Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரது கடல்சார்பொருளாதாரத்தை அழிக்கும் முயற்சியில் அரசு தீவிரம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]kajendran%20ponnampalam.jpg

[size=4]தாயகத்தின் கடல் பிரதேசங்களில் அத்துமீறி சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி சிங்கள மீனவர்களால் மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கையால் தமிழ்த்தேசத்து மீனவர்கள் முழுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக அண்மையில் மீள்குடியேறிய கொக்கிளாய், கருணாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு உட்பட வடக்கு கிழக்கு மீனவர்கள் தமது தொழிலைக் கைவிட்டு வெளியேறவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றனர். இதன் மூலம் தமிழ்த்தேசத்தின் கடல்சார் பொருளாதாரத்தை முடக்கி தமிழ்த்தேசத்தின் இருப்பை அழிக்கும் நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. இதனை ஒட்டுமொத்ததமிழ்ச் சமூகத்தினதும் பிரச்சினையாகக் கருதி அதற்கெதிராகப் போராடவேண்டும். இல்லையேல் மிகக் குறுகிய காலத்திற்குள் தமிழ்த்தேசத்தின் இருப்பு முற்றாக அழிக்கப்படும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரித்துள்ளார்.

தமிழ்த்தேசத்தின் அங்கீகாரத்தினை வலியுறுத்துவதன் மூலம் மட்டுமே தமிழ்த் தேசத்தின் அழிவையும் எமது கடற்தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் தடுக்கலாம்.

தமிழர் கடற்பிரதேசங்களிலுள்ளவளங்களை கொள்ளையடித்தல் கரையோரப்பிரதேச நிலங்களை ஆக்கிரமித்து அரசுடமையாக்குதல், சிங்களவர்களை குடியேற்றுதல், பௌத்த விகாரைகளை அமைத்தல் போன்ற செயற்பாடுகள் அரசினாலும், சிங்கள தேசத்தவர்களாலும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது ஒழிக்கும்

செயற்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்ட அடிப்படையில் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

தற்போது இப்பிரச்சினைக்கு எதிராக போராட முன்வராதுவிட்டால் இன்னும் குறுகிய காலப்பகுதியினுள் தமிழ்த் தேசத்தின் இருப்பு முழுமையாக அழிக்கப்படும். தேசம் அழிக்கப்பட்ட பின்னர் இப்பிரச்சினைகள் பற்றிப் பேசுவதில் எந்தப்பயனும் இல்லை என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் வடமராட்சி கிழக்கு, மற்றும் முல்லலைத்தீவு மாவட்டத்தின் கடலோரக் கிராமங்கள் சிலவற்றுக்கு நேரில் சென்று அந்தப் பகுதி மக்களுடன் பேசியிருந்தனர். அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் அண்மையில் (26-08-2012) கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது.

அங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்படி கருத்துக்களை வெளியிட்டார். அம்மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மற்றும் ஊடக இணைப்பாளர் இ.சத்தியசீலன், ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். அங்கு மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்: சிங்கள தேசியவாதத்தினுடைய மிகமுக்கியமான நோக்கம் தமிழ்த்தேசத்தை இல்லாது ஒழிப்பதாகவே இருக்கிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான செயற்பாடு பல்வேறு கோணங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. ஒரு தேசத்தினுடைய இருப்பானது நிலைப்படுத்தப்படுவதற்கு அந்தத் தேசத்தை தக்கவைக்கக்கூடிய பொருளாதாரமும், அதன் மக்களும் முக்கிய அடிப்படைகளாகும்.

அந்த வகையில் தமிழ்த் தேசத்தின் இருப்பை தக்கவைப்பதில் கடல்வளம் சார் பொருளாதாரமும், விவசாயப்பொருளாதாரமும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இவற்றை அழிப்பதன் ஊடாக தமிழ்த் தேசத்தின் இருப்பை அழிக்க முடியும் என்கின்ற நோக்கோடு சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் நீண்டகாலமாக திட்டமிட்டு செயற்படுகின்றனர். தமிழர் பிரதேசங்கள் மீதும், மக்கள் மீதும் கொடிய போரைத் நடாத்தி பெருமளவு மக்களை கொன்றுள்ளதுடன், பொருளாதார அழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளனர். எஞ்சியவர்களை நடைப்பிணங்களாக வீதியில் விட்டுள்ளனர். குறிப்பாக கடல்வளம்சார் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கில் கடந்த காலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால் கடற்தொழில் செய்யும் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொக்கிளாய் முதல் சுண்டிக்குளம் மற்றும் நாகர்கோவில் உட்பட வடமராட்சி கிழக்கு கரையோர மக்கள் போர் காரணமாக முழுமையாக இடம்பெயர்ந்தவர்கள். தமது வீடுகளையும் தொழில் உபகரணங்களையும் முழுமையாக இழந்தவர்கள். இவர்களது குடும்பங்களில் பெருமளவானோரது குடும்ப உறுப்பினர்கள் இறந்திருக்கின்றார்கள், அல்லது காணாமல் போயுள்ளனர், அல்லது காயமடைந்து அல்லது சித்திரவதைக்கு உள்ளாகி தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

பொருளாதாரரீதியாக அழிக்கப்பட்டவர்களுக்கு அதிலிருந்து மீண்டெழுவதற்கான உதவிகள் வழங்கப்படவில்லை இந்த மக்களுக்கு அரசாங்கத்தாலோ அன்றி தமிழ் மக்களை மீள்குடியேற் றுவதற்கு தங்களுடைய பங்களிப்பை செய்கிறோம் என்று கூறிக்கொண்டிருக் கின்ற சர்வதேச சமூகத்தாலோ வழங்கப்பட்டதாகக் கூறப்படும் உதவிகள் சென்றடைய வில்லை. அந்த மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கான அடிப்படை வசதிகளான வாழ்வாதாரம் (livelihood), போக்குவரத்து, மின்சாரம், மருத்துவம், கல்வி போன்ற வசதிகள் இல்லை.

பழைய முறைகளைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடும் நிற்பந்தம் இவ்வாறு எந்தவிதமான உதவிகளோ, வளங்களோ இல்லாத நிலையில் கட்டுமரங்களையும், சிறிய வள்ளங்களையும் பயன்படுத்தி தொழில் செய்ய முற்படும்போது சில இடங்களில் இராணுவத்தினரால் தடைவிதிக்கப்படுவதுடன், அதிகாரிகளால் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டு நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றனர். முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்ட குடும்பங்களில் 19 குடும்பங்கள் மட்டும் அங்கு மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளபோதிலும் அவர்கள் தமது கடலில் தொழிலில் ஈடுபட இராணுவம் அனுமதி மறுத்துள்ளது. அதேவேளை மிகுதிக் குடும்பங்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாக கடலே இல்லாத புதுக்குடியிருப்பின் திமிலி என்ற இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

சகலதடைகளையும் தாண்டி கடலுக்குச் சென்றாலும் மீன்கள் கிடைக்காத நிலையும், உபகரணங்களை இழக்கும் நிலையும் இவ்வாறான நெருக்கடிகளையெல்லாம் தாண்டி கடலுக்குச் செல்லும் எமது மீனவர்கள் பலர் வெறுங்கையுடனேயே கரைதிரும்ப வேண்டியுள்ளனர். காரணம் பிறதேசத்தவர்கள் றோலர் இயந்திரங்களின் உதவியுடன் வடமராட்சிப் பிரதேசத்தில் மடிவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமையினால் கடலடியிலுள்ள வளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீன்கள் பெருகுவது பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீன்கள் இல்லை. இந்த நிலை மீளவும் திரும்புவதற்கு குறைந்தது 5 வருடங்கள் செல்லும். இதனால் கரையில் இருந்து சில கடல்மைல் தூரம்வரை கரையோர மீன்பிடி பொய்த்துப்போயுள்ளது.

தமிழ்த் தேசத்து கடல்வளங்கள் கொள்ளையடிக்கப்படலும், நவீன உபகரணங்கள் சகிதம் வரும் சிங்கள மீனவர்களுடன் பாராம்பரியமான உபகரணங்களுடன் (கட்டுமரங்கள், வள்ளங்கள்) நின்று போட்டியிட முடியாத நிலையும், இந்த நிலையிலும் கூட கட்டுமரங்களுட னும் சிறிய வள்ளங்களுடன் எமது மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்களுக்காக காத்திருக்கும்போது, கொக்குளாய் முதல் வடமராட்சி வரையான கடற்பிரதேசங்களுக்குள் வரும் சிங்கள மீனவர்கள் நவீன மீன்பிடி இயந்திரங்களையும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை அதாவது அதிசக்தி வாய்ந்த மின்விளக்குகள் மூலம் வெளிச்சம்பாய்ச்சுதல், சுருக்கு வலைகளையும், தங்கூசி வலைகளையும் பயன்படுத்தி மீன்பிடித்தல், அட்டை பிடிப்பதற்காக அனுமதி பெற்றவர்கள் கூரிய கம்பிகளைப் பயன்படுத்தி பெரிய மீன் வகைகளை குத்திப் பிடித்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

தமிழ் மீனவர்கள் தொழில் செய்யும் பகுதிகளுடாக பாரிய றோலர்களை செலுத்துவதன் மூலம் வலைகளை அறுத்து நட்டமடையச் செய்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தமிழ்த் தேசத்து கடல்வளங்களை கொள்ளையடித்துச் செல்லுகின்றனர். இந்நிலையில் எமது மீனவர்களது தொழில் முழுமையாகப் பாதிக்கப்படுவதுடன் அதிகமான சந்தற்பங்களில் வெறுங்கையுடன் கரைதிரும்புகின்றனர். அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், இராணுவம் மற்றும் இராணுவத்தினரால் தெரிவு செய்யப்பட்ட முல்லைத்தீவு கடற்தொழில் சமாசம் ஆகிய தரப்புக்களது பூரண ஆதரவுடனேயே சிங்கள மீனவர்களது மேற்படி சட்டவிரோத மீன்பிடியும், கடல்வளக் கொள்ளையும் இடம்பெறுகின்றது.

கடற்தொழிலையும், கடலோரத்தையும் கைவிட்டு தாமாக விரும்பி வெளியேறவேண்டிய நிற்பந்தம் மேற்படி சகல நெருக்கடிகளையும் கடந்து பிடிக்கப்படும் மீன்களை கரைக்குக் கொண்டுவந்ததும் கரையோரத்தில் அதிகாரம் பண்ணுபவர்கள் கூறும் நபர்களுக்கு குறைந்த விலைக்கு விற்குமாறு நிற்பந்திக்கப்படுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக வறுமையான நிலையில் பழமையான மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தும் எமது மீனவர்கள் அரச ஆதரவுடன், நவீன உபகரணங்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடும் சிங்கள மீனவர்களுடன் எந்தவகையிலும் போட்டிபோட முடியாது கடற்தொழிலை கைவிட்டு தாமாகவே வெளியேற வேண்டிய நிலைக்குள் திட்டமிட்டுத் தள்ளப்படுகின்றனர்.

கடற்தொழில் சமாசத்தை இராணுவம் கட்டுப்படுத்தலும், சிங்கள மயமாக்கலும் மறுபுறத்தில் கடற்றொழில் தொடர்பான அனைத்து விடயங்களிலும் இன்று இராணுவம் நுழைந்துகொண்டு சிங்களமயமாக்கலைச் செய்கின்றது.

இதற்கு உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நாயாறுப் பகுதியில் 36 சிங்களக் குடும்பங்களுக்கு கடற்றொழில் செய்வதற்கான அனுமதியை சமாசம் வழங்கியிருந்தது. தற்போது அந்தப்பகுதியில் 180ற்கும் மேற்பட்ட படகுகள் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. மேலும் 300ற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் அரைநிரந்தர வீடுகளை அமைத்துக் கொண்டு அப்பகுதியில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் தடைசெய்யப்பட்ட சில தொழில்களையும் சுதந்திரமாக செய்து வருகின்றனர். இதேபோன்று கொக்கிளாய் - முகத்துவாரம் பகுதியில் 1961ம் ஆண்டு 21 சிங்கள மீனவர்கள் தொழில் நோக்கத்திற்காக வந்து தங்கியிருந்தனர். தற்போது அந்த இடத்தில் 300 ற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் குடியேறியிருக்கின்றனர். அவர்களில் 200 குடும்பங்களுக்கு மீள்குடியேற்றப் பதிவுகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு பாடசாலை, தேவாலயம், போக்குவரத்து, மருத்துவம் போன்ற சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இத்தனைக்கும் அவர்கள் தங்கியிருப்பது தமிழ் மக்களுக்குச் சொந்தமான உறுதிக்காணிகள் மற்றும் அனுமதிப்பத்திரக் (Permit) காணிகளிலுமாகும். அப்படியிருக்க எந்த அடிப்படையில் அவர்களுக்கு மீள்குடியேற்றப்பதிவு வழங்கப்பட்டது? கொக்கிளாயில் 37 ஏக்கர் நிலம் இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்காக எல்லையிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலமும் தமிழ் மக்களுடைய சொத்து. ஆனால் நிலம் எடுக்கப்படுவது தொடர்பாக நிலச்சொந்தக்காரர்களுக்கு எந்த அறிவித்தல்களும் கொடுக்கப்படவில்லை. குறித்த தொழிற்சாலையில் இல்மனைட் பிரித்தெடுப்பதற்கு முன்னர் இல்மனைட் படிக மணல் கொக்கிளாயின் கரையோரங்களிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படப்போகின்றது. இதனால் எதிர்காலத்தில் கடல் நீர் உட்புகும் அபாயமும், அதனால் அப்பகுதி மக்கள் தமது வாழ்விடங்களை இழக்கும் அபாயமும் இருக்கவே செய்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 30 வருடங்களாக கடற் தொழில் சமூகத்தை சேர்ந்தவர்களை அதாவது அந்த தொழிலில் தங்கியிருக்கும் குடும்பங்கள் முழுவதையும் வழிநடத்தி, அந்த மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து, அந்த மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து, அந்த மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் மட்டும் அல்ல தொழில் சம்மந்தப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு முன்னோற்றத்தை ஏற்படுத்தி அவர்களதும், தேசத்தினதும் பொருளாதாரத்தை தக்கவைக்கக்கூடிய வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய கடற்தொழில் சமாசம் சிறப்பாக இயங்கி வந்திருக்கின்றது.

கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் கூட முல்லைத்தீவு பிரதேச அபிவிருத்தி மற்றும் மக்களோடு தொடர்புபட்ட விடயங்களை ஆராய்கின்ற பொழுதிலும், நேரடியாக தன்னுடைய ஆதிக்கத்துக்குள் இருக்கின்ற விடயங்கள் தொடர்பில் முடிவுகள் எடுக்கின்ற பொழுதும் கூட சமாசத்தினுடைய கருத்துக்களையும் உள்வாங்கி அதனது வழிநடத்தலில் அந்த செயற்பாடுகள் அமைந்திருந்தன. கடந்த 30 வருடங்களாக இந்த சமாசத்திற்குப் பொறுப்பாக இருந்த அனைத்து நிர்வாகமும் அத்தகைய பங்களிப்புக்களை சிறப்பாக வழங்கியிருந்தன. சுனாமி பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் மிகச் சிறப்பான பணிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்காக சமாசம் ஆற்றியிருந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முல்லைத்தீவில் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியில் அந்த சமாசம் மிகவும் சுகந்திரமாக தன்னுடைய மக்களுக்கான பணியாற்றியதாக அந்த மக்கள் வெளிப்படையகக் கூறுகின்றனர். அவர்களது காலத்தில் நிர்வாகத் தெரிவுகளில் தலையீகள் இருந்ததில்லை என்றும் கூறினார்கள். ஆனால் போர் முடிவுக்கு வந்த பிற்பாடு அந்த சமாசத்தை முழுமையாக இராணுவம் கையாளத் தொடங்கிவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலப்பகுதியில் சமாச நிர்வாகத்தில் இயங்கியவர்கள் எதிர்காலத்தில் அந்த சமாசத்தில் பங்குபற்ற முடியாது என்று கட்டளையிட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி தற்போது பொறுப்பில் இருக்கும் சமாசத்திற்கான நிர்வாகத்தில் இராணுவம் விரும்பியவர்கள் மட்டுமே பதவி வகிக்கலாம் என்ற அளவுக்கு வெளிப்படையாக அப்பட்டமாக இராணுவத்தினரது ஆதிக்கம் அங்கு செலுத்தப்படுகிறது. அந்த நிர்வாகத் தெரிவும் கூட இராணுவமுகாமில் தான் நடைபெற்றிருக்கின்றது. கடற்தொழில் செய்யும் மக்கள் இன்று எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து அந்த மக்களையும், கடற்தொழிலையும், கரையோரப் பிரதேசத்தினையும் பாதுகாக்க வேண்டிய அந்த சமாச நிர்வாகம் அரசினதும் இராணுவத்தினதும் அழிப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையகத் துணை நிற்கின்றது.

கடற்தொழில் சமாச நிர்வாகத்தை இராணுவமும் அரசும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு மேற்படி சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்கின்றனர். அதன் மூலம் அச் செயற்பாடுகள் தமிழ் மக்களது ஆதரவுடன் மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச சமூகத்திற்குக் காட்டிக்கொள்கின்றனர். இப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டுமாயின் வடக்கு கிழக்கு பிரதேசமும் அதன் கடற்பரப்பும் தமிழ் மக்களுக்குச் சொந்தமானது, தமிழ்த் தேசத்திற்கு இறைமை உண்டு என்ற அரசியல் நிலைப்பாடுகள் வெளிப்படையாக ஆணித்தரமாக ஒளிவுமறைவின்றி வலியுறுத்தப்படல் வேண்டும். இவற்றிற்கான அங்கீகாரத்தினைக் கோரிப்பெறுவதன் மூலம் மட்டுமே சிங்கள தேசத்தினால் எமது கடற்தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும், தமிழ்த் தேசத்திற்கு ஏற்படும் அழிவையும் தடுத்து நிறுத்த முடியும்.

இவற்றை வலியுறுத்தாது தமிழ் அரசியல் தலைமைகள் பேச்சுக்களில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் இப்பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது. பிறசக்திகளது நிகழ்ச்சி நிரலில் இயங்கும் அரசியல் தலைமைகள் தாயகம், தேசம், சுயநிர்ணய உரிமை, இறைமை போன்ற நிலைப்பாடுகளை வலியுறுத்த மறுத்தாலும், மக்கள் இந்த அடிப்படைக் கோட்பாடுகளை ஆணித்தரமாக வலியுறுத்திவாறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே மேற்படி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

- விநோ

நன்றி : நம்தேசம்[/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.