Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டையர்கள் : மாயா கோட்னானி-அஜ்மல் கசாப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=1]இரட்டை[size=1]இரட்டையர்கள் : மாயா கோட்னானி-அஜ்மல் கசாப்[/size][/size]

[size=1]யர்கள் : மாயா கோட்னானி-அஜ்மல் கசாப்[/size] titlelogo.giftitleright.gif அ.முத்துக்கிருஷ்ணன்

Muthukrishnan%201.jpg

குஜராத்தில் 2002 ல் நடந்த நிகழ்வுகளை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அது நம் கால கட்டத்தின் மறக்க முடியாத நினைவு. நாம் இந்தியப் பிரிவினையின்பொழுது நடந்த கலவரங்களைப் பற்றி மிக விரிவாக வாசித்திருந்தாலும், நம் காலத்தில் குஜ ராத்தில் நிகழ்த்தப்பட்டது ஒரு மாபெரும் இனப்படு-கொலை. இந்த இனப்படுகொலையை அரசாங்கம் தனது முழு பங்களிப்புடன், ஆசிர்வாதத்துடனும் நடத்தியது. இது எப்படி எல்லாம் நிகழ்த்தப்பட்டது என்கிற உண்மையை இந்த உலகிற்கு அறிவித்தவர் தெகல்கா பத்திரிகையின் புலனாய்வு நிருபர் ஆஷிஷ் கேத்தன். அவர் ஆறு மாத காலம் குஜராத்தில் தங்கியிருந்து மெல்ல மெல்ல முன்நகர்ந்து சங் பரிவாரின் கொலைகார கூடாரங்களுக்குள் சென்றார். அங்கே இருந்து தொடங்கி அவரது பயணம் 60 மணி நேரம் உலகின் மிக முக்கிய காணொளி காட்சிகளைப் பதிவு செய்வதுடன் நிறைவு பெற்றது. இன்று பிழைப்புக்காய் மாறடித்து, எந்த அறமும் இல்லாது ஊடகங்களை கழிவறைகளாக மாற்றும் பத்திரிகையாளர் மத்தியில் எந்த சமரசமும் இல்லாமல் ஆஷிஷ் கேத்தன் செய்தது ஒரு வாழ்நாள் சாதனை என்றால் மிகை இல்லை.

அவரது 60 மணி நேரப் பதிவுகளில் கொலைகாரர்கள், காவல்துறை உயரதிகாரிகள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், அரசு வழக்கறிஞர்கள் என பலர் தோன்றி தங்களின் வீரதீரச் செயல்களை விரிவாக வர்ணித்தார்கள். எப்படி சங்பரிவாரின் தொழிற்சாலைகளில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன, எப்படி குஜராத் காவல்-துறை இதை எல்லாம் கண்டுகொள்ளாது பாதுகாத்தது, எப்படி நரேந்திர மோடி இவர்களை எல்லாம் வழிநடத்தினார். . . அவைகளை கண் இமைக்காமல் தங்களின் வீர வரலாற்றை காமிரா முன் வர்ணித்தார்கள். எப்படிக் கொலைகள் செய்தோம், எப்படி பாலியல் பலாத்காரம் செய்தோம், எப்படி காஸ் சிலிண்டர்களை வெடிக்கச் செய்தோம், இதற்கு எல்லாம் எப்படிப் பயிற்சி பெற்றோம், எப்படி ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வாளால் குத்தினோம் என மேலும் மேலும் சொன்ன வாக்குமூலங்கள் இந்த தேசத்தை ஆட்சி செய்யத் துடிப்பவர்களுக்கு மேலும் பெருமையையே சேர்த்தது.

பாபு பஜ்ரங்கி பல கொலைகளைச் செய்துவிட்டு நான் அவர்களை எல்லாம் கொன்ற பிறகு மகாராணா பிரதாப் ஆக உணர்ந்தேன் என்கிறார். மதன் சாவல், தான் எப்படி காங்கிரஸ் எம்.பி இஷான் ஜாப்ரியைத் தரை-யில் எட்டி உதைத்து, அவரைத் துண்டு துண்டாக வெட்டி, உயிருடன் தீயிட்டுக் கொளுத்தினோம் என்பதைத் துல்லியமாகக் கூறுகிறார். இன்னும் மூன்று மணி நேரம் மட்டுமே உள்ளது காரியத்தை முடிக்க என்பதை எப்படிக் கொலைகாரர்களுக்குத் தெரிவித்தார் என்பதை மங்கிலால் ஜெயின் பரபரப்புடன் விவரிக்கிறார். இது வரலாறு காணாததாக இருக்க வேண்டும் என்று தங்களின் தலைமை எப்படி உத்தரவிட்டது என்பதைப் பதிவு செய்கிறார் தீபக் ஷா. ராக்கெட் செலுத்தும் கருவியைத் தயாரித்ததை ஒரு விஞ்ஞானியைப் போல் விளக்கும் ஹரேஷ் பட்டுக்குப் பின்னர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி கொடுத்து அழகு பார்த்தார் நரேந்திர மோடி. நாங்கள் கொடுத்த ஆயுதங்களின் எண்ணிக்கையைப் பார்த்து எங்கள் ஆட்களே திகைத்துப் போனார்கள் என்று மேலும் கூறுகிறார் ஹரேஷ் பட்.

எப்படி இந்த இனப்படுகொலையின்போது குஜராத் காவல்துறையினரின் கண்களும் வாயும் மூடப்பட்டிருந்தது என்கிறார் பாபு பஜ்ரங்கி. நரேந்திர மோடி காவல்துறையை எங்களுக்காகப் பணிபுரியச் செய்தார் என்கிறார் வி.எச்.பி. தலைவர் ராஜேந்திர வியாஸ். ஊரடங்கு உத்த-ரவு நடைமுறையில் இருந்தபோது எப்படி கொலைகாரர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி இருந்தது என்பதைக் கூறுகிறார் திமந்த் பட். காவல் துறையினரே எப்படி 70-80 பேரைக் கொன்றார்கள் என்பதை சுரேஷ் ரிச்சர்ட் நினைவு கூர்கிறார். என்னை வெளியே கொண்டு வர நரேந்திர மோடி மூன்று முறை நீதிபதிகளை மாற்றினார் என காலரைத் தூக்கி விட்டுச் சொல்கிறார் பாபு பஜ்ரங்கி. இதே பாபு பஜ்ரங்கியைத்தான் நரேந்திர மோடி பல மாதங்கள் ராஜஸ்தானின் மௌண்ட் அபுபில் உள்ள பெரும் சொகுசு மாளிகையில் மறைத்து வைத்திருந்தார். இந்த அறையில் வாஜ்பாயி கவிதைகள் எழுதுவார் என் பது இங்கு கூடுதல் செய்தி. கொலைகளைச் செய்தவர்கள் மீதான சில வழக்குகள் வலிமையற்றவை. கடவுளின் ஆசிர்வாதத்தால் சமாளித்தோம் என பெருமூச்சு விடுகிறார் மூத்த வழக்கறிஞரும் வி.எச்.பி. பொதுச்செயலாளருமான திலிப் திரிவேதி. மேலும் நீதிபதி கே.ஜி.ஷா நம்முடைய ஆள், நீதிபதி நானாவதிக்குப் பணம்தான் குறி என்கிறார் குஜராத் மாநில வழக்கறிஞர் அரவிந்த பாண்டியா.

GUJRAT1.jpg

கோத்ராவில் ரயிலை எப்படி எரித்தார்கள், அதில் இருந்த கரசேவகர்களை எல்லாம் எப்படி நம் என் உயிர் தோழன் படத்தில் வரும் நாயகனைப் போல சங் பரிவார் ஆட்களே பலி கொடுத்தார்கள் என்பதையும் ஆதாரங்களுடன் மிக துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டினார் ஆஷிஷ் கேத்தன். அதன் பின் சிலரைப் பிடித்து மிரட்டி எப்படி எல்லாம் தவறான வாக்குமூலங்களைப் பதிவு செய்து கோத்ராவின் மிகவும் மதிக்கத்தக்க இஸ்லாமியத் தலைவர்களை சிறையில் அடைத்தார்கள் என்பதையும் இந்த வீடியோ பதிவுகள் உறுதிப்படுத்தின. காவல்துறையினர் அரசின் விருப்பம் போல் செயல்பட்டார்கள் என குஜராத் காவல்துறையின் முன்னாள் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. ஆர்.பி.ஸ்ரீகுமார் ஒரு உரையாடலில் தெரிவிக்கிறார்: ‘‘இந்த வாக்குமூலங்கள் எல்லாம் குஜராத் காவல்துறையினர் தங்களின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்திருக்க வேண்டியவை இல்லையா? இவர்களை இப்படியே விட இவர்கள் என்ன ஜேப்படித் திருடர்களா? இவர்கள் தத்துவங்களால் வழிநடத்தப்பட்டு இந்தக் கண்டத்திற்கே கேடு விளைவிக்கக்கூடியவர்கள்’’ என்று மிகுந்த ரௌத்திரத்துடன் எழுதினார் தெகல்கா ஆசிரியர் தருண் ஜே. தேஜ்பால்.

இத்தனை பெரும் பொக்கிஷம் வெளியாகியும் இந்தப் புலனாய்வை காங்கிரஸ் நிகழ்த்தியது என பா.ஜ.க.வும், குஜராத்தில் நரேந்திர மோடி வெற்றி பெற்றவுடன் இதனை மோடியேதான் திட்டமிட்டு செய்தார் என காங்கிரசும் மாறி மாறி சேற்றை வாரி இறைத்தன. இந்த மொத்த சேறும், நீதிக்காக முகாம்களில் வருடக்கணக்கில் காத்திருக்கும் அப்பாவி இஸ்லாமியர்களின் முகங்களின் மீதுதான் விழுந்தது.

2008ல் உச்சநீதிமன்றம் சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நரோடா பாட்டியா, குல்பர்கு சொசைட்டி, கோத்ரா ரயில் எரிப்பு உட்பட 9 வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டது. அந்தக் குழு முன்னால் தான் ஆஜராக விரும்புவதாக ஆஷிஷ் கேத்தன் தானே மனு செய்தார். அவர் அழைக்கப்பட்டார். அவர் தனது விரிவான வாக்குமூலங்களையும் 60 மணி நேர காட்சிக் கோப்புகளையும் அந்தக் குழுவிற்குக் கொடுத்தார். ஒரு தனி நபரால் இத்தனை சாட்சியங்களைத் தர முடியும் என்கிறபோது ஒரு அரசு நினைத்தால்?? அதன் பின் தொடர்ந்து பல முறை சென்று வாக்குமூலங்கள் அளித்தார். அதில் பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானிக்கு எதிராகப் பல நுணுக்கமான தகவல்களை வழங்கினார் ஆஷிஷ். நீதிமன்றங்களில் தொடர்ந்து ஆஜராகிக் கொண்டேயிருந்தார் ஆஷிஷ். பல முறை அவரிடம் வேண்டாத கேள்விகள், குதர்க்கமான கேள்விகள் என அவரை ஆத்திரப்படுத்தும் விதமாகவே நீதிபதிகளும், அரசு வழக்கறிஞர்களும் நடந்து கொண்டார்கள். இப்ப கூட நீங்க ரகசிய காமிரா வச்சிருக்கீங்களா என்றார் நீதிபதி ஜோஷி. அவர் எல்லா குற்றவாளிகளின் முன்னணியில் ஆஷிஷிடம் அவரது குடும்பத்தார், அவரது வீடு, அது வாடகை வீடா, எத்தனை ஆண்டுகளாக இந்த விலாசத்தில் குடியிருக்கிறார் என அங்கு நீதிமன்ற அறையில் இருக்கும் கொலைகாரர்களுக்குத் தகவல் தருவதற்காகவே விசாரனையை நடத்தினார். சாட்சியம் அளிக்க வந்த இஸ்லாமியப் பெண்களையும் நீதிபதி ஜோஷி அவ்வாறே இகழ்ந்தார். பொது உரிமை- களைக் கூட மறுத்தார். அவரது நடத்தைக்கு எதிராகப் பல மனுக்கள் சென்றன. அவர் மாற்றப்பட்டார். நீதிபதி ஜோத்சனா பென் விசாரணையைத் தொடர்ந்தார்.

ஆகஸ்ட் 29, 2012 அன்று நீதிபதி ஜோத்சனா பென் குஜராத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பான மிக முக்கிய தீர்ப்புகளில் ஒன்றை உச்சரித்தார். நரேந்திர மோடியின் ஆட்சியில் இனப்படுகொலைகளை நிகழ்த்தி விட்டு சுதந்திரமாக நடமாடிய பாபு பஜ்ரங்கி, பா.ஜ.க. அமைச்சர் மாயா கோட்னானி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். ஒரு சிறிய வெற்றி மக்களுக்குக் கிடைத்தது. ‘என்னைக் கொன்றாலும் பரவாயில்லை. என் சாவுக்குள் நான் 10-15 ஆயிரம் இஸ்லாமியர்களைக் கொலை செய்ய வேண்டும்’ என்று மிக வெளிப்படையாக கூறும் பாபு பஜ்ரங்கியைக் காவல்துறை வாகனத்தில் பார்க்கும்போது கொஞ்சம் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. இருப்பினும் 165 பேரைக் கொன்ற அஜ்மல் கசாபுக்கும், 2000 பேரைக் கொன்ற ஹிந்துத்வா தீவிரவாதிகளுக்கும் அளிக்கப்பட்ட வெவ்வேறு தண்டனைகள் நமக்கு இங்கு நீதித்துறையில் நிலவும் பாரபட்சத்தையே காட்டுகிறது. அஜ்மல் கசாப் யாரோ ஏவிவிட்ட கருவியாகத்தான் இருக்கிறார். இரட்டைக் குடியுரிமை பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லியின் பாத்திரம் இன்னும் முழுமையாக விசாரிக்கப்படாமல் தான் உள்ளது.

GODHRA2.jpg

ஆனால் இந்த ஹிந்துத்வா தீவிரவாதிகள் இதனை எல்லாம் தாங்களே திட்டமிட்டவர்கள். இந்தியா முழுவதும் காக்கி டவுசர்களைப் போட்டுக் கொண்டு ஆயுதப் பயிற்சியை இவர்கள் நகரங்களின் மையப்பகுதிகளில் நடத்துகிறார்கள். இந்தியா முழுவதும் இவர்களுக்கு இருக்கும் தீவிரவாத தொடர்புகள், ஆயுதப் பயிற்சி வகுப்புகள், ராணுவத்தில் உள்ள தொடர்புகள் என எல்லாம் ஹேமந்த கர்கரேயின் விசாரணையின்போதே துல்லியமாக வெளிப்பட்டு விட்டது. எந்த இஸ்லா-மியனாவது தனது மசூதிக்கே வெடிகுண்டு வைப்பானா என்று கூட சாதாரணமாக சிந்திக்க மறுத்து, உளவுத்துறை, உள்துறை, மீடியா கூட்டின் மூளைச் சலவையில் இந்த தேசம் சிக்கித்தவிக்கிறது. இந்த மூளைச் சலவைக்கு எதிராகப் பேச எல்லா அரசியல் கட்சிகளும் மறுத்து வருகின்றன. இதனைப் பற்றியும் இந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகத் தொடர்ச்சியாகப் பேசியும், செயல்பட்டும், வழக்குரைஞராகப் பணியாற்றும் டீஸ்டா செதல்வாதின் வரலாற்றுப் பங்களிப்பை இந்த இடத்தில் நாம் நினைவுகூர்ந்தாக வேண்டும். ஒரு காலகட்டத்தின் மனசாட்சியாக விளங்குவது என்பது இதுவன்றி வேறில்லை.

இந்த மூளைச் சலவை மனநிலையில் இருந்துதான் இந்திய மத்திய தர வர்க்கம் குஜராத் மாநிலத்தை வளர்ச்சியின் பிறப்பிடமாகப் பார்க்கிறது. கார் தொழிற்சாலைகளை குஜராத்திற்கு எடுத்துச் செல்ல அத்வானி சிங்கூரில் என்ன செய்தார் என்றும், இப்பொழுது சுசூகி தொழிற்சாலையில் நடந்த கலவரங்களுக்கும் நரேந்திர மோடிக்கும் உள்ள தொடர்புகள் வரை பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. குஜராத்தில் நடக்கும் விவசாயத் தற்கொலைகளையும், ஊட்டச்சத்துக் குறைபாடால் நடக்கும் சாவுகளையும் ஊடகங்கள் கையூட்டுப் பெற்று வெளியிடுவதில்லை. மாறாக, கஞ்சிக்கு வழியில்லாமல் எலும்பு துருத்தி தெரியும் பெண்களை, அழகுணர்ச்சியுடன் வாழுபவர்கள் என்று சமீபத்தில் நரேந்திர மோடி மூடி மறைக்க முயற்சித்தது வரை நாம் உண்மையைக் காண முயல வேண்டும். மிஸீபீவீணீ ஷிtணீtமீ பிuஸீரீமீக்ஷீ மிஸீபீமீஜ்-ன் படி குஜராத் இந்தியாவின் 13 வது மாநிலமாகவே உள்ளது. இது முற்றிலும் ஊடகங்கள் உருவாக்கும் மாயை. இதே பா.ஜ.க. மத்தியில் ஆட்சி செய்தபோது இந்தியா ஒளிர்கிறது என்கிற மாயையை உருவாக்க முயன்றார்கள். அது எத்தனை அபத்தமானதோ அதே அளவுக்கு அபத்தமானது இந்த குஜராத ஒளிர்கிறது மாயை என்பதைப் பல ஆய்வாளர்கள் (இதைப் பற்றி மட்டுமே விரிவாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்)சுட்டிக் காட்டுகிறார்கள்.

இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த தீர்ப்பு வெளிவந்ததும் என மனதில் ஒரு விஷயம் உடனே நினைவுக்கு வந்தது. தெகல்காவின் இந்தப் புலனாய்வு பதிவுகளின் எழுத்துப்படிகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து அவை 2008ல் ஜனவரி 4 ஆம் தேதிதான் அச்சகத்தில் இருந்து வந்து சேர்ந்தது. அதை எடுத்துக் கொண்டு நானே சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அரங்குகளில் விநியோகித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரம் தமிழினி அரங்கில் 30 பிரதிகளை விற்பனைக்குக் கொடுத்தேன். அங்கிருந்த ஜெயமோகன் குஜராத் 2002 புத்தகத்தின் ஒரு பிரதியைக் கையில் எடுத்துக் புரட்டிக்கொண்டே சிரித்தபடி கூறினார்: “எங்களுக்கு வேலை வைக்காமல், நீங்களே எங்கள் வீர வரலாற்றை எழுதிவிட்டீர்கள்.’’ ஒருபுறம் சிலருக்கு வீர வரலாறாக இருப்பது மறுபுறம் ஒரு தேசத்தின் கலங்கம் நிறைந்த துயர வரலாறாக இருக்கிறது.

குஜராத்தில் இன்னும் ஏராளமான கொலைகாரர்கள் மிக சுதந்திரமாக சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட கார்களில், காவல்துறையினரின் பாதுகாப்புடன் வளம் வருகிறார்கள். இதுதானா வளர்ச்சி, இதுதானா நாகரீகம்? தீவிரவாதம் எந்த நிறத்தின் பின்னணியில் இருந்தாலும் அது அழித்தொழிக்கப்பட வேண்டும். ஆனால் இந்திய ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் தொடர்ந்து இதனைக் கையாள்வதில் பாரபட்சத்துடனே நடந்து வருகின்றனர். இதுதான் மேலும் மேலும் இந்த சமூகங்களின் மத்தியிலான மோதலை ஊக்குவிக்க வழிவகை செய்கிறது. ஆட்சியாளர்களும், நீதித்துறையும் மனது வைத்தால் இந்தியாவை அமைதி நிலவும் ஒரு கேந்திரமாக மாற்றலாம். மனது வைப்பார்களா?

muthusmail@gmail.com

http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=6023

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.