Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதி விதவைகள் : காஷ்மீரின் காணாமல் போன ஆண்கள் - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பாதி விதவைகள் : காஷ்மீரின் காணாமல் போன ஆண்கள் - யமுனா ராஜேந்திரன்[/size]

10 நவம்பர் 2012

காஷ்மீர் குறித்த இந்தியக் கதைப்படங்களில் சொல்லப்படாத அனைத்தையும் சொல்வதாக காஷ்மீர் குறித்த ஆவணப்படங்கள் அமைகின்றன. ஆவணப்படங்கள் என்பதனை நடவடிக்கையாளர்களின் ஆயுதங்கள் எனவே நாம் குறிப்பிட வேண்டும். திரைப்படங்கள் எதிர்கொள்ளும் தணிக்கைப் பிரச்சினைகளை தாண்டிச் செல்லும் வல்லமை கொண்டது ஆவணப்படங்கள். ஆவணப்படங்கள் ஆய்வுபூர்வமான தரவுகளை முன்வைக்கின்றன. தரவுகளை எவரும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது. ஆவணப்படங்கள் தரவுகளின் அடிப்படையில் நிகழ்வுகளை மீளமைக்கின்றன. தரவுகளின் அடிப்படையில் நேர்காணல்களையும் விவாதங்களையும் தொகுத்துத் தருகின்றன. காட்சி அனுபவத்தைத் தருவதோடு சமூக மாற்றத்திற்கான செயலில் உத்வேகமிக்க பாத்திரத்தினையும் ஆவணப்படங்கள் எடுத்துக் கொள்கிறது. ஆவணப்படங்கள் யதார்த்தத்தை முன்வைக்கின்றன. அதன் மூலம் அது வரலாற்றை மறுவரைவு செய்கிற ஆக்கச் செயலையும் புரிகிறது.

காஷ்மீர் குறித்து நான் பார்த்த சமநிலையுள்ள ஆவணப்படங்கள் நான்கு. ஜேகேஎல்எப்பின் ஆவணப்படங்கள் தவிர, வெறித்தனமான அடிப்படைவாதப் பிரச்சார நோக்கில் இந்து முஸ்லீம் என இருதரப்பிலிருந்தும் வருகிற கோரமான ஆவணப்படங்களை நான் முற்றிலும் தவிர்த்துவிட்டு நான் பார்த்த ஆவணப்படங்களையே இங்கு நான் குறிப்பிடுகிறேன். மரணித்த உடல்களை மட்டும் முன்வைத்து உணர்ச்சி அரசியலை எவரும் செய்ய முடியும். ஓரு வலதுசாரியும் செய்ய முடியும் இடதுசாரியும் செய்ய முடியும். பாசிஸ்ட்டும் செய்ய முடியும். ஆனால் இந்த பிம்பங்களை, வரலாறு, அறம். நீதி, சமநிலைத்தன்மை, அமைதிநோக்கிய பரிவு கோரல் என்பதனுடாக இணைப்பதை ஒரு கலைஞனே செய்ய முடியும்.

***

காஷ்மீர் மக்களது ஜனநாயகபூர்வமான எதிர்ப்புகள் கூட வன்கரம் கொண்டு ஒடுக்கப்படுகிறது. காஷ்மீரில் இதுவரையிலும் ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பத்தாயிரம் இஸ்லாமிய மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். இரண்டு இலட்சத்து ஐம்பதனாயிரம் இந்துப் பன்டிட்கள் பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அவர்களது பூர்வீகமான இடங்களில் இருந்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். பாலியல் வல்லுறவுகளிலும் மனித உரிமை அத்துமீறல்களிலும் இந்திய ராணுவம் ஈடுபட்டதற்கான சான்றுகளை உலகின் மனித உரிமை அமைப்புக்களான அம்னஸ்டி இன்டர்நேசனலும், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சும் ஆவணப்படுத்தியிருக்கின்றன.

2005 ஆம் ஆண்டில் பிரான்ஸில் இயங்கும் மெடிசன்ஸ் ஸான்ஸ் பிரான்டியர்ஸின் ஒரு ஆய்வறிக்கையின்படி உலகிலேயே காஸ்மீரப் பெண்கள்தான் அதிக அளவிலான பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளானவர்கள் என்று தெரிவிக்கிறது. காணாமல் போனவர்களில் அறுபது சதவீதமானவர்கள் சாதாரணக் குடிமக்கள். பிற நாற்பது சதவீதத்தினர் தீவிரவாதிகள எனக் கருதப்படுபவர்கள. இந்திய ராணுவமே இவர்கள் அனைவரையும் சந்தேகத்தின் பெயரில் இழுத்துச் சென்றிருக்கிறது. இவர்களது இருப்புக் குறித்த எந்தத் தடயமுமின்றிப் போனதால் பிற்பாடு இவர்கள் காணாமல் போனவர்கள் என மனித உரிமை அமைப்புக்களால் இனம் காணப்பட்டவர்கள். இவ்வாறு காணாமல் போனவர்கள் மனைவியர்கள் பாதி விதவைகள் எனும் பெயரில் வாழ்கிறார்கள். இவ்வாறான பாதி விதவைகளில் அறுபது சதவீனமானவர்கள் ஏழ்மை நிலையிலுள்ள வறியமக்கள். 1500 முதல் 2000 வரையிலான பாதி விதவைகள் இருப்பதாக அவர்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

காஷ்மீர் எனும் நிலப்பரப்பில் பூர்வீக இஸ்லாமியர்கள், இந்து டோக்ராக்கள், இந்து பண்டிட்கள், குஜ்ஜார் இன மக்கள், பத்தான் இனமக்கள், சீக்கியர்கள் எனக் கலந்து வாழ்ந்திருக்கிறார்கள். 1947 இந்தியா பாகிஸ்தான் பிரிவிணையின் அங்கமாக காஷ்மீர் நிலப்பரப்பு இரண்டாகப் பிளவுபட்டது. பாகிஸ்தான் அரசினால் ஏவப்பட்ட பழங்குடி ஆக்கிரமிப்பாளர்களால் காஷ்மீர் மக்களின் சகலபகுதியினர் மீதும் வன்முறை திட்டமிட்டபடி ஏவப்பட்டது. யுத்தத்தில் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதி பாகிஸ்தானிடமும், மற்ற இரண்டு மடங்குப் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டிலும் வந்தன. இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீர், பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலிலுள்ள ஆசாத்காஷ்மீர் என இதனை வரலாற்றாசிரியர்கள் வலையறுக்கிறார்கள்.

வரலாற்றுரீதியில் பரஸ்பரம் சந்தேகம் கொண்ட இரண்டு இனமக்கள் அவர்களது பாரபட்சமான கூட்டுமனநிலைப் பதட்டங்களின் வழி தத்தமக்கான காஷ்மீரை விழைந்தார்கள். அவர்கள் இருவகையானவர்கள். முதலாமவர் கோக்ரா இனமன்னர்களின் வன்முறைக்கு ஆளான இஸ்லாமியர்கள். இரண்டாமவர் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இஸ்லாமியர்களால் பாதிக்கப்பட்ட இந்து பண்டிட்கள். காஷ்மீரை இஸ்லாமியக் குடியரசின் பகுதியாக ஆக்க வேண்டும் எனக் கருதுகிற பாகிஸ்தானின் ஆதரவுடன் ஒரு பகுதி காஷ்மீர் இஸ்லாமியர்கள், இந்து பண்டிட்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது வன்முறையால் கிலியூட்டுவது என்பதனைச் செய்து வருகிறார்கள். பின்லாடன்வகையினர் காஷ்மீர அரசியலை தலிபான் மையப்படுத்துவது என்பதனைத் திட்டமிட்டுச் செய்து வருகிறார்கள். காஷ்மீர் எல்லையின் பகுதிகளாக ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் இருப்பதால் இந்தத் தலிபானியமயமாக்கம் காஷ்மீரில் வேகமாகப் பரவி வருகிறது.

1990 ஆம் ஆண்டு நான்கு இலட்சம் இந்து பன்டிட்கள் தமது இடங்களிலிருந்து விரட்டப்பட்டு இடர்பெயர்வுக்கு ஆளானவர்களாக இருந்தார்கள். காஷ்மீர் வரலாற்றில் மாபெரும் இடப்பெயர்வு அல்லது இனக்கொலையாக இந்த நிகழ்வு சொல்லப்படுகிறது. பாரதிய ஜனதாக் கட்சியின் இஸ்லாமிய எதிர்ப்பு காஷ்மிPர் பண்டிட்களின் தற்பாதுகாப்பு என்பதாகப் புதிதான அரசியல் பரிமாணம் எய்தியிருக்கிறது. இந்திய ராணுவத்தின் பிரசன்னம் இருக்கும் வரையிலும் தமக்குப் பாதுகாப்பு எனக்கருதும் காஷ்மீர் பண்டிட்கள் இஸ்லாமிய மக்களின் சகலவிதமான எதிர்ப்புக்களையும் ஒடுக்கப்படுவதனை ஆதரிக்கிறார்கள். இவ்வகையில் முழுக்கவும் காஷ்மீர் பண்டிட்கள் இந்திய ராணுவத்தோடு சேர்ந்து நிற்கிறார்கள்.

1947 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவினால் உறுதியளிக்கப்பட்ட வெகுஜன வாக்கெடுப்பை ஏன் நடத்த முடியவில்லை? இரண்டு காரணங்களை இந்தியத் தரப்பு சொல்கிறது. ஓன்று ஐக்கிய நாடுகள் சபை திர்மானத்தின்படி ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து பாகிஸ்தான் முற்றிலும் வெளியேற வேண்டும். அதனை பாகிஸ்தான் றிறைவேற்றாமல் அப்பகுதியைத் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டதால் காஷ்மீர் முழுக்க ஓட்டெடுப்பு நடத்துவது சாத்தியம் இல்லை. இரண்டாவது காரணம், காஷ்மீர் மன்னருக்கும் இந்தியாவுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் இந்திய மாநிலங்களில் ஒன்று.

பாகிஸ்தான் தரப்பு வாதம் என்ன? இஸ்லாமியர்களைப் பெரும்பகுதியாகக் கொண்டதால் காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதியாகி விடவேண்டும். சேக் அப்துல்லா வழிவந்த நடுவாந்தரவாதிகள் காஷ்மீரை பாகிஸ்தானோடு இணைக்க விரும்பவில்லை. ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியும் காஷ்மிரை பாகிஸ்தானோடு இணைக்க விரும்பவில்லை. அவர்கள் கோருவதெல்லாம் சுயாதீனமான காஷ்மீர் எனும் தனிப் பிரதேசம்தான்.

இந்தியா மறுத்துவருவதற்கான காரணம் என்ன? மதத்தின் அடிப்படையில் காஷ்மீர் பாகிஸ்தானுக்குச் சொந்தம் என்பதனை அனுமதிக்கக முடியாது. பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்கள் என்பதனால், இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக ஒப்பந்தத்தின் மூலம் ஆகிவிட்ட காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க முடியாது. இந்தியாவில் பல மாநிலங்களில் இந்திய முஸ்லீம்கள் இருக்கிறார்கள். மதத்தின் அடிப்படையில் ஒரு மாநிலத்தைப் பிரிக்கமுடியாது.

சுமார் ஒரு கோடி மக்கள் ஜனத்தொகை கொண்ட காஷமீரில் ஏழு இலட்சம் இந்திய ராணுவத்தினர் தற்போது நிலை கொண்டிருக்கிறார்கள். காஷ்மீரில் இருவிதமான எதிர்ப்பு இயக்கங்கள் இருக்கின்றன. இஸ்லாமியக் குடியரசை முன்வைக்கும் பாகிஸ்தானிய மற்றும் ஆப்கானிய ஆயுதப் பின்னணியுடன் கூடிய ஒரு அரசியல். மற்றது இந்தியாவுடனும் நாங்கள் இருக்கவிரும்பவில்லை, பாகிஸ்தானுடனும் நாங்கள் இருக்க விரும்பவில்லை, எமக்கென சுயாதீனமான காஷ்மீர் வேண்டும் எனக் கோரும் ஒரு அரசியல். இவர்களது உத்தேச சுதந்திரக் காஷ்மீரில் சிறுபான்மையின காஷ்மீர் பண்டிட்களும் பெரும்பான்மையின பூர்வீக இஸ்லாமியர்களும் தத்தமது தனித்தன்மைகளுடன் வாழ்வார்கள் என்பதாக இருக்கிறது. இந்த இரண்டு இயக்கங்களையும் சம அளவில் பயங்கரவாதம் எனப் பார்க்கும் இந்திய அரசு, இரு விதமான எதிர்ப்புக்களையும் ஆயுத முனையில் எதிர்கொள்கிறது.

***

இங்கிலாந்தின் சேனல் நான்கு தயாரித்த காஷ்மீரைக் கொல்தல் (2004) எனும் ஆவணப்படம் காஷ்மீர் பிரச்சினையின் வேர்களையும், குறிப்பாக இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல்களையும், காணாமல் போதலையும் குறித்துப் பேசுகிறது. பிற இரண்டு ஆவணப்படங்களில் ஒன்றான, இரு பாகிஸ்தானியக் கல்வியாளர்களால் எடுக்கப்பட்ட எல்லைக் கோடுகளைக் கடத்தல் (2004) எனும் ஆவணப்படம் இந்திய தேசப் பிரிவினை நாட்களிலிருந்து காஷ்மீர் பிரச்சினையை அலசுவதோடு, வரலாற்று ரீதியில் பன்னூற்றாண்டுகளாக அந்த நிலத்தில் இருந்து பூர்வகுடிகள் பற்றியும், பாகிஸ்தான் இந்தியப் பகைமை என்பது மதங்களுக்கு இடையிலான பகைமையாக அங்கு ஆக்கப்பட்டிருக்கிறது என்பதனையும், இந்தியா பாகிஸ்தான் இரண்டிற்கும் இடையிலான ஆதிக்க மனப்பான்மையே நிலைமையை மேலும் சிக்கலானக்குகிறது என்பதனையும் தெரிவிக்கிறது.

பாகிஸ்தான், இந்தியா என இருபுறமும் இருக்கும் மத அடிப்படைவாதிகள் எவ்வாறு தத்தமது நாடுகளின் அதிகாரத்தைப் பெறுவதற்காக பாடப்புத்தகங்கள் முதல், படையமைப்பு உள்பட, வெகுமக்கள் மட்டத்திலும் மதவாதத்தை ஊட்டிவளர்க்கிறார்கள் என்பதனைச் சொல்கிறது இப்படம். உலகில் தென் ஆசிய நாடுகளின் அமைதி நமக்கு முக்கியம் எனப்பேசும் இருதரப்பு அறிஞர்களதும் நேர்முகங்களைக் கொண்டது இந்த ஆவணப்படம். காஷ்மீர் பிரச்சினையை தென்னாசிய அமைதி எனும் அடிப்படையில் வைத்துப் பாரக்க வேண்டும் எனச் சொல்கிறது இந்த ஆவணப்படம்.

காஷ்மீர் திட்டம் (2008) எனும் அமெரிக்க ஆசிய ஆவணப்படம், அமெரிக்காவில் வாழும் ஒரு இஸ்லாமியப் பெண்மணியாலும் ஒரு இந்தியப் பெண்மணியாலும் கூட்டாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் காஷ்மீர் பிரச்சினையை முன்வைத்து எதிரிகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள் என்றும், அமெரிக்காவில் வாழும் தென்னாசிர்கள் எனும் அளவில் அவர்களுக்கிடையிலான இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தாங்கள் காஷ்மீர் பிரச்சினை குறித்த ஆவணப்படத்தை எட்டு ஆண்டுகள் ஆய்வின் பின் உருவாக்கினோம் எனவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். எல்லைக் கோடுகளைக் கடத்தல் எனும் ஆவணப்படம் காஷ்மீர் பிரச்சினையை அரசியல் ரீதியில் அணுக, காஷ்மீர் திட்டம் ஆவணப்படம் பிரச்சினையைக் களஆய்வு எனும் அடிப்படையிலும், காஷ்மீரில் இரு தரப்பிலும் வாழும் மனிதர்களுக்கிடையிலான நேர்காணல்கள் எனும் அளவிலும் முன்வைக்கிறது.

தெருக்களில் ஆரப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை இவர்கள் சந்திக்கிறார்கள். இந்திய ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடக்கும் மோதல்களை நேரடியாகப் பதிவு செய்கிறார்கள். காணாமல் போனோர் பற்றித் தெரிந்துகொள்ள அவர்களது மனைவியரையும் பெற்றோர்களையும் குழந்தைகளையும் சந்திக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களைக் கையளிக்க இந்திய இராணுவத்தினர் மேற்கொள்ளும் சம்பிரதாயங்களைப் பதிவு செய்கிறார்கள். பாலியல் வல்லுறவுக்கு உட்பட்ட பெண்கள் குறித்து பதிவு செய்கிறார்கள். பாகிஸ்தானிய ஆதரவுத் தீவிரவாதிகளால் விரட்டப்பட்ட பன்டிட்களை அகதி முகாமில் சென்று சந்திக்கிறார்கள். இந்தத் திரைப்படம் மதத்தின் அடிப்படையில் பிளவு பட்டிருக்கிற இந்த மக்களை இரு தரப்பிலுமான மதவாதிகள் மேலும் மேலும் பிளவுபடுத்துகிறார்கள் என்பதைத் துல்லியமான முன்வைக்கிறது.

மூன்று ஆவணப்படங்களில் காஷ்மீரைக் கொல்தல், விலகி நினறு சொல்லும் செய்திப் படமாகவும், எல்லைக் கோடுகளைக் கடத்தல் பிரச்சினையின் தன்மையைச் சொல்பவர் துவங்க, காட்சிகள், புகைப்படங்கள், வரைபடங்கள், நேர்காணல்கள் போன்றவற்றின் வழி வரலாற்றில் பயணம் செய்து, முதலில் தோன்றியவர் தொகுத்துச் சொல்ல முடிகிறது. காஷ்மீர் திட்டம் வதியுறும் மக்களது வலிகளையும் துயர்களையும் உடனிருந்து அனுபவிக்கிற இரு பெண்களை முன்வைக்கிறது. நான்காவது ஆவணப்படமான பாதி விதவைகள் : காஷ்மீரின் காணாமல் போன ஆண்கள் (2005) ஆவணப்படம் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெண்களின் அன்றாட வாழ்வு அனுபவங்களோடு பயணம் செய்கிறது.

1989 ஆம் ஆண்டு என்பது காஷ்மீரைப் பொறுத்து மிக முக்கியமான ஆண்டு. 1987 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல்களால் அதிருப்தியுற்று பெரும் மக்கள்திரள் ஆரப்பாட்டங்கள் இந்திய அரசுக்கு எதிராக எழுந்தது இந்த ஆண்டுதான். சோவியத் யூனியன் ஆபகானிலிருந்து படைகளை விலக்கிக் கொண்டபின்னால், வெற்றிக் களிப்புடன் இருந்த தலிபான்கள், 1989 சோவியத் யூனியன் வீழுச்சியின் பின் புதிய உலகத்தை உலக அளவில் உருவாக்க உலகின் எல்லா நாடுகளிலுமுள்ள அடிப்படைவாத இஸ்லாமிய இயக்கங்களுக்கு உதவப் புறப்பட்டதும், அவர்களிடமிருந்த அமெரிக்க டாலரும், சவுதி அரேபியச் செல்வமும் காஷ்மிரில் நுழைந்த ஆண்டும் இதுதான். இந்திய அரசின் ஒடுக்குமுறை இவர்களுக்கு இளைஞர்களைக் கொண்டு சேர்த்தது.

இந்திய அரசு எதிர்கொண்டே தீர வேண்டிய ஒரு உண்மையைப் பறைசாற்றிய ஆண்டும் இதுதான். முழு காஷ்மீர் மக்களும் இந்திய ராணுவத்தின் பிரசன்னத்துக்கு எதிராக இருக்கிறார்கள். காஷ்மீர் மக்களுக்கு இந்திய ஒடுக்குமுறையிலிருந்து அவர்கள் விடுதலை கோருகிறார்கள். பயங்கரவாதத்தையும் பாகிஸ்தானிய ஊடுறுவலையும் நிராகரிக்கிற கேகேஎல்எப்பும் இதனைத் தான் சொல்கிறது. இந்திய அரசின் ராணுவ ஒடுக்குமுறை அந்த மக்களை இந்திய அரசின் பாலான பெருவெறுப்புக்குத் தள்ளியிருக்கிறது. அவர்களது சொந்த வாழ்பனுபவமே அவர்களை இந்த நிலைமைக்குத் தள்ளியிருக்கிறது.

1989 முதல் 2005 வரையிலுமான இந்த பதினாறு ஆண்டுகளில் காணாமல் போனேரின் உறவுகளின் அனுபவங்களைத்தான் பாதி விதவைகள் ஆவணப்படம் பதிவு செய்கிறது. இந்திய ராணுவத்தினால் கைது செய்யப்பட்டு விசாரனைக்கென கொண்டு செல்லப்பட்ட ஒரு ஆட்டோ டிரைவரின் மனைவியின் அனுபவமாகத் துவங்கும் ஆவணப்படம், அவளோடு பயணித்து, அவளது இல்லத்திலேயே முடிகிறது. இந்தப் பயணத்தின் இடையில் ஆவணப்பட இயக்குனர்கள் காணாமல் பேனோரின் வேறுபட்ட குடும்ப அனுபவங்களையும் பதிவு செய்கிறார்கள். இந்தப் பெண்கள் அனைவரும் தமது குடும்பத்தின் வருமானத்திற்கு தமது ஆண்களையே நம்பியிருந்தவர்கள். இப்போது அவர்கள் குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கமுடியவில்லை. பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. பிச்சையெடுக்கவும் செய்கிறார்கள். அவ்வப்போது காவல் நிலையங்களுக்கும் படைத்துறை அலுவலகங்களுக்கும் சென்று தமது கணவர்களையும் பெற்றோரையும் பற்றி விசாரித்துப் பார்த்துவிட்டு வெறுங்கையுடன் திரும்பி வருகிறார்கள். படையினர் அவர்களைத் தாம் கைது செய்யவில்லை எனப் பதில் சொல்கிறார்கள். விடுதலை செய்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். தம்மிடம் இல்லை என்கிறார்கள். ஆண்டுக் கணக்கில் இதுதான் அவர்களுக்குப் பதிலாக இருக்கிறது.

ஆட்டோ டிரைவரின் மனைவி தனது குழந்தைகளில் ஒரு மகனை தனது சிநேகிதிக்கு வளர்க்கக் கொடுத்துவிடுகிறாள். அந்தக் குழந்தை அந்தப் பெண்ணையே அம்மா என அழைக்கிறான் என்று அவள் சொலகிறபோது அவளது குரல் உடைகிறது. அந்தக் குழந்தை இருக்கும் வீட்டுக்குச் சென்று அவனைக் கட்டிக் கொள்கிறாள். கணவற்றுத் தனியே விடப்பட்ட அவளைத்தேடி வந்த இரு இளைஞர்கள் தம்முடன் சந்தோஷமாக இருக்க வருமாறு அப்பெண்ணை அழைக்கிறார்கள். கதவைச் சாத்திவிட்டு குழந்தைகளுடன் ஜன்னலில் ஏறி அவள் தப்புகிறாள். காணாமல் போன இரு இளம்பெண்களின் தகப்பனைத் தேடிச் செல்லுத் தாய்க்கு, காவல்நிலையத்தில் பேசுவதற்கு உதவி செய்யப் போன இளம்பெண்களுக்கு காவல்துறை அதிகாரிகளும் இராணச் சாவடி அதிகாரிகளும் நள்ளிரவு துவங்கி, விடிகாலை 5 மணி வரையிலும் தொலைபேசியில் அழைத்து ‘எனக்கு உறக்கம் பிடிக்கவில்லை, வா, நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்கிறார்கள். தாயும் அவளது இரு மகள்களும் இதனைச் சொல்லி அழுகிறார்கள்.

இஸ்லாம் மறுமணத்தை ஏற்கிறது. இவர்களின் நிலையை இஸ்லாம் அங்கீகரிக்க முடியாது. என்றாலும் இப்பெண்கள் காத்திருக்க வேண்டும். காணாமல் போனோர் மரணமுற்றனரா எனவும் தெரியவில்லை. உயிரோடு இருக்கிறார்களா எனவும் தெரியவில்லை. 1500 முதல் 2000 பெண்கள் இந்த நிலையில் விட்டு வைக்கப்பட்டிருக்கிhர்கள். ஆண்டுக் கணக்கிலான காத்திருப்பின் பின் தமது கணவர்கள் இனித் திரும்பிவர மாட்டார்கள் எனப் பெண்கள் முடிவுக்கு வந்துவிட்டாலும் அவர்கள் மறுமணம் செய்யத் துணியவில்லை. அவர்கள் தமது கணவனுக்காகத் காத்திருக்கிறார்கள். குழந்தைகளும் இளம் பெண்களும் முதிய தாய்மாரும் தமது குடம்பழ் தலைவனுக்காகக் காத்திருக்கிறார்கள்.

இந்த ஆவணப்படத்தில் ஒரு பெண் ஒரு சந்தரப்பத்தில் தான் பார்டர் படம் பார்த்துவிட்டு தீவிரவாதிகளால் கொல்லப்படும் இந்திய ராணுவத்தினருக்காக மனவருத்தப்பட்டேன் என்கிறார். திரைப்படம் ஏற்றும் யதார்த்தம் மீறிய உணரச்சிவசம் இங்கு செயல்படுகிறது. 1971 ஆம் ஆண்டு ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தானிய டாங்கிப் படையை எதிர்கொண்ட பஞ்சாப் படைப்பிரிவினரின் வீரம் பார்டர் (1997) படத்தின் கதைக்களம். பார்டர் படத்தில் போர்முனையில் பொருதும் வீரர்களின் அன்றாட வன்முறை வாழ்வினிடையில் அவர்கள் தமது காதலியருடன் மனைவியருடன் இடையிடையில் காதல் கனவும் காண்கிறார்கள். காத்திருக்கும் பெண்களின் நினைவுகள் அவர்களது காத்திருக்கும் மரணத்தின் முன்பு அதிக முக்கியத்துவம் கொண்ட உணர்ச்சிகரமான பிரச்சினையாகப் படம் முன்வைக்கிறது. குடும்பம் தேசம் எனும் எதிர்மையில் குடும்பத்தை நிர்க்கதியாக விடும் புனிதர்களாக இந்திய ராணுவ வீரர்கள் ஆகிறார்கள்.

பாதி விதவைகள் இந்திய ராணுவத்தினர்களின் மரணத்தின் பின் அதனை எதிர்கொள்ளும் பெண்களின் துயரைப் புரிந்துகொள்கிறார்கள். மரணம் விளைவிக்கும் துயர்,இழப்பு அனைவருக்கும் ஒன்றுதான். மரணத்தை நிச்சயப்படுத்திக் கொள்வதும் கூட ஒரு வகை நிம்மதி. விடுதலை. அது காஷ்மீரத்தின் ஆயிரமாயிரம் பெண்களுக்குக் கிட்டவில்லை என்பதனை கனத்த மனத்துடன் முன்வைக்கிறது பாதி விதவைகள் ஆவணப்படம். ஆவர்கள் தமது திரும்பி வராத கணவர்களுடன் கனவுகளில் பெசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுடன் ஆவணப்படம் முடிகிறது. திரைப்படம் ஒரு புனைவாகத் தவறும் இடத்தில் உணரச்சிவசமும் யதார்த்தமும் கொண்ட நிஜமாக வெற்றி பெறுகிறது பாதி விதவைகள் : காஷ்மீரின் காணாமல் போன ஆண்கள் ஆவணப்படம். கதைகள் உடைபட வேண்டியதன் அவசியத்தை இன்று ஆவணப்படங்களே கற்பித்துக் கொண்டிருக்கின்றன. யதார்த்தம் முகத்தில் அறைகிறபோது அந்த வலியிலிருந்து எவரும் தப்ப முடியாது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85251/language/ta-IN/article.aspx.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.