Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியங்களும் வசீகர வரிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இலக்கியங்களும் வசீகர வரிகளும் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா[/size]

நான் தினமும் வாசிக்கும் த கார்டியன் நாளிதழில் g2 என்ற இணைப்பு வரும். அதில் ஆங்கில நாவல்களில் அதிசிறந்த கடைசி வரிகள் எவை என்று ஒரு வாசகர் கேட்ட கேள்விக்குப் பெரும்பான்மையான த கார்டியன் பிரியர்கள் தேர்ந்தெடுத்தது ஜார்ஜ் ஒர்வெலின் விலங்குப் பண்ணையில் வரும் கடைசி வாசகம். ருசியப் புரட்சியைப் பற்றிப் பரிகாசமாக எழுதப்பட்ட நாவல் தரும் கருத்து அதிகாரம் கைக்கு வந்துவிட்டால் புரட்சியாளர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அப்படி எந்தவிதமான வித்தியாசமுமில்லை என்பதுதான். நாவலின் முடிவில் பண்ணை உரிமையாளர்களும் அவர்களை எதிர்த்த பன்றிகளின் தலைமைப்பீடமும் ஒன்றுகூடுகிறார்கள். சிரிப்பும் பாட்டுச் சத்தமும் கேட்கின்றன. என்னதான் நடக்கிறது என்று அப்பாவியான விலங்குகள் வெளியே நின்று பார்க்கின்றன. எந்தவிதத் தடுமாற்றமோ கூச்சமோ இல்லாமல் இதுவரை மூர்க்கத்தனமாக ஒருவரை ஒருவர் எதிர்த்த பன்றிகளும் பண்ணையாளர்களும் மிக இணக்கமாகத் தோழமையுடன் பழகுவது தெரிகிறது.

animalfarm1.jpg

இருவரின் சேமத்திற்காக மதுபானக் கோப்பைகளை உயரப் பிடித்து வாழ்த்துகள் தெரிவிக்கிறார்கள். பிறகு சீட்டாடுகிறார்கள். அதில் தகராறு வந்துவிடுகிறது. மேசையை ஓங்கிக் குத்துகிறார்கள். ஒருவரை ஒருவர் கூரிய சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். கோபமாகக் கத்துகிறார்கள். இவர்களின் குரல்களிலும் அவர்கள் ஆவேசமாகப் பேசிய வார்த்தைகளிலும் வித்தியாசமில்லை. எல்லாமே ஒன்றுபோல் தெரிகின்றன. இந்த நெருக்கடியான கட்டத்தில் நாவல் இந்த வார்த்தைகளுடன் முடிவடைகிறது: 'வெளியில் இருந்த விலங்குகள் பன்றியின் முகத்தைப் பார்த்துவிட்டு மனிதனின் முகத்தைப் பார்த்தன. மறுபடியும் மனிதனின் முகத்திலிருந்து பன்றியின் முகத்தைப் பார்த்தன. திரும்பவும் பன்றியின் முகத்திலிருந்து மனிதனின் முகம். உண்மையில், எது எதனுடைய முகம் என்று சொல்ல முடியவில்லை`.

சொல்ல வந்த விசயத்திலிருந்து சற்று விலகித் தேவையில்லாத இரு அவதானிப்புகள்: விலங்குப் பண்ணையை ஜார்ஜ் ஒர்வெல் எழுதியபோது திராவிட அரசியல் இன்னும் காயாகி, கனியாக இன்றைய பழுத்த பழமான நிலையை அடையவில்லை. இந்த வரிகளை வாசிக்கும் அரசியலில் அதிக அக்கறை காட்டாதவர்கள்கூடப் பன்றிகள், பண்ணையாளர்கள் பற்றி விலங்குகளின் இந்த வர்ணிப்பு இன்றைய அதிமுக, திமுக அரசியல்வாதிகளைப் பற்றிய ஒர்வலின் தீர்க்கதரிசனம் என்றும் எண்ணிவிடக்கூடும்.

மற்ற வீணான கவனிப்பையும் சொல்லிவிடுகிறேன். அது விலங்குப் பண்ணையில் வரும் இன்னுமொரு மறக்க முடியாத வரிகள் கையாளப்படும் விதம் பற்றியது. வலதுசாரி விமர்சகர்களும் முதலாளித்துவக் கருத்துப்பாங்குடையவர்களும் தொழிற்சங்கத் தலைமைப்பீட அங்கத்தினரின் சொகுசான வாழ்க்கையை அம்பலப்படுத்தக் கேலியாக எழுதும் கட்டுரைகளில் அடிக்கடி அலங்கரிக்கும் வாசகம் இது : ‘எல்லா விலங்குகளுமே சரிசமமானவை. ஆனால் சில விலங்குகள் மற்றவற்றையைவிட அதிக சமமானவை.’

த கார்டியன் வாசகர்களின் தேர்வு எனக்கு ஆங்கிலேயர்களின் புத்தக வாசிப்பு குறுகலான மாகாணப் பாங்குடையது என்பதை மேலும் உறுதிப்படுத்தியது. இது என்னுடைய சொந்த பட்சபாத முன்முடிவு அல்ல. ஆங்கில வாசகர்களிடையே சமீபத்தில் எடுத்த சுற்றாய்வு தரும் தகவல் இது. இந்தச் சுற்றாய்வின் கண்டுபிடிப்பு ஆங்கிலேய வாசிப்பாளர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயக் கதாசிரியர்களில் - முக்கியமாக ஒக்ஸ்போர்ட் கேம்பிரிஜில் பட்டம் வாங்கிய மத்தியதர ஆண் எழுத்தாளர்களின் - இலக்கியங்களையே வாசிக்கிறார்கள். அது மட்டுமல்ல இந்தப் பொதுமதிப்பீடு தந்த இன்னுமொரு வியப்பான ஆனால் கவலை தரும் தகவல் இவர்கள் ஆங்கிலேயப் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் பக்கமே போவதில்லை. த கார்டியன் வாசகர்களின் தேர்வு இந்த ஆங்கிலேய வாசகர்கள் பற்றிய சுற்றாய்வின் முடிவைப் பிரதிபலிப்பதாக எனக்குப்படுகிறது. ஒர்வலின் வாசங்களுக்கு ஒப்பான ஏன் மிஞ்சிவிடக்கூடிய கடைசி வரிகள் பல நாவல்களில் உண்டு. கதாசிரியர்கள் பலர் எழுதியிருக்கிறார்கள். இந்தக் கட்டுரையின் இறுதியில் எனக்குப் பிடித்த கடைசி வரியைத் தருகிறேன்.

அதற்கு முன்பு சில இடைச்செருகல்கள். நாவலின் கடைசி வரிகள் மட்டுமல்ல என் கவனத்தை ஈர்த்த முதல் வரி, நாவலின் நடுப்பகுதியில் கதை ஓட்டத்தைத் தலைகீழாகத் திருப்பும் வாக்க்கியங்களைப் பற்றி எழுத இந்தப் பத்தியை ஆரம்பித்தேன். நான் இங்குத் தந்திருக்கும் எல்லா எடுத்துக்காட்டுகளும் ஆங்கில நாவல்களிலிருந்து எடுக்கப்பட்டவை. தமிழ் இலக்கியப் பத்திரிகையில் ஆங்கில உதாரணங்களுடன் வருவது வாசகர்களுக்கு மனக் கசப்பைத் தரலாம். தமிழ், ஆங்கில உதாரணங்களையும் சேர்த்து எழுதும் பெருமித எண்ணத்துடன்தான் இந்தப் பணியைத் தொடங்கினேன். ஆனால் தமிழ் நாவல்களில் கவர்ச்சியான வரிகளை இருந்த இருப்பிலேயே என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தரமான சான்றுகள் தமிழில் இல்லை என்பதல்ல. குறுகிய காலத்தில் என்னால் தேட முடியவில்லை என்பதுதான் உண்மை.

முதல் வரியில் வாசகரின் கவனத்தைக் கெட்டியாகப் பிடிப்பதில் வல்லுநர் காபிரியேல் கார்சியா மார்க்கேஸ். அவர் நாவல்களில் எனக்குப் பிடித்த முதல் வரி அவரது நாவலான Chronicle of a Death Foretoldஇல் வருகிறது. இந்த வாக்கியங்களுடன் நாவல் தொடங்குகிறது. ‘அவனை அவர்கள் கொலை செய்யப்போகும் அந்த நாள் சந்தியாகோ நாசர் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து பேராயரின் வல்லத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தான்’. இந்த வரிகள் மனமில்லாமல் புத்தகத்துக்குள் நுழையும் வாசகர்களை நாவலை அவசரமாகப் புரட்டவைக்கும். அது மட்டுமல்ல நாவல் சொல்லவந்த முழுச் சங்கதிகள் இந்த முதல் வரியிலே அடங்கியிருக்கின்றன. நாசர் கொலை செய்யப்படப் போகிறான் என்று ஆரம்பத்திலேயே வாசகர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. நிச்சயமாக அவர்களை உறுத்தும் கேள்வி எதற்காக அவன் கொல்லப்பட வேண்டும்? யார் அவனைத் தீர்த்துக் கட்டப்போகிறார்கள்? வல்லத்தில் ஏன் பேராயர் வருகிறார்? நாவலைப் படிக்காத வாசகர்களுக்கு மட்டும் ஒரு கூழையாக்கப்பட்ட (truncated) சுருக்கம். கல்யாணமான முதல் இரவில் ஆஞ்சலா விக்காரியோ கன்னித் தன்மையை இழந்தவள் என்று அறிந்த அவள் கணவன் அவளை வீட்டுக்கு அனுப்பிவிடுகிறான். பேராயர் அன்று வல்லத்தில் வந்தது இந்த ஆஞ்சலாவின் கல்யாணத்தை ஆசிர்வதிக்கத்தான்.

தங்கள் குடும்பத்திற்கு அவமானத்தை விளைவித்தது யார் என்று ஆஞ்சலாவை அவளுடைய சகோதரர்களான பெற்றொவும் பவுலோவும் கேட்க அவன் கூறிய பதில் நாசர். சண்டித்தனம் எல்லாக் கலாச்சாரங்களிலும் இருக்கிறதுபோலும். பெற்றொவும் பவுலோவும் நாசரைத் தேடிப்பிடித்துக் குத்திக் கொன்றுவிடுகிறார்கள். ஆஞ்சலாவும் அவள் குடும்பத்தினரும் வேறு ஊருக்குப் போய்விடுகிறார்கள். சகோதரர்களுக்கு மூன்று வருட சிறைத் தண்டனை கிடைக்கிறது. தமிழ் சினிமா இலக்கணத்திற்கு எற்பத் தன்னைத் தள்ளிவைத்த கணவன்மீது ஆஞ்சலாவுக்கு ஏக்கம் உண்டாகிறது. தவறாமல் ஒவ்வொரு வாரமும் பதினேழு வருடங்களாக அவனுக்குக் கடிதம் எழுதுகிறாள். இறுதியில் இருவரும் ஒன்றாக இணைகிறார்கள். ஆனால் முதல் வாக்கியத்தில் ஒரு முரணுரை இருக்கிறது. வாசகர்கள், கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கும் எழுதிய ஆசிரியருக்கும் தெரியும் நாசர் எதற்காகக் கொலைசெய்யப்படப்போகிறான் என்று. ஆனால் நாசர் தன் மரணத்தின் காரணத்தை அறியாமலேயே இறந்துபோனான்.

ஒரு நாவலின் தொடக்கம், முடிவு மட்டுமல்ல, அதன் நடுவில் வரும் திருப்பங்களும் சங்கதிகளும் கதை ஓட்டத்திற்கு முக்கியமானவை. நாவலின் நடுப்பகுதியில் வரும் எனக்குப் பிடித்த வரிகள் சீன்னுவே அச்சீபியின் Things Fall Apartஇல் வரும் ஒரு வரி:

‘கடந்த நடவுக் காலத்தில் (planting season) அந்த இன மக்களிடையே ஒரு வெள்ளை மனிதர் தோற்றமளிக்கலானார்’. பின்-காலனியம் கற்றுத் தரும் எனக்குக் காலனிய இலக்கியங்களில் இது மிக முக்கியமான வரியாகப்படுகிறது. 1958இல் எழுதப்பட்ட இந்த நாவல் 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேயக் காலனித்துவம் நைஜீரியாவின் ஒரு கிராமத்தில் விளைவித்த கலாச்சார விபரீதங்கள், குடும்பங்களிடையே ஏற்படுத்திய குழப்பங்கள், பிளவுகளை விவரிக்கிறது. நாவலின் முதல் பாதியில் கலாச்சார வழிமுறைகளையும் பல தலைமுறைகளாகப் பேணி வந்த சமயச் சடங்குகளையும் கடைப் பிடித்துவருவது வர்ணிக்கப்படுகிறது. எல்லா ஆப்பிரிக்கக் கிராமத்தவர்களையும் போலவே ஆச்சிபியின் கதாபாத்திரங்கள், காதலிக்கிறார்கள், சண்டைபோடுகிறார்கள். அவர்களின் தெய்வங்களுக்குப் பலிகொடுக்கிறார்கள். ஆவி உலகத்தை நம்பியிருக்கிறார்கள். இப்படி எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் வாழ்ந்துவந்த மக்களிடையே திருப்பம் ஏற்படுகிறது. ஒரு விதை நடுதல் பருவத்தில் யாரும் எதிர் பார்க்காத வேளையில் ஆறு ஆங்கிலேய மதப்பிரசாரகர்கள் அந்தக் கிராமத்துக்குள் நுழைகிறார்கள். சனங்களின் சரிசமநிலைமையும் மரபுவழி அதிகாரமும் ஆங்கிலேயக் குறுக்கீடால் தளர்ச்சியடைகின்றன, சிதைகின்றன. Joseph Conrad இன் Heart of Darknessஇல் வரும் Kurtz என்ற இனவெறியன் ஆப்பிரிக்கர்களுக்கு விடுத்த கடைசித் தீர்வான தடயமில்லாமல் பூண்டோடு இந்த மிருக சாதிகளை அழித்துவிடுங்கள் என்று மிக வெளிப்படையாகச் சொன்னதைத்தான் ஆங்கில மதப்பரப்பாளர்கள் மெதுவாக, மறைவடக்கமாக, அட்டகாசமில்லாமல் இந்த நைஜிரியக் கிராமத்தில் செய்துகாட்டினார்கள். ஆங்கில மதப்பிரசாரகர்கள் உருவாக்கிய பாடசாலைகள், வைத்தியசாலைகள் எவ்வாறு உள்ளூர்க் கலாச்சாரத்தின் மதிப்புகள், வழக்காறுகள், வைத்திய முறைகளைச் சிதைத்துவிடுகின்றன என்பதுதான்கதை. ஆப்பிரிக்காவைப் பின்னணியாகக்கொண்டு எழுதப்பட்ட Heart of Darknessஇல் ஆப்பிரிக்கர்கள் ஆறு வார்த்தைகள்தாம் பேசுகிறார்கள். ஆனால் ஆச்சிபியின் நாவலில் ஆங்கிலேயே ஆட்சியாளர்களை எதிர்த்துப் பேசியது மட்டுமல்ல கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளையும் ஏளனம் செய்கிறார்கள். ஆப்பிரிக்கர்களின் பல்லிறை வழிபாட்டைக் கிறிஸ்தவ மதகுருமார்கள் ஏளனம் செய்தபோது மதகுருமாரிடம் அந்தக் கிராமத்தவர்கள் திருப்பிக் கேட்ட கேள்வி: உங்கள் கிறித்துவம் மட்டும் என்ன மூன்று கடவுள்களைப் பற்றித்தானே பேசுகிறது?

த கார்டியன் வாசகர்கள் ஒர்வலின் நாவலின் இறுதி வாசகங்களைத் தெரிந்தெடுத்தாலும் என்னைக் கவர்ந்த ஆனால் சஞ்சலத்தைத் தருகிற கவலைக்குரிய கடைசி வாக்கியம் அ. சிவானந்தன் எழுதிய When Memory Dies என்னும் நாவலில் வருகிறது. இறுதி வசனத்தைவிட நாவல் முடிவில் தரும் செய்திதான் சங்கடத்தையும் தருகிறது.

சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக்கொண்ட சகாதேவன், அவருடைய மகன், ராஜன், ராஜனின் மாற்றுரிமை மகன் விஜய் ஆகியோரின் மூன்று தலைமுறைகளைப் பற்றிய நாவல் இது. சாதாரணக் குடும்பத்தின் கதை நாட்டின் அரசியல் வரலாற்றுடன் ஒன்றுடனொன்றாகப் பின்னிப்பிணைத்துச் சொல்லப்படுகிறது. ஆங்கிலேயக் காலனிய ஆட்சியின் கலாச்சார அட்டூழியங்கள் பற்றி விவரங்களுடன் நாவல் தொடங்குகிறது. பிறகு விடுதலைக்குப் பின் இலங்கை அரசியலின் முக்கியமாக இடதுசாரி அரசியல்வாதிகளின் ஏமாற்றுத்தனம், மதகுருமார்களின் கபட சூத்திரங்கள், பொதுவெளியில் செயல்படும் அறிவார்ந்தவர்களின் நழுக்கங்களை அம்பலப்படுத்துகிறது. இறுதியில் 80களில் தொடங்கிய தமிழ் ஈழப் போராட்ட இயக்கங்களின் உள்ளார்த்த சண்டைகளுடன் நாவல் முடிவடைகிறது. பல்வேறு கருத்து நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களின் பேச்சுகள், வாதங்கள், அங்கலாய்ப்புகள் மூலம் அத்தீவின் இன, வர்க்கப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன; விசாரணைப்படுத்தப்படுகின்றன. சில தமிழ்க் கதாபாத்திரங்கள் திரும்பத் திரும்பச் சொல்லும் வரிகள்: ஆங்கிலேயர்கள் எங்கள் கடந்த காலத்தை அழித்து விட்டார்கள். சிங்களவர்கள் எங்கள் எதிர் காலத்தைப் பிடுங்கிவிட்டார்கள்.

இந்த நாவலின் கடைசிப் பக்கங்களில் விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் ஈழப் போராட்டத்தைக் கவனித்து வந்தவர்களுக்குப் பரிச்சயமானவை. இயக்கங்களிடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றன. காட்டிக் கொடுத்த துரோகி என்று குகன் என்பவனை விளக்குக் கம்பத்தில் கட்டித் தூக்கிலிடுகிறார்கள். அவன் பிழையாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறான் என்று விஜய்க்குத் தெரிகிறது. குகனை மட்டுமல்ல தன்னைக்கூட விஜயால் காப்பற்றிக்கொள்ள முடியவில்லை. சமாதானத்தையும் ஒற்றுமையையும் பேசும் விஜய் இயக்கத்தினரின் ஆயுத செயல்பாடுகளுக்கு இடைஞ்சலாக இருப்பதால் சுட்டுக் கொல்லப்படுகிறான். ஒரு கண்ணியமான மனிதரைக் கொன்றுவிட்டீர்களே என்று விஜயின் மனைவி மீனா கேட்க இனி நான்தான் பொறுப்பு என்று இயக்கத் தலைவன் யோகி கூறுகிறான். இதுதான் நாவலின் கடைசி வசனம். இது மிகச் சாதாரணமான வாக்கியம். ஆனால் இந்த வாக்கியத்திற்குப் பின்னால் இருக்கும் காரிய சாத்தியங்கள் மிகவும் பாரதூரமானவை. இனி முதல் எல்லாப் பிரச்சினைகளுக்கும் யோகிக்கும் அந்த இயக்கத்தினரிடையே இருந்த ஒரே விடை துப்பாக்கி. யாழ்ப்பாணக் கலாச்சாரச் சின்னங்களான பனங் கொட்டை, பருத்தித்துறை வடை, பினாட்டு, ஒடியல் உடன் இப்போது துப்பாக்கியும் நாளாந்தம் புழங்கும் பண்டமாகிவிட்டது. நாவலை விட்டுவிடுங்கள். சிவானந்தனின் நாவல் 80களில் முடிவடைகிறது. ஆனால் ஈழத் தமிழர்களின் நவீன சரித்திரம் அன்றைக்குத்தான் ஆரம்பமாகியது. எழுதிய காலகட்டத்தில் நாவல் தந்த செய்தி இன்றைக்கும் போர் முடிந்த நிலையிலும் பொருந்தும். இனப் பிரச்சினை முடிவடையாததற்குக் காரணம் அரசியல்வாதிகளுக்குத் தீர்வு எடுக்கும் துணிவு இல்லாமையே.

இந்தப் பத்தியை எழுதுவதற்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து முது கலைப் படிப்புக்காகப் பர்மீங்கம் வந்த ஒரு ஈழத் தமிழருடன் பேசிக்கொண்டிருந்தேன். முன்பின் தெரியாத ஈழத்திலிருந்து வந்த தமிழர்கள் சந்தித்தால் பேசுவதற்கு ஒரே ஒரு விசயந்தான் இருந்தது. அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் அவருடைய கிராமத்தவர்களுக்கும் நடந்ததைச் சொன்னார். இந்தியப் பாதுகாப்புப் படை, சிங்கள ராணுவம், இயக்கங்களின் நிந்தைகள் பற்றிப் பேசி வன்னிப் போருடன் முடித்தார். அவர் சொன்னவை அவருக்கும் மட்டும் பிரத்தியோகமாக நடந்தவை அல்ல. அந்தக் காலகட்டத்தில யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோருக்கும் நடந்த கதைதான். இன்று யாழ்ப்பாணம் சிங்களமயமாக்கப்படுதலைப் பற்றியும் சொன்னார். அவர் இவற்றைச் சொன்னபோது போரும் அதன் விளைவுகளும் அருவமான காரியமாகத் தெரியவில்லை. கார்ல் மார்க்ஸ் வேறொரு கட்டத்தில் சொல்லியவை நினைவுக்கு வந்தன: சரித்திரம் தானாகவே ஒன்றும் சாதிப்பதில்லை. சண்டைகளும் போடுவதில்லை. சாதாரண மனிதர்கள்தான் சாதனை புரிகிறார்கள். சண்டையும் போடுகிறார்கள். இவற்றை எல்லாம் சொல்லும்போது அந்த முதுகலை மாணவரின் குரலில் ஆத்திரமோ எரிச்சலோ காணப்படவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர், ‘எல்லாம் போய்விட்டது’ என்றார். அந்த நேரத்தில் அவரது உடல்மொழியில் கொஞ்சம் ஏக்கம் தெரிந்தது. ‘அப்ப நமக்கு ஒன்றுமே இல்லையா?’ என்று நான் கேட்டேன். கொஞ்சம் யோசனைக்குப் பிறகு, ‘நமக்கு நம்முடைய கதைகளும் நினைவுகளுந்தாம் மிச்சம்’ என்றார். சிவனாந்தனின் When Memory Dies இதைத்தான் சொல்லுகிறது. சனங்களின் வாழ்வை உய்விக்க நினைவுகள்தாம் முக்கியம். பரராசசிங்கம் மாமா விஜய்க்குச் சொல்லுகிறார்: ‘நினைவுகளை இழந்தால் மக்கள் மடிந்துவிடுவார்கள்.’ அத்துடன் நாவல் ஒரு எச்சரிக்கையையும் தருகிறது. பொய்யான நினைவுகளை உருவாக்கினால் என்ன நடக்கும் என்று விஜய் கேட்கிறான். மாமாவின் பதில்: ‘அது கொலையைவிட மோசமானது.’

http://www.kalachuva...-155/page53.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.