Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமலின் அதிரடி முடிவு - சாதகமா? பாதகமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கமலின் அதிரடி முடிவு - சாதகமா? பாதகமா?

அரவிந்த கிருஷ்ணா
 

 

கமல் ஹாஸன் அதிரடி ஆக்‌ஷன் படங்களுக்குப் பேர்போனவர் அல்ல. ஆனால் தேர்ந்தெடுக்கும் கதை விஷயத்திலும் படத்தைச் சந்தைப்படுத்துவதிலும் சில சமயம் அவர் மேற்கொள்ளும் முடிவுகள் பெரும் சலனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. உருது எழுத்தின் சாயலில் எழுதப்பட்ட தலைப்பையும் உலகளாவிய பயங்கரவாதம் பற்றிய படம் என்னும் பரபரப்பையும் கொண்ட விஸ்வரூபம் திரைப்படம் கதைக்காகவும் சந்தைப்படுத்தும் உத்திக்காகவும் பரபரப்பாகச் செய்தியில் அடிபடுகிறது.
 
பொங்கலை ஒட்டித் திரைக்கு வரத் தயாராக இருக்கும் விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் அதிரடியான ஒரு முடிவை எடுத்து ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்தினரின் கவனத்தைத் தன் வசம் திருப்பியிருக்கிறார் கமல். படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதோடு நில்லாமல் டி.ரி.ஹெச். (DTH) சேவையின் மூலம் வீடுகளில் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்ப முன்வந்திருக்கிறார். அதுவும் திரையரங்குகளில் வெளியாவதற்குச் சில மணி நேரங்கள் முன்னதாக படம் டி.ரி.ஹெச்.இல் காண்பிக்கப்பட்டுவிடும். திரையரங்குகளின் வசூலைப் பாதிக்கும் என்று கூறி திரையரங்க உரிமையாளர்கள் எதிர்க்க, வருமானத்திற்கான புதிய வழிகளை உருவாக்கும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் மற்ற திரையுலக அமைப்பினர் ஆதரிக்கிறார்கள்.
 
கமல் ஹாசனின் இந்த முடிவு சர்ச்சையைக் கிளப்பி இருந்தாலும் முக்கியமான விஷயங்களில் சர்ச்சை எழுவதும் விவாதங்கள் நடப்பதும் நல்லதுதான். ஹே ராம், சண்டியர், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., தசாவதாரம், உன்னைப் போல் ஒருவன் என்று தொடரும் சர்ச்சைகளின் வரிசையில் அவர் நடித்து இயக்கி தயாரித்து வெளியிட இருக்கும் விஸ்வரூபம் படமும் சேர்ந்திருக்கிறது.
 
கமல் ஹாசன் 60 வயதை நெருங்கினாலும் நட்சத்திர அந்தஸ்தை இழக்காத நடிகர். நடிப்புத் திறன், கற்பனை வளம் ஆகியவற்றைக் காசாக்கிக்கொள்வதுடன் அவர் நின்றுவிடுவதில்லை. தான் சம்பாதித்த பணத்தின் பெரும்பங்கை சினிமாவிலேயே முதலிடுகிறார். தான் நடித்த படங்கள் பலவற்றைத் தயாரித்திருப்பதோடு சத்யராஜ், மாதவன் ஆகியவர்கள் நடித்த படங்களையும் தயாரித்திருக்கிறார். விஜயை வைத்து ஒரு படம் தயாரிக்க முயற்சித்ததாகவும் ஒரு விழாவில் பேசியிருக்கிறார்.
 
கமலின் பன்முகத் தன்மை இத்துடன் நின்றுவிடவில்லை அவர் ஒரு புதுமை விரும்பி. நடிப்பு, கதையமைப்பு ஆகியவற்றுடன் சினிமா சார்ந்த தொழில்நுட்ப விஷயங்களிலும் வியாபார நுணுக்கங்களிலும் புதுமையைக் கொண்டுவர முனைபவராகவும் செயல்படுகிறார்.
 
டிவிடி தொழில்நுட்பம் வந்தபோது திரை உலகைச் சேர்ந்த பலர் அது திரை உலகிற்கு அபாயம் என்றார்கள். கமலோ புதிய தொழில்நுட்பத்தை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயல்வோம் என்றார். ஆயிரக் கணக்கான திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு முதல் சில நாட்களிலேயே வசூலைக் குவித்துவிடும் உக்தி இன்றைய தமிழ் சினிமா வியாபார வழக்கம். இந்த வழக்கம் 2007 முதல் பிரபலமானது. இந்த உத்தியை 2001இல் வெளியான ஆளவந்தானில் தொடங்கிவைத்தார் கமல்.
 
ரெட் ஒன் என்ற புதியவகை ஒளிப்பதிவுக் கருவியைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். விஸ்வரூபம் படத்தின் மூலம் ஆரோ 3டி என்ற புதியவகை ஒலிப்பதிவுத் தொழில்நுட்பமும் அத்துடன் சேர்ந்திருக்கிறது.
 
விஸ்வரூபம் படத்தை திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்திற்கு முன் டிடிஹெச் மூலம் வெளியிடும் ஏற்பாட்டின் மூலம் வரும் விளம்பர வருமானத்தை டி.ரி.ஹெச் நிறுவனமும் தயாரிப்பாளரான கமலும் பகிர்ந்துகொள்வார்கள். படத்தை திரையிடும் டி.ரி.ஹெச் நிறுவனம் அதற்காக தயாரிப்பாளருக்கு எந்தக் கட்டணமும் செலுத்தாது. ஆனால் படத்தை டி.ரி.ஹெச்சில் பார்கக விரும்பும் ரசிகர்கள் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். விஸ்வரூபம் படத்தைத் திரையிட அனைத்து டிடிஹெச் ஆப்பரேட்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏர்டெல் நிறுவனம் மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளது.
 
"படத்தை டி.ரி.ஹெச் மூலம் வெளியிட்டால் திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிடும், இதனால் திரையரங்கு உரிமையாளர்களின் வியாபாரம் பாதிக்கப்படும். மேலும் இந்த முயற்சி வெற்றிபெற்றால் இதனை மற்ற தயாரிப்பாளர்களும் பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள். இதனால் பல திரையரங்குகளை இழுத்து மூட வேண்டிய நிலைமை ஏற்படும்" என்ற காரணங்களைச் சொல்லி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இந்த முடிவை எதிர்க்கிறது.
 
ஆனால் கமலுக்குத் தென்னிந்திய திரைப்பட சம்மேளனமும், இயக்குநர்கள் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் ஒருமித்த ஆதரவு தெரிவித்திருக்கின்றன. திரையுலகத்தினர் தவிர எழுத்தாளர்கள் ஞாநி, மனுஷ்யபுத்திரன் ஆகியோரும் தங்கள் ஆதரவைச் சமூக வலைத்தளங்களில் பதிவுசெய்திருக்கிறார்கள்.
 
திரையரங்க உரிமையாளர்கள் எழுப்பும் சர்ச்சைக்கு எதிர்வினையாக கமல் தன் படத்தை டி.ரி.ஹெச் இல் வெளியிடும் முடிவு குறித்த விரிவான அறிக்கை ஒன்றை முன் வெளியிட்டார்.
 
"டி.ரி.ஹெச்இல் வெளியிடப்படும் படம் தொலைக்காட்சியில் தெரியுமே தவிர தொலைக்காட்சி வைத்திருக்கும் அனைவரும் இந்தப் படத்தைப் பார்க்கப்போவதில்லை. டி.ரி.ஹெச் கருவி வைத்திருக்கும் வசதி படைத்த சிலரை மட்டுமே, படம் இந்த வழியில் சென்றடைய இருக்கிறது. DTHல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்யமுடியாது. பிரத்தியேகக்காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒருமுறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். இது தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. எனவே இந்தக் காட்சியை டி.ரி.ஹெச் வைத்திருக்கும் அனைவரும் பார்த்துவிடப்போவதில்லை. அவர்களிலும் இவ்வளவு பணம் செலுத்த முடிந்த வசதி படைத்தவர்கள் மட்டுமே பார்க்கப்போகிறார்கள்.
 
மேலும் இதன் மூலம் காட்சியை வீட்டில் பார்த்த மகிழ்ச்சி தவிர திரையரங்கில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது. சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH. இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது."
 
கமலின் இந்த அறிக்கைக்குப் பிறகும் திரையரங்கு உரிமையாளர்கள் சமாதானமடையவில்லை.
 
ஆனால் இந்த முயற்சியால் திரையரங்குக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையாது என்பதற்கு ஒரு கணக்கு திரையுலகத்தினரால் முன்வைக்கப்படுகிறது. அண்மையில் வெளியான ஒரு பெரிய பட்ஜெட் படம் மூன்று வாரங்களில் ரூ. 80 கோடி வசூலித்துள்ளது. சராசரி டிக்கெட் மதிப்பு ரூ.80/- என்று வைத்துக்கொள்ளலாம். அப்படிப் பார்த்தால் படத்தை பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டாது. ஆனால் உண்மையில் ஏழு கோடிப்பேர் இருக்கும் தமிழகத்தில் மட்டும் அந்தப் படத்தை ஒரு கோடிப் பேருக்கு மேற்பட்டவர்கள் பார்த்திருப்பார்கள், திருட்டு டிவிடியிலோ, லோக்கல் கேபிள் சானல்கள் கள்ளத்தனமாக படத்தை ஒளிபரப்பியதாலோ பார்த்திருப்பார்கள். மேலும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர்களையும் சேர்ந்துதான் இந்த வசூல் கணக்கு சொல்லப்படுகிறது. இவற்றின் மூலம் ஒரு படத்தை திரையரங்குக்குச் சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்ற முடிவுக்கு வர முடியும்.
 
படம் வெளியான முதல் வாரத்திலேயே திருட்டு டிவிடிக்களை வெளியிட்டு கள்ளச் சந்தையில் வருமானம் ஈட்டுபவர்களைத் தடுக்க முயற்சிக்காமல் தன் படத்துக்கான வியாபார சாத்தியத்தை பெருக்கிக்கொள்ள முனையும் தயாரிப்பாளருக்கு முட்டுக்கட்டை இடுவது சரியல்ல என்பதே கமல் மற்றும் அவரை ஆதரிக்கும் பிற தயாரிப்பாளர்களின் வாதம். தன் படத்தின் லாபத்தை அதிகரித்துக்கொள்வதற்கான பாதையை கமல் அமைத்துக்கொடுத்திருப்பதாக மற்ற தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள்.
 
பெரிய எதிர்பார்ப்பை உடைய பெரிய பட்ஜெட் படங்களுக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு சிறிய பட்ஜெட் படங்களுக்கு கிடைக்காது. அந்தப் படங்களை டி.ரி.ஹெச் ஆப்பரேட்டர்கள் வெளியிட முன்வர மாட்டார்கள் என்று சிலர் வாதிடுகிறார்கள்.
 
சில மாதங்களுக்கு முன் வெளியான கிருஷ்ணவேணி பஞ்சாலை என்ற சிறிய பட்ஜெட் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தனபால் பதமநாபன், "கமல் எடுத்துவைத்திருக்கும் இந்த அடி வரவேற்கத்தக்கது" என்கிறார். "கமலைப் போன்ற ஒரு செல்வாக்குள்ள நட்சத்திரம் இப்படி ஒரு முயற்சியை முன்னெடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது திரையுலகை அடுத்த கட்ட நகர்வுக்கு அழைத்துச் செல்லும். திரைப்படங்களின் வியாபாரத்துக்கு ஒரு புதிய வாயில் (Avenue) கிடைத்திருக்கிறது. இது மிக நல்ல விஷயம்" என்கிறார்.
 
";ஒரு சில டி.ரி.ஹெச் ஆப்பரேட்டர்களுக்கு மட்டும் படத்தை வெளியிடும் வாய்ப்பை வழங்கினால் அது அவர்களின் ஏகபோக அதிகாரத்துக்கு வழிவகுக்கக்கூடும். அவர்கள் லாபத்தில் அதிகப் பங்கைக் கேட்டுத் தயாரிப்பாளர்களை நிர்ப்பந்தப்படுத்தக்கூடும். இதனால் படிப்படியாக படங்களை நேரடியாக கேபிள் சானல்களில் வெளியிடும் முறையை அமல்படுத்த வேண்டும்" என்கிறார் அவர்.
 
"இந்த முயற்சியில் வரக்கூடிய பிரச்சனைகளைச் சரிசெய்யும் பொறுப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இருக்கிறது. தியேட்டர் உரிமையாளர்கள், டி.ரி.ஹெச் ஆபரேட்டர்கள் ஆகியோரிடம் பேசி தீர்க்க வேண்டிய பொறுப்பை சங்கம் ஏற்கவேண்டும்" என்றும் வலியுறுத்துகிறார் தனபால்.
 
சிறிய பட்ஜெட் படங்களுக்கும் இதுபோன்ற வாய்ப்பு கிடைக்கும் என்கிறார். ஒரு திரையிடலுக்கு 1000 ரூபாய் தர மக்கள் முன்வருவார்களா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. "ஒவ்வொரு தயாரிப்புக்கும் அதற்கான சந்தை மதிப்புக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. அது சிறிய பட்ஜெட் படங்களுக்கும் பொருந்தும்" என்கிறார்.
 
"தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்கள் இரண்டு வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் தங்குவதில்லை. பல படங்கள் முதல் வாரத்திலேயே தூக்கப்பட்டு விடுகின்றன. படம் சரியில்லை, கூட்டம் இல்லை, திருட்டு விசிடி என்று பல பிரச்சினைகள் திரை உலகைப் பாதிக்கின்றன. குறைந்த இடைவெளியில் பல படங்கள் வெளியாகிக்கொண்டிருப்பது இந்தப் பிரச்சினைக்குக் காரணம். புதுப் படம் வெளியானால் ஓடிக்கொண்டிருக்கும் மற்றொரு படத்தை தூக்கியெறிய திரையரங்க உரிமையாளர்கள் தயங்குவதில்லை. சந்தை விரிவடைந்திருப்பதையும் அதனால் பல படங்கள் வெளியாவதையும் ஆதாயமாகவே பார்க்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் மட்டும் தங்கள் மீது கருணை காட்டவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்?. இரு தரப்பினருமே சினிமாவை வியாபாரமாகப் பார்ப்பவர்கள். கசாப்புக் கடைக்காரனிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது&" என்கிறார் திரைப்பட ஊடகவியலாளர் ஒருவர்.
 
இந்த முடிவு படங்கள் மேலும் பலரைச் சென்றடையவும் தயாரிப்பாளர்களின் வருமானத்திற்குப் புதிய வழிகளை உருவாக்கவும் வகை செய்தால் அது தமிழ் சினிமாவுக்குப் பெரும் நன்மை பயப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ் சினிமா வளரப் பெரும்பங்கு வகித்திருக்கும் திரையரங்கு உரிமையாளர்களின் கழுத்தை நெரிக்கும் முடிவாக இது மாறிவிடக் கூடாது. விஸ்வரூபம் வெளியான் பின்தான் இந்த உத்தி அனைவருக்கும் நன்மை பயக்கிறதா என்பதை உணர முடியும்.
 
இந்த முடிவிலிருந்து கமல் பின்வாங்கமாட்டார் என்று தெரிகிறது. அவரது முடிவைத் தயாரிப்பாளர்கள் சங்கமும் ஊடகங்களும் மற்றும் பல தரப்பினரும் ஆதரிப்பதைப் பார்க்கும்போது கமலுக்கு படம் வெளியாவதற்கு முன்பு ஒரு வெற்றி கிடைக்கும் என்றே தோன்றுகிறது
 
*******
 
கமலும் இஸ்லாமியர்களும்
 
தீபாவளிக்கு வெளியான துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களைப் புண்படுத்தும் காட்சிகள் இருந்ததாகப் போராடிய இஸ்லாமிய அமைப்புகள், விஸ்வரூபம் படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு அந்தப் படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக அமையக்கூடும் என்று கருதுகின்றன. சிலர் படம் வெளியாவதற்கு முன் தங்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பியதாக தகவல்கள் கசிகின்றன.
 
இஸ்லாமியர்களின் கவனத்தைக் கமல் ஈர்த்திருப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் சில படங்களில் இஸ்லாமியர்கள் மனம் குளிரும் வகையிலும் சில படங்களில் அவர்கள் வருத்தப்படும் வகையிலும் கமல்ஹாசனின் படங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
அவ்வை ஷண்முகி படத்தில் கமலுக்காகத் தன் வேலையை இழக்கும் நண்பனான முஸ்லிம் கதாபாத்திரத்தில் நாசர் (உண்மையில் ஒரு முஸ்லிம்) நடித்திருப்பார். தசாவதாரம் படத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தை மிகவும் நல்லெண்ணம் படைத்த அப்பாவிகளாகக் காட்டியிருப்பார். இஸ்லாமியர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று நினைக்காதீர்கள் என்ற வசனம்கூட அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும்.
 
இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தில் நடந்த கதையைப் பேசிய ஹேராம் படம் இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. படம் வெளியாகும்வரை நீடித்த இந்தச் சர்ச்சை படம் வெளியான பின் பிறகு அடங்கியது. ஏனெனில் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகும் இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இருக்கிறது என்பதை அழுத்தமாகக் கூறிய படம் அது.
 
உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் பொதுவாக தீவிரவாதம் பற்றிப் பேசினாலும் அந்தப் படத்தில் அதிகமாக முஸ்லிம் தீவிரவாதிகளைப் பற்றியே பேசியிருப்பார். அதே வேளையில் தீவிரவாதிகளைப் போட்டுத் தள்ளும் ஒரு போலீஸ் அதிகாரியை முஸ்லிமாகக் காண்பித்திருப்பது சிலரை மகிழ்வித்திருக்கக்கூடும். ஆனால் அந்தப் படத்தில் இஸ்லாமியர்களின் மத வழக்கங்களையும் கமல் கிண்டலடித்திருக்கிறார் என்று படம் வெளியான பின் சில இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டின.
 
இவற்றின் தொடர்ச்சியாக, விஸ்வரூபம் படத்தின் தலைப்பு எழுதப்பட்ட விதத்திலிருந்தே சர்ச்சை தொடங்கியிருக்கிறது. உருது எழுத்துக்களை எழுதுவதுபோல் இருப்பதை ஒட்டி சர்ச்சை எழுந்துள்ளது. உலகளாவிய பயங்கரவாதம் பற்றிய படம் என்று சொல்லப்படும் இந்தப் படத்தில் டிரைலரில் அதிகமாக இஸ்லாமியத் தீவிரவாதிகளே காண்பிக்கப்படுகிறார்கள். படம் மற்ற படங்களைப் போல் இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அவர்கள் முறியடிக்கப்படும் விதத்தையும் பற்றி மட்டும் சித்தரிக்கப்போகிறதா அல்லது இஸ்லாமியத் தீவிரவாதத்தின் அடிப்படைக் காரணங்களையும் அதனை ஊக்குவித்து நலன் காண்பவர்களையும் தோலுரிக்கப்போகிறதா என்பது படம் வெளியான பின்தான் தெரியவரும்.
 
படத்தை டி.ரி.ஹெச். மூலம் திரையிடவிருப்பது பற்றிய தன் அறிக்கையில் இது பற்றி கமல் பேசியிருக்கும் விதம் தன் படம் முஸ்லிம்களையும் மகிழ்விக்கும் என்று அவருக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.
 
"இது முஸ்லிம்களைத் தவறாகச் சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தைப் பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்குப் பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்" என்று கமல் குறிப்பிட்டிருக்கிறார்.
 
விஸ்வரூபம் படம் முஸ்லிம்களைத் தவறாகச் சித்தரிக்கவில்லை என்றால் அவரது முஸ்லிம் சகோதரர்கள் அவருக்கு பிரியாணி விருந்து படைக்க பக்ரீத் வரை காத்திருக்க மாட்டார்கள் என்று நம்பலாம். ஆனால் படம் முஸ்லிம்களை இழிவுபடுத்துவதாகக் கருத இடமிருந்தால் அது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட மற்றுமொரு கசப்பு மருந்தாகக் கடந்துபோகும்.

 

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=5&contentid=5a500825-d731-4769-9106-eac16de65def

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.