Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கற்றல் – கற்பித்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கற்றல் – கற்பித்தல்

கற்றல் கற்பித்தல்

-அப்பச்சி

“சார்”

ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.

அனுப்பினேன்.

“சார்”

உடனே மற்றொருவன்

அதட்டினேன்.

நொடிகள் நகர

உள்ளேயே ஈரம்

வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது

என் அதிகாரம்.

- பழ. புகழேந்தி

(“கரும்பலகையில் எழுதாதவை”)

எனது நண்பரின் மகளை முதுகலை படிப்பிற்காக ஒரு பிரபலமான கல்லூரியில் சேர்த்து விட்டார்கள். இளங்கலை பட்டப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவள் அவள். முதுகலை பயிலுவதற்காக சேர்த்து விடப்பட்ட கல்லூரியிலிருந்து தலைதெரிக்க ஓடி வந்து விட்டாள். நண்பர் குடும்பத்தில் பிடிபிடியென்று அந்த இளம் பெண்ணைப் திட்டித் தீர்த்து விட்டு “படிப்பும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் கழுதைக்கு காலாகாலத்துல கலியாணம் பண்ணிவைக்க வழியைப் பார்க்கலாம்” என்று குடும்பத்தின் ‘அதிகார மையம்‘ கூடி முடிவெடுத்து அதை செயல்படுத்தும் பணியிலும் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள். அவள் கல்லூரியை விட்டு வந்ததற்கான காரணம் வேறொன்றுமில்லை. கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் புத்தகங்களைப் பார்த்தே பாடம் நடத்துகிறார்களாம். ஐயம் கேட்கும் போதெல்லாம் அதட்டி உட்கார வைத்து விடுகிறார்களாம். பாடப் புத்தகம் தவிர்த்து வேறெந்தக் கருத்து சொன்னாலும் அதிகபிரசங்கி என்று திட்டுகிறார்களாம். இது ஒரு பதம் தான் இது போல ஆயிரக்கணக்கான இளம் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களின் தெளிவிலாக் கற்பிக்கும் முறையால் ஆண்டு தோறும் பழி வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற கல்வி முறையைக் கட்டியழுது கொண்டிருக்கும் நம்முடைய கல்வி முறையில் பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் போற்றிப் பாதுகாத்து வரும் கற்பித்தல் மரபை முட்டி மோதி உடைத்துவிட்டு புதியன கற்பிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள் உருவாகும் காலம் எப்போது மலரும்? எளிதில் விடைகிடைக்காத வினாக்களோடுதான் நாமும் கற்றோம்….. நம் பிள்ளைகளையும் கல்விச் சாலைகள் நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறோம்.

கற்றல் கற்பித்தல் இரண்டுக்குமான உறவுகளும் தொடர்புகளும் மிக நுட்பமானவை. கற்றுக் கொள்ளும் மனநிலையில் வருபவர்கள் ……….. கட்டாயத்தினடிப்படையில் வருபவர்கள்……….. சும்மா வருபவர்கள் என தினுசு தினுசாக பங்கேற்பாளர்கள் வருவார்கள்……. வந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் அனைவரின் நாடி பிடித்துப் பார்ப்பது சாத்தியமானதா………?.

“ Teaching is a political activity. Teaching cannot be natural . கற்பித்தல் ஓர் அரசியல் நடவடிக்கை. ஆசிரியர் என்பவர் நடுநிலையாக இருக்க முடியாது. என்றும், அறிதல் என்பதே ஓர் அரசியல் செயல்பாடுதான். ஐம்பது விழுக்காடு ஆசிரியராகவும், ஐம்பது விழுக்காடு மாணவனாகவும் இருக்க வேண்டும்.“ என்றும் பாவ்லோ பிரைரே அடித்துச் சொல்லும் கருத்திலிருந்து கற்றலை…. கற்பித்தலை மதிப்பீடு செய்து பார்க்கலாமா…? கற்பித்தல் என்பது மொழி தொடர்புடையதா….? அறிவு தொடர்புடையதா…..? மொழி அறிவைப் புகட்டுமா…? அறிவு மொழியைப் புகட்டுமா….? தாய் மொழிக் கல்வியும் தாய் மொழியில் பயிற்றுவிப்பதும் மனதிற்கு மிகவும் சுகமானது. மற்ற மொழிகளைவிட தமிழ் ஒரு வசீகரமான மொ​ழி, பிறரை எளிதில் வசீகரிக்கும் மொழி. அதனால்தான் நம்மில் பலர் வேறு வேலை பார்த்தாலும் தமிழை இன்னும் நேசிக்கிறார்கள். தமிழ் மொழியின் சிறப்பு இப்படி இருக்கையில் பிற மொழியின் மோகத்தால் கட்டப்படும் பயிற்றுவிக்கும் முறை சரியாக உள்ளதா….?

கற்பித்தல் – மதிப்பிடுதல் என்பது நடுவதற்கும் அறுவடைக்குமான உறவு. விதைத்தவை யாவும் விளைய வேண்டும் என்பதில் எந்த முரண்பாடுமில்லை. ஆனால், விளையாததால் விதைகள் யாவும் மலடுகளல்ல, விளைவிக்காததால் மண்ணும் மலடல்ல , தட்ப வெப்பங்களே விளைச்சலை முடிவு செய்கின்றன. இதே போலவே கற்றல் – கற்பித்தல் – மதிப்பிடுதல் முறையில் நாம் எதிர்பார்ப்புகளோடுதான் மதிப்பிடுகிறோம். நம்முடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாத போது நமது கோபத்தை கற்றல் மீதோ …….. கற்பித்தல் மீதோ உமிழ்ந்து விடுகிறோம். கல்வி என்பது ஒரு வாளியை நிரப்புவதல்ல, சில தீப்பந்தங்களை ஏற்றுவது. நம் கற்பித்தல் முறை மாணவர்களை உரசி உரசி சில தீப்பொறிகளை உண்டாக்க வேண்டும். இதற்கு மாறாக ஒரு டம்ளர் பாலைக் குடிக்கச் சொல்லி ஒரு டம்ளர் ரத்தத்தை எடுப்பது போல உடனக்குடனான மதிப்பீடு முறையை நாம் கடைபிடித்து வழி நடத்தி நமது செம்மறித்தனத்தை மேம்படுத்திக் கொண்டோம். எங்கெல்லாம் மதிப்பீடுதலில் குறைகள் ஏற்படுகிறதோ… அங்கெல்லாம் கற்பித்தல் தரமில்லை என்று தராதரமற்ற மதிப்பீட்டை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இதை என்ன செய்யப் போகிறோம்…? எப்போது மாற்றப் போகிறோம்.

எப்போதுமே புதியனவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவோரும், தேடல்தான் முன்னேற்றத்துக்கான ஊற்றுக்கண் என்று நம்புவோரும் நம்மிடம் இருக்கும் போது நாம் நமது கற்பித்தலை முழு அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும். நாம் செய்யும் காரியத்தில் ஈடுபாடு இல்லையென்றால் அது முழுமை பெறாது. முழுமையான பலனும் கிட்டாது.

“ஆசிரியர் என்பவர் பார்க்கப்பட வேண்டியவரே தவிர, கேட்கப்பட வேண்டியவர் அல்ல. ஆசிரியர்கள் கல்வி கற்றுத் தரும் முறை மாற்றப்பட வேண்டும். இவர்கள் மாணவர்களுக்கு ஸ்டேண்ட் போட்டு சைக்கிள் ஓட்ட சொல்லித் தருகிறார்கள். மாறாக, அவனை சைக்கிள் ஓட்டச் சொல்லி, அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டு உடன் ஓடிக் கொண்டே சொல்லித் தருபவர்களாக ஆசிரியர்கள் மாற வேண்டும்.“ என்று பேராசிரியர் ச. மாடசாமி ஒரு நேர்காணலில் சொல்லியுள்ளார். நமது ஆசிரியப் பெருமக்களில் எத்தனை பேரை இந்த அளவுகோலால் அளந்து பார்க்க முடியும்? எத்தகை பேர் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள முன்வருவர்? “கல்வி என்பது பங்கேற்பாக இருக்க வேண்டும். மாணவர்களின் மேல் திணிப்பதாக இருக்கக் கூடாது. மாற்று வகுப்பறைகளை உருவாக்க வேண்டும்” என்று பேராசிரியர் மாடசாமி கூறுவது காலத்தின் கட்டாயம்.

பயிற்றுவித்தல் – செய்ய வைத்தல் என்பதும் கூட மேற்கண்டது போலொரு முரண்பாட்டின் வடிவம்தான். தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் போகிற போக்கில் சொல்லிச் செல்லும் செய்திகளையெல்லாம் உடனடியாகச் செய்து பார்க்கும் மனநிலை உருவாகும்போது நம்மால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் ஏன் செயல்படுத்துவதில்லை? பதின் பருவங்களில் உள்ள குழந்தைகளை விளம்பரங்களும், திரைப்பாடல்களும் தங்கள் வசப்படுத்திக் கொள்கின்றன. ஆனால் பாடத்திட்டங்களாலும், பயிற்சிகளாலும் அவ்வளவு எளிதில் ஒன்றும் செய்ய முடியவி்ல்லையே…. என்ற ஆதங்கத்தில் பல ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை எதிரிகளாக எண்ணத் தொடங்கி விடுகிறார்கள்.

ஆர்வத்தின் மீது கட்டப்படும் அல்லது விதைக்கப்படுபவை எல்லாம் பயிற்றுவித்தவர்கள் எதிர்பார்த்த விளைச்சலைத் தருகிறது. ஆனால் அவையெல்லாம் சரியான விளைச்சலா? விளைவதெல்லாம் மகசூலாகுமா? இங்கு மகசூல் எது?

ஒருமுறை விதைத்த விதைகள் குறிப்பிட்ட காலத்தில் மட்டும்தான் முளைக்க வேண்டுமா? நடுவதற்கும் விதைப்பதற்குமான இடைவெளி எது? நாம் செய்து கொண்டிருப்பது நடுதலா? விதைத்தலா? “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நட்சத்திரம் இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்க கண்கள் வேண்டும்” என்றார் எமர்சன். உண்மைதான். “ஆசிரியர்களுக்கு நூறு கண்கள் வேண்டும். அப்போதுதான் ஆற்றலுள்ளவர்களைத் கண்டுபிடித்து ஆசிரியர்கள் ஊக்குவிக்க முடியும். ‘நல்ல மார்க்’ வாங்கினால், ஒரு பத்து பேர் ஆசிரியர் கண்ணுக்குத் தெரிவார்கள். விளையாட்டில் முன் நிற்கும் ஒரு ஐந்து பேர், பாடக்கூடியவர்கள், வரையக் கூடியவர்கள் என்று ஒரு ஐந்து பேர் தெரிவார்கள். இந்த இருபது பேர்களைத் தவிர மிச்சமிருக்கும் நாற்பது மாணவர்கள் வெளிச்சத்திற்கு வருவதே இல்லை. அதற்கு உரிய வாய்ப்பினைத் தருவது மிகவும் முக்கியம். வகுப்பிலிருக்கும் படிக்கக் கூடியவன், பாடக் கூடியவன், ஓடக் கூடியவனைத் தவிர விடுபட்டவர்களை, மற்ற ஆற்றல்கள் பெற்றிருந்தும் வெளிச்சத்திற்கு வரக் கூசுபவர்களை இனம் கண்டு, அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்குத் தேவையான கண்களும், காதுகளும் இருக்க வேண்டும்.” என்று பேராசிரியர் மாடசாமி தனது எனக்குரிய இடம் எங்கே என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் அவரின் கல்விப் பணிகளின் அனுபவத் தொகுப்பு. தமது பணிகளின் அனுபவங்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் எத்தனை பேருக்குள் நீறுபூத்த நெருப்பாய் இருக்கிறது? கற்பித்தல் என்பது ஆசிரியப் பணி மட்டும் தானா…? குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் கற்பிப்பதுதான் கல்வியா…? வயது வந்தோருக்கு கற்பிப்பதை எந்தக் கணக்கில் வரவு வைப்பது?

மேற்கண்ட வினாக்களோடுதான் கடந்த எட்டாண்டு கால கற்பித்தல் பணி நடந்து கொண்டிருக்கிறது. கற்பித்தல் பணியிலிருந்து தற்காலிகமாய் துண்டித்துக் கொண்டாலும் எட்டாண்டுகளாய் என் மீது அழுத்தமாய் விழுந்த பயிற்சியாளனுக்கான அடையாளத் தழும்பை எந்த கழிம்பு போட்டாலும் மாற்ற முடியவி்ல்லை. ஊதியக் குறைவு தவிர்த்து வேறெந்தக் குறைவுமில்லாத, செய்யும் பணிகளில் நூறு விழுக்காடு பணிச் சுதந்திரம் உள்ள ஒரு பணியை விட்டுவிட்டு, எந்தவொரு பணிச் சுதந்திரமுமில்லாத ஒரு பணியில் அதுவும் தற்காலியமாய் உட்கார்ந்து கடந்த காலத்தைப் பற்றி அசை போடுதல் சரியா… தவறா.. என்பது ஒரு புறம் இருந்தாலும் வளர்ச்சிப் பணிகளில் ஏற்படும் அனுபவமும், அதன் பகிர்வும்தான் நமது கடந்த காலத்தை மதிப்பீடு செய்யப் பயன்படுகிறது. வளர்ச்சிப் பணிகளில் அணியாக இணைந்தவர்கள் தங்களின் பணி காலத்தின் அனுபவங்களைத் தொகுக்க வேண்டிய காலமிது.

1998ம் ஆண்டு ஒரு ஆகஸ்ட் மாதத்தின் இறுதி வாரத்தில் நான் வசித்த கிராமத்தில் இருந்த ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாளனாக நுழைந்தேன். அதற்கு முன் வரையில் தொண்டு நிறுவனங்களை விமர்சினம் செய்து வந்த நான் எனது பிழைப்பூதியத்திற்காக ஒரு தொண்டு நிறுவனத்திற்குள் நுழைந்ததை எனது நண்பர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவாவது ஒரு வருமானம் வேண்டும். என்று நுழைந்து, ஒரு தலைமுறை காலம் அதில் தொலைந்து விட்டது. இதைப் பற்றி எழுதினால் தனி புத்தகமே போடலாம். அது கிடக்கட்டும். அந்தப் பணியில் சேர்ந்த நான்காண்டு காலம் கழித்து நான் பயிற்றுநராய் ‘ஞானஸ்தானம்‘ பெற்று நானும் வாத்தியாருடோய் எனச் சத்தம் செய்து வேலை செய்த நாட்கள் ஏராளம். இந்த நாட்களில் நானும் எனது சக பயிற்றுநர் கண்ணனும் எங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொண்ட செய்திகளை விட பல மடங்கு பங்கேற்பாளர்களிடம்தான் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். தொண்டு நிறுவனங்களின் பணிகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஆணி வேர்களான களப் பணியாளர்களை பயிற்றுவிக்கும் பெரும் பணியில் நாங்கள் இணைந்திருந்தோம். அதிகாலையில் ”மக்களின் பணிக்கே அர்ப்பணித்தோம்… இது மாபெரும் பணியென அனுதினம் எண்ணி எண்ணி…..” எனத் தொடங்கும் பாடலோடு வகுப்புகளுக்குள் நுழையும் பயிற்சிகள் “வெற்றி பெறுவோம்…. வெற்றி பெறுவோம்…“ என்ற பாடலோடு முடியும் பதினைந்தாவது நாளில் கார்கால மேகங்களைப் போன்று கனத்த கண்ணீரோடு விழிகள் விடைபெறும் வரையிலான கால கட்டத்தில் சந்தோஷமோ ………. சங்கடமோ ……….. எதுவானலும் சில நொடிகள் மட்டுமே அனுபவித்து விட்டு அடுத்த காட்சிக்குத் தயாராகும் மேடைக் கலைஞர்ளைப் போலவே பயிற்றுனர்களாக நாங்கள் இருந்தோம். எங்களைப் போன்றே இன்றும் பல பயிற்சி மையங்களில் உணர்வுகளும் கடமைகளும் பிண்ணிப் பிணைந்த பயிற்சி வல்லுனர்களாய் பலர் உருவகமாகி கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் பத்தாம் வகுப்பைக் கூட தாண்டாதவர்கள். பள்ளிக் கூட பாடத்திட்டத்தால் பெயிலாக்கப் பட்டவர்கள். தனது சொந்த வாழ்க்கையில் தோல்வி கண்டு சொந்தங்களாலும் சமுதாயத்தாலும் புறந்தள்ளப்பட்டவர்கள். தொன்னூறுகளின் முற்பகுதியில் அறிவொளி இயக்கத்தில் தங்களைத் தொண்டர்களாய் பதிவு செய்து கொண்டு தெருவிளக்கடியில் உட்கார்ந்து உழைப்பாளிகளுக்கு பட்டா.. பாடம் படி என்று எழுத்தறிவித்தவர்கள்….. காலப் போக்கில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக தொண்டு நிறுவனங்களில் களப்பணியாளராகச் சேர்ந்து தனது பணிகளைச் செவ்வனே செய்து அதை மற்றவர்களுக்கும் கற்றுத் தரும் வாத்தியார்களாய் மலர்ந்தவர்கள்.

ஆசிரியராவதற்கு நம்முடைய கல்வி முறை காலங்காலமாய் கட்டிக்காத்து வரும் எந்தவொரு முறையான கல்வித் தகுதியையும் பெறாதவர்கள் தாம் எடுத்துக் கொண்ட கடமையை சரியாக பங்கேற்பாளர்களிடம் கொண்டு செல்லும் வல்லமையை எப்படிப் பெறுகிறார்கள்? இந்த வித்தை இவர்களுக்குள் எப்படி தானாக விளைந்தது என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

1980 – ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கி கடந்த கால் நூற்றாண்டு காலமாய் இந்தியச் சமவெளியெங்கும் வளர்ச்சி நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் தொண்டு நிறுவனங்களும் அவற்றிற்கான பயிற்சி நிலையங்களும் மெல்ல மெல்ல முளைத்து தற்போது நிலைத்த தன்மையடைந்து விட்டன. நுனிநாக்கு ஆங்கிலவாதிகள் தொடங்கி, வட்டார மொழிகளில் வெளுத்துக் கட்டுபவர்கள் வரையில் அனைவருமே கற்பிக்க விரும்புகிறார்கள். கரும்பலகையில் இருந்து வெண்பலகைக்கும் சாக்பீஸிலிருந்து மார்க்கருக்கும் மாறியபடியே இன்றைய கற்பித்தல் நடந்து கொண்டிருக்கிறது.

எங்கெங்கு கானினும் தொண்டு நிறுவனங்களும், சுயஉதவிக் குழுக்களும் முளைத்து செழித்து கொப்பும் கிளையுமாய் இருக்கிற காரணத்தால் நிறைய பயிற்சிகளும், பயிற்சி நடத்துவதற்கான பயிற்றுநர்களும் தேவைப்படுகிறார்கள். பயிற்சி நிறுவனங்களும் தேவைப்படுகின்றன. கடந்த இருபதாண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மத்திய மாநில அரசுகள் சுயஉதவிக் குழுக்களுக்கான திறனூக்கத்தில் அதிக அக்கறை செலுத்துகின்றன. அரசின் பயிற்சி நிறுவனங்கள் தவிர்த்து பல தனியார் பயிற்சி நிறுவனங்களும் இந்தப் பணியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. அரசாங்க மையங்களிலும் சரி, தனியார் மையங்களிலும் சரி பயிற்சி தரும் பயிற்றுநர் ஆசிரியர் பயிற்சியில் தோ்வு பெற்றவர்கள் அல்ல. தங்களுடைய பணி அனுபவத்தால் ஆர்வம், ஈடுபாடு புதியனவற்றை உருவாக்கல் என்ற இலக்குகளின் மீது உருவானவர்கள், உருவாக்கப்பட்டவர்கள். இவர்களில் பலர் நபர்கள் சிறந்த பயிற்றுநர்களாகப் பரிணாமிக்கிறார்கள்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும் பாடத்திட்டம் கொண்ட நமது கல்வி முறையில் கூட, அந்த இடைப்பட்ட ஆண்டுகளில் பத்துமுறையாவது ஆசிரியர்களுக்கான திறனூக்கப் பயிற்சிகளை அரசு கொடுக்கிறது. ஆனால் ஆண்டுதோறும் மாறுதல் பெறும் வளர்ச்சி நிறுவனங்களின் பணிமுறைகளையும், நடைமுறைகளையும் கற்பிப்பவர்களுக்காக நிறுவனங்கள் செலவிடுவது மிக மிகக் குறைவே. முறை சாராகக் கல்வி முறையில் தாமாக……….. சுயம்புகளாக தங்களைத் தாங்களே கதவமைத்துக் கொண்டு வகுப்பறைகளில் புதியன செய்யும் இவர்களின் கடமை உணர்வு முறை சார்ந்த கல்வி முறையின் ஆசிரியப் பெருமக்களிடம் குறைந்து வருவது கவலை தருவதாகும். “இன்றைய ஆசிரியர்கள் கற்றுத் தருவதற்கு மேற்கொள்ளும் பயிற்சிகள் மிகவும் பழமையானவை. ஆங்கிலக் கல்வியை பெரிதும் நகல் எடுப்பவை. நவீன உளவியல் காரணிகளோ, உபகரணங்களோ, குழந்தைகளின் இயல்புணர்வுகளையே அவை கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை. ஆசிரியர்களைப் போலவே வீட்டில் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் குழந்தைகளை அமுக்கி வைத்து கற்றுத்தருவதும் மனப்பாட இயந்திரங்களாக அவர்களை மாற்றுவது மட்டுமே“ என்று எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

நான் எனது பணி காலத்தில் ஒரு திறனூக்கப் பயிற்சியில் கலந்து கொண்டேன். மிகவும் தொய்வாக… சோர்வேற்படும் அந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட பாபு ஒரு விளையாட்டு நடத்தினார். அந்த மூன்று நாளில் இல்லாத சந்தோசம் பங்கேற்பாளர்களுக்கு பாபுவின் விளையாட்டு மூலம் கிடைத்தது. அப்படியானால் பாபு பங்கேற்பாளர்களின் நாடி பிடித்து பார்க்கத் தெரிந்தவரா? பயிற்சி ஒருங்கிணைப்பாளருக்கு இந்த சூட்சுமம் தெரியவில்லையா? எல்லோரையும் ஒருங்கிணைத்து கவனங்களைக் குவியச் செய்வதும், குவிந்த கவனங்களை தனக்குச் சாதகமாக்கிக் கொள்வுதும் ஒரு கலை. இது எல்லோருக்கும் வாய்க்காது.

அடித்தட்டு மக்களுக்கான கல்வி முறைக்காய் தொடர்ந்து போராடியவர்களில் ஒருவரான பாவ்லோ பிரையரே 1997இல் இறப்பதற்கு சற்று முன்னதாக சொன்னதாக சொல்லப்படுவது, “அன்பில்லாமல் கல்வியினை என்னால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது, நான் அன்பினை உணர்கிறேன், பகிர்ந்தளிக்க நினைக்கிறேன், அதனாலேதான் நான் கல்வியாளனாக இருக்கிறேன்”. என்று சொன்னதாக ஒரு செய்தி நமக்குத் தகவல் தருகிறது. அன்பு செய்தல் மூலமே ஆர்வத்தைக் குவிக்க முடியும். ஆர்வமானவர்கள் ஒன்று சேருமிடத்தில் கற்றலுக்கும் கற்பித்ததுக்கும் பஞ்சமிருக்காது.

சாதாரண ஆசிரியர் செய்திகளைக் கூறுவார்…… நல்ல ஆசிரியர் அதை விளக்குவார்……..சிறந்த ஆசிரியர் செய்து காட்டுவார். உன்னதமான ஆசிரியர் வாழ்ந்து காட்டுவார் அல்லது ஊக்க​மூட்டுவார். நீங்கள் சாதாரண​ ஆசிரியரா, அல்லது நல்ல ஆசிரியரா அல்லது சிறந்த ஆசிரியரா அல்லது உன்னதமான ஆசிரியரா என்பதை உங்கள் மாணவர்கள் சொல்வார்கள்.

(பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் செப்டம்பர்2012)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.