Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவின் போர்க்குற்றம் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவின் போர்க்குற்றம் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

22 நவம்பர் 2012

நாள்தோறும் யுத்த விமானங்கள் கிளிநொச்சி நகரத்திலும் நகரை அண்டிய பகுதிகளிலும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தன. மக்கள் குடிமனைகளை அண்டிய இடங்களில் ஐ.நா அலுவலகம் போன்ற தொண்டு நிறுவன அலுவலகங்கள் அமைந்திருந்தன. ஐ.நா பணியாளர்களும் மக்களைப்போலவே தம்மை பாதுகாக்க பதுங்குகுழிகளை அமைத்திருந்தனர். விமானங்கள் குண்டுகளை கொட்டுவதன் மூலம் கிளிநொச்சி நகரம் எந்த நேரமும் பதற்றத்தால் நிறைந்திருந்தது. ஐ.நா அலுவலகத்திற்கும் வேறு சில தொண்டு நிறுவனங்களுக்கும் அருகில் இருந்தால் தங்கள்மீது விமானங்கள் தாக்குதல் நடத்தப்படாது என்று மக்கள் நம்பியிருந்தார்கள். வானத்தில் விமானங்கள் வட்டமிடத் தொடங்கும் பொழுது பலர் ஐ.நா போன்ற தொண்டு நிறுவன அலுவலகங்களுக்கு அருகில் வந்து நிற்பார்கள். ஐ.நா போன்ற தொண்டு நிறுவனங்களின் நிழலில் ஒளிவதன் மூலமாவது தப்பிக்கொள்ளலாம் என்று மக்கள் நம்பியிருந்த சூழலில்தான் தொண்டு நிறுவனங்களை வெளியேற்ற முடிவெடுத்தது இலங்கை அரசு.

2008 செப்டம்பர் மாதம். ஐ.நா பணியாளர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க முடியாது என்று தெரிவித்ததன் மூலம் வன்னி யுத்த களத்தை விட்டு ஐ.நாவை வெளியேற வேண்டும் என்ற எச்சரிக்கையை இலங்கை அரசு விடுத்தது. பேரதிர்ச்சியடைந்த மக்கள் கிளிநொச்சியில் உள்ள ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். ஐ.நாவே வெளியேறாதே! என்று மக்கள் கோசமிட்டார்கள். விடுதலைப் புலிகள்தான் இவ்வாறு ஐ.நாவை தடுக்கிறார்கள் என்றும் அதன் மூலம் புலிகள் தம்மை பாதுகாக்க முனைகின்றனர் என்றும் இலங்கை அரசு சொன்னது. ஐ.நா வெளியேறிய பொழுது மாபெரும் கொலைதத் தாக்குதல்கள் நடக்கப்போகின்றன என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டது.

மக்கள் எதிர்பார்ததது போல ஐ.நா உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் வெளியேறியவுடன் வன்னியில் இராணுவத்தினர் தாக்குதல்களை செறிவாக்கினார்கள். பலமுனைகளிலும் யுத்த களத்தை திறந்தனர். ஐ.நாவின் வெளியேற்றத்தை யுத்தம் ஒன்றிற்கான அவகாசமாகவே இலங்கை அரசு பாவித்தது. எந்தவிதமான சாட்சிகளும் இல்லாத நிலையில் மூடுண்ட போர் வலயத்தில் மக்களை கொன்றொழிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்த பொழுது மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாக தன்னை பிரகடனப்படுத்தி யுத்த களத்தில் நின்ற ஐ.நாவை அரசாங்கம் வெளியேற்றியது. எந்தவிதமான கேள்வியுமின்றி ஐ.நாவும் வெளியேறியது. எந்த விதத்திலும் சாட்சிகள் இல்லாத ஒரு போரை நடத்தி இனப்படுகொலையை நிகழ்த்தவே ஐ.நாவை இலங்கை அரசு வெளியேற்றியது. இலங்கை அரசின் எச்சரிக்கைகக்கு பயந்தோ, பணிந்தோ ஐ.நா வெளியேறியது.

யுத்தம் முடிந்து மூன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஈழப்படுகொலையில் ஐ.நா தன்னுடைய பங்கை ஐ.நா ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால் இது அவ்வளவு எளிதாக மன்னிப்புக்கோரி தப்பிக்ககூடிய தவறல்ல. மாபெரும் இனப்படுகொலை ஒன்றை இனவாத அரசாங்கம் நடத்த ஐ.நா வழங்கிய அனுமதியை ஒப்புக்கொள்வதாகும். மன்னிக்க முடியாத மபெரும் தவறு. மாபெரும் இனப்படுகொலை நடப்பதற்கு ஐ.நாவும் ஒரு வகையில் உடந்தையாக இருந்திருக்கிறது என்பது எவ்வளவு கொடுமையானது? உலகில் உள்ள மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதாக சொல்லும், அதுவும் யுத்தத்தின் பொழுது அகதிகளின் உரிமைகளை பாதுகாப்பதாக சொல்லும் பிரகடனத்தை சுமந்திருக்கும் ஐ.நா இன்றைய நூற்றாண்டில் மிகப்பெரும் பேரழிவுக்கும் பெருந்துயருக்கும் முகம் கொடுத்த இனம்மீதான கொலையில் மௌனித்திருந்ததை எப்படி கணிப்பீடு செய்வது?

ஐ.நாவின் இரகசிய அறிக்கையில் பொதுமக்களின் உயிரிழப்பைத் தடுக்கத் தவறியது மட்டுமன்றி, பொதுமக்களின் உயிரிழப்பின் எண்ணிக்கையை சரியாக வெளியிடாமை, வன்னியில் இருந்த தனது பணியாளர்களை மீள அழைத்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வரிசையாக அடுக்கப்;பட்டுள்ளன. இறுதிப் போரின்போது ஐக்கிய நாடுகள் சபை ஒரேயொரு அறிக்கை மட்டுமே வெளியிட்டது எனவும், ஐ.நா பாதுகாப்புச் சபையில் இலங்கைப் போர் பற்றியோ, பொதுமக்களின் உயிரிழப்பைத் தடுப்பது தொடர்பாகவோ எந்தவொரு கூட்டமும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி, தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளை மட்டும் மனித உரிமை மீறல் விடயத்தில், குற்றச்சாட்டிக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை, சிறீலங்கா அரசாங்கத்தின் பொறுப்பு குறித்து வாய் திறக்கவில்லை என்று அந்த அறிக்கை கண்டிக்கின்றது. அத்தோடு இறுதிப் போரின்போது வன்னியில் இருந்த ஐக்கிய நாடுகள் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. இது பற்றி ஐ.நா இதுவரை சிறீலங்கா அரசாங்கத்திடம் விளக்கம் கேட்கவில்லை. இது ஐ.நா விதிமுறைகளுக்கு மாறானது. அது மட்டுமன்றி ஐ.நாவின் பொறுப்பு பற்றிய கேள்விகளுக்கும் வழிவகுத்துள்ளது என்கிறது இரகசிய அறிக்கை.

2011ஆம் ஆண்டில் ஏப்பிரல் மாத்தில் ஐ.நா இலங்கை யுத்தம் தொடர்பில் 216 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டது. இலங்கை அரசை பெரும் பீதிக்கு உள்ளாக்கிய அந்த அறிக்கையை பான்கீமூன் நியமித்த நிபுணர் குழு தயாரித்திருந்தது. அந்த நெருக்கடிக் குழுவின் அறிக்கை பல முக்கிய குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு இலங்கை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. முக்கிமயாக மக்கள் படுகொலைகள், பாலியல் வன்முறைகள், யுத்தகள சித்திரவதைகள், பாதுகாப்பு வலையத்தில் இருந்த மக்கள் மீது மீண்டும் மீண்டும் குறிவைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தியமை, மருத்துவ மனைகள், ஐ.நா, செஞ்சிலுவைச் சபை ஆகியவை மீது குறிவைத்து தாக்குதல் நடத்தியமை, பல்லாயிரக்கணக்கான பொது மக்களை குறிவைத்து கொலைசெய்தமை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் போர் குற்றங்களும் இடம்பெற்றமை முதலிய சம்பவங்களில் அரசாங்கம் ஈடுபட்டதாக தெரிவித்தது.

இந்த நெருக்கடி அறிக்கையை இலங்கை அரசு எப்படியோ கடந்து வந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத் தொடரில் இரண்டுமுறை இலங்கையை சிக்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்பொழுது ஐ.நா ஈழப்படுகொலையில் பொதுமக்களை பாதுகாக்க தவறியிருக்கிறது என்று அதன் உள்ளக அறிக்கை ஒன்று தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது. பயங்கரவாத்தை அழிப்பதாக சூளுரைத்துவிட்டு அரசாங்கம் இழைத்த குற்றங்களை சர்வதேச நாடுகள் கண்டுகொள்ளாமல் இருந்தன என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. ஐ.நா அதிகாரிகள் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் வெளியில் பேசிவிடமால் இருந்தனர் என்றும் இரகசிய அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இந்த அறிக்கை ஐ.நாவின் தவறை சுட்டிக்காட்டியதுடன் ஐ.நாவின் அனுமதியுடன் இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலையையும் ஒப்புக்கொள்கிறது.

யுத்தப் பிரதேசத்தில் மக்களுக்கு சென்று உதவ கூடுதலான இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான விஷயங்கள் பற்றி வெளியில் பேசாமல் இருந்துவிட ஐநா பணியாளர்கள் தீர்மானித்திருந்தனர். இலங்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டம் அரங்கேறியபோது ஐநா பாதுகாப்பு சபையோ, வேறு முக்கிய ஐநா நிறுவனங்களோ ஒருமுறைகூட உத்தியோகபூர்வமாகக் கூடியிருக்கவில்லை. ஐநா உறுப்பு நாடுகளுக்கு எது தெரியவேண்டுமோ அதனை வெளியில் சொல்லாமல், அவர்கள் எதனைக் கேட்க விரும்புவார்களோ அதனைத்தான் ஐநா வெளியில் சொன்னது என்றும் குறித்த அறிக்கை சொல்லுகிறது. இலங்கை அரசுக்கு ஈழ இனப்படுகொலையில் எவ்வளவு பங்கியிருக்கிறதோ அவ்வளவு பங்கு ஐ.நாவுக்கும் இருக்கிறது என்பதையே ஐ.நாவின் இரகசிய அறிக்கை உணர்த்துகிறது. ஈழத் தமழிரக்ளை பாதுகாக்க தவறியதை ஐ.நாடுகள் சபையின் செயலாளர் பான்கிமூன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். காலம் தாழ்த்தி ஒப்புக்கொண்ட இந்த மாபெரும் தவறை எப்படி மன்னிப்பது? உண்மையில் இது தவறா? அல்லது தப்பா?

யுத்தம் நடந்துகொண்டிருந்த பொழுது பான்கிமூன் இலங்கை அரசுக்கு ஒரு அனுமதியை வழங்கியிருந்தார். கனகரக ஆயுதங்களை பயன்படுத்தாமல் சிறிய ஆயுதங்களை பாயன்படுத்தி யுத்தம் நடத்தும்படி அவர் இலங்கை அரச படைகளுக்கு அறிவுரையாக தனது அனுமதியைக் கொடுத்திருத்திருந்தார். ஐ.நா செயலாளர் பான்கிமூனின் இந்த அனுமதியை இலங்கைப் படைகள் எப்படிப் பயன்படுத்தியிருப்பார்கள்? ஐ.நா செயலாளர் சொல்லியபடி சிறியரக ஆயுதங்களைத்தான் பயன்படுத்தினார்களா? ஐ.நா செயலாளர் பான்கிமூனின் அனுமதியை இனப்படுகொலை யுத்தத்திற்கான அனுமதியாக பாவித்த இலங்கை அரசு அதற்குப் பின்னரே கொத்துக்குண்டுகள் மற்றம் இரசாயனக்குண்டுகள் முதலிய தடை செய்யப்பட்ட குண்டுகளை அப்பாவி மக்கள்மீது கொட்டி மக்களை இரக்கமற்ற முறையில் இனப்படுகொலை செய்தன.

இதற்குப் பின்னரே மக்கள் தஞ்சமடைந்திருந்த பாதுகாப்பு வலயங்கள்மீதும் மருத்துவமனை முதலிய பொது இடங்கள்மீதும் கண்மூடித்தமான விமானத் தாக்குதல்களையும் பீரங்கி மற்றும் எறிகணைத் தாக்குதல்களையும் நடத்தி மக்களை வகைதொகையற்ற ரீதியில் இலங்கைப் படைகள் மக்களை அழித்தொழிக்கத் தொடங்கின. ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கை இலங்கைமீது குற்றசாட்டை வைக்க இரகசிய அறிக்கை ஐ.நாமீது பலத்த குற்றச் சாட்டுக்களை முன் வைக்கிறது. ஐ.நா நிபுணர் குழு அறிக்கை நாற்பதாயிரம் மக்கள் கொல்லப்ட்டனர் என்று சொல்லியது. இப்பொழுது வெளியான உள்ளக அறிக்கையில் எண்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் லட்சக்கணக்கான மக்கள் இறுதிப்போரில் கொல்லபட்டிருக்கிறார்கள். அதை ஐ.நா அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளவோ சொல்லவோ இன்னும் சில வருடங்கள் கூட எடுக்கலாம். அல்லது ஐ.நா அதைக் கண்டு பிடித்து சொல்வாத காட்டிக்கொள்ள சில வருடங்கள் எடுக்கலாம்.

இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையத்தின் முன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலர்களால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூலப் புள்ளிவிபரத்ததின்படி 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வன்னியில் 429, 059 பொதுமக்கள் வசித்து வந்துள்ளார்கள். இந்தப் புள்ளி விபரத்தை வன்னியிலிருந்து யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்து வவுனியாவை வந்தடைந்து தடுப்புமுகாம்களில் தங்க வைக்கப்பட்டு 2009 யூலை மாதம் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிபரத்துடன் ஒப்பிடும் பொழுது இறுதிப்போரில் போரில் 146, 679 தமிழர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

ஐ.நா இலங்கை யுத்த்தில் அப்பாவி மக்கள் நாளும் பொழுதும் வகைதொகையாய் கொல்லப்படடுவதை உண்மையில் அறியாது இருந்ததா? இப்பொழுதான் அதற்கு உண்மை கொஞ்சம் கொஞ்சமாக தெரிகிறதா? உண்மை அப்படி இல்லை. உண்மையில் ஐ.நா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமுமே அறிந்திருந்தது. ஆனால் இப்பொழுதுதான் தெரிவது போல ஐ.நா காட்டிக் கொள்கிறது. மக்களை பலிகொடுத்தாவது விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்று இலங்கை அரசு உறுதிபூண்டிருந்தது என்று ஐக்கிய நாடுகளின் மனித நேயப் பணிகளுக்கான முன்னாள் தலைவர் ஜோன் ஹோம்ஸ் குறிப்பிட்டடுள்ளார். இதை விடுதலைப் புலிகள் அன்றே சொல்லியிருந்தார்களே? இந்த யுத்தம் புலிகளை அழிப்பதாக சொல்லிக் கொண்டு மக்களை இனப்படுகொலை செய்யும் யுத்தம் இதை நிறுத்துங்கள் என்று மரண களத்தில் புலிகள் கோரிக்கை வைத்தார்களே?

ஐ.நா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறது. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்று மிகவும் வெறிகொண்டு இலங்கை அரசு நடத்திய யுத்தத்தை பார்த்துக் கொண்டிருந்த உலகம் ஈழ மக்கள் வழைகதொகையாய் கொல்லப்பட்ட பொழுது அந்த ஆதாரங்கள் உடனுக்குடன் உலகின் கண்களுக்கு கிடைத்த பொழுதும் மக்களின் அவலக்குரலுக்கு யாரும் செவிசாய்ககாமல் புலிகளின் அழிவை கணக்கெடுத்துக்கொண்டிருந்தார்கள். இன்று ஐ.நா தன்னுடைய கொலைப் பங்கை ஏற்றுக்கொண்டிருப்பதுபோல நாளை வேறு நாடுகளும் வேறு அமைப்புக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடும். அதன் மூலம் இலங்கை அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கி தம்முடைய அரசியல் நலன்களை சாதிக்கக் கூடும். எந்த எச்சரிக்கைகளுக்கும் பணியாமல் தொடர்ந்து தன்னுடைய இன அழிப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

எனினும் இத்தகைய அரசியல் சதிகள் அம்பலமாகும் பொழுது எமக்கு எதிரான நடந்த அநீதிக்கு ஏதும் நீதி கிடைக்கதா என்று ஈழமக்கள் ஏங்குகின்றனர். ஐ.நாவின் இலங்கை மீதான நெருக்கடி என்பது அனைத்துலக விசாரணையை பரிந்துரைக்கிறது. அதையே இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர். இத்தகைய கொலைப்பங்குகள் அம்பலமாகும் பொழுது அதையே இனப்படுகொலையின் ஆதாரமாக எடுத்துக் கொண்டு ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்தை இலங்கை அரசிடமிருந்து காப்பாற்ற போராடவேண்டும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85671/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.