Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் சமீபகால அரசியல் அணுகுமுறையை நாம் எவ்வாறு புரிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் சமீபகால அரசியல் அணுகுமுறையை நாம் எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறோம்?

யதீந்திரா

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தராஜபக்ஷ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் இலங்கைக்குமான அரசியல் உறவில் புதியதொரு அத்தியாயம் உருவாகப் போவதாகவும் மகிந்தவின் காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு முன்னரைக் காட்டிலும் வலுவடையும் என்றும் பல அரசியல் ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக சிங்கள ஆய்வாளர்கள் மத்தியில் இந்தியாவின் அதிகளவான பங்களிப்புகள் குறித்துப் பெரியளவில் எதிர்பார்ப்புகள் நிலவின. ஒப்பீட்டளவில் மகிந்த ராஜபக்ஷ ஆசியச் சார்புடையவர் என்னும் கணிப்பிலிருந்தும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினை ஒப்பீட்டளவில் நடுநிலை இடதுசாரித்துவக் கட்சியாகப் பார்க்க முற்படும் தவறிலிருந்துமே மேற்படி அவதானங்கள் இடம்பெற்றன. ஆனால் மகிந்த ராஜபக்ஷவின் இந்தியா குறித்த நிலைப்பாடோ வேறு ஒரு அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது. மகிந்தவின் இந்தியாவின் அதிகரித்த பங்களிப்பு குறித்த எதிர்பார்ப்பானது சிலர் சொல்வது போன்று ஆசியச் சார்பு நிலையிலிருந்தோ அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரிய அரசியல் நீட்சியைக் கொண்டதோ அல்ல. அது முற்றிலும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துதல் என்னும் அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.

கடந்தகாலங்களில் தமிழர் தேசம் தமக்கானதொரு தனித்துவமான அரசை நிறுவுதல் என்னும் உச்ச இலக்கை எய்திவிடக் கூடாது என்பதில் வேறு எவரைக் காட்டிலும் அதிகமான அக்கறையுடன் செயலாற்றி வந்த நாடு இந்தியாவாகும். தமிழர் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் இந்தியா, நமது சூழலில் பல இரகசிய, பகிரங்க சதி முயற்சிகளை மேற்கொண்டு வந்ததானது ஒன்றும் இரகசியமானதல்ல. ஆரம்பத்தில் தமிழர் விடுதலைப் போராட்டத்தைக் கூடியிருந்து கெடுக்கும் தனது வழிமுறைகள் படுமோசமாக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்தியா சிறிலங்கா ஆளும் வர்க்கத்தை நேரடியாக பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. பங்குச் சந்தையில் முதலிடுதல், வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்தல், மலிவான விலையில் இராணுவ தளபாடங்களை விற்றல், விமானங்கள் கடற்படைக் கலங்களை வழங்குதல், புலனாய்வுத் தகவல்களை வழங்குதல் இப்படிப் பலவகையான செயற்பாடுகளின் மூலம் சிதைவின் விளிம்பல் கிடந்த சிறிலங்கா அரசைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வந்தது. குறிப்பாக சந்திரிகாவின் காலத்தில் இந்தியாவிற்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையிலான உறவு மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தது. சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கை இனப்பிரச்சினையை காரணமாகக் கொண்டு இலங்கையில் காலூன்றி விடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே இந்தியா சிறிலங்கா ஆளும் வர்க்கத்தை தனது பிடிக்குள் வைத்திருக்கும் வகையில் செயலாற்றி வந்தது. தனது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தான் எப்போதும் தமிழ் மக்களுக்கு ஆதரவில்லை என்பதை சிங்கள மக்கள் நம்பும் வகையிலான கருத்துகள் பலமான நிலையில் இருப்பதையும் மிகவும் திட்டமிட்டு பேணிக் கொண்டது.

இத்தகைய பின்னணிகளைக் கருத்தில் கொண்டே இந்தியாவை வலுவான நிலையில் இலங்கை பிரச்சனையில் தலையீடு செய்யத் தூண்டும் முயற்சியில் மகிந்த தனது கவனத்தை குவித்தார். தனது எதிர்பார்ப்பை நிறைவு செய்து கொள்ளும் நோக்கிலேயே, மகிந்த தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவசரமாக இந்தியாவிற்கான விஜயத்தை மேற் கொண்டார். ஆனால், இந்தியாவோ மகிந்த ராஜபக்ஷவிற்கு ஒரு அதிர்ச்சி விருந்துபசாரத்தை வழங்கி அனுப்பிவைத்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையானது, இந்தியா பெரியளவில் தமக்கு உதவப் போவதான எதிர்பார்ப்புடன் இருந்த சிங்களக் கொள்கை வகுப்பாளர்களுக்கு குறிப்பாக மகிந்தவிற்கு பெரிய ஏமாற்றத்தையும் கவலையும் அளித்தது எனலாம். இதனைத் தொடர்ந்தே மகிந்த பாக்கிஸ்தான்- சீனா ஆகியவற்றுடன் தனது உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடலானார். இந்தியாவின் மேற்படி நிலைப்பாடுதான் நமது கவனக் குவிப்புக்குரிய புள்ளியாகவும் இருக்கிறது.

கடந்த நான்கு வருட கால போர்நிறுத்தச் சூழலின் போது இந்தியா சில விடயங்களையே திரும்பத் திரும்பக் கூறி வந்திருக்கிறது. இலங்கையில் அமைதி நிலவ வேண்டும். அதற்கு இந்தியா தனது முழுமையான ஆதரவினை நல்கும். இலங்கைப் பிரச்சினை ஒரு உள்நாட்டு விவகாரம். அதில் நாம் நேரடியாக தலையிடப் போவதில்லை. சமீபத்தில் சிங்கள பொதுமக்கள் கிளேமோர் தாக்குதலில் அகப்பட்டு உயிரிழந்தமை தொடர்பான தனது கண்டனத்திலும் எவரையும் குற்றம் சொல்லாமல் இலங்கையில் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றே கூறியிருக்கின்றது. சிறிலங்கா அரசு இத்தாக்குதல் தொடர்பில் விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டியிருந்த போதும் அது குறித்து எந்தவகையிலும் இந்தியா கரிசனை கொள்ளவில்லை. இணைத் தலைமை நாடுகளில் இந்தியாவும் பங்கு கொள்ள வேண்டுமென்ற மேற்கின் வேண்டுகோளையும் இந்தியா நிராகரித்திருக்கிறது. இந்தியாவின் இத்தகைய மௌனத்தின் பின்புலம் என்ன? இந்தியா ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறது? இதனூடாக இந்தியா அடைந்து கொள்ள முயலும் நலன்கள் என்ன? அவைகள் நமது நலன்களை வெற்றி கொள்வதில் என்ன வகையான தாக்கங்களை ஏற்படுத்தும்.?

கடந்த காலங்களில் இலங்கைப் பிரச்சினையின் மீதான இந்தியாவின் தலையீடானது அந்நிய சக்திகளின் ஊடுருவலை காரணம் காட்டிய ஒன்றாகவே அமைந்திருந்தது. இலங்கை பிரச்சினையை அடித்தளமாகக் கொண்டு இலங்கையில் அந்நிய சக்திகள் காலூன்றுமாயின் அது தனது பிராந்திய நலன்களுக்குப் பாதகமாக அமைந்து விடும் என்ற அச்சத்திலேயே இந்தியா சிறிலங்கா அரசை தனது பிடிக்குள் வைத்துக் கொள்ளும் வகையில் 1980 களில் இலங்கை அரசியலில் குறுக்கீடு செய்ய விழைந்தது. இதுவே பின்னர் 1987 இந்திய- சிறிலங்கா ஒப்பந்தமாக பரிணமித்தது. ஆனால் கடந்த நான்கு வருட கால யுத்த நிறுத்தச் சூழலில் இலங்கை அரசியலில் முன்னர் எப்போதுமில்லாதளவிற்கு அந்நிய சக்திகளின் குறுக்கீடுகள் குறிப்பாக, அமெரிக்காவினது தலையீடுகள் அதிகரித்திருக்கின்ற இன்றைய சூழலில் முன்னர் அந்நிய சக்திகளின் தலையீட்டினை தனது பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலாக கருதிய இந்தியா இன்று மௌனம் சாதித்து வருகின்றது. அதேவேளை, அது குறித்து தான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்ற தோறணையிலேயே கருத்துகளை வெளியிட்டு வருகின்றது.

இந்தியாவின் இன்றைய அணுகுமுறை பற்றிக் குறிப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சகாதேவன் இந்தியா தன்னால் எதைச் செய்ய முடியும் எதைச் செய்ய முடியாது என்பதில் மிகவும் தெளிவாக இருப்பதாகவும், அதே வேளை இராணுவ வலுச் சமநிலை சீர் குலையும் வகையில் இந்தியா செயற்படக் கூடாது என்பதில் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தெளிவாக இருப்பதாகவும், இலங்கையில் தமிழர்களின் இராணுவ பலம் குறையும் பட்சத்தில் சிறிலங்கா அரசு தற்போதைய நிலையை விட இன்னும் தீவிரமான கடும் போக்கிற்கு சென்றுவிடும் . அதற்கு தாம் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருப்பதாகவும், இந்தியா முன்னர் செய்த தவறினை மீண்டும் செய்துவிடக் கூடாது என்பதிலேயே கவனம் கொள்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார். இந்தியாவின் இன்றைய அணுகுமுறையை யதார்த்தமானதும் மிகவும் சரியானதும் என்றும் சகாதேவன் வர்ணிக்கின்றார். இந்த மதிப்பீடு சரியானதா? அப்படியாயின் இந்திய கொள்கை வகுப்பு நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நாம் கருதலாமா? அல்லது இலங்கையில் தன்னை மீறி எந்தவொரு அந்நிய சக்தியும் செயற்படப் போவதில்லையென இந்தியா மதிப்பிடுகின்றதா? அல்லது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் சமீபகாலமாக உருவாகிவரும், இராணுவ, பொருளாதார ஒத்துழைப்பின் பின்னணியில் அமெரிக்காவை இலங்கையில் அதிகளவில் தலையீடு செய்ய அனுமதிப்பதன் மூலம் இலங்கையில் தலையிடும் ஏனைய சக்திகளை ஓரங்கட்ட முயல்கிறதா? இவற்றில் எது சரியாக இருக்கும் என்பற்கு அப்பால் இவ்வாறான கேள்விகள் நமது கவனக் குவிப்பிற்குரிவையாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானதாகும்.

சமீப காலமாக அமெரிக்கா விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்சித்திருப்பதுடன் ஜரோப்பிய யூனியனியின் தடையை ஊக்குவிக்கும் வகையிலும் செயற்பட்டிருக்கின்றது. இந்தியா மௌனமாக இருந்து கொண்டு அமெரிக்காவினூடாக பேச முயல்கிறதா? சமீபத்தில் புகழ்பெற்ற மார்க்சிய சஞ்சிகையான மந்லிறவியுவின் அரசியல் பொருளாதார ஆய்வுக் குழு வெளியிட்டிருக்கும் ஆய்வில் (Why the United States Promotes India?s Great ? Power Ambitions) இந்தியா இலங்கையின் கிழக்கிலங்கை தளம், திருகோணமலை துறைமுகம் ஆகியவற்றை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வதற்கு அனுசரணையாக உள்ளது. இதனூடாக வாஷிங்டன் தனக்கான சொந்த GWT (பயங்கர வாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தத்திற்கான துறைமுகங்கள்) அடைந்து கொள்ளவும் உதவுகிறது. இதற்கு பிரதியுபகாரமாகவே வாஷிங்டன் தமிழ்ப் புலிகள் மீது அழுத்தத்தைக் கொடுத்து அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர முயல்கிறது என்ற வகையில் தனது கணிப்பை வெளியிட்டிருக்கின்றது.

இந்த கணிப்பு முற்றிலும் சரியானதா என்று விவாதிப்பதற்கு அப்பால் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுடனேயே அமெரிக்கா தமிழர் பிரச்சினையில் தலையிட்டு வருகின்றது என்ற விடயத்திலேயே நமது கவனத்தைக் குவிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இன்றைய இந்தியாவின் அரசியல் அணுகுமுறை நிச்சயமாக அதன் கொள்கை நிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் விழைந்த ஒன்றல்ல என்பதில் நாம் குழம்ப வேண்டியதில்லை. அவ்வாறு நாம் கருதினால் மீண்டும் இந்தியா ஏதோ பெரிதாக செய்துவிடப்போகிறது என்னும் பழைய மாயைக்குள் விழவே நேரிடும். கடந்த கால அனுபவத்திலிருந்தே இந்தியா சில முடிவுகளை எடுத்திருக்கின்றது. கடந்த காலத்தில் தமிழ் மக்களின் விடுதலையை தனது நலன்களிலிருந்து முடக்க முற்பட்டு அவமானகரமான தோல்வியைச் சந்தித்த இந்தியா தற்போது கைகளைச் சுட்டுக் கொள்ளாமல் இருத்தல் என்னும் அரசியல் முறைமையையே கைக் கொண்டு வருகின்றது.

பிராந்தியளவில் தன்னையொரு பெரியண்ணனாக கருதிக் கொள்ளும் இந்தியாவின் அரசியல் மனோ நிலை மாறாத வரைக்கும் இந்திய கொள்கை வகுப்பில் நமது நலன்களுக்கு ஏற்றவாறான மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. ஆக்கிரமிப்புச் சக்திகள் ஒருபோதும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக தம்மை மாற்றிக் கொள்வதில்லை என்ற வரலாற்று உண்மையைக் கருத்தில் கொண்டே இந்தியாவின் இன்றைய அணுகுமுறைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, ஏன் இந்தியா இவ்வாறு நடந்து கொள்கின்றது? இதனூடாக இந்தியா என்னவகையான நலன்களை அடைந்து கொள்ள முயல்கிறது? ஆகிய கேள்விகள் மீது, பரந்தளவில் நமது கவனக் குவிப்பை செலுத்த வேண்டியது இன்றைய தேவையாகும்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.