Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் வாழும் நாடுகள்.2 - ஆஸ்திரேலியாவில் தமிழர்

Featured Replies

இருப்பிடம் 

ஆஸ்திரேலியா ஒரு கண்டம். 29,67,909 சதுர மைல் பரப்புள்ள நாடு. இந்நாட்டின் தலைநகரம் கேன்பரோ. இங்கு ஆங்கிலமே ஆட்சிமொழி. இந்நாடு ஏழு மாநிலமாக பிரிக்கப்பட்டுள்ளது. 

தமிழர் குடியேறிய வரலாறு :

ஆங்கிலேயர் குடியேறுவதற்கு முன்பே, ஆஸ்திரேலியாவில் தமிழர் குடியேறினர் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து பழங்குடிகளான மவோரி மக்கள் மத்தியில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு வெங்கல மணியை ஆங்கிலேயர் கண்டெடுத்தனர். அதை அங்குள்ள அரும்பொருட்காட்சிக் கூடத்தில் வைத்துள்ளனர். அம்மணியின் மீதுள்ள வாசகம், 15-ஆம் நூற்றாண்டுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அது பின் வருமாறு : "முகையதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி" என்று காணப்படுகிறது. இதன் மூலம் தமிழக வணிகர்கள் எந்தளவிற்கு தூரக்கிழக்கு நாடுகளுக்கு போய்வந்தனர் என்பதை அறியலாம். 1788இல் இருந்து குடியேற்றம் தொடங்கியது. முதலில் ஓரிருவர் தொடங்கிய தமிழர் குடியேற்றம் 1837-38 ஆம் ஆண்டுகளில் பெருமளவு நடந்தது. இதற்குக் காரணம், இந்திய கிழக்கிந்திய கம்பெனியிலிருந்து சென்ற ஆங்கிலேயர் தம்முடன் தமிழரையும் அழைத்துச் சென்றனர். அங்கு விவசாய தொழிலாளர்களாகவும் தமிழர் குடியேறினர். 

1901-க்குப் பிறகு ஆங்கிலேயர் தவிர பிறரைக் குடியேற்ற வெள்ளையர் அனுமதிக்கவில்லை. இதனால் அக்காலங்களில் தமிழர் குடியேறவில்லை. ஆனால் ஆஸ்திரேலியருடன் தொடர்பிருந்தது.சர். பொன்னம்பலம் இராமநாதன் ஆஸ்திரேலியா சென்று அந்நாட்டுப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு இலங்கை வந்தார். இது போலவே கதிரி தம்பி சின்னையா தவரவி என்பவர் போரின் பின் இலங்கைக்குத் திரும்பி, அங்கிருந்து 1956-இல் கல்வி கற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு வந்து, 1958-இல் ஆஸ்திரேலியப் பெண் ஒருவரை மணம் முடித்து, சிட்னியில் குடியேறினார். அவர் மணம் முடித்த பெண் ஹங்கேரி நாட்டிலிருந்து இங்கு அகதியாக வந்து குடியேறியவராவார். 1967-க்குப் பிறகு எல்லோரும் குடியேற அனுமதிக்கப்பட்டனர். தமிழ் நாட்டிலிருந்து குடியேறிய தமிழரை விட மலேசியா, பீஜி, சிங்கப்பூர், மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகளிலிருந்து குடியேறிய தமிழர்களே மிகுதி. கல்விக்காக குடிபெயரும் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர்காரர்கள்; பொருளாதாரக் காரணங்களால் குடிபெயரும் தமிழர்கள் இங்கிலாந்து, மொரீசியசுகாரர்கள். அரசியல் காரணங்களுக்காக இலங்கை, தென்னாப்பிரிக்கா, பீஜிவாழ் தமிழர்கள் இங்கு குடிபெயருகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை 40,000 ஆகும். இதில் 75% இலங்கைத் தமிழர்களும், அவர்களது வம்சாவளியினரும் ஆவர். தமிழர்கள் பெருமளவு நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய இரு மாநிலங்களிலும் தலைநகர்ப் புறத்திலேதான் வாழ்கின்றனர்.

தமிழரின் இன்றைய நிலை 

சமயம் :

1985-இல் ஆஸ்திரேலியாவில் முதலாவது கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் ஹெலென்ஸ்பர்க் என்னும் இடத்தில் அமைந்துள்ள திருவெங்கடேஸ்வரர் ஆலயமாகும். சிட்னியிலிருந்து 46 கி.மீ தொலைவில் உள்ளது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகளவு மக்கள் வழிபாடு செய்ய வருவார்கள். சிட்னி முருகன் கோயிலில் தினப்படி பூசைகள் உண்டு. வெள்ளிக்கிழமை கூட்டு வழிபாடு நடைபெறுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் திருமுறை வகுப்புகள் உண்டு. தமிழ் கிருத்துவர்களுக்கு சிட்னித் தமிழர் கத்தோலிக்கர் ஒன்றியம்; நியூ சவுத் வேல்ஸ் தமிழ் தேவாலயம் மூலம் தங்களின் வழிபாடுகளை நிகழ்த்துகின்றனர். இவை தவிர 'சாய்பாபா' வழிபாடு பெருமளவு தமிழர்களிடம் பரவி இருக்கிறது. தமிழர்கள் பொங்கல், நவராத்திரி, சரஸ்வதி பூசை, தீபாவளி, புத்தாண்டு போன்றவற்றை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். எல்லா விழாக்களையும் வெங்கடேஸ்வரர் கோயிலில் தான் கொண்டாடுகின்றனர். இதற்கான பொது இடம் இல்லை. 

உணவு :

காலை உணவு ஆஸ்திரேலிய முறைப்படி அமைவது வழக்கம். ஆனால் இரவு உணவு சோறு கறி உணவாகவோ அல்லது வேறு தமிழ்நாட்டு உணவாகவோ இருக்கும். இட்லி, தோசை, உப்புமா, வடை கிடைக்கும். இன்னும் கையால் உணவருந்தும் பழக்கம் இருக்கிறது.

உடை :

ஆண்களைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியர் மயமாகி விட்டனர். பெண்களைப் பொறுத்தவரை முதல் தலைமுறையினர் வீட்டிலும் வெளியிலும் புடவையில் செல்கின்றனர். இளம்பெண்கள் நவீன உடைகளிலும், தலை அலங்காரத்திலும் ஆஸ்திரேலியர்களையே பின்பற்றுகின்றனர்.

தகவல் தொடர்பு 

தொலைக்காட்சி : 

தமிழ் மீடியா குருப்பினால் 'இன்பத்தமிழ் ஒளி' என்ற தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சிகளை தமிழர்கள் காண்கின்றனர்.

வானொலி :

சனிக்கிழமை மாலைதோறும் 'தமிழ் முழக்கம்' ஒலிபரப்பப்படுகிறது. ஞாயிறு முழுவதும் கீதாஞ்சலி, முத்தமிழ்மாலை, மாலை மதுரம், அலையோசை, இன்பத் தமிழ் இரவு முதலிய தலைப்புக்களில் காலை 11 மணிமுதல் இரவு 10 மணி வரை நடத்தப்படுகிறது.

இதழ்கள் :

சிட்னியினுள்ள சிட்னித் தமிழ்ச் சங்கம் 'சந்திப்பு' என்ற இதழை வெளியிடுகின்றது. சிட்னி தமிழ்மன்றம் 'சங்கமம்' என்னும் இதழை வெளியிட்டது. குவின்ஸ்லாந்துத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும் 'சங்கமம்' இதழை வெளியிட்டது. பெர்த் நகரிலுள்ள மேற்கு ஆஸ்திரேலியத் தமிழ்க் கழகம் ஒரு செய்தி இதழை வெளியிட்டது. தென்துருவத் தமிழ்க் கழகங்களின் கூட்டமைப்பு 'தென்துருவ தமிழ் முரசு' என்ற இதழை வெளியிட்டது. செய்தி இதழாக (Newsletter) தமிழ் மானிட்டர், தமிழ் குரல், சங்கமம், தென்றல் (சிட்னி பல்கலைக்கழக தமிழ் மன்றம்) விடிவு போன்றவையும் வெளிவருகின்றன.

இது தவிர 'கலப்பை' என்ற இதழ் சிட்னி பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் 'காலாண்டிதழா'க வெளிவருகிறது. இது தவிர தமிழ்/ஆங்கில இதழ்களாக உதயம், இன்டியா போஸ்ட், இன்டியன் டான் அண்டர் போன்றவை வெளிவருகின்றன. 

தமிழ்மொழியின் இன்றைய நிலை

இந்நாட்டில் வாழும் முதல் தலைமுறைத் தமிழருடைய தமிழறிவு நன்றாகவே உள்ளது. இலங்கையிலிருந்து வந்த இளைஞர்கள் தமிழ்மொழியிலேயே கல்வி கற்றவர்கள். தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்கள் தமிழை வீட்டில் அதிகம் பேசுபவர்கள். பீஜித் தமிழர் தமிழ் பேசினாலும் அவர்கள் அவ்வளவு தமிழறிவுடையோர் அல்ல. சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தவர்களுடைய தமிழ் மிக, மிக குறைவாகும். ஆஸ்திரேலியாவில் வாழும் 2-ஆம் தலைமுறையினரின் தமிழறிவு குறைவாக உள்ளது. 3-ஆம் தலைமுறையினரின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. இன்று பெற்றோர்கள் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு குழந்தைகள் ஆங்கிலத்திலேயே பதில் கூறி வருகின்றனர். அரசு, சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழியிலேயே பயிலலாம் என்று கூறியதால் இங்கு 'தமிழ் வாழும்' என்று நம்பலாம்.

கல்வி :

ஆஸ்திரேலியா வந்த தமிழர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் நன்கு தெரியுமாதலால் தம் குழந்தைகளும் நன்கு கல்வி அறிவு பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். வாரத்தின் 5 நாட்கள் அறிவியல், கணக்கு போன்ற பாடங்களைப் படிக்கும் தமிழர்கள் சனி, ஞாயிறுகளில் குழந்தைகளை தமிழ்மொழி வகுப்புகளுக்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர். நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு, மவுண்ட் ருயிட் தமிழ் கல்வி நிலையம், தமிழ்க் கல்விக் கழகம், ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம், வென்ட்வேத்வில் தமிழ் கல்வி நிலையம் போன்றவை குழந்தைகளுக்கு 'தமிழ்' மொழி வகுப்புகள் நடத்துவதுடன் தமிழில் பேசுதல், படித்தல், எழுதுதல், பல்கலாச்சார சூழலில் வாழ சிறார்களைப் பக்குவப்படுத்துதல், தமிழ் கலாச்சாரம், பண்பாடு அறிதல், தமிழ் பேசுவதன் அவசியத்தை உணர்தல் முதலிய பல்வகை திறன்களை வளர்த்து வருவது மற்ற நாடுகளில் காணமுடியாத சிறப்பம்சம் ஆகும். 

தமிழர்-ஆஸ்திரேலிய பழங்குடியினர் பற்றிய ஆய்வுகள்:

பண்டைய திராவிட இன மக்களின் மொழி, இன கலாச்சார ஒற்றுமைகள் இங்குள்ள பழங்குடி களிடம் காணப்படுகின்றன. ஏ.சேப்பல் என்பவர் பின்வருமாறு கூறுகின்றார்: "டிராலுக்மிலா சபோனஸ்கோவா பழங்குடி பேச்சில் ஏராளமான தமிழ்ச்சொற்களைக் காணலாம். இவர்கள் வாழும் இடங்கள் நல்லாபார் சமவெளி, மேற்கு ஆஸ்திரேலியப் பகுதிகள் ஆகியனவாகும். சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டு. "ஒரு காலத்தில் குமரிக்கண்ட அழிவில் சம்பந்தப்பட்ட பெருங்கண்டத்தில் சரிந்து, இவர்கள் கீழே தெற்கில் ஒதுங்கிப் போயிருக்கலாம்". மேலும் ஜெ.சி. ரிச்சர்டு என்ற ஆய்வாளர் 'தமிழுக்கும் பழங்குடி மக்களுக்கும் ஒற்றுமையுண்டு' என்கிறார். திராவிடமொழிகளுக்கும் பழங்குடியினர் மொழிகளுக்கும் ஒரே இலக்கண அமைப்பு காணப்படுவதாக வில்லியம் பிலிக் என்பவர் குறிப்பிடுகிறார். ஆஸ்திரேலியா சென்று வந்த பத்மா சுப்ரமணியம், பின்வருமாறு குறிப்பிடுகிறார்: மெர்ல்போனில் பக்லோவியர் என்னும் பழங்குடி மக்களின் பேச்சில் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன. முட்டி(முழங்கால்), ஏர்ரது (ஏறுகிறது), மின்னல், பாம்பு, மகவு, நீறு போன்ற தமிழ்ச் சொற்களை இவர்கள் பயன்படுத்துகின்றனர் என்கிறார். தொல்காப்பியம் குறிப்பிடும் நீர்நாயையும், காரன்னத்தையும் ஆஸ்திரேலியாவில்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் மற்ற இனமக்களைவிட தமிழர்களிடமே 'வளைதடி' என்கிற 'வளரி' பயன்பாட்டில் இருந்தது. இக்கருவியை ஒரு பொருளின் மீதோ, அல்லது ஆள், பறவை, விலங்கு மீது குறிவைத்து எறிந்தால் அப்பொருளைத் தாக்கி விட்டு மீண்டும் எய்தவரிடமே வரும். தமிழகத்தை கடைசியாக ஆண்ட சிவகங்கைபாளையக்காரர்களான சின்ன மருது, பெரியமருது இக்கருவியை பயன்படுத்தியதை ஜென்ரல் வெல்ஷ் தம் இராணுவ நினைவுக் குறிப்பில் குறித்துள்ளார். 'மருது பாண்டியர்' கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட பின்னர், இக்கருவியைப் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டமும் வந்தது. இன்றும் கூட முக்குலத்தோர் வீடுகளில் இக்கருவி பூசைப் பொருளாக காணப்படுகிறது என்கிறார் தென்னிந்திய பழங்குடி ஆய்வாளரான எட்கர் தர்ஸ்டன். இக்கருவி 'பூமராங்' என்கிற பெயரில் இன்றும் ஆஸ்திரேலிய பழங்குடிகளிடம் பயன்பாட்டில் உள்ளதை வைத்தே பண்டைய உறவை, பண்பாட்டை உணர முடிகிறது.

அமைப்புக்கள் :

1. டார்வின் தமிழ்க் கழகம் - டார்வின் 
2. மேற்கு ஆஸ்திரேலியத் தமிழ்க் கழகம் - பெர்த் 
3. தென் ஆஸ்திரேலிய இலங்கை அகதிகள் கழகம் - அடிலயிட்
4. மெல்போன் இலங்கைத் தமிழ்ச் சங்கம் - மெல்போன்
5. கான்பெராத் தமிழ்க் கழகம் - கான்பெரா
6. ஈழத்தமிழர் கழகம் - சிட்னி
7. நியூக்காசில் தமிழ்க் கழகம் - நியூகாசில்
8. குவின்ஸ்லாந்துத் தமிழ்க் கழகம் - பிரிஸ்பென்
9. வட குவின்ஸ்லாந்துத் தமிழ்க் கழகம் - (வடமக்கி)

இவை பார்புவா - நியுகினி, நியுசிலாந்து பீஜி ஆகிய நாடுகளிலுள்ள தமிழ்க் கழகங்களுடன் இணைந்து தென்துருவத் தமிழ்க் கழகங்களின் கூட்டமைப்பு (Austra Federation of Tamil Association) என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளன. இது தவிர தொண்ணூறுகளுக்குப் பிறகு, நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் அமைப்புக்கள் இருப்பதாக 'கலப்பை' ஏட்டின் மஞ்சள் கையேடு (Yellow Guide 1998) தெரிவிக்கிறது. இந்த அமைப்புகள் தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவர்களின் தீர்வுக்காக முயற்சி செய்கின்றன. அன்றாட பிரச்சினைகள் பலவற்றுக்கும் தீர்வு சொல்கின்றன-செய்கின்றன. தமிழ் கல்வி, பண்பாட்டு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

வணிகம்/தொழில் புரிவோர் விவரங்கள் :

ஆஸ்திரேலியாவிற்கு வந்த தமிழர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள் ஆவர். முதல்கட்டத்தில் வந்தவர்கள் அனைவரும் கல்லூரி, மருத்துவமனைகள், பொறியியல் அலுவலகங்களிலும் அரசு அலுவலகங்களிலும் இடம் பிடித்துக் கொண்டனர். முதல் கட்டம் சென்ற தமிழர்கள் வருமாறு:

1. பேரா. கிறிஸ்தி ஜெயரத்தினம்
2. பேரா. சின்னப்பா அரசரத்தினம்
3. டாக்டர். வேலுப்பிள்ளை இராசநாயகம்
4. டாக்டர். கேதீஸ்வரன் துரைசிங்கம்
5. பொறியாளர். எஸ்.ஈ.ஆர். செல்வானந்தம்
6. சம்பந்தநாதர் திருலோகநாதன்-கணிப்புத்துறை
7. ஜெயக்கொடி திருக்குமார் - கணிப்புத்துறை
8. ஜெயக்கொடி சிவன்பாதகுமார் - கடற்தொழில்
9. இராஜேஸ்வரா - கணக்காளர்
10. முத்துகுமாரு கிருஷ்ணகுமார்
11. கந்தசாமி சம்பந்தர்
12. எஸ். நடேசன் - பொறியாளர்
13. டி.கே. மேதர் - வங்கி முகாமையாளர்
14. கணேசமூர்த்தி தெய்வேந்திரராஜா - கணக்காளர்
15. ராஜா முத்தையா தர்மராஜன் - கணிப்புத்துறை
16. நாகலிங்கம் கணபதிப்பிள்ளை - பொறியாளர்
17. எட்வர்ட் குணசிங்கம் - கணக்காளர்
18. பொறியாளர் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன்
19. கார்த்திகேசு இரத்தினகுமார் - கணக்காளர்
20. லட்சுமணன் சிவராமன் - கணக்காளர்
21. அண்ணாசாமி ஐயர் பரமேஸ்வரன் - கணக்காளர்
22. கே. கைலைநாதன் - பொறியாளர்.

போன்றோரைப் போல பல நூறு தமிழர்கள் உயர்ந்த பதவியிடங்களில் இருக்கின்றனர். 1983-ஆம் ஆண்டிற்குப் பிறகு அகதிகளாகக் குடியேறியத் தமிழரில் பலர் முழுக்கல்வியைப் பெறாதவர்கள். அதனால் சமூகத்தில் பல்வேறுபட்ட சிறு தொழில்களையும் செய்து வாழ்கின்றனர். தமிழ் சமூகத்தின் தினப்படி தேவைகளை நிறைவு செய்யும் மளிகைக்கடை, உணவகம், பொழுது போக்கு சாதனங்களை விற்போர் என சமூகத்தின் பல்வேறு வேலைகளையும் செய்து வருகின்றனர். அகதிகளுக்கு 'டோல்' என்னும் உதவித் தொகை 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. பின்னர் வேலை பெற்றவுடன் அரசே வீடு கட்டுவதற்கும், நிதி உதவி செய்கிறது. மொத்தத்தில் தாய் நாட்டை விட ஆஸ்திரேலியாவில் தமிழரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தே காணப்படுகிறது.


- ப. திருநாவுக்கரசு.

ஆதாரமான நூல்கள் : 

1. மஞ்சள் கையேடு 1998 - கலப்பை வெளியீடு.
2. பாரெல்லாம் பரந்த தமிழர் - இந்திர பாலா
3. அயல்நாடுகளில் தமிழர் - நாகராஜன்.

 

http://www.tamilkalanjiyam.com/

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.