் பயில்வதென்பதை நிபந்தனைகளுக்குட்பட்டுத்தான் பாவித்துக்கொண்டிருக்கிறீர்களா? உண்மையில் கர்ணன் விடுதலைப் புலிகளின் இருண்ட பக்கத்தை மட்டும் பேசுபவரல்ல என்பதை கர்ணனுடைய கதைகள் குறித்த உங்களுடைய வகைப்பாடுகளின் வழியே நிறுவ முடியும். புலிகளின் பெயர்களை வெளிப்படையாகச் சொன்ன மாதிரி ஏன் தாடிக்காரர்களின் பெயர்களை பகிரங்கமாகச் சொல்லவில்லை? கர்ணன் புலிகளின் ஆளுகைக்குள் இருந்த போது, எப்படி அவர்களின் பெயர்களைச் சொல்ல முடியாதோ அதே போலத்தான் இப்போதும் அவர் இருப்பது தாடிக்காரர்களின் ஆளுகைப் பகுதிக்குள்.

கட்டுரையில் நான் கேட்ட கேள்விகள் எல்லாவற்றையும் 'அகிலன் நக்கலடிக்கிறார். நையாண்டி பண்ணுகிறார்' என்று சாதுர்யமாகக் கடந்து போகிறீர்கள். முன்னைய கட்டுரையையும் சேர்த்தே மறுபடியும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லாவற்றையும் கொப்பி பேஸ்ட் செய்து எனது நேரத்தையும் வாசிக்கிறவர்களின் நேரத்தையும் வீணடிக்க எனக்கு விருப்பமில்லை. உங்களுக்கு வாசிப்பதற்கு காசுதரவும் யாரேனும் இருக்க முடியும். இல்லாவிட்டாலும் வாசித்துத்தானே ஆகவேண்டும். அல்லது ஐந்து கட்டுரைகள் எழுதியவரின் ஆறாவது கட்டுரையைப் படிக்கமாட்டேன் என்று நீங்கள் அழிச்சாட்டியம் செய்தால் நானொன்றும் செய்யமுடியாது. எழுத்தென்பது எண்ணிக்கையின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறதென்பதை எந்தத் தத்துவத்திலிருந்து தாங்கள் கண்டடைந்தீர்கள் என்று நானறியேன். நான் இரண்டாயிரங்களின் ஆரம்பத்தில் எழுத வந்தவன் என்கிற அர்த்தத்தில் (அதை உங்களது கவனத்துக்கு கொண்டு வந்தவர்கள் வாழ்க) எனது கடந்தகாலத்தை பெரிய மனதுவைத்து பன்னிரண்டு ஆண்டுகளாக்கியிருக்கிறீர்கள். எனது காலம் எழுதுவதிலிருந்து ஆரம்பிக்கிற ஒன்றல்ல. எழுத்தையும் தாண்டிய கடந்தகாலம் எனக்குண்டு. எழுத வந்திருக்காவிட்டாலும் உங்களால் மறுக்கமுடியாத கடந்தகாலம் எங்களுக்கிருக்கிறது. எழுத்தைக் கழித்தும் அகிலனுக்கு அடையாளங்கள் உண்டு.

ஆதவன் தீட்சண்யா, தமிழ்ச்செல்வன், அவர்கள் சார்ந்திருக்கிற கட்சி இதெல்லாம் யமுனா ராஜேந்திரனை அவருக்குள்ளிருந்து குடைகிற பிரச்சினைகள் என்பதால் அதைச் சொறிந்து விடாமல் உதாசீனம் செய்து கடந்து போகிறேன். தமிழகம் தொடர்பான அவருடைய எந்த அபிப்பிராயத்தையும் யமுனா பதிவு செய்து நான் பார்த்ததில்லை. கூடங்குளம் விவகாரம் போன்ற விவகாரங்களில் ஏன் யமுனா கருத்துச் சொல்வதில்லை என்கிற கேள்வியும் எழுகிறது. அவற்றிலெல்லாம் ஏன் தாங்கள் பங்கேற்பதில்லை யமுனா? அதற்கும் ஏதாவது தத்துவார்த்தக் காரணங்கள் இருக்கிறதா?

புலியெதிர்ப்பிலக்கியம் குறித்து நான் சொன்னது பொருளாதார ரீதியிலானது மட்டும் அல்ல. அகிலன் அதையும் தவறாகப் புரிந்து கொண்டார் என்று, தான் எழுதிய அதையும் விட்டுவைக்காமல் விளக்கவுரை ஈந்திருக்கிறார் யமுனா ராஜேந்திரன். அவரது வருத்தம் புரிந்து கொள்ளக்கூடியதே. தமிழக இந்திய ஊடகங்கள் விடுதலைப்புலிகளின் இருண்மைப் பக்கத்தை (இருண்மை என்பது யமுனா ராஜேந்திரன் கையாண்ட சொல்) பதிவு செய்ய வாய்ப்பளிக்கின்றனவே என்கிற ஆதங்கம் அவரிடம் மிகுதியாகவேயிருக்கிறது. பழைய முதலாளிகள் அல்லவா அவர்கள். ஆனாலும் வருந்த வேண்டியதில்லை யமுனா. நீங்கள் சொல்வதிலும் ஒரு பகுதி உண்மை இருக்கவே செய்கிறது. ஆனாலும் நீங்கள் சொல்வது போல ஆயுதப் போராட்டத்தின் இருண்டகாலத்தை பேசுவதற்கான வாய்ப்புக்களை விடவும் அதனை ஆதரித்துக் காவடி எடுப்பவர்களுக்கான அரசியல் பொருளாதார வாய்ப்புக்களே பிரகாசமாக இருக்கிறது. ஒரு பட்டியலைத் தயார் செய்து பாருங்கள் எத்தனை எதிர்ப் படைப்புகள் வந்திருக்கின்றன. எத்தனை ஆதரவுப் படைப்புக்கள் வந்திருக்கின்றன. எதிர்ப்பாளர்களுக்கான ஆதரவுத் தளமா அல்லது புலி ஆதரவாளர்களுக்கான அரசியல் ஆதரவுத் தளமா பெரியதும் பலமானதும். அந்தத் தரவுகளிலிருந்து உங்களுடைய மனச்சாட்சி விடை பகிரும் இந்தக் கேள்விக்கு.

இன்னுமொரு பிரச்சினை - சிங்கள தமிழ் அரசியல் தலைமைகள் சேகுவேராவின் புரட்சிகர ஆன்மாவைத் தீண்டவே முடியாது? என்று உங்களுடைய கட்டுரையில் நீங்கள் எழுதியிருந்தீர்கள். அந்த வாக்கியத்தில் பிரபாகரனைப் பிரதியிட முடியாதா என்று அர்த்தப்பட நான் கேட்டால். ஆரம்பகட்ட புரிதல் என்று மழுப்புகிறீர்கள். எது ஆரம்பகட்ட புரிதல். பிரபாகரன் ஒருவேளை தமிழர்களின் தலைவர் இல்லையா? அதைத்தான் நீங்கள் சொல்லவருகிறீர்களா? எதையும் அதன் நேரடியான அர்த்தத்தில் மட்டுமே புரிந்து கொள்வதைத்iதான் தர்க்கபூர்வமான பார்வை என்று சொல்லுகிறீர்களா யமுனா? உங்களுக்குள் இருக்கிற வரலாற்றை சமநிலையுடன் பயிலநினைப்பவன் சமநிலை தழும்பி ஒருபக்கம் குடைசாய்ந்து நிற்பது, 'அய்யய்யோ நான் பிரபாகரனைச் சொல்லவில்லை' என்று நீங்கள் பதட்டப்படுவதிலிருந்து அப்பட்டமாகத் தெரிகிறது.

அடுத்தது ஜெயன்தேவாவின் பின்னூட்டத்தை அனுமதித்தமை தொடர்பானது. கருத்துச் சுதந்திரத்தில் யமுனா ராஜேந்திரனும், பொங்குதமிழ் இணையத்தினரும் மட்டுமே நம்பிக்கையுள்ளவர்களா என்ன? எங்களுக்கும் கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை உண்டு. அதன் அடிப்படையிலேயே அந்தப் பின்னூட்டம் என்னுடைய முகப்புத்தகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

யோ.கர்ணன் உங்களுடைய கட்டுரைக்கு பதிலை ஒரு கட்டுரையாகத் தனது தளத்தில் எழுதியிருக்கிறாரே, அதை யாரும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வரவில்லையா? கண்டும் காணாதது போல ஓடித் தப்பியிருக்கிறீர்களோ என்று ஒரு சந்தேகம். அப்படியில்லைத்தானே? அதில் கர்ணன் பிரபாகரன் கதை குறித்த உங்களது புரிதலுக்கான பதிலைச் சொல்லியிருக்கிறார். என்னுடைய அபிப்பிராயம் பிரபாகரன் என்கிற பெயர் புனைவுக்குட்படாததல்ல.. கேலிச்சித்திரங்களுக்குள் சிக்காத புனிதமான தலைமைகளை நான் நம்புவதுமில்லை. பிரபாகரன் என்கிற பெயரை வைத்திருப்பதாலேயே இன்னமும் சிறைகளில் வாடும் மனிதர்களை அறிந்தவன் நான். பிரபாகரனின் பெயர் என்பது தனியே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குரியது மட்டுமல்ல. அந்தப் பெயருக்கு பேட்டண்ட் ரைட்ஸ் வாங்கி வைத்துக்கொண்டு நீங்கள் நாட்டாமை பண்ணினால் நான் ஒன்றும் செய்யமுடியாது. நான் மேற்சொன்ன பிரபாகரன்களில் ஒரு பிரபாகரனை கர்ணனின் கதையில் பிரதியிட்டால் அங்கேயும் இருக்கத்தான் செய்கிறது மெய். பங்கேற்பாளர்களுக்கு அதைப் புரிவதில் இருக்கிற சிரமத்தை புரிந்துகொள்ளமுடியும் என்னால்.

நான் கர்ணனுக்காகவும், நிலாந்தனுக்காகவும், கருணாகரனுக்காகவும் பதிலியாகப் பேசவில்லை என்பதனை கடந்த கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தேன். இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி அதை எதிர்ப்பதாக ஏன் பாவ்லா பண்ணுகிறீர்கள். அவர்களுக்கான பதிலை அவர்களேதான் சொல்ல வேண்டும். கர்ணன் சொல்லியிருக்கிறார். மற்றவர்களின் மௌனத்தை அவர்களேதான் கடக்கவேண்டும்.

நீங்கள் ஊதியத்திற்காக புலிகளின் நிறுவனத்தில் வேலை செய்தாலும் சுயாதீனமாக உங்களது நிலைப்பாட்டில் இருக்கமுடியும் என்கிறீர்கள். அப்படித்தான் இருந்தேன் என்று அடித்துச் சொல்கிறீர்கள். இதைத்தான் ஒரு தலைப்பட்சமானது என்கிறேன் நான். அதே நிலையை எங்களுக்குப் பொருத்திப்பார்த்தால் செல்லாது செல்லாது என்று கூவுகிறீர்கள். நான் முதற் கட்டுரையிலேயே பகுதி உண்மைகளை எவ்வாறான சூழ்நிலையில் பேச வேண்டியிருக்கிறது என்பதை எழுதியிருக்கிறேன். ஆதாரபூர்மாகப் பேசுதல், தர்க்க பூர்வமாகப் பதில் சொல்லுதல், இப்படி வெவ்வேறு சொற்கள் கொண்டு ஒரே வாதத்தை திரும்பத் திரும்ப எழுதி வெறுப்பேற்றுகிறீர்கள்.

வன்னிக்குள் இருந்து வந்து முழுமையாக மாறுபட்டு யாரும் பேசிக்கொண்டிருக்கவில்லை யமுனா ராஜேந்திரன். வன்னிக்குள் இருக்கும் போது பேசமுடியாதவற்றைப் பேசுகிறோம். எங்களுடைய கடந்தாகாலத்தை அவற்றின் எழுத்துக்களை, பங்களிப்பை ஒழித்து வைத்துக்கொண்டு நாங்கள் யாரும் பேசவில்லை. எல்லாம் பொதுத்தளத்திலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது பேசுபவையும் பொதுத்தளத்திலேயே பேசப்படுகின்றன. ஆனால் என்ன ஒன்று, உங்களுடைய பங்கேற்புக்குக் கிடைக்கும் வெகுமதிகளைப்போல அல்லாமல் எங்களுடைய பங்களிப்புகளிற்குக் கிடைத்தவை அவதூறுகளும் வசைகளுமே. நான் விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேசும்போது இருதுருவ நிலைப்பாடுகளை எடுத்துக்கொண்டு பேசுவதில்லை என்று சமநிலை பயிலுதற் படங்காட்டியபடி நீங்கள் புலித்துருவத்திலேதான் நின்றுகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மனசாட்சியுடன் மெய்யான பங்கேற்பாளனாக துருவநிலைப்பாடுகளை தவிர்த்து எழுதிப்பாருங்கள். அதன் பிறகும் உங்களுக்கு எழுதி வாழும் வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=9&contentid=da36b6a6-2644-41a1-a58a-4d3cc7707ce7

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கதவைத் திற; காற்று வரட்டும்[/size]

யமுனா ராஜேந்திரன்

அகிலன், விவாதத்தை எந்தச் சந்தியில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள் என்பதைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.

எவர் தேவன், எவர் பிசாசு எனும் இரு தனிநபர்களுக்கு இடையிலான விவாதமாக, இருவரும் தத்தமது தூய்மையை நிறுவுவதற்கான விவாதமாக இதனைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறீர்கள். எனது ஆதாரமான விமர்சனக் கட்டுரையில் வைத்திருக்கிற எந்தப் பிரச்சினை குறித்தாவது உங்களது இந்தக் கட்டுரை தொட்டிருக்கிறதா? எனது ஆதாரமான கட்டுரை எழுப்பிய கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் இந்தக் கட்டுரையில் நீங்கள் முன்வைத்திருக்கும் விஷயங்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஈழவிடுதலைப் போராட்ட விவாதங்களில் பொதிந்திருக்கிற ஒரு நோய்க்கூறான மனநிலையின் பகுதியாகவே நீங்களும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள் என்பதற்கு உங்களது இக்கட்டுரை ஒரு சான்று. எல்லாக் கருத்து சார்ந்த பிரச்சினைகளையும், அரசியல்-கருத்தியல் பிரச்சினைகளையும் இறுதியில் இரு தனிநபர்களுக்கு இடையிலான வன்மமாகக் கொண்டு நிறுத்துவது என்பதனைத்தான் நான் நோய்க்கூறான மனநிலை என்று சொல்கிறேன்.

... தன்னிலை - அனுபவம் - கூட்டுமனநிலை - முற்றுண்மை - மெய்மை குறித்தது எனது பிரச்சினை. எந்த ஒரு தனிமனிதனது அனுபவம் என்பதும் ஒரு பிரச்சினையின் பகுதி உண்மையாகவே இருக்க முடியும்;. ஒரு தனிமனிதன் தனது அனுபவத்தை ஒரு வரலாற்றுச் செயல்போக்கின் முற்றுண்மையாகக் கோரமுடியாது என்பது நான் முன்வைத்த பிரதான பிரச்சினை.

... துவாராகாவின் தந்தையின் பெயர் பிரபாகரன் எனும் கதை எந்த வரலாற்று மெய்மையையும் கொண்டிராத வக்கிரமான, ஆத்திரமூட்டுவதற்கென்றே எழுதப்பட்ட கட்டுக்கதை என்பது நான் முன்வைத்த பிறிதொரு பிரச்சினை.

... கருணாகரன் கோரிக் கொள்கிற மாதிரி அனா அக்மதோவா, பாலஸ்தீன எழுத்தாளர் நிசார் கப்பானி போன்றவர்களை முன்வைத்து யோ.கர்ணன் கதைகளின் முக்கியத்துவத்தினைக் கோரமுடியாது என்பது நான் முன்வைத்த இன்னொரு பிரச்சினை.

... நிலாந்தன் முன்வைக்கிற சாம்பல் அரசியல் மிகவும் அருவமான கருத்தாக்கம், ஈழத்தின் குறிப்பான நிலைமைக்கு அதனைப் பொருத்துவது சிக்கலானது என்பது எனது மற்றொரு பிரச்சினை.

எனது ஆதாரமான கட்டுரையின் அடிநாதமான இப்பிரச்சினைகள் பற்றி காத்திரமான எந்தக் கருத்துக்களையும் உங்களால் முன்வைக்க முடியவில்லை. உங்களது இரு கட்டுரைகளிலும் எனது கட்டுரை எழுப்புகிற ஆதாரமான பிரச்சினைகள் அனைத்தையும் விட்டுவிட்டு முற்றிலும் வேறான ஒரு விகாரமான தளத்துக்கு விவாதத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

பன்முக வாசிப்பு என்பது சொற்களுக்கு அல்ல. சொற்கள் ஒன்றிலிருந்து ஒன்றை வித்தியாசப்படுத்துவதால் அர்த்தம் பெறுவது. பிறிதொரு சொல்லின் சார்பு நிலையில் அர்த்தம் பெறுவது. குறிப்பிட்ட சொல் ஒன்றுக்கு ஒரு குறிப்பிட்ட தருணத்தில் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட அர்த்தத்தின் மீதுதான் மனிதர்களுக்கிடையிலான உரையாடல் அல்லது ஊடாட்டம் என்பது சாத்தியம்.

எடுத்துக் காட்டாக 'சிவப்பு' எனும் நிறத்தை 'நில்' என்பதற்கான அர்த்தமாக சாலை விதிகளில் ஒப்புக்கொள்வதற்கான ஒரு இணக்கத்தின் அடிப்படையிலதான் அது நடைமுறையில் சாத்தியமாகும். உரையாடலுக்கும், ஊடாட்டத்திற்கும், பொதுப் பகிர்வுக்குமான இந்த ஒப்புக் கொண்ட அர்த்தத்தை நான் என் விருப்பப்படிதான் பொருள் கொள்வேன் என்றால் சாலை கடக்கும்போது இரத்தச் சேறுமட்டும்தான் மிஞ்சும்.

சொற்கள் குறித்த சில உடன்பாடுகளின் அடிப்படையில்தான் உரையாடல் என்பது சாத்தியம். இது இல்லாதபோது உரையாடல் அல்ல, குதர்க்கமே மிஞ்சிநிற்கும்.

எனது ஆரம்பக் கட்டுரைக்கான உங்களது முதல் எதிர்வினைக்கட்டுரை அதனது முதல் வரியிலேயே ஆகக்கூடிய அகந்தையுடனும் எதிரிலிருப்பவரின் ஆளுமை குறித்த எள்ளல் தொனியுடனும்தான் துவங்கியது. அந்தச் சூழலில் எழுத்துலகில் உங்களது 'தகுதி'யையும் நீங்கள் கொண்டிருக்கும் 'இடத்தையும்' உங்களுக்கு ஞாபகமூட்டவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது.

எப்போதுமே கருத்துலகில் வயது என்பது ஒரு பொருட்டே இல்லை. கருத்து காத்திரமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

யோ.கர்ணனுக்கும் உங்கள் வயதுதான் இருக்கும் என்பது எனது அனுமானம். அவருடைய முழுக்கதைகளையும் அது தொடர்பாக வந்த மதிப்பீடுகளையும் தேடித் தொகுத்து வாசித்து எனது மதிப்பீட்டை நான் முன்வைத்திருக்கிறேன். அவர் கதைகள் மீதான மரியாதையோடு அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திவிட்டுத்தான் அதன் மீதான விமர்சனங்களையும் முன்வைத்தேன். உங்களையும் அங்கீகரித்து அதனது அடையாளமாகத்தான் இந்த பதில்களையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். இங்கு உங்களது இருவரதும் வயது எனக்கு ஒரு பொருட்டாக இருக்கவேயில்லை.

வயதெய்வது என்பது பரிகாசத்திற்கு உரியது அல்ல. அரைநூற்றாண்டை நான் கடந்து விட்டேன். எனது பல நண்பர்கள் மரணமடைந்துவிட்டார்கள்.

முதலில் மட்டுமீறிய அகந்தையுடன் கட்டுரையின் முதல் வரியைத் துவங்கியவரும் நீங்கள்தான்;, இப்போது வயது குறித்து பரிகாசம் செய்துகொண்டிருப்பவரும் நீங்கள்தான். நான் செய்ததெல்லாம் பூமியில் கால் பாவி நடவுங்கள், அல்லவெனில் தலைகுப்புற அதளபாதாளத்தில் தலைதெறித்து வீழ நேரும் என்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்டியதுதான்.

உங்களது அறிவு நேர்மையை நீங்கள் சரிபார்த்துக் கொள்ள இது ஒரு தருணம்.

நடந்த வருகிற விவாதத்தில் நான் எனது முதல் கட்டுரையை பொங்குதமிழில் எழுதினேன். இப்போது அதற்கான எதிர்வினைகளை அகிலன் இங்கு எழுதியிருக்கிறார். நான் பொறுப்புடன் அவற்றுக்கு எனது பதில்களை இங்கு முன்வைத்திருக்கிறேன்.

இது ஒரு பொதுமேடை. யோ.கர்ணன், நிலாந்தன் போன்று இந்த விவாதத்தில் சம்பந்தப்பட்டவர்கள் முன்பு இங்கே எழுதியிருக்கிறார்கள். இப்போதும் இவர்கள் இங்கு எழுதுவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லோரும் பங்குபெற முடிகிற ஓரு வரையறைக்குள், ஒரு பொதுமேடையில், ஒரு விவாதத்தை மேற்கொள்வது என்பது ஒரு பொது அறம்.

எங்கெங்கோ, எவரெவரோ, தெருவில், கூட்டங்களில், கருத்தரங்குகளில், தத்தமது 'டுவிட்டர்'களில், முகநூல்களில், வலைப்பூக்களில், தமது தனித்தளங்களில் இந்த விவாதம் தொடர்பாக எழுதுவதற்கும் பேசிக் கொண்டிருப்பதற்கும் நான் இங்கு பதில் எழுதிக் கொண்டிருக்கமுடியாது. இதுவே எனது விவாத நெறி சார்ந்த அறம்.

புத்தகங்களை வாசிக்காவிட்டாலும் பரவாயில்லை, அகிலன் குறைந்தபட்சம் ஒரு நல்ல இணையவாசகன் என்றாவது நம்பிக்கொண்டிருந்தேன். அதுவும் பொய்த்துப் போயிருக்கிறது.

கூடன்குளம் பற்றி தமிழகம் பற்றி நான் ஏன் எழுதவில்லை எனக் கேட்டிருக்கிறார். அகிலனுக்குச் சில பரிந்துரைகள் தர வேண்டியிருக்கிறது: தமிழகத்தில் செய்தி, விவாதம், சிறுபத்திரிக்கைகள் போன்றவற்றை அறிய தட்ஸ்தமிழ், தமிழ்மணம், கீற்று போன்ற பொதுவான தளங்களை வாசியுங்கள். ஈழம் குறித்து காத்திரமான அரசியல், கருத்தியல், இலக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் தேசம்நெட், குளோபல் தமிழ் நியூஸ், தேனீ, இனியொரு, பொங்குதமிழ் போன்றவற்றை வாசியுங்கள்.

அகிலன், முதலில் ஒருவர் ஒன்றை எழுதியிருக்கிறாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவரிடம் கேள்வி கேட்கப் பழகுங்கள்.

கூடன்குளம் அதனோடு தமிழக அரசியல் மற்றும் இலக்கியப் பிரச்சினைகள் பற்றி இந்த ஒரு வருட காலத்தில் மட்டும் இருபத்தி ஐந்து கட்டுரைகள் எழுதியிருப்பேன். அனைத்துக் கட்டுரைகளும் குளோபல் தமிழ் நியூஸ், கீற்று இணையதளக் கருவூலங்களில் இருக்கிறது. தேடிப் படித்துக்கொள்ளுங்கள்.

கூடன்குளம் பிரச்சினையில் போராடுபவர்களுக்கு ஆதரவாக உலக அளவிலான தமிழ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் வெளியிட்ட மிகமுக்கியமான அறிக்கையில் வெளியிடவென நான் அறிந்த ஐம்பது படைப்பாளிகள் கலைஞர்களின் ஒப்புதலைப் பெற்று அந்த அறிக்கையில் இடம்பெறச் செய்தேன். அந்த அனுபவங்கள் தொடர்பான ஒரு கட்டுரையையும் நான் கீற்று (அறிக்கையின் அரசியல் : ஜனநாயகமும் குறுங்குழு மனப்பான்மையும் : 16 செப்டம்பர் 2012) இணையதளத்தில் எழுதியிருக்கிறேன்.

கூடன்குளம் பிரச்சினை குறித்து நான் இறுதியாக எழுதிய கட்டுரையில் இவ்வாறு சொல்லியிருக்கிறேன்:

மார்க்சியத்தை விஞ்ஞானச் சூத்திரமாகப் பார்க்கிற விஞ்ஞானச் சோசலிசத் தத்துவவாதிகளுக்கு இனி எந்த வரலாற்றுப் பாத்திரமும் இல்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளர் தோழர் தா.பாண்டியன் கூடன்குளம் பற்றி உதிர்த்திருக்கிற கம்யூனிசக் கனிகளை நுகர குமட்டிக் கொண்டு வருகிறது. அக்டோபர் புரட்சியின் பின் பத்திருபது ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்துக்கும் அதனது அந்திமக்காலம் கால் நூற்றாண்டுக்கு முன்பே வந்துவிட்டது. அதனது வரலாற்றுப் பாத்திரம் முடிவுக்கு வந்துவிட்டது. கார்ல் மார்க்சை இப்போது இந்தக் கம்யூனிஸ்ட்டுகளிடம் இருந்து விடுதலை செய்ய வேண்டியது அவசர அவசியமாகிவிட்டது.

இவர்கள் நிலவும் அமைப்பின் பகுதிகளாகிவிட்டார்கள். 'கூடன்குளமோ குருவிக்குளமோ' என்கிறார் பாண்டியன். எத்தனை எகத்தாளம்! போராட்டத்தை நடத்துபவர்களை 'பாதிரியார்கள்' என்கிறார். முதலில் போராடுபவர்களை 'வீடுகளைக் காலிசெய்துவிட்டு வேறு இடங்களுக்குப் போக வேண்டியதுதானே?' எனக் கேட்டார். இப்போது இவர் விஞ்ஞான சோசலிஸ்ட்டு எனக் கோரிக் கொள்கிறார். தோழரே, எங்கே இருக்கிறது உலகில் விஞ்ஞான சோசலிசம்? மார்க்சியம் ஒடுக்கப்பட்டவரின் நிராகரிக்கப்பட்டவரின் கையறுநிலையில் விடப்பட்டவர்களின் தத்துவம். இன்று இம்மக்களின் தலைவன் சுப.உதயகுமார் தானேயொழிய நீங்கள் இல்லை.

தோழர். தா.பாண்டியன் அவர்களே, நீங்கள் இப்போது கூடன்குளத்தில் போராடும் மக்களை அவமானப்படுத்திப் பேசியிருப்பது யாருக்கான நன்றி விசுவாசம்? ஜெயலலிதாவுக்கா, மன்மோகன் சிங்குக்கா அல்லது விளாதிமிர் புடினுக்கா? திருவள்ளுவரை எவரை விடவும் நன்கறிந்தவர் நீங்கள். நாகாக்க தோழர் தா.பாண்டியன், காவாக்கால்.... (கலாச்சார அரசியல் குறிப்பேடு: 13 அக்டோபர் 2012: குளோபல் தமிழ் நியூஸ்).

வடலி பதிப்பகம் புத்தகம் அச்சிடுகிற அச்சகத்திற்கு 'பணம்' கொடுக்கிற அவசியம் இல்லாமல், அச்சடித்த புத்தகங்களுக்கு விற்பனையாளர்களுக்கு 'விற்பனைக் கழிவு' தருகிற அவசியமில்லாமல், 'யோ.கர்ணனன் கதைகள் உள்பட' வடலி வெளியிடுகிற புத்தகங்களுக்கு 'விலை' வைத்து 'விற்கிற' அவசியமில்லாமல் 'இலவசமாக' வாசகர்களுக்குப் புத்தகங்களை அகிலன் தரும்போது, நானும் எனது எழுத்துக்களை எனது உழைப்புக்கான 'மதிப்பு' என ஏதும் கோராமல் 'இலவசமாக' அகிலன் யார் யாருக்கெல்லாம் தரச்சொல்கிறாரோ அவர்களுக்கெல்லாம் தரமுடியும். அதில் ஒரு நிபந்தனை இருக்கிறது. நான் விரும்பியதைத்தான் எழுதுவேன் என்பதையும் அகிலன் புரிந்துகொள்ள வேண்டும்.

அதுவரைக்கும், மன்னிக்கவும் அகிலன், எனது நிலைபாடு அல்லது எனது எழுத்து அறம் என்பது பின்வருமாறுதான் இருக்கும்:

'சந்தை மதிப்பும் விற்னை மதிப்பும்' கொண்டு செயல்படுகிற தொலைக்காட்சி, வானொலி, மாத, வார, தினசரி இதழ்கள் என அனைத்திலும் எனது 'உழைப்பைத் தருவதற்கு' நிச்சயமாக நான் எனது 'மதிப்பை'க் கோருவேன். அந்த 'மதிப்பு' எனது உழைப்புக்குப் பிரதியானதுதானேயொழிய எனது கருத்துக்கானது அல்ல. கருத்துக்கு முழு உரிமையாளன் நான்தான்.

எனது அன்றாடத் தேவைகளான மின்சாரம், உணவு, பயணம், உடை, இருப்பிட வாடகை, எரிவாயு, புத்தகங்கள், ஒளி-ஒலி குறுவட்டுகள் என இவை அனைத்தையும் எவரும் எனக்கு 'இலவசமாக' தருவதில்லை. இவை அனைத்தையும் 'விலை' கொடுத்துத்தான் நான் வாங்கவேண்டும். ஆகவே, எனது 'உழைப்பைத் தருவதற்கு' நிச்சயமாக நான் எனது 'மதிப்பை'க் கோருவேன்.

தம்மை 'இழந்து' சிற்றிதழ்கள் நடத்துகிற எனது ஆத்மசக்தி கொண்ட நண்பர்களிடம் நான் ஒரு சல்லிக்காசும், ஒரு போதும் கோரியதில்லை. இனிமேலும் கோரப்போவதில்லை. நான் தொடர்ந்து எழுதிய சிறுபத்திரிக்கைகளான உயிர்நிழல், சுவடுகள், ஈழபூமி, உன்னதம் மற்றும் இப்போது எழுதுகிற காலம், படப்பெட்டி, நிழல், உடல் போன்ற சிற்றிதழ் ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அகிலனும் யோ.கர்ணனும் இதனைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இதுவே எழுத்தும் உழைப்பும் அதனது மதிப்பும் சார்ந்த என் அறம்.

உங்களது எழுத்துக்களின் 'மதிப்பை'யும், உழைப்பையும் எவ்வாறு கையாள்வது என்பது உங்களது விருப்பம். அதனை எவரும் என் மீது சுமத்த முடியாது.

அகிலன், கண்களைப் பிடிவாதமாக மூடி இருண்ட அறைக்குள் உங்களை நீங்களே அடைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைச் சுற்றிலும் உலகம் உங்களிடமிருந்து சுயாதீனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள். உங்களது எதிர்வினைகள் எனது ஆதாரமான கட்டுரையில் எழுப்பிய பிரச்சினைகளிலிருந்து முற்றிலும் விலகி, ஆத்திரமூட்டுவதற்காகவும் வன்மத்தை விதைப்பற்காகவும்தான் எழுதப்படுகிறது என்பதால் இதுவே உங்களுக்கான எனது இறுதிப் பதில். இவ்விதமாக இதனைத் தொடர்வது என்பது என்னளவில் நேர விரயம் அன்றி வேறில்லை. அது சாத்தியமும் இல்லை. நன்றி.

ஆசிரியர் குறிப்பு:

யமுனா ராஜேந்திரன் அவர்கள் பொங்குதமிழின் ஆரம்பநாட்களிலிருந்தே பல்வேறு விடயங்கள் சார்ந்தும் எழுதிவந்திருக்கிறார். ஆனாலும் அவரின் எழுத்துகளுக்கென எவ்வித கொடுப்பனவுகளையும் பொங்குதமிழ் இதுவரை வழங்கியதில்லை. யமுனா ராஜேந்திரன் தனது எழுத்துகளுக்கு பணம் பெறுவது போன்று பொதுப்படையான கருத்துகள் முன்வைக்கப்படுகின்ற சூழலில், பொங்குதமிழ் பக்க நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது அவசியம் என்பதால் இந்தக் குறிப்பை வெளியிடுகிறோம்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=9&contentid=f7c4f107-ef88-465e-8544-95082fb18099

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இல்லை, மற்றொரு வானத்தின் கீழும் அல்ல - கருணாகரன்[/size]

நமது இரண்டு கைகளும் அத்தனை பெரியவை அல்ல உண்மைகளை அவற்றால் மறைத்து விட இயலாது. ஆனால், அந்த இரு கரங்களையும் வைத்து நாம் ஒன்றைச் செய்ய முடியும். அந்த உண்மைகள் நம் கண்களில் படாமல் மூடிக்கொள்ள முடியும் - அ.மாக்ஸ்.

இத்தகைய நிலை உள்ள ஒரு சூழலில் தங்களின் கைகளால் உண்மைகளையும் உலகத்தையும் மூடிவிடத் துடித்துக் கொண்டிருப்போருக்கு எதைப் பற்றிய எத்தகைய விளக்கத்தை நாம் கொடுக்க முடியும்? அப்படி விளக்க முயற்சிப்பது பயனற்றதும் கூட. எனவே இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் வசைகளையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் திட்டமிட்ட உள்நோக்கங்களையும் பொருட்படுத்தாமல் விடுவதே மேலானது. அதுவே நன்மையும் கூட. நிலாந்தன் சொல்வதைப் போல இவற்றை மௌனத்தாற் கடப்பதே சிறந்த வழி.

இதேவேளை, இந்த மாதிரியான வசைகளும் புறக்கணிப்புகளும் குற்றச்சாட்டுகளும் தொடர்ச்சியானவை. ஆனால், அடிப்படைகளற்றவை, பயனற்றவை என்ற புரிதல் எனக்கு அனுபவ ரீதியாகவும் உண்டு. ஈழச்சூழலிலும் சூடு மிகுந்த, அனற் பறந்த விவாதங்கள் பல நடந்துள்ளன. எதிரும் புதிருமான அணிகள், தனிநபர்கள் எல்லாம் மோதலில் உத்வேகத்துடன் ஈடுபட்டுள்ளதைப் பார்த்திருக்கிறோம். அரசியலில் தொடக்கம், கலை மற்றும் இலக்கியச் செயற்பாடுகளில் வரை இந்த மோதல்கள் தீவிரமாகவும் உக்கிரமாகவும் நடந்துள்ளன. ஆனால், காலம் எல்லாவற்றுக்கும் நல்ல பாடங்களையும் அனுபவங்களையும் கற்றுத் தந்திருக்கிறது. இறுதியில் அது ஒவ்வொருவரையும் எங்கெங்கோ கொண்டு சென்று விட்டு விடுகிறது. இறுதியில் எல்லாமே பரிகாசத்துக்குரியதாகி, ஒரு சிறிய புன்சிரிப்புடன் அடங்கி விடுகின்றன.அப்பொழுது இதையெல்லாம் நாமா செய்தோம் என்று நம்மையே கேட்டுக்கொள்கிறோம் . எனவே இந்த மாதிரியான விசயங்களுக்குப் பதிலளிக்கத் தேவையில்லை என்பது என்னுடைய வலுவான நிலைப்பாடு. அவ்வாறு பதிலளிப்பதும் அதற்காக வினைக்கெடுவதும் வீண் என்பதே அனுபவமும்.

அதற்கிடையில் நாம் மோதிக்கொள்வதும் காலக்கனிவுக்கு முதல் சிலவற்றை விளக்க முற்படுவதும் மனக்காயங்களையே ஏற்படுத்தும். பொதுத் தளத்தில் நிலவும் உறவில் பாதிப்புகளையும் தரும். எனவேதான் இந்தத் தெளிவோடு இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களிலும் பதிலளிப்பதைத் தவிர்த்து வந்துள்ளேன். ஈரோஸ் இயக்கத்திற் செயற்பட்ட காலத்திலும், பின்னர் புலிகளின் செயற்பாட்டுத்தளத்தில் இருந்த வேளையிலும்கூட. 1996 க்குப் பிந்திய காலகட்டத்தில் ஏறக்குறைய இன்று ஏற்பட்டுள்ளதைப்போல ஒரு தீவிர நெருக்கடி நிலையை, வசைப் பிராந்தியத்தை புலம்பெயர் சூழலில் இயங்குவோர் உருவாக்கியுள்ளதைப் போன்று, அன்று வன்னியிலிருந்த சிலரினால் ஈழத்தில் எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், அது சிறிய அளவில். அத்தகைய நிலை இப்பொழுது தொடர்கிறது, வேறு இடங்களில், வேறு நபர்களால், வேறு வடிவத்தில். அவ்வளவுதான். ஆகவே இதையும் கடந்த காலத்தைப் போன்று நமக்குரிய வழியில் எதிர்கொள்ள வேண்டியதுதான். பொறுப்புச் சொல்லவேண்டியவற்றையும் நாம் காரணமானவற்றையும் தவிர்த்து, ஏனையவற்றைப் பொருட்படுத்தாமல் நமது வேலைகளைச் செய்து கொண்டிருப்பது. - 'தெருநாய்கள் குரைக்கின்றன. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், ஒட்டகங்கள் தங்களின் வழியில் பயணிக்கின்றன' என்றவாறு. இல்லையெனில் நம் உழைப்பின் பெரும்பகுதியை, நமது கவனத்தின் பெரும் பகுதியை நாம் இவற்றுக்கே செலவிட வேண்டும். யமுனா ராஜேந்திரன் சொல்லியிருப்பதைப் போல 'நேர விரயம் அன்றி வேறில்லை'.

எனினும், ''பொங்குதமிழ்' இணையத்தளத்தில் அண்மையில் யமுனா ராஜேந்திரன் யோ. கர்ணனின் கதைகளை முன்னிறுத்திக் கட்டமைக்க முயன்ற புனைவுருவாக்கம் சார்ந்த கட்டுரைகளுக்கான பதிலை எழுதவில்லையா?' எனச் சில நண்பர்களும் வாசகர்களிற் சிலரும் கேட்டனர். 'ஒரு கட்டத்திலாவது நீங்கள் பதிலளிப்பது நல்லது. அது உங்கள் செயற்பாட்டை தடைகளில்லாமல் மேலும் விரிவாக்கிக் கொள்ள உதவும். உங்களைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கான, குற்றச்சாட்டுகளுக்கான பதில்களைச் சொல்வதாகவும் அமையுமே!' என்று சில நண்பர்கள் கூறினர்.

'நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். அது பொறுப்புக்குரியது. ஆனால், அபத்தங்களுக்குப் பதிலளிக்கும் நேரத்தில் வேறு விசயங்களைப் பற்றி எழுதலாம். குறிப்பாக போரினாலும் பிற நெருக்கடிகளாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைக் குறித்து எழுதினால், அவர்களுக்கு அவற்றினால் பயன் கிட்டும். கூடவே, அறிவொழுக்கத்துடன் அணுகப்படும் எதனையிட்டும் நாம் சிந்திக்கலாம்' என்றேன். அப்படியே எழுதியும் வருகிறேன். அவற்றினால் பலருக்கும் பல நன்மைகள் கிட்டி உள்ளன. மேலும் கிட்டி வருகின்றன. இந்த 'நலன்செய் பரப்பு' மேலும் விரிவடைந்துள்ளது. பலர் மேலும் மேலும் சனங்களுக்கு உதவ இணைந்து முன்வருகிறார்கள். புதிய விசயங்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். அவர்கள் தேவையற்றுக் கதைப்பதில்லை. பொய்யாக நடிப்பதில்லை. வீர ஆவேசத்துடன் கூக்குரலிடுவதோ, நடந்து கொள்வதோ இல்லை. புரட்சி வேசம் போடுவதில்லை. பயனற்ற எதையும் கரைத்துக் குடித்துத் தங்களுடைய தலையையும் மனதையும் பாழாக்கி வைத்திருக்கவும் இல்லை. மற்றவர்களைக் குழப்பவும் இல்லை.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகால ஊடகத்துறைச் செயற்பாட்டிலும் இலக்கிய முயற்சிகளிலும் சனங்களின் நன்மையைக் குறித்த கவனமே என்னிடம் இருந்திருக்கிறது. அதன் தொடர்ச்சி அறவேயில்லை. பதிலாக அது இன்னும் செழிப்படைந்துள்ளது. என்றபடியாற்தான் நெருக்கடிகள், அதிகார மாற்றங்கள், அபாய நிலைகள் எல்லாவற்றினூடும் சமநிலை தளம்பாமல் செயற்பட முடிகிறது. கண்மூடித்தனமாக எல்லாவற்றுக்கும் ஒத்தோடுவதும் எல்லாவற்றையும் மறுப்பதுமாக இல்லாமல், வரலாற்றறிவோடும் விமர்சனத்தோடும் எதையும் அணுகும்போது குழப்பங்கள் அதிகமில்லை. அதனால், சனங்களின் பாடுகளோடும் வாழ்வோடும் இணைந்திருக்க முடிந்திருக்கிறது. போராடுவோரில் ஒருவராக, தேடப்படுவோரில் ஒருவராக, கைது செய்யப்படுவோரில் ஒருவராக, தாக்குதலுக்கும் தண்டனைக்கும் உள்ளாக்கப்பட்டோரில் ஒருவராக, சிறையிருப்போரில் ஒருவராக, ஆண்டுக்கணக்கில் அலைந்து திரிந்த அகதிகளில் ஒருவராக, போரில் சிக்கியோராக, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோரில் ஒருவராக, மீள்குடியேறியாக, கடனாளியாக என எப்போதும் இருந்திருக்க முடிகிறது; இன்னும் கூட.

எனவேதான் இன்னும் அபாயக்கொடிகள் அசையும் வாழ்வின் முன்னே தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கிறேன். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணங்களிலும்கூட. எனினும் நண்பர்களுடைய நல்நோக்கத்தை ஏற்றுக் கொண்டதன் நிமித்தமாக இந்தச் சுருக்கமான பதிலை எழுதுகிறேன்.

பொங்குதமிழில் யோ. கர்ணனின் கதைகளை ஒரு கருவியாக எடுத்துக்கொண்டு, அந்தக் கதைகளைப் பற்றிய விமர்சனங்களையும் அபிப்பிராயங்களையும் தெரிவித்தோரைப் பற்றிய ஒரு தொடர் குற்றம்சாட்டும் பட்டியலை இணைத்து யமுனா ராஜேந்திரன் எழுதியிருந்தார். அதில் என்னையும் உட்படுத்தியிருந்தார்.

1.கர்ணனின் கதைகளை நான் புரிந்து கொண்ட விதம், அறியப்படுத்தம் விதம் பற்றியது.

2. என்னுடைய அரசியற் பாதையை நோக்கிக் கர்ணன் நகர்ந்து கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றியது.

கர்ணனின் கதைகளிலுள்ள சாராம்சத்தை விளங்கிக் கொண்ட போதும் கர்ணனைக் கொண்டாடியோரின் அல்லது அவருடைய படைப்புகளைப் பற்றிப் பேசியோரின் மீதான எதிர்ப்புணர்வின் காரணமாக, அதை மறுதலிக்கும் விதமாக அந்தக் கதைகளைப் பற்றி அபிப்பிராயம் தெரிவித்தோரை அவர் சாடியிருக்கிறார். இது எதற்காக? யமுனா ராஜேந்திரனின் பெரும்பாலான எழுத்துகள் அப்படி இருந்ததில்லை. அவருடைய எழுத்துகளை நான் ஏறக்குறைய தொண்ணூறுகளில் இருந்து படித்து வருகிறேன். அவருடைய பெரும்பாலான புத்தகங்களை நான் சேகரித்தும் வைத்திருந்தேன். புலம்பெயர் சூழலில் இப்பொழுது உருவாகியுள்ள அலைகள் ராஜேந்திரனையும் அடித்துச் செல்கின்றனவா என்ற கேள்விகள் அவருடைய அண்மைக்கால எழுத்துகளை அவதானிக்கும்போது எழுகின்றன.

எனவே, யமுனாவுக்கான - யமுனாவைப் போன்று செயற்பட முனைவோருக்கான ஒரு பதிலை - என்னுடைய எதிர்வினையாக சில நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன். அது நான்கு வரிகளில் அமைந்திருந்தது. 'போராட்டங்களைப் பற்றி லட்சம் பக்கங்கள் எழுதுவதை விடவும் ஒரு கணமேனும் போராட்டத்தில் பங்கெடுப்பதே மேலானது. அந்த அனுபவத்திலிருந்து பிறக்கும் ஒரு வார்த்தை போதும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் ஒளியூட்ட. மேலும் வரலாற்றை விளக்கிக் கொள்ளவும் வாழ்வைப் புரிந்து கொள்ளவும் மேலும் மனிதர்களையும் அவர்களுடைய நிலைமைகளையும் வரலாற்றுச் சூழலையும் விளங்கிக் கொள்ளவும்' என.

இந்தப் பதிலை பொங்குதமிழுக்கு அனுப்பியபோது 'நீங்கள் எழுதியது நான்கு வரிகள் மட்டுமே. அதனை எப்படித் தனித்து வெளியிடுவது?' என்று பொங்குதமிழின் ஆசிரிய பீடத்திலிருந்து கேட்டனர். 'நான்கு வரிகளுக்கு மேல் எழுதவேண்டியதில்லை. அப்படி எழுதினால் அது வீண். இதுகூட வீண்தான். பதிலாக, சனங்களின் துயரத்தைப் பற்றி, வரலாற்றின் கொடுமைகளைப் பற்றி, அதனுடைய அனுபவங்களைப் பற்றி, அதிகார வர்க்கத்தின் கொடூரங்களைப் பற்றி எழுதுவேன். அது பயனுடையது. ஆனால், இங்கே வாசகர்களுக்கான மதிப்பை முன்னிறுத்தி இதை எழுதுதினேன்' என்றேன். என்றபோதும் அதைப் பிரசுரிப்பதற்கு அவர்கள் தயங்கினர். 'வேண்டுமானால், யமுனா ராஜேந்திரனுக்கு எழுதிய எதிர்வினைக்கு த. அகிலன் எழுதிய எதிர்வினையான கட்டுரையுடன் இணைத்து அதை வெளியிடலாமா' என்று கேட்டனர். நான் உடன்படவில்லை.

'ஒரு பதில் என்பது எந்த அளவிலும் இருக்கலாம். அது சொற்களின் எண்ணிக்கையிலும் பக்கங்களின் அளவிலும் தங்கியிருப்பதில்லை. ஒரு சொல்லிலும் இருக்கும். ஓராயிரம் சொற்களிலும் அமையும். ஏன், சொல்லாமலே விடுவதிலும்கூடப் பதிலுண்டு. பக்கம் பக்கமாக எழுதித்தான் பதிலளிக்க வேண்டும் என்றில்லை. என்னுடைய பதில் இவ்வளவுதான்' என்றேன்.

வாரங்கள் கழிந்தன. மீண்டும் மீண்டும் அந்தப் பதிலை வெளியிடுவதில் தயக்கங்களும் தடுமாற்றங்களும் இருப்பதை உணர்ந்த பின்னர் அந்தப் பதிலைச் சற்று விரிவாக்கியுள்ளேன். ஏற்கனவே, யமுனா ராஜேந்திரன் எழுப்பிய கேள்விகள் தொடர்பாக யோ.கர்ணனும் த.அகிலனும் தங்கள் நிலைப்பாட்டின் வழியாகப் பதிலளித்துள்ளனர். பல புள்ளிகளில் நாம் இணைந்திருந்தாலும் அவர்களுடைய அரசியற் பார்வையும் இலக்கிய அனுபவமும் வேறு. என்னுடைய பார்வையும் அனுபவமும் வேறு. இது எனது தரப்பு பதில் - எதிர்வினை

1. 2006 இல் 'கிறிஸ்தோபரின் வீடு' என இருந்த யோ. கர்ணனின் சிறுகதைகள் எப்படி 'சே குவேராவின் வீடு' எனப் பெயர் மாற்றம் பெற்றன? என்ற கேள்வியும் அதையிட்டு யமுனா ராஜேந்திரன் அடைகின்ற மனப்பதற்றமும் தொடர்பானது. அதனால், அவர் தவறான ஊகங்களுக்குச் செல்கிறார்.

'தேவதைகளின் தீட்டுத்துணி' என்ற யோ. கர்ணனின் முதற்தொகுதியின் முன்னுரையில் இதைப்பற்றி நான் தெளிவு படுத்தியிருக்கிறேன். 'கிறிஸ்தோபரின் வீடு' என்ற தொகுதியில் இடம்பெறவிருந்த கதைகள் எல்லாம் அழிந்து விட்டன. 'கர்ணன் தன்னுடைய கால் ஒன்றை இழந்ததைப் போல தனது முதற்தலைமுறைக் கதைகளையும் இழந்து விட்டார்' என்று. ஆகவே அது வேறு கதைகளைக் கொண்ட தனியான தொகுதி. பின்னர் எழுதப்பட்டவை வேறு வகையான கதைகளைக் கொண்ட தொகுதிகள். கர்ணனின் வாழ்க்கை அனுபவங்களும் வரலாற்று அனுபவங்களும் கூட வேறு பட்டவை. முன்னர் நிலவிய யதார்த்தம் வேறு. பின்னாளின் யதார்த்தம் வேறு. வரலாற்றின் ஓட்டமே அவரை அவ்வாறு எழுத வைத்திருக்கின்றது. கதைகளின் அனுபவங்கள் ஈழச்சூழலிலும் அதனுடைய வரலாற்றிலும் நடக்காமல் இருந்திருந்தால், கர்ணனின் கதைகளும் வேறாகவே இருந்திருக்கக்கூடும். சிலவேளை கர்ணன் எழுதவராமலே இருந்திருக்கவும் கூடும். கர்ணன் அனுபவங்களின் வழியில், மெய் நிகழ்ச்சிகளை நெருங்கியதாகத் தன்னுடைய எழுத்துகளை, கதைகளை பெரும்பாலும் முன்வைப்பதால் அவர் அந்தந்தக் கால நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், அனுபவங்களுக்கு இடமளித்து அவற்றை எழுதுகிறார். இதில் அவரை எப்படித் தவறென்று சொல்ல முடியும்? இதுதான் உண்மையில் நடந்ததும். மற்றபடி வியாபாரக் கவர்ச்சிக்காக கர்ணனோ, வடலி பதிப்பகமோ சேகுவேராவைப் பயன்படுத்தவில்லை, ஈழ விசயங்களைக் கையாளவில்லை என்பது என்துணிபு. இலங்கை அரசியலில், அதிலும் குறிப்பாக ஈழவிடுதலைப் போராட்டத்தில் இந்த மாதிரிப் புரட்சிகரமான பெயர்களும் அடையாளங்களும் குறியீடுகளும் எப்படி உருச்சிதைந்தன? அர்த்தம் இழந்தன என்பதைக் கர்ணன் குறிப்புணர்த்துகிறார். 'சேகுவேரா இருந்த வீடு', 'தேவதைகளின் தீட்டுத்துணி' ஆகிய இரண்டு தலைப்புகளும் புனிதங்கள் என்று கட்டமைக்கப்பட்டவற்றின் சிதைவை, கற்பிதங்களின் உருவழிவைக் காட்டுவன. இதுவே கர்ணனுடைய படைப்புகளின் அடிப்படைப் பண்புகளில் முக்கியமானது. ஆகவே சே குவேரா என்ற பெயரை வேறு நோக்கங்களுடன் பயன்படுத்தியிருப்பதாகக் கருதவேண்டியதில்லை. அவ்வாறு கருதினால், அது அதிக கற்பிதற்களுக்குரியதே.

இதேவேளை யமுனா ராஜேந்திரன் குறிப்பிடுவதைப்போல, 'சே குவேரா இன்று ஒரு விளம்பரப்பொருளாகவும் விற்பனைப் பொருளாகவும் ஒரு மோஸ்தராகவும் ஆக முடியும் என்பதற்கான சான்று போலத்தான்' அவரே, சே குவேராவையும் ஈழப்போராட்டத்தையும் பயன்படுத்தி வருகிறாரோ என்பது என்னுடைய அண்மைய சந்தேகம். எனவே, தன்னைப் பற்றிய மிகச் சரியான மதிப்பீட்டையும் உண்மையையும் யமுனா ராஜேந்திரன் சொல்லியிருக்கிறாரா? அல்லது அதை ஒத்துக் கொண்டிருக்கிறாரா? என்று கேட்கத்தோன்றுகிறது. சே குவேராவையும் பிற போராட்டங்களையும் பயன்படுத்தித் தன்னை ஒரு புரட்சிவாதியாகக் காண்பிப்பதையும் ஈழப்போராட்டத்தைப் பயன்படுத்தி அதன் ஆதரவாளராக, பங்கேற்பாளராகக் காட்டித் தன்னை மேம்படுத்திக் கொள்வதையும் இங்கே நாம் இவ்வாறே விளங்கிக் கொள்ள முடிகிறது. (ஈழம் பற்றிய கட்டுரைகளைக் கொண்ட புத்தகம் ஒன்று 600 பக்கங்களில் விரைவில் வெளிவரவுள்ளது என்பதும் இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கே கவனிக்க வேண்டியது. இதேவேளை தமிழகத்தில் பா.ராகவன் உலக அரசியலைப்பற்றியும் பல்வேறு போராட்டங்களைப் பற்றியும் பெரும் புத்தகங்களையெல்லாம் எழுதி வருகிறார். ஆனால், அவர் இதுவரையில் எந்த வரலாற்றிலும் தன்னுடைய பங்கையும் பற்கேற்பையும் வலியுறுத்தியதாகத் தெரியவில்லை என்பவை இங்கே மேலதிக கவனத்திற்குரியவை).

மேலும் ராஜேந்திரன் இன்னொரு இடத்தில் உண்மையைத் திசை திருப்பும் நோக்குடன் சொல்கிறார். 'இன்று புலி எதிர்ப்பு என்பது ஒரு மிகப்பெரும் இதழியல், இலக்கியத்தொழிற்சாலையாக இருக்கிறது. தமிழக - இந்திய, சர்வதேச ஊடகப் பரப்பில் புலியெதிர்ப்பு என்பது மிகப்பெரும் வியாபாரமாக இருக்கிறது' என. இதை யார்தான் நம்புவார்கள்? இதை எப்படித்தான் ஏற்றுக்கொள்வது? (இதைக்குறித்து த. அகிலனும் யோ. கர்ணனும் தங்களுடைய பதிலில் விரிவாக எழுதியுள்ளனர்) புலி எதிர்ப்பை மையப்படுத்தி தமிழிலும் பிற மொழிகளிலும் எத்தனை ஊடகங்கள் இயங்குகின்றன? அவற்றின் முன்னணி ஆட்கள் யார்? அவர்கள் எத்தனை பேர்? அல்லது அவர்களுடைய தொகை எப்படியுள்ளது? பொத்தாம் பொதுவாக இப்படிச் சொல்லி, இந்தப் 'புலி எதிர்ப்பு ஆட்களே கர்ணனையும் கருணாகரனையும் தத்தெடுக்கிறார்கள், வாழ வைக்கிறார்கள்' என்று புனையும் தந்திரம் என்ன? அது எதற்கானது? அதன் அடிப்படைகள் என்ன?

உண்மையில் புலிகள் இல்லாத சூழலிலும் புலிகளை மையப்படுத்தி அல்லது ஊறுகாய் தொட்டுக்கொள்வதைப்போல புலிகளைத் தொட்டுப் பேசும் ஊடகங்களே தமிழில் அதிக எண்ணிக்கையைக் கொண்டவை. இவற்றிற் பெரும்பாலானவை ஒரு போதும் போராட்டத்தில் பங்கேற்ற மக்களைக் குறித்து உயர்ந்த மதிப்பை விசுவாசமாகக் கொண்டியங்கவில்லை. போரிலே பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிய சரியான அக்கறையைக் கொண்டு செயற்பட்டவையும் இல்லை. அப்படியெல்லாம் நடந்திருந்தால், யுத்தம் முடிந்த பின்னான இந்த மூன்றாண்டு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்நிலை மாற்றமடைந்திருக்கும். ஈழ அரசியலும் மாற்றத்துக்கும் மேம்பாட்டுக்கும் உள்ளாகியிருக்கும். ஆகவே, ஈழத்திலும் புலம்பெயர் சூழலிலும் தமிழகத்திலும் பெரும்பாலான செயற்பாட்டாளர்களும் எழுதுவோரும் இப்படித்தான் தங்களின் முதன்மைப்பாட்டை இலக்கு வைத்து, புலி ஆதரவுத் தோற்றத்தோடு இயங்கி வருகின்றனர். செயற்பாட்டுத் தளத்தில் அல்ல. இந்த வகையிலேயே ராஜேந்திரனும் காலூன்றியுள்ளாரா என எண்ணத்தோன்றுகிறது. முன்னர் புலிகளை விமர்சித்தவர்களும் மறுத்தவர்களும் கூடப் 'புலி ஆதரவு' அணியில் இன்று இணைந்து 'நலன்பெறு' உறுப்பினர்களாகி விட்டனர். (கவனிக்கவும் நலன் செய் உறுப்பினர்களல்ல). தங்களின் மனதுக்கு எது சரி, எது பிழை என்று தெரிந்தவர்கள்கூட அதையெல்லாம் மறைத்துக் கொண்டு 'சீசனு'க்குத் தோதாகப் 'புலி ஆதரவு', 'தமிழ்த்தேசிய ஆதரவு' என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அப்படித் தங்களை மாற்றிக் கொண்டு தாராளமாகத் தந்திரமாக உழைக்கிறார்கள். அவர்களுடைய வங்கிக்கணக்குகளில் சேமிப்பு உயர்ந்து கொண்டிருக்கிறது. புகழும் ஆதரவும் பெருகிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கை வசதிகள் பெருகுகின்றன. (முன்னர் இப்படி இவர்கள் எல்லைமீறிச் செயற்படுவதற்கு புலிகள் இடமளிப்பதில்லை. அவர்களிடம் ஒரு கண்காணிப்பும் வரையறையும் இருந்தது. ஆனால், இன்று எந்த எல்லையும் வரையறையும் இல்லை. எனவே இந்த மாதிரி ஆட்களுக்கும் போக்குக்கும் இந்தப் பாதை சுலபமாகவும் லாபமாகவும் உள்ளது). இந்த நிலையில் புலி எதிர்ப்பைச் சொல்லி யார் எப்படி உழைக்க முடியும்?

அண்மையில் யமுனா ராஜேந்திரனின் பதிப்பாளர்களில் ஒருவரான அடையாளம் சாதிக், இலங்கைக்கு வந்திருந்தார். அவருடன் இறுதி ஈழப்போர் நடந்த இடங்களான வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், அம்பலவன் பொக்கணை, புதுமாத்தளன் பகுதிகளுக்குச் சென்றிருந்தேன். அங்கே குடியேறிவரும் மக்களுடன் சாதிக் உரையாடினார். அந்த மக்கள், தங்களின் மனதிலே பட்டவற்றையெல்லாம் கொட்டினார்கள். அவர்கள் சொன்ன கதைகளைச் சாதிக் கேட்டார்.

எல்லாவற்றையும் கேட்ட சாதிக் சொன்னார், 'கருணாகரன், இதையெல்லாம், இவர்கள் சொல்வதையெல்லாம் நான் வெளியே போய்ச்சொல்ல முடியாது. கண்டிப்பாகத் தமிழ்நாட்டிலுள்ள வெகுஜன ஊடகங்களில் இதையெல்லாம் பேசவோ, எழுதவோ முடியாது. அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஆனால், உண்மை இப்படித்தான் இருக்கு. இதை நான் புரிஞ்சுக்கிறன். இதை நீங்க எழுதுங்க. நாம புத்தகமாகக் கொண்டு வரலாம்' என்று. இலங்கை அரசைப்பற்றியும் புலிகளைப் பற்றியும் அந்த மக்கள் சாதிக்கிடம் கடுமையாகக் கண்டித்துச் சொன்னார்கள். வலைஞர்மடம் தேவாலயத்தைக்காட்டி அங்கே நடந்தவற்றை ஒரு குடும்பம் நினைவு மீட்டது.

ஆனால், மறுநாள் இன்னொரு யாழ்ப்பாண நண்பர் ஒருவருடன் சாதிக் கொழும்புக்குப் பயணமாகும்போது இந்த விவரங்களையெல்லாம் சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த நண்பர் என்ன சொன்னார் தெரியுமா? 'தேவையில்லாமல் உங்களை எதிர்ப்பு அரசியலில் அடையாளப்படுத்தாதீங்க. அது உங்களைப் பாதிக்கும்' என்று. இதுதான் யதார்த்தம். இதுவே உண்மை நிலை. 'உண்மைகள் என்பது எதிர்ப்பு அரசியல் வடிவத்திற்குரியவை' என்று புரிந்து கொள்ளப்படும் நிலை இன்று வளர்ந்து விட்டது. இன்று உண்மைகளை இலங்கை அரசும் விரும்பவில்லை. புலி ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்வோரும் விரும்பவில்லை. போராட்டத்தையும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனையும் ஆழமாக நேசிப்போரே உண்மைகளைக்குறித்துச் சிந்திக்கிறார்கள். ஆகவே, இன்றைய நிலையில் புலிஆதரவாளர்களாகத் தோற்றம் காட்டுவோரே அதிகமானோராக இருக்கின்றனர் என்ற நிலையே பரவலாகக்காணப்படுகிறது. புலி எதிர்ப்பாளர்களும் சமநிலையாளர்களும் இதிற் பாதிக்கும் குறைவானோரே.

எனவே, புலி எதிர்ப்பை விட 'புலிகள்', 'ஈழம்', 'தமிழ்த்தேசியம்' என்ற பதங்களை உள்ளடக்கிய இதழியலும் இலக்கியமும் மிகப் பெரிய வியாபாரமாக இருக்கிறது. எங்களுடைய கண்ணீரும் குருதியும் அவலமும் நல்ல வியாபாரமாகவே நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக அறிவோம். ராஜேந்திரன் தனது நோக்குடைய அனுபவத்தைப் பிறரிலும் ஏற்றி வாசிக்க முற்படுகிறார். இவ்வாறுதான் வேறு இடங்களிலும் யமுனா ராஜேந்திரன் உண்மையை விட்டு வெகு தொலைவுக்குச் செல்கிறார். இது மட்டுமல்ல, ஈழ நிலைமையைப் பற்றி ஈழத்தவர்கள் எழுதியதை விட வெளியாட்கள் எழுதி லாபமடையும் காலம் இது என்பதையும் நாமறிவோம். கே. என். டிக்ஸிற், சர்தேஷ் பாண்டே, நாராயணசாமி, கோடன் வைஸ், பழ. நெடுமாறன், ஹர்ஜித் சிங் முதல் பலர் இதில் அடங்குவர். இன்னும் இதைப்போலப் பலரும் எழுதக்கூடும். ஈழ நிலைமைகளின் பேரால் எடுக்கப்படும் சினிமாக்கள் கூட அப்படித்தான். சாப்பாட்டுக்கடைக்கே பிரபாகரனின் பெயரை வைக்கும் நிலை உருவாகியிருக்கிறது என்றால், இதற்கு மேல் நாம் அதிகம் இதைப் பற்றி விளக்கத்தேவையில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட சனங்களுக்கு இந்த வெளிப்பாடுகளால், இவர்களால் எந்தச் சிறு நன்மையும் கிடைத்ததில்லை. கோடன் வைஸ் போன்றவர்கள் இதில் சற்று விலக்கு. அவர்கள் ஒரு சாட்சி நிலையில் தம்மையும் உட்படுத்தி எழுதியிருக்கிறார்கள்; இயங்கியிருக்கின்றனர். தவிர, இந்த அரசியலில் அங்கீகாரத்தையும் இடத்தையும் இவர்கள் கோரவில்லை. பிறரைக் குற்றம் சாட்டித் தங்களை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவும் இல்லை. எனவே அவற்றுக்கு ஒரு பெறுமதியுண்டு. மற்றும்படி ஏனையோர் தங்கள் முதன்மைப்பாட்டையும் லாபத்தையும் நலனையும் மேலாதிக்க நிலையையும் குறியாகக் கொண்டே செயற்பட்டுள்ளனர். இன்னும் செயற்பட்டு வருகின்றனர்.

இதேவேளை வெளியார் எவரும் இவற்றில் ஈடுபடுவதும் எழுதுவதும் தவறானது என்று ஏக நிலைப்பட்டு இங்கே நான் சொல்ல வரவில்லை. ஆனால், அவற்றுக்கு நியாய அடிப்படைகள் இருக்கவேணும் என்பதையே வலியுறுத்துகிறேன். அவற்றின் விளைபலன் முக்கியம் என்கிறேன். சொந்த அனுபவத்தோடும் உண்மை நிலைவரத்தோடும் வாழ்ந்ததை, வாழ நேர்ந்ததை, பாடுகள் பலதைச் சுமந்ததை எழுதினால் அதை நிராகரிக்கும் அரசியல் ஏன் முன்னிலைப்படுத்தப்படுகிறது? இதையே இங்கே கேள்விக்குள்ளாக்குகிறேன். அப்படி எழுதினால், அதை ஏற்பதற்கு சிலர் தயாரில்லை. அதில் முன்வைக்கப்படும் உண்மைகள் அவர்களை அதிர்ச்சிக்கும் நெருக்கடிக்கும் உள்ளாக்குகின்றன என்ற அச்சமே இதற்குக் காரணம். இதற்காக எழுதாமலும் இயங்காமலும் இருக்க முடியுமா? கடினமான எதிர்ப்பு அலைகளை உருவாக்கி, எம்மை இயங்க விடாமல் தடுப்பதே இவர்களுடைய நோக்கம். ஆனால், அது சாத்தியமற்றது. மரணத்தின் அத்தனை சவால்களையும் ஏற்றும் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இதற்குச் சொல்லும் ஒரே பதில், "வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்பதாகவே இருக்கும். இதேவேளை இவர்களுடைய நோக்கம் ஒரு அதிகார நிலையின் உருவாக்கமே. ஏகத்துவத்தை நோக்கிய சிந்திப்பே. மற்றும்படி நேரடி அனுபவத்தைக் கொண்டவர்கள் மட்டும்தான் இதையெல்லாம் எழுதவேண்டும் என்ற கட்டாயத்தை நான் இங்கே கூறவில்லை. பொதுவெளியில் எல்லோருக்கும் இடமுண்டு. இங்கே நான் வலியுறுத்துவது, அவற்றின் நியாய அடிப்படைகளை மட்டுமே. அதேவேளை போரிலும் போராட்டத்திலும் ஈடுபட்ட, சிக்கிய, அந்தப் பரப்பில் வாழ்ந்த அனுபவமும் வாழ்நிலையும் முக்கியமானது. அவை புறக்கணிக்கக் கூடியவையல்ல என்பதையும் நினைவூட்டுகிறேன்.

ஏகப்பெரு வியாபாரிகள் எப்போதும் தங்களுக்கு நெருக்கடியான விசயங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அனுமதிப்பதும் இல்லை. எனவே அவர்கள் அதை மூர்க்கமாக எதிர்ப்பர். தந்திரங்களைக் கையாள்வர். அதுவே நடந்து கொண்டுமிருக்கிறது. ஆகையால், ஈழவியாபாரிகள், தேசிய வியாபாரிகள் எல்லாம் உண்மைக்குரல்களை எப்படியாவது அடக்கி விட முயற்சிக்கின்றனர் என்பதே நிதர்சனமானது. இதற்காக அவர்கள் பாவிக்கின்ற உத்திகளில் ஒன்றே 'அரசு சார்பானவர்', 'போராட்டவிரோதி' 'துரோகி' என்ற அடையாளப்படுத்தல்கள்; முத்திரை குத்துதல்கள். ஆனால், என்னதான் நடந்தாலும் இதற்காக ஓய்ந்து விட முடியாது.? அப்படி ஓய்வதற்கு எந்த அவசியமும் இல்லை. வாழ்வையே அபாயப்பிராந்தியத்தில் வைத்தபின் எத்தகைய நெருக்கடிகளும் ஒன்றுதான். வெள்ளம் தலைக்கு மேலே ஏறியபின் சாண் என்ன, முழம் என்ன?

2. பான்கி மூனின் நிபுணர்குழு அறிக்கை தொடர்பான கேள்விகள் பலவும் போரில் சிக்கிய மக்களுக்கு உண்டு. கேள்விகள் உள்ளபோதும் அந்தக் குழுவின் அறிக்கை முக்கியமானது என்பதில் மறுப்பில்லை. ஏனெனில் அது அவலங்களைச் சந்தித்த மக்களின் சாட்சியங்களை உள்ளடக்கிய அடிப்படையிலும் முடிந்த அளவுக்குச் சரியான தகவல்களை மதிப்பீடு செய்த அடிப்படையிலும் அது ஒரு முக்கிய ஆவணம். அதேவேளை இன்னொரு புறத்தில் அது பரிகாசத்துக்குரியது என்பதே என்னுடைய புரிதல்.

வன்னியில் இறுதிப்போர் நடந்த நாட்களில் அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற உண்மை யாருக்குத் தெரியவில்லை? அதிலும் அழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பிலும் வல்லமையிலும் இருந்த ஐ. நா, அனைத்துத் தொடர்பாடல் மற்றும் தகவல் அறியும் மூலவளங்களைச் சிறப்பாகக் கொண்டிருந்த ஐ.நா அன்று என்ன செய்தது? பின்னாளில் விடப்போகும் அறிக்கைக்கான புள்ளிவிவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்ததா?

ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியிடப்படும்போது, லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை அழிக்கப்படும்போது செயலாற்றியிருக்க வேண்டிய முக்கியமான தரப்பு அறிக்கைகளுக்கான தரவுகளைச் சேகரித்துக் கொண்டிருந்திருக்கிறது! இந்த அறிக்கையை தயாரிப்பதற்காகத்தானா அல்லது இது போன்ற அறிக்கைகளைத் தயாரித்து அதிகார நாடுகளின் நலனுக்காக அவற்றைப் பயன்படுத்தத்தானா ஐ.நா நிறுவனம் செயற்படுகிறது? மேலும் இந்த அறிக்கையின்; பயன்களை அனுபவிப்பவர்கள் யார்?

போரையும் அதில் நடந்த அனர்த்தங்களையும் நன்றாக அறிந்த ஐ.நா, அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய வலுவோடும் பொறுப்போடும் இருந்தது. ஆனால், என்ன செய்தது? போர் முடிந்த பிறகு நடுநிலையோடு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று நமக்குக் காண்பிக்கிறது. எங்களின் உளவியலை ஆற்றுப்படுத்த யோசிக்கிறது. அதாவது, எங்களின் நியாயமான கோபங்களை இந்த அறிக்கையின் மூலம் கரைத்து வடியவிட முயற்சிக்கிறது. இது ஐ.நா வின் மிகப் பெரும் தந்திரங்களில் ஒன்று. உபாயங்களில் ஒன்று. இது ஒரு கண்கட்டு வித்தையன்றி வேறென்ன? இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த நிலையில் வரலாற்று அனுபவங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் கொண்டுள்ள ஒரு மனம் இவற்றைப் பரிகாசம் செய்யாமல் வேறு என்ன செய்யும்? ஆனால், வெளியே இருப்போருக்கு இந்த அறிக்கை முக்கியமானதாகவே படும். ஏனெனில், அவர்களின் அனுபவம் வேறு. அதனால், அவர்களுக்கு இந்த அறிக்கை பெரியதொரு விசயமாகவே தெரிகிறது.

சரி, இதற்குப் பின்னர், இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்டன. இந்த அறிக்கையினால், அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களினால் எத்தகைய நன்மைகளைப் பாதிக்கப்பட்ட மக்கள் இதுவரையில் பெற்றிருக்கிறார்கள்? அல்லது அவர்கள் இனியாவது என்ன நன்மைகளையெல்லாம் சர்வதேச அரசியற் பொறிகளிலும் கூட்டுகளிலும் இருந்து பெறவுள்ளனர்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை யமுனா ராஜேந்திரனும் அவரைப் போன்றவர்களும் அறுதியிட்டுக் கூற முடியுமா? பொதுவாகவே ஐ.நாவின் அறிக்கைகளும் செயற்பாடுகளும் தீர்மானங்களும் யாருக்கு அதிக நன்மைகளைத் தருகின்றன என்ற ஆரம்ப அறிவைக்கூட, எளிய உண்மைகளைக் கூட சர்வதேச அரசியலைப் பற்றி, விடுதலை அரசியலைப்பற்றி தன்முதல் மூச்சாகக் கொண்டு எழுதிவரும் யமுனா ராஜேந்திரன் அறியாமலிருப்பது நகைப்பிற்குரியது, கேள்விக்குரியது.

ஆகவே, அதைவிட, எந்தப் பதிவுகளையும் குறிப்பெடுக்கவே முடியாமல், அதற்கான வசதியும் வளங்களும் இல்லாமல், இருந்தாலும் அவற்றைச் செய்து கொண்டு வருவதற்கான சூழல் இல்லாத நிலையில், தன் மனதிலும் நினைவிலும் கொண்டிருந்த அனுபவங்களை வைத்துக் கர்ணன் எழுதிய கதைகள் பெறுமதியானவையாகத் தெரியவில்லை யமுனா ராஜேந்திரனுக்கும் அவரைப்போன்று சிந்திப்போருக்கும்? இது எவ்வளவு கொடுமையான மதிப்பீடு. எவ்வளவு அநீதியான அணுகுமுறை?

கர்ணன், பெரும்பாலான தன் கதைகளினதும் தன்வாழ்களத்தினதும் நேரடிச் சாட்சி. அல்லது தன்சூழலின் சாட்சி. மற்றும் அவர் ஒரு இலக்கியப்படைப்பாளி. ஐ.நா நிறுவனமும் அம்னஸ்டிக் குழுவும், பிற அமைப்புகளும் அதனுடைய அதிகாரிகளும் கர்ணனும் ஒன்றல்ல. ஒன்றை அணுகும், அதை வெளிப்படுத்தும் வெவ்வேறு தரப்பினர். அவை அனைத்து விடயங்களையும் பொறிமுறையோடு அணுகும் அமைப்புகள். அவற்றின் செயற்படு முறையும் அப்படியே. கர்ணன் அதே நியாயப்பாடுகளைத் தன்னகத்திற் கொண்டு வரலாற்றையும் உண்மையையும் விளக்க முற்படும் படைப்பாளி. முன்னையவை தங்களுடைய அறிக்கையை முழுமைப்படுத்திய பின்னரே வெளியிட முடியும். இலக்கியப் படைப்பாளி தன்வாழ்நாள் முழுவதிலும் அந்த விடயங்களை பல பரிமாணங்களில் முன்வைக்கும் தொடர் செயற்பாட்டாளர். ஆகவே கர்ணன் எழுதிக் கொண்டிருக்கும்வரையில் அவை பகுதி உண்மைகளாகவே, பகுதி விடயங்களாகவே இருக்கும். அவை முழுமையை நோக்கி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும். என்றாலும் அவரால் முழு உண்மைகளையும் எழுதி முடித்து விட முடியாது. அவரால் மட்டுமல்ல, எவராலும் அப்படி எழுதிவிட முடியாது. வரலாற்றை எழுதுதல் என்பதும் வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடு என்பதும் ஒருபோதும் முழு உண்மைகளையும் உள்ளடக்கியதாக இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. அவை பகுதி உண்மைகளாக, அல்லது சார்பு நிலைப்பட்டனவாகவே இருக்கின்றன. இங்கே கர்ணன் நடந்த நிகழ்ச்சிகளைக் கட்டமைத்து தன்படைப்புகளை எழுதியிருக்கிறார். ஆகவே அவை உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை. உண்மையின் அடித்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டவை என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

இதையே நிலாந்தன் 'பெரும்போக்காகவுள்ள யுத்த சாட்சியத்திலிருந்தும் அவர் (கர்ணன்) துலக்கமாக விலகிச் செல்கிறார். ஆனால், ஒரு முழுமையான யுத்த சாட்சியம் என்று வரும் போது அதன் தவிர்க்ப்படவியலாத ஒரு கூறாக அவர் காணப்படுகிறார். அவரையும், அவரைப் போன்றவர்களையும் இணைத்து உருவாக்கப்படும் ஒரு முழுமையான யுத்த சாட்சியமே விஞ்ஞான பூர்வமானதாகவும், அனைத்துலகக் கவர்ச்சி மிக்கதாகவும் அமையும்' என்று குறிப்பிடுகிறார். இதில் மறுப்பில்லை. ஆனால், ஒரு படைப்பாளியைப் பார்த்து, ஏன் நீ எல்லா உண்மைகளையும் எல்லா விடயங்களையும் சொல்லவில்லை? என்று கேட்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படிக் கேட்க முடியுமா?

மட்டுமல்ல கோடன் வைஸின் THE CAGE என்ற புத்தகமும் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் எவ்வளவோ இடங்களில் வேறுபடுகின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். எனவேதான் 'இவை ஈழத்து வாழ்வைப்பற்றிய கதைகளாக மட்டுமல்ல, மனிதகுல வரலாற்றின் மீது வைக்கப்படும் கேள்விகளாகவும் இந்தக் கதைகள் வெடிக்கின்றன' என்று தமிழ்ச்செல்வன் சொல்கிறார். தமிழ்ச்செல்வனின் பார்வையும் புரிதலும் இந்த இடத்தில் ஒரு கலைஞனின் அனுபவத்தைக் கொண்டுள்ளன. இதை ராஜேந்திரனால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்ச்செல்வனின் அரசியல் வேறாக இருக்கலாம். அதன் நோக்கு நிலைகளும் வேறானவையாக அமையலாம். கர்ணனுடைய கதைகளை அவர் புரிந்து கொண்டுள்ள முறையே இங்கே கவனத்திற்குரியது.

இதைப் புரிந்து கொள்ள முடியாமல், அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல், 'முள்ளிவாய்க்கால் அவலம் குறித்த யோ. கர்ணனின் கதைகள் சொல்கின்ற உண்மைகளின் முன்னே, (இவை பகுதி உண்மைகள்) ஐ.நா அறிக்கை, அம்னஸ்டி அறிக்கை, நோர்வே அறிக்கை, சர்வதேச நெருக்கடிக்குழுவின் அறிக்கை, நல்லெண்ண ஆணைக்குழுவின் அறிக்கை போன்றவற்றின் தகமை என்ன?' என்று கேட்கிறார் யமுனா ராஜேந்திரன். ஆகவே இங்கே மீண்டும் நான் அழுத்திக் கூற முற்படுவது இரண்டும் வேறு வேறு என்பதையே. அவற்றின் அடிப்படைகளும் வேறு வேறே. அந்த அறிக்கைகள் அந்தப் போரை மையப்படுத்தியவை. அதன் புள்ளிவிவரங்களை ஆதாரமாகக் கொண்டவை. ஆனால், கர்ணணின் கதைகள் போர்க்கள நிகழ்ச்சிகளின் அடிப்படைகளையும் அந்தக் களத்தின் நிலைமையையும் அங்கே வாழ்ந்த மக்களின் வாழ்க்கையையும் அதனுடன் சம்மந்தப்பட்ட தரப்புகளின் (அரசு, புலிகள், சர்வதேச சமூகம் உள்ளிட்டவை) இயங்குதன்மைகளையும் பற்றியவை. ராஜேந்திரனே குறிப்பிடுவதைப்போல அந்தப் புள்ளிவிவரங்கள் குருதி சிந்துவதைப் பற்றியவை. வரலாற்றின் நிகழ்ச்சிகளையும் அவற்றின் விசித்திரங்களையும் பற்றியவை. எனவேதான் அங்கதம் தொனிக்க அவற்றைக் கர்ணன் வெளிப்படுத்துகிறார். அங்கதம் தொனிக்க யாரும் அறிக்கையிட முடியாது. அப்படிச் செய்தால் அது அறிக்கையும் அல்ல. அதை இலக்கியமே செய்ய முடியும். பிரதிகளின் வழியாகவே உண்மைகளைக் கண்டறிய முற்படுபவர், பிரதிகளின் வழியாகவே வரலாற்றையும் வாழ்வையும் உணர்ந்து கொள்ள முற்படும்போது ஏற்படுகின்ற அபத்தம் இதுதான். ஏனெனில் எல்லாப் பிரதிகளும் ஒரே தன்மையைக் கொண்டிருப்பதில்லை. ஒரே அணுகுமுறைக்குரியவையும் அல்ல. இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

3. நான் 'தேவதைகளின் தீட்டுத்துணி' தொகுதிக்கான முன்னுரையில் எழுதும்போது குறிப்பிட்ட நிஸார் கப்பானி, அன்னா அக்மத்தோவா, அடோனிஸ் போன்றவர்களின் பின்னணியோடு கர்ணனின் கதைகளையும் ஒப்பிடுவதாகக் குறிப்பிடுவதைப் பற்றி -

வரலாற்றில் ஒவ்வொரு புள்ளிக்கும் வெவ்வேறு தன்மைகளும் ஒத்த தன்மைகளும் இருப்பதுண்டு. நிச்சயமாக எல்லாப் புள்ளிகளும் ஒரே மாதிரியானவை அல்ல. அப்படி அமையுமானால், அது வரலாறாகவும் மனித இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் சமூக ஊடாட்டம் உள்ளவையாகவும் இருக்க முடியாது. நான் குறிப்பிட்ட அன்னா அக்மதோவா, தன் பிள்ளைக்காகவும் கணவருக்காகவும் தன்னுடைய அயல் (சக) மனிதர்களுக்காகவும் தன்னுடைய அரசையே, ஆட்சியையே நிந்தித்தவர். அவருடைய சனங்களையும் பிள்ளையையும் கணவரையும் அவருடைய அரசே பலியிட்டது. அங்கே நிலவிய அதிகாரமே பலியெடுத்தது. இங்கே கர்ணனின் கதைகளிலும் சனங்கள் நம்பிய அமைப்பு சொந்த மக்களையே நெருக்கடிக்குள்ளாக்குகிறது. ஆகவே, ஏறக்குறைய ஒத்ததன்மைகள் இரண்டுக்குமிடையில் நிகழ்கின்றன. இதேவேளை, இலங்கை அரசினாலும் இந்த மக்கள் நெருக்கடிக்குள்ளாகின்றனர். அவற்றின் வெளிப்பாடுகளையும் உணர்வையும் பிரச்சினைகளையும் இன்னொரு நிலையில் கர்ணன் வெளிப்படுத்துகிறார். மேலும் பிற அதிகார அடுக்குகளையும். ஆகவே கர்ணனின் கதைகள் பல நிலைகளில் ஏற்படுகின்ற, ஏற்பட்ட பல பிரச்சினைகளைப் பேசுகின்றன. இவற்றை தன்னுடைய புரிதலுக்கு மட்டும் சாத்தியப்பட்ட அளவுகோலினால் யமுனா ராஜேந்திரன் அளக்க முற்படுவது எவ்வளவு அபத்தமானது? இதற்காக நான் ஒரு விளக்கப்பள்ளியை எப்படித்தான் ஆரம்பிப்பது?

4. கர்ணனின் கதைகளை விதந்தோதுபவர்களைப்பற்றியது. கர்ணனின் கதைகளைக் கொண்டாடுவோர் புலி எதிர்ப்பாளர்களாகவும் அரச ஆதரவாளர்களாகவும் இருப்பதால், கர்ணனும் அவர்களுடைய அரசியலுடன் சம்மந்தப்படுகிறார், இவர்களே கருணாகரனையும் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பற்றியது.

இதென்ன கொடுமையான மதிப்பீடு? ஒரு பிரதியை, ஒரு பண்டத்தை, ஒரு வெளிப்பாட்டை, ஒரு நடவடிக்கையை, இப்படி ஏதோ ஒன்றை விரும்புவோரைக் கொண்டு சம்மந்தப்பட்டதைப் பற்றிய மதிப்பீட்டுக்கு வருவது ஒரு வழிமுறை. ஆனால், அது முற்றிலும் சரியானதல்ல. சிலர், தமது நோக்கங்களுக்காகவும் தேவைகளுக்காகவும் விருப்பங்களுக்காகவும் அவற்றைக் கொண்டாடுவர். அது அவர்களுடைய தேவைகளின் அரசியலாக இருக்கலாம். ஆனால், எல்லோரும் அப்படிச் செய்வதில்லை. ஆகவே, அதற்காக அவற்றை அவற்றின் அடியாக மட்டும் வைத்து மதிப்பிடப்படுவது தவறானது. இன்னொரு சூழலில், இன்னொரு காலகட்டத்தில் அதன் அர்த்த பரிமாணம் வேறுபடும். தவிர, சில தரப்பினரால் குறிப்பிட்ட விடயம் கொண்டாடப்படுகிறது என்பதற்காக, அதை அவர்களுக்குள் குறுக்கிப் பார்ப்பது ஏற்புடையதுமல்ல. ஆனால் யமுனா ராஜேந்திரன் இதையே செய்கிறார். பிரதியைக் கொண்டாடும் தரப்பினரை வைத்தே பிரதியை மதிப்பீடு செய்கிறார். இதிலும் அவர் தன்னனுபவம் சார்ந்தே செயற்படுகிறார். சீசனுக்கேற்ற மாதிரியும் சூழலுக்கு ஏற்றமாதிரியும் தன் பண்டங்களை உற்பத்தி செய்யும் வழி முறைமையை இங்கே பொருத்திப் பார்க்கிறார். பிரதியின் உற்பத்தியானது எந்தத் தரப்பினரைக் குறியாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற இலக்கில் வியாபார நோக்கத்திற்கான குறிவைத்தலை. இது ஒரு வியாபார வாழ்வின், அந்தச் சூழல்சார்ந்த அனுபவ விளைவு. இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? புலிகளை எதிர்ப்போரும் ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான வேறுபாடான கருத்துள்ளோரும் கர்ணனின் கதைகளையும் கருணாகரனின் எழுத்துகளையும் பாராட்டினால், இவர்கள் எல்லோரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள் என்று எப்படிக் கருதமுடியும்? இது கட்சி அரசியற் பார்வையே. அந்த அரசியலின் சராசரி மனநிலையே.

5. 'கறுப்பு வெள்ளை அரசியலைக் கடைப்பிடித்துக் கொண்டே கறுப்பு வெள்ளை அரசியலையும் மக்கள் நல அரசியலையும் குறித்துப் பேசுகிற அவலமாகவே கருணாகரன் அவர்களது அவதானம் இருக்கிறது' என்பதைப் பற்றி.

எத்தகைய அடிப்படைகளை வைத்துக்கொண்டு யமுனா எதைக் குறிப்பிடுகிறார் என்பதை அவர் ஆதாரங்களுடன் முன்வைக்கவில்லை. ஆதாரமற்ற முறையில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்குப் பொருள் என்னவாக இருக்கமுடியும்? 1980 களில் ஈழப்போராட்டத்தின் ஈர்ப்பு விசைக்குள் உள்வாங்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அந்த நாட்களில் அந்த விசையின் இழுவைக்குள் நடந்த அத்தனை சம்பவங்களுக்கும் விளைவுகளுக்கும் நேரடிப்பொறுப்பாளியாக நான் இருக்கவில்லை என்றபோதும் 'எதிலும் எனக்குப் பொறுப்பில்லை' எனக் கைகளைக் கழுவிக்கொள்வதை என்றும் நான் ஏற்றுக்கொண்டதில்லை. அதேவேளை எங்களின் தவறுகளையும் பலவீனங்களையும் அனுபவங்களின் வழியாகவும் வரலாற்றறிவின் வழியாகவும் களைய வேண்டும். புதிய சிந்தனையுடன் விடுதலையை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். தொடர்ந்தும் நாம் அலைய முடியாது, சனங்கள் தொடர்ந்தும் துயரங்களோடு வாழ இயலாது என்பதை அழுத்திக் கூறிவருகிறேன். இங்கே கறுப்பு வெள்ளை அரசியலுக்கு நாம் பலியான விதத்தை என் சொந்த அனுபவத்தையும் உள்ளடக்கியே பார்க்கிறேன். புலிகளின் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அத்தனைக்கும் நாம் பங்காளிகள், உடன்பாட்டாளர்கள் என்று இல்லாது விட்டாலும் அவர்களின் தளத்தில் நின்று செயற்பட்டவர்கள் என்ற காரணத்தின் பொருட்டும் நியாயத்தின் பொருட்டும் ஏற்பட்ட நன்மை, தீமைகள் அனைத்திற்கும் நாமும் பொறுப்பாளிகளே. அதற்கான தண்டனைகளை நான் அனுபவித்துக் கொண்டேயிருக்கிறேன்.

மேலும் இந்த விசயங்களை விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னரே நான் எழுதி வரும் பல கட்டுரைகளில் காணமுடியும். இது தவிர, அவற்றில் வரலாற்றறிவும் சமகால உலக அரசியற் போக்குப் பற்றிய புரிதலும் ஒற்றை மைய உலகின் தோற்றம் குறித்த அவதானமும் ஈழவிடுதலைப்போராட்டத்துக்கு அவசியமானது என்று வலியுறுத்தியிருக்கிறேன். குறிப்பாக, மு. திருநாவுக்கரசுவின் 'ஒற்றை மைய உலகில் போரும் சமாதானமும்' என்ற புத்தகத்துக்கு எழுதிய விமர்சனத்தில் இது பற்றிய விளக்கம் தெளிவாகவே உள்ளது. மேலும் ஏராளமான கட்டுரைகளிலும். இது 'இறுதி நிகழ்ச்சி'களின் பின்னர் இன்னும் விரிவடைந்து மேலும் செழிப்படைந்துள்ளது. இந்த இடத்தில் என்னுடைய எழுத்துகளையும் சிந்தனையையும் பலரும் வரவேற்கிறார்கள். அதேவேளை இன்னொரு அணியினர் கடுமையாக எதிர்க்கிறார்கள். சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். சிலர் விவாதங்களின் பின்னர் ஏற்றுக்கொள்கிறார்கள். இதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆதரிப்பவர்களைச் சார்ந்தோ, அவர்களைத் திருப்திப்படுத்தியோ நான் செயற்படவில்லை. அப்படிச் செயற்படவேண்டிய அவசியமும் எனக்கில்லை. மீண்டும் சொல்கிறேன், இந்த வரலாற்றில் நன்மைக்கும் தீமைக்கும் நானும் பொறுப்பாளி என்ற உணர்வுடனே செயற்பட்டு வருகிறேன். இதை என்னுடைய கவிதைகளிற் துலக்கமாகக் காண முடியும். ஆனால், யமுனா இவற்றைக் கவனிக்காமல் விட்டது அவதானக்குறைவா? அல்லது திட்டமிட்ட நோக்கைக் கொண்டதா? என்று புரியவில்லை. எனவே இந்த நிலையில் எப்படி கறுப்பு வெள்ளை அரசியலைத் தொடர்ந்தும் நான் கடைப்பிடிக்கிறேன் என்றும் மக்கள் நல அரசியலைப் பேசுகிறேன் என்றும் முடிவுக்கு வருகிறார்? இதைக் குறித்த மேலதிக புரிதலுக்காக - இதழ் -38, பெப்ரரி -2012 இல் 'வல்லினம்' இணைய இதழில் வெளியாகிய என்னுடைய விரிவான நேர்காணலை இங்கே இணைக்கிறேன். http://www.vallinam.com.my/issue38/interview1.html

எழுத்தையும் பிரதிகளையும் முன்னிறுத்தி, அவற்றை ஆதாரமாக வைத்துத்தான் எதையும் அணுகுவதாகச் சொல்லும் ராஜேந்திரன், இந்த நேர்காணலைச் சரியாக வாசிக்கவில்லை என்பது தெளிவு. இந்த நேர்காணலில் நான் தெளிவாகவே பல விசயங்களைச் சொல்கிறேன். ஆனால், 'சே குவேரா 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி இலங்கையின் ஹொரானா பிரதேசத்திலுள்ள ஹகல கெலா ரப்பர் தோட்டத்துக்கு விஜயம் செய்தார். இரப்பர் மரங்களைப் பற்றி அறிந்து கொள்வது அவரது திட்டம்.....' என்று எழுதிச் செல்லும் யமுனா ராஜேந்திரன், ஈழ நிலவரங்களைப் பற்றிய முழுமைகளையும் அதில் கர்ணன், கருணாகரன், நிலாந்தன் ஆகியோரைப் பற்றியும் துல்லியமாக அறிய முடியாமலிருக்கிறார். இதற்கான காரணங்கள் உள்நோக்கமன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? தொழிலுக்காக எதையும் படித்து மனனம் செய்து வைத்திருக்கும் திறனை முதன்மைப்படுத்துவோரே இவ்வாறு சிந்திப்பதுண்டு. எனவே இந்த இடத்தில் அறிவு ஒழுக்கத்தின்படி வேறு புதிய விசயங்களை அறிந்து கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ யமுனா ராஜேந்திரன் தயாராகவில்லை. அதற்கு அவருடைய வணிக மனம் இடமளிக்கவில்லை? எவ்வளவுதான் அவர் மறுத்தாலும் இதுதான் அவருடைய அடிப்படையாகும். இல்லையெனில், அவரே வலியுறுத்தும், நம்பும் கோட்பாடுகளின் வழியில் விளிம்பு நிலை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வோடு இணைந்திருப்பார். அந்த மக்களின் வாழ்க்கையையும் அவர்களுடைய போராட்ட உணர்வுகளையும் பிரச்சினைகளையும் புரிந்திருப்பார். குறைந்த பட்சம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியலுக்கான விழிப்புணர்வைத் தூண்டும் செயற்பாட்டுத்தளத்தில், தன்வாழ்வின் நெருக்கடிச் சவால்களுடன், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் போராடிய விடியல் சிவாவைப்போல இயங்கியிருப்பார். அல்லது புரட்சிகர அரசியலை முன்னிறுத்தியதற்காக தேடப்படும் நபராக இருந்த எஸ்.வி.ஆரைப்போல, சிறைவரை சென்ற தியாகுவைப்போல ஒரு கட்டத்திலாவது வாழ்ந்திருப்பார்.

'யோ. கர்ணன், கருணாகரன் போலவே, புகலிட - தமிழக புலியெதிர்ப்பாளர்களின், ஈழவிடுதலை எதிர்ப்பாளர்களின், இலங்கை அரச ஆதரவாளர்களின், இந்த அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் அணிகளை நோக்கி நகர்ந்து விட்டார் என்றே தோன்றுகிறார்' என்று ராஜேந்திரன் குறிப்பிடுவதைப் பற்றி.

இதிலும் யமுனா ராஜேந்திரன் திட்டமிட்டே செயற்படுகிறார் என்றுதான் படுகிறது. இதை நான் வன்மையாகவே கண்டிக்கிறேன். எந்த அடிப்படையில் இவ்வாறு யமுனா ராஜேந்திரன் இத்தகைய தீர்மானத்துக்கு வருகிறார் என்று திரும்பவும் கேட்கிறேன். புலி எதிர்ப்பு அணியின் விருப்பத்தைப் பெறுவதற்காக, அரச சார்பானவர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு எங்கே நான் எழுதியிருக்கிறேன்? அதை யமுனா ராஜேந்திரன் மட்டுமல்ல, வேறு யாராவது ஆதாரப்படுத்த முடியுமா? அவ்வாறு ஒரு சொல்லை, ஒரு வார்த்தையை இவர்களாற் காட்டமுடியுமா? மேலும் புலி எதிர்ப்பாளர்களின் - அரச ஆதரவாளர்களின் "பொற்கிளிகள்" எதுவும் என்னிடமில்லை. அவர்களால் பொன்னாடைகளை எப்போது நான் போர்த்திக்கொண்டேன்? யார் அந்தப் பொன்னாடைகளை எனக்குப் போர்த்தியது? யார் அது சார்பான கிரீடங்களைச் சூட்டியது? எங்கே அவற்றைப் பெற்றிருக்கிறேன்? அல்லது அத்தகைய அங்கீகாரத்தை எப்போது நான் ஏற்றும் விரும்பியுமிருக்கிறேன்? கடந்த கால நிகழ்ச்சிகளின் சாட்சியாக நானும் இருப்பதால், அந்த அனுபவங்களை பகிரவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதால் அவற்றை எழுதுகிறேன். அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு புதிய காலமொன்றை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். அதை ஏற்பவர்களையும் விரும்புகிறவர்களையும் வைத்துக்கொண்டு எவ்வாறு என்னை இவ்விதம் அளக்க முடியும்? எல்லாவற்றுக்கும் அப்பால், என்னுடைய அனுபவங்களைப் பகிர்வதையும் வரலாற்று நிகழ்ச்சிகளை வெளிப்படுத்துவதையும் அதிலிருந்து பொருத்தமான தெரிவுகளைச் செய்யலாம் என்று கூறுவதையும் பலரும் வாசிக்கிறார்கள். நான் முன்னரே சொன்னதைப்போல அவர்களில் பாராட்டுவோரும் இருக்கிறார்கள். எதிர்ப்போரும் இருக்கிறார்கள். நான் யார் சார்பாகவும் செயற்படவில்லை. யாரையும் திருப்திப்படுத்துவது என்னுடைய நோக்கமும் இல்லை. என்னுடைய நிலை நின்று எழுதுகிறேன். வரலாற்றின் சாட்சியாக, நல்லவற்றுக்கும் கெட்டவற்றுக்கும் சாட்சியாக நின்று எழுதுகிறேன். தீமைகளிலிருந்தும் தோல்விகளிலிருந்தும் நாம் மீள வேண்டும் என்பதே என்னுடைய ஆவல். அவ்வளவுதான். என்னுடைய வெளிப்பாடுகள் அத்தனையும் எழுத்து மூலமானவையே என்பதால், அவற்றை வைத்து என்னால் இதை நிறுவமுடியும்.

ஆனாலும் ஒரு விசயத்தை யமுனா ராஜேந்திரன் ஏற்றுக்கொள்கிறார், 'சிலருக்குத் தமது அனுமானங்களின் அடிப்படையில் எனக்கு முத்திரை குத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஐ.பி.ஸி, நிருபம், குளோபல் தமிழ் நியூஸ் என வேறுபட்ட தளங்களில் நான் ஊதியத்திற்கென வேலை செய்தாலும் எனது சுயாதீன நிலைப்பாட்டிலேயே நான் இருந்து வந்திருக்கிறேன். இந்த மூன்று இடங்களிலும் இதனைச் செய் என எவரும் என்னை நிர்ப்பந்தித்தது இல்லை. அதற்கு நான் அடிபணிந்ததும் இல்லை. அகிலனோ அல்லது என்மீது இயக்க முத்திரை குத்துபவர்களோ எனது எழுத்துகளில் இருந்து அதற்கான ஆதாரங்களை முன்வையுங்கள் எனத் திரும்பத்திரும்பக் கோரி வருகிறேன். எவராலும் அதனை முன்வைக்க முடிவதில்லை. அதனை எவராலும் முன்வைக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும்' என்று. இதையே நானும் யமுனா ராஜேந்திரனுக்குத் திருப்பிச் சொல்கிறேன். உங்களுக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதி என்று ஏன் சிந்திக்கிறீர்கள்?

இறுதியாக, யமுனா ராஜேந்திரனைப் போன்றவர்களைப்போல நான் பிரச்சினைகளின் களத்தை விட்டு எப்பொழுதும் வெளியேறவில்லை. பிரச்சினைகளின் மையத்தில், நெருக்கடிகள் மத்தியில், அவலப்பரப்பில், சனங்களோடு சனமாகவே தொடர்ந்தும் இருக்கிறேன். சனங்கள் சந்தித்த அத்தனை வலிகளையும் சுமைகளையும் அவமானங்களையும் நானும் சந்தித்திருக்கிறேன். என் பொருட்டு என்னுடைய குடும்பமும் இதையெல்லாம் முழுமையாகச் சந்தித்திருக்கிறது. இன்னும் சந்தித்துக்கொண்டேயிருக்கிறது. கடந்த காலத்தில் எங்கள் அரசியல் வழிமுறைகளில் இருந்த அரசியற் தவறுகளும் அறப்பிழைகளும் எங்களுடைய வாழ்க்கையை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளன. அதற்கான தண்டனையை நாங்கள் ஏற்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் எங்களின் வாழ்க்கை முறையே எங்களின் பலம். அதுவே எங்களுடைய சேதி. இதைப் 'பொங்குதமிழ்' ஆசிரிய பீடமும் அறியும்.

ஆனால், யமுனா ராஜேந்திரனோ, ஈழத்துக்கு நிகரான பல பிரச்சினைகள் தமிழகத்திலும் இந்தியாவிலும் இருக்கும்போது அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, அங்கிருந்து வெளியேறி, வளர்ச்சியடைந்த லண்டனை நோக்கிப் பெயர்ந்தவர். இவ்வளவுக்கும் ஈழத்திலிருந்த அரசியல் நெருக்கடிகள் அளவுக்கு, உயிராபத்துகளின் அளவுக்கு தமிழகத்தில் ராஜேந்திரனுக்குப் பிரச்சினைகள் இருக்கவில்லை. இளமைக் காலத்திலேயே புரட்சியின் மீது ஆர்வமும் பற்றும் கொண்ட அவர் எப்படி லண்டனைத் தேர்ந்தெடுத்தார்? அவருடைய கால்களும் மனமும் பயணித்திருக்க வேண்டிய இடங்கள் வேறாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பிரித்தானியச் சாம்ராஜ்ஜியம் எப்படி இத்தனை வளமுடையதாகியது? நூற்றாண்டுகளாக, ஆசிய, ஆபிரிக்க, அவுஸ்ரேலியக் கண்டங்களில் சுரண்டிய வளங்களும் அந்த மக்களின் குருதியும் வியர்வையையும் கண்ணீருமே இன்றைய பிரித்தானியா. அப்படிப் பார்த்தால், ராஜேந்திரன் குடிப்பது இந்த மக்களின் கண்ணீரும் இரத்தமுமே. ராஜேந்திரன் அனுபவிப்பது இந்த மக்களுடைய வியர்வையின் விளைச்சல்களையே. எங்கள் முன்னோர்களின் இரத்தைத்தையும் கண்ணீரையுமே.

ஆனால், யமுனா விரும்புகின்ற, ஆதர்சமாகக் கொள்கின்ற சே குவேராவோ கியூபாவில் அதிகாரமும் பாதுகாப்பும் வசதியுமுள்ள வாழ்க்கை இருந்தபோதும் அதை விட்டு விட்டுப் போராடும் தேவையுள்ள இடத்தை நோக்கிப் பயணித்தவர். அந்தப் பயணத்தில் சோதனைகளையும் வேதனைகளையும் தெரிந்து கொண்டே சந்தித்தவர். இறுதியில் அந்தப் பயணத்தில் மரணத்தையே தழுவியவர். சே குவேரா, யமுனா ராஜேந்திரனுக்கு வாசிப்பின்பத்தை அளிக்கிறார். எங்களுக்கோ வாழ்க்கைத் தோழனாகிறார். அதுபோலவே எழுத்து ராஜேந்திரனுக்குத் தொழிற்றுறை சார்ந்த ஒன்று. எங்களுக்கு அது வாழ்க்கையின் ஊற்று.

யமுனா ராஜேந்திரன், தான் பிறந்து வளர்ந்த மண்ணில் இன்றிருக்கின்ற பெரும்பிரச்சினைகளான முல்லைப்பெரியாறு, காவிரியாறு, கூடங்குளம் அணுமின்நிலையம் போன்ற பிரச்சினைகளையும் ஒடுக்கப்பட்டோர் விவகாரங்களையும் பொருட்படுத்த விரும்பவேயில்லை. அவை அவருடைய கண்களுக்குப் புலப்படவும் இல்லை. மேலும் இந்திய மண்ணில் நீடிக்கின்ற அசாம், காஸ்மீர், பஞ்சாப், மணிப்புரி போன்ற பெரும்பாலான மாநிலங்களில் நிலவுகின்ற இராணுவ வேட்டைகளையும் ஒடுக்குமுறைகளையும் காணவில்லை. ஏன், தமிழக - இலங்கை மீனவர் பிரச்சினையைப் பற்றிக்கூட ராஜேந்திரன் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அவற்றின் வேர்களைக் கண்டறியும் முயற்சியில் அவர் இறங்கவும் இல்லை. இந்தப் பிரச்சினைகளோடு போராடும் மக்களுடன் இணைந்திருக்க விரும்பவுமில்லை. அதற்கான அக்கறைகளே அவரிடம் இல்லை. இவற்றைப் பற்றி ஆயிரக்கணக்கான கட்டுரைகளை 'தொலைநோக்கி'களில் பார்த்து அவரால் எழுதிக்கொண்டிருக்க முடியுமே தவிர, இந்தப் பிரச்சினைகளின் மையத்தில் இறங்குவதற்கு அவரால் ஒரு போதுமே இயலாது. ஆனால், ஒரு இடதுசாரி அப்படி இருக்க முடியாது. தத்துவங்களையும் வியாக்கியானங்களையும் மட்டும் பேசிக்கொண்டிருக்கும் காலம் இதுவல்ல. ஊடகத்துறையைச் சேர்ந்த மிக இளவயதுடைய கவின்மலர், பாரதித்தம்பி, குட்டிரேவதி போன்றோரே சனங்களின் போராட்டங்களோடிணைந்து வேலைசெய்யும் நிலை இன்று. அவர்கள் தங்கள் பங்குக்கு எழுதிவிட்டு தங்களின் வாழ்வை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கவில்லை. எழுத்தை நடைமுறையாக்கும், மாற்றங்களைச் செயல்முறையாக்கும் தேவையுள்ள சூழல் இது. ஒரு இடதுசாரியின் பாத்திரம் என்பது, பங்காளி, பங்கேற்பாளன் பற்றிய விளக்கங்களைச் சொல்வதில் அர்த்தம் பெறுவதில்லை. தான் நம்புகின்ற கோட்பாட்டின்வழி, தான் நேசிக்கின்ற சமூகத்துக்காக, தன்னை உட்படுத்திச் செயற்படுவதிலேயே அது முழுமையடைகிறது; அடையாளம் பெறுகிறது. அல்லது கோட்பாடுகளில் இருந்தும் நடைமுறையில் இருந்தும் இறங்கிச் சென்றதாக யமுனா ராஜேந்திரனே குற்றம்சாட்டுகின்ற தமிழகத்தின் இடசாரிகளையும் விட மோசமானவராகவே அவர் இருக்க முடியும். இங்கே நாம் ஈழத்தில் வந்து போராடுங்கள், ஈழத்தமிழர்களின் துயரங்களைச் சுமந்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தவோ வலியுறுத்தவோ இல்லை. யமுனா ராஜேந்திரன் பிறந்து வளர்ந்த நாட்டின் மக்களுக்காக, அவருடைய சனங்களுக்காக, அவர் விரும்புகின்ற சனங்களுக்காக ஏதாவது செய்யுங்கள் என்றே கேட்கிறேன். அப்போதுதான் அவர் எழுதுவதற்கான அறத்தை அவரால் பெற முடியும். இல்லையெனில், ஈழத்தைச்சேர்ந்த ஒருவர் ஈழ நிலவரங்களைப் புறக்கணித்து விட்டு பலஸ்தீனத்தைப் பற்றியோ கிழக்குத் திமோரைப் பற்றியோ சுலபமாகப் பேசுவதற்கு நிகரானது. இப்படியே ஒருவர் பேசித் தன்னுடைய போராட்டப் பங்கேற்பை நிகழ்த்தி விடலாம். ஆனால் அது ஒரு அசல் தப்பிலித்தனமாகும்.

இதனாற்தான் போராட்டங்களைப் பற்றியும் போராளிகளைப் பற்றியும் கதைப்பதை விட ஒரு போராளியாக வாழ்வதே தேவையானது என்றேன். அதுவே சிறந்ததும். தன்னைப் பாதுகாப்பதற்கான உபாயங்களை ஒருவர் வகுப்பதை விடவும் சனங்களையும் அவர்களுடைய வாழ்க்கையையும் பாதுகாத்து மேம்படுத்துவதற்கு அதிகாரச் சக்திகளுக்கெதிரான வியூகங்களை வகுப்பதே அவசியம். அதுவே ஒரு போராட்ட விரும்பிக்கு அழகு. அதுதான் சனங்களைப் பற்றிச் சிந்திப்பவனின் வேலை.

இலங்கையில் நடந்த யுத்தத்திற்கு தனியே சிங்களத்தரப்போ, மகிந்த ராஜபக்ஷ அரசோதான் பொறுப்பு என்று யமுனா ராஜேந்திரன் நம்புகிறார். ஆனால், சர்வதேச அரசியலைப் பேசும் அவர், இடதுசாரிய அரசியலின் வழியில் வந்ததாகக் காட்டும் அவர், இந்த யுத்தத்தில் பிற ஆதிக்கச் சக்திகளான இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா , கியுபா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், யப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகள் வகித்த பாத்திரங்களைப் பற்றி அறியாதிருக்கிறார். இந்தச் சக்திகள் தங்களின் அதிகாரப் போட்டிக்காகவும் நலன்களுக்காகவும் எப்படித் தொழிற்பட்டன என்பதை உணராதிருக்கிறார். ஈழ யுத்தம் என்பது ஒரு கூட்டு யுத்தம் என்பதையும் கூட்டுப்படைகளில்லாத ஒரு கூட்டு நடவடிக்கையாகவே அது நடந்தது என்பதையும் ராஜேந்திரன் அறியவில்லை.

அப்படி அவர் இந்த உண்மைகளை அறிந்திருந்தால் அவர் எப்போதோ லண்டனை விட்டு, ஐரோப்பிய நாடுகளை விட்டு, இந்தியாவை விட்டு நீங்கியிருப்பார். ஏன் இந்தப் பூமியை விட்டே நீங்கியிருப்பார். வேறு கிரகங்களுக்கும் அவர் போகமுடியாது. அங்கும் ரஷ்யாவும் அமெரிக்காவும் பிற ஆதிக்க சக்திகளும்தான் கொடிகளை நாட்டியுள்ளன. போதாக்குறைக்குப் பிற கிரகங்களை நோக்கிச் செய்மதிகளையும் அவை அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

எனவே மீண்டும் சொல்கிறேன், போராட்டங்களைப் பற்றி லட்சம் பக்கங்கள் எழுதுவதை விடவும் போராட்டத்திற் பங்கெடுப்பதே மேலானது. அந்தக் களத்தில், அந்த மக்களுடன் வாழ்வதே சிறப்பு. அந்த அனுபவமும் அறிவுமே உண்மையை அறியவும் நெருங்கவும் அறியவும் சுவைக்கவும் கூடியதாக இருக்கும். சரியும் பிழையும் அங்கேதான் விளங்கும். யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான வெளியின் அளவையும் தன்மை வேறுபாட்டையும் அங்கே தெளிவாக உணர முடியும்.

'இல்லை, மற்றொரு வானத்தின் கீழும் அல்ல

அந்நியச் சிறகுகளின் அரவணைப்பில் அல்ல

அன்று நான் எனது நாட்டு மக்களோடு இருந்தேன்

என் நாட்டு மக்களுக்கு விதிக்கட்டிருந்த இடத்தில்'

- அன்னா அக்மதோவா

- இந்த எதிர்வினைக் கட்டுரைக்கான தலைப்பு அன்னா அக்மதோவா அவர்களின் இரங்கற்பா என்ற கவிதையில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=9&contentid=831c8329-6294-476e-8729-de8b64d50b93

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]என்னுடைய வானமும் எவரது வானமும்[/size]

யமுனா ராஜேந்திரன்

I.

எனது நூல்களைச் சேகரித்து வைத்திருந்ததாகக் கருணாகரன் எழுதுகிறார். எழுதுபவனுக்கு இப்படியான சொற்களைக் கேட்பதனைவிடச் சந்தோஷம் ஏதும் இருக்க முடியாது. நன்றி கருணாகரன். 'வசைகள், புறக்கணிப்புகள், குற்றச்சாட்டுகள், அபத்தங்கள், அறிவொழுக்கமற்றவை, பயனற்ற எதையும் கரைத்துக் குடித்துத் தலையையும் மனதையும் பாழாக்கி வைத்திருப்பவை' என 'நாகரீகமாக' எனது 'இன்றைய' கட்டுரைகளை அணுகியிருக்கும் கருணாகரனுக்கு 'மனவருத்தத்துடன்' பதிலை எழுத வேண்டியவனாக இருக்கிறேன். திரும்பத் திரும்பப் பதிலிறுத்த விஷயங்களில் மீளவும் கருத்துச் சொல்ல நான் விரும்பவில்லை. என்னளவில் அரசியலையும் கருத்தியலையும் இலக்கியப் பிரதி குறித்த அவரது கருத்தாக்கங்களையுமே இங்கு விவாதிக்க நினைக்கிறேன்.

முள்ளிவாய்க்கால் பேரழிவில் இலங்கை அரசு, விடுதலைப் புலிகள், ஐ.நா அறிக்கை போன்றவற்றின் நிலை, தனது எதிர்கால அரசியல் நிலைபாடு போன்றவை குறித்துக் கருணாகரன் பேசியிருக்கிறார். முதலாவதாக இலங்கை அரசு (சிங்களத்தரப்பு பிளஸ் மகிந்த அரசு) குறித்த எனது மதிப்பீட்டை அவர் கேள்விக்கு உட்படுத்துகிறார். உண்மையில் எனது மதிப்பீட்டை அவர் தெளிவாகவே புரிந்திருக்கிறார். ஆம், மகிந்த ராஜபக்சே மட்டுமல்ல, அதற்கு முன்னருமான சிங்கள ஆட்சியாளர்கள் மற்றும் இலங்கை அரசு குறித்த எனது மதிப்பீடு இதுதான்: இந்தப் பேரழிவின் தோற்றத்திற்குக் காரணமும் முதல் பொறுப்பும் இலங்கை அரசுக்கு உரியது என்றுதான் நான் திடமாக நம்புகிறேன். அற்கான வலிமையான கோட்பாடு மற்றும் வரலாற்றுப் புரிதல் எனக்கு இருக்கிறது.

II.

இலங்கை நிலைமையில் தமிழர்களுக்கிடையில் இருவிதமான சிந்தனைப் போக்குகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. நடந்த அனர்த்தங்கள் அனைத்துக்கும் காரணமாகத் தமிழ் அரசியலின் தவறுகளையும் பின்னடைவுகளையும் பிரதானப்படுத்தி விவாதிக்கும் போக்கு ஒன்று. தமிழர்களுக்கு நேர்ந்த அழிவுகள் அனைத்துக்கும் இலங்கை அரசே காரணம் என விவாதிக்கும் போக்கு பிறிதொன்று. முள்ளிவாய்க்காலின் பின் முன்னாள் போராளி இயக்கங்களிலுள்ள கணிசமானர்கள் முதலாவது போக்கை முன்வைக்கிறார்கள். ஆயுதப் போராட்டமே தவறான தேர்வு எனும் நிலைபாட்டுக்கும் அவர்கள் வருகிறார்கள். தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்றோ தாம் தவறாக வழிநடத்தப்பட்டுவிட்டோம் என்றோ சொல்கிறார்கள். யாரால், எதனால் ஏமாற்றப்பட்டார்கள்;, தவறாக வழிநடத்தப்பட்டார்கள் எனும் பிரச்சினையை அவர்கள் விரிவாக விவாதிப்பதில்லை. தேர்வில் தமக்கு இருந்த கூட்டுப்பொறுப்பையும் அவர்கள் வேகமாகக் கடந்து சென்றுவிடுகிறார்கள். குறிப்பாக எழுபதுகளில் தோன்றிய இளைஞர் இயக்கங்கள் அனைத்தும் ஆயுதவிடுதலைப் போராட்டத்தை 'கடப்பாட்டுடன்' ஏன் தேர்வு செய்தன, அதற்கு 'வெகுமக்களின் ஒப்புதல்' எவ்வாறு அமைந்தன என்பது குறித்த 'வரலாற்றுரீதியான' மெய்மையை அவர்களால் விளக்கவும் முடிவதில்லை. பெரும்பாலுமான மாற்றுக்கருத்தாளர்கள் இந்த நிலைப்பாட்டிலேயே கால்கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது போக்கை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் தமிழ் அரசியலின் தோல்விகள், பின்னடைவுகள் போன்றவற்றுக்கான காரணங்களை முழுமையாக இலங்கை அரசிடமும் உலக அரசியல் சக்திகளிடமும் தேடுகிறார்கள். தவறுகள், அது தந்திரோபாயம்-அரசியல்-ஸ்தாபனம் என எந்த மட்டத்திலும் நிகழவில்லை என்கிற மாதிரியான நோக்கிலிருந்து 'பிரச்சினைகளை எதிர்கொள்வதில்' இருந்து இவர்கள் விலகிச் செல்கிறார்கள். தாம் ஒரு தனியரசுக்கான கட்டுமானங்களை உருவாக்கி வருகிறோம் எனக் கருதியவர்கள், தாம் எதிர்த்துப் போராடும் கொடுங்கோன்மை அரசுடன் ஒப்பிட விடுதலை அரசொன்று கொண்டிருக்க வேண்டிய வித்தியாசங்களை முற்றிலும் மறுத்தவர்களாக இவர்கள் இருந்தார்கள். சமூக உருவாக்கத்தில் அரசின் பாத்திரம் எனும்போது வெகுமக்களுக்கும் அரசுக்கும் இருக்க வேண்டிய உறவு குறித்தே நாம் பேசுகிறோம். இந்த உறவில் 'அதிகாரம் எனும் நிர்வாக அலகு செலுத்தும் பாத்திரம்' குறித்தே நாம் பேசுகிறோம். இது குறித்த பிரக்ஞை போராடியவர்களுக்கு இல்லை என்பதினாலேயே அவர்கள் இறுதியில் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் எஜமானர்களாக ஆகினார்கள். விடுதலைப் புலிகள் இந்த நிலைபாட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மார்க்ஸ், எங்கெல்ஸ், கிராம்சி தொடர்ந்து நோம் சாம்ஸ்க்கி போன்றவர்களை நாம் அரசு, அடித்தளம், மேல்தளம் மற்றும் இணக்கத்தை உற்பத்தி செய்தல் போன்ற பிரச்சினைகள் குறித்து ஆழமாகப் பேசிய சிந்தனையாளர்கள் எனலாம். கிராம்சி, மார்க்சியக் கருத்தாக்கமான மேல்தளம் என்பதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறார். 'அரசியல் சமூகம்' எனவும் 'குடிமைச் சமூகம்' எனவும் இதனை அவர் சுட்டுகிறார். ராணுவம், காவல்துறை, நீதியமைப்பு போன்றவற்றை அவர் அரசியல் சமூகம் என்கிறார். நிலவும் அரசியலை அச்சமூகத்தில் வாழும் மக்களினிடையில் 'நிலைநிறுத்தும்' சமூகமாக இது இயங்குகிறது. குடிமைச் சமூகம் என்பதனை 'மேலாண்மைக்கான இணக்கத்தை உற்பத்தி' செய்யும் சமூகம் என அவர் குறிப்பிடுகிறார். மதம், சடங்குகள், நாட்டுப்புற வழக்குகள், அன்றாட மனித உறவுகள் போன்றவற்றை குடிமைச் சமூகக் கூறுகள் என அவர் சொல்கிறார். இலங்கையின் குறிப்பிட்ட சூழலில் அடித்தளத்தில் வர்க்கத்திற்கு இணையான பாத்திரத்தை மட்டுமல்ல, சிவில் சமூக மேலாண்மைக்கான இணக்கத்தை உற்பத்தி செய்யும் பாத்திரத்தையும், அரசியல் சமூகமான ராணுவம், காவல்துறை, நீதித்துறை, கல்வி போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சமூகத்தின் பாத்திரத்தையும் 'இனம்' எடுத்துக் கொள்கிறது. இந்த குறிப்பிட்ட நிலைமையில் இருந்து பார்க்கும்போது இலங்கையில் இன்று வரலாற்றுரீதியில் நிர்ணயமான கூறாக இருப்பது, மேல்கட்டுமானம் (அரசியல் சமூகம், சிவில் சமூகம் என இரண்டும்) அடிக்கட்டுமானம் (உற்பத்தி உறவுகள்-உற்பத்தி சக்திகள்) என அனைத்திலும் விரவியிருக்கிற கூறாக 'இனம்' எனும் பிரச்சினையே இருக்கிறது. இந்நிலைமை முற்றிலும் அல்லது அறுதித் தேர்வில் பொருளாதார நிர்ணயம் மற்றும் வர்க்கம் எனும் பாத்திரங்களை இல்லாது செய்துவிடுகிறதா? நிச்சயமாக இல்லை. இலங்கைச் சூழலில் தமிழர்-சிங்களவர்-இஸ்லாமியர் என அனைத்து சமூகத்தினிடையிலும் வர்க்கம், பொருளாதார அடித்தளப் பகுப்பாய்வு என்பதனைக் கூட, 'இனம் ஊடறுத்துச் செல்வதாகவும் நிர்ணயிக்கத் தக்கதாகவும்' இருப்பதை ஒருவர் காணமுடியும்.

மேல்கட்டுமானத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட கூறு ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் தீர்மானிக்கும் 'மேல் நிர்ணயக் கூறாக இருக்கலாம்' என அல்த்தூஸர் வலியுறுத்துவதனை இலங்கைக்கு நாம் பொருத்திப் பார்க்கலாம். மதம், சாதி, ராணுவம், காவல்துறை, நீதித்துறை, கல்வி, போன்ற மேல்கட்டுமான அரசியல்-சிவில் சமூகக் கூறுகள், பொருளாதார வாய்ப்புகள், உற்பத்திக் கட்டுமானங்கள், தொழில்துறை வளர்ச்சி, மூலதனம் மற்றும் உற்பத்தி போன்றவை யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன, எவரது அதிகாரத்தின் கீழ் உள்ளன எனப் பகுப்பாய்வு செய்யும்போது 'இனம்' என்பதுவே இங்கு மேல் நிர்ணயக்கூறாக இருக்கிறது. வர்க்கப் பிரச்சினை கூட இங்கு இனப்பிரச்சினையால் மேல்நிர்ணயம் செய்யப்படுவதாக இருக்கிறது. இந்த வகையில்தான் மார்க்சிய மொழியில் இலங்கையில் 'இனம் என்பது பிரதான முரண்பாடாக இருக்கிறது' என நாம் குறிப்பிடுகிறோம். இதனை ஈழத்தமிழ் மார்க்சியர்கள் ஏற்று, அதற்கான செயல்பாட்டுத் தந்திரத்துடன் செயல்படுகிறார்கள் எனச் சொல்ல முடியாது.

அரசியல் சமூகம், சிவில் சமூகத்தைத் தனது ஆளுகைக்குள் வைத்துக் கொள்வதற்கு வன்முறைத் திணிப்பை மட்டுமல்ல அவர்களது 'இணக்கத்தையும் ஆயுதமாகக் கொள்கிறது'. காலனித்துவத்திற்குப் பின்னான காலத்தில், தகவல் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் நம் காலத்தில், இந்த இணக்கத்தை வன்முறைத் திணிப்பின் மூலம் செய்வதனை விடவும், 'இணக்கத்தை உற்பத்தி செய்வது' எனும் வடிவில் அதனை அரசியல் சமூகம் மேற்கொள்கிறது. அதனை கருத்து யுத்தம் என, பிரச்சார யுத்தம் என நாம் குறிப்பிடுகிறோம். தொலைக்காட்சிகளும் அதிகம் விநியோகமாகும் வெகுஜனப் பத்திரிக்கைகளும் இந்த இணக்கத்தை உற்பத்தி செய்யும் பணியைக் கச்சிதமாகச் செய்கின்றன. எந்தப் பிரச்சினையை முன்னிலைப்படுத்துவது, எதனைப் பின்னுக்குத் தள்ளுவது எனும் தேர்வின் அடிப்படையில் வெகுமக்களினிடையில் கருத்திணக்கத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். சிவில் சமூகத்தினுள் கருத்திணக்கத்தை உருவாக்குதல் எனும் கிராம்சியக் கருத்தாக்கத்தின் நீட்சியாகவே நாம் நோம் சாம்ஸ்க்கி பேசுகிற இணக்கத்தை உற்பத்தி செய்வது எனும் கருத்தாக்கத்தையும் காணலாம். தென்னிலங்கையின் ஊடகங்கள் வடக்கில் அரசினது மீறல்களை தென்னிலங்கை மக்களுக்குத் தெரிவிப்பதில்லை என மனோ கணேசன் சொல்வதை இங்கு நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாற்றுக் கருத்தாளர்கள், விடுதலைப் புலிகள் என இருதரப்பிலுமுள்ள 'வரலாற்றுக் கேள்விகளைப் புறக்கணிக்கும்' நிலைபாடுகளை நாம் அவதானிக்கிறோம். அடித்தளம், மேல்தளம், மேல்தளத்திலுள்ள அரசியல் சமூகம்-சிவில் சமூகம் என அனைத்திலும் விரவியிருக்கிற இனம் எனும் நிர்ணயவாதக் கூறையும் நாம் இனம் கண்டிருக்கிறோம். தமிழ் சமூகத்தினுள் நடந்தேறவேண்டியவை என நாம் இன்று எதனை முன்னிறுத்த முடியும்? தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட தவறுகள் என எதனை நாம் இன்று முன்னிறுத்த முடியும்? அதற்கான பொறுப்பை எவர் ஏற்பது? அல்லது அவ்வாறான பொறுப்பை ஏற்காதவர்கள் முன்னிறுத்தும் அரசியல் எத்தகையது?

ஆயுதப் போராட்டம் தொடர்பான தேர்வு, நடைமுறை, ஸ்தாபனப் பிரச்சினைகள், மக்களை இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்தியமை, இயக்க உள் முரண்பாடுகளை ஆயுத முனையில் தீர்த்தமை, இயக்கத்தினுள் பாலியல் வல்லுறவு, பிரதான அரசியல் முரண்பாடுகளை ஆயுதமுனையில் தீர்க்கவிளைந்தமை என அனைத்துக்கும் விடுதலைப் புலிகளை 'மட்டுமே' சுட்டிக்காட்டி, அவர்கள் 'மட்டுமே' தமிழ் அரசியலின் அழிவுக்குக் காரணம் எனச் சொல்லிவிடமுடியுமா? சிங்களபௌத்த இனவாத அரசியலுக்கும் தமிழின அரசியலுக்கும் உள்ள பிரதான அரசியல் முரண்பாட்டினை மட்டுமல்ல, சர்வதேச அரசியல் முரண்பாடுகளையும் கொலைகளினால் தீர்க்க முற்பட்ட பிரதான அரசியல் தவறொன்றினைத் தவிர, பிற பிரச்சினைகளில் தவறுகள் அனைத்தையும் விடுதலைப் புலிகளின் மீது மட்டும் எவரும் சுமத்திவிட முடியாது.

தேசிய, சர்வதேசிய அரசியல் சமூகத்தைக் கையாள்வதில் விடுதலைப் புலிகள் விட்ட தவறுகளே விடுதலைப் புலிகள் விட்ட மிகப்பெரும் தவறு. பின்னாளில் அதீதமாக விடுதலைப் புலிகள் விட்ட பிற தவறுகள் அனைத்தின் நடைமுறையிலும் பிற இயக்கங்களுக்கும் பொறுப்பு உண்டு. அது குறித்த மனம் திறந்த விமர்சனங்களை விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகள் அல்லாதவர்களும், மாற்றுக் கருத்தாளர்களும் முன்வைக்க வேண்டும். அடுத்த தமிழ் தலைமை என்பது இதனால் மட்டுமே ஆரோக்கியமாக உருவாக முடியும்.

ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல் சமூகம் தன்னை ஒன்றுதிரட்டிக்கொள்வது என்பது தன்னைத்தானே அது ஜனநாயகப்படுத்திக் கொள்வது என்பதன் மூலமே சாத்தியம். சோவியத் யூனியனின் உடைவு, பின்புரட்சிகர சமூகங்களின் அனுபவம், இரு தசாப்தங்களில் தமிழில் முனைப்புப் பெற்றிருக்கும் தலித்தியம், பெண்ணுரிமை அரசியல், பல்மத-கலாச்சார இணக்கம் போன்ற பின்நவீனத்துவ-பல்கலாச்சார கருத்துப்போக்குகள் என்பதனை தமிழ் அரசியல் சமூகம் சுவீகரித்துக் கொள்ளவேண்டும். அரசியல்-ஸ்தாபன-நடைமுறைப் பிரச்சினைகள் எனும் அரசியல் சமூகத்தின் பண்புகளுக்கு இணையாகக் கவனம் குவிக்க வேண்டிய சிவில் சமூகத்தின் கருத்திணக்கம் தொடர்பான இப்பிரச்சினைகளை ஓரிரவில் தீர்க்க முடியாது என்பது உண்மை. ஜனநாயப்படுத்துதலின் மூலம் கருத்திணக்கத்தை உருவாக்குதல், அதன் வழியில் அரசியல் சமூகத்தை உருவாக்குதல் எனும் முக்கியத்துவத்தையேனும் தமிழ் அரசியல் தலைமைகள் உணர்ந்து அதற்கெனச் செயல்படவேணடும்.

இப்பிரச்சினையில் மூன்று விதமான சக்திகள் தமிழ் சமூகத்தினுள் முரண்பட்டு நிற்கின்றன. இனப்பிரச்சினையின் நிர்ணயவாதத் தன்மையினை ஒப்பி, தமிழ் சமூகத்தின் அரசியல் தலைமையை உருவாக்க வேண்டும் எனும் நிபந்தனையை முற்றிலும் புறந்தள்ளிய, எந்தவிதமான அரசியல் கருத்தியல் தெரிவுகளுமற்ற இணக்க-அபிவிருத்தி அரசியல் தலைமை முதலானது. இனப்பிரச்சினை நிர்ணயத்தை ஒப்பி, அதேவேளை தமிழ் சமூகத்தினுள் எந்தவிதமான ஜனநாயகப்படுத்துதலையும் குறித்த அக்கறையற்ற தமிழ்தேசியத் தலைமை பிறிதொருபுறம். இனப்பிரச்சினையின் நிர்ணயவாதத்தன்மையினை மறுத்து, தமிழ் சமூகத்தினுள் ஜனநாயகப்படுத்துதலை மட்டுமே முன்னிறுத்தியபடி எந்தவிதமான கருத்தியல்-அரசியல் தேர்வுகளையும் முன்னிலைப்படுத்தாது 'மிதக்கும் அல்லது அலையும் பின்நவீனத்துவ' அரசியல் கொண்ட மாற்றுக்கருத்து எனும் சிறுபான்மைப் போக்கு. இந்தப் போக்கு துரதிருஷ்டவசமாக அதனது மிதக்கும் அல்லது அலையும் தன்மையினால் அதிகமும் கருத்தியலற்ற-அரசியல் அற்ற இணக்க-அபிவிருத்தி அரசியலை நோக்கியே நகர்கிறது. இதை உணர்ந்திருப்பவர்கள், இதைப் பற்றின விமர்சனங்கள் கொண்டவர்கள் மிகமிகச் சிறுபான்மையினர். இவர்களே இன்றும் ஈழத்தமிழர் விடுதலை அரசியலை அவாவி நிற்பவர்கள். இதுவே இன்றைய புலத்தினதும் புகலிடத்தினதும் அரசியல் யதார்த்தமாக இருக்கிறது.

மாற்றுக் கருத்தாளர்களிடம் தொடர்ந்து கறுப்பு-வெள்ளை அரசியல் குறித்த சலிப்புணர்வும் சுட்டல்களும் இருந்து கொண்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக தமிழர் அரசியலைப் பொறுத்து அதனது கடந்த காலத்தை முழுமையாகக் கறுப்பாகப் பார்ப்பவர்கள் இவர்கள்தான். தமிழர் அரசியலை முழுமையாகக் கறுப்பாகப் பார்க்கிற இவர்கள்தான் பிறிதொருபுறத்தை மறந்த நிறக்குருடர்களாக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அதனை வெள்ளை எனவும் சாதித்து மௌனம் காக்கிறார்கள். விடுதலைப் புலிகள் தமது கடந்த காலத்தை வெள்ளை என்கிறார்கள். விடுதலைப் புலி எதிர்ப்பாளர்கள் தமது கடந்த காலத்தை வெள்ளை என்கிறார்கள். தமது கடந்த கால புலிஆதரவு மற்றும் எதிர்ப்பை மறுக்கும் அல்லது மறைக்கும் மாற்றுக்கருத்தாளர்கள் தமது கடந்த காலம் இருண்டது என்றும் நிகழ்காலம் வெள்ளை என்றும், இன்றைய தமிழ் அரசியல் கறுப்பு என்றும், இணக்க அரசியல் வெள்ளை என்றும் சொல்கிறார்கள். இவ்வாறு கறுப்பு-வெள்ளை அரசியலைக் கடுமையாகச் சாடிக்கொண்டே அதீதமான கறுப்பு வெள்ளை அரசியலில் இவர்கள் சிக்குண்டிருக்கிறார்கள். இதனால் இவர்கள் தமிழ் அரசியல் சமூகத்திலிருந்து விலகிப் போவது மட்டுமல்ல, இனவாத சமூகத்தின் கருத்துருவ இணக்க உற்பத்தியின் பகுதியாகவும் ஆகிப்போகிறார்கள்.

இந்த இடத்தில்தான் நாம் கருத்து இணக்க உற்பத்தி எனும் இடத்தில் மாற்றுக்கருத்தாளர்கள் வகிக்கும் பாத்திரத்தை மதிப்பிடுகிறோம்.

விடுதலைப் புலிகள் மனித உரிமை மீறல் புரிந்தவர்கள், பயங்கரவாதிகள் எனும் நிலைபாட்டை உலக நாடுகள் கொண்டிருக்கின்றன. சம அளவில் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில், போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என உலக நாடுகள் சொல்லி வருகின்றன. இனப்பிரச்சினையை இலங்கை அரசியல்ரீதியில் தீர்க்க முனையவில்லை எனும் நிலைபாட்டையும் உலக நாடுகள் கொண்டிருக்கின்றன. இனப்பிரச்சினையே இலங்கை உள்நாட்டு யத்தத்தின் தோற்றுவாய் என்பதனையும் உலக நாடுகள் உணர்ந்திருக்கின்றன. உலக நாடுகள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையும், மனித உரிமை மேம்பாட்டையும், போர்க்குற்றத்திற்கான அதனது பொறுப்புக் கூறலையும் வலியுறுத்தி வருகின்றன. இவையனைத்தும் மிக வெளிப்படையாக இருக்கிற மெய்மைகள்.

விடுதலைப் புலிகள் தமது மனித உரிமை மீறல்களையோ மக்களைப் பிணைகைதிகளாக வைத்தமை, அவர்களைத் தாக்கியமை போன்றவற்றையோ இதுவரையிலும் ஒப்புக்கொள்ளவில்லை. இலங்கை அரசு மக்களைத் திட்டமிட்டுக் கொன்றதையோ தம் மீதான போர்க்குற்றங்களையோ, போர்க்கைதிகளை சித்திரவதை செய்துகொன்றதையோ ஒப்புக்கொள்ளவில்லை. கிடைக்கும் வெகுமக்கள் சாட்சியங்கள், உலக அமைப்புக்களின் சாட்சியங்கள் இருதரப்பும் குற்றங்கள் இழைத்தனர் என்பதனை தெளிவுடன் முன்வைக்கின்றன.

இவற்றில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளையும், இலங்கை அரசின் நடவடிக்கைகளையும் எவ்வாறு மதிப்பிடுவது? நிகழ்வும் விளைவும் எனும் அடிப்படையில் இதற்கான பொறுப்புக்களை, முதன்மையான பொறுப்புக்களைக் குறித்த பகுப்பாய்வை நாம் எங்கிருந்து துவங்குவது? இலங்கை அரசிலிருந்து, அதனது அடித்தளம், மேல்தளம், மேல்தளத்தின் பகுதிகளான அரசியல் சமூகம்-சிவில் சமூகம், அதில் ஆதிக்கம் செலுத்தும் சிங்களபௌத்த இனவாதம், கருத்து இணக்க உருவாக்கம் என்று துவங்குவதா அல்லது தமிழ் சமூகத்தின் அடித்தளம், மேல்தளம், தமிழ் சமூக மேல்தளத்தின் அரசியல் சமூகம், சிவில் சமூகம், தமிழ் சமூகத்தின் கருத்து இணக்க உருவாக்கம் எனத் துவங்குவதா?

இனப்பிரச்சினைதான் பிரதான முரண்பாடு எனில், அதனைச் செலுத்துகிற பெரும்பான்மையினர் சமூகத்திலிருந்து இதனைத் துவங்குவதா அல்லது செலுத்துதலுக்கு ஆளாகும் தமிழ் சிறுபான்மைச் சமூகத்திலிருந்து அதனைத் துவங்குவதா? இலங்கைத் தீவின் மேல்தளம்-அடித்தள உறவுகள், அரசியல் சமூக-சிவில் சமூக உறவுகள், அதில் கருத்து இணக்க உருவாக்கம் என அனைத்திலும் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனம் மேல்நிர்ணயமாகச் செயல்படுகையில் அதற்கு எதிராக அல்லவா சிறுபான்மையினம் உருவாக்கம் பெறமுடியும்? இதில் மனித உரிமைகளை, அரசியல் உரிமைகளைப் பேணுவதில் எவருக்கு முதன்மைப் பொறுப்பு இருக்கிறது? இலங்கையின் அரைநூற்றாண்டு வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் அதிகாரம் கொண்டிருக்கும் சிங்களபௌத்த அரசிற்கே இதில் முதன்மைப் பொறுப்பு இருக்கிறது.

ஓரு வரலாற்று நிகழ்வின் விளைவாகவே தமிழர்களின் வன்முறையிலான ஆயுதவிடுதலைப் போராட்ட அரசியல் தோன்றியது. அதனது தொடர்விளைவுகள் தமிழ்மக்களின் மீதே திரும்பியதை நாம் விமர்சிக்கிறபோது, ஆதாரமான நிகழ்வின் வன்முறையை, அது தர்க்கபூர்வமாக பைசாசமாக இன்றும் வளர்ந்துசெல்வதை மறுதலிப்பது என்னவகையிலான பகுப்பாய்வில் சேரும்?

நாம் இலங்கை அரசுக்கு உள்ள பொறுப்பை அதிகமும் வலியுறுத்துகிறோம். பிரச்சினையில் எதிர்ப்பு இயக்கத்தை விடவும் ஒரு அரசுக்கே அதிகமும் பொறுப்பு உண்டு. அரசு, இறையாண்மை, குடிமக்கள் தொடர்பான சர்வதேச விதிகள் பல நூற்றாண்டுகளாக உருவாக்கம் பெற்று வந்திருக்கின்றன. தமது குடிமக்களை ஒரு அரசு காக்க வேண்டும் என்பதுதான் எல்லாச் சர்வதேசச் சட்டங்களினதும் ஒப்பந்தங்களினதும் உள்ளுறை. ஐ.நா.சாசனத்தின் உள்ளடக்கமும் அதுதான். அரசு வெகுமக்களைக் காக்கத் தவறுகிறபோதுதான் கிளர்ச்சிகள், போராட்டங்கள் எழுச்சி பெறுகின்றன. எந்த நாட்டையும் போலவே இலங்கைத் தீவுக்கும் இது பொருந்தும். அரசு திரட்டிக் கொள்ளப்பட்ட அறங்களுக்கும் நியதிக்குள்ளும் இயங்க வேண்டிய ஒரு நிர்வாக வடிவம். அதனை அது செய்யாதபோதே அதனை சர்வாதிகாரம்-பாசிசம் என வரையறுக்கிறோம். ஒரு எதிர்ப்பு அமைப்பு என்பது அராஜக நிலையிலிருந்துதான் தோன்றுகிறது. அரசுக்கு உரிய திரட்டிக்கொள்ளப்பட்ட அறம் மற்றும் நியதிகள் அதற்கு அதனது தோற்றத்தின்போது இல்லை. மக்களை நேசிக்கும் ஒரு விடுதலை இயக்கம் அதனைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என புரட்சியாளர்கள் வலியுறுத்துவார்கள். பிடலும் சேவும் அப்படிச் செயல்பட்டார்கள். துரதிரஷ்டவமாக விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஈழ விடுதலை இயக்கங்கள், ஒரு சில சிறுபான்மை இயக்கங்கள் தவிர அதனைப் பயிலவேயில்லை. பயங்கரவாதத்திற்கும் விடுதலைப் போராட்டத்துக்கும் இருக்க வேண்டிய வித்தியாசத்தை விடுதலைப் புலிகள் இல்லாமல் செய்தார்கள். என்றாலும் கூட, அரசுக்கு இருக்கவேண்டிய பொறுப்பை இது இல்லாமல் செய்துவிட முடியாது. அரசு ஒரு நிகழ்வு. விடுதலைப் புலிகள் அதனது கடுமையான விளைவு. அரசுக்கு உள்ள பொறுப்பை நிலைநாட்டவே விடுதலையாளர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள், சர்வதேசச் சட்டங்கள் அரசின் பொறுப்பைச் சுட்டிக்காட்டுகின்றன.

அரசுக்கு உள்ள பிரதான பொறுப்பை இதனால்தான் மனித உரிமை அமைப்புக்கள், ஐ.நா.போன்ற அமைப்புக்கள், உலக அரசுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனை மதிக்காத அரசுகள் உலகில் இருக்கின்றன. அது குறித்த விமர்சனம் முன்வைக்கப்படும்போது அதற்கு அது பதிலிறுக்க வேண்டும். இதனை மறுப்பதும், மறப்பதும், அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பது போல பாவனை செய்வதும், மௌனம் காப்பதும் என்னவிதான ஜனநாயக அரசியல்? அது என்னவிதமான மாற்று அரசியல்? இலங்கை அரசு தமிழ்மக்களுக்குத் தான் இழைக்கிற தீமைகள் குறித்து தென்னிலங்கை மக்களுக்கு அறிவிக்காமல், தமிழ்மக்களின் மீதான தொடர்ந்த ஒடுக்குமுறைக்கான இணக்க அரசியலை உற்பத்தி செய்கிறபோது, அரசின் மனித உரிமை மீறல்கள், கொலைகள் போன்றவற்றைக் கண்டு கொள்ளாமல், அதே விதமான இணக்க அரசியலை தமிழ் மக்களுக்கிடையிலும் உருவாக்குவது அல்லாமல் மாற்றுக் கருத்தாளர்கள் அல்லது இணக்க-அபிவிருத்தி அரசியல்காரர்கள் கொண்டிருக்கும் மௌனத்தின் நோக்கம் அரச ஆதரவு அன்றி வேறென்ன?

இலங்கை இனப் பிரச்சினையின் தோற்றத்துக்கும், அது தீராமல் தொடர்வதற்கும் இலங்கையின் மேல்தளம், அடித்தளம், அரசியல் சமூகம், சிவில் சமூகம் என நீக்கமற இருக்கும் இனவாத மேல்நிர்ணயம்தான் காரணம். அதனை இன்றளவிலும் ஒரு நிறுவனமாக முன்னெடுக்கும் அரசை இதனால்தான் நாம் கடுமையாக விமர்சிக்கிறோம். தமிழர் பிரச்சினையின் தோற்றுவாய்களை இவ்வாறு இலங்கை அரசையும் அதனது விளைவான கருத்தியல் நிறுவனங்களையும் புரிந்துகொள்வதன் மூலமும், விமர்சிப்பதன் மூலமும், அம்பலப்படுதுவதன் மூலமுமே நாம் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். இதனை முற்றிலுமாக மறுத்துவிட்டு தமிழ் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவது என்பது சாத்தியமில்லை. முள்ளிவாய்க்கால் பேரழின்போது தமிழ் சமூகம் ஜனநாயகப்படுவது அல்லது விடுவது என்கிற தேர்வுகளுக்கு அப்பால்தான், அதனுள்ளில் இருந்த வேறுபாடுகளற்று தமிழ்மக்களைக் கொன்றொழித்தது. அதீதப்படுத்தப்பட்ட மனநிலையில் தமிழ் சமூகத்தினுள்ளேயே பிரதான எதிரிகளைக் கண்டடைவதும், உருவாக்குவதும் அதனை அரசியலாக முன்னெடுப்பதும் இனவாதத்தினால் பீடிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பில் விடுதலை அரசியலாக ஆகமுடியாது.

III.

முள்ளிவாய்க்கால் பேரழிவில் உலக அரசியல் சக்திகளின் பாத்திரம் என்ன என்பது குறித்த அறிவே எனக்கு இல்லை எனும் கருணாகரன் அதனை இவ்வாறு முன்வைக்கிறார்:

'சர்வதேச அரசியலைப் பேசும் அவர், இடதுசாரிய அரசியலின் வழியில் வந்ததாகக் காட்டும் அவர், இந்த யுத்தத்தில் பிற ஆதிக்கச் சக்திகளான இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, கியூபா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், யப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகள் வகித்த பாத்திரங்களைப் பற்றி அறியாதிருக்கிறார். இந்தச் சக்திகள் தங்களின் அதிகாரப் போட்டிக்காகவும் நலன்களுக்காகவும் எப்படித் தொழிற்பட்டன என்பதை உணராதிருக்கிறார். ஈழ யுத்தம் என்பது ஒரு கூட்டு யுத்தம் என்பதையும் கூட்டுப்படைகளில்லாத ஒரு கூட்டு நடவடிக்கையாகவே அது நடந்தது என்பதையும் ராஜேந்திரன் அறியவில்லை',

நான்கு ஆண்டுகளின் முன்பு, முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்து அடுத்த மாதம் வெளியான 2009 உயிர்மை ஜூன் இதழில் உலக நாடுகளும், புதிய உலக நிலைமையும், ஈழ விடுதலைப் பேராட்டமும் குறித்து எனது உடனடியான கட்டுரை எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் வெளியானது. அதன் பின்பு பல பத்துக் கட்டுரைகள் இது தொடர்பாக நான் எழுதியிருக்கிறேன். 2009 ஜூன் மாத உயிர்மை கட்டுரை இவ்வாறு முடிவுக்கு வந்திருந்தது

'அக்டோபர் புரட்சி தோற்றுவித்த புரட்சிகர இயக்கங்கள் இன்று இல்லை. அதனது தந்திரோபாயங்களும் இன்று காலாவதியாகிவிட்டன. அரசுகள் போலவே போராடும் இயக்கங்களும் இன்று மூன்று யதார்த்தங்களுக்கு முகம் கொடுத்தே தீர வேண்டும். பின்சோவியத் அனுபவங்கள், பின் செப்டம்பர் அனுபவங்கள் மற்றும் உலகவயமாதல் என்பன தான் அந்த மூன்று யதார்த்தங்கள். இந்த யதார்த்தங்கள் மனித உரிமைகள், வெகுமக்களின் அடிப்படை உரிமைகள், ஜனநாயகம் குறித்த அவர்களது அவாக்களை உலகெங்கிலும் விதைத்திருக்கிறது. விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, சகலவிதமான எதிர்ப்பு அரசியல் சார்ந்த இயக்கங்களும் இந்த யதார்த்தங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு அமையவே அவர்களது எதிர்காலமும் இருக்கப் போகிறது என்பது மட்டும் இன்று நிதர்சனமாக இருக்கிறது'.

கருணாகரன் இன்னொன்றையும் சொல்கிறார்:

'ஒற்றை மைய உலகின் தோற்றம் குறித்த அவதானமும் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு அவசியமானது என்று வலியுறுத்தியிருக்கிறேன்'.

பன்முக நாடுகள் முள்ளிவாய்க்கால் பேரழிவைத் தீர்மானித்தன என்று பேசுவதற்கும், இப்போதும் ஒற்றைத்துருவ உலகு என்று பேசுவதற்கும் அடிப்படையில் மலைக்கும் மடுவுக்குமான ஒரு அரசியல் முரண் இருக்கிறது. கெடுபிடிப்போருக்குப் பின்பான ஒற்றைத்துருவ உலகு அல்ல இது. பல்துருவ உலகு இது. ஒற்றை அதிகாரமான அமெரிக்காவினால் தீர்மானிக்கப்படுகிற உலகு அல்ல இது. பல்வேறு உலக அதிகாரங்களால் தீர்மானிக்கப்படுகிற உலகு இது. இந்த அதிகாரங்களில் ஒன்றைச் சார்ந்திருப்பது என்பதற்கு மாற்றாக, இவைகளை ஒருவர் தமது நலன்களுக்கு ஏற்ப எவ்வாறு பாவிப்பது என்பதுதான் இன்று உலக அரசியல். இலங்கை அரசு இதனைக் கச்சிதமாகப் புரிந்திருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும் கருத்தாக்கத்தை அது தனது நலன்களுக்குக் கச்சிதமாகப் பாவித்து விடுதலை அரசியலை அது அழித்தது. இந்தப் புரிதல் விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை. இந்தப் பகுப்பாய்வின் பின்பும் எனது முடிவு இதுதான்: இந்த அழிவின் தோற்றக் காரணமும் இந்தப் பேரழிவின் மாபெரும் உயிர்க்கொலைக்கும் பிரதான காரணம் இலங்கை அரசு என்பதுவே எனது நிலை. கருணாகரனும், மாற்றுக் கருத்தாளர்களும் நானும் முரண்படும் மிக முக்கியமான அரசியல் வெளி இதுதான்.

ஐநா அறிக்கை தொடர்பாக கருணாகரன் பின்வருமாறு சொல்கிறார்:

'இந்த அறிக்கையை தயாரிப்பதற்காகத்தானா அல்லது இது போன்ற அறிக்கைகளைத் தயாரித்து அதிகார நாடுகளின் நலனுக்காக அவற்றைப் பயன்படுத்தத்தானா ஐ.நா நிறுவனம் செயற்படுகிறது? மேலும் இந்த அறிக்கையின்; பயன்களை அனுபவிப்பவர்கள் யார்? .... போரையும் அதில் நடந்த அனர்த்தங்களையும் நன்றாக அறிந்த ஐ.நா அதைத் தடுத்து நிறுத்தக்கூடிய வலுவோடும் பொறுப்போடும் இருந்தது. ஆனால் என்ன செய்தது? போர் முடிந்த பிறகு நடுநிலையோடு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று நமக்குக் காண்பிக்கிறது. எங்களின் உளவியலை ஆற்றுப்படுத்த யோசிக்கிறது. அதாவது எங்களின் நியாயமான கோபங்களை இந்த அறிக்கையின் மூலம் கரைத்து வடியவிட முயற்சிக்கிறது. இது ஐ.நாவின் மிகப் பெரும் தந்திரங்களில் ஒன்று. உபாயங்களில் ஒன்று. இது ஒரு கண்கட்டு வித்தையன்றி வேறென்ன? இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த நிலையில் வரலாற்று அனுபவங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் கொண்டுள்ள ஒரு மனம் இவற்றைப் பரிகாசம் செய்யாமல் வேறு என்ன செய்யும்? ஆனால் வெளியே இருப்போருக்கு இந்த அறிக்கை முக்கியமானதாகவே படும். ஏனெனில் அவர்களின் அனுபவம் வேறு. அதனால் அவர்களுக்கு இந்த அறிக்கை பெரியதொரு விசயமாகவே தெரிகிறது..இந்த அறிக்கையினால் அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களினால் எத்தகைய நன்மைகளைப் பாதிக்கப்பட்ட மக்கள் இதுவரையில் பெற்றிருக்கிறார்கள்? அல்லது அவர்கள் இனியாவது என்ன நன்மைகளையெல்லாம் சர்வதேச அரசியற் பொறிகளிலும் கூட்டுகளிலும் இருந்து பெறவுள்ளனர்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை யமுனா ராஜேந்திரனும் அவரைப் போன்றவர்களும் அறுதியிட்டுக் கூற முடியுமா? பொதுவாகவே ஐ.நாவின் அறிக்கைகளும் செயற்பாடுகளும் தீர்மானங்களும் யாருக்கு அதிக நன்மைகளைத் தருகின்றன என்ற ஆரம்ப அறிவைக்கூட, எளிய உண்மைகளைக் கூட சர்வதேச அரசியலைப் பற்றி, விடுதலை அரசியலைப் பற்றி தன்முதல் மூச்சாகக் கொண்டு எழுதிவரும் யமுனா ராஜேந்திரன் அறியாமலிருப்பது நகைப்பிற்குரியது, கேள்விக்குரியது'.

பல்துருவ உலகை ஒற்றைத்துருவ உலகு என வரையறுப்பது போலவே ஐ.நா.சபை, மனித உரிமை குறித்த கருணாகரனின் பார்வை சோவியத் யூனியன்-அமெரிக்கா இடையிலான பனிப்போர் காலகட்டத்திய பார்வை என்று நான் நினைக்கிறேன். ஐநா சபை என்பது ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களை முன்வைப்பது எனும் பார்வை காலாவதியான பார்வை. ஐநா ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் எலலாவற்றையும் சரியாகச் செய்யும் எனவோ அல்லது எதுவுமோ செய்யாது எனவோ பார்க்கிற இருதுருவப் பார்வை யதார்த்தத்திதைக் கணக்கிலெடுக்காத பார்வை. இடதுசாரிகள் கடந்த காலத்தில் மனித உரிமை அரசியலை அமெரிக்க சார்பான அரசியல் என நிராகரித்து வந்திருக்கிறார்கள். இன்று இனக்கொலை புரிகிறவர்களும் மனித உரிமை அரசியலை மேற்கத்தியத் திட்டம் என நிராகரிக்கிறார்கள். இறையாண்மையின் பெயரில் உள்நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் மனித உரிமை எனும் பிரச்சினையை தமது கலாச்சார மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்ப்போம் என்கிறார்கள். மகிந்த ராஜபக்சே, இலங்கை சிங்கள-தமிழ் இடதுசாரிகள், இலங்கை அரசுடன் நிற்கிற தமிழ் அரசியல்வாதிகள் என அனைவரது பார்வையும் இதுதான்.

இலங்கை அரசு ஐநா அறிக்கையை நிராகரிக்கிறது. கருணாகரனும் ஐநா அறிக்கையை 'எள்ளலுடன்' பார்க்கிறார். வேறு வேறு நோக்கிலிருந்து இலங்கை அரசும் சரி, கருணாகரனும் சரி ஐநா அறிக்கையை நிராகரிக்கிறார்கள். ஐநா அமைப்பை நான் சர்வ வல்லமை கொண்ட அமைப்பாகப் பார்க்கவில்லை. அமெரிக்காவுக்கும் பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் ஐநாவில் எவ்வளவு செல்வாக்கு உண்டோ அதே செல்வாக்கு இலங்கையின் நண்பர்களான ரஸ்யாவுக்கும் சீனாவுக்கும் உண்டு. இதை அறிகிற எவரும் இதில் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் மீறி, ஐநா இலங்கையில் ஏதும் செய்துவிட முடியாது என்பது ஐநாவின் வரலாறு அறிந்த ஒரு பச்சைக் குழந்தைக்கும் தெரியும். ஈராக், லிபியா, சிரியா முதல் இலங்கை வரை இதுதான் யதார்த்தம். இன்னுமொரு யதார்த்தம் தமது நலன்கள் காப்பாற்றப்படுமானால் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் எங்கும் நேரடியாக அரசியல்-பொருளியல்-ராணுவ ரீதியில் தலையிடும். ரஸ்யாவும் சீனாவும் நேரடியாக அரசியல்-பொருளியல் ரீதியிலும் மறைமுகமாக ராணுவரீதியிலும் தலையிடும்.

நமது மிகச் சமீப கால உதாரணம் கிழக்கு திமோரும், லிபியாவும், சிரியாவும். இந்த ஆபத்து இலங்கைக்கு உண்டு என்பதால்தான் மனித உரிமைப் பிரச்சினையில், அதிகாரப் பகிர்வு பிரச்சினையில் இலங்கை ஒரு சர்வதேசப் பொறிக்குள் இருக்கிறது, ஏதேனும் செய்யுங்கள் என்கிறார் பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக. என்னை மின்சார நாற்காலியில் உட்காரவைக்கத் திட்டமிடுகிறார்கள் என்கிறார் மகிந்த ராஜபக்சே. இவ்வகையில் ஐநா அறிக்கை, டப்ளின் அறிக்கை, அம்னஸ்டி அறிக்கை, மனித உரிமை கண்காணிப்பு அறிக்கை போன்றன தமிழ் மக்களின் மனித உரிமை, அதிகாரப் பகிர்வு தொடர்பான மகிந்த அரசின் மீதான ஒரு அழுத்த அரசியலாக இருக்கும் என நம்புகிறேன். அமெரிக்காவின் மீது கடுமையான விமர்சனம் கொண்ட நவசமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு, மூலதனத்தைத் தமிழில் மொழிபெயர்த்த தோழர்.தியாகு போன்றவர்கள் ஐநா அறிக்கையை விமர்சனத்துடன் ஏற்பதிலுள்ள அரசியல் இதுதான். இது தமிழ் மக்களுக்கு ஆதரவான பண்புகள் கொண்டது. இதனை மகிந்த நிராகரிப்பதிலும், கருணாகரன் 'எள்ளலாக'ப் பார்ப்பதிலும், தமிழ்ச்செல்வன் 'கீழாக'ப் பார்ப்பதிலும் உள்ள அரசியல் என்ன என்பதை கருணாகரன் விளக்கமாகப் பேச வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.

பன்முகநாடுகள், ஒற்றைத்துருவ உலகு, ஐநா அறிக்கை என பல்வேறு முரண்கள் கொண்ட பார்வைகளை முன்வைக்கும் கருணாகரன், தன் வழியிலான பகுப்பாய்விலிருந்து என்னவிதமான அரசியல் நிலைபாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்? அதனை அவர் பின்வரும் சொற்களில் முன்வைக்கிறார் :

'புதிய சிந்தனையுடன் விடுதலையை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். தொடர்ந்தும் நாம் அலைய முடியாது, சனங்கள் தொடர்ந்தும் துயரங்களோடு வாழ இயலாது என்பதை அழுத்திக் கூறிவருகிறேன்'.

புதிய சிந்தனை என்பது மிகப் பொதுப்படையான ஒரு சொல். எந்தவிதமான குறிப்பான அரசியல்-கோட்பாட்டு-நடைமுறைத் தந்திரமும் கொண்டிராத ஒரு சொல். இலங்கை அரசு சார்ந்து செயல்படும் அமைச்சர்கள், மகிந்த சிந்தனையை ஏற்கும் தமிழ் ஆலோசகர்கள், தமிழ் மக்களின் நலன்களுக்கு என தன்னார்வ நிறுவனம் கொண்டிருக்கும் இரண்டாவது தலைவர் (நன்றி: யோ.கர்ணன்) என இவர்களும் தமிழ் மக்கள் விடுதலை என்றும் புதிய சிந்தனை என்றும் பேசுகிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசை விமர்சிக்கும் கட்சிகள் என்போரும் விடுதலை அரசியலும் புதிய சிந்தனையும் பேசுகிறார்கள். இதுவன்றி சிங்கள-தமிழ் பாட்டாளிவர்க்க ஒற்றுமை பேசுகிறவர்களும் விடுதலை மற்றம் புதிய சிந்தனை குறித்துப் பேசுகிறார்கள்.

இன்று இலங்கை தமிழர் அரசியல் என்பது மூன்று அரசியல் கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. அபிவிருத்தி அல்லது இணக்க அரசியல், அதிகாரப் பகிர்வு அரசியல், மனித உரிமை அரசியல் என்பன அவை. அபிவிருத்தி-இணக்க அரசியல் பேசுபவர்கள் அதிகாரப் பகிர்வு மற்றும் மனித உரிமை அரசியலைப் பேசுவது இல்லை. இலங்கை நிலைமையில் அபிவிருத்தி-அதிகாரப் பகிர்வு-மனித உரிமை மூன்றுமே தமிழரின் விமோசன அரசியலில் ஒன்றோடு ஒன்று பிரிக்கவியலாது இணைந்தவை. இச்சூழலில் கருணாகரன் முன்வைக்கும் அரசியல் எத்தகையது என்பது தெளிவாக இல்லை.

2009 மே மாதம் 17 ஆம் நாள் பேரழிவு முடிந்து இந்த மூன்று ஆண்டுகளில்தான் கருணாகரன் முன்வைக்கும் இந்த புதிய சிந்தனை உருவாகியிருக்க முடியும். ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த கருணாகரனது எழுத்துக்களை (காலச்சுவடு மற்றும் புகலிட நாட்டு ஊடகங்கள்) நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதுவன்றி வேறெங்காவது கருணாகரன் எழுதியிருக்கும் அரசியல் கட்டுரைகள் குறித்து எனக்குத் தெரியாது. அப்படி வெளியாகி நான் வாசிக்காதிருந்தால் அது என் அறியாமை என நான் தயக்கமின்றி ஒப்புக் கொள்கிறேன். எனது வாசிப்பின் அடிப்படையில் சொல்வதானால் யோ.கரணன் கதைகள் தொடர்பாக அவர் எழுதியவை உள்பட அவரது அரசியல் கட்டுரைகள் பெரும்பான்மையானவை விடுதலைப் புலிகளின் தவறுகள் குறித்தவைகள்தான். அதுவும் விடுதலைப் புலிகளின் அரசியலில் இருந்து தன்னை விலக்கி தூரநிறுத்திக் கொண்டு அவர் எழுதிய கட்டுரைகள்தான்.

ஓரிரு கட்டுரைகளே உலக அரசியலும் தென் இலங்கை அரசியலும் குறித்துப் பேசுபவை. இவையும் பகுப்பாய்வு (வல்லினம் நேர்காணலையும் சேர்த்தே சொல்கிறேன்) எனும் கட்டத்தில் இருப்பவைதான். ஆனால் கருணாகரன் பேசுகிற விடுதலை அரசியல் மற்றும் புதிய சிந்தனை என்பது இதன் அடுத்தகட்டமான தொகுப்பிலும் முடிவிலும் முன்மொழிவிலும் உருவாவதாகும். அப்படியான எந்தவிதமான விடுதலை அரசிலுக்கான தடத்தையும் நான் கருணாகரனின் எழுத்துக்களில் காணவில்லை. மேலாக, விடுதலைப் புலிகளின் நிறுவனங்களுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்த, பரந்துபட்ட நிலையில் ஈழவிடுதலை அரசியலுடன் தொடர்பு கொணடிருந்த கருணாகரன் முழு விடுதலை அரசியல் குறித்த மறுபரிசீலனையுடன் ஈழவரலாற்றைப் பார்த்திருக்கிறார் என்பதற்கான சான்றுகளும் இல்லை.

அபிவிருத்தி அல்லது இணக்க அரசியல், அதிகாரப் பகிர்வு அரசியல், மனித உரிமை அரசியல் போன்றவற்றில் கருணாகரன் மனித உரிமை அரசியலை, அதிகாரப் பகிர்வு அரசியலைப் பேசுகிறார் என்பதற்கான சான்றுகள் இல்லை. எனில் கருணாகரணின் புதிய சிந்தனை அல்லது விடுதலை அரசியல் என்பதுதான் என்ன?

சே குவேரா இருந்த வீடு தலைப்பின் அரசியல் குறித்து கருணாகரன் சொல்வது இது:

'முன்னர் நிலவிய யதார்த்தம் வேறு. பின்னாளின் யதார்த்தம் வேறு. வரலாற்றின் ஓட்டமே அவரை அவ்வாறு எழுத வைத்திருக்கின்றது. கதைகளின் அனுபவங்கள் ஈழச்சூழலிலும் அதனுடைய வரலாற்றிலும் நடக்காமல் இருந்திருந்தால் கர்ணனின் கதைகளும் வேறாகவே இருந்திருக்கக்கூடும். சிலவேளை கர்ணன் எழுதவராமலே இருந்திருக்கவும் கூடும். இலங்கை அரசியலில் அதிலும் குறிப்பாக ஈழவிடுதலைப் போராட்டத்தில் இந்த மாதிரிப் புரட்சிகரமான பெயர்களும் அடையாளங்களும் குறியீடுகளும் எப்படி உருச்சிதைந்தன? அர்த்தம் இழந்தன என்பதைக் கர்ணன் குறிப்புணர்த்துகிறார். 'சே குவேரா இருந்த வீடு', 'தேவதைகளின் தீட்டுத்துணி' ஆகிய இரண்டு தலைப்புகளும் புனிதங்கள் என்று கட்டமைக்கப்பட்டவற்றின் சிதைவை கற்பிதங்களின் உருவழிவைக் காட்டுவன. இதுவே கர்ணனுடைய படைப்புகளின் அடிப்படைப் பண்புகளில் முக்கியமானது. ஆகவே சே குவேரா என்ற பெயரை வேறு நோக்கங்களுடன் பயன்படுத்தியிருப்பதாகக் கருதவேண்டியதில்லை. அவ்வாறு கருதினால் அது அதிக கற்பிதங்களுக்குரியதே'.

பின்னர் நிலவிய யதார்த்தத்திற்குத் தகவே சே குவேரா இருந்த வீடு கதை மாறியிருக்கிறது என்கிறார் கருணாகரன். புனிதங்கள் எனக் கட்டமைக்கப்பட்டவற்றின் சிதைவை கற்பிதங்களின் உருவழிவைக் காட்டுவன யோ.கர்ணன் கதைகள் என்றும், இதுவே கர்ணனுடைய அடிப்படைப் பண்புகளில் முக்கியானது என்கிறார் கருணாகரன். யோ.கர்ணனின் சில கதைகள் இத்தகையவை எனும் புரிதலையே நானும் எனது கட்டுரைகளில் வலியுறுத்துகிறேன்;. பிரச்சினை என்னவென்றால் இதில் நான் முரண்படுகிறேன் என்பதுதான். அகிலன், கருணாகரன் போன்றவர்களின் ஆவேசமான எதிர்வினைக்கான காரணம், நான் ஏதோ சே குவேராவின் பெயரை 'இவர்கள்' வணிக மதிப்புக்காகப் பாவித்திருக்கிறார்கள் எனக்குற்றம் சாட்டுகிறேன் என்று கருதிக்கொள்வது மட்டும்தான்.

பிரச்சினை அதுவல்ல. போராட்டத்தின் பின்னடைவு அல்லது வீழ்ச்சி அல்லது தந்திரோபாயத் தவறுகள் என்பன போராட்டத்திற்கான நியாயங்களை இல்லாததாக்கிவிட முடியாது. சே குவேரா, பிரபாகரன், அல் பான்சே கெனோ மூவருமே கொல்லப்பட்டார்கள். இவர்களது பிம்பங்களைச் சிதைப்பதையும் உருவழிப்பதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியைச் சேர்ந்த ஒரு கலைஞன் செய்ய முடியாது. சே குவேராவை கோழித் திருடன் என உருச்சிதைத்தது வார்னர் பிரதர்ஸ் தயாரித்த அமெரிக்கத் திரைப்படம். நாடாவது மசிராவது என்று அவுஸ்திரேலியாவுக்கு ஓடிப்போனவராக, பொரிக் கடை வியாபாரியாக பிரபாகரனை உருச்சிதைக்கிறது யோ. கர்ணனின் கதை. சே குவேரா என்கிற பிம்பமும் பிரபாகரனின் பிம்பமும் இப்படி என்னனென்ன பாடுபடுகிறது என்பதை வலியுறுத்தவே நான் மகிந்த, குவேராவின் மனைவியைச் சென்று சந்திப்பதையும் கட்டுரையில் குறிப்பிட்டேன்.

அகிலனும் சரி, கருணாகரனும் சரி இக்கதை தொடர்பாக எதனையும் பேசாது தவிர்க்கிறார்களே ஏன்? பிரபாகரன் எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளிநாடு போகவோ, களத்திலிருந்து நீங்கவோ முனையவில்லை. நோர்வே, யுடிஎச்ஆர் உள்பட பல்வேறு அறிக்கைகளில் பிரபாகரன் சரணடைய மறுத்து சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்கின்றன. யோ. கர்ணன் கதை அவர் 'நாடாவது மசிராவது' என்று சொல்லிவிட்டு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்த 'பொரிக் கடைக்காரர்' என்கிறது. துவாராகாவும், பாலச்சந்திரனும் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் என்கின்றன தரவுகள். யோ.கர்ணனின் கதையில் துவாரகா இலங்கை ராணுவ விசாரணையின் பின் 'பத்திரமாக' விடுவிக்கப்பட்டார் என்கிறது. அவரது தம்பி சிறுவன் என்பதால் 'கருணையுடன்' இலங்கை ராணுவம் விடுவித்துவிட்டது எனக் கதை எழுதுகிறார் கர்ணன். இது என்ன உண்மைகளின் 'வகைமாதிரி' என்று அகிலனும், கருணாகரனும் சொல்வார்களா? இப்படி புரட்சிகர பிம்பங்களை உருச்சிதைப்பதன் வழி யாருக்கு, என்ன செய்தியை நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள்?

ஐநா அறிக்கையோடு இன்னபிற அறிக்கைகள் மற்றும் கர்ணன் கதைகள் குறித்து தமிழ்ச்செல்வன் அவதானம் குறித்த கருணாகரனின் புரிதல் பின்ருமாறு:

'ஒரு படைப்பாளியைப் பார்த்து, ஏன் நீ எல்லா உண்மைகளையும் எல்லா விடயங்களையும் சொல்லவில்லை? என்று கேட்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படிக் கேட்க முடியுமா? மட்டுமல்ல கோடன் வைஸின் புத்தகமும் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் எவ்வளவோ இடங்களில் வேறுபடுகின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். எனவேதான் 'இவை ஈழத்து வாழ்வைப்பற்றிய கதைகளாக மட்டுமல்ல, மனிதகுல வரலாற்றின் மீது வைக்கப்படும் கேள்விகளாகவும் இந்தக் கதைகள் வெடிக்கின்றன' என்று தமிழ்ச்செல்வன் சொல்கிறார். தமிழ்ச்செல்வனின் பார்வையும் புரிதலும் இந்த இடத்தில் ஒரு கலைஞனின் அனுபவத்தைக் கொண்டுள்ளன. இதை ராஜேந்திரனால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்ச்செல்வனின் அரசியல் வேறாக இருக்கலாம். அதன் நோக்கு நிலைகளும் வேறானவையாக அமையலாம். கர்ணனுடைய கதைகளை அவர் புரிந்து கொண்டுள்ள முறையே இங்கே கவனத்திற்குரியது. பிரதிகளின் வழியாகவே உண்மைகளைக் கண்டறிய முற்படுபவர், பிரதிகளின் வழியாகவே வரலாற்றையும் வாழ்வையும் உணர்ந்து கொள்ள முற்படும்போது ஏற்படுகின்ற அபத்தம் இதுதான். ஏனெனில் எல்லாப் பிரதிகளும் ஒரே தன்மையைக் கொண்டிருப்பதில்லை. ஒரே அணுகுமுறைக்குரியவையும் அல்ல. இதை விளங்கிக் கொள்ள வேண்டும்...'

எதற்காக ஐநா அறிக்கையையும் இனிவரும் மனித உரிமை அறிக்கைகளையும் இலக்கிய மதிப்பீட்டுக்குள் கொண்டு வருகிறார் தமிழ்ச் செல்வன்? இத்தகையை ஒப்பீட்டைச் செய்தது நானல்ல, மாறாக தமிழ்ச்செல்வன். இதற்கான அவசியம் என்ன? என்பது எனது கேள்வி. கர்ணன் கதைகள் தவிர பிற அறிக்கைகள் முரண்பாடுகள் கொண்டிருக்கின்றன என்றால் கர்ணன் கதைகள் வைக்கும் உண்மைகளில் முரண்பாடுகள் இருக்கவே கூடாதா? அல்லது கர்ணன் கதைகள் முரண்பாடுகளை முன்வைக்க முடியாத முற்றுண்மைகளா? என்பதுதான் எனது கேள்வி. மேலாக, இன்று இத்தகைய உலக அளவிலான அறிக்கைகள்தான் ஈழத்தமிழர்கள் மனித உரிமை அரசியலை முன்னெடுப்பதற்கான தரவுகளை வழங்கும் ஆவணங்கள். இதனால்தான் இவைகளை முன்வைத்து சர்வதேசிய விசாரணைக்கு நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்கிறார் தமிழ்ச்செல்வனின் தோழர் ரங்கராஜன் எனும் அகில இந்தியத் தலைவர்.

அன்னா அக்மதோவா, நிசார் கப்பானி, அதோனிஸ் என்று கர்ணன் கதைகளை முன்னர் ஒப்பிட்டுப் பேசிய கருணாகரன், இப்போது நிசார் கப்பானி, அதோனிஸ் போன்றோரை விட்டு விட்டு அன்னா அக்மதோவா குறித்து மட்டும் விளக்கம் தருகிறார். சியோனிஸ்ட்டுகளுக்கு எதிரான நிசார் கப்பானியின் அதோனிசின் எழுத்துக்களுக்கும் கர்ணனது எழுத்துக்கள் வெளிப்பட்ட முறைக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்பதனை கருணாகரன் புரிந்து கொண்டார் என நினைக்கிறேன்.

இனி கருணாகரனின் சொற்கள்:

'வரலாற்றில் ஒவ்வொரு புள்ளிக்கும் வெவ்வேறு தன்மைகளும் ஒத்த தன்மைகளும் இருப்பதுண்டு. நிச்சயமாக எல்லாப் புள்ளிகளும் ஒரே மாதிரியானவை அல்ல. அப்படி அமையுமானால் அது வரலாறாகவும் மனித இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் சமூக ஊடாட்டம் உள்ளவையாகவும் இருக்க முடியாது. நான் குறிப்பிட்ட அன்னா அக்மதோவா தன் பிள்ளைக்காகவும் கணவருக்காகவும் தன்னுடைய அயல் (சக) மனிதர்களுக்காகவும் தன்னுடைய அரசையே ஆட்சியையே நிந்தித்தவர். அவருடைய சனங்களையும் பிள்ளையையும் கணவரையும் அவருடைய அரசே பலியிட்டது. அங்கே நிலவிய அதிகாரமே பலியெடுத்தது. இங்கே கர்ணனின் கதைகளிலும் சனங்கள் நம்பிய அமைப்பு சொந்த மக்களையே நெருக்கடிக்குள்ளாக்குகிறது. ஆகவே ஏறக்குறைய ஒத்த தன்மைகள் இரண்டுக்குமிடையில் நிகழ்கின்றன. இதேவேளை இலங்கை அரசினாலும் இந்த மக்கள் நெருக்கடிக்குள்ளாகின்றனர். அவற்றின் வெளிப்பாடுகளையும் உணர்வையும் பிரச்சினைகளையும் இன்னொரு நிலையில் கர்ணன் வெளிப்படுத்துகிறார். மேலும் பிற அதிகார அடுக்குகளையும். ஆகவே கர்ணனின் கதைகள் பல நிலைகளில் ஏற்படுகின்ற ஏற்பட்ட பல பிரச்சினைகளைப் பேசுகின்றன. இவற்றை தன்னுடைய புரிதலுக்கு மட்டும் சாத்தியப்பட்ட அளவுகோலினால் யமுனா ராஜேந்திரன் அளக்க முற்படுவது எவ்வளவு அபத்தமானது? இதற்காக நான் ஒரு விளக்கப்பள்ளியை எப்படித்தான் ஆரம்பிப்பது? '.

இது எனது ஆதாரமான கட்டுரையில் நான் முன்வைத்த கருத்துக்கள்:

'கருணாகரன், தேவதைகளின் தீட்டுத்துணி தொகுப்பிற்கான தனது முன்னுரையில் யோ.கர்ணனின் கதைகளை ஒரு புறம் ஸ்டாலினுக்கு எதிராக உண்மைகளைப் பேசிய அன்ன அக்மதோவா, பிறிதொருபுறம் சியோனிஸ்ட்டுகளுக்கு எதிராக உண்மைகளைப் பேசிய அதோனிஸ், நிஸ்ஸர் கப்போனி போன்றவர்களின் பின்னணியோடு புரிந்து கொள்ளக் கோருகிறார். பாலஸ்தீன-சியோனிஸ்ட் பிரச்சினையை இலங்கைச் சூழலில் எவ்வாறு பொருத்துவது? தமிழர்கள் பாலஸ்தீனர்கள். சிங்கள ஆட்சியாளர்கள் சியோனிஸ்ட்டுகள். சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக யோ.கர்ணன் என கருணாகரன் கோரிக் கொள்கிற மாதிரியான பண்பு யோ.கர்ணன் கதைகளில் மிகக் கொஞ்சமாகவே இருக்கின்றன. அவ்வாறு கர்ணன் கதைகளைக் கோரமுடியாது. ஸ்டாலினுககு எதிராக அக்மதோவா. இலங்கைச் சூழலில், ஈழச் சூழலில் இதனை மூன்றுவிதமாக வியாக்யானப்படுத்தலாம். ஸ்டாலினிஸ்ட்டான பிரபாகரனுக்கு எதிராக யோ. கர்ணன் கதைகள் அல்லது ஸ்டாலினிஸ்ட்டான டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக யோ.கர்ணன் கதைகள் அல்லது ஸ்டாலினிஸ்டான மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக யோ. கர்ணன் கதைகள். யோ. கர்ணன் கதைகள் பெரும்பாலுமானவை விடுதலைப்புலிகளை விமர்சிப்பவை. இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலத்தில் புலிகள் அதிகாரத்தில் இல்லை. புலித்தலைமை தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுவிட்டது. கர்ணனது தனித்தன்மை என்று சொல்லப்படுகிற எள்ளல் விடுதலைப் புலித்தலைவர்களும் அவர்களது நடத்தைகளும் குறித்ததாகத்தான் இருக்கிறது. இலங்கை அரசு குறித்த அதனது அரசத் தலைவர்கள் குறித்த எள்ளல்கள் ஏதும் கதைகளில் இல்லை'.

இங்கு மீளவும் நான் சொல்கிறேன்: பிரபாகரன் கீழான ஈழ நிலைமையை ஸ்டாலின் கீழான ரஸ்யாவுடன் ஒப்பிடுகிறார் கருணாகரன். சரி, விவாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும் இங்கு இலங்கை அரசு, அந்த அரசுடன் ஒன்றாக இருந்து இன்று வடக்கிலும் கிழக்கிலும் அமைச்சரவையிலும் அதிகாரத்திலும் இருப்போர்களை எவரோடு ஒப்பிட முடியும்? 1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சியின் பின் ரஸ்யா ஒரு இறையாண்மையுள்ள நாடாக இருந்த சூழலில் அன்னா அக்மதோவா எழுதினார். இட்லருக்கு எதிரான ரஸ்ய தேசத்தின் போர்ச் சூழலில் அன்னா அக்மதோவா எப்படி எழுதியிருப்பார்? இட்லரைத் தொடாமலா அல்லது இட்லருக்கு ஆதரவாகவா? பிரபாகரன் காலத்தில் கர்ணன் எழுதவில்லை. பிரபாகரன் போராட நேர்ந்த சூழல், அதைவிடவும் மோசமாக இன்றிருக்கிற சூழல் என்பதோடுதான் 'ஈழத்து' அன்னா அக்மதோவாக்களை மதிப்பிட வேண்டும் எனவே நான் சொல்கிறேன்.

IV.

இனி இந்த விவாதத்தில் நான் சொல்ல ஏதும் இல்லை. விவாதத்தில் எனது முதல் கட்டுரை ஆகஸ்ட்டில் எழுதப்பட்டது. இப்போது நவம்பர் மாதம். ஏறக்குறைய நான்கு மாதங்கள் இந்த விவாதப்பரப்பினுள் வாழ்ந்திருக்கிறேன். அகிலனுக்கு எதிர்வினையாக இரு கட்டுரைகள், கருணாகரனுக்குப் பதிலாக இக்கட்டுரை என நான்கு கட்டுரைகளை இந்த விவாதத்தில் முன்வைத்திருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக அரபுப் புரட்சி குறித்தும் ஈழம் குறித்துமே நான் தொகையாக எழுதியிருக்கிறேன். சமகாலத்தில் பின் சோவியத் மார்க்சியம் தொடர்பாகவும், மாவோவுக்குப் பிந்திய சீனா தொடர்பாகவும் இருநூல்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என்னைப் போன்றவர்கள் நம்பிக் கொண்டிருந்த விடுதலை அரசியல் வீழ்ச்சியடைந்த அல்லது பின்னடைவுக்கு உள்ளான காலம் இது. இது குறித்த மீளாய்வு என்பது எம் அனைவருக்கும் அவசியமானது. சோவியத் சீன மாற்றங்கள் பற்றி மட்டுமல்ல, பின் புரட்சிகர சமூகங்கள் குறித்தும் அந்தந்த நிலம் சார்ந்த மார்க்சியர்கள் கடந்த கால் நூற்றாண்டில் எழுதிக் குவித்திருக்கிறார்கள். ஈழ விடுதலை என்பது தமிழ் சிந்தனையைப் புரட்டிப் போட்டதொரு நிகழ்வு. உலகின் சகல விடுதலைச் சிந்தனைப் போக்குகளையும் ஈழவிடுதலையை முன்வைத்து நாம் உரசிப் பார்த்துக் கொள்ள முடியும்.

உலக விடுதலை அரசியல் போக்கின் அங்கமே ஈழவிடுதலை. கவித்துவ மனதுக்கு வானம் துண்டு துண்டானதாகத் தோன்றுவது கலைஞனது கற்பனையின் இயல்பு. மானுட விடுதலை அரசியலில் எவரதும் வானமும் என்னுடைய வானமும் எங்கோ சந்திக்கிறது என நம்புபவன் நான். பூமி குறித்த எனது நம்பிக்கையும் இதுதான். ஈழவிடுதலைப் போராட்டம் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட, அந்த நிலம் சார்ந்த மனிதர்களை நெருங்கிய மனிதர்களாகக் கொண்டதால் எனக்கு மிகவும் நெருங்கிய ஒரு போராட்டம். தமிழகத் தமிழர்களுக்கு ஈழ ஆயுத விடுதலைப் போராட்டம் என்பது ஓரு கண்திறப்பு. ஆகவே, அது குறித்துப் பேசுவதும் சிந்திப்பதும் எனது முன்னுரிமைகளில் ஒன்று.

போராட்டத்தினை விமர்சனத்தோடு பார்த்துப் போராடும் மக்களோடு நின்று கடந்த காலத்தை மீளாய்வு செய்வது எனது பார்வை. இவ்வகையில் போராட்ட அனுபவங்களையும் அதனது படிப்பினைகளையும் முழுமையாக இருண்மையாகச் சித்தரிப்பவர்களுடன் என்னால் ஒருபோதும் உடன்பட முடியாது. இந்த நோக்கிலிருந்தே என் கட்டுரைகள் எழுதப்பட்டன. எதிர்வினையாற்றிய அகிலனுக்கும் கருணாகரனுக்கும் எனது நன்றி. விவாதத்தைப் பின்தொடர்ந்த வாசக நண்பர்களும் தோழர்களுக்கும் எனது நன்றி. இந்த இறுதிக் கட்டுரையுடன் விவாதத்திலிருந்து இக்கணத்தில் நான் விலகுகிறேன்.

ஆசிரியர் குறிப்பு:

யோ.கர்ணணின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை முன்வைத்து யமுனா ராஜேந்திரன் அவர்கள் எழுதிய கட்டுரை (சே குவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தோபரின் வீடு) கடந்த சில வாரங்களாக பலத்த விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவாதத்தை தற்போது யமுனா ரஜேந்திரன் எழுதியுள்ள கட்டுரையுடன் முடிவுக்கு கொண்டு வருகிறோம்.

விவாதத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் எமது நன்றி.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=9&contentid=980189f1-38ea-48d3-a0ea-d1e0d9eb8434

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.